லாகூரில் இடம்பெற்று வந்த டெஸ்ட் போட்டியில் இன்றைய நாள் ஆட்டத்தில் பங்குபற்ற சென்ற இலங்கை அணியின் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை அணியின் வீரர்கள் அறுவர் காயம் அடைந்துள்ளார்கள்.அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய 5 போலீஸ் வீரர்கள் மரணித்துள்ளார்கள்.
காயம் அடைந்த வீரர்கள்
திலான் சமரவீர
தரங்க பரணவிதான
குமார் சங்ககார
அஜந்த மென்டிஸ்
அணித் தலைவர் மகெல ஜெயவர்த்தன
மற்றும் உதவி பயிற்றுவிப்பாளர்.
வீரர்களில் இருவர் மாத்திரமே வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் பாதுக்காப்பாக இருப்பதாகவும் இலங்கையிலுள்ள தங்கள் உறவினர்களுடன் பேசிய இலங்கை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
குமார் சங்ககார,மகெல ஜெயவர்த்தன ஆகியோருக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளன.
காயமடைந்திருந்த வீரர்கள் எல்லோருமே ஆபத்தான் கட்டத்தை தாண்டியுள்ளதாகவும்,பூரண சுகத்தோடு இருப்பதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதுவரை கால வரலாற்றில் கிரிக்கெட் வீரர்கள் மீது இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதுடன்,இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாதுகாப்பு வழங்கிவந்த போலீசாரையே இந்தத் தாக்குதல் இலக்கு வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாகிஸ்தானிய அரச தகவல்களின் அடிப்படியில் முகமூடியணிந்த பேர் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இலங்கை அணியினரை உடனடியாக விசேட விமானமொன்றில் இலங்கைக்கு அழைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகின் மற்ற எல்லா நாடுகளும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா செல்ல மறுத்த வேளையில் இலங்கை அணியே அந்த அழைப்பையேற்று பாகிஸ்தான் சென்றது என்பதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.
இந்தியாவின் மும்பையில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து இந்திய அரசு இந்திய அணிக்கு பாகிஸ்தான்செல்வதற்கு தடை விதித்ததை அடுத்தே இலங்கைஅணி பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக டெஸ்ட் சுற்றுலா மேற்கொண்டு சென்றிருந்தது.
நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கைவிடப் பட்டுள்ளது.