November 27, 2010

இன்று இரவு வெற்றி பெற்றவர்களில்... 'வித்தி'

எமது வெற்றி FM வானொலியில் சனிக்கிழமைகளில் இரவு மணி செய்தியறிக்கையைத் தொடர்ந்து ஒலிபரப்பாகும் 'வெற்றி பெற்றவர்கள்' நிகழ்ச்சியில் இன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் சு.வித்தியாதரன் அவர்களை நான் பேட்டி காண்கிறேன்.


உதயன்,சுடரொளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றபின்னர் வித்தியாதரன் அவர்கள் வானொலி ஒன்றுக்கு வழங்கும் முதல் பேட்டி இதுவாகும்.
'வித்தி' அவர்களின் எதிர்கால அரசியல் பிரவேசம் பற்றி ஒரு பரபரப்பு இருக்கும் சூழ்நிலையில் 'வெற்றி பெற்றவர்களிலும்' இது பற்றி மனம் திறக்கிறார்.

வெற்றி FM வானொலியில் இன்றிரவு மணி செய்தியறிக்கையைத் தொடர்ந்து 'வெற்றி பெற்றவர்கள்'

இணையம் வழியாக செவிமடுக்க www.vettri.lk

வானொலி பண்பலைவரிசைகள்....(இதுவரை யாரும் கேட்காமல் இருந்தால் ;))
கொழும்பில் 99.6 FM
கண்டியில் 101.5 FM
வடக்கு கிழக்கில் 93.9 FM
தென் கிழக்கு மற்றும் ஊவாவில் 93.6 FM
நாடு முழுவதும் 106.7 FM

November 21, 2010

மசசிகி - ஞாயிறு மசாலா

ன்னர்/கிந்த/காராஜா 


இலங்கையின் ஜனாதிபதி இரண்டாவது பதவிக்காலத்துக்காகப் பதவியேற்றதும் அவரது அறுபத்தைந்தாவது பிறந்தநாளும் தான் கடந்த வாரத்தின் சூடான செய்திகள்..
ஆசியாவிலேயே இப்படியொருவர் பதவியேற்றதில்லை (எந்த மன்னரும் கூட) என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
பிறந்தநாள் முதல் நாள்,பதவியேற்பு அடுத்த நாள். எதையுமே ப்ளான் பண்ணி பண்ண மாமாவை (மகிந்த மாமா தானே) அடிக்க உலகிலேயே ஆள் கிடையாது.
அடுத்த கட்டத் திட்டமிடலும் அப்படித் தானே?

ஆயுள்வரை அவர் பெயர்,அவர் தம் குடும்பப் பெயர் சொல்ல சட்டவாக்கமும் வந்தாச்சு,திட்டங்களும் பல போட்டாச்சு.
மக்களின் வரிப்பணம் லட்சக் கணக்கில் இந்தக் கோலாகலக் கொண்டாட்டங்களுக்கு கொட்டப்பட்டது என்றாலும் பெரும்பான்மையான பொதுமக்களுக்கு (தமிழரும் சேர்த்து) இதுபற்றி கவலை கிடையாது என்றே தோன்றுகிறது.

இதெல்லாம் இனி இப்படித்தான் என்று பழகிவிட்டது என்றும் சொல்லலாம்.. மறுபக்கம் ஒருபக்கம் ஆட்சியில் உறுதி,இன்னொருபக்கம் அபிவிருத்தியில் தீவிரம் என்று நினைக்கிறார்களோ?

தமிழர் பகுதிகளில் மீள்குடியேற்றம் மட்டும் கொஞ்சம் மந்தகதியில் என்றாலும்,வீதிகள் விருத்தியாவதும் ஏனைய வசதிகளும் ஒப்பீட்டளவில் ஏனைய ஆட்சிகளை விட மிக வேகமாக.
தங்கள் குடும்பங்களுக்கு என்ன பரம்பரைக்கே சேர்த்தாலும் பரவாயில்லை;தமக்கு அதில் ஒரு சில சதவீத அளவிலாவது ஏதாவது செய்து தந்தால் போதும் என்று திருப்திகாணும் மக்கள் அல்லவா.. 
மன்னராட்சியில் எல்லாம் சுபிட்சம்.
ஆனால் நடுநிலை நின்று பார்த்தல் நாடு ஐந்து ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டிருப்பது தெரிகிறது.. வீதிகள்,கட்டடங்கள்,முதலீடுகள்,புதிய வர்த்தக முயற்சிகளில்.. (யுத்தம் முடிவுற்றதும் முக்கிய காரணம்)
எம் மக்களுக்கும் எதிர்பார்க்கும் தீர்வைத் தந்தால் இன்னும் அமைதி காணலாம்..


நாளை புதிய அமைச்சரவை..


கிரிபத்தில்(பாற் சோறு) கின்னஸ் கண்ட மகாராஜா நாளை அமைச்சரவையை நீட்டி மேலும் சாதனை படைப்பார் என்று எதிர்பார்ப்புக்கள் உள்ளன.

மேலும் ஒரு தமிழர் பிரதி அமைச்சராகப் பதவியேற்க  உள்ளார்.
நமக்கெல்லாம் தெரிந்த முகம் தான்.

இதேவேளை பலரும் எதிர்பார்த்த ஒருவர் - இளவரசர் தனக்குப் பதவியேதும் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.
 இளவரசராக இருக்கையில் இன்னொரு பதவி எதற்கு என நினைத்தாரோ?

இதற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 'சேர்ந்து செயற்பட விருப்பம்' என்று சாதகமான சேதியை மன்னரின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக அனுப்பியுள்ளது.
பார்க்கலாம்..

இனிமேல் எல்லாம் இப்படித்தான் ...க்தி


நேற்று இலங்கையின் தனியார் வானொலிகளில் ஒன்றான சக்தி FMஇன் பன்னிரெண்டாவது பிறந்த நாள்.
இலங்கையின் இரண்டாவது இருபத்துநான்கு மணி நேரத் தமிழ் ஒலிபரப்பு இது.
என் வானொலி வாழ்க்கையை ஆரம்பித்துவைத்த இடம்.

எழில்வேந்தன் அவர்களின் முகாமைத்துவத்தில் மூன்று அறிவிப்பாளர்களுடன் ஒக்டோபர் முதலாம் திகதி நாம் பரீட்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்தோம்.
நேரடியாக ஒலித்த முதல் குரல் அடியேனது.அதில் இன்று வரை ஒரு பெருமை.
'சக்தி' எனப் பெயர் சூட்டி (உரிமையாளர் தமிழர் என்பதால் இந்தப் பெயரை அவரும் மிக விரும்பியிருந்தார்) எழில் அண்ணா மங்களகரமாக ஒலிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது அதே ஆண்டு நவம்பர் 20 .
அதன் பின் பல்வேறு அரசியல்,பொருளாதார ஆள் மாற்றங்களால் நான் இப்போது வெற்றியின் பணிப்பாளராக..

ஆரம்பித்துவைத்தவர்கள் உங்கள் பெயர்களை நேற்று நன்றிக்காகக் கூட சொல்லவில்லையே என்று ஒரு சில நேயர்கள் நேற்று ஆதங்கபட்டிருந்தார்கள்.
இதனால் எனக்கொன்றும் கவலையில்லை.
இதுந நன்றிகெட்டதனமும் அல்ல..
வானொலிகளுக்கிடையில் வர்த்தகப் போட்டி இருக்கையில் இன்னொரு போட்டி வானொலியின் பணிப்பாளரைத் தம் நேயர்களுக்கு ஞாபகப்படுத்த யார் தான் விரும்புவர்?

ஆனால் மிகப் பொருத்தமான,மகிழ்ச்சியான விடயம், நான் பயிற்றுவித்த,என் தம்பிபோன்ற, சூரியனில் நான் முகாமையாளராக இருந்தவேளை என்னுடன் பணியாற்றிய காண்டீபன் தான் இப்போது சக்தியின் பணிப்பாளர்.

அத்துடன் நேற்று சக்தியின் பிறந்தநாள் அன்று சக்தி வானொலி அறிவிப்பாளர் ஒருவரின் திருமணத்தில் அனேக தொலைகாட்சி அங்கத்தவர்களையும்,மாலை இடம்பெற்ற 'நீலாவணன் காவியங்கள்' நூல் வெளியீட்டில் சக்தியின் பிதாமகர் எழில் அண்ணாவையும், என்னுடன் சக்தியின் ஒலிபரப்பை முதல் நாளில் ஆரம்பித்த சகோதரி ஜானு-ஜானகியையும் சந்தித்தது.

உலகம் பன்னிரண்டு ஆண்டுகளில் எப்படியெல்லாம் சுற்றுகிறது....

சக்தி எனக்கு அறிமுகமும் களமும் தந்தது.. 
சூரியன் எனக்கு மேலும் அதிக நேயர்களைத் தந்தது. பதவியும் தந்தது.
வெற்றி இப்போது வெற்றிகளை மேலும் தருகிறது.. இன்னும் தரும்.

சக்திக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்..


சித்தன் 

இன்று மாலை நான்கு மணிக்கு கொழும்பு,பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் என் நண்பரான சித்தன்(உண்மைப் பெயர் இப்போதுவரை வேண்டாம் என்பது அவர் வேண்டுகோள்) தன ஆக்கங்களின் தொகுப்பான 'கிழித்துப் போடு' என்பதை வெளியிடுகிறார்.

வீரகேசரி வாரவளிஈட்டில் அவரது சித்தன் பதில்கள் அம்சம் பலரைக் கவர்ந்தது.
இலங்கையின் மதன் என்று நான் வேடிக்கையாகப் பாராட்டுவதுண்டு.

இதில் வேடிக்கை பலர் நான் தான் இந்த 'சித்தன்' என்று நினைத்துக்கொண்டிருபது..
கடந்த காதலர் தினத்துக்கு சித்தனின் பிரதியொன்றை நாம் 'வெற்றி'இல் வித்தியாசமான தயாரிப்பாகத் தந்ததுவும் ஒரு காரணம்.

வித்தியாசமான,ஆழமான சிந்தனையாளர்.
புதிய முயற்சிகள் என்று சிந்திக்கும் இவரது இன்றைய நூல் வெளியீடும் புதுமையோடு இருக்கும் என்று உறுதி சொல்லியுள்ளார்.
வர முடிந்தால் வாருங்களேன்..

இதோ சித்தனின் அழைப்பு..


கிரிக்கெட் 

'உங்கள் நாக்கின் நிறம் கருப்பா?' என்று இல் ஒரு நண்பர் எனக்கு கேள்வி அனுப்பியுள்ளார்..

டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிட நாடு இந்தியா நியூ சீலாந்திடம் தடுமாறுது..
தென் ஆபிரிக்காவை பாகிஸ்தான் சமநிலைப்படுத்துது..
மொக்கை அணியாக இருந்த மேற்கிந்தியத் தீவுகளோ இலங்கையையே மொத்துது..

இதெல்லாம் தான் காரணம் என்று அவர் கேள்வியில் புரிந்தது.....

அதான் நாக்பூரில் இந்தியா கலக்குதில்ல ;)

ஆனால் எதுக்கும் ஆஷஸ் தொடங்க முதலே நம்ம பிரியத்துக்குரிய ஆஸ்திரேலியா தடுமாறுவதால்..
இப்போதைக்கு என் கோஷம்...
Go England Go..
Ashes is for England..

யாரும் அன்றூ ஸ்ட்ரோசுக்கோ,அன்டி ப்ளவருக்கோ போட்டுக் குடுத்திடாதீங்கோ..  
வாழ்க விக்கிரமாதித்தன்..

November 16, 2010

ஐலே ஐலே குத்துது கொடையுது !!!

முந்தைய இடுகையின் தொடர்ச்சியாக, ஏனைய பாடல்களைப் பற்றி..


ஐலே ஐலே - பாஸ் என்கிற பாஸ்கரன்


இந்தப் பாடல் நா.முத்துக்குமார் எழுதியது. 
பல்வேறு முத்த வகைகள் பற்றி முத்து முத்தாக,அழகாக சொல்கிறார் கவிஞர்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் விஜய் பிரகாஷ் பாடி இருக்கிறார்.
அண்மைக்காலத்தில் அருமையான பாடல்களைப் பல்வேறு இசையமைப்பாளரின் இசையிலும் பாடிவரும் விஜய் பிரகாஷின் குரலை அன்பே சிவம் - பூவாசம் பாடலில் இருந்து ரசித்து வருகிறேன்.
மனதை வசீகரித்து வருடும் ஒரு அமைதியான குரல்.


கொஞ்சக் காலம் பெரிதாக அறியப்படாமலிருந்த விஜய் பிரகாஷ் பலரையும் ஈர்த்தது நான் கடவுள் பாடலான ஓம் சிவோஹம் மூலமாக..


இப்போது அநேகமாக ஒவ்வொரு ரஹ்மான் படத்திலும் பாடுகிறார்.
ஹோசானா - விண்ணைத் தாண்டி வருவாயா
வீரா - ராவணன்
காதல் அணுக்கள் - எந்திரன்


இந்தப் பாடலையும் மேலும் மெருகேற்றுவது விஜய் பிரகாஷின் குரலில் உள்ள காந்தத் தன்மை தான். அனுபவித்துப் பாடுகிறார்.


யுவனின் இசை துள்ளலுடன் துடிப்பாகவும் பாடல் வரிகளை மூழ்கடிக்கமலும் இருப்பதால் ஈர்க்கிறது.


வரிகள் கவித்துவம் என்றில்லாமல் இளமையாக,எளிமையாக இருக்கின்றன..


புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே
அனலிருக்கு குளிரிருக்கு எல்லாமே உன்னாலே
ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே
மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டடி மேலே
இதழ் மொத்தம் ஈரமானது பாரமானதை போலே
ஏதோ ஓர் மோகம் இது ஏகாந்த தாகம்


முத்தம் பற்றி சிந்தித்தாலே கவிஞர்கள் குஷிஆகி விடுகிறார்களோ?


பல்லவியில் பக்குவமாக ஆரம்பித்து, சரணத்தில் உலக இயக்கமே முத்தத்தால் என்று அறிவிக்கிறார் முத்துக்குமார்..
முத்தங்கள் மோதிக்கொண்டால் தான்
உலகம் சுத்தும்


அடுத்து வரும் வரிகளில் முத்தம் தா கண்மணி என்று ஏக்கத்துடன் கோருவது விஜய் பிரகாஷின் குரலிலும் அழகாக வெளிப்படுகிறது.
ரசித்தேன்..


இன்னும் ரசித்த வரிகள்..


அன்பென்னும் வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்
ஆகாயம் தாண்டசொல்லுதடி காதல் முத்தம்
அதனால் தான் எங்கும் கேட்குதடி வெற்றிச்சத்தம்


கதைக் காட்சிப் பொருத்தமாகவும் இருப்பதால் அழகாகவும் இருக்கிறது..
இதுவரை பிடிக்காவிட்டாலும் இனிப் பிடிக்கும். கேட்டுப் பாருங்கள்..

எப்பூடி?
முத்தத்தின் சுவையும் முத்தம் தரும் முத்தியும் புரிந்தததா?குத்துது கொடையுது - நகரம் - மறுபக்கம்


வைரமுத்து தன்னை எந்திரனுக்குப் பின்னர் இளமைப்படுத்தி இருக்கிறார் போலும்.. அதுசரி இனி தன் வாரிசுடனும் போட்டியிட வேண்டுமே..
முப்பதாண்டுகள் ஆகியும் இவரது பேனாவின் மையும்,பாடல்களில் காதல் மையும் இன்னும் தீரவில்லை.


குத்துது கொடையுது கூதல் அடிக்குது
உச்சி மண்டையில பூச்சி ஊருது
ஏய் அடியேய் பாரதி என்ன சொல்ல நினைத்தாய் நீ


குழந்தைபோல அருகே வந்து
பறவைப்போல பறந்த கண்மணி
அடியேய் பாரதி என்ன சொல்ல நினைத்தாய் நீ
தாயைப் போல நெருங்கி வந்து
நுரையைப் போல உடைந்த கண்மணி
அடியேய் பாரதி
என்ன சொல்ல நினைத்தாய் நீ


நெஞ்சாங்கூட்டில் நீதான் என்று
சொல்ல நினைத்தாயோ
என் நெஞ்சு திறந்து பாருங்கள் என்று சொல்ல நினைத்தாயோ
தந்தம் போலே என் முகம் என்று சொல்ல நினைத்தாயோ
அட தங்கத்தில் ஏன் தாடிகள் என்று சொல்ல நினைத்தாயோ
புத்தியில் காதல் தட்டுது என்று இப்போது
சொல்ல நினைத்தாயோ
இல்லை பொத்தான் தறிகளைக் கொடுங்கள் என்று
சொல்ல நினைத்தாயோ
மல்லிகப்பூ வச்சிக்கிட்டு
ஜல்லிக்கட்டு காளையோடு மல்லுக்கட்ட வேண்டுமென்று
நினைத்தாயோ......


அடியே பாரதி .....


நான் தான் உனது காதலி என்று சொல்ல நினைத்தாயோ
உன் நைட்டி எல்லாம் நனைந்தது என்று
சொல்ல நினைத்தாயோ
பார்வைகளாலே வார்த்தைகள் நூறு
சொல்ல நினைத்தாயோ
நீ பருவமடைந்த நான்காம் ஆண்டை சொல்ல நினைத்தாயோ
சுடிதார் தாவணி எதேதேன்று
என்னிடம் சொல்ல நினைத்தாயோ
சுங்குடி சேலையில் வரவா என்று
கண்களால் கொல்ல நினைத்தாயோ
சுந்தரிய கண்டதும் நான் எந்திரிக்க வேண்டும் என்று
மந்திரிக மந்திரிக்க நினைப்பாயோ....


என்ன சொல்ல நினைத்தாயோ
நெஞ்சைதிறந்து சொல்வாயோ இல்லை கொல்வாயோ யே யே (அடியே)
அண்மைக்காலத்தில் தன் தனியான இசைப் பாணியால் இளைய நெஞ்சங்களை ஈர்த்துக் கொண்டிருக்கும் தமன் தான் இசை. விறுவிறுப்பான,வித்தியாசமான மெட்டும், இடையிடையே வரும் ஜாலியான ரப்பும் பாடலுக்கு இளமை கொடுத்துக் கலக்குகிறது.


நவீன் மாதவின் கம்பீரக் குரல் தரும் சுவை புதிது..
எந்தவொரு வரியையும் தனித்து சொல்லாவிட்டாலும்,அத்தனை வரிகளிலும் அளவாக காதல்,ஏக்கம்,குறும்பு,கொஞ்சம் காமம் என்று வைரமுத்து இளமை ததும்பி இனிக்கும் வரிகள் தந்துள்ளார்.

அடியே பாரதி.. என்ற இறுதிக் கூவல் ஒரு தடவை கேட்டால் ஒரு நாள் முழுதும் மனசில் நிறைந்திருக்கும்...

ஆனால் 'நகரம்-மறுபக்கம்' சுந்தர்.C நடிக்கும் படமாம்.. அதான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.
ஏற்கெனவே எனக்குப் பிடித்திருந்த 'கதறக் கதறக் காதலித்தேன்' பாடலுக்கு நடந்த கதை இந்தக் 'குத்துது கொடையுது'க்கும் நடந்திடுமோ என்று..


பாடல் வரிகளை வேறு கவனியுங்கள்.. ;)
கதறக் கதற , குத்துது கொடையுது 


அடுத்த இரண்டு பாடல்களையும் இதே இடுகையில் தந்தால் இன்னும் நீண்டிடுமே..
அதற்குள் இந்த வாரத்தில் இன்னொரு பாடலும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.


அதனால் மீண்டும் அடுத்த 2 + 1பாடல்களுடன் இன்னொரு பதிவு வரும்..


அதுவரை இந்த இரு பாடல்களையும் கொஞ்சம் ரசியுங்களேன்..

November 11, 2010

இரும்பில் முளைத்த இருதயம் - எனக்குப் பிடித்த எந்திரன் காதல்

பல நாட்களாகப் பாடல்கள் பற்றிய பதிவு ஏதும் போடவில்லை.
பாடல்களுடனேயே ஒரு நாளின் பல மணிப் பொழுதுகளைக் கழிப்பவனாதலால்,பல பாடல்கள் மனதுக்குள் இலகுவாகக் குடியேறுவதும்,பல பாடல்கள் கொஞ்சக் காலமாவது உதடுகளில் முணுமுணுக்க ஏறி உட்காருவதும் என் ஒலிபரப்பு வாழ்க்கையில் சகஜம்.


இந்த இரண்டு மூன்று மாதங்களில் நான் அடிக்கடி முணுமுணுத்த,விரும்பி ரசித்த ஐந்து பாடல்களை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
அதற்காக இது தான் என் ரசனை என்று யாரும் முத்திரை குத்த முடியாது.
இவையும் என் ரசனை என்று எடுத்துக்கொள்ளுங்கள்.


காரணம் வானொலியில் அதிகமாக மற்றவர்களால் விரும்பிக் கேட்கப்படும்,ஒலிபரப்பாகும் பாடல்களை விட வேறு இனிமையான(என்னைப் பொறுத்தவரை) பாடல்களைப் பிடிப்பது என் வழமை.


இவற்றுள் உங்களுக்குப் பிடித்த பாடல்களும் இருக்கலாம்..


1.இரும்பிலே ஒரு இருதயம் - எந்திரன்
மதன் கார்க்கியின் விஞ்ஞானமும் ஒரு தலைக் காதலும் கலந்த வரிகள் மனதைத் தொட்ட அளவு, A.R.ரஹ்மானின் மந்திர,எந்திர இசையும் பச்சென்று என் மனதில் கேட்ட முதல் தடவையே ஒட்டிக் கொண்டது.


இசைப் புயலின் குரலிலும் எனக்கு ஒரு தனியான ஈர்ப்பு.. எவர் போலவும் இல்லாத ஒரு குரல்.
இந்தப் பாடலிலும் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது.


இசையிலும் ஒரு நவீனம்,துடிப்பு.. ஒரு எந்திரனுக்கு காதல் வந்தால்,உணர்வுகள் வந்தால் ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் குறியீட்டு இசைக் கருவிகளின் கையாள்கை என்று கலக்கி இருக்கிறார் ரஹ்மான்.


Kash and Krissy என்ற அந்த இரு துடிப்பான பெண் குரல்களும் பாடலுக்கு இன்னொரு கிக் FEELING கொடுக்கின்றன.


பாடலின் முக்கிய உயிரான வரிகளில் எதைப் பிடித்துள்ளது என சொல்வது???


பாடலின் ஆரம்பத்தில்..


பூஜ்ஜியம் ஒன்றோடு 
பூவாசம் இன்றோடு 


என்று அறிவியலையும் காதலையும் இணைத்தது முதல்,


கூகிள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணாக் காதல்
பெண் பூவே உன்னோடு 


என்னுள்ளே எண்ணெல்லாம் 
நீதானே நீதானே 
உன் நீலக் கண்ணோரம் 
மின்சாரம் பறிப்பேன் 
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன் 
என் எஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன் 
நீ தூங்கும் நேரத்தில் 
நான் என்னை அணைப்பேன் 


இப்படியான வரிகளில் ரசித்து சிலாகிக்க வைத்து,குறும்பாகவும் காதலின் விளையாட்டுக்களையும் எந்திரன் திரைப்படத்தின் ஒரு வரிக் கதையையும் இந்தப் பாடலின் வரிகளுக்கிடையில் ஊடு பாய விடுகிறார் மதன் கார்க்கி.


தொட்டுப் பேசும் போதும்
ஷோக் அடிக்கக் கூடும்.
காதல் செய்யும் நேரம் 
மோட்டார் வேகம் கூடும் 
இரவில் நடுவில் battery தான் தீரும் 


என்று காதலியின் தேவை சொல்பவர்,
உன்னாலே தானே – என்
விதிகளை மறந்தேன்
&


ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போக சொல்வாயா?


என்று எந்திரக் காதலையும் கதையின் திருப்பத்தையும் தொடுகிறார்.


உயிரியியல் மொழிகளில் எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி 
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே


என்று எந்திரன் ரோபோ தன் பெருமைகளையும் தன்னைக் காதலிப்பதால் கிடைக்கும் அனுகூலங்களையும் பீற்றிக்கொள்ள,
காதலிக்கப்படும் பெண்ணோ வெகு சிம்பிளாக அதனையும் அதன் காதலையும் தட்டிவிட்டு நிராகரிக்கிறாள்..
அவள் சொல்லும் காரணங்கள் நிறைய ஆங்கிலம்+கொஞ்சம் கொஞ்சும் தமிழில் ரப்(RAP)பாக வருகிறது.


Hey… Robo… மயக்காதே …
you wanna come and get it boy
Oh are you just a robo toy
I don’t want to break you
even if it takes to
kind of like a break through
you don’t even need a clue
you be my man’s back up
i think you need a checkup
i can melt your heart down
may be if you got one
we doing that for ages
since in time of sages
முட்டாதே ஓரம்போ
நீ என் காலை சுற்றும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ 
நீ தேவையில்லை போ போ   


நீ வெறும் ரோபோ தான் எனக்கு வேண்டாம் என்று மறுக்கிறாள் நாயகி.


தந்தையின் இயல்புகள் தனயனுக்கும் ஜீன்களால் வந்து கலப்பது ஒருபக்கம், தந்தை இதே படத்தில் எழுதிய மற்றப் பாடல்களையும் தாண்டிப் பலரை ஈர்ப்பது என்பது எவ்வளவு பெரிய சாதனை?
வைரமுத்துவின் குட்டி முதல் படத்திலேயே பதினாறு என்ன பல நூறு அடி பாய்ந்துள்ளது.


ஏற்கெனவே இந்தப் பாடலைக் கேட்டுப் பார்த்திருப்பீர்கள்..
இந்த இடுகையை வாசித்த பிறகு மீண்டும் ஒரு தடவை கேட்டுப் பாருங்களேன்..
இன்னும் புதியதாகத் தெரியும்..

எந்திரனில் வைரமுத்துவின் வரிகளில் புதிய மனிதா,அரிமா அரிமா, காதல் அணுக்கள் பாடல்களும் மனதுக்குப் பிடித்தே இருந்தாலும் இரும்பிலே இருதயம் முளைக்க வைத்த மதன் கார்க்கியின் வரிகள் மனதின் மெல்லிய பரப்பில் ஏறி உட்கார்ந்து விட்டன.
            கவிப் பேரரசும் இளைய கவி இளவரசும் 


மதன் கார்க்கிக்கு செங்கம்பள வரவேற்பு எந்திரன் மூலம் கிடைத்துள்ளது.
இந்தப் பிரம்மாண்டப் புகழைப் பத்திரமாக தொடர்ந்து வரும்பாடல்களிலும் கொண்டு செல்வார் என்று அதீத நம்பிக்கையுடன் இருக்கிறேன்.


வைரமுத்து,நா.முத்துக்குமார் வரிசையில் மேலும் ஒரு அற்புத அறிவியல் பாடலாசிரியர்? காலம் சொல்லும்..
(எந்திரன் பாடல்கள் பற்றி எழுதச் சொல்லி அன்பு வேண்டுகோளை முன்வைத்த சில நண்பர்களை அப்போது ஏமாற்றிவிட்டேன்.. இப்போது கொஞ்சமாவது திருப்தி தானே? )


ஐந்து பாடல்கள் பற்றியும் இதே இடுகையில் சொல்லலாம் என்று ஆரம்பித்தால் இரும்பிலே பாடலில் கொஞ்சம் அதிகமாகவே ஊறி அதிகமாக பதிவில் ஊற்றிவிட்டேன் போல் தெரிகிறது..


மீதி நான்கு பாடல்களையும் அடுத்த பதிவில் சொல்லவா?


பி.கு - இன்னொரு பாடல் இடுகை இட்டுள்ளேன்.. கொஞ்சம் வித்தியாசமாக ..
கொஞ்சம் பாருங்களேன் - இதுவரை வாசித்திராவிட்டால்..

தீனா சுட்ட முருகன் பாடல்..

November 09, 2010

வயூ+மியூ - புனைவு & வாழ்த்துக்கள்

இது முதன் முதலாக நான் தருகிற புனைவு.
இந்தப் புனைவுக் கதையிலே வரும் பாத்திரங்கள்,சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே,யாரையும் குறிப்பிடுவன அல்ல என்று நான் அடித்து சொன்னாலும் நீங்கல்லாம் நம்பவா போறீங்க..

சரி சரி..
புனைவுக்குப் போகலாம் வாங்க..மழை சிறு சிறு தூறல்களாக கொழும்பு நகரின் புழுதி வீதியை ரம்மியமாக நனைத்துக் கொண்டிருக்கும் ஒக்டோபர் மாத மாலைப் பொழுதைக் கையில் உள்ள சூடான கோப்பியுடன் ஜன்னல் தனது அறையின் வழியாக ரசித்துக் கொண்டிருந்தான் வயூ. அவனது கண்ணாடியின் மேலும் ஒரு சில துளிகள் பட லண்டன் ஸ்னோ ஞாபகத்துக்கு வந்தது. இப்போது அங்கேயும் பனி,குளிர் தொடங்கி இருக்கும் என நினைத்துக் கொண்டான்.

மாலை மயங்குவது வயூவுக்கு இப்போதெல்லாம் பிடிப்பதில்லை. கொழும்பிலே மாலை வேளைகள் எல்லாம் தனக்கு வேதனை தரவே வருவது போல வயூ நினைத்துக் கொள்வான்.
லண்டன் நகரத் தேம்ஸ் நதிக்கரையில் தன் கடைசியான காதலி மியூசிக்காவை அவளுக்குத் தெரியாமலே டாவடித்துத் திரிந்த மாலைகளும், இரவிரவாக அவளுக்காக ஏங்கி ஏங்கி வடித்த கவிதைகளுமாக மனது கனக்கும்.

ஆங்கிலப் பாடல்களில் மியூசிக் என ஆரம்பிக்கும் அத்தனை பாடல்களுமே தனக்கும் அவளுக்குமாக எழுதப்பட்டதாக உணர்வதில் தனியான இன்பம் வயூவுக்கு.
மியூசிக்கா திரும்பி ஒரு தடவை பார்த்தாலே அன்று நாள் முழுவதும் தூக்கம் வராது.. அவள் தன் பக்கம் திரும்பித் தும்மினால் கூட அது 'ஐ லவ் யூ' எனக் கேட்பதாக நினைத்துக் கொள்வான்.

மீதிக் கதையினுள் ஆழமாக செல்லுமுன் வயூ யார்? அவன் ஏன் கொழும்பில் இருந்து இப்போது வேதனையில் உழல்கிறான் என அறிய உங்களுக்கு இருக்கும் ஆவலைத் தீர்ப்பது என் கடமையல்லவா?

இந்தப் புனைவின் நாயகன் வயூவின் முழுப் பெயர் மந்தி வயூ..  உங்களில் பெரும்பாலானோருக்கு மந்தி வயூவைத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால் குற்றமும் இல்லை. 

காரணம் லண்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட மந்தி வயூ ஒரு மிகப் பிரபல,மூத்த ஆங்கிலப் பதிவர்.ஆங்கிலப் பதிவுகள் வாசிக்கும் உங்களில் சிலருக்கு அவரைத் தெரிந்திருக்கலாம்.
தெரியாதோருக்கு -  மூத்த பதிவர் என்றவுடன் இவர் வயதை எக்கச்சக்கமாகக் கூட்டிப் பார்த்துத் தப்புக் கணக்குப் போட்டிடாதீர்கள்.

பாலகனாக இருக்கும்போதே பதிவுலகத்துக்குள் நுழைந்தவராதலால் எப்போதுமே மனதில் இளைஞராகவே இருக்கிறான் வயூ.

அடிக்கடி வரும் இன்ஸ்டன்ட் காதல்கள் கன்னத்தோரம் வரும் நரைகளையும்,முன்னந்தலை முடி உதிர்தலையும் தாண்டி மனதை இளமையாக வைத்திருப்பதாக மனசுக்குள் சொல்லிக் கொள்வான்.

தானுண்டு, தன் ஆங்கிலப் பதிவுகள் உண்டு,தன்னையே அடிக்கடி கலாய்த்து சூப் வைக்கின்ற நண்பர் வட்டம் உண்டு,தனக்குத் தெரிந்த கொஞ்சம் IT உண்டு, இடையிடையே அடிக்கடி வந்து போகும் கல கல ஒரு தலைக் காதல்கள் உண்டு என வாழ்ந்து வந்த லண்டன் வயூவுக்கு அவன் கண்டிப்பான அப்பா ரூபத்தில் வந்த கட்டாய நாடுகடத்தல் தான் கொழும்புப் பயணம்.

ஆமாம் சக்கரவர்த்தியின் ஆட்சியில் செழிப்பான,அபிவிருத்தி கண்ட நாடாக இரு ஆண்டுகளில் மாறிப்போன இலங்கையின் உயர் கல்வித்தரத்தின் புகழும் பெருமையும் கேள்விப்பட்ட தந்தையார் லண்டனில் இருந்து வயூ உருப்படப் போவதில்லை என மேலதிக கல்விக்காக கொழும்புக்கு அனுப்பிவைத்துவிட்டார்.

வீட்டில் செல்லப் பிள்ளையான வயூக்கு இதில் துளியளவும் விருப்பமில்லாவிட்டாலும்,டாடி சொல் மிக்க மஜிக் இல்லை என்பதால் (உண்மையில் மாட்டேன் என்று சொன்னால் அவரது லெதர் பெல்ட் பேசும் என்ற பயமே முதல் காரணம்) உடனே ஓகே சொல்லிவிட்டான்.

இப்போது கொழும்பிலே பட்டப்படிப்பு படித்துக் கொண்டே இரவில் மேலதிக செலவுக்காக பிரபல சைவக்கடை ஒன்றில் (பந்து கபேயோ, பழ நாகமோ எதுவோ ஒன்று) பகுதி நேர வேலையும் பார்க்கிறான்.
லண்டனில் உள்ள நண்பர்களோடு மின்னஞ்சலியோ, ஸ்கைப்பியோ,இல்லாவிட்டால் நம்மைப் போல பேஸ் புக்கியோ தன் பிரிவுத் துயர்களைப் பெருமூச்சோடு போக்கிக் கொள்வான்.
இவனது தனிப்பட்ட வித்தியாசமான ரசனைகள் தெரியுமாதலால் நண்பர்கள் அடிக்கடி 'புதிய காதல் ஏதாவது இருக்கா?' என்று கேட்பது வழமையானது.

காரணம் வயூ லண்டனில் காதல் இளவரசனாக அறியப்பட்டவன்.
ஆனால் அவை அநேகமாக ஒரு தலைக் காதலாக அமைந்தது தன் விதி என்று சொல்லி தன்னை நொந்து கொள்வான் வயூ.
அவனது சில காதல்கள்..

அரச குடும்பப் பெண் ஒருத்தியைக் காதலித்தான்.. அவளுக்குமிவன் காதல் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் என்ன காரணமோ அவசரமாக அவள் யாரோ ஒருத்தனைக் கரம் பிடித்தாள்.
 பிரபல இலக்கிய எழுத்தாளர் டோரோத்தியுடனான இவன் காதல் ரசனை+ரசிப்புக்களுடன் ஊமையாகவே முடிந்தது.
சாதாரண ஒருத்தியாக இருந்த கெனி ப்ளூ என்ற பெண் இவனின் ஒரு தலைக் காதலின் பின்னர் அதன் ராசியோ என்னவோ பிரபல மொடல் ஆக மாறிவிட்டாள்.

மியூசிக்காவுடனான இவனின் ஒருதலைக்காதல் செல்போன்கள் சிலவற்றின் சிக்னல்கள் போலவே சிக்கலாகிக் கிடக்கிறது.
கிடைக்குமா கிடைக்காதா என்பது வருங்காலம் சொல்லும் வரலாறு.

ஆனால் இந்த அப்பாவி வயூவையும் ஒருத்தி காதலித்தாள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
இன்னும் பலர் துள்ளி விழும் இவன் ஆங்கில எழுத்துக்களைக் காதலித்தாலும் ஆளைக் காதலித்தார்களா என்று யாருக்குமே தெரியாது. கூகிள் ஆண்டவருக்கு சில வேளை தெரிந்திருக்கலாம்.

வயூவை உயிருக்கு உயிராகக் காதலித்த பெண் 
அழகான ஒரு பிரபலம்.. 
ஜூப்பா கான்.
வயூவின் வழமையான தெரிவுகளை விட இவள் கொஞ்சம் அழகு தான்.
தானாக முன் வந்த இவளை வயூ தள்ளி வைக்க என்ன காரணம்?
'விட்டுக் கொடுத்துவிட்டேன்' என்று இன்றும் சொல்கிறான் 'ரொம்ப நல்லவனான' வயூ.
ஜூப்பாவைக் காதலித்த சிலருக்காகவும்,ஜூப்பா காதலித்த பலருக்காகவும் வயூ செய்த தியாகமே அது என சிலருக்கே தெரியும்.

இப்போது மியூசிக்காவுக்காக தொலைவிலிருந்து மனதுள் இசை பாடிக் கொண்டிருந்தாலும் கிட்டுமோ கிட்டாதோ கதை தான்.
ஆனாலும் கொழும்பு நகரில் கற்கும்,வேலை செய்யும் இந்தக் கால கட்டத்திலும் காதல் மனம் கண்கள் கொண்டு நோட்டம் விட்டுக் கொண்டே இருக்கிறது.
லண்டனுக்குத் தான் கொண்டு செல்லும் தன்னுடைய தேவிக்காக..

பிந்திய தகவலின்படி நரேந்திர மோடியின் உறவுக்காரப் பெண்ணொருத்தியின் நட்புக்காக மோடி மஸ்தான் வேலைகளில் இறங்கியுள்ள வயூ,தன பெயரையும் மந்தி மோடி என்று மாற்றிக் கொள்வது பற்றி மலையாள ஜோசியர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டிருப்பதாக அவரது நட்புக்குரிய லண்டன் பதிவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

தென்னந்தோப்புக்கள் பலவற்றின் உரிமையாளரின் மகளான அந்த குஜிளிக்கு முன்னால் லலித் மோடி தன் அப்பாவின் பிசினெஸ் பார்ட்னர் என்றும், ருசி மோடி  தன் தூரத்து சொந்தம் என்றும் சில,பல பீலாக்கள் விட்டு,பிட்டுக்கள் இட்டு நோட்டம் விடுவது வயூவின் அண்மைக்கால பொழுதுபோக்காம்.

இப்போதெல்லாம் இரவுகளில் உணவகங்களில் பணத்தை எண்ணுகிறானோ இல்லையோ நம்ம ஹீரோ மனசுக்குள் மோடியின் தென்னந்தோப்பில் இருந்து வரப்போகும் தேங்காய்களையும்,சிரட்டைகளையும் கணக்குப் போட்டு சுகம் காணுகிறார்.

கொஞ்சம் அவதானித்துப் பாருங்கள்.. அவரின் காதுக்குள் இரையும் Head phoneஇல் ஒலிக்கும் பாடல்..
Picking coconuts from the coconut tree -eh
nah, nah, nah, nah-nah-nah-nah, nah nah nah
bIggest coconuts you ever seen'
nah nah nah nah nah nah


அடடா மறந்தே போனேனே.. 
இன்று நம் நண்பர்,பதிவுலகின் சிரேஷ்ட பதிவர்களில் ஒருவர் வந்தியத்தேவனுக்குப் பிறந்தநாள்.
சொ.செ.சூ சக்கரவர்த்தி வந்தியத்தேவனுக்கு எனதும்,எமதும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

 மாமா என்று வாயார நாம் அழைக்கும்போதெல்லாம் மனமார தானாக ஆப்புக்களில் ஏறி மறந்து எம்மையெல்லாம் மனமகிழச் செய்கின்ற
எங்கள் மாமா,என்றும் இளமையுடன் இதே பச்சிளம் பாலகனாக மனதில் மகிழ்வுடன் இவ்வாண்டில் இனிக்கும் செய்திகள் எமக்கும் தந்து உயர்வு காண நட்புடன் வாழ்த்துகிறேன்.

பி.கு + மு.கு 
(பிற்குறிப்பு+முக்கிய குறிப்பு)

புனைவு வேறு,வாழ்த்து வேறு..
நம்பவா போறீங்க.. ஆனால் நம்பித் தான் ஆகணும்.

மாமா வந்தி, நீங்க நம்பிறீங்க தானே? அது போதும் எனக்கு..
  

November 07, 2010

கமல் 56 - வாழ்த்துக்கள் !!!!!

இன்று திரையுலகில் நான் அதிகம் நேசிக்கும் நடிகர்/கலைஞர் கலைஞானி கமலஹாசனின் பிறந்தநாள்.

பதிவுலகம் வந்து மூன்றாவது ஆண்டுக்குள் நான் கால் பதித்துள்ள நிலையில்,இம்மூன்றாண்டிலுமே கமலின் பிறந்த நாளுக்கு விசேடமாகப் பதிவொன்று போடவேண்டும் என பெரிதாக ஐடியா பண்ணியுமே கடைசியில் ஏதாவது ஒரு அவசர வேலை காரணமாக வெளியூர் பயணமாக நேர்ந்து விடும்..
இம்முறையும் அப்படியே..

நண்பர்களுடன்.குடும்பத்துடன் திருகோணமலையில் நான் இருக்கும் நாளில் தான் கலைஞானியின் பிறந்தநாள்..

இருக்கும் இடத்தில் இருந்து நாள் முழுக்க ஊர் சுற்றும் களைப்பில் நான் 'ப்ளான்' பண்ணி வைத்துள்ள விசேட பதிவை அவசர அவசரமாக அரை குறையாகப் பதிவிட மனம் இடம் தரவில்லை.

என் முன்னைய பதிவுகளில் இதுவரை ஏழு பதிவுகளில் கொஞ்சமாவது கமலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.
அவற்றுள் இருந்து காலப் பொருத்தமாக ஒன்றை இந்நாளில் கமலுக்குப் பிறந்தநாள் பரிசாக :)

கமலின் 'ம' வரிசைப் படங்கள் பற்றி என் பார்வையில் கொஞ்சம் சீரியசாக மொக்கையோடு அலசிய பதிவை உங்களில் பலர் வாசித்திருக்கலாம்..
என்ன அதிசயம் பாருங்கள்..
அடுத்து வரப்போகும் கமலின் புதிய படமும் 'ம' தான்..
மன்மதன் அம்பு..

 கமலின் அண்மைக்கால ஆஸ்தான இயக்குனர் K.S.ரவிக்குமார், அன்பே சிவத்துக்குப் பின் மாதவன்,முதல் தடவையாக ஜோடியாக த்ரிஷா..
ஒரு கலவை மசாலா ரெடி..

கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
ஒரு ரசிகனாக.. ஒரு தொடர்வோனாக.. ஒரு வாசகனாக (கமலின் பல திரைப்படங்களை ஏன் பேட்டிகளைக் கூட நான் ஆழமாக வாசிப்பதால்) மனமார வாழ்த்துகிறேன்.

நீங்கள் ஒவ்வொரு ஆண்டு அதிகமாக வாழ வாழ திரையில் நாம் வித்தியாசங்களை,ரசனைகளின் உயரங்களை அதிகமாகத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டும்.. எனவே கொஞ்சம் சுயநலத்தோடும் வாழ்த்துகிறேன்.

----------------------------------

என் முன்னைய பதிவிலே 'ம' வரிசை பற்றி ஒரு மினி ஆராய்ச்சி செய்திருக்கிறேன்..
மன்மதன் அம்பு ஜெயிக்குமா நீங்களும் சொல்லுங்கள் ;)

மீண்டும் இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி உங்களை அழைத்து செல்கிறேன்.. இது 2008 ஆம் ஆண்டு டிசெம்பரில் பதிவிட்டது..
முன்பு சொன்னவற்றில் எத்தனை சரிவந்துள்ளது.. எத்தனை வெறும் ஊகங்களாகப் போயுள்ளது என்று பார்த்தால் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

-----------------------------------------------
உலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் முடக்கப் பட்டுவிட்டது என்ற அறிவித்தல் வந்து சில வாரங்கள் ஆகின்றன.. அடுத்த திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்தது பாராட்டுக்கள் வென்ற புதன்கிழமை அதாங்க The Wednesday என்ற திரைப்படத்தின் தமிழாக்கம் என்று நம்ம கேபிள் சங்கர் எழுதியிருந்தார்.. அதற்கு முதல் பிரபல தெலுங்கு,மலையாள நடிகர்களோடு 'தலைவன் இருக்கிறான்' என்ற படம் வெளிவர இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன..


எனினும் இந்த அறிவிப்புக்கள் எல்லாம் வந்த நேரத்தில் நான் வேண்டிக் கொண்டதெல்லாம், (யாரை,எந்தக் கடவுளை என்றெல்லாம் கேக்காதீங்க.. எனக்கே யாரிடம் வேண்டினேன் என்று தெரியாது.. அதுவும் நாத்திகரான கமல் படத்துக்கேயா? ) அடுத்த கமல் படத்துக்காவது மானா('ம') எழுத்தில் பெயர் வைக்கக் கூடாதென்று தான்.. 


காரணம் அண்மையில் 'ம' எழுத்தில் ஆரம்பிக்கப் பட்ட இரண்டு கமல் படங்களுமே முடங்கிவிட்டன.. முதலில் மருதநாயகம், பின்னர் இப்போது மர்மயோகி..


இரண்டுமே பிரம்மாண்டத் தயாரிப்புக்கள் என்று பரபரப்புக் கிளப்பியவை.. இரண்டுமே கமலின் கனவுப் படைப்புக்களாகக் கருதப்பட்டவை.


பொன்னியின் செல்வன் போன்றதொரு தமிழ்க்காவியத்தை, அல்லது கிளாடியேட்டர் போன்றதொரு பிரம்மாண்டப் படத்தை தமிழில் எதிர்பார்த்த எம் போன்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது..


கமலின் 'ம' வரிசைத் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், நல்ல திரைப்படமாக பாராட்டுக்களை வென்றாலும், வசூலில் படு மோசமாகத் தோற்றுப்போன 'மகாநதி' தான் ஞாபகத்துக்கு வரும்..அவ்வளவு அற்புதமான திரைப்படத்தை வெற்றி பெற வைக்க முடியாததற்கு ரசிகர்களான நாமே தான் வெட்கப்பட வேண்டும்..அதே திரைப்படம் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.. 


அதே போல 'ம' வரிசையில் , 'மு' எழுத்தில் வெளியான மும்பை எக்ஸ்ப்றேசும் தோல்வியுற்றது.. அந்தத் திரைப்படத்தின் நகைச்சுவைகளும், சொல்லப்பட்ட சில சமூக நியாயங்களும் நம்மவருக்கு ஏற்புடையதாக இல்லை.. பல பேருக்கு திரைப்படம் புரியவே இல்லை.. 


கமலுக்கு அப்போ 'ம' சறுக்கல் தருகிற ராசியில்லாத எழுத்தா என்று அவசர அவசரமாக தேடியதில் சில விஷயங்கள் அகப்பட்டன..


ஆரம்ப காலத்தில் கமலின் சகல 'ம' எழுத்தில் ஆரம்பித்த திரைப்படங்களும் பெரு வெற்றியும் ,பாராட்டுக்களும் பெற்றன..


பாலச்சந்தரின் இயக்கத்தில் 'மரோசரித்திரா' (தெலுங்கு), மன்மதலீலை', 'மூன்று முடிச்சு', 'மூன்றாம் பிறை' என்று வரிசையாக எல்லாமே வெற்றி பெற்றவை..


அதன் பின் கமல் எடுத்த மிகப் பெரிய நகைச்சுவை திரைப்படம் மைக்கல் மதன காம ராஜன் கூட ம வரிசையில் இடம் பெற்ற  திரைப்படம் தான்..


கமல் ஒரு வித்தியாசமான வேடம் ஏற்று நகைச்சுவையில் பின்னியெடுத்த மகாராசன் கூட 'ம' வில் ஆரம்பித்த படம் தான்.. அதுவும் வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வெற்றி தரவில்லை என அறிந்தேன்.. 


எனினும் அண்மைக்கால பெரிய சறுக்கல்கள் 'ம' எழுத்து கமலுக்கு ராசியில்லை என்ற கருத்தையே தருகின்றன..


இதைக் கமல் ஏற்றுக் கொள்வாரா தெரியவில்லை.. அவர் தான் மூட நம்பிக்கை மீது பெரிதாக நாட்டமில்லாதவர் ஆயிற்றே.. (ஆகா.. அது கூட 'ம' வரிசை தான்)


ஆனால் 


அன்புள்ள கமல், என்ன தான் இருந்தாலும் தயவுசெய்து அடுத்த படத்துக்கு 'ம' எழுத்திலே பெயர் வைக்காதீங்க.. கோடி புண்ணியமாகும்.. 


இதற்கிடையில் மர்மயோகியை சண் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி மீண்டும் எடுப்பதாக அறிந்தேன்... தமிழக நண்பர்கள் யாராவது உறுதிப் படுத்தினால் நல்லது..

-------------------------------------------------
முன்னைய பதிவின் மீள் பதிப்பு எனினும் எந்தவொரு விஷயத்தையும் மாற்றவில்லை.


'ப்ளான்' பண்ணி (மனசுக்குள் தான்) வைத்துள்ள கமலுக்கான விசேட விரிவான பதிவு விரைவில்..


அதற்குள், கமல் பற்றிய என் முன்னைய இம்மூன்று பதிவுகளையும் கூட நீங்கள் கொஞ்சம் மீள அசை போடலாம்..


பதிவுலகில் என் ஆரம்பக் கட்டத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் பதிந்தது..

நான்,சினிமா இன்னும் பல...
இவை இரண்டும் கடந்த ஆண்டில் பதிவேற்றியது..

கமல்,சுஜாதா,அசின்,SPB ஒரே கட்சியில்..

கமலும் மாதவியும் பிபாஷாவும் சரத்பாபுவும்
என் இனிய கமலுக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!!


எந்திரன் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள சன் குழுமத்தைக் கொஞ்சம் வளைத்து எப்படியாவது மருதநாயகத்தை வெளியே கொண்டுவாருங்கள்..
காத்திருக்கிறோம்..
November 04, 2010

M Magicகும் என் Magicகும் - கிரிக்கெட் அலசல் தான் :)

என்ன ஒரு போட்டி..
மூன்றாவது தடவையாக இந்த வாரத்தில் ஒரு கிரிக்கெட் போட்டியின் முடிவில் நான் சிலிர்த்து சொன்ன வார்த்தை.
இந்த ஒரு வாரத்தினுள் மூன்றாவது தொடர்ச்சியான ஒரு நாள் போட்டி இறுதிக் கட்டம் வரை என்ன நடக்குமோ என்ற கிரிக்கெட்டுக்கேயான விறுவிறுப்பைத் தந்திருக்கிறது.

பாலைவனப் புயலாக பாகிஸ்தான் - தென் ஆபிரிக்க அணிகளின் இரு போட்டிகள் தந்த பரபரப்பு இரவுப் பொழுதில் தூங்க செல்ல முதல் டென்சன் ஆக்கின என்றால், இன்றைய மெல்பேர்ன் ஒரு நாள் போட்டி எங்கள் அலுவலகத்தின் அத்தனை கிரிக்கெட் பிரியர்களினதும் ஒரு மணி நேர வேலையையாவது ஸ்தம்பிக்க செய்திருந்தது.

அபுதாபியில் அப்துல் ரசாக்கின் அதிரடி, ஷார்ஜாவில் நேற்று அம்லாவின் அமைதியான ஆட்டம்.. இன்று மெல்பேர்னில் M நாள்.

                   Memorable Ms - Mathews & Malinga 

Melbourne - M
ஆமாம், இலங்கையின் இன்றைய விறு விறு மயிரிழை வெற்றியில் துடுப்பாட்டப் பங்களிப்பு செய்த மூவரின் பெயர்களுமே M .
Mathews
Malinga
Muralitharan
ஆஸ்திரேலியாவுக்காக அதிக ஓட்டங்கள் குவித்தவரும் மைக்கல் ஹசி :)

ஆஸ்திரேலிய அணியின் தோல்விகள் தொடர்ந்து துரத்துகின்றன.
மூன்று விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலுமே தொடர்ச்சியாகத் தோல்விகள்.இறுதியாக ஜூன் மாதம் இங்கிலாந்தில் வைத்துப் பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியொன்றில்  வென்றபின்னர் எல்லாமே தோல்விகள்.
வெற்றி பெறுவது எப்படி என்று மறந்துவிட்டார்களோ?
இன்றைய போட்டியில் தனது பாட்டியின் இறப்பால் வழமையான தலைவர் பொன்டிங் விளையாடவில்லை.கிளார்க்கின் தலை மீண்டும் உருட்டப்படுகிறது.
அடுத்த வெள்ளி சிட்னி போட்டிக்கு பொன்டிங் மீண்டும் வரும்வேளை இன்னும் அவருக்கு சவால் இருக்கிறது.

ஆஷஸ் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில் இன்றைய தோல்வியும் மீண்டும் ஒரு அபாய மணி அடித்திருக்கிறது.

இன்று மத்தியூசும் மாலிங்கவும் ஒன்பதாவது விக்கெட்டுக்காக உலக சாதனை புரிந்து ஆஸ்திரேலியா அணியை நிலைகுலைய செய்தது, என்னைப் போலவே உங்களுக்கும் ஒரு மாதத்துக்கு முன்னர் மொஹாலியில் லக்ஸ்மனுடன் இஷாந்த் இணைந்து பெற்ற இந்திய வெற்றியை ஞாபகப்படுத்தியிருக்கலாம்.

மறுபக்கம் இலங்கை அணி இதற்கு முதல் T20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை மிக இலகுவாக வெற்றி கொண்டிருந்தாலும் இன்றைய வெற்றி கொஞ்சம் அல்ல நிறைய அதிர்ஷ்டத்தினாலுமே கிட்டியது என்பதை அணித்தலைவர் சங்கக்கார ஒத்துக்கொண்டது போல நாமும் உணரவேண்டும்.
ஆனால் ஒரு விக்கெட் வெற்றி என்ற போதிலும் உலகின் முதல் தர ஒரு நாள் அணிக்கேதிராகக் கிட்டியுள்ள வெற்றி என்பதனாலும்,இதுவரையில் ஆஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கேதிராக விளையாடிய 40 போட்டிகளில் பெற்ற ஒன்பதாவது வெற்றி இது என்பதாலும் பரவசப்படக் கூடியதே.

சங்கா இந்த வெற்றியைத் தான் விளையாடிய 277 ஒரு நாள் போட்டிகளில் மறக்கமுடியாத இரண்டாவது வெற்றி எனப் பட்டியல் இட்டுள்ளார்.
முன்னையது 2009 ஜனவரியில் பங்களாதேஷ் அணிக்கெதிராக விளையாடிய ஒரு இறுதிப் போட்டி.
இதைப் பற்றிய என் பதிவு..இலங்கை அணி இன்றைய தினம் மெல்பேர்னில் பந்துவீசிய விதம் அருமை.
மாலிங்,முரளி,ரண்டீவ் ஆகியோர் வழமை போலவே ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி எதிரணியை இருக்க,திசர பெரேரா ஐந்து விக்கெட் பெறுதியைப் பெற்று தான் வெறுமனே இந்திய ஸ்பெஷலிஸ்ட் இல்லை எனக் காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக மட்டுமே கலக்கி வந்த இவர்,(வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதும் அவ்வாறே) இரண்டு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனம் ஆகியுள்ளார்.
திசர - முன்னைய இந்திய வில்லன்,இப்போது ஆஸ்திரேலியாவுக்கு??

ஏராளமான இலங்கை ரசிகர்கள்,ஆடுகளத்தின் தன்மை,சீதோஷ்ணம் என்று அநேகமாக இலங்கையினை ஒத்த மெல்பேர்னில் விளையாடுவது இலங்கை வீரர்களுக்கு சௌகரியமாக இருந்திருக்கலாம்.

ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் சௌகரியமாக உணரவில்லை.
வரிசையாக அணிவகுப்புப் போல தலைவர் சங்காவைத் தனிமரமாக விட்டு விட்டு வித விதமாக ஆட்டமிழந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
சங்கக்கார 49 ஓட்டங்கள் பெற்ற பின் ஆட்டமிழக்க,இலங்கையின் நிலை ததிங்கினத்தோம் ஆனது.  
அப்போது ஐந்து விக்கெட்டை இழந்து ஓட்டங்கள். அதன் பின் எட்டாவது விக்கெட்டும் 107 ஓட்டங்களில் இழக்கப்பட நிலைமை டண்டணக்கா ஆனது.

அதன்பின் தான் ஆரம்பமானது M Magic..
மத்தியூசின் மதியூகமான பொறுமையான ஆட்டமும்,லசித் மாலிங்கவின் பலத்துடன் சேர்ந்த அதிரடியும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டியை ஆஸ்திரேலியாவிடமிருந்து கை மாற்றுவதை கிளார்க்கும் ஆஸ்திரேலியாவும் ஏன் நாமும் உணர்ந்துகொள்ள கொஞ்ச நேரம் எடுத்தது.

இருவரும் தத்தமது அரைச் சதங்களை எடுத்ததுடன் தத்தமது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கைகளைப் பூர்த்தி செய்தனர்.
இதை விட மிக முக்கியமாக 27 வருடங்களாக முறியடிக்கப்பட முடியாமல் இருந்த ஒன்பதாவது விக்கெட்  இணைப்பாட்ட சாதனையையும் இவ்விருவரும் முறியடித்துப் பெருமை படைத்தனர்.
1983 உலகக் கிண்ணப் போட்டிகளில் சிம்பாப்வே அணிக்கெதிராக கபில் தேவும் கிர்மானியும் இணைந்து பெற்ற 126 ஓட்ட சாதனை இன்று தவிடுபொடியானது.

மத்தியூஸ் இலங்கை அணிக்கு அண்மைக் காலத்தில் கிடைத்த ஒரு பொக்கிஷம்.மூன்று விதப் போட்டிகளிலும் அவற்றுக்கு ஏற்றாற்போல் பொருந்திப் போகிறார்.
பொறுமை,வேகம்,உறுதி,நிதானம்,ஊக்கம் என்று தேவையான விடயங்களைத் தேவையான நேரத்தில் தந்துகொண்டிருக்கிறார்.


மாலிங்கவின் துடுப்பாட்டமும் இன்று சரியான நேரத்தில் கை கொடுத்தது மிக முக்கியமானது.
இந்த இணைப்பாட்டதில் மிக முக்கியமானது மாலிங்கவை மத்தியூஸ் நிதானப்படுத்தியதும் சிக்கலான சில பந்துகளில் இருந்து பிற்பகுதியில் காப்பாற்றியதும்,பரஸ்பர நம்பிக்கையும்.
மத்தியூஸ் ஒரு நல்ல finisherஆக மாறிக் கொண்டிருக்கிறார்.

ஆனால்கடைசி நேரத்தில் இதோ வெற்றி வருகிறது என்று இருக்கும் நிலையில் மாலிங்கவின் ஆட்டமிழப்பும் முரளியின் வருகையும் தந்த டென்ஷன் இருக்கே..
அப்பப்பா.. 
அந்த 38 வயது இளைஞன் முரளி fine leg நோக்கித் திருப்பிவிட்ட பந்தைப் பார்த்த பிறகு தான் பலருக்கு மூச்சே வந்திருக்கும்.
இந்தப் போட்டி பல விஷயங்களை இரு அணிகளுக்கும் பாடமாகக் கொடுத்திருக்கிறது.

இலங்கைக்கு -
துடுப்பாட்ட வரிசை எவ்வளவு அனுபவமானதாக இருந்தாலும் சில நேரங்களில் தளர்ந்து,ஒரேயடியாக முறிந்துபோதல்.
உலகக் கிண்ணம் நெருங்கி வரும் வேளையில் இதை சீர்ப்படுத்தவேண்டும்.
எல்லா நாளும் இதே போல பத்தாம் இலக்கத் துடுப்பாட்டமும்,அதிர்ஷ்டமும் கை கொடுக்காது.


ஆஸ்திரேலியாவுக்கு- 
சில ஆறுதல்களும் நம்பிக்கையும்

மைக் ஹசியின் மீள் வருகை.
பொறுமையாக ஆடி அணியை ஓரளவு உறுதியான நிலைக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஆஷசுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.
பிரட் ஹடின் முழுக்கக் குணம் அடைந்திருப்பதும் கொஞ்சமும் தெரியாத அவரது முன்னைய உபாதையும்.
மிக முக்கியமாக சேவியர் டோஹெர்ட்டி என்ற புதிய சுழல் பந்து வீச்சாளரின் அதிரடிப் பிரவேசம்.
தனது முதல் போட்டியிலேயே இலங்கையின் துடுப்பாட்ட முதுகெலும்புகள் நான்கை உடைத்துப் போட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
சேவியர் டோஹெர்ட்டி - இன்று ஆஸ்திரேலியாவின் Saviour ஆகமுடியவில்லை 

அவரது துல்லியமும் சாதுரியமும் நல்ல ஒரு நாள் பந்துவீச்சாளராகக் காட்டினாலும் டெஸ்ட் போட்டிகளுக்குத் தயார் நிலையில் இருப்பாரா என்பது அனைத்தும் அறிந்த ஆஸ்திரேலியத் தேர்வாளருக்கே வெளிச்சம்.
ஆனால் நேதன் ஹோரித்ஸ் எதற்கும் கவனமாக இருக்க வேண்டும். 
சில எச்சரிக்கைகள்..

பலரினதும் துடுப்பாட்டப் பிரயோகங்கள்..
போட்டியிலும் இன்றைய ஒரு நாள் போட்டியிலும் பலர் ஆட்டமிழந்தது மோசமான அடிகளுக்கு சென்று.
பந்துவீச்சு தெரிவுகள்.
ஆஷசுக்கு போலின்ஜர்,ஹில்பென்ஹோஸ்,ஜோன்சன்,ஹோரித்ஸ் ஆகியோரே முதல் தெரிவுகளாக இருந்தாலும், உலகக் கிண்ண அணியை இன்னும் ஆறுமாதங்களில் யோசிக்கும்போது சுழற்சி முறை கேள்விக்குறியாகிறது.

அதுபோல முன்பிருந்த ஆஸ்திரேலிய அணிகளுடன் பார்க்கையில் இந்தத் தோல்விகளை மட்டுமே கண்டுவரும் ஆஸ்திரேலிய அணி,ஆஸ்திரேலிய சீருடையில் இன்னொரு அணியா என்ற சந்தேகத்தையும் தருகிறது.

டென்ஷன் ஆகின்ற ஆஸ்திரேலிய அணித் தலைவர்கள் இன்னொரு வேண்டாத பிமப்ங்கள்.

சிட்னியில் தீபாவளிப் பட்டாசுகள் யார் பக்கம் வெடிக்கின்றன பார்க்கலாம்.

ஆனால் ஒன்று ,

இன்றைய வெற்றிக்காக அலுவலகத்தில் இருந்து கொஞ்சம் சீக்கிரம் கிளம்பும் முடிவில் இருந்த நான் பதற்றத்துடன் தொலைக்காட்சிக்கு முன் இருந்து மனதுடன் போராடியதும்,முரளியின் கடைசி அடி+வெற்றித் துள்ளலுடன் சந்தோஷங்களை அலுவலக நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டதும் உற்சாகக் கணங்கள்.
                                   அந்த உற்சாகக் கணம் 
----------------

ஆனால் இன்றைய வெற்றியில் இலங்கை வீரர்கள் களிப்பு+களைப்பு அடைந்தது போல நானும் களைத்துப் போனேன்.

காரணம் -
அண்மைக்காலமாக நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் அநேகமாகக் கவிழ்ந்துபோவதால்,இன்று வாயையும் விரல்களையும் ரொம்ப சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
இலங்கை சிறப்பாகப் பந்துவீசிய நேரத்திலும் Facebook,Twitter இல் எந்தவொரு மகிழ்ச்சியையும் நான் வெளிப்படுத்தவில்லை.

'உங்கள் இலங்கை டண்டணக்கா' என்று கும்மி நண்பர் ஒருவர் சீண்டியபோது,
மின்னலாக ஒரு ஐடியா வந்தது .(அந்த நேரம் இலங்கை 90/6)
உடனே அவருக்கு நான் அனுப்பிய பதில்..

Go Aussies Go.. 
Aussies wil win :)

அதன் பின் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே..

இதை நீங்கள் மூட நம்பிக்கை என்றால்,
கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத ஒருவர்,கடவுள் என்ற ஒன்று இல்லை என அடியோடு மறுக்கும் ஒருவர் ஏன் ஆதரவு குறித்தும் அனுப்பிய கும்மி மடல் ஒன்றைப் பாருங்களேன்..

லோசன் அண்ணாவால் எனது மூடநம்பிக்கைகள், கடவுள்கள் மீதான கொள்கை ஆட்டம் காணுகிறது. :) :) :)

இதனால் தான் என்னை விக்கிரமாதித்தன் என்று அழைக்கிறேன்.. வேதாளங்கள் யார் எனக் கேட்கப்படாது..
பாவம் நண்பர்ஸ்.. ;)

அதன் பின்னும் இலங்கை 200/8 என்ற நிலையில் இருந்தபோதும் 

I m an Aussie supporter today :)

வந்தால் மலை.. போனால்.. 

என்று கும்மி இட்டேன்..
பலன் கிடைத்திருக்கு..

மீண்டும் விக்கிரமாதித்தன் ஜெயிச்சிட்டான் ;)

போகிறபோக்கில் ஆஷசில் இங்கிலாந்துக்கு ஏன் முழுமையான ஆதரவைத் தெரிவித்தால் தான் பொண்டிங்கின் கையில் கிண்ணம் கிடைக்கும்போல..

------------

நாளை இந்திய-நியூ சீலாந்து முதல் டெஸ்ட் ஆரம்பிக்கிறதாம்..
யார் அக்கறைப்பட்டார்?
 மூன்று,நான்கு நாட்களின் பின்னர் இந்தியா எத்தனை ஓட்டங்களால்/விக்கெட்டுக்களால் வென்றது என்று தெரிந்துகொண்டால் சரி..

சச்சின்/சேவாக்/லக்ஸ்மன் என்ன சாதனை வைத்தார்கள் என்பதையும் தேடித் தெரிந்து கொண்டால் சரி..
வெட்டோரி - இப்பவே இப்படியானால் எப்படி?

பாவம் வெட்டோரி..


பி.கு - பதிவை முழுக்கத் தட்டி முடிய நள்ளிரவு தாண்டிப் புதிய நாள் பிறந்துவிட்டது. எனவே இன்று,நேற்று,நாளை குழப்பம் வந்தால் சாரி :)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner