November 30, 2008

வலைப் பதிவினால் மாட்டிக்கொண்டவர் !

எம் போன்ற சாதாரணர்கள் தொடங்கி போலிவூடின் அமிதாப்,இந்தியாவின் அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், நட்சத்திரங்கள் அமீர் கான் என்று ஏராளமான பிரபலங்களும் தத்தம் வலைப்பதிவுகளை எழுதி வருகின்றனர்.கிரிக்கெட் நட்சத்திரங்களில் யாராவது வலைப்பதிவாளராக இருக்கின்றார்களோ தெரியாது.. இலங்கையின் குமார் சங்ககார நன்றாக எழுதக் கூடியவர். பிரபல கிரிக்கெட் தளம் ஒன்றில் எழுதியும் வருகிறார்.எனினும் தனிப்பட்ட வலைத் தளம் இல்லை என்றே நினைக்கிறேன்.



தமிழ் திரை நட்சத்திரங்களில் யார்,யார் வலைப்பதிவராக இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை எனக்கு.எனினும் பின்னணிப் பாடகி சின்மயீ ஆங்கிலத்தில் ஒரு வலைப்பூவை வைத்துள்ளார்.அற்புதமாக எழுதியும் வருகிறார்.


வலைப்பதிவுகள் மூலமாக இந்தப் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை அதிகரித்துக் கொள்ளும் அதேவேளை பகிரங்கமாக சொல்ல முடியாத சில விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளக் கூடும்.எனினும் மனதில் பட்டதை சொல்லப் போகிறேன் பேர்வழி என்று அமீர்கான் நாய்க் குட்டியையும்,ஷாருக்கானையும் ஒப்பிட்டு விழி பிதுங்கியதைப் போல சம்பவங்களும் உண்டு.


அதுபோன்ற ஒரு சுவாரஸ்ய சம்பவம் தான் இது..


இப்போது நியூசீலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவது அனைவரும் அறிந்ததே..
அந்த அணியின் (நியூசீலாந்து) புதிய,இளம் வீரர் வேகப் பந்துவீச்சாளரான இயன் ஒ பிரையன்.இவரும் நம் போல வலைப்பதிவு எழுதுவதை வழக்கமாகக் கொண்ட ஒருவர்.



இவர் என்ன செய்தார், தற்போது நடைபெற்றுவரும் அடேலைட் டெஸ்ட் போட்டிக்கு முதல் நாள் தனது வலைப்பதிவில் தான் துடுப்பெடுத்தாடும் வேளையில் பவுன்செர் பந்துகளை சந்திப்பது அறவே பிடிக்காதென்றும்,பவுன்சர் பந்துகள் என்றால் தனக்குப் பயம் என்றும் எழுதி இருந்தார்.


அதுசரி உலகின் முன்னணித் துடுப்பாட்ட வீரர்கள் பலருக்கே பவுன்சர் பந்துகளை சந்திக்கப் பயம் இருக்கும் வேளைகளில் பத்தாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடும் ஒ பிரையன் எம்மாத்திரம்.


ஆஸ்திரேலிய வீரர்கள் இவரது பதிவை வாசித்தனரோ என்னவோ ஒ பிரையன் துடுப்பெடுத்தட வந்தவுடனேயே மிட்செல் ஜோன்சன் வீசிய முதல் பந்தே பவுன்சர்! அடுத்த பந்தும் அவ்வாறே! அடுத்த ஓவரிலேயே பிரெட் லீ வந்தார்..இரண்டு பந்துகளில் ஒ பிரையன் பவிலியன் திரும்பினார். லீயின் பவுன்சருக்கு பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.


நேற்று நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு தனது வலைப்பதிவில் "இனிமேலும் என் பதிவுகளில் எனக்கு எதுக்குப் பயம்;எதுக்குப் பயமில்லை என்று எழுதவே மாட்டேன் " என்று புலம்பி இருக்கிறார் ஒ பிரையன்.


எனினும் இன்று லீயைப் பழிவாங்கிக் கொண்டார் ஓ பிரையன். தனது பவுன்சர் பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார் ஓ பிரையன். லீக்கும் ஒரு வலைப்பூ இருந்தால் அவரும் ஏதாவது எழுதியிருப்பார்.



பி.கு .. சில நண்பர்கள் தலைப்பைப் பார்த்தவுடன் வேறு யாரோ (!) ஒருவர் பற்றி பரபரப்பான விஷயம் தான் வந்திருக்கிறது என்று நினைத்து வாசிக்கவந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.. ;)

November 29, 2008

தடுமாறும் இலங்கை அணியும், சாதனை படைக்கவுள்ள அஜந்த மென்டிசும்

உலகின் மிக மோசமான கிரிக்கெட் அணி என்று வர்ணிக்கப்படும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணி விளையாடப் போகிறது என்ற உடனேயே எல்லா கிரிக்கெட் ரசிகர்களும் மனதில் நினைத்த விஷயங்கள்.. 

இலங்கை அணிக்கு மற்றுமொரு இலகுவான 5-0 வெற்றி

எத்தனை சாதனைகள் முறியடிக்கப் படப் போகிறதோ..

இலங்கை அணி எல்லாத் தடவையும் நாணய சுழற்சியில் வென்றால் முதலில் துடுப்பெடுத்தாடி எத்தனை ஓட்டங்களைக் குவித்து தள்ளுமோ???

ஜிம்பாப்வேயின் நல்ல காலத்துக்கு சனத் ஜெயசூரிய இல்லாமப் போயிட்டாரு..


ஆனால் நடந்தது என்ன?

இதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளிலும் இலங்கை அணியே வென்றிருந்தாலும் கூட மூன்று போட்டிகளில் ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்து இருந்தது.அதிலும் கடைசி இரு போட்டிகளில் இலங்கை மயிரிழையில் தான் வென்றது.போட்டியின் இறுதிவரை ஜிம்பாப்வே வெல்லக்  கூடிய வாய்ப்புகளும் இருந்தன.

நாளை ஞாயிறு இடம்பெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் ஜிம்பாப்வே வென்றாலும் ஆச்சரியப் படாதீர்கள். டைபுவும்,மசகத்சாவும் நல்ல ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து,இந்தத் தொடரில் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள முபரிவா மற்றும் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள சிகும்பரா ஆகியோர் மீண்டும் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் ஜிம்பாப்வே இலங்கையை மண் கவ்வச் செய்யலாம். 

ஜிம்பாப்வே அணி இந்த நான்கு போட்டிகளிலும் பெற்ற ஓட்ட எண்ணிக்கைகள் 127,67,166,146.எனினும் இலங்கை அணி இந்த ஓட்ட எண்ணிக்கைகளைக் கடக்கவே எவ்வளவு சிரமப் பட்டுள்ளது. மூன்றாவது போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டு இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியும் கூட பெரிதாக சோபிக்கவில்லை.முன்னர் ஒரு காலத்தில் ,ஏன் அண்மைக்காலத்தில் கூட சகல உலக அணிகளையும் அச்சுறுத்திய இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை தடுமாறுகிறது.

குமார் சங்ககார மற்றும் ஜெஹான் முபாரக் தவிர வேறு யாரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடவே இல்லை.. அணித் தலைவர் மகேல கூட நான்கு போட்டிகளிலும் சொதப்பி உள்ளார்.இனிங்சில் அவர் பெற்றிருப்பது வெறும் 19 ஓட்டங்கள் மட்டுமே. 

இலங்கை அணி சார்பாக சங்கக்கார, முபாரக் ஆகியோர் மட்டுமே இந்தத் தொடரில் அரை சதங்களைப் பெற்றுள்ளார்கள். சங்ககார 154 ஓட்டங்களையும்,முபாரக் 82 பெற்றுள்ளனர்.


பந்துவீச்சில் இலங்கையின் எல்லாப் பந்துவீச்சாளருமே சிறப்பாக வீசி இருந்தாலும் கூட துடுப்பாட்ட வீரர்கள் எல்லாருமே சொல்லி வைத்தாற்போல மோசமாக ஆடி இருப்பது இலங்கை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.இன்னமும் ஜெயசூரிய தான் தேவையா என்ற கேள்வி எழுகிறது..(சனத் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டுமே ஓய்வே பெற்றுள்ளார்.இந்த தொடரை அவர் தவிர்த்த காரணம் ஓய்வுக்காகவும்,தென் ஆபிரிக்காவில் கழக மட்டப் போட்டிகளில் அவர் விளையாடுவதால் இளம் வீரர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கவுமே) 

முரளி மூன்று போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுக்கள், திலின துஷார 6 விக்கெட்டுக்கள் என்று சிறப்பாகவே பரிணமித்திருந்தாலும், விக்கெட்டுக்களை அள்ளிக் குவித்திருப்பவர் அஜந்த மென்டிஸ் தான்.

அவர் விளையாடப் புறப்பட்ட நாளில் இருந்து அவர் காட்டில் மழை தான். ஜிம்பாப்வே தொடரிலும் நான்கே போட்டிகளில் பதினைந்து விக்கெட்டுக்கள்.அறிமுகமான வேளையில் இந்தியாவை சுருட்டி எடுத்த அஜந்த மென்டிஸ் தொடர்ந்தும் தன் சுழலில் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறவைத்து வருகிறார்.இதுவரை 17 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 48 விக்கெட்டுக்களை எடுத்துள்ள மென்டிஸ் நாளை இரண்டு விக்கெட்டுக்களை எடுத்தால் மற்றொரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.

குறைந்த எண்ணிக்கையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் ஐம்பது விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய சாதனையே அது. இதுவரை காலமும் (கடந்த பத்து ஆண்டுகளாக)இந்தியாவின் அஜித் அகார்கரிடம் இருந்த சாதனை நாளை மென்டிஸ் வசமாகப் போகிறது. அகர்கர் 23 போட்டிகளில் ஐம்பது விக்கெட்டுகளை பெற்றிருந்தார்.அவருக்கு முதல் ஆஸ்திரேலியா வேகப் புயல் டென்னிஸ் லில்லீ 24 போட்டிகளில் இந்த சாதனையை புரிந்திருந்தார். 

இந்தப்பட்டியலில் உலகின் ஏனைய பிரபல பந்து வீச்சாளர்கள் ஐம்பது ஒருநாள் சர்வதேச விக்கெட்டுக்களை எடுக்க எத்தனை போட்டிகளை எடுத்துக் கொண்டார்கள் என்று அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்க.. 
http://stats.cricinfo.com/ci/content/records/283529.html
 
உலகின் பல துடுப்பாட்ட வீரர்களும் ஊகித்து அடிக்க முடியாத பல மந்திர வித்தைகளைத் தன் விரலில் வைத்துள்ள மென்டிஸ் தொடர்ந்து வரும் பல ஆண்டுகளில் இன்னும் பல விக்கெட்டுக்களைக் குவிக்கப் போவதும்,சாதனைகள் பல படைக்கப் போவதும் உறுதி என்றே தெரிகிறது.
      
ஷேன் வோர்நுக்குப் பிறகு யார் என்று ஆஸ்திரேலியா தடுமாறிக் கொண்டிருந்தாலும் முரளிக்குப் பின் யார் என்று இலங்கை அணி கண்டுபிடித்து விட்டது..

ஆனால் சனத்துக்குப் பின் யார் என்ற கேள்வி இன்னமும் தொடர்கிறது..  


November 28, 2008

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து

உலகில் ஒவ்வொரு நாளும் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு விபத்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு விபத்துமே இழப்புக்களைத் தருபவை.அந்த இழப்புக்களின் பாதிப்புக்கள் சம்பந்தப் பட்டவர்களுக்கே உணரக்கூடிய வலிகளைத் தருகின்றன.

விபத்துக்கு வரைவிலக்கணப்படி பார்த்தால் இழப்பு,காயம்,பாதிப்பு,நஷ்டங்களை ஏற்படுத்துகின்ற விரும்பத்தகாத,துரதிர்ஷ்டவசமான திடீர் நிகழ்வு என்று சொல்லலாம்.

விபத்துகளில் இழக்கப்படும் ஒவ்வொரு உயிருமே விலை மதிக்க முடியாதவை. உலக சரித்திரத்திலே உயிர்களை அதிகளவில் பலி கொண்ட பல விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும், பணப் பெறுமதி அடிப்படையில் அதிக பொருள் சேதத்தை ஏற்படுத்திய மாபெரும் விபத்துகளையே ($) கீழே வரிசைப் படுத்தியிருக்கிறேன்.

இதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, போர் அல்லது தீவிரவாத நடவடிக்கை காரணமாக நிகழ்ந்த எந்த ஒரு அழிவும் இங்கு குறிப்பிடப் படவில்லை.


#10. Titanic - $150 Million

டைட்டனிக் கப்பல் விபத்து
டைட்டனிக் திரைப்படம் மூலமாக உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கப்பல் விபத்து 1912ஆம் ஆண்டு இடம்பெற்றது.கட்டி முடித்த போது உலகின் மிகப் பிரமாண்டமான சொகுசுக் கப்பலாகக் கருதப்பட்ட டைடானிக் தனது வெள்ளோட்டத்திலேயே பனிப்பாறையுடன் மோதுண்டு கடலுள் சங்கமமானது. 1500 பயணிகளையும் பலியெடுத்த டைடானிக் கட்டி முடிக்க ஏற்பட்ட மொத்த செலவு 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அப்போதே செலவானது.. இப்போதைய மதிப்பில் சுமார் 150 மில்லியன் டொலர்கள்.

#9.Wiehltal Bridge -$358 Million

வீல்ட்ஹால் விபத்து
ஜெர்மனியில் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வீல்ட்ஹால் பாலத்தின் மீது 32000 லிட்டர் எரிபொருள் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கி ஒன்றுடன் கார் ஒன்று மோதியது.90 அடி உயரமான பாலத்திலிருந்து கீழே ஆட்டோ பான் என்று அழைக்கப்படும் பிரதான பாதையில் வீழ்ந்த எரிபொருள் தாங்கி தீப்பிடித்து எரிந்தது.அந்த வெப்பம் தாங்கமுடியாமல் பாலமும் வெடித்தது.தற்காலிகமாகப் பாலத்தைத் திருத்த ஆனா செலவு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.மீளப் பாலம் கட்ட ஆன செலவு 318 மில்லியன் டொலர்கள்.



#8. MetroLink Crash - $500 Million

மெட்ரோ லிங்க் விபத்து


அமெரிக்காவின் கலிபோர்நியாவில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 இல் இடம்பெற்ற மிகக் கோரமான தொடருந்து விபத்து இது. லொஸ் அன்ஜெலிஸ் தொடருந்து நிலையத்தில் எதிரும் புதிருமாக இரண்டு தொடருந்துகள் (அது தான் ரயில்கள்) மிக வேகமாக மோதிக்கொண்டதில் 15 பேர் பரிதாபமாகப் பலியாயினர்.மெட்ரோ லிங்க் தொடருந்து வந்த பொழுது அதை நிறுத்தும் சமிக்ஞ்சை வழங்க வேண்டிய அதிகாரி sms அனுப்புவதில் பிஸியாக இருந்தாராம். உயிர்களின் நஷ்ட ஈடு,பொருள் இழப்பு எல்லாம் சேர்த்து இழப்பு 500 மில்லியன் டொலர்கள்.



#7. B-2 Bomber Crash - $1.4 Billion

B2 பொம்பர்கள் விபத்து
குவாமில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து மேலெழுந்த அமெரிக்க விமானப்படையின் B2 குண்டுவீச்சு விமானம் சமிக்ஞ்சை கோளாறு காரணமாக தலை குப்புறமாக வீழ்ந்து 1.4 பில்லியன் டாலர்களைக் கரியாக்கியது.இதுவரைக்கும் மிக அதிக இழப்பான விமான விபத்தாக இதுவே கருதப்படுகிறது. எனினும் விமானிகள் இருவருமே வெளியே பரஷுட்டில் பாய்ந்து உயிர் தப்பிக் கொண்டனர்.




#6. Exxon Valdez -$2.5 Billion

எக்சன் வல்டஸ் எண்ணைக் கசிவு

அமெரிக்காவின் அலாஸ்கா பிராந்தியத்தில் எக்சன் நிறுவனத்துக்கு சொந்தமான வல்டஸ் கப்பல் பவளப்பாறை ஒன்றுடன் மோதியதை அடுத்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவில் 10.8 மில்லியன் கலன் எண்ணெய் கடலோடு கலந்து வீணாகியது. இது நடந்தது 1989 ஆம் ஆண்டு. எண்ணெய்க் கழிவுகளை சுத்திகரிக்க ஆன செலவு மட்டும் 2.5 பில்லியன் டொலர்.


#5. Piper Alpha Oil Rig - $3.4 Billion

பைபர் அல்பா எண்ணெய்க் கிணறு விபத்து

1988 இல் ஜூலை மாதம் ஆறாம் திகதி இங்கிலாந்துக்கு சொந்தமான வட கடலில் அமைந்திருந்தன பைபர் எண்ணெய்க் கிணறுகளில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து முழு எண்ணெய்க் கிணற்றுத் தளத்தையும் எரித்து நாசமாக்கியது. இரண்டு மணித்தியாலங்களில் 16 தொழிலாளர்கள் பலியானதோடு 300 கோபுரங்கள்,100 பாரிய எண்ணெய்க் குழாய்கள் என்று அனைத்துமே சாம்பராயின.அந்தக் காலகட்டத்தில் அதிக எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய பைபர் முழுவதுமாக இல்லாது போயிற்று.மொத்த இழப்பு 3.4 பில்லியன் டொலர்கள்.

#4. Challenger Explosion - $5.5 Billion

சலேன்ஜர் விண் விபத்து

அமெரிக்காவினால் 1986 ஆம் ஆண்டு ஏவப்பட்ட சல்லேன்ஜர் விண்கலம் விண்ணில் எழுந்து 73 வினாடிகளில் வெடித்து சிதறியது.ஒரு சிறிய தொழிநுட்பக் கோளாறு தான் இதற்கான காரணம் எனினும்,ஆன செலவோ மொத்தம் 5.5 பில்லியன் டொலர்கள்.

#3. Prestige Oil Spill -$12 Billion

ப்ரெஸ்டீஜ் எண்ணெய்க் கசிவு

கிரேக்க நாட்டுக்கு சொந்தமான ப்ரெஸ்டீஜ் என்ற எண்ணெய்க் கப்பல் ஸ்பானிய,பிரெஞ்சு கடற்கரையோரமாக 2002 ஆம் ஆண்டு நவெம்பர் 13 ஆம் திகதி பயணம் மேற்கொண்டிருந்தவேளையில் சந்தித்த மாபெரும் புயல் காற்றே இந்த மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்துக்குக் காரணம்.
77000 தொன்கள் கொண்ட எண்ணெய்த் தாங்கிகளை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலைப் புயல் தாக்கியதும் சில தாங்கிகள் வெடித்து சிதறின.

உடனடியாக கப்பல் தலைவன்,முதலில் ஸ்பானிய கடற்படையிடமும்,பின்னர் பிரெஞ்சு,போர்த்துக்கல் கடற்படையிடமும் உதவி கோரி கோரிக்கை விடுத்தபோதும்,கரையொதுங்க அனுமதி கேட்டபோதும் மறுக்கப்படவே செய்வதறியாமல் திகைத்துப்போன கப்பல் தலைவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. இந்த மூன்று நாடுகளுமே கப்பலைத் தங்கள் கரையோரம் ஒதுங்க வேண்டாம் என்று விரட்டின. நடுக்கடலில் கடும் புயலில் மாட்டிக்கொண்ட கப்பலைப் புயல் இரண்டாகப் பிளந்தது. இருபது மில்லியன் கலன் எண்ணெய் கடலிலே வீணாகியது.

இதன் காரணமாக பிரான்ஸ்,ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பல்லாயிரக் கணக்கான மைல்கள் நீளமான கடற்கரைகள் மாசடைந்து போயின.
சேதாரங்களும்,சுத்திகரிப்புப் பணிகளுக்கும் ஆன மொத்த செலவு 12 பில்லியன் டொலர்கள்.


#2. Space Shuttle Columbia - $13 Billion

கொலம்பியா விண்கல விபத்து

1978 ஆம் ஆண்டில் ஆரம்பமான கொலம்பியா விண்கலக் கட்டுமானப் பணிகளின் மூலம் அமெரிக்கா உலகின் தலை சிறந்த விண்கலத்தை அமைத்த பெருமையை அடைந்தது.

25 ஆண்டுகள் நீடித்த அந்த பெருமை, 2003 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதலாம் திகதி டெக்சாஸ் மாத்தின் வான் பரப்பில் நிகழ்ந்த கொடூர விபத்தோடு இல்லாமல் போயிற்று.
விண்கலத்தின் இறக்கைகள் ஒன்றில் ஏற்பட்ட சிறுதுவாரம் பேரு விபத்தை ஏற்படுத்தியது.
விண்கலத்தில் என் துவாரம் ஏற்பட்டது என்று ஆராயவே 500 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன. மீள் கட்டுமானப் பணிகளுக்கு மேலுமொரு 300 மில்லியன் டொலர்கள்.
மொத்த இழப்பு மட்டும் 13 பில்லியன் டொலர்கள்.

#1. Chernobyl - $200 Billion

செர்னோபில் அணு உலை விபத்து

1986 ஆம் ஆண்டு நடந்த செர்னோபில் அணு உலை விபத்து தான் உலகில் யுத்தங்கள் இல்லாமல் மிகப் பாரிய அழிவை ஏற்படுத்திய சம்பவம். வரலாற்றில் கறை படிந்த நாளாகிப் போன ஏப்ரல் 26,1986 - அன்று தான் அப்போதைய சோவியத் யூனியனின் உக்ரைனில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட கசிவு மிக நீண்ட காலம் நீடிக்கக்கூடிய அழிவுகளைத் தந்தது.
பலவருடம் கழித்து புற்று நோயினாலும் பலியானோரோடு சேர்த்து 125000.உக்ரைனின் அரைவாசிப் பிரதேசம் அணுக்கசிவின் காரணமாக இன்றுவரை பாதிக்கப் பட்டுள்ளது.இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேறிடங்களில் குடியமர்த்தப்பட வேண்டியவரானார்கள்.1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்றுவரை கதிரியக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் சேர்த்து இழப்பு வேறெந்த விபத்துமே நெருங்க முடியாத 200 பில்லியன் டொலர்கள்.

^^^^****^^^^

இனிமேலுமாவது இந்த விபத்துக்களை வேறெந்த விபத்துகளும் இழப்பு எண்ணிக்கையிலோ,பிரம்மாண்டதிலோ முந்தக் கூடாது என்று எண்ணுவோமாக..

November 27, 2008

மீண்டும் விடியலில், மறுபடியும் வழமை..

விடுதலையான பின் இன்று தான் மீண்டும் வானொலியில் என் காலை நிகழ்ச்சியை ஆரம்பித்தேன்..

எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வழமை போலவே நிகழ்ச்சியை ஆரம்பித்துக் கொண்டு செல்லவேண்டும் என்று எண்ணினாலும் கொஞ்சம் பதற்றமாகவும்,முதல் தடவை ஒலிவாங்கிக்கு முன்னால் செல்வது போலவும் உணர்ந்தேன்.

நிறைய நண்பர்களும்,நேயர்களும் நான் இனி ஒலிபரப்புப் பக்கம் தலைவைக்க மாட்டேன் என்று எண்ணியதாலேயே எனது ஓய்வு நாட்களை சீக்கிரமாகவே முடிக்கவேண்டி வந்தது. ;)
காரணம் சனிக்கிழமை நான் வீடு வந்த பின் குடும்பத்தாரோடு பெருமளவான பொழுதைக் கழித்தபோதும் , நண்பர்கள்,தெரிந்தவர்கள் வீடு வந்து சுகம் விசாரித்து சென்றபோதும் கூட பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து வந்தேன்.பழைய மனநிலைக்குத் திரும்பக் கொஞ்ச நாள் எடுக்கும் என்பதும் எனக்குத் தெரிந்தது..

எனவே அவ்வளவு விரைவில் விடியல் நிகழ்ச்சி நடத்தவும் ,அலுவலகம் செல்லவும் நான் இஷ்டப்படவில்லை.. எனினும் அலுவலக உயரதிகாரிகளின் அழைப்பும்,வீட்டில் சும்மா இருப்பதும் பல கதைகளைத் தோற்றுவிக்கும் என்ற எண்ணமுமே இன்று சரி நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து வந்தன.

நேற்றைய தினமே அலுவலகம் வந்து சகாக்களையும்,நண்பர்களையும் நலம் விசாரித்தும், எங்கள் நிறுவன உரிமையாளரைக் கண்டு பேசி,நன்றி தெரிவித்தும் தான் இன்றைய எனது கடமைப் பொறுப்பேற்பை உறுதிப்படுத்தி சென்றேன்.

எனினும் இதுவரை நான் நிகழ்ச்சிகள் செய்தபோது இல்லாத ஒரு பதற்றம் எனக்குள்.. நான் இனிமேல் வானொலியில் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பற்பல அர்த்தம் கற்பிக்கப்படும் என்பதனால் வழமை போல் நிகழ்ச்சிகளை வேகமாக,இயல்பாக வழங்க முடியாதென்பதே அதன் காரணம்.
அதுபோல ஒவ்வொரு பாடலுக்கும் என் போக்கில் நான் அடிக்கும் commentsஐயும் கொஞ்சம் குறைக்கவேண்டும் என்று எண்ணியுள்ளேன்.
நான் சொல்லும் நகைச்சுவைக் கதைகளையும் இனி என்னென்ன அர்த்தத்தில் எடுப்பரோ என்றும் யோசிக்கவேண்டியுள்ளது..

இவையெல்லாம் எனக்கான தனிப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமல்ல.. என்னை சார்ந்தவர்கள்,என் நெருங்கிய நண்பர்கள்,எனது வானொலி நிலையம் என்று ஏராளமான வர்களை யோசித்தே நான் கவனமாக இருக்க முடிவெடுத்தேன்.
என் ஒருவனால் கவலைப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று ஏழு நாட்கள் தந்த அனுபவம் எப்போதுமே மறக்காது.


எனினும் இன்று காலை ஆறு மணிக்கு வணக்கம் சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பித்த போதே, நூற்றுக்கணக்கான smsகள் கலையகத் தொலைபேசியை வந்து நிரப்பின. தங்கள் மகிழ்ச்சியையும் , நான் மீண்டும் வந்ததற்கு கடவுளுக்கு நன்றிகளையும் சொல்லினர்.

இந்த ஆசிகளும்,வாழ்த்துக்களும் தான் ஊடகவியலாளர்கள் எங்களை இத்தனை அல்லல்கள்,அலைச்சல்கள் மத்தியிலும் தினந்தோறும் புத்துணர்ச்சியோடும்,நம்பிக்கையோடும் எங்கள் கடமைகளில் எங்களை இன்னமுமே வைத்திருக்கின்றன.

ஒரு வாரம் எந்தத் தமிழ் பாடலும் கேட்காமல் இருந்த அந்தத் தனிமையான நாட்கள் இன்று தானாகவே ஒரு உற்சாகத்தைத் தந்தன.. அடிக்கடி நான் ஒலிபரப்பும் 'என்றென்றும் புன்னகை..' பாடலின் 'இன்று நான் மீண்டும்,மீண்டும் பிறந்தேன் ' என்ற வரிகள் போலவே..

ஆனால் விதி வலியது என்பதைப் போல இன்று காலை நான் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முதலிலேயே அறிந்த துயரச் செய்தி.. மும்பை தொடர் குண்டுவெடிப்பும்,தாக்குதல்களும்..
அப்பாவி மக்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதல்கள் கவலையையும் அதிர்ச்சியையும் அளித்தன.இந்தியாவின் வர்த்தகத் தலைநகருக்குள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது மேலும் அதிர்ச்சி..

தொலைக்காட்சியில் காட்சிகளைப் பார்த்தவாறே பத்து மணி வரை அவை பற்றிய தகவல்களையும் வெற்றி நேயர்களுக்கு அறியத்தந்தேன்.நாங்கள் ஆறுதலுக்கு அழைத்த நாடே இப்போது அவதிப்பட்டு ஆறுதல் தேடி நிற்கிறது..
இது தான் தீவிரவாதம்;பயங்கரவாதம்.
புரியவேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும்.

இன்றைக்குப் பிறகு மீண்டும் எனது வாழ்க்கைச் சக்கரம் அதே பாதையில் மறுபடி சுழல ஆரம்பிக்கிறது.
வானொலி,வீடு,குடும்பம்,எனது செல்ல மகன்,நண்பர்கள்,கவிதைகள்,வலைப்பதிவுகள்.. எல்லாம் அப்படியே.. என்னைப் போலவே..மாற்றம் இல்லாமல்.
++++++++++++++++++++++++++++++++++++


ஒரு விஷயம் நம் நண்பர்களுக்கு..
என் வலைப்பதிவுகள் எந்த விதத்திலும் எனக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை..என் பதிவுகள் பற்றி,பின்னூட்டங்கள் பற்றி அக்கறைப் பட்டு,கவலைப்பட்ட அன்பு நெஞ்சங்களுக்கு இது ஓரளவு ஆறுதலாக இருக்கும் என நம்புகிறேன்..
எனினும் உங்கள் அக்கறை,ஆலோசனைகள்,அறிவுரைகளை நான் இனிவரும் காலத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++

இந்தப் பதிவை போடலாம் என்று நினைத்தவேளையில் தான் இன்னுமொரு செய்தி கிடைத்தது .. நான் சிறுவயதில் மிக நேசித்த ஒரு இந்திய அரசியல்வாதியான முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் காலமானார் என்பதே அது. இந்திய அரசியல் பற்றி ஆழமான பார்வை உடையோர் இவர் பற்றி என்ன சொல்வார்களோ தெரியாது,ஆனால் என் சிறு வயதில் மனதில் பதிந்த ஒரு விஷயம் தான் வி.பி.சிங் கொள்கைக்காகப் பதவி துறந்த ஒரு நல்ல மனிதர் என்பதும்,இருந்த அரசியல்வாதிகளில் நல்ல மனிதர் என்பதும்.. உண்மையில் இவர் மரணம் என்னைக் கொஞ்சம் கவலைப் படுத்தியது.

November 22, 2008

மீண்டு(ம்) வந்துவிட்டேன்...

நன்றி நண்பர்களே..

உங்கள் பிரார்த்தனைகள்,வேண்டுதல்கள்,அன்பு,அக்கறை,ஆதங்கம்,ஆவேசம்,உண்மையான கவலை என்று அனைத்தின் பயனாகவும்,எனது குடும்பத்தாரினதும்,நண்பர்களினதும் இடைவிடாத முயற்சிகளினாலும் இன்று பிற்பகல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரினால் கொழும்பு உயர் நீதி மன்றத்தில் கொண்டுவரப்பட்டு,குற்றங்கள் ,சந்தேகங்கள் எதுவுமற்று நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டுள்ளேன்.

வீட்டுக்கும்,எனது உறவுகளுக்கும் தொலைபேசி மூலமாக ஆறுதல் அளித்து வந்த சொந்தங்கள்,நட்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

முகம் தெரியாத ஏராளமான அன்புள்ளங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டு பதிவுகள் இட்டமைக்கும்,கவலைப் பட்டுப் பதிவுகள் இட்டமைக்கும் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ???

இன்று பிற்பகல் வீடு வந்து நண்பர்களின் அழைப்புக்கள்,உறவினர்களின் நலன் விசாரிப்புக்களுக்குப் பிறகு பத்திரிகை செய்திகளையும்,இணையத்தின் செய்திகளையும் பார்த்தவுடன் உண்மையில் நன்றிகளோடு ஆச்சரியப்பட்டுப் போனேன், விதமாக எத்தனை பேர் எனக்காக,ஒரு ஊடகவியலாலனுக்காக கவலைப்பட்டுக் குரல் எழுப்பியுள்ளார்கள் என்று.

அனைவருக்கும் நன்றிகள் என்ற உன்னத வார்த்தையைத் தவிர இப்போதைக்குத் தர ஏதுமில்லை என்னிடம்..

எனக்கு எந்த ஊறுகளோ,அச்சுறுத்தல்களோ,வதைகளோ இந்த ஏழு நாட்களில் இழைக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்.

தனிமையான,புதிய,அடுத்தது என்ன என நான் அறியாமல் இருந்த அந்த ஏழு நாட்கள் பற்றி நிச்சயமாக,விரிவாக நான் விரைவில் பதிவேன்..

இந்தவேளையில் மட்டுமல்ல என் வாழ்வின் எந்த வேளையிலும் உங்கள் எல்லோரையும்,என் குடும்பத்தாருக்கும் என் விடுதலைக்கும் உதவிய என்னுயிர் நண்பர்களையும் நான் நினைந்திருப்பேன்.

November 13, 2008

குழந்தைகளுக்கே தெரிஞ்சு போச்சு..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி ஈட்டிய பராக் ஒபாமாவும், தோற்றுப்போன ஜொன் மக்கெய்னும் தத்தம் பிரசாரங்களில் குழந்தைகளைக் கவருவதையும் ஒரு அம்சமாக வைத்திருந்தார்கள்.. 
(அங்கேயுமா என்று கேட்காதீர்கள்.. எல்லா இடத்திலும் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..)








அவரவர் குழந்தைகளுடன் கொடுக்கும் போசிலேயே யாருக்கு வெற்றி என்று தெரியுதில்ல.. 
இத்தனைக்கும் ஒபாமாவுக்கு இரண்டு குழந்தைகள்;மக்கெய்னுக்கு ஏழு குழந்தைகள்.. ;)

இங்கேயும் நாங்கள் இந்த குழந்தை போஸ் டெஸ்ட் நடத்திப் பார்ப்பதே நல்லதுன்னு தெரியுது.. ;)

அதெல்லாம் சரி இப்போதிருப்பவரும் இனி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறப் போபவருமான புஷ்ஷூக்கு குழந்தையொன்று காட்டும் உணர்ச்சியைப் பாருங்களேன்..

சும்மாவா சொன்னார்கள் குழந்தையும் தெய்வமும் ஒன்றென்று... 

November 12, 2008

25000 + வருகைகளும் உலகின் முடிவின் இரண்டு படங்களும்..


செப்டெம்பரில் ஆரம்பித்த என் வலைப்பதிவுப் பயணத்தில் இதுவரை எண்பதுக்கும் அதிகமான பதிவுகள் இட்டுவிட்டேன்..

இதுவரை 25000+ ஹிட்ஸ் கிடைத்துள்ளன. தினமும் தவறாமல் வருகை தரும் அன்பு நெஞ்சங்களும் கிடைத்திருப்பது கண்டு மகிழ்ச்சி..
எனது எழுத்துக்கள் /பதிவுகள் உங்களுக்குப் பிடித்தனவாக அமைவது கண்டும் மகிழ்ச்சியே.ஆனால் நான் எனது பதிவுகளில் இதுவரை இவற்றைத் தான் எழுதுவேன் என்றோ,இதைத் தான் எழுதவேண்டும் என்றோ வரையறை வைத்துக் கொண்டதில்லை..எந்த நேரத்தில் எது தோன்றுகிறதோ அதை உடனே எழுதிவிட வேண்டும் என்று மட்டுமே யோசிக்கிறேன்.

சில நாட்களிலேதையும் எழுத மனதில் தோன்றாது.

ஹிட்ஸ் அதிகமான நாட்களை அடுத்த நாட்களில் ரொம்பவும் உற்சாகமாக ஏதாவது பதிவொன்றை இடவேண்டும் என்று மனம் உந்தும்.அந்த வேளையில் ஏதாவது சுவார்சயமான விஷயத்தை நானே தேடியெடுத்து எழுதிப் போட்டுவிடுவதும் உண்டு.

நண்பர்கள் அனுப்பும் சுவாரஸ்யமான படங்களும்(இலேசில் மற்றவர் கண்களுக்குத் தட்டுப்படாதவை மட்டும்) என் பதிவுகளில் வரும்.

 ஆனால் அரசியல் பதிவுகளும் கிரிக்கெட் பற்றி எழுதும் பதிவுகளும் தான் கூடுதலான வரவேற்பை இதுவரை பெற்றிருக்கின்றன. எனினும் எனது பதிவுகளில் எல்லாம் வரும்.அனானிகள் உட்பட நான் எல்லோரையும் பின்னூட்டமிட அனுமதிப்பது அவரவர் தத்தம் கருத்துக்களை சொல்லி தெளிவு பெறட்டும்.ஆகவும் ஓவரானால் மட்டும் நான் தலையிடுவேன்.. ;)

எனது தனிப்பட்ட ஒலிபரப்பு வாழ்க்கை,தனிப்பட்ட உணர்வுகளை எழுதினாலும் கூட என் வலைப்பூவை ஒரு personal digital diaryஆக மாற்றிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை.

இன்னொன்று,பத்தாண்டு கால ஒலிபரப்பு வாழ்க்கை பற்றி எழுத ஆரம்பித்தது பாதியிலேயே நிற்கிறது.. முழுமையாக பழைய நினைவுகளை அசைபோட்டு எழுத மூட் வாய்க்கவில்லை.. எப்போது மூட் வருகிறதோ,நேரமும் கூடி வருகிறதோ அப்போது தொடர்வேன்.

இப்போதைக்கு என் மனதில் படுபவை வரும்.

பின்னூட்டங்களின் எண்ணிக்கை தான் ஒரு பதிவின் தரத்தையும்,வரவேற்பையும் தீர்மானிக்கின்றன என்ற விடயத்திலும் எனக்கு உடன்பாடில்லை. 

ஆனால் தமிளிஷ், தமிழ்மணம் போன்றவையே (இப்போது இன்னும் பல புதிய வலைச்சரங்களும் தோன்றி வளர்ந்து வருகிண்டறன) நண்பர்களையும் வருகைகளையும் அதிகரித்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை..

வலைப்பூ எழுத ஆரம்பித்த பிறகு வாசிப்பது கூடியுள்ளது. பல புது விஷயங்கள் தெரியவந்துள்ளது.
நண்பர்கள் கூடியுள்ளார்கள்.
பல புதிய சொற்பதங்கள் தெரிய வந்துள்ளது.. (பின்னூட்டம்,கும்மி,அனானி,மீ த பர்ஸ்ட், கும்மி, மொக்கை.. இப்படிப் பலபல.. ) 

ஆனால் அலுவலக நேரம் இதனுடேயே போகிறது.. ;) எப்ப தான் உருப்படியா வேலை செஞ்சோம்.. 

அடுத்தது காண்பது,கேட்பதையெல்லாம் பதிவாக்கிவிட மனசு நினைக்கிறது..

எல்லாவற்றையும் கொட்ட வடிகால் கிடைத்துள்ளது. ஆனால் நேரம் இல்லாத நேரம் பைத்தியம் பிடிக்க வைக்கும் அளவுக்கு அடிமையாக்கி விட்டதோ என்று சில சமயம் சிந்திக்கிறேன்.

பதிவராகி நடை பழகியாச்சு.. 

இன்னும் பறக்க பல தூரம் கடக்க வேண்டும்.. உங்கள் வாழ்த்துக்கள் வேண்டும்.. வருகைகளும்,வாசிப்புகளும் தான்.. 

            
===============================================
உலகின் முடிவு?


வை  நான் பார்த்து அதிசயித்த graphix பிரம்மாண்டம். ஒவ்வொன்றுக்கும் எல்லை இருப்பது போல உலகுக்கும் இருந்தால்? உலகின் முடிவிடம் இப்படித் தான் இருக்குமோ???


November 09, 2008

பிரட்மன் ஆன கங்குலியும்,சுயநலவாதியான பொண்டிங்கும்

இன்று நாக்பூர் டெஸ்ட் போட்டியின் தீர்மானம் மிக்க நாள்.இந்த டெஸ்ட் போட்டியின் முடிவை மட்டுமல்லாமல் தொடரின் முடிவையும், போர்டர்-கவாஸ்கர் கிண்ணம் யாரிடம் செல்லும் என்பதையும் தீர்மானிக்கும் நாள்.

 இன்றைய நாளில் ஒரு சில சுவாரசியமான விடயங்கள் நடந்தன.

நான் எனது வலைத் தளத்தில் எதிர்வு கூறியது போலவே டிராவிட் இரண்டாவது இன்னிங்க்சிலும் சறுக்கினார்.
அவருக்கு இதன் பின் ஆப்பு நிச்சயம் போலவே தென்படுகிறது.

கங்குலி தனது இறுதி இன்னிங்க்சில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.Sir.டொனல்ட் பிரட்மனும் இவ்வாறே தனது இறுதி இன்னிங்சில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

டொன்னுக்கும், தாதாவுக்கும் ஒரே நிலை.. ஆனால் தாதாவின் சராசரியை விட டொன்னின் சராசரி இரு மடங்கு அதிகம்..

எழுந்து நின்று உற்சாக வரவேற்பு அளித்த நாக்பூர் ரசிகர்கள் இருக்கைகளில் அமர முதலே தாதா பவிலியன் திரும்பி விட்டார்.

முதலாவது பயிற்சி போட்டியில் சரமாரியாக வாங்கிக் கட்டிய ஜேசன் க்றேச்சா இந்தப் போட்டியில் இந்திய அணியை உருட்டி எடுத்து விட்டார்.
200 ஓட்டங்களுக்கு மேல் கொடுத்தாலும் முதலாவது இன்னிங்க்சில் 8 விக்கெட்டுகளையும்,இன்று 4 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை புரிந்தார்.முதலிலேயே இவரை அணியில் சேர்த்து இருக்கலாமோ என்று பொண்டிங் நிச்சயமாக ஏங்கிஇருப்பார்.

இன்று வெல்ல வேண்டிய நிலையில் இருந்த ஆஸ்திரேலியா தனது நிலையை டோனி-ஹர்பஜன் இணைப்பாட்டத்தின் போது இழந்தது. 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது இந்திய பெற்றிருந்த ஓட்டங்கள் 166 மட்டுமே.. அந்த வேளையில் லீ,வொட்சன் போன்ற வேகப்பந்து வீச்சாளரைப் பயன்படுத்தாமல் சுழல் பந்து வீச்சாளர்களையே பொண்டிங் பயன்படுத்திவந்தார். 

 இதற்கான காரணம் பிறகு தான் வெளிப்பட்டு இருக்கிறது..
அதிக நேரம் எடுத்துப் பந்து வீசினார்கள் என்று போட்டித் தீர்ப்பாளர் க்ரிஸ் பிரோட்,ஆஸ்திரேலிய அணித்தலைவர் பொண்டிங்கை அழைத்து எச்சரித்திருக்கிறாராம்.

தொடர்ந்தும் அதிக நேரம் எடுத்தால் தான் டெஸ்ட் போட்டித் தடைக்கு ஆளாகவேண்டி வரும் என்றே பொண்டிங் இந்த முடிவை எடுத்தாராம்.இது ஆஸ்திரேலியா வானொலி ஒன்றில் சொல்லப் பட்ட விடயம்.

 இவ்வாறான நேரத்தில் பொண்டிங் டெஸ்ட் போட்டியில் வெல்வதை கவனிக்காமல் சுயநலமாக நடந்து கொண்டது சரியா?
அல்லது இது ஒட்டுமொத்த அணியின் முடிவா என இனித் தான் ஊடக செய்திகள் சொல்லும்.

தனது சுயநலத்துக்காக ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை பொண்டிங் பணயம் வைத்திருப்பாரா? வொட்சன் மறுபடி பந்துவீச அழைக்கப்பட்டதுமே ஹர்பஜனின் விக்கெட்டைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
                               

எனினும் டோனி,ஹர்பஜன் ஆகியோரின் அரைச் சதங்கள் ஆஸ்திரேலியா பக்கம் இருந்த வெற்றியைக் கொஞ்சமாவது இந்தியப் பக்கம் திருப்பி இருக்கின்றன.

நாளை தமது வெற்றி இலக்குக்கு எஞ்சி இருக்கும் 369 ஓட்டங்களை ஆஸ்திரேலியா பெற முயற்சிக்குமா?

இலேசில் தோல்வியடைய விரும்பாத ஆஸ்திரேலியா நிச்சயம் இறுதிவரை போராடும் என்றே நம்புகிறேன். 

வாய்ப்புக்கள் இரு அணிகளுக்குமே உண்டு.. 
யாருக்கு வெற்றி அல்லது சமநிலையா என்பதை நாளை நாம் ஆர்வத்துடன் அவதானிக்கலாம்..

போராட்ட குணம் உடைய அணி ஆஸ்திரேலியா.. இறுதி நேரத்தில் இந்தியா சொதப்பிய வரலாறுகளும் உண்டு.. 
புதிய இந்தியாவை நாளை பார்க்கலாமா அல்லது தாம் இன்னமும் வீழவில்லை என உலக சாம்பியன்கள் நிரூபிப்பார்களா?

உலகின் எல்லா பிரபலங்களும் ஒரு படத்தில்

உலகின் பிரபலங்கள் எல்லோரையும் ஒரே படத்தில் வரைவது எவ்வளவு சிரமமானது?  

ஆனால் இந்தப் படத்தை வரைந்த ஓவியரால் அது முடிந்துள்ளது..  

யார் யாரெல்லாம் இந்தப் படத்தினுள் இருக்கின்றார்கள் என்று தேடிக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..  

பின்னூட்டங்களில் நீங்கள் கண்டுபிடித்தவர்களை சொல்லலாம்..  
வரைந்த ஓவியர் யாரென்றும் எனக்கு தெரியாது.. 
உண்மையாகத் தெரிந்தவர்கள் அதையும் உறுதிப் படுத்தி சொல்லலாம்..

பல ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட ஓவியம் என்ற காரணத்தால் இந்தக் காலப் பிரபலங்கள் பலபேரும் இல்லை என்று நினைக்கிறேன்.

November 08, 2008

விஜய்க்கு சிபாரிசு செய்த கங்குலி..

நாக்பூரில் இடம்பெற்று வருகிற இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டு நாட்கள் எஞ்சி இருக்கும் வேளையில் இந்திய அணிக்கு மற்றொரு டெஸ்ட் வெற்றியும்,சரித்திரபூர்வமான தொடர் வெற்றியும் கிடைக்க அருமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது..

இந்திய வீரர்கள் பல பேர் இந்தத் தொடரோடு கிரிக்கெட் உலகத்துக்கு விடை கொடுக்கப் போகிறார்கள்.. (கும்ப்ளே,கங்குலி அறிவித்து விட்டார்கள்.. )

கங்குலி விடை பெற்றாலும் கூட இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு அருமையான விடயத்தில் உதவியுள்ளார்.விலகிச் செல்லும் வேளையிலும் அவர் செய்துள்ள நல்ல காரியம் என்னவென்றால் (அவர் விலகிச் செல்வதே நல்லது என்றெல்லாம் நீங்கள் அவரை கேவலப் படுத்தக் கூடாது) ஒரு அருமையான இளம் வீரரை இந்திய தேர்வாளருக்கு அறிமுகப்படுத்தி இருப்பது தான்.

 தமிழக வீரர் முரளி விஜய் தான் அவர்..

கௌதம் கம்பீர் டெஸ்ட் போட்டித் தடைக்கு ஆளாகி,நாக்பூர் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை தோன்றிய பொது யார் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இறங்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்தன.

உடனடியாக எல்லோரும் நினைத்து அனுபவம் வாய்ந்த வசீம் ஜாபர் தான் தேர்வாளரின் தெரிவாக இருப்பார் என்று. ஆனால் திடீர் என்று தமிழக இளம் வீரர் முரளி விஜயின் பெயர் அறிவிக்கப் பட்டவுடன் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.எங்கிருந்து முளைத்தார் இந்த விஜய் என்று..

தமிழக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான விஜய் ஆம் 2006ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு அணிக்காக ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.(சராசரி 52.96) 

ஓட்டங்களை சிறப்பாகக் குவிக்கவும்,அதிரடியாகவும் ஆடத் தெரிந்த இளம் வீரர். இந்திய A அணியில் நுழைந்து படிப்படியான முன்னேற்றம் கண்டு வந்தவர்.
அண்மையில் நடைபெற்ற நியூசீலந்து A அணிக்கெதிரான A அணிப் போட்டிகளில் நான்கு இன்னிங்க்சில் 200  ஓட்டங்களைக் குவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த சால்வே கிண்ண Challenger போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாமிடம் இவருக்கே. 

ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் அண்மையில் மகாராஷ்டிர அணிக்கெதிராக இரட்டைச் சதம் பெற்ற மாலை வேளை தான் டெஸ்ட் போட்டிக்கான குழுவில் இவரது பெயர் அறிவிக்கப்பட்டது.
 
அது சரி கங்குலி எங்கே இங்கே வருகிறார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. 

இவரோடு A அணிப் போட்டிகளில் அண்மையில் விளையாடியிருந்த கங்குலி இவரது திறமை பற்றி அண்மையில் தேர்வாளர்களுக்கு கங்குலி பாராட்டி சொல்லி இருக்கிறார்.குறிப்பாக தேர்வாளர் குழுவின் தலைவர் ஸ்ரிக்காந்துக்கும் விஜய் பற்றி சிபாரிசு செய்திருக்கிறார் கங்குலி.. "நீங்கள் இவரை உற்றுக் கவனிக்கவேண்டும்;எதிர்கால இந்திய அணிக்குத் தேவையான ஒரு வீரர் " என்று விஜய் பற்றி உயர்வாகப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

அவரது வார்த்தைகளைக் காப்பாற்றும் விதத்தில் முதல் இன்னிங்க்சில் சிறப்பாக விளையாடிய விஜய்க்குக் கிடைத்த மற்றொரு வாய்ப்புத் தான் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான குழுவிலும் விஜய் உள்ளடக்கப் பட்டிருப்பது.

தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்..

ஸ்ரீக்காந்த்,W.V.ராமன்,V.B.சந்திரசேகர்,சடகோபன் ரமேஷ் வரிசையில் மற்றொரு தமிழக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர். 

இவர்கள் அனைவரையும் விட நீண்ட காலம் இந்திய அணியில் விஜய் விளையாடவேண்டும் என்று வாழ்த்தும் அதேவேளை கம்பீர் மீண்டும் அணிக்கு வரும் நேரம் விஜயின் கதி ???? 


பிசாசின் நீச்சல் குளம்



இந்தப் பிசாசு நீச்சல் குளத்தில் நீந்த துணிச்சல் இருக்கா உங்களிடம்?


பார்க்கும் போதே மயிர்க் கூச்செறியச் செய்யும் இந்த உயரமான நீச்சல் குளம் அமைந்திருப்பது ஒரு நீர் வீழ்ச்சியில்.

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள விக்டோரியா நீர் வீழ்ச்சி 128 மீட்டர் உயரமானது..

பார்க்கும் போதே பயங்கரமான இந்த நீர்வீழ்ச்சித் தடாகப் பகுதி பிசாசின் நீச்சல் குளம் (The Devil's swimming pool) என்று அழைக்கப்படுகிறது.. அந்த உயரமான,அழகான நீர்வீழ்ச்சியில் அமைந்துள்ள தடாகம் போன்ற இந்த இடத்தில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான மாத காலப் பகுதியில் மக்கள் பயமில்லாமல் நீந்தலாம் என்று சொல்லப் படுகிறது..அந்தக் கால கட்டத்தில் நீர்வீழ்ச்சியில் நீரோட்டம் குறைவாக இருப்பதே காரணம்..
ஆனால் அப்படியும் தவறி வீழ்ந்தால்?????

நீந்த விரும்பினால் நீந்தலாம் ஆனால் இப்படியெல்லாம் கரணம் தப்பினால் மரணம் என்று நீந்த வேணுமா ???

இப்படியான திரில்லான அனுபவங்களுக்காகவே வருடம் தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்களாம்.

எனினும் அண்மைக்கால ஜிம்பாப்வே பிரச்சினைகளால் சுற்றுலாப் பயணிகளின் வரவு வீழ்ச்சி கண்டுள்ளதாகக் கூறப் படுகிறது..





November 06, 2008

இந்தியப் பிரதமராகிறார் ரணில் ???

இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் மகிந்த ராஜபக்ச அரசின் நான்காவது வரவு-செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப் படுகிறது.ஜனாதிபதியே நிதி அமைச்சராகவும் இருப்பதனால் விமர்சனங்கள் எழுவது ரொம்பவே குறைவு. இன்றும் அவரே வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து இந்தப் பதிவை நான் எழுதுகையில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசையில் அடிக்கடி தட்டி தங்கள் விசுவாசத்தையும் ,தாங்கள் தூங்கவில்லை என்பதையும் காட்டிக் கொண்டுள்ளார்கள்.

இடையே தமிழில் வேறு பேசி எங்களைப் புளுகமடைய வைத்தார் ஜனாதிபதி. அதற்குள் தேநீர் பான இடைவேளை 15 நிமிடம் போதுமா அல்லது கூட வேணுமா என்று பள்ளிக்கூட ஆசிரியர்கள் கேட்பது போல கேள்வி வேறு... ;)

ஆனால் அநேகமான இலங்கையருக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் மேல் பெரிதாக நாட்டமில்லை..

காரணம் பொருள்கள் பலவற்றின் விலைகள் குறையப் போவதில்லை.. எப்படியும் சில பொருள்களின் விலைகள் கூடத் தான் போகின்றன.. so கவலைப் பட்டுத் தான் என்ன ..

யுத்தத்துக்கான செலவு எப்படியும் கூடத் தான் போகிறது.. கடந்த வருடத்தை விட இம்முறை மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.. (இதற்குள் வன்னியில் அகப்பட்டுள்ள 200,000 மக்களை வெகு விரைவில் தமது இராணுவம் மீட்டு விடும் என்று உறுதி வேறு அளித்துள்ளார்)

இதற்கிடையில் நேற்று முன் தினம் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது பங்குக்கு நாட்டின் அபிவிருத்தியை மாற்றியமைக்கக் கூடிய வகையிலான வரவு செலவு திட்ட யோசனை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

2009ஆம் நிதி ஆண்டுக்காக அரசாங்கம் வரவு செலவு திட்ட யோசனை ஒன்றை எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சி ஊடகங்கள் மத்தியில் வெளியிட்டுள்ள இந்த வரவு செலவு திட்ட யோசனையூடாக நாட்டின் அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்ற ஆச்சரியத்தை இலங்கை மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் நிதிநிலை ஆய்வாளர்களுக்கேல்லாம் வியப்பை ஏற்படுத்தும் மாற்று யோசனைகளை இவை..

கொஞ்சம் நீங்களும் தான் பாருங்களேன்....

விசேடமாக அரச சேவையில் உள்ளவர்களுக்கு 7500 ரூபாவையே அல்லது 20 வீதத்தாலோ சம்பள உயர்வை அதிகரிக்க முடியும்

மேலும், ஓய்வூதிய கொடுப்பனவு 3500 ரூபாவால் அதிகரிக்க முடியும் என யோசனை முன்வைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, சமூர்த்தி குடும்பங்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 5000 ரூபாவால் அதிகரிக்க முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளது.

20 வீதமாக உள்ள பெறுமதி சேர் வரியை ரத்து செய்து பாவனையாளர்களுக்காக 10 வீத புதிய வரி ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும்

முப்படையினரின் சம்பளத்தை ஆக குறைந்தது 40 ஆயிரம் ரூபாவிற்கும், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் சம்பளம் 32 ஆயிரம் ரூபா வரையிலும் வழங்க முடியும்

பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 85 ரூபாவிற்கும் டிசல் லீட்டர் ஒன்றின் விலை 75 ரூபாவிற்கும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 59 ரூபாவிற்கும் வழங்க முடியும்

சிறியளவு மற்றும் மத்திய தரத்திலுள்ள வியாபார நடவடிக்கைகளுக்கு 10 வீத வட்டி சலுகை உடன் கடன்களை வழங்கி அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தலா 3 தொழிற்சாலைகளையோ அல்லது நிறுவனங்களையோ அமைக்க முடியும்

இரவு 8 மணிக்குப்பின்னர் அரசின் அனுசரணையுடன் பஸ் சேவை ஒன்றை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சி, 18 மாத காலத்திற்குள் 10 லட்சம் சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் அழைத்து வர முடியும்

400 கிராம் பால்மாவை 190 ரூபாவிற்கு வழங்க முடியும்

ஒரு கிலோ கிராம் பருப்பை 125 ரூபாவிற்கு பாவனையாளர்களுக்கு விநியோகிக்க முடியும்

பஸ், வேன், மோட்டார் சைக்கிள், உளவு இயந்திரம் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் அனைத்து வரிகளையும் ரத்து செய்ய முடியும்

இப்படியே 28 விஷயங்கள் அந்த மாற்று யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது..

பார்க்கப் போனால் யுத்தம்,இலங்கைத் தமிழருக்கான தீர்வுகளை விட மற்ற எல்லா விடயத்திற்கும் ஐ.தே. க விடமும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமும் உள்ளது போலத் தான் தெரிகிறது..

இதையெல்லாம் கவனித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,இவ்வளவு திறமையான ஆளை இந்தியாவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கருதி, அன்னை சோனியாவிடமும் பேசி இந்தியப் பிரதமராக்க முடிவெடுத்திருப்பதாகக் கேள்வி.. இந்தியாவின் நலனுக்காக தனது பிரதமர் பதவியைக் கூட விட்டுக் கொடுக்கத் தயார் என்று மன்மோகன் தளு தளுக்க தெரிவித்தார்.. ரணில் அரை மனதோடு இத்தனை ஒத்துக் கொண்டாலும் தேர்தலில் நிற்க சொல்லி எல்லாம் தன்னை கேட்கக் கூடாது என்று நிபந்தனை போட்டுள்ளாராம்.(ரணிலின் தலைமையில் அவரது கட்சி இதுவரை 18 தேர்தல்களில் தோற்றுள்ளது ;))

கென்யத் தந்தைக்குப் பிறந்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி ஆகலாம் என்றால் என் நம்ம ரணிலினால் முடியாது? பக்கத்து நாடு தானே.. இப்பவே மகிந்தவுக்கு உதவுபவர்கள் நம் ரணிலை ஏற்றுக் கொள்ளமாட்டார்களா?

இன்னமும் நம்ம ஜனாதிபதி (நிதி அமைச்சரும் அவரே) தனது நீண்ட பட்ஜெட் அறிக்கையை கரகோஷங்களுக்கு மத்தியில் வாசித்துக் கொண்டிருக்கிறார்.. 

கடைசி நேர இணைப்பு .. 

மகிந்த வாசித்துக் கொண்டு செல்லும் பட்ஜெட் படி, ரணில் இன்னும் ஒரு பத்து வருடத்துக்கு இலங்கையின் ஜனாதிபதியாகக் கனவு கூட காண முடியாது.. இந்தியாவின் பிரதமராக முயற்சி செய்து பார்க்கட்டும்..

காரணங்கள்..

டீசல் 30 ரூபாயால் விலைக் குறைவு..
பெட்ரோல் 15 ரூபாயால் விலைக் குறைப்பு..
மண்ணெய் 20 ரூபாயால் விலைக் குறைப்பு..

வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு மட்டும் அதிக வரி விதிப்பு..

வறிய மக்களுக்கும் பாதுகாப்பு படையினரின் குடும்பங்களுக்கும்,விவசாயிகளுக்கும் பல சலுகைகள்..

இதைவிட அப்பாவி சிங்களவரின் வாக்குகளைப் பெற வேறு என்ன வேண்டும்?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner