June 25, 2013

சம்பியனாக இந்தியா - மீண்டும் சாதித்துக் காட்டிய தோனி - ICC Champions Trophy - Final Review

கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த ஒருநாள் அணியாக இந்தியாவும், மிகச் சிறந்த ஒருநாள் போட்டித் தலைவராக மகேந்திர சிங் தோனியும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டாடப்படுகிறார்கள்.


2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் முடி சூடிய பிறகு தோனியின் புகழ் உச்சத்தைத் தொட்ட பிறகு, இடை நடுவே வந்த தோல்விகள் (முக்கியமாக டெஸ்ட் தொடர் தோல்விகள்) தோனியின் தலைமைப் பதவியைப் பறிக்கும் அளவுக்கு பூதாகாரமாகின.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெள்ளையடிப்பும் அதிலே தோனியின் துடுப்பாட்டமும் அவரது தலைமைக்கு மறுவாழ்வு கொடுத்திருந்தன.

இப்போது இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்திருக்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் எந்த ஒரு போட்டியிலும் தோற்காமலேயேக் முடி சூடியிருப்பதன் மூலம் தன் தகுதி, திறமை + ஆளுமையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் இந்த Captain Cool 2 (Original Captain Cool எப்போதுமே முன்னாள் இலங்கை அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தான்).

என்ன ஆச்சரியம் பாருங்கள்... இந்த இடுகை பதிவேற்றும் இந்த நாள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா கிரிக்கெட்டின் அப்போதைய முடிசூடா மன்னர்களான மேற்கிந்தியத் தீவுகளினைத் தோற்கடித்து இதே இங்கிலாந்து மண்ணில் தமது முதலாவது உலகக் கிண்ணத்தை சுவீகரித்த நாள்.30 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் காலங்களின் சுழற்சியில் இந்தியா உலக சம்பியன்... 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்திலும், மினி உலகக் கிண்ணமாகக் கருதப்படும் சம்பியன்ஸ் கிண்ணத்திலும்.

முன்னரே சர்வதேசக் கிரிக்கெட் சபை அறிவித்தது போல இந்தத் தடவையுடன் சம்பியன்ஸ் கிண்ணம் நிறுத்தப்பட்டால், ICCயினால் நடத்தப்படுகின்ற மூன்று கிண்ணங்களையும் வென்ற ஒரே அணித்தலைவராக தோனி மட்டுமே வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறார்.
----------

எட்ஜ்பஸ்டனில் இடம்பெற்ற இறுதிப் போட்டி மழையின் அச்சுறுத்தலில் நடக்குமா இல்லையா என்ற சந்தேகத்தில், சுவாரஸ்யம் முழுக்கக் கெட்டு, இறுதியில் ஒரு Twenty 20 போட்டி போல அணிக்கு தலா 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு (இந்திய ரசிகர்களாக இருந்தால் கூட)திருப்தி தரவில்லை.

முழுமையான 50 ஓவர்கள் போட்டியாக நடந்து இந்தியா வென்றிருக்கவேண்டும் என்பது ஒவ்வொரு இந்திய அணியின் வெறியனுக்கும் கூட இருக்கும் நிறைவேறா ஆசையாக இருக்கும்.
Twenty 20 போட்டிகள் இந்திய வீரர்களுக்கு அதிக சாதகமான போட்டி வகையாக இருந்தாலும் கூட, இங்கிலாந்தின் ஆடுகளத்தில் அடித்து வெல்வது என்பது பெரிய விஷயமே.

அதேபோல ஒரு போட்டியிலும் தோற்காமல் எல்லா அணிகளுக்கும் சவால் கொடுத்து விளையாடிய ஒரே அணி இந்தியா என்பதால் அந்த அணிக்கே கிண்ணம் சென்றது மிகப் பொருத்தமானதே என்பதை இந்தியாவை சற்றும் பிடிக்காதவர்கள் கூட ஏற்றுக்கொள்வார்கள்.

நாணய சுழற்சியில் இங்கிலாந்தின் வெற்றியும், விட்டு விட்டுப் பெய்த மழையும் அந்த ஈரலிப்பு இங்கிலாந்தின் மித வேக, வேகப் பந்துவீச்சாளருக்கு வழங்கிய சாதகத் தன்மையும் formஇல் இருந்த இந்தியத் துடுப்பாட்ட வீரர்களின் வழமையான துடுப்பாட்டத் தாண்டவத்துக்கு இடம் கொடுக்கவில்லை.

தொடர்ச்சியாகப் பிரகாசித்து ஓட்டங்களைக் குவிக்கிறார் என்று கடந்த இடுகையில் நான் மெச்சிய தவானும் (விக்கிரமாதித்தனின் Jinxஐயே மிஞ்சியவர் என்பதால் நிச்சயம் இவர் இன்னும் நல்லா வருவார்), முக்கிய போட்டிகளில் இந்தியாவுக்குக் கை கொடுக்கும் இந்தியாவின் எதிர்காலம் விராட் கோஹ்லியும் ஓட்டங்களைப் பத்திரமாக சேகரித்துத் தர, மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் பொறியில் மாட்டிக் கொண்டார்கள்.

ரவி போபராவின் மித வேகப் பந்துவீச்சின் மந்திர ஜாலம் (எந்த வித ball tamperingஉம் இல்லாமல் என்று நம்புவோமாக) அற்புதமாக வேலை செய்து ஒரே ஓவரில் ரெய்னா, தோனி ஆகியோரை ஓட்டமற்ற ஓவரில் வெளியே அனுப்பியிருந்தார்.
அப்போது இந்தியா பரிதாபகரமாகத் தோற்கப்போவது உறுதி என்றே தொன்றியதுய்.
66 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள்.

ஆனால் இந்த நேரம் தான் ஆடுகளம் நுழைந்தவர் இந்தியாவின் அண்மைக்கால அதிர்ஷ்டத்தின் சின்னம், தோனியின் துரும்புச் சீட்டு, தொட்டதெல்லாம் துலங்கும் ரவீந்திர ஜடேஜா.

Sir, Million Dollar Baby, Dhoni Boy என்று எம்மைப் போல இம்சைகளால் எத்தனையோ விதமாகக் கலாய்க்கப்பட்டாலும் ஒரு வருடத்துக்கும் மேலாக சகலவிதமான போட்டிகளிலும் கலக்கி வரும் ஜடேஜா வந்து விளாசிய ஓட்டங்கள் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையைப் போராடும் அளவுக்கு உயர்த்தியது.
(குறைந்தபட்சம் ஜடேஜா பந்துவீச வரும் வரையாவது என்று அப்போது நான் எண்ணியிருந்தேன்)

தவான் 31 (24 பந்துகள்)
கோஹ்லி 43 (34 பந்துகள்)
ஜடேஜா ஆட்டமிழக்காமல் 33 (25 பந்துகள்)

130 என்ற இலக்கு formஇலுள்ள ட்ரோட், ரூட் ஆகியோரோடும் தேவையான போது மரண அடி அடிக்கக் கூடிய பெல், மோர்கன் ஆகியோரோடும், நல்ல finisherஆக மாறிவரும் ரவி போபராவுடனும் சொந்த மைதானம், உள்ளூர் ரசிகர்களுடனும் பலமாக உள்ள இங்கிலாந்துக்கு வெகு சுலபம் என்று தான் தோன்றியது.

ஆனால் நடந்தது வேறு.

இந்தியாவின் பந்துவீச்சு, கள வியூகம், தோனியின் சாதுரியம் என்பவற்றையெல்லாம் தாண்டி இங்கிலாந்து தென் ஆபிரிக்காவை விட மோசமாகத் தமது வெற்றிபெறும் நிலையிலிருந்து தாங்களாக வெற்றியை விட்டுக் கொடுத்தது தான் (choking) இங்கிலாந்தின் அதிர்ச்சித் தோல்விக்கான காரணம் என எண்ணுகிறேன்.

ஓட்டங்களை விட்டுக் கொடுக்காத மிதவேகப் பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து ஜடேஜா, அஷ்வின் ஆகியோரின் வருகை இங்கிலாந்தின் விக்கெட்டுக்களைப் பறித்துத் தடுமாற வைத்தது.

இங்கிலாந்து பந்துவீசுகையில் இங்கிலாந்தின் seaming, swinging ஆடுகளமாகத் தெரிந்த எட்ஜ்பஸ்டன், அஷ்வின், ஜடேஜா வீசும்போது இந்திய, இலங்கை ஆடுகளமாகத் தோன்றியது.
(இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கொலிங்வுட் இப்படியொரு இந்தியாவுக்கு சாதகமான ஆடுகளத்தை ஏன் தயார்படுத்தினார்கள் என்று ட்விட்டரில் புலம்பியது இன்னொரு கதை)


எனினும் இயன் பெல்லின் ஆட்டமிழப்பு(தொலைக்காட்சி நடுவர் தவறாக வழங்கிய ஆட்டமிழப்பு அவரை முட்டாளாகவும் எங்கள் எல்லோரையும் ஆச்சரியப்படவும் வைத்தது)மோர்கனையும் போபராவையும் சேர்த்தது.
64 ஓட்டங்கள் கொண்ட அபார இணைப்பாட்டம் இதோ இங்கிலாந்தைக் கரை சேர்த்துக் கிண்ணத்தை குக்கின் கையில் கொடுக்கிறது என்று இருக்கும் நிலையில் தான் அவ்வளவு நேரம் ஓட்டங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த இஷாந்த் ஷர்மா அடுத்தடுத்த பந்துகளில் இருவரையும் பார்சல் செய்தார்.

15 பந்துகளில் 20 ஓட்டங்கள், கையில்  6 விக்கெட்டுக்கள் என்று மிகப் பலமான, வாய்ப்புள்ள நிலையிலிருந்த இங்கிலாந்து தடுமாறி, தனக்குத் தானே குழிபறித்து 5 ஓட்டங்களால் தோற்றுப்போனது.

கையில் போட்டியை வைத்திருந்து கோட்டை விட்ட இரண்டாவது சம்பியன்ஸ் கிண்ணம் இது.
இதற்கு முதல் 2004ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளின் முக்கிய விக்கெட்டுக்களைப் பறித்தும் நமப்முடியாமல் தோற்றது. அதுவும் இங்கிலாந்திலேயே.

மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2010 ஆம் ஆண்டு உலக Twenty 20 கிண்ண வெற்றி தவிர 1979, 1987, 1992 ஆகிய உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளிலும், இரண்டு சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிகளிலும் தோற்ற துரதிர்ஷ்டசாலி அணி இங்கிலாந்து.

இறுதிப் போட்டிகள் போன்ற முக்கியமான போட்டிகளில் பதறாமல் ஆடத் தெரியவில்லை போலும்.

இந்த இறுதிப் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி இறுதிவரை முயற்சியைக் கைவிடவில்லை. இங்கிலாந்து வெற்றிக்குக் கிட்ட வந்த நேரம் தடுமாற ஆரம்பித்துவிட்டது.
வெற்றி பெற்றுப் பழக்கமில்லை போலும்...

அதுசரி, IPL போன்ற தொடர்களில் பல வெற்றிகளை சுவைத்துள்ள இந்தியாவின் இளம் வீரர்களின் அனுபவம் கூட இங்கிலாந்தின் மூத்த வீரர்களுக்கு இல்லைத் தானே?

தோனியின் சில சாதுரியமான மாற்றங்கள், அணுகுமுறைகளும், இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கான வீரர்களின் ஈடுபாடும், விடா முயற்சிகளும் இந்தியாவுக்கு ஒரு மகத்தான வெற்றியைக் கொடுத்திருக்கின்றன.

இந்த சம்பியன்ஸ் கிண்ண வெற்றி தோனிக்கு 2015 உலகக் கிண்ணம் வரை தலைமைப் பதவியைத் துண்டு போட்டுக் கொடுத்திருப்பதோடு, அணியில் தற்போது இல்லாத மூத்த வீரர்களுக்கு ஓய்வு பெறும் அறிகுறிகளை வழங்கியும் உள்ளது.
இந்த சாம்பியன் அணி இனி வரும் காலத்தில் இந்தியாவை மேலும் உறுதிபெறச் செய்யும்.

தொடரின் நாயகனும், ஓட்டங்களை அதிகமாகக் குவித்தவருமான தவானும், உமேஷ் யாதவும், மத்தியவரிசையைத் திடம்பெற வைத்திருக்கும் தினேஷ் கார்த்திக்கும் இந்தத் தொடர் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் புதிய வரங்கள்.

ரோஹித் ஷர்மா புதிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக புது அவதாரம் பூண்டிருக்கிறார்.
ஜடேஜா சகலதுறை வீரராகத் தன் இடத்தை அணியில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மீசைக்காரர்கள் இருவரும் / இருவரது மீசையும் இந்தியாவுக்கு ராசியாகியுள்ளது போலும்.

இந்தியாவின் பதினொருவருமே இனி மீசையுடன் விளையாட ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை.

தோனி மீண்டும் தடுமாறாத, நிலை தளம்பாத தலைவர் என்ற பெயரை எடுத்திருப்பதோடு, அணியின் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிளெட்சரின் இடத்தையும் தக்க வைத்துள்ளார்.

-------------
இந்திய அணியின் வெற்றியோடு, நியூ சீலாந்தின் மிட்செல் மக்னேலகன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகிய புதியவர்களை அடையாளம் காட்டி இருப்பதோடு, குலசேகர, சங்கக்கார, மிஸ்பா உல் ஹக், போபரா, ட்ரோட், மாலிங்க போன்றவர்களின் மறக்க முடியாத தனி நபர் சாதனைகளையும் தந்து விடைபெற்றுள்ளது சம்பியன்ஸ் கிண்ணம்.


June 23, 2013

இறுதிக்கு முன்னதாக - சம்பியன்ஸ் கிண்ணம் - ICC Champions Trophy

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப் போட்டி வருணபகவானின்ஒப்புதல் இல்லாமல், அவரது குறுக்கீடுகளுடன் இந்த இடுகையை நான் இடும் வரை இடம்பெறாமலேயே இருக்கிறது.


2002ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒரு தடவை கிண்ணம் வெற்றியாளர்களினால் பகிர்ந்துகொள்ளப்பட இருக்கிறது போல் தெரிகிறது.
சந்தேகமில்லாமல் இந்தத் தொடரின் மிகச் சிறந்த இரு அணிகளும் மோதிக்கொள்கின்றபோட்டிக்கு மழை தான் மத்தியஸ்தம் வகித்துத் தீர்ப்பெழுத வேண்டுமா?

சம்பியன்ஸ் கிண்ணத்தொடரின் இறுதி அங்கம் இப்படி சரியான முடிவில்லாமல் முடிவது வருத்தமே....

---------
இலங்கை அணியின் இறுதித் தோல்வியும், இந்தியாவுக்கு எதிரான தோல்வியும் புதிய விடயங்கள் அல்ல.

அதே போலத் தான் சம்பியன்ஸ் கிண்ணத்தின் அரையிறுதித் தோல்வியும்.
2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னதாக இலங்கையின் முக்கிய வீரர்கள் காயமடைந்ததைப் போலவே, இந்த அரையிறுதிக்குமுன்னதாக போட்டி ஆரம்பிக்க ஒரு மணிநேரத்துக்கு முன்னர் இலங்கை அணியின் உப தலைவர் தினேஷ் சந்திமல் உபாதையுற்றிருப்பதாகவும், விளையாடாமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது.

மழையால் போட்டி நடக்குமா, ஓவர்கள் குறைக்கப்படுமா என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்க, அதுவே ஒரு பக்கம் போட்டி பற்றிய எதிர்பார்ப்பைக் குறைத்திருக்க, ஆரம்பித்த போட்டியின் முதல் சில நிமிடங்களிலேயே முதலாவது விக்கெட்டை இழந்து சில நிமிடங்களில் இலங்கையின் வேகமான ஓட்டங்கள், நம்பமுடியாத பிடிகள், நம்பி இருக்கக் கூடிய சில விக்கெட் பறிப்புக்களுக்கு காரண கர்த்தாவாக இருக்கும் சகலதுறை வீரர் டில்ஷான் நொண்டியடித்துக்கொண்டு வெளியேறுகிறார்.

போதாக்குறைக்கு ஆடுகள, வானிலை அம்சங்களை சாதகப்படுத்திக்கொண்ட இந்திய மிதவேகப் பந்துவீச்சாளர்கள் இலங்கையின் விக்கெட்டுக்களை ஒவ்வொன்றாக சரித்ததுடன், ஓட்டவேகத்தையும் மிகக் குறைவாகவே மட்டுப்படுத்திக் கொண்டார்கள்.

சங்கா - மஹேல இணைப்பாட்டம் இலங்கையைக் கரைசேர்க்கும் என்று நம்பியிருந்தவேளையில் சங்காவின்ஆட்டமிழப்பு;  தொடர்ந்து பறிக்கப்பட்ட விக்கெட்டுக்கள், அபாரமான களத்தடுப்புக்கள் என்று இந்தியா தொடக்கம் முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.

முக்கியமாக முதல் மூன்று விக்கெட்டுக்களுமே இரண்டாம் ஸ்லிப்பில் களத்தடுப்பில் ஈடுபட்ட சுரேஷ் ரெய்னாவினால் பிடி எடுக்கப்பட்டன. மூன்றுமே அபார பிடிகள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மிதவேகப்பந்து வீச்சின் அற்புத வித்தைகளை அவதானித்த தலைவர் தோனி தானும் நான்கு ஓவர்கள் பந்துவீசி அசத்தியிருந்தார்.
ஆசை யாரை விட்டது ரகம் என்றும் இதைச் சொல்லலாம்; காரணம் இவரை விடத் தொடர்ச்சியாக பந்துவீசும் கோஹ்லி இவரை விட இன்னும் சிறப்பாகச் செய்திருக்கக் கூடும்.

இந்தத் தொடரில் இதுவரைக்கும் பெரிதாகப் பிரகாசித்திராத பந்துவீச்சாளர்களான இஷாந்த் ஷர்மாவும் அஷ்வினும் தலா இரண்டு விக்கெட்டுக்களை எடுத்துக்கொண்டார்கள்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் மஹேல ஜெயவர்த்தன, ஜீவன் மென்டிஸ் ஆகியோரின் சராசரிப் பங்களிப்பை விட, தொடரில் சகலதுறை வீரராக முத்திரை பதிக்க முடியாமல் போயிருந்த தலைவர் மத்தியூஸ் அரைச் சதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டார்.

ஆனால் ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்திலுமே இலங்கையின் ஓட்ட வேகம் இந்திய அணிக்கு எதிராக அச்சுறுத்தலாக இருக்கவில்லை. 200 ஓட்டங்களை நெருங்குவதே இமாலய இலக்கு எனும் நிலையில் கடைசி நேர அடிகளுடன் இலங்கை அணி 181 என்ற வெகு சாதாரண இலக்கை வைத்தது.

நான் முன்னைய இடுகைகளில் சொன்னது போல பெறும் துடுப்பாட்டப் பசியிலும் சிறப்பான formஇலும் இருக்கும் இந்தியத் துடுப்பாட்ட வரிசைக்கு இது பெரிய விடயமே அல்ல.

இரு விக்கெட்டுக்களை இழந்து தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக எட்டு விக்கெட் வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா.
தவான் மீண்டும் ஒரு அபார அரைச் சதம். 114, ஆட்டம் இழக்காமல் 102, 48 & 68 இலங்கையுடன்...

சம்பியன்ஸ் கிண்ணம் கண்ட புதிய சம்பியன் ஷீக்கார் தவான் தான்.
தவானின் ஜோடி, மீளத் தன்னைப் புதிதாக்கியிருக்கும் ரோஹித் ஷர்மாவும் தன் பங்குக்கு இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கிவிட்டு 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை என்றவுடன் உத்வேகம் எடுக்கும் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் அரைச் சதம்.

இலங்கை அணி எல்லா விதத்திலும் பந்தாடப்பட்டது.
இங்கிலாந்து அணியை வென்றபோதும், ஆஸ்திரேலிய அணியை வெளியேற்றியபோதும் சிங்கங்களாகத் தெரிந்த இலங்கை அணி இந்தியாவுடன் விளையாடியபோது பயந்த செம்மறிக் கூட்டமாகத் தெரிந்தது.

அப்படியே அடிவாங்கி சுருண்டுபோனது.
-------------------
இதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்.
இடைவிடாத புலம்பெயர் தமிழரின் போராட்டங்கள்.

மைதானத்துக்கு வெளியே மட்டுமில்லாமல், மைதானத்துக்கு உள்ளே பதாகைகள் மற்றும் புலிக்கொடியுடன் இறங்கி ஓடிய சம்பவங்கள்.

இலங்கை அணி துடுப்பாடியபோதும், பின்னர் களத்தடுப்பில் ஈடுபட்டபோதும் மைதானத்துக்குள் இறங்கி ஓடிக் கவனயீர்ப்பை ஏற்படுத்திய தமிழ் இளைஞர்கள் இலங்கை அணியின் மீது ஏதோ ஒருவிதத்தில் அழுத்தத்தையோ அல்லது கவனக் குறைவையோ ஏற்படுத்தி இருக்கலாம்.
இப்படியான தொடர் நடவடிக்கைகள் அரசியல் ரீதியான அழுத்தத்தை இலங்கை மீது ஏற்படுத்துகிறதோ என்னவோ போட்டிகளை நடத்தும் இங்கிலாந்து மீது பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பார்வையாளர்கள் மீதான கெடுபிடிகளை இறுக்கலாம்.

இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிடம் தனது அதிருப்தியைக் குறிப்பிட்டு, விளக்கம் கோரியிருக்கிறது.

மைதானத்துக்குள் ஓடி அகப்பட்டவர்கள் துணிச்சலானவர்கள் தான்; ஆனாலும் இவை ஏற்படுத்தப்போகும் கவனயீர்ப்பு இந்தக் காலகட்டத்தில், அதுவும் யாருக்குமே அஞ்சாத, எவரையும் பொருட்டாக எடுக்காத இலங்கை அரசுக்கு எதிராக வலிமையாக இருக்குமா என்றால் ம்ஹூம் தான்.
--------------

இந்தத் தொடரின் ஆடுகள நிலைகள், கள நிலைகள், எதிரணிகளை விட மேவி நிற்பவை என்று சகல காரணிகளிலும் மிகச் சிறந்த இரு அணிகள் தான் இன்று இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் அணித் தலைமை என்று இந்தியா - இங்கிலாந்து இரண்டுமே கிண்ணத்தை வெல்லத் தகுதியான அணிகள் தாம்.

ஆனால் நாணய சுழற்சியுடன் நிற்கும் போட்டி ரசிகர்களுக்கும் கூட விரக்தியைத் தான் தருகிறது.

ஒரேயொரு மகிழ்ச்சியான விடயம், இம்முறை இடம்பெற்ற சம்பியன்ஸ் தொடர் ரசிகர் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் பெற்றுள்ள வரவேற்பும் ஆரோக்கிய நிலையும் சம்பியன்ஸ் கிண்ணத்தை இறக்க விடாமல் தொடர்ந்து உயிர் பிழைக்க வைத்திருக்கும் போல் தெரிகிறது.

IPL என்று இழுவையாக போரடித்த ஒரு அரைகுறை கிரிக்கெட் தொடருக்குப் பின்னால் இது நடந்ததாலேயே இம்முறை சம்பியன்ஸ் கிண்ணம் என் போன்ற கிரிக்கெட் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது என்ற உண்மை ICCக்கும் விளங்குமோ?


June 20, 2013

மீண்டும் Chokers, மீண்டும் ஒரு இலங்கை - இந்திய மோதல் & எங்களைப் பற்றி - ICC Champions Trophy - Semi Final 1

Chokers !!!
அவர்களது பயிற்றுவிப்பாளர் கரி கேர்ஸ்டனே ஒத்துக்கொண்ட பிறகு வேறு பேச்சு ஏன் ?

எவ்வளவு தான் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்தாலும், என்ன தான் பழையவற்றை மறந்துவிட்டோம்; புதிய அணியாக மாறி இருக்கிறோம் என்று உரக்க அறிக்கை விட்டாலும், 90களில் ஆரம்பித்த தென் ஆபிரிக்காவின் இந்த choking வியாதி இன்னமும்  இல்லை.

அரையிறுதி/knock out கட்டங்கள் வரை அடித்துப் பிடித்து  சூரர்களாக வந்து அதன் பின் யாருமே நம்ப முடியாத அளவுக்கு அடிவாங்கி வெளியேறுவார்கள்.

இவற்றோடு நேற்றைய அரை இறுதியில் இங்கிலாந்திடம் கண்ட படுதோல்வியும் சேர்ந்துகொள்கிறது.

நாங்கள் தான் Favorites, இந்தக் கிண்ணத்தை வென்று விடைபெற இருக்கும் எங்கள் பயிற்றுவிப்பாளர் கேர்ஸ்டனுக்கு வழங்கப்போகிறோம் என்று சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே பகிரங்கமாக அறிவித்தவர் அணித்தலைவர் A.B.டீ வில்லியர்ஸ்.

முன்னரே தங்கள் அனுபவ வீரர்களை இழந்த தென் ஆபிரிக்காவுக்கு மோர்கல், ஸ்டெய்னின் உபாதைகளும் துரதிர்ஷ்டங்களாக அமைந்தன.

ஆனால் நேற்று இங்கிலாந்து அணியை, அவர்களது சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் தாண்டி வீழ்த்துவதற்கு ஸ்டெய்ன் மட்டுமல்லாமல், மனவுறுதியும் அதிகமாகத் தேவைப்பட்டது.

ஆனால் போட்டியின் முதலாவது ஓவரிலிருந்து இங்கிலாந்து தென் ஆபிரிக்காவை உருட்டி, ஒதுக்கி ஓரமாகத் தள்ளியிருந்தது.
ஐந்தாவது பந்தில் வீழ்த்தப்பட்ட முதல் விக்கெட் முதல் இங்கிலாந்தின் ஆதிக்கம் தான்.
9வது விக்கெட்டுக்காக மில்லரும், க்ளைன்வெல்ட்டும் 95 ஓட்டங்களைப் பகிர்ந்ததைத் தவிர போட்டி முழுக்க இங்கிலாந்து மயம்.

அன்டர்சன், ப்ரோட் ஆகியோரின் துல்லியமான வேகப் பந்துவீச்சு ஒரு பக்கம், ட்ரெட்வெல்லின் பழைய பாரம்பரியப் பாணியிலான off spin சுழல் மறுபக்கம் என்று தென் ஆபிரிக்காவை சுற்றிவிட, தாங்களாகவும் தேவையற்ற அசட்டுத்தனமான அடிப் பிரயோகங்களுக்குப் போய் ஆட்டமிழந்தார்கள்.

அன்டர்சன் சிறப்பாகப் பந்துவீசும்போது அவரை விட உலகின் சிறந்த பந்துவீச்சாளரைக் காணவே முடியாது. வேகப்பந்துவீச்சின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதாக ஒரு வலது கை வசீம் அக்ரம் ஆகத் தெரிவார்.

ட்ரெட்வெல், ஸ்வானுக்கு ஒரு சரியான சவாலாக வரப் போகிறார். பந்துகளை இறக்குகிற இடங்களும், பெரியதாக அலட்டிக்கொள்ளாமல் பந்தை சுழற்றிவிடுகிற விதமும் ரசிக்கக் கூடியவை.
நேற்று தென் ஆபிரிக்காவின் மத்தியவரிசையை சும்மா ஆட்டம் காண வைத்திருந்தார்.


துடுப்பாட்ட இலக்கு இலகுவானதாகத் தெரிந்த பிறகு இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர்களை இந்தத் தென் ஆபிரிக்கப் பந்துவீச்சு வரிசையால் எதுவித அழுத்தத்துக்கும் உள்ளாக்க முடியவில்லை.
 
நியூ சீலாந்து அணிக்கெதிராக விட்ட குறையைத் தொடர்ந்து முடித்து வைத்து, இலகுவான வெற்றியை எதுவித தடுமாற்றமும் இல்லாமல் அடைய வைத்தார்கள் ஜொனதன் ட்ரோட்டும், ஜோ ரூட்டும்.

இது இங்கிலாந்தின் இரண்டாவது சம்பியன்ஸ் இறுதிப்போட்டி.
2004ஆம் ஆண்டும் இங்கிலாந்திலே சாம்பியன்ஸ் கிண்ணம் இடம்பெற்றபோது, இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு வந்தது. 
ஆனால மேற்கிந்தியத் தீவுகளின் கடைநிலை ஆட்டக்காரர்களின் அபார போராட்டத்தினால் கிண்ணத்தை இழந்தது.

இம்முறை குக்கின் தலைமையில் நம்பிக்கையான & திறமையான அணி யாரை சந்திக்கப் போகிறது?
எந்த அணியை சந்தித்தாலும் சவாலைக் கொடுக்கும் என்பது உறுதி.

-----------

அரையிறுதி 2 - இலங்கை எதிர் இந்தியா 

இந்த இரு அணிகளும் எத்தனை தடவை தங்களுக்குள் மோதி இருக்கின்றன.
எங்கேயாவது ஒரு இடைவெளி கிடைத்தால் உடனே ஒரு ஒருநாள் தொடர்...

இருமினால் தும்மினால் கூட இலங்கை - இந்திய ஒருநாள் போட்டி தான்.

2007ஆம் ஆண்டின் முதல் இவ்விரு அணிகளும் 49 தடவை ஒருநாள் போட்டிகளில் சந்தித்திருக்கின்றன.
(இலங்கை - 17 வெற்றி & இந்தியா - 28 வெற்றி)

இது ஆறு ஆண்டுகளில் 50வது போட்டி.

இவ்விரு அணிகளும் விளையாடிய அண்மைக்காலப் போட்டிகளில் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக மாற இருக்கிறது.
2011 உலகக் கிண்ண இறுதிக்குப் பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 'பெரிய' மோதல் இது தான்.

இதற்கு முதல் இவ்விரு அணிகளும் இறுதியாக சந்தித்த அரையிறுதி யாராலும் குறிப்பாக இந்திய ,அணிக்கும்  ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒன்று.
இலங்கை அந்த நாட்களில் தொடர்ச்சியாக இந்தியாவைத் துவம்சம் செய்துகொண்டிருந்தது.(சனத் ஜெயசூரியாவின் உக்கிரத்தில்)

இவ்விரு அணிகளும் இதற்கு முன்னர் சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விளையாடியபோது (2002) அது இரண்டு நாட்கள் நீடித்தும் (மேலதிக நாளுடன்) மழையினால் கழுவப்பட்டிருந்தது.

இம்முறையும் அதே மழையின் ஆபத்து வேல்ஸின் கார்டிப்பிலும் (Cardiff) இன்று இருக்கிறது.
மழை வந்து இன்று போட்டியை முழுக்கக் கழுவி விட்டால் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.


இந்தியா பிரிவு B யில் முதலிடம்.
இலங்கை பிரிவு A யில் இரண்டாம் இடம் என்ற அடிப்படையில்.

மழை இன்றும் வேல்ஸில் கொட்டும் என்று தகவல்கள் சொல்கின்றன. இலங்கைக்கு அபசகுனம் தான்.

இதுவரை கார்டிப்பில் (Cardiff) இலங்கை அணி ஒரு தடவையும் வெல்லவில்லை என்பது இலங்கை வீரர்களின் மனதில் இருக்கும்.
இந்தியாவிடம் முக்கிய போட்டிகளில் அண்மைக்காலத்தில் தொடர்ந்து வாங்கிய அடியும் நீண்ட காலம் கிண்ணம் வெல்லாத ஏக்கமும் கூட சேர்ந்தே இன்று வெல்லவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

இரண்டு அணிகளுமே கடைசியாக விளையாடிய அதே பதினொருவரையெ இன்றும் ஈடுபடுத்தும் என்று நம்பலாம்.

இரு அணிகளிலும் இந்தத் தொடர் முழுதும் பிரகாசித்துத் தம்மை வெளிப்படுத்தியுள்ள வீரர்கள் தவிர, பெரிதாகப் பிரகாசிக்காத டில்ஷான், மத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா சுரேஷ் ரெய்னா, அஷ்வின், இஷாந்த் ஷர்மா ஆகியோர் மீது எல்லோர் பார்வைகளும் இருக்கின்றன.

formஇலுள்ள இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கையின் மாலிங்க குலசெகரவை எதிர்த்தாடுவதும், மீண்டும் புதுப்பிக்கப்படும் மாலிங்க - கோஹ்லி  மோதலும், அனுபவம் வாய்ந்த இலங்கையின் மத்திய வரிசை எதிர்கொள்ளப் போகிற பந்துவீச்சின் உச்ச formஇலுள்ள ஜடேஜா மற்றும் விக்கேட்டுக்காகத் தவமிருக்கும் அஷ்வினும் கூட கிரிக்கெட் விருந்துகள் தான்.

----

இந்த கிரிக்கெட் மோதலையும் தாண்டி அதிகம் யோசிக்க வைத்துள்ள விடயம் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற கசப்பான சம்பவம்.
புலம்பெயர் தமிழரின் இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமும், அதை சிங்கள ரசிகர்கள் வன்முறையால் முறியடித்ததும்.

இன்று இதற்கு பழிவாங்கலாக வேல்ஸில் பல்லாயிரக்கணக்காகக் கூட இருக்கும் தமிழர் தரப்பு இன்று ஏதாவது பதிலடி கொடுக்கலாம் என்று செய்திகள் வருகின்றன.
அங்கேயுள்ள தமிழர்கள் (ஐரோப்பா முழுவதுமாக) அனைவருக்கும் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்று கூடுமாறு அனுப்பப்பட்ட sms ஒன்றைக் காணக் கிடைத்தது.

இது கொஞ்சம் பதற்றமான சூழலை ஏற்படுத்தலாம்.

இங்கிலாந்து ஜனநாயக நாடு என்றாலும் வன்முறை என்று வரும்போது ஆர்ப்பாட்டம் செய்யும் நம்மவர்கள் தடை செய்யப்பட இயக்கத்தை சார்ந்தவர்கள் என முத்திரை குத்தப்படும் வேலைகளை சரியான பிரசாரப்படுத்தலாக இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது.

தங்களவர்களைக் காப்பாற்ற அரசு இருக்கிறது.
புலிக்கொடிகளோடு படம் பிடிக்கப்படும் எம்மவர் தற்செயலாக இங்கே அனுப்பப்பட்டால்???

அதேபோல இலங்கையில் கிளம்பி இருக்கும் பொது பலசேன, ராவண பலய போன்ற இனவாத சக்திகளுக்கு இப்படியான சம்பவங்கள் மேலும் மேலும் உயிர்ச்சத்து கொடுப்பதாக அமையும்.

ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இடம், காலம் அறியுங்கள்... அதை எப்படியாகக் கொண்டு சேர்க்கவேண்டும் என்று தெரியுங்கள் என்று ஒரு உரிமையுள்ள உணர்வுள்ள சகோதரனாக சொல்கிறேன்.

இப்போதெல்லாம் யதார்த்தமாக சில உண்மைகளை சொல்லப் போனால் தாராளமாக பட்டங்களும் முத்திரைகளும் கிடைக்கின்றன.
அதற்காக சொல்லவரும் விடயங்களை மனதிலே வைத்துக்கொள்ள முடியாது.

''சமூகமொன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கு சற்றும் மாறுதலான கருத்துக்களைச் சொல்லும் ஒருவன் சந்திக்கும் அவப்பெயர்களும், மிரட்டல்களும், கேலிகளும், கிண்டல்களும் சொல்லி மாளாதவை." தம்பி அனலிஸ்ட் கன்கோன் இன்று மெயில் கும்மி ஒன்றில் அருளியவை.

இதைச் சொன்னவுடனும் இலங்கை அணியின் ஆதரவாளனாக நான் சொன்னவை; சிங்கள அடிவருடி என்று கிளம்பும் கருத்துக்களும் வரும்.

ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், தற்போதைய நிலை (காணி சுவீகரிப்பு நெருக்குதல்கள், அண்மைய அரசாங்கக் கருத்துக்கள், ஏன் கொழும்பில் கோவில் இடிப்பு) போன்றவற்றையும், 13க்கு நடக்கும் நிலையையும் அவதானிப்போர் இதே மனநிலையில் தான் இருப்பார்கள் என நம்புகிறேன்.

கிரிக்கெட்டை ரசித்தாலும் எனக்கான உணர்வுகள் எப்போதும் என்னுடன். எங்கிருந்தாலும் எம்மவர் எங்கள் ரத்த உறவுகள். அவர்களும் பாதிக்கப்படக் கூடாது அவமானம் அடையக் கூடாது. அவர்கள் அடையும் பாதிப்புக்களால் இங்கேயுள்ள காப்பார் யாருமற்ற அப்பாவிகளும் பாதிக்கப்படக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு.-------------
சற்று முன் கிடைத்த செய்தியின் படி பயிற்சிகளில் ஏற்பட்ட உபாதையினால் இன்று தினேஷ் சந்திமால் விளையாடுவது சந்தேகமாகியுள்ளதாம்.
கடந்த போட்டியில் தான மீண்டும் கொஞ்சமாவது formக்கு வந்திருந்தவர்.நிச்சயம் இலங்கைக்கு இது இழப்பு.

June 19, 2013

இலங்கை அரையிறுதியில்.. அடுத்து? - ICC Champions Trophy - League Phase

நடப்பு சம்பியனும் வெளியே.. கடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் ​இறுதிப் போட்டியில்  விளையாடிய மற்ற அணியான நியூ சீலாந்தும் வெளியே.
நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலங்கையை அரையிறுதிக்கு அழைத்துச் செல்ல, இவ்விரு டஸ்மன் நீரிணை சகோதரர்களையும் ஒரேயடியாக இங்கிலாந்திலிருந்து வெளியே அனுப்பியுள்ளது.

இலங்கை அணி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரொன்றில் பங்குபற்றும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இலங்கையில் 2002/2003 பருவகாலத்தில் நடந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரையிறுதியில் விளையாடிய இலங்கை அணி பின்னர் மழை குழப்பிய இறுதிப் போட்டியில் கிண்ணத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொண்டிருந்தது.

இம்முறை அதே இந்திய அணியையே அரையிறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது இலங்கை.

இந்தியாவை சந்திக்காமல் தென் ஆபிரிக்காவை அரையிறுதியில் இலங்கை சந்தித்திருந்தால் நல்லா இருந்திருக்குமே (தென் ஆபிரிக்காவின் choking ராசி பொதுவாக இப்படியான அரையிறுதிகள் போன்ற Knock out சுற்றுக்களில் தான் நல்லா வேலை செய்யும்) என்று நினைத்திருந்த இலங்கை ரசிகர்களுக்கு, ஆஸ்திரேலிய அணியை இலங்கை அடக்க வேண்டிய 163 ஓட்டங்களையும் தாண்டி, இறுதியாக கடைசி விக்கெட் புரிந்த பொறுமையான இணைப்பாட்டம் கொடுத்த தலைவலி மூலம், பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று ஆகி விட்டது.

ரொம்ப நல்லவங்களான ஆஸ்திரேலிய அணி, அடைந்தால் அரையிறுதி, இல்லையேல் ஆஸ்திரேலியா எனும் நிலையில் அவர்கள் அரையிறுதி செல்வதற்குத் தேவைப்பட்ட இலக்கான 29.1 ஓவர்களில் 234 என்பதை அடைய முயற்சித்தார்கள். அது முடியாமல் போக கடைசி விக்கெட்டுக்காக ஆடிய மக்காய் & டோஹெர்ட்டி தவிர மற்றையவர்கள் Flight எடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள் போலும்.

தற்செயலாக கடைசி விக்கெட் இணைப்பாட்டம் மூலம் ஆஸ்திரேலியா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தால் இலங்கை வெளியே.
டில்ஷானின் அபாரப் பிடியெடுப்பு மூலமாக இலங்கை 20 ஓட்டங்களால் வென்றது.

ஆனால் நேற்றைய நாளின் நாயகன் உண்மையில் மஹேல ஜெயவர்த்தன தான்.அவர் பெற்ற அந்த 84 ஓட்டங்களின் பெறுமதி மிகப் பெரியது.
ஆறு ஆண்டுகளுக்கு முதல் 2007ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிப் போட்டியில் மஹேல தலைவராகத் தனித்து நின்று சதம் அடித்து, இளையவீரர் தரங்கவையும் ஊக்குவித்து, இலங்கை அணியின் ஓட்ட எண்ணிகையை 200 மட்டத்திலிருந்து 289 வரை உயர்த்துவாரே அந்த அபார ஆட்டமும்,அணியை தாங்கிச் சென்று தூக்கிவிட்ட பொறுப்பான நிதானமும் ஞாபகம் வந்தது.

மஹேல நேற்று 11000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்களைப் பூர்த்தி செய்த எட்டாவது வீரரானார். இலங்கை வீரர்களில் மூன்றாமவர்.

இதேவேளை நுவான் குலசேகர 150 ஒரு நாள் சர்வதேச விக்கெட்டுக்களை நேற்று எட்டியிருந்தார்.

நான் நேற்றைய இடுகையில் எதிர்பார்த்திருந்ததைப் போல, இளைய வீரர்கள் சந்திமாலும், திரிமன்னவும் முக்கியமான இணைப்பாட்டங்களில் பங்கெடுத்ததும், ஓட்டங்களைப் பெற்றதும் இலங்கைக்கு பெரிய உதவியாக அமைந்தன.

ஆனால் முன்னைய இரு போட்டிகளில் இலங்கைக்குப் பெரியளவு ஓட்டப் பங்களிப்பை வழங்கிய சங்கக்கார சறுக்கியிருந்தார்.

இலங்கை அணி போராடக் கூடிய ஓட்ட எண்ணிக்கையான 253ஐத் தான் எடுத்திருந்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு நிகர ஓட்ட சராசரிப் பெறுமானம் (NRR)
கொடுத்த அழுத்தமே வேகமாக ஆடப் போய், விக்கெட்டுக்களை இழந்து தோற்றுப் போகக் காரணமாக அமைந்தது.

நடப்புச் சம்பியன்களை வீழ்த்தினாலும், இனி சந்திக்கப் போகின்ற அசுர பல இந்தியாவை வீழ்த்துவதாக இருந்தால், இந்திய அணியை வெல்வதற்கு இலங்கை அணியில் உள்ள சின்னச் சின்ன ஓட்டைகளையும் சீர் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.

மிக முக்கியமாக அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ். சகலதுறை வீரரான இவர் பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலுமே பெரிதாக சோபிக்கவில்லை.
நேற்றைய போட்டியில் பெற்ற வேகமான ஓட்டங்கள் மற்றும் கைப்பற்றிய மார்ஷின் விக்கெட் ஓரளவு தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும்.

இன்னொருவர் குசல் ஜனித் பெரேரா... தனது முதலாவது தொடரிலே மிக நம்பிக்கையை ஏற்படுத்தியவர். எனினும் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலுமே பிரகாசிக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் சேர்த்து மிக முக்கியமான அரையிறுதிப் போட்டியில் வெளுத்து வாங்குகிறாரா பார்க்கலாம்.

இன்று சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் இலங்கையின் தலைமைத் தேர்வாளர் சனத் ஜெயசூரிய சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கை அணியில் அரையிறுதிப் போட்டிக்காக எந்தவொரு மாற்றமும் இருக்கப் போவதில்லை.
இலங்கை அணியின் தற்போதைய தலைவர் மத்தியூஸ் மீது பூரண நம்பிக்கை இருக்கிறது.
மூத்த வீரர்களோடு மீண்டும் (!!!) சுமுக உறவு ஏற்பட்டுள்ளது.

இவை மூன்றுமே இலங்கை அணியைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான விடயங்களே.

மஹேல, சங்கக்கார, டில்ஷான் ஆகிய மூவருமே இங்கிலாந்து ஆடுகளங்களில் தங்களுக்கு உள்ள அனுபவங்களை மிகச் சிறப்பாக இந்தத் தொடரில் இதுவரை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மஹேலவின் நேற்றைய அபார ஆட்டம், சில அற்புத பிடிஎடுப்புக்கள்

சங்காவின் இரண்டு அற்புத ஆட்டங்களும், விக்கெட் காப்பும்

டில்ஷானின் சராசரியான துடுப்பாட்டம், ஆனால் அதை அபாரமாக ஈடுகட்டும் களத்தடுப்பும், தேவையான போதில் விக்கெட்டுக்களை எடுத்து இலங்கையின் வெற்றிக்கான சகலதுறை வீரராக (குலசேகரவுக்கு அடுத்தபடியாக) பிரகாசிக்கிறார்.

அதிலும் நேற்றைய கிளின்ட் மக்காயின் அபார பிடி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.
முப்பதைத் தாண்டிய பராயத்திலும் வில்லாய் வளையும் உடல் ஒரு வரம் தான்.

ஆனால் இனி வரும் போட்டியில் தான் இவர்களது பங்களிப்பும் வழிகாட்டலும் மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது.

காரணம் இந்தியாவை அண்மைக்காலத்தில் இலங்கை ஒருநாள் போட்டிகளில் சந்திக்கும்போதெல்லாம் பதறி, சிதறிப்போகிறது.
இந்தியாவிடம் 2011 உலகக் கிண்ணத்தின்இறுதிப்போட்டியில் தோற்ற தோல்வியும், அதன் பின் சில முக்கிய போட்டிகளில் விரட்டியடிக்கப்பட்டதற்கும் பதிலடியாக இந்த அரையிறுதி அமையுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த அரையிறுதிக்கான முன்னோட்டம் பின்னர் வரும்.

நேற்று இலங்கை அணி வைத்த இலக்கை விட ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதிக்கு செல்வதற்கான இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடும்போது இரண்டு கட்டங்களில் போட்டி ஆஸ்திரேலியாவின் பக்கம் சாயலாம் என்று சற்று நினைத்தேன்.
ஒன்று மக்ஸ்வெல்லின் அதிரடியின் போது
இரண்டு மத்தியூ வேட் வந்து சில பவுண்டரிகளை விளாசிய போது..

ஆனால் இந்த விக்கெட்டுக்களை உடைத்த பின்னர், இலங்கை வெல்கிறது என்று நினைத்த போது தான் இறுதி விக்கெட் இணைப்பாட்டம் 40க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றது.
அதை உடைக்க டில்ஷான் வந்தார்.

இங்கிலாந்தைத் துடுப்பாட்ட வீரராகத் துவம்சம் செய்த குலா, நேற்று பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியாவின் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு இந்தத் தோல்வி நிச்சயம் ஒரு விழிப்புணர்ச்சிக்கான எச்சரிக்கை மணி.
ஆஷஸ் நெருங்கி வரும் நிலையில் தங்கள் அணியை மீண்டும் ஒரு தடவை மீள் பரிசோதனை செய்யவேண்டும்.


ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய இரு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய அணிகளுமே எந்தவொரு வெற்றியும் இல்லாமல் வெளியேறி இருக்கின்றன.

----------------

நாளை முதலாவது அரையிறுதி.
இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் மோதும் போட்டி சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது.
இரண்டு இளைய, எதிர்கால அணிகளுக்கிடையிலான போட்டி.

பந்துவீச்சுக்கள் தான் இங்கே கவனிக்கப்படவேண்டியவை.

ஸ்டெய்ன் எதிர் ரிவேர்ஸ் ஸ்விங்.

ஆனால் தென் ஆபிரிக்காவை விட இங்கிலாந்துக்கு அரையிறுதிக்கு செல்லக் கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாக நான் நினைக்கிறேன்.

இங்கிலாந்து அணி இதுவரை சம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்லாத அணி.
கடந்த தடவை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியிருந்தது.

இதேவேளையில் அரையிறுதிக்கு வந்துள்ள நான்கு அணிகளுக்குமே பயிற்றுவிப்பாளர்கள் ஆபிரிக்கக் கண்டத்தவர்கள் என்பது மற்றொரு சுவாரஸ்யமே.

இலங்கை - போர்ட்
இந்தியா - பிளெட்சர்
தென் ஆபிரிக்கா - கரி கேர்ஸ்டன்
இங்கிலாந்து - அன்டி பிளவர்

----------------

கிரிக்கெட் விளையாட்டு என்பதைக் கடந்து அரசியலில் கலப்பதும், அரசியலைக் கண்டிப்பதும் அண்மைய காலத்திலும் தொடர்ந்துவரும் ஒரு விடயம்.

நேற்றைய லண்டன் ஓவல் போட்டிக்கு முன்னதாகவும் பின்னதாகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழருக்கு எதிராக நடந்த தாக்குதல்களும் தேவையற்ற கசப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

இத்தோடு நின்றுவிடாமல் வன்மமும், துவேஷமும் பெருமளவில் பெருகுவதை அந்தத் தாக்குதலின் காணொளிகளும், Youtube இல் அதற்குக் கீழே சிங்கள இனத்தவரால் எழுதப்பட்டு வரும் துவேஷக் கருத்துக்களும் பெருக்கி வருகின்றன.

இந்திய அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் இந்நிலை மேலும் பெரிய மோதலை ஏற்படுத்தலாம் என்று அஞ்சுகிறேன்.

இது புலம்பெயர்ந்து வாழும் எம்மவருக்கு மேலும் அவப்பெயரையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம்.


June 17, 2013

ஒரே போட்டி மூன்று அணிகளுக்கு வாய்ப்பு + மூன்று போட்டிகள் பற்றி ஒரே அலசல் ​- ICC Champions Trophy - Game 12


மூன்று நாட்களாக நடந்த போட்டிகள் பற்றி, இடுகைகள் போட முடியாதளவு பிசி.

​மூன்று  போட்டிகளுமே மழையின் குறுக்கீடுகள் காரணமாக கழுதை கட்டெறும்பாய்த்  தேய்ந்தது போல, ஓவர்கள் குறைக்கப்பட்டு எக்கச் சக்க குழப்பங்களோடும், அரை குறையாகவும் நடந்து முடிந்த போட்டிகளாயின.

பிரிவு B யில் இருந்து இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் அரையிறுதிகளுக்குத் ​தெரிவாகியிருக்கின்றன.

பிரிவு Aயில் இருந்து நேற்றைய நியூ சீலாந்துக்கு எதிரான பத்து ஓட்ட வெற்றியுடன் போட்டிகளை நடத்துகின்ற இங்கிலாந்து அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ள அதேவேளை,  இன்று இடம்பெறுகிற ஆஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கிடையிலான ஆட்டத்தின் முடிவின் மூலம் மூன்று  அணிகளில் ஒரு அணிக்கு எஞ்சிய ஒரு இடம் இருக்கிறது.

இன்று இலங்கை அணிக்கு வெற்றி கிட்டினால் அரையிறுதியில் இலங்கை அணி.
ஆஸ்திரேலியா மிகப்பெரிய வெற்றி ஒன்றைப் பதிவு செய்தால் (இதற்கான வாய்ப்பு மிக அரிதே) ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதி.
சாதாரண வெற்றி ஒன்று ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்தால் நியூ சீலாந்து அரையிறுதியினுள் நுழையும்.

கடந்த மூன்று போட்டிகளில் நடப்பது போலவே  மழை  திருவிளையாடல் நடத்தி, இன்றைய போட்டியையும் முன்னைய ஆஸ்திரேலியாவின் போட்டி போல கழுவி விட்டால், நியூ சீலாந்து உள்ளே நுழைந்திடும்.

பிரிவு ரீதியிலான அணிகளின் ஆட்டங்களில் இறுதியான ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியானது இத்தனை விறுவிறுப்பாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டோம்.

நடப்பு சம்பியன்களின் அடுத்த கட்டம் மயிரிழையில் தொங்குகிறது.

நன்றி - Daily Mirror

அத்துடன் கடந்த 13 வருடங்களாகவே தொடர்ச்சியாக ICC சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களின் அரையிறுதிகள் வரை வந்த ஆஸ்திரேலிய அணி இப்போது தன்னுடைய பழைய அந்தஸ்துகள் ஒவ்வொன்றாக இழந்து வருவதைக் காட்டும் மற்றொரு அறிகுறி இது.

இலங்கை அணியும் ICC தொடர்கள் எல்லாவற்றிலும் அரையிறுதிகள், இறுதிகள் என்று என்று அடிக்கடி வருகை தந்து ஒரு நாள் போட்டிகளில் தனது ஆதிக்கத்தைக் காட்டுகின்ற அணி.

இன்றைய போட்டியில் இறங்கும் இலங்கை அணி, கடைசியாக இங்கிலாந்தைத் துரத்தியடித்த நம்பிக்கையின் உற்சாகத்தில் களமிறங்கும்.
இறுதியாக நடந்த 10 போட்டிகளில் ஆறில் ஆஸ்திரேலிய அணியை இலங்கை அணி வெற்றிகண்டுள்ளது என்பதும், ஆஸ்திரேலியாவில் வைத்தே ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு காட்டு காட்டிய அணி என்பதும் மேலதிக உற்சாகத்தை இலங்கைக்கும், அழுத்தத்தை ஆஸ்திரேலியாவுக்கும் வழங்கலாம்.

வழமையான தலைவர் மைக்கேல் கிளார்க் இல்லாததும் டேவிட் வோர்னரின் தடையும் ஆஸ்திரேலியாவை பலவீனமாக மாற்றி இருக்க நம்பிக்கை தரக் கூடியவர்களாக கடந்த போட்டிகளில் அரைச் சதங்களைப் பெற்றுக்கொண்ட தற்போதைய தலைவர் பெய்லியும், அடம் வோஜசும் காணப்படுகிறார்கள்.
அதேபோல, ஷேன் வொட்சன் எப்போது மீண்டும் formக்குத் திரும்புகிறாரோ அப்போது ஆஸ்திரேலியா விஸ்வரூபம் எடுத்து கிண்ணத்தையே வெல்லலாம் எனும் எதிர்பார்ப்பும் உள்ளது.

ஆனால் முன்னைய இடுகையொன்றில் ஆஸ்திரேலிய அணியைப் பற்றி நான் சொன்னது போல, இந்த அணியில் ஒரு வெல்வதற்கான வெறி இல்லாமல் இருக்கிறது.

இலங்கை அணியைப் பொறுத்தவரை முதல் இரு போட்டிகளிலுமே துடுப்பாட்டத்தில் சங்கக்காரவையே அதிகமாக நம்பியிருந்தது.
அவர் தவிர மஹேல ஜெயவர்த்தன, டில்ஷான் ஆகியோர் தங்கள் பங்களிப்பை ஓரளவுக்கு வழங்கினாலும், இளைய துடுப்பாட்ட வீரர்களின் தொடர் சறுக்கல் அணியின் ஒட்டுமொத்த பெறுபேறுகள் பற்றி சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

முன்னைய போட்டிகளில் சறுக்கிய சந்திமால், குசல் ஜனித் பெரேரா, திரிமன்னே போன்றவர்களும், 'சகலதுறை வீரர்' தலைவர் மத்தியூசும் இன்று ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வது இலங்கைக்கு முக்கியமானதாக அமைகிறது.

கடந்த போட்டிகளில் ஓட்டங்களை அதிகமாகக் கொடுத்திருக்கும் எரங்கவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்குமா அல்லது மீண்டும் திசரவா அல்லது முதல் முறையாக சசித்ர சேனநாயக்கவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமா என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.

இங்கிலாந்தின் ஆடுகளங்களில் சேனநாயக்கவின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இன்று சேனநாயகக்கவுக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வழங்கப்படும் வாய்ப்பு இலங்கை அணிக்கும் வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.

இதேவேளை இலங்கை இன்று போட்டியில் இலகுவாக வெல்லும் என்று நம்பிக்கையுள்ளவர்களுக்கு - இந்திய அணியின் அசுர formஇல் எந்த ஒரு அணியுமே அந்த அணியை சந்திக்க விரும்பாது என்பது திண்ணம். அப்படி இருக்கையில் இந்தியாவை அரையிறுதியில் சந்திக்காமல் இருக்கவேண்டுமாக இருந்தால், இலங்கை அணி ஆஸ்திரேலியாவை மிகப் பெரிய வித்தியாசத்தில் இன்று வெற்றிகொள்ள வேண்டும்.
அப்படியாக இருந்தால் A பிரிவில் முதலாம் இடத்துக்கு வருவதோடு, தென் ஆபிரிக்காவை அரையிறுதியில் சந்திக்கலாம்.

எல்லாத்துக்கும் முதலில் அந்தப் பாழாய்ப்போன இங்கிலாந்து மழை குறுக்கிட்டு கூத்துக் காட்டாமல் இருக்கவேண்டும்.

--------------

கடைசியாக நடந்த மூன்று போட்டிகளுமே, மழையால் தின்னப்பட்ட போட்டிகள்.

இந்திய அணியின் வெற்றி எதிர்பார்த்ததே... ஆனாலும் பாகிஸ்தான் இந்தப் போட்டியிலும் இப்படி இலகுவாகத் தோற்றுப் போனது என்பது ஆச்சரியமானது.
மூன்று போட்டிகளிலுமே பாகிஸ்தான் சுருண்டு போனது.

பாகிஸ்தானின் மோசமான சரணாகதித் துடுப்பாட்டமும், மழையின் தொடர்ச்சியான குறுக்கீடுகளும் சலிப்பை ஏற்படுத்திய போட்டியாக மாறியது - பெரிதும் எதிர்பார்ப்பை அரசியல் மற்றும் ஜாவெட்  மியன்டாட் - சேட்டன் ஷர்மா காலம் முதல் இருந்துவரும் மோதல்கள் காரணமாக ஏற்படுத்திய இந்திய - பாக் போட்டி.

------
வழமையாகத் தென் ஆபிரிக்காவின் கால்களை முக்கிய தருணங்களில் வாரிவிடும் அதிர்ஷ்டம், இம்முறை Duckworth - Lewis முறை என்ற மழை விதி மூலமாகத் தென் ஆபிரிக்காவுக்கு அதிர்ஷ்டம் அடிக்க,பாவம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதுகில் அது குப்புற அடித்து மயிரிழையில் வெளியே தள்ளிவிட்டது.

Duckworth - Lewis முறையில் மிக அரிதாக ஏற்படும் சமநிலை (Tie) முடிவு இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு முக்கியமான ஒரு புள்ளியைக் களவாடிக் கொண்டதோடு, நிகர ஓட்ட சராசரியின் அடிப்படையில் தென் ஆபிரிக்காவை உள்ளே அனுப்பியுள்ளது.

மழை வந்து குறுக்கிடும் நேரங்களில் Duckworth - Lewis முறையில் வெல்லவேண்டிய ஓட்ட எண்ணிக்கையை விட அதிகமாக எடுத்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் பெரிய மழைக்கு முன்னதாக மக்லரென் வீசிய பந்திலே பொல்லார்ட்டை இழந்த உடன் சமநிலை முடிவு உறுதியானது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதுவே ஆப்பானது.

இதிலே துரதிர்ஷ்டம் என்பதைத் தாண்டியும், மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச எடுத்துக்கொண்ட அதிக நேரம் அவர்களுக்கு இறுதியில் இப்படியொரு தண்டனையாக மாறியது.

எக்கச் சக்க குறுக்கீடுகளுடன் நடந்த இந்தப் போட்டியில் நடுவர்கள் முதலில் இருந்தே நேர விடயங்களில் இறுக்கமாக இருந்திருந்தால் போட்டி தீர்மானிக்கப்பட்ட 31 ஓவர்களாவது நடந்து முடிந்திருக்கும்.

-------------

நடுவர்களின் தலையீடு சம்பந்தமாக சர்ச்சை + சந்தேகத்துக்குரிய அணியாக மாறியிருக்கும் ஒரு அணி இங்கிலாந்து.

Reverse Swing ஐ உருவாக்க பந்தை சேதப்படுத்துகிறார்கள் என்று இவர்கள் மீது இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் பின்னர் சந்தேகம் எழுந்திருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியை உருட்டித் தள்ளிய இங்கிலாந்து இலங்கைக்கு எதிராகப் பந்துவீசிக்கொண்டிருந்தபோது நடுவர்கள் பந்தை மாற்றியிருந்தார்கள்.

இதை அடுத்தே இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
அதிலும் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளவர் முன்னாள் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் பொப் வில்லிஸ் என்பதும் கவனிக்கக் கூடியது.

இரு பக்கமும் ஒவ்வொரு பந்துகள் பயன்படுத்தப்படும் நிலையில் சில ஓவர்களிலேயே பந்து Reverse Swing ஐ இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மட்டும் எடுப்பது பலருக்கும் உறுத்தி வந்தாலும், இந்த சம்பவம் பெரியளவு பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.

ஆனாலும் ஒரு ஆசிய அணி இப்படியான சம்பவத்தில் சிக்கியிருந்தால் அந்த அணி குற்றவாளிக் கூண்டில் நின்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் இங்கிலாந்து சந்தேகத்துக்குரிய அணியாக மட்டுமே இருக்கிறது.

நேற்று மழையினால் குறுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு Twenty 20 போட்டியாக நடந்த நியூ சீலாந்துக்கு எதிரான போட்டியிலும் இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள். ஆனால் சந்தேகத்துக்குரிய Reverse Swing அங்கே தென்படவில்லை. அல்லது தேவைப்படவில்லை.

புதிதாக சந்தேகப் புகை எழுந்தால் பார்க்கலாம்.


நேற்றைய போட்டியில் இங்கிலாந்தின் அணித் தலைவர், ஒரு காலத்தில் டெஸ்ட் மட்டும் விளையாடக் கூடியவர் என்று கருதப்பட்ட அளிஸ்டேயர் குக்கின் அபார ஆட்டப் பிரயோகங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.ரசிக்கவும் வைத்தன. போட்டியை வென்று கொடுத்து அரை இறுதிக்கும் அழைத்துப் போயுள்ளார்.

நியூ சீலாந்தின் கேன் வில்லியம்சனும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார்.

தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை சரித்துவரும் மிட்செல் மக்னெலகன் நேற்றும் 3 விக்கெட்டுக்கள். தொடரின் மூன்று போட்டிகளில் 11 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இத்தொடருக்கு முன்னதாக சதங்கள் குவித்த கப்டில்லின் சரிவு நியூ சீலாந்தை ஏமாற்றியுள்ளது.

இதேவேளை நேற்று அறிமுகமான கோரி அன்டர்சனை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.

----------

June 14, 2013

சங்கா - குலா சம்ஹாரமும், அபார வெற்றியும் - ICC Champions Trophy - Game 8

சில போட்டிகளை தூக்கம் விழித்திருந்து பார்த்து முடிகிற நேரம், இதுக்குப் போய் ஏன்டா இவ்வளவு நேரம் விழித்திருந்தோம் என்று எண்ணத் தோன்றும்..
அடுத்தநாள் முழுக்க அலுவலகத்தில் தூங்கி வழிகிற நேரம் எல்லாம் எங்களிலேயே எரிச்சல் வரும்.

தூக்கம் கண்ணைச் சுழற்றும் நேரம், உடலும் களைத்திருந்து கட்டாயம் பார்த்தேயாகவேண்டும் என்றிருக்கும் போட்டிகளைப் பார்க்காமலே தூங்கிவிட்டு, அடுத்த நாள் முடிவைப் பார்த்து 'அடடா இந்தப் போட்டியை அல்லவா  கட்டாயம் பார்த்திருக்கவேண்டும்?"​ என்று அடுத்த நாள் முழுக்க ஏக்கமாக இருக்கும்.

அதிலும் காண்பவர் எல்லாம் "நேற்று போட்டி பார்த்தியா? என்ன அடி மச்சான்" என்று கேட்டுக் கடுப்பாக்குவதும், அதிலும் நாம் பார்க்கவில்லை என்று தெரிந்தால் மேலும் எக்கச்சக்க எக்ஸ்ட்ரா பிட்டுக்களை சேர்ப்பதும் கிரிக்கெட் வெறியனான எனக்கு சிலவேளை நடப்பது தான்.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து இரண்டு விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களை அண்மித்த வேளையில், இந்தப் பொறுமையான ஆட்டமும், கையில் இருந்த விக்கெட்டுக்களும் இதற்கு முந்தைய போட்டிகளில் இதே பாணியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகள் குவித்த ஓட்டங்களும், சரி இலங்கையின் கதை அவ்வளவு தான் என்று எண்ண வைத்திருந்தன.

ஜோனதன் ட்ரோட், ஜோ ரூட் ஆகியோரையும் இன்னும் சில விக்கெட்டுக்களையும் இலங்கை அடுத்தடுத்துப் பிடுங்கிய பிறகும், கடைசி ஓவர்களில் 63 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. அதிலும் ரவி போபரா எரங்கவின் கடைசி ஓவரில் தாறுமாறாக அடித்து நொறுக்கிய 28 ஓட்டங்கள் என்னை இப்படி tweet போடவைத்தன...

இங்கிலாந்தின் மிகச் சிறந்த ஒரு நாள் Finisher ஆக மாறி வருகிறார் போபரா.
இங்கிலாந்துக்கு இதுவரை ஒருநாள் போட்டிகளில் இல்லாமல் இருந்த சில முக்கிய ஆயுதங்கள் இப்போது வசப்பட்டிருக்கின்றன.


ட்ரோட் என்ற நம்பகமான வீரர் (தென் ஆபிரிக்காவின் கலிஸின் பல இயல்புகளை இவரிடம் காண்கிறேன்... நேற்றும் கூட அபாரமாக ஆடியிருந்தார்), மத்திய ஓவர்களில் வேகமாக ஓட்டங்கள் சேர்க்கக் கூடிய ரூட், கடைசியில் அதிரடியாக ஆடக் கூடிய போபரா மற்றும் பட்லர்.
(ஆனால் ஜோஸ் பட்லருக்கு - பட்லர் எதிர் மாலிங்க - இங்கிலாந்து ஊடகங்கள் கொடுத்த பில்ட் அப்புக்கு நேற்று பூஜ்ஜியத்தில் அவர் ஆட்டமிழந்தது பரிதாபம்)
இவர்களோடு குக் - பெல்- பீட்டர்சன்னும் இணைய உலகத்தின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வரிசைகளில் ஒன்றாக மாறும்.


நேற்று எனது இடுகையில் ஒரு விடயத்தைக் குறிப்பிடிட்டிருந்தேன்.

இன்று மனம் ஏனோ மஹேலசங்காவை எதிர்பார்க்கச் சொல்லிச் சொல்கிறது. அத்துடன் குசல் ஜனித் பெரேரா, சந்திமால், திரிமன்னே ஆகியோரும் இன்று சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுவது இலங்கை அணியின் எதிர்காலத்துக்கு நல்லது

மறுபக்கம் இலங்கையின் அனுபவத் துடுப்பாட்ட வீரர்கள் கை கொடுத்தால் இங்கிலாந்தின் துல்லிய வேகப்பந்துவீச்சைத் தூளாக்கலாம்.

ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை இலங்கை பல மறக்க முடியாத தருணங்களை, குறிப்பாக வெற்றித் தருணங்களை இங்கே கண்டிருக்கிறது.
எனவே அனுபவம் வாய்ந்த வீரர்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இங்கே வெற்றி சாத்தியம் என்று எண்ணியிருந்தேன்.

சங்கா சதம் & மஹேல அவரோடு சேர்ந்து வழங்கிய இணைப்பாட்டத்துடன் அருமையாக ஆடி 43 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

அந்த இணைப்பாட்டத்தின் இடையில் தான் தூங்கிவிட்டேன்.
அந்த நேரம் நினைத்தேன் இவர்களிருவரும் 40 ஓவர் வரை நின்றால் இலங்கை வெல்லக் கூடியதாக இருக்கும் என்று.
விடிகாலை எழும்பும்போதே ஸ்கோரை பார்த்தால் நம்ப முடியவில்லை.

அதிலும் குலசேகர!!!


Power Play நேரம் அனுப்பப்பட்ட குலா சங்காவுடன் சேர்ந்து பெற்ற வேகமான அதிரடி இணைப்பாட்டம் இந்த வெற்றியை இலங்கைக்கு இலகுவாகப் பெற்றுத் தந்துள்ளது.
மத்தியூஸ் தலைவராக எடுத்த வெகு சில நல்ல முடிவுகளில் இதை சிறப்பானது என்பேன்.

சங்கக்கார ஒரு பக்கம் உறுதியாக நிற்க, மறுப்பக்கம் அதிரடியாக ஆடி அழுத்தத்தையும் குறைத்து, பந்துகள் பல மீத மிருக்க இந்த பெரிய ஓட்ட எண்ணிக்கையை அடைவதை இலகுபடுத்தினார். 38 பந்துகளில் 58. 3 ஆறு ஓட்டங்கள் & 5 நான்கு ஓட்டங்கள்.

இன்று கட்டாயம் Highlights பார்த்தேயாக வேண்டும்.

அதிலும் அடித்து ஆட அனுப்பப்பட்ட குலே ஒரு கட்டத்தில் சங்காவை விட அதிகப்படியான பந்துகளை எதிர்கொண்டு இணைப்பாட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தியிருந்தார்.

இணைப்பாட்டம் 72 பந்துகளில் 110 ஓட்டங்கள்.
குலசேகர 38 பந்துகளில் 58.

இதையெல்லாம் விட சங்காவுக்காக ஒரு சிக்கலான தருணத்தில் தனது விக்கெட்டைத் தியாகம் செய்ய குலசேகர எடுத்த முயற்சி பாராட்டுக்களையும் தாண்டியது.
இதோ அந்தக் காணொளி...


இப்படிப்பட்ட அர்ப்பணிப்பும், அணிக்காக சிந்திக்கின்ற மனதும் தான் ஒவ்வொரு அணிக்கும் அடிப்படையானவை.

சங்கக்கார நேற்று பெற்றது அவரது 15வது ஒரு நாள் சதம். இங்கிலாந்துக்கெதிராகப் பெற்ற முதலாவது சதம்.
ஓவல் மைதானத்தில் துரத்திப் பெறப்பட்ட இரண்டாவது பெரிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.நேற்றைய வெற்றியுடன் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டிகளில் இலங்கை 25வது வெற்றியைப் பதிவு செய்தது. இங்கிலாந்து 26 போட்டிகளில் வென்றுள்ளது.
ஆச்சரியமாக இவ்விரு அணிகளின் எந்தப் போட்டியும் மழையினால் குழம்பவில்லை.

இங்கிலாந்து பெரிதும்  போனது அவர்களது பந்துவீச்சின்போது பந்து பெரிதாக ஸ்விங் ஆகாததும், பந்து ரிவேர்ஸ் ஸ்விங் ஆக ஆரம்பிக்கும் நேரம் நடுவர்கள் பந்தை மாற்றியதும்.
ஆனால் இலங்கை வேன்றேயாகவேண்டும் என்று இருந்த போட்டி இது. வென்றார்கள்.
இதனால் இப்போது A பிரிவில் ஆஸ்திரேலியா உட்பட நான்கு அணிகளுக்குமே அரையிறுதி வாய்ப்புக்கள் இருக்கின்றன.
 ஒரு கட்டம் தான்.

இந்தப் பெரிய வெற்றியானது இலங்கை வீரர்களுக்கு என்றுமில்லாத உற்சாகத்தைத் தந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
ஆனால் மீண்டும் இலங்கை தன்  அணிக்கட்டமைப்பை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த போட்டியும் இலங்கையைப் பொருத்தவரை இன்னொரு வாழ்வா சாவா போராட்டம் தான்.

---------

இன்று தென் ஆபிரிக்கா மேற்கிந்தியத் தீவுகள் மோதும் போட்டி...

இரண்டு அணிகளில்  அரையிறுதி செல்லக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால் இது கிட்டத்தட்ட ஒரு கால்  போட்டியாகத் தான் அமைகிறது.
நேரடியாக ஒரு Knockout.

வழமையாகவே முக்கியமான போட்டிகளில் சொதப்புகின்ற தென் ஆபிரிக்காவுக்கு ஒரு பலப் பரீட்சை.
அதே போல முதல் இரு போட்டிகளிலும் ரசிக்கும் அளவுக்குப் பிரகாசித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியும் கவனிக்கக் கூடிய அணியே.

டேல் ஸ்டெய்ன் மீண்டும் அணிக்குத் திரும்புவது தென் ஆபிரிக்காவுக்குப் பெரும் பலத்தைக் கூட்டும்.
IPLக்குப் பிறகு மீண்டும் ஒரு கெயில்-ஸ்டெய்ன் மோதல்...

இவ்விரு அணிகளின் வெற்றிகளைத் தீர்மானிக்கும் இருவராக இவ்விருவரும் இருப்பார்கள்.
இவர்களோடு டீ வில்லியர்ஸ், பிராவோ மற்றும் சுனில் நரேனும் கவனிக்கப்படவேண்டியவர்கள்.

ஆனால் மழை இப்போதே குழப்ப ஆரம்பித்து, போட்டியைத் தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது.

June 13, 2013

ஏழாவது போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஏழரைச் சனியும் - ICC Champions Trophy - Game 7

ஆறு போட்டிகளாக வருவதும் போவதுமாக விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்த இங்கிலாந்து மழை, நேற்றைய ஏழாவது​ போட்டியில் வந்தே விட்டது.

அதுவும், ஏற்கெனவே ஏழரைச் சனியனின் உச்ச பட்ச பார்வையில் இருந்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் போட்டியிலே, அந்த அணி கொஞ்சம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும் நேரம் பார்த்து.

உபாதை காரணமாகத் தொடர்ச்சியான இரண்டாவது போட்டியிலும் தங்கள் தலைவர் கிளார்க் இல்லாமல், எதிரணி வீரரின் முகத்தில் விட்ட குத்தினால் போட்டித்தடையைப் பரிசாகப் பெற்ற டேவிட் வோர்னர் இல்லாமல் அரை குறை அணியாக நேற்று களமிறங்கிய அணி, துடுப்பாட்டத்தில் ஒரு கட்டத்தில் தத்தளித்தது.

இதற்கு முதல் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் நான்கிலும் நியூ சீலாந்தைத் தோற்கடித்திருந்த ஆஸ்திரேலியா, நேற்று தோற்றுவிடுமோ என்ற நிலையிருந்தது.

அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லியின் பொறுமையான அரைச் சதமும், (நான் எதிர்பார்த்திருந்த) அடம் வோஜசின் அபாரமான 71 ஓட்டங்களும், அதன் பின் கடைசி ஓவர்களில் அடித்தாடிய IPL இன் அதிர்ஷ்டக்கார மில்லியன் டொலர் மனிதன் மக்ஸ்வெல்லின் வேகமான ஓட்டங்களும் அணியைக் கொஞ்சம் திடப்படுத்தி, 243 என்ற ஓட்ட எண்ணிக்கையை அடையக் கூடியதாக இருந்தது.
ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிகளின் சராசரி ஓட்ட எண்ணிக்கையும் அச்சொட்டாக இதுவே.

தொடர்ச்சியாக சதங்கள்  பெற்று formஇல் இருக்கும் கப்டில்  மற்றும் ஓட்டங்களைப்  பெற்று வரும் இதர நியூ சீலாந்து அணி வீரர்களின் முன்னால் இந்த இலக்கு பெரிதல்ல என்றே தோன்றியது.
ஆனால் கப்டில்லையும் ரொங்கியையும் விரைவாகவே மக்காய் அனுப்பி வைக்க, ஆஸ்திரேலியா வென்றுவிடுமோ என்ற நிலையில் தான் மழை வந்தது.

வந்த மழை முக்கியமான ஒரு புள்ளியையும் அள்ளிச் சென்றுவிட்டது.
சிலவேளை அது நியூ சீலாந்தின் ஒரு புள்ளியாகவும் இருக்கலாம். நேற்று வென்றிருந்தால் நியூ சீலாந்து அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு நேற்று ஒரு புள்ளி கிடைத்தாலும், அடுத்த போட்டியில் இலங்கை அணியை அது வெல்லவேண்டி இருப்பதோடு, மற்ற அணிகளிலும் தங்கியிருக்கவேண்டி இருக்கும்.

​இங்கிலாந்தும் நியூ சீலாந்தும் தங்கள் அடுத்த போட்டிகளை வென்றால் ஆஸ்திரேலியா அவுட்.
இப்போதிருக்கும் நிலையில் இலங்கையை வெல்வதும் பெரும்பாடு தான்.


நியூ சீலாந்தின் மிட்செல் மக்னலெகன் நேற்றும் நான்கு விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.
இத்தொடரில் இதுவரை கூடுதல் விக்கெட்டுக்களை (8) வீழ்த்தியவரும் இவரே.


இவரது இடது கை வேகப்பந்துவீச்சு மிக அபாரமாக இருக்கிறது. சாதுரியமாகவும் இதே வேளை தேவையானவேளையில் விக்கெட்டுக்களை  பந்துவீசுகிறார்.
உபாதைகளின் மத்தியிலும் விட்டுக்கொடுக்காமல் ஓட்டங்களைக் கட்டுப்படுத்திப் பந்துவீசும் வெட்டோரியும் பாராட்டுக்குரியவரே.

ஆஸ்திரேலிய அணியிடம் முன்னைய சம்பியன்களான ஆஸ்திரேலிய அணியிடம் இருந்த குணாம்சங்களில் இல்லாமல் இருப்பது, வெற்றி பெறவேண்டும் என்ற வெறியும், கட்டுப்பாடான ஆக்ரோஷமும்.
இதனால் தான் மைதானத்துக்குள் காட்ட வேண்டிய வெறியை வோர்னர் போல வெளியே காட்டுகிறார்கள் போலும்.

மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணியின் Hat trick வாய்ப்புக் கிட்டத்தட்ட பறிபோயிருக்கிறது.
இதுவரை சாம்பியன்ஸ் கிண்ணம் வெல்லாத அணிகளில் ஒன்றான பாகிஸ்தானுக்கும் இனிமேலும் இந்த வாய்ப்பில்லை.

----

இலங்கை அணிக்கு இன்று இதே போன்ற ஒரு வாழ்வா சாவா சிக்கல் நிலை.
இங்கிலாந்துக்கு எதிராக இன்று இடம்பெறும் பகலிரவுப் போட்டியில் வென்றாலேயே இத்தொடரில் தொடர்ந்தும் முன்னேற வாய்ப்பிருக்கும்.

முதலாவது போட்டியில் நியூ சீலாந்து அணியோடு கடுமையாகப் போராடி மிக நெருக்கமாக ஒரேயொரு விக்கெட்டால் தோற்றுப் போனாலும், தோல்வி தோல்வி தானே? இதனால் இன்றும் தோற்றால் வெளியே தான்.

இங்கிலாந்து இப்போது இருக்கும் formஇலும் இலங்கை அணி இருக்கின்ற தடுமாற்றத்திலும் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு உறுதி போலத் தென்பட்டாலும், நியூ சீலாந்துக்கு எதிராக இலங்கை காட்டிய இறுதிக்கட்டப் போராட்டம் சில தன்னம்பிக்கை விட்டமின்களை இலங்கை அணி வீரர்களுக்கு வழங்கி இருக்கும் என நம்பலாம்.

இன்று மனம் ஏனோ மஹேல, சங்காவை எதிர்பார்க்கச் சொல்லிச் சொல்கிறது. அத்துடன் குசல் ஜனித் பெரேரா, சந்திமால், திரிமன்னே ஆகியோரும் இன்று சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுவது இலங்கை அணியின் எதிர்காலத்துக்கு நல்லது.

அதுபோல இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்களும், மாலிங்கவும் இங்கிலாந்துக்கு சவாலாக இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை.
மறுபக்கம் இலங்கையின் அனுபவத் துடுப்பாட்ட வீரர்கள் கை கொடுத்தால் இங்கிலாந்தின் துல்லிய வேகப்பந்துவீச்சைத் தூளாக்கலாம்.

இல்லையேல், இதற்கு முதல் சம்பியன்ஸ் கிண்ண மோதல்கள் இரண்டிலுமே இலங்கை இங்கிலாந்திடம் தோற்றது இன்றுடன் மூன்றாக மாறும்.
மத்தியூசின் தலைமைப் பதவியும் வேறு ஒருவருக்கு மாறும்.


June 12, 2013

அரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்லாடும் ஆஸ்திரேலியா - ICC Champions Trophy - Game 6

​ஒரே கல்லில் இரு மாங்கனிகள்...
இந்தியா நேற்றுப் பெற்ற வெற்றியில் இரு அணிகளுக்கு ஒரே நேரத்தில் அடி...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு விழுந்த சாதாரண அடி, பாகிஸ்தானுக்கு மரண அடியானது.
தொடரின் ஆரம்பத்தில் கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையாகக் கருதப்பட்ட பாகிஸ்தான் தான் முதலாவதாக இந்த சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்த அணியாகியுள்ளது.

மறுபக்கம், இந்தியா அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை முதலில் பெற்ற பெருமையுடைய அணியாகியுள்ளது.

இந்தத் தொடர் ஆரம்பிக்க முதலே, எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட் யுத்தம் - எட்ஜ்பஸ்டனில் நடைபெறவுள்ள இந்திய - பாகிஸ்தான் போட்டி இனி வெறும் கௌரவப் பிரச்சினை தான்.
பாகிஸ்தான் இதுவரை எந்த ஒரு உலகக் கிண்ணப் போட்டியிலும் இந்தியாவை வென்றதில்லை  என்பது அவர்களுக்கு மேலும் ஒரு வெல்லவேண்டிய காரணத்தை வழங்குகிறது.
*பிற்சேர்க்கைத் தெளிவாக்கல் - நண்பர்கள் பலர் சுட்டிக்காட்டியபடி - பாகிஸ்தான் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவை இரு தடவை வீழ்த்தியுள்ளது.

நேற்று மேற்கிந்தியத் தீவுகள் அணியை இந்தியா வதம் செய்து வீழ்த்தியது எனலாம்.
இரண்டு மீசைக்கார இளையவர்கள் இந்தியாவின் வெற்றிக்குப் பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தார்கள்.

அண்மைக்காலமாக இந்தியாவின் முன்னணி சகலதுறை வீரராக உருவெடுத்து வரும் ரவீந்திர ஜடேஜா நேற்று மேற்கிந்தியத் தீவுகளின் அச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசையை சும்மா இலகுவாக உருட்டி எடுத்தார்.
நேற்று ஜடேஜா பெற்றது, இந்திய அணியின் வீரர் ஒருவரால் பெறப்பட்ட மிகச் சிறந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்ப் பந்துவீச்சு.


கடைசி இரு ஓவர்களில் டரன் சமி  வெளுத்து வாங்கியிராவிட்டால் இன்னும் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைத் தன்னுடையதாக்கி இருந்திருப்பார் ஜடேஜா.
ஒவ்வொரு பந்தும் விக்கெட்டை எடுப்பதாக ஓட்டங்களையும் கட்டுப்படுத்தி நேற்று ஜடேஜா ஒரு அசகாய சூரராக விளங்கினார்.

ஆரம்பத்திலே இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்களை மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் - குறிப்பாக சார்ள்ஸ் பந்தாடிய பிறகு ஜடேஜா போட்டியின் போக்கையே மாற்றிப்போட்டார்.

200 ஓட்டங்களுக்குள் சுருளவேண்டிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு நேற்று போராடக் கூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொடுத்தவர் அவர்களின் முன்னாள் தலைவர் சமி.

முதலாவது போட்டியில் அவர் தேவையில்லை என்று அணியை விட்டுத் தூக்கியவர்கள், ரம்டினின் தடைக்குப் பிறகு அணிக்குள் அவரை சேர்த்திருந்தார்கள்.
நேற்று சமி அடித்த வேகமான அரைச் சதம் மேற்கிந்தியத் தீவுகளைக் கொஞ்சமாவது போராட வைத்தது.
தென் ஆபிரிக்காவுக்கு ஒரு மக்லரென், ஆஸ்திரேலியாவுக்கு ஜேம்ஸ் போல்க்னர், நியூ சீலாந்துக்கு நேதன் மக்கலம் போல...

குறிப்பாக இறுதி விக்கெட் இணைப்பாட்டத்தில் பெறப்பட்ட 51 ஓட்டங்களையுமே சமியே எடுத்திருந்தார் என்பது எவ்வளவு பொறுப்பாக அவர் ஆடினார் என்பதைக் காட்டுகிறது.

அடுத்த போட்டியிலும் சமி இருப்பார்; ஆனால் அதற்குப் பின்னர் ரம்டின் தடை முடிந்து வந்த பிறகு?

234   மேற்கிந்தியத் தீவுகளின் சமபலமான பந்துவீச்சோடு இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று பார்த்தால், இந்தியாவின் புதிய ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியிடமிருந்து மீண்டும் ஒரு அபார ஆரம்பம்.
சத இணைப்பாட்டம்.. அதுவும் வேகமாக.

ரோஹித் ஷர்மா மீண்டும் ஒரு அரைச் சதம் பெற்று ஆட்டமிழக்க, பெரும் ஓட்டப் பசியோடு இருக்கின்ற ஷீக்கார் தவான் தனது இரண்டாவது தொடர்ச்சியான ஒரு நாள் சர்வதேச சதத்தைப் பெற்று தனது ஆரோக்கியமான, ஓட்டக் குவிப்பு Formஐ வெளிப்படுத்தியிருக்கிறார்.

தவான் ஆஸ்திரேலிய அணியுடன் தனது டெஸ்ட் அறிமுகத்தில் பெற்ற சதம், அதன் பின் இந்த சாம்பியன்ஸ் கிண்ண இரு சதங்கள் என்று மூன்று சர்வதேச சதங்களைத் தொடர்ச்சியாகப் பெற்றுள்ளார்.

விராட் கோஹ்லியுடன் ஒரு இணைப்பாட்டம், அதன் பின் அரைச் சதத்தை மிக அழகாக ஆடிப் பெற்ற தினேஷ் கார்த்திக்குடன் வீழ்த்தப்படாத சத இணைப்பாட்டம் என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போட்டி கை நழுவிச் செல்லாமலிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார் தவான்.

இந்திய அணிக்கு அண்மைக்காலமாகக் கிடைத்து வரும் துடிப்பான, திறமையான இளம் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாகப் பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பதும், இவர்கள் மூத்த வீரர்கள் பலருக்கும் நிரந்தர ஓய்வைக் கொடுக்கும் அழுத்தத்தை வழங்கிவருகிறார்கள் என்பதும் எதிர்கால இந்தியக் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானது.

அத்துடன், IPL முடிந்த பிறகு பல சந்தேகங்கள், அழுத்தங்கள், கறுப்புப் புள்ளிகளுடன் இங்கிலாந்து வந்த இந்திய அணிக்கு இந்த வெற்றிகள் நிறைய நம்பிக்கையைக் கொடுக்கும் என்பதோடு, இந்தியாவின் பார்வையில் விமர்சனங்களுக்கும் எதிர்க்கருத்துக்களுக்கும் பதிலடியாக அமைந்திருக்கிறது.

இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலக்குகளைத் துரத்திய எல்லா அணிகளுமே தடுமாறி, அழுத்தத்தை ஏற்றி, தங்கள் வெற்றிவாய்ப்புக்களைத் தாமே குழிதோண்டிப் புதைத்துக்கொண்டனர்.
தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா & பாகிஸ்தான் நல்ல உதாரணங்கள். நியூ சீலாந்து மயிரிழையில் தப்பியது.
ஆனால் இந்தியாவின் நான்கு இளையவர்களும் அந்தத் தவறை விடவில்லை.


இதில் சுவாரஸ்யம், இவ்விரு அணிகளும் இறுதியாக விளையாடிய சம்பியன்ஸ் கீனப் போட்டியிலும் இந்தியாவே வென்றது.
தென் ஆபிரிக்காவிலே நடந்த தொடரில் 7 விக்கெட்டுக்களால், 107 பந்துகள் மீதம் இருக்க இந்தியா வென்றது.
நேற்று எட்டு விக்கெட்டுக்களால் 65 பந்துகள் மீதம் இருக்க வென்றுள்ளது.

------

இன்று நடப்பு சம்பியன்கள் ஆஸ்திரேலியாவுக்கு வாழ்வா சாவா யுத்தம்.
வெல்லவே வேண்டும்.... தோற்றால் அவ்வளவு தான்.

இவ்விரு அணிகளும் தான் கடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தன.

இன்றைய போட்டிக்கு முன்னதாகவே ஆஸ்திரேலிய அணிக்குப் பட்ட காலிலேயே படும் என்பதைப் போல, அணித்தலைவர் கிளார்க் இன்னும் குணமடையவில்லை என்பது ஒரு பக்கம், மறுபக்கம் ஆஸ்திரேலியாவின் குழப்படிகாரப் பையன் வோர்னர் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.

Twitter மோதல் ஒன்றில் அகப்பட்டு எச்சரிக்கப்பட்டு, தண்டப் பணம் செலுத்திய அவர், இம்முறை மதுபானப் பாவனையுடன் இங்கிலாந்து வீரர் ஒருவருடன் (ஜோ ரூட் என சில ஊடகங்கள் மட்டும் குறிப்பிட்டுள்ளன) மோதலில் ஈடுபட்டதால் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
வெற்றி எந்த வழியிலாவது வரும் என்று ஏங்கியிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு, வோர்னர் formக்குத் திரும்பாமலே, குழப்படி வழியால் நாசமாகிப்போனது பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய லூக் ரொங்கி இப்போது நியூ சீலாந்து வீரர்.
என்னவெல்லாம் நடக்கிறது கிரிக்கெட்டில்.

மாலுமி இல்லாத கப்பல் போல, தலைவன் இல்லாத ஆஸ்திரேலிய அணி கிண்ணத்தைப் பறிகொடுக்கும் தறுவாயில் இந்தப் போட்டியிலும் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

விடை கொடுத்தனுப்பத் தயாராவோம்...

இந்தத் தோல்விகள் இவர்களது ஆஷஸ் தொடருக்கான தயார்ப்படுத்தலுக்கும் பெரியளவு அடியைக் கொடுக்கப் போகிறது என்பது உண்மை.

June 11, 2013

பாகிஸ்தான் !!! மீண்டும்??? பாவம் மிஸ்பா - ICC Champions Trophy - Game 5

மீண்டும் ஒரு தடவை நான் சொன்னது நடந்தது.

பாகிஸ்தான் அணி தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொண்டு தோற்கும் ஒரு அணி என்பது மீண்டும் புலனாகியுள்ளது.

கஷ்டப்பட்டு பந்துவீச்சாளர்கள் எடுத்துத் தந்த ஒரு அருமையான வாய்ப்பைப் பொறுப்பற்ற துடுப்பாட்டம் மூலம் வீணாக்கி, இப்போது அரையிறுதி வாய்ப்பை அநேகமாக இழந்து நிற்கிறது.

தென் ஆபிரிக்க அணி தனது முக்கிய, அனுபவம் வாய்ந்த வீரர்களை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கும் இத்தொடரில் அந்த அணியை வீழ்த்த முடியாவிட்டால் வேறு எப்போது அந்த அணியை வீழ்த்துவது?

அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் மீண்டும் ஒரு தடவை தனித்து நின்று போராடி அரைச் சதம் ஒன்றை எடுத்திருந்தார். அவருக்கு முன்னைய போட்டி போலவே துடுப்பாட்டத்தில் துணை வந்தவர் நாசிர் ஜம்ஷெட்.
ஏனைய எல்லாத் துடுப்பாட்ட வீரர்களும் வருவதும் போவதுமாகவே இருந்திருந்தார்கள்.

ஆடுகளத்தில் நின்று ஆடவேண்டும் என்பதோ, இந்தப் போட்டியில் வெல்வதன் மூலம் அரையிறுதியை நோக்கி செல்லவேண்டும் என்பதோ அவர்களின் நோக்கமாக இருந்ததாகத் தெரியவில்லை.

அறிமுக வேகப் பந்துவீச்சாளர் க்றிஸ் மொறிஸின் பந்துவீச்சிலும், அனுபவம் குறைவான வேகப்பந்துவீச்சாளர்கள் சொத்சொபே, மக்லரென் ஆகியோரது பந்துவீச்சிலும் சுருண்ட பாகிஸ்தான், favorites என்ற நிலையிலிருந்து failures என்ற அவமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மிஸ்பா மீண்டும் ஒரு தடவை மிஸ்டர்.தனிமை ஆகியிருக்கிறார்.

நேற்றைய போட்டியின் கதாநாயகன் உண்மையில் மிஸ்பா உல் ஹக் தான்.
அபாரமான களத்தடுப்பின் மூலமாக இரு ரன் அவுட்களை நிகழ்த்தியதோடு, தென் ஆபிரிக்காவின் ஜொண்டி ரோட்ஸை நிகர்க்கும்  விதமாக மில்லரைப்  பிடியெடுத்து  ஆடமிழக்கவும் செய்திருந்தார்.
அதன் பின்னர் துடுப்பாட்டம்.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு தலைவரை வெற்றி பெறும் அணியின் தலைவராகப் பார்க்கும் அளவுக்கு பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் செயற்படவில்லை.

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் மட்டும் தவறுவிடவில்லை ; அவர்கள் களத்தடுப்பில் ஈடுபட்ட நேரம் ஹஷிம் அம்லாவின் இலகுவான பிடியொன்று தவறவிடப்பட்டது. 7 ஓட்டங்களை அவர் பெற்றிருந்த நேரம் விடப்பட்ட அந்தப் பிடி போட்டியையும் சேர்த்து தாரை வார்த்தது.

அம்லாவின் 81 ஓட்டங்கள் இட்ட அடித்தளம் தென் ஆபிரிக்கா பெற்ற ஓட்ட எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது.

ஆடுகளத்தின் தன்மைக்கு இந்த ஓட்ட எண்ணிக்கை போதும் என பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தின் போதே தெரிய வந்தது

இப்போது பாகிஸ்தான் அணியின் வாய்ப்புக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்து பாவம் மிஸ்பாவின் பதவி பறிபோகும் போலவே தெரிகிறது.
மூழ்கும் கப்பலைக் கரைசேர்க்கப் போராடும் அணித் தலைவராகத் தெரியும் மிஸ்பாவுக்கு வயதும் ஏறுவது அணிக்கும் அவருக்கும் சேர்த்தே பாதிப்பைத் தரப்போகிறது.


தென் ஆபிரிக்காவைப் பொறுத்தவரை மொறிஸின் அறிமுகம் அவர்களுக்குப் பெரிய வரம்.
ஆனால் ரன் அவுட் மூலமான ஆட்டமிழப்புக்களை தென் ஆபிரிக்கா குறைத்துக்கொள்ளும் வழிமுறைகளைப் பார்க்கவேண்டும்.

இந்த வெற்றி இழந்து கிடந்த நம்பிக்கையை மீண்டும் தென் ஆபிரிக்காவுக்கு வழங்கி இருக்கிறது.

இறுதியாக மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கும் நேரம் ஸ்டெய்னின் வருகையும் மேலும் பலத்தைக் கொடுக்கும்.

-----------------

IPL அணிகள் மோதும் போட்டி இன்று...

முதன் முதலில் அரையிறுதிக்குச் செல்லப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டம் இன்று.
இந்திய அணிக்கு வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தாலும் மேற்கிந்தியத் தீவுகளின் IPL வீரர்கள் (குறிப்பாக கெய்ல் & பொல்லார்ட்) இந்தியப் பந்துவீச்சாளர்களை நன்கு அறிந்தவர்கள் என்பதால் அது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சாதகமாக அமையக்கூடும்.

இரு பக்கத் தலைவர்களும் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியின் வீரர்கள். (ஸ்ரீநிவாசனுக்கு இந்த விடயம் மட்டுமாவது ஆறுதல் அளிக்கட்டும்)

இந்தியப் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையளிப்பதாகத் தெரியவில்லை.

மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சும் இந்திய வீரர்களைத் தொல்லைப் படுத்தலாம்.

ஆனால் தவான், கொஹ்லி & தோனி ஆகிய மூவரையும் இந்தியா நம்பியிருக்கலாம்.

மிஸ்பாவின் பிடியில் கோல்மால் செய்யப் பார்த்த மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட் காப்பாளர் ரம்டின்  அதற்கான தண்டனையாக ஊதியத் தொகையை இழந்திருப்பதோடு, இன்றைய போட்டியிலும் இன்னொரு போட்டியிலும் பங்குபற்றுவதிலிருந்து தடை செய்யப்படுள்ளார்.

அவருக்குப் பதிலாக உள்ளூர்ப் போட்டிகளில் விக்கெட் காப்பில் ஈடுபடும் ஜோனதன் சார்ள்ஸ் விக்கெட் காப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இவ்விரு அணிகளும் இறுதியாக இங்கிலாந்தில் ஒரு ஒருநாள் போட்டியில் சந்தித்தது 30 ஆண்டுகளுக்கு முதல் ஆமாம், 1983 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில்...

அப்போது மேற்கிந்தியத் தீவுகள் நடப்பு உலக சம்பியன். இந்தியா மன்னர்களை வீழ்த்திப் புது மகுடம் சூடியது.

இப்போது இந்தியா ஒரு நாள் போட்டிகளின் உலக சம்பியன். மேற்கிந்தியத் தீவுகள் Twenty 20 போட்டிகளின் உலக சம்பியன்.

சுவாரஸ்யமான போட்டியை ரசிக்கலாம்.

June 10, 2013

சுருண்ட அணிகள், அச்சுறுத்திய மாலிங்க & அசையாத சௌதீ - ICC Champions Trophy - Game 4

குறைவான ஓட்ட இலக்குகள் வைக்கப்படுகின்ற போட்டிகள் அதிக ஓட்டங்கள் மழையாகப் பொழிகிற போட்டிகளை விட அதிக சுவாரஸ்யமாக இருப்பது வழமை.

வெறும் 139 ஓட்டங்களே இலக்காக வழங்கப்பட்ட போட்டி ஒன்றில் 19 விக்கெட்டுக்களை மொத்தமாக வீழ்ந்தது கண்டோம் .

அவசர ஆட்டமிழப்புக்கள், அதிரடி ஆட்டமிழப்புக்கள், துல்லியமான விட்டுக்கொடுக்காத பந்துவீச்சுக்கள், தடுமாறிய நடுவர்கள், நம்பமுடியாத அபார களத்தடுப்புக்கள், நகத்தை மட்டுமல்லாமல் விரல்களையே கடித்துத் துப்புமளவுக்கு பதற்றம், பரபரப்பைத் தந்த விறுவிறுப்புக் கணங்கள் எல்லாவற்றையும் தாண்டி, இதை விட மிக நெருக்கமாக ஒரு போட்டி இருக்க முடியாது என்ற அளவில் நியூ சீலாந்து நேற்று இறுதி விக்கெட்டினால் வெற்றியீட்டியது.

இலங்கை 38வது ஓவரில் 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த பிறகு இந்தப் போட்டி பூட்ட கேஸ் தான் என்று அவசரப்பட்டு(?) முடிவேடுத்தவர்களில் நானும் ஒருவன்.

திடீரெனப் பார்த்தால் ஐந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்த நிலையில் இந்தப் போட்டியில் சுவாரஸ்யம் இன்னமும் இருக்கிறது என்று எதிர்பாக்க ஆரம்பித்தேன்.

ஐம்பது ஓவர்கள் நிற்க முடியாத அணி, பொறுப்பற்ற துடுப்பாட்டத்தால் 138 ஓட்டங்களை மட்டும் பெற்ற அணி பந்துவீச்சில் எவ்வளவு போராடினாலும், மற்ற அணி இதை விட மிக மோசமானதாக இருந்தால் ஒழிய வெல்லக் கூடாது என்பதே சரியானது.

சங்கக்காரவைத் தவிர வேறு யாரும் ஒரளவுக்கு சராசரியாகவாவது துடுப்பெடுத்தாடாத நிலையில், லசி மாலிங்கவைத் தவிர விக்கெட்டுக்களை எடுப்பதற்கு அதிர்ஷ்டத்தையே நம்பியிருந்த நிலையில், துல்லியமான பந்துவீச்சு (மக்லெனகன்), அபார களத்தடுப்பு (நேற்றைய உதாரணம் சாகசப் பாய்ச்சலில் பிடிஎடுத்த தலைவர் பிரெண்டன் மக்கலம்), பொறுமையான அணுகுமுறையுடன் கூடிய துடுப்பாட்டம் (மக்கலம் சகோதரர்கள் மற்றும் மாலிங்கவின் இரு ஓவர்களைத் தடுத்தாடிய சௌதீ) ஆகியவற்றை நேற்று வெளிப்படுத்திய நியூ சீலாந்து வென்றதே மிகப் பொருத்தமானது.

ஆனால் குறைவான ஓட்டங்களுக்கு சுருண்டவுடன் பல அணிகள் மனரீதியில் மிக மோசமாக வீழ்ந்து நம்பிக்கையிழந்துவிடும்.
ஆனால் இலங்கை அணி போராடிய விதமும், இறுதிவரை விக்கெட்டுக்களைக் குறி வைத்து ஆக்ரோஷமாக விளையாடியதும் பாராட்டுதற்குரியதே.

நடுவர் ரொட் டக்கரின் தவறான இரு தீர்ப்புக்கள் - முக்கியமாக மாலிங்கவின் அபாரப் பந்து ஒன்று சௌதியின் பாதத்தில் பட்டும் துடுப்பு என்று நான்கு ஓட்டங்களை வழங்கியது, இறுதியில் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பாக அமைந்தது.

இதே நியூ சீலாந்தின் ஆட்டவேளையில் வெட்டோரிக்கு தவறான ஆட்டமிழப்பை வழங்கி வெளியேற்றியதற்கு இப்படி ஈடுகட்டப்பட்டதோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

எனினும் இப்படியான போட்டிகளில் ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்படும் தொலைக்காட்சி நடுவரிடம் மேன்முறையீடு செய்யப்படும் (Reviews) ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவ்வவ்வணிகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத சந்தர்ப்பங்களில், தவறான ஆட்டமிழப்புக்களைத் திருத்தவோ / சரியான ஆட்டமிழப்புக்கள் வழங்கப்படாமல் இருப்பதை நிறுத்தவோ முடியாமல் போகும்.

அதிலும் நேற்றைய போட்டி போன்ற போட்டிகளாக இருந்தால் போட்டியின் இறுதி முடிவிலும் இவை பெரிய தாக்கங்களை செலுத்தக்கூடும்.
நேற்று சௌதீக்கு ஆட்டமிழப்பு வழங்கப்பட்டிருந்தால் இலங்கை அரையிறுதி வாய்ப்பை அடுத்த போட்டியில் பெற்றுக்கொள்ளும் வலுவான நிலையில் இருக்கக் கூடும்.

ஆனால் கிரிக்கெட்டில் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களையும் இதை விட மோசமான நிலைமைகளையும் நாம் எதிர்பார்த்தே ஆகவேண்டும்.
நான் அடிக்கடி சொல்வது போல "There is no IFs and BUTs in cricket".

எனவே குறைந்த ஓட்டங்களுக்குள் சுருளக் காரணமாக அமைந்த துடுப்பாட்ட வீரர்களின் அசமந்தப் போக்கைக் கண்டித்து அவர்கள் அடுத்த இரண்டு போட்டிகளை இலங்கை வெல்வதற்குத் தம் பங்களிப்பை வழங்குவதற்குத் துணை வருவதை உறுதிப்படுத்தவேண்டியது தான்.


மாலிங்கவைத்  திட்டித் தீர்த்திருந்த நாவுகளும் மனதுகளும் நேற்று அவரை இலங்கை அணியின் காவலராகப் பார்த்திருந்தன.
மத்தியூஸ் அழைத்து விக்கெட் ஒன்றைப் பிடுங்கித் தரக் கேட்ட நேரம் எல்லாம் விக்கெட்டுக்களை எடுத்த துல்லியமும், ஒவ்வொரு பந்துமே எதிரணியை அச்சுறுத்தியதும் எல்லாப் பந்துவீச்சாளராலும் இயலாத ஒன்று.

மாலிங்கவின் ஓவர்கள் பத்தையும் கடத்தி முடிப்பதற்கு நியூ சீலாந்து கடை நிலை வீரர்கள் எடுத்த பிரயத்தனம், குறிப்பாக டிம் சௌதியின் அபார தடுப்பாட்டம் ஒரு விறுவிறுப்பான நாவல் தான்.

ரசித்த இன்னும் சில விஷயங்கள்.
சங்காவின் துடுப்பாட்டம்
பிரெண்டன் மக்கலமின் நம்பமுடியாத பாய்ச்சல் பிடி
மாலிங்கவின் யோர்க்கர்கள்
திசர பெரேராவின் கண்கட்டி வித்தை போல அமைந்த ரன் அவுட்டுக்கான எறி

இனி இலங்கை அடுத்துவரும் இரு போட்டிகளையும் வென்றாலே அரையிறுதி பற்றி சிந்திக்கலாம்.
மத்தியூஸ் தன்னையும் அணியையும் நிதானப்படுத்துவாரா பார்க்கலாம்.

-----------------

B பிரிவில் தத்தம் முதல் போட்டிகளில் தோற்ற இரு அணிகளும் இன்று தங்கள் முதல் வெற்றியைப் பெற்றுக் கொள்ளவும், தொடரில் வெளியேறாமல் தப்பித்துக்கொள்ளவும் இன்று இத்தொடரின் முதலாவது பகல் - இரவுப் போட்டியில் மோத இருக்கின்றன.

பயிற்சி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் சந்தித்த வேளை ஆச்சரியப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியிலும் உபாதைக்குள்ளாகியிருக்கும் டேல் ஸ்டெய்ன் விளையாட மாட்டார் என்பது தென் ஆபிரிக்காவுக்கு அவ்வளவு நல்ல செய்தியல்ல.
மோர்க்கலும் இல்லாத தென் ஆபிரிக்க அணி பாகிஸ்தானை விட வேகப்பந்துவீச்சுப் பக்கமாகப் பலவீனமாகவே தெரிகிறது.

ஆனால் பாகிஸ்தான் அணியின் வழமையான துடுப்பாட்டம் கொழும்பு மழை போல..
எப்போது அடித்துப் பெய்யும், எப்போது போக்குக் காட்டும் என்பது யாருக்குமே தெரியாது.

இரண்டு பச்சை அணிகளின் மோதல் இன்றிரவு எந்த அணியை வெளியே அனுப்பி வைக்கும் எனப் பார்ப்போம்.

----------------
இன்று காலமான இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நடுவர் கந்தையா பிரான்சிஸ் (K.T.Francis) அவர்களுக்கு அஞ்சலிகள்.

இலங்கை அணியின் முதலாவது டெஸ்ட் போட்டியில் நடுவராகக் கடமையாற்றிய இவர், இலங்கை சார்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடுவர் குழாமுக்குத் தெரிவான முதல் நடுவர் என்பதும் பெருமைக்குரிய விஷயம்.

இறுதிக்காலத்தில் நீரிழிவு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தன் இரு கால்களையும் அகற்றவேண்டிய நிலைக்கும் ஆளாகியிருந்தார்.

இலங்கைக்கு 80கள், 90களில் விஜயம் செய்த அணிகளினால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த நடுவர்களில் ஒருவரான பிரான்சிஸ் பின்னைய நாட்களில் நல்ல நடுவராக ஓரளவுக்காவது பெயர் பெற்றவராவார்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner