June 28, 2011

அவன் - இவன்



விளிம்பு நிலை மனிதர்களை தமிழ் சினிமாவில் காட்டும் வெகு சில இயக்குனர்களில் ஒருவரான பாலா எதிர்பார்க்கவைத்துத் தந்துள்ள புதிய படம்.
வழமையாக எந்த ஒரு திரைப்படத்தினதும் கதையை நான் என் பதிவுகளில் சொல்வதில்லை. எனினும் மனதில் இருந்த எண்ணத்தினைப் பகிர்ந்துகொள்வதற்காக கதைச் சுருக்கத்தைப் பதிவாகவே இட்டுவிட்டேன்.


ஹைனசும்,அவனும் இவனும் - ஞாபக அலைகள்



(எனினும் விமர்சனப் பதிவில் கதை சொல்வதில்லை என்ற கொள்கை நீடிக்கிறது.. )

சினி சிட்டி அரங்கில் கவனித்த ஒரு விஷயம்.....
எழுத்தோட்டங்கள் காட்டப்பட்ட போது, பாலா, ஆர்யா, சூர்யா,யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்குக் கிடைத்த கரகோஷங்களுக்குக் கொஞ்சம் குறையாமல் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கும் கிடைத்தது தான்.. அது ஏன்? அல்லது எப்படி?

ஒரு கிராமம். ஒரு அரண்மனை. அங்கே ஒரு அப்பாவி,பந்தா ஜமீன்தார் ஹைனஸ் (ஜி.எம்.குமார்)
அவரது அடியாட்கள்,நண்பர்கள், வளர்ப்புப் பிள்ளைகள் போன்றவர்கள் - கொஞ்சம் அரவாணி போன்ற தோற்றமும் கலைஞன் ஆகின்ற கனவோடும் திரியும் வோல்டர் (விஷால்)
திருடனாகவும், வம்பிழுப்பவராகவும் திரியும் (ஆர்யா)
இருவரும் ஒரு தந்தைக்கும் இரு தாய்மாருக்கும் பிறந்தவர்கள்.

இவர்கள் மூவரும் பிரதானமாகவும், சகோதரர்களின் குடும்பங்கள், பின்னர் உருவாகும் காதலிகள், ஒரு வாயாடிப் பையன், ஒரு கோமாளிப் போலீஸ், சட்ட விரோதமாக இறைச்சிக்காக மாடுகளை அடைக்கும் முரடன் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய பாத்திரங்களால் பின்னப்பட்ட கதை.


பிதாமகனுக்குப் பிறகு மீண்டும் இரு கதாநாயகர்கள்.
நந்தாவுக்குப் பிறகு மீண்டும் பாலாவுடன் யுவன் ஷங்கர் ராஜா.
வசனத்துக்கு எழுத்தாளர் ராமகிருஷ்ணன்.சிரிக்க வைக்கும் வசனங்களிலும் சில விஷயங்கள் வைக்கிறார்.

பாலா இந்தப் படம் வர முதல் சொன்னது போல, நகைச்சுவைக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ள கதை. இதுவரை வந்த பாலாவின் படங்களிலும் வடிவேலு, விவேக் வந்து சிரிக்க வைப்பதாகக் கதை இராது. மேலோட்டமான நகைச்சுவை இருக்கும். கருணாஸ் போன்றோரைத் தொட்டுக்கொள்வார் பாலா.

இதிலோ விஷாலும் ஆர்யாவும் கோமாளிக் கூத்தே நடத்திவிடுகிறார்கள். போதாக்குறைக்கு அந்த குண்டுப் பையனும், கோமாளி இன்ஸ்பெக்டரும் வேறு..
உச்சக்கட்ட காட்சிகளில் பாலா தன்னுடைய வழக்கமான வன்முறை வேட்டையாடும் வரை திரையரங்கு அதிர அதிர சிரிப்பு..

பாலாவின் படங்களில் வழமையாக நாம் பார்த்த, எதிர்பார்க்கக்கூடிய அத்தனை அம்சங்களுமே நிறைந்துள்ளன.

கொடூரமான, கொஞ்சம் சைக்கோத்தனமான, குரூரமான கதாநாயகன் (கதாநாயகர்கள்)..
(அழகான நாயகர்களை எல்லாம் என் இப்படி குரூபிகளாக மாற்றுகிறார் பாலா? ஏன் இப்படி ஒரு வெறி? சேது மொட்டை விக்ரமில் இருந்து இது தொடர்கிறதே.. இதற்கும் ஏதாவது பின்னணி இருக்குமோ??)
ஆனால் மினுக்கி வைத்த குத்துவிளக்குப் போல அழகான, அடக்கமான, கொஞ்சம் லூசுத் தனமான, பயந்த கதாநாயகி(கள்)..
சாதாரணமாக நாம் கவனிக்கத் தவறும் சமூகத்தின் சில அதிர்ச்சியான பக்கங்கள்..

(ஆனால் இதை யதார்த்தம் - இல்லை இதைத் தான் யதார்த்தம் என்று பலர் தூக்கிப் பிடிப்பதை நான் மறுக்கிறேன். நான் கடவுள் தந்த வன்முறை அதிர்ச்சி இன்னுமே இருக்கிறது)

முன்னைய தனது படங்களின் தாக்கம்.. பாத்திரப் படைப்புக்களிலும், சம்பவங்களிலும், ஏன் சண்டைக் காட்சிகளிலும் கூட..
அதிலும் கடைசிக் காட்சியை சேறு சகதியில்/புழுதியில் இரத்தமயமாக்குவதை எப்போது தான் பாலா விடப் போகிறார்?

அவன் - இவனில் என்னைப் பொறுத்தவரை அதிகமாக ஈர்த்துக்கொள்ளும் ஒருவர் ஹைனஸ் ஜி.எம்.குமார் தான்.

அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பந்தா காட்டுவது, அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்குவது, சிறு பிள்ளை போல தேம்புவது, இளையவர்களுடன் சேர்ந்து அடைக்கும் கும்மாளம், தன்னை ஊர்த் தலைவராக நிலை நிறுத்தும் காட்சிகள், இறுதியாக நிர்வாணமாக அடிவாங்கும்போது எங்கள் மனதில் ஏற்படுத்தும் பரிதாபம் என்று ஜி.எம்.குமார் தனது வாழ்நாளில் மிகச் சிறந்த பாத்திரத்தை ஏற்றுள்ளார்.

விஷால் அண்மையில் பேட்டி ஒன்றில் சொல்லி இருப்பதுபோல, இனி எப்போதுமே அவருக்கு நடிக்க வாய்ப்புள்ள இப்படியான ஒரு பாத்திரம் கிடைக்காது.
மாறு கண்ணும், கொஞ்சம் பெண் தன்மையும், நடிகனாகும் தீராத ஆசையும், போலீஸ் பெண்ணிடம் வழிந்து, உருகிக் காதலிப்பது, கோபம் வருகையில் அசுர பலம் என்று விஷால் கிடைக்கும் காட்சிகளில் எல்லாம் கலக்குகிறார்.
அதிலும் சூர்யாவுக்கு முன்னால் நவரசங்களையும் வெளிப்படுத்தும் இடத்தில் அனைவரையும் கலங்க வைத்துவிடுகிறார்.


மொத்தத்தில் பலம் + பெண் தன்மை கலந்த பிதாமகன் விக்ரம் 

ஆர்யா - கொஞ்சம் லூசுத் தனத்தைக் கலந்த பிதாமகன் சூர்யா பாத்திரம் 



ஆனால் பிதாமகன் விக்ரமின் செம்பட்டை முடியும் அண்மைக்கால ஆர்யா படங்களில் பார்க்கின்ற அதேவிதமான கலாய்த்தல்களும் தொடர்ச்சியாகப் பார்க்கையில் கொஞ்சம் அயர்ச்சி தான்.

லூசுத்தனமாக ஹெட்போனோடு கும்பிடுறேன் சாமி என்று அறிமுகமாகும் இடமும், கும்மாங்குத்து போடுவதும், விஷாலிடம் வம்பு சண்டை போட்டு வாங்கிக் கட்டுவதும் பளீர் கலகலப்பு.

அதிலும் அந்த ஆற்றங்கரையோரத்தில் மது அருந்தும் காட்சியில் ஆர்யா அடிக்கும் கூத்து வயிறு வலிக்க சிரிக்கவைக்கிறது.
அந்த குண்டுப் பையனும் இருப்பதால் இன்னும் பல இடங்கள் சிரிக்க முடிகிறது.

இன்னொரு ரகளையான சிரிப்பூ
ஊசி விழுங்கியதாக ஆர்யா அடிக்கும் கூத்து - வைத்தியசாலையில் பெண் வைத்தியர் போலீஸ் அதிகாரியைப் பார்த்து "இவன் ஊசியை விழுங்கல.. He is a liar" என்று சொல்வார்.
பதிலுக்கு போலீஸ் "என்னாது இவன் லாயரா? எப்போ படிச்சான் ? சொல்லவே இல்லை"

அந்த மொட்டைத்தலை + விபூதிப் பட்டை லூசு போலீஸ் ஒரு கோமாளி..
விஜய் டிவி யின் சூப்பர் சிங்கர் புகழ் ஆனந்த் வைத்யநாதனுக்கு ஒரு அப்பிராணிப் பாத்திரம்.
பாவமாக இருக்கிறது.. இரண்டு மனைவியரிடமும், மகன்மாரிடமும் தாறுமாறாகக் கெட்ட வார்த்தைகளால் திட்டு வாங்குகிறார். (இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே)

அம்பிகாவா அது? வாய் முழுக்க உவ்வே வார்த்தைகளும், புகையும் பீடியுமாக மேலும் ஒரு விளிம்பு நிலைப் பாத்திரம்.அம்பிகாவும் அவரது சக்களத்தியும் சண்டைபோடும் இடங்களில் தணிக்கைக் குழுவினர் தூங்கிவிட்டார்களோ?
இதுதான் யதார்த்தம் என்று பாலா நினைனைக்கிறாரா?

கதாநாயகிகள் - ம்ம்ம் அழகுப் பதுமைகள். நடிக்கப் பெரிதாக எதுவுமே இல்லை. லூசுத்தனமாக இரண்டு மோசமான பொறுக்கிகளிடம் காரணமே இல்லாமல் காதல் வயப்படுகிறார்கள்.

பாலாவின் ஆஸ்தான சிஷ்யர்களில் ஒருவரான சூர்யாவின் கௌரவ வேடம், பாலாவுக்கான விளம்பரமா அல்லது சூர்யாவுக்கான விளம்பரமா?
பார்க்கும் உங்களுக்கும் எங்களுக்கும் பட்டிமன்றத் தலைப்பாகக் கொடுக்கலாம்..

இசைத்தட்டிலும், வானொலியிலும் கேட்ட பாடல்கள் பல திரைப்படத்தில் இல்லை.
பின்னணி இசை படத்துக்கு ஓகே ரகம் தேவைக்கேற்றதை செய்துள்ளார் யுவன்.

ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன் .. சண்டைக் காட்சிகளிலும் கடைசிக் காட்சிகளிலும் லயிக்க செய்துள்ளார்.
அந்தக் கிராமப்புறத்தின் கள்வர் குடியிருப்பைக் காட்டியுள்ள விதமும் கொடுத்துள்ள ஒளிச் சேர்க்கையும் பிரமாதம்.


பாலா ஒரு யதார்த்த இயக்குனர் என்று பல்லக்குத் தூக்குபவர்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஓவர் வன்முறையும் பாத்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளும், கிராமப் புறக் காட்சிகளும், விளிம்புநிலை மாந்தரின் கவனிக்காத வாழ்க்கை முறையைப் படமாக்குவதும் தான் யதார்த்தப்படம் என்றால் இதுவும் இன்னொரு விதமான பேரரசு, வெங்கடேஷ், விஜய டி.ராஜேந்தர் ரக சினிமாத் தனமே.

சேது, நந்தா, பிதாமகன் மூன்றும் பாலாவின் இயக்கத்தில் அவரை நான் சிலாகித்து ரசித்து, ஏற்ற படங்கள்..
அதன் பின்னர் பாலா எங்கே போனார்?
எல்லாம் அதீதம்.. காதலில் புதுமை, உண்மை ஏதும் இன்மை..
மனித உணர்வுகளின் மேன்மையைக் காட்டும் பாத்திரங்களைப் படத்தில் உலவவிட்டும் அதையும் மீறியதாகத் தெரியும் வன்மம் என்று பாலா ஒரு குறித்த வட்டத்துக்குள்ளேயே உழல்கிறார்.

நேரடியாக நமது பாஷையில் கேட்பதாக இருந்தால் பாலா ஏதாவது ஒரு சம்பவத்தால் பலமாகப் பாதிக்கப்பட்ட சைக்கோவா?

ஆனால் 'அவன் - இவன்' எப்படி என்று பொதுவாகக் கேட்டால்..

என் பதில்.. பிடித்திருக்கிறது.
காரணம் அவ்வளவு தூரம் ரசித்து சிரித்தேன்..
& கடைசிக் காட்சிகளின் கொலைவெறி வழமையாக மசாலாப் படங்களில் பார்க்காததா?

விஷாலின் அரவாணித்தனமான தோற்றம், சில உருவகம் போன்ற காட்சியமைப்புக்கள்,சேற்று நிலக் கொலை, ஹைனஸ், புலி வேஷம் என்று சில விடயங்கள் என் என்ற கேள்வி எழாமல் இல்லை. இவை தற்செயலா அல்லது எனது நண்பன் ஒருத்தன் எனக்கு சொன்னது போல "மச்சான் நீ எல்லாம் சும்மா விமர்சனம் எழுதத் தான் சரி. பாலாட ஸ்டாண்டர்ட் எங்கேயோ போய்ட்டுது. இதில எல்லாம் அவர் ஏதாவது ஒரு மறைபொருள் செய்தி வச்சிருப்பார்..அதெல்லாம் உனக்கு விளங்காதடா" என்ற வகையில் பின் நவீனத்துவமா?

விளங்காதவை பின்நவீனத்துவம் என்றால் எனக்கு அவை புரியாமலேயே போகட்டும்.

பாலா தான் இயக்குனர் என்று நினைக்காதபடியால் என்றெல்லாம் இல்லை.
காரணம் 'நான் கடவுள்' படத்திலேயே யோசித்துவிட்டேன் எந்தவொரு எதிர்பார்ப்பும் வைகைக் கூடியவர் பாலா இல்லை என்று...
சரக்கு தீர்ந்தால் எந்தவொரு வியாபாரியும் கிடைப்பதை விற்க ஆரம்பித்து விடுகிறான்.

அவன் - இவன் - அவனவன் அவனவனாக இருந்தால் அதுவே நல்லது 

June 27, 2011

ஆன்டி பேர் டார்லிங் ????


இன்று காலை விடியலில் சொன்ன ஜோக்ஸ்....
எங்கேயாவது  கேட்டிருந்தாலோ, வாசித்திருந்தாலோ கூடப் பரவாயில்லை..
மீண்டும் சிரித்தாலும் ஒன்றும் நஷ்டம் இல்லை...



1.உங்க தாத்தாவா?

நீண்ட காலத்துக்கு முன்பு...
கஞ்சிபாயின் வகுப்பு ஆசிரியர்... "உங்க பொது அறிவை சோதிக்க ஒரு கஷ்டமான கேள்வி...
ஆழமான கடல்.. நீந்தித் தான் போகவேண்டும்..
அந்தக் கடல் நடுவில ஒரு மாமரம் அதுல இருக்கிற ருசியான மாங்காயை எப்படி பறிப்பாய்?

கஞ்சி பாய் : பறவை போல மாறி பறந்து போய் பறிப்பேன்.

ஆசிரியர் : பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவாரு?

கஞ்சி பாய் : அப்ப கடல் நடுவில மரம் உங்க தாத்தாவா வச்சாரு?

கஞ்சி பாய் என்னிடம் அடித்த பஞ்ச் -
ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிற அவருக்கே இவ்வளவுன்னா............, 10 பாடம் படிக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்......!


2. பத்து ரூபா 

கஞ்சிபாயின் மகன் : அப்பா, எனக்கு ஒரு பத்து ரூபா வேணும்..

கஞ்சி பாய் :எதுக்கு?

கஞ்சிபாயின் மகன் : சொக்லெட் வாங்கி சாப்பிட அப்பா..

கஞ்சி பாய் : இதப் பாரு மகனே.. நான் எல்லாம் அப்பாவின் காசி இப்பிடி அநியாயமாக்கினது இல்லை. அந்தக் காலத்திலேயே ஒவ்வொரு சதமா எண்ணி, எண்ணி சிக்கனமா செலவளிச்சென் தெரியுமா? அந்தக் காலத்திலேயே எனக்கு ஒவ்வொரு சதத்தின் அருமையும் தெரிஞ்சிருந்தது.. தெரியுமா?
(இப்படியே ஒரு அரை மணி நேரம் லெக்சர் அடித்து மகனின் காதால் ரத்தம் வர்றா மாதிரி செய்த பிறகு.....)

கஞ்சிபாயின் மகன் : சரிப்பா.. இவ்வளவு நீங்க சொல்ற நேரம் நான் அப்பிடிக் கேட்டது தப்புத் தான்.. எனக்கு ஒரு ஆயிரம் சதம் தாங்களேன் ;)



விடியலில் சொல்லாத, சொல்ல விரும்பாத ஆன்டி ஜோக் ;)

ஆன்டி பேர் டார்லிங் 



கஞ்சி பாயின் மகன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?

கஞ்சி பாயின் மனைவி : ஹன்சிகா டா...

கஞ்சி பாயின் மகன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேங்குதும்மா. அந்த ஆன்டியை "டார்லிங்"னு கூப்புடுறார்....



June 26, 2011

ஹைனசும்,அவனும் இவனும் - ஞாபக அலைகள்


ஊர் மக்களின் அன்புக்கும் பரிதாபத்துக்கும் பாத்திரமான தனியாளாக வாழும் ஜமீன்தார்.

ஊர்மக்களுக்குப் பெரிதாக நன்மைகள் செய்யாவிட்டாலும், கொஞ்சம் பந்தா காட்டி, (தன்னைத் தானே ஹைனஸ் - Highness என்று அழைத்துக்கொள்ளும் அளவுக்கு)கோமாளித்தனம் செய்தாலும் மக்கள் அவரைத் தம் தலைவராகவே ஏற்றுக்கொள்ளும் ஒரு நல்ல மனிதர்.

அவரை உயிராக நேசிக்கும் இரு இளைஞர்களுக்கும் அனைத்தையும் வழங்கி ஒரு God Father ஆக இருக்கிறார் அந்த 'ராஜா'.
அவரது எதிரிகள் அவர்களுக்கும், ஊருக்குமே எதிரிகளே.
போலீசார் கூடக் கோமாளிகள்.

மற்றவர்கள் அவரை ஏமாற்றி, சொத்துக்களை அபகரித்து தனியாளாக விட்டுச் சென்றாலும் அவர் காட்டில் அவரே ராஜா.
அந்த இரு கோமாளி இளைய அடியாட்களோடு தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்துவரும் தலைவருக்கும் அவரது இரக்கக் குணத்தாலேயே எதிரி உருவாகிறான்.

அந்தக் கொடூர எதிரியாலே, துரத்தி அடித்து, சேற்று நிலத்திலே நிர்வாணமாகப் படுகொலை செய்யப்படும் தங்கள் ராஜாவின் மரணம் கண்டு கொதிக்கும் அந்த இரு விசுவாச அடியாட்களும், கொலையாளியையும் சேர்த்தே எரிக்கிறார்கள்.

சில காட்சிகள் சில காட்சிகளின் உருவகம் சில விஷயங்களை ஞாபகப்படுத்துவதால் நாம் இருக்கும் நிலையில் மனதில் ஏற்படும் ஞாபக அலைகளால் இந்தக் கதை மனதுக்கு நெருக்கமாக வராமல், மனத்தைக் கொஞ்சமாவது உருக்காமல், பிடிக்காமல் போகுமா?

ஆனால் திரைப்படமாக......



பி.கு - நேற்றுப் பார்த்த அவன்-இவன் திரைப்படம் பற்றி நாளை பதிகிறேன்.

June 23, 2011

ரியோ & குங் பூ பன்டா - Rio & Kung Fu Panda 2


தந்தை எவ்வழி மகன் அவ்வழி என்பது இப்படியா? அவன் வெளியே எங்காவது ஷொப்பிங் போனால் அதிகமாகக் கேட்கும் பொருட்கள் புத்தகங்கள் - வாசிக்க, dvd , cd கள் - படம் பார்ப்பதற்கும் படிப்பதற்கும்.. இவற்றுக்குப் பிறகு தான் விளையாட்டுப் பொருட்கள்.

தொலைக்காட்சியில் பார்க்கும் விளம்பரங்கள், மொண்டசூரி நண்பர்களின் அரட்டைகள் மூலம் இப்போதெல்லாம் கார்ட்டூன்கள், தனக்கான ஆங்கிலப் படங்களைத் தேடிக் கொண்டுவந்து அது வெளியிடப்படும் நாளையும் சரியாகக் குறித்துக் கூட்டிப் போகுமாறு கோரிக்கையை வைத்துவிடுகிறான்.
அவன் கெஞ்சிக் கேட்கும் விதத்துக்கு மறுக்கவும் முடியாது, தாமதப்படுத்தவும் முடியாது.

என் மகன் ஹர்ஷுவுக்காக அண்மையில் அவனுடன் சென்று பார்த்த இரண்டு ஆங்கிலப் படங்கள் பற்றி..
ஆங்கிலப்படங்கள் பற்றிப் பதிவிடுவது இதுவே முதல் தடவையும் கூட..

ரியோ




முழு நீளக் கார்ட்டூன் திரைப்படம்.
பிரேசிலில் முதலில் வெளியிடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. பின்னர் அதன் வரவேற்பினால் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டதாம்.

பிரேசிலில் ரியோ டீ ஜெனிரோ காட்டுப் பகுதியில் பிறக்கும் அரியவகை நீல நிற மக்காவ் (blue macaw) பறவையொன்று அமெரிக்க மிருகக் காட்சிசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் தவறுதலாக விழுந்துவிட ஒரு பெண் லிண்டா அதை எடுத்து தன் செல்லப் பிராணியாக அல்லாமல், நண்பனாகவே வளர்க்க ஆரம்பிக்கிறாள்.

அது தான் படத்தின் ஹீரோவான ப்ளூ.

அரியவகைப் பறவையினம் ஒன்று அழிந்துவிடக் கூடாது என டூலியோஸ் என்னும் பறவை ஆராய்ச்சியாளர் ப்ளூவைத் தேடிவருகிறார்.
ப்ளூவை ரியோ டீ ஜெனிரோவிலுள்ள அதே இனப் பெண் பறவையுடன் சேர்ப்பதன் மூலம் அந்த இனத்தை அழியாமல் பாதுகாக்கலாமே என்று கூறி ப்ளுவைத் தன்னுடன் எடுத்துச் செல்ல டூலியோஸ் முனைந்தாலும், ப்ளூவுடன் தானும் வரவேண்டும் என லிண்டா அடம்பிடிக்க, மூவரும் பிரேசில் பயணமாகிறார்கள்.

ரியோ டீ ஜெனிரோவில் நீல நிற மக்காவ் பெண் பறவையைக் கண்ட மாத்திரத்தில் காதல் பிறந்து (லவ்வுனா நம்ம தமிழ்ப்படக் காதல் தோத்துப் போயிடும்)ப்ளூ காதல் வயப்பட்டுவிடுகிறார். அந்தப் பெண்பறவை ஜுவேல் ஒரு துணிச்சலான பறவை. சுதந்திரமாகக் காட்டிலேயே வாழ விரும்புவது.
ஆனால் அங்கே தான் வில்லன் என்டர்.

 அரிய பறவைகளைக் கடத்தி விற்பனை செய்யும் கும்பல் ஒன்றினால் (கொக்கட்டூ பறவை ஒன்றின் துணையினால்) பளுவும் ஜுவெல்லும் கடத்தப்பட, (அங்கேயும் சொந்த இனத்தாலேயே காட்டிக் கொடுப்பு ) இன்னும் சில நல்ல பறவைகளின் துணையினாலும் துணிச்சலான ஜுவேல்லின்முயற்சியாலும் தப்பிக்க முயற்சிக்கின்றன.

ஆரம்பத்தில் சிறு பறவையாக முதலாவது பறப்பு முயற்சியே தோல்வியாக முடிந்துவிட்டதாலும், லிண்டாவின் வீட்டில் செல்லமாக வளர்ந்ததாலும் பறக்க முயற்சி செய்யாமலேயே வளர்கிற ப்ளூவை எப்படியாவது பார்க்கவைக்க அதன் காதலி ஜுவேல் முயன்றாலும்.. ம்ஹூம்.. பயந்ததாக, முயற்சியே எடுக்காததாக ப்ளூ இருக்கிறது.

அந்த ப்ளூவின் பறப்பு முயற்சி வெற்றி பெற்றதா, ப்ளூவின் காதல் என்னாச்சு, கடத்தல் காரரிடம் இருந்து எப்படித் தப்புகிறார்கள், அடுத்த கட்டம் என்ன என்று பரபர விறுவிறுப்பாக சொல்லுகிறது ரியோ.

அதெல்லாம் சரி ரியோ என்றால் யாருடைய பெயர் என்று யோசிப்பீன்களே? ரியோ டீ ஜெனிரோவில் கதை நடப்பதால், அந்த இடத்தின் அழகுக்காக ரியோ என இயக்குனர் பெயர் வைத்தாராம்.

காதல், முயற்சி, அன்பு, நட்பு போன்றவை கார்ட்டூன் பாத்திரங்கள் மூலமாக அழகாக வெளிப்படுத்தப்படுவது அழகு.
ரியோ நகரின் அழகையும் சித்திரங்களாக வெளிப்படுத்துகிறார்.

லிண்டா - டூலியோஸ் காதல் உருவாகும் ரசனையான தருணங்களும், ப்ளூ- ஜுவேல் காதல் உருவாகையில் வரும் பாடலும், படத்தோடு பயணிக்கும் இசையும் எங்களுக்கானது என்றால்,
இடையிடையே வரும் சின்ன சின்ன காமெடிகள், கடத்தல்காரருக்கு முதலில் உதவும் சிறுபையன், அந்த நாய், சிறு பறவைகள், சிறு குரங்குக் கூட்டத்தின் அடாவடி என்று சிறுவரைக் குதூகலிக்க வைக்கும் பல அம்சங்களும் இருப்பதால் ஹர்ஷுவுக்கும் செம கொண்டாட்டம்.

படம் முடியும்போது பிரேசிலுக்கு ஒரு மினி சுற்றுலா போய்வந்த சந்தோஷக் களைப்பு.

தன் சொந்த மண்ணின் காதலை பல காட்சிகளிலும், இயற்கை, பறவை மீதான பாசத்தினூடாக வெளிப்படுத்தியுள்ள இயக்குனர் கார்லோஸ் சல்தானாவுக்கு (Carlos Saldanha) பாராட்டுக்களை தாராளமாக வெளிப்படுத்தலாம்.

இந்தப் படம் எவ்வ்வளவுக்கு ஹர்ஷுவின் மனதில் இடம் பிடித்தது என்று அண்மைய மிருகக் காட்சி சாலை சென்றபோது அறிந்துகொண்டேன்.
மக்காவ் பறவைகள் இருக்கும் பக்கம் போனவுடன் "அப்பா, ரியோ படத்தில் வந்த ப்ளூ" என்றான் படு குதூகலமாக..
----------------------------
குங் பூ பன்டா 2 


கடந்த வாரம் பார்த்தது குங் பூ பன்டா 2 .
நம்ம கேப்டனை வைத்து மொக்கைபோடும் குங்குமப்பூ போண்டா தான் இப்போ ஞாபகம் வருது.
மூன்றாண்டுகளுக்கு முன் வந்த பகுதி ஒன்றின் தொடர்ச்சி போலவே வந்துள்ளது இந்த இரண்டாம் பகுதி.

அதிலே குரல் கொடுத்துள்ளோர் தான் இதிலும்.
பிரபல ஹோலிவூட் - Hollywood  நடிக, நடிகையர் ஏஞ்செலினா ஜோலி, ஜாக்கி சான், டஸ்டின் ஹோப்மன், வான் டம், லூசி லியூ என்று பல பழகிய குரல்கள்..
பிரம்மாண்டமான காட்சியமைப்புக்களோடு பார்க்கும்போது பரவசம் தான். ஆனால் என்ன இலங்கையில் யில் பார்க்க முடியாதது கொஞ்சம் குறை தான்.

தமிழ் சினிமாக்களில் எமக்கு ரொம்பப் பழக்கப்பட்டதும், சீன மொழிமாற்றுப்படங்களிலும் அடிக்கடி பார்ப்பதுமான பழிவாங்கும் கதை.
இதில் கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து.

தாய்-தந்தையரைக் கொன்ற வெள்ளை மயில் அரசனையும் அவனது பலம் வாய்ந்த படையையும், தன் ஐந்து நண்பர்களுடன்- Furious Five சென்று போ - Po (குங் பூ பன்டா) ஜெயிப்பதை சுவைபட சொல்லியிருக்கிறார்கள்.

சீன அரண்மனைகள், அழகான இயற்கைக் காட்சிகள் அத்தனையையும் கார்ட்டூனாகக் கொண்டுவந்திருப்பதில் பிரம்மாண்டமும், நேர்த்தியும் அருமை.

ஆனால் எனக்கு முதலாவது பகுதியை விட இது கொஞ்சம் போரடித்தது. அதிக எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
ஆனால் ஹர்ஷுவுக்கு இது ஒரு பெரிய த்ரில்.

வழமையை விடக் குறைவான சிப்சும், சோடாவும், ஐஸ் க்ரீமும் அவனால் எடுக்கப்பட்டதைப் பார்த்தால் படம் ரொம்பப் பிடிச்சிருக்கு என்று தெரிந்தது.
அதை விட வீட்டுக்கு வந்து காலை உயர்த்தி ஊ,ஆ என்று விட்ட கராத்தே கிக் ஒன்று அவனை ஒரு மினி குங் பூ பன்டா ஆக்கிவிட்டது.
ஆனாலும் அந்தப் பெண்புலி தான் தனக்குக் கூடப் பிடித்ததாம் என்கிறான்.

மிருகக் காட்சிசாலைக்கு அடுத்தநாள் கூட்டிப் போனபோது அங்கே இல்லாத பன்டாவைக் கேட்டால் நான் எங்கே காட்டுவது?

June 21, 2011

வில்லங்கமான கதை - அப்பிடி & இப்படி


எச்சரிக்கை - வாசிக்கும்போதும், வாசித்து முடித்தபின்பும் அகிம்சையையே மனதில் கொள்ளுங்கள்..
யாரும் அதிரடியா,கொலைவெறியா ஆட்டோ,கீட்டோ, அரிவாள், பொல்லு என்று தேடிப் புறப்படக்கூடாது.. ஆமா..



ஒரு ஊரில அப்பிடி, இப்பிடின்னு ரெண்டு பேர் இருந்தாங்களாம்..
ஒரு நாள் அப்பிடி, இப்பிடியைப் பார்த்து "எப்பிடி இருக்கீங்க" என்று கேட்டார்.
அதுக்கு இப்பிடி "எப்பிடியோ இருக்கன்" என்று சொன்னார்.
அப்பிடி"இப்பிடி சொன்னா எப்பிடி? அப்பிடி இருக்கேன் இல்லை இப்பிடி இருக்கேன்னு இல்லையா சொல்லணும்" என்றார்.
உடனே இப்படிக்கு அப்படியொரு கோபம் வந்திட்டு.. "டே அப்பிடி, நான் எப்படி இருந்தா உனக்கென்ன" என்று கோபமாகக் கேட்டார்.
அதற்கு அப்படி "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை..சும்மா தான் எப்பிடி இருக்கீங்கன்னு கேட்டேன்" என்று இப்பிடியை சமாதானப்படுத்தினார்.
அப்பாடா, எப்படியோ அப்பிடியும் இப்பிடியும் மறுபடி நட்பாகிட்டாங்க..

அப்புறம் நீங்க எப்பிடி?


நண்பர் ஒருத்தர் அனுப்பிய கடி எஸ் எம் எஸ் இது..
காலையிலேயே விடியலில் பலரைக் கடித்து ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டது..
எப்பூடி? ;)


June 20, 2011

ஐந்து படங்கள், ஒரே பதிவு


நேரமின்மை காரணமாக சேர்த்து வைத்து இந்த இரு வாரங்களில் நேரம் கிடைத்த போதெல்லாம் pause, rewind, forward செய்து பார்த்து முடித்த சில +  திரையரங்கு சென்று பார்த்த சில திரைப்படங்களின் சுருக்கமான பார்வை....

குள்ள நரிக் கூட்டம் 


பெரிய பில்ட் அப்புகள், தேவையற்ற விஷயங்கள் அற்ற சுவாரஸ்யமான திரைக்கதை.
சாதாரண குடும்பத்தை சேர்ந்த வேலையற்ற இளைஞன் காதல் வயப்பட்டு பின் பொறுப்பானவனாக மாறிப் போலீஸ் வேலை தேடும் கதை.
சராசரிக் கதையாக இருந்தாலும் ரசனையாகக் கதை சொல்லும் விதமும் சின்ன சின்ன சுவாரஸ்யங்களும் ரசனை.
விஷ்ணு முதலாவது படமான பலே பாண்டியாவிலேயே ரசிக்க வைத்தவர். இந்தப் படத்திலும் துரு துரு என்று கலக்குகிறார்.

கதாநாயகி ரம்யா நம்பீசன் சட்டென்று மனதில் இடம் பிடித்துவிட்டார்.

சிறிது நேரமே வருகிற அப்புக்குட்டியும், கலகலக்க வைக்கிற சூரியும், விஷ்ணுவின் அண்ணனாக, அப்பாவாக வரும் நடிகர்களும் ரசிக்க வைத்துள்ளார்கள்.
புதிய ஒளிப்பதிவாளர் லக்‌ஷ்மணன், Red one ஐ மிஞ்சும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைக் கொண்ட ARRI D21 என்கிற கேமராவினை இந்தியாவிலேயே முதல் முறையாகப் பயன்படுத்தி குள்ள நரிக் கூட்டத்தைப் படம் பிடித்திருக்கிறார்.
பாடல்களில் விழிகளிலே அற்புதம்.
இயக்குனர் ஸ்ரீ பாலாஜிக்கு நல்ல வாய்ப்புக்கள் வருமிடத்தில் ஒரு கலக்கு கலக்குவார். பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.


ஈசன்


மிகத் தாமதமாகப் பார்த்த படம்.. சசிக்குமாரின் இயக்கத்திலே இதுவரை வந்த படங்களிலே வித்தியாசமான கதை +களம்.
நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல், கதையையும் பாத்த்திரங்களையும் பலமாக அமைத்து நகர்த்தியுள்ளார்.
திருப்பங்கள், எதிர்பாராத சம்பவங்கள் மூலம் ஒரு திருப்தியான thriller படம் பார்த்த மகிழ்ச்சி.
அமைச்சராக வருபவர், அவரது உதவியாளர்(நாடோடிகள் படத்திலும் ஏற்கெனவே பார்த்தேன்), சமுத்திரக்கனி, வைபவ் மற்றும் அந்த சின்னப் பையன்(தயாரிப்பாளர் + நடிகர் ஜெயப்பிரகாஷின் மகன்) ஆகியோரின் நடிப்பு மனதில் நிற்கிறது.
சமுதாயத்தின் ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கும் விதமும், அமைச்சர் தெய்வநாயகம், மகனின் பெயர் செழியன், மகனை நம்பித் தான் அரசியல் சாம்ராஜ்யம் என்னும் பல இடங்கள் எதையோ சுட்டுவது போல் இருக்கின்றன.
வியாபார சக்கரவர்த்தி ஹெக்டே விஜய் மல்லையாவை ஞாபகப்படுத்துகிறது.
பாடல்கள் தான் படத்தின் பலவீனமாக இருக்கவேண்டும். (ஜில்லா விட்டு பாடல் தவிர)

சசிக்குமாரின் இயக்கம் என்பதால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே விறுவிறுப்பையும் நேர்த்தியையும் எதிர்பார்த்தேன். ஆனாலும் 
திரையரங்கில் பார்த்திருக்கலாமே என்று நினைக்கவைத்த படம்.


எத்தன்


ஏமாற்றியே பிழைப்பு நடத்தும் எத்தன் காதலாலும் அப்பாவின் பாசத்தாலும் நல்லவனாகும் வழக்கமான கதை.
ஹீரோ விமல் கலகலப்பாக நடித்திருக்கிறார்.
அவரை சுற்றியே கதை நகர்கிறது.
ஆனாலும் கடன் கொடுத்து அலையும் இயக்குனர் சிங்கம்புலியும், தந்தையாக வருகிற ஜெயப்பிரகாஷும் என்னைக் கவர்ந்தார்கள்.
சில இடங்கள் சிரிக்க வைத்தாலும், பெரிதாக படம் கவரவில்லை.
சில வசனங்கள் மனதாரப் பாராட்டக் கூடியவை.
பசங்க, களவாணிக்குப் பிறகு அதே போன்ற விமலைப் பார்ப்பது சலிப்பு.
பாடல்கள் பெரிதாக எடுபடாதது எத்தனைக் கொஞ்சம் ஏமாற்றிவிட்டது.


பொன்னர் சங்கர்


பலர் பார்க்கவேண்டாம் என்று பயமுறுத்தினாலும் பார்த்தே ஆகவேண்டும் என்று இருந்தேன்.
காரணங்கள் மூன்று..
கலைஞரின் வசனங்கள் இந்தக் காலத்தில் எப்படி இருக்கின்றன எனப் பார்க்கும் ஆர்வம்.
தியாகராஜன் அள்ளி வீசிய பணத்தின் பிரம்மாண்டம்
பல விளம்பரங்களில் நான் ரசித்த திவ்யா பரமேஸ்வரன் எப்படி கதாநாயகியாக நடிக்கிறார் என்று பார்க்கும் ஆர்வம்.
திவ்யா பரமேஸ்வரன்

இரண்டு தடவை கொழும்பு சினிசிட்டிக்குப் போயும், நாங்கள் நால்வரே பொன்னர் சங்கர் பார்க்க வந்ததால் போட மாட்டேன் என்று விட்டார்கள்.
ஏமாற்றத்துடன் இருந்த எனக்கு பிரசாந்த், தந்தை தியாகராஜனுடன் (வீரகேசரி ஏற்பாட்டில்) இலங்கை வந்தபொழுது அவர்களுடனேயே சேர்ந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இப்படித் தான் சொதப்புவார்கள் என்று தெரிந்தே பார்த்ததால் அந்தளவு கடுப்பாகவில்லை.
அவ்வளவு பணத்தையும், இத்தனை நட்சத்திரங்களையும் வீணாக்கியது தான் அநியாயம்.

பிரசாந்த் இவ்வளவு காலம் திரையுலகில் இருந்தும் இப்படி ஒரு கற்சிலை மாதிரியே வந்து போவது தான் வெறுப்பேற்றுகிறது.
அவரைப் போலவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரியாத நாயகிகள்.. (நம் அபிமான திவ்யாவும் தான் :( )

வசனங்களில் விசேடம் இல்லை. பல காட்சிகளின் பிரம்மாண்டம் ரசிக்க வைக்கிறது.
பொன்னியின் செல்வன் இவர்களிடம் அகப்பட்டுவிடக் கூடாதே என்பது மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது.
தமிழக ஆட்சி மாறியதால் அது நடக்காது என்பது திருப்தி.


கண்டேன்


ஓசி டிக்கெட் என்பதால் பார்த்தால் நேர விரயம் மட்டுமே ஒரே பிரச்சினை என்று மனதைத் தேற்றிக் கொண்டு போன படம்..
பாடல்கள் ஏற்கெனவே பிடித்திருந்ததனால் படம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தாலும் போதும் என்று பார்த்தால், சந்தானம் இல்லாமல் படத்தை நினைத்தால் பயங்கரமாக இருந்திருக்கும்..

பல இடங்களில் சந்தானம் சிரிப்பு வெடிகளைத் தூவி இருக்கிறார்.
காதலில் நண்பன்னா மாமா வேலை பார்க்கணும், சர்க்கரைக்கட்டி இன்னைக்குக் கரைஞ்சிருவான்..,FRIENDSHIP நா தமிழில் பலி ஆடுன்னு அர்த்தமா?. ஜட்டி வாங்கக் காசு கேட்கும் இடம், இப்படி பல பல..
பேசாமல் சந்தானத்தையே ஹீரோவாகப் போட்டிருக்கலாம்.

சாந்தனு முதலாவது படத்தில் இருந்தே சொதப்பி வருகிறார். கதாநாயகியும் அவருக்கு எந்தவொரு படத்திலும் வாய்ப்பதாக இல்லை. ஆனால் இந்த நாயகி ரேஷ்மி கொஞ்சம் பார்க்கப் பரவாயில்லை )சில ஆடைகளில்,சில காட்சிகளில்)

பாடல் காட்சிகளும் நடனங்களும் சூப்பர். ரசிக்க வைத்துள்ளார் நடன இயக்குனர் ராபர்ட்.

ஆசிஷ் வித்யார்த்தி, விஜயகுமார் வீணடிக்கப்பட்டுள்ளார்கள்.

புதிய இயக்குனர் முகில் பிரபுதேவாவின் உதவியாளராம். பாவம்.
அடுத்த முறையாவது ஒழுங்காக முயற்சிக்கட்டும்.

ஹர்ஷுவுக்காக அவனுடன் சென்று பார்த்த ஆங்கிலப் படங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்..
ரியோ
குங் பூ பண்டா


-------------------------------



இத்தனை படங்களுடன் என் மனதைப் பாதித்த ஒரு பதிவையும் உங்களுடன் பகிர்கிறேன்..
மனதில் வலி ஏற்படுத்தும் சிறு சிறு விடயங்களையும் ஒரு சிலருடனாவது பகிர்ந்துகொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும்..

இந்தப் பதிவும் அப்படித் தான்.. 

படித்தால் இந்தப் பதிவினை எழுதியவனுக்காக மட்டுமல்லாமல், இந்த வலிகளை இன்று இலங்கையில் உணரும் பல ஆயிரக்கணக்கானவருக்காகவும் அழுவீர்கள்.
இந்தப் பதிவை வாசித்த கண்ணீர் காயாமல் நான் இட்ட பின்னூட்டம்.... 

வாசித்த பின் அழுதேன்.. :(

தந்தை என்ற உறவு எவ்வளவு முக்கியமானது என்று நான் தந்தையான பின்னர் உணர்ந்தேன்..
தந்தை இல்லாத நாட்கள் ஏழை ஏன் மகனும் சின வயதிலேயே உணர்ந்துவிட்டான்..
இன்று உங்கள் பதிவை வாசித்த பின்னர் தற்செயலாக நான் திரும்பாவிடில் அவனுக்கும் இதே நிலை தான் என்பதை வலியுடன் உணர்ந்தேன்.

உங்கள் அம்மாவுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்..
நீங்கள் ஒரு நல்லவனாக இன்று சமூகத்தில் உயர்ந்து உங்கள் அப்பாவை மட்டுமல்லாமல் அம்மாவையும் கௌரவப்படுத்தியுள்ளீர்கள்.
வாழ்க்கையை மேலும் வென்று உங்கள் அன்னைக்கு மேலும் பெருமையைச் சேருங்கள்.

என்னால் முடிந்தவரை இந்தப் பதிவை என் நண்பர்களுக்கும் நேயர்களுக்கும் கொண்டு சேர்த்துள்ளேன்.


June 17, 2011

நாங்கள் கையாலாகாதவர்கள்



நாங்கள் கையாலாகாதவர்கள் 



என்னால் முடியவில்லை..
எம்மால் முடியாது..
நாம் கையாலாகாதவர்கள்

இரண்டு வருடங்களுக்கு முன்னர்
ஜனவரி மாதத்தில் நாம்
என்ன செய்துகொண்டிருந்தோம்..
யார் யாருடன் மகிழ்ந்திருந்தோம்..
என்னென விஷயங்களில் இதயத்தைத் தொலைத்து
இனிமையான பொழுதுகளில் இருந்தோம்...
எமக்கு இப்போது
ஞாபமில்லை.

ஆனால் அவர்கள்????
ஒரு கையில் உயிரும்
இன்னொரு கையில்
அறுந்து தொங்கும் உடல் உறுப்புமாக
ஓடிக் கொண்டிருந்தார்களே..
நேற்று மீண்டும் அவர்கள்
காணொளிகளாக..

துண்டு துண்டாக முன்பு பார்த்த அத்தனையும்
மீண்டும் தொகுப்பாக..

குருதியும், குண்டுகள் பட்டுத்
தெறித்த உடல்களும்,கோரங்களும்,
ஒப்பாரி,அலறல்,சோகக் கூச்சல்களும்....
குரூரங்களைக் கலங்கிய கண்களுடன் மீண்டும் பார்த்தேன்..
இவை தான் எம் வரலாறு..
அடுத்த தலைமுறைக்கு
நாம் எடுத்துச் சொல்லப்போவது..
உலகுக்கே எடுத்துச் சொல்லி இரண்டு வருடங்களாக எதுவும் காணவில்லை;
இனியும் காண்போம் என்றும் நான் நம்பவில்லை

ஐ.நா அம்போ என்று விட்டு விட்டது
ஐயோ என்று நாம்
அலறினாலும், அம்மா என்று கதறினாலும்
யாரும் வரார்..
எமக்கு எல்லாம் இனி நாமே..
அரையாய் காலாய் எஞ்சிய அவர்களுக்கும்
நாம் முடிந்தால் எல்லாமாய் மாறலாம்..
அனுமதிக்கப்பட்டால்..



இன்று,
நாமெல்லோரும் இங்கே நாமாக நலமாக..
ஆனால் அவர்கள்?
எத்தனை பேர் அவர்களாக?
அவயவங்கள் இல்லாமல் எத்தனை பேர்?
ஆங்காங்கே அகதிகளாக எத்தனை பேர்?

ஆனால் நாம் மறக்கவில்லை.
எங்கள் குரல் வளைகள் இங்கே
பல விடயங்களில் சத்தம் வராத
ஊமைக் குழல்களாகவே இருக்கப் பழகிவிட்டன

விழிகள் அசைத்தாலே
விசாரிக்கப் படும் பூமியில்
குரல்கள் எழுப்பும் நிலையில்
அன்றும் நாம் இல்லை
இன்றும் நாம் இல்லை

எம்மால் முடிந்த இரக்கத்தை நாம் பட்டுக்கொண்டோம்
கோபத்தால் கொதித்துக்கொண்டோம்
கண்கள் குளமாகக் கரைந்தழுதோம்
ஏனென்றால் நாம் இயலாதவர்கள்

இறப்புக்களைப் பார்த்து
இரத்தம் பார்த்து அடுத்த நிமிடமே
அடுத்த நகர்வுக்குத் தயாராகிய அவர்களைப் போலவே,

விடுப்புக்களைக் கேட்டு அடுத்த நாளே
மனது மாறி எம்மை நாமே தேற்றும் ஒரு இயந்திர
வாழ்க்கை இங்கே எமக்கு வாடிக்கை...

அவர்களின் மரணங்கள்
மௌன சாட்சியாக மாறாதா என்று
நாமும் ஏங்கினாலும்
காட்சிகளையே ஏற்காத இடத்தில்,
சாட்சிகளாய் யார் மாறுவர்?

வேலிக்கு ஓணானாய்
சர்வதேசத்தின் அண்ணன்மாரும்
பெரிசுகளும்

குரல் எழுப்பும் ஒரு சிலரின்
குரல்கள் சத்தமாக ஒலித்தாலும்
எல்லா இடத்திலும் கேட்டாலும்
பதில்கள் இல்லை...
வேண்டிய பதில்களும்
வருவதாக இல்லை..

மரணங்கள் சத்தங்களோடு வந்தன..
நாங்கள் மனதுக்குள் அழுது
மெளனமாக இருந்தோம்..

இப்போது இந்த மௌனங்களும் பயங்கரமாகவே இருக்கின்றன..

நாங்கள் கையாலாகாதவர்கள்..
அதனால் தான் வார்த்தைகளோடும் 
வருத்தங்களோடும்
பேச்சுக்களோடும் பொருமல்களோடும் 
ஏக்கங்களோடும் எதிர்பார்ப்புக்களோடும்
பின் ஏமாற்றங்களோடும் மட்டும்
முடங்கிப்போனோம்...


**** இரண்டு வருடங்களாக இடையிடையே சிறு சிறு துண்டுகளாகப் பார்த்த கொடூர, சோகக் காணொளிகளை முழுமைத் தொகுப்பாக நேற்றிரவு பார்த்து, இன்று நாள் முழுவதும் தளம்பிய, ஒரு நிலையற்ற மனதுடன் புலம்பிக் கொட்டியது....

என்னால் இப்போது முடிந்தது இதுவே....
மன்னியுங்கள்....




June 16, 2011

கறார்க் காதலும் புறாப் பாடலும்


காதலியைப் புறா என்று வர்ணித்து அன்று முதல் வந்த பாடல்கள் எத்தனையோ..
எனக்கு மனதுக்குப் பிடித்த பல புறா பாடல்கள் மனதில் ரீங்காரமிடுகின்றன.

புதுக்கவிதை - வெள்ளைப் புறா 
ஹீரோ - புறா புறா பெண் புறா
எனக்கொரு மணிப்புறா ஜோடியொன்று இருந்தது
அன்பே சங்கீதா - சின்னப் புறா 
கண்ணால் பேசவா - சின்னப் புறாவே 
அண்ணாமலை - ஒரு பெண்புறா (மகளுக்கான பாடல் இது)
இதயக் கோயில் - கூட்டத்திலே கோயில் புறா 



அழகான, மனதுக்குப் பிடித்த பெண்களைப் புறாக்களாய் கற்பனை செய்வதிலும் ஒரு கிளர்வு தான். புறாக்கள் ஜோடியாக இருப்பதையும், புறாக்களின் அசைவுகளையும் பாருங்கள்.. பெண்களைப் போலவே இருக்கும்..அழாகாய் சிறகடித்து வானில் பறக்கும் புறாக்கள் மெல்லிதாய் நடைபோடும் மென்மையான பெண்களை மனசுக்குள் ஞாபகப்படுத்துவார்கள்.

அண்மையில் சேவற்கொடி திரைப்படத்தின் கம்பி மத்தாப்பூ பாடல் பற்றிய பதிவில் அதே படத்தின் 'புறாவாய் வந்து போகிறாய்' பாடல் பிடித்துள்ளது பற்றியும் சொல்லி இருந்தேன்.

வரிகள், சொற்பிரயோகங்களின் புதுமை மட்டுமல்லாமல், மனதை அப்படியே அள்ளிச் செல்லும் மெல்லிய இசையுடன் பாடகர் விஜய் பிரகாஷின் காதல் வழியும் குரலும் நெஞ்சைக் கெட்ட முதல் கணத்திலேயே கொள்ளை கொண்டுவிட்டது.

தமிழ்த் திரைப்பாடல்களை காலத்துக்குக் காலம் புதிய சொற்களை அறிமுகப்படுத்தி நவீனப்படுத்தி, இளமை இரத்தம் பாய்ச்சும் வைரமுத்து இந்த சேவற்கொடி பாடல்களில் ஒரு இளமை ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்.

கதறக் கதறக் காதல் செய்வது பற்றி கபிலன் சில மாதங்களுக்கு முன் பாடியது போய், கவிப்பேரரசு கறாராய்க் காதலிக்கும் காதலி பற்றிக் காட்டுகிறார்.


புறாவாய் வந்து போகிறாய்,கறாராய் காதல் செய்கிறாய்




ஒரு மேக இடுக்கில் மழையைப் போல ஒழிந்து கொள்கிறாய்
நான் மின்னல் போல தேடிப் பார்த்தும் பதுங்கிக் கொள்கிறாய்


மழை கால வானத்தைப் பார்க்கும் போதெல்லாம் இப்போது இந்த வரிகள் மனதுக்குள் மீண்டும் மீண்டும் டொல்பியில் ஒலிக்கின்றன.



காற்றோடு கதை பேசிக் காலைகளில் எத்தனை காதுகளையும், மனதுகளையும் குத்தகை எடுத்துக் கொள்ளை கொள்ளலாம் என்பதிலேயே குறியாக இருக்கும் எனக்கு (இது தானேய்யா சோறு போடுது எனக்கு) வைரமுத்துவின் இந்த வரிகளில் இருக்கும் நிஜம் பிடிக்கிறதில் தப்பில்லையே...

காற்று பொய் சொல்வது இல்லை இல்லை 

காற்று ஒரு மிகச் சிறந்த ஊடகம். ஊடக சுதந்திரம் இங்கே தான் தெளிவாக சொல்லப்படுகிறது.
சொல்வதை உள்ளபடி மற்றவருக்குக் கடத்துவது காற்று மட்டுமே.

வைரமுத்து வழமையாகத் தான் பாடல்களில் விளையாடும் வார்த்தை-ஓசை-சந்த விளையாட்டுக்களும் பாடல்களில் தாராளமாக உண்டு.

சாலை, சோலை, துண்டு, நண்டு என்று காதுகள் ரசிக்கின்றன.


உன்னை எண்ணி எண்ணி, ஜீவன் உலரும் போதும்
சின்ன மரணம் தோன்றத் துன்பம் கொல்லும். 

காதல் மரண வேதனை தருவது என்று கவிஞர் சொல்லக் கேட்டும் உள்ளோம், காதல் அனுபம் உள்ளவர்கள் கொஞ்சம் கண்டுணர்ந்தும் இருப்போம். ஆனால் கவிஞர் இங்கே 'சின்ன மரணம்' என்று சொல்வது அந்த வழியில் உயிர் போகவில்லை என்பதைத் தான்.. (கிட்டத்தட்ட மரணம் என்பதுவோ?)

அடுத்த வரிகள் அது ஏன் சின்ன மரணமாக அமைகின்றது என்பதை மேலும் விளக்குகின்றன..

நீயும் என்னைப் போலத் துடித்த துடிப்பைக் கேட்டு,
நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் இன்பம் கொள்ளும் 

காதல் எப்படியும் சுயநலத்தையும், மற்றவர்களின் வலிகளை நாம் உணர்ந்து கொள்வதையும் மட்டுமன்றி, மற்றவர்களின் வலிகளில் நாம் இன்பம் காணும் ஒரு சிறு சைக்கோத்தனமும் உருவாகிறது என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்.
காதலியின் துடிப்பில் இன்பம் காணும் காதலன்.. காரணம் தன் மீதான அவள் காதல்..

என் துன்பம் கொண்டாடும் ரசிகை நீயா..
துன்பம் கொண்டாடும் ரசிகை.. என்ன ஒரு ஹைக்கூத் தனமான காதலி பற்றிய வர்ணனை.

பக்தன் தேடி தேடி,நிதம் அலையும் போதும்
கடவுள் நேரில் வந்து நின்றதும் இல்லை 

நம்மைப் போலவே கடவுளை நம்பாத கவிஞரும் காணும் வரை கடவுள் இல்லை என்கிறாரோ? ;)
ஆனால் காதலுடன் கடவுளைக் கவிதையில் கொண்டுவருவதால் கடவுள் மறுப்பை விடக் காதல் விருப்புத் தான் தெரிகிறது.
காதலிக்கு முன் கடவுள் வந்தாலும் பக்தன் நாஸ்திகன் ஆகிவிடுகிறான்... (சொன்னது நானே தானுங்க)

பாடகர் - விஜய் பிரகாஷ் 
பாடலாசிரியர் - வைரமுத்து
இசை - சத்யா
திரைப்படம் - சேவற்கொடி


புறாவாய் வந்து போகிறாய்,கறாராய் காதல் செய்கிறாய்
ஒரு மேக இடுக்கில் மழையைப் போல ஒழிந்து கொள்கிறாய்
நான் மின்னல் போல தேடிப் பார்த்தும் பதுங்கிக் கொள்கிறாய்
இன்றே தான் மண்ணில் வந்தாய்.. 
அன்பே உன்னை.. கண்டேனடி, ஆசை வலி.. கொண்டேனடி..




உன்னைத் தேடாத சாலை இல்லை
தேடி ஓடாத சோலை இல்லை
காற்று பொய் சொல்வது இல்லை இல்லை 
காதில் என் காதில் தகவல் இல்லை 




உன்னை எண்ணி எண்ணி, ஜீவன் உலரும் போதும்
சின்ன மரணம் தோன்றத் துன்பம் கொல்லும். 
நீயும் என்னைப் போலத் துடித்த துடிப்பைக் கேட்டு,
நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் இன்பம் கொள்ளும் 
என் பூவே உனக்குப் புன்னகையா,
என் துன்பம் கொண்டாடும் ரசிகை நீயா..






நீ இல்லையேல் சூறாவளி, 
நீ வந்ததால் தீபாவளி..
புறாவாய் வந்து போகிறாய்,கறாராய் காதல் செய்கிறாய்




நீயும் என்போல ஆசை கொண்டும்,
நெஞ்சை துண்டாக தூக்கி வைத்தாய்..
நானும் நண்டாக ஊர்ந்து வந்து,
நெஞ்சைத் துண்டாக தூக்கி சென்றேன்




பக்தன் தேடி தேடி,நிதம் அலையும் போதும்
கடவுள் நேரில் வந்து நின்றதும் இல்லை 
உன்னைத் தேடி தேடி, இன்று கண்டு கொண்டேன்
உண்மைக் காதல் போல கடவுள் இல்லை 
உன் கண்ணில் எனது கண்மணியா,
என் வாழ்வின் மறுபாதி நீயே நீயா.. 


நீ இல்லையேல் சூறாவளி, 
நீ வந்ததால் தீபாவளி..
புறாவாய் வந்து போகிறாய்,கறாராய் காதல் செய்கிறாய்

பாடலைக் கேட்டு அனுபவிக்க....


மதன் கார்க்கி எழுதிய 180 திரைப்படப் பாடல்..
நீ கோரினால்
வானம் மாறாதா! - தினம்
தீராமலே
மேகம் தூறாதா!


மனத்தைக் கவரும் மற்றொரு பாடல்.. வரிகளும் இசையும் கேட்கும்போதெல்லாம் மனதை அள்ளியெடுத்து ஆகாயத்தில் மிதக்கச் செய்துவிடுகிறது.
ட்விட்டரில் மதன் இதைப் பார்த்தால் என் சார்பில் உங்களுக்கு நீங்களே கை கொடுத்துக் கொள்ளுங்கள்.

வரிகளை ஆழ்ந்து ரசிக்க மதன் கார்க்கியின் தளம்...

தந்தையாரின் கற்பனையுடன் மகனின் நவீன போட்டி ரசிக்க வைக்கிறது.

தந்தையாரின் தென் மேற்குப் பருவக்காற்றுப் பாடல்களும் மனதை சொக்க வைப்பன..

யேடி கள்ளச்சி மட்டுமல்ல.. அதைவிட கள்ளிக்காட்டில் பிறந்த தாயே இப்போது தினம் இரவுகளில் என் தாலாட்டு..


June 13, 2011

மீண்டும்??? அம்மையாரின் அதிரடியும் இலங்கையும் இந்தியாவும்


இலங்கை - இந்தியா அண்மைக்காலத்தில் சேர்ந்தும் பிரிந்தும், வெளிப்படையாகவும் ரகசியமாகவும் நடத்திவரும் அரசியல் நாடகங்கள் பெரிய பெரிய ராஜதந்திரிகளுக்கே குழப்பம் தரக்கூடியவை.

இந்த உறவுகளுக்கான மிக நெருக்கமான அடிப்படை தமிழும் தமிழரும் என்பது அனைவருக்குமே வெளிப்படை.

காலாகாலத்துக்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இருந்து வந்த முரண்பட்ட, சில இடங்களில் முட்டிக்கொண்ட உறவுகளில் கடந்த ஆறு வருடத்தில் முக்கியமான மாற்றங்களும், நம்பமுடியாத அலைவரிசைக் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்திய மத்திய அரசை காங்கிரசும், இலங்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஆண்டுவரும் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் பெரிதாக எந்தவொரு விஷயத்திலும் நேரடியாக அதிருப்திப்பட்டதோ மோதுண்டதோ கிடையாது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், தமிழக மீனவர் மீதான துப்பாக்கிப் பிரயோகங்கள், யுத்தத்தின் கடைசிக் காலகட்டத்தில் இடம்பெற்ற மனித அவலங்கள் இப்படி எந்த விஷயத்திலும் இந்த இரு அரசுகளும் ஒன்றையொன்று பகைத்தது கிடையாது.

இருநாடுகளிலும் ஒன்றையொன்று எதிர்த்து ஊடக, பொதுஜன, மனித உரிமைக் குரல்கள் எழுந்தும் அரசுகள் நட்பு பாராட்டி அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் நடந்துகொண்டமை சர்வதேசத்துக்கே ஒரு வித்தியாசமான அரசியல் பாடம்.

யார் உத்தரவை யார் கேட்கிறார்கள் , யாருக்கு யார் பயப்படுகிறார் என்றும் ஒரு குழப்பம்.. இந்தியா தான் வல்லரசாக இருந்தும் இலங்கை தன் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி இந்தியாவைத் தன் சொல்லைக் கேட்கவைக்கிறதோ என்ற சந்தேகம் இன்றுவரை உள்ளது.

கலைஞர் கருணாநிதி இந்த சிக்கலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதலைமைச்சராக இருந்தது தமிழரின் (குறிப்பாக ஈழத் தமிழரின்) துரதிர்ஷ்டம் என்று நாம் நினைத்திருந்தாலும் மறுபக்கம் பார்த்தல் கருணாநிதி கூட சிலவேளைகளில் துரதிர்ஷ்டசாலி தான். அவர் சிலவேளைகளில் மனம் வைத்து ஈழத் தமிழரின் பிரச்சினையில் தலையிட, இந்திய மத்திய அரசைத் தலையிட அழுத்தம் கொடுக்க வைக்க எண்ணியிருந்தாலும் கூட இந்திய அரசு சிலவேளை தயங்கி இருக்கலாம்.

தலையிட என்ன, மூச்சு விடக் கூட முடிந்திராது.

இந்தியாவுக்கு நேரடியாக அக்கறையில்லாத முள்ளிவாய்க்கால் முடிவு யுத்தத்தில் மட்டுமல்ல, தமிழக மீனவர் பிரச்சினையிலும் இந்தியா இலங்கையை வேண்டிக் கேட்டதே தவிர தடுத்து நிறுத்தவுமில்லை;தட்டிக் கேட்கவுமில்லை.

ஆனாலும் இப்போது தமிழக ஆட்சிமாற்றமும் ஜெயலலிதாவின் அண்மைய அதிரடி ஸ்டன்ட்களும் இந்திய அரசி ஏதாவது செய்யவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

இப்போதும் பாருங்கள்.. அவசர அவசரமாக அனுப்பப்பட்டுள்ள நிருபமா ராவ் மற்றும் இதர இருவரும் இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கக் கூடியவர்களல்லர். இலங்கை ஜனாதிபதியுடன் சிரித்த முகத்துடன் இவர்கள் நிற்கும் புகைப்படங்களையும், போலீஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானமாகத் தெரிவித்த செய்திகளையும் நேற்றைய பத்திரிகைகளில் நாம் பார்த்திருப்போம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கான ஆலோசகர் ஷிவ் ஷங்கர் மேனன் நிரந்தரத் தீர்வுக்காக இலங்கை அரசை இந்தியா வலியுறுத்துவதாக சொல்லியபோதும் கூட, பிடிகொடுக்காமலேயே நாடாளுமன்றக் குழு அமைத்துப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதாக இலங்கை சொல்லியிருப்பதானது 'எங்கள் விஷயத்தை நாமே பார்த்துக்கொள்கிறோம்' என்று சொல்வது போல இல்லை?

இதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடனடியாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இந்தியத் தூதுக் குழுவுடன் பேசிய பிறகு) இது பற்றி "பயனில்லாதது+ காலம் கடத்தும் ஒரு செயல்" என்று சொல்லியுள்ளது.

தமிழக முதலமைச்சர் சட்டசபையில் அதிரடியாக நிறைவேற்றிய தீர்மானங்கள் இந்திய மத்திய அரசை சிக்கலுக்கு உட்படுத்துமே தவிர, சர்வதேசரீதியில் தாக்கத்தையோ, இலங்கையின் மீது பெரிய அழுத்தங்களையோ தராது என்பது உறுதி.

இலங்கை மீதான பொருளாதாரத் தடை என்பது நிச்சயம் ஒரு பெரிய விஷயம் தான். ஆனால் இவ்வளவு காலம் இலங்கையை சிறிதளவாவது கண்டிக்க முன்வராத இந்தியா இதைப் பற்றி சிந்திக்கவாவது செய்யும் என்று யாராவது நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் இருக்க முடியாது.

கருணாநிதி செய்யாத விஷயங்களைத் தான் செய்வதாக ஜெயலலிதா காட்டுவதற்கு இந்தத் தீர்மானங்களும் அறிக்கைகளும் பயன்படும். எனினும் தமிழர்களாகிய எமக்கு ஞாபக மறதி என்ற ஒரு விஷயம் இருப்பதை மிக சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர் இந்த அரசியல்வாதிகள் தான்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது தொலைநகல் அனுப்பும் போராட்டம் நடத்தியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அந்த நேரத்தில் இப்போது இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று கோரித் தீர்மானம் நிறைவேற்றியுள்ள இதே ஜெயலலிதா சொன்னது "யுத்தம் என்றால் உயிர்ப்பலிகள் சகஜம் தானே. புலிகளைத் தான் இலங்கை ராணுவம் கொல்கிறது"

இதையெல்லாம் எம்மில் சிலர் இன்னும் மறக்கவில்லை என்பதைத் தான் இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

யார் குற்றியும் அரிசி வந்தால் சரி என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால் எப்போது எவர் குற்றினாலும் அரிசி எமக்குக் கிடைக்காது.. மாறாக உமி தான் வரப் போகிறது போலும்..

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தியத் தூதுக் குழு அரசுடன் பேசுகையிலேயே நேரடியாக ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் ஒரு பக்கம்; அமைச்சர்கள் சில பேர் சொன்ன "சர்வதேச அழுத்தங்களை நாம் ஏற்க மாட்டோம்; உள்நாட்டுப் பிரச்சினை இது; அனைத்துத் தரப்போடும் பேசித் தீர்க்கப்படும்-மூன்றாம் தரப்புத் தேவையில்லை " கருத்துக்களையும் கவனிக்க வேண்டும்.

ஆனால் வழமையாக இந்தியா என்ற பேச்சு வந்தாலே துள்ளிக் குதிக்கும் சில அமைச்சர்கள் அமைதியாக இருப்பது தான் சிறு ஆச்சரியமான விஷயம். ஒரு விதமான இருபக்க அண்டர்ஸ்டாண்டிங்கோ?

அடுத்து வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையைத் தனிமைப்படுத்தவும் , பொருளாதாரத் தடை விதிக்கவும் கோருவோர் (ஜெயலலிதா உட்பட) ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். பொருளாதாரத் தடை விதித்தால் என்ன, தள்ளிவைத்தால் என்ன தண்டனை இலங்கைக்கு மட்டுமா? அடிவயிற்றில் அடி விழப்போவது பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் வாழும் தமிழருக்கும் தானே?

இனி என்ன இன்று ஜெயலலிதா அம்மையார் மனோகன் சிங்குடன் என்ன பேசுவார் என்று நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.. இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியும் பேசப் போகிறாராம். இந்த நடவடிக்கைகள் பற்றி மகிந்த அரசு கொஞ்சம் அலட்டிக்கொள்ளாது..
காரணம் சிம்பிளானது..

ஜெனீவாவிலேயே முதல் சுற்றில் தப்பிப் பிழைத்துள்ள இலங்கை எப்போதும் சேராத இந்தியாவையும் சீனவையுமே தன விவகாரத்தில் சேர்த்து வைத்து ரஷ்யாவையும் கூட்டுக்குள்ளே கொண்டு வந்து உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியதைப் போல, ஜெயலலிதா கொண்டுவரும் எந்தவொரு சிக்கலையும் மன்மோகன் சிங்கை வைத்து முறியடிக்கலாம் என்று இலங்கைக்குத் தெரியும்.

ஜெயா அம்மையார் விரும்பினால் இந்த அழுத்தங்களை வைத்து ஏற்கெனவே ஊழல், தோல்வி, புலம்பெயர் ஈழத் தமிழர் எதிர்ப்பால் சுருண்டு போயுள்ள கருணாநிதியை மேலும் சுருட்டி, இந்திய மத்திய அரசின் கூட்டணியில் இருந்தும் அவரைக் கழற்றிவிடும் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் அவ்வளவே.

சர்வதேச ரீதியில் இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுப்போர் இப்போது முக்கியமாகக் கவனத்தில் எடுக்கவேண்டிய விஷயங்கள்...

இலங்கையைத் தனிமைப்படுத்துவதை, பொருளாதாரத் தடை விதிப்பதை விட முதலில் மக்களை மீளக் குடியமர்த்துவதைத் துரித்தப்படுத்த அழுத்தம் கொடுக்கவேண்டும்.(தமிழக அரசுத் தீர்மானத்தில் இதுவும் குறிப்பிடப்பட்டது)
யுத்தக் குற்றவாளிகளைத் தண்டிப்பது வேறு முழு இலங்கையையே தண்டிப்பது வேறு என்று விபரம் புரியவேண்டும்

இந்தியாவின் அழுத்தம் தமிழ்பேசும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமைவதை உறுதிப்படுத்தவேண்டும்.

இலங்கையின் அரசியற்பிரச்சினைகளுக்கு 13வது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு என்று வெறும் பேச்சளவில் சொல்வது போல இருக்காமல் அரசு அதை உறுதிப்படுத்துவதை மேலும் உறுதிப்படுத்தல்.

எது எப்படி இருந்தாலும் நான் எந்த எதிர்பார்ப்போடும் இருக்கப்போவதில்லை.. எப்போதும் போலவே..



June 10, 2011

இலங்கை கிரிக்கெட் - உருப்பட்ட மாதிரித் தான்..


இலங்கை கிரிக்கெட்டுக்கு ஆரம்பித்த ஏழரை சனி இப்போது உச்சத்தில் நிற்கிறது.

உலகக் கிண்ண இறுதி வரை வந்த திறமையான, உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக அனைவரும் கணித்த இலங்கை அணிக்கு ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி இரவு ஏழு மணிக்குப் பிறகு தலையில் ஏறிக்கொண்ட உச்ச சனி இன்னும் இறங்குவதாக இல்லை.

உலகக் கிண்ண இறுதிப் போட்டித் தோல்வி...

இந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன?



இது ஒரு தோல்வி அவ்வளவு தான். பலர் பல விதமாக சந்தேகப்பட்டதும் இன்னமும் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பதும் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தும் என்று இருந்த அசாத்திய நம்பிக்கை வீணாகப் போனதால் தான் என்று நான் நினைக்கிறேன்.

அது ஒரு அழகிய கனாக்காலம்.. 


உலகக் கிண்ணத் தோல்வியுடன் அடுத்து சங்கக்கார தலைமைப்பதவியிலிருந்து விலகல், தேர்வுக்குழு விலகல் என்று சூடு விடாமல் பரபரப்புக் கிளம்பிக் கொண்டே இருந்தது.

விலகல் செய்திகள் வரவர சந்தேக ஊகங்கள், ஐயக் கேள்விகளும் வந்துகொண்டே இருந்தன.
சங்கா, மஹேல தெளிவுபடுத்திப் பேட்டி கொடுத்தாலும் உட்கார்ந்த இடத்திலிருந்து உலகை அளப்போர் விட்டார்களா?


சங்கா, இலங்கை... டில்ஷான்.. என்ன? ஏன்?



அந்த சந்தேகங்கள் ஆதாரம் அற்று வெறும் புரளி என்று உணர்ந்து கொள்ளும் முன்பாகவே அடுத்த பரபரப்புக் கிளம்பியது ஹஷான் திலகரத்னவிடமிருந்து..
போட்டி நிர்ணயம், கிரிக்கெட் சூதாட்டம் இலங்கை கிரிக்கெட்டுக்குப் புதுசில்லை என்று சொன்னவர் இலங்கையின் எல்லாக் கிரிக்கெட் தரப்பிடமிருந்தும் எதிர்ப்பை எதிர்கொண்டார்.

ஆனால் இன்று வரை ஆதாரங்களையோ, குற்றவாளிகள் என்று அவர் குறிப்பிட எண்ணியோரையோ ஹஷான் வெளியிடவில்லை என்பது அவர் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அடுத்து லசித் மாலிங்க விவகாரம். IPL போட்டிகளில் விளையாடும் நேரம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை மாலிங்க அறிவிக்க கிரிக்கெட் உலகமே இரண்டு பட்டு நின்றது எல்லாம் இப்போது எங்களுக்கு மறந்துபோனது.

மாலிங்க இப்போது இலங்கைக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாட மீண்டும் அணிக்குத் திரும்பிவிட்டார், IPL முடிந்துவிட்டது தானே.
இத்தோடு நின்றால் பரவாயில்லை..

உபுல் தரங்க உலகக்கிண்ணப் போட்டிகளின்போது ஊக்க மருந்து பாவித்த விவகாரம் இப்போது அவரை இடைக்காலத்துக்கு அணியிலிருந்து நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தும் அளவுக்குப் போயுள்ளது.

போதாக்குறைக்குப் புதிய தலைவர் டில்ஷானின் காயமும் சேர்ந்து ஏற்கெனவே பலவீனப்பட்டுப் போயுள்ள இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு மேலதிகமாக ஆரம்பத் துடுப்பாட்டமும் கிழிந்து தொங்கும் அளவுக்குப் போயுள்ளது.

டில்ஷான் இரண்டாவது போட்டியில் காயப்பட்டுவிட்டார் என்று தெரிந்ததுமே அடுத்த நிமிடமே "சனத் ஜெயசூரிய மீண்டும் அணிக்குள் வருவார் பாருங்கள்" என்ற பேச்சுக்கள் பரவலாக உலவ ஆரம்பித்தது.
மீண்டுமா? அவ்வ்வ்வவ் 


42 வயதாகப் போகிற ஒருவரை, ஒன்றரை வருட காலம் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் ஆடாத ஒருவரை, தேர்வாளர்கள் இந்த வயதில் அணிக்குள் கொண்டு வருவது எத்தனை நியாயம் என்று எனக்குப் புரியவில்லை.

அதுவும் அணிக்குள் அவர் அறிவிக்கப்பட்டு இருபத்துநான்கு மணிநேரத்துக்குள் முதலாவது ஒரு நாள் போட்டியுடன் தான் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக சனத் ஜெயசூரிய அறிவிக்கிறார்.
இது இவரது தெரிவுக்கான காரணத்தை மறைமுகமாக சொல்வதாகவே அமைகிறது.

எப்பிடியெல்லாம் ஐடியா பண்ணுறாங்க பாருங்க..

இலங்கைக்காகப் பல சாதனை படைத்த வீரருக்கு விடைபெறும் நேரத்தில் உரிய கௌரவம் அளித்து, அவர் தானாக விடைபெறும் வாய்ப்பை வழங்கத் தான் வேண்டும்; ஆனால் அது சனத் தான் உச்சத்தில் இருக்கும்போதே அந்த முடிவை எடுத்து இளையவர்களுக்கு விளையாடும் வாய்ப்பை வழங்கி இருந்தால்..

இப்போதும் தனக்கு இடம் வேண்டும் என்று இளைய வீரர்களின் இடத்தைத் துண்டு போட்டுப் பறிக்கப் பார்க்கும் அரசியல்வாதி ஜெயசூரியவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படக்கூடாது.

முன்பு இலங்கையின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர், சகலதுறை வீரர், match winner ,   சாதனையாளர்.. சிறந்த அணித் தலைவர்களில் ஒருவராக நிரூபித்தவர்.. அதெல்லாம் சரி. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருக்கிறதல்லவா.
நாடாளுமன்றத்தில் கௌரவ.சனத் ஜெயசூரிய - அருகில் நாமல் ராஜபக்ச..
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. 
இப்பிடியே இருக்கலாமே.. யாருக்கும் தொல்லை இல்லை.


இப்போது சனத் எந்தத் திறமையாலும் அணிக்குள் வரவில்லை. தனியே அரசியல் அழுத்தங்களால் மட்டுமே அணிக்குள் வந்துள்ளார். அரவிந்த டீ சில்வா தேர்வுக் குழுவின் தலைவராக இருக்கும் அவரை MP ஜெயசூரியவினாலோ அல்லது ஜனாதிபதியினாலோ கூட யாரும் பின் பக்க வழியில் அணியில் நுழைய முடியவில்லை.

இப்போது யார் வேண்டுமானாலும் அணியில் எப்படியும் வரலாம்.. எப்படியும் அணியில் இணையலாம் என்ற நிலை.

டெஸ்ட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.. இலங்கையில் தற்போதுள்ள மிகச் சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளர் குலசேகர அணியில் இல்லை.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நாள் அணியில் உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை சார்பாகப் பிரகாசிக்கத் தவறிய மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் மூவரும் வெளியேற்றப்பட்டுள்ளமை சந்தோசம்.

திலான் சமரவீர, சாமர சில்வா (இவ்விருவருக்கும் இனி வாய்ப்புக் கிட்டாது - தேர்தலில் நின்று நாடாளுமன்ற உறுப்பினராகினால் ஒழிய), சாமர கப்புகெதர ஆகியோரை வெளியே அனுப்பியுள்ளார்கள்.

ஆனால் உள்ளே வந்தவர்களில் தினேஷ் சந்திமால், ஜீவன் மென்டிஸ் ஆகியோரும் முழுத் தகுதியுள்ளவர்கள்.
புதியவரான 23 வயதான டிமுத் கருணாரத்னவும் நிச்சயம் அணிக்குள் வரவேண்டியவரே. இலங்கை A அணிக்காகவும் அண்மைக்காலத்தில் அபாரமாக ஆடி இருக்கிறார்.

ஆனால் திலின கண்டம்பி? முதல் பத்துப் பேரில் இல்லை..
இரண்டு சதங்கள் பெற்றிருந்தாலும் உப தலைவராக அவரை அறிவித்திருப்பது? அண்மைக்காலத்தில் தேசிய அணியில் விளையாடிய போதெல்லாம் சொதப்பியவர் இவர்.

அணியில் நிரந்தர இடம் கிடைப்பது உறுதியற்ற நிலையில், என்ன அடிப்படையில் இவருக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் உள்ளது.
உப தலைவராக அறிவிக்கப்படக்கூடிய அஞ்சேலோ மத்தியூசுக்கு இன்னும் பூரண உடற்தகுதி இல்லை என்பதால் தற்காலிகத் தெரிவா?


கீழே தரப்பட்டுள்ள பெறுபேறுகளைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும்.







கண்டம்பியை விட சிறப்பாக விளையாடி வரும், சனத் ஜயசூரியவை விட உள்ளூர்ர்ப் போட்டிகளில் ஆரம்ப வீரராகக் கலக்கி வரும் மஹேல உடவத்த, ரோஷேன் சில்வா, மலிந்த வர்ணபுர, மிலிந்த சிறிவர்த்தன ஆகியோருக்கோ, இல்லாவிடின் இலங்கை டெஸ்ட் அணியுடன் இங்கிலாந்தில் இருக்கும் கௌஷால் சில்வா, லஹிரு திரிமன்ன ஆகியோரை அணியில் தெரிவு செய்திருந்தால் எதிர்காலத்துக்கான முதலீடாக இருந்திருக்கும்.

புஷ்பகுமார, சச்சித் பத்திரன, சச்சித்ர சேனநாயக்க ஆகியோரும் தொடர்ச்சியாக சிறப்பாகப் பிரகாசித்தாலும், சுழல்பந்துவீச்சாளர்கள் தானே.. இம்முறையும் ரண்டீவும் , மென்டிசும் சறுக்கினால் அடுத்த தொடருக்கு உள்ளே வரலாம்.  

இன்னும் இரு விஷயங்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து அறிந்தவை...

1.கண்டம்பியை உப தலைவராக அறிவித்ததன் மூலம் சனத் ஜெயசூரிய மீண்டும் அணிக்குள் தெரிவு செய்யப்பட சர்ச்சையை ஓரளவுக்கு மூட எண்ணியதாகப் பரவலாக உள்வீட்டில் பேசப்படுகிறது.

2.சனத் ஜெயசூரிய தனிப்பட்ட வீசாவில் (Personal Visa) தான் இங்கிலாந்து பயணிக்கிறார். (ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையினால் எடுக்கப்பட்ட வீசா - SLC Team Visa அல்ல)

ஓய்வு பெறத் தான் வேண்டும் என்று முடிவு எடுத்தால் சும்மாவே அதை அறிவித்திருக்கலாம் சனத். இல்லையேல் இங்கிலாந்தில் தான் அதை அறிவிக்கவேண்டும் என்று இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினராக இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டு மைதானத்தில் வைத்து அறிவித்திருக்கலாம்.
இதையெல்லாம் விட்டுவிட்டு ......

கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாத பர்வீஸ் மகறூபுக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்காதது சரி. ஆனால் உலகக் கிண்ணப் போட்டிகளில் மென்டிசை விடச் சிறப்பாகப் பந்துவீசிய ஹேரத்துக்கு அணியில் இடம் இல்லையாம்.
ஓ..சிலவேளை இளையவருக்கு ஊக்கம் கொடுக்கிறார்களோ??

அப்படி என்றால் சனத் ஜெயசூரியவே அணியில் இருக்கையில் தான் மீண்டும் அழைக்கப்பட்டால் வந்து விளையாடத் தயார் என்று அறிவித்துள்ள சமிந்த வாஸை அழைக்கக் கூடாது?
இலங்கை அணி விக்கெட்டுக்களை எடுக்கத் தடுமாறும் இந்தவேளையில் வாஸ் போன்ற ஒருவர் தானே கட்டாயத் தேவை.. குறைந்தபட்சம் அடுத்த டெஸ்ட் போட்டிக்காவது??

நல்ல காலம் முதலாவது ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சனத் அறிவித்தது..
ஆனாலும் அதன் பின் மீதி நான்கு போட்டிகளுக்கும் தேர்வாளர்கள் இன்னொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரை அனுப்புவார்களா?
இதை விட இலங்கையில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலேயே போனால் போகிறது என்று சனத் ஜெயசூரியவுக்கு ஓய்வு பெரும் வாய்ப்பை வழங்கி இருக்கலாம்.
உங்க வெளாட்டுக்கெல்லாம் நான் தானாடா கெடச்சேன்? 

ஆனால் இவ்வளவு திட்டு, சாபங்களையும் கடந்து சனத் ஜெயசூரிய முதலாவது ஒருநாள் போட்டியில் சதமடித்து போட்டியையும் வென்று கொடுத்தாலோ, திலின கண்டம்பி சதமோ அரைச் சதமோ அடித்து பிரகாசித்தாலோ மன்னிப்புக் கோரி ஒரு பதிவு போட்டுவிடுகிறேன் நிச்சயமாக...

ஆனால் சனத் ஜெயசூரிய முன்பு படைத்த சாதனைகளையோ, இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சியில் அசுர மாற்றத்தை ஏற்படுத்தியதையோ நான் மறக்கவில்லை.. ஆனால் இந்த வயதில் அடம்பிடித்து அணிக்குள் வருவதையும், மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட பின் அந்த மாத்தறை மக்களின் பணத்தையும் வாக்குகளையும் வீணாக்கி விளையாடுவதைத் தான் கண்டிக்கிறேன்.

இப்படியே இந்த ஒருநாள் தொடரையும் இலங்கை இங்கிலாந்தில் தோற்றால் (நடக்க வாய்ப்புக்கள் குறைவு) வாஸ், முரளி, ஏன் அரவிந்த டீ சில்வா போன்றோரையும் மீண்டும் அழைப்பார்களோ???? (அர்ஜுன ரணதுங்கவை அழைக்க மாட்டார்கள் நிச்சயமாக)

ம்ம்.. இனி எல்லாம் இப்பிடித்தான்...

June 09, 2011

கம்பி மத்தாப்புக் கண்ணும், பெண்ணின் மூக்கு வேர்வையும்


அண்மையில் வெளிவந்துள்ள பாடல்களில் ஒன்று முதல் தரம் கேட்டவுடனேயே காது வழியாக மனசுக்குள் ஏறி அமர்ந்து விட்டது...

கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு என்று மிக எளிமையான வரிகளுடன், ரசிக்கக் கூடிய தாளத்துடன் வந்துள்ள பாடல் இப்போது எங்கள் வானொலியின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று...

தூரத்தில பார்த்தா காதல் வாராது
பக்கத்துல பார்த்தா காமம் வாராது

இந்த வரிகளில் இருக்கும் அப்பாவித் தனமும்,

அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

இந்த வரிகளில் இருக்கும் ஏக்கமும், கெஞ்சலும் பாடகர் கார்த்திகேயனின் ரசிக்கக்கூடிய நயமான குரலில் யாரையும் ஈர்த்து விடும்....

புதிய இசையமைப்பாளர் C.சத்யாவின் இசையில் சேவற்கொடி திரைப்படப்பாடல் இது....



பாடல் வரிகள்.. சாட்ஷாத் வைரமுத்துவே தான்..

இம்முறையும் தேசிய விருதைத் தனதாக்கிய மகிழ்ச்சி அவருக்கு புதுப் பொலிவையும் எழுத்துக்களுக்கு புதிய உற்சாகத்தையும் பேனாவுக்கு இளமை மையையும் கொடுத்திருக்கிறது போலும்..
மனிதர் துள்ளலுடன் துடிப்பாகக் கிராமியக் காதலின் அழகை வடிக்கிறார்.

முன்பு காதலன் திரைப்படத்தின் 'காதலிக்கும் பெண்ணின் கைகள்' பாடலில் "காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே" என்று எச்சிலைப் புனிதப்படுத்திய கவிஞர் இந்தப் பாடலில்...

சுத்தமான தெருவில் 
அவ துப்பி செல்லும் போதும் 
எச்சில் விழுந்த இடத்தில் 
மனம் நிக்குது நிக்குதடா

என்று உருகுகிறார்.

ஒரு பெண்ணின் உண்மையான அழகு அவள் தூங்கி எழும் நேரத்தில் தெரியும் என்பார்கள். வைரமுத்துவும் உறுதிப்படுத்துகிறார்...

தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு

அடுத்த வரிகள் கவிநயத்தின் உச்சம் எனச் சொல்லக் கூடிய இடங்கள்...

அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும் 
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்

ஆனால் என் மனதை சுண்டியிழுத்த இந்தப் பாடலின் முத்தான வரிகள்...
மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

பெண்களின் மூக்கு நுனிக் கோபமும், மூக்கு வேர்வையும் பார்ப்பதற்கு அழகானவையே.. (அனுபவித்துப் பார்த்த ரசனையுள்ளவர்கள் கவனிக்க)

வைரமுத்துவுக்கும் அவரது இளமை வரிகளுக்கும் ஒரு கவி வணக்கம்..

பாடலின் இசை சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தின் "கண்ணும் கண்ணும் பார்த்துக்கிட்டா டிங் டிங் டிங்" பாடலை ஞாபகப்படுத்தினாலும்,
சரணத்தின் மெட்டும் இசையும் மனத்தைக் கட்டிப்போட்டு சொக்கவைக்கின்றன.

திரைப்படம் - சேவற்கொடி 
பாடியவர் - M.L.R.கார்த்திகேயன்
பாடல் எழுதியவர் - வைரமுத்து
இசை - C.சத்யா 

கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு 


கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு 


தூரத்தில பார்த்தா காதல் வாராது
பக்கத்துல பார்த்தா காமம் வாராது
மானும் இல்ல மயிலும் இல்ல
தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனது விழுந்து போச்சுது 


அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்


அழுக்கு துணிய உடுத்தி 
அவ தலுக்கி நடக்கும் போது
சுழுக்கு பிடிச்ச மனசு 
அட சொக்குது சொக்குதடா


சுத்தமான தெருவில் 
அவ துப்பி செல்லும் போதும் 
எச்சில் விழுந்த இடத்தில் 
மனம் நிக்குது நிக்குதடா


தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும் 
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்


மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்


விளக்குமாரு பிடிச்சி 
அவ வீதி பெருக்கும் போது
வளைவு நெளிவு பாத்து
மனம் வழுக்க பாக்குதடா


குளிச்சி முடிச்சி வெளியில்
அவ கூந்தல் துவட்டும் போது
தெறிச்சு விழுந்த துளியில் 
நெஞ்சு தெறிச்சு போகுதடா


அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்கிற போதும்
தும்மி முடிக்கிற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குத்தம் குறையிலும்  மொத்த அழகு


மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

கேட்டு ரசிக்க....




சத்யாவின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் சேவற்கொடியில் இன்னும் நான்கு பாடல்களும் ரசிக்கக் கூடியவையே.

"புறாவாய் வந்து போகிறாய்" - இந்தப் பாடல் பற்றியும் தனியாக சிலாகிக்க வேண்டும்..
"வேலவா"
"மீனே செம்மீனே"
"நெஞ்சே நெஞ்சே"

அண்மையில் எனது ட்விட்டரில் நான் சொல்லியிருந்தேன்..

 Loshan ARVLOSHAN 



விருது கிடைத்த தென்மேற்குப் பருவக்காற்று இப்போது இன்னொரு புதியவரின் இசையில் சேவற்கொடி...
பயணம் தொடரட்டும்..

மகன் மதன் கார்க்கி ஒரு பக்கமாக ரசனையான வரிகளை ரகம் ரகமாகத் தனதுகொண்டிருக்கு, தந்தையும் போட்டிக்குத் தயாராகி விட்டார் போல...

இந்த ஆரோக்கியமான போட்டி எங்களுக்கு ரசனையான பாடல்களைத் தரட்டும்..


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner