September 07, 2010

நிலாக் காதல் 06



நிலாக் காதல் என்ற பெயருடன் பதிவர் வந்தியத் தேவன் ஆரம்பித்துவைத்த அஞ்சலோட்டக் கதை இது..
முன்னைய பகுதிகள்..
வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 01
 பவனால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 02
சுபாங்கனினால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 03
கண்கோனினால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 04
ஆதிரையால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 05

இதெல்லாம் வாசித்திருப்பீர்கள்..இல்லாவிட்டாலும் நிலாக் காதல் 06க்கு செல்லமுதல் முன்னைய ஐந்தையும் வாசித்தபின் வாருங்கள்..

நிலாக் காதல் 06



சற்று முன்னர் கிடைத்த செய்தியொன்று...
எமது செய்திப்பிரிவைச் சேர்ந்த சந்தோஷ் இனம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டுள்ளார். அண்மையில் இவர் சிறந்த இளம் பத்திரிகையாளராக...." செய்தி தொடர்ந்தது.

ஒரு கணம் கண்கள் இருட்டி,இதயம் நின்றுவிடுமாற்போல ஆகிப் போனது..
என்னது என் சந்தோஷுக்கா?
கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு 
மீண்டும் வரப்போகும் அந்த செய்திக்காக மனதையும் காதையும் உன்னிப்பாக்கிக் கொண்டான்..

மீண்டும் அந்த செய்தியை அறியத் தருகிறோம்..
எமது செய்திப்பிரிவைச் சேர்ந்த சந்தோஷ் இனம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டுள்ளார்...... 

திகைத்துப் போய் எங்கே போகிறோம்,எதற்குப் போகிறோம் என்றறியாமல் வாகனத்தை அதுபாட்டுக்கு போகவிட்ட ஹரீஷின் மனதில் இப்போது லாவண்யாவோ,நேற்றைய சந்தோஷுடனான மோதலோ இல்லை..
மனம் முழுக்க பதைபதைப்பு..சந்தோஷுக்கு என்ன நடந்திருக்குமோ என்று..

பின்னால் வந்த சாம்பல் நிற பஜெரோக்காரன் அடித்த சத்தமான ஹோர்ன் தான் வாகனம் செலுத்திக் கொண்டிருப்பதை ஹரிஷுக்கு நினைவூட்டியது.
என்ன செய்யப் போகிறோம்.. யாரை அணுகி சந்தோஷ் பற்றி அறியலாம்.. என்றெல்லாம் 
மனது கண்டபடி அங்குமிங்கும் அலைபாய, தன்னைத் தானே மீண்டும் நொந்துகொண்டான்..
இந்த நேரம் பார்த்து உயிரை விட்டிருந்த தன் செல்பேசிக்காக.


வழியில் எங்காவது communicationஇல் இறங்கி யாருடனாவது பேசலாம் என்று நினைத்தாலும் கடத்தப்பட்டிருக்கும் சந்தோஷ் பற்றி ரகசியங்கள் எங்காவது பரவலாம்;இந்தக்கால சுவர்கள் கூடக் காது முளைத்திருப்பவை என்பதால் ரகசியம் என்பது முக்கியமானது என்றெண்ணிக் கொண்டான் ஹரிஷ்.


வழியெங்கும் நேற்றைய சண்டை பற்றி எண்ணி எண்ணி மனது வேதனைப்பட்டது.
நம்பாத கடவுளையும் மனது அடிக்கடி சந்தோஷுக்காக வேண்டிக் கொண்டது..
"கடவுளே வானொலியில் சந்தோஷ் பற்றி பயங்கரமாக எதுவும் செய்திகள் வந்துவிடக்கூடாது" என்ற வாய் விட்டே அரற்றிக்கொண்டே வாகனத்தைப் படுவேகமாக செலுத்திக் கொண்டிருந்தான்.


சீதுவை,ராகம,ஜா ஏல,கந்தானை என்று இடங்கள் கனவேகமாகக் கரைந்துகொண்டிருக்க,ஹரிஷின் மனது பல இடங்களிலும் அலைபாய்ந்துகொண்டிருந்தது.


லாவண்யாவை விட நண்பன் சந்தோஷ் மனதெங்கும் விரவி நிற்பது புரிந்தது.
சந்தோஷ் மீண்டும் திரும்பிவந்தால் போதும் லாவண்யாவே வேண்டாம் எனும் நிலைக்குக் கூட ஹரிஷ் வந்துவிடுமளவுக்கு வந்துவிட்டான்..


--------------------------------------
மறுபக்கம்..


விமான நிலையத்திலிருந்து வாகனத்தில் வந்துகொண்டிருந்த லாவண்யா நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
ஹரிஷின் செல்பேசி இலக்கம் கிடைத்தும் அது இணைப்பில் வந்தும் அவன் அழைப்பை ஏற்காததும்,பின்னர் off ஆகிப் போனதும் பெரிய ஏமாற்றமாகிப் போனது.


கண்டும் பேசமுடியாமல் போனது,இலக்கம் கிடைத்தும் இணைப்புக் கிடைக்காதது அவ்வளவு தூரம் பரந்துவதது யாருக்காகவோ அவன் அருகிருந்தும் தொலைவாகத் தொலைந்தது போல இருந்தது.


எதற்கும் பின்னால் வேறு எந்த வாகனத்திலாவது ஹரிஷ் வருகிறானா என்று கண்களும் மனதுக்குப் போட்டியாக அலைபாய்ந்து கொண்டிருந்தன.


ஸ்ரீ அங்கிள் கேட்பதற்கு அவளது உதடுகள் மட்டும் பதில் உதிர்த்துக் கொண்டிருந்தாலும் மனது ஹரிஷை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.


அவனை விட்டு விலகவேண்டியிருந்தாலும் லண்டனின் பரபரப்பிலும் மனதெல்லாம் அவனே இருந்ததை அவனிடம் சொல்லவேண்டும்;அவனுடன் வாழவென்றே கடமையை சாக்காக வைத்து இலங்கை வந்ததை சொல்லவேண்டும்;
தன் தங்கை வைஷாலி-சந்தோஷின் காதலில் இடைநடுவே வந்த சிறு விலகலை சேர்த்துவைக்கும் சாக்கோடு தனது காதலையும் வெளிப்படுத்த இலங்கை வந்ததை ஹரிஷிடம் ஆழமாக சொலவேண்டும் என்றெல்லாம் மனம் தவியாத் தவித்தது.


மனம் முழுவதும் காதலின் பாரம் அழுத்த, ஹரிஷ் பற்றி வேறு விஷயம் அறியவும்,தங்கை வைஷாலியின் காதல் பற்றியப் பேச நேரம் எடுக்கவும் மீண்டும் சந்தோஷைத் தொடர்புகொள்ள செல்பேசி இலக்கங்களைத் தட்டினாள்..
மறுமுனையில் "நீங்கள் அழைத்த இலக்கத்தைத் தற்போது அடைய முடியாதுள்ளது......" என்று மும்மொழியிலும் பெண் குரல்கள் ஒலித்தன.
"அட இவனுமா? என்னாச்சு இரண்டு பேரின் செல்பேசிகளுக்கும்?"
-----------------


"கியபாங் .. உம்ப தன்ன தேவல் ஒக்கோம கியபாங்"(சொல்லுடா உனக்குத் தெரிஞ்ச எல்லாம் சொல்லுடா) என்று ஒருவன் அதட்ட ஒரு மூலையில் கொஞ்சம் சோர்ந்தவனாக ஒருக்களித்த நிலையில் இருந்த சந்தோஷை முறைத்தவாறு இன்னும் சிலர்.


கடத்தப்பட்டது முதல் கண்கள் கட்டப்பட்டு இப்போது திறக்கப்பட்ட நேரத்திலிருந்து மிரட்டல்களைக் கேட்டவாறு இருந்தாலும் இன்னும் தன் உடல்மீது ஆயுதங்களோ,கரங்கள்,கால்களோ பாயாதது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.


ஆனால் மீண்டும் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதும்,தெரியாத விஷயங்களைப் பற்றியே தன்னிடம் கேட்பதும் ஒருவித பயத்தையும் எரிச்சலையும் தந்துகொண்டிருந்தது.


"மம வென முகுத் தன்ன நே.மம அஹின்சக மாத்யகருவோ"(எனக்கு வேறொன்றும் தெரியாது..நான் ஒரு அப்பாவி ஊடகவியலாளன்) என்று துணிச்சலாக சந்தோஷின் வாய்கள் வார்த்தையை உதிர்த்ததும்


அவனை இங்கே அழைத்துவந்ததிலிருந்து சொல்லப்பட்டுவரும் நக்கலான குற்றச்சாட்டுக்கள் அங்கிருந்த பெரியவனிடமிருந்து வந்தன..
"இவ்வளவு காலம் கொழும்பில் இருக்கிறாய்.மும்மொழியும் தெரிந்திருக்கிறது.
ஆளுவோர்,அமைச்சர்கள்,இன்னும் பலரைத் தெரிந்திருக்கிறது..அத்தனை இடமும் உள் நுழைய முடியும் உன்னால்.. எனவே 'அவர்கள்' உன்னை நிச்சயம் அணுகி இருப்பார்கள்.
எத்தனை தடவை சந்தித்தார்கள்..எங்கெங்கே அவர்களை அழைத்துப் போயிருக்கிறாய்?எந்தெந்த சம்பவங்களுடன் உனக்கு தொடர்பிருக்கு? மரியாதையாக சொல்"



தனக்கு முந்தியவர்களுக்கு நடந்ததெல்லாம் இப்படித்தான் என்று தானறிந்தவை மனதில் நிழலாட சந்தோஷ் கொஞ்சம் கலவரப்பட்டுப் போனான்.
அவனிடமிருந்து பறிக்கப்பட்ட செல்பேசி இப்போது ஆராயப்படுகிறது..

வந்து,போன அழைப்புக்கள் ஒவ்வோன்றாக ஆராயப்படும் என்பது சந்தோஷ் அறியாததல்ல..
அதிகமாக அவனுக்கு வந்த அழைப்புக்கால்,அவன் அதிகமாக எடுத்த அழைப்புக்கள் யாருடையவை என்று யோசிக்க ஆரம்பித்தான்.

"சேர்,வெளிநாட்டு அழைப்புக்கள் நிறைய வந்திருக்கு"
"உடனடியா அந்த போன் கம்பெனிக்கு இந்த நம்பரைக் குடுத்து யார் யாரென்று பாருங்க"

அரை மணிநேரத்தின் பின்...
அந்த இடம் அதகளப்பட்டது..

மீண்டும் விசாரணை..
"யார் அந்த ஹரீஷ்?உன்னுடைய கூட்டாளியா?"
"லண்டனிலிருந்து வந்த பெண் யார்? ஏன் வந்தாள்? என்ன நோக்கம்? நீங்கள் மூன்று பேர் மட்டும் தானா? அல்லது பெரிய க்ரூப்பே இயங்குதா?"

கேள்விகள் மாறி மாறிப் பாய .. பயந்தே போனான் சந்தோஷ்..

"சேர் ப்ளீஸ்.. அவர்கள் எல்லாம் அப்பாவிகள்.. என் நண்பர்கள் மட்டுமே.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது..
நானாவது மீடியாக்காரன்.அவங்களுக்கு ஒன்றும் செய்து போடாதீங்கோ.."
சந்தோஷின் கெஞ்சல்கள் யாரையும் அங்கே இரங்க வைப்பதாகவில்லை.

---------------------

இதே நேரம் வேகமாக பொரல்லை சந்தியை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஹரிஷின் கார்..
'முடியுமான வேகத்தில் வீட்டை அடையவேண்டும்..உடனடியா வீட்டிலிருந்து யாரிடமாவது பேசி சந்தோஷை எப்படியாவது காப்பாற்றவேண்டும்'
மனதில் அந்த சிந்தனைகளே ஓடிக் கொண்டிருக்க வீதியில் அக்கறை இல்லாமல் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த ஹரிஷுக்கு திடீரென முன்னால் திரும்பிய லொறியை அவதானிக்கமுடியவில்லை.

டமார்....

பதிவர் "நா" கவ்போய் மது தொடர்வார்.


September 03, 2010

நான் மகான் அல்ல.. நானும் தான்..



கடந்தவாரம் திருமணம் முடித்த என் தம்பி திருமணம் முடித்த பின்னர் தேனிலவுக்கு செல்லமுதல்(இப்போது மாலைதீவில் தம்பதி) வெளிநாட்டிலிருந்து வந்த உறவினரோடு சேர்ந்து போகலாம் என்று தானே தெரிவு செய்த படம் தான் 'நான் மகான் அல்ல'.
யாருக்குத் தெரியும் இப்படிக் கத்தியும் ரத்தமும் கோரமுமாகப் படம் இருக்குமென்று..
ஆனால் இன்னொரு வேடிக்கையான ஒற்றுமை நானும் மனைவியும் திருமணம் முடித்தபிறகு பார்த்த முதல் திரைப்படம் 'பச்சைக்கிளி முத்துச் சரம்'.
இந்தியாவில் ஊட்டியில் ஒரு பாழடைந்த தோற்றமுள்ள திரையரங்கில்.எப்படி இருந்திருக்கும்?


சில படங்களைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போது அந்தப் படத்தில் இழைந்துள்ள முக்கியமான உணர்வு மனசு முழுக்க இருக்கும்..
நான் மகான் அல்ல பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு நான்கைந்து பேரையாவது இழுத்துப் போட்டு உழக்கி,கை கால்களை உடைத்துப் போடவேண்டும் போல இருந்தது.
எனக்கு மட்டும் அப்படியில்லை எனப் பின்னர் அறிந்தேன்.


ஆண்டாண்டு காலமாக தமிழ்த் திரையுலகம் கண்டுவந்த தந்தை கொலை-மகன் பழிவாங்கல் கதை..
வில்லு திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும்..


ஆனாலும் கொட்டாவி விட வைக்காமல் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் படமாக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
அவரது முதல் படமான வெண்ணிலா கபடிக் குழுவிலிருந்து ஒரேயடியாக ஒரு மசாலாவுக்கு பாய்ச்சல்.
பலரும் அரைத்த மாவாக இருந்தாலும் இயல்பிலிருந்து பெரிதாக மாறாமல் வேகமாகவும்,நேர்த்தியாகவும் படத்தைத் தந்திருப்பதே சிறப்பு.


வாழ்க்கையில் கவலையே இல்லாமல்,ஜாலியாக திரிந்துகொண்டிருக்கும் ஒருவன் தந்தை கொலை செய்யப்பட்ட பின் எப்படி மாறிப் போகிறான் என்பதை மிகைப்படுத்தாமல் சொல்லியுள்ளார்கள்.


கார்த்தி பையா படம் முடித்த பிறகு நேரே இங்கேயே வந்து குதித்தவராக இருக்கிறார்.அதே சிறு தாடி,கண்களிலும் உதடுகளிலும் கொப்பளிக்கும் குறும்பு.. நகைச்சுவைக்குத் தோதாகும் உடலசைவுகள்..
அந்த நேரத்தில் ரசிக்க வைத்தாலும் இப்போது நினைக்கையில் பையாவிலும் இப்படித் தானே கார்த்தியைப் பார்த்தோம் என்று மனம் கேட்கிறது.
ஆனாலும் ரசிக்க வைக்கிறார் என்பதை ஏற்றே ஆகவேண்டும்.
கொஞ்சம் முன்னேற்றம் நடிப்பில்..ஆக்ரோஷத்தில்..நகைச்சுவையில்..
சில காட்சிகளில் இவர் செய்யும் குறும்புகள்(காதலியின் தந்தையிடம் நேரே சென்று பெண் கேட்பது,ஹாப்பி நியூ இயர் சொல்லும் ஆரம்பக் காட்சி, செல்பேசி லொள்ளுகள்,அலுவலகக் குறும்புகள்) அந்தக் கால நவரச நாயகன் கார்த்திக்கை ஞாபகப்படுத்துகின்றன.


இடைவேளைக்கு முன் வரை கலகலப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.படமும் விரைந்து பறக்கிறது.
பாஸ்கர் சக்தியின் வசனங்களில் கூர்மையும்,எளிமையும்,இனிமையும்.
பல வசனங்கள் மனசில் ஒட்டி விடுகின்றன.
வாழ்க்கையில் எதையும் நேரே சொல்லி,எளிதாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கார்த்தியும்,ஜெயப்ரகாசும் சொல்லும் இடங்களில் வசனங்கள் டச்சிங்.


கார்த்தி - காஜல் அகர்வால் காதல் சுவை..


காஜலைத் தன் பின்னால் அலைய விட கார்த்தி செய்யும் அலம்பல்கள் ரசிக்கவைக்கின்றன.


காஜல் அகர்வாலின் ரசிகன் நான்.. முன்பிருந்தே..
அந்த அழகான விரிந்த,உருண்டையான கண்களில் காதலும், குறும்பும், அப்பாவித்தனமும், மகிழ்ச்சியும், பயமும் என்று மாறிமாறி வருவது அழகு.


கார்த்தியின் தந்தை ஜெயப்பிரகாஷ் கம்பீரமும் உருக்கமும் இயல்பும் கலந்த ஒரு கலவை.
மனதில் நிற்கும் ஒரு பாத்திரம்.


கார்த்தியின் நண்பராக வரும் சூரி,சின்னத்திரை புகழ் நீலிமா,ப்ரியா ஆகியோரும் குறிப்பிடத்தக்க பாத்திரங்கள்.


நண்பர்களாக இணைந்து கொலை செய்யும் அந்தப் பட்டாளம் மிரட்டல்.. எங்கிருந்து தேடிப் பிடித்தாரோ..
முகங்கள்,கண்களில் அப்படியொரு வெறியுடன் திரிகிறார்கள்.
அதுவும் அந்த சுருட்டை அடர் முடிக்கார இளைஞன்.. பயப்படுத்துகிறான்.
நல்ல எதிர்காலம் இருக்கிறது.
அவனின் மாமனாராக சூத்திரதாரியாக வரும் கஞ்சாக்காரன்க்காரன் போல தோற்ற முடைய வில்லனும் அபார தெரிவு.
இயக்குனர் பாத்திரத் தேர்வில் ஜெயிக்கிறார்.


அந்தப் பேட்டை தாதாவும் திரைப்படத்தில் புதுசு போல.. நல்லதொரு பாத்திரம்.

நான் மகான் அல்லாவின் இன்னொரு ஹீரோ - இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா..
படம் முழுக்க இவரது ராஜாங்கம் கொடி கட்டிப் பறக்குது.



ஏற்கெனவே இத் திரைப்படத்தின் இரு பாடல்கள் என் மனத்தைக் கொள்ளை கொண்டவை.. வாவ் நிலவப் புடிச்சு தரவா, இறகைப் போல..
இரண்டும் படமாக்கப்பட்ட விதத்தில் இன்னும் மனசில் ஒட்டிக் கொண்டுவிட்டன.


ஒளிப்பதிவாளர் பாடல்,காதல் காட்சிகளில் மனத்தைக் குளிர்விப்பதுபோல வன்முறைக் காட்சிகள்,இரண்டாம் பாதி துரத்தல்களில் வேறு கலர் டோன்களால் எங்களையும் கலவரப்படுத்தியிருக்கிறார்.


சண்டைக் காட்சிகள் அனல் பறக்கின்றன - அனல் அரசு அசத்தியுள்ளார்.
வெகு இயல்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருக்கின்றன.
கார்த்தியின் உடல்வாகு நிச்சயமாக இந்த ஆஜானுபாகு தனித்துநின்று ஐந்தாறு பேரையாவது அடிப்பான் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.



கொஞ்சம் கோரமாகக் காட்டிய சில இடங்களும்,சில ஊகிக்கக் கூடிய திருப்பங்களும் சின்ன சின்ன ஓட்டைகள்..
பிற்பாதியில் போலீஸ் எந்த இடத்திலும் வராததும்,தாதாவும் கார்த்தியும் திடீரென நட்பாகும் காட்சியும் நம்பமுடியாத சில விஷயங்களாயினும் ரசிக்க வைத்தவை.


Climax சண்டைக் காட்சி மனதில் எங்களுக்கும் வெறி,வன்மம் தருவது படத்தோடு எங்களை ஒன்றிக்க செய்த இயக்குனரின் வெற்றி என்று தான் சொல்லவேண்டும்.
(எல்லோருக்கும் அப்படி உணர்வு வந்ததா?)


கடைசி சண்டைக் காட்சிகளின் பின் வளவளவென நீட்டி இழுக்காமல் சட்டென்று படத்தை முடித்ததும் இயக்குனரின் டச்சா?
ஏற்கெனவே அறிந்த முழு மசாலா என்றாலும் அதையும் ரசிக்கத்தக தந்தால் எல்லோரும் ரசிப்பார் என்பது 'நான் மகான் அல்ல' சொல்லும் பாடம்.


படம் பார்த்ததிலிருந்து கார்த்தி அந்த நான்கு பேரை அடித்துத் துவைத்த அதே வெறியுடன் யாரையாவது அடிக்கலாம்னு தேடிக் கொண்டே இருக்கிறேன்,. ம்ஹூம்.. யாருமே கிடைப்பதாக இல்லை..  
நாம அடித்தாலும் வாங்கும் பொறுமையுடனும் திருப்பி அடிக்காத பொறுமையுடனும் யாராவது கிடைக்கணுமே.. ;)

September 01, 2010

சீ சீ சீ-சமயம்-சச்சின்-சர்ச்சை - சில விளக்கங்கள்

என்னுடைய சீ சீ சீ பதிவு சில சர்ச்சைகளைத் தோற்றுவித்திருப்பது தெரிகிறது.
சர்ச்சைகள் உருவாவது நல்ல விளக்கத்தையும் தெளிவையும் தருமென்றால் அது மகிழ்ச்சியே.
நான் எந்தவொரு விடயத்தையும் பொதுமைப்படுத்தி நோக்குவதில்லை என்று ஆணித்தரமாக 
சீ சீ சீ பதிவின் பின்னூட்டங்களுக்கான பதிலில் குறிப்பிட்டிருந்தேன்.


பதிவில் நான் குறிப்பிட்ட மூன்று விஷயங்களுமே பல பேரின் மனதின் மெல்லிய உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவை தான்.
என் மனதிலும் இந்த மூன்று சம்பவங்கள் ஏற்படுத்திய பாதிப்பைத் தான் பதிவாகக் கொட்டி இருந்தேன்.

வானொலியில் நான் பேசும்போது ஒரு நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதால் மிக மிக அவதானமாக நான் பயன்படுத்தும் ஒவ்வொரு சொற்களின் மீதும் கவனம் செலுத்தியே நிகழ்ச்சிகளில் பேசுவதுண்டு. 


உணர்ச்சிவசப்படாமை ஒலிபரப்பாளனைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு விடயம்.


எனினும் நான் ஒரு சாதாரண மனிதனாக ரத்தமும் சதையுமுள்ள லோஷனாக இருக்கும் என் வலைத்தளத்தில் எனது தனிப்பட்ட உணர்வுகளை மனதில் நினைப்பதுபடியே கொட்டிவருகிறேன்.
ஆனால் அதிலும் கூடுமானவரை யாரும் காயப்படாமல் பார்த்துக் கொள்கிறேன்.


அதற்காக யாரும் மனம் நோவார்களோ என்றெண்ணி எனது கருத்தை சொல்லாமலும் இருக்கமுடியாது தானே?
எனது பதிவுகள் நான் என் பதிவைப் பற்றி சொல்லி இருக்கும் அறிமுகம் போல "என்னைப் பற்றியும் என் உணர்வுகள் பற்றியும் முடிந்தளவு முழுமையாகவே " இருக்கின்றன.


மனதில் அந்த நிமிடத்தில் தோன்றும் எண்ணங்கள் எழுத்தாக வந்து விழவேண்டும்.
போலி வார்த்தை சாயங்கள் பூசிய பின் அந்த எழுத்துக்களின் வலிமை அற்றுப் போய் விடுகிறது என்றே நான் நினைக்கிறன்.


இதனால் தான் எனது பதிவுகள் மூலமாக அதிகளவான நண்பர்களும் சில விரல் விட்டு எண்ணக் கூடிய எதிர்க் கருத்துடையவர்களும்(எதிரிகள் என்ற சொல்லில் உடன்பாடு கிடையாது.. நான் என்ன ஹீரோ அவர்கள் வில்லன்களா? எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னை நேசிக்க ஆரம்பிக்கலாம்..நானாக யாரையும் எதிரிகளாக்கிக் கொள்வது கிடையாது) எனக்குக் கிடைத்துள்ளார்கள்.


விரைவும் மனதில் பட்டதைப் பட்டபடி எழுதவேண்டும் என்ற எண்ணமும் என் பதிவுகளின் சில சொற்றொடர்களில் மயக்கங்களையும் பிறழ்வு பட்ட கருத்தையும் வாசிப்போர் மத்தியில் தோற்றுவித்திருக்கின்றன போலும்.


நல்ல நண்பர்கள் சிலர் விளக்கமாக விளங்கிக் கொண்டாலும் ஒரு சிலர் கருத்துப் பிறழ்வு கொண்டிருப்பதனாலேயே இந்தப் பதிவு..
முக்கிய விடயம் - தவறாகப் புரிந்து கொண்டவர்களுக்கே இது.. வேண்டுமென்றே விஷமத்தனமாகப் பொருள்கொண்டு விதண்டாவாதம் புரிவோருக்கு இந்தப் பதிவென்ன,இனி ஆயிரம் பதிவிட்டாலும் புரியாது.


முதல் விடயம்..




அரபு நாடுகளில் மட்டும் இவ்வகையான செயல்கள் பணியாளர்களுக்கு எதிராக நடைபெறுவது ஏன் என்று புரியவில்லை.


அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது?



இதில் வந்த உல்லாச அரபுக்கள் என்ற சொற்பதத்தைப் சிலர் பொதுமைப் படுத்தி விளங்கிக் கொண்டு விட்டார்கள்.


எல்லா அரபுக்களையும் நான் சொல்லவில்லை என்பது முழுவதுமாக அந்த விடயத்தை வாசித்திருந்தால் விளங்கியிருக்கும்.


மார்க்கம் அன்பைப் போதிக்கிறது என்று நான் இஸ்லாம் மார்க்கத்தை அன்பு மார்க்கமாகத் தான் சொல்லி இருக்கிறேன் என்பதையும் காணுங்கள்.






இரண்டாவது விடயம்




காளி கோயில் மிருகபலியைப் பற்றி குறிப்பிட்ட இடத்தில் நான் இட்ட படங்கள்..
தீவிர சமய பக்தி உள்ள ஒரு நண்பர் நான் இட்ட படங்கள் இந்து சமயத்தை மட்டும் தாக்குவதாக தானும் இன்னும் ஒரு சிலரும் கருதுவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.


சமயம் என்பதை நான் ஏற்கிறேன்/ஏற்கவில்லை என்பது ஒரு புறமிருக்க,இப்படியான பலிகள் மூலம் இளைஞர்கள்,எதிர்கால சமுதாயம் சமயங்கள் மீது நம்பிக்கை கொள்ளுமா என்பதை நான் கொஞ்சம் கோபத்துடன் கேட்பதற்கே அந்தப் படங்களை குறியீடுகளாகப் பயன்படுத்தினேன்.


கடவுள் மறுப்பு/மூட நம்பிக்கை மறுப்பு/சமய மறுப்பு என்பவற்றுள் நூறு சதவீதம் இல்லாவிடினும் முட்டாள் தனமானது என்று நான் நினைக்கும் விடயத்தை என் பதிவு ஒன்றினூடாக நான் சொல்ல நினைத்ததே அது!


சமய நம்பிக்கையே பெரிதாக இல்லாத நான் சமயம் பற்றி எது சொன்னாலும் அவரவர் தங்கள் சமயங்களைத் தான் தாக்குவதாக வரிந்து கட்டிக் கொண்டு வாராங்களே...


கடவுளே காப்பாத்து !!!!!




மூன்றாவது விடயம்..


இது இவ்வளவு சீரியசாக எடுக்கப்படும் என்று நான் நினைக்கவேயில்லை.


எனக்கு இலங்கை,ஆஸ்திரேலிய அணிகளை கிரிக்கெட்டில் மிகப் பிடிக்கும் என்பதை நான் எப்போதும் மறைத்ததில்லை.
போலி நடுநிலைவாதியாக என்னைக் காட்டிக்கொண்டதுமில்லை.
ஆனால் எதிரணிகளின் திறமைகள் வெளிப்படும்போது எப்போதும் மனம் திறந்து பாராட்டத் தவறியதுமில்லை.


அதேபோல சில உலகத் தரம் வாய்ந்த சில வீரர்கள் என் விருப்பப் பட்டியலில் இல்லாவிட்டாலும் அவர்கள் மேல் வெறுப்பு வந்ததில்லை.
மதிப்புடன் அவர்களை சிலாகித்து பதிவிட நான் தவறியதுமில்லை.


சச்சின் பற்றிய பதிவுகள்,அனில் கும்ப்ளே,சௌரவ் கங்குலி,தோனி, ஏன் கெவின் பீட்டர்சன் பற்றிய பதிவுகளையும் பார்க்கலாம்..


இப்படியிருக்க சீ சீ சீ பதிவில்...


//
இந்த Spot betting எனப்படும் கிரிக்கெட் சூதாட்டமானது போட்டிகளின் முடிவுகளை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது எனினும் இதுவும் கிரிக்கெட்டுக்கு ஏற்படுத்தும் துரோகம் தான்.
போட்டியின் ஒவ்வொரு கட்டத்தில் ஏற்கெனவே பேசி வைத்தது போல பணம் வாங்கிக் கொண்டு செயற்பட இந்தப் புதிய பையன் ஆமிரினால் மட்டுமல்ல,உலக சாதனையாளர்
 சச்சின் டெண்டுல்கரினாலும் முடியும்.
யாரின் சந்தேகப் பார்வையும் படாது.. // 


இந்தப் பந்தி தான் சிலருக்கு-வெகு சிலருக்கு ஆதங்கத்தை அளித்திருக்கிறது.


அவர்கள் விளங்கிக் கொண்ட நேரடி அர்த்தம் சச்சின்/சச்சினும் பணம் வாங்கிக் கொண்டு ஆட்டங்களை நிர்ணயிக்கிறார் என்று நான் சொல்கிறேன்..
அல்லது சச்சின் பணம் வாங்கிக் கொண்டு மோசடியாக ஆடினால் யாருக்கும் தெரியாது;சந்தேகப்படமாட்டார்கள்.


ஆனால் நான் சச்சின் என்ற சிகரத்தை இந்த ஒப்பீட்டில் இடக் காரணம்- யாருடனும் ஒப்பிடப்பட முடியாத ஒருவர் கூட இவ்வாறு Spot bettingஇல் ஈடுபடலாம் என்று கட்டுவதற்காகவே.


சச்சின் டெண்டுல்கராலும் முடியும் என்பது உண்மையில் சச்சினை மற்றவர்களிடமிருந்து ஒருவகையில் பிரிக்கிறது. சச்சின் உயர்ந்தவர் என்ற அர்த்தம் வருகிறது.


நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் எடுத்துக்காட்டுகளில் நேரேதிர்ப் பொருட்களை ஒப்பீடு செய்வோமே..


மலையும் மடுவும்,பச்சிளங் குழந்தை முதல் பல்லுப் போன பாட்டா வரை என்றெல்லாம்.. 
அதே போலத் தான் இப்போது விளையாட ஆரம்பித்த ஆமீரையும் இப்போதிருக்கும் வீரர்களில் சிரேஷ்டரான சச்சினையும் வசனப் பிரயோகத்தில் கொண்டுவந்தேன்.


சச்சினை நான் எப்போதுமே மதித்தே வந்திருக்கிறேன்.மற்றவர்கள் சகட்டுமேனிக்கு சச்சின் பற்றி விமர்சித்தபோதும் சச்சின் ன் favourite இல்லாவிட்டாலும் என்றுமே Sachin is great என்பதை நான் மறுத்ததில்லை.
(இது சச்சினுக்கும் தெரியும் என்று சொல்ல ஆசைதான்.. ஹீ ஹீ)


ஆகவே நண்பர்ஸ்.. புரிந்துகொள்ளுங்கள்..
No misunderstanding please..


ஒன்றை மட்டும் இந்த சிக்கல்களில் இருந்து புரிந்துகொண்டேன்.. வாசிக்கும் பலருக்கு இன்னும் புரியக் கூடியவிதத்திலும் மயக்கம் தராத விதத்திலும் பதிவுகளை எழுத நான் கற்றுக்கொள்ள வேண்டும் :)







ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner