April 30, 2009

பெரிசு.... பென்னாம் பெரிசு...

இலங்கையின் மிகப்பெரிய விளம்பரப் பதாதை என்று ( நான் பார்த்த வரைக்கும் என்று சொன்னாலும் பரவாயில்லை) குறிப்பிட்டு அண்மைய தேர்தல் விளம்பரப் பதாதை ஒன்றை போட்டுப் பதிவிட்டிருந்தேன்.


என்னுடைய நண்பரும், சிறந்த ஒரு இளம் இசையமைப்பாளருமான ஸ்ரீ சியாமளாங்கன் தற்போது டுபாயில் இருக்கிறார் (பிரபல இலங்கை கர்நாடக சங்கீதப் பாடகி அருந்ததி ஸ்ரீ ரங்கநாதனின் மகன்) உலகின் மிக நீளமான அல்லது பெரிய விளம்பரப் பதாதை – Advertisement Banner  என்று கருதப்பட்ட விளம்பரப்படம் ஒன்றை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.



அம்மாடி.. என்னா உயரம்.. எவனாவது கழுத்து வலிக்க இதை முழுமையாகப் பார்த்திருப்பானா?

எமிரேட்ஸ் (Emirates) விமான சேவையின் விளம்பரமான இதுவே உலகின் மிகப் பெரிய அல்லது நீளமான விளம்பரம் என்று முன்னர் சொல்லப்பட்டு வந்தபோதிலும் இதனை விட அப்பனான விளம்பரங்கள் எல்லாம் இருக்கிறது என்று பின்னர் தான் தெரியவந்ததாம்.  

நன்றி - ஸ்ரீ.


அந்தப் பென்னாம் பெரிய விளம்பரம் பற்றித் தெரிந்தவர்கள் ... அந்தப்படம் கிடைத்தவர்கள் எனக்கு மின்னஞ்சலாம்.


April 28, 2009

யுத்த நிறுத்தம் இல்லை - புரிந்து கொள்ளுங்கள்


நேற்று கலைஞர் ஐயா அவர்கள் (ரொம்ப மரியாதை கொடுத்துள்ளேன்)உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற உடனே யோசித்தேன் என்னடா இது ஏதாவது மிகப் பெரும் புரட்சி வெடிக்க போகுதோ என்று!

அவர் உண்ணாவிரதம் இருந்தவிதம் & பின்னணி பற்றி எல்லாம் பல வலைப்பதிவுகள்/பதிவர்கள் பின்னிப் பிளந்து,பிரிச்சு மேய்ந்து,கிண்டி கிழங்கெடுத்திருப்பதனால் அது பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை.

கொஞ்ச நேரத்திலேயே பெரும் களேபரம் பரபரப்பு.. 
இலங்கையில் யுத்த நிறுத்தம்..
கலைஞர் உண்ணாவிரம் முடிவு..
என்று கலைஞர் டிவி பிரமாண்ட அறிவிப்பு.

(கலைஞர் உண்ணாவிரதம் முடிவு - இலங்கையில் யுத்த நிறுத்த அறிவிப்பு என்று எழுதினாலேயே சரியாக இருக்குமா?)

அப்படியா? என்று இங்கே இலங்கை அரசிடம் உத்தியோகபூர்வமாக விசாரித்தால் அப்படி எதுவுமே இல்லை.

என்னடா நடக்குது என்று பார்த்தால் இரண்டொரு மணிநேரத்துக்குப் பின்னர் கீழ் காணும் அறிவித்தல் வெளியானது.

பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக சனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அரசாங்கத்தின் அறிக்கை வருமாறு:-

போர் நடவடிக்கைகள் அவற்றின் முடிவை எட்டியிருப்பதாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
கணரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை பயன்படுத்துவதையும் ஆகாயமார்க்கமான தாக்குதல்களை மேற்கொள்வதையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப்படையினர் பணயமாக வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளோடு தங்களது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்வதோடு பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்திற்கு மிகுந்த முன்னுரிமை வழங்குவர்.


ஐயாமாரே - இது தான் உங்கள் பார்வையில்,உங்கள் விளக்கத்தில் யுத்த நிறுத்தமா?

கலைஞரின் உடன் பிறப்புக்கள் பலபேருக்கு – (பல பிரபல பதிவர்கள் உட்பட) இந்த உண்மையை சொன்னால் கோபம் வருகிறது!

யுத்த நிறுத்தம் என்பது வேறு - இந்த அறிவித்தல் வேறு!

கனரக ஆயுதங்கள் பயன்படுத்தாமலும் யுத்தம் நடத்தலாம் என்பது யுத்த சூழலுக்குள்ளேயே மூழ்கியுள்ள எமக்கு நன்கு அனுபவமானது! 

'மக்கள் மீட்பு' நடவடிக்கை என்றால் என்னுவென்று இலங்கைப் பத்திரிகைகள்,இணையத்தளங்கள், செய்திகள் பார்த்து பகுத்தறிந்து கொள்ளுங்கள்!

இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்..


தமிழ் தான் புரியவில்லை என்றால் கீழ்காணும் ஆங்கிலத் தளங்களில் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவித்தலை தயவுசெய்து வாசித்துப் பார்த்து விளக்கிக் கொள்ளுங்கள்.

No ceasefire in Sri Lanka - Military
 
Military spokesman Udaya Nanayakkara speaking to the Daily Mirror ascertained that the government has not declared a ceasefire. He clarified that only the use of heavy weapons and combat aircraft will be halted. His comment came after some International Media claimed that Sri Lanka has declared a ceasefire with the LTTE.
Further the Defence Ministry in a statement on its web site called the misinterpretation a 'Media illusionists' twist of the government statement.

More links:
 
உத்தியோக பூர்வமாக இலங்கை அரசு, அமைச்சு, இராணுவம் சொன்ன பிறகும் தெளிவில்லையா? இப்போது சொல்லுங்கள் நேற்று முழுவதும் 'இலங்கையில் யுத்த நிறுத்தம்' என்று வாய் கிழிய சொல்லிக் கொண்டிருந்த இந்திய ஊடகங்கள்,அமைச்சர்கள்,அரசியல்வாதிகள்,திமுகவினரை என்ன பெயர் கொண்டு அழைத்தல் தகும்? இவர்கள் முட்டாளாகினரா? அல்லது மக்களை முட்டாளாக்கினரா?

கலைஞர் ஐயாவின் அவசரத்துக்கு இலங்கை அரசு ஆறுதல் அறிவித்தலைக் கொடுக்காது என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளுக்கே Mind your own business சொன்னவர்களாயிற்றே நம்ம இலங்கை அரசினர்.. கலைஞர் ஐயா (இலங்கையின் பார்வையில் ஐவரும் ஒரு அரசியல் கோமாளியே தான்) எம்மாத்திரம்..

இப்படி ஏதாவது சொல்லப்போனால் -
ஜெயலலிதா வருவார் உங்களுக்கு கேட்பதெல்லாம் தருவார் என்று முத்திரை குத்தவும் ஒரு 'முழுக்கத் தெரிந்த' புத்திஜீவி கூட்டம் கண்ணுக்கு விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறது என்றும் எனக்குத் தெரியும்!

எனக்கென்றால்(எம்மில் பலருக்கும் தான்) இந்தியா தமிழக அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை போய் எவ்வளவோ காலம்.

 ஏதோ நடத்துங்க... நடத்துங்க...
ஆனால் எம்மையும் - தமிழக அப்பாவிகளையும் (அப்பாவி போல் நடிப்பவர்களையல்ல) இளிச்சவாயர்கள் என்று நினைத்து ஏமாற்றி விடலாம் என நினைக்காதீர்கள்!

இது தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல.. சில வால் பிடிக்கும் பதிவர்களுக்கும் சேர்த்து தான்.. பூனைகள் கண்களை மூடிக் கொண்டால் எங்கள் உலகங்கள் இருண்டுபோவதில்லை..


April 25, 2009

யார் அந்த மர்ம,அனானி வலைப்பதிவர்?


இம்முறை IPLஇன் பளபளக்கும் அணிகளாக முதல் வாரத்தில் டெல்லி டெயார் டெவில்சும், டெக்கான் சார்ஜர்சும வலம் வந்தாலும், பரபரப்பு அணியாக வலம் வருவதென்னவோ பொலிவூட் மன்னனான ஷாருக்கானின் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் தான்!

IPL திருவிழா ஆரம்பமாகு முன்னரே கொல்கத்தா நைட் ரைடர்சின் திருவிழா களைகட்டிவிட்டது.

தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஜோன் புக்கனனின் 5 தலைவர்கள் என்ற Multiple captaincy முறை பல்வேறு வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பி - இந்த புதிய முறை சரி வருமா வராதா என கிரிக்கெட் பிரபலங்கள் தொடக்கம் சாதாரண பிஸ்கோத்துக்கள் வரை எல்லோரையும் மண்டை காய வைத்தது.

அதற்குள் புக்கனன் 'கொல்கத்தா ராஜா' – தாதா கங்குலியைக் கழற்றிவிட்டு பிரெண்டன் மக்கலத்தைத் தலைவராக அறிவிக்க இன்னுமொரு பரபரப்பு!

Loshan
கவாஸ்கர் - ஷாருக்கான் வாய்த்தர்க்கம் - 'வாயை மூடு' – 'எனது அணி என்ன வேண்டுமானாலும் செய்வேன். முடிந்தால் ஒரு அணியை வாங்கி நடாத்திக்காட்டு' என்ற மோதலெல்லாம் போய் - 

கவாஸ்கரிடம் - ஷாருக்கான் மன்னிப்பு கேட்க அந்த நாடகம் முடிந்தது.

மீண்டும் மற்றொரு முன்னாள் இந்திய நட்சத்திர வீரர் ரவிசாஸ்திரி இந்தப் பல தலைவர்கள் system பற்றி ஏதோ கமெண்ட் அடிக்க ஷாருக்கான் 'நேர் முக வர்ணனையாளர்கள் புத்திசாலிகள் போல ஏதாவது சொல்லுவார்கள்ளூ அதையெல்லாம் பொருட்படுத்தக்கூடாது' என்றும் ' எனது அணி வெல்லவேண்டுமாயின் 30 பேரைக் கூடத் தலைவராக்குவேன்' என்றும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்தப் பரபரப்புக்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு வரும் அளவுக்கு பிரமாண்டமான பரபரப்பு ஒன்று KKR என்று அழைக்கப்படும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸின் முகாமின் உள்ளிருந்தே கிளம்பியிருக்கிறது.

fakeiplplayer.blogspot.com என்ற பெயரில் KKR அணியின் உள்வீட்டு இரகசியங்களை உடைத்துக்கொண்டிருக்கின்ற மர்மமான, அனானி வலைத்தளமே இத்தனை பரபரப்புக்கும் காரணம்.

பின்னூட்டங்களிலேயே வழமையாக அனானிகள் பிரபலமாகப் பேசப்படுவதுண்டு! இது என்னவென்றால் வலைப்பதிவரே ஒரு அனானி!


தன்னையும் ஒரு கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் என்று அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் பதிவர், ஒவ்வொரு நாளின் சம்பவங்களையும் சிறு சிறு பதிவுகளாகப் புட்டு புட்டு வைக்கிறார். (இவற்றுள் எத்தனை உண்மை – எத்தனை புருடா என்பது KKR வீரர்களுக்கும், SRK (ஷாருக்)க்கும், அனானி பதிவருக்குமே வெளிச்சம்)


இந்த மர்ம வலைத்தளத்தை இன்று வரை பின் தொடர்வோரை அறிந்தீர்கள் என்றால் பதிவர்களே நீங்கள் எல்லாம் மூச்சு விட மறந்து போவீர்கள்... 2588 !!!! ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் 100 பேராவது அதிகரிக்கிறார்கள்.. (பின்னே மற்றவன் ரகசியம் அறிவதில் தானே எங்களுக்கெல்லாம் மோட்சம்)

ஷாருக் கானை ஒன்றுக்கும் இயலாதவர் (எதைப் பத்தி சொல்லுறார் என்று வாசிச்சுப் பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்களேன்) என்று வர்ணிக்கும் இவர் , கங்குலியைக் கடவுள் என்றும் வர்ணிக்கிறவர், சர்ச்சைக்குரிய பயிற்றுவிப்பாளரான புக்கனனை முட்டாள் பயல் என்றும் குறிப்பிடுகிறார். 

ஒவ்வொரு சிறு சிறு சம்பவங்களையும் புள்ளி விபரங்களோடு தரும் இந்த வலைப்பதிவரை நம்புவதா, நம்பாமல் இருப்பதா என்று தெரியவில்லை..

யார் இந்த மர்ம அனானி வலைப்பதிவர் என்பதை ஊகிக்கவும் முடியவில்லை.. கொல்கட்டா அணியை சேர்ந்தவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத போது எங்களால் எம்மாத்திரம்?
(ஒரு வேளை கங்குலி இல்லாவிட்டால் கங்குலியின் ஆதரவாளரான வீரராக இருக்குமோ??? எனக்கு முரளி கார்த்திக் மீதும் சந்தேகம் இருக்கிறது)

இந்த வலைப்பதிவைத் தடுப்பதற்கும், மர்ம வலைப்பதிவரைக் கண்டறிவதற்கும் பல்வேறு முயற்சிகள் நடந்திருக்கின்றன.. Ipl Fake player இதைப் பற்றியும் இந்த வலைப் பதிவில் சொல்கிறார். 

நானே நீட்டி முழக்கிறதை விட நீங்களே வாசிச்சுப் பார்த்தீங்கன்னா சுவாரஸ்யமா இருக்கும்.. (வாசிச்சிட்டு மறுபடி வந்து எனக்கு வோட்டும், கமெண்ட்டும் போட்டிட்டு போங்க)

எனக்கென்னவோ ஷாருக் கானின் நண்பர்களே சேர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு (KKR) பரபரப்பு பப்ளிசிடி கொடுப்பதற்கு இப்படி ஒரு blogஐத் தொடங்கினார்களோ என்று ஒரு குறுக்கு சந்தேகமும் வந்திருக்கு.. 

பார்ப்போம் கத்தரிக்காய் மலிஞ்சா சந்தைக்கு வரும் தானே?

என்ன செய்தும் என்ன.. KKRக்கு வெற்றி மட்டும் கிடைப்பதாயில்லை..

மழையும், கெய்லும் சேர்ந்து பஞ்சாபுக்கு எதிராகப் பெற்றுக் கொடுத்த ஒரு வெற்றியைத் தவிர கையில் கிடைக்கும் வெற்றிகளையும் மற்ற அணிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததே இது வரை நடந்திருக்கிறது..

குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிராக அபாரமாக கோட்டை விட்டது கொல்கத்தாவின் அணித்தலைவரினதும்,பயிற்றுவிப்பாளரினதும் முட்டாள் தனமா இல்லை வோர்னின் மாயாஜாலமா என்பதை பார்த்த ஒவ்வொருவரினதும் தீர்மானமாக இருக்கட்டும்.

மக்கலம் பார்க்கப் போனால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் போலத் தான் தெரிகிறார்.. அப்படியானால் சோனியா காந்தி யாருன்னு தெரிந்திருக்குமே.. ;)

இன்றிரவும் KKR வெல்லப் போவதில்லை என்பது CSK ரசிகனான எனது நம்பிக்கை.. (விருப்பம்னும் சொல்லலாம்).. இனியாவது புக்கனனும் ஷாருக்கும் தாதாவை மீள நியமிப்பார்களா? (ராஜஸ்தான் ரோயல்சுக்கு எதிராக தனித்து நின்று போராடிய தன்னம்பிக்கையைப் பார்த்த பிறகும் கங்குலி மீது நம்பிக்கை யாருக்குத் தான் வராது?)  



April 24, 2009

இலங்கையின்/உலகின் மிகப் பெரும் விளம்பரப் பதாதை???




நாளைய தினம் இலங்கையில் முக்கியமான மாகாணசபைத் தேர்தல். தலைநகரும் உள்ளடங்கிய மேல்மாகாணசபைத் தேர்தலுக்கான அத்தனை பிரசாரங்களும் (இலத்திரன் ஊடகம் தவிர்ந்த) நிறைவடைந்திருக்கின்றன.

யுத்த களத்தின் வெற்றிகள், பலவீனமான எதிர்க்கட்சி, சிங்களவர் மத்தியில் ஒரு சக்ரவர்த்தி போல் விஸ்வரூபம் எடுத்துள்ள ஜனாதிபதியின் புகழ் என்று ஒட்டுமொத்தமாக ஆளுங்கட்சிக் கூட்டமைப்புக்கு (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) வெற்றிலையில் வைத்து வெற்றி கொடுக்கப்படும் என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது.
(வெற்றிலை தான் ஆளுங்கட்சியின் தேர்தல் சின்னம்)

இந்த நிலையில் தான் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிடத் தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையின் முன்னணி செல்வந்தர், தொழிலதிபர்களில் ஒருவரும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவருமான திலங்க சுமதிபால.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு பெருமளவில் காரணமான சுமதிபால (பல்வேறு ஊழல்களிலும் இவர் பெயர் அடிபட்டபோதிலும்) தம்புள்ளவில் புதிய சர்வதேச மைதானம் அமைப்பதிலும், சர்வதேச அரங்கில் இலங்கை கிரிக்கெட் புகழ்பெறவும் காரணமாக இருந்தவர்.

முன்னைய ஆட்சியில் (சந்திரிகா) ஒதுக்கப்பட்டிருந்த சுமதிபாலவை, அவரது பரமவைரியான முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரும், பிரதி அமைச்சரும், அண்மையில் கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு – அதிருப்தியடைந்திருப்பவருமான அர்ஜீன ரணதுங்கவைப் பின் தள்ள இந்த மாகாணசபைத் தேர்தல் மூலமாக அரசியலரங்குக்குக் கொண்டுவரப்பட்டார்.

பணத்தை அள்ளி வீசிப் பிரம்மாண்டபிரசாரத்தில் இறங்கியுள்ளார் சுமதிபால.



கொழும்பின் பிரதான வீதியில் (Galle road) சுமதி பத்திரிகை குழுமம் என்ற சுமதிபாலவுக்கு சொந்தமான நிறுவனத்தின் 4மாடிக் கட்டடம் ஒன்றில் தொங்க விடப்பட்டுள்ள பிரம்மாண்ட flex  பதாதை/சுவரொட்டியே இது!

 திலங்கவின் சாதனைகளில் முக்கியமானதெனக் காட்டப்படும் தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானமே இந்த விளம்பரத்திலும் முன்னிறுத்த / பின்னிறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரத்தில் காணப்படும் சிங்கள வாசகங்கள் -  
  • வேலை செய்கிற திலங்க
  • கொழும்பு மாவட்டத்திலிருந்து மேல் மாகாண சபைக்கு
  • மேல்மாகாணத்தை புதிதாக்குவோம்..

படங்களை எடுத்தவர் நண்பர் விமல்..

விளம்பரங்களும், வீசப்படும் பணமும் திலங்கவின் வெற்றியை உறுதி செய்துவிடும்!

பணம் இருந்தால் நான்கு மாடிக்கென்ன 40 மாடிக்கும் விளம்பரப் பதாதை தொங்கவிடலாம்!



April 23, 2009

உலகின் மோசமான ஒரு நாள் அணி ஆஸ்திரேலியா !!!


எப்படி இருந்த அணி இப்படியாகி விட்டது.. 

நடப்பு உலக சாம்பியன்.. அண்மைக் காலம் வரை உலகின் ஒரு நாள் தரப்படுத்தலிலும் முதல் இடத்தில் இருந்த அணி (இப்போதும் டெஸ்ட் போட்டிகளின் ICC  தரப்படுத்தலில் முதலிடம் தான்) என்று பல பெருமைகளை உடைய ஆஸ்திரேலியாவுக்கு இந்த வருட ஆரம்பம் முதல் ஏழரை சனியன் பிடித்துள்ளது.. 

இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய ஒருநாள் போட்டிகளில் ஆறில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இவ்வளவு மோசமான பெறுபேறு எப்போதும் கிடைத்ததில்லை.

இப்போதெல்லாம் இப்படியான சந்தோஷ தருணங்கள் அரிதிலும் அரிது..

நேற்று துபாயில் இடம் பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் பெற்ற தோல்வி ஆஸ்திரேலிய அணியின் இறங்குமுகத்தின் மற்றொரு சான்று.தென் ஆபிரிக்காவுக்கு எதிராகக் கிடைத்த அடுத்தடுத்த இரண்டு ஒரு நாள் தொடர் தோல்விகளுக்கு அடுத்ததாக இந்த தோல்வி நிச்சயமாக ஆஸ்திரேலிய அணியை இன்னமும் மனதளவில் பாதிக்கும்.

அண்மைக்காலமாகவே சுழல் பந்துவீச்சாளர்களிடம் மாட்டிக் கொண்டு தவிப்பது ஆஸ்திரேலியாவுக்கு இப்போது வழக்கமான சாபம் ஆகிவிட்டது. சாதாரண சுழல் பந்துவீச்சாளர்களையும் ஸ்டார்கள் ஆக்கி விடுகின்றார்கள்.. கடந்த மூன்று மாதங்களாக தென் ஆபிரிக்காவின் சுழல் பந்து வீச்சாளர் ஜொகான் போதாவிடம் சுருண்டவர்கள், (இப்போது அவரது பந்துவீச்சு பாணி சர்ச்சைக்குரியதாகி அவர் மாட்டிக் கொண்டார்) நேற்று அப்ரிடி, மற்றும் புதிய பாகிஸ்தானிய சுழல் பந்து வீச்சாளர் அஜ்மலிடம் மாட்டிக் கொண்டனர்.  

பல சிரேஷ்ட வீரர்களின் ஓய்வும்(retirement), ஆஷஸ் போன்ற தொடர்களுக்காக இன்னும் சில ஓய்வு (rest) தேவைப்படும் முன்னணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வும் பல முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களும், உபாதைகள்,காயங்கள் குணமடைய எடுக்கும் நீண்ட காலமும் ஆஸ்திரேலியாவின் தொடர் இறங்குமுகத்துக்கான காரணமாக எடுத்துக் கொள்ளலாம். 

இப்படியே ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானிடம் எஞ்சிய நான்கு ஒரு நாள் போட்டிகளையும் தோற்றால், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் மிக மோசமான தரப்படுத்தலான நான்காம் இடத்துக்கு தள்ளப்படும். 

முன்பெல்லாம் ஒரு வீரர் ஓய்வு பெரும் போதோ, ஒரு வீரருக்கு ஓய்வு கொடுக்கும் போதோ, ஒரு வீரர் காயமடையும் போதோ பொருத்தமான,தகுதியான சிறப்பான ஒரு இளைய,புதிய வீரர் பிரதியிடப்படக் கூடிய தரமுயர்ந்த ஆஸ்திரேலியாவிற்கு என்னவாயிற்று? திறமைகளுக்கு பஞ்சமா? பொருத்தமான வீரர்களைத் தெரிவு செய்வதில் கஞ்சமா?

ஒரு பக்கம் துபாயில் ஆஸ்திரேலிய தேசிய அணி சுருண்டு கொண்டிருக்க, நேற்று தென் ஆபிரிக்காவில் IPLஇல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்க்ரிஸ்ட் புயலாக அடி தூள் பரத்திக் கொண்டிருந்தார்.. அவரது முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட சகாவான மத்தியு ஹெய்டனும் சென்னை அணிக்காக கலக்கி வருகிறார். இவர்களின் ஓய்வின் பிறகே ஆஸ்திரேலியாவின் இந்த சரிவை ஆரம்பித்து வைத்து விட்டுள்ளது. 

                                        கில்லி இன்னும் கில்லி தான்..

இருவரும் அடித்து நொறுக்கும் விதத்தை பார்த்தால் இன்னும் கொஞ்சக் காலம் விளையாடி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது..   

இப்படி மோசமான நிலையில் ஆஸ்திரேலியாவின் ஒரு நாள் அணியின் நிலை இருக்கையிலும் அணியின் தலைவர் பொன்டிங்க்க்கு ஓய்வு வழங்கியதை பொன்டிங் விரும்பி இருக்கவில்லை. எனினும் ஆஷஸ் மற்றும் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தை முன்னிட்டே பொன்டிங், ஹசி போன்ற சிரேஷ்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

எப்படி ஆஸ்திரேலியா இந்தப் பின்னடைவிலிருந்து மீண்டெழும் என்பதே இப்போது எனதும், பிற விளையாட்டு விமர்சகர்களதும் பெரிய கேள்வியாகும்..   




April 21, 2009

ஐயாவிடம் (கலைஞர்) மன்னிப்பு & 'ஐ'க்கு நன்றிகள்

                                                         படம் உபயம் - என்வழி

கலைஞர் ஐயா தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள்... 
கலைஞர் ஐயா நீங்கள் பெரியவர் – நான் அறியாமை நிறைந்த சிறுவன். உங்களைப் பற்றி மீண்டும் ஒரு தடவை தவறாக எழுதிவிட்டேன். பாமரர்களாகிய எம்மைப் போன்றோருக்கு உங்கள் சங்கத் தமிழின் மறைபொருள் அர்த்தம் புரியாமல் நேரடி அர்த்தம் மட்டுமே கொண்டுவிட்டேன்.

நேற்று என் பதிவு போட்ட பின் தான் உங்கள் மறுப்பறிக்கையை பார்த்தேன் ஐயா. 
நீங்கள் மறுபடி ஏதாவது மறுப்பறிக்கை விட்டுவிடுவீர்களோ என்று நான் எனது பதிவில் எந்தத் திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை.

பிரபாகரனை நண்பர் என்று நான் சொன்னேனா என்டிடிவி செய்தி தவறு - மு.கருணாநிதி
[ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009, 06:40.44 AM GMT +05:30 ]
விடுதலைப்புலிகளின் தலைவரை நண்பர் என்று சொன்னதாக தொலைக்காட்சி நிறுவனம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர் என்று முதல்வர் சொன்னதாக என்.டி.டி.வி. ஆங்கில செய்திச்சேனல் நேற்று செய்தி வெளியிட்டது. 

இது குறித்து காங்கிரசார் அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இலங்கை அரசாங்கமோ, கருணாநிதி என் நண்பர். அவர் பிரபாகரனை தன் நண்பர் என்றுவிட்டாரே என்று கவலை தெரிவித்திருந்தனர். 

கலைஞர் பிரபாகரனை நண்பர் என்று சொன்னதில் ஈழ ஆதரவாளர்கள் மகிழ்ந்திருந்திருந்தனர். கலைஞர் இப்படி பேசியது தேர்தல் நேரம் என்பதால் இப்படி பேசியிருக்கிறார் என்றும் விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று, ‘ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது'என்று விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோருவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு " இலங்கையில் போர் முடியும் வரை போரை நிறுத்தக்கூறிக் கொண்டே இருப்போம்" என்றார்.


நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி
திங்கள்கிழமை, ஏப்ரல் 20, 2009, 12:39 [IST]
  
      

சென்னை: நான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

அதேசமயம், கருணாநிதி அடித்துள்ள தேர்தல் நேரத்து ஸ்டண்ட் இது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.

அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை.

தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.

என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.

விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.




உங்கள் 'நண்பரை' நீங்கள் 'ராஜீவ் கொலை' விடயத்தில் மன்னிக்கவே கூடாது என்று சொல்லியிருக்கிறீர்கள்.

ஆதாரம் - NDTV

நேற்று முன் தினமோ அவர் பயங்கரவாதியே அல்ல என்று நீங்கள் உங்கள் அதே வெண்கலக்குரலில் சொல்லியதைக் காணொளியாக NDTVயில் கண்டேன்.

அப்படியானால் அதன் அர்த்தமே உங்கள் தமிழில் வேறா ஐயா? அதுசரி நான் கற்ற தமிழ் உங்கள் முத்தமிழுக்கு முன்னால் வருமா?

எனது நண்பர் கஞ்சிபாய் கலைஞரின் அண்மைக்கால அறிக்கைகள் 'தொட்டால் பூ மலரும்' திரைப்படத்தில் என்னத்தே கண்ணையா சொல்கின்ற 'வரும்.... ஆனா வராது' என்பது போலவே இருப்பதாக நேற்று எனக்கு சொல்லியிருந்தார்.

தமிழினத் தலைவரை அப்படியெல்லாம் விஷமமாக வேடிக்கை பண்ணக்கூடாது என்று ஏசிவிட்டேன் அவரை!

கலைஞர் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் அதில் ஒரு உள்ளார்ந்த அர்த்தமும், எதிர்காலத்துக்கான தொலைவு நோக்கும் இருக்கும் என்று நம்பும் கோடிக்கணக்கான தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று கஞ்சிபாய்க்கு புரியச்செய்தேன்.

ஆனால் ஒரு சில சந்தேகங்கள் ஐயா – 

பேட்டி கொடுக்கக் காரணமும், பின் அதை மறுத்து உங்கள் கட்சியினதும் உங்களினதும் எதிரிகள் NDTV நிறுவனத்தினர் என்று கோரிக்கை விடுவதும் எந்த சாணக்கியம்?

உங்கள் பேட்டி மூலமாக நீங்கள் பெற்ற ஆதரவை விட, மறுப்பறிக்கை மூலம் நீங்கள் அதிகமான எதிர்ப்பை பெற்றதாக அரசியல் அவதானிகள் சொல்கிறார்களே உண்மையா ஐயா?

ஸ்டாலின் பதவிக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகளா? 
சுப்ரமணியம் சுவாமியை ரொம்ப நாளாகக் காணலையே என்று பார்த்திருந்தால் நீங்கள் அவரையும் தூக்கி சாப்பிட்டு விடுவீர்கள் போல – 

இலங்கை இராணுவத் தளபதி சொன்னதில் தப்பில்லையே? (கோமாளிகள்.....)
(நன்றி ஆதிரையின் பின்னூட்டம்)

..................................................

IPL போட்டிகளை ஒளிபரப்பும் SONY MAX தொலைக்காட்சி எங்கள் வீட்டிலுள்ள கேபிளில் வருவதில்லை!

இதனால் IPL தொடக்கியும் எனக்குத் தொடங்காத மாதிரி ஒரு ஃபீலிங்! IPL தொடங்கிய அன்று எங்கள் அலுவலகத்தில் பிரிவுகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெற்றது. ( Inter Division Cricket Tournament) மாலை வரை அந்தப் பரபரப்பினாலும், எமது வெற்றி (நிகழ்ச்சி மற்றும் செய்திப்பிரிவுகள் இணைந்த) அணி 2ம் இடத்தைப் பிடித்த ஓரளவு திருப்தியும் IPL பரபரப்பைக் கூடியளவு மறக்கடித்துவிட்டது.

பின்னர் இரவு 9.30 வரை அலுவலகத்தில் இருந்ததனாலும், ஞாயிறும் அலுவலகப்பணி இரவு நேரம் இருந்ததனாலும் அலுவலகத்தில் Sony Max இணைப்பு இருப்பதனால் ஓரளவு போட்டி பார்க்க முடிந்தது.

எனினும் இரவு 7 மணி போல தொடர்பு கொண்ட நண்பரொருவர் தான் அந்த சந்தோஷமான, ஆறுதலான செய்தியை சொன்னார்...

இலங்கையின் அரச தொலைக்காட்சி 'CHANNEL EYE' IPLஐ இனித் தொடர்ந்து ஒளிபரப்பும் என்று!

'ஐ'க்கு நன்றி! நன்றி! நன்றி!

'ஐ'யில் பார்த்த முதல் போட்டியே எனக்குப் பிடித்த சென்னை சூப்பர் கிங்சுக்கு அபார வெற்றி. அதுவும் நம்ம ஹீரோக்கள் ஹெய்டனும், முரளியும் பெற்றுக் கொடுத்த வெற்றியில்லையா?

வயதேறினாலும் சிங்கங்கள் சிங்கங்கள் தான்!

இந்த IPL தொடங்கியதிலிருந்து இளம் வீரர்களைவிட சிரேஷ்ட வீரர்களான சச்சின், சனத், டிராவிட். கும்ப்ளே, வோர்ன், ஹெய்டன், முரளி என்று இளவயது வீரர்களின் விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் T - 20ஐயெ மாற்றிப் போட்டு பின்னியெடுக்கிறார்கள்!

'ஐ' மூலமாக என் வீட்டிலும் இனி IPL திருவிழா தான்!

CSK இன் வெற்றிப்பயணம் தொடரட்டும்!


April 20, 2009

'பிரபாகரன் எனது நண்பன்'

Loshan

நேற்று பிற்பகல் வீட்டில் ஓய்வாக இருந்த நேரம் IPL சிறப்புத் தொகுப்புப் பார்ப்பதற்காக NDTV பார்க்க காத்திருந்த நேரம் - 

Breaking News என்று வெளியான செய்தி தான்.

"Prabahakaran is my friend and I’m not a terrorist"  (பிரபாகரன் எனது நண்பர் அத்துடன் நான் தீவிரவாதியல்ல – கருணாநிதி)

என்னை நானே கிள்ளிப் பார்த்தேன். நடப்பது நிஜமே.

இன்றும் தமிழக முதல்வர் கருணாநிதி சொன்னதாக NDTV ஒளிபரப்பிய விஷயங்கள் மென்மேலும் ஆச்சரியமளித்தன.

"பிரபாகரன் கொல்லப்பட்டால் மிக வருத்தமடைவேன்"

"விடுதலைப் புலிகளில் இருக்கும் ஒரு சிலர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள்"

"விடுதலைப் புலிகளின் நோக்கங்கள் - இலட்சியங்கள் நியாயமானவை. எனினும் கைக்கொள்ளும் வழிமுறைகள் தவறானவை"

இதற்கு மேலும் போய் - 
"பிரபாகரன் ஒரு தீவிரவாதியல்ல" என்றும் கலைஞர் சொல்லியிருக்கிறார்! 

என்னாச்சு திடீரென்று தமிழக முதல்வருக்கு?

திடீர் ஞானோதயமா? தேர்தல் கால தந்திரோபாயமா?
ஒண்ணுமே புரியல இந்த உலகத்தில!

நேற்று முன்தினம் ஜெயலலிதா அறிவித்த தமிழீழக் கதைக்குப் போட்டியாகவா இந்தப் பேட்டி? இல்லை தமிழகத்தில் ஈழத்தமிழர் போராட்டத்தில் கூடுதல் அக்கறையுடையவர் தானே என நிலைநிறுத்தும் ஒரு முயற்சியா?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி தமிழக முதல்வர் இப்படிப் 'புகழ்ந்து' தள்ளிய காரணம் எது?

'நண்பர்.. பயங்கரவாதியல்ல' போன்ற வார்த்தைகளையெல்லாம் - புலிகளைக் கடுமையாகச் சாடி வரும் காங்கிரசின் கூட்டணியில் இருந்து கொண்டே கலைஞர் சொன்ன காரணம் என்ன?

இதற்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியையும், கலைஞரின் தனிப்பட்ட கருத்துக்களாகவுமே இவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கின்றனர்.

காங்கிரஸின் தலைவர் கபில் சிபல் "இந்திய அரசின் பார்வையில் பிரபாகரன் ஒரு குற்றவாளி" என்று வெட்டொன்று துண்டிரண்டாய் பதில் சொல்லிவிட்டார்.

பாரதிய ஜனதாவோ ஒரு படி மேலே போய் இதனைக் கண்டித்துள்ளது.அப்பாவித் தமிழ் மக்களுக்காகப் பரிந்து பேசுவது வேறு – புலிகளுக்கு ஆதரவாய் பேசுவது வேறு என்று ஆணித்தரமாக BJP தலைவர் ஜவேட்கர் சொல்லிவிட்டார்.

கருணாநிதி வாக்கு சேர்க்கும் வங்குரோத்து அரசியலே மேற்கொள்வதாக BJP சொல்லியிருக்கிறது.

NDTVயும் சும்மா இருக்காமல் பரபரப்பு வியாபாரத்துக்காக இதை பி.ப 2 மணியிலிருந்து இரவு வரை கலைஞரின் இந்தப் பேட்டியையே பல்வேறு விதமாக அலசி, பல கட்சிகளையும் சேர்ந்த பல பேரையும் தொடர்பு கொண்டு, கிண்டிக்கிளறி இன்றைய பல பத்திரிகைகளுக்கும், எம்மைப்போன்ற பதிவர்களுக்கும் தீனி போட்டது.

எல்லாவற்றிலும் உச்சபட்ச கொடுமை இலங்கையின் அமைச்சரும் பாதுகாப்பு தொடர்பான பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்லவையே தொடர்புகொண்டு, கலைஞரின் இந்தப் பேட்டியையே பார்த்திராத, அது பற்றி எதுவுமே தெரிந்திராத அவரிடம் இது பற்றி போட்டுக் கொடுத்து 'சிண்டு' முடிந்தும் வைத்தது NDTV.

இதற்குள்ளும் திட்டமிட்டு கலைஞரை வலைக்குள் வீழ்த்துவது போல இலங்கை அமைச்சர் ரம்புக்வெல்லவிடம் 'கருணாநிதியின் பேட்டி பற்றி இந்திய மத்திய அரசிடம் இலங்கை அரசின் மூலம் உத்தியோகபூர்வமாக கண்டனம் தெரிவிப்பீர்களா' என்ற கேள்வியையும் அந்த தொகுப்பாளர் (அவரே தான் கலைஞரையும் பேட்டி கண்டிருந்தார்- NDTVயின் முகாமைத்துவ ஆசிரியராம்) கேள்வியெழுப்பியிருந்தார்.

காங்கிரஸ் எந்த ஒரு கருத்தையும் உத்தியோகபூர்வமாக சொல்லாமல் இருக்கும் நிலையிலும் மீண்டும் மீண்டும் "காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இதுவரை எந்த ஒரு காட்டமான அறிக்கையும் வரவில்லை" என்று NDTV தொகுப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருந்தமை அவர்களாகவே வலிந்து ஒரு பரபரப்பை அரசியல் அரங்கில் ஏற்படுத்தி, தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார்களோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது..

ஒரு பேட்டியிலேயே பலர் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய சாணக்கியம் கலைஞருக்கே உரியது.. இதற்காக வருடக் கணக்கான காலப் பகுதிக்கு முன்னர் இடம் பெற்ற நிகழ்வை எல்லாம் (பிரபாகரனின் Frontline பேட்டி) கலைஞர் பட்டியலிட்டு சொன்னதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.. இவ்வளவு காலமும் அல்லல் படும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தாலும், உருப்படியான நடவடிக்கை எடுக்காமலிருந்தவர் என்ற அவப்பெயருக்கு ஆளாகியிருந்த கலைஞர் இந்த பரபரப்பு பெட்டி மூலம் தமிழ் மக்களின் மனதையும், ஈழ்த் தமிழ் ஆதரவு வாக்குகளையும் ஈர்த்து விட்டார் என்று நினைத்தால் அனைத்து தமிழரையும் கலைஞர் முட்டாள்களாக நினைக்கிறார் என்றே அர்த்தம்.

எனினும் தனது மனதைத் திறந்த பேட்டியாக இதை வழங்கி இருக்கிறார் என்று எடுத்தால் இந்திய தேர்தல்களின் மத்தியில் இதை இவ்வளவு காலமும் இன்றி இப்போது சொல்லக் காரணம் என்ன என்ற சந்தேகமும் வருகிறது..
(ஒரு வேளை பிரபாகரன் இனி பேட்டி ஒன்றும் கொடுக்க முடியாத நிலைக்கு உள்ளாவார் என்று கலைஞர் தீர்மானித்து விட்டாரா?) 

  பலரும் எதிர்பார்த்தது போல இலங்கை அரசு இது பற்றி இதுவரை இந்திய மத்திய அரசிடம் முறையிடாதது என்னைப்பொறுத்தவரை ஆச்சரியமே இல்லை.. எனென்றால் இலங்கை அரசு இந்திய மத்திய அரசையே பெரிதாக கணக்கில் எடுக்காத பொது கலைஞரின் கருத்து எம்மாத்திரம்? 

பி.கு - இதை வாசித்தவுடன் கலைஞரின் அன்பர்கள்/அபிமானிகள் (வாலுகள்,அடியாட்கள் என்ற பதங்களை நான் எதிர்க்கிறேன்) 'அதுசரி கலைஞரை எதிர்க்கும் உங்களுக்கு ஜெயலலிதா தங்கத் தட்டில் தருவார் பார்த்திருங்கள்' என்று முட்டாள் தனமாக பின்னூட்டம் இடவேண்டாம்.. 

காரணம் தமிழரை ஓரளவாவது யோசித்துப் பார்க்கிற கலைஞரே இப்படியென்றால் அந்த அம்மையார் ஒரு மண்ணாச்சு.. மட்டையாச்சு..  





April 17, 2009

IPL அவல் - 2.. இன்னும் சில ஜிலு ஜிலு படங்களுடன்

நாளைக்கு ஆரம்பிக்கப்போகிற IPL போட்டிகள் பார்ப்பதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருப்பீர்கள். (என்னைப் போல)

IPL அவல் பதிவு தந்து 24 மணித்தியாலங்களுக்குள் பகுதி – 2 போடக் கூடியளவுக்கு இன்னும் பல சுவாரஸ்ய நிகழ்வுகள்.

மே மாதம் 24ம் திகதி வரை தினம்தோறும் எங்கள் வீடுகளுக்கு வந்து மெகா சீரியல் பார்க்கும் பெண்களுக்கு தலைவலி தரப்போகும் IPLஇன் நாளை முதல் நாளில் இடம்பெறும் போட்டிகள்.
Chennai Super Kings v Mumbai Indians at Cape Town
Bangalore Royal Challengers v Rajasthan Royals


நேற்று IPL மூலம் வெளியிடப்பட்ட தகவலின் படி வழமையாக ஒரு Twenty - 20 போட்டிக்காக எடுக்கும் கால அளவை விட இம்முறை IPL T-20 போட்டியொன்றுக்கு 15 நிமிடங்கள் அதிகம் எடுக்குமாம்.
கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் பணமாக மாற்ற வழி பார்த்துக்கொண்டிருக்கும் லலித்மோடி குழுவினர் இந்த 15 நிமிடங்கள் மூலமாகவும் சம்பாதிக்கப்போவது பலமில்லியன்கள்.
மைதானங்களில் பார்ப்போருக்கு நேரடி நடன விருந்து.. ம்ம்ம் குடுத்து வச்சவங்க
தொலைக்காட்சியில் பார்க்கும் எங்களைப் போன்றவருக்கு (அப்பாவிகள்) 7 1/2 அந்த நிமிடங்களும் (2 தரம்) ஏதாவது சுவாரஸ்யமாத் தருவாங்களாம்.. அதுக்கும் அனுசரணை இருக்காமாம்.

IPL fever இப்போது தென்னாப்பிரிக்காவில்!

ஒரு கண்கவர் வீதியுலாவில் தென்னாபிரிக்காவே நேற்று களபரமாகி – கலவரப்பட்டுவிட்டது.
தென்னாபிரிக்க வீதிகளில் எப்போதும் இப்படி ஒரு நட்சத்திர ஊர்வலம் நடந்திருக்கப் போவதில்லை! இனியும் நடக்க வாய்ப்பில்லை! பொலிவூட்டின் உச்சபட்ச நட்சத்திரங்கள் - ஷாருக்கான், ப்ரீத்தி ஸிந்தா, ஷில்பா ஷெட்டி-
நூற்றுக் கணக்கான நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்
மில்லியன் கணக்கான ரூபாய்கள், டொலர்களைத் தம் வசம் வைத்துள்ள பெரும் பணக்காரர்கள்




இருந்து பாருங்கள் இம்முறையும் IPL களைகட்டும் - நடப்பது தென்னாபிரிக்காவிலாக இருந்தாலும்!


இந்தியாவின் இரு முக்கிய நட்சத்திரங்கள் மீது நேற்றைய கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் M.S.கில்

பத்மஸ்ரீ என்ற இந்தியாவின் உயர்விருதை வாங்க சமூகமளிக்காத தோனி மற்றும் ஹர்பஜன் மீதே இந்தக் கோபம்.

நாட்டின் உயரிய விருதுக்கே மதிப்பளிக்காத அளவு IPL பணம் படுத்தும் பாடு பெரும்பாடு.

காயங்களால் பலபேரை இழந்துள்ள பரிதாப அணி பஞ்சாப். கடந்த முறை பஞ்சாபுக்காக அதிக விக்கெட்டுக்களை எடுத்த ஸ்ரீசாந், அதிவேக பிரெட் லீ, அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ்,
தற்போது மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து நட்சத்திரம் ஜெரோம் டெய்லரும் விபத்தில் சிக்கிவிட்டார். எஞ்சியிருப்பது இர்ஃபான் பதான், V.R.V.சிங் மற்றும் ரமேஷ் பவார்.
துடுப்பாட்டம் தான் பஞ்சாப் கிங்ஸ் XIஐக் கொண்டு செல்லும் என்று நம்பவேண்டி உள்ளது. யுவராஜ், மகேல ஜயவர்தன மற்றும் குமார் சங்ககார.
எல்லா IPL அணிகளுக்கும் பொலிவூட் நட்சத்திரங்கள் பொலிவு சேர்த்து ஜொலிப்பு காட்டிவரும் நிலையில் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி ஒரு மூச்சையும் காணோம்.

டாக்டர் இளைய தளபதி பற்றி சைலன்ஸ்! (அதான் பேசாம இருக்காரில்ல...) –
தென்னாபிரிக்கா போவாரா?
நயன்தாராவைத்தான் தூதுவரா இருந்து தூக்கிப் போட்டாச்சு... தோனியின் சிபாரிசில் அவரது 'நண்பி'யான லக்ஷ்மிராய்க்காவது வாய்ப்பைக் கொடுத்தால் என்ன?

குறைந்தபட்சம் அதிக 'வெயிட்' கொடுக்க நமீதா?
இம்முறை IPLஇன் form இலுள்ள பலம் வாய்ந்த துடுப்பாட்ட அணி எது என்று கேட்டால் - எந்தவித யோசனையுமில்லாமல் நான் சொல்லும் பதில் டெல்லி டெயார் டெவில்ஸ்!!

உலகின் அத்தனை அதிரடி, அச்சுறுத்தும் துடுப்பாட்ட வீரர்களையும் நிரப்பி வைத்துள்ளார்கள்.

உலகின் எந்தவொரு சிறந்த பந்து வீச்சாளனையும் அடித்து நொருக்கும் அகோரப் பசியிலுள்ள இந்திய ஜோடி வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீருடன், அவுஸ்திரேலியாவின் புதிய அதிரடி இளம்புயல் டேவிட் வோர்னர், தென்னாபிரிக்காவின் அண்மைக்கால சூப்பர் ஸ்டார் A.B.டீவில்லியர்ஸ் (இவர் நம்ம ஜாதிங்கோ – பதிவர் – சொடுக்கி வாசியுங்கோ), இலங்கையின் அண்மைக்கால அதிரடி வீரர் T.M.டில்ஷான் என்று அணி களைகட்டுகிறது.

இவர்களோடு இந்தியாவின் உள்ளுர் போட்டிகளில் வெளுத்து வாங்கியுள்ள தினேஷ் கார்த்திக், மனோஜ் திவாரி....
பந்து வீச்சில் வேறு கிளென் மக்ரா, நியூ சீலந்தின் வெட்டோரி, ஃபர்வீஸ் மஹ்ரூப், தமிழகத்தின் யோமகேஷ், அமித் மிஷ்ரா என்று பளபளப்பதால் இறுதிப்போட்டிகள் வரை டெல்லி திக்விஜயப் போகலாம்!

(ஆனா ரொம்பவும் அமைதியா இருக்காங்களே....)

தென்னாபிரிக்க மண்ணின் வளத்தையும் வாய்ப்பையும் தனதாக்கும் எண்ணத்தில் உற்சாகமாய் இருக்கிறது விஜய் மல்லையாவின் பெங்களுர் ரோயல் சலன்ஜர்ஸ்.

கடந்த முறை அதிகம் செலவளித்தும் கவிழ்ந்து போக கடுப்பில் இருந்த மல்லையா – 'சுவர்' டிராவிட்டை தலைமைப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு – மிகஅதிக விலையில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனன் (இவர் பிறப்பால் ஒரு தென்னாபிரிக்கர்) தலைவராக்கி – மேலும் தென்னாபிரிக்க பலத்தோடு வெற்றிகளை எதிர்பார்த்திருக்கிறார்.

ரோயல் சலன்ஜர்ஸின் ஜக்ஸ் கல்லிஸ், மார்க் பௌச்சர், டேல் ஸ்டெயின் என்று மூன்று பேருமே இப்போது form உடன் கலக்கிக்கொண்டிருப்பவர்கள்.
கடந்த முறை இந்த மூவருமே இந்தியாவில் சோபிக்கவில்லை. இம்முறை சொந்த மண்ணில் பிரகாசிப்பார்கள் என்று விஜய் மல்லையா நம்பியிருக்கிறார். (இந்த முறையும் கட்ரீனா கைப் வருவாங்களா? )
நம்ம நண்பர் கஞ்சிபாய் சொன்னார் ரோயல் சலன்ஜர்ஸின் எது சொதப்பலாக இருந்தாலும் Cheer leadersல அவங்க தான் best ஆம்!

எல்லாம் மல்லையாவின் ராசி & ஆசி

படங்கள் நன்றி -cricinfo மற்றும் பல தளங்கள்


April 16, 2009

IPL அவல் ... குளு குளு கிளு கிளு படங்களுடன்


நாளை மறுதினம் கிரிக்கெட்டின் களியாட்டத் திருவிழாவான IPL 2009 தென் ஆபிரிக்காவில் ஆரம்பிக்கப் போகிறது.

ஒரு விறு விறுப்பான திரைப்படத்துக்குரிய அத்தனை திருப்பங்கள்,மர்மங்கள்,பிரம்மாண்டங்கள் இவற்றுடன் கதாநாயகர்கள்,கவர்ச்சிக் கன்னிகளுடன் (Cheer girls & bollywood beauties) இந்தத் திருவிழாவை எதிர்பார்த்து என்னைப் போல உங்களைப் போல உலகம் முழுதும் ஏராளமானோர் காத்திருக்கிறோம்..

ஒவ்வொரு நாளும் பற்பல திருப்பங்கள்.. புதுப் புது பரபரப்புக்கள்.. 

 Action ஹீரோக்களும்,கட்டழகிகளும் பண முதலைகளும் ஸாரி முதலாளிகளும் IPLஇல் அங்கம் வகிப்பதால் ஒவ்வொரு நாளும் புதுப் புது செய்திகளுக்குக் குறைவில்லை..

கிரிக்கெட் ஆர்வம் இல்லாதோருக்கும் (நம்ம புல்லட் மாதிரி ஆக்கள்) இந்த செய்திகள் அவல் தான்..

என்ன தான் விவகாரம் நடந்தாலும் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்த பிறகு எல்லாம் கிரிக்கெட் மயமாகி விடும் என்று நம்புவோமாக..

இதோ இந்த வார IPL அவல் துளிகள்.. 

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிலிருந்து ஏழு வீரர்களை 'தேவையில்லை போங்கப்பா' என்று சொல்லி திருப்பி இந்தியா அனுப்பப்பட்டுள்ளார்கள்..

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும்,எதிர்கால இந்திய அணியின் தலைவர் என்றும் உச்சத்தில் வைக்கப்பட்ட மொகமட் கைபும் (Kaif) அதில் ஒருவர் என்பது தான் விஷயமே.. 

எப்படி இருந்தவர் எப்படி ஆயிட்டார்?

 ஷேன் வோர்ன் எப்போதுமே ஒரு மந்திரவாதி தான் போலும்..  நட்சத்திரங்களே அதிகளவில் இல்லாத ஒரு அணியான ராஜஸ்தானை கடந்த முறை சாம்பியன் ஆக்கிக் காட்டியதில் அவர் பங்கு எவ்வளவுன்னு எல்லோருக்குமே தெரியும்.

இந்த முறை ஷேன் வொட்சன்,சொகைல் தன்வீர்,கம்ரன் அக்மல் இல்லாமல் என்ன செய்யப் போகிறார் என்று பார்த்தால், அவரது அடியாளான (அடித்து ஆடுவதால்) யூசுப் பத்தானுடன், கம்ரான் கான் என்ற புதுமுகப் புயலுடன் வந்திருக்கிறார்.. 

பதினெட்டு வயதே ஆன கம்ரான் இம்முறை எல்லா எதிரணி துடுப்பாட்ட வீரர்களையும் கதற வைப்பார் என்கிறார் வோர்ன்.. பார்ப்போம்..

  மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களுக்கு இம்முறை கொண்டாட்டம் தான் போங்கள்.. (எந்த ஒரு பாலிவுட் நாயகியும் அவர்களது உரிமையாளராக இல்லாவிட்டாலும்) 

அம்பானியின் அணியாயிற்றே.. கொழுத்த பணப்பரிசுகளுடன் உலகின் பிரபல நட்சத்திர வீரர்கள் பலபேரை (சச்சின்,சனத் ஜெயசூரிய,சகீர் கான், பிராவோ, ஹர்பஜன் உட்பட) தன்னகத்தே கொண்டிருக்கும் மும்பை இம்முறை வெற்றிக் கிண்ணத்தை பெறும் வாய்ப்புடைய  அணிகளில் முக்கியமான ஒன்று.

இப்போது மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு தங்கத்திலும் வைரத்திலும் குளிக்கும் வாய்ப்பு.. ஒவ்வொரு தடவையும் ஒரு மும்பை வீரர் போட்டி சிறப்பாட்டக்காரர் விருதை (Player of the match) வெல்லும் போதும் அவருக்கு தங்கத்தாலும் வைரங்களாலும் இழைக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்படவுள்ளது.. 

கங்குலி,புக்கானன் பிரச்சினையைத் தீர்த்து/அடக்கியது, கவாஸ்கருக்கு எதிரான ஆவேசம், பின்னர் அடங்கி காவஸ்கரிடம் மன்னிப்பு கோரியது என்று போல்லிவூடின் கனவு நாயகன் ஷாருக் கான் ஏக பிசி..

இவ்வளவு பிசியிலும் தானே மினக்கெட்டு தனக்கு தெரிந்த நடிகைகள்,நடிகர்கள் ஆகியோரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஆதரவு தருமாறு அன்போடு அழைக்கிறாராம்..  (நானும் சப்போர்ட் பண்ண ரெடி தென் ஆபிரிக்கா கூட்டிட்டு போவிங்களா?)

தோனி விட்டாலும் நம்ம லக்ஷ்மி ராய் விடுற மாதிரி இல்லை.. நேற்று NDTV தொலைக்காட்சியில் தங்கள்'உறவு' பற்றி விரிவாக அலம்பல் பண்ணிக் கொண்டிருந்தார்..

இதுல வேற மும்பை பக்கம் போய் ஹிந்தி படங்களில் தனது 'திறமை'யைக் காட்டப் போறாராம். தோனியுடனான கிசு கிசு பப்ளிசிடியை நல்லாப் பயன்படுத்துறாங்கோ.. 
(நல்லா படுத்துங்கோ.. ஸாரி.. நடத்துங்கோ)

ஆஸ்திரேலிய வீரர்களின் பிசி,ஓய்வு, IPLக்கு வராமல் ஆஷசுக்கான தயார்ப்படுத்தல்களால் அதிகமாகப் பாதிக்கப்படப் போகின்ற அணி பஞ்சாப் கிங்க்ஸ் XI ஆகத் தான் இருக்கும்..

கடந்த வருடம் கலக்கிய ஷோன் மார்ஷ்,ஜேம்ஸ் ஹோப்ஸ் இருவருமே இம்முறை இல்லை.
இவர்களுக்கு பதிலாக இம்முறை இங்கிலாந்தின் ரவி போபரா பிரகாசிப்பார் என்று நம்புகிறார் ப்ரீத்தி சிந்தா.. (உரிமையாளருங்கோ)

இதுல உள்ள விசேஷம் என்ன என்றால் போபராவின் வம்சாவளி வழியாக அவருக்கு பஞ்சாப் தொடர்புகள் இருக்காம்.. (பஞ்சாபின் பேரன்??) 

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளர் ஷில்பா ஷெட்டியை ஆகா ஓகோ என்று புகழ்கிறார் ஷேன் வோர்ன். இவர் தான் தான் 'கண்ட' best boss என்கிறார்..
ஷில்பாவும் வோர்னை ஐஸ் மழையால் குளிர்விக்கிறார்..தங்களது புரிந்துணர்வுக்கு காரணம் ஒருவர் வேளையில் ஒருவர் தலையிடுவதில்லை என்று இருவரும் பரஸ்பரம் மனம் நெகிழ்கிறார்கள்.. (ஷில்பாவின் மொபைல் நம்பர் வோர்னுக்கு தெரியுமா?)

தகவல்களை விட தேடியெடுத்த கலர்புல் படங்கள் கண்களைக் குளிர்வித்திருக்கும் என நினைக்கிறேன்.. இன்னும் அவல் கிடைத்தால் மெல்லுவதற்கு தருகிறேன்..

ஓட்டு போட்டிங்களா? (தேர்தல் காலமண்ணே..) நாலுக்கும் குத்துங்க..


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner