????? + 20 - 200வது பதிவு

ARV Loshan
42


இன்று கணக்கின் அடிப்படையில் எனக்கு 200வது பதிவு.

பதிவுகள் 200ஐ எட்டும் நேரம் வருகைகள் 150,000ஐத் தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  alexaவின் வரிசைப்படுத்ததிலும் 180,000க்குள்ளேயே இடம்பெற்றுள்ளேன்.
நம் பதிவுகளுடன் தொடர்ந்து வருவோர் (Followers) 96 (எப்படியாவது இன்னிக்கே சதமடிக்க உதவுவீங்கன்னு தெரியுமே!)

பல மைல்கல்களை ஒரே நேரத்தில் பதிவு செய்யும் இந்தப் பதிவில் எனது நண்பர்கள் என் வலைத்தள வாசகர்கள் சில அனானிகள் (இவர்கள் இரண்டு பிரிவுகளுள்ளும் அடங்காதவர்கள்) ஆகியோரின் கேள்விகள் சிலவற்றுக்கான பதில்களைத் தரலாமென்று எண்ணியுள்ளேன்.

இந்தக்கேள்விகள் (சந்தேகங்கள்) மின்னஞ்சல்கள் பின்னூட்டங்கள் smsகள் மற்றும் நேரடியாகவும் வந்தவை.என்னுடைய பல பதிவுகளிலேயே சில விஷயங்களை ஏற்கெனவே சொல்லியிருந்த போதிலும் இந்த 200வது பதிவிலேயே அவற்றை மீண்டும் அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்பதனால் மீண்டும் சில இடம்பெறுகின்றன.

இதோ உங்கள் கேள்விகள் எனது கேள்விகளாகவும் என் பதில்களும் -

கே - உங்கள் துறையை விட அதிகமாக கிரிக்கெட் சினிமா பற்றி எழுதுவது ஏன்? ஹிட்சுக்காகவா?

-  ஒலிபரப்புத்துறையிலேயே ஏழுநாளும் இருபத்து நான்கு மணிநேரமும் இருப்பதனால் அதுபற்றியே எழுத சிலவேளை சலிப்பாக இருக்கும். எனினும் ஒலிபரப்பு என்றுமே எனக்கு சலிப்பதில்லை.

ஆனால் நான் ஆரம்பித்த எனது பத்துவருடகால ஒலிபரப்பு அனுபவங்கள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் - பதிவிடுவேன்

சில வானொலி விஷயங்களை விரிவாக நான் எழுத முடியாமலிருக்கிறது. நான் இன்னமும் வானொலியில் பணியாற்றுவதால் போட்டி வானொலிகளை (நான் முன்னர் பணியாற்றிய வானொலிகள்) பற்றிப் பல விஷயங்களை எழுத முடியாத நிலையும் எனது வெற்றி எப் எம் பற்றிய சில தொழிநுட்ப விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியாமலுள்ளது.

எனினும் எப்போதெல்லாம் ஒரு சுவாரஸ்யமான இடம்பெறும் நேரம் எனக்கும் பொறுமையும் நேரமும் இருந்தால் ஒலிபரப்பு பற்றிய பதிவு வரும்.

கிரிக்கெட் எனது மனதுக்குள்ளேயே சிறுவயது முதல் ஊறிப்போன ஒரு விடயம்! ஒலிபரப்புக்கு முதல் கவிதையை விட படிப்பை விட எனக்கு கூடுதலாகப் பிடித்தது கிரிக்கட். இப்போதும் விடாமல் தினமும் நான் தொடர்வதும் என்னைத் தொடர்வதும் கிரிக்கெட்தான்.

அதுபோல தினந்தோறும் கிரிக்கெட்டிலும் சினிமாவிலும் தான் (அரசியல் தவிர) ஏதாவது புதிதாய் நடந்து கொண்டேயிருக்கும். இவையிரண்டுமே வாசிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.  எனவே தான் அடிக்கடி கிரிக்கெட் - இதற்கு அடுத்தபடியாக சினிமா. எனினும் ஓப்பீட்டளவில் என் சினிமாப் பதிவுகள் குறைவானவையே!

ஹிட்சுக்கேன்றே சில பதிவுகளை எழுதினாலும் கூட என் ஒலிபரப்புத் துறை சார்ந்த பதிவுகளும் கூட பல ஹிட்ஸ் பெற்றவையே.. 

கே - ஒவ்வொரு நாளும் பதிவு போடுமளவுக்கு அலுவவலகத்தில் வெட்டியா?

- அப்படியில்லை. Time management– நேர முகாமைத்துவமும் என்னுடைய தொழில் துறையும் சக ஊழிய நண்பர்களின் ஒத்துழைப்புமே காரணங்கள்.

சாதாரணமாக மற்றவர்களுக்கெல்லாம் 8 – 8 ½ மணிநேர வேலை. ஆனாலும் நானோ 10 முதல் 12 மணிநேரம் வரை அலுவலகத்தில் பணிபுரிபவன். இதில் 4மணிநேர நிகழ்ச்சி. அதன்பின் இருக்கும் நேரத்தில் முகாமைத்துவ, ஒலிபரப்பு, பிரதியெழுதும் வேலைகளும் சில கூட்டங்களில் கலந்துகொள்வதும் கூட்டங்களை நடத்துவதும் எனக்கான கடமைகள். 
இவற்றுக்கிடையில் கிடைக்கும் நேரத்தை என் வலைப்பதிவுலகத்துக்கும் பயன்படுத்திக் கொள்கிறேன்.

வீட்டில் நேரம் கிடைக்கும் போது பதிவிடுவது தவிர எழுதிக் கொண்டு வருவதை நான் அடிக்கடி சொல்லும் அருந்ததி அக்காவின் அனுசரணையில் பதிவேற்றக் கூடிய வாய்ப்பும் எனக்கான அதிர்ஷ்டம் தான். (இந்தப் பதிவு கூட அப்படிதான்)

கே - பதிவுலகில் நுழைந்ததும் தனிப்பட்ட வாழ்க்கையிலோ தொழிலிலோ பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதா?

- ஆமாம் - சின்னச் சின்னப் பாதிப்புக்கள் தான்!
இல்வாழ்க்கை விவாகரத்து வரை போகவில்லை
வேலைக்கு இதுவலை வந்தப் பிரச்சனையுமே இல்லை.

ரொம்ப பரபரப்பான ஆர்வமான நாட்களில் வீட்டில் எந்த நேரமும் கணணி முன் இருந்தால் சண்டை சச்சரவு வராதா?  இதனால் தான் கணணி முன் அமராமல் கூடுதலான வரை எழுதிக் கொண்டு தட்டச்சி பின் பதிவேற்றுகிறேன்.

அலுவலகக் கடமைகளைப் பொதுவாகப் பாதிக்காத வகையில் பதிவில் ஈடுபட்டாலும் சில நாட்களில் 4மணிநேர நிகழ்ச்சியிடையே பல தடவை கலையகத்துக்கும் எனது இருக்கைக்கும் இடையே ஒடி ஒடி உழைப்பதுண்டு.

கே - பதிவுகளில் இவ்வளவு நேரத்தை செலவிடுவதில் ஏதாவது ஆதாயம்?

- அட்சென்ஸ் மற்றும் பல விளம்பரங்கள் போட்டிருந்தாலும் அந்த விளம்பரங்களுக்கான வெகுமதியெல்லாமே On the way தான். வந்து சேரும் போது மில்லியன் கணக்கில் வந்து சேரும் போல தெரியுது.

ஆனால் இதனைவிட அதிகமாகப் பெற்றவை பல உண்டு.வானொலியினால் பெற்ற பிரபல்யத்தை விட இப்போது வலைப்பதிவர் என்ற பிரபல்யம் சர்வதேச ரீதியாக அதிகம்.

பல புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். பழைய நண்பர்கள் நெருக்கமாகியுளளனர். இவையெல்லாவற்றையும் விட முன்பை விட வாசிப்பும் பழக்கம் அதிகரித்துள்ளது.எப்போதும் வாசிப்பவனாக நான் இருந்தாலும் இப்போ எழுத ஆரம்பித்த பிறகு எங்கேயாவது இசகு பிசகா எழுதிடுவேனா என்று அதிகமாகவே வாசிக்கிறேன்.

இது ஒலிபரப்பிலும் எனக்கு நிறையவே உதவுகிறது. 


கே -  அனானிகளின் கடுமையான விமர்சனங்களின் பயம் தான் பின்னூட்டங்களுக்கு மட்டுறுத்தல் போட வைத்ததா? முன்பெல்லாம் துணிச்சலாக திறந்து விட்டிருந்தீர்களே?

-  ஆமாம்.. எதற்கும் ஒரு எல்லை இருக்கு தானே.. சில விமர்சனங்கள் எல்லை மீறி என்னை மட்டுமல்லாமல் பலரையும் தனிப்பட்ட முறையில் சீண்டும் போதும், எனக்கு அந்த அனானிப் பின்னூட்டங்கள் ஏதாவது சிக்கலை ஏற்படுத்தும் எட்ன்று நான் கருதியபோதும் தான் அன்புக்குரிய சிரேஷ்ட பதிவர் ஒருத்தர் "உங்கள் தளத்தை மற்றவர் அசிங்கம் செய்து குப்பையாக்க என் அனுமதிக்கிறீர்கள் " என்று ..
மட்டுறுத்தல் போட்டேன்.. அனால் இன்றும் பெயர் தாங்கி (உண்மைப் பெயர்) வரும் எந்தவொரு விமர்சனத்தையும் (அது பிரசாரம்,மற்றவர் மீதான வசைபாடலாக இல்லாத இடத்தில்) என் தளத்தில் பிரசுரிக்கிறேன்.

அனானிகளை ஒரு போதும் நான் வெறுப்பதோ,இல்லையேல் தடை செய்யப்போவதோ இல்லை.. காரணம் பல வாசகர்கள் இல்லாததால் அனானிகளாக வந்து பின்னூட்டுகிறார்கள். பலர் பல காரணங்களினால் பெயர்களை சொல்லாமல் மறைக்கிறார்கள்.. எனினும் எனது எல்லா வாசகர்கள்/நண்பர்களுக்கும் சின்ன வேண்டுகோள்.அனானிகளாக வந்து பின்னூட்டினாலும் பெயர் இடம் என்பவற்றை மட்டும் வெளிப்படுத்துங்கள்.. 

கே -  இலங்கைப் பிரச்சினை பற்றி எழுதுவதைக் குறைத்து/நிறுத்தி விட்டீர்களா? பயமா?

-  ஆம்.. பயமில்லை என்று பொய் சொல்ல மாட்டேன்.. எனக்கு மட்டும் ஆபத்து என்றால் பரவாயில்லை.. என் சார்ந்தோருக்கும் என்று வரும்போது ஏன் வம்பு?

அப்படியிருந்தும் சில விஷயங்களை தெரியப்படுத்தும் விதத்தில் அறியத் தருகிறேன்..

அரைகுறையாக பட்டும் படாமலும் சொல்வதை விட சொல்லாமலே விடலாம் என்று தான் சில விஷயங்களில் நான் கை வைப்பதே இல்லை.. (அதற்குரியவர்கள் அந்தந்த விஷயங்களை சரியாக செய்யும் போது நான் எதுக்கு?)
 
முன்பே நான் சொன்னது போல காலம் வரும்வரை காத்திருக்கிறேன்.. ஏன் கைகளையும் கருத்துக்களையும் கட்டி வைத்துக் கொண்டே..


கே -  இலங்கைப் பதிவர் என்ற அடையாளம் உங்களுக்கு advantage?/dis advantage?

-  இரண்டுமே இல்லை.. என்னைப் பொறுத்தவரை தமிழ் பதிவர் என்பதே எனதும் எல்லோரும் அடையாளம் என்றிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. 
பிரிந்து கிடந்து படுகிறோமே போதாதா?

இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே இப்போது கொட்டி,பதில்களையும் கொட்டினால் "எங்க அலுவலகத்தில் வலைப்பதிவு படிக்க மேலதிக நேரம் கொடுக்க மாட்டாங்க" னு சண்டைக்கு வரலாம் .. So,இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்..

இன்னமும் உங்களிடம் இருக்கும் என் பதிவுகள்,என் பற்றிய கேள்விகளைத் தயவுசெய்து அனுப்புங்கள்..
arvloshan@gmail.com
மாதமொரு முறையாவது பதில் தரலாமே..

   --- ****----

நான் இதுவரை எழுதிய 200 பதிவுகளில் நானே ரசித்து எழுதிய 20 பதிவுகள்..

நேரமிருந்தால்,முன்பு வாசித்திராவிட்டால் கொஞ்சம் எட்டிப்பார்த்து வாசித்துப் போங்களேன்.. அந்தப்பதிவுகளும் ஜென்ம சாபல்யம் பெறும்...

ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மறுபடி சுவைக்கலாம் .. தப்பில்லை.. (கொடுமைன்னெல்லாம் சொல்லப்படாது.. )






















Post a Comment

42Comments

Please Select Embedded Mode To show the Comment System.*