தன்னம்பிக்கை,தன்னடக்கம் & தனித்துவம்

ARV Loshan
15
தன்னடக்கம், தன்னம்பிக்கை,தனித்துவம்.. இம்மூன்றுமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த,ஒன்றோடொன்று சம்பந்தப் பட்ட,ஒன்றிலொன்று தங்கியிருக்கும் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் அத்தியாவசியப்படுகின்ற விடயங்கள்.

தனிமனிதனின் வாழ்க்கையின் அத்தியாவசியக் கூறுகளான இந்த மூன்று விடயங்களும் ஒரு சமூகவியல் சமன்பாட்டின் அடிப்படையில் வாழ்க்கையின் சமநிலையைப் பேணுகின்றன.

இவை ஒவ்வொன்றின் தனிப்பட்ட அதிகரிப்பும்,குறைவும் இன்னொன்றைப் பாதிக்கவே செய்யும்.

இந்த உலகத்தின் சரித்திர புருஷர்களாக உலகை மாற்றிக்காட்டிய மாமனிதர்கள் எல்லோருமே தனித்துவம் வாய்ந்தவர்கள்.அவர்களின் தனித்துவமே இன்றுவரை அந்த உலகமகா புருஷர்களின் சிறப்பம்சங்களாகக் கருதப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன.

தனித்துவத்தையே இலகுபடுத்தி நாம் நாமாக வாழ்வது என்று சொல்கிறோம்.
நாம் நாமாக வாழ்வதற்கு,எங்கள் வாழ்க்கையின் தனித்துவமே பிரதான அடிப்படையாக அமைகிறது.சுலப உதாரணமாக சொல்வதாக இருந்தால் மாறுபடாமையும்,மாசுபடாமையும் முக்கிய அளவுகோல்கள்.

தன்னம்பிக்கை அளவுகடந்து அதிகரிக்கும் போதும், தன்னடக்கம் அளவில் குறைந்து தற்பெருமை அதிகரிக்கும் போதும், மனிதனின் முன்னேற்றம் தடைப்படுகிறது.. கர்வம் அப்போது அதன் பெயர்..

மாறாக, தன்னம்பிக்கை குறைந்து எங்களிலேயே நம்பிக்கையீனம் தோன்றும்போதும், தன்னடக்கம் அதிகமாகி,எங்களையே நாங்கள் தேவைக்கு அதிகமாக தாழ்த்திக் கொள்ளும்போதும்,தாழ்வு மனப்பாங்கு எனும் மன நோய் எங்கள் முன்னேற்றத்தைப் பாதிக்கிறது..

இதனால் இவ்விரண்டையும் ஒரு சமநிலையில் பேணுபவன் வாழ்க்கையில் ஜெயிக்கிறான்..

கஜினி படத்தில் சூரியா சொல்வது போல (அது இயக்குனர் முருகதாசின் வசனம் என்று நம்புகிறேன்)"என்னால் முடியும்" என்று நினைப்பது தன்னம்பிக்கை. "என்னால் மட்டுமே முடியும்" என்று நினைப்பது கர்வம்.

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.

தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விஷமாக உள்ளது.

பல தலைவர்கள், அரசியல்வாதிகள் முக்கியமாக சர்வாதிகாரிகள் வாழ்க்கைகளை இதற்கான உதாரணங்களாகக் காட்டலாம்.தன்னம்பிக்கை அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தையும்,அவர்கள் மூலமாக மக்களுக்கும்,நாடுகளுக்கும் ஏற்றத்தையும் கொடுக்கிறது.

எப்போது தன்னம்பிக்கை அளவை மீறி கர்வமாக மாற ஆரம்பிக்கிறதோ, அன்று மாக்கள்,நாடு, இறுதியாக அவர்களுக்கே அது அழிவாக மாறுகிறது. நல்ல உதாரணங்கள் ஹிட்லரும்,முசோலினியும்.

மாபெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தி மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த இவ்விருவரும்,தங்கள் பாதைகள் மாறியதால் வரலாற்றில் அழியா வழுக்களை ஏற்படுத்தி சர்வாதிகாரிகள் ஆகி அழிவு தந்தவர்களாக மாறினர்.

தன்னம்பிக்கைக்கும், கர்வத்துக்கும் இடையிலான நூலிழை வித்தியாசம் சரியாக புரிபடாமல், இல்லாவிட்டால் பின் விளைவுகள் பற்றி யோசியாமல் மக்களின் அபரிதமான ஆதரவுடன் முன்னணி பெற்று பின் சர்வாதிகாரிகள் போல், எதேச்சாதிகாரப் போக்கினால் பின் வீழ்ந்த சிலர் ஞாபகம் வருகிறார்கள்.. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,சதாம் ஹுசைன்,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, இப்படியே இந்நாள் வரை வரலாம்..

தன்னம்பிக்கை அளவு கடந்ததால் கவிழ்ந்துபோன பல எழுச்சிகள்,புரட்சிகள்,விடுதலைப் போராட்டங்களையும் கண் முன்னே கண்டு கொண்டிருக்கிறோம்.அளவுக்கு மிஞ்சினால் ஏதும் அதோகதி தான் என்பது இந்த விடயங்களிலும் முற்றிலும் உண்மையே..

ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் இந்த இரண்டுமே இதே விளைவுகளையே ஏற்படுத்தக் கூடியவை. அதுவே இயற்கையின் நியதி.

Quote:
தத்தம்மை உயர்வாக நினைக்கும் அதே சமயம் மற்றவர்களைத் தாழ்வாக நினைக்கவும் ஆரம்பித்தால் கர்வம் நுழைய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். தன் சாதனைகளைப் பெருமைப்படுத்தியும், மற்றவர் சாதனைகளை சிறுமைப்படுத்தியும் நினைப்பதும் கர்வமே. தன் தவறுகளை தவறுகளே அல்ல என்று சாதிப்பதும் கர்வத்தின் ஒரு குணமே. மற்றவர்களுடைய சிறு தவறுகளையும் சுட்டிக் காட்டி மகிழ்வதும் கர்வத்தின் தன்மையே. தனக்கு எதிரான எதையும் சகிக்க முடியாததும், மற்றவர் சாதனையை ரசிக்க முடியாததும் கர்வத்தின் செயல்களே.

எங்கேயோ படித்தது..

இதற்கு மாறாக நம்பிக்கையீனமும், அளவுக்கு மீறிய தன்னடக்கமும் தாழ்வு மனப்பான்மையை எம்முள் ஏற்படுத்தி எங்கள் முன்னேற்றத்துக்கு தடை போட்டு விடும்.பெரியவர்கள்,கற்றோர்,அறிஞ்சர் முன்னால் அடக்கம் காட்டி மரியாதை செய்வது வேறு;எல்லோருக்குமடிஎன்,எல்லோருக்கும் அடங்குவேன் என்று எம்மை நாமே தாழ்த்தி, எல்லாவற்றிலும் தோற்றுப் போவது வேறு..இந்த வித்தியாசம் எங்கள் வாழ்க்கையிலேயே மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விடும்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றோருக்கும்,தோற்றுப் போனவருக்கும் இடையிலான வேறுபாடே இது தான்.. நாமாக முன்வராது,முயற்சிக்காது வெற்றி என்ற முனைப்பு கிட்டாது..அடங்கிப் போதல் அளவுக்கு மீறிப் போகையில் வெற்றி எம்மை விட்டு வெகு தொலைவு போய் விடும்..

எனவே நாம் நாமாக வாழ்கிற தனித்துவமானது இந்த அளவுகோல்களின் சமநிலையில் நிர்ணயிக்கப்படுகிறது.

இனி ஒருவன் 'நான் நானாக இருக்கிறேன்' என்று சொன்னால் அவன் தன்னம்பிக்கை உடையவன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்..அதையே அவன் அடிக்கடி பெருமையோடு சொல்லிக் கொண்டால் அவன் தன்னடக்கம் இல்லாதவன் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

தன்னடக்கம் மீறாத,தன்னம்பிக்கை குறையாத ஒருவனே தனித்துவமானவனாக வாழ்கிறான்.
__________________
A.R.V.LOSHAN

www.arvloshan.com

வழமையான மொக்கையாகவோ,விளையாட்டாகவோ,சினிமாவாகவோ இல்லாமல் இல்லை,இப்போதைய நிலையில் சிக்கலைத் தருகின்ற இலங்கை விவகாரமாகவோ இல்லாமல் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே பதிவாக தந்துள்ளேன்..

பிடிச்சிருந்தால் குத்துங்க வோட்டு.. ;)
பிடிசிருந்தாலோ,பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை அனுப்புங்க பின்னூட்டம்..

Post a Comment

15Comments

Please Select Embedded Mode To show the Comment System.*