May 28, 2009

அம்மா பாடல்களில் அதிகம் பிடித்தவை


அண்மையில் 'சர்வதேச அன்னையர் தினம்' கொண்டாடப்பட்டது (சில நாட்களுக்கு முன்னர்) எங்கள் அனைவருக்குமே தெரியும்.

அந்த நேரம் இருந்த பரபரப்பில் சிறப்புப் பதிவு எதுவும் போடக்கிடைக்கவில்லை. அம்மா பற்றி ஒரு நாள் தான் பதிவு போட வேண்டுமா?

எப்போது போட்டாலும் அம்மாவின் அன்பு மனதுக்குள்ளே இருக்குமே என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

எனினும் வானொலியில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்குக் குறைவில்லை. ஞாயிறு எனக்கு நிகழ்ச்சிகள் இல்லாத காரணத்தால் (ஒரு மாதிரியாக வாரத்தில் ஒரு நாளாவது வீட்டில் இருக்கிற மாதிரி ஒழுங்குபடுத்திவிட்டேன்.) திங்கள், செவ்வாய் (11,12) இருநாட்களும் சிறப்பு நிகழ்ச்சிகளை காலையில் எனது 'விடியல்' நிகழ்ச்சியில் வழங்கியிருந்தேன். (அதைக் கேட்ட பலபேரும் இப்போது இதை வாசித்தால் - 'ரிப்பீட்டு' ஆகத்தானிருக்கும். என்ன செய்ய... ஒரு படத்தை 2,3 தடவை பார்ப்பதில்லையா....)

அதில் ஒன்றில் மனதில் மிகப் பிடித்த அம்மா பாடல் (சினிமா / உள்ளுர் பாடல்) எதுவென்ற கருத்துக் கணிப்பை நடத்தினேன்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமானதே அம்மா சென்டிமென்ட் தானே.... பாடல்களுக்கா குறைவிருக்கும்.

பல நூற்றுக்கணக்கான பாடல்களையும் நேயர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்...அதில் TOP 10 பாடல்கள் இவை....

10ம் இடம் அம்மன் கோவில் எல்லாமே
திரைப்படம் : ராஜாவின் பார்வையிலே
பாடியவர் : அருண்மொழி
இசை : இளையராஜா
09ம் இடம் ஆசைப்பட்ட எல்லாத்தையும்
திரைப்படம் : வியாபாரி
பாடியவர் : ஹரிஹரன்
இசை : தேவா
பாடல் வரி : வாலி

08ம் இடம் அம்மாவென்றழைக்காத உயிரில்லையே
திரைப்படம் : மன்னன்
பாடியவர் : K.J.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
பாடல் வரி : வாலி

07ம் இடம் உயிரும் நீயே
திரைப்படம் : பவித்ரா
பாடியவர் : உன்னிகிருஷ்ணன்
இசை : A.R. ரஹ்மான்
பாடல் வரி : வைரமுத்து

06ம் இடம் நீயே நீயே
திரைப்படம் : M.குமரன் Son of மஹாலக்ஷ்மி
பாடியவர் : K.K
இசை : ஸ்ரீகாந் தேவா

05ம் இடம் தாய் மடியே
திரைப்படம் : RED
பாடியவர் : டிப்பு
இசை : தேவா
பாடல் வரி : வைரமுத்து

04ம் இடம் அம்மான்னா சும்மா இல்லடா
திரைப்படம் : திருப்புமுனை
பாடியவர் : இளையராஜா
இசை : இளையராஜா

03ம் இடம் தாய் மனசு தங்கம்
திரைப்படம் : தாய் மனசு
பாடியவர் : மலேசியா வாசுதேவன்
இசை : தேவா

02ம் இடம் அம்மா அம்மா எந்தன்
திரைப்படம் : உழைப்பாளி
பாடியவர் : S.P பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா

01ம் இடம் ஆலயங்கள் தேவையில்லை
திரைப்படம் : காமராசு
பாடியவர் : S.P பாலசுப்ரமணியம்
இசை : தேவா

கணிசமான வாக்குகள் பெற்றும் முதல் பத்துக்குள் வரமுடியாத இன்னும் சில பிரபலமான பாடல்கள்.

காலையில் தினமும் - NEW
நானாக நானில்லை - தூங்காதே தம்பி தூங்காதே
அம்மம்மா உனைப் போலே - சாது
அம்மா நீ சுமந்த - அன்னை ஓர் ஆலயம்

இவற்றில் எனக்குப் பிடித்த பாடல்கள் பல இருந்தாலும் இன்னுமொரு அம்மா பாடல் அண்மைக் காலத்தில் எனக்குப் பிடித்துப் போயுள்ளது.

வைரமுத்து எழுதிய கவிதை பின்னர் இனியவளின் இசையில் பாடலாக மாறியிருக்கும் 'ஆயிரம் தான் கவி சொன்னேன்'
S.P.B பாடியிருக்கிறார். உருக வைக்கும் வரிகள்...
இந்தப் பாடலையும் சிலர் சொல்லியிருந்தார்கள்.
காமராசு படம் வந்த சுவடு தெரியாமல் போனாலும்,பாடல் மட்டும் மனதில் நிலைத்திருக்கிறது..

இலங்கை நேயர்களைப் பொறுத்தவரையில் படங்களை வைத்துக் கொண்டு பாடல்களை அவர்கள் ரசிப்பதில்லை என்பதை இந்தக் கருத்துக் கணிப்பின் மூலமும் மீண்டும் காட்டி இருக்கிறார்கள்...

அதுபோல நடிகர்கள்,பாடகர்கள்,இசையமைப்பாளர்கள்,கவிஞர்களுக்காக பாடல்களை ரசிப்பது போலவே பாடல் வரிகள்,பொருளுக்காகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் நம் நேயர்கள் என்பதறிந்து மகிழ்ச்சி தான்.



May 27, 2009

வெள்ளிக்கிழமை விமானநிலையத்தில் நான் - ஒரு உண்மை சம்பவம்/அனுபவம்

சனிக்கிழமை பான் கி மூன் ஐயாவை வரவேற்ற பிறகு இன்று தான் மீண்டும் என் வலைத் தளத்துக்கு வரக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது..

அவரை வரவேற்ற ராசியோ என்னவோ வரவே முடியாத அளவு பிசி.

நண்பன் ஒருவனின் திருமணத்துக்காக கண்டி போயிருந்தேன்.. கண்டியில் கண்டவை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்.. அது பிறகு..

அதுக்கு முதல் இதை சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.

சனிக்கிழமை இரவு என்னுடைய அப்பா அம்மா இருவரும் இந்தியாவிலிருந்து வந்ததனால் விமான நிலையம் சென்று அவர்களை அழைத்து வரவேண்டி இருந்தது.

நிகழ்ச்சியிலிருந்து பாதியில் எஸ்கேப் ஆகி, வீடு சென்று மனைவி,மகன்,தம்பியையும் கூட்டிக்கொண்டு விமான நிலையம் நோக்கி விரைந்தேன்.. இரவு நேரம் பெரிதாக போக்குவரத்து நெரிசல் இல்லையென்றால் என் வழமையான வேகத்தில் செல்வதற்கு 45 நிமிடங்கள் எடுக்கும்.

கிட்டத்தட்ட அதேயளவு நேரத்தில் விமான நிலையத்தின் நுழைவாயில் பாதுகாப்பு சோதனை சாவடியில் (முன்பெல்லாம் சோதனையிட்டே சாவடிக்கிற இடம் இது..) நுழைகிற நேரம் பார்த்தால் மிக நீண்ட வாகன வரிசைகள்..

நான்கைந்து வரிசைகள்.. நூற்றுக்கணக்கான வாகனங்கள்.. ஆமை வேகத்திலேயே ஒவ்வொன்றும் ஊர்கின்றன..

இதென்னடா இது.. இப்போ தானே யுத்தம் நிறைவடைந்தது என்று அறிவித்தார்கள்.. பிறகேன்? கேள்வியை அப்படியே சிங்கள மொழியில் என் வாகனத்தின் அருகே வந்த போலீஸார் ஒருவரிடம் கேட்டேன்..

அவர் மெலிதாக சிரித்துக் கொண்டே " இது ஒரு விசேட ஏற்பாடு.. பயம் கொள்ளத் தேவேயில்லை" என்று விட்டு விரைந்து போய் விட்டார்.

நாற்பது நிமிட மெதுவான ஊர்தலுக்குப் பிறகு பிரதான நுழைவாயில் அருகேயுள்ள சோதனை சாவடிக்கு போனோம்.

அங்கிருந்த காவலர் அடையாள அட்டை கேட்டார்..

எம்மைக் காக்கும் மிக முக்கிய ஆவணமான ஊடகவியலாளர் அடையாள அட்டையை (அரசினால் வழங்கப்படுவது) எடுத்து நீட்டினேன்.

பொதுவாக எந்தவொரு சோதனை சாவடியில் இதைக் காட்டியவுடன் வேறெந்தக் கேள்வியும் இல்லாமல் போக அனுமதிப்பது வழக்கம்.

ஆனால் அன்றோ கொஞ்சம் முகம் மாறிய அந்தக் காவலர் என்னுடைய வானொலி நிறுவனம் எது என்று கேட்டறிந்த பிறகு சொன்னார் "நீங்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை" என்று பணிவாக சிங்களத்தில் சொன்னார்.

ஏன் என்று கேட்டதற்கு, "ஊடகவியலாளர்களை இன்று உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவு" என்று பதில் வந்தது.

சிரித்துக் கொண்டே "வழமையாக எம் போன்ற ஊடகவியலாளர்களைத் தானே இலகுவாக உள்ளே அனுமதிப்பீர்கள்.. இன்று என்ன" என்று கேட்டேன்.

எதுவும் பதில் சொல்லாத அவர் நான் உள்ளே செல்லும் காரணம் கேட்டார்.. என்னுடைய பெற்றோர் வரும் விஷயம் சொன்னேன். நான் ஒரு வாகன ஒட்ட்டியாகவேவந்திருக்கும் விஷயத்தை தெளிவாக சிங்களத்தில் புரியச் செய்த பிறகு,

"நீங்கள் வேறு அலுவலாக வரவில்லையே" என்று கேட்டார்..
"அப்படி வருவதாக இருந்தால் மனைவி,பிள்ளையுடன் வந்திருக்க மாட்டேனே.. அதுவும் கட்டைக் காற்சட்டையுடன் (jumpers) வந்திருப்பேனா?" என்று சிரித்துக் கொண்டே நான் கேட்க,

பலமாக சிரித்தபடி ஏன் தேசிய அடையாள அட்டை எண், வாகன இலக்கம் போன்றவற்றைக் குறித்த பின் செல்ல அனுமதித்தார்..

கொஞ்சம் யோசித்துப் பார்த்தபின் எனக்கு சனிக்கிழமை விமான நிலைய பாதுகாப்புக் கேடுபிடிக்கான காரணம் விளங்கியது..

நம்ம பான் கி மூன் ஐயா புறப்படும் விஷயம் தான் எனத் தெரிந்தாலும், இவ்வளவு கெடுபிடி குறிப்பாக ஊடகவியலாளர் மீது என்று சொல்லி அடுத்தடுத்த நாட்களில் தான் தெரிந்தது.

ஐநாவின் செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு தடை – குற்றச்சாட்டு அவரைச் சந்திப்பதற்கான ஏற்பாடு தொடர்கிறது – சுரேஸ் பிறேமச்சந்திரன்
- இணையத்திலும், பத்திரிகையிலும் வந்த செய்தி


அப்போ இது தானா? வேறு பல விஷயங்கள் சொல்லாமலே தெரிந்திருக்கும் தானே..


May 23, 2009

பான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்!



இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூனை வரவேற்கும் முகமாக ஒரு வாழ்த்து,வரவேற்பு மடல்..

பான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்!

வாருமையா வாரும்...
நீர் வந்த இடம் இப்போ 'நல்ல' இடம்...
நேரம் பார்த்து வந்துள்ளீர்...
வந்தனங்கள் உமக்கு...

வடக்கின் வசந்தம் பார்க்க வந்தீரோ?
வன்னியின் வசந்தம் பார்த்துப் போவீரோ?
நேர காலம் பார்த்து வருவதில்
தமிழ் சினிமா பொலிசுக்குப் பிறகு நீர் தான்!

எம் மக்கள் அவலம் எட்டிப்பாருங்கள் என்று
எத்தனை தடவை ஐயோ – ஐயோ என்று
ஐ.நாவிடம் எத்தனை தடவை கேட்டும்

பூட்ரோஸ் காலியின் செவிகள்
பூட்டியே கிடந்தன...

கோபி அண்ணானோ
பாலஸ்தீனம் - ஈராக் - கொசாவோ
பின் தீமோரோடு பிசியானார்...

நீர் தான் இரங்கி - இன்று
இலங்கைக்கு இறங்கி வந்தீர்...

பான்-கீ-மூன் என்ற
பரம இரக்க வள்ளலே
வாரும்!

சமாதானம் கொண்டு வரும் சபைத்
தலைவர் நீர்!
சமர் நடக்கும் போது சத்தமின்றி
இருந்துவிட்டு
காட்டுக்கு ஒரு தூதுவரை
சப்பையாக அனுப்பிவிட்டு
(உமது மூக்கை சொல்லவில்லை)
சரித்திர வெற்றியை
கொண்டாடிக்கொண்டிருக்கும்
எங்கள் சாதனைத் தலைவன்
ஜனாதிபதியைப்
பாராட்டிப் போக வந்தீரோ?

வவுனியா (நலன்புரி) முகாம் மக்கள்
நலமே இருப்பது பார்த்து
நீர் மனம் குளிர்ந்திருப்பீர்...
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
இப்போ தினம் பெய்யும் மழையால்
குளிரும் கண்டியில்
இலங்கைத் தலைவனைக் கண்டு
இன்று அகமும் புறமும்
மேலும் குளிர்ந்திருப்பீர்...

ஒருவேளை
விஸ்வ கீர்த்தி ஸ்ரீ திரி சிங்கலாதீச்ச்வர விருது பெற்ற
எங்கள் சன அதிபதியை நீரும் வாழ்த்திப் போக வந்தீரோ?

இல்லையேல்
எங்கள் அயல் நாடு அன்புக்குரிய இந்தியா
'ராஜிவ் காந்தி' விருது அளித்து கௌரவித்தது போல
நீரும் உம் பங்குக்கு
நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்கிறோம் என்று
சொல்லிப் போக வந்தீரோ?


தமிழினத் தலைவரும்,
தேர்தலுக்கு ஒரு சில நாட்கள் முன்னிருந்து
'திடீர்' தமிழினத் தலைவியாக மாறிய செல்வியும்
வராத எங்கள் திருநாட்டுக்கு வந்து
இலங்கைத் தீவின் 'புதிய' சமாதானக் கோலம்
காண வந்த
பான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்!

ஒன்றாக இருந்த கொரியா இரண்டாகி
எப்போது சேருவோம் என்று
காத்துக்கிடக்கும் மக்களை
சேர்கிறோம் - சேர்க்கிறோம் என்று
பேய்க்காட்டி பிரித்தே வைத்து
பெரிய நாடுகளின் வால்களில் ஒன்றாக வாழ்ந்து வரும்
கொரியாவின் மைந்தன் நீர்
'ஒன்றுபட்ட' இலங்கைக்கு வந்துள்ளது
என்ன பொருத்தமோ?

மீண்டும் இந்த ஒப்பீடு மட்டும் வந்து தொலைக்கிறது..

ஐ.நா சபை பொதுச் செயலர் நீரும்
தமிழ் சினிமா போலீசும் ஒன்றே..
எல்லாம் முடிந்த பிறகே
என்டர்....


May 21, 2009

எது உண்மை? யாரை நம்புவது?

இந்தப் பதிவு சில வேளை உளறலாகவோ , புரியாத மாதிரியாகவோ இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.. வழமையான பதிவு அல்ல இது.. தட்டச்சிக் கொண்டு போகிறபோக்கில் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டுகிறேன்..

எச்சரிக்கையாக இரு.. கவனமாக பதிவிடு என்று மனம் எச்சரித்தாலும் உணர்வுகள் விடுவதாக இல்லை..

நான்கைந்து நாட்களாக மனதில் குமுறியதை கொட்டுகிறேன்..

திங்கட்கிழமைக்குப் பிறகு எனக்கு வலையுலகப் பக்கம் வரவே பிடிக்கவில்லை..

எதை எழுதுவது.. எழுத பல விஷயம் இருந்தாலும் எழுத இருந்தால் அழுகை தான் வருகிறது.. எல்லாம் முடிந்து போனதே.. இனி என்ன..

எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்து, எத்தனை வருடங்களை வீணாக்கி கண்ட பலன் என்ன..

இழவு வீடாக்கி புலம்ப எனக்கு விருப்பம் இல்லை.. அதுபோல உறுதியாகத் தெரியாமல் வீண் நம்பிக்கை அளிக்கவும் மனம் உடன்படவில்லை..

என்ன வாழ்க்கை இது.. எப்போதும் பயந்துகொண்டே வாழும் இந்த இலங்கை வாழ்க்கை எப்போதையும் விட இப்போது கசக்கிறது.. வெளிப்படையாக எழுதக் கூடிய, உணர்வுகளைக் கொட்டக்கூடிய புலம்பெயர் மற்றும் தமிழக நண்பர்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது.. மனம் விட்டு அழக்கூட முடியாமல் நாங்கள்..

என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை..

இருக்கிறாரோ இல்லையோ, முப்பது வருட கால உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்ததாகவே கருதவேண்டியுள்ளது. சிலர் இல்லை என்று கோபித்து மறுத்தாலும் உண்மை இதுதானே..

நம்ப முடியவில்லை.. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டதைப் போல.. ஒரு பெரும் சாம்ராஜ்யமே சரிந்து விழுந்ததைப் போல..

நம்புவதா நம்பாமலிருப்பதா என்று எனக்கு தெரியவில்லை.. ஒரு சகாப்தம் சரிந்ததாக இங்கே இன்னமும் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள்,எழுச்சிப் பாடல்கள், கிரிபத் எனப்படும் பால்சோறு வழங்கல்,பட்டாசுகள் என்று மகிழ்ச்சியும் உற்சாகமும் கரை புரண்டோடோடுகிறது..

இல்லை அண்ணர் இன்னமும் உயிருடன் எங்கோ இருக்கிறார் என்று மறுபக்கம் செய்திகள், ஆதாரங்கள் காட்டிப் பரபரக்கின்றன.. எதை நம்புவது?

யுத்த முடிவு, ஈழத்தின் முடிவு, DNA, ஒரு கொடியின் கீழ், இனி யாரும் சிறுபான்மை இல்லை, தப்பிவிட்டார் இப்படி பல விஷயங்கள் ஒன்றாகப் போட்டு குழப்பி எடுத்தாலும், மனம் நிறைய ஒரு மிகப் பெரிய வெறுமை..

தயவு செய்து யாராவது உண்மை சொல்லுங்களேன் என்று கெஞ்சி அழவேண்டும் போல மனம் தவிக்கிறது..

சிறுவயது முதல் நேசித்து மனதில் இடம் கொடுத்து வைத்த ஒருவரை இழந்துவிட்டோம் என்று எண்ண மனம் இடம் கொடுக்குதில்லை.

87இல் சுதுமலையிலும், பின்னர் வன்னியில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டிலும் நேரிலே கண்டிருக்கிறேன்.. கண்களால் உள்வாங்கி மனதிலே இருத்திக் கொண்ட மானசீக கதாநாயகன்.. இன்னும் பலப்பல..

எல்லாமே முடிந்து போனதா? இல்லாவிட்டால் அப்படியொன்றும் பயப்படுகிற மாதிரி நடக்கவில்லையா?

சில விஷயம் எனக்குப் புரிந்த மாதிரி இருந்தாலும் உண்மை எது என்று ஆழமாக உள்ளிறங்கி அலச மனசு இடம் கொடுக்கவில்லை..
மனதுக்கு துன்பம் தருவதாக எதுவும் நடந்திருக்கக் கூடாது என்றே இன்னமும் என் மனம் எண்ணுகிறது.

மனம் நிறைய கேள்விகள் போலவே ஆழமாக அடுக்கடுக்காக அப்பிய கவலையும் விரக்தியும்..

பெரிதாகப் பிரார்த்தனை செய்யாத எனக்கு அன்று முழுவதும் கண்ணீருடன் பிரார்த்திக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.. எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்ற பதற்றமும் கவலையும் ஒரு பக்கம்.. மனதில் உள்ள எண்ணங்களை வானொலியில் பேசும்போதோ அலுவலக சக சிங்கள நண்பர்களுடன் பேசும்போதோ காட்டிக் கொள்ளக் கூடாது என்ற மனவோட்டம் ஒருபக்கம்..

நீண்ட நாட்களுக்குப் பின் பலமுறை நான் அழுத்தும், அலுவலகத்தில் முதல் தடவை நான் அழுததும் (யாரும் பார்க்காமல்) இந்த ஒரு சில நாட்களில் தான்..

இந்த சில நாட்களில் எங்கள் அலுவலக சிங்கள நண்பர்கள் நடந்துகொண்ட விதம் உண்மையில் மனிதாபிமானமானது.. என்ன தான் வெடி கொளுத்தியும் சிரித்தும் ஆர்ர்ப்பரித்தும் யுத்தத்தில் வென்ற மகிழ்ச்சியைக் காட்டினாலும் எங்களுடன் பேசும் போது பக்குவமான வார்த்தைகளைக் கையாண்டார்கள்.

என்ன இருந்தாலும் 'அவர்கள்' உங்கள் அன்புக்குரியவர்கள் என்பதை உணர்த்தியது அவர்கள் எமக்கும் எங்கள் உணர்வுகளுக்கும் அளித்த கௌரவம்.

அவர்களிலும் ஒருசிலர் இந்த கொலையையும், காட்டப்பட்ட சடலத்தையும் இன்று வரையும் நம்பவில்லை.

நிகழ்ச்சிகள் செய்ய மனம் இடம் தரவில்லை.. நாம் ஊடகவியலாளர்கள் தான்.. பொதுப்படையானவர்கள் தான்.. நடுநிலையாளர்கள் தான்.. அதற்காக சொந்த வீட்டில் இழவு நடக்கும்போது சந்தோஷமாக பாடல் போட்டு சிரித்து நகைச்சுவை சொல்லிக் கொண்டே நிகழ்ச்சி செய்ய முடியுமா?

பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிவது அறிந்து கொண்டே நிகழ்ச்சிகள் வழங்கியவர்கள் தான்.. ஆனால் இது முற்றிலும் வேறுபட்டதே..

பொறுக்க முடியாமல் 'தேசிய விடுமுறை தினமான' நேற்று வீட்டிலே நின்று கொண்டேன்..

இணையத்தில் மேய்ந்த போது எத்தனை விதமான எத்தனை எத்தனை பதிவுகள்.. எத்தனை கட்டுரைகள்..

சிலவற்றை வாசித்தபோது கண்ணீர்.. சிலவற்றை வாசித்தபோது பெருமிதம்.. சிலவற்றை வாசித்தபோது நம்பிக்கை கலந்த நிம்மதி..

இந்திய சகோதரர்களே நன்றிகள்.. உங்கள் உணர்வுகளுக்கும், எம்மைப் புரிந்து கொண்டமைக்கும்..

உங்கள் யாருடைய பதிவுகளுக்கும் பின்னூட்டம் நான் இடவில்லை.. மன்னியுங்கள்.. வாசித்தபின் பின்னூட்டமிட வார்த்தைகள் இல்லை என்னிடம்..

மீண்டும் மீண்டும் நண்பர்கள் மட்டும் உரித்தாகட்டும் உங்கள் எல்லோருக்கும்.. உங்களுக்கு சொல்வதற்கு நன்றி மட்டுமே என்னால் தரக்கூடிய உயர்ந்த வார்த்தைகள்..
இங்கிருந்து கொண்டு எங்களால் இவை மட்டுமே செய்ய முடியும் நண்பர்களே..

எமக்காக எழுந்து நின்றவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று இறைவன் என்ற ஒருவன் இருப்பானேயானால் அவனிடம் இப்போது உண்மையாகவே பிரார்த்திக்கிறேன்.. எந்த இழப்பையும் விரும்பாத எனக்கு இந்த இழப்பை தாங்கும் வலிமை கிடையாது..

உண்மையான உண்மைகள் இனி எப்போது வெளிவருமோ யாருக்கும் தெரியாது..

ஆனால் இனி நடக்கப்போபவை என்ன?

எதற்காக இத்தனை இழப்புக்களை நாம் சந்தித்தோமோ அவை கிடைக்குமா? (சற்றுக் குறைவான சமாதானம், சந்தோசம் கிடைக்கலாம்.. ஒரு குறைந்தபட்ச நம்பிக்கை தான்)

வரலாறுகள் பல திரிபு படுத்தப்பட்டு, மரணித்தவர்கள் மாபெரும் குற்றவாளிகள் ஆக்கப்படலாம்.. பல உண்மைகள் பிணங்களோடு பிணங்களாக குழி தோண்டிப் புதைக்கப்படலாம்.. நீதி நியாயங்கள் உரிமைகளோடு மறைக்கப்படலாம்.. குரல் கொடுக்க ஒருவரும் இல்லாமல் போகலாம்.. உரிமைகளைப் பங்கெடுக்கவும், தலைமை தாங்கவும் பலர் தலையெடுக்கலாம்.. பலரின் தலைகளும் எடுக்கப்படலாம்..

இன்று வரை வருகின்ற செய்திகள் எல்லாமே குழப்பமாக இருக்கின்றன.. உண்மை எப்போது வெளிவந்தாலும் ஒரு பக்கம் முற்றுப் புள்ளி பலமாகவே தெரிகிறது.. இனி வெளி அழுத்தங்கள் எவையுமே ஒன்றும் செய்ய முடியாது..

அடுத்தகட்டம் என்னவென்று எங்களால் சொல்ல முடியவில்லை.

நடப்பவை நடக்கட்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும்..


பி.கு -
இதை காலையிலிருந்தே பலவாறு யோசித்து, குழம்பியபடி தட்ட்டச்சிக் கொண்டிருந்த போதே பல்வேறு இணைய செய்திகளையும் வாசித்தேன்.. சிங்கள சக ஊழியர்களும் அந்த செய்திகள், படங்கள் பார்த்து கொஞ்சம் சந்தேகம், கொஞ்சம் அச்சம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.. 'இறக்கவில்லை இருக்கிறார்' என்ற தலைப்போடு படத்தோடு பரவும் மின்னஞ்சல் நாளை தலைப்பு செய்தியாகலாம்..

நாளை இலங்கையில் யுத்த வெற்றி பெற்ற படையினரை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில் இந்த செய்திகள் (குறிப்பாக தமிழ்வின், நக்கீரன்) இலங்கையில் பெரும்பான்மையினர் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வாறானதாக இருக்கும் என்று எனக்கு யோசிக்க முடியவில்லை.

இதற்கிடையில் இன்று ராஜிவ் காந்தியின் நினைவு தினம்.. இன்று காலை அதை வானொலியில் சொன்ன போது ஆழமான பெருமூச்சொன்று வந்தது.

இன்று 21ஆம் திகதி.. அண்ணர் இறந்ததாக செய்தி வந்தது 18ஆம் திகதி.. விதியா? திட்டமிட்ட சதியா?



May 16, 2009

நரமாமிச உண்ணிகளிடம் மாட்டிக்கொண்டால்...




மூன்று நண்பர்கள் பயங்கரமான காட்டு வழியாகப் போய்க்கொண்டிருந்த நேரத்திலே நரமாமிசம் உண்போரிடம் - cannibals அகப்பட்டுக்கொண்டார்கள். அந்த மூன்று பேரில் ஒருவர் நம்ம ஹீரோ கஞ்சிபாய்.

மூன்று பேரையும் கம்பங்களில் கட்டிப்போட்டு விட்டு – நரமாமிசம் உண்போரின் தலைவன் சொன்னான். 'உங்களை அவித்துப் பொரித்து பலவிதமாக சாப்பிடப்போகிறோம். அதன் பின் உங்கள் தோல்களினால் படகு, பாய்மரப்படகு செய்து எங்கள் பயணங்களுக்குப் பயன் படுத்துவோம்.'

மூன்று பேருமே பாதி செத்துவிட்டார்கள். 

வெலவெலத்து நடுங்கிய அவர்களைப் பார்த்து நரமாமிச உண்ணிகளின் தலைவன் சொன்னான் 'எனினும் உங்களைப் பார்த்தால் பாவமாகவும் இருக்கிறது. உங்கள் மரணத்தின் முன் இறுதி ஆசையொன்றைச் சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன்'

முதலாமவர் 'எனக்கு துடிதுடித்தெல்லாம் சாக முடியாது. நீங்கள் கொல்ல முதல் நானே இறந்து விடுகிறேன். தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்கள்' என்றார். 

கொடுக்கப்பட்டது.

அடுத்தவர் 'நான் இறந்தது பற்றி எனது வீட்டவருக்கு தகவல் சொல்லவேண்டும். தாளொன்றும் பேனாவும் கொடுங்கள்' என்று சென்டிமென்டானார்.

கொடுக்கப்பட்டது.

மூன்றாமவர் – நம்ம கஞ்சிபாய்...

'எனக்கு ஒரு முள்ளுக்கரண்டி – fork  கொடுங்கள்' என்றார். 

நரமாமிச உண்ணிகளுக்குப் புரியவில்லை.... முள்ளுக்கரண்டி எதற்கு? 
எனினும் கொடுத்தார்கள். 

அதை வாங்கிய கஞ்சிபாய் தன் உடலெங்கும் சரமாரியாகக் குத்த ஆரம்பித்தார். உடலெங்கும் காயம், துளைகள்... இரத்தம் ஓடுகிறது.

ஒரு இடம் மிச்சமில்லாமல் காயங்கள்.

நரமாமிச உண்ணிகள் பயந்து போய், அசந்து போய், திடுக்கிட்டுப் போய் நிற்கிறார்கள்...

தலைவன் உட்பட எல்லோரையும் ஒரு தடவை பார்த்தார்.

 ஒரு குரூரச் சிரிப்போடு கேட்டார் கஞ்சிபாய் 'ஏனடா என்னைச் சாப்பிட்ட பிறகு என் தோலில் படகு கட்டப் போறீங்களா? இப்ப என்ன செய்வீங்கடா? ஓட்டைப் படகிலே மூழ்கி நரகத்துக்குப் போங்கடா'

இது நேற்றைய காலை நிகழ்ச்சியில் சொன்ன நகைச்சுவை!

இதைக் கேட்ட எனது நண்பரொருவர் 'ஜோக்கிலேயும் நாட்டு நடப்பு சொல்லுறீங்க போல' என்று ளுஆளு அனுப்பிருந்தார். (மறுபடியும் SMSஆ... கிளம்பிட்டாங்கய்யா...)

அப்படியேதாவது இந்தக் கதைக்குள்ள 'பொடி' இருக்கா என்ன?

பி.கு - தொடர்ந்து ஒரே சீரியஸ் & IPL விஷயமே வருவதாக சில மடல்கள் வந்திருந்தன. அவர்களுக்காக(வும்)..



May 15, 2009

சீமான் பாடிய பாடல்

நேற்று எனது வானொலி காலை நேர நிகழ்ச்சியில் (வெற்றி FM- விடியல்- Onlineஇல் கேட்க வாரநாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை www.vettri.lk ) ஒரு புதிய பாடலை அறிமுகப் படுத்தினேன். (இப்போதெல்லாம் புற்றீசல் போல ஒவ்வொரு நாளும் வெளிவருகின்ற புதிய பாடல்களும், விபரமறியா புதிய திரைப்படங்களும் எண்ணிக்கையிலடங்கா.. தொல்லை தாங்கலப்பா..)

இந்த வாரம் மட்டும் முத்திரை, ஞாபகங்கள், அழகர்மலை, அங்காடித் தெரு இப்படி ஒரு பத்துப் புதிய படங்களின் பாடல்களையாவது அறிமுகம் செய்திருப்போம்.. (ஆனால் முதலில் தந்தது நாங்களே என்று பறை தட்டிக் கொள்வதில்லை.. முன்பு வேறெங்கோ செய்த சிறுபிள்ளைத் தனங்களையெல்லாம் வெற்றியில் வெட்டியெறிந்து விட்டோம்)

கேட்டவுடனேயே வரிகளும்,குரலும், இசையும் கூட மனதில் உட்கார்ந்து விட்டன.வரிகள் ஒரு கணம் மனதை சொடுக்கி விட்டது. குரலிலும் அதற்கேற்ற பாவம். 

அட பாடி இருப்பது நம்ம இயக்குனர் சீமான் அல்லவா?

விபரக் கொத்தைப் பார்த்தேன் ஆமாம்.. சீமானே தான்.. 

இசைக்கட்டுப்பாட்டாளர் பிரதீப்பிடம் கேட்டேன் "ஆமாம் அண்ணா இயக்குனர் சீமானே தான்" என்று பதில் வந்தது.

சாட்டையடி வரிகளையும் அவரே எழுதியிருக்கிறார். 

மீண்டும் மீண்டும் அடிக்கடி நேற்று கேட்டேன்.. இப்போது பார்த்தால் நேயர்களுக்கும் பிடித்துப் போனது, அறிவிப்பாளர்களுக்கும் பிடித்துப் போனதால் இப்போது இரண்டு நாட்களுள் எங்கள் வெற்றி வானொலியின் ஹிட் பாடலாகி விட்டது..  

மாயாண்டி குடும்பத்தார் என்பது தான் திரைப்படத்தின் பெயர்.
ராசு மதுரவன் (ஏற்கனவே 'பாண்டி' திரைப்படத்தை இயக்கியவர்) இயக்கம் இந்தத் திரைப்படத்தில் முக்கியமான பாத்திரங்கள் ஏற்போர் எல்லாமே இயக்குனர்களாம்.. 10 பேர். (எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா)

இந்தப் படம் பற்றி ஏற்கெனவே எனது சினிமா நிகழ்ச்சியான சினிமாலையில் சொல்லி இருந்தேன். பத்து இயக்குனர்களில் ஒருவரான கைது செய்யப்பட்ட சீமான் கூட இந்தப் படத்தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாதென்று பிணையில் வெளியே வந்து டப்பிங் பேசி செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. 

இந்தப்படத்தின் சில பகுதிகளில் நடிப்பதற்காகத் தான் சில நாட்கள் அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததாகவும் எதோ ஒரு சில இணையத்தளங்களில் படித்த ஞாபகம். 

பாடலைத் தேடி தரவிறக்கி பதிவில் தரமுடியவில்லை..
தேடித் பார்த்துக் கேட்டு பாருங்கள்.. நிச்சயமாகப் பிடிக்கும்.

வரிகளை மட்டும் இங்கே தருகிறேன்.. 

பேசாம பேசாம தான் இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குதுங்க பருந்து.
பேசாம பேசாம தான் இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குதுங்க பருந்து.
அட! தோழா ரொம்ப நாளா!
கேக்காம கேக்காம இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து
இப்போ போகுதடா கோவணமும் பறந்து.

விதச்ச பயிறு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது.
உணவில்லாம உழைச்ச வயிறு காஞ்சு கெடக்குது.
அடிக்கும் புழுவும் கூட எழுந்து துடிக்குது.
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறக்குது.
அட! தோழா ரொம்ப நாளா!

பேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குங்க பருந்து.

வருஷம் நாலு தேருதலு நாட்டில் நடக்குது.
அதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது.
எரியும் போது பொணமும் கூட எழுந்து நிற்குது.
உசிர் இருந்தும் உன் முதுகேன் குனிஞ்சி நிற்குது.
அட! தோழா ரொம்ப நாளா!

பேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குங்க பருந்து.
கேக்காம கேக்காம இருந்து நாம போனமட சூடு சொரணை மறந்து
இப்போ போகுதடா கோவணமும் பறந்து.

இசை - சபேஷ் & முரளி
பாடல் வரிகள் & பாடியவர் - இயக்குனர் சீமான்

வரிகள் எங்கள் நிலைமைக்கும் பொருத்தமாத்தான் இருக்கு.. கேட்டு உணர்ச்சிவசப்படவும்,பெருமூச்சு விடவும் தான் முடிகிறது..


பின்னிணைப்பு
நண்பர் சங்கீத் (மது) அனுப்பிய சுட்டி இது..


இன்னும் பலர் தாங்கள் அறிந்த தரவிறக்கம் செய்யும் சுட்டிகளைத் தந்துள்ளார்கள் கீழே.. எனினும் முடியுமானவரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் ஒலித்தட்டுக்களையும் வாங்குங்கள் என்று அன்போடு கேட்கிறேன்.





May 14, 2009

மதம் - வெறி ?- துவேஷம் ??- அவசரம்??? யாருக்கு???? - ஒரு விளக்கம்


எனது மதமும் மண்ணாங்கட்டியும்.. என்ற பதிவு கிளப்பிய சர்ச்சையும் ஒரு சிலருக்கிடையிலான தனிப்பட்ட கருத்து மோதல்களையும் பார்த்த பிறகே ஒரு விளக்கப் பதிவு போடலாம் என்று எண்ணினேன்..

பின்னூட்டங்களில் மாறி மாறி தங்களுக்குள்ளேயே நண்பர்கள் பதில்களை அளிப்பதால் நான் அதில் என் கருத்துக்களை இடாமல் தனிப்பதிவு தரலாம் என்று எண்ணினேன்.

எனது மனதில் பட்ட கருத்துக்களை நான் எப்போதுமே எங்குமே சொல்லத் தயங்கியதில்லை.. பல நேரங்களில் இது எனக்குப் பலபல கருத்து மோதல்களைத் தந்திருந்தாலும் கூட நான் அது பற்றி கவலைப் படுவதில்லை.. ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே கவனிப்பேன்.. என் வெளிப்படையான கருத்து யாரையாவது புண்படுத்துமா என்று.

சில நண்பர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்தே இப்படியான பதிவுகளை இடுமாறு குறிப்பிட்டிருப்பதைப் போல அப்படி ஒரு சர்ச்சையையும் நான் தொட்டதாக நினைக்கவில்லை.. பொதுப்படையாகவே சொல்லி இருக்கிறேன்..

அந்த smsஇல் என்ன நியாயம் இருக்கிறது என்று அந்த நண்பர்களைக் கேட்கிறேன்..
என் உங்களுக்கு இவ்வளவு சூடாகிறது?

இந்தப்பதிவை எந்தவொரு தனிநபரையோ, சமூகத்தையோ, சமயத்தையோ தாக்குவதற்காக எழுதவில்லை. எழுதவேண்டிய தேவையுமில்லை.

இதை நிரூபித்துக்காட்டவேண்டிய தேவையும் எனக்கில்லை.

நான் ஒரு ஊடகவியலாளனாக பொதுப்படையானவன் & பக்கம் சாராதவன்! எனினும் என் மனதில் பட்டதை என் தளத்திலே சொல்லும் உரிமை எனக்குள்ளது.

இஸ்லாமிய நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த இஸ்லாமிய மதம் பற்றிய sms தகவலைப் பற்றிய கருத்தைப் பதிந்தேனே தவிர – நிறைய பின்னூட்டங்களில் பலர் பொங்கி வெடித்திருப்பதைப் போல இஸ்லாம் மதத்தைப் பற்றி எங்கேயும் தாழ்த்திக் கூறவில்லை.

//இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.//

எல்லா மதமாற்றங்கள் - திணிப்புக்கள் பற்றியும் தெளிவாகவே பொதுவாகவே சொல்லியிருந்தும் சிலபேர் - இஸ்லாமைப் பற்றியே நான் சொன்னதாக பொங்கி வெடித்திருப்பது ஏனோ?

காரணம் மொழிப்பற்று – வெறி என்பது எனக்குள்ளே கொஞ்சமாவது இருந்தாலும் இருக்கும் எனினும் மதவெறி என்ற சாக்கடைக்குள்ளே ஊறியவனல்ல நான்!

பின்னூட்டங்களில் என் பதிவின் பின்னணியில் (என் பதிவில் இல்லாத விடயங்கள்) தத்தம் கருத்துக்களைத் தெரிந்தவர்கள் அதன் பொறுப்பாளிகள்.

காரசாரமான கருத்துக்கள் எதிரெதிராகப் பாய்ந்த போது – மிக மோசமான, துவேஷமான, தூஷனை மிகுந்த சில பின்னூட்டங்களை மட்டும் மட்டுறுத்தி ஏனையவற்றைப் பிரசுரித்துள்ளேன்.

எனினும் என்னைத்திட்டிய பின்னூட்டங்கள் எவையும் நீக்கப்படவில்லை. பிற சமயங்களை, பிறரைப் புண்படுத்தி வந்திருந்த சில அனானி, அசிங்கப் பின்னூட்டங்களை நிராகரித்துள்ளேன.

நண்பர்களே இறை மொழியாக நீங்கள் சொல்லிய

//உங்க மதம் உங்களுக்கு எங்க மதம் எங்களுக்கு//

என்பதே என் கருத்தும். எனினும் என்னை நான் எப்போதும் சமயம் கொண்டு இனம் காட்டியவனல்ல (வானொலியிலும் - வாழ்க்கையிலும் கூட) எனவே துவேஷம், முட்டாள்தனம், அவசரம் போன்ற வார்த்தைகளை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறேன்ளூ

எனக்கு அனுப்பியவாகள் பெற்றுக்கொண்டு அளவிருந்தால் சூடிக்கொள்ளுங்கள்!

அடுத்து Susan என்பவரின் பின்னூட்டம்

//எனக்கு ஒரு sms வந்தது...

தயவு செய்து கீழுள்ள செய்தியினை குறைந்தது 10 நண்பர்களிடமாவது SMS or Text மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறநாட்டு நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Just 41 days,1410 Tamils killed & 4100 wounded,Brothers & Sisters please make your voice heard,Your voice our life.Only you can save us. Eelam Tamils

ஆனால் எனக்கு கோபம் வரவில்ல..//


உண்மையில் வேதனை தந்த ஒரு விஷமத்தனமான பின்னூட்டம்.

மனதினுள் எவ்வளவு வன்மம் - குரூரம் இருந்தால் இப்படியொரு ஒப்பிட வந்திருக்கும்.


லாராவின் மதமாற்றமும் - அப்பாவிகளின் மரணங்களும் ஒரே தராசிலா? உங்களை இறைவழி நிற்பவர் - இறை நம்பிக்கையுடையவர் என்று உண்மையிலேயே இஸ்லாம் என்ற சமயத்தைப் பின்பற்றும் யாராவது ஒருவர் ஏற்றுக்கொள்வாரா?

இதற்குத் தான் நான் சற்றுக் காட்டமாகவே சொன்னேன் ..

//கவலைப்படவும், கோபப்படவும் உலகில் எத்தனையோ பல முக்கியமான விடயங்கள் இருக்கும் நேரம் இதெல்லாம் மயிராச்சு..

அவரவர் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்....

அதைக் கொண்டாடவும் வேண்டாம்.. கொலை வெறியுடன் துரத்தவும் வேண்டாம்!

இது 21ம் நூற்றாண்டு.... இன்னமும் மதங்களை வைத்துக்கொண்டு மலிவான விளையாட்டுக்கள் வேண்டாம்!

மதமும் மண்ணாங்கட்டியும்..
போங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..//

நான் அடிப்படை நாத்திகனும் அல்ல..எனினும் மதங்கள் பற்றி எழுந்திருக்கும் வெறி,பைத்தியக்காரத் தனங்கள் கண்டு சற்று அலுத்துப் போய் இருக்கிறேன் என்பதே உண்மை..

என்னுடைய பதிவின் மூலமாக ஏதாவது தெளிவு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் சந்தோசம். மாறாக வீண் விரோதங்கள் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்.எனினும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. தவறு செய்தால் தானே.. பின்னூட்டம் போட்ட சிலர் என்னிடம் மன்னிப்புக் கோரினால்
மகிழ்வேன்.

மதங்களை மதியுங்கள்.. நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள்.. வெறியர்கள் ஆகாதீர்கள்.. (இதையும் பொதுப்படையாகவே சொல்கிறேன்.. யாரும் எந்தவொரு மதத்தையும் சொன்னேன் என்று அவசரம்,இனத்துவேஷம் என்று சண்டைக்கு வந்துவிடாதீர்கள்)

இருக்கும் பிறப்பிலேயே மனிதராய் வாழ்வோம்.. இறந்தபின்னர் நடப்பதை நினைத்து மதம் பிடித்து மரங்களாய் வாழாமல்.


May 13, 2009

முக்கியமான மூன்று அணிகள் & Cheer leaders - IPL அலசல் பகுதி 2


காலையில் நான் தந்த அலசல் பகுதி 1க்கு கிடைத்த வரவேற்பையடுத்து உற்சாகத்துடன் இதோ அலசல் பகுதி 2.

சென்னை – ஆரம்பத்தில் சறுக்கல், சொதப்பல், வழுக்கல்களோடு ஆரம்பித்து படிப்படியாக வேகமெடுத்து இப்போது ராஜ பாதையில் பயணிக்கின்றது.இப்போது அணி மிகப் பலமான நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்..

ஹெய்டன் என்ற செம்மஞ்சள் தொப்பியணிந்த (Orange cap) மிகப் பெரிய ஒரு தூணோடு சுரேஷ் ரைனா மட்டும் போராடிக் கொண்டிருந்தார்.. எனினும் அண்மைய போட்டிகள் மூலம் பத்ரிநாத், தோனி ஆகியோரும் நல்ல formக்கு திரும்பியிருப்பது நல்லதொரு சகுனம்.

கடந்த போட்டிகளிலும் ஹெய்டன்,ஹசி போன்றோர் சென்ற பிறகே சென்னை வெளுத்து வாங்க ஆரம்பித்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
இம்முறையும் துடுப்பாட்டப் பலத்துடன் கட்டுப்பாடான பந்து வீச்சும் ஏனைய அணிகளோடு ஒப்பிடும் பொது சிறப்பான களத்தடுப்பும் சேர்வது சென்னைக்கு அபாரமான பலம்.

தோனியின் நுட்பமான தலைமைத்துவமும் சேர்ந்துகொள்ளும் போது சென்னை முடிசூடும் என்று சொல்ல நான் முன்வந்தாலும், பந்துவீச்சின் ஆழம், பலம் இன்னும் கொஞ்சம் அதிகரித்தாலே டெல்லி, டெக்கான் போன்ற அணிகளுடன் தாக்குப் பிடிக்க முடியும். 


காரணம் முரளி, மோர்கல் போன்ற பந்து வீச்சாளர்கள் இன்னமும் முழுத் திறமையைக் காட்ட ஆரம்பிக்கவில்லை.. இனி வரும் முக்கியமான போட்டிகளில் ரைனாவையும்,ஜகாதியையும் நம்பியிருக்க முடியாதே.. 

அடுத்து நான் சமச்சீர்த் தன்மையும், சமமான அணிப் பரம்பலும் உள்ள அணிகள் என்று நான் கருதும் இரு அணிகள் டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டெயார்டெவில்ஸ்.

ஆரம்பித்து ஒரு சில நாட்களிலேயே எனது பதிவில் இவ்விரு அணிகளே இறுதிப் போட்டியில் விளையாடும் என்று எதிர்வு கூறியிருந்தேன். ஆரம்பம் முதலே இவ்விரு அணிகளும் செலுத்திய ஆதிக்கம் அத்தகையது..

நான்கு தொடர்ச்சியான வெற்றிகள் அவை தந்த பெருமிதம்..
அதன் பின் மூன்று தொடர்ச்சியான தோல்விகள் தந்த தடுமாற்றம் ..
டெக்கான் அவ்வளவு தான் சார்ஜ் இறங்கி விட்டது என்று யோசிக்கும் வேளையில் வியூகம் மாற்றிக் கொண்டு எழுந்து நிற்கிறது..

கிப்சின் form போனாலென்ன, எட்வர்ட்ஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போனாலென்ன இன்னும் இருக்கிறார்கள் பாருங்கள் என்று தகுந்த பிரதியீடுகளைக் களம் இறக்கி வெற்றி காணும் வழிமுறை கில்க்ரிஸ்ட்டுக்கும் பயிற்றுவிப்பாளர் லீமனுக்கும் தெரிந்திருக்கிறது.


ஊதாத் தொப்பியின் (Purple cap) தற்போதைய உரிமையாளரான(அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்) R.P.சிங், சுழல் பந்து வீச்சில் தடுமாற வைக்கும் ஓஜா, துடுப்பாட்டத்தில் தடுமாறினாலும் பந்துவீச்சில் அண்மையில் hat trickஉம் எடுத்து டெக்கானின் முன்னணிப் பந்துவீச்சாளராக மாறிவரும் ரோகித் ஷர்மா, சகலதுறை வீரராக அசத்தும் மேற்கிந்திய வீரர் ட்வைன் ஸ்மித், சுமன், வேணுகோபால், புதிதாக அசுர பலம் சேர்க்க வந்திருக்கும் ஆஸ்திரேலியரான அன்றூ சைமண்ட்ஸ், ரொம்பவே தாமதமாக அணிக்குள் அழைக்கப்பட்டுள்ள வாஸ் என்று கில்க்ரிஸ்ட்டின் சகபாடிகள் 



வெற்றி பெறும் வேகமும், தாகமும் டெக்கான் சார்ஜர்சுக்கு இருப்பதும் அணி ஒற்றுமையும் இளையவர்களை தட்டிக் கொடுத்து தூக்கிவிடும் தலைவராக கில்க்ரிஸ்ட் இருப்பதுவும் டெக்கானை இம்முறை கிண்ணத்தைத் தூக்கவைத்தாலும் ஆச்சரியப் படாதீர்கள்.

இதே டெக்கான் அணியா கடந்த வருட IPLஇல் கடைசி ஸ்தானத்தில் இருந்த அணியா என்று வாய் பிளக்கும் ஆச்சரியம் எழுகிறது.. (லக்ஸ்மனுக்கும், கில்க்ரிஸ்ட்டுக்கும் இடையிலான வித்தியாசம் தான் இதோ?)  

இவை எல்லாவற்றிலும் யாரை நீக்குவது, யாரை எடுப்பது என்று அணி முகாமைக்கும், தலைமைக்கும் தலையிடியைத் தரும் அளவுக்கு எல்லாருமே சிறப்பாக விளையாடும் அணி தான் மிகப் பலம் வாய்ந்த டெல்லி டெயார்டெவில்ஸ் அணி.

மக்க்ரா என்ற உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இன்னமும் ஒரு போட்டியிலும் விளையாடாமல் காத்திருக்கும் அளவுக்கு, சேவாக் காயமடைந்த வேளையில் கொஞ்சமேனும் அவர் இல்லாத குறை தெரியாத அளவுக்கு விளையாடக்கூடிய வீரர்கள் நிறைந்துள்ள அணி இது.

ஒரு போட்டியில் வாங்கிய செமத்தியான அடியோடு நியூசீலாந்து அணியின் வேட்டோரியையே தூக்கி வெளியே போட்டுவிட்டு இன்னும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது டெல்லி. 

அதிரடி ஆரம்பத் துடுப்பாட்டத்துக்கு கம்பீர்,சேவாக், வோர்னர்.. பின்னர் போட்டிகளை வென்று கொடுக்கும் அடித்தளம் இட்டு அசத்த தில்ஷானும் டீ வில்லியர்சும் பின் தினேஷ் கார்த்திக்கும்.. 

இம்முறை டில்ஷானின் அதிரடி ஆட்டம் அசத்துகிறது.. இவ்வளவு காலமும் சேர்த்து வைத்த கணக்கையெல்லாம் இந்த 2009ஆம் ஆண்டில் மனிதர் பிளந்து கட்டுகிறார்.

தேவையான போது கை கொடுக்க மந்ஹாஸ் மற்றும் இன்னும் சில வீரர்கள்.. பின்னர் பந்து வீச்சில் பின்னுவதர்கேன்றே இருக்கிறார்கள் நன்னேசும்,மிஸ்ராவும்,நெஹ்ராவும். இவர்களோடு இளைய வேகப் பந்து வீச்சாளர் சங்வான். 

வேறென்ன வேண்டும்?

இன்று இரவு டெல்லி பெறும் வெற்றி அவர்களின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும். (எனினும் மிக விறுவிறுப்பான போட்டி ஒன்று இன்று இரவு காணக் கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்)

இன்னொரு முக்கியமான விஷயம் இம்முறை IPLஇல் குறைவான விக்கெட்டுக்களை இழந்த அணியும் டெல்லியே.

எல்லா அணிகளிலும் குறைவான களத்தடுப்பு குளறுபடிகளை விட்ட அணி என்ற பெருமையும் டெல்லிக்கே இருக்கிறது.

காயத்திலிருந்து மீண்டு இன்று மீண்டும் சேவாக் அணிக்குத் திரும்புவதோடு டெல்லி இறுதி வரை வீறு நடை போடும் என்று என் மனம் கணக்குப் போடுகிறது. 

பெயருக்கேற்றது போல மற்றைய எல்லா அணிகளுக்கும் இவர்கள் பிசாசுகள் தான்.. 

---------------------------

அரையிறுதிப் போட்டிகளுக்கான அணிகளைத் தெரிவு செய்வதில் இனி புள்ளிகள்,சதவீதங்கள், எனப்படும் நிகர ஓட்ட சராசரிகள் என்று கணக்குப் போடும் நாட்கள் நெருங்கியாச்சு..

ஆனாலும் மனதை நெருடும் சின்னக் குறை.. Twenty 20 போட்டிகளுக்கே உரிய, கடந்த முறை இருந்த பெருமளவு ஓட்டக் குவிப்புக்கள் இம்முறை கொஞ்சம் குறைவே.. 

சிக்சர்கள் பறந்தாலும் சில நேரம் டெஸ்ட் போட்டியோன்றைப் பார்க்கும் உணர்வையும் சில போட்டிகள் தந்துள்ளன.. தென் ஆபிரிக்க ஆடுகளங்கள் அப்படி..

இனி நாட்கள் போகப் போக ஆடுகளங்கள் இன்னும் மென்மையடைந்து ஓட்டங்களின் எண்ணிக்கை குறையலாம் என்று கருதப் படுகிறது.

ஓட்டங்கள் குறைந்தாலும் ஆட்டங்களுக்கு மட்டும் குறைச்சலில்லை.. cheer leadersஐத் தானுங்கோ சொன்னேன்.. 

இதோ உங்களை எங்கள் அன்பு அண்ணன்மார்,தம்பிமார், அங்கிள்மாரை குஷிப்படுத்த சில ஆடும் அழகிகள்..  






ஆட்டமிழப்பு நேரங்களிலும், 4,6 பறக்கும்போதும் வீரர்களைக் காட்டுதோ இல்லையோ கமெராக்கள் நிச்சயம் இந்த கவர்ச்சி அழகிகளைக் காட்டத் தவறா.
எங்களின் அபிமான நட்சத்திர வீரர்கள் சொதப்பும் போதும் கூட இந்த கவர்ச்சிக் கன்னிகள் மட்டும் எப்பவுமே நல்லாத் தான் ஆடுறாங்கப்பா.. 

இன்னும் 17 போட்டிகள் இந்த ஆண்டின் IPLஇல் எஞ்சியிருக்கும் நிலையில் இன்னும் யார் யார் புதிய ஹீரோக்களாக கிளம்புவார்கள்.. என்னென்ன புதிய சாதனைகள் படைக்கப்படும்.. என்னென்ன புதிய சர்ச்சைகள் கிளம்பும் என்று அறிய ரொம்பவே ஆவல்.. 

May 24 வரை எங்களுக்கும் உங்களுக்கும் உலகெங்கும் எல்லோருக்கும் தீனி போட்டபடி IPL தொடர்கிறது..

விரைவில் இன்னொரு பற்றிய பதிவில் சந்திப்போம்..
இப்போ வர்ட்டா?

பி.கு - வாசிச்சாச்சா? படங்கள் பார்த்தீங்களா? ரசித்தீர்களா? அப்பிடியே மறக்காம வோட்டு குத்தீட்டு(தமிழக நண்பர்கள் சாவடிகளில உங்கள் ஜனநாயகக் கடமையை செய்த மாதிரி இங்கேயும் தவறாமல் செய்யுங்க), கமெண்டும் போட்டிட்டு, நேரம் கிடைச்சா என்னுடைய பழைய பதிவுகளையும் பார்த்திட்டு போங்க..



ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner