IPL தென் ஆபிரிக்காவில் ..ஏன் & இனி?

ARV Loshan
16

ஒரு மாதிரியாக IPL சர்ச்சைகள் எல்லாம் முடிந்து இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் இந்தியாவில் இடம்பெறாமல் தென்னாபிரிக்காவில் இடம்பெறும் என உத்தியோகபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.  

IPLஉம் SCA என்று அழைக்கப்படும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையும் விடுத்த உத்தியோகபூர்வ அறிக்கையில் ஏப்ரல் 18ஆம்திகதி முதல் IPL இம்முறை தென்னாபிரிக்காவில் இடம்பெறும் என்பது உறுதியாகவுள்ளது.

IPLஇன் தலைவரும் எந்த சர்ச்சைக்கும் பிரச்சனைக்கும் சளைக்காத இரும்பு மனிதருமான லலித்மோடி இங்கிலாந்தையே தெரிவு செய்வர் என்று பலபேர் எதிர்பார்த்தாலும் தென்னாபிரிக்காவில் IPL இடம்பெறுவது உறுதியாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

தென்னாபிரிக்காவில் காலநிலை சீராக இருக்கிறது. இங்கிலாந்தில் ஏப்ரல் மாத மழை மிக மோசமானதாம்.

ஏற்கெனவே T-20 உலகக்கிண்ணப் போட்டிகளை 2007இல் நடத்திய அனுபவமும் ரசிகர்கள் மத்தியில் இவ்வகை குறுகிய ஆட்டங்களுக்கு இருக்கும் மோகமும்.

இங்கிலாந்தைப் போலவே தென் ஆபிரிக்காவிலும் ஒரே நேரத்தில் பல இடங்களில் போட்டிகளை நடத்தக் கூடியளவுக்கு பல மைதானங்கள் இருக்கின்றன.

நேர வித்தியாசம் இங்கிலாந்தை விடக்குறைவு.

இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை இந்தியாவிலிருந்த IPL போட்டிகள் வெளியேறியதன் பின்னர் எங்கு நடந்தால் தான் என்ன என்பதே நிலை.

லலித் மோடியும் IPL உம் இந்திய ரசிகர்களுக்காக போட்டியின் ஒலிபரப்புநேரம் இந்திய இலங்கை நேரப்படி மாலை 4மணி மற்றும் இரவு 8மணி என்று அறிவித்த பின்னர் தொலைக்காட்சி இருந்தால் தான் கவலை இல்லையே!

எனினும் அனேக நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு குறிப்பாக இந்திய வீரார்களுக்கு இங்கிலாந்தில் IPL போட்டிகளை நடாத்தியிருந்தால் நன்றாயிருக்குமே என்ற எண்ணம் உள்ளது.

காரணம் -
1) அனேகமான வீரர்களுக்கு இங்கிலாந்து 
இரண்டாவது தாய்நாடு போல – அடிக்கடி விஜயம் செய்துள்ளனர். பல நண்பர்கள் உறவுகள் அங்கே உள்ளனர்.

2) பிராந்திய அணிகளுக்காக (County teams)  விளையாடிய அனுபவமும் தென் ஆபிரிக்காவை விடப் பழக்கமான இங்கிலாந்தின் ஆடுகளங்களுக்கும் பரிச்சயமானவை.

3) இங்கிலாந்து சிறிய நாடு என்பதனால் 
நீண்ட பயணங்கள் இருக்காது களையப்படையத் தேவையில்லை.

  4)  எல்லாவற்றிலும் முக்கியமானது - இம்முறை 
 20 – 20 உலகக்கிண்ணப் போட்டிகள் 
இங்கிலாந்திலே இடம்பெறவுள்ளதனால் IPL போட்டிகள் நடைபெறும் ஐந்து வாரங்கள் பிரயோசனமான அனுபவங்களையும் ஆடுகள காலநிலைப் பரிச்சயத்தையும் தந்திருக்கும்.

எனினும் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள மேற்கிந்திய டெஸ்ட் ஒருநாள் போட்டிகள் FA கிண்ண கால்பந்து போட்டிகளின் அரையிறுதி இறுதிப்போட்டிகள் லண்டன் மரதன் ஒட்டம்,G20 மாநாடு என்று பல முக்கிய நிகழ்வுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேள்விக் குறியாக்கி

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைப் பிரச்சினையும் செலவுகளும் சேர்ந்துக்கொள்ள தென்னாபிரிக்காவுக்கு IPL சென்றுள்ளது. 

இந்தியாவில் நடத்தவதை விட தென் ஆபிரிக்காவில் நடத்துவது செலவு கூட என்று எல்லோருக்குமே தெரியும்.

தென் ஆபிரிக்க அரசு செய்து கொடுத்திருக்கும் வசதிகள் இன்னும் பலபல.. 10000பேருக்கு வீசாக்கள்(வீரர்கள்,பணியாட்கள்,முக்கிய பிரமுகர்கள்) பாதுகாப்பு வசதிகள், சலுகை அடிப்படையில் விமானப்பயண சீட்டுக்கள்.. 

இதற்கு மேல் மோடி தென் ஆபிரிக்க ஹோடேல்களில் இப்போதே 30000 பேருக்கு அறைகள் பதிவு செய்து வைத்துள்ளார்.

தென் ஆபிரிக்கர்களுக்கு பல வரவுகள்..

இதை விட இன்று காலை எனது நண்பர் ஒருவர் சொன்னது "தென் ஆபிரிக்காவில் போட்டிகள் நடைபெறும் போது,போட்டிகள் சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும் வந்திருக்கும் சிட்டுக்களையே ரசிக்கலாம்.. இது மட்ட்டுமில்லாமல் க்கும் எந்த தடையும் இருக்காது.." 

ஆமாங்கோவ்.. உலகக் கிண்ணம் நடைபெறும்போது போட்டிகளை யார் பார்த்தாரோ இல்லையோ இவையெல்லாம் பார்த்திருப்பார் தானே..

கிரிக்கெட் அபிமானம் நிறைந்த இந்திய ரசிகர்கள் நிறைந்த மைதானங்களிலிருந்து போட்டிகளைப் பார்க்கக் கிடைக்காதது எங்களுக்குத் தூரதிர்ஷ்டமே எனினும் எதிர்கால இந்தியக் கிரிக்கெட் வீரர்களான பல்வேறு இந்திய மாநிலங்களையும் சேர்ந்த இளைஞர்களுக்கு சர்வதேச அங்கீகாரமும் வெளிநாடொன்றில் விளையாடும் வாய்ப்போடு கிடைப்பது பெரிய விஷயம் தானே?

இந்தியத் தேர்தலா - இந்தியன் பிரிமியர் லீக்கா என்ற கேள்விக்கு இந்திய அரசு மிகத் தெளிவான பதிலை அளித்துவிட்டது.

உலகின் மிகப் பணக்கார கிரிக்கெட் சுற்றுப்போட்டியான IPL இந்தியாவை விட்டு இடம்பெயர்ந்தது அவமானமொன்றும் இந்திய இயலாமை என்றும் நேற்று இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக்கணிப்பில் பலர் கருத்துச் சொல்லி இருந்தனர்.

இந்தியத் தேர்தலில் இதுவும் ஒரு முக்கிய தாக்கமாக இருக்குமா என்பதை இந்திய அரசியல் அவதானிகள் தான் சொல்லவேண்டும். காரணம் பா.ஜ.க.வும் சிதம்பரமும் முட்டி மோதிக் கருத்துக்களால் குதறியிருந்தார்கள்.

இந்தியன் பிரீமியர் லீக் என்று ஆரம்பிக்கப்பட்டதில் கடந்த வருடத்தில் ராஜஸ்தான் ரோய்ல்ஸ் அணிக்கு மட்டுமே ஒரு வெளிநாட்டவர் (ஷேன் வோர்ன்) தலைமை தாங்கி இருந்தார் (பின்னர் லக்ஸ்மனுக்கும் டெண்டுல்கருக்கும் ஏற்பட்ட காயங்களால் மும்பாய்,டெக்கான் அணிகளுக்கும் தலைமைகள் மாறின)

இம்முறையோ நான்கு வெளிநாட்டுத் தலைமைகள் இருப்பர் என எதிர்வு கூறப்படுகிறது- முதல் பலியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கங்குலி மாற்றப்பட்டு நியூசிலாந்தின் பிரென்டன் மக்கலம் தலைவராக்கப்படலாம் என்று ஊகங்கள் உலவுகின்றன.

இதேவேளை இன்று மாலை வெளியான புதிய தகவல் ஒன்றில் பல தலைவர்களை கொல்கொத்தா அணி பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. Saurav Ganguly, Brendon Mccullum, Chris Gayle, Brad Hodge மாற்றி.. மாற்றி.. இது புதுசு..
பயிற்றுவிப்பாளர் மருத்தவர்கள் ஆலோசகர்கள் என்று 90வீதம் ஆனோர் வெளிநாட்டவர்களாக மாறியுள்ள நிலையில் IPLம் இந்தியாவை விட்டு இப்போது வெளியேறும் தருணத்தில் அணிகளின் உரிமையிலும் பெயர்களிலும் மட்டுமே 'இந்தியன்' இருக்க இந்தியன் பிரீமியர் லீக்கின் அடையாளம் மாறப் போகிறதா?

சுவை கண்டுவிட்டால் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவோ,இங்கிலாந்தோ IPLஐ நடத்தக் கேட்கலாம்.. அதிக பணம் வந்தால் லலித் மோடியும் அவர் சொல்லுக்கு அசையும் இந்திய கிரிக்கெட் சபையும் ஆமாம் போடலாம்..

எனக்கெல்லாம் இவை எல்லாவற்றையும் விட பதினெட்டாம் திகதி வரை இன்னும் எத்தனை நாள் இருக்கு என்று எண்ணுவதிலும் இலங்கையில் எந்த சேனல் இதை ஒளிபரப்பும் என்பதிலுமே ஆர்வாமாக் இருக்கிறது.. 

எந்த செனலுமே ஒளிபரப்பு உரிமை வாங்காவிட்டாலும் வீட்டில் இணைப்பு எடுத்துள்ள கேபிளில் ஒழுங்கா போட்டி காட்டுற சேனல் வந்தால் சரி..  







Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*