August 24, 2012

அமெரிக்கா - அழகு, ஆச்சரியம், etc etc


முன்பொரு நாள் விடியலில் அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று, அமெரிக்கா பற்றி பேசும்போது 'எம் எல்லோருக்குமே.. மூன்றாம் உலக நாட்டவருக்கு முக்கியமாக,  அமெரிக்கா  ஒரு கனவு தேசம்' என்று வர்ணித்திருந்தேன்.
காரணம் அவர்களின் முயற்சியும் வளர்ச்சியும்.

1776ஆம் ஆண்டு எந்த பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றார்களோ அவர்களையே இன்று தம் சொல் கேட்க வைத்திருக்கும் அளவுக்கு அபரிதமான வளர்ச்சியும், எல்லாத் துறையிலுமே உலகின் முதல் தர நாடாகவும் வளர்ந்திருப்பது சும்மா விடயமல்ல..

அதற்கும் இடையில் அவர்கள் சந்தித்த யுத்தங்கள் பலப்பல..
அமெரிக்க உள்நாட்டு யுத்தங்கள், ஸ்பெய்ன் , பிரித்தானியா, மெக்சிக்கோவுடனான போர்கள், பின்னர் உலக மகா யுத்தங்கள்...
அதன் பின்னர் கொரிய யுத்தங்கள்.. வியட்நாமிய யுத்தம், அதன் பின் வளைகுடாப் போர், ஈராக்கிய யுத்தம், இறுதியாக (இப்போதைக்கு) ஆப்கான் யுத்தம்...

இதனாலேயே சர்வதேசப் போலீஸ்காரன் என்ற பெயரையும் உலகின் பெரும்பாலானோரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டது அமெரிக்கா.
எங்களுக்கும் ஆரம்பகாலம் தொடக்கம் அமெரிக்கா என்றவுடன் ஒரு பயம், வெறுப்பு, இவை இரண்டை விட எரிச்சல் என்பன சேர்ந்தே இருக்கும்.

ஆனால் இங்கே வந்து நான் கண்டு ஆச்சரியப்பட்டு, மனதார வாழ்த்திப் பாராட்டிய சில அமெரிக்க குணாம்சங்கள் பற்றி அமெரிக்காவில் இருக்கும்போதே அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.

(ஒரு விருந்தினனாக, கிடைத்த சில நாட்களில் நான் அவதானித்த, ரசித்த, என் பார்வையில் பார்த்த விடயங்களைப் பதிவிடுகிறேன்.. என்னை விட அமெரிக்கா பற்றி அறிந்தவர்கள், அமெரிக்காவிலே வாழ்கின்றவர்கள் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள், இல்லை உங்கள் பார்வையையும் பகிர்ந்துகொள்ளுங்கள்)

முதலாவதாக,
இலங்கை போன்ற நாடொன்றில் ஊடகவியலாளனாகப் பணியாற்றும் என்னைப் போன்றவனுக்கு அமெரிக்கா பற்றி பேச்சளவில், வாசிக்குமளவில் அமெரிக்கா பேச்சு சுதந்திரத்துக்கு, கருத்து சுதந்திரத்துக்கு, உரிமைகளை அனுபவிக்கும் சுதந்திரத்துக்குக் கொடுக்கும் மரியாதை பற்றித் தெரிந்திருக்கும்.
ஆனால் கண்கூடாகக் கண்டு, அனுபவிப்பதும் அது பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதும் ஒரு மறக்க முடியாத அனுபவம்.

அவர்களது நாடு பற்றி இருக்கும் விமர்சனங்கள், அதிருப்திகளை அவர்கள் முன்னாலேயே நேரடியாக நறுக்குத் தெறித்தாற்போல சொன்னாலும் முகம் சுளிக்காமல் எதிர்க்காமல் கேட்டுவிட்டுப் பதில் தருகிறார்கள்.
மற்றவர்களின் கருத்துக்கு இடம் தந்தே அடுத்த விடயத்தைப் பேசுகிறார்கள்.

எத்தனை எத்தனை நாடுகளை சேர்ந்தவர்கள், எத்தனை மொழிப் பயன்பாடுகள், எத்தனை சமய அனுட்டானங்கள்.. அத்தனையையும் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இரு நூற்றாண்டுக்கு முன் இருந்த உள்நாட்டுப் பிரச்சினையினால் ஏற்பட்ட இழப்பும், கறுப்பருக்கெதிரான வன்முறைகளும், பெண்ணடிமைத் தனமும் தங்களைப் பிளவுபடுத்திப் பிந்தல்லியத்தை உணர்ந்து தான் இப்படியொரு மாற்றமோ?
9/11 க்குப் பின்னரான சுயபாதுகாப்பு அச்சம் இருந்தாலும் அது துவேஷமாக மாறிவிடக் கூடாது என்பதில் பெரும்பான்மை அமெரிக்கர்கள் கவனமாக இருப்பதைக் கண்டேன்.அடுத்து,
அமெரிக்கர்களின் கலை ரசனை.. குறிப்பாக கட்டட அமைப்புக்களின் நயமும் நுணுக்கமும் உயரிய ரசனையும்.
வானளாவ வளர்ந்து நிற்கும் நவீன கட்டடங்கள் தான் அமெரிக்காவின் அடையாளம் என்று இலங்கையிலிருந்து எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, வொஷிங்டன் மாநகரில் எனது முதல் நாள் காலைப் பொழுதே அவை எல்லாவற்றையும் உடைத்துப்போட்டு அமெரிக்கா பற்றி ஒரு உயர்வான என்னத்தை ஏற்படுத்திவைத்தது.

நூறாண்டுகளுக்கும் மேலே எழுந்து நிற்கும் கட்டடங்களில் காணப்படும் கலை நுணுக்கங்கள் மட்டுமல்லாமல் அவற்றை இன்று வரை அப்படியே பாதுகாக்க அவர்கள் காட்டும் சிரத்தையும் அவர்கள் மேல் தானாக ஒரு மரியாதையைக் கொண்டுவந்துவிடும்.
முதலாவது வாரத்தில் வொஷிங்க்டனில் பார்த்த பழைய கட்டடங்கள், முக்கியமான நினைவுச் சின்னங்கள் மட்டுமல்லாமல், அரச அலுவலகங்களைக் கூட ஒரு கலானயத்தோடு கட்டி அழகு பார்ப்பது கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கிறது.

பிலடெல்பியா என்பது அமெரிக்கா என்ற தேசத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் இடம். மிகப்பழமையான இந்த நகரத்திலும் எத்தனை அழகான வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டடங்கள்..
அமெரிக்க காங்கிரஸ் (Capitol Hill ) கட்டடத்தில் இருந்து பிலடெல்பியாவின் நகர மண்டபம் (City Hall) முதல் சாதாரண ஒரு கட்டடம் வரை ஒரு அழகும் அந்தக் கட்டடக் கோபுரங்கள், அவற்றின் உருவ அமைப்புக்கள், அவற்றில் வைக்கப்பட்டுள்ள உச்சி சிலைகள் அனைத்திலும் ஒரு ஆழமான அர்த்தமும் அதன் பின்னால் சரித்திரப் பின்னணியும் இருக்கின்றன.
நான் மிக ரசித்த சில கட்டட அமைப்புக்களை கீழே படங்கள் + சிறு குறிப்புக்களுடன் தருகிறேன்.

ஆபிரகாம் லிங்கன் நினைவு மண்டபம் 

அமெரிக்க முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வோஷிங்க்டனின் நினைவுத் தூபி 

அமெரிக்கத் திறைசேரித் திணைக்களம் 

வெளிநாடொன்றின் தூதுவராலயம் 

நியூ யோர்க்கில் உள்ள ஐநா தலைமையகம் 

பிலடெல்பியாவில் உள்ள நகர மண்டபத்தின் கோபுரம்.
பென்சில்வேனியாவில் முதலாவது குடியிருப்பை உருவாக்கிய ஆங்கிலேயரான பென்  அவர்களின் உருவச் சிலை தான் கோபுர உச்சியில் உள்ளது.பிலடெல்பியாவில் வானை முட்டும் நவீன கோபுரங்கள் 


பிலடெல்பியாவின் கலை நூதனசாலை 

இன்னொரு விடயம் நான் அமெரிக்காவில் சுற்றிவந்து பார்த்த அத்தனை இடங்களிலும் வெயில் தகித்த இடமான லொஸ் ஏஞ்ஜெலிசில் மட்டுமே (நாம் அங்கே சென்ற நேரம் தகித்த வெப்பம் நாம் அங்கிருந்து அயோவா சென்ற பின் குறைந்து குளுமையானது என்ன கொடுமையோ?) மரங்கள் மிகக் குறைவாக இருந்தது. மற்றைய எல்லா பெரு நகரங்களிலும் கூட கட்டடங்களுக்கிடையில் அழகாக இடம் விட்டு சோலைகளை, பூங்காக்களை, மரத்தொப்புக்களை உருவாக்கி அழகு பார்க்கிறார்கள்.

அதிலும் பிரெஞ்சு சிற்பியால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வொஷிங்க்டன் அழகோ அழகு..
(அமெரிக்கத் தலைநகர் வொஷிங்க்டனின் நகர அமைப்பு, அதன் சுவாரஸ்யங்கள் பற்றி இந்த அமெரிக்க விஜயம் முடிந்த பிறகு விவரமாக எழுதுகிறேன்)
மேலும் பிரித்தானியர்களின் ஆரம்பகாலக் குடியேற்ற நகரங்களில் ஒன்றான பிலடேல்பியாவும் அவ்வாறே உயரமான கோபுரங்கள், கட்டடங்களின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் பச்சைப் பசேல் என்ற சோலைகளின் குளுமையையும் தருகிறது.

அந்த நாட்களிலேயே எவ்வளவு தூரம் பிற்காலத்தையும் சிந்தித்து திட்டமிட்டு நெருக்கடிகள் எழாவண்ணம், சனத்தொகை பெருகினாலும் எவ்விதத்திலும் இந்த சோலைகள், பழைய கட்டடங்கள் பாதிக்காவண்ணம் திட்டமிட்டுள்ளார்கள்.

நாம் தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மை உடைய நாகரிகம், வரலாற்றுச் சிறப்புடையவர்கள் என்று சொல்லிப் பெருமை கொண்டாலும், அந்த ஆவணங்கள், அந்த சான்றுகள், எம் பழமையின் பெருமையை நாம் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் இன்னும் அக்கறை காட்டவேண்டும் என்று நினைப்பவன் நான்.

ஆனால் ஒரு நானூறு ஆண்டுகள், அல்லது ஐந்நூறு ஆண்டுகளே அதிகபட்ச வரலாறு கொண்ட அமெரிக்கர்கள் அவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாதுகாத்து, அதன் தொன்மையுடன், தங்கள் ஒவ்வொரு திருப்புமுனைகளையும் மாநிலத்துக்கு மாநிலம் அருங்காட்சியகங்கள் மூலமாக உலகத்துக்கு அறைக்கோவி அறிவிக்கிறார்கள்.
இதுவும் பொறாமையாகத் தான் இருந்தது என்ன செய்ய.. ம்ம்ம்ம்

அதிலும் பிலடெல்பியாவின் National Constitution Center (தேசிய யாப்பு மையம் என்ற தமிழ்ப்படுத்தல் சரி தானா?) அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் முதல் சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றை அமெரிக்கா நிறுவ எடுத்த முயற்சிகள், அந்நிகழ்ச்சிகளின் கால கட்டங்களை அழகாக அடையாளப்படுத்தி, ஆவணப்படுத்தி வைத்துள்ளது.

அதேபோல வொஷிங்க்டனின் Smithsonian அருங்காட்சியகங்களைப் பார்க்க ஒரு மாதமும் கூடப் போதாது.
அப்படி இருந்தும் கிடைத்த சில நாட்களின் சில மணிப்பொழுதுகளில் அமெரிக்க வரலாறு, இயற்கை வரலாறு,
விண்வெளி ஆராய்ச்சி அருங்காட்சியகங்களைப் பார்த்துவிட்டேன்.. முடிந்தளவு.


அமெரிக்கர்கள் தான் உலகிலேயே அதிகம்  obesity என்று சொல்லப்படும் உடல் எடை அதிகம் கூடிய தன்மை கொண்டவர்கள் என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்ட எனக்கு இங்கே வந்து பார்த்த ஒரு விடயம் ஆச்சரியமாக இருந்தது.
அநேகர் தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதைக் காண்கிறேன்.
காலையில் இருந்து மாலை வரை குளிர், வெயில் எதனையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே (jogging ) இருக்கிறார்கள்.
ஆனால் சாப்பாட்டுக் கடைகள், fast food உணவகங்கள், மதுபானச் சாலைகளும் நிரம்பி வழிகின்றன.

அமெரிக்கர்களில் நான் ரசித்த இன்னொரு விடயம் அவர்களின் நேரம் தவறாமை.
நாங்கள் சென்ற சந்திப்புக்கள், கூட்டங்கள் எல்லாவற்றிலும் நேரம் தவறாமை ஒரு முக்கிய விடயமாக இருந்தது.
குறித்த நேரத்துக்கு ஆரம்பிப்பது மட்டுமன்றி குறித்த நேரத்தில் சந்திப்புக்கள், கலந்துரையாடல்களை நிறைவு செய்யவேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தையுடன் இருப்பார்கள்.

அதே போல தம்முடைய கருத்தைப் பட்டுத் தெறித்தாற்போல நேரடியாகவும் சொல்லி விடுகிறார்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை விட தாம் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒளிவு மறைவின்றி சொல்லிவிடும் அந்தப் பாங்கு பிடித்திருக்கிறது.

அமெரிக்கா, அமெரிக்கர்கள், அமெரிக்கத் தமிழர்கள், அமெரிக்காவும் நாமும் என்று பல விடயங்களைத் தொடர்ந்து கிடைக்கும் நாட்களில் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

இப்போதைக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு இடுகையை முடியுமானவரை தொகுத்து தந்துள்ளேன்..
தொடர்வேன்....

மேலும் சில படங்களை எனது Facebook ரசிகர் பக்கமான http://www.facebook.com/LoshanARV
இலும் எனது Instagram இலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏற்றி வருகிறேன்.


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner