July 09, 2018

கொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.


கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர்ச்சியுடன் வெளியேறியிருக்க, அடிக்கடி அரையிறுதி வரை வராத நான்கு அணிகள் - இவற்றில் இரண்டு முன்னாள் சம்பியன்கள் - - அதிலும் ஒவ்வொரு தடவை மட்டுமே உலகக்கிண்ணத்தை வென்றுள்ள அணிகள். (பிரான்ஸ் 1998, இங்கிலாந்து 1966).

குரேஷியாவும், பெல்ஜியமும் இதுவரை ஒவ்வொரு தடவை மட்டுமே அரையிறுதிக்கு வந்துள்ளன.
இன்னும் ஒரு தரமேனும் இறுதிப்போட்டிக்கு சென்றது கிடையாது.
வரலாறுகள் மாறக்கூடிய வாய்ப்புள்ள, ஏற்கெனவே பல 'முதல் தடவையாக' தந்த அதிசய உலகக்கிண்ணம் இது.

உலகக்கிண்ணம் ஆரம்பித்த நாளிலிருந்து Twitter, Facebook வழியாக ரசனைகளையும், மகிழ்ச்சியையும், பரவசத்தையும் சிற்சில சமயங்களில் ஏமாற்றத்தையும் கூடப் பகிர்ந்து வந்திருக்கிறேன்.

2010, 2014 உலகக் கிண்ணக் கால்பந்து நேரங்களில் தொடர்ச்சியான பதிவுகள் மூலமாக கணிப்புக்கள் போட்டிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து வந்திருந்தேன். அதற்கென்று தனியான ரசிகர்கள்.. கால்பந்தின் ரசிகர்கள் தமது ரசனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் என்னோடு ஆரோக்கியமான வாதங்கள், கலந்துரையாடல்களில் ஈடுபடவும் இந்த இரு உலகக்கிண்ணங்களின் பதிவுகளும் வழிவகுத்தன.

2010 உலகக்கிண்ணம்

FIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்













இந்தப் பதிவுகள் தான் என்னை ஒரு jinxer ஆகவும் விக்கிரமாதித்தன் என்ற பெயரை எனக்கு வழங்கவும் காரணமாகின. எனினும் dark horses ஆக நம்பிக்கையுடன் இவர்களுக்குத் தான் உலகக்கிண்ணம் என்று சொல்லி வைத்த ஸ்பெயின் உலகக்கிண்ணம் வென்றதில் அப்படியொரு பூரிப்பு.
அதே சிவப்பு நிற அணியான பெல்ஜியம் மீது எட்டாண்டுகளின் பின் இப்போது எனது நம்பிக்கை.

2014 உலகக்கிண்ணம் 


அப்போது கொஞ்சம் நேரமும் மிஞ்சியதால் சில இணையத் தளங்களுக்கும் எழுதி வந்திருந்தேன். ஜோதிகா மாதிரி அஞ்சு ரூபா கொடுப்பனவுக்காக அஞ்சு லட்சம் அளவுக்கு எழுதித் தள்ளியிருப்பேன்.
"அடே கிரிக்கெட்டே அந்தளவுக்கு வாசிக்க மாட்டார்களே.. அதைவிட ஆர்வம் குறைவா இருக்கிற கால்பந்தைப் பற்றி ஏண்டா இவ்வளவு நீட்டி முழக்கிறாய்?"
என்று உரிமையோடு கேட்ட நண்பர்களும் இருக்கிறார்கள்.

எனக்கு என்னவோ வானொலி நிகழ்ச்சிகளில் இருந்து இருக்கிற பழக்கம் தான், தெரிந்த விடயங்களை முடிந்தளவு மற்றவரோடு பகிரவேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் முடியும் வரை வாசிப்பார்கள்.
அலுப்பாக இருப்பவர்கள் தம்மால் முடிந்தவரை வாசிப்பார்கள்.

இம்முறை இருக்கிற நேரச் சிக்கலும் நவீன வசதிகளும் சேர்ந்துகொள்ள நேரத்தை அதிகமாக எடுத்து தட்டி, நீட்டி முழக்கிக்கொண்டிராமல், ஆனால் அதற்காக உள்ளே எப்போதும் கனன்று கொண்டிருக்கும் சின்ன வயது முதலான கால்பந்து ரசிகனைக் காயவிடாமல் எடுத்த புதிய ஆயுதம் தான் Youtube.

 சூரிய ராகங்களின் நிகழ்ச்சிப் பகுதிகள், ஏதாவது சின்னச் சின்ன விடயங்களோடு எப்போதாவது பதிவிட்டு, அநேகமான நேரத்தில் உறங்கு நிலையிலிருந்த என்னுடைய Youtubeஐ இதற்காகப் பயன்படுத்தி ஒரு ரசிகனாக என்னுடைய பார்வையைத் தந்துகொண்டிருக்கிறேன்.

பல நண்பர்கள் Facebook Video, Facebook Live, Insta video ஆகியவற்றையும் பரிந்துரைத்திருந்தார்கள். எனினும் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் தேடிவந்து வாசிப்பதாக இருந்தால் இது தான் சரி என்று முடிவெடுத்தேன்.
எதிர்காலத்தில் இன்னும் நேர்த்தியாக, தொழில்முறையாக மாற்றிக்கொள்ளவும் பயன்படும் என்ற நோக்கிலும்.

வழமையான Youtube காணொளிகளை விட என்னுடைய அலசல்கள் (அலட்டல்கள் ? ;) ) நீண்டதாக இருந்தாலும் கூட, ஆர்வமுள்ளவர்கள் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதிலும், நல்ல வரவேற்பு சார்ந்தோர் மத்தியில் கிடைத்திருப்பதிலும் மகிழ்ச்சி + திருப்தி.

ஆர்ஜென்டீனா, ஸ்பெய்ன் அணிகளின் வெளியேற்றம் தந்த ஏமாற்றங்கள் மத்தியிலும், நான் ஆரம்பம் முதலே என வர்ணித்து வந்திருந்த பெல்ஜியத்தின் அரையிறுதி அதிரடி நுழைவு இன்னும் மகிழ்ச்சி.

உலகக்கிண்ணத்தில் இன்னும் நான்கே நான்கு போட்டிகள்.
அவை பற்றியும் இன்னும் நேர்த்தியாக காணொளிகள் மூலமாக சந்திக்கலாம் என்ற நம்பிக்கையுடன்...

World Cup - Argentina vs France - உலகக்கிண்ணக் கால்பந்து அலசல் #WorldCup லோஷனுடன் உலகக்கிண்ணம் 2018

#WorldCup | Messi, Ronaldo வெளியே - Cavani, Mbappe கலக்கல் - கால்பந்து உலகக் கிண்ணம் - ARV லோஷன்

Spain உம் வெளியே ! - இன்று Brazil ?? Belgium vs Japan - அதிர்ச்சிகள் தரும் உலகக்கிண்ணம் | #WorldCup

#WorldCup | Brazil , Belgium வெற்றி ; ஜப்பானின் போராட்டம் - இன்று இங்கிலாந்து ? | ARV லோஷன்

#WorldCup - உலகக்கிண்ணம் | Sweden + England வெற்றி + காலிறுதி அணிகள் எட்டு - ARV லோஷன்

#WorldCup - Quarter Finals - France vs Uruguay & Brazil vs Belgium | வெல்லப்போகும் அணிகள்? ARV லோஷன்

#WorldCup - Quarter Finals - Sweden vs England | Croatia vs Russia - வெற்றி யாருக்கு? - ARV லோஷன்

#WorldCup - Quarter Finals - England & Croatia win | அரையிறுதி அணிகள் - ARV லோஷன் - உலகக் கிண்ணம்


முடியுமானவரை பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்திடுங்கள்.

காணொளிகளில் சொன்ன விடயங்கள் சரியாக, பிடித்த மாதிரியானதாக இருந்தால் உங்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்திடுங்கள்.



June 10, 2018

காலா !


காலா பற்றிய பார்வைக்குச் செல்ல முதல்...

கதையைச் சொல்லிவிடுவேனோ என்ற பயமில்லாமல் படம் பார்க்காதவர்களும் வாசிக்கலாம்.
கழுவி ஊற்ற/கலாய்க்க எதிர்பார்த்திருப்பவர்கள் முன்னைய காலா பற்றிய என் ட்வீட்ஸ் பார்த்து விட்டு வரலாம்.

நடுநிலை எல்லாம் தேவையில்லை எனக்கு.. இது விமர்சனமும் கிடையாது. வழமையான படங்களுக்கு நான் எழுதுவது போல காலா பற்றிய என் பார்வை மட்டுமே :)

அடுத்து,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் தெரியுமா, charisma தெரியுமா, கரீனா தெரியுமா ?
அவர் திரையில் நின்றாலே அதிரும் தெரியுமா?
இந்தப் படத்தில் ரஜினிக்குப் பதிலாக யார் நடிச்சாலும் எடுபடாது தெரியுமா?

தலைவா.. கோஷக் கூட்டங்கள்..
வசூல் கணக்கு மணித்தியாலம் தோறும் தேடி அப்டேட்டும் கணக்குப்பிள்ளைகள்,
இந்த கோஷப் பார்ட்டிகள், கதை கிடக்கிறது, படம் சொல்லும் விடயம் கிடக்கிறது ரஜினி மட்டுமே போதும் என்று குதூகலிக்கிற குஞ்சுகள்,

எல்லாரும் ஓரமாய்ப்போய் கூலா ஒரு கோலா குடிச்சிட்டு ஓரமாய் நின்று கம்பு சுத்தலாம்.

ஒரு stylish icon ஆக அநேக ரஜினி படங்களில் ரஜினி தோன்றும் காட்சிகளில் கிடைக்கிற அந்த கிக் எனக்கு காலாவிலும் கிடைத்தது. ஆனால் இங்கே பதியப்போவது காலா என்ற ஒரு படத்தைப் பற்றியது.

ரஜினி என்ற ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு சக்தியின் ஆளுமையும் ஆகர்சமும் கூட சரியான விதத்தில் பயன்படுத்த முடியாமல் போய் படுபாதாளத்தில் வீழ்ந்த அல்ல அல்ல பலூனில் பறந்து வீழ்ந்த லிங்கா போன்ற படங்களும் பார்த்திருக்கிறோம். ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கபாலி போன்றவையும் வந்தே இருக்கின்றன.

கபாலியில் கற்றுக்கொண்ட பாடங்களையும் சேர்த்துக்கொண்டு ஏற்கெனவே தனக்கு இருக்கும் திறமையான இயக்குனர் என்ற முத்திரையையும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியுடன், மிக நேர்த்தியான தயார்ப்படுத்தலுடன் 'காலா'வில் கை வைத்துள்ளார்.

உழைக்கும் மக்களுக்கு நிலம் சொந்தம் !
இந்த ஒரு வரியின் ஆழமான அரசியலை நேரடியாகவும் அதைச் சூழவுள்ள இந்தியாவின் தேசியவாத, பிராந்திய அரசியலையும் மதவாதப் பிரிவினைகள் மூலமாகப் போராட்டங்கள், மக்கள் எழுச்சிகளைத் திசை திருப்புவதையும் ரஜினியின் மக்கள் மீதான ஈர்ப்பு என்பதைக் கருவியாகக் கையாண்டு குறிப்புக்கள் ஊடாகவும், குறியீடுகளின் கோர்வையாகவும் - பல இடங்களில் நேரடியாகவும் போட்டுத் தாக்கியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.

"
குறியீடுகளின் கோர்வை.. ரஜினியைக் கருவியாக்கி எடுத்திருக்கும் அதிகாரத்துக்கு எதிரான தன் பிரசாரம். "

சந்திரமுகி, சிவாஜி, கபாலி ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டு ரஜினி இயக்குனரின் நடிகர் ஆகியிருக்கிறார்.
ரஜினியின் ஈர்ப்பை எங்கெங்கே பயன்படுத்தவேண்டுமோ அந்தந்த இடங்களில் எல்லாம் சிக்ஸர் அடித்திருக்கும் ரஞ்சித் பல இடங்களில் தன்னுடைய படம் இது என்பதை கதையை மேலெழச் செய்து அழுத்தம் காண்பித்துள்ளார்.

முள்ளும் மலரும் திரைப்படத்தின் பின் முழுமையாக அனைத்து வித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புக்கொண்ட பாத்திரம் காலா - கரிகாலனாக.

சிறு குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடி bowled ஆவதோடு தாத்தாவாகவும், ஒரு பெரிய குடும்பத்தின் பாசமுள்ள தலைவனாகவும் அறிமுகமாகின்ற ரஜினிக்கு நிகராகக் காட்டப்படுகின்ற அவரது மனைவி செல்வியின் பாத்திரத்தில் ஈஸ்வரி ராவ். ரஜினி ரசிகர்கள் கபாலியில் ராதிகா ஆப்தேக்கு அதிருப்தி காட்டியவர்கள். எனினும் இந்தப் படத்திலும் இனியும் இதை பழகிக்கொள்ளத்தான் வேண்டும்.

ஈஸ்வரி ராவ் கனதியான அந்தப் பாத்திரத்தைக் கையாளும் விதம் அற்புதம். வெட்டென்று பேசும் வெகுளித்தனம், மனதில் அன்பை வைத்து மறுகும் பாசம், காலாவையே கட்டுப்படுத்தும் கண்டிப்பு என்று கலக்குகிறார்.
செல்வி மட்டுமன்றி ஏனைய இரண்டு பெண் பாத்திரங்கள் - முன்னாள் காதலி சரீனா, மராத்தி பேசும் புயலு என்று மூன்று பெண் பாத்திரங்களூடாகவும் சமூகத்தைப் பற்றியும் அரசியலில் பெண்களின் வகிபாகம் பற்றியும் பேச முயற்சித்துள்ளார் ரஞ்சித்.
என்னும் அந்தப் பெண் பாத்திரங்கள் தங்கியிருப்பதையும் தனியாக ஜெயிக்க முடியாமல் போவதையும் குறியீடாகக் காட்டுவதையும் கவனிக்கவேண்டும்.

ரஜினிகாந்தின் அரசியல் மோடி, பிஜேபி சார்ந்தது என்று பேசப்பட்டு விமர்சிக்கப்படும் இப்போதைய காலகட்டத்தில், காவி நிறம், தூய்மை இந்தியா போல தூய்மை மும்பாய், ராமர் கடவுள் (ராம ராஜ்ஜியம் ?), மோடியைப் போலவே படங்கள், கட் அவுட்டில் சிரிக்கும் ஹரி தாதா, போராட்டங்கள், மக்கள் எழுச்சிகள் திசை திருப்பப்படல் என்று பார்த்துப் பார்த்து பகிரங்கமாக ரஜினியை வைத்தே வெளிப்படையாக எதிர்ப்பது கொள்கையின் துணிச்சல்.
அதில் முத்தாய்ப்பு அந்த இறுதியாக வரும் 'சிங்காரச் சென்னை'.

படங்களின் ஒவ்வொரு காட்சியிலும் தாராளமாக குறியீடுகளைப் பின்னணியில் வைத்து தன்னுடைய கொள்கையைக் கொண்டு செல்வதில் ரஞ்சித் ஒரு சமர்த்தர் ; முதல் படத்திலிருந்து.
ரஜினி - கறுப்பு, ஹரி தாதாவினால் தொடர்ச்சியாக ராவணன் என்று கூறப்படும் இடங்கள், ஒரு காட்சியில் பின்னணியில் 'ராவண காவியம்' என்று ராவணனைப் போற்றியுள்ளார் (ராவண காவியத்துக்கு அப்பால் ஈழத்து எழுத்தாளர் டானியலின் நாவலும் தெரிகிறது), கிடைக்கும் இடங்களில் எல்லாம். காலா கூட 'தங்க செல' பாடலில் ஒற்றைத்தலை ராவணன் பச்சப்புள்ள ஆவதாகப் பாடுகிறார்.

ராவணனைப் போற்றி நேரடியாக ராம பக்தர்களை வம்புக்கு இழுக்கும் இடம் அது மட்டுமல்ல.
உச்சக்கட்டக் காட்சிகளில் அதற்கான தனியான இடமுண்டு.

கதாநாயகன் காலாவின் பின்னணியில் புத்தர், கிராமியக் கடவுள் காலா, என்றும் வில்லன் ஹரிதாதாவின் பின்னணியில் ராமர் என்றும் குறிகாட்டி இருப்பது மட்டுமன்றி, ரஜினியின் உச்சக்கட்ட ஹீரோயிசக் காட்சியான மேம்பால சண்டைக்காட்சியில் வில்லனின் வதத்தின் பின்னர் கணபதி சிலைகள் ஆற்றில் கரையும் காட்சியும் உண்டு.

மகனின் பெயர் லெனின்..
எனினும் மகன் கடைக்கொள்ளும் 'விழித்திரு' மக்கள் போராட்ட முறையை எதிர்க்கிறார் காலா. பயனில்லை என்கிறார். எனினும் வன்முறையில் தனது சொந்த இழப்பின் பின்னர் மக்களை சேர்த்து மாபெரும் புரட்சியைத் தானே கொள்கிறார்.

ரஜினியின் தளபதி செல்வமாக வரும் 'வத்திக்குச்சி' திலீபனுக்கு அற்புதமான பாத்திரம். சிறுசிறு பாத்திரத் தெரிவிலும் அக்கறையாக இருந்திருக்கிறார் இயக்குனர். அரவிந்த் ஆகாஷ் ஏற்றுள்ள பொலிஸ் பாத்திரத்தின் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்.


ரஞ்சித்தின் கொள்கை + புத்திசாதுரியம், அண்மைய மக்கள் அரசியல், தலித்திய தத்துவங்கள் என்று படம் முழுக்க விரவி நின்றாலும் அழுத்தமான காட்சிகளாக ரஜினி என்ற ஜனரஞ்சக நடிகனின் சில அழுத்தமான காட்சிகள் எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கக்கூடியது.
படத்தின் பிரசார நெடியை சற்றே தணிக்கக்கூடியதாக  அமைவன அவை.
காலாவின் வீட்டுக்கு நானா பட்டேக்கர் (ஹரி தாதா) வந்து, பேசி கிளம்பும் நேரம் "நான் போக சொல்லலையே" என்று அழுத்தமாக சொல்லும் இடமும், அதைத் தொடர்ந்து நானாவின் அழுத்தமான முகபாவங்களும் கலக்கல்.

ஒரு தேர்ந்த நடிகராக நானா பட்டேக்கர் அமைதியான வில்லா முகம் காட்டி ரஜினிக்கு ஈவு கொடுத்து படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்.

பாட்ஷாவுக்கு ரகுவரன் போல இந்த காலாவுக்கு நானா முக்கியமான ஒரு தூண்.

பாட்ஷா, தளபதி போல போலீஸ் காட்சிகளில் பரபர தீப்பொறி.

"குமார், யார் இந்த ஆளு?" கரகோஷங்களை எழுப்பும் காட்சி.

ஹரி தாதா வீட்டுக்கு காலா போகும் காட்சியும் அங்கே நடக்கின்ற உரையாடலும் அண்மைக்காலத்தில் ஹீரோ - வில்லன் உரையாடல்களில் மிக நுண்ணியமான, அதேவேளையில் கலக்கலான காட்சிகளில் ஒன்று.
(விக்ரம் வேதா இன்னொன்று)
படையப்பா - நீலாம்பரி சந்திப்பு, சிவாஜி - ஆதிசேஷன் சந்திப்புக்களில் பார்த்த அதே ரஜினியின் நெருப்பு.

வெள்ளை - கறுப்பு , இரண்டடி மட்டுமே தூரம், நிலம் எங்களுக்கு வாழ்க்கை உங்களுக்கு அதிகாரம், எங்கள் நிலத்தைப் பறிப்பது உங்கள் கடவுளாக இருந்தால் அந்தக் கடவுளையும் எதிர்ப்பேன் என்று சொல்லும் இடங்கள் தத்துவ சாரங்கள்.
ரஜினியின் மாஸ் அப்பீலும் சேர்ந்து கொள்வதால் தீப்பிடிக்கிறது.

முதுகிலே குத்திக்கோ என்று சொல்லி நடக்கும் அந்த நடை.. ரஜினி ரஜினி தான்.
இத்தனை இருந்தும் மும்பாய் - தாராவி - தமிழர்கள் - நிலம் - போலீஸ் என்ற பின்னணிகளும் காலா சேட் - அவரது நண்பர் வாலியப்பா (சமுத்திரக்கனி)வும், நாயகனை ஞாபகப்படுத்தாமல் இல்லை.
90களில் அப்போதிருந்த சூழ்நிலையை மணிரத்னம் காட்டியதற்கும், இப்போது நவீனமயப்படுத்திய நாயகனாக இந்தக் கால சமூக வலைத்தளங்கள், புதிய தொழிநுட்பங்கள் என்பவற்றுடன் ரஞ்சித் கொண்டுவந்த காலா நாயகனின் புதிய version என்பதற்கும் பெரியளவில் சிந்திக்கவேண்டியதில்லை.

எம்மைக் காட்சிகளில் கோர்ப்பதற்கு காமெராவும் மைக்கும் கையுமாக அலையும் ஒரு ஊடகவியலாளர் (ரமேஷ்) கதை சொல்லியாக ரஞ்சித்தினால் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். கொஞ்சம் பழைய உத்தி. ஆனால் கடைசிக் காட்சிகளில் அதன் அழுத்தம் முக்கியமானது.

கபாலியைப் போலவே காலாவிலும் காதலும், தொலைந்து போய் மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தேடிவரும் காதலும் உண்டு. அதே போன்ற கலவரத்தில் காணாமல் போன காதல்.
அந்தக் காதலுக்கு இடையில் ரஜினிக்கும் மனைவிக்கும் இடையிலான பாசம் இழையோடும் காட்சிகளும் உண்டு.
ரஞ்சித்தின் படங்களில் மட்டும் கலவரத்தில் காதல் காணாமல் போவதும், காதலர்கள் பின்னர் ஒரு காலம் வரும்வரை தேடாமல் இருப்பதும் நடக்கிறது.

கல்யாணம் நிற்கவும் காணாமல் போகவும் , அந்த வேளையில் வேங்கையனின் மரணத்துக்கும் காரணமான ஹரி தாதாவை சரீனாவுக்கும், ஹரி தாதாவுக்கு வேங்கையனின் தளபதியாக இருந்த கரிகாலனைத் தெரியாமலிருப்பதும் எமக்கு வைக்கப்பட்ட டுவிஸ்ட்??

காலா குடும்பத்தை விட்டு நகர்ப்புற வசதிகளுடன் வெளியேற நினைக்கும் மகன்மாருடன் நிகழ்த்தும் உரையாடல் எத்தனை பேருக்கு தேவர் மகன் சிவாஜி -கமல் காட்சிகளை நினைவில் கொண்டுவந்தது?

ரஞ்சித்தின் வழமையான formula வில் மேலதிகமாக வெளிப்படையான அரசியல் , இப்போது தமிழகத்தில் தகித்துக்கொண்டிருக்கும் அரசியலை மிக சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறார்.

அதற்கு காலாவின் கறுப்பு தேவைப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் லெனின் மூலமாக சிவப்பையும் கையாண்டுள்ளார். இறுதிக் காட்சியில் நீலத்தாலும் பூசி முடிக்கிறார். இவை நிச்சயம் பேசப்படும்; விவாதிக்கப்படும்.

சந்தோஷ் நாராயணனின் இசையின் பங்களிப்பு படத்தின் மிகப்பெரும் பலம். பாடல்களை எல்லாம் எத்துணை திட்டமிட்டு உருவாக்கியுள்ளார்கள் என்பது வியப்புக்குரியது. கூடவே படம் முழுக்கப் பயணிக்கும் இசை ஒரு தனிப்பாத்திரம்.
சந்தோஷும் படத்தின் இன்னொரு இயக்குனர் என்றால் அது மிகையில்லை.
தாராவியைக் காட்டும் விதத்திலும் காட்சிகளூடு எம்மைக் காவிச் செல்வதிலும் ஒளிப்பதிவாளர் முரளியின் பங்கும் பெரியது.

ஆனால் கூடவே சம்பவங்களுக்குப் பாடி ஆடும் அந்த நான்கைந்து பேரின் காட்சிகளை ரஞ்சித் இன்னும் எத்தனை படங்களில் கையாளப்போகிறார்?


இதையெல்லாம் தாண்டி கரிகாலன் இறந்தாரா இருக்கிறாரா என்ற கேள்வியைத் தொக்க வைத்திருக்கும் விதம் சிந்திக்க வைக்கக்கூடியவொன்று.
கிளைமக்சில் ரசிகர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்ற தெளிவான ஊகத்தைத் தந்துவிட்டு, கதை மாந்தருக்கும் திரைப்பட முடிவுக்கும் சந்தேகம் ஏற்படுவது போல வைத்திருப்பது ஈழத்தினதும், புலம்பெயர் தேசத்தினதும் சிந்தனையில் சிறு பொறியைத் தட்டுவதற்கா?
காரணம் இராவணனின் தலைகள் கொய்யக் கொய்ய முளைப்பது பற்றி சொன்ன இயக்குனர், ஒரு காலா போனாலும் தாராவியில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலா தான் என்று வேறு ஆழமாகச் சொல்லியும் வைக்கிறார்.

 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவன் "சோழன் பயணம் தொடரும்" என்று காட்டியதை நினைவுபடுத்தும் ரஞ்சித் சுபமான முடிவுக்காக செய்த விட்டுக்கொடுப்பா அது?

காலா - எனக்கு நான் அலுப்பின்றி ரசித்துப் பார்த்த அனுபவம். இயக்குனரின் சாமர்த்தியங்களை ரசித்தேன். குறியீடுகளைக் குறித்துக்கொண்டேன்.
மறைபொருள் அரசியலையும் ஒரு களிமண்ணாக ரஜினியை வைத்துப் பிசைந்து தனக்குத் தேவையான இறுதிப் பொருளை உருவாக்கியதையும் ரசித்தேன்.
சூப்பர் ஸ்டாராக மட்டும் பார்க்க விரும்பும் ரஜினி ரசிகர்களையும் திருப்தி செய்யக்கூடிய மசாலா நுட்பமும் கபாலி கற்றுத் தந்த பாடமாகக் கைவந்துள்ளது.

எனினும் ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கும் அவர் பேசும் சாமர்த்திய அரசியலுக்கும் ரஞ்சித்தின் 'காலாவுக்கும் இடையில் மயிரளவு கூட சம்பந்தமே இல்லை என்பதை ரஜினி என்ற அரசியல்வாதிக்கும் சேர்த்துக் கொடி பிடிப்போர் புரிந்துகொண்டால் அது தான் தமிழக அரசியலுக்கான விடிவாக இருக்கும்.

எனினும் ஒவ்வொரு காட்சிக்கும் இனி ஒவ்வொருவராகத் தரப்போகும் வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் நினைத்தால் தான்...

காலா - காலம் சொல்லும் கோலம்









March 25, 2018

கிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி

உலகின் முதல் நிலை டெஸ்ட் அணிகளில் ஒன்று. கனவான் தன்மை பற்றியும் கிரிக்கெட்டின் உயர்தரம் பற்றியும் மற்றைய உலக நாடுகளுக்கெல்லாம் பாடம் எடுக்கும் நாடு. ஆனால் sledging - எதிரணி வீரர்களை வசைபாடி கவனத்தை சீர்குலைத்து, அல்லது மனதளவில் சிதைவை ஏற்படுத்தி வெல்லும் யுக்திகளை நீண்ட காலமாகப் பயன்படுத்திவரும் அவுஸ்திரேலியா மீது அவ்வப்போது மோசடி/ஏமாற்றுப் புகார்கள் வந்தாலும் நிரூபிக்கப்பட்டதாக இல்லை.

அண்மையில் கூட இந்தியாவுக்கு அவுஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுலா சென்றிருந்த சமயம், தொலைக்காட்சி நடுவர் மூலமான ஆட்டமிழப்பு சம்பந்தமான சர்ச்சையொன்றில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் சிக்கியிருந்தார்.
Brain fade case என்று இன்று வரை கிரிக்கெட் ரசிகர்கள் வேடிக்கை செய்கின்ற விடயமாக அது இருக்கிறது.

அச்சமயம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி "அவுஸ்திரேலிய வீரர்கள் இப்படியான கிரிக்கெட் ஏமாற்று வேலை செய்து வெல்ல முயல்வது வழமையான விடயம் தான்" என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியபோதும், ஸ்மித் மற்றும் அவுஸ்திரேலியர்கள் இவையெல்லாம் ஆதாரமில்லாத அபாண்டங்கள் என்று பூசி மெழுகிவிட்டார்கள்.

எனினும் பல நாள் திருடன் கதையாக நேற்று கமெரொன் பான்க்ரொஃப்ட் கையில் இருந்த மஞ்சள் துண்டு 'கனவான் தன்மை'யின் கிழிவை உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.


கிரிக்கெட் பந்துகளை, குறிப்பாக சிவப்புக் கடின பந்துகளை அதிக ஸ்விங் செய்யச் செய்யவும், அல்லது ரிவேர்ஸ் ஸ்விங் எடுக்கவும் ஏதாவது உருமாற்றங்கள் அல்லது சேதங்கள் செய்து ( ball tampering) செய்வது 1970கள் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பித்து வைத்த நடைமுறை.
எனினும் ICC இதை அங்கீகரிக்கவில்லை. சட்டவிரோத நடைமுறையான ball tampering செய்தால் நடுவர்கள் தண்டிப்பதும், கடும் நடவடிக்கைகள் எடுப்பதும் நடைமுறையில் இருக்கிறது.

எனினும் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தி அகப்பட்டுக்கொண்ட பிரபல வீரர்கள் வரிசையில் இந்தியர்களால் கிரிக்கெட் கடவுளாகக் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் மைக் அர்த்தேர்ட்டன், பாகிஸ்தானின் முன்னாள் தலைவர், இடது கை வேக மன்னன் வசீம் அக்ரம், பாகிஸ்தான் அணியின் பல வீரர்கள், பந்தைக் கடித்த ஷஹிட் அஃப்ரிடி, ஏன் இப்போதைய தென் ஆபிரிக்காவின் தலைவர் பஃப் டூ ப்ளெசிஸ் (இரண்டு தடவை) - அதில் mint gate விவகாரத்தில் போட்டித் தடைக்கும் உள்ளானார். - என்று நீளும்.

எனினும் அவுஸ்திரேலிய வீரர்கள் இப்படியான விவகாரங்களில் சிக்கியது இல்லை.

நேற்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் சிக்கிக்கொண்ட பிறகு எந்தவொரு காரணமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாத நிலையில் ஸ்மித் ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கமாக இதை ஏற்றுக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்தார்.

பான்க்ரொஃப்ட் செய்த இச்செயல் தமக்கும் அவுஸ்திரேலிய 'தலைமைத்துவக் குழு'வுக்குத் தெரிந்தே இடம்பெற்றது என்று குறிப்பிட்ட அவர், ஏதாவது செய்து போட்டியில் ஜெயிக்கவேண்டும் என்ற கையறு நிலையே இந்த மோசடிச் செயலைச் செய்யத் தூண்டியதாகக் குறிப்பிட்டுத் தலை குனிந்து நின்றார்.

மிகக் கேவலமான இந்த விடயத்தைச் செய்ய முனைந்த அவுஸ்திரேலிய அணி இதற்குக் கருவியாக அணியின் மிக இள வயது வீரரைப் பயன்படுத்தியது இன்னும் இழிய செயல்.

முன்னாள், இந்நாள் வீரர்கள் ( அவுஸ்திரேலிய முன்னாள் பிரபல வீரர்கள், தலைவர்கள் உட்பட) , விமர்சகர்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ICC நடவடிக்கை எடுக்கிறது ஒரு பக்கம், கிரிக்கெட் அவுஸ்திரேலியா உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரதும் எண்ணம். அவுஸ்திரேலிய அரசாங்கமும் சர்வதேசக் கண்டனங்களை அடுத்து Cricket Australiaவுக்கு இந்தத் தகவலை அனுப்பியுள்ளது.

அவுஸ்திரேலிய விளையாட்டு ஆணைக்குழுவும் தலைவர் ஸ்மித், பான்க்ரொஃப்ட் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக அணியை விட்டு நீக்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது.


பல விடயங்களில் முன்னோடியாக விளங்கும் ஸ்மித் தானாகத் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம்.

நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகே ICC இது பற்றிய உறுதியான முடிவொன்றை அறிவிக்கும் என நம்பப்படுகிறது.

எனினும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா இப்போது இந்த டெஸ்ட் போட்டியில் இந்த இறுதி நாட்களும் ஸ்மித் மற்றும் வோர்னர் ஆகிய இருவரும் தத்தம் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவர் என்று அறிவித்துள்ளது. விக்கெட் காப்பாளர் டிம் பெயின் உடனடியாகவே தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஒரு நெருக்கடியான நிலையில் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் அணியைப் பொறுப்பெடுத்து நடாத்துவது மிகப்பெரிய சிக்கலே. பாவம் பெயின். அதுவும் அருகே ஸ்லிப்பில் ஸ்மித் களத்தடுப்பில் நிற்கும்போது..

இவர்கள் மீது இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கருத இடமுண்டு.

இது http://tamilnews.com/tamil-sports-news/cricket/க்காக எழுதியிருந்த கட்டுரை.
எனினும் பிந்திய தகவலாக ஸ்மித் மற்றும் பான்க்ரொஃப்ட் ஆகியோருக்கு ICCயினால் விதிக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய விபரங்களும் கிடைத்திருந்தன.

"அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு போட்டித் தடை + முழுமையாக போட்டி ஊதியம் அபராதம்.
கமெரொன் பான்க்ரொஃப்ட்டுக்கு 75% போட்டி ஊதியம் அபராதம் + நன்னடத்தைப் புள்ளிக் குறைப்பு."
எனினும் நிரூபிக்கப்பட்ட இப்படியான மோசடித்தனத்துக்கு இதைவிடக் கடினமான தண்டனை வழங்கப்பட்டிருக்கவேண்டும். 
(இலங்கை அணிக்குப் பின்னராக) அவுஸ்திரேலிய அணியின் ரசிகனாக இருந்தாலும் இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா தோற்கவேண்டும் என்றே விரும்புகிறேன். மோசடிக்கு அது ஒரு கர்மாவின் பதிலாக இருக்கும். 
வோர்னர் சற்று முன்னர் ஆட்டமிழந்தபோதும், பின்னர் ஸ்மித் ஆடுகளம் வந்தபோதும் ரசிகர்கள் அளித்த கூச்சலுடன் கூடிய பழித்தல் 'வழியனுப்புதலும்' 'வரவேற்பும்' இதைப்  பதிவிடும் இந்த நிமிடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டமிழப்பும் உடன் வினை தான்.
அடுத்த போட்டியில் தடைக்குள்ளாகும் ஸ்மித்துக்கு எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கும் IPLஇல் ராஜஸ்தான் ரோயல்ஸ் தலைமைப் பதவியும் பறிபோகும் என்றே நம்புகிறேன்.
கீழே சில அவுஸ்திரேலிய பத்திரிகைகளின் முதற்பக்கங்கள்.:
கேவலமாகிப்போன அவுஸ்திரேலியா...




March 13, 2018

பத்திலிருந்து ஆறு, இந்த ஆறுக்குள்ளே இரண்டு யாரு? - #CWCQ - உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகள்

உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் - சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தெரிவான ஆறு அணிகள்  என்ற தலைப்பில் இன்று http://tamilnews.comக்கு  எழுதிய கட்டுரையில் மேலும் சில விபரங்கள் சேர்த்த பதிவு இது...



நான் முன்பிருந்து ஆசைப்பட்டது போல ஆப்கானிஸ்தான் அடுத்த ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு செல்வதன் முதற்கட்டத் தடையைத் தாண்டியுள்ளது. 

கூடவே ஊகித்தது போல மேற்கிந்தியத் தீவுகள் (இவர்கள் இல்லாமல் உலகக்கிண்ணம் என்பது ரசிகர்களுக்கு சோர்வையும் சோபையிழப்பையும் தரலாம்) மற்றும் டெய்லரின் வருகையின் பிறகு மீண்டும் இரத்தம் பாய்ச்சப்பட்டு எழுந்து நிற்கும் சிம்பாப்வே ஆகியனவும் சூப்பர் சிக்ஸுக்குள் நுழைந்திருப்பதில் மகிழ்ச்சியே.

சிம்பாப்வேயில் இடம்பெற்றுவரும் உலகக்கிண்ணத்  தகுதிகாண் போட்டிகளில் சூப்பர் சிக்ஸுக்கான ஆறு அணிகளும் தேர்வாகியுள்ளன.

டெஸ்ட் அந்தஸ்துடைய நான்கு அணிகளான மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே, அண்மையில் டெஸ்ட் அந்தஸ்தைத் தாமதாக்கிய அயர்லாந்து & ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் எதிர்பார்க்கப்பட்டது போலவே தெரிவாகியுள்ளன.

இவற்றோடு அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளைக் காட்டிவரும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கிய ஸ்கொட்லாந்து ஆகியன ஏனைய இரு அணிகள்.

ஸ்கொட்லாந்து அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை மண்கவ்வச் செய்ததுடன் ஆரம்பித்த அதிர்வலை நேற்று இறுதி முதற்சுற்றுப் போட்டியில் சிம்பாப்வேயுடன் சமநிலைப்படுத்திய - tie போட்டி வரை தொடர்ந்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் கண்ட தோல்வியையடுத்து வீழ்ச்சியின் பாதையில் என்று நினைத்திருந்தபோதும், மிக ஆதிக்கம் செலுத்தி நான்கு போட்டிகளிலுமே வென்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முழுமையான புள்ளிகளோடு தெரிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி மிக மயிரிழையில் தான் தெரிவுபெற்றது.

நேபாள அணி நேற்று ஹொங் கொங் அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய பரிசு தான் இந்த வாய்ப்பு.

நேற்று ஹொங் கொங் வென்றிருந்தாலோ, அல்லது சில ஓவர்களுக்கு முன்னதாக நேபாளத்துக்கு வெற்றி கிடைத்திருந்தாலோ ஆப்கானிஸ்தானிய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்.

இப்படியொரு அருமையான வாய்ப்பைக் கிடடவந்து தவற விட்டதை நினைத்து இவ்விரு அணிகளும்  வரை கவலைப்படக்கூடும்.

எனினும் இப்போதுமே சூப்பர் சிக்ஸ் சுற்றிலிருந்து அதிகூடிய புள்ளிகளோடு தெரிவாகும் இரண்டு அணிகளில் ஒன்றாக வரக்கூடிய வாய்ப்பு மிகக்குறைவாகவே இருக்கிறது.
காரணம் ஆப்கானிஸ்தானோடு சேர்ந்து B பிரிவிலிருந்து தெரிவாகியுள்ள சிம்பாப்வே, ஸ்கொட்லாந்து இரு அணிகளுடனுமே தோற்றிருந்தது.

இதனால் தான் முதற்சுற்றின் ஒவ்வொரு போட்டியினதும் வெற்றிகள் மிக முக்கியமானதாக அமைந்தன.

இப்போது சூப்பர் சிக்ஸ் சுற்றில் பிரிவு A அணிகள், பிரிவு B அணிகளை மட்டுமே எதிர்த்து விளையாடவுள்ளன. மற்றும்படி முதற்சுற்றில் விளையாடிய இரு சகஅணிகளுடனான வெற்றிப் புள்ளிகளும் சேர்க்கப்படும்.

இதனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கும், சிம்பாப்வே, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுக்கும் அதிக வாய்ப்புள்ளது.




இனி ஒவ்வொரு அணிக்கும் தலா மூன்று போட்டிகள் இருக்கின்றன. அதில் ஒவ்வொரு வெற்றியுமே மிக முக்கியமானதாக அமையும்.

இரண்டு தடவை (முதலிரு உலகக்கிண்ணங்கள்) சம்பியன்  ஆன  மேற்கிந்தியத் தீவுகளுடன் சவால் விட்டு உள்ளே நுழையப் போகின்ற அணிகள் யார் என்பதே ரசிகர்கள் ஆர்வத்துடன் இனி பார்க்கப்போகும் போட்டிகளின் சுவாரஸ்யம்.

இந்தப் போட்டிகளின் முக்கியத்துவம் கருதி அனைத்து சூப்பர் சிக்ஸ் போட்டிகளையும் நேரலையாக ஒளிபரப்ப ICC நடவடிக்கை எடுத்துள்ளது.

முதற்சுற்றில் இரண்டு மேற்கிந்தியத் தீவுகள் விளையாடிய போட்டிகளையே நாம் பார்க்கக் கூடியதாக இருந்தன. ஆனால் அதை விட பல சுவாரசியமான போட்டிகளை நான் சில நாட்களில் onlineஇல் தேடியெடுத்துப்பார்த்துப் பரவசப்பட்டேன்.

நேற்றைய சிம்பாப்வே - ஸ்கொட்லாந்து tie போட்டி தான் பார்க்க முடியாமல் போனது.

அத்துடன் ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்தது போல, இந்தத் தகுதிகாண் சுற்றுப்போட்டிகளில் முன்னணி இடங்களைப்  பெறும் துணை அங்கத்துவ (டெஸ்ட் அந்தஸ்த்து இல்லாத) அணிகள் மூன்றுக்கும் WCL சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற நெதர்லாந்துக்கும் 2022 ஆம் ஆண்டுவரை ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்து வழங்கப்படவுள்ளது.

இப்போதைக்கு ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் தமது அந்தஸ்தை நீட்டித்திருப்பதோடு, இனித் தொடர்ந்து நடைபெறவுள்ள 7 முதல் 10 வரையான இடங்களைத் தீர்மானிக்கும் போட்டிகளில் இருந்து நேபாளம், ஹொங் கொங், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளில் ஒன்றுக்கு வாய்ப்புள்ளது.

இதன் மூலம் சர்வதேச மட்டத்தில் கிரிக்கெட் பரந்து விரிய வாய்ப்புள்ளதோடு எதிர்காலத்தில் இவ்விரு அணிகளும் டெஸ்ட் அணிகளாக தம்மை மாற்றிக்கொள்ளும் அனுபவமும் கிடைக்கும்.

இப்போதிருக்கும் நிலையில் ஏற்கெனவே அடுத்த ஆண்டு உலகக்கிண்ணத்துக்கு தெரிவாகியுள்ள எட்டு அணிகளுடன் மேற்கிந்தியத் தீவுகளும் சிம்பாப்வேயும் சேர்ந்துகொள்ளும் என்று நம்புகிறேன்.

January 17, 2018

புதிய ஆண்டு, புதிய இணைப்பு - வெற்றி இனியாவது வருமா? - மத்தியூஸ் + ஹத்துருவின் புதிய இலங்கை !

முன்னெச்சரிக்கை : மிக நீளமான பதிவு. கிரிக்கெட்டில், அதிலும் இலங்கை கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தால் மட்டும் தொடர்ந்து வாசியுங்கள்.

குறிப்பு : போட்டி ஆரம்பிக்க முதல் வெளியிட வேண்டும் என்று விரும்பினாலும் கடைசிவரையும் நீடித்த அத்தியாவசியமான கடமைகள் இப்போது தான் வழிவிட்டன.
அதுவும் நல்லதுக்குத் தான்..
இப்படிப்பட்ட இலங்கை அணியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

------

வங்கப் புலிகளின் சுழல் பொறிக்குள்ளே வந்து மாட்டிக்கொள்ள வாருங்கள் சிங்கங்களே என்று வரவேற்புப் பதாதை வைக்காத குறையாக தமது முன்னாள் பயிற்றுவிப்பாளரை வன்மம் கலந்த வெறியுடனும், 2017 முழுதும் அதிக தோல்விகளைக் கண்ட இலங்கை அணியை அடித்து வீழ்த்துவதன் மூலம் தமது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் ஆர்வத்துடனும் காத்திருக்கிறது பங்களாதேஷ்.

சிம்பாப்வேக்கு எதிராகப் பெற்ற  மிக இலகுவான வெற்றியோடு ஆரம்பித்துள்ள முக்கோணத் தொடர் பங்களாதேஷ் தான் அதிக வாய்ப்புள்ள அணி என்று கோடிட்டுக் காட்டுவதாக இப்போதே பங்களா ஆதரவாளர்களைக் குதூகலக் குரல் எழுப்ப வைத்திருக்கிறது.

தரப்படுத்தலில் இப்போது பங்களாதேஷுக்கும் கீழே இருந்து அல்லாடிக்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு இன்று தான் இந்தப் புது வருடத்தின் முதலாவது போட்டி.

மத்தியூஸ் + ஹத்துருசிங்க - புதிய இணைப்பு புத்தாண்டில் வெற்றிகளைத் தருமா?
என்ற தலைப்பில் நேற்று ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு எழுதிய கட்டுரையுடன் சேர்த்து சில புதிய விபரங்கள்...

இன்று ஆரம்பிக்கிறது இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஆரம்பம்..
புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவுடன், மீண்டும் ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஞ்செலோ மத்தியூசும் சேர்ந்து புதிய இணைப்பாட்டம் ஒன்றை ஆரம்பிக்கிறார்கள்.

ஆரம்பிப்பது, எழுவது போல கொஞ்சம் எழுவது, ரசிகர்களுக்கு நம்பிக்கை வரும் நேரம் அப்படியே அடி வாங்கிக்  கீழே விழுவது என்று கடந்த 2,3 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட்டை ஏதோ  ஒன்று போட்டு ஆட்டிக்கொண்டு/ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கின்ற நேரம், இந்த தொடர் தோல்விகளிலிருந்து விமோசனம் கிட்டாதா என்று பார்த்திருக்கும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏதாவது சிறு துரும்பு கிட்டுமா என்று தான் ஆரம்பித்துள்ளது பங்களாதேஷ் முக்கோணத் தொடர்.


மஹேல, சங்கக்கார, டில்ஷான் என்று பெரிய நட்சத்திரங்களின் ஓய்வின் பின்னர் இலங்கை அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக எழுந்த ஒரு சர்வதேசத் தரம் வாய்ந்த அஞ்செலோ மத்தியூஸ் தொடர்ச்சியான உபாதைகளின் பின்னர் ஒரு சில ஓவர்கள் மட்டும் பந்துவீசும் தனியே துடுப்பாட்ட வீரராக மாறியுள்ள நிலையில் மீண்டும் (பூரண உடற்தகுதி இன்னும் இல்லை என்ற சந்தேகத்துடனேயே ) அணியில். இதற்கு  முதல் தலைவராக அவர் கடமையாற்றிய காலத்தில் குறிப்பிடத்தக்க பல வெற்றிகளைப்  பெற்றுக்கொடுத்து நம்பிக்கை தரக்கூடிய அணியாகக் கட்டியெழுப்பி வந்தாலும், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகிகளுடன் இழுபறிகள் , மோதல்கள், அணித் தெரிவில் தேர்வாளருடன் மோதல், முரண்பாடு என்று பிற்பாதி மிக மோசமாக அமைந்தது.
இலங்கையில் வைத்தே சிம்பாப்வேக்கு எதிரான நம்பமுடியாத மோசமான ஒருநாள் தொடர் தோல்வியோடு மத்தியூஸ் தலைமைப் பதவிக்கு விடைகொடுத்திருந்தார்.

நான்கைந்து தலைமைத்துவ மாற்றங்களால் எதுவித மாற்றமும் நிகழாத தடுமாற்றத்தின் பின்னர், இப்போது நிர்வாகம் கொஞ்சம் சீர்பெற்றுள்ள நம்பிக்கையுடன் புதிய பயிற்றுவிப்பாளர் - நீண்ட காலத்துக்குப் பின் முதற்தடவையாக ரசிகர்களால் அதிருப்தி இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அணியோடு தன்னுடைய 99வது போட்டியில் தலைமை தாங்கவுள்ளார்.

இதுவரை மத்தியூஸ் தலைமை தாங்கிய 98 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 47 போட்டிகளில் வெற்றியும், 45 போட்டிகளில் தோல்வியையும் கண்டுள்ளார்.
தனது 100வது தலைமைத்துவப் போட்டியையும், 50வது வெற்றியையும் இந்த முக்கோணத் தொடரில் காணக்கூடிய வாய்ப்பையும் கொண்டிருக்கிறார்.

வாழ்க்கை ஒரு சுழற்சி என்பது போல, எந்த சிம்பாப்வேக்கு எதிரான தொடர் மத்தியூஸின் தலைமையை இழக்கக் காரணமாக அமைந்ததோ அதே அணிக்கு எதிராக தனது மீள் வருகையை ஆரம்பிக்கிறார்.


எந்த அணியின் பயிற்சியாளராக தன்னை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்தி தனக்கான பெருமையை உருவாக்கினாரோ அதே அணிக்கு எதிராக, அதே நாட்டில் வைத்து தான் பிறந்த, விளையாடிய நாடான இலங்கை அணியின் இழக்கப்பட்ட கௌரவத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு ஹத்துருசிங்கவுக்கு. தொடர்ச்சியான தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் இலங்கை அணியை வெற்றியின் பாதையில் திருப்புவதன் மூலம் உலகில் உற்றுநோக்கப்படக்கூடிய ஒரு பயிற்றுவிப்பாளர் என்ற பெயரைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.
மிக நீண்ட காலமாக இலங்கையின் பயிற்றுவிப்பாளராக சேவை புரிந்து தன்னை வெளிப்ப்டுத்தவேண்டும் என்று தணியாத தாகத்தோடு இருக்கும் ஹத்துருவுக்கு அருமையான வாய்ப்பு.


​அண்மையில் இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் உபாதைக்குள்ளான மத்தியூஸ் இப்போது பூரண தகுதியுடன் பயிற்சிகளில் ​ஈடுபடுகிறார். அது மட்டுமன்றி மிக நீண்ட காலத்தின் பின்னர் முழுமையான ஆரோக்கியமான, பலமான இலங்கை அணி கிடைத்துள்ளது.

எல்லா முக்கிய வீரர்களும் ஆரோக்கியமாக தெரிவுக்காக இருப்பது மத்தியூஸ் + ஹத்துருவின் அதிர்ஷ்டமே.

குசல் மெண்டிசும் சந்திமலும் கூட அணியிலே இருப்பது கூட அணியில் ஆரோக்கியமான தெரிவுக் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

சண்டக்கான், அகில தனஞ்செய இரண்டு இளைய, திறமையான சுழல்  பந்துவீச்சாளரோடு சகலதுறைத் திறமையும் கொண்ட வனிது ஹஸறங்கவுக்கும் பொருத்தமான வாய்ப்புக்கள் தக்க ஆடுகளத்தில் வழங்கப்படுவது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லது.



ஆடுகளத்துக்கு ஏற்ற சமபல அணியைத் தெரிவு செய்வதே நோக்கமாக இருக்கட்டும். இதுவே 2019 உலகக்கிண்ணம் நோக்கிய இலங்கை அணியின் பயணத்துக்கு உகந்தது.

நேற்றைய பங்களாதேஷின் வெற்றி இலங்கை அணிக்கு ஆடுகளம் பற்றிய சில தெளிவாக்கல்களை வழங்கியிருக்கும்.

இது மட்டுமன்றி ஹத்துருசிங்கவுக்கு தெரியாத பங்களாதேஷா?



புதிய ஆண்டில் புதியஇணைப்பும் உறுதியான அணியும் இலங்கை அணிக்கு வெற்றியுடன் புதிய சகாப்தமாக அமையட்டும்.



--------------

இலங்கையின் இன்றைய பதினொருவர் யார் யார் என்பது இலகுவில் ஊகிக்கவே முடியாத ஒரு புதிராகவே இருக்கிறது. முடிந்தால் சரியாக பதினொருவரையும் கண்டுபிடியுங்கள் என்று சூரிய ராகங்களில் ஒரு போட்டியும் வைக்கும் அளவுக்கு நிலை..

ஆனால் ஆடுகளம் தான் இன்று இதைத் தீர்மானிக்கும்.
அநேகமாக இரண்டு சுழற்பந்து வீச்சாளரோடு களம்  காணும் இலங்கை அணியின் வரிசை மத்தியூஸ் தனது உடற்தகுதியுடன் எத்தனை ஓவர்கள் பந்துவீசக்கூடியதாக இருக்கும் என்பதிலே தான் தங்கியிருக்கிறது.
இன்றைய 




அநேகமாக இன்று  விளையாடாமல் இருக்கப் போகும் ஐவர் - (என்று நான் நினைத்தவர்கள்)

தனுஷ்க குணதிலக , தினேஷ் சந்திமால், வனிது ஹசரங்க , துஷ்மந்த சமீர, ஷெஹான் மதுஷங்க.



(சிலவேளைகளில் டெஸ்ட் தலைவர் சந்திமலின் துடுப்பாட்டத் திறனுக்காக அவருக்குப் பதிலாக அசேலவை இன்று தெரிவு செய்யாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. என்ன தான் உங்களில் பலர் அண்மைய முன்னாள் தலைவர் திசர பெரேராவை நீக்கினால் என்ன என்று நினைத்தாலும் அவர் விளையாடுவது அணியின் சம பலத்துக்கு முக்கியமாக அமைகிறது)

ஆனால் இன்று விளையாடும் பதினொருவர் : 
Upul , Chandimal, Mendis, Janith, Angelo, Asela, Thisara, Wanindu, Akila, Chameera & Lakmal.



-----------------


இந்த ஆண்டு பிறந்தநேரம் சந்திக்க ஹத்துருசிங்கவின் நியமன அறிவிப்போடு ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு எழுதிய

'2018 என்ன கொண்டுவரும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு?' 

என்ற கட்டுரையை  சில மாற்றங்களுடன் இங்கே சேர்ப்பது பொருத்தமாக இருக்கும்..

கடந்து சென்ற 2017ஐப் போல மிக மோசமான ஒரு ஆண்டு இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு அமைந்ததே இல்லை.
மூன்று விதமான போட்டிகளிலும் இதே நிலைமை.
மூன்று வகையான போட்டிகளையும் சேர்த்து விளையாடிய 57 போட்டிகளில் வெறும் 14 வெற்றிகள் & 40 தோல்விகள்.
தரப்படுத்தல்களில்
டெஸ்ட் – 6ஆம் இடம்.
ஒருநாள் – 8 ஆம் இடம்.
T 20 – 8 ஆம் இடம்.
தலைவர்கள் மாறி மாறி வந்தார்கள். பயிற்றுவிப்பாளர்களில் மாற்றம் வந்தது. இறுதியாகத் தேர்வாளர்களும் மாற்றப்பட்டார்கள்.
ஆனால் வெற்றிகள் மட்டும் கைகூடவில்லை.
3 மிக மோசமான வெள்ளையடிப்புக்கள் – ஒருநாள் தொடர்களில்.
இலங்கையில் வைத்து இந்தியா அனைத்துவிதமான போட்டிகளிலும் 9-0 என்று துடைத்துவிட்டுப்போனது பேரவமானம்.
பல முக்கியமான வீரர்களுக்கு ஏற்பட்ட உபாதைகளும் காயங்களும் சேர்ந்து இலங்கை அணிக்கு ஏற்கனவே இருந்த நிலையை மோசமாக்கின. குறிப்பாக முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், சகலதுறை வீரர் அசேல குணரத்ன, வேகப்பந்துவீச்சாளர்கள் தம்மிக்க பிரசாத், துஷ்மந்த சமீரா, ஷமிந்த எறங்க, நுவான் பிரதீப் ஆகியோரின் உபாதைகள் இலங்கை அணிக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
பிரதியீட்டு வீரர்களாக உள்ளே வந்த புதிய வீரர்களும் தங்கள் இடங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள சிறப்பாக ஆடியது மிகக் குறைவு. ஒரு சில வீரர்களைத் தவிர மற்றையோர் எல்லோருமே மிகப்பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருந்தனர்.
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளையெல்லாம் பாருங்கள், யாராவது ஒரு சிரேஷ்ட வீரர்/ நிரந்தர வீரருக்கு உபாதை ஏற்படும்போது அல்லது ஒய்வு வழங்கப்படும்போது அதை பயன்படுத்தி உள்ளே வரும் வீரர் மிகச் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தி தெரிவாளருக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்துவார்.
வெளியே சென்ற வீரர் தனது இடத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியாமல்போகும் சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன.
அண்மைக்காலமாக இங்கிலாந்து, நியூ சீலாந்து அணிகளிலும் இதே நிலைமை.
அந்தளவுக்கு இந்த அணிகளில் மேலதிக வீரர்களின் பலம் – Bench Strength மிகையாகவே உள்ளது.
இந்தியா எல்லாம் இப்போதுள்ள வீரர்களின் போட்டித்தன்மை மற்றும் வள நிறைவைப் பார்த்தால் இன்னொரு சர்வதேச அணியை உருவாக்கிவிடலாம்.
ஆனால் இலங்கை அணியின் 2017ஐ மீளப்பார்த்தால் பதினொருவர் கொண்ட உருப்படியான அணி ஒன்றை உருவாக்குவதே மிக சிரமமான விடயமாக இருந்துள்ளது.
உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் என்று அவர்களை சர்வதேச மட்டத்தில் அறிமுகப்படுத்தும் நேரம் மிகமோசமாக அவர்கள் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறார்கள்.
இது அண்மைக்காலத்தில் இலங்கையின் முன்னாள் வீரர்கள் பலரால் விமர்சனத்துக்குள்ளான இலங்கையின் உள்ளூர் மட்டக் கிரிக்கெட் போட்டிகளின் கட்டமைப்பின் மிகப் பலவீனமான தன்மையைக் காட்டுவதாக இருக்கிறது என்பது தெளிவு.
அப்படியும் நம்பிக்கையைக் காப்பாற்றி தமது சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய சில இளைய வீரர்களை நம்பிக்கை வழங்காமல், தொடர்ச்சியான வாய்ப்புக்களை வழங்காமல் விட்ட தேர்வாளர்களை என்னவென்பது?
இலங்கைக்கு கடந்த ஒரு வருட காலமாகச் சிறப்பாகத் துடுப்பாடி வந்த குசல் மெண்டிஸ் கடந்த இந்தியத் தொடருக்கு அணியில் சேர்த்துக்கொள்ளப்படாமை, தனஞ்சய டீ சில்வா அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறூராக ஆடிய பின்னர் காரணமே இல்லாமல் கழற்றிவிடப்பட்டமை, ரோஷென் சில்வா போன்ற வீரர்களுக்கு மிகத் தாமதமாக வாய்ப்பு வழங்கியது என்று பலவித உதாரணங்களைக் குறிப்பிடலாம்.
முன்னுக்குப் பின் முரணான பல தெரிவுகளும் முட்டாள்தனமான முடிவுகளும் இலங்கை அணியையே கேலிக்கூத்தாக மாற்றியிருந்தன.
எனினும் இப்போது சந்திக்க ஹத்துருசிங்க முழுமையாகப் பொறுப்பேற்ற பின்னர் சுயாதீனமாக செயற்பட அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இந்த அடிப்படையிலேயே ஹத்துருசிங்க பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஷின் பயிற்றுவிப்பாளராக இருந்தபோது ஹத்துருசிங்க தேர்வாளராகவும் செயற்பட்டிருந்தார். எனினும் இலங்கையணியைத் தெரிவுசெய்யும் தேர்வாளராக அவர் கடமையாற்றப்போவதில்லை. ஆனாலும் முன்னைய இலங்கைப் பயிற்றுவிப்பாளரின் காலங்களில் இலங்கைத் தேர்வாளர்கள் மட்டுமன்றி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகமும் சேர்ந்தே தலையிட்டு பல தலைவலிகளை வழங்கிவந்ததை போல ஹத்துரு காலத்தில் நடக்காது என்று நம்பலாமா?
ஹத்துருசிங்க பொறுப்பு எடுத்த பின் பயிற்றுவிப்புக்கள் மிக நேர்த்தியாக இடம்பெறுவதாக இப்போதைக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன. தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு, சோர்ந்து போன இலங்கை வீரர்களுக்கு உற்சாகமும் சேர்ந்திருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது இலங்கையைச் சேர்ந்த ஒரு பயிற்றுவிப்பாளர் என்பதால் தமது குறை, நிறைகளையும் தேவைகள் மற்றும் கருத்து வெளிப்பாடுகளையும் தயக்கமில்லாமல் தமது மொழியிலேயே வெளிப்படுத்தக்கூடிய ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது.
ஹத்துருசிங்கவின் அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச அனுபவமும் கைகொடுக்கும் என நம்பலாம்.
பதவியேற்ற சில நாட்களிலேயே வீரர்களின் சில நடத்தைகளில் முக்கிய திருத்தங்களை மேற்கொண்ட ஹத்துரு சில முக்கிய விதிகளையும் அறிவித்துள்ளார்.

போட்டிகளின் போது தங்க ஆபரணங்களை அணிந்துகொள்வது, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது, இசை கேட்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. கண்ணாடியைத் திருப்பினா  ஆட்டோ ஓடுமா என்ற கேள்வி எழுந்தாலும் சில சிறிய அடிப்படை ஒழுக்க விதிமுறைகள் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்பது உறுதி.
இன்னும் சுவாரஸ்யமான ஒரு விடயம் எந்த அணியின் பயிற்றுவிப்பாளராக ஹத்துரு இருந்தாரோ அதே நாட்டிலேயே தனது முதலாவது பணியை ஆரம்பிக்கப்போகிறார்.
இன்று  முதல் முக்கோணத் தொடருடன் ஆரம்பிக்கவுள்ள இலங்கையின் புதிய கிரிக்கெட் ஆண்டு, பங்களாதேஷுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருடன் முக்கியத்துவம் பெறுகிறது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளையே சொந்த மண்ணில் வைத்து மண்கவ்வ வைத்த பங்களாதேஷ் தற்போது தடுமாறிக்கொண்டிருக்கும் இலங்கை அணியின் வருகையை ஆவலுடன் பார்த்துள்ளது.
அதிலும் இலங்கையில் வைத்து இலங்கையை வீழ்த்திய உற்சாகமும் ஹத்துருசிங்கவை பழி தீர்க்கும் ஆர்வமும் சேர்ந்தே இருக்கிறது.
இந்த சவாலில் ஜெயிப்பது இலங்கை அணிக்கு நிச்சயம் பெரிய உற்சாகத்தை 2018 முழுவதும் தரும்.
அதன் பின் தொடரவுள்ள போட்டித் தொடர்கள் –
மார்ச்சில் இலங்கையில் இடம்பெறவுள்ள T 20 முக்கோணத் தொடர் – மற்றைய அணிகள் இந்தியா, பங்களாதேஷ்.
ஜூன் – ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளில் 3 டெஸ்ட் போட்டிகள்.
இலங்கை முதன்முறையாக சரித்திரபூர்வமான பார்படோஸ் மைதானத்தில் விளையாடவுள்ளது.
ஓகஸ்ட்டில் இலங்கைக்கு தென் ஆபிரிக்கா வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள்.
ஒக்டோபரில் இங்கிலாந்து இலங்கை வருகிறது. 3 Test, 5 ODI and 1 T20
இந்த அணிகளை இலங்கை தனது சாதக சூழ்நிலைகளை பயன்படுத்தி வெல்வதன் மூலம் தரப்படுத்தலை உயர்த்திக்கொள்ளும் ஒரு அரிய வாய்ப்புக் கிட்டலாம்.
இடையே இந்தியாவில் ஆசியக் கிண்ணப்போட்டிகள். ஒருநாள் போட்டிகளில் சரிந்து கிடைக்கும் இலங்கை அணி தன்னை அதற்கு முதலேயே திடப்படுத்தவேண்டும்.
இவ்வருடத்தில் இறுதியாக இலங்கை அணி நியூசீலாந்துக்குப் பயணிக்கும். 2 Test, 3 ODI and 1 T20
அவ்வேளையில் இலங்கை அணி இருக்கும் நிலை பற்றி இப்போதைக்கு ஊகிப்பது சிரமம் தான்.
எனினும் 40 வயதாகும் ரங்கன ஹேரத்தின் ஓய்வினை கவலையுடன் இலங்கை எக்கணமும் எதிர்கொள்ளவேண்டி வரலாம். ஒரு சின்ன உபாதை கூட அவரை ஓய்வுக்குத் தள்ளிவிடும்.
டெஸ்டில் இலங்கையின் துரும்புச் சீட்டு ஹேரத் இல்லாத காலத்துக்கு இலங்கை இப்போதைக்குத் தயாரில்லை. புதிய நம்பகமான சுழற்பந்து கரங்களைத் தயார்படுத்தவேண்டும்.
அதே நிலை தான் இப்போது தேர்வாளர்களால் ‘ஓய்வு ‘ வழங்கப்பட்டுள்ள லசித் மாலிங்கவுக்கு. வயதேறி வரும் தம்மிக்க பிரசாத்தும் நீண்டகாலத்துக்கு உகந்த வீரரில்லை.
இவர்கள் எல்லோரையும் விட முக்கியமாக அஞ்சலோ மத்தியூஸ். இப்போது தான் 30 வயது ஆனாலும் அடிக்கடி உபாதைக்கு உள்ளாகும் மத்தியூஸ் இப்போதெல்லாம் பந்துவீசுவது குறைவு. அப்படியே பந்து வீசினாலும் வெகுசில ஓவர்கள் மட்டுமே. நீண்ட நேரம் துடுப்பாடினால் உபாதையடைகிறார். இவரையும் நீண்ட கால நோக்கில் முடியாது.
புதிய, இளைய தலைமுறை பொறுப்பேற்று திடப்படுத்தவேண்டும்.2017 இல் சிறப்பாகத் துடுப்பாடி நம்பிக்கை தந்த தற்போதைய தலைவர் தினேஷ் சந்திமால், டிமுத் கருணாரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, உபுல் தரங்கவோடு எதிர்காலத்துக்கான வீரர்களாக நம்பிக்கையளிக்கும் குசல் மெண்டிஸ், தனஞ்சய டீ சில்வா, ரோஷென் சில்வா ஆகியோரும் தம்மைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தவேண்டும்.
பந்துவீச்சாளர்கள் சர்வதேசத் தரத்துக்கு உயரவேண்டும். அதற்கேற்ற தெரிவும் இருக்கவேண்டும். முன்பிருந்த இலங்கை அணியின் தரமான களத்தடுப்பு மீண்டும் வேண்டும்.
தன்னை வங்கப்புலிகளை மேலுயர்த்தி ஆச்சரிய வெற்றிகளைப் பெற வழிகாட்டிய ஹத்துருசிங்கவின் கைகளில் இப்போது இலங்கைச் சிங்கங்கள்.
பார்க்கலாம் பிறந்துள்ள 2018 எப்படி அமைகின்றது என்று…


January 05, 2018

#SAvIND - அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம்!!! - தென் ஆபிரிக்கப் புயலை எதிர்கொள்ளுமா கோலியின் 'புதிய' இந்தியா


(Freedom Trophy - நெல்சன் மண்டேலா - மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் அர்ப்பணிக்கப்படும் இந்தக் கிண்ணத்தை மீட்கும் அணித் தலைவருக்கான சிறைவைக்கப்பட்டிருப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ள வடிவம் என்னைக் கவர்ந்துள்ளது)

தென் ஆபிரிக்கா தனக்கு சாதகமாக புற்கள் மேவிக்கிடக்கும் ஆடுகளத்தைத் தயார் செய்து, நாணய சுழற்சியிலும் வென்று துடுப்பாட்டத்துக்கு சாதகமான முதல் இரு நாட்கள் துடுப்பெடுத்தாட முனைந்திருக்க, இந்தியப் பந்துவீச்சாளர்கள் இந்த எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி முதல் நாளிலேயே 286 ஓட்டங்களுக்கு சுருட்டி எடுப்பார்கள் என்று யார் எதிர்பார்த்தார்?

நம்புவீர்களோ இல்லையோ, நான் கொஞ்சமாவது நினைத்தேன்... இந்தியாவிடமும் இப்போது உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைகளைத் தடுமாற வைக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆரோக்கியமான அணித்தெரிவு சிக்கலை ஏற்படுத்தக்கூடியளவுக்கு சிறப்பான பெறுபேறுகளைக் காட்டும் ஐந்து பேர் இருக்கிறார்கள்.

பல தடவை இவ்வாறு சொந்த செலவில் சூனியம் வைத்த கதைகள் பலவான் அணிகளுக்கே நடந்திருக்கின்றன.
அண்மைய உதாரணம் புனேயில் இந்தியா சுழல் பந்துக்கு சாதகமான ஆடுகளம் செய்து வைக்க, பெரிதாக அறியப்படாத, ஓ கீப் யாருமே எதிர்பாராத வகையில் 12 விக்கெட்டுக்களை எடுத்து மூன்று நாட்களில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வியைப் பரிசளித்த கதை.

ஆனால் 286 என்பதையே ஒரு பெரிய, சவால்மிக்க ஓட்ட எண்ணிக்கையாக மாற்றிக்காட்ட தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களால் முடியும். முடியுமா என்று நான் இட்ட ட்வீட்டுக்கு சில நிமிடங்களிலேயே மூன்று விக்கெட்டுக்களைப் பறித்து பதிலளித்துள்ளார்கள்.
தென் ஆபிரிக்காவுக்கு டீ வில்லியர்ஸ் - டூ ப்ளேசி இணைப்பைப் போல, பின் வந்த தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சாளரும் விக்கெட் காப்பாளரும் சேர்த்துக் கொடுத்த ஓட்டங்கள் போல சேர்க்காவிட்டால் தென் ஆபிரிக்கா நான்கு நாட்களுக்குள் போட்டியை முடிக்கும்.

நாளை காலை வேளை தென் ஆபிரிக்காவின் வேகப்பந்துவீச்சை இந்தியா சமாளிக்கும் வகையில் தான் இந்தப் போட்டி செல்லும் பாதை உள்ளது.
ரஹானே இல்லாத வெறுமையும், சகாவை இப்படியான ஆடுகளத்தில் ஆறாம் இலக்கத்தில் ஆடவைக்கும் தவறான முடிவும் நாளை தென் ஆபிரிக்காவின் நான்கு முனை வேகத்திலேயே தங்கியிருக்கிறது.

28/3 என்று இந்தியா இப்போதிருக்கும் நிலையைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகம் இருந்தாலும் புஜாரா இந்தியாவின் தூணாக இருப்பார் என்பதும், ரோஹித்தின் அண்மைய பெறுபேறுகளும்  இந்தியாவுக்கு உற்சாகம் தரலாம்.

இந்தியாவின் துடுப்பாட்ட வரிசையின் பலம் பற்றி சிலாகித்தும்  - பொதுவாகவே இன்று கோலி, விஜய் ஆகியோர் ஆட்டமிழந்த விதமாகவே இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் வெளிநாடுகளில் சொதப்பினாலும் கூட- அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டு வரும் கோலியின் தலைமையிலான இந்தியாவின் மேலுள்ள நம்பிக்கையால் - தென் ஆபிரிக்காவின் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சு பற்றி வியந்தும் - இந்த இரண்டு காரணிகளும் மோதும் தொடராக இது அமையும் என்று குறிப்பிட்டு இன்று Sports Tamil க்கு எழுதிய கட்டுரையில் சில மேலதிக சேர்க்கைகளோடு இந்த இடுகை..

இந்தியா vs தென் ஆபிரிக்கா - அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம் 


இன்று தென் ஆபிரிக்காவில் ஆரம்பிக்கும் கிரிக்கெட் தொடரானது உலகின் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு தொடராக அமையப்போகிறது. கிரிக்கெட்டின் பழம்பெரும் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் முடிவுறும் நேரத்தில் தென் ஆபிரிக்க - இந்தியத் தொடர் ஆரம்பிப்பது கிரிக்கெட்டின் குதூகலம் இல்லாமல் வேறென்ன?


கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக சொந்த நாட்டிலும், இந்தியாவை ஒத்த கால நிலை, களத்தன்மைகளைக் கொண்ட இலங்கையிலும் பெரியளவில் சவால்களை எதிர்கொள்ளாமல் இலகுவாக வெற்றிகளைக் குவித்து டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதலாம் இடத்திலுள்ள இந்திய அணி அண்மைக்காலத்தில் தனது முதலாவது பெரும் சவாலை சந்திக்கப்போகிறது.

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளின் மோதல் இது.
எனினும் 3-0 என்று தென் ஆபிரிக்காவிடம் இம்முறை தோற்றாலும் முதலிடம் பறிபோகாது எனும் அளவுக்கு கடந்த சில மாதகாலத் தொடர்ச்சியான வெற்றிகள்.
அதிலும் 9 டெஸ்ட் தொடர்களைத் தொடர்ச்சியாக வென்று சாதனையை சமப்படுத்தியுள்ளது. ஆனால் சாதனையை முறியடிக்கும் 10வது தொடர் வெற்றி நிச்சயம் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதி.

தென் ஆபிரிக்காவுக்கோ கடைசியாக 2015ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவில் வைத்துக் கண்ட 3-0 என்ற (4 டெஸ்ட்களில்) தோல்விக்கு வேகப்பந்து ஆடுகளங்களில் வைத்துப் பழி தீர்க்கும் எண்ணமுள்ளது. 

இதுவரைக்கும் தென் ஆபிரிக்காவிலே  எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் வெல்லாத இந்திய அணிக்கு இது ஒரு மிகப் பெரும் சோதனை தான்.
உலகின் மிகச் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வரிசை என்று சொல்லக்கூடியளவுக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் கடந்த 2017இல் மாறி மாறி ஓட்டங்களை மலையாகக் குவித்திருந்தார்கள். அவுஸ்திரேலிய, இங்கிலாந்து, நியூ சீலாந்து பந்துவீச்சாளர்களையும் சந்தித்திருந்தார்கள். ஆனால் அவை அனைத்தும் இந்திய ஆடுகளங்களில்..
ஒன்றில் தட்டையான துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள். இல்லையேல் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்.

இன்று முதல் இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை சந்திக்கவிருப்பதோ உலகின் எந்தவொரு துடுப்பாட்ட வரிசையும் அச்சுறுத்தும் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு வரிசை.
மற்ற அணிகள் எல்லாம் அதிகபட்சம் 2 அல்லது 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துத் தடுமாறிக்கொண்டிருக்க தென் ஆபிரிக்கா மிக உறுதியான 5 உயர்தரமான வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு (ஸ்டெயின், மோர்னி மோர்க்கல், பிலாண்டர், றபாடா, க்றிஸ் மொரிஸ்), மேலதிகமாக மிதவேகப்பந்தை வீசும் பெலகாவாயோவும் இருக்கிறார்-  யாரைத் தெரிவு செய்வது, யாரை விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது.
உலகின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினையே ஓய்வு அளித்து மற்றையவர்களைப் பயன்படுத்தலாமா என்று சிந்திக்கிறார்கள் என்றால் எத்தகைய பலம் அது?

அதுவும் இன்று கேப்டவுனில் ஆரம்பித்துள்ள டெஸ்ட் போட்டி முதல் அத்தனை ஆடுகளமுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான எகிறும் ஆடுகளங்களை விரும்புகிறார்கள் என்று சொன்னால் அவர்களது நோக்கம் எத்தகையது என்று புரிந்துகொள்ளலாம்.

இதுவரை காலமும் இவ்விரு அணிகளின் டெஸ்ட் மோதல்களில் 
விளையாடியவை - 33
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி - 13
இந்தியாவுக்கு வெற்றி - 10
சமநிலை - 10

ஆனால் தென் ஆபிரிக்காவில்,
17 டெஸ்ட் போட்டிகளில்,
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி - 8
இந்தியாவுக்கு வெற்றி - 2
சமநிலை - 7

இந்த நிலையை இப்போதிருக்கும் வெற்றிக்காக ஆவேசத்துடன் விளையாடக்கூடிய தனது இளைய அணியின் மூலம் அடையும் விருப்போடு இருக்கிறார் விராட் கோலி.

அதற்கு ஏற்றதாக இந்தியாவின் பலம்வாய்ந்த அசத்தல் துடுப்பாட்ட வரிசை இருக்கிறது. தென் ஆபிரிக்காவின் ஆடுகளங்களிலும்  ஈடுகொடுத்து ஆடக்கூடிய நுட்பங்கள் கொண்ட துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.
முக்கியமாக கடந்த வருடத்தில் 1000 ஓட்டங்களுக்கு மேலே குவித்த புஜாராவும் கோலியும்.
இதிலே மூன்றாம் இலக்கத்தில் ஆடும் புஜாரா உலகின் மிக நம்பகமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே வார்க்கப்பட்டவர் போல. கடந்த வருடத்தில் 4 சத்தங்களுடன் 1140 ஓட்டங்களைக் குவித்திருந்த புஜாராவின் ஓட்டக்குவிப்பும் நின்று நிலைப்பும் இந்தியாவுக்கு மிக அவசியமாகிறது.
அதேபோல உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முன்னின்று ஓட்டக்குவிப்பிலும் வழிநடத்தி 5 சதங்களைப் பெற்ற (இவற்றில் இரண்டு இரட்டை சத்தங்கள்) கோலி இங்கிலாந்தில் தடுமாறியதைப் போல இல்லாமல் நேர்த்தியாக, துணிச்சலாக ஆடினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக அமையும்.

முரளி விஜய் இன்னொரு முக்கியமான வீரர். வெளிநாட்டு மண்ணில் தடுமாறும் இந்திய வீரர்களுக்கு மத்தியில் விஜய் மிக நேர்த்தியாக ஆடக்கூடிய வீரர். ரஹாநேயும் அவ்வாறு இருந்தாலும் இலங்கை அணியோடு தொடர்ச்சியாகத் தடுமாறியிருப்பது அவரது formபற்றிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் தான் கிடைத்த டெஸ்ட் வாய்ப்புக்களில் தன்னை நிரூபித்தவரும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் சிறப்பான ஓட்டக்குவிப்பில் இருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தவான், ராகுல் ஆகிய இருவருமே தம்மை நிரூபித்தவர்கள். எனினும் தவானே இந்தியாவின் தெரிவாக அமைய அவரது அனுபவமும் அதிரடியும் காரணமாக அமையும்.
இந்தியா மேலதிகமாக ஒரு வேகத்தையும் சேர்த்துக்கொள்ள பாண்டியாவின் சகலதுறைத் திறமை பயன்படுள்ளது.

எதிர்பார்த்ததைப் போல ஒருநாள் போட்டிகளில் கலக்கிய பும்ராவுக்கு அறிமுகத்தை வழங்கி மூன்று வேகப்பந்து வீச்சாளரோடு களம் கண்டிருக்கிறது. 
பும்ரா எதிர்பார்த்தளவுக்கும் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் காட்டிய திறமையளவுக்கு சிறப்பாக செய்யாவிடினும் அவரது முதல் விக்கெட் ஏபி டீ வில்லியர்ஸ்.
எனும் அனுபவம் வாய்ந்த இஷாந்த் ஷர்மாவை இன்று தெரிவு செய்திருக்கலாமோ என்று கோலி இனி எண்ணலாம்.
ஜடேஜா உடல்நலக்குறைவு அஷ்வினை மட்டும் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

தென் ஆபிரிக்கா மிக நீண்ட காலத்துக்குப் பிறகு உபாதை சிக்கல்கள் எதுவும் இல்லாமல் தன்னுடைய மிகச்சிறந்த அணியோடு இறங்கியுள்ளது.
துடுப்பாட்டத் தெரிவுகளில் பெரிய சிக்கல் இல்லாவிட்டாலும் சிறப்பாக ஆடிவந்த பவுமாவை இன்று விட்டுவிட்டு ஆடவேண்டிய நிர்ப்பந்தம்.
எனினும் அம்லா, டீன் எல்கர் (கடந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தவர்) மீண்டும் டெஸ்ட் அணிக்குள் வந்துள்ள உபாதை கடந்த டீ வில்லியர்ஸ், அணித் தலைவர் டூ ப்ளேசிஸ் ஆகியோரோடும் உலகத் தரம் வாய்ந்தததாகத் தெரிகிறது.

எனினும் ஐந்து முழு நேரப் பந்துவீச்சாளரைத் தெரிவு செய்திருப்பதால் ஒரு துடுப்பாட்ட வீரர் குறைவாக விளையாடும் அபாயம்.
டீ கொக்கும் ஒரு சிறப்பான துடுப்பாட்ட வீரரே. எனினும் அவருக்குப் பிறகு பிலாண்டர் வருவது துடுப்பாட்டம் பலவீனமானதாகவே தெரிகிறது.
ஆனாலும் முக்கியமான மூன்று வீரர்களும் 12 ஓட்டங்களுக்கு ஆடுகளம் விட்டு அகன்றும் கூட சமாளித்த திறமை மெச்சக்கூடியது.

ஆயினும் தென் ஆபிரிக்கா தன்னுடைய வேகப்பந்துவீச்சாளரில் வைத்துள்ள நம்பிக்கை அது.

இதனால் தான் இந்தத் தொடர் தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளரின் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சுக்கும் இந்தியாவின் ஓட்டக்குவிப்பில் ஈடுபடும் அசத்தல் துடுப்பாட்ட வீரருக்கும் இடையிலான மோதல் தொடராகக் கருதப்படுகிறது.

இதுவரை கலக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளரை உலகின் நம்பகமான துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட தென் ஆபிரிக்கத் துடுப்பாட்ட வரிசை சமாளிக்குமா என்பதே தொடரின் முதலாவது கேள்வி. 
புவனேஷ்வர் குமாருக்கு 4 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொடுக்க உதவிய ஆடுகளம் நாளை தென் ஆபிரிக்காவின் புயல்களுக்கு என்னென்ன சாதகத்தை வழங்குமோ?

இதுவரை ஸ்டெயின், பிலாண்டர், மோர்க்கல் ஆகியோர் தலா ஒன்று..
இன்னும் புதிய புயல் காகிஸோ றபாடாவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை இவரது நாளாக அமையலாம். அப்படி அமைந்தால் இந்தப் போட்டி நான்கு நாட்களில் முடிந்து போகலாம்.
அண்மையில் தான் சிம்பாப்வேயுடன் இரண்டே நாளில் ஒரு டெஸ்ட் போட்டியைத் தென் ஆபிரிக்கா முடித்திருந்தது.




ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner