September 30, 2009

இலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தேவி தெற்கின் நண்பன்?

இன்று பகல் வேளையிலிருந்து இலங்கை முழுவதும் ஒரு திடீர் பரபரப்பு தொற்றி இருந்தது..

செல்பேசிகளின் வழியாக வரும் செய்தி சரங்கள் (sms news alerts)மூலமாக "இன்று இரவு சரியாக 8.05க்கு இலங்கையின் எல்லா தொலைகாட்சி அலைவரிசைகளையும் பாருங்கள்.. இலங்கையின் மிகப்பெரும் புதிய மாற்றத்துக்கான வழி காத்திருக்கிறது" என்ற செய்தியே இத்தனை பரபரப்புக்கும் காரணம்.

எங்களிடமும் இப்போது ஒரு தொலைக்காட்சிஇருப்பதனால் எனக்கு ஏதாவது தெரிந்திருக்கும் என்று ஏராளமான நண்பர்கள்,தெரிந்தவர்கள்,நேயர்கள் என்று எனக்கு மாறி மாறி அழைப்பும் கேள்விகளடங்கிய எஸ்.எம்.எஸ் களும் ..

எனக்கென்றால் ஒன்றுமே தெரியாது.. செய்தி,தொலைக்காட்சி பக்கமும் விஷயம் யாருக்கும் தெரியவில்லை.. புதிதாய் ஆரம்பித்தது தானே .. சின்னப் பெடியங்கள் என்று சொல்லவில்லைப் போலும்..

வந்த எல்லா எஸ்.எம்.எஸ்.களுக்கும் இரவு வரை காத்திருங்கள் பதிலை அனுப்பிவிட்டு, இரவு மனைவி,மகனோடு வெளியே போயிருந்த ரவுண்ட்சையும் அவசர அவசரமாக சுருக்கிக் கொண்டு வீடு வந்து, விறு விருப்பாக போய்க் கொண்டிருந்த அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் போட்டியையும் விட்டு விட்டு உள்ளூர் தொலைக்காட்சிகளில் அகப்பட்ட எதோ ஒரு அலைவரிசையைப் போட்டால்,

ஒரு தொடரூந்து(புகையிரதம்/ட்ரெயின்) அதற்குள் எல்லா இனத்தவரும்..(குறியீடுகள் மூலமாக..குல்லா அணிந்த இஸ்லாமியர்,குறி போட்ட தமிழர்,, கிறிஸ்தவ தமிழர் இல்லையோ???) இரண்டு வேறு வேறு கொம்பார்ட்மேன்ட்களில் இரு சிறுவர்கள் நட்புப் பார்வையோடு..

பார்த்தவுடனேயே விளம்பரம்..அதுவும் இன ஒற்றுமை பற்றி அரசின் விளம்பரம் என்று புரிந்துவிட்டது..ஆனாலும் ஏதாவது புதுசா சொல்லப் போகிறார்கள் என்று பார்த்தால்...

எல்லா உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் இந்த அரச விளம்பரம்..

அந்த தொடரூந்து இரு துண்டுகளாகப் பிரிகிறது.. பயணம் செய்த எல்லா இனத்தவரும் சேர்ந்து பிரிந்த கொம்பார்ட் மென்ட்களை சேர்த்து நண்பர்களை இணைக்கிறார்கள்..


யாழ்தேவிக்கான (இலங்கைத் திரட்டியல்ல.. உலகப் புகழ் பெற்ற கொழும்பு -யாழ்ப்பாணம் இடையிலான புகையிரதம்) விளம்பரமாம் இது.. அட சாமிகளா..

இதுக்குத் தான் இத்தனை பில்ட் அப்பும் பரபரப்புமா?

இத்தோடு முடிந்தால் பரவாயில்லை..

யாழ்தேவிக்கான பாதை சமைக்க பணம் கொடுக்கப் போவது இலங்கையின் அப்பாவிப் பொதுமக்களாகிய நாமாம்..
உத்துறு மித்துரு என்ற லொத்தர் சீட்டை வாங்கட்டாம்..

கொடுமையிலும் பெருங் கொடுமை உத்துறு மித்துருவுக்கு செய்த தமிழாக்கம்..
உத்துறு என்றால் சிங்கள மொழியில் வடக்கு.. மித்துரு என்றால் நண்பன்..

தமிழில் போடப்பட்ட தொலைக்காட்சி விளம்பர அட்டையில் தெற்கின் நண்பன் என்று காணப்பட்டது..
குரல் கொடுத்த பிரபல தமிழ் அறிவிப்பாளரும் உத்துறு மித்துரு - தெற்கின் நண்பன் என்றே கூறுகிறார்..

எங்கே போய் நாம் முட்டிக் கொள்வோம்?

எத்தனை விஷயங்களுக்காக முட்டிக் கொள்வோம்?

எல்லாவற்றிலும் கொடுமை..
இதற்காகவா அவசரப்பட்டு எம்மையும் இழுத்துக் கொண்டு வீடு வந்தாய் என மனைவி நக்கலாய் என்னைப் பார்த்த பார்வை..
தேவையா எனக்கு?September 29, 2009

இங்கிலாந்தை நம்பி இலங்கை+பாகிஸ்தானை நம்பி இந்தியா.. என்ன கொடுமை இது..


ICC சாம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகளில் எதிர்பாராத என்னென்னவோ எல்லாம் நடந்து முடிந்தாயிற்று....

Favourites என்று (என்னால் மட்டுமல்ல பிரபல விமர்சகர்களாலும் - முன்னாள் வீரர்களால்) எதிர்வு கூறப்பட்ட பல அணிகள் பந்தாடப்பட்டு அடுத்த சுற்றான அரையிறுதிக்குச் செல்லமுடியாமல் தட்டுத்தடுமாறிய வண்ணம் உள்ளன.

யாருமே – ஏன் அந்த அணிகளின் அபிமானிகளே எதிர்பார்த்திராத பாகிஸ்தானும், இங்கிலாந்தும் அரையிறுதி செல்வதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இப்போது அரையிறுதிக்கு முதலில் தெரிவாகியுள்ள இரு அணிகளும் இதுவரை சாம்பியன்ஸ் கிண்ணங்களை (மினி உலகக் கிண்ணத்தை) இதுவரை வென்றதில்லை.

கடந்த ஐந்து தடவை போல இம்முறையும் புதிய அணியொன்றுதான் (இதுவரை வெல்லாத அணி) கிண்ணத்தை சுவீகரிக்கப் போகிறதோ?

இன்றிரவு நடந்த இந்திய - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டி மழையினால் குழம்பியது காரணமாக மற்றொரு வாய்ப்புள்ள அணியாகக் கருதப்பட்ட இந்தியாவின் வாய்ப்புக்களும் அருகியுள்ளன.

இலங்கை அணியின் நேற்றைய தோல்வி (இத்தொடரில் இரண்டாவது) கடுப்பைத்தந்தாயினும், வழமைபோல் சுருண்டுவிடாமல் இறுதிவரை போராடித் தோற்றதில் ஒரு திருப்தி.

பந்து வீசும் போது வாரி அள்ளி நியூசிலாந்துக்கு கொடுத்திருந்தாலும், விக்கெட்டுக்கள் சரிந்த பின்னரும் மகேல ஜெயவர்த்தனவும், நுவான் குலசேகரவும் துடுப்பெடுத்தாடிய விதம் ரசிகர்களைக் கொஞ்சமாவது ஆறுதல்படுத்தியிருக்கும்.

மக்கலம், றைடர், கப்டில், வெட்டோரி ஆகியோரின் துடுப்பெடுத்தாட்டமும், வழமையை விடக் கட்டுப்பாடான பந்துவீச்சும் நியூசிலாந்தை வெற்றியாளர்கள் ஆக்கியது. எனினும் நேற்று அதிரடி ஆட்டத்தை வழங்கிய ஜெசி ரைடர் உபாதை காரணமாகத் தொடரில் இனி விளையாட முடியாமல் போயிருப்பது நியூசிலாந்துக்கு மிகப் பெரிய இழப்பே.

இலங்கை அணியின் பொருத்தமற்ற அணித்தெரிவுகளே காரணம் என்று சொல்லலாம். இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சு ஆடுகளமொன்றில் திலான் துஷாரவை விட்டுவிட்டு விளையாடியது.

பின்னர் நேற்று ஜெயசூரிய 3விக்கெட்டுக்கள் எடுக்கக்கூடிய ஆடுகளத்தில் முரளிதரனை விட்டுவிட்டு விளையாடியது.

ஏன் இந்தக் குழப்பம்!

எவ்வளவு தான் அடிவிழுந்தாலும், உலகத்தின் சாதனைப் பந்துவீச்சாளரை, தனித்து நின்று போட்டியொன்றை வென்று தரக்கூடிய முரளியை அணியிலிருந்து நீக்குவது புத்திசாலித்தனமான செயல் அல்லவே.


மீண்டும் தாங்கள் Chokers அல்லது Jokers என்று நிரூபித்துள்ளார்கள் தென் ஆபிரிக்கர்கள். போட்டிகளை நடாத்தும் நாடாக முதலிலேயே அடுத்த சுற்றுக்கு வாய்ப்பில்லாமல் வெளியேறியுள்ளது. 2003 உலகக்கிண்ணம், 2007 T 20 உலகக்கிண்ணம் மீண்டும் இப்போதும் தம் உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்கள்.

இலங்கை அணிக்கெதிரான போட்டியில் பெருந்தன்மையுடன் கனவானாக நடந்துகொண்ட ஸ்ட்ரோஸ், நேற்றுத் தென் ஆபிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் ஓடமுடியாமல் தவித்தபோது ஓடுவதற்கு சகவீரர் ஒருவரை அழைக்க அனுமதி கேட்டபோது மறுத்தது வியப்புக்குரியது.

இலங்கை அணியின் மத்தியூசை மீள் அழைத்தது குறித்து பயிற்றுவிப்பாளர் அன்டி ஃபிளவர் உள்ளிட்ட பலரும் தெரிவித்த எதிர்மறை விமர்சனங்களும் வெற்றியினை நோக்காகக் கொண்ட அழுத்தங்களுமே இத்தனை காரணங்களாக இருக்கலாம்.

ஸ்மித் தனித்து நின்று வெற்றியை தட்டிப் பறித்துவிடுவார் என்பதினாலேயே அவருக்காக இன்னொருவர் ஓடும் வாய்ப்பை ஸ்ட்ரோஸ் வழங்கவில்லை என்று தெளிவாகவே தெரிகிறது..

"தசைப் பிடிப்புக்களுக்கு ரன்னர் வழங்கப் படுவதில்லை.. முற்றுப் புள்ளி" என்று மிகத் தீர்மானமாக முடித்துவிட்டார் ஸ்ட்ரோஸ்..


எனினும் இலங்கை அணியுடனான போட்டியின் பின் மனதில் உயரத்தில் வைத்திருந்த ஸ்ட்ரோஸ் இப்போது தடாலெனக் கீழே விழுந்து விட்டார்.

எனினும் ஸ்மித்தின் தனித்த போராட்டம் இன்னும் கண்ணுக்குள் நிழலாடுகிறது..தலைவனுக்குரிய ஒரு இன்னிங்க்ஸ்.

எனினும் தென் ஆபிரிக்காவின் துரதிர்ஷ்டம் இன்னும் துரத்துகிறது.

தென் ஆபிரிக்கா இன்னும் 13 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்றிருந்தால் நிகர ஓட்ட சராசரி வீதத்தின் (net run rate)அடிப்படியில் வாய்ப்பு இருந்திருக்கும்.. எனினும் இப்போது தென் ஆபிரிக்கா சகல வாய்ப்புக்களையும் இழந்து வெளியேறியுள்ளது.

இப்போது இலங்கை,இந்தியாவின் வாய்ப்புக்களைப் பார்க்கலாம்..

நாளை நியூ சீலாந்தை இங்கிலாந்து வென்றால் இலங்கை அரை இறுதி செல்லும்..
இலங்கை ரசிகர்கள் எல்லா தெய்வங்களுக்குமாக இங்கிலாந்தின் வெற்றிக்காகவும் வீரர்களுக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார் என்பது மட்டும் உறுதி..

(இப்படித் தான் ஒழுங்கா விளையாடாவிட்டால் யாரையெல்லாமோ நம்பி இருக்க வேண்டும்..)

நியூ சீலாந்து நாளை வென்றால் இலங்கைக்கு ஆப்பு..

மறுபக்கம் இந்தியா இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றே ஆகவேண்டும்..

இந்தப் பலவீனமான பந்துவீச்சாளர்களோடு மேற்கிந்தியத் தீவுகளை வெல்லவும் சிரமப்படும் என்று நினைக்கத் தோன்றுகிறது.அதேவேளை ஆஸ்திரேலியா தனது இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்கவும் வேண்டும்..

அத்துடன் இந்தியா பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறவும் வேண்டும்.. ஆஸ்திரேலியா மோசமாகத் தோற்கவும் வேண்டும்.. (நடக்குமா?)
பாகிஸ்தானை நம்பி இந்தியா.. என்ன கொடுமை இது..

பார்க்கும்போது, இலங்கையை விட இந்தியாவுக்கு வாய்ப்புக்கள் மிக மிக அருகியுள்ளதாகவே தென்படுகிறது..

எனினும் கிரிக்கெட்டில் எதைத் தான் எதிர்வுகூற முடியும்?

இங்கிலாந்தின் இளைய அணியின் முயற்சியும், அசராத அபார ஆட்டமும், கோலிங்க்வூடும், மொரகனும், இறுதியாக ஷாவும் ஆடிய ஆட்டங்கள் அவர்களுக்கு கிண்ணத்தை வழங்கினாலும் ஆச்சரியமில்லை. அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வரிசை, குறிப்பாக பொன்டிங், ஹசி ஆகியோர் அதிரடியாக ஆடுவது எதிரணிகளுக்கு ஆபத்து அறிகுறி.. பாகிஸ்தானும் புத்துணர்ச்சியோடு நிற்கிறது..

நான்(எம்மில் பலரும் தான்) போட்ட கணக்குகள் பலவும் தப்புக் கணக்குகள் ஆயிப் போயினவே..

ஆனாலும் ஒரு சந்தோசம்.. அறை(கன்னத்தில் அடிப்பதை சொன்னேன்),வம்பு,விவகார புகழ் ஹர்பஜனுக்கு வருவோர்,போவோர் எல்லாம் தாக்கினாங்க பாருங்க.. என்ன ஒரு திருப்தி..

பார்க்கலாம்.. இங்கிலாந்து,பாகிஸ்தானோடு சேர்ந்து கொள்ளப் போகின்ற நாடுகள், அவுஸ்திரேலியா, இலங்கையா.. நியூ சீலாந்து, இந்தியாவா என்று..

September 28, 2009

காணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழகு


காணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழகு.

மற்றுமொரு தொடர்பதிவு

சில நண்பர்களின் பதிவுகளைப் பார்த்தவுடனேயே எழுத ஆசைப்பட்டேன் - யாரும் அழைக்காமலேயே தொடர்பதிவில் குதிக்கலாம் என்று நினைத்தவேளை தம்பி அஷோக்பரன் அழைத்திருக்கிறார்.


அவரது அழைப்புக்கு நன்றி.

இதேவேளை நேற்றிரவு நண்பர் பிரபாவின் (விழியும் செவியும்) பின்னூட்டமும்,மின்னஞ்சலும் கிடைத்தது..அவரும் என்னை இதே தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார்.
அவருக்கும் நன்றிகள்..

நான்கு விடயம் பற்றியும் மனம் திறக்கிறேன்.


கடவுள்

சிறுவயதில் பழகி இன்றும் தொடரும் பழக்கங்களான பிள்ளையார் சுழி போடுதல், வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது விபூதி அணிதல் போன்ற விடயங்களில் தொடர்ந்தாலும் கடவுள் மீதான நம்பிக்கை குறைந்தோ – அற்றோ போயிருக்கிறது.

முன்பு அம்மாவுக்காகவும், பின்னர் மனைவிக்காகவும் அவர்களுடன் கோயில் போனாலும், ஒன்றுமே இயலாத பட்சத்தில் 'கடவுளே' என்று சொல்வதும் இப்போது குறைந்துவிட்டது.

தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த எந்தவொரு சம்பவமும் இந்தக் கடவுள் மறுப்புக்குக் காரணம் இல்லை.

நாட்டிலே எம் மக்கள் பட்ட துன்பங்கள் பார்த்தும், உலகம் முழுவதும் இத்தனை இலட்சம் மக்கள் அழியும் - அல்லலுறும் நேரம் காக்காத – அருள் புரியாத – ரட்சிக்காத கடவுள் எதற்கு வேண்டும்?

அலங்காரத்துக்கும், ஆராதனைக்கும் மட்டும் கடவுளா?

சடங்குகள், சம்பிரதாயங்கள், சமயங்களுக்காக கடவுள் தேவையில்லை.

பார்க்க என் முன்னைய பதிவு.


யாருக்கும் தீங்கு நினையா மனதும், நேர்மையும், தன்னம்பிக்கையுமிருந்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கு மேலே..காதல்

வாழ்க்கை, கவிதை, இலக்கியம், சினிமா பாடல்களில் என்று அனைத்தையுமே இயக்குகின்ற ஒரு கம்பசூத்திரம்!

எனக்கு 'காதல்' என்பது ஒரு கலவையுணர்வு!

சிலநேரத்தில் மனதை இன்பமாக நோகச்செய்யும் ஒரு புனிதவலி.
சிலநேரம் காமயாத்திரைக்கான தேடல் வழி!

கடற்கரைகள், திரையரங்குகளில் - பார்க்க அருவருப்பான அரையிருட்டுப் பொழுதுபோக்கு – பார்க்கும் வேறுசில இடங்களில் வேடிக்கை, டைம்பாசிங், வீண் வேலை, பணவிரயம், விடலை விளையாட்டு

மிக இளம் பராயத்தில் காதல்(கள்) எனக்குள்ளும் வந்து கடந்து போனதுண்டு!

அது காதலா – Crush/infatuationஆ என பகுத்துணர விருப்பமில்லை. அதில் விடயமுமில்லை.

ஒரு வாழ்ககை – ஒரு காதல் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

காதலை ரசிக்கிறேன்...

திரையிலும், கதைகளிலும், கவிதையிலும், பாடலிலும் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் அரிதான சில நிஜக் காதல்களை-
மனைவியைக் காதலித்தபடி – காதலைக் கலவையாக காதலிக்கிறேன்.


பணம்

உலகையே ஆட்டிவைப்பது – அனைத்துமே இதனை மையப்படுத்தியே இயங்குவதாக எண்ணம் எனக்குண்டு.

எல்லாபாதையும் பணம் நோக்கியே...

தனிமனித வாழ்க்கையில் 19 வயதளவில் ஆரம்பிக்கும் பணம் ஈட்டும் ஓட்டம் - களைத்து, தளர்ந்து, அடங்கிப் போகும் வரை பல்வேறு பாதைகளிலும் ஓடப்பட்ட வண்ணமேயுள்ளது.

பணத்தைவிட மனம், குணமே பெரிது என்று பொய்யாக உரைத்து 'நல்லவன்' என்று பெயரெடுக்க விருப்பமில்லை.

அன்பு, நட்பு என்று உணர்வுகளை மிகப் பெரிதாக மதித்தாலும் பணம் என்பதன் மகத்துவம், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளேன்.

வேலைசெய்ய ஆரம்பித்த இளமையின் முதற்கட்டத்தில் பணம் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. வரவு ஸ்ரீ செலவு என்பதே என் கணக்கு.

5, 6 வருடங்களில், 20களின் மத்தியில் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்தால், சேமிப்பு என்று பெரிதாய் எதுவுமில்லை – நம்பிக் கடன் கொடுத்த நண்பர்கள் தந்த ஏமாற்றம் - அப்பா, அம்மாவின் அவசரத் தேவைகளுக்கு உதவமுடியாமல் போனது – போன்ற நிகழ்வுகளால் உத்வேசமாக – மிக உத்வேகமாக பணத்தைத் துரத்தி – நான் நினைத்ததை அடைந்தேன்.

இன்று வரை தளராத ஓட்டம் - தன்னம்பிக்கையுடனும் சரியான வழியிலும் - யாரையும் வஞ்சகமாக வீழ்த்தாமல் பயணித்துக்கொண்டே இருக்கிறது.

இப்போது மகிழ்ச்சியாக, திருப்தியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தாலும் எதிர்காலத் தேவைகள் கருதி தேடல் இன்னமும் தொடர்கிறது.

ஓடும் வரை ஓட்டம்
உழைக்கும் வரை பணம்

எனினும் எனது ஒரு கொள்கையில் மிகத் தெளிவாக உள்ளேன். எவ்வளவு பணம் தந்தாலும் குடும்பத்துக்கென ஒதுக்கிய நேரத்தில் குறை வைக்காமை. சில கொள்கைகள், எனக்கு சரியெனப்படும் விடயங்களை விட்டுக்கொடுக்காமை.அழகு

அழகு அளவீடுகளிலும் மனவோட்டங்களிலும் தங்கியுள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகாய்த் தெரியும் - ரசனைகள் மாறுபாட்டின் தன்மையில் அழகு மாறுபடும்.

எல்லோருக்குமே பிடித்த, எல்லோருமே ஏற்கின்ற அழகுகளும் இல்லாமலில்லை.

பிஞ்சுக் குழந்தையின் அழகு முகம்
புன்னகைப் பெண்கள்
கடற்கரை சூரியோதயம்
காலைநேர மலையகப் பசுமை
பூக்களில் உறங்கும் பனித்துளி

இவை அனைவருமே ரசிக்கின்ற சில அழகுகள்....

என்னைப் பொறுத்தவரை அழகு என்பது மனதிலும், ரசிக்கின்ற சூழ்நிலையிலும் கூட இருக்கின்றது.

கடும் பசி வேளையிலோ, அடக்க முடியாத துன்ப நிலையிலோ அழகை ரசிக்க முடியுமா?

மனமும் பார்வையும் அழகாயிருந்தால் பார்க்கும் அனைத்துமே அழகுதான்!

***************************


இந்தத் தொடர் பதிவு சுவாரஸ்யமானது...
எனினும் நான் யாரையும் தனியாகப் பெயரிட்டு அழைக்கப் போவதில்லை..
என் இந்தப் பதிவை வாசிக்க இருக்கின்ற எந்த நண்பர்களும் பதிவிடலாம்.. என்னிடமிருந்து சங்கிலியைத் தொடர்வதாக சொன்னால் எனக்கு அதில் மகிழ்ச்சி.. ;)


பிற்சேர்க்கை= ராமாவின் கேள்விக்கான பதில்.. கடவுளின் தலைப்பின் கீழ் இடப்பட்டுள்ள படம், கடவுள் நம்பிக்கையற்றோர் அதிகமாகப் பயன்படுத்தும் சின்னங்களில் ஒன்று.
September 26, 2009

ஸ்ட்ரோசின் கண்ணியமும், சங்காவின் கெட்ட செயலும்.. Sri lanka vs England


சாம்பியன்ஸ் கிண்ண ஆரம்பப்போட்டியில் ஓட்டங்கள் குவிக்கக்கூடிய ஒரு திடலில் சொந்த நாடு தென்னாபிரிக்காவைப் பந்தாடிய இலங்கை அணிக்கு நேற்றைய தினம் ஜொஹனர்ஸ் பேர்க்கின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் காத்திருந்தது அதிர்ச்சி!

பலவீனமான அணி என்று இங்கிலாந்தைப் பலபேர் (அடியேனும் சேர்த்து) குறிப்பிட்டபோதிலும், இலங்கை அணியின் பயிற்றுனர் ட்ரெவர் பேய்லிஸ் - இங்கிலாந்து அணியை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று சொன்னதன் அர்த்தம் நேற்றிரவு புரிந்தது.

நாணயச் சுழற்சியின் வெற்றியும் ஆடுகள சாதகத் தன்மையும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களை unplayable champion bowlers ஆக மாற்றியிருந்தது.

அதிலும் ஜிம்மி அன்டர்சன் - வாய்ப்பேயில்லை – அப்படியொரு துல்லியம். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தூண்கள் நான்கும் 17 ஓட்டங்களுக்குள் சாய்ந்தபோது 200 என்பதே சாத்தியமில்லாத ஒன்றாகவே தென்பட்டது.


ஆனால் சமரவீர, கண்டாம்பி, மத்தியூசின் பொறுமையான போராட்டமிக்க துடுப்பாட்டமும். பின்னர் முரளியின் அதிரடியும் 200 ஓட்டங்களைத் தாண்டச் செய்தது.

இலங்கை அணிக்கு மத்தியூஸ் ஒரு நல்ல சகலதுறை வீரராகக் கிடைத்திருப்பதுபோல – மத்தியவரிசையைப் பலமாக்க ஒரு வீரரைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் (சிறிதுகாலம் சாமரசில்வா இருந்தார்) கண்டாம்பி வந்துள்ளார்.

இந்தியாவுடன் அதிரடிக்குப் பிறகு, நேற்றைய ஆட்டம் அவரது முதிர்ச்சியைக் கூட்டுகிறது.

ஏஞ்சலோ மத்தியூஸ் இரண்டாவது ஓட்டமொன்றைப் பெற முனைந்த வேளையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கிறார். பந்துவீச்சாளர் ஒனியன்ஸ் வழி மறித்ததினாலேயே ஓடமுடியாமல் போனது தெரிந்தும் நடுவர் ஆட்டமிழப்பு வழங்க, புகைந்து கொண்டே பவிலியன் திரும்புகிறார் மத்தியூஸ்.

எனினும் தன் வீரர் மீதும் தவறிருப்பதை உணர்ந்து கொண்ட இங்கிலாந்து அணியின் தலைவர் அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் உடனடியாக மத்தியூஸை மீள அழைத்தார்.

ஏனைய எந்தவொரு அணித்தலைவராவது இவ்வாறு நடந்திருப்பார்களா என்றால் சந்தேகமே!

தன்னை மீண்டும் ஒருதரம் கனவானாக நிரூபித்திருக்கும் ஸ்ட்ரோஸ் கிரிக்கெட் பணமயமாக்கப்பட்டு வெற்றிகளை நோக்கியதாக மட்டுமே அமைந்திருந்தாலும் sportsmanship இன்னும் சாகவில்லை என்றும் காட்டியுள்ளார்.


ஏற்கெனவே அவுஸ்திரேலியா அணியுடனான ஆஷஸ் தொடரில் தனது கண்ணியத் தன்மையை வெளிப்படுத்திருந்த ஸ்ட்ரோசை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ..

ஆனாலும் பரிதாபம் வந்த மத்தியூஸ் ஒரு சில பந்துகளிலேயே ஆட்டமிழந்தார்.. அப்போது ஸ்ட்ரோசின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டுமே.. அது ஒரு சிறுகதை..

ஆனால் இப்படிப் பட்ட கண்ணியமான ஸ்ட்ரோஸ் துடுப்பெடுத்தாடும் பொது ஆட்டமிழப்பில்லாத பந்துக்கும் ஆட்டமிழப்பு கேட்ட சங்கக்காராவை என்ன சொல்வது?

கண்ட கண்ட பந்துகளுக்கும் தேவையில்லாமலும் ஆட்டமிழப்புக்களை கேட்டு கண்ணியமானவர் என்று கருதப்பட்டு வந்த தனது பெயரை நேற்று களங்கப்படுத்திக் கொண்டார்.
தலைவராக வந்த பின்னரே இவர் இவ்வாறு மோசமாக மாறியிருக்கிறார் என நினைக்கிறேன்..

இதிலும் நேர்முக வர்ணனையாளர் ஒருவர் appealing team ஒன்று அறிவிக்கப்பட்டால் அதன் தலைவராகவும் சங்கக்காரவே இருப்பார் என்று சொன்னது மகா கேவலம்.

குலசேகர இலங்கை அணிக்காக ஆரம்பத்தில் சிறப்பாகப் பந்துவீசினாலும், மாலிங்க,மத்தியூஸ் ஆகியோர் இடையிடையே சிறப்பாகப் பந்து வீசினாலும் கூட, முரளி,மென்டிசினால் நேற்றைய ஆடுகளத்தில் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலைக் கொடுக்க முடியவில்லை.

முரளியை அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் எல்லா அணிகளுமே இலகுவாக விளையாடுவது உறுத்துகிற ஒருவிடயம்.

திட்டமிட்டு பொறுமையாக ஆடிய இங்கிலாந்து எதிர்பார்த்ததை விட இலகுவாக வெற்றியைப் பெற்றது.

கோலிங்க்வூட்டின் ஆக்ரோஷம், ஷாவின் பொறுமை, மோர்கனின் நேர்த்தியான நிதானமான துடுப்பாட்டம் என்று இங்கிலாந்து நேற்றைய தினம் உண்மையில் ஒரு வெற்றிகர அணி என்று காட்டியது..

நேற்றைய போட்டியில் கவனித்த இன்னும் சில விஷயங்கள்.. எவ்வளவு தான் ஆடுகளம் ஸ்விங்,மேலெழும் தன்மைக்கு உதவினாலும் பந்தை பலமாக ,டைமிங்குடன் அடித்தால் இலகுவாக சிக்சர்களைப் பெற முடிந்தது.. கோளிங்க்வூடும்,ஷாவும், ஏன் குலசேகர, முரளியும் கூட அலட்டிக் கொள்ளாமல் சிக்சர் அடித்திருந்தனர்.. மைதானம் ஒப்பீட்டளவில் சிறியது.. தென் ஆபிரிக்கா-ஆஸ்திரேலியா உலக சாதனை ஓட்டங்களைக் குவித்ததும் இதே மைதானத்தில் தான். இலங்கை அணி இன்னொரு வேகப் பந்துவீச்சாளரை எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்..
இப்போது பிரிவு B ஒரு குழப்பமான ஒன்றாக மாறியுள்ளது.. எல்லா அணிகளுக்குமே வாய்ப்பு..

நாளை இலங்கை - நியூ சீலாந்து அணிகள் மோதும் போட்டி முடிவொன்றைத் தரும்.. (இலங்கை அணி மறுபடி என் மூக்கை உடைத்துவிடுமோ?? ஓவர் பில்ட் அப் உடம்புக்காகாது என்று நிறையப் பேர் சொன்னாங்களே.. கேட்டியா லோஷன்?)

இப்போது ஆஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை பந்தாடிக் கொண்டுள்ளது.. (ஆரம்பத்தில் தடுமாறினாலும்..)

இன்னும் சில நிமிடங்களில் பாகிஸ்தான் -இந்தியா மினி கிரிக்கெட் யுத்தமே நடைபெறப் போகிறது.. இது தான் இம்முறை சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் முக்கியமான போட்டியென்றால் அது நியாயமே..

விறுவிறுப்பாக ரசிப்போம்.. இந்தியாவும் சேவாக்,யுவராஜ் இல்லாமல் நொண்டியடிக்கிறது.. (இவங்களும் மூக்கை உடைச்சிருவாங்க போல தெரியுதே.. )

கிரிக்கெட் என்றால் இப்படித்தான்.. ;)


September 24, 2009

விஜய் நடிச்சா தாங்க மாட்டோம்?????
இளைய தளபதி,நாளைய இந்தியப் பிரதமர்(எதை யோசிச்சாலும் பெரிசா யோசிக்கனுங்க்னா..) விஜய் அவர்கள்(மரியாதைங்க்னா) நடிக்கும் வேட்டைக்காரன் பாடல்கள் மிக ஆர்ப்பாட்டமாக நேற்றைய தினம் உலகம் முழுதும் வெளியாகின..


விஜய் அன்டனி இசை..

ஐந்து பாடல்கள்

கபிலன் (விஜயின் ஆஸ்தான அறிமுகப் பாடலாசிரியர்) 3 பாடல்களும், விவேகா,அண்ணாமலை ஆகியோர் தல ஒவ்வொரு பாடல்களையும் எழுதியுள்ளனர்.


இதில், விவேகா எழுதிய சின்னத் தாமரை என்ற பாடலின் இசை உருவாக்கம், மெட்டமைப்பு, ப்ரோக்ராமிங் போன்றவற்றை செய்திருப்பவர் இலங்கையின் பிரபல சிங்கள இசைக் கலைஞரான ஹிப் ஹொப் புகழ் இராஜ்.

க்ரிஷ்,சுசித்ரா (கந்தசாமியின் சுப்புலட்சுமி குரலுக்கு சொந்தக்காரி) பாடியுள்ள சின்னத் தாமரை பாடலில் ஆங்கில ராப் பாடியுள்ளவர் இலங்கையில் இளவட்டங்கள் நன்கு அறிந்த BK(Bone Killa). இவர் வேறு யாருமில்லை.. இலங்கையின் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணியின் புதல்வர்.


தமிழ் ராப் பாடியுள்ளவர் தினேஷ் கனகரத்தினம். இலங்கையில் நிறையப் பாடல்கள் (அதிகமாக ராப்,ஹிப் ஹொப்) மூலமாகவும், தா.நா.அ.ல (Taxi TN) படத்தின் நவீன ஆத்திசூடி மூலமாக தமிழகத்திலும் தெரிந்தவர் இவர்.

(நவீன ஆத்திசூடி எல்லாப் பக்கமும் கிழி வாங்கியது வேறு கதை..)

சின்னத் தாமரை கேட்க...இதன் ஒரிஜினலான சிங்களப் பாடல் இதோ..

புலி உறுமுது என்று கபிலன் வழமையான விஜய்க்கான படங்களில் வரும் அறிமுகப் பாடலை எழுதியிருக்கிறார்..
காது இரத்தம் வடிக்குமளவுக்கு வரிகளுடன் அனந்து, மகேஷ் என்று இரண்டு பேர் கத்தி தொலைக்கிறார்கள்..

பாடலின் ஆரம்பத்திலேயே ஓம் ஷாந்தி.. இடை நடுவே சமஸ்கிருத மந்திரங்கள்..

போதாக்குறைக்கு வேட்டைக்காரன் வாரதப் பார்த்து புலி உறுமுதாம், நரி ஓடுதாம்,கிலி பிறக்குதாம், குலை நடுங்குதாம்...

உண்மையில் கபிலன் விஜயின் புகழ்பாடி இருக்கிறாரா? இல்லை நக்கலிலேயே விஜயை நாறடிக்கிராரா?

பாடலின் இடையே
வேட்டைக்காரன் வரதப் பார்த்து.... நிக்காம ஓடு ஓடு ஓடு என்று துரத்துகிறார்கள்..
அவங்களுக்கே புரிஞ்சு போச்சோ?

என்ன கொடுமையப்பா.. அந்தக் கொடுமைய முடிஞ்சா நீங்களும் கீழே சொடுக்கி கேளுங்களேன்.. சிரிப்பு தாங்க முடியாம இருக்கும்..


இன்னொரு பாடல் மகா மெகா கொடுமை..

நானடிச்சா தாங்க மாட்டாய்.. நாலுமாதம் தூங்க மாட்டாய்.. இது தான் கபிலன் எழுதிய ஆரம்ப வரிகள்..

ஐயோ அம்மா.. கேட்டு முடிக்க முதல் இரத்தம் கக்கி செத்துவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது..

எனக்கொரு பெரிய சந்தேகம்..
கபிலன் எழுதியது "நான் டிச்சா தாங்க மாட்டேயா?"
அல்லது
"நான் நடிச்சா தாங்க மாட்டேயா?"

கபிலன் எதோ உள்குத்து வச்சுகிட்டே எல்லாப் பாடல்களையும் எழுதியிருப்பதாகப் படுகிறது..பழைய படங்களின் சம்பளப் பாக்கி ஏதாவது கொடுபடவில்லையோ?

போதாக்குறைக்கு இந்தப் பாட்டுக்கு இளைய இளைய தளபதி(அதாங்க விஜய் மகன் சஞ்சய்) ஆடுகிறாராம்.. அடுத்த வாரிசு?கேட்ட ஐந்து பாடல்களில் 'அட' சொல்ல வைத்த பாடல்.. காரிகாலன் கால்..

இலக்கிய சுவையும் காதல் குறும்பும் கலந்து கபிலன் எழுதியிருக்கிறார்.. மெட்டமைப்பில் ஒரு புதுமையும், சுவையும் தெரிகிறது..

ரசனையான வரிகளுக்கு புதிய குரல்களும்.. மறுபடி மறுபடி கேட்கலாம்..


அண்ணாமலை என்பவர் எழுதிய உச்சிமண்டை சுர்ருங்குது.. (வரிகளைப் பாருங்க.. இதுக்குப் பிறகும் 'வேட்டைக்காரன்' பார்க்கிற ஐடியா இருக்கு???)

வழமையான விஜய் அன்டனி சரக்கு இது..

தாயார் ஷோபா சேகர், கர்நாடக சங்கீதப் பாடகி சாருலதா மணி ஆகியோரும் இந்தப் பாடலில் சேர்ந்து தாளித்திருக்கிறார்கள்..
பாடல்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ, வேட்டைக்காரன் இப்படித் தான் இருப்பான் என்று புரிஞ்சுகிட்டீங்களா?

பாவம் இயக்குனர்.. விஜய் ரசிகர்கள் பப்பாவம்..

பாடல்கள் கேட்டு கடுப்பாகிப் போன உங்களுக்காக கொஞ்சமாவது கூலாக.. வேட்டைக்காரி.. அதாங்க படத்தின் கதாநாயகி அனுஷ்கா..

இப்ப திருப்தியா?

பதிவை ஏற்றுவோம் என்று இருக்க மீண்டும் வானொலியில் ஒலிக்கிறது..

"நான் நடிச்சா தாங்க மாட்டே..".. oh sorry...

" நான் அடிச்சா தாங்க மாட்டே"


September 23, 2009

சாம்பியன்ஸ் கிண்ணம் - அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பலவீனங்கள்..

ICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009 பற்றி முன்னைய பதிவில் "ICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை" பார்த்தோம்..

இப்போது அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பலவீனங்கள் பற்றிக் கொஞ்சம் சுருக்கம்,கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்..
நேற்றைய வெற்றி பலராலும் முதல் மூன்று வாய்ப்புள்ள அணிகளுள் (தென் ஆபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா) இல்லாமல் இருந்த இலங்கையை இப்போது hot favouritesஆக மாற்றியுள்ளது என்பது அதிசயமே..

எட்டு அணிகளையும் எட்டிப் பார்க்கலாம்.. வாங்க..

பிரிவு A


மேற்கிந்தியத்தீவுகள்

மேற்கிந்தியத்தீவுகளை யாராவது அதிர்ஷ்ட தேவதை ஆசிர்வதித்தால் மட்டுமே அரையிறுதி பற்றி சிந்திக்கலாம்.

டரன் சமி, டெர்ரி டௌலின் போன்றோர் பிரகாசிக்கக் கூடிய வீரர்கள்.


பாகிஸ்தான்

கலைஞரின் அறிக்கைகள் போல, இந்திய அரசியல்போல, கண்டியின் காலநிலைபோல எளிதில் ஊகிக்கமுடியாத அணி!

இலங்கையில் வைத்து கடைசி இரு ஒருநாள் போட்டிகளை வெற்றி கொண்டதைப்போல, தொடர்ச்சியாக எல்லாப் போட்டிகளிலும் பெறுபேறுகள் காட்ட ஏனோ முடியாமலுள்ளது. (இன்னமும் உள் வீட்டு சிக்கல்களா?)

கம்ரன் அக்மல், இம்ரான் நசீர், ஹொயிப் மாலிக், யூனிஸ்கான், யூசுஃப், சயீட் அஃப்ரிடி, மிஸ்பா உல் ஹக், பவாட் அலாம், உமர் அக்மல் என்று நீண்ட பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தாலும், தடுமாறும் பந்து வீச்சும், மோசமான களத்தடுப்பும் பாகிஸ்தானை அரையிறுதிக்கு செல்லவிடாத காரணிகளாகத் தெரிகின்றன. மொஹமட் ஆசிப், உமர் குல், நவீட் உல் ஹசன் மூவருமே பிரகாசித்தால் வாய்ப்புண்டு.

உமர் அக்மல், உமர் குல் பிரகாசிக்கக்கூடியவர்கள்.


இந்தியா

சேவாக், சாஹிர்கான் இல்லாத வெற்றிடங்கள் நிரப்பப்படமுடியாத ஓட்டைகள். எனினும் அரையிறுதி வாய்ப்பு உறுதியான அணிகளுள் ஒன்று.

கம்பீர் பூரண சுகத்துடன் அணிக்குள் வந்தால் - Form இலுள்ள சச்சின், தோனி, யுவராஜ் எனப் பட்டைகளப்பும் அணி.

ரெய்னா டிராவிட்டை நம்பியிருக்கலாம்...

நேஹ்ரா, ஹர்பஜன் தவிர அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் என்றால் அது யுவராஜ் சிங் தான் எனுமளவுக்கு பலவீனமான பந்துவீச்சுத்தான் கொஞ்சம் உறுத்துகிறது.

தோனி மனம் வைத்தால் 2007 T 20 மகிழ்ச்சியை மீண்டும் பார்க்கலாம் எனுமளவுக்கு பலரால் தூக்கிப் பிடிக்கப்பட்டாலும், இன்னும் சச்சின் இல்லையேல் அணியில்லை (அடுத்தபடியாக யுவராஜ்) எனும் நிலையிருக்கிறது.

சச்சின், யுவராஜ், டிராவிட், தோனி என்று நால்வரையும் நம்பியிருக்கலாம்.அவுஸ்திரேலியா

எப்படி இருந்த அணி?...
முன்புபோல Hot Favourites என்று முத்திரை குத்த முடியாவிட்டாலும் இங்கிலாந்தை 6 -1 என்று துவைத்தெடுத்த துணிச்சலோடும் எல்லா வீரர்களும் formக்குத் திரும்பிய மகிழ்ச்சியோடு குதித்திருக்கிறது.

பொன்டிங், கிளார்க், ஜோன்சன், லீ இந்த நான்கு பேரும் வெற்றித் தினவெடுத்து நிற்கின்றனர் என்றால்,

கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட புதியவர்களை விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன், கலும் பெர்குசன் மற்றும் புதிய அவதாரமெடுத்துள்ள கமரான் வைட் ஆகியோரும் நம்பிக்கையளிக்கின்றனர்.

ஆடுகளங்களும் சாதகமானவை என்பதனால் அரையிறுதி நிச்சயம் என்றே தோன்றுகின்றது.

பெர்குசன், ஜோன்சன், வைட், ஷேன் வொட்சன், லீ - இந்தப் பஞ்ச பாண்டவரைப் பார்த்திருங்கள்.பிரிவு B


இலங்கை

வெளிநாட்டு மைதானங்களில் வெற்றிகளை சுவைக்கும் நம்பிக்கையை சங்கக்காரவின் தலைமையில் மேலும் ஊட்டும் துணிச்சல் கொண்ட அணி. பாகிஸ்தான் அணிபோலவே சிலவேளை நம்பிக்கையில் மண்ணைப் போட்டுவிடும்.

96இலிருந்து ஜெயசூரியவை நம்பியிருந்தது போல, இப்போது அவருடன் சேர்த்து /அவரில்லாவிடில் டில்ஷானை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

அண்மைக்காலத்தில் தேடிக்கொண்டிருந்த – அர்ஜூன. அரவிந்த காலத்திலிருந்த பலமான, நம்பகமான மத்திய வரிசை வாய்த்திருக்கிறது.

பல்வகைமை கொண்ட பயமுறுத்தும் பந்துவீச்சாளர்களும் (முரளி, மென்டிஸ், மாலிங்க, குலசேகர, துஷார, மத்தியூஸ், ஜெயசூரிய) துடிப்பான களத்தடுப்பும் அரையிறுதி தாண்டி இறுதிக்கும் கொண்டு செல்லலாம்.

நேற்றைய வெற்றி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்று நம்புகிறேன்.

தென்னாபிரிக்க ஆடுகளங்களில் சறுக்கி வந்த மகேலவும், சங்காவும் நேற்று அபாரமான அரைச்சதங்கள் மூலம் இலங்கை வென்றது நம்பிக்கைகளையும், வாய்ப்புக்களையும் அதிகப்படுத்தியுள்ளது.

சங்கக்கார, டில்ஷான். மென்டிஸ் பிரகாசிப்பார்கள்.தென்னாபிரிக்கா

Chokers - முக்கியமான தருணங்களில் சோர்ந்து – தோற்று விடுவோர் என்பதை '92 உலகக்கிண்ணம் முதல் நிரூபித்து வருபவர்கள். சொந்த செலவிலே சூனியம் வைக்கும் அணி.

சொந்த மண்ணில் இந்த முறை இதை மாற்றியமைத்து வெற்றிவாகை சூடுவோம் என்று சூளுரைத்துக் களம் புகுந்தது.

எனினும் நேற்று இலங்கைக்கெதிராகப் பெற்ற தோல்வியினால் ஒருநாள் தரப்படுத்தலில் பெற்றிருந்த முதலாமிடத்தையும் இழந்துவிட்டு தடுமாறுகிறது.

ஸ்மித் கிப்ஸ் (குணமடைந்து அடுத்த போட்டிக்கு வந்தால்), கலிஸ், டிவில்லியர்ஸ், டுமினி, பௌச்சர். மோர்க்கல் என்று நீண்ட துடுப்பாட்ட வரிசையும், பலமான நிறைவான பந்துவீச்சாளர்களும், துடிப்பான களத்தடுப்பும், பூரண சொந்த நாட்டு ரசிகர் ஆதரவும் இருந்தும் கூட துரதிஷ்டமும் பதற்றமும் துரத்துகிறது.

அரையிறுதிக்குள் எப்படியாவது வந்துவிடுவார்கள்...
மீதி அவர்களது கையிலேயே....

ஸ்மித், ஸ்டெயின், கலிஸ், டிவில்லியர்ஸ் - கவனித்துப் பார்க்கலாம்.இங்கிலாந்து

இவர்களுக்கு ஏன் ஒருநாள் போட்டிகள்?
பிளின்டொப், பீட்டர்சன் இல்லாமல் என்ன செய்யப்போகிறார்கள்?

யுவராஜூம் இந்தியாவும் இந்தப்பிரிவில் இல்லை என்பதில் ஸ்டுவர்ட் புரோட் குழுவினர் நிம்மதியடையலாம். முதல் சுற்றில் ஒரு போட்டியில் வென்றாலே பெரிய அதிசயம்.

ஜோ டென்லி, லூக் ரைட் பிரகாசிக்கலாம்.நியூசிலாந்து

என்னைப் பொறுத்தவரை இந்த சாம்பியன் கிண்ணத்தின் கறுப்புக்குதிரைகள் இவர்கள் தான்!

ஆடுகளங்களின் சாதகமும், இளமைத்துடிப்பும் சில பலமான அணிகளை அதிர்ச்சிக்குள்ளாகக்கூடும்.

ஷேன் பொண்ட்டின் மீள்வருகை உற்சாகத்தை அதிகரித்துள்ளது. சகலதுறைவீரர்களே இந்த அணியின் பலம்.

ஜெசி ரைடர், நீல் புரூம், ஷேன் பொண்ட் - கலக்கலாம்.


^^^^^^^^^^^^^^^^^^


ஏதோ ஒரு அணி இரண்டாவது தடவையாக ICC சாம்பியன்ஸ் கிண்ணத்தைத் தனதாக்கப் போகின்றது என்பது உறுதி!

இறுதிப்போட்டியில் அண்ணனும் தம்பியும் (இந்தியா - இலங்கை) மோதலாம்...
இல்லையேல்...

இம்முறை சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரை ஆரம்பித்து வைத்த இரு அணிகளே இறுதிப்போட்டியில் மீண்டும் சந்திக்கலாம்.

பொன்டிங்கின் அணி இம்மூவரில் ஒருவரை இறுதிப்போட்டியில் சந்திக்கவும் வாய்ப்புக்கள் உண்டு!

நீங்க என்ன சொல்றீங்க?


ICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வைசர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த மினி உலகக் கிண்ணம் என்றும் அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகள் - ICC CHAMPIONS TROPHY நேற்றைய தினம் தென்னாபிரிக்காவிலே ஆரம்பமாகியுள்ளன.

நேற்று மாலை 6மணிக்கு முதலாவது போட்டி (இலங்கை எதிர் தென் ஆபிரிக்கா) ஆரம்பமாகுமுன் இந்தப் பதிவை ஏற்றவேண்டும் என்று முயன்ற போதும், அலுவலக வேலைகள், ஆணி பிடுங்கல்களினால் - முதலாவது போட்டியைப் பார்த்துக்கொண்டே பதிவிட ஆரம்பித்து, இரண்டாவது போட்டி ஆரம்பிப்பதற்கு முதல் பதிவேற்றுகிறேன்.

இந்தியக் கிரிக்கெட் சபையின் தலைகளில் ஒருவரான ஜக்மோகன் டால்மியா, ICC தலைவராக ஆரம்பித்த ஒரு எண்ணக்கருத்துத் தான் இந்த சாம்பியன்ஸ் கிண்ணம். வளர்ந்து வரும் நாடுகளில் கிரிக்கெட்டைப் பரப்பவும், உலகக்கிண்ணங்களிடையே ICCக்கு நிதி திரட்டவுமென முதலில் 98ல் பங்களாதேஷிலும், 2001இல் கென்யாவிலும் மினி உலகக்கிண்ணம் என்றும் நடத்தப்பட்ட இந்தத் தொடர் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறியது கண்டு பெரிய நாடுகளில் இதை நடாத்தப் பெரும் போட்டியே நடந்தது.

படிப்படியாக இலங்கை(2002), இங்கிலாந்து (2004), இந்தியா (2006) என்று இப்போது தென் ஆபிரிக்காவிற்கு வந்துள்ளது.

முதல் தடவையாக மினி உலகக்கிண்ணம் நடந்தபோது வெற்றியை விடப் பங்குபற்றுவது மட்டுமே பிரதானமாக இருந்தது. உதாரணமாக தென்னாபிரிக்கா வென்ற அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் எந்தவொரு தென்னாபிரிக்க ஊடகவியலாளரும் பிரசன்னமாகியிருக்கவில்லை. எல்லா அணிகளுமே ஹொங்கொங் சிக்சர்ஸைப் போல ஒரு கேளிக்கைத் தொடராகவே இந்த Knock out போட்டிகளைக் கருதினர்.

இப்போது இது மற்றுமொரு உலகக்கிண்ணமாக கருதப்படும் அந்தஸ்து மிக்கதாய் மாறியுள்ளது.

அநேகமான நாடுகள் இந்த சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றுள்ள நிலையில் இன்னும் ஒரு தடவையேனும் வெல்லாத நாடுகள் - இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் மட்டுமே.

இம்முறை ஆறாவது தடவையாக அரங்கேறும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலே ஒருநாள் தரப்படுத்தலில் முதல் 8 இடம் பிடித்த நாடுகள் இருபிரிவுகளாக விளையாடுகின்றன.

இப்போது மேற்கிந்தியத்தீவுகள் இருக்கும் நிலையில் பங்களாதேஷ் அணி எவ்வளவோ மேல்!

பிரிவு Aயில் - அவுஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்), இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள்.

பிரிவு Bயில் - தென் ஆபிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவுக்குப் போட்டியாக தென்னாபிரிக்காவும் மாபெரும் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தும் ஒரு தேசமாக வெற்றிகரமாகத் தன்னை நிரூபித்திருக்கிறது.

2003 உலகக்கிண்ணம், 2007 T 20 உலகக்கிண்ணம், 2009 IPL... இப்போது சாம்பியன்ஸ் கிண்ணம்.

2010ம் ஆண்டு கால்பந்து உலகக்கிண்ணம் என்றும் பிரமாண்டமான கோலாகலத்துக்கும் தம்மைத் தயார்படுத்தி வருகிறது தென்னாபிரிக்கா.

சில தரவுகள்

தென் ஆபிரிக்க ஆடுகளங்கள் வேகமானவை. பந்து மேலெழும் தன்மையுடையவை(Bouncy) தம்மை நிலை நிறுத்தித் துடுப்பெடுத்தாடும் நிதானமான துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானவை.

எனினும் இம்முறை இடம்பெறவுள்ள 15 போட்டிகளுமே இரண்டே மைதானங்களிலேயே (Johannesburg & Centurion) விளையாடப்படவுள்ளன.

இவையிரண்டுமே ஒப்பீட்டளவில் சிறியவையாகவும், ஓரளவு வேகமாக ஓட்டங்கள் குவிக்கக்கூடிய மைதானங்களாகவும் காணப்படுகின்றன.

தென்னாபிரிக்க ஆடுகளங்களில் தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளைத் தவிர வேறு எந்த அணியும் தோல்விகளை விட வெற்றிகளை அதிகமாகப் பெறவில்லை.

தென் ஆபிரிக்கா 58 வெற்றி 21 தோல்வி
அவுஸ்திரேலியா 17 வெற்றி 09 தோல்வி
இந்தியா 5 வெற்றி 09 தோல்வி
இங்கிலாந்து 03 வெற்றி 09 தோல்வி
இலங்கை 04 வெற்றி 12 தோல்வி
நியூசிலாந்து 03 வெற்றி 14 தோல்வி
மேற்கிந்தியத் தீவுகள் 02வெற்றி 10 தோல்வி
பாகிஸ்தான் 02 வெற்றி 10 தோல்வி

துடுப்பாட்ட வீரர்களைப் பொறுத்தவரையில் சராசரியின் அடிப்படையில் உலகின் தரமான துடுப்பாட்ட வீரர்களே முன்னணியிலுள்ளார்கள்.

டிராவிட்
17 போட்டிகள் 737 ஓட்டங்கள்
சராசரி 56.69 9 - 50கள்

பொன்டிங்
22 போட்டிகள் 1031 ஓட்டங்கள்
சராசரி 54.26 4சதம், 4 50கள்

கலிஸ்
113 போட்டிகள் 4080 ஓட்டங்கள்
சராசரி 46.89 6சதம், 28 50கள்

சனத் ஜெயசூரிய, சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார, மொஹமட் யூசும் போன்றோரெல்லாம் 31, 32 என்ற சராசரியே...

மஹேல நேற்றைய அதிரடிக்கு முன்னர் முன்னணி அணிகளுக்கெதிராக விளையாடிய போட்டிகளில் பெற்ற ஓட்டங்கள் 9,3,1,9,1,0,0,5..
நேற்று மகேல தனது முன்னேற்றத்தையும் விஸ்வரூபத்தையும் தென் ஆபிரிக்கப் பந்துவீச்சாளருக்கேதிராகவே காட்டியது சிறப்பு..

பிரென்டன் மக்கலம், யுவராஜ் சிங், அஃப்ரிடி போன்ற அதிரடி வீரர்களின் சராசரிகள், பெறுபேறுகளும் குறிப்பிடத்தக்களவாக இல்லை.

தென்னாபிரிக்க மண்ணில் முதல் 8 அணிகளுக்கெதிராகப் பந்துவீச்சில் அதிகமாக சாதித்திருப்பது வேகப்பந்துவீச்சாளர்களே... முரளிதரன் தவிர...

அவுஸ்திரேலியாவின் பிரெட் லீ 19 போட்டிகளில் 41 விக்கெட்டுக்கள்.

இவரைத் தொடர்ந்து நியூசிலாந்தின் ஷேன் பொன்ட், தென்னாபிரிக்காவின் மகாயா ந்டினி. முரளிதரன் ஆகியோர் விக்கெட்டுக்கள் எடுத்துள்ளனர்.

இத்தரவுகளின் அடிப்படையில் அனுபவங்களும் சில அடிப்படைகளும் இன்றி இம்முறை சாம்பியன்ஸ் கிண்ணத்தை எந்த அணியாலும் வெல்ல முடியாது என்பது தெளிவு.


அணிகளின் நிலைகள்,எதிர்பார்ப்புக்கள்,வாய்ப்புக்கள்,வீரர்களின் மீதான எதிர்பார்ப்புக்கள் பற்றி அடுத்த பகுதி இன்னும் சில மணிநேரங்களில் வருகிறது..


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner