June 30, 2009

பன்றிக் காய்ச்சல் ஸ்பெஷல் ஜோக்ஒரு காட்டில் ஒரு நாள் ஒரு சிங்கம், ஒரு கரடி, ஒரு பன்றி ஆகியன சந்தித்துக் கொண்டன..

இனி சந்திப்பென்றாலே வேறு என்ன தம்பட்டம், பேச்சு தானே.. (ஐயா சாமிகளா நான் பதிவர் சந்திப்பையெல்லாம் பற்றி எதுவுமே சொல்லலைங்கோ.. )

சிங்கம் தனது வீரப் பிரதாபத்தை ஆரம்பித்தது..

"ஆபிரிக்காக் காட்டில் நான் கர்ச்சித்தால் ஆபிரிக்காவே அதிரும்.. ஐரோப்பா ஆசியா வரை எதிரொலிக்கும்"

கரடியும் விட்டதா..

"வட அமெரிக்க மலைகளில் நான் சத்தமிட்டால் தென் அமெரிக்க நாடுகள் வரை அதிரும்" என்று ஜம்பமாக சொன்னது..

அப்பாவியாக நின்ற பன்றியை சிங்கமும்,கரடியும் ஏளனமாக பார்த்தன.

பன்றி அமைதியாக சொன்னது..

"நான் இப்ப எல்லாம் சும்மா இருமினாலே போதும், உலகமே நடுங்கி விடும்" என்றது...

அவ்வளவு தான் சிங்கமும் கரடியும் அப்போது தான் பன்றிக் காய்ச்சல் (Swine flu) ஞாபகம் வர தலை தெறிக்க ஓடி மறைந்து விட்டன..


=========
ஒரு பன்றிக் காய்ச்சல் கார்டூன்...


இது போன்ற மேலும் சில பன்றிக் காய்ச்சல் கார்டூன்களுக்கு இங்கே சொடுக்குங்க...

பயப்படாதீங்க.. கார்டூன் பார்த்ததெல்லாம் பன்றிக் காய்ச்சல் வராது..


===============

ரொம்ப நாளாக விடுமுறைகளும்,வேலைகளும் பதிவுகளை இட முடியாதவாறு பண்ணி விட்டன..

தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் எழுத விஷயங்கள் கிடைத்த வண்ணமே இருக்கும். இடை நடுவே நிறுத்தி சின்ன ஓய்வுக்கு பின்னர் மறுபடி வருகையில் எதை,எப்படி எழுவது என்று குழப்பம் கலந்த தயக்கம்.

அது தான் இந்த நகைச்சுவையோடு மறுபடி ரெடி, ஸ்டார்ட்....

(இது காலையில் வானொலியில் நான் சொன்னது)

சிங்கப்பூர் பயணம் பற்றி எழுதலாம் என்று இரண்டு மூன்று நாட்களாக எழுத உட்கார்ந்தால் மாறி மாறி பயணங்களும் பல வேலைகளும்.. காமெராவின் மெமரி கார்டும் வேலை செய்யுதில்லை.. படங்கள் இல்லாமல் பயணக் கட்டுரையா?

எனவே கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்..

வரும்....


June 17, 2009

என்னை(யும்) (மீண்டும்) ஏமாற்றிய இந்தியா...


தலைப்பிலேயே நிறைய விஷயங்கள் நீங்களாக ஊகித்துக்கொண்டால் இந்த அப்பாவி பொறுப்பாளியல்ல...

நான் இங்கே பதிவிடப்போவது முற்று முழுக்க கிரிக்கெட் பற்றியே..


இந்தியாவை நம்பிப் பதிவிட்டோர்,கருத்துக் கூறியோர் அத்தனை பேரின் மூஞ்சியிலும் இந்தியா கரியைப் பூசிவிட்டது.. (இது நடந்து ரொம்பக் காலமே என்று யாரும் சொல்லப் படாது.. நான் அண்மையில் இந்தியா உலகக்கிண்ண போட்டியில் வெளியேறியதை மட்டுமே சொன்னேன்)

முதல் சுற்றில் இரண்டு நோஞ்சான் அணிகளை பந்தாடி விட்டு சூப்பர் 8 சுற்றில் பந்து மூன்று போட்டிகளிலும் அடி வாங்கி நொண்டி,நொந்து தங்கள் மூஞ்சியிலும் எங்கள் கணிப்புக்களிலும் கரி பூசிப் போயுள்ளது இந்தியா..

அதிலும் நேற்று தென் ஆபிரிக்காவுடன் பெற்றது அவமானகரமான தோல்வி..
காரணமே சொல்ல முடியாத அப்பட்டமான அடி.. கொஞ்சம் கூடப் போராடாமல் சுருண்டு போன இந்த இந்தியாவையா நாமெல்லாம் உலகின் மிகச் சிறந்த அணி என்று கருதினோம்..
எப்படி இருந்த இந்தியா....


கடந்த T 20 உலகக்கிண்ணம் வென்றவர்கள் - IPL இல் பிரகாசித்த நட்சத்திரங்களை உடைய அணி – அணியில் வீரர்களுக்குப் பதிலாக நட்சத்திரங்களைக் கொண்ட அணி – உலகின் மிகக் 'கூலான' தலைவரின் வழி நடத்தல் என்று ஒருவர் இருவரல்லர் ஒட்டுமொத்த விமர்சகர், நிபுணர்களினாலும் Hot Favourites என்று கருதப்பட்ட இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளை இரண்டாம் சுற்றில் பெற்றது ஆச்சரியத்தைவிட அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.

சொன்னது போலவே இந்திய அணி மற்றுமொரு உலகக்கிண்ணக் கனவிலும் தன்னைப்பற்றிய எண்ணங்களிலும் மதர்ப்போடு மிதந்து கிடந்த வேளை வெற்றிகளுக்காகத் தவம் கிடந்த இரண்டு அணிகளான இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் பவுன்சர் பந்துகளாலும் இந்திய அணியைப் பயமுறுத்தி பின்னி நாருரித்துவிட்டன.


நம்பித் திரண்டு வந்து ஏமாந்து போன ரசிகர்கள்...


வேகப் பந்து வீச்சு தான் இந்தியாவில் அச்சுறுத்துகிறது என்று பார்த்தால் நேற்று தென் ஆபிரிக்காவின் சுழல் பந்து வீச்சாளர்களும் உருட்டி எடுத்து விட்டார்களே.. என்ன கொடுமை தோனி இது? தென் ஆபிரிக்காவின் மூன்று சுழல் பந்து வீச்சாளர்களும் சேர்ந்து 9 ஓவர்களில் 32 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்கள்..

Hot favourites என்ற நிலையிலிருந்து அரையிறுதிகளுக்குக் கூடத் தெரிவாகாமல் போய் அனைவரது கேலிப்பேச்சுக்கும் உள்ளான அணியாக இந்தியா இரண்டு அடுத்தடுத்த போட்டிகளில் மாறிப்போனது பரிதாபம்!

மறுபக்கம் பக்கத்து நாடு இலங்கை தொடர் வெற்றிகளுடன் பட்டை கிளப்பிக்கொண்டிருந்தாலும் எத்தனையோ வழிகளில் எவ்வளவோ உதவிகள் செய்த இந்திய நண்பர்களுக்கு எதுவுமே பிரதியுபகாரமாக செய்யமுடியாமல் போனதும் பரிதாபம் தான்!

இந்திய - இலங்கை இறுதிப்போட்டிக்கு கட்டியம் கூறியிருந்த நான், இந்தியா அரையிறுதிக்கு வந்தாலும் - பாகிஸ்தான் முன்னாலேயே தோற்றுவிடும் என்றேன் - நடந்ததோ தலைகீழ்!

இந்திய அணியின் மிகத் தீவிரமான ரசிகர் ஒருவர் என் சக அறிவிப்பாள – நண்பர்! இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்த அடுத்த நாள் - வாழ்க்கை தொலைந்து போனவர் போல வந்திருந்தார்.

வழமையாக இந்திய அணி தோற்றால் இவரைப் போட்டு அழாக்குறையாக வறுத்தெடுப்பது எனக்கு மிகப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று.

எனினும் அன்று அவர் இருந்த நிலையில் பார்க்கப் பாவமாக இருந்தது.

தோனியைத் தாறுமாறாக ஏசிக்கொண்டிருந்தார். இந்தியா தோற்றுவிட்டது என்பதைவிட, தோனி வேண்டுமென்றே இந்தியாவைத் தோற்க வைத்துவிட்டார் என்றே அவர் சத்தியம் செய்யாத குறையாகப் புலம்பிக்கொண்டிருந்தார்.

'நான் நினைத்தால் வெல்வேன் - நினைத்தால் இந்தியாவைத் தோற்கவைப்பேன்' என்று யாரிடமோ ஜம்பமாகக் காட்டவே இந்த அடுத்தடுத்த தோல்விகள் என்பதே அவரது நியாயம்!

தோனி விட்ட சில மோசமான முடிவெடுப்புத் தவறுகள் அவரை அவ்வாறு உறுதிபட சொல்ல வைத்திருக்கலாம்.

ஆனால் நான் ஆரம்பம் முதலே தோனியின் ரசிகனல்ல... தோனியின் ஆரம்பகால அசுரவேகம் அதிரடியில் பிரமித்துப்போனாலும் முன்பிருந்து அவரை என்னால் ஒரு அணிக்காக விளையாடும் வீரராக (Team man) ஏற்றுக்கொள்ளமுடியவி;ல்லை.

சிரேஷ்ட வீரர்களை மதிக்காத, கொஞ்சம் தலைக்கனம் கொண்டவராக, சுயநலம் உடையவராக, தன் அழகு, விக்கெட் போன்றவற்றிலேயே அதிக அக்கறையுடையவராகவே தோனியை நான் பார்த்து வந்திருக்கிறேன்.

பல இடங்களில் எனது எண்ணப்பாங்குகள் சரி என்பதை வாசிக்கும் உங்களில் பலரும் ஏற்பீர்கள்.

இலங்கை டெஸ்ட் சுற்றுலாவில் விலகி ஓய்வெடுத்தது. (கும்ப்ளே தலைவர்) பின் ஒரு நாள் தொடரின் தலைவராகப் பொறுப்பேற்று வந்து விளையாடியது.

சிரேஷ்ட வீரர்கள் பலருடன் முறுகல் - மற்றும் அவர்கள் பற்றி தோனி பகிரங்கமாக வழங்கிய சில பேட்டிகள் (குறிப்பாக கும்ப்ளே, சேவாக், கங்குலி & ட்ராவிட்)

தேசிய உயர் விருதுகள் கிடைக்கும் போதும் அந்த விழாவுக்கு (பத்மஸ்ரீ) வராமல் அவமதித்தது.

முன்பு போல் இல்லாமல் ஓட்டக்குவிப்பில் கவனம் சிதறியமை.

கூழாகிப் போன கேப்டன் கூல் (Captain Cool)

முன்பு அதிரடி ஆட்டம் ஆடிய தோனியின் தலையில் அதிர்ஷ்ட தேவதை குடியிருந்தது போல தொட்டதெல்லாம் துலங்கியது. அவர் எடுத்த சடுதியான முடிவுகள் கூட சரித்திரம் படைத்தன. இப்போது தரித்திரம் பிடித்தவராக அவரை மாற்றி உள்ளது.

அவரது ஓட்டக் குவிப்பும் நொண்டியடிக்கிறது.. மைதானத்திலும் சொர்ந்தவராக காணப்படுகிறார். எடுக்கும் முடிவுகளும் சறுக்கி விடுகின்றன.

தோனியின் சரக்கு தீர்ந்துவிட்டதா? அல்லது கலைத்து கிரிக்கெட் மீது ஆர்வமற்றுப் போய் விட்டதா? IPLஇல் சென்னை சூப்பர் கிங்க்சின் கடைசி ஆட்டங்களின் போதும் தோனி அசுவாரஸ்யமாக விளையாடியது கண்டிருப்பீர்கள்..

முன்பு பார்த்த சிக்சர் அடிக்கும் அதிரடி தோனி எங்கே போனார்? இப்போ ஒன்றிரண்டு ஓட்டங்களோடு பவுண்டரி அடிக்கவே தடவித் தடுமாறுகிறார். என்னவாயிற்று?

இம்முறை தோனி தலைவராகவும், துடுப்பாட்ட வீரராகவும் சறுக்கியது அவர் மேல் எல்லோருடைய விரல்களும் நீண்டு தோனியை பிரதான குற்றவாளியாக்கினாலும், யுவராஜ் தவிர வேறு எந்த துடுப்பாட்ட வீரருமே சோபிக்கவில்லை.. ரோகித் ஷர்மாவும் முதல் சுற்றோடு சரி..

எவ்வளவு நாள் தான் தனியாகவே போராடுவது - யுவராஜ்


பந்து வீச்சாளர்களில் இஷாந்த் ஷர்மா தொடர்ந்து சொதப்பியதோடு, மற்றவர்களும் தேவையான நேரங்களில் பிரகாசிக்கவில்லை..

2007இல் மந்திரசக்தியாக மற்ற அணிகளைக் கட்டிப்போட்ட இந்தியாவின் மின்னல் வேகக் களத்தடுப்பு போய் ஒளிந்துகொண்டது எங்கே என்று தெரியவில்லை..
யுவராஜ்,தோனி கூட தடுமாறி இருந்தார்கள்..

உண்மையில் 2007இல் யாருக்கும் Twenty 20 கிரிக்கெட் பற்றி பெரிதாகத் தெரிந்திருக்காத நிலையில் அனுபவமற்றுக் களமிறங்கிய இந்தியா வெற்றி வாகை சூடியது.

இம்முறையோ எல்லோருமே ஆட்டங்களைக் கரைத்துக் குடித்திருந்தார்கள் IPL வேறு தகுந்த பயிற்சியை வழங்கி எல்லா அணிகளையும் சூடேற்றி இருந்தது. இந்திய அணியோ அதிகமாக விளையாடி களைத்துப் போயிருந்தது.

இதற்கிடையில் சேவாகின் இழப்பும் இந்தியாவில் மிகப் பெரியளவில் பாதித்தது. அவருக்குப் பதில் ரோகித் ஷர்மாவை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்ப மத்திய வரிசையிலும் வெற்றிடம் ஏற்பட்டது.

தோனி - சேவாக் மோதல் என்ற பரபரப்பும் (எவ்வளவு தான் ஒற்றுமை என்று காட்ட முயற்சி எடுத்தாலும் கூட) அணிக்குள் ஒரு வித மந்த சூழ்நிலையை தொற்றுவித்ததென்னவோ உண்மை.

இந்திய அணியை இம்முறை நாங்கள் எல்லோரும் அதிக வாய்ப்புடைய அணியாகக் கருதியது மிகப்பெரிய தவறு என்று இப்போது தான் நான் உணர்கிறேன்.

காரணம் இரு உலகக் கிண்ணங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி போட்டிகளில் பெரிதாக சோபிக்கவே இல்லை. ஒரு நாள் போட்டிகளில் தான் இந்திய வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்தது.

தனித் தனி வீரர்களாக ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினார்களே தவிர அணியாக அவர்களின் பெறுபேறு சிறு அணிகளுக்கேதிராகவே சிறப்பாக இருந்தது.

எதிரணிகள் நல்ல முறையில் இந்திய அணியின் பலவீன ஓட்டைகளைக் கற்றறிந்து இந்தியாவை பந்தாடி விட்டன.

ஒன்றா இரண்டா பலவீனம்? காணும் இடமெல்லாம் பலவீனம் என்றால் யாரும் அடிப்பார்கள் தானே..

இந்திய அணியின் நல்ல காலமோ, ரசிகர்களின் நல்ல காலமோ இந்திய அணி பாகிஸ்தானிடமோ, இலங்கையிடமோ தோற்காமல் வெளியேறியுள்ளது..

இல்லாவிட்டால் ரசிகர்கள் கொந்தளித்திருப்பார்கள்.

இப்போது அடுத்த கட்டம் பற்றி யோசிக்கும் நேரம்.. தலைவர் தோனி, வீரர்கள், தேர்வாளர்களுக்கு...

வீரர்கள் உடல்,மனதளவில் களைத்துப் போயிருக்கிறார்கள் என்பதை காரணம் காட்டும் பயிற்றுவிப்பாளர் கரி கேச்டனும், தேர்வாளர்களும் இன்று மாலை கூடி மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இந்திய ஒரு நாள் அணியைத் தெரிவு செய்யப் போகிறார்களாம்.

யாருக்கு ஓய்வு கொடுப்பது, யாருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து கழுத்தறுப்பது என்பதெல்லாம் அவரவர் கையில்..

உலகக் கிண்ணம் தகுதியான இன்னொரு அணியின் தலைவரின் கையில்...

இந்தத் தொடரில் எந்தத் தோல்வியும் காணமல் அரையிறுதி நோக்கி சென்றுள்ள இலங்கை அல்லது தென் ஆபிரிக்க அணியின் தலைவரின் கரங்களில் தான் இம்முறை உலகக் கிண்ணம் தவழும் என்பதே எனது எதிர்பார்ப்பு.. (இவங்க எப்போ என் மூகுடைப்பான்களோ? ஆனாலும் பரவாயில்லை.. எவ்வளவு உடைப்பட்ட்டிட்டோம்.. )

June 16, 2009

பெண்கள் ஆடினால் பிடிக்காதோ?


மகளிர் உலகக் கிண்ணத்துடன் அனைத்து அணிகளின் தலைவிகள்


மகளிர் உலகக் கிண்ணப்போட்டிகள் ஆரம்பிக்கு முன்னர் பதிவிட வேண்டும் என்று ஆரம்பித்து பல்வேறு வேலைகள் காரணமாக அரை இறுதிகள் ஆரம்பிக்க இருக்கும் நேரத்தில் தான் பதிவுக்காக வருகிறது இந்த மகளிர் உலகக் கிண்ண தொகுப்பு...

எனினும் ஆண்கள் உலகக் கிண்ணப்போட்டிகள் போலல்லாமல் இதில் எதிர்பார்த்ததைப் போலவே எல்லாப் போட்டிகளின் முடிவுகளும் இதுவரை நடந்திருக்கின்றன.. (ஆண்கள் போட்டிகளில் பல முடிவுகள் அதிர்ச்சியாக அமைந்து நம்ம மூக்குகளை உடைத்து இருக்கின்றன)

பெண்கள் கிரிக்கெட் கூடுதல் பிரபல்யம் அடையத் தொடங்கியது 2000ம் ஆண்டுக்குப் பிறகே!

எனினும் ஏனைய பெண்கள் விளையாட்டுக்களைப் போல கவர்ச்சி விடயத்தில் இறுக்கமான கொள்கைகள் கொண்டிருந்ததால் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை போலும்.

குறிப்பாக ஆசியாவில் ஆண்கள் கிரிக்கெட் அடைந்த பிரபல்யத்தின் கால் பங்களவு கூட மகளிர் கிரிக்கெட் பெறவில்லை.

பாகிஸ்தானிய, இலங்கை மகளிர் அணி இன்னமும் குறைமாதக் குழந்தைகள் போவவே இருக்க, மிதாலி ராஜ், ஜீலான் கோஸ்வமி, அஞ்சும் சோப்ரா போன்ற வீராங்கனைகள் மூலம் இந்திய அணி அண்மைக்காலத்தில் பெற்று வரும் வெற்றிகள் இந்தியப் பெண்கள் அணியை உலகில் கூர்ந்து கவனிக்கப்படும் அணிகளுள் ஒன்றாக மாற்றியுள்ளது.

அண்மையில் கூட அவுஸ்திரேலியாவில் 8 நாடுகள் பங்குபற்றிய உலகக கிண்ணப்போட்டிகள் நடந்து முடிந்திருந்தன. எனினும் ICC எனப்படும் சர்வதேச கிரிக்கெட் பேரவை பெண்கள் கிரிக்கெட்டை பிரபல்யப்படத்தவும், சந்தைப்படுத்தவும் எடுத்திருக்கும் சரியானதொரு தருணமும் களமும் தான் இங்கிலாந்தில் நேற்று ஆரம்பமாகியுள்ள மகளிர் Twenty 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர்.

உலகக்கிண்ணத்தில் பங்கேற்ற அதே 8 அணிகள் - 9 நாட்களுக்குள் போட்டிகள் நிறைவடையும். ஆனால் இதில் முக்கியமான விஷயம் ஆண்களின் அரையிறுதிகளும், இறுதிப்போட்டியும் இடம்பெறும் அதே நாளில், அதே மைதானங்களில் முதல் போட்டியாகப் பெண்களின் போட்டியும் இடம்பெறவுள்ளன.

இதன் மூலம் அதிகளவில் கிரிக்கெட் மகளிரும் கவனிக்கப்படவுள்ளன.

மார்ச் மாதம் இடம்பெற்ற மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் தொலைக்காட்சி மூலமாக ரசித்துள்ளார்கள்.

இதிலே சிறப்பம்சம் இதுதான். மகளிருக்கான முதலாவது T 20 உலகக்கிண்ணம்!

பங்குபற்றும் 8 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பிரிவு A : அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள்

பிரிவு B : இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்இவற்றிலே நடப்பு உலகச் சாம்பியனும், போட்டிகளை நடத்துகின்ற நாடுமான இங்கிலாந்தே அதிக வாய்ப்புள்ள நாடாகக் கருதப்படுகிறது.

உலகின் சிறந்த தலைவிகளில் ஒருவராகக் கருதப்படும் சார்லட் எட்வர்ட்ஸின் அணியில் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை கிளயர் டெய்லர் மற்றும் உலகக்கிண்ணப் போட்டிகளில் கூடுதல் விக்கெட்டுக்களை வீழ்த்திய லோரா மார்ஷ் என்று இங்கிலாந்து அணி ஒரு சூப்பர் லேடிஸ் அணி.


இங்கிலாந்து அணியின் தலைவி சார்லட் எட்வர்ட்ஸ்

BIG 4 என்ற பலமான நான்கு பெண்கள் அணிகளும் இலகுவாக அரையிறுதிகளும் நுழையும் என எதிர்ப்பார்க்கலாம். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா இந்த நான்கு அணிகளுக்கும் ஏனைய நான்கு அணிகளுக்குமிடையேயான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் போல – (இதனால் தான் அரையிறுதிப் போட்டிகளுக்குப் பிறகே – தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் செய்ய முடிவெடுத்தார்களோ? )

அழகிய அணி என்றழைக்கப்படும் அவுஸ்திரேலிய மகளிர் அணியும் தம் நாட்டின் ஆண்கள் அணி போல டெஸ்ட், ஒரு நாளில் பிரகாசித்தாலும் T 20 போட்டிகளில் பெரிதாக சோபிப்பதில்லை. (நியூசிலாந்தை 3 போட்டிகள் கொண்ட தொடரில் அண்மையில் வென்றதை தவிர)

முன்னாள் உலகச்சம்பியன்கள் தம் சொந்த மண்ணில் வைத்தே தமது பரம வைரிகளிடம் இவ்வாண்டின் ஆரம்பத்தில் பட்டத்தை இழந்ததனால் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தோடு இம்முறை களமிறங்கி இருக்கிறது.

அவுஸ்திரேலியா அணியின் உப தலைவி லீசா ஸ்தலேகர்

நியூசிலாந்து மகளிர் துரிதமாக முன்னேற்றமடைந்த அணிகளுள் ஒன்று! மார்ச் மாதம் நடந்த உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரை, வந்த உற்சாகத்துடன் இம்முறை T 20 உலகக்கிண்ணத்தில் குறிவைத்துள்ளது.

முதலாவது T 20 பெண்கள் சாம்பியனாக நியூசிலாந்து பெண்கள் வந்தால் ஆச்சரியப்படவேண்டாம்.

இன்னொரு விஷயம் - 2வது அழகான அணியாக பலரால் வர்ணிக்கப்படும் அணி இது

தென் ஆபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவு மகளிர் அணிகள் இரண்டுமே பெரிதாக அச்சுறுத்தக்கூடிய அணிகள் அல்ல. தோல்விகளையே சந்தித்துப் பழக்கமானவை.

தென் ஆபிரிக்க மகளிர் அணி

எனினும் மேற்கிந்தியத்தீவுகள் 'பெரியவை' நான்கை விட எஞ்சிய நான்கு அணிகளில் சிறந்தது எனலாம்.
முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷெர்வின் காம்பலின் பயிற்றுவிப்பில் அனுபவம் குறைவான எனினும் துடிப்பான அணி.


அடுத்த பிரிவில் மூன்று ஆசிய அணிகளும் இங்கிலாந்தும் ..


இந்திய மகளிர் அணி இளமையும் அனுபவமும் பொங்கி வழியும் ஒரு அற்புத கலவை. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உலகக்கிண்ணத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்;தி அரையிறுதிகளுக்குள் வந்த அணி.

தமது நாட்டின் ஆண்கள் அணிபோலவே ( 2007 ) முதல் தடவையாக இடம்பெறும் T 20 உலகக்கிண்ணத்தை வென்றெடுக்க முழுப்பிரயத்தனத்தை எடுப்பார்கள். ( இம்முறை தோனி குழுவினர் சொதப்பியது போல இந்த மங்கையர் சொதப்பமாட்டார்கள் என்று நம்பலாம் )

மிகப்பலவீனமான அணியாகக் கருதப்படும் பாகிஸ்தான் மிக இளமையான அணிகளுள் ஒன்று. உலக்ககிண்ணப்போட்டிகளில் பல அணிகளையும் ஆச்சரியப்படுத்தி 6ம் இடம் பிடித்தது.


இறுதியாக இலங்கை அணி..
T 20 போட்டிகளை முதல் தடவை இலங்கைப் பெண்கள் விளையாடியதே இப்போதுதான்.

புதிய அணி – புதிய தலைவி.

உலகக்கிண்ணப் போட்டிகளில் ஒரு போட்டியில் தானும் வெல்ல முடியாத அணி. இம்முறை பாகிஸ்தானியப் பெண்களை முதல் போட்டியில் தோற்கடித்து உற்சாகமடைந்திருக்கிறது.

எனினும் ஆஸ்திரேலியாவில் கண்ட படு மோசமான தோல்விகள் அடுத்தும், சில ஒழுக்க பிரச்சினைகள் தொடர்பாகவும் முன்னாள் தலைவி உட்பட சிரேஷ்ட வீராங்கனைகள் மூவர் நீக்கப்பட்ட்டதன் தாக்கம் இன்னமும் அணியில் தெரிகிறது.

நேற்றைய போட்டிகளுடன் அரை இறுதிப் போட்டிகளுக்கான நான்கு அணிகளும் உறுதியாகி இருக்கின்றன,.. எதிர்பார்க்கப்பட்ட நான்கு அணிகளுமே அரை இறுதியில் மோதவுள்ளன..

இந்தப் போட்டிகளை பார்க்கக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆண்கள் அரை இறுதிப் போட்டிகளுக்கு முன்னர் இவை நடைபெறும்.

உங்கள் ஜென்ம சாபல்யத்துக்காக படங்களையும் தேடி எடுத்து தந்திருக்கிறேன்..
நன்றி CRICINFO

என்ன தான் கவர்ச்சி இல்லாவிட்டாலும், அழகாக ஆடினாலும், ஆண்கள் கிரிக்கெட் போல வேகமும் சுவாரஸ்யமும் கொஞ்சம் பெண்கள் ஆட்டத்தில் குறைவு என்பதே என் கருத்து..

ஆனாலும் இம்முறை சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்துள்ள ஆக்கபூர்வமான அக்கறை மூலமாக பெண்கள் கிரிக்கெட் பிரபல்யமாக அமையும் என்று எதிர்பார்ப்போம்.


(இன்று மாலை இடம்பெறும் கிளைமாக்ஸ் ஆட்டத்துக்காகக் காத்திருக்கிறேன்.. நான்க்கவது அரை இறுதி அணியாக இலங்கை உள்ளே நுழையும் என்பதே எனது நம்பிக்கை.. தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள்,பாகிஸ்தானுடன் இலங்கையும் அரை இறுதி சென்றாலே திறமைக்கான தகுந்த பரிசு வழங்கப்பட்ட திருப்தி..)


June 12, 2009

யாகூவை (Yahoo) முந்திய பிங் (Bing)

அண்மையில் மைக்ரோசொப்ட்(Microsoft) நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட தேடுபொறியான பிங்கின் (www.bing.com) அசுரவளர்ச்சியால் ஏனைய தளங்கள் எல்லாம் அடிபட்டுப் போகின்றன.
பிங் பற்றி நம்ம வலைப்பதிவர்கள் பல பேரும் பலவிதமாக எழுதி இருப்பதால் அதுபற்றி நான் எதுவும் விபரிக்கத் தேவையில்லை தானே...

இப்போது பிங்- Bing யாகூவையும் முந்தி இருக்கிறது.. அமெரிக்காவிலும் உலகளாவிய ரீதியிலும்
உலகளாவிய ரீதியில் தேடுதல் பொறிகளின் பாவனையில் இன்னமும் கூகிளை யாரும் நெருங்க முடியாவிட்டாலும், போகிறபோக்கில் பிங் கூகிளுக்கும் சவால் கொடுக்கும் போலவே தெரிகிறது.

Statcounter நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் தேடுபவர்களின் சதவீத அடிப்படையில் (அமெரிக்காவில்)
யாகூ தேடல் பொறி 10.22%
பிங் 16.28%
கூகிள் 71.47%

ஜூன் நான்காம் திகதியளவில் உலகளவிலும் பிங் யாகூவை முந்தியுள்ளது.
யாகூ 5.13 %
பிங் 5.62 %
கூகிள் 87.62 %எனினும் பிங் பக்கம் சாய்ந்த இந்த எண்ணிக்கை அனைத்தும் கூகிளில் இருந்தே சென்றவர்களே என்று கருதப்படுகிறது.. (எப்பிடியெல்லாம் தாவிறாங்கப்பா.. அரசியல்லயும்,இணையத்திலையும் இதெல்லாம் சகஜமப்பா என்கிறார் நம்ம கஞ்சிபாய்.. எனக்கும் பிங் பயன்படுத்த இலகுவாகவும்,அழகாகவும் இருந்தாலும் இன்னமும் கூகிள் கட்சி தான்)


இதேவேளை அலேக்சாவில் (www.alexa.com) நான் தேடிப்பார்த்தவேளை,

கூகிள் இன்னமும் முதலாம் ஸ்தானத்திலும், பிங் 189ஆவது ஸ்தானத்திலும், யாகூ இரண்டாமிடத்திலும் இருக்கின்றன..


ஆனால் கூகிள்,யாகூ இரண்டினதும் பாவனையாளர்களை பிங் கொஞ்சம் கொஞ்சமாவது தன வசப்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்...

அது சரி என்னுடைய வலைத்தளம் (உங்கள் அபிமான வலைத்தளம் என்று சொன்னால் கொஞ்சம் ஓவராயிருக்கும்) அலேக்சாவில் எத்தனையாவது இடம் என்று அறிய ஆவலாயிருப்பீர்கள்...
நாமெல்லாம் கூகிளுக்கு சவால் விடக்கூகூடிய அளவுக்கு இன்னும் வளரலேங்கோ... 218982

ஆனால் இலங்கையில் என் தளம் பிரபலமான தளங்களில் 4175ஆவதாக இருக்கிறது.

அப்பாடா ஒரு மாதிரியாக தொழிநுட்பப் பதிவு (மாதிரி) ஒன்று போட்டிட்டேன்..

நானும் இப்போ ஒரு தொழிநுட்பப் பதிவர் தான்.. (வடிவேலு பாணியில்)

தமிழ்நெஞ்சம்,சுபாங்கன், ஹனிதமிழ், கார்த்திக், க்ரிகொன்ஸ் இன்னும் பெயர் குறிப்பிடாதோர் எல்லாம் பார்த்துக்கோங்க..


June 11, 2009

T 20 உலகக் கிண்ணம்.. ஹட் ட்ரிக் பதிவுTwenty 20 உலகக்கிண்ணம் பற்றிய நேற்றைய எனது பதிவில் விட்ட ஒரு தவறை சீர் செய்யவும், எனது பதிவு இடப்பட்ட பின்னர் நடைபெற்ற சில நிகழ்வுகள், வெளிவந்த புதிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவுமே இந்தப் பதிவு...

(தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஒரு கிரிக்கெட் பதிவு)

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகளை வைத்தே இரண்டாம் சுற்றான Super Eight சுற்றுக்கான அணிகள் அடங்கும் பிரிவுகள் தீர்மானிக்கப் படுகின்றன என்று நான் தப்பாக நினைத்து விட்டேன்,, தெளிவாக கீழ்க்காணும் இணையத் தளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தும் தப்பாக புரிந்துகொண்டது என் தவறே.சுட்டிக் காட்டியிருந்த அனானிக்கு பின்னூட்டத்தில் நன்றி சொல்லி இருந்தேன்...

அதாவது இந்த Twenty 20 உலகக் கிண்ணம் ஆரம்பிக்க முன்பே ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகள் தீர்மானிக்கப் பட்டுவிட்டன.

கடந்த Twenty 20 உலகக் கின்னப்போட்டிகளில் ஒவ்வொரு அணிகளும் பெற்ற நிலைகளை வைத்தே இவை தீர்மானிக்கப் பட்டிருக்கின்றன..

எனவே நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளுமே வெறும் 'டப்பா' போட்டிகளாகி இருக்கின்றன.


ஆக Twenty 20 நூறாவது போட்டியை வென்ற பெருமையை இலங்கை அணி தனதாக்கியதும், டில்ஷான் தனது அபார தொடர் அதிரடியை மேலும் தொடர்ந்தும், 40 வயது சனத் வயது தனக்கு தடையே இல்லை என்பதை நிரூபித்ததுமே நேற்றைய நாளின் முதல் போட்டியின் சிறப்பாகவும், இரண்டாவது போட்டியில் மீண்டும் formக்கு திரும்பிய சாகிர் கானின் பந்து வீச்சும், அயர்லாந்தின் முதலாவது T20சர்வதேசத் தோல்வியும் சிறப்பம்சங்களாகிப் போகின.

ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டபடி,

பிரிவு E இல் இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளும்,

பிரிவு F இல் அயர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசீலாந்து ஆகிய அணிகளும் உள்ளடங்கி இருக்கின்றன.

Group E Group F
A1: India B1: Pakistan
B2: England A2: Ireland
C1: West Indies C2: Sri Lanka
D2: South Africa D1: New Zealand

இதனடிப்படையில் E பிரிவு கடுமையான பிரிவாகவும், இலங்கைக்கு அரையிறுதி செல்லும் பாதையை இலகுவாக்கிய பிரிவாக F பிரிவும் அமைந்திருப்பது தெளிவு.

இந்தப் பிரிவில் இலங்கை ஏனைய மூன்று அணிகளையும் பந்தாடும் என்பது நிச்சயம்.

அயர்லாந்தின் பருப்பு இலங்கையிடம் வேகாது..

நியூசீலாந்து நல்ல, கட்டுக் கோப்பான அணியாக இருந்தாலும் கூட, காயங்கள் அவர்களைப் போட்டுப் படுத்தி எடுக்கின்றன.

காயங்கள்,உபாதைகள் இல்லாமல் உருப்படியாக இருக்கும் வீரர்கள் பதினொருவர் மாத்திரமே..

பாகிஸ்தானைப் பொறுத்தவரை ICL இலிருந்து மீண்டும்,மீண்டும் அணிக்குள் வருகின்ற சகலதுறை வீரர் அப்துல் ரசாக்கின் வரவு அணியை உற்சாகப்படுத்தும். எனினும் இலங்கை அணியை வெல்லக் கூடிய அளவுக்கு பாகிஸ்தான் முன்னேறும் என்று நான் கருதவில்லை.. உலகக் கிண்ணத்தில் தடுமாறிய பாகிஸ்தான் அணியை உற்சாகப்படுத்த இம்ரான் காண இருந்தார்.. இவரோ உலகக்கிண்ணத்தையே WWF Wrestlingஓடு ஒப்பிடும் கேனத் தனமான யூனிஸ் கான் தானே..

களத்தடுப்பிலும் சோம்பேறிகள் பலபேரை அணியில் வைத்துக் கொண்டு பாகிஸ்தான் அரையிறுதி கூட வருமோ சந்தேகம் தான்..

இலங்கை அணி உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறது..

சங்கக்காரவின் திட்டமிட்ட வழிநடத்தளோடு, சிரேஷ்ட,புதிய வீரர்கள் அனைவருமே தத்தம் பங்களிப்பை சரியாக வழங்கி வருகிறார்கள். Weak link என்று எதையுமே அணியில் காணமுடியவில்லை (சாமர சில்வா ஓட்டங்களை இனிப் பெறுவார் என்று நம்பலாம்)

மென்டிஸ்,மாலிங்க,முரளி இந்த மூன்று M களும் எதிரணிகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருவது இறுதிப் போட்டிவரை இலங்கையை நடைபோட வைக்கும் என்பது நிச்சயம்.

துடுப்பாட்ட வீரர்களில் டில்ஷானின் தொடர்ச்சியான அதிரடி form நீடிக்கிறது. சனத் நேற்று விளாசியது போல் இன்னும் நான்கு போட்டிகளில் அடி பின்னினால் இறுதிப் போட்டி இதோ..

களத்தடுப்பில் இன்னமும் இலங்கை சூரர்கள் தான்.. (புதிய வீரர் ஏஞ்சலோ மத்தியுவின் fielding சாகசம் நேற்றுப் பார்த்தீர்களா?)

இந்திய அணி இதுவரை சந்தித்து வந்த ஒல்லிப்பிச்சான் அணிகளை விட இனி சந்திக்கப் போகும் மூன்று அணிகளுமே சவாலானவை..

கொஞ்சம் அசந்தாலும் இந்தியாவையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டு சென்று விடும் அணிகள் மற்ற மூன்றும்..

சொந்த மண்ணில் விளையாடும் பலத்தோடும் முதல் தோல்வி தந்த பாடத்தோடும் இங்கிலாந்து இந்த இரண்டாம் சுற்றில் விளையாடும் என எதிர்பார்க்கிறேன்..
கோல்லிங்க்வூடின் தலைமைத்துவமும், மஸ்கரெநாஸ், ரைட், போபாரா ஆகிய மூன்று சகலதுறை வீரர்களுமே இங்கிலாந்தின் பலமும் அடையாளமும்.

மேகிந்தியத்தீவுகள் நான் நேற்றைய பதிவில் சொன்னது போல அணித் தலைவர் கெயிலில் தான் கிட்டத்தட்ட முழுமையாகத் தங்கியுள்ளது.

எனினும் சர்வான், எட்வர்ட்ஸ், சந்தர்போல், பிராவோ போன்றோர் தங்களை நிரூபித்துக் காட்டவேண்டும்.
வளர்ந்து வரும் லேண்டில் சிமன்ஸ், போலார்து போன்றோரும் தேவையான பொழுது தம்மை நேற்று போல் வெளிப்படுத்தினால் எந்த அணியையும் அந்த நாளில் வெல்லும்.

ஆனால் பாகிஸ்தான் போலவே இந்த அணியிலும் ஒரு மந்தமும், ஒற்றுமையின்மையும் தெரிகிறது.

தென் ஆபிரிக்கா தான் இந்திய,இலங்கை அணிகளின் உலகக் கிண்ண கனவுகளின் நேரடி யமன் என்று துணிந்து சொல்வேன்.

உலகக் கிண்ணம் வெல்லும் அத்தனை தொகுதியும் உள்ள மற்றும் ஒரு அணி இது.
இன்று மாலை இங்கிலாந்து அணிக்கெதிராக தென் ஆபிரிக்க அணி வெல்கின்ற விதத்தில் இந்திய அணியுடன் தென் ஆப்ரிக்காவின் மோதல் பற்றி அறிந்து கொள்ளலாம்.

களத்தடுப்பும், தேவையானபோது தேவையான வீரர்கள் தேவையான அவதாரம் (பந்து வீச்சு, துடுப்பாட்டம்) எடுப்பது தென் ஆபிரிக்காவின் மிகப் பெரிய பலங்கள்.

எனினும் உலகக் கிண்ணம் என்று வந்தாலே துரதிர்ஷ்டம் இவர்களைத் துரத்தியடிக்கிறது.

மழை, தடுமாற்றம், டென்ஷன், தவறாகக் கணக்கிடல் என்று பதினேழு வருடங்களாகவே உலகக் கிண்ணம் தென் ஆபிரிக்காவோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.

இம்முறை விடுவதாக இல்லை என்று உறுதியோடு வந்திருக்கிறார்கள்.
இந்திய அணியில் தோனி மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்கக் கூடாது என்று சொன்னது சரியாகப் போச்சு..

எப்போதுமே தான் அவ்வாறு வரப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறார். ரோகித் ஷர்மாவின் formஉம், ரெய்னா, யுவராஜின் அதிரடியையும் தோனி சரியாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

நீண்ட நாள் எதிர்பார்த்த சாகிர் காணும் விக்கெட்டுக்களை எடுக்க ஆரம்பித்து விட்டார்.. இரு குழல் துப்பாக்கிகள் போல சுழல் பந்துவீச்சாளர்கள்.. இன்னும் பதான் சகோதரர்கள்,இஷாந்த்..

இந்தியா மீண்டும் ஒரு கிண்ணத்தைக் குறிவைக்க இது போதாதா?

போட்டிகள் செல்லும் நிலைகளைப் பார்த்தால், பிரிவு இலிருந்து இந்தியா, தென் ஆபிரிக்காவும், இலிருந்து இலங்கையும், நியூ சீலாந்தும் அறையிருதிகளுக்கு வரலாம் என்று நினைக்கிறேன்.
இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம் இம்முறை இடம்பெறாதேன்பது பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம்...

எனினும் இரு பிரிவுகளிலும் இந்தியா, இலங்கை அணிகள் முன்னணி வகித்தால் இந்திய - இலங்கை இறுதிப் போட்டி நிச்சயம்..

இரண்டு விக்கெட் காக்கும் கூர்மையான மதிநுட்ப தலைவர்களின் அணிகள் மோதும் விறுவிறுப்பான போட்டி பார்க்க காத்திருக்கிறேன்.


பின்னிணைப்பு - இன்று ஆரம்பிக்கும் பெண்களுக்கான உலகக் கின்னப்போட்டிகள் பற்றி தனியாக நாளை அல்லது சனிக்கிழமை பதிவிடுகிறேன்... படங்களோடு தான்.. (கண்ணுக்கு குளிர்ச்சி????)

(இல்லேன்னா மகளிர் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்குகிறதோ இல்லையோ, நம்ம ஆண் சிங்கங்கள் அடிபிடிக்கு வந்துவிடும்... )


June 10, 2009

இலங்கையா இந்தியாவா? விரிவான அலசல்..

உலகக் கிண்ணம் - இதுக்கு தான் இத்தனை போட்டி..

இன்று இடம்பெறும் இரண்டு போட்டிகளோடு 2009 Twenty 20 உலகக் கிண்ணப்போட்டிகளின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வருகின்றன.

இன்று இடம்பெறும் இரண்டு போட்டிகளுமே எந்தவிதமான மாற்றங்களையும் அடுத்த சுற்றான சூப்பர் எய்ட் (Super Eights) சுற்றுக்கு தெரிவாகும் அணிகளில் எந்தவித தாக்கங்களையும் ஏற்படுத்தப் போவதில்லை..

காரணம் எட்டு அணிகளும் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு விட்டன.

நேற்று எட்டாவது அணியாகத் தப்பிப் பிழைத்துக் கொண்டது பாகிஸ்தான்.

ஆனாலும் இன்றைய போட்டிகளின் முக்கியத்துவம் இன்னொரு விதத்தில் தெரிவான 8 அணிகளுக்கு முக்கியம்.

வெளியேறிய நான்கு அணிகளையும் பார்க்கும் போது நம்பமுடியாமல் இருப்பதென்னவோ உண்மை தான்...

ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து .. சரி..
பங்களாதேஷ் கூட சரி.. இன்னமும் வளரவில்லை..

ஆனால் ஆஸ்திரேலியா????? நடப்பு டெஸ்ட் மற்றும் ஒருநாள் சாம்பியன்கள்.. கிரிக்கெட்டின் எந்தவொரு அம்சத்திலும் தலை சிறந்தவர்கள்.. அண்மைக்காலம் வரை யாராலும் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள்...

அவர்களா இப்படி? நம்பித் தான் ஆகவேண்டும்..

எந்தவொரு போட்டியிலும் வெல்லாமலே முதலாம் சுற்றோடு வெளியேறிய ஆஸ்திரேலியா தங்கள் தோல்விகள் பற்றி ஆழ ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

எனினும் அவுஸ்திரேலியா அணிக்கு அடுத்து முக்கியமான ஆஷஸ் தொடருக்கு தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கு நல்லதொரு ஓய்வு கிடைத்துள்ளது என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். (வேறென்ன தான் இனி செய்வது?)
படம் நன்றி - குசும்பன்

தற்போது அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள எட்டு அணிகளும் இன்னமும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட உள்ளன...

A,C பிரிவுகளில் முதலாவது இடம் பெற்ற அணிகளும், B,D பிரிவுகளில் இரண்டாவது இடம் பெற்ற அணிகளும் E பிரிவிலும்
B,D பிரிவுகளில் முதலாவது இடம் பெற்ற அணிகளும், A,C பிரிவுகளில் இரண்டாவது இடம் பெற்ற அணிகளும் F பிரிவிலும்
தமக்குள்ளே மோதவுள்ளன..

இனித் தான் உண்மையான உலகக் கிண்ணப் போட்டிகள் என்னும் அளவுக்கு சூடு பிடிக்கப்போகிறது..

இதனால் தான் இன்றைய இரு போட்டிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன..

A மற்றும் C பிரிவுகளில் யார் முதலிடம் பிடிப்பார்கள் என்பதை இன்றிரவு தெரிந்து கொள்ளலாம்.

A பிரிவில் இந்தியா தான் என்பது உறுதியாகத் தெரிந்தாலும், யார் கண்டார் ஆஸ்திரேலியாவுக்கு சறுக்கியது, இந்தியாவுக்கும் நடக்கலாம்...

எனினும் இன்று மாலை நடக்கவிருக்கும் இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டம் தான் விறுவிறுப்பாக இருக்கப் போகிறது...

இரண்டு அணிகளில் யார் பலம் பொருந்தியது என்று சொல்லத் தெரியவில்லை..

எனினும் மேற்கிந்தியத் தீவுகள் கெய்லின் அதிரடி,அசுர துடுப்பாட்டத்தையே மிக அதிகளவில் நம்பியிருப்பதாக நினைக்கிறேன். அவர் சறுக்கினால் அணியும் சறுக்கி விடுகிறது...

எனினும் இலங்கை அணி சமபலம் பொருந்திய அணி என்பதோடு, எந்தவொரு அணியையும் அச்சுறுத்தக் கூடிய பல வீரர்கள் இலங்கை அணியில் இருக்கிறார்கள்.

முன்னொரு பதிவில் அஜந்த மென்டிசின் ஆட்டம் எல்லாம் இந்தியாவுடனும்,பாகிஸ்தானுடனும் தான் என்றும் ஆஸ்திரேலியாவுடன் மோதும் போது நடப்பதைப் பாருங்கள் என்று சொன்னவர்கள் எல்லாரும் அவுஸ்திரேலியா அணியை மென்டிஸ் உருட்டியதைப் பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன்...


பொன்டிங்கே சொன்னது போல மாதக் கணக்காக வீடியோ பதிவுகள் போட்டுப் பார்த்தும் பயனில்லாமல் மென்டிசை மந்திரவாதி என்று புகழ்கிறார்கள் ஆஸ்திரேலியர்கள்...

தான் தலைமை தாங்கிய முதலாவது போட்டியிலேயே வெற்றியுடன், அரைச் சதம், போட்டி சிறப்பாட்டக்காரர் விருது என்று கலக்குகிறார் சங்ககார..

சங்கா & முரளி - வெற்றிகளை நோக்கி...

என்னை இன்னமும் அவர் மேல் வைத்துள்ள மதிப்பை உயர்த்திய விடயங்கள் அவுஸ்திரேலியா அணிக்கெதிராக இலங்கை அணித்தேரிவு மற்றும் பந்துவீச்சாளர்களைக் கையாண்ட விதம்.

மக்ரூப், இந்திக்க டீ சேரம், துஷார, ஒரு நாள் தரப்படுத்தல்களில் முதலாம் இடத்தில் இருக்கும் நுவன் குலசேகர போன்றோரை அணியில் எடுக்காமல் அனுபவம் குறைந்த என்ஜெலோ மத்தியு, இசுரு உதான போன்றோரை அணியில் இணைத்தது ஒரு ரிஸ்க் என்றே என்னைப் போல் பலரும் யோசித்திருக்கக் கூடும்.. இருவருக்கும் அதுவே முதல் போட்டி வேறு...

ஆனால் அவர்களின் பங்களிப்பு.. மத்தியுவின் ஆரம்ப ஓவரிலேயே வோர்னர் ஆட்டமிழந்தார்..
உதான இரண்டு விக்கெட்டுக்கள்..

சங்கா ஆஸ்திரேலியாவை ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம் மத்தியுவையும், சனத் ஜெயசூரியவையும் ஆரம்பப் பந்து வீசப் பயன்படுத்தியது..

அவுஸ்திரேலியா அணியைத் தோற்கடித்த அளவுகடந்த இறுமாப்போடு இன்று களமிறங்க மாட்டார்கள் என்று நம்பியிருப்போமாக..

சங்கக்கார என்னும் கூர்மையான கிரிக்கெட் அறிவு கொண்ட ஒருவரின் தலைமையில் இலங்கை அணி தொடர்ந்து வெற்றி நடை போடும் என்றே நான் நம்புகிறேன்..

டோனி இந்திய அணிக்குக் கொடுத்த புது இரத்தப் பாய்ச்சல் போல இப்போது சங்கா இலங்கைக்கு மாற்றங்கள் ஏற்படுத்தும் வேளை..


இன்றைய போட்டியில் இன்னுமொரு சிறப்பம்சம், Twenty 20 வரலாற்றில் இது நூறாவது போட்டி..

இந்த T 20 போட்டிகளில் அதிகளவான போட்டிகளை விளையாடிய அணிகள் ஆஸ்திரேலியா, நியூ சீலாந்து (தலா 23 போட்டிகள்)

இவையே அதிக தோல்விகளையும் சுவை பார்த்தவையும் இவையே.. 12

அதிக வெற்றிகளை பெற்றிருக்கும் அணி பாகிஸ்தான். (19 போட்டிகளில் 14 வெற்றிகள்)
தென் ஆபிரிக்கா (20 போட்டிகளில் 13 வெற்றிகள்)

ஆச்சரியமான விடயம் என்னவென்றால் T 20 போட்டிகளை விளையாடிய அணிகளில் அயர்லாந்து மட்டுமே இதுவரை எந்தவொரு போட்டியிலும் தோற்காத ஒரே நாடு.

இன்று இந்திய அணி அயர்லாந்துக்கு முதலாவது தோல்வியை வழங்குமா? அல்லது அயர்லாந்து அடுத்த அதிர்ச்சியை அளிக்குமா?

இரண்டே இரண்டு வீரர்கள் மாத்திரமே தொழில்சார் வீரர்களாக அயர்லாந்துக்காகக் களம் இறங்குகிறார்கள்.ஏனைய அனைவரும் இரண்டாம் சுற்று ஆட்டங்களில் பங்கெடுக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளதால் தங்கள் மேலதிகாரிகளிடம் மேலதிக விடுமுறை கேட்டிருக்கிறார்களாம்.

அரையிறுதி வரை பயணித்தால் இன்னும் கடின முயற்சியோடு அதிர்ஷ்டம் தான்.

அடுத்து இந்திய அணி..

இந்த அணியை என்ன செய்து வீழ்த்தலாம் என்பதே ஏனைய எல்லா அணிகளுக்கும் இருக்கும் கவலை..

அணியின் சமச்சீர்த் தன்மை தொடக்கம், அனைத்து துறைகளிலும் பலம், நுண்ணியமான முடிவுகளை எடுக்கக் கூடிய தலைமை, எந்தவொரு அணியையும் அடித்து நொறுக்கி, போட்டிகளின் முடிவுகளைத் தலைகீழாக்கக் கூடிய துடுப்பாட்ட வீரர்கள், யாரை எடுப்பது யாரை விடுவது என்னும் அளவுக்கு சிறப்பான பந்து வீச்சாளர்கள் என்று இந்தியா தான் T 20 போட்டிகளின் மிகச் சிறந்த அணி.

எனினும் இம்முறை சேவாக் இல்லாதது (தோனியோடு மோதல் என்று முன்னர் சொல்லப்பட்டது;பின்னர் தோட்பட்டை காயம் காரணமாக இப்போது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.. மர்மம் துலங்கும்) இனிவரும் போட்டிகளில் இந்தியாவில் பாதிக்கலாம்..

எனினும் இம்முறை நான் பிரகாசிப்பார் என்று எதிர்பார்த்த சுரேஷ் ரேய்னாவுக்கு மேல் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் ரோகித் ஷர்மா, கம்பீர், யுவராஜ் என்று இந்திய அணிக்கு அள்ள அள்ளக் குறையாத வளங்கள்..

தோனி மட்டும் தன்னை துடுப்பாட்ட வரிசையில் மேலேடுக்காமல் ரேய்னாவை மூன்றாம் இலக்கத்தில் ஆட அனுப்பலாம் என்றே தோன்றுகிறது.

இன்று இலங்கையும் இந்தியாவும் தத்தம் போட்டிகளில் வென்றால் அடுத்த சுற்றில் இவ்விரு அணிகளும் ஒரே பிரிவில் விளையாடும்.. எனினும் இந்திய பாகிஸ்தானிய அணிகள் இனி சந்தித்தால் அது அரையிறுதி அல்லது இறுதியில் தான்.. (இரண்டில் ஒன்று முன்னமே வெளியேறா விட்டால்)

மற்றைய அணிகளில் தென் ஆபிரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் , நியூசீலாந்தும் சவால் விடக் கூடிய அணிகளாகத் தெரிகிறது..

இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறக்கூடிய அத்தனை தகுதிகளும், வேகம்,உத்வேகம்,பலம் ஆகியனவும் ஸ்மித்தின் தென் ஆபிரிக்க அணியிடம் இருக்கிறது.

மிக நீண்ட காலாமாக ஒரு முக்கிய வெற்றிக் கிண்ணம் கிடைக்காத ஏக்கத்தில் இருக்கின்ற தென் ஆப்ரிக்கர்கள் இம்முறை எப்படியாவது இந்தக் கிண்ணத்தைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்று திட சங்கற்பத்தோடு இம்முறை போராடி வருவது கண்கூடு.

நேற்றைய நியூ சீலாந்து அணிக்கெதிரான போட்டியில் இறுதிப் பந்துவரை போராடி ஒரு ஓட்டத்தால் வென்றதே எவ்வளவு தூரம் ஒவ்வொரு போட்டிம் சிரத்தை காட்டுகிறார்கள் எனக் காட்டுகிறது.

ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் தென் ஆபிரிக்க வீரர்கள் களம் இறங்கும் போது பாருங்கள்.. எவ்வளவு உறுதி,ஒற்றுமை அவர்களிடம் தெரிகிறதென்று.

மேற்கிந்தியத் தீவுகள் இடையிடையே அச்சுறுத்தினாலும் கெயில் தான் அங்கே விஸ்வரூபம் எடுத்து தெரிகிறார். சர்வான், எட்வர்ட்ஸ், சந்தர்போல், பிராவோ போன்றோர் தங்களை நிரூபித்துக் காட்டவேண்டும்.
நியூ சீலாந்தை நானும் பல காலமாக Twenty 20 போட்டிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட சிறப்பான அணிஎன்றே கருதி வந்திருக்கிறேன்.அதற்கேற்ற சகலதுறை வீரர்கள்,அதிரடி துடுப்பாட்ட வீரர்கள்,நுணுக்கமான பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், எதோ ஒரு குறை காணப்படுவது தெரிகிறது.
என்னான்னு தெரிஞ்சா யாராவது சொல்லுங்களேன்...

இன்னுமொரு சிக்கல் காயங்கள் மற்றும் உபாதைகள்..

அணித் தலைவர் வெட்டோரியின் காயம் இன்னும் குணமடையவில்லை.. நேற்று நியூ சீலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் டெய்லருக்கும் காயம்.. இன்னும் ஒரு சிலரும் தடுமாறுகிறார்கள்..

அரையிறுதி வாய்ப்பு கொஞ்சம் சிரமமே..

பாகிஸ்தானும் இங்கிலாந்தும் பரவாயில்லை ரகமே.. இவ்விரு அணிகளுக்கும் இருக்கும் பெரிய பிரச்சினையே தங்கள் முழு ஆற்றல்களையும் தேவையான போது பயன்படுத்த முடியாமல் இருப்பதே.

இரண்டு அணிகளுமே தத்தமது முதல் போட்டிகளின் பின்னர் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான பின்னர் அடுத்த போட்டியில் ரோசத்தோடு விளையாடி அபாரமான வெற்றி ஈட்டியவை..

எனினும் இந்தியா, தென் ஆபிரிக்கா,இலங்கை அணிகளுக்கு இவை ஈடு கொடுக்குமா என்றால் சந்தேகம் தான்..

இப்போதைக்கு இந்தியா தென் ஆபிரிக்க இறுதிப் போட்டிக்கே வாய்ப்பிருப்பதாக நான் கருதுகிறேன்.. (அரை இறுதியில் இவை சந்திக்காவிட்டால்)

ஆனால் இலங்கை இந்தியா இறுதி போட்டிக்கு வந்தால் நல்லா இருக்கும் என மனம் ஆசைப்படுகிறது..

இன்னொரு விஷயம் பார்த்தீர்களா?

இம்முறை IPLக்கு தமது வீரர்களை அதிகளவில் அனுப்பாத/ வீரர்கள் விளையாடாத அணிகள் தடுமாறி இருக்கின்றன.. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் ..

இதுவரைக்கும் பல விறுவிறுப்பான போட்டிகள் பார்த்து விட்டோம்.. நேற்றைய தென் ஆபிரிக்க நியூசீலாந்து போட்டியை விட நெதர்லாந்து இங்கிலாந்தை இறுதிப் பந்தில் வென்ற முதல் போட்டி தான் best.

இன்னும் பல நெருக்கமான, இறுதிப் பந்துவரை இதயத் துடிப்புக்களை எகிற வைக்கின்ற போட்டிகள் இனித் தான் வரப் போகின்றன..
அதுமட்டுமல்லாமல் எத்தனை புதிய சாதனைகள் படைக்கப்படுமோ என்ற கேள்வியும் இருக்கிறது...

இருந்து பார்ப்போமே...

கிரிக்கெட் பிரியர்களுக்கு இன்னொரு விஷயத்தை ஞாபகப்படுத்தலேன்னா என் தலை வெடிச்சிடும்...

இப்போது உலகக் கிண்ணம் நடைபெறும் இதே இங்கிலாந்தில் நாளை முதல் மகளிருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்கின்றன..
எட்டு அணிகள் பங்கேற்கின்றன...

உங்களுக்காக எட்டு மகளிர் அணித்தலைவிகளும் உலகக் கிண்ணத்தோடு எடுத்துக் கொண்ட படம் ஒன்று...

படங்கள் நன்றி cricinfo

பி.கு - கொஞ்சம் நீளம் தான்.. என்ன சிறது.. எழுத ஆரம்பித்தால் கை தான் நிறுத்துதில்லையே...


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner