December 31, 2009

2009இன் ஹீரோ A.R.ரஹ்மான்!நேற்று எனது காலை நேர நிகழ்ச்சி விடியலில் (www.vettri.lk)இந்த 2009ம் ஆண்டு விடைபெறுவதை முன்னிட்டு நேயர்களுக்கான தலைப்பாக

2009ம் ஆண்டின் பிரபலம் (ஹீரோ / ஹீரோயின்) யார்?

என்பதை வழங்கியிருந்தேன்.

உலகளாவிய ரீதியல் யாரை வேண்டுமானாலும் குறிப்பிடலாம்; சர்ச்சைகளாலென்றாலும் பரவாயில்லை, சாதனைகளாலென்றாலும் சரி – குறிப்பிடும் அந்த நபர் இந்த ஆண்டில் அதிகம் அறியப்பட்டவராகவும், ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

தொலைபேசி, sms, மின்னஞ்சல் வழியாக மட்டுமல்லாமல், இந்தத் தலைப்பை நான் ட்விட்டர், Facebook வழியாக நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபோது ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

நாட்டின் சூழ்நிலை அறிந்தும் கூட ஏராளமானோர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர்.

ஆரம்பத்தில் ஒரு சிலரின் பெயர்களை இவர் பெயரைச் சொன்னார்கள் என்று சொன்னாலும் பின்னர் எல்லோர் நன்மை கருதியும் அவரைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொண்டேன்.

முதல் இரண்டு இடங்களுக்குள் கடுமையான போட்டி நிலவியது. நூற்றுக்கு மேற்பட்ட, பலதுறைகளையும் சேர்ந்தவர்கள் எமது நேயர்களால் குறிப்பிடப்பட்டார்கள்.

2009இன் பிரபலம் யார்?

இசைப்புயல் A.R.ரஹ்மான் : 148
இலங்கைக்கிரிக்கெட் வீரர் T.M.டில்ஷான் : 136
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா : 90

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 56
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 56

சச்சின் டெண்டுல்கர் : 52
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் M.S. தோனி : 48
மறைந்த பொப் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜக்சன் : 38
நடிகர்களான சூர்யா மற்றும் விஜய் : 22

ஒஸ்கார் விருது, நோபல் பரிசு, கிரிக்கெட் சாதனைகள், இலங்கையில் யுத்தம் முடிவு, இலங்கை ஜனாதிபதித் தேர்தல், மைக்கேல் ஜக்சன் மரணம், கமலின் பொன்விழா, டைகர் வூட்ஸ் காதல்கள், வேட்டைக்காரன், ஆதவன் என்று பல்வேறு காரணிகளும் இந்த வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்தியிருந்தன.தொடர்ந்து டைகர் வூட்ஸ், வீரேந்தர் சேவாக், ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், கமல்ஹாசன், அஜீத்குமார், முத்தையா முரளீதரன், ரிக்கி பொன்டிங், குமார் சங்கக்கார, இயக்குனர் சீமான், கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டன.

ஆனால் இவர்களைவிடவும் முதல் பத்து இடங்களிலுள்ளவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு எனது பெயரையும் வாக்களித்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள். (வெற்றி, விடியல், சாகித்திய விருது, டயலொக் என்று காரணங்கள்)

உங்களது அன்பே பெரிய விருதுகள் என்பதனாலும் தேர்தலின் ஆணையாளர் நானே என்பதாலும் போட்டியில் என்னை இணைக்கவில்லை.


இன்னும் ஒவ்வொரு, இவ்விரு வாக்குகள் பெற்றவர்கள்... இவர்களில் பலபேரை நேயர்கள் குறிப்பிட்டபோது எனக்கு ஆச்சரியமேற்பட்டது.

தீக்குளித்த நா.முத்துக்குமார்
இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல்
லாகூர் தாக்குதல் சம்பவத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களைக் காப்பாற்றிய பாகிஸ்தான் பேருந்து சாரதி
கௌதம் கம்பீர்
மறைந்த கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பேர்ட்
சனத் ஜெயசூரிய
பாகிஸ்தான் இளம் பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர்
வெற்றி அறிவிப்பாளர் சந்துரு
டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்
ராகுல் காந்தி
பாடகர் பென்னி தயாள்
நடிகர் நகுல்
அன்ட்ரூ ஸ்ட்ரோஸ்
நடிகை நயன்தாரா
இசையமைப்பாளர் விஜய் அன்டனி
நம்ம ஹீரோ கஞ்சிபாய்
சோனியா காந்தி
ஏஞ்சலோ மத்தியூஸ்
யூனிஸ் கான்
டென்னிஸ் வீராங்கனை கிம் கிளைஸ்ஜர்ஸ்
நடிகர் ஜெயம் ரவி
பேப்பர் தம்பி
G.V.பிரகாஷ் குமார்
நமீதா
ஸ்ருதிஹாசன்
விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்)

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இருவருக்கும் சக அளவில் வாக்குகள் கிடைத்தது அதிசயம்! இது ஏதாவது விஷயம் சொல்கிறதா என 'விஷயம்' அறிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்!

அழிவுகள், அனர்த்தங்கள், அமைதி, அகதிவாழ்வு, புதிய மாற்றங்கள், பொருளாதார சரிவு, புதிய பயணம் என்று பலரது பத்தும் தந்து 2009 விடைபெற நாளை 2010 பிறக்கிறது.

அன்பு நண்பர்கள், சக வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பிறக்கும் 2010க்கான இனிய வாழ்த்துக்கள்!

வரும் வருடம் நிம்மதியும் - நெஞ்சுக்கு ஆறுதலையும் நேர்மையான திடத்தையும் தரட்டும்!

December 30, 2009

இலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு


நான் எனது முன்னைய பதிவில் எதிர்வுகூறியது போலவே, அடுத்துவரும் பங்களாதேஷ் முக்கோணத் தொடருக்கான இலங்கை அணியில் அதிரடியான, அவசியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அண்மையக் காலத்தில் பிரகாசிக்கத் தவறிய அத்தனை பெரிய தலைகளுக்கும் ஆப்பு.

இனிப் பொட்டி கட்டவேண்டியது தானா?

அண்மையில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருபது ஆண்டுகளைப் போற்ர்த்தி செய்த சனத் ஜெயசூரிய, கொஞ்சக் காலமாக உலகின் அத்தனை துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்திவந்த பந்துவீச்சாளர்கள் லசித் மாலிங்க, அஜந்த மென்டிஸ் மற்றும் எதிர்காலத் தலைவர் என்று பில்ட் அப் கொடுக்கப்பட்டு வந்த சாமர கப்புகெடற ஆகிய நால்வருமே வெளியேற்றப்பட்ட பெரும் தலைகள்.

ஆனாலும் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட திலான் சமரவீர மத்திய வரிசைத் துடுப்பாட்ட வரிசைக்குப் பலமூட்ட எனத் தப்பித்துள்ளார்.

இலங்கை அணிக்கு மறுபக்கம் இன்னொரு இடி..
முக்கியமான நான்கு வீரர்கள் காயம் காரணமாக பங்களாதேஷ் செல்ல முடியவில்லை.

இந்தியத் தொடரில் விளையாடமுடியாமல் போன முரளிதரன், டில்ஹார பெர்னாண்டோ, அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரோடு கடைசிப் போட்டிக்கு முன்னதாக காயமுற்ற மகேல ஜயவர்தனவும் இலங்கை அணியில் இடம்பெறவில்லை.

இதன் காரணமாக அனுபவமில்லாத ஒரு இளைய அணியாகவே இந்த முக்கோணத் தொடரில் இலங்கை களமிறங்குகிறது.. போகிறபோக்கில் பங்களாதேஷும் இலங்கை அணியைத் துவைத்தெடுக்கும் போலத் தெரிகிறது.
மகேளவும் இல்லாததன் காரணமாகத் தான் சமரவீர தப்பித்துக் கொண்டார்.. ஆனால் தேர்வாளர்கள் கிழட்டு சிங்கம் சனத் மீது தமது இரக்கப் பார்வையை செலுத்தவில்லை.

இதேவளை சுவாரய்சமான விஷயம் என்னவென்றால் கொல்கத்தா இரவு விடுதி சம்பவத்தை அடுத்து தண்டனைக்கு உள்ளாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டில்ஷான் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரகசியமாக அவருக்கு எச்சரிக்கை&தண்டனை வழங்கப்பட்டத்தாக உள்ளகத் தகவல்கள் மூலம் அறிந்தேன்.

அண்மைக்காலமாக உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்துவந்த நால்வருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கப்படக்கூடிய,பாராட்டக் கூடிய விடயம்.

இந்த வருட ட்வென்டி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் முதல் தடவையாக இலங்கை அணிக்குத் தெரிவாகியுள்ளார் சாமர சில்வா. இந்தப் பருவ காலத்தில் கழகமட்டத்தில் வீகமாகவும்,தொடர்ச்சியாகவும் ஓட்டங்கள் குவித்துவந்த சில்வா தேசிய அணியில் விட்ட இடத்தை மீண்டும் நிரந்தரமாக்கிக் கொள்வாரா பார்க்கலாம்..
சிறிது காலம் முன்பாக சாமர இலங்கை அணியில் இல்லாத போட்டிகளை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது.

அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்த சுழல் பந்துவீச்சாளர் மாலிங்க பண்டார உள்ளூர்ப் போட்டிகளில் ஏராளமாக விக்கெட்டுக்களை வாரியெடுத்து மீண்டும் வருகிறார். ஆனால் தற்போது இலங்கை அணியின் முதல் சுழல் தெரிவு சுராஜ் ரன்டிவ் தான்.

காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் திலான் துஷார அணிக்கு வருவது இலங்கை அணிக்கு நிச்சயம் உற்சாகத்தை வழங்கும்.

நான்காமவர் வருவதில் எனக்கு மிகவும் திருப்தி..
20 வயதே ஆன இளம் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே.
ராகம கிரிக்கெட் கழகத்தின் வீரரான லஹிரு, இந்தப் பருவகாலத்தில் ஓட்டங்களை மலையாகக் குவித்துவந்துள்ள ஒருவர்.
எட்டு போட்டிகளில் இரு சதங்கள், ஐந்து அரைச் சதங்கள்.
இறுதியாக இடம்பெற்ற போட்டியில் கூட அவர் பெற்ற ஓட்டங்கள் 144 &74 .

இப்படிப்பட்ட ஒரு ரன் மெஷினை இனியும் எடுக்காமலிருந்தால் அது தவறு இல்லையா?

லஹிரு திரிமன்னே

லஹிரு திரிமன்னே பற்றி கடந்த சனிக்கிழமை 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியில் நான் எதிர்வுகூறியது - " இன்றும் சதமடித்துள்ள திரிமன்னே என்ற இந்த வீரரின் பெயரைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. வெகுவிரைவில் இலங்கை அணியில் இடம் பிடிப்பார்"

எப்பூடி?

பெயர்களைப் பார்க்கையில் இந்த இலங்கை அணி மிக அனுபவமற்ற அணியாகவும் பலத்தில் குறைந்ததாகவும் தெரிந்தாலும் கூட, ஆச்சரியங்கள் அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய திறமை உடையது என்று எண்ணுகிறேன்.

ஆனாலும் இது சங்கக்காரவுக்கு ஒரு சவால்..

ஆனாலும் சங்கக்கார மகிழ்ச்சியா இருக்கிறார்.. காரணம் இங்கிலாந்தின் லங்காஷயர் பிராந்தியத்துக்கு அடுத்த பருவகாலத்தில் விளையாடவுள்ளார்.
இந்தப் பிராந்தியத்துக்காக விளையாடும் மூன்றாவது இலங்கையர் சங்கா.. (முரளி,சனத்துக்கு அடுத்தபடியாக)

இந்தியா முழுப்பலத்தோடும் உத்வேகத்தோடும் ஆனால் சச்சின் இல்லாமலும் வருகிறது..
மறுபக்கம் ஊதிய,ஒப்பந்தப் பிரச்சினை காரணமாக பங்களாதேஷ் இன்னொரு மேற்கிந்தியத்தீவுகளாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது..

ஜனவரி நான்காம் திகதி இந்த முக்கோணத் தொடர் ஆரம்பிக்கிறது.

வெளிநாடுகளில் இன்று இரு கிரிக்கெட் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன..

ஆஸ்திரேலியா பாகிஸ்தானை வதம் செய்தது எதிர்பார்த்ததே..
இன்றைய வெற்றியுடன் பொன்டிங் மேலும் இரு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற தலைவர் (42 டெஸ்ட் போட்டிகள்) .. தனது முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோவை முந்தினார்.
தான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக வெற்றி பெற்றவர். (93 டெஸ்ட் போட்டிகள்)
அடுத்த பத்துக்கும் மேற்பட்டவர்களும் ஆஸ்திரேலியர்களே..
ஸ்டீவ் வோ, ஷேன் வோர்ன், க்லென் மக்க்ரா, அடம் கில்க்ரிஸ்ட்.....

ஆனால் தென் ஆபிரிக்காவின் சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்து தென் ஆபிரிக்காவை இன்னிங்சினால் மண் கவ்வ செய்தது யாருமே எதிர்பாராதது.
இதன் விளைவாக இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் இன்னும் நீடித்த காலம் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.December 28, 2009

அவமான ஆடுகளம்..இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரைக் கொல்கொத்தா போட்டி வெற்றியுடனேயே இந்தியா கைப்பற்றியிருந்ததனால், நேற்றைய டெல்லி ஒருநாள் போட்டியானது ஆரம்பத்திலேயே செத்த போட்டி (Dead Rubber) என்றே கூறப்பட்டது.

எனினும் நேற்று நடந்தது போல போட்டியின் பாதியில் இப்படி செத்துப்போகும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

கடும்பனி மூட்டத்துக்கு நடுவே நேற்று காலை 9 மணிக்குப் போட்டி ஆரம்பித்தபோதே ஆடுகள அறிக்கையை நேர்முக வர்ணனையாளர் வழங்கியபோது, டெல்லி பெரோஸ் ஷா கொட்லா ஆடுகளத்தில் காணப்பட்ட (Pitch report) வழக்கத்துக்கு மாறான வெடிப்புக்கள், பிளவுகள் பற்றிப் பெரிதாக எதுவும் சொல்லவில்லையே என யோசித்தேன்.

ஆரம்பத்திலிருந்தே பந்துகள் திடீரென அபாயகரமாக மேலெழுவதும், ஆச்சரியகரமாக நிலத்தோடு உருண்டு செல்வதுமாக இருந்தன.

இலங்கைத்துடுப்பாட்ட வீரர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை. டில்ஷானுக்கு கையில் அடி; ஜயசூரியவுக்கு விரல் மற்றும் முழங்கையில்; கண்டம்பிக்கு கையில் பந்துபட்டது; இறுதியாக முத்துமுதலிகே புஷ்பகுமாரவுக்கு தலையில் படவிருந்த பந்து கையைப் பதம் பார்த்ததோடு இனிப்போதும் என்று போட்டித் தீர்ப்பாளர் அலன் ஹேர்ஸ்ட்டினால் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.எனினும் 24வது ஓவர்கள் வரை நடுவர்களாலோ, போட்டித்தீர்ப்பாளராலோ, மைதானம் முதல் வீரர்களின் அணுகுமுறை, தலைவர்களின் சிந்தனைப்போக்குகள் வரை அக்குவேறு ஆணிவேறாக அலசிப்போடும் கிரிக்கெட் பண்டித நடுவர்களாலோ இந்த ஆடுகளம் பயங்கரமானது; கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்கு உகந்ததல்ல எனத் தீர்மானிக்க முடியாமல் போனது வெட்கம் &வேடிக்கை.

இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட இன்னொருவர் இந்திய அணியின் தலைவர் தோனி. 2 போட்டித்தடையின் பின்னர் மீண்டும் விளையாட வந்த தோனி பந்துகளையும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சியோடு மனிதர் பிடித்த விதம் அபாரம். எந்தவொரு 'பை' (bye) ஓட்டங்களையும் அவர் கொடுக்கவில்லை என்பதனைப் பாராட்டலாம்.

மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார இருவரும் வழங்கியுள்ள பேட்டியில், ஆரம்பத்தில் அபாயகரமான பந்துகளில் அச்சம்கொண்டாலும், ஆடுகளம் போகப்போக சரியாகிவிடும் என்று நம்பியிருந்ததாகவும், இறுதியாக புஷ்பகுமாரவின் தலைக்கு மேலெழுந்த பந்தோடு 'பொறுத்தது போதும்' என்று போட்டித் தீர்ப்பாளரிடம் சென்று பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு பிறகுதான் போட்டித்தீர்ப்பாளர் அவசரமாக விழித்து நடுவர்கள் டராபோரே, எரஸ்மஸ், அணித்தலைவர்கள், பயிற்றுனர்கள். மைதானம் பராமரிப்பாளர் ஆகியோரோடு மைதானத்தின் நடுவே கூட்டமொன்றை நடத்தி – போட்டியைக்கைவிடும் முடிவெடுத்தார்.

அதற்குள் டெல்லி கிரிக்கெட் அமைப்பினாலும் இரு அணிகளினாலும் அந்த அபாய ஆடுகளத்துக்கு அருகேயுள்ள மற்றொரு ஆடுகளத்தில் போட்டியை நடாத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டாலும் பல்வேறு காரணிகளால் அதன் சாத்தியமற்ற தன்மை குறித்து போட்டி மத்தியஸ்தர் மறுத்துவிட்டார்.

மைதானத்தை நிறைத்திருந்த அத்தனை ரசிகர்களுக்கும் எத்தனை பெரிய ஏமாற்றம்? உடனடியாகவே டெல்லி கிரிக்கெட் அமைப்பு பகிரங்க மன்னிப்பும் கோரி, ரசிகர்கள் வழங்கி டிக்கெட் பணம் மீளளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

எனினும் யாராவது ஒருவீரர் பாரதூரமாகக் காயமடைந்து, ஆயுட்காலத்துக்கே முடமாகியிருந்தால் தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்கள் நிறைந்த பருவகாலத்தில் காயமடைந்து ஒதுங்கியிருந்தாலே அவர்களுக்கும் அணிக்கும் எவ்வளவு பாதிப்பு?

தற்செயலாக யாராவது ஒரு இலங்கை வீரர் பாரதூரமாகக் காயமடைந்திருந்தால்?(டில்ஷான், சனத் ஜெயசூரிய ஆகியோரின் உபாதைகள் சம்பந்தமான முழுமையான மருத்துவ அறிக்கை இன்னமும் வரவில்லை.. இதனால் இவர்களின் கொல்கொத்தா இரவுக்கூத்து கொஞ்சம் பின் தள்ளப்பட்டு விட்டது என்பது இவர்களுக்கு ஆறுதலான செய்தி) இல்லை இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி முக்கியமான இந்திய வீரர் ஒருவர் பந்துபட்டுக் காயமுற்றிருந்தால்?
சர்வதேசக் கிரிக்கெட் ஒன்றும் கிட்டிப் புள்,கிளித்தட்டு இல்லையே..

பொறுப்பற்ற DDCA(டெல்லி மாவட்ட கிரிக்கெட் ஒன்றியம்), BCCI(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை) ஆகியன கண்டிக்கப்படவேண்டியன.

அணித்தெரிவில் இடம்பெறும் மோசடிகள் பற்றி அண்மையில் டெல்லி அணியின் தலைவர் வீரேந்தர் சேவாக் பொங்கி வெடித்த பின்னர், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கிளம்பி வருகின்றன. டெல்லி கிரிக்கெட்டுக்கு மேலும் ஒரு கரும்புள்ளி.

டெல்லியின் கிரிக்கெட் சபைத்தலைவர் அருண் ஜெய்ட்லி மீது மேலும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

முன்னாள் இந்திய வீரர்களும் கொதித்துப் போயுள்ளார்கள்..
நேற்று பயன்படுத்தப்பட்ட இந்த குறித்த ஆடுகளத்தில் இந்தப் பருவகாலத்தில் எந்தவொரு உள்ளூர்ப் போட்டிகளோ பயிற்சிப் போட்டிகளோ கூட நடைபெறாத நிலையில் எவ்வாறு சர்வதேசப் போட்டிகளை நடத்த நினைத்தார்கள் என்று அவர்கள் எழுப்பும் கேள்வி நியாயமானதே..

உடனடியாகவே நேற்றைய ஆடுகள அவமானத்துக்கும், ரசிகர்களின் ஆத்திரத்துக்கும் பொறுப்பேற்று டெல்லி சபையின் உபதலைவரும், முன்னாள் டெஸ்ட் வீரரும், டெல்லி மாவட்ட ஆடுகளங்கள், மைதானங்கள் பராமரிப்புக்குழுவின் தலைவருமான சேட்டன் சவுகான் பதவிவிலகியுள்ளார். அவருடன் ஒட்டுமொத்த பராமரிப்புக் குழுவும் விலகியுள்ளனர்.

உலகின் மிகப் பணக்கார விளையாட்டு அமைப்பாக இருந்தும் பல விடயங்களில் பொறுப்பற்று நடந்து – பண விடயத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாகவுள்ள இந்திய கிரிக்கெட் சபை காலம் கடந்ததாக மத்திய மைதானம் பராமரிப்பு – ஆடுகள குழுவைக் கலைத்துள்ளது.

இதெல்லாம் கண்கெட்ட பிறகான நமஸ்காரங்கள்...

டெல்லி பெரோஸ் ஷா கொட்லா மைதானம் அண்மையில் தான் புனரமைக்கப்பட்டு, ஆடுகளமும் புதிதாக இடப்பட்டது.

அதன் பின்னர் புதிய ஆடுகளம் என்பதனால் அடிக்கடி மைதானம் பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதன்பின்னர் நடைபெற்ற சில சாம்பியனஸ் லீக் வT20 போட்டிகள்,உள்ளூர்ப் போட்டிகள், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டி ஆகியன இடம்பெற்ற போதிலும், அந்தப்போட்டியின் போது ஆடுகளம் காட்டிய தன்மைகள் சர்வதேசப்போட்டிகளுக்கான ஆரோக்கிய அறிகுறிகளைக் காட்டவில்லை.

ஆஸ்திரேலிய விளையாடிய அந்த ஒருநாள் போட்டிக்கு முதல் நாள் பயிற்சிகளுக்காக வந்த பொன்டிங் கோபமாக இந்த டெல்லி மைதானம் பற்றி சொன்ன விஷயங்கள் இப்போது வெளியுலகுக்கு பல உண்மைகளை சொல்கின்றன..

ஆஸ்திரேலிய அணி பயிற்சிக்காக வந்தவேளை பயிற்சிக்கான அத்தனை ஆடுகளங்களும் ஈரமாக இருந்துள்ளன;பயிற்சிக்குரிய எந்தவொரு வசதியும் இருக்கவில்லை;மைதானப் பராமரிப்பாளரையும் தேடித் பிடிக்க முடியவில்லை.

அப்போதே இந்தியக் கிரிக்கெட் சபையும், டெல்லி கிரிக்கெட் சபையும் இதுகுறித்து நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

இப்போது பயங்கரமான, படுமோசமான ஆடுகளங்களும் ஒன்றாக மாறியுள்ள டெல்லி – கொட்லா இன்னும் 12 மாத காலத்துக்குள் இதுகுறித்த நடவடிக்கை எடுத்து. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடுகளப்பராமரிப்புக் குழுவின் அங்கீகாரம் பெறத்தவறின் சர்வதேச அந்தஸ்தை இழக்கும்.

2011ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணத்தை நடாத்தவுள்ள மைதானங்களில் ஒன்றாக உள்ள அந்தஸ்தையும் டெல்லி இழக்கும் அபாயம் உள்ளது.

இனியாவது இந்திய கிரிக்கெட் சபை விழித்துக் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுமா?

Money is not everything !!!!
பணம் மட்டுமே எல்லாம் அல்ல..December 26, 2009

என்னா அடி..


தலைப்பைப் பார்த்தவுடன் வேட்டைக்காரன் விமர்சனம் என்று தப்பாக எண்ணி நீங்கள் வந்திருந்தால் நான் பொறுப்பில்லை..

ஆனால் நான் நேற்று முன்தினம் வேட்டைக்காரன் பார்த்து விட்டேன்.. :) விமர்சனம் அல்லது எனது பார்வை அடுத்து வரும்..


குடும்பமாக அனைவரும் இலவசமாக செல்லக் கூடிய வாய்ப்பு இருந்ததால் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த கிரிக்கெட் போட்டியை வேண்டாவெறுப்பாக தியாகம் செய்துவிட்டேன்..
வீட்டிலிருந்து இலங்கை அணியின் ஐம்பது ஓவர்கள் முடிந்த பிறகுதான் கிளம்பினோம்.

இலங்கை அணியின் ஐம்பது ஓவர்கள் முடிவதற்கு நான்கு பந்துகள் இருக்கும் நிலையில் மின் விளக்கு கோபுரம் ஒன்று செயற்படாமல் இருபது நிமிடத் தடங்கல் ஏற்பட்ட பிறகு தான் நினைந்தேன் போட்டியில் இடையிடையே மீண்டும் இவ்வாறான தடங்கல்கள் ஏற்படலாம் என்று.

கொல்கொத்தா ஆடுகளம் பற்றி நான் அறிந்திருந்தவரை இலங்கை பெற்ற 315 ஓட்டங்கள் தோனியும்,யுவராஜும் இல்லாத இந்திய அணியினால் குறிப்பாக இரவு வேளையில் எட்டிப் பிடிப்பது சிரமாகவே இருக்கும் என நம்பித் தான் சென்றேன்.

ஆனால் நடந்தது???

இந்திய அணி திட்டமிட்டு, மிக நேர்த்தியாக இந்தப் பெரிய இலக்கை அடைந்தது.

கொல்கொத்தா மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கான தனது முன்னைய சாதனையை 12 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை தானே முறியடிக்க, சில மணிநேரங்களிலேயே இந்தியா அதைத் தன்வசமாக்கியது.

அது மட்டுமா? தொடரும் இப்போது இந்தியா வசம்.

சேவாக் தலைமைப் பதவியில் தான் மிக சந்தோஷமாக உள்ளதாக சொல்கிறார்.
தோனி இல்லாத இரண்டு போட்டிகளிலும் அந்தக் குறையே தெரியாமல் இந்தியா இரு அபார வெற்றிகளைப் பெற்றது இந்தியாவின் அடுத்தகட்ட வீரர்களின் பலத்தை மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது.


இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான இந்தத் தொடரின் ஏனைய எல்லாப் போட்டிகளையும் போலவே, இந்த கொல்கத்தா போட்டியிலும் சாதனைகள் குறைவில்லாமல் சரிந்துவிழுந்தன.

இந்தப்போட்டிக்கென்று இலங்கை அணி நான்கு மாற்றங்களைச் செய்தமை குறிப்பிடத்தக்கது. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இருப்பை நீடிக்கப் போராடிவரும் 40வயது இளைஞர் சனத் ஜெயசூரியவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்புக்கிடைத்தது.

எனினும் சனத் அதைச் சரியாக பயன்படுத்தவுமில்லை. அதற்கு முதல் நாள் அவர் நடந்துகொண்ட விதமும் சரியில்லை.

கிரிக்கெட் வீரர்கள் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பதும், களியாட்டங்களில் ஈடுபடுவதும் தப்பில்லை. அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைளூ எனினும் போட்டியொன்றிற்கு முதல் நாள் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி அதிகாலை 2 மணிவரை களியாட்ட விடுதியில் மது, மாதுவுடன் டில்ஷானும், சனத் ஜெயசூரியவும் களியாட்டத்தில் ஈடுபட்டது மிகத் தவறானது. அதுவும் இளையவீரர்களுக்கு வழிகாட்ட வேண்டிய சிரேஷ்ட வீரர்கள் இருவர் இவ்வாறு நடந்துகொண்டது கண்டிக்கப்படவேண்டியது.

டில்ஷானின் முதலாவது மணவாழ்க்கை பல்வேறு காரணிகளால் முறிந்து – அந்த தடுமாற்றத்தில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் சிக்கி காணாமல் போகும் அபாயத்திலிருந்து அண்மையில் தான் மீண்டு - இரண்டாவது திருமணத்தின் பின்னர் பிரகாசிக்கிறார்.

மீண்டும் ஒரு குழப்படி, கிளுகிளுப்பு தேவையா?

முதலிரு போட்டிகளில் சதமடித்து அபார ஆட்டம் ஆடிய டில்ஷான், மூன்றாவது போட்டியிலும் விரைவாக 40 பெற்றாலும், நேற்று முன்தினம் சறுக்கினார்.

அவரது சக இரவுத் தோழன் சனத்தும் சறுக்கினார்.

இவர்களது இரவு நடத்தைக்கும் இந்தப் போட்டியில் குறைவாக ஆட்டமிழந்ததற்கும் சம்மதமுண்டா என்பது சம்பந்தமில்லாத கேள்வி. எனினும் இலங்கை கிரிக்கெட் இவர்கள் மீது எடுக்கவுள்ள நடவடிக்கை ரகசியமானது என்கிறது உள்வட்டாரம்.

எமது விளையாட்டு நிகழ்ச்சியான அவதாரத்திலே அடிக்கடி நான் புகழ்ந்து வந்த திஸ்ஸர பெரேரா இலங்கை சார்பாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 141வது வீரரானார். 14 பந்துகளில் அவர் ஆடிய துரித ஆட்டம் அறிமுகப் போட்டியில் ஒரு வீரர் பெற்ற வேகமான இனிங்ஸ் (Strike rate) என்ற சாதனை இப்போது திஸ்ஸர வசம்.

உபுல் தரங்கவின் 7வது ஒருநாள் சதம் - அவர் இந்தியாவிற்கு எதிராகப் பெற்ற முதல் சதம். 3 வருடங்களின் பின்னர் தரங்க சதமொன்றையும் பெற்றார்.

டில்ஷான் வழமையாக எடுத்துக்கொடுக்கும் அதிரடி ஆரம்பம் இம்முறை கொஞ்சம் தவறினாலும் தரங்க -சங்கக்கார சத இணைப்பாட்டம் இலங்கை பாரிய ஓட்ட எண்ணிக்கை பெறுவதை உறுதிப்படுத்தியது.

இவர்களது சத இணைப்பாட்டம் ஒருநாள் வரலாற்றில் 3வது விக்கெட்டுக்கான 400வது சத இணைப்பாட்டம்.

மஹேல, திஸ்ஸர பெரேரா, கண்டம்பி ஆகியோரின் அதிரடிகள் மூலம் 315ஐ இலங்கை அடைந்தது.

இலங்கை அணி தற்போது முரளீதரன், டில்ஷார பெர்ணான்டோ ஆகியோரை விட ஏஞ்சலோ மத்தியூஸையே இழந்திருப்பதை அதிகமாக உணர்கிறது.

அடுத்த போட்டியில் இஷாந்த் சர்மா அணியில் இடம்பெறமாட்டார் என உறுதியாக சொல்லலாம். இலங்கை அணியைப் பொறுத்த வரை அவர் ஓட்டங்கள் வழங்கும் ஒரு வள்ளல்.

இந்தியாவின் இரு பெரும் விக்கெட்டுக்களான சேவாக்கும், சச்சினும் புதிய வீரர் சுரங்க லக்மாலினால் சுருட்டப்பட்ட பிறகு இலங்கை அணி இலகுவாக வென்றுவிடும் என்று பார்த்தால்...

என்னா அடி.. மரண அடி...
36 ஓவர்கள் - 224 ஓட்டங்கள்.

கம்பீரும் - கோளியும் காட்டிய நிதானம், ஆக்ரோஷம், அதிரடி இந்தியாவின் அடுத்துவரும் எதிர்காலத்தைப் பிரகாசமாகக் காட்டியுள்ளது.

இந்த 224 ஓட்ட இணைப்பாட்டம் இந்திய அணியின் இரண்டாவது மிகச்சிறந்த 3வது விக்கெட் இணைப்பாட்டமாக மாறியுள்ளது.

1999ம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியின் போது கென்யாவுக்கெதிராக டென்டுல்கரும், டிராவிடும் இணைந்து பெற்ற 237 ஓட்டங்களே இந்திய சாதனை.

கோளி - கன்னி சதம்
கம்பீர் - 7வது சதம்

இதே வருடத்தில் இலங்கையில் வைத்து கம்பீர் 150 ஓட்டங்களை எடுத்திருந்தார். நேற்று முன்தினம் ஆட்டமிழக்காமல் அதே ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றார்.

அத்தோடு இந்தப் போட்டியின் போது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 3000 ஓட்டங்களையும் கடந்திருந்தார். இந்த எல்லை கடந்த 15வது இந்தியவீரர் கம்பீர்.

இலங்கைப் பந்து வீச்சாளர்கள் எவராலும் இடைநடுவே எதுவித அழுத்தங்களையும் கம்பீருக்கோ, கோளிக்கோ கொடுக்க முடியாமல் போயிருந்தது.

யுவராஜ்சிங் இல்லாததால் தனக்குக் கிடைத்த அரியவாய்ப்பொன்றில் இலங்கைப் பந்து வீச்சாளர்களைக் கொத்து ரொட்டி போட்டிருந்தார் கோளி.

மறுபக்கம் முன்னைய ஒருநாள் போட்டிகளில் பெரிய பெறுபேறுகள் காட்டாமலிருந்த கம்பீரும் காய்ச்சி எடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது பெற்றும் அதை அப்படியே கன்னிச்சதம் பெற்ற கோளிக்கு வழங்கிய கம்பீரின் பெருந்தன்மை பெரியது.

சங்கக்கார ஆடுகளம், காலநிலை என்பவற்றை சரியாகக் கணித்திருக்கவில்லை என்று கூறுகிறார் இந்திய அணித்தலைவராகக் கடமையாற்றிய சேவாக். உண்மைதான்ளூ வழமையான மைதானங்களில் இரவில் துடுப்பெடுத்தாடுவது கடினம். ஆனால் கொல்கத்தாவில் பனியும் ஈரலிப்பும் இலங்கைப் பந்துவீச்சாளர்களையும் களத்தடுப்பாளர்களையும் சிரமப்படுத்திவிட்டது.

இந்தியா இலங்கைக்கெதிராக வென்ற தொடர்ச்சியான 5வது ஒருநாள் தொடர் இது. இலங்கை இந்தியாவைத் தோற்கடித்து 12 வருடங்களாகிறது. இந்தத் தொடரில் அடைந்த தோல்வியும் இலங்கைக்குப் பல புதிய பாடங்களைத் தந்துள்ளது. இவற்றைத் திருத்திக்கொண்டு இன்றும் சில வாரங்களில் வங்கத்தேசத்தில் இடம்பெறவுள்ள முக்கோணத் தொடரில் இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்குமா என்பது இப்போதைய கேள்வி.

அத்துடன் சுராஜி ரந்தீவ், சுரங்க லக்மால், திஸ்ஸர பெரேரா ஆகிய புது முகங்களின் புது ரத்தமும் இலங்கைக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடும்.

சனத் ஜெயசூரிய, அஜந்த மென்டிஸ், கபுகெதர ஆகியோர் இனி புது வழிகளைத் தேடவேண்டியது தான்.

மறுபக்கம் இந்திய அணிக்கும் ஆரோக்கியமான போட்டி – தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களில் ஒரு சதத்தையும், ஒரு அரைச்சதத்தையும் பெற்றுத் தன்னை நிரூபித்துள்ள கோளி, யுவராஜ், தோனி வந்தால் வெளியேவா?

பாவம் கோளி!

ஆனால் இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளர்களை கொஞ்சம் மெருகேற்றி Fine tune செய்ய வேண்டியுள்ளது.

நாளைய டெல்லி ஒருநாள் சர்வதேசப்போட்டி அர்த்தமற்ற ஒன்றாக இருந்தாலும், இலங்கை அணிக்கு ஒரு ஆறுதல் வெற்றியைப் பெற்றுக்கொஞ்சம் மரியாதையாக நாடு திரும்பவும், இந்திய அணிக்கு வாய்ப்புக்காகக் காத்துள்ள இளையவர்களுக்கு அவர்கள் தம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்பை வழங்கக்கூடியதாகவும் அமையவுள்ளது.

இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 20 சாதனை ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள மாத்தறை தந்த மன்னன் - சாதனை வீரர் சனத் ஜெயசூரியவுக்கு வாழ்த்துக்கள்.

அவர் பற்றிய படத்தொகுப்பு & பதிவு விரைவில்!

இலங்கை வென்றால் மட்டும் தான் பதிவா.. இலங்கை தோத்தாப் பதிவு போட மாட்டீங்களா என்று பெயரில்லா நண்பர் ஒருவர் அண்மையில் பின்னூட்டி இருந்தார்.. என் முன்னைய பதிவுகளைப் பார்க்கவில்லை போலும்..
அப்படித் தான் இருந்தாலும் எது பற்றிப் பதிவிடுவது என்பதை நான் தானே தீர்மானிக்கவேண்டும்..
என் பதிவுகள் எது பற்றி எனத் தீர்மானிப்பது என் மனமேயன்றி பெயரில்லா அவரல்ல. :)

கடந்தவார ஆணிகள் பலவற்றால் போடவேண்டும் என்று நினைத்த பல பதிவுகளே போடமுடியாமல் போன நிலையில் இவர் வேற.. ;)

December 19, 2009

இலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்ராஜ்கோட்டில் அன்று மூன்று ஓட்டங்களால் கை நழுவவிட்ட வெற்றியை இன்று அதே போன்ற ஒரு விறுவிறுப்பான போட்டியில் கடைசி ஓவரில் அடைந்துள்ளது இலங்கை அணி..

மீண்டும் ஒரு 300 +ஓட்டங்கள் பெற்ற போட்டி.. மீண்டும் கடைசி ஓவர் முடிவு..

இந்திய ரசிகர்கள் இந்தத் தோல்விக்கு கடைசி நேரத்தில் தனது கவயீனத்தால் களத்தடுப்பில் தவறுவிட்ட சாகீர் கானை வசைபாடலாம்..

இலங்கை ரசிகர்களோ இலங்கை வென்ற உற்சாகத்தில் (இந்தியாவை சொந்தமண்ணில் வைத்து எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் வீழ்த்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமா?) சதங்களாகவும் சாதனைகளாகவும் குவித்துவரும் டில்ஷானையும், அணியைக் காப்பாற்றிக் கரைசேர்க்கும் பணியை ஆஸ்திரேலியாவின் முன்னைய பெவான் போல் பொறுபேற்றுள்ள மத்தியூசுக்கு பாராட்டு,நன்றிகளைக் கூறலாம்..

ஆனால் நாக்பூரின் கிரிக்கெட் அமைப்பு, அதன் மைதானப் பராமரிப்பாளர்கள் என்று இன்றைய போட்டியை மூன்று நாட்களுக்குள் திட்டமிட்டு,சீராக நடத்திய அத்தனை பேருக்கும் முதலில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நாம் சொல்லியே ஆகவேண்டும்.

தெலுங்கானாப் பிரச்சினை காரணமாக விசாகப் பட்டினத்திலிருந்து அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போட்டியை எந்தவித குறைகள், அவசர ஏற்பாடுகள் தெரியாமல் நடத்தியது உண்மையில் மிகப்பெரும் சாதனை.

இந்த மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி இதுதான்.
இதற்கு முதல் இந்தியா ஆஸ்திரேலியாவை அண்மையில் 99 ஓட்டங்களால் தோற்கடித்தது.(இந்தியா 354 , ஆஸ்திரேலியா 245 )
இன்று மீண்டும் ஒரு தட்டையான துடுப்பாட்ட சாதக ஆடுகளம்.. ஆனால் ராஜ்கோட்டை விட எவ்வளவோ மேல்..
பந்துவீச்சாளர்களுக்கு ஏதோ கொஞ்சமாவது இருந்தது.

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் ச்விங்கும், சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சுழலும் இருந்தன.

எனினும் ஓட்டங்கள் மலையாகவும், சிக்சர் பவுண்டரிகள் மழையாகவும் பொழிந்த வழமையான இந்திய ஒருநாள் போட்டி.. (மீண்டும் பரிதாபப் பந்துவீச்சாளர்கள்)

இந்தியாவுக்கு மீண்டும் யுவராஜ் இல்லாமல் ஒரு போட்டி..
ஆனால் அந்தக் குறை தெரியாமல், சேவாகும், கம்பீரும் குறைந்த ஓட்டங்களோடு ஆட்டமிழந்தது குறையாக அமையாமல், முதலில் சச்சின், கோளி.. பின்னர் தோனி, ரெய்னா என்று அதிரடி ஆட்டம் ஆடி இந்தியாவை 300 ஓட்டங்கள் தாண்ட செய்தார்கள்.

அதிலும் சச்சின்,கோளி இட்டுக்கொடுத்த அடித்தளத்திலே தோனியும் ரெய்னாவும் கடைசிப் பத்து ஓவர்கள் ஆடிய பேயாட்டம் இருக்கிறதே..
கடைசி பத்து ஓவர்களில் நூறு ஓட்டங்கள்.. தோனி சதம்.. அவரது ஆறாவது ஒருநாள் சதம் இது..
ரெய்னாவும் மூன்று சிக்ஸர்களோடு கிடைத்த வாய்ப்பில் சந்தில் சிந்து பாடினார்.

இலங்கை அணி இந்தப் போட்டிக்கு முன்னர் ராஜ்கோட்டில் கண்ட மூன்று ஓட்ட மயிரிழைத் தோல்வியினாலும், முரளி, மாலிங்க, டில்கார பெர்னாண்டோ ஆகியோரின் காயங்களினாலும் கலங்கிப் போயிருந்தது.
அதிலும் முரளி,டில்ஹார ஆகியோர் இந்தத் தொடரில் தொடர்ந்தும் பங்குபற்ற முடியாமல் இலங்கை வந்துவிட்டார்கள்.

போட்டியில் கடந்த போட்டியில் கற்றுக் கொண்ட பாடத்தின் மூலம் அதிரடியாக மூன்று மாற்றங்களை இலங்கை அணி மேற்கொண்டது. டில்ஹாரவின் காயம் காரணமாக நான்காவது மாற்றமும் நிகழ்ந்தது.

அதிரடி மன்னன் (முன்னாள் என்று சொல்வது தான் பொருத்தமோ??) சனத் ஜெயசூரிய, ஒருநாள் தரப்படுத்தலில் முதல் நிலை பெற்ற நுவான் குலசேகர, திலான் சமரவீர ஆகிய மூவரையும் வெளியேற்றி, சாமர கபுகெடர மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரோடு இரு அறிமுக வீரர்களையும் இன்றைய போட்டிக்கான அணிக்குள் கொண்டுவந்தது.
சுழல் பந்துவீச்சாளர் சுராஜ் ரண்டிவ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால்.

எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் கால்பதித்து இருபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் சனத் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் காலகட்டத்தில் இருக்கிறார் என்பது மிகத் தெளிவாக உணர்த்தப்படுகிறது.

சுராஜ் மொகமத் என்றும் அழைக்கப்படும் சுராஜ் ரண்டிவ், அண்மைக்காலமாகவே உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாகப் பந்துவீசி வரும் இளம்வீரர்.
இலங்கையின் 19 வயத்டுக்குட்பட்ட அணிக்காக விளையாடி தற்போது ப்லூம்பீல்ட்(Bloomfield) கழகத்துக்காக தன ஓப்ப் ஸ்பின் மூலமாக வெற்றிகள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்தும் வருபவர்.ஓரளவு துடுப்பெடுத்தடவும் கூடியவர்.

அண்மையில் தான் இவர் எதிர்கால இலங்கை அணியில் விளையாடுவார் என 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியில் எதிர்வு கூறியிருந்தேன்.

நேற்றுமுன்தினம் அவசரமாக அழைக்கப்பட்டு இன்று விளையாடிய சுராஜ் முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அதுவும் அவரது பந்து திரும்பும் கோணமும், சுழற்சியும் இந்தியவீரர்களை இன்று கொஞ்சமாவது தொல்லைப்படுத்தியது.
(மென்டிசும் இப்படித் தான் இதே மாதிரி இந்திய அணியுடன் பிரகாசித்து ஆரம்பித்தார்.. இப்போது??)

302 என்ற இலக்கு எந்த ஆடுகளத்திலுமே அவ்வளவு இலகுவான ஒன்றல்ல..(ராஜ்கோட் தவிர)


இலங்கையின் ஆரம்பமே அதிரடி+அசத்தல்..

டில்ஷான் இருக்க கவலை ஏன்?
டில்ஷானின் அசுர,அதிரடி போர்ம் தொடர்கிறது.
அடுத்தடுத்து அபாரசதங்கள்..
இந்த வருடத்தில் நான்காவது சதம்..

தரங்கவுடன் 14 ஓவர்களுக்குள் சத இணைப்பாட்டம்.

உபுல் தரன்கவைத் தொடர்ந்து சங்கக்கார, மகெல ஜெயவர்த்தன, கண்டம்பி ஆகியோரின் சராசரிப் பங்களிப்பு இருந்தபோதும் டில்ஷான் இருக்கும்வரை இலங்கை அணிப்பக்கமே வெற்றி வாய்ப்பு சாய்ந்திருந்தது.

டில்ஷான் ஆட்டமிழக்க இலங்கை அணி வழமையான எமக்குப் பழகிப்போன பதற்றம், தடுமாற்றத்துக்கு உள்ளாகியது.

இலங்கை,இந்திய அணிகள் விளையாடும்போது மட்டும் அடிக்கடி இப்படியாக இறுதிவரை வந்து எங்களை நகம் கடிக்கவைத்து, இதயங்களை வாய் வரை வந்து துடிக்க வைத்து, மாரடைப்பு வந்திடுமோ எனப் பயப்பட வைக்கும்படியாக போட்டிகளை விளிம்புவரை கொண்டுவருவார்கள்.

இரண்டு அணிகளுமே தத்தம் ரசிகர்களைப் பதறவைத்துவிடுகின்றன..
கொஞ்சம் பார்த்து விளையாடுன்கப்பா.. எத்தனை பேர் மாரடைப்பில் போகப்போறாங்களோ?

அண்மைக்கால இலங்கை அணியின் finisherஆக மாறியுள்ள மத்தியூஸ் இன்றும் கடைநிலை துடுப்பாட்டவீரர்களோடு இணைந்து இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்லவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்.

அனால் இந்த 21 வயது இளைஞனுக்கு தான் எத்தனை பக்குவம்?
கால் தசைப் பிடிப்பு வந்தபோதும் துடுப்பை சரியாகப் பிடிக்கவே தடுமாறும் மென்டிசையும் வழிநடத்தி கடைசி ஓவரில் வெற்றியை அடையவைத்தர்.
அபாரம்..

ஆனால் தோனி பந்துவீச்சாளர்களை சரியாகக் கணிக்காமல் நல்ல பந்துவீச்சாளர்களை அவசரமாக முதலிலேயே முடித்ததும், இந்திய வீரர்களின் அண்மைக்காலமாக இருந்துவரும் மோசமான களத்தடுப்பும் இந்திய அணிக்கு வில்லன்களாக மாறியது.
கைக்குள்ளேயே சென்ற பந்தைக் கோட்டைவிட்டு நான்காக மாற்றிய சாகீர் கான், அடுத்தடுத்த பந்தில் கொஞ்சம் சிரமமான பிடியையும் நழுவவிட்டார்.
போட்டி ஆரம்பிக்குமுன் தோனி கவலைப்பட்ட களத்தடுப்பு பலவீனம் மீண்டும் காலை வாரிவிட்டது.
றொபின் சிங்கை மீண்டும் பயிற்சி வழங்க அழைக்குமா இந்தியா?

இலங்கை வீரர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல.. தம் பங்குக்கு பிடிகள்,பந்துகளைக் கடைசி நேரம் தானம் வழங்கினார்கள்.. வழிகாட்டி தலைவர் சங்கக்கார.. ஸ்டம்பிங் வாய்ப்பு, பிடிஎடுப்பு என்று தாரளமாக விட்டார்.(பஞ்சாப் ராணி ப்ரீத்தி சிந்தா கனவிலே வந்தாரோ???)

இந்த வெற்றியின் மூலம் தொடர் சமப்பட்டுள்ளது.. இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளன..

டில்ஷானின் போர்ம் கலக்கலாக உள்ளது..இவ்வளவு காலமும் இதை எங்கே வைத்திருந்தாய்?
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்தபின் தான் அத்தனையும் வருகிறதா?

அடுத்தபோட்டியிலும் சதம் அடித்து சாதனை படைப்பாரா பார்க்கலாம்..

பிந்திக் கிடைத்த தகவல் ஒன்று.. ஸ்ரீசாந்த் போலவே யுவராஜ் சிங்குக்கும் பன்றிக் காய்ச்சல் தோற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதாம்..
உறுதியாகத் தெரியவில்லை..


இன்னொரு மகிழ்ச்சியான செய்தி..
என் வலைத்தளத்தைத் தொடர்வோர்(Followers) தற்போது 300 ஆக மாறியுள்ளார்கள்.. நன்றி நண்பர்களே.. உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறேன் என நம்புகிறேன்..பி.கு - என்னிடமிருந்து வேட்டைக்காரன் விமர்சனம் எதிர்பார்க்கும் அன்புள்ளங்களே, இன்னும் பார்க்கவில்லை.. பார்க்காமலே எழுதலாம் என்றாலும், பார்த்தபின் எழுதுவதே பழக்கம் என்பதால், இலவச டிக்கெட் கிடைக்கும் திங்கள் வரை காத்துள்ளேன்..
சனி,ஞாயிறு வெளிவேலை இல்லாமல் கொஞ்சம் ப்ரீயாக குடும்பத்தினரோடு இருக்க விரும்புகிறேன்.. :)

December 18, 2009

வேட்டைக்காரனும் ஜனாதிபதி தேர்தலும்நான் இப்போ தினமும் டயலொக் செல்பேசிகளில் காலை தலைப்பு செய்திகள் வாசிக்கிறதை அறிந்திருப்பீர்கள்.எத்தனை பேர் கேக்கிறீங்கன்னு தெரியாது.. ஆனால் நம்ம நண்பர் கஞ்சிபாய் மட்டும் தவறாமல் கேட்பதோடு ஒவ்வொரு செய்திக்குமே மறக்காமல் பின்னூட்டம் அனுப்புகிறார்.. (அங்கேயும் பின்னூட்டமா என்று ரூம் போடாதீங்க)

அவை எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக..

இங்கே தரப்பட்ட செய்திகளுக்கோ, கஞ்சிபாய் சொல்லியுள்ள நச் & நக்கல் கொமெண்டுகளுக்கோ நான் எந்தவகையிலும் பொறுப்பாளி அல்ல (அப்பாடா)


செய்தி - சிவாஜிலிங்கம், சிறீக்காந்தா டெலோவிலிருந்து விலகல் - செய்தி

கஞ்சிபாய் - இப்ப தானா?


செய்தி - "இலங்கைத் தமிழர்களுக்கு நம்பகமான தலைவர் எவரும் இன்று இல்லை" - தினக்குரல் செய்தி ஆய்வு

கஞ்சிபாய் - இதையெல்லாம் ஆய்வு செய்தாத் தான் எங்களுக்கு தெரியுமாக்கும்..
அப்போ தமிழினத் தலைவர் என்று சொல்லி ஒருத்தர் தினமும் கவிதை எழுதுறாரே அவர்?
செ - 'மகிந்த சிந்தனை' என்பது ஒரு
கனவுப்புத்தகம் - ஜே.வி.பி

க - அவரோட இருந்து உங்கட கட்சிக்காரர்
தானே அந்தப் புத்தகத்தையே கனவு கண்டு கண்டு உருவாக்கி – பெயரும் வச்சு – போஸ்டர் ஒட்டினீங்க?


செ - இலங்கை ஜனாதிபதித் தேர்தலில்
இம்முறை 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள்.

க - இவங்க எல்லோரும் நிற்கிறார்களா, நிற்க
வைக்கப்பட்டாங்களா? 2 பேரைத் தவிர வேற யாருக்கும் கட்டுப்பணம் திரும்பாது போல.


செ - சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில்
சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.

க - பேர்லயே தெரியுதே...(சிவாஜி)
சிங்கம் போல சிங்கிளாயே போறீங்களா?செ - யாழ்ப்பாணத்தில் ரணிலிடமிருந்து தமிழ்
மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகள்

க - செலவில்லாமல் அள்ளிவீசுவதற்கு
அதுதானே ஏராளமா இருக்கு.
வாக்குறுதிகள் கொடுப்பது மட்டும்தான் இவர் வேலை – மக்கள் வாக்கு கொடுத்த பிறகு நிறைவேற்றுவது ஜெனரலோ, மகிந்தவோ தானே...


செ - தேர்தல் விஞ்ஞாபனங்கள் வந்த பிறகே,
தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

க - அதுக்குள்ளே 'எல்லா' விஷயமும் 'பேசி'
முடிச்சிடுவீங்களா?
ஆனா இன்னும் எத்தனை பேர் சுயேச்சையா நிண்டிருப்பாங்களோ... நல்லகாலம் கட்டுப்பணம் கட்டுற காலம் முடிஞ்சுது.


செ - நெருக்கடியான காலத்தை நான் கடந்து விட்டேன் -வேட்பாளர் மஹிந்த தெரிவிப்பு

- ஆகா.. அப்பிடியா? இதுவும் வழமையான அறிக்கைகள் மாதிரியா?
அதுசரி ஐய்யா நீங்கள் கடைசியா நடிச்ச சிங்களப் படம் எது?


செ - பயங்கரவாதத்தை வென்றவன் ஜனநாயகத்தையும் வெல்வேன் -வேட்பாளர் பொன்சேகா தெரிவிப்பு

- அதே வழிமுறைகளைப் பயன்படுத்தியா? ஆகா கண்ணை மட்டுமில்லாமல் எல்லாத்தையும் கட்டுதே..

செ - தேர்தலின்போது அரச ஆளணிகள் பயன்படுத்தப்படக் கூடாது : ஆணையாளர் தெரிவிப்பு

- என்னைய்யா விவரம் இல்லாத ஆளா இருக்கீங்க. இதெல்லாம் இல்லாமல் என்ன தேர்தல்?எதுக்காக இப்ப வைக்கிறாங்க..


செ - பொன்சேகா காட்டிக்கொடுத்து
கூட்டுப்பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் – அமைச்சர் யாப்பா

- கூடச்சேர்ந்து செய்த கூடாத செயல்கள்
எல்லாத்தையும் கூட்டங்களில் சொல்லிவிடுவார் எண்டு தானே பயந்தீங்க? இப்ப தானே எல்லாம் வெளிவரத் தொடங்குது


செ - மூக்குடைபட்ட நிலையில் இத்தாலியப் பிரதமர் ஆஸ்பத்திரியில் அனுமதி;உதட்டிலும் காயம்

- மூக்குடைபடல் என்று சொல்வது இதைத் தானோ?
நம்ம நாட்டில் மட்டும் இப்பிடி எண்டால் எத்தனை பேரின் மூக்குகள் உடைஞ்சிருக்கும்..
குத்துறதுக்கு ஒரு பெரிய கியூவே நிண்டிருக்கும்..


செ - சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க அர்ஜுண ரணதுங்க தீர்மானம்

- அடிக்கடி மாறி ரன் அவுட் ஆகிடாதேங்கோ..


செ - சிவசக்தி ஆனந்தனின் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்து சிவாஜிலிங்கம் கடிதம்

- ஆகா நீங்களும் கடிதம் எழுதத் தொடங்கிட்டிங்களா?
கடிதம் எழுதிற சங்கரித் தாத்தாவைக் காணேல்லை என்று பார்த்தா இப்போ நீங்களா?


செ - வட, கிழக்கு மக்களுக்கு சுதந்திரம் மேல் மாகாண மீனவருக்கு மட்டும் தடையா? கேள்வி எழுப்புகிறார் ஜோன் அமரதுங்க

- ஐய்யா உங்களுக்கு யாரோ பிழையான தகவலைக் கொடுத்திட்டாங்கள்.. அப்பிடி எதுவுமே கிடைக்கலை ஐய்யா..


செ - பெரும்பாலான எமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது - அமைச்சர் டக்ளஸ்

- என்ன என்னவெண்டு விளக்கமா சொல்லுவீங்களோ? அப்ப நிபந்தனை எதுவுமே இல்லை என நீங்கள் சொன்னது????
ஓகோ.. நிபந்தனை வேறு கோரிக்கை வேறு தானே.. ;)


செ - தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை மிரட்ட ஆந்திராவில் புதிய கட்சி உதயம் - தினக்குரல் செய்தி

- ஆகாகா.. எப்பிடி எல்லாம் புதுசு புதுசா சிந்திக்கிறாங்கப்பா.. இது வேட்டைக்காறனைப் புறக்கணியுங்கள், புறக்கநிக்கிறவனைப் புறக்கணியுங்கள் மாதிரி ஒரு விளையாட்டா?
நடத்துங்கைய்யா.. நடத்துங்க..


செ - கொழும்பில் சவோய் திரையரங்கில்
வேட்டைக்காரன் திரையிடப்படவுள்ளது.

- பக்கத்தில உள்ள மெடி கிளினிக் 2
அம்பியூலன்ஸ் புதுசா வாங்கியிருக்காமே...
அதுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?


செ - கொழும்பு பொது வைத்தியசாலையில் நூறு பேர் அவசர அனுமதி.. காரணம் வேட்டைக்காரன் படம் பார்த்தது - வந்தியத் தேவன் எனக்கு அனுப்பிய sms .

- என்னாது? வெறும் நூறு பேர் தானா?
ஓகோ மத்தவங்கள் எல்லாம் ஒன் தி ஸ்போட்டா?

அதுசரி அண்ணே, உங்க மூக்கையும் மூஞ்சியையும் பத்திரப்படுத்திக்கொங்க..


நாட்டு நடப்புக்களை இதைவிட தெளிவாக சொல்ல வேறு வழி தெரியல.. :)


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner