கலைஞர்,ரித்தீஷ் & கேப்டன்

ARV Loshan
11
கலைஞர் டிவியில் சனிக்கிழமை – நட்சத்திர கிரிக்கட்

எக்கச்சக்க தொழிநுட்ப தொலைத்தொடர்பு சொதப்பல்களோடு 'நேரலை' என்று போட்டபடியே ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் காட்டினார்கள்.

ஏற்கெனவே இப்படிப்பட்ட நட்சத்திர கிரிக்கட் போட்டிகளைப் பார்த்து போரடித்திருந்தாலும் சனிக்கிழமை அதிகநேரம் வீட்டில் இருந்ததனால் கடனே என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஜே கே ரித்திஷ் கூட விளையாடுகிறார்(!) என்றவுடன் கொஞ்சம் அதிக ஆர்வம்! சரி என்னதான் செய்கிறார் என்று பார்க்கலாம் என்று!

போட்டி ஆரம்பிக்கும் போதே 'இலங்கைத் தமிழருக்கு நிதி சேகரிப்பு என்ற நல்ல நோக்கத்துக்கான போட்டி என்றார்கள். உண்மையாகவிருந்தால் நல்லது!

ஆனால் சேர்க்கப்பட்ட நிதி யாரிடம் எப்படி கொடுபடப் போகிறது? போய்ச்சேர  வேண்டியவரிடம் சேருமா என்பதே முக்கியமான கேள்வி!

கனிமொழி M.P  நாணய சுழற்சி செய்துவைக்க அரசியல் திருமணங்களில் தாலி எடுத்துக் கொடுப்பது போல மங்களகரமாகப் போட்டி ஆரம்பமானது.

உண்மையில் விக்ராந்த்,ஜீவா போனறோரின் துடுப்பாட்டம் தொழில்முறை ஆட்டக்காரர்களின் துடுப்பாட்டம் போலவே அமைந்திருந்தது. இந்திய கிரிக்கட் அணி இனி கவலைப்படத் தேவையில்லை! யாராவது துடுப்பாட்ட வீரர் Out of form என்றாலும் விக்ராந்த் ஒரு சேவாக் போல இருக்கிறார்.

பின்னர் பந்துவீச்சிலும் நேர்த்தியான சில பந்துவீச்சாளர்களைக் கண்டேன். பார்க்கப் போனால் சென்னை நடிகர்கள் அணியில் விளையாடிய ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் நடித்து எங்களை சோதனை செய்து ரோதனை தருவதைவிட கிரிக்கெட்டையாவது உருப்படியாக விளையாடலாம்.

ஆனா நம்ம வீரத்தளபதி J.K.ரித்திஷ் இருக்கிறாரே- 

துடுப்பாட்டத்தில் அவர் ஒரு சச்சின்

களத்தடுப்பில் ஒரு ஜொன்டி ரோட்ஸ் -

அப்படி ஒரு திறமைசாலி அமைவது ரொம்ப கஷ்டம்.

அவரையெல்லாம் சென்னை அணியில் சேர்த்த நேரத்தில் நம்ம விஜயகாந்த்,பிரபு,ராமராஜன்,சரத்குமார் போன்றோரையும் அணியில் சேர்க்காமல் விட்டது எவ்வளவு பெரிய துரோகத்தனம்.

ரமணா என்கிற ஒரு பெயரே தெரியாத ஒருவரைத் தமிழ் நடிகர்களின் அணிக்குத் தலைவராக போட்டதை விட, ரித்தீஷையோ, இல்லேன்னா குறைந்த பட்சம் 'தல'யாகவே மாறிக் கொண்டிருக்கும் சிம்புவையோ போட்டிருக்கலாம்.. 

இல்லேன்னா பெயரிலேயே கேப்டன் என்றிருக்கும் புரட்சிக் கலைஞரை அணியின் தலைவராகப் போட்டிருந்தால் அணி கொஞ்சம் வெயிட் கூடியிருக்குமே..அடுத்த முறையாவது இந்த நண்டு,சுண்டு பையன்களைப் போடுவதற்குப் பதிலாக கொஞ்சம் வெயிட்டாக இருக்கும்.. 



இந்த இடத்தில் நேர்முக வர்ணனைப்பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பினர் சின்னிஜெயந்தும் மகேஷ்வரியும். விதிகளும் தெரியாமல் விளக்கங்களும் தெரியாமல் புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தார் சின்னி.

அவருடன் பின்னர் சேர்ந்து கொண்ட புகழ்பெற்ற S.M.A.ஜப்பார் தனது பாண்டித்தியம் எல்லாம் காட்டினார். தண்ணீர் போல தெளிந்த தமிழ் நடை அது! இலகு தமிழில் எப்படி சரளமாக வர்ணிக்க முடியும் என்பது அவரிடம் மட்டுமேவுள்ள ஒரு கலை!

இலங்கைப் பின்னணி கொண்ட அவர் முன்பொரு தடவை இங்கு வந்திருந்தபோது அவரை நான் பேட்டி கண்டு இருவரும் சேர்ந்து இருமணிநேரம் நிகழ்ச்சி நடத்தினோம்.

எனினும் ஜப்பாரையும் அவரது பார்வையை மறைத்து தடுமாறவைத்த சில பார்வையாளர்களைத் தனது மொழி நடையில் 'நந்திகள்' என அழைத்து வைதார்.

எல்லாவற்றிலும் உச்சக்கட்டமாக- எரிச்சலின் உச்சக்கட்டமாக ஜெயா டிவி முன்னர் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பியது அவர்களின் எரிச்சலின் உச்சக்கட்டம்.

அடிக்கடி சனல் மாற்றும் நம்ம கஞ்சிபாய் குழப்பத்தில் எனக்கு தொலைபேசி "பகல் - இரவு போட்டி பார்த்திருக்கிறேன்; இது என்ன பகலும் இரவும் கலந்த போட்டியா" என்று கேட்டது கொடுமையின் உச்சக்கட்டம்.






Post a Comment

11Comments

Please Select Embedded Mode To show the Comment System.*