April 15, 2010

லோஷன் எந்த அணி? & மோடி-தரூர்-கொச்சி IPL சர்ச்சைIPL போட்டிகள் மிகத் தீர்மானமிக்க,விறுவிறுப்பான ஒரு கட்டத்தை எட்டி இருக்கின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இப்போதைக்கு அரை இறுதிகளை எட்டிய ஒரே அணியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் கொஞ்சம் கூட்டல்,கழித்தல் பண்ணிப் பார்த்தால் பெங்களுர் ரோயல் சாள்லேஞ்சர்ஸ் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்று உறுதியாக சொல்லலாம் என நான் நினைக்கிறேன்.


அடுத்த இரு இடங்களுக்கு பஞ்சாப்,கொல்கத்தா தவிர்ந்த நான்கு அணிகளுக்கிடையில் மோதல் இனி இனி சுவாரஸ்யமாக இருக்கும்.
அதில் முதலாவது இன்று சென்னை,டெல்லி அணிகளுக்கிடையில்..


ஆனால் இந்தப் போட்டிகளின் பரபரப்புக்கு மேலாக கொச்சி அணியின் உரிமை பற்றியும் லலித் மோடி வெளிப்படுத்திய ரகசியக் கொடுக்கல் வாங்கல் பற்றியும் எழுந்துள்ள சர்ச்சைகள் தான் இப்போது சூடான செய்திகள்.


கொச்சி அணியின் பிரதான பங்குதாரராக சஷி தரூரின் எதிர்கால மனைவி சுனந்தா புஷ்கர் இருக்கும் விஷயத்தை லலித் மோடி போட்டுடைத்ததில் எதோ கோக்கு மாக்கு விவகாரம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.


அதை உறுதிப்படுத்துவது போல கொச்சி அணியை ஏலத்தில் இருந்து விலகிக் கொள்ள ஐம்பது மில்லியன் டொலர் லஞ்சம் தங்களுக்கு தருவதாக மோடி சொன்னதாக சத்யேந்திர கேயிக்வாத் என்பவர் (கொச்சி அணியின் உரிமை நிறுவனத்தின் பிரதம அதிகாரி ) தகவல் வெளியிட்டுள்ளார்.


எனினும் மோடி இதனை உடனடியாகவே மறுத்துள்ளார். தான் எந்தவிதத்திலும் வேறு அணிகளை ஏலத்தில் எடுக்கவில்லை என்றும் தனக்கு இவ்வாறு லஞ்சம் கொடுப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என்கிறார் அவர்.


இத்தனை பிசியான மனிதர், உலக கிரிக்கெட் அமைப்புக்களையே நடுங்க வைக்கின்ற, இந்திய கிரிக்கெட் சபையைக் கையில் வைத்து ஆட்டுகின்ற லலித் மோடி ஒவ்வொரு நாளும் தவறாமல் ஜம்பமாக, சில வேளைகளில் கொஞ்சம் கர்வமாக ட்விட்டரில் தன்னைப் பற்றி தரவுகள் இடும்போதே நினைத்தேன், என்றாவது ஒரு நாள் இந்த ட்விட்டர் தகவல்களாலேயே மனிதர் மாட்டிக் கொள்வார் என்று..
இப்போது அதனாலேயே இந்த கொச்சி அணி விவகாரம் பூதாகாரமாக வெளிவந்துள்ளது.


சஷி தரூரைப் பற்றியும் கொச்சி அணியின் உரிமை பற்றியும் சந்தேகத்தை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட அது பற்றிப் புகைந்து ஒரு பக்கம் தரூரின் அரசியல் பக்கத்துக்கு ஆப்பு வைக்குமளவு வளர்ந்து நிற்கிறது.. மறுபக்கம் IPL ஏலங்கள்,உரிமைகள்,பணப் புழக்கங்களில் காக்கப்பட்டு வந்த ரகசியம் போதும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.


இவ்விஷயத்தில் யாரோ ஒரு பணக்கார வர்த்தகர் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தால் வழமையாக இந்திய கிரிக்கெட் சபை செய்வது போல ஒரு போர்வைக்குள் மூடி மறைத்திருப்பார்கள்.
ஆனால் இந்தியாவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார்.அவர் குற்றம் சாட்டி இருப்பது அண்மைக்காலத்தில் உலக கிரிக்கெட்டையே ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்த மனிதர்.


என்ன செய்யப் போகிறது இந்திய கிரிக்கெட் சபை?
இவ்விவகாரம் கிளறப்பட கிளறப்பட மேலும் பல சர்ச்சைகள்,பயங்கர ரகசிய விவகாரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.


பஞ்சாப்,கொல்கத்தா,ராஜஸ்தான் அணிகளில் மோடிக்குப் பங்குகள் இருப்பதாகப் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வந்துள்ளது.ராஜஸ்தான் அணியின் விவகாரங்களில் அடிக்கடி மோடி அக்கறையுடன் செயல்பட்டு வருவதும் கவனிக்கத் தக்கது.


ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணியிலிருந்து விலக முற்பட்டதை அடுத்து அவர் மீது மோடி முன்னெடுத்த தடை,கம்பீர் ராஜஸ்தான் பற்றிக் குறைவாகப் பேச அவர் மீது மோடி பாய்ந்தது இரு சின்ன உதாரணங்கள்.


லலித் மோடிக்கும் சஷி தரூருக்குமிடையிலான நட்பு இன்னொரு தனிக்கதை..இருவரும் 'சில' விஷயங்களில் மிக நெருங்கியவர்களாம் ..


சஷி தரூர்&லலித் மோடி - ரகசியங்கள் அம்பலத்துக்கு வருமா?


ஆனால் ஆச்சரியம் பாருங்கள் இருவருக்கும் அண்மையில் ட்விட்டர் அப்டேட்டுக்களால் தான் ஆப்புக்கள் தெரிந்தன;தெரிகின்றன.
வெகு விரைவில் தரூர்,மோடி இருவருமே தங்கள் வாய்களையும், ட்விட்டர் கணக்குகளையும் பெரிய பூட்டுக்களால் பூட்டிக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்..


 IPL 2010 இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருப்பது போலவே, மோடி-கொச்சி-தரூர் விவகாரமும் பரபரப்பைக் கிளப்பும் என்பது நிச்சயம்.
இந்த விவகாரம் இந்தியாவில் எதிர்க்கட்சிகளுக்கும் மெல்லும் அவலாக மாறி பாரிய சர்ச்சை,ஊழலாக மாறினால் IPL 4  க்கு வாய்ப்பே இல்லாமல் போகலாம்..
ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட் பேரவை IPL க்கு என்று தனி சாளரம் சலுகை காட்ட முடியாது என்று கடுமையாக சொல்லியிருப்பதும் முக்கியமானது.


--------0000000-------0000000------------0000000


லோஷன் எந்த அணி?


இதெல்லாவற்றையும் விட முக்கியமான பிரச்சினை எனக்கு IPL பக்கமிருந்து..


அரையிறுதிக்கான அணிகளுக்கிடையிலான இழுபறிகள் ஆரம்பித்திருக்க எனக்க மாறி மாறி செல்பேசி அழைப்புக்கள்,மின்னஞ்சல்கள்,எஸ் எம் எஸ் கள்..


தடுமாறும் அணிகளின் தலைவர்கள்,முகாமைகளிடமிருந்து தான்..


ஒரு பக்கம் தோனியும் ஸ்ரீக்காந்தும்,. மறுபக்கம் ஷாருக் காணும் தாதா கங்குலியும்..
இன்னொருபக்கம் ஷேன் வோர்னும் ஷில்பாவும்..
டெல்லி தூரம் என்பதாலோ என்னவோ இல்லாவிட்டால் கம்பீரிடம் என் தொடர்பிலக்கங்கள் இல்லாமல் போனதாலோ அழைப்பில்லை.
விஜய் மல்லையாவுக்கு என்னைப் பெரிதாகப் பிடிக்காது (கொஞ்சம் எரிச்சல் போலும்)என்பதால் பெங்களூரிடமிருந்தும் அழைப்புக்கள் இல்லை.


பஞ்சாப் கூப்பிட்டால் உடனே ஓடிடலாம்..
ப்ரீத்திக்காக இல்லை.. நம்ம சங்கா,மகேலவுக்காக.. ஆனால் போய் வேலையில்லையே..
அவங்க தான் அவுட்டே..


வேறொன்றும் இல்லை.. தங்கள் அணிகளை வெற்றியின் பாதையில் அழைத்து செல்லவும், நிச்சயமாக வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளவும் தான் இப்படி மும்முரமான தூண்டில் விரிப்புக்கள்..


சும்மாவா மில்லியன் கணக்கில் டொலர்கள்.. வேறு வேறு சலுகைகள்.. இதர கவனிப்புக்கள்..
தாங்க முடியல சாமிகளா..


ஒரு பக்கம் வானொலிக் கடமைகள்.. விடுமுறை எடுப்பது கஷ்டம்.. அப்படியே எடுத்தாலும் எந்த அணிக்கு எஸ் சொல்வது.. எல்லாரும் நண்பர்கள்..அதைவிட நம்ம பையன்கள்..ரசிகர்களாச்சே..
அதான் முடிவை நானே எடுக்காமல் அவசர அவசரமாக உங்களையெல்லாம் கேட்டு செய்யலாமேன்னு தான் இங்கே வந்தேன்..


வாசகர்களே,சக பதிவுலக நண்பர்களே.. நாட்டாமைகள் போல நல்லதொரு தீர்ப்பை சொல்லுங்க..


எந்த அணிக்கு விளையாடி வென்று கொடுக்க?
சென்னையா,கொல்கத்தாவா,ராஜஸ்தானா?


நீங்கல்லாம் நம்பமாட்டீங்கன்னு தான் அந்தந்த அணி பிரிண்ட் பண்ணி எனக்கு அனுப்பி வைத்துள்ள அணி ஜெர்சிகளையே உங்களுக்காகக் காட்சிப் படுத்துகிறேன்..


சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ்.. 


சொல்லுங்க மக்கள்ஸ்.. நான் யார் பக்கம் போக? 


எவ்வளவு அவசரம்,அக்கறை பாருங்களேன்..
நம்ம அதிர்ஷ்ட இலக்கத்தையும் சேர்த்தே அழகா அடிச்சு அனுப்பி இருக்காங்க..


வில்லன் மோடி ஒப்பந்த சிக்கல் பிரச்சினை கிளப்ப முதல் நான் கிளம்பனும்,. முடிவை சட்டென்று சொல்லுங்க..
எட்டு மணிக்கு இன்று சென்னை விளையாடும் முக்கியமான போட்டி வேறு இருக்கு..


பி.கு - யே.. யாருடா அது ஆட்டோ,அரிவாள்,தடி,பொல்லு தேடுறது?என்னைப் பத்தி தெரியுமில்ல.. அப்புறம்.. 


வேறொன்னுமில்ல அழுதுருவேன்..


**
கொச்சி IPL அணி பற்றிய சிரி படம் ஒன்றை இங்கே பாருங்கள்..
Kochi IPL TEAM

April 13, 2010

பையா - என் பார்வை


எங்கள் வானொலியில் சிலவேளை வேடிக்கையாக நம் பேசும்போது சொல்வதுண்டு "நிகழ்ச்சியைப் பற்றிய விளம்பரம், நிகழ்ச்சியை விட நல்லா இருந்தது "என்று..
பையா படமும் எனக்கு அப்படித் தான்.விளம்பரம் பார்த்து கட்டாயமாகப் பார்க்கவேண்டும் என்று நினைத்து மோசம்போன படம் பையா..
நல்ல காலம் சுகவீனத்தால் முதல் நாளே போய்ப் பார்க்கவில்லை.இல்லாவிட்டால் இன்னும் ரொம்ப நொந்திருப்பேன்.


தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட பரபர விளம்பரங்கள்;யுவனின் இசையில் மனதைத் தொட்டு எந்த நேரமும் காதுகளில் ரீங்காரமிட்ட,உதடுகள் முணுமுணுத்த இனிமையான பாடல்கள் இவை மட்டுமல்லாமல் அண்மைக்காலத்தில் தொடர்ந்து அடிவாங்கிய லிங்குசாமி ஏதாவது புதியதாய் செய்திருப்பார் என்ற ஓவரான எதிர்பார்ப்பு, கார்த்தி இதிலாவது கொஞ்சம் வித்தியாசமாக வருவார் என்ற நம்பிக்கை,தமன்னா மீதான அண்மைக்கால ஈர்ப்பு என்று பையா பார்க்க மிக முக்கியமான (!) காரணங்கள்,எதிர்பார்ப்புக்களுடன் போயிருந்தேன்.


வேலையற்ற வெட்டிப்பயல் ஒருத்தனுக்கும், போக்கிடமற்ற அழகான பெண்ணொருத்திக்கும் இடையில் நீண்ட தூரப்பயணத்துக்கிடையில் ஏற்படும் ஈர்ப்பும் காதலும் தான் கதை. எவ்வளவு அழகாக நயத்துடனும்,நகைச்சுவை,விறுவிறுப்பு கலந்து எடுக்கவேண்டிய கதையை தனது வழமையான சொதப்பல் மசாலாக்களைக் கலந்து கொன்றுள்ளார் லிங்கு.


பாடல் காட்சிகளும்,தமன்னாவும் தான் கொஞ்சமே கொஞ்ச ஆறுதல்..


கார்த்தி அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே சொதப்புகிறார் இயக்குனர். நிற்கிற பஸ்ஸில் ஏறமாட்டாராம் ஹீரோ..இதைத் தான் வடிவேலுவே அன்றே காதல் தேசத்தில் செய்துவிட்டாரே..
பாவம் கார்த்தி..


ஒட்டாத நண்பர்களுடனான காட்சிகள். முதல் பார்வையிலே தமன்னாவைப் பார்த்து காதல் வயப்படுவது அவருக்காக அரை லூசாக அலைவது எல்லாம் முன்பே பார்த்தவை..ஏதாவது கொஞ்சமாவது வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கக்கூடாத மிஸ்டர்.லிங்கு?


தமன்னாவுடன் கார் பயணம் ஆரம்பிப்பது சுவாரஸ்யமாக இருந்தாலும் கார் பயணம்,வில்லன்களின் துரத்தல்,இடை நடுவே வருகிற சண்டைகள் என்பவை எதோ இயந்திரத் தனமாக ஊகிக்ககூடியவாறு இருப்பது அயர்வையும் அலுப்பையும் தருகிறது.


கொட்டாவி வந்து தூங்கலாமா என்று யோசிக்கும்போதெல்லாம் மதியின் ஒளிப்பதிவும்,யுவனின் இசையில் வரும் பாடல்களும் தான் காப்பாற்றுகின்றன.


பாடல்காட்சிகள் எந்தக் குறையும் சொல்ல முடியாதவை.மதி கலக்கி இருக்கிறார்.வைக்கப்பட்ட கமெரா கோணங்கள்,தரப்பட்ட ஒளிக் கலவைகள்,கமெரா அசைவது என்று கண்களுக்கு குளிர்ச்சி விருந்து..


அதிலும் அடடா மழைடா,துளி துளியாய் பாடல்கள் மீண்டும் மீண்டும் பார்க்கலாம்..
அடடா மழைடாவில் தமன்னாவை உரித்து எடுத்தது கொஞ்சம் ஓவர் தான்.மழையில் நனைந்த ஈரத்துடன் தம்மன்னா ஆடுவது கவர்ச்சியின் உச்சம்.


சுத்துதே பாடல் அசத்தல்.அது செட் போட்டு எடுக்கப்பட்டது என்று பக்கத்திலிருந்த விமல் சொன்னார். கொஞ்சமே அது புலப்பட்டாலும் அண்மைக்காலத்தில் இப்படியொரு கவித்துவமான காட்சியமைப்பு படங்களில் வரவில்லை என்றே சொல்லலாம்.இருட்டின் பின்னணியில் நிலவும்,நீரோடையும் பாடலின் அழகான வரிகளும் .. சொல்ல வார்த்தைகளில்லை..அனுபவித்து ரசியுங்கள் நீங்களும்.


பாடல்களுக்கு முத்துக்குமாரின் வரிகள் உயிரையும் உணர்வையும் கொடுத்திருக்கின்றன.ஒவ்வொன்றுமே கேட்டு ரசிப்பதோடு,பார்த்து ரசிக்கும் விதத்தில் படமாக்கித் தந்துள்ள இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளர் மதிக்கும் நன்றிகள்.


கார்த்தி பாவம்.. பருத்திவீரன் எடுத்துக் கொடுத்த எதிர்பார்ப்பெல்லாம் படிப்படியாகக் கரைந்து போகிறது.புதிதாக பிரெஷ் ஆன ஒரு கதாநாயகனை எதிர்பார்த்த எமக்கு இன்னொரு விஜய்,விஷால் தேவையா?
சண்டைக் காட்சிகளிலெல்லாம் முப்பது அடியாட்களை அதுவும் மாமிச மலைகளை எல்லாம் தனியாளாக துவம்சம் செய்கிறார்.பார்க்கும் எமக்கு பயமாக இருக்கிறது.
இரும்புத் தடிகளால் அத்தனை அடி வாங்கியும் சீறி எழுந்து தமன்னாவை காப்பாற்றுகிறார்.
விஜய் எல்லாம் தோற்றுவிடுவார்.
ஆள் கொஞ்சம் கம்பீரமாகவும் ஆண்மை நிறைந்த தோற்றத்தோடு காட்டப்பட்டாலும் (அண்ணன் சூர்யாவை விட கம்பீரம்,உயரம்,மீசையுடன் அழகு)ஒரே ஆள் இத்தனை பேரை மாறி மாறி அடிப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்..
கார்த்தியை குறை கூறிப் பயனில்லை.பெரிய இயக்குனர் என்று நம்பி இறங்கியிருப்பார்..
ஆனால் லிங்கு கார்த்திக்கும் சேர்த்து ஊதிவிட்டார் சங்கு..


வில்லன்களும் மிக ஏமாளிகளாகவும் கார்த்தி என்ற ஒற்றை மனிதரிடம் துரத்தி துரத்தி ஓடிப் போய் அடி வாங்கி வீழ்பவர்களாகவுமே வரும்போது ஐயா சாமி விட்ட்ருங்கன்னு கத்தத் தோணுகிறது.அதுவும் அந்த கம்பீரமான மிலிந்த் சோமனையும் அப்படியே காட்டி இருப்பது மொக்கையின் உச்சக்கட்டம்.தமன்னா அழகு..நளினம்.பசியை மறைத்து நடித்து பின் அவசர அவசரமாக சாப்பிடும் அந்தக் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.

இப்படிப்பட்ட ஒருவருடன் எவ்வளவு தூரமும் பயணிக்கலாம் என்பது நிஜம் தான்.ஆனால் அதுக்காக யாரோ ஒருவனின் கார்,நண்பர்களின் பணம் இதெல்லாம் கொஞ்சம் கூடித் தான் போச்சு.

தமன்னா கார் ஓட்டும் இடம்,ஜெகன் வரும் சில காட்சிகள் ரசிக்கக்கூடிய சில இடங்கள்.
சில இயற்கைக் காட்சிகள்,கார் பயணிக்கும் சில பாதைகளும் ஈர்க்கின்றன.. ஒளிப்பதிவுக்கு எக்ஸ்ட்ரா நன்றிகள்..
ஆனால் பாதைகள் சில மீண்டும் மீண்டும் வருகின்றதே..இலங்கையில் உள்ள எமக்கே தெரியும்போது இயக்குனரும் எடிட்டர் அண்டனியும் தூங்கிவிட்டார்களா?


மிலிந்த் சோமன் - என்ன ஒரு கம்பீரம்.. லேசாக தாடியில் எட்டப் பார்க்கும் நரை கூட கம்பீரம் தான்.யாராவது நல்ல ஒரு வில்லன் பாத்திரத்தில் இவரைத் தமிழில் பயன்படுத்துங்கப்பா..


 அண்டனியின் எடிட்டிங்கும் இல்லாவிட்டால் படம் சுத்த சொதப்பலாகத் தான் இருந்திருக்கும்.தன்னால் முடிந்தவரை கார் ஓடுவதையும் துரத்தலையும் விறுவிறுப்பாக்கியிருக்கிறார்.


லிங்குசாமி இன்னும் ரன்,சண்டைக்கோழி பாதிப்புக்களில் இருந்து விடுபடுவதாக இல்லை.பீமா வாங்கிக் கட்டிய பிறகும் கூடத் திருந்துவதாக இல்லை.நல்ல காலம் பழசை மறக்கக்கூடாது என்பதற்காக ஆனந்தத்தை ஞாபகப்படுத்தவில்லை..


சில சில இடங்களில் குறிப்பாக தமன்னாவினுடனான கார் பயணத்தின் சில காட்சிகளில் ரசிக்க வைத்துள்ள இயக்குனர் கொடுத்த விளம்பரங்களுக்காவது ஏனைய காட்சிகளில் கொஞ்சம் சிரத்தை காட்டி இருக்கலாம்.
தமிழ்ப்படம் வந்து லிங்குசாமி குழுவினர் திருந்தாதது வியப்பே..
அதிலும் மச்சம் வைத்து ஆள் மாறாட்டம் செய்வது போல குடையை வைத்து மறைத்து ஹீரோ தப்புமிடம் கொடுமை சாமி. நகைச்சுவைப் பஞ்சம் என்று இதை வைத்தார்களோ?


விஜய்,விஷால்,சில அஜித் படங்கள் என்றால் லொஜிக்கை ஒரு பக்கம் தூக்கி வைத்துவிட்டுப் பார்க்கலாம்..இதிலே தூக்கி வைப்பதென்றால் எதை எங்கே?


பையா படம் பார்த்தபின் நான் கற்ற சில விஷயங்கள்..


விளம்பரத்தையும் பாடல்களையும் மட்டுமே நம்பி படம் பார்க்க துணியப்படாது..
லிங்குசாமி படம் என்றால் இனி விமர்சனங்களும் வாசித்தபிறகே படம் பார்க்க செல்வது..
வாகனம் ஓட்டும் போது இனிமேலும் பெல்ட் அணியப் போகிறேன்..
(அதிலும் பின்னால் ஒரு அழகிய பெண் இருந்தால்.. கட்டாயமாக..மனைவி இருப்பது எபோதும் பக்கத்து சீட்டிலே.. ஹீஹீ)எவ்வளவு தான் வேகமாகக் கார் ஓடினாலும் கொஞ்சம் கூடப் படம் வேகமாக இல்லையே.. ரசிக்க முடியலையே.. 


யுவன்+முத்துக்குமாரின் பாடல்கள், கார்த்தி போலவே பாவம்.. 
மொத்தத்தில் பையா - அடப்போய்யா.. விட்டாக் காணும் ஐய்யா..

April 09, 2010

சனத் ஜெயசூரிய&நாமல் ராஜபக்ச அபார வெற்றி - இலங்கைத் தேர்தல் நிலவரம்

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

எதிர்பார்த்ததைப் போலவே ஆளும் தரப்பு முன்னணி பெற்றுள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி கிடைத்துள்ள வாக்குகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் ஆளும் தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே கிடைத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ள அதேவேளை ஜே.வீ.பீயும் சரத் பொன்சேகாவும் இணைந்த ஜனநாயகக் கூட்டமைப்பும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதுவரை வெளிவந்துள்ள யாழ்ப்பாண மாவட்ட முடிவுகளில் ஊர்காவற்றுறை தொகுதி தவிர ஏனைய தொகுதிகளிலெல்லாம் தமிழரசுக் கட்சி(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) வெற்றி பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறையில் ஆளும் தரப்பு (ஈ.பீ.டீ.பியின் உபகாரம்) வெற்றியீட்டியது.

மாத்தறை,ஹம்பாந்தோட்ட, மொனராகலை, பதுள்ளை  ஆகிய மாவட்டங்களின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நான்குமே அரசு வசம்..


இப்போதைக்கு நான்கு மாவட்டங்களில் ஆளும் தரப்பு 21 ஆசனங்கள், ஐக்கிய தேசியக் கட்சி 7  ஆசனங்கள்


போகிறபோக்கில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிக அருகில் அரசு வந்துவிடும் போலத் தெரிகிறது..

ஹம்பாந்தோட்டையில் விருப்பு வாக்குகளின் பிரகாரம் ஜனாதிபதியின் புதல்வர் முதலிடம் பெற்றுள்ளார்.. நாமல் ராஜபக்ச பெற்றுள்ள வாக்குகள் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகம்.. பெரியப்பா சமல் ராஜபக்ச இந்தப் புதிய,இளைய அரசியல்வாதியின் முன்னால் பின் தள்ளப்பட்டுள்ளார்.ஜனாதிபதியின் அண்ணர் சமல் ராஜபக்ச பெற்ற வாக்குகள் பாதியளவு தான்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியில் முதலிடம்.. 74 ஆயிரம் வாக்குகள்..
ஐவரும் வாரிசு தானே..காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் புதல்வர்.

மாத்தறையில் பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய விஷயம் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய போட்டியிட்டது..
ஆச்சரியம் அவரே அந்த மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
அந்த மாவட்டத்தின் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்,அமைச்சர்களை எல்லாம் பின் தள்ளி சனத் 74352 விருப்புவாக்குகளைக் குவித்துள்ளார்.
அமைச்சர்கள் மகிந்த யாப்பா அபேவர்தன,லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன(நமது சிறை வாழ்வில் எனக்கு புதிய பட்டம் தந்தவர்) ஆகியோர் எல்லாம் பின்னுக்குத் தான்.

இவ்வளவுக்கும் சனத் ஜெயசூரிய ஒரே ஒரு பிரசாரக் கூட்டத்தினை மட்டுமே நடத்தி இருந்தார்.. எல்லாம் கிரிக்கெட் செய்யும் மாயம்..

இனி சனத் சும்மா சனத் இல்லை.. மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சனத் ஜெயசூரிய..

இன்றாவது மும்பை இந்தியன்ஸ் அணி எங்கள் புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளையாட வாய்ப்பைக் கொடுக்குமா?
சச்சின் கொடுத்தாலும் கொடுப்பார்..இனிக் காயம்,உபாதை ஏற்பட்டால் இலங்கைக்கு சிகிச்சைக்காக வரவேண்டும் இல்லையா? ;)

April 08, 2010

400வது பதிவு..தேர்தல் மசாலா

நானூறாவது பதிவாம்..பதிவுகளின் எண்ணிக்கை சொல்கிறது. (சில மீள்பதிவுகள் ஆங்காங்கே இருந்தாலும் கூட..)
நல்லது.மகிழ்ச்சி.
இதுவரை பதிவிடுவது அலுக்கவில்லை.சலிக்கவில்லை என்பதும், தொடர்ந்தும் பதிவிடுவது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது என்பதும் நிறைய நண்பர்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதும் நிறையப் புதிது புதிதாய் வாசிப்பதும் பதிவுலகினால் எனக்குக் கிடைத்த பரிசுகள் எனக் கருதுகிறேன்.


பதிவுலகப் பயணம் தொடரும்.. பதிவுகளும் தொடரும்..

= = = = = = = = = =

இலங்கையில் இன்று பொதுத் தேர்தல்.


நேற்று முன்தினம் வரை திருவிழாப் போல அமர்க்களமாக பரபரப்பாக இருந்த தேர்தல்களம் பிரசாரங்கள் முடிந்தபிறகு நேற்றிலிருந்து அடங்கிவிட்டது.இன்றும் தேர்தல் நடக்கிறதா எனுமளவுக்கு கொழும்பில் அமைதி.


வாக்களிப்புக் கூட மிக மந்த கதி என அறிந்தேன்.எங்கள் அலுவலகத்திலும் வழமையாக விரலில் மையோடு வரும் பலரும் சுத்தமான விரலோடு வந்திருந்தார்கள்..போகும்போது பார்க்கலாம் என்று கொஞ்சம் அலுப்பாகவே பலர் சொன்னதைக் கண்டேன்.


மூன்று மணியளவில் தான் எனக்கு வாக்களிக்கப் போகும் சந்தர்ப்பம் கிடைத்தது.நான் வாக்களிக்கும் நிலையத்தில் நான் போனபோது என்னுடன் வாக்காளர்கள் நான்கே பேர்.அதிகாரிகள் தான் அதிகம்.


எனது ஜனநாயகக் கடமையை சரியாக நிறைவு செய்தேன்.


இம்முறை மோதிரவிரலில் மை தீட்டினார்கள்.ஆனால் அலுவலகத்தில் ஒரு சிலரை சின்ன விரலில் மைக் கறையுடனும் கண்டிருந்தேன்.
காரணத்தை எனக்கு மை தடவி விட்டவரிடம் கேட்டபோது, ஜனாதிபதித் தேர்தலில் பூசிய மை பலருக்கு அழியவில்லையாம்..(குளிக்கவே மாட்டாங்களோ.. குறைந்தது கை கழுவக் கூட மாட்டாங்களா? அதுவும் இடது கை.. சீ)அதனாலேயே இம்முறை பலருக்கு மோதிர விரலில் மை பூசுகிறார்களாம்.


ஐயா பெரியவங்களே அடுத்த தேர்தல் வருவதாக இருந்தால் கொஞ்சம் இடைவெளி கொடுத்து வையுங்கப்பா..ஒரு கையில் இருப்பது ஐந்து விரல்களே. 


என் குடும்ப,நட்பு வட்டத்தில் அநேகமானோர் வாக்களித்திருந்தாலும் கொழும்பைப் பொறுத்தவரை இம்முறை தமிழர்கள் வாக்களித்தது குறைவு என்று தான் கணிக்க முடிகிறது.
தமிழர் மட்டுமல்லாமல் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை கொழும்பில் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவு.


ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தந்த ஏமாற்றம் அல்லது அதிர்ச்சி அதற்கான காரணமாக இருக்கலாம்.


இலங்கை முழுவதுமே இன்று வாக்களிப்பு வீதம் மிகக் குறைவு என்று கண்காணிப்பாளர்கள் சொல்லியுள்ளனர்.நாடு முழுவதும் பாதியளவானவர்களே வாக்களித்துள்ளார்கள்.அதாவது 50 முதல் 52 வீதம் வரையே வாக்களிப்பு இருந்துள்ளது.


வடக்கு-கிழக்கில் இது இன்னும் குறைந்திருக்கலாம்..குறைந்துள்ளது
குறைந்துள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 சதவீதமானோரே வாக்களித்துள்ளனர்.இதை ஜனநாயகம் என எடுக்கலாமா?


தேர்தல் பற்றிய நம்பிக்கை மக்களுக்கு குறைந்திருப்பதையும் அவர்கள் தேர்தல் ஒன்றினை முழு மனதோடு ஏற்கும் காலம் இது இல்லை என்பதையும் தமது வாக்களிப்பின்மை மூலம் அமைதியாகக் காட்டியுள்ளனர் என்று தான் புரிந்துகொள்ள முடிகிறது.


ஆனால் இதன்மூலம் தப்பானவர்கள்,பொருத்தமற்றவர்கள்  நாடாளுமன்றம் புகுந்துவிடுவார்களோ எனும் அச்சமும் எட்டிப் பார்க்கிறது.


தேர்தல்கள் ஆணையாளர் முதல் முடிவு இன்று நள்ளிரவுக்கு முதல் அறிவிக்கப்பட்டு விடும் என்று உறுதியாக சொன்னது எண்ணுவதற்கு இலகுவாக வாக்குகள் குறைவாகத் தான் இருக்கு என்பதாலா?


இன்னொரு விஷயமும் இங்கே முக்கியமானது.ஐக்கிய தேசியக் கட்சி நேற்றே வலியுறுத்தி இருந்த விஷயம்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிட்டது போலல்லாமல், இம்முறை தொகுதிவாரியாகக் கிரமமாக வெளியிட்ட பின்னரே மாவட்ட ரீதியாக முடிவுகள் வெளியிடப்படவேண்டும் என்பது.


இது மீறப்ப்பட்டு மாறப்பட்டதுமே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஐயத்துக்குள்ளாக்கியது
இம்முறை பார்க்கலாம்.. எப்படி நடக்குதென்று..


இம்முறை வேட்பாளர்கள் தனித்தனியாகப் பெற்ற விருப்புவாக்குகளையும் வேறு எண்ணி அறிவிக்கவேண்டி இருப்பதால் ஒரு ஒழுங்கில் செல்லாவிட்டால் எல்லாமே குழப்பமாகி விடும்...  


கொழும்பில் தேர்தல் மோசடிகள் வன்முறைகள் குறிப்பிடத்தக்களவில் இடம்பெறாவிட்டாலும், இருநூறுக்கு மேற்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளன.


தேர்தல் வன்முறைகள்,மோசடிகளுக்கேன்றே உருவெடுத்தவராக வர்ணிக்கப்படும் மத்தியமாகாண அமைச்சரின் கைங்கர்யம் வழமை போலவே இம்முறையும் நாவலப்பிட்டியில் பெரிய தேர்தல் வன்முறைகள்,மோசடிகளை உருவாக்கியுள்ளது.


ஆனால் வடக்கில் கடந்தமுறை போல இம்முறை வாக்களிப்பு தடுப்பு,பயமுறுத்தல்கள் இம்முறை இல்லாதது (அல்லது நான் இதுவரை கேள்விப்படாதது ஆறுதல்)
ஆனால் வவுனியாவில் சில தடைகள்,அசௌகரியங்கள் இடம்பெற்றுள்ளன.


கள்ளவாக்கு,வன்முறை,சாதக பாதக கணக்குகள் பார்த்து தடுப்பதும் விடுப்பதும் தேர்தலில் பிரிக்கமுடியாத அம்சங்கள் தானே.. எவ்வளவு பார்த்திட்டோம்..இதைப் பெரிதாக சொல்வதற்கு..
கிட்டத்தட்ட முடிவுகளும் ஊகித்தே இருக்கின்ற நிலையில்..


சரி இனி என்ன பேசியென்ன.. வாக்குகளை எண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.. இன்னும் சில மணிநேரங்களில் முடிவுகள் வர ஆரம்பிக்கும்.. பரபரப்பான 24 மணித்தியாலங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டே பெங்களூர்-டெக்கான் அணிகளின் IPL போட்டியை  இப்போதைக்கு ரசிக்கிறேன்.. 

April 05, 2010

பொதுத் தேர்தல் 2010 - இறுதிக் கட்டப் பார்வைஇலங்கையின் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கின்றன.
மீண்டும் ஆளும் கட்சி.. இல்லை ஆளும் கட்சி மீண்டும் ஆளப் பதவியேற்கும் என்பது ஏறத்தாழ உறுதியாகவே தெரிகிறது.


பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியிடமோ, புதிதாக முளைத்த ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்திக் களம் கண்டுள்ள ஜனநாயக் தேசிய கூடமைப்பிடமோ அரசுக்கெதிராக மக்களை ஈர்க்கக் கூடிய எந்தவொரு புதிய விடயமும் இல்லை என்று தான் கருதவேண்டியுள்ளது.


யுத்த வெற்றியும், அனைவரையும் அடக்கி அமர்த்தியுள்ள சாதுரியமும், பலவீனமான பிளவுண்டுள்ள எதிர்க்கட்சிகளும் அரச தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரை வெற்றி என்பதையும் தாண்டிய மாபெரும் வெற்றி ஒன்றைப் பற்றிய ஏன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பற்றிய கனவைத் தோற்றுவித்திருக்கின்றன. 


ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற (திட்டமிட்டு??) பிரம்மாண்ட வெற்றி தந்துள்ள மாபெரும் நம்பிக்கையும், எதையும் சாதிக்கலாம் என்ற உற்சாகமும் கூட இவற்றுக்கு ஒரு காரணம் என்பதை நாம் சுட்டிக் காட்டியே ஆகவேண்டும்.


அண்மைய சுயாதீனக் கருத்துக் கணிப்பொன்றின் அடிப்படையில் ஆளும் தரப்புக்கு 135 ஆசனங்கள் கிடைக்குமாம்.மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற தேவைப்படும் மேலதிக 15 ஆசனங்கள் வழமையான பண மாற்றல்கள்,கட்சி உடைப்புக்கள்,பதவி பரிசளிப்புக்கள் என்ற ராஜபக்ச யுக்திகளால் இலகுவாகப் பெற்றுக் கொள்ளப்படும் என்று சொல்லியா தெரிய வேண்டும்?

April 01, 2010

போடுங்கம்மா வோட்டு..

தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில் தேர்தலில் நிற்கும் எனது நண்பரொருவர் தனக்கு கொஞ்சம் காரசாரமான பிரசார உரை ஒன்றை எழுதித் தருமாறு கேட்டிருந்தார்.
அவரது அன்பைத் தட்ட முடியாமல் உரை ஒன்றை எழுதி அவரிடம் கொடுத்தேன்.


அவர் முதலிலேயே சொல்லி வைத்தது போல மக்களைக் கொஞ்சம் உற்சாகப் படுத்தி அவர்களிடமிருந்து கை தட்டல்களை வாங்குவதற்கென்றே சில விஷயங்களையும் பொடி வைத்து, சூடாக எழுதிக் கொடுத்திருந்தேன்.


பார்த்துக் கொள்ளுங்கள்;தயார்ப் படுத்தி வாசிப்பது போலல்லாமல் பேசுங்கள் என்றெல்லாம் எச்சரித்தே கொடுத்தேன்.


கூட்டம் நடைபெற்ற அடுத்த நாள் காலையில் அரசியல்வாதி நண்பரின் செயலாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு..


"என்னைய்யா இப்படியா பேச்சு எழுதிக் கொடுப்பீர்.. நம்ம ஆளு நேற்று சொதப்பிட்டார் லோஷன்"


"அதிர்ச்சியுடன் ஏன் என்னாச்சு? நல்லாத் தானே எழுதிக் குடுத்தேன்"


"சும்மா எழுதிக் குடுக்க வேண்டியது தானே.. அதென்ன சிட்டுவேஷன் எல்லாம் எழுதிக் குடுத்தீங்க?" என்றார் செயலாளர்.


அதுக்குப் பிறகு தான் விஷயமே புரிந்தது..


நம்மவர் கைதட்டல் வாங்கவேண்டுமென்று எழுதிய பஞ்ச் வசனங்களுக்குப் பிறகு 'கைதட்டலுக்கு சிறு இடைவெளி கொடுங்கள்' என்று தடித்த எழுத்துக்களில் எழுதிக் கொடுத்திருந்தேன்.
நம்ம ஆள் அதையும் சேர்த்து வாசித்திருக்கிறார்..


நல்ல காலம் வாக்காளப் பெருந்தகைகள் மொத்தாமல் பக்குவமாக சிரித்துவிட்டு அனுப்பிவிட்டார்கள்.. ஆனால் வாக்கு இவருக்குத் தான் போடுவார்களா என்பது முடிவுகள் வந்த பிறகு தான் தெரியும்.
மக்கள்ஸ் கொஞ்சம் யோசித்துப் பார்த்து செய்யுங்க.. ;)


அதுக்குப் பிறகு ஒரே ஒரு நிம்மதி.. நம்ம ஆள் என்னிடம் பிரசார உரை,புண்ணாக்கு என்று எந்தவொரு விடயமும் கேட்பதில்லை..


பி.கு - அண்மையில் இன்னொரு அன்புக்குரிய & நன்றிக்குரிய அரசியல் தர்மசங்கடம் இடம்பெற்றது. அதுபற்றி பிறகு சொல்கிறேனே.அதுக்கு முதலில் தற்போதைய அரசியல்,தேர்தல் கள நிலவரங்கள் பற்றி எப்படியாவது ஒரு பதிவு இட்டுவிடுகிறேன்.


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner