December 10, 2017

திசர vs ரோஹித் - ஆரம்பிக்கிறது ஆர்வத்தைத் தூண்டும் ஒருநாள் தொடர் - என்னென்ன எதிர்பார்க்கலாம் ?

Iron Man vs Hit Man



இலங்கை அணிக்கு இந்த வருடத்தின் 5வது ஒருநாள் சர்வதேச அணித்தலைவராக திசர பெரேரா. உபுல் தரங்கவின் தலைமையிலான அணி அமீரகத்தில் பாகிஸ்தானிடம் தோற்ற பிறகு பாகிஸ்தானுக்குச் சென்ற இலங்கையின்  T20 அணிக்குத் தலைமை தாங்க இணங்கியதற்குப் பரிசாகவோ என்னவோ 'இரும்பு மனிதர் திசரவுக்கு தலைமைப் பதவி பரிசு கிடைத்துள்ளது.

எனினும் நிரந்தர நியமனம் இல்லையாம். இந்தத் தொடரின் பெறுபேறு பார்த்துத் தான் அடுத்த தொடருக்கான நியமனம் உறுதியாகும் என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
புதிய தலைவரின் கீழ், உபாதையடைந்து சில காலமாக அணியை விட்டு வெளியேயிருந்த பல முக்கியமான வீரர்கள் மீண்டும் அணிக்குள் புதிய உற்சாகத்தோடு திரும்பிய இலங்கை அணிக்கு, வருகின்ற 20ஆம் திகதி முதல் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்கப்போகும் சந்திக்க ஹத்துருசிங்கவின் வருகைச் செய்தி கூட இன்னும் உத்வேகத்தை அளித்திருக்கும்.

இலங்கையின் 22வது ஒருநாள் சர்வதேசத் தலைவராக திஸர பெரேரா- மறுபக்கம் இந்தியாவின் 24வது ஒருநாள் சர்வதேச அணித்தலைவராக ரோஹித் ஷர்மா.
இருவருமே தமது சர்வதேச அணித் தலைமைத்துவ அறிமுகங்களை இயற்கை அழகு கொஞ்சும் இமாலயத்தின் தரம்சாலாவில் இன்று ஆரம்பிக்கவுள்ளார்கள்.

பக்கத்து வீட்டுக்காரர் அடிக்கடி சந்தித்து ஹாய் சொல்லிக்கொள்வது போல, எப்போதெல்லாம் பொழுதுபோகவில்லையோ "நீ வா தம்பி" என்று BCCI அழைக்க நம்மவர்கள் அங்கே போவதும், "அண்ணே அனுசரணையாளர் காசு கொஞ்சம் தேவைப்படுது.அணியைக் கொஞ்சம் அனுப்பிவையுங்க" என்று SLC கேட்க இந்தியா இங்கே வருவதும் சகஜமானது.

அய்யய்யோ மீண்டும் மீண்டும் இவங்க தான் விளையாடுறாங்களா என்று கொட்டாவி விடும் அளவுக்கு அண்மைக்காலத்தில் அடிக்கடி இந்திய - இலங்கை போட்டி பார்த்து அலுத்துவிட்டது.
சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டிகளில் அடிக்கடி ஒன்றையொன்று எதிர்த்து விளையாடிய அணிகள் இந்த அண்ணன்  - தம்பியரே..
155 போட்டிகள் - 88 இந்தியாவுக்கு வெற்றி, 55 இல் இலங்கை வெற்றி.

(இதற்கு அடுத்தபடியாக இந்தியா இல்லாத நேரம் நம்ம சகபாடியாக 'எல்லாவிதங்களிலும் உதவும் பாகிஸ்தானோடு இலங்கை 153 போட்டிகளை விளையாடியிருக்கிறது.
அதற்குப் பிறகு தான் அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் 139,
அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 137, அவுஸ்திரேலியா -நியூசீலாந்து 136)

எனினும் இந்திய மண்ணில் வைத்து 48 போட்டிகளில் இந்தியா பெற்றுள்ள 34 வெற்றிகளுக்கு எதிராக இலங்கை 11 வெற்றிகளையே பெறமுடிந்துள்ளது.
அத்துடன் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 8 தோல்விகளையும் ஒரேயொரு வெற்றியையுமே பெற முடிந்துள்ளது.

ஆனால் இன்று ஆரம்பிக்கவுள்ள தொடர் கொஞ்சம் வித்தியாசமானது.
இந்தியா அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த அணித் தலைவர் - ஓட்டக் குவிப்பு இயந்திரம் விராட் கோலிக்கு ஓய்வு. அண்மைக்காலமாக இந்தியா செய்து வருவதைப் போல டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் தெரிவு பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு. எனினும் அவ்வாறு வாய்ப்புக் கிடைக்கும் அக்ஸர் பட்டேல், சஹால், பும்ரா போன்ற வீரர்களும் விக்கெட்டுக்களை எடுப்பதோடு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி டெஸ்ட் அணிக்கான வாய்ப்பையும் தேட முனைகிறார்கள். பும்ரா அவ்வாறு தான் முதற்தடவையாக தென் ஆபிரிக்கா செல்லும் டெஸ்ட் குழாமில் இடம்பிடித்துள்ளார். இந்த ஆரோக்கியமான போட்டி இந்திய அணியின் தெரிவுகளை உயர்மட்டத்தில் பேண உதவுகிறது.

இலங்கை அணியிலோ அண்மைக்காலமாக இதன் தலைகீழ். யாரை அணியில் சேர்ப்பது என்றே தேடித்தேடி சலித்து கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட அறிமுகங்கள்..
சிலர் ஓரிரண்டு போட்டிகளோடு வெளியே. இன்னும் சிலர் ஏன் அணிக்குள்ளே கொண்டுவரப்பட்டார் என்றே தெரியாத மர்மம்.
எனினும் புதிய தெரிவுக்குழு வந்த பிறகு நிலைமை மாறும் என்றால், அதிலும் பெரிய மாற்றம் இல்லை. எனினும் காயம் , உபாதைகளுடன் வெளியேறியிருந்த மத்தியூஸ், அசேல குணரத்ன, குசல் ஜனித் பெரேரா, நுவான் பிரதீப் போன்றோர் அணிக்குத் திரும்பியபிறகு நிலைமை சீராகும் என்றொரு நம்பிக்கை.
ஹத்துருசிங்க பொறுப்பு எடுத்த பிறகு தேவையற்ற அரசியல் உள்ளே நுழையாது என்று நம்பியிருப்போம்.



உலகின் மிக இயற்கை அழகு பொருந்திய மைதானங்களில் நியூ சீலாந்து, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கையின் காலி & பள்ளேக்கலைக்கு சவால் விடக்கூடிய அழகு இந்த தரம்சாலாவுக்கு உள்ளது.
இங்கிலாந்தை விடக் குளிரும் சூழல் - சுற்றிவர இமயமலைச் சாரல் - விளையாடும் வீரர்களுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சியில் பார்க்கும் எமக்கே ரம்மியமான கண்ணுக்கு விருந்து தான்.

மைதானத்தின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள வலைப்பயிற்சிக்கான சிறிய மைதானப்பரப்பும் அழகு தான். உலகின் மிக அழகான ஒரு கிரிக்கெட் சூழல் என்று அடித்தே சொல்லலாம். கொடுத்து வைத்த ரசிகர்களும் வீரர்களும்.

படம் : Twitter - Mohandas Menon

இந்த அழகு கொஞ்சும் மைதானம் தான் இரு அணிகளிலும் உள்ள பல வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தொடரின் ஆரம்பப்புள்ளி.
(இதற்குள்ளே இங்கேயாவது சுத்தமான காற்றை சுவாசியுங்கள் என்று 'அகன்ற வாயும் அடாத்தும் கொண்ட இந்தியப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி ஒரு ட்வீட்டைப் போட்டு குளவிக்கூட்டைக் கலைத்து விட்டிருக்கிறார்.)

மிக முக்கியமாக இதுவரை 12 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைத் தொடர்ச்சியாகத் தோற்றுள்ள இலங்கை அணிக்கு இந்தத் தொடர் தோல்வியலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அதிமுக்கியமான தேவையுள்ளது.
இந்த ஆண்டின் ஜூலை மாதம் ஹம்பாந்தோட்டை - மகிந்த ராஜபக்ச மைதானத்தில் (பெயர் - இட ராசி அப்படியோ தெரியவில்லை) ஆரம்பித்த தோல்விகள் துரத்துகின்றன.

இதுவரை இலங்கை இப்படியான மோசமான தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டது 1987 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில் 14 போட்டிகள்.

இந்தத் தொடரிலும் வெள்ளையடிப்பு செய்யப்பட்டால் (ஏற்கெனவே இந்த வருடத்தில் மூன்று அவமானகரமான வெள்ளையடிப்புக்களை சந்தித்து சாதனை படைத்துள்ளது) பதினைந்தாக மாறும்.

இந்தியாவுக்கும் 3-0 என்ற வெற்றி அவசியப்படுகிறது, தென் ஆபிரிக்காவிடமிருந்து மீண்டும் தனது ஒருநாள் தரப்படுத்தலின் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு.
அது கோலி இல்லாமல் சாத்தியப்படுமா? ஏற்கெனவே இலங்கை அணி என்றால் போட்டு வாங்கு வாங்கென வாங்கிக் குவிக்கும் ரோஹித் ஷர்மா இப்போது தலைவராக வேறு இருக்கிறார். அவரது ஒருநாள் உலக சாதனை 264 மறக்குமா?
தவான் வேறு நல்ல போர்மில் இருக்கிறார்.
பாண்டியா, தோனி ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு திரும்புகிறார்கள். ஓய்வுக்கு முதலே ஒருநாள் போட்டிகளில் நல்ல ஓட்டக் குவிப்பிலேயே இருந்திருந்தார்கள்.
பந்துவீச்சாளர்களும் அண்மைக்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த (சொந்த மண்ணிலே இன்னும் சிறப்பாக) அணிகளையும் தடுமாற வைத்துள்ளார்கள்.
எனினும் கடந்த உலகக்கிண்ணம் முதலே இந்தியாவுக்கு தடுமாற்றம் அளித்து வரும் நான்காம் இலக்கமும், தற்போது கோலியின் ஓய்வு, கேதார் ஜாதவின் உபாதை ஆகியவற்றால் வெற்றிடமாகியுள்ள இரு துடுப்பாட்ட இடங்களை இப்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள தினேஷ் கார்த்திக், ரஹானே, மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய நால்வரில் யார் நல்ல படியாக நிரப்பப் போகிறார்கள் என்ற ஆரோக்கியமான போட்டியும் உள்ளது. தமிழகத்தின் இளம் சகலதுறை வீரர் வாஷிங்க்டன் கூட ஒரு சகலதுறை வீரராக வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர். T20 தொடரில் இவரது அறிமுகம் உறுதியாகத் தெரிந்தாலும் ஒருநாள் போட்டிகளில் இப்போதைக்கு உள்வாங்கப்படுவாரா என்பது சந்தேகமே.

இலங்கை அணியில் ஆரோக்கியமான ஒரு தெரிவுக்குழப்பம் இப்போது.
இன்று ஆடுகளத்தை மையப்படுத்தியே தெரிவு அமையும் என்றாலும் துடுப்பாட்டப் பலத்தை அதிகரித்து இன்றைய அணியின் பதினொருவரை நாம் தெரிவு செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன்.

டெல்லி போட்டியில் இலங்கையின் கதாநாயகனாக விளங்கிய தனஞ்சய டீ சில்வா இன்னும் முதுகுப் பிடிப்பிலிருந்து குணமடையாத காரணத்தால் இன்று விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது அணித்தெரிவாக  நேற்று நான் ட்வீட்டிய அணி இது.. :

பல ரசிகர்களின் அபிப்பிராயம் குசல் ஜனித்  பெரேரா அல்லது நிரோஷன் டிக்வெல்ல ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக தனுஷ்க குணதிலகவுடன் களமிறங்கவேண்டும் என்று. எனினும் இந்தியாவின் ஆரம்ப ஸ்விங் பந்துவீச்சாளர்களை சமாளிக்க தயங்கவே பொருத்தமானவர் என்று நான் கருதுகிறேன்.

அத்துடன் மத்தியூஸ், அசேல ஆகியோரின் வருகை இலங்கை அணிக்கு கடந்த சில மாதங்களாக இருந்து வந்த 15-35 ஓவர்கள் வரையிலான மந்த ஓட்ட வேகத்தையும் அதிகப்படுத்த உதவும்.
நான் ஊகித்துள்ள இந்த அணியில் இலங்கை அணி 20 ஓவர்களை பகுதி நேரப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியே பலவீனமான (!?) நிலையொன்று இருப்பதாக சிலர் கருத்துவதாலும் அணியின் தலைவர் திசர  பெரேரா 8ஆம் இலக்கத்தில் வராமல் இன்னும் மேலே ஆடலாம் என்ற எண்ணம் இருப்பதாலும் சிலவேளைகளில் இலங்கை ஒரு துடுப்பாட்ட வீரரைக் குறைத்து (எனது தெரிவு திரிமன்னே, ஆனால் பலர் அஞ்சுவது திரிமன்னே பாகிஸ்தானுக்கு எதிராக ஓரளவு ஓட்டங்களைப்  பெற்றவர் என்பதால் குசல் ஜனித்தைத் தான் வெளியே அனுப்புவார்கள் என்று) சச்சித் பத்திரன அல்லது சத்துரங்க டீ சில்வாவை உள்ளே சேர்ப்பார்கள் என்று.

அவர்களும் ஓட்டங்கள் பெறக்கூடியவர்களே.

இரு அணிகளிலும் வாய்ப்பைப் பெறப்போகிற இளைய வீரர்களுக்கு அவர்களது எதிர்காலத்தைத் தக்க வைக்கும் பொன்னான வாய்ப்பாக இன்று ஆரம்பிக்கும் தொடர் அமையவுள்ளது.
அதை விட முக்கியமாக இரு அணிகளிலும் உள்ள மூத்த வீரர்களுக்கு இது வாழ்வா சாவா போராட்டம்.

முக்கியமாக இலங்கை அணியில் திரிமன்னே. டெஸ்ட் போட்டிகளில் மோசமான பெறுபேறுகள் மூலமாக ரசிகர்களின் ஏகோபித்த வெறுப்பையும் இவர் எப்படி மீண்டும் மீண்டும் அணிக்குள் வருகிறார் என்ற மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ள திரிமன்னே தான் விளையாடிய கடைசி 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மூன்று (இந்தியாவுக்கு எதிராக 1, பாகிஸ்தானுக்கு எதிராக 2) அரைச்சதங்களைப் பெற்றுள்ளார்.இதைத் தொடர்ந்தால் அணியில் இடம்நிச்சயம்.
இளைய வீரர்களின் அழுத்தம் மத்தியூஸ், தரங்க போன்ற வீரர்களுக்கே நெருக்கடியைத் தரக்கூடியது.

இலங்கையின் மிகச் சிறந்த ஒருநாள் வீரரான முன்னாள் தலைவர் உபுல் தரங்க பாகிஸ்தானுக்கு எதிராக சதம் மற்றும் அரைச்சதங்களைப்  பெற்றவர். இந்தத் தொடரில் அப்படியான ஓட்டக் குவிப்பை எதிர்பார்க்கிறோம்.


மீண்டும் பந்து வீசக்கூடியவராக உபாதையிலிருந்து குணமடைந்துள்ள அஞ்செலோ மத்தியூஸிடமிருந்தும், கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள மற்றொரு சகலதுறை வீரர் அசேல  குணரத்னவிடமிருந்தும் நிறையவே எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரண்டு பேரும் match winning finishers என்று தம்மை கடந்த காலங்களில் நிரூபித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு.
அதேபோல சின்ன சனத் - குசல் ஜனித் பெரேரா. தன்னை ஒரு அதிரடி வீரராக அண்மையில் நிரூபித்துக்கொண்டிருந்த போதே உபாதையுடன் வெளியேறியவர் தனது அணி இருப்பிடத்தை நிரந்தரமாக்க ஒரு வாய்ப்புப் பெற்றுள்ளார்.

முக்கியமாக இலங்கையின் இரும்பு மனிதர் திசர பெரேரா. அணியில் பதினொருவரில் ஒருவராகவே இவரது இடம் உறுதியில்லாத போது யானை மாலை போட்டு ராஜாவாகியுள்ள திசரவுக்கு தனது பெறுபேறுகள், அணியின் வெற்றிகள் இரண்டையுமே நிரூபிக்கவேண்டிய சவால்.

எனினும் என்னடா இது World's Best finisherக்கே வந்த சோதனை என்பது போல, இந்தியாவின் தோனிக்கு கடுமையான அழுத்தங்களைக் கடந்த தொடர்களில் விமர்சகர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். இலங்கையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளை வென்றுகொடுக்க தோனியின் பங்களிப்பு அற்புதமானது. ஆனால் அதைத் தொடர்ந்து இந்தியாவிலே இடம்பெற்ற அவுஸ்திரேலிய, நியூ சீலாந்து அணிகளுக்கு எதிரான T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு அரைச்சதமும் பெறாமல் போனதால் வந்த தோல்விகளுக்கு எல்லாம் தோனியின் தலையே உருள ஆரம்பித்தது.
இளம் வீரர்களுக்கு இடம் வழங்க தோனி விலகவேண்டும் என்ற கோஷம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதில் வழங்க இந்தத் தொடர் உதவும்.

ஒரு காலத்தில் இந்தியாவின் முதல் தெரிவு விக்கெட் காப்பாளராக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 32 வயதில் இந்தியாவுக்கு மிக முக்கியமான 4ஆம் இலக்கத்தில்  'துடுப்பாட்ட' வீரராக வருகிறார்.
யுவராஜ் சிங் அதன் பின் இளம் வீரர்கள் ராகுல், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானே, ஜாதவ் என்று அனைவருமே சறுக்கிய நிலையில் உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களை மலையாகக் குவித்து வந்த கார்த்திக்குக்கு தன்னை அணியில் நிரந்தரமாக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவரது வயதினால் இதுவே இறுதியான வாய்ப்பாக அமையலாம்.

அதே போல டெஸ்ட் தொடரில் தடுமாறிய ரஹானேக்கும் தன்னை கோலியின் இடத்தில் நிரூபிக்கும் ஒரு வாய்ப்பும், இளம் வீரர்கள் ராகுல், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு தம்மை 2019 உலகக்கிண்ணம் வரை அணியில் நிரந்தரமாக இணைக்கும் வாய்ப்பையும் வழங்க இருக்கிறது இத்தொடர்.

எனினும் நிரூபிக்கப்பட்ட இந்தியாவின் துல்லியப் பந்துவீச்சு வரிசையுடன் ஒப்பிடவே முடியாத இலங்கை அணியின் பந்துவீச்சு வரிசை தன்னை எப்படி வெளிப்படுத்தப் போகிறது என்பதிலேயே அதிகம் தங்கியுள்ளது. சும்மாவே வெளுத்து வாங்கும் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கைப் பந்துவீச்சாளர்கள் இலகுவான ஓட்டங்களைக் கொடுக்கக் கூடாது.

அத்தோடு மீண்டும் முன்னேறி வரும் களத்தடுப்பு இன்னும் உறுதியாக்கப்பட்டு பழைய உலகத்தரமான நிலைக்கு வரவேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பு.
இந்தியாவும் டெஸ்ட் தொடரில் ஏராளமான பிடிகளைத் தாராளமாக விட்டுப் பழகிய பின்னர் (குறிப்பாக ஸ்லிப் பிடியெடுப்பு) அதிலிருந்து மீள எதிர்பார்த்துள்ளது.

எனவே வழமையான 'கொட்டாவி'த் தொடராக அமையாமல் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தொடராக இது அமையும் என்று நம்பியிருப்போம்.

இந்தியத் தீவிர ரசிகர்கள் இலங்கையில் நடந்த வெள்ளையடிப்பாக இதை எதிர்பார்த்திருக்க, ரசல் ஆர்னல்ட் போன்ற மிக வெறித்தனமான இலங்கை ரசிகர்கள் அப்படியெல்லாம் இலகுவாக முடியாது என்பதையும் தாண்டி இலங்கை இரும்பு மனிதனின் தலைமையில் கோலியில்லாத இந்திய அணியை வதம்  செய்வோம் என்று அசுர நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

எல்லாம் டெஸ்ட் தொடரில் காட்டிய போராட்டம் தான்.
நம்பிக்கை தானே எல்லாம்...


* படங்கள், தரவுகள் : www.thepapare.com, www.espncricinfo.com, www.howstat.com/cricket





ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner