May 17, 2012

நல்ல வடிவா எழுதுங்கப்பா #ஹர்ஷு

ஹர்ஷு


"எனக்கு போர் அடிக்குது அப்பா.. என்னோட விளையாட வாங்களேன்.." சரியாகக் களைத்து விழுந்து வீட்டுக்கு வரும் என்னை ஹர்ஷு எக்கச்சக்க ப்ளீஸ் போட்டு அழைக்கும்போது தட்ட முடிவதில்லை. அதுவும் இந்த IPL ஆரம்பித்த பிறகு ஒன்பது அணிகளின் பெயர்களையும் மனப்பாடமாக சொல்லிச் சொல்லியே, தான் ஒரு அணி, நான் ஒரு அணிஎன்று பந்து வீசச் சொல்லித் தான் துடுப்பெடுத்தாடுவதும், பின் தான் வீசும் பந்துகளுக்கு ஆட்டமிழக்கச் சொல்வதும் நாளாந்தம் நடப்பவை. 

ஒரு நாள் சரியான களைப்போடு சொன்னேன் "ஹர்ஷு, அப்பாக்கு கொஞ்ச வேலை இருக்கு.. நீங்க ஒருநாளைக்கு உங்கட பிரென்ட்சைக் கூட்டிக்கொண்டு வந்து 
விளையாடலாமே"

உடனே பதில் வந்தது சலிப்புடன் " இல்லையப்பா அவங்கல்லாம் சரியான பிசி.. வர மாட்டாங்க"

எனக்கு சிரிப்பும் வந்துவிட்டது .. "அப்படி என்னடா அவங்களுக்கு பிசி?" 

"இல்லையப்பா ஸ்கூல்ல (நேர்சரி) நிறைய எழுத்து வேலை குடுக்கிறாங்களே.. English writing, Tamil hand writing எண்டு அப்பா... அவங்க பாவம்" 

அட.. என்று நினைத்துக்கொண்டே " அப்போ உங்களுக்கு? நீங்க எல்லாம் முடிச்சிட்டீங்களா?" என்று கேட்டேன்..
"இல்லையப்பா... அதெல்லாம் விளையாடி முடிச்ச பிறகு தானே செய்யலாம்.. அது study timeல தானே"

ம்ம்ம்ம்... நாலரை வயசில கதைக்கிற கதையைப் பாருங்களேன்.. 
இப்போதெல்லாம் என்னை விட அவன் தான் IPL அட்டவணையை எல்லாம் சரியா ஞாபகம் வைத்திருக்கிறான். 


ஹர்ஷுசென்னை சுப்பர் கிங்க்சின் தீவிர ஆதரவாளன். சென்னை அல்லது அவன் ஒரு நாளில் ஆதரவளிக்கும் அணி தோற்றுவிட்டால் கொஞ்சம் அப்செட் ஆக இருப்பான். நான் "இதெல்லாம் சும்மா விளையாட்டுத் தானே அப்பன்.. இன்றைக்குத் தோற்றால் நாளைக்கு வெல்வார்கள்" என்று சொல்லி சொல்லி இப்போ 
"அப்பா இண்டைக்கு சென்னை தோத்தா நான் கவலைப்பட மாட்டேனே.. நான் இப்போ Big Boy தானே.. its just a game தானே"என்கிறான்.


---------------------------

அன்றொரு ஞாயிற்றுக்கிழமை... எந்தவொரு வேலையும் வைத்துக்கொள்ளாமல் வீட்டிலிருக்கும் நாள் என்பதால் ஹர்ஷுவுடன் அவன் ஆசைப்படும் விளையாட்டு எல்லாம் விளையாடி அவனைக் குஷிப்படுத்துவது வழக்கம்.
திடீரென்று கேட்டான் "அப்பா நாங்க சண்டைப்பிடிப்போமா? நான் விஜய் நீங்க வில்லன் ஓகேயா?"
சரி என்று சொல்லி முடிக்க முதல் சரமாரியாக தன் பிஞ்சுக்காலாலும்கையாலும் மெத்து மெத்து என்று மொத்த ஆரம்பித்தான்.. 

நான் சும்மா விழுவது போல நடிக்க, "வில்லன் வில்லன், ப்ளீஸ் கொஞ்சம் இங்கே வெயிட் பண்ணுங்கோ, நான் என்டை கண்ணை (Gun) எடுத்துக்கொண்டு வந்து உங்களை ஷூட் பண்றேன்" என்று தனக்கேயுரிய மழலையில் சொல்லிவிட்டு ஓடினான்.

---------------------
அசதியாக, வசதியாக சோபாவில் சாய்ந்துகொண்டே கிரிக்கெட் போட்டி பார்த்துக்கொண்டிருந்தேன்.. இவன் கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று சொல்லி ஓடி வந்து எனக்கு மேலே விழுந்துகொண்டிருந்தான்.. எனது இரு கால்களினாலும் அமுக்கி ஆளைப் பிடித்துக்கொண்டே " You are under arrest" என்றேன்.
"I'm cricket player. Leave me" என்று பதிலுக்கு சொன்னான் ஹர்ஷு.


"So what?" என்று பிடியை விடாமல் நான் கேட்டேன்..
உடனே அவனிடமிருந்து பதில் " என்ன குற்றம் செய்தேன் நான்?"


-------------------------------
அன்றொருநாள் எனது மனைவி எதையோ காணவில்லை என்று முமுரமாகத் தேடி, கிடைக்கவில்லை என்றவுடன் கவலையுடன் புலம்பிக்கொண்டிருந்திருக்கிறார்.
பெரிய மனுஷத்தமாக நம்ம ஹர்ஷு சொன்னாராம் " விட்டுத் தள்ளுங்கம்மா.. எப்ப பார்த்தாலும் சும்மா யோசிச்சுக் கொண்டு"

எங்கே இருந்து தான் இதெல்லாம் பொறுக்கிறானோ...

---------------------------------

இப்போதெல்லாம் இவன் செய்யும் குறும்புகள் கொஞ்சம் அதிகமாகும்போது என் மனைவி கேட்பார் "ஹர்ஷுவின் இந்தக் குழப்படி பற்றி எழுதப்போறீங்களா?"
ஒருநாள் இவன் உடனே என்னைப் பார்த்து சொல்கிறான் " நல்ல வடிவா எழுதுங்கப்பா.. எல்லாருக்கும் சொல்லுங்கப்பா வாசிக்க சொல்லி"

இன்னும் வ(ள)ரும் ஹர்ஷு குறும்புகள்.... 

May 13, 2012

விடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சியும், ஒருவார IPL அலசலும் விக்கிரமாதித்த விளையாட்டும் - ஒலி இடுகை


மீண்டும் ஒரு ஒலிப் பதிவு..
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற V for வெற்றி, V for விளையாட்டு நிகழ்ச்சியின் ஒலிப் பகுதிகளை இடுகையாக இங்கே தருகிறேன்.

இந்த நிகழ்ச்சி ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைகிறது.
காரணம் நாளை (திங்கள்) முதல் எமது வெற்றி FM இல் இடம்பெறுகின்ற நிகழ்ச்சி மாற்றங்களின் காரணமாக இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக விடைபெறவுள்ளது. 

இரு வருடங்களாக இந்த நிகழ்ச்சி விளையாட்டுப் பிரியர்களுக்குப் பிடித்த ஒரு தொகுப்பு, விவாத, அலசல் நிகழ்ச்சியாக அமைந்திருதது.
ஒன்று இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்று சொல்வார்களே,.. அதே போல இந்நிகழ்ச்சியும் இனி இல்லாமல் போனபிறகு வரும் "எங்கே இந்நிகழ்ச்சி?" "மீண்டும் V for வெற்றி, V for விளையாட்டு வராதா?" போன்ற கேள்விகள் தான் இந்த நிகழ்ச்சி பெற்றிருந்த வரவேற்பை அறியக்கூடிய அளவீடாக இருக்கும்.

இந்த வேளையில் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மத்தியில் வரவேற்பு பெறுவதற்குக் காரணமாக இருந்த சிலரை நன்றியுடன் ஞாபகப்படுத்தியே ஆகவேண்டும்..

"நீங்கள் உங்கள் ஒலிபரப்பின் ஆரம்பகாலத்தில் செய்த நிகழ்ச்சி போலே ஒன்று வெற்றியில் செய்தால் என்ன ?" என்று தூண்டிய ஹிஷாம், ஒலிபரப்பு + தயாரிப்பில் முன்பிருந்து துணை வந்த சீலன், ஷமீல், மது(ரன்) ஆகியோரோடு முன்பு நிகழ்ச்சியில் என்னுடன் கலந்துரையாடல்களில் ஆக்கபூர்வமாக இணைந்து நிகழ்ச்சியை முழுமைப்படுத்திய விமல், கோபிக்ருஷ்ணா (சங்கக்காரவின் லோர்ட்ஸ் உரை தமிழ்ப்படுத்தலை எங்கள் நேயர்கள் அவ்வளவு இலகுவில் மறந்திடுவார்களா?) ஆகியோரை நேயர்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.



இந்த இறுதி நிகழ்ச்சியின் முதல் மூன்று பாகங்களும் கடந்த வார போட்டிகளை அலசுகிறது.
நான்காவதும் இறுதியுமான பகுதி மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தானிய அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகியமை & மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சென்று என்ன செய்யப் போகிறது என்பவற்றை சுருக்கமாக ஆராய்கிறது.

கேட்டு விமர்சனம் தாருங்கள்.

பகுதி 1





பகுதி 2



பகுதி 3




பகுதி 4




ஹ்ம்ம்ம்.. அடுத்த வாரம் இதே போன்ற ஒலி இடுகை தருவது இலகுவாக அமையாது போல இருக்கே..
ஆனாலும் சுற்றுக்கள் நெருங்கி வருவதால் பற்றிய ஒரு அலசலைத் தந்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்..

இன்றைய IPL போட்டிகளை விட, இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் (EPL) கால்பந்தாட்டப் போட்டிகளின் முக்கியமான இரு போட்டிகளை அலைவரிசைகளை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே இவ்விடுகையை இடுகிறேன்.

ஏராளம் செலவழித்து கடுமையான முயற்சிகளை எடுத்து சிறப்பாகவும் விளையாடிவரும் Manchester City அணிக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்..

Sunderlandஐ Manchester United வெல்லும் என்றாலும், QPRஇடம் Manchester City தோற்காது என்ற ஒரு அசாத்தியமான நம்பிக்கை தான்..

விக்கிரமாதித்தன் விளையாடாமல் இருக்கட்டும்.


ஆகா.. இடுகையை ஏற்றுகிற நேரம் நம்ம விக்கிரமாதித்தர் விளையாட்டைக் காட்டிட்டார் போல கிடக்கே.. ஒரு பக்கம் நம்ம அபிமான அணி New Castle United தோற்றுக்கொண்டிருக்க, மறுபக்கம் Manchester City தோற்கிறது.. Manchester United வெல்கிறது.. ஹ்ம்ம்ம் 



May 11, 2012

தலை வாங்கிக் குரங்கு


சிறுவயதிலிருந்து வாசிப்பு தான் என்னுடைய முக்கியமான பொழுது போக்கு.. அதிலும் பாடசாலைக் காலத்தில் ராணி கொமிக்ஸ், முத்து கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ் என்றால் தண்ணீர், சாப்பாடும் தேவையில்லை.. முகமூடி மாயாவி, ஜேம்ஸ் பொன்ட் , இரும்புக்கை மாயாவி, டெக்ஸ் வில்லர் இவர்கள் எல்லாரும் எனக்கான கற்பனை உலகத்தின் நாயகர்கள்..

ஆங்கிலப் பரிச்சயம் இல்லாத காலத்தில் இவர்கள் கொமிக்ஸ் புத்தகங்கள் மூலமாக தமிழ் பேசுவது எனக்குத் தந்த பரவசம் தனியானது.
பின்னர் ஆங்கில கொமிக்ஸ் புத்தகங்கள், படங்கள், இணையம் மூலமான கொமிக்ஸ் வாசிப்பு, இதர வாசிப்புக்கள் என்று வயதுக்கும் வசதிக்கும் ஏற்ப வாசிப்பு ரசனை கொஞ்சம் மாற்றம் கண்டுகொண்டே இருந்தாலும், இன்றும் கொமிக்ஸ் புத்தகங்களை எங்கேயாவது கண்டால் விலையைப் பார்க்காமல் வாங்கிக்குவிப்பதும் எப்படியாவது நேரத்தை எடுத்து வாசிப்பதும் தொடர்கிறது.. 


ஆனால் அண்மைக்கால தமிழ் கொமிக்ஸ் புத்தகங்களின் வருகை குறைந்தது மிக மனவருத்தமே.. 

அப்படியும் கிடைக்கிற பழைய கொமிக்ஸ் புத்தகங்கள் (வாசித்த பழைய புத்தகங்களை வாங்கி ,விற்கும் கடைகளில்), இல்லாவிட்டால் ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை வெளிவரும் கொமிக்ஸ் புத்தகங்கங்களைக் கட்டாக வாங்கிக்கொண்டு போய் வீட்டில் குவித்து விடுவேன்.



இப்படித்தான் அண்மையில் வெள்ளவத்தையில் உள்ள புத்தகக்கடைக்கு சென்றிருந்தவேளையில் தற்செயலாகக் கண்ணில் பளபளவென்று அகப்பட்ட ஒரு புத்தகம் வாங்கு வாங்கு என்று என்னைக் கூப்பிட்டது..

'தலைவாங்கிக் குரங்கு'
இது தான் தலைப்பு.

அட முன்பு இதை வாசித்திருக்கிறேனே என்று நினைத்தபோது உள்ளே தட்டிப் பார்த்தால் மீண்டும் முன்னைய பிரபலமான டெக்ஸ் வில்லர் மற்றும் இதர சாகச ஹீரோக்களின் கொமிக்ஸ் கதைகளை வெளியிடப் போவதான அறிவிப்போடும் பளபள பக்கங்களோடும் வெளிவந்திருந்த தலைவாங்கிக் குரங்கு என் மனம் வாங்கிக்கொண்டது. 
நான் அதை வாங்கிக்கொண்டேன்.

அதை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமும், நீண்ட காலத்தின் பின்னர் நம்ம டெக்ஸ் வில்லரை சந்திக்கொன்றோம் என்ற த்ரில்லும் மட்டுமே அந்த நேரம் இருந்ததால் எவ்வளவு பணம் கொடுத்தேன்; எவ்வளவு மீதி தந்தார்கள் என்றெல்லாம் கவனிக்கவே இல்லை.

வீட்டுக்கு வந்து ஒரே மூச்சாக வாசித்து முடித்து விட்டு, ஆசிரியரின் முன்னுரை, பின்னே சில பக்கங்கள் நீண்டிருந்த இனி வரும் இதழ்கள் பற்றிய விளம்பரங்கள் எல்லாம் வாசித்துவிட்டுத் தான் விலையைப் பார்த்தேன்.. 
இலங்கை விலை 350 ரூபாயாம்.. அம்மாடி.. 

பளபள அட்டை, தரமான பக்கங்கள் இதற்குத் தான் அந்த விலை என்று புரிகிறது. (அத்தோடு இந்திய சஞ்சிகைகள், புத்தகங்களுக்கு இலங்கையில் ஏற்றப்பட்ட வரிகளும் சேர்ந்து இருக்கு)

ஆனால் விலையை நினைத்து வயிறு எரியாத அளவுக்கு 'தலை வாங்கிக் குரங்கு' சுவாரஸ்யமாக இருந்தது. 
முன்பிருந்தே டெக்ஸ் வில்லர் எனக்கு மிகப்பிடித்த ஒரு Cowboy ஹீரோ. இதனால் இன்னும் ஒரு விசேடம் இந்தக் கதையில்.. தமிழில் வெளிவந்த டெக்ஸின் முதல் கொமிக்ஸ் இது தானாம். 

 மர்மக் கொலைகள்.. குதிரையில் வரும் கொலைகார மனிதக் குரங்கு.. வெறியோடு அலையும் வேற்று இனப் பெண்..
துணிச்சலோடு துப்பறியும் நம்ம ஹீரோ டெக்ஸ்..  இவை போதாதா?
 ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை விட 
அதிக விறுவிறுப்பைத் தருகிறது - தலை வாங்கிக் குரங்கு

வசனப் பிரயோகங்கள் சிறுவயதில் ரசித்தவற்றை ஞாபகப்படுத்தின..
படங்களிலும் மாற்றமில்லை என்பதால் அப்படியே எங்களை
சிறுவயதுக்கு அழைத்துச் செல்கிறது த.வா.கு.

இலங்கையில் அநேகமான புத்தகக் கடைகளில் இதனை இப்போது வாங்கலாம் என்று என்னைப் போலவே கொமிக்ஸ் பிரியர்களான நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.

நீண்ட காலத்துக்குப் பிறகு வந்துள்ள 'தலைவாங்கிக் குரங்கு'க்குப் பிறகு அடுத்ததா ஏதாவது வந்திருக்கா என்று நேற்று கடைப் பக்கம் போன நேரம் கேட்டேன்.. இன்னும் வரலையாம்..

பெயரே எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது.. 
சாத்தானின் தூதன் - டாக்டர் செவன் 

எப்போ வரும்? வெயிட்டிங்.. 

May 09, 2012

கிளுகிளு & கிக்கான பரீட்சை

மீண்டும் ஒரு IPL காலம்.....

எங்கள் மாலைப் பொழுதுகள் எல்லாம் IPL உடன் மூழ்கிக் கிடக்கின்றன. 
Twitter, Facebook Timeline எல்லாம் IPL இனால் நிறைந்து கிடக்கின்றன..
விலைவாசி முதல் தலைபோகும் அரசியல் பிரச்சினைகளும், வாழ்க்கையின் வேதனைகளும் தற்காலிமாக மறக்கவும் IPL தான் துணை....

இந்த நேரத்தில் தான் முன்னைய இடுகையொன்று ஞாபம் வந்தது...

இதோ ரிப்பீட்டு...

பரீட்சைகள் என்றாலே கசப்பு மருந்தாக, கண்ணில் காட்டாத ஜந்துவாக ஓடி ஒளிக்கும் மாணவர்களுக்கு அதை சுவையாக மாற்றித் தர சில வழிகளை இப்போது இளைஞர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள IPL பாணியில் யோசித்தோம்....


உலகம் முழுக்க IPL மூலமாக கிரிக்கெட் பரபர விற்பனைப் பொருளாக மாறியது போல, பரீட்சையையும் மாணவர்கள் விரும்புகிற ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மாற்ற நம்மால் முடிந்த சில ஐடியாக்கள்...

IPL பாணியில் பரீட்சைகள்..

1. பரீட்சை நேரத்தை ஒரு மணித்தியாலமாக மாற்றி,புள்ளிகளை 50ஆக மாற்றிவிடுவது..
2. பதினைந்தாவது நிமிடத்தில் Strategy break அறிமுகப்படுத்தப்படும்.
3. மாணவர்களுக்கு ப்ரீ ஹிட் (Free hit) கொடுப்பது; அவர்களுக்கான கேள்விகளை அவர்களே எழுதி விடைகளையும் அவர்களே எழுத ஒரு வாய்ப்பு
4. முதல் பதினைந்து நிமிடங்கள் Power Play... பரீட்சை அறைக்குள் மேற்பார்வையாளர் இருக்கமாட்டார்.. மாணவரகள் இஷ்டப்படி புகுந்து விளையாடலாம்.
5. கொப்பி அடிக்காமல், பிட் அடிக்காமல் எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த Fair Play விருதுகளை அறிமுகப்படுத்தல்.. (ரொம்ப நல்லவங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்போமே)
6. பரீட்சைத் தாளில் பிழையான வினா ஒன்று கேட்கப்பட்டிருந்தால் அடுத்த கேள்விக்குத் தவறான விடை சொன்னாலும் புள்ளிகள் கழிக்கப்படாது..
இதுவும் ஒரு வகை Free hit தான்.


எல்லா மாணவர்களும் விரும்பப்போகின்ற முக்கியமான விஷயம் இது....

ஒவ்வொரு சரியான விடை எழுதும் நேரமும் ஊக்குவித்து உற்சாகப்படுத்த பரீட்சை மண்டபங்களில் Cheer Girls  இருப்பார்கள்...
மாணவிகள் விரும்பினால் Cheer Boysஉம் ஏற்பாடு செய்யலாம்....





ஹலோ.. எங்கேப்பா எல்லாரும் பரீட்சைகளுக்குப் படிக்கத் தயாராகிறீங்களா? இன்னும் அமுல்படுத்தலீங்க.. நீங்கள் எல்லாம் ஆதரவளித்து இந்த ஐடியாவை வரேவேற்று வெற்றிபெறச் செய்தால் வந்திடும் விரைவில்.
(வாக்குக் குத்துங்கன்னு மறைமுகமாக சொல்றேனாக்கும்)



இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் காலை விடியலில் ஏக வரவேற்பைப் பெற்ற விஷயம் இப்போ இடுகையாக..

இதன் ஒரிஜினல் ஆங்கில வடிவம் ;)


May 06, 2012

ஒரு வார IPLஉம் உலக கிரிக்கெட் உலாவும் - ஒலி இடுகை



பற்றிய ஒலி வடிவ இடுகை ஒரு வாரத்துக்கு முந்திய வாரம் இட்டிருந்தேன்..

நல்ல வரவேற்பும் இருந்தது. கடந்த வாரம் தொடர்ச்சியைத் தரமுடியாமல் நேர,கால சூழ்நிலைகள் சதிசெய்திருந்தன..

இதோ கடந்த வெள்ளிக்கிழமை Vettri FMஇன் V for வெற்றி V for விளையாட்டு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான சிறப்புத் தொகுப்பு..

பகுதி 2 & 3 இல் ஏப்ரல் 27முதல் கடந்த வெள்ளிக்கிழமை மே 4 வரை IPLஇல்நடந்தவற்றைப் பற்றி அலசுகின்றன..
முதலாவது பகுதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த வாரம் இடம்பெற்ற சில முக்கிய விடயங்கள் பற்றி மேலோட்டாமாகப் பார்க்கிறது...

கேட்டு உங்கள் விமர்சனங்களை வழங்குங்கள்....

பகுதி 1



பகுதி 2



பகுதி 3

May 03, 2012

பத்திரிகை சுதந்திரம் + உரிமைகளில் வியக்க வைக்கும் எம் வெள்ளை வான் நாடு


May 3 - இன்று உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான நாள்..



நாம் வாழும் வெள்ளை வான் (White Van) நாட்டுக்கும் இதற்கும் நேரடிசம்பந்தம் இல்லை என்றாலும், உண்மையை சொல்லப் போய், மக்களுக்காகாகவும் உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் தங்கள் உயிர்களை நீத்த உண்மையான ஊடகப் போராளிகளையும், உயிரைப் பற்றி அஞ்சாமல் இன்னமும் நேரடியாகும் மறைமுகமாகவும் எழுதிவரும், பேசி வரும் பல நேர்மையான ஊடகவியலாளரையும் நாம் இன்றைய நாளில் நினைக்கவே வேண்டி இருக்கிறது.

அன்று எமது பாடசாலைக்காலத்தில் அறிந்த ரிச்சர்ட் சொய்சா முதல், பணியை நான் ஆரம்பித்த காலத்தில் பலியெடுக்கப்பட்ட நிமலராஜன், நடேசன், சிவராம்(தராகி), பழகி, பேசிய லசந்த விக்கிரமதுங்க என்று இன்னும் பலியானோர் எத்தனை பேர்.. கடத்தப்பட்டு காணாமல் போனோர் எத்தனை பேர்; கடத்தப்பட்டு, மிரட்டப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர்; கைது செய்யப்பட்டதால் வாய் மூடப்பட்டோர் எத்தனை பேர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
எனினும் இன்னும் உண்மைகள் பேசப்படுகின்றன.. எதோ ஒரு விதத்தில் வெளிவருகின்றன..

இந்த வருடத்துக்கான உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான நாள் பற்றிய தொனிப்பொருளான "ஊடக சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சரியான, தரமான தகவல்களை அறிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல்கள்/இடர்ப்பாடுகள்" பற்றிய ஒரு கலந்துரையாடல் கொழும்பு அமெரிக்கன் நிலையத்தில் - American Centre (துறைசார்ந்தோர் மற்றும் துறை சார் நிபுணர்கள் கலந்துகொண்டார்கள்) இடம்பெற்றது.

தகவல் அறியும் உரிமையும் ஊடக சுதந்திரத்தின் முக்கிய கூறு என்பது வலியுறுத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், அமெரிக்காவில் இருந்து நேரடியாக காணொளி உரையாடல் மூலமாக இணைந்துகொண்ட ஊடகவியலாளர்களைக் காப்பாற்றும் அமைப்பின் - Committe to Protect Journalists இணைப்பாளரான போப் டியேட்ஸ் சொல்லியிருந்த கருத்துகள் நிச்சயம் முக்கியமானவை.

ஊடக சுதந்திரத்தின் அடிப்படைகள், அரசாங்கம் ஒன்று மக்களுக்கு அவர்கள் அறிய விரும்பும் தகவல்களை ஏன் வழங்கவேண்டும், இதுகுறித்தான 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேசப் பிரகடனம், இதனை ஏற்று அமுல்படுத்தியுள்ள நாடுகள் என்று பல்வேறு விடயங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.

அதிலே நாட்டு எல்லைகள் தாண்டி உலகின் அனேக மக்கள் அறிந்துகொள்ள விரும்பும் விடயங்கள் ஒரே வகையானவை என்ற விடயம் சுவாரஸ்யமானது..
அரச அதிகாரிகள்,அமைச்சர்களின் சம்பள விபரம்
தேர்தல் பற்றிய விபரங்கள்
அரச சொத்து, ஒப்பந்த விபரங்கள் போன்றவை தானாம் முதல் மூன்று விடயங்கள்..
அதன் பின் தான் விதிகள், விபரங்கள், விளக்கங்கள் தேடுகிறார்களாம்.

இந்தியாவில் எவ்வளவு தூரம் இந்தத் தகவல் அறியும் சட்ட மூலத்தால் ஊடகவியலாளர்களை விட, பொதுமக்கள் பலன் அடைந்துள்ளார்கள் என்பதை இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் வியந்துரைக்க, இந்திய ஊடகவியலாளர்கள் இருவர் அதுபற்றி கொஞ்சம் சொன்னார்கள்.

நாம் இங்கே பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கவேண்டி உள்ளது.
இப்படியான சட்ட மூலம் ஒன்றை இங்கே எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டு வர முயல அரசாங்கம் அதை எதிர்த்து, தாமே அப்படியான சட்ட மூலம் ஒன்றைக் கொண்டுவருவதாக அறிவித்தவர்கள் தான்.. ம்ஹூம்.. வருடங்கள் ஆகிவிட்டன..

இப்படியான கலந்துரையாடல்கள் எனக்குப் பலவேளை சலிப்பையே தரும்.. காரணம் பேசிப் பேசிப் பயனென்ன கண்டோம்?
எல்லாம் பேசுவோம்.. பலவேளை தீர்மானங்கள் கூட எடுப்போம்.. ஆனால் பலன்?

எல்லா நாடுகளிலும் விதிகள் இருந்தாலும் எமக்கு மட்டும் எல்லாம் விதிவிலக்குத் தான்.

2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தகாலம் இருந்தவேளையில் பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் 51ஆம் இடத்தில் இருந்த இலங்கை இப்போது 163ஆம் இடத்தில்..

இலங்கைக்கு கீழே இன்னும் 16 நாடுகள் மட்டுமே..

அவை ஈரான், சீனா, எரித்ரியா, யேமன், சூடான், சிரியா, சோமாலியா, வியட்நாம், மியான்மார், வட கொரியா போன்ற 'பெயர்' பெற்ற நாடுகள்..
இந்த இணைப்பைப் பாருங்கள்...
http://en.rsf.org/press-freedom-index-2011-2012,1043.html

ஊடகத் தொழில் பற்றி என் கவியரங்கக் கவிதை ஒன்று..

ஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை



இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுதிய ஊடக சுதந்திரம் பற்றிய இடுகை..

இலங்கையில் ஊடக சுதந்திரம் ..




இலங்கையிலே ஊடகவியலாளனாக இருப்பது பெருமையாகவே இருக்கிறது.

May 02, 2012

மூணு - ரொம்பவே தாமதமா எழுதுறேனோ?



படம் வந்து எவ்வளவோ நாள் ஆகிவிட்டது.. நான் பார்த்தும் இரு வாரங்கள் ஆகிவிட்டன..
எனவே இதை விமர்சனமாக எடுக்காமல் மிகப் பிந்திய ஒரு பார்வையாக (அல்லது பொருத்தமான பெயருடன் ஏதோ ஒன்றாக) எடுத்துக்கொள்ளுங்கள்.
கொலைவெறி பாடல் மூலமாக அடையாளம் காணப்பட்ட/படும் படம்..

அது மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் இரு பெரும் நாயகர்களின் வாரிசுகள் இணைந்ததனால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.
அதனாலோ என்னவோ வெளிவந்த பிறகு மாறுபட்ட விமர்சனங்கள், கருத்துக்கள்..

நல்லா இருக்குமோ அல்லது நாசமறுக்குமோ என்ற குழப்பத்தோடு தான் நானும் சென்றேன்...

பெரிதாக சிக்கல் முடிச்சுக்கள் இல்லாத கதை...
கதாநாயகி பார்வையில் ஆரம்பித்து படத்தில் நெடுந்தொலைவு பயணித்து, நண்பர் பார்வையில் மீண்டும் பயணித்து, எங்களுக்கு முடிவைத் தருகிறது.

ஆரம்பமே ஒரு சாவு வீடு.. கொஞ்சம் மர்மம் + பயங்கரம் கலந்த பின்னணி..
அழுகை, கவலையுடன் கதாநாயகி தன் வாழ்க்கையில் பின்னோக்கிப் பயணிக்கிறார்.



பாடசாலைக் காலக் காதல், காதல் திருமணமாகும் போராட்டம், திருமணத்தின் பின்னரான வாழ்க்கை இந்த மூன்று பருவத்தைத் தான் இயக்குனர் 'மூணு' என்று குறிப்பிட்டாரோ?
மூணு - மூன்று பருவங்களிலான காதல் ( பள்ளி, திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப்பின்)

அல்லது கதாநாயகன், நாயகி, நாயகனின் நண்பன் இந்த மூவருக்கும் இடையிலான இழுபறிப் போரைக் கருதினாரோ?
மூவருக்கிடையிலான கதை நகர்வு, (தனுஷ், ஸ்ருதி, சுந்தர்)              
தனுஷிற்குள்ள மூன்று மனநிலை (?) (Normal, Depressed, Maniac)
இந்த மூன்றில் மூணுக்கு எதையும் அர்த்தமாகக் கொள்ளலாம் :)              
             
ஆனால், ஐஷ்வர்யா தனுஷ், ஒரு பேட்டியின் போது, மூன்று பருவங்களில் காதலைக் குறிப்பதாகத்தான் சொல்லி இருந்தார். அந்த படத்தின் tag  line கூட ''The story of Ram n Janani '' தானே? :)

பாடசாலைப் பருவத்தில் துரத்தித் துரத்தி ஸ்ருதியை லவ்வி, கெஞ்சிக் கூத்தாடி சம்மதிக்க வைத்து, இருவரும் மனம் உருகிக் காதலிக்கிறார்கள்.ஆனால் வீட்டில் பிரச்சினை வருகின்ற நேரம், பிரிவு வந்துவிடுமோ எனும் அளவுக்கு பிரச்சினை முற்றுகிறது. எனினும் நாயகனின் தந்தையின் ஆசீர்வாதத்தோடு திருமணம் நடந்து வாழ்க்கை சந்தோஷமாக ஆரம்பிக்கிறது.இனித் தான் பிரச்சினை வர வாய்ப்பே இல்லை எனும்போது தான் ஒரு துர்ச்சம்பவம்.
தனுஷ் இறந்துவிடுகிறார்.

இந்த இடைக் கதையை முதல் காட்சியோடு தொடர்பு படுத்தி தனுஷின் மரணம்/ கொலை/ தற்கொலைக்கான மர்ம முடிச்சை காதல், ஊடல், நட்பு, பாசம் எனப் பல கலந்து முடிப்பதில் தான் மூணு வெற்றியா தோல்வியா எனப் பலரும் பலவாறு யோசிக்கிறார்கள்.

தனுஷ், ஸ்ருதி, சுந்தர் (மயக்கம் என்ன நண்பர்), சிவகார்த்திகேயன், பிரபு, பானுபிரியா, ரோகினி என்று மிகக் குறைவேயலவான முக்கிய பாத்திரங்கள் ..
இவர்களோடு ஸ்ருதியின் தந்தையாக வருபவரையும், அந்த வாய் பேச முடியாத் தங்கையையும் சேர்க்கலாம்...

பாத்திரங்கள் குறைவாக வருகின்ற படங்களில் நாம் அவதானிக்கும் ஒரு விடயம், கதையின் அழுத்தமும், முக்கிய கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் கனதியும்.
மூணு இலும், தனுஷ், ஸ்ருதி ஹாசன் என்ற இரண்டு குருவிகள் மீது இயக்குனர் ஐஸ்வர்யா வைத்துள்ள பனங்காயின் கனதி அதிகம் தான்..
ஆனால் இருவருமே தங்களால் முடிந்தளவு மிகச் சிறப்பாக செய்துள்ளார்கள்.
பள்ளிப்பராயத்துக்கும் பொருந்தும் இவர்களின் முகங்களும், உடல் தோற்றங்களும், திருமணத்துக்குப் பின்னதான காலத்துக்கும் பொருந்துவது இயக்குனருக்கும் படத்துக்கும் மட்டுமில்லை; எங்களுக்கும் அதிர்ஷ்டம் தான்.

அதே போல இவர்களது முக பாவனைகள், உடல் மொழிகள், காதல் வெளிப்பாடுகள் அனைத்துமே அந்தந்தப் பருவகாலத்துக்குப் பொருந்துவனவாக இருப்பது பாராட்டுக்குரியது.

தனுஷ் இப்படியான பாத்திரங்களுக்கு அச்சுக்கு வார்த்தது போலப் பொருந்திப்போகிறார். வழிவது, காதல் வயப்படுவது, உருகுவது, ஏங்குவது, பொறுமுவது, குமுறுவது, கோபப்படுவது என்று சகல உணர்ச்சிகளுக்கும் மனைவி கொடுத்த களத்தில் புகுந்து விளையாடி மீண்டும் பெயரைத் தட்டிச் செல்கிறார்.. தேசிய விருது நடிகனய்யா..

ஸ்ருதி ஹாசன்.. பெரிய கண்கள். அவை பேசுகின்றன.. முகம் முழுக்க உணர்ச்சிகள் ததும்ப

உணர்ச்சிப்பெருக்கு நிறைந்த காட்சிகளில் ஸ்ருதி உருகவைக்கிறார்.
ஆனால் வாயைத் திறந்து அழும்போது தான் கொஞ்சம் எங்களுக்கும் கஷ்டமாக இருக்கிறது.

தனுஷ் - ஸ்ருதி நெருக்கமான காட்சிகளில் காட்டும் அந்த அன்னியோன்யம், அன்பு வெளிப்பாடுகளை எப்படித்தான் ஐஸ்வர்யா பொறுத்துக்கொண்டாரோ?
தொழில் தர்மமோ?

பிரபு , ரோஹிணி போன்றோரின் நடிப்பு பற்றி சொல்லத் தான் வேண்டுமா?
பிரபுவுக்கு இப்படியான பாத்திரங்கள் எல்லாம் அவருக்கென்றே வார்த்தது போல.. ஒரு சில வார்த்தைகளிலும், ஆழ ஊடுருவும் அந்தப் பார்வையிலுமே அசத்திவிடுகிறார்.
நடுத்தரக் குடும்பத்தில் பெண்ணைப் பெற்ற அம்மா எப்படி எல்லாம் உண்மையிலேயே பதறுவாரோ ரோஹிணி அப்படியே வாழ்கிறார் படத்தில்.

தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கான நண்பன் எப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணம் மாறாத சிவகார்த்திகேயன் முதல் பாதி கலகலப்பைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறார்; அப்பாவித்தனமாக அசடு வழிவதிலும், சில இடங்களில் கலாட்டா கமென்ட் அடிப்பதிலும் கலக்குகிறார்.

மற்ற நண்பர் சுந்தர் வழமையான தமிழ் சினிமா நண்பர்கள் போல் இல்லாமல் கொஞ்சம் கூடுதலாக திரைப்படத்தில் வருகிறார்; மூன்றாவது பெரிய பாத்திரமும் கூட. பல இடங்களில் சிறப்பாக செய்கிறார். இனிக் கொஞ்சக் காலம் நண்பனாக வருவார் என நம்பலாம்.

நடிப்பு குறிப்பாக கமெரா முகங்களை மிக நெருக்கமாகக் காட்டும் இடங்களில் முக்கியமான பாத்திரங்களின் நடிப்பு தான் படத்துடன் எம்மை இறுக்கி வைக்கிறது.
காதலும், சோகமும், பாசமும் என்றே படம் அதிகமாக நகர்வதால்



மூணு - படத்தின் பெயருக்கு ஏற்றது போலவே, மூன்று இணைப்புக்களால் படம் மெருகேறுகிறது.

முதலாவது - இசை + இயக்கம்

அனிருத் - கொலைவெறியாக அறிமுகமான இவரது மூணு படப் பாடல்கள் கேட்டிருந்ததை விட படத்தில் காட்சிகளோடு பார்க்கையில் அதிகமாக ஈர்க்கிறது.
இயக்குனர் - இசையமைப்பாளர் இணைப்பின் முக்கியத்துவம் இப்படியான விடயங்களில் தான் வெளிப்படுத்தப்படும்.

ஐஸ்வர்யா இந்த சின்ன,சின்னப் பாடல்களின் ஒவ்வொரு செக்கனையும் அருமையாக செதுக்கியிருக்கிறார்; அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கொலைவெறியைத் தவிர.
கண்ணழகா, இதழின் ஓரம் இரண்டும் மிக அருமை.
பின்னணி இசையிலும் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு பிரமாதமாக செய்துள்ளார்; நுணுக்கங்களை ரசிக்கலாம்.காட்சிகளின் கனதியை இசைக் கருவிகளின் சேர்க்கையில் காட்டுவது கலக்கல்.

அடுத்த படம் அனிருத்தின் திறமைகளுக்கான சவால்.

ரசூல் பூக்குட்டி தன் வித்தையெல்லாம் கட்டி ரசிக்க வைக்கிறார் - பின்னணி இசைகள் & ஓசைகளில்.. அதுவும் ஒரு வித்தியாச அனுபவம் தருகிறது.

அடுத்து ரசித்த இன்னொரு இணைப்பு - ஒளிப்பதிவாளர் & Editor
வேல் ராஜும் கோலா பாஸ்கரும் கலக்கி இருக்கிறார்கள். மூன்று கட்டமாக வாழ்க்கை மாறிப் பயணிக்கும்போதும் இவர்கள் இருவரும் காட்டியுள்ள வேறுபாடுகளும் நிறவித்தியாசங்களும் அருமை.

மூன்றாவது இணைப்பு நான் முதலிலேயே சொன்ன தனுஷ் - ஸ்ருதி
அழகான ஜோடி; அன்னியோன்னியம் அச்சொட்டாக இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் நடிக்கிறார்கள்.

உணர்ச்சிவயமிக்க காட்சிகளில் இருவரும் காட்டும் முகபாவங்கள் சொல்லிக் கொடுத்துப் பெற முடியாதவை.


ஒரு இயக்குனராக முதல் படத்திலேயே இப்படியான ஒரு சிக்கலான முடிவையும் மிக உணர்ச்சிவயப்பட்ட கதையையும் தெரிவு செய்து முடிவையும் இவ்வாறு அமைக்கும் துணிவு பாராட்ட வேண்டியது.
மெதுவாகக் கதை நகர்ந்தாலும் அலுப்பு இல்லாமலும், அருவியாக இல்லாமலும் திரைப்படத்தை மனதுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதிலும் ஜெயித்துள்ளார்.

அதிலும் முடிகிறது என்று தெரியாமலேயே கடைசியாக தனுஷின் தற்கொலையுடன் அழுத்தமாக சோகம் இழையோடும் இசையுடனும் ஸ்ருதியின் கதறலோடும் எங்கள் கனத்த மனது + கலங்கிய கண்களோடு படத்தை முடிப்பது நெகிழ வைக்கிறது.

ஆனால் சில கேள்விகளும் இல்லாமல் இல்லை; படம் இன்னும் பாராட்டுக்களைப் பெறாமைக்கு இவையே காரணம் என நினைக்கிறேன்...

BiPolar depression என்ற வியாதி திடீரென தனுஷுக்கு உருவாகிறது. சரி..
அதைக் கூட வாழும், தனுஷை நன்கு புரிந்து அவரது ஒவ்வொரு அசைவையும் அவதானிக்கும் ஸ்ருதியால் புரிந்துகொள்ள முடியாமல் போகிறதா?

(ஆனால் தனுஷ் தன்னை விட்டு ஏனோ விலகுகிறார் என்று உணர்ந்து அது என்னவென்று உருகி, மருகும் இடங்களும் "சொல்லு ராம் ப்ளீஸ்" எனக் கெஞ்சி அழும் இடங்களும் மனதை உருக்கும் இடங்கள் தான் )


இல்லாவிட்டால் ஒவ்வொரு முறையும் பேசவரும் போது சொல்கின்ற "Life matter பா " என்பதை வைத்தே அவரைப் பற்றி எடைபோட்டுக்கொள்ளும் பிரபுவாலும் தனுஷிற்கு உள்ள பயங்கர வியாதி பற்றிப் புரிந்துகொள்ள முடியாமல் போகிறதா?

கடைசியாக நண்பன் இருக்கும் சாவு நிலை பற்றி, அவன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறான் என்பது பற்றித் தெளிவாகத் தெரிந்த பின்பும், ஸ்ருதிக்கு அதைச் சொல்லி நண்பனைக் காப்பாற்ற ஒரு முயற்சியும் எடுக்காதது பற்றி???



ஆனால் உணர்வுகள் கொப்பளிக்கும் இடங்கள் மனதை நெருடுகின்றன; நெருக்கமான காதல் காட்சிகள் வருடுகின்றன.
பாடல்களும், பின்னணி இசையும் வேறு சேர்ந்து படத்துடன் எம்மை ஒன்றிக்கச் செய்கின்றன..
"தனியாகத் தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ" பாடலின் வரிகள், அந்த சந்தர்ப்பத்தில் மனத்தைக் கனமாக்கி காட்சிகளுடன் ஒன்றிக்க செய்கின்றன.

குறிப்பாக

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

(இதில் விடியலை - நான் மிக நேசிக்கும் ஒரு சொல் - படுமோசமாகப்பாடியிருப்பது மட்டும் கொடுமை)
என்ற வரிகள் மனதைப் பிழிவனவாக இருக்கின்றன.

தனுஷின் இடத்தில் நாம் இருந்திருந்தால், எங்களை உயிராக நேசிக்கும் ஒரு பெண், அதுவும் தன் குடும்பத்தைத் தூக்கி எறிந்து காதலனே உலகம் என்று வாழும் ஒருத்தியைக் கஷ்டப்படுத்துகிறோமே என்ற கவலையும், அவள் தன்னோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களை விட, தான் ஒரு பயங்கர நோயாளியாக, மன நோயாளியாக அவளால் பார்க்கப்படுவதையும், தனது அதீத வெறியால் அவளுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளத் துணிவதும் மனதைத் தொடும் இடங்கள்..

வாழ்ந்து பார்த்தால் தான் சில விடயங்கள் புரியும் என்று சொல்வது இப்படியான திரைச் சிக்கல்களைத் தான்..

அதே போல ஸ்ருதியின் பாத்திரம்..
பாவமாக இருக்கிறது. தானாக தனியாக மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சிறுமி ஒரு காதலால் படும் துன்பங்கள், காதலனை நேசிப்பதால் பட்டு உணரும் கஷ்டங்கள், தனியாகப் போய், இனி உழலப் போகிறாளே என என்னும்போது அதுவும் மனதைப் பிழிகிறது.

அடுத்து பிரபு போன்ற ஒரு அப்பாவும், சுந்தரின் நண்பன் பாத்திரம் போன்ற ஒரு நட்பும்.. கொடுத்து வைத்த ராம் (ஜனனியின் அளவுகடந்த காதலும் சேர்த்து) ... என்ன ஒரு சுகவாசி.. ஆனால் தீராக் கொடுமையான நோய் வந்து அத்தனையையும் இல்லாமல் செய்துவிடுகிறதே..
இது தான் வாழ்க்கை என்பதோ???

அன்று மூணு பார்த்து இன்று வரையும் கூட, மூணு பாடல்கள் கேட்கும்போதெல்லாம் ராம் - ஜனனி மனதுக்குள்ளே நிற்கிறார்கள்..
எங்கள் வாழ்க்கையின் காதலின் மறக்கமுடியாத் தருணங்களும், சில ஊடல் - கூடல் - சண்டை - நெருக்கம் ஆகிய தருணங்கள் மனதில் அலைகளை எழுப்புகின்றன...

ஆனால் சிலருக்கு இந்த மூணு பிடிக்கவில்லை என்று அறிந்தபின்னர் ஏன் என்று புரிந்தது..
கொலைவெறி பாடல் கேட்ட பிறகு 'அப்படியான' ஒரு மசாலா படத்தை எதிர்பார்த்துள்ளார்கள்.
இப்படியான உணர்ச்சிக் குவியல் ஒன்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை அவர்களுக்கு.

எனக்கு பிடித்திருக்கிறது.
மிகச் சிறந்தது என்று புகழாவிட்டாலும் முழுமையான படைப்புக்கு கிட்டவாக வந்துள்ளது ஒரு புதிய இயக்குனரிடம் இருந்து..
(படம் முடிகிற நேரம் பின் வரிசையில் இருந்த ஒரு இளைஞன் - நிச்சயம் பதினெட்டு வயது தாண்டியவன் - விம்மி விம்மி அழுதான்.. என்ன கவலையோ.. பரிதாபமாக இருந்தது)

மூணு - காதல், வாழ்க்கை, உணர்ச்சி
காதல், பாசம், நட்பு 
பார்த்தேன், ரசித்தேன், உணர்ந்தேன்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner