October 28, 2009

இந்தியா vs ஆஸ்திரேலியா & சச்சின் vs பொன்டிங்


கிரிக்கெட் உலகின் ஒருநாள் போட்டிகளின் ஜாம்பவான்களுக்கிடையிலான ஒருநாள் தொடர் இந்திய மண்ணில் ஆரம்பமாகிவிட்டது.ஓய்வில்லாமல் மாறி மாறி கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றுவரும் இந்த காலகட்டத்தில் ஏழு போட்டிகள் கொண்ட தொடர் கொஞ்சம் நீளமாகவே தோன்றுகின்றது.

ஆனாலும் கிரிக்கெட்டை எந்தவொரு வடிவத்திலும் ரசிக்கும் இந்திய ரசிகர்களுக்கு இது ஒன்றும் அலுக்கப்போவதில்லை.அத்துடன் ஐம்பது ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகள் ஒழிக்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில்,ஒரு நாள் போட்டிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தொடராக இது அமையும் என்று சொன்னால் அதில் மிகையில்லை.

அத்துடன் ஒருநாள் தரப்படுத்தல்களில் முதல் இரு இடங்களில் இருக்கும் அணிகள் இவை என்பதனால் தரப்படுத்தல்களை தீர்மானிக்கும் தொடராகவும் இப்போது ஆரம்பமாகி இருக்கும் ஒருநாள் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே நேரடி கிரிக்கெட் எதிரிகளாக மாறியிருக்கும் இவ்விரு அணிகளும் விறுவிறுப்பான போட்டிகளை எப்போதுமே வழங்கி இருக்கின்றன.

இந்திய அணி சொந்தமண்ணில் வீழ்த்தப்பட முடியாத பலமான அணி. ஒருநாள் போட்டிகளில் முழுப் பலத்துடன் இருக்கும்போது எந்த அணியையும் நசுக்கித் தள்ளிவிடும்.

அவுஸ்திரேலியா அணியோ முக்கிய வீரர்கள் பலரை அண்மைக் காலத்தில் இழந்திருந்தாலும் மீண்டும் வெற்றிகளை தொடர்ந்து பெற்று வருகிறது.
அண்மையில் தான் சாம்பியன்ஸ் கிண்ணத்தை மீண்டும் சுவீகரித்துள்ளது.
இறுதியாக விளையாடிய போட்டிகளில் 17இல் 14இல் வெற்றி பெற்றுள்ளது.

வந்திறங்கியவுடனேயே முதல் போட்டியில் வென்று இந்திய அணிக்கு எச்சரிக்கை செய்தியும் தந்துள்ளது.

ஏற்கனவே தொடர்ச்சியாக ஓய்வின்றி பல போட்டிகளை விளையாடியதால் காயங்கள், உபாதைகள் காரணமாக முக்கியமான நான்கு வீரர்களை (பிரட் ஹடின், மைக்கல் கிளார்க், நேத்தன் பிராக்கன், கலும் பேர்குசன்) இழந்து இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலியாளூ இன்று இடம்பெறவுள்ள போட்டிக்கு முன்னர், இன்றும் இரண்டு முக்கிய வீரர்களைக் காயத்தின் காரணமாக இழந்துள்ளது.

ஜேம்ஸ் ஹோப்ஸ், பிரெட்லீ இருவரும் இல்லாமை எவ்வளவு தூரம் அவுஸ்திரேலியாவை இன்று பலவீனமாக்கும் என்பது இன்றைய நாக்பூர் போட்டியின் பெறுபேறில் தெரியும்.

எனினும் எதிர்காலத்துக்கான இளைய அவுஸ்திரேலிய வீரர்களுக்கான புதிய களமாக இம்முறை இந்திய மண் அமையப் போகிறது.

டிம்பெய்ன், அடம் வோகஸ், டக் பொலிங்கர், ஜோன் ஹொலன்ட், மொய்சஸ் ஹென்ரிக்கேஸ் ஆகியோர் தம்மை வெளிப்படுத்தவும், ஷேன் வொட்சன், கமரொன் வைட், நேதன் ஹொரிட்ஸ் ஆகியோர் அணியில் தங்கள் இடங்களை ஸ்திரப்படுத்தவும் இத்தொடர் அடித்தளமாக அமையும்.

இந்திய அணியெனும் கோட்டைக்குள் போராடி நுழைய முயலும் விராட் கோலி, ரவீந்தர் ஜடேஜா, அமித்மிஷ்ரா, சுதீப் தியாகி போன்றவர்களுக்கும் ஒரு வாய்ப்பு.

எனினும் இந்த ஏழு போட்டித்தொடர் இவையெல்லாவற்றையும் விட முக்கியத்துவமும், சுவாரஸ்யமும் பெற இன்னொரு காரணம் -

சச்சின் டெண்டுல்கர் vs ரிக்கி பொன்டிங்.

சச்சினுக்கு வயது36; பொன்டிங்குக்கு வயது 34.

கிரிக்கெட் உலகின் துடுப்பாட்ட சாதனைகளில் அநேகமானவற்றுக்காக இவ்விருவருமே போட்டி போடுகின்றனர்.

எங்கள் காலகட்டத்தின் தலைசிறந்த இரு துடுப்பாட்ட வீரர்கள்.

இருவருமே குறிப்பிட்ட காலம் தங்கள் துடுப்பாட்டத்தில் ஜொலிக்காமல் தடுமாறி, விமர்சனங்களுக்குள்ளாகி, தங்களது அபாரமான துடுப்பாட்டம் மூலமாக பதில் சொல்லி மீண்டும் உச்சம் தொட்டிருப்பவர்கள்.

இருவரையுமே டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுமாறு பல விமர்சகர்கள் குரல் கொடுத்துள்ளார்கள்.

சச்சின் தானாக டுவென்டி 20 போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டார்; ரிக்கி பொன்டிங் தனிப்பட்ட மற்றும் அணிச் சறுக்கல்களுக்குப் பிறகு ஓய்வை அறிவித்தார்.

எனினும் இன்றைய இளம் வீரர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கும் விதத்தில் தன்னம்பிக்கையும் முயற்சியுமுடைய இவ்விரு சிகரங்களும் இத்தொடரை நிர்ணயிக்கும் இருவராக அமைவார்களா என்பதே எனது கேள்வி!

முதலாவது ஒருநாள் போட்டியில் பொன்டிங் அநாயசமாக ஆடி அரைச்சதம் பெற்று சாதித்தார். எனினும் சச்சின் தடுமாறினார்...

அண்மைக்காலத்தில் சச்சினையும் மீறி பிரமாண்டமாக சேவாக், யுவராஜ் சிங், தோனி, கம்பீர், ரெய்னா என்று பலர் இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் வெளிக்கிளம்பினாலும் சச்சின் முழு formஇல் பந்துகளை விளாசுகையில் அவர்தான் MASTER.

மறுபக்கம் பொன்டிங் - அவுஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராக இவர் பெறுபேறுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டாலும், தலைவராக அவர் உலகக்கிண்ணங்கள் இரண்டு, சாம்பியன்ஸ் கிண்ணங்கள் இரண்டை வென்றும் கூட இரு ஆஷஸ் தொடர்களைத் தோற்றதன் மூலம் பூரணமடையாத ஒருவராகவே கணிக்கப்படுகிறார்.

அதை மறக்கடிக்க இவரது துடுப்பாட்டமே மூலமந்திரம்.
ஹசி தவிர்ந்த அனுபவமற்ற ஒரு துடுப்பாட்ட வரிசையின் பிரதானமான முதுகெலும்பாக பொன்டிங்கின் பொறுப்பு இத்தொடரில் மிக இன்றியமையாததாகிறது.

இந்திய மண்ணில் சறுக்குபவர் என்ற அவப்பெயரை நீக்கவும் இத்தொடர் பொன்டிங்குக்கு மிகச் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

இனி?

சச்சின், பொன்டிங் இருவருமே 2011 உலகக்கிண்ணம் வரை விளையாடவேண்டுமெனக் கருதியுள்ளனர். ரசிகர்களுக்கும் அதுவே விருப்பம்.

அதற்கான மனரீதியான திடத்தையும், ஓட்டங்கள் குவிக்கும் அடித்தளத்தையும் இந்த ஒருநாள் தொடர் வழங்கும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

இன்னொருசரித்திரபூர்வ முக்கியத்துவம் இந்தத் தொடருக்கு இருக்கிறது..

சச்சின் டெண்டுல்கர் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகள் ஆட ஆரம்பித்து இந்த நவம்பர் 14ஆம் திகதியுடன் இருபது வருடங்கள் ஆகின்றன.

இருபது வருடங்களாக கிரிக்கெட்டையும் உலகளாவிய ரசிகர்களையும் மகிழ்ச்சிப் படுத்தி பரவசமூட்டியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

October 27, 2009

ஏன் இப்படி ஒரு அல்ப ஆசை?


இலங்கையிலிருந்து யாழ்தேவி என்றொரு திரட்டி இயங்கி வருவது பதிவுலகில அனைவர்க்குமே தெரிந்த விஷயம்.

பெயர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்து முதலாவது பதிவர் சந்திப்பில் அதுபற்றி அவர்கள் தெளிவாக்கி, அதன் பின்னர் பல பதிவர்கள் தங்கள் பதிவுகளை இணைத்து.. இதெல்லாம் பழைய கதை..

என்னையும் கடந்தவாரம் நட்சத்திரப் பதிவராக்கி இருந்தார்கள். கடைசி நேர அழைப்பு பற்றி கடந்தவாரமே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். அந்தப் பதிவிலேயே யாழ்தேவி கருவிப்பட்டை/வாக்குப் பட்டை பற்றியும் சொல்லி இருந்தேன்.

வேட்டைக்காரன் பாடல் பதிவுக்கு பிறகு எனக்கு 'நண்பர்கள்' மிக மிக அதிகரித்திருந்தார்கள்..
ஆதவன், சிங்கம் பதிவுகளுக்குப் பிறகு இன்னும் கூடியுள்ளார்கள்..

யாழ்தேவி கருவிப்பட்டை இந்த நண்பர்களுக்கு என் மீதான தங்கள் 'அன்பை' வெளிப்படுத்த மிகச் சிறந்த வாய்ப்பை வழங்கிவிட்டது.

அனேகமாக ஒருவரோ, இல்லை குழுவோதான் செய்திருக்க வேண்டும். டைனமிக் IP வைத்திருப்பவர்கள் யாழ்தேவியில் எத்தனை ஓட்டுக்கள் வேண்டுமானாலுக் குத்தலாம் என்ற குறைபாடு நிலவுகிறது. ஒருவருக்கு ஒரு ஓட்டுத்தான் என்பதை உறுதிப்படுத்த யாழ்தேவி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

ஏற்கெனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது பதிவுகளுக்கு மைனஸ் வாக்குகள் குத்தப்பட்டு வந்தன.

மைனஸ்களும் வாக்குகளே என்பதனாலும் இவற்றை வைத்துத் தான் என் பதிவுகளின் தரம் கணிக்கப்படுவதில்லை என்பதாலும் இதைப் பொருட்படுத்தாது இருந்தேன்

ஆனால் வேட்டைக்காரன் பதிவில் சொல்லிவைத்தார்போல ஒரு நல்ல புள்ளி கிடைத்தால் அடுத்த ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே ஒரு மைனஸ் வாக்கு அடிக்கப்படும்.

அடுத்தது தான் உச்சக்கட்ட கொடுமை.

இலங்கையில் ஊடக சுதந்திரம் பதிவில் நல்ல வாக்குகளுக்கு சரிக்கு சமனாக மைனஸ் வாக்குகள்.
அதே போல அக்ரமின் மனைவி மறைந்த தகவலுக்கு யாரோ ஒரு அநாமதேயப் புண்ணியவான் சரமாரியாக எனக்கு மைனஸ் புள்ளிகளை அடித்துத் தள்ளுகிறார்.

ஏன் இப்படி ஒரு அல்ப ஆசை? இதனால் என்ன சாதிக்கிறார்கள்?
ஒரு பக்கம் எரிச்சலாகவும் இன்னொரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.

ஆனால் இன்று வரை அநேகமான என் பதிவுகளே வாசகர் பரிந்துரைகளில் முன்னணியில் இருக்கின்றன.

(என்னைவிட) மூத்த,பிரபல பதிவருக்கும் இதே போல.. இப்போது தனியொரு பதிவில் அதிகூடிய மைனஸ் வாங்கியவர் என்ற யாழ்தேவிப் பெருமை அவருக்கு.. பாவம்.
இதில் வேடிக்கை அவரும் யாழ்தேவியில் ஒரு நிர்வாக உறுப்பினராம்.

என்ன நடக்கிறது? ஏன் நாம் இருவர் மட்டும் குறிவைக்கப்பட்டுள்ளோம்? யார் இந்த சதிகாரர்கள்?

யாழ்தேவி நிர்வாகிகளுக்கு என்னுடைய வாக்குப்பட்டையைக் கழற்ற முன்னர் விளக்கம் கோரிக் கடிதம் ஒன்று அனுப்பினேன்.

காரணம் பலர் வாசிக்கும் பதிவுகளில் யாழ்தேவி பட்டை எனக்கு திருஷ்டியாக அமைந்துவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.

அடுத்த நாள் இதற்கு விளக்கக் கடிதம் அனுப்பி இருந்தனர்.

யாழ்தேவி நண்பர்களின் கடிதம்..

கருவிப்பட்டை தனியே யாழ்தேவியில் கணக்குவைத்திருப்பவர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் பதிவர்களின் வலைப்பூவுக்கு வரும் பார்வையாளர்களும் வாக்களிக்கும் வண்ணமே வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒரு ஐபி எண்ணில் இருந்து வாக்களித்தால் இரண்டு நாட்களுக்கு பிறகுதான் திரும்பவும் அந்த ஐபி எண்ணில் இருந்து வாக்களிக்கமுடியும்.டயல்அப் இணைப்புகளைப்பாவிப்பவர்கள் மீண்டும் மீண்டும் இணைய இணைப்பை துண்டித்து இணைப்பதன்மூலம் கிடைக்கும் புதிய ஐப்பிகள் மூலமாக இம்மாதிரியான விளையாட்டுக்களை செய்கிறார்கள்.உண்மையிலேயே இதற்கு நாங்கள் மனவருத்தமடைகிறோம்.இதற்கான மாற்றுவழிகளை ஏற்கனவே நாங்கள் பரிசீலித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அதைப்போலவே சூடான இடுகைகளை மீண்டும் மீண்டும் கிளிக்பண்ணுவதன் மூலம் தங்களுடைய பதிவுகளை சூடான இடுகைகளாக மாற்றும் செயல்பாடும் கண்டறியப்பட்டிருக்கிறது.இதற்கான தீர்வும் ஓரிரு வாரத்திலே அறிமுகப்படுத்தப்படும்.இவற்றைப்பற்றி தாராளமாக உங்கள் பதிவுகளில் குறிப்பிடுங்கள்.விiளாயாட்டுக்காக இதைசெய்பவர்கள் மனம்மாற வாய்ப்பிருக்கிறது.

சுபாங்கனும் தனது பதிவில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.


யாழ்தேவி இந்த நிலைக்கு உடனடி திருத்தங்கள்,மேம்பாடுகளை செய்யாவிட்டால், தரமற்ற,சுவையற்ற பதிவுகள் முறையற்ற விதத்தில் முன்னணி பெறும்.பலபேர் தங்கள் பதிவுகளை யாழ்தேவியில் சமர்ப்பிக்கவும் மாட்டார்கள்.

அதற்கு முதல், என்னுடைய நண்பர்களே, மைனஸ் வாக்குப் போட்ட புண்ணியவான்களே, நீங்கள் யார், ஏன் இந்த வன்மம் என்று அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாயுள்ளது..
திங்கள் நடக்கும் இருக்கிறம் அச்சுவலை சந்திப்புக்கு வாங்களேன்.. பேசுவோம்;பழகுவோம்..

என் மூக்கை நானும் உங்கள் மூக்கை நீங்களும் பத்திரப்படுத்திக் கொண்டு பேசுவோம்;பழகுவோம்..

October 26, 2009

அம்மா 26


விகடனில் ஆரம்பித்து எங்கள் பதிவுலக நண்பர்கள் பலபேரிடமும் தொற்றியுள்ள 25 ட்ரெண்டில் இருந்து நான் எடுத்துக் கொண்ட விஷயம் இது.
அவங்க எல்லோரும் 25.. நான் 26.

இன்று அக்டோபர் 26ஆம் திகதி. எனது அன்புக்குரிய அம்மாவின் (சுமதி பாலஸ்ரீதரன்)பிறந்த நாள்.
எனவே தான் அவருக்குரிய அன்புப் பரிசாக இந்த அம்மா 26

இப்போது அப்பாவுடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா (அவர்களது மூன்றாவது தேனிலவு ஹீ ஹீ.) சென்றுள்ள அம்மாவுக்கு அனுப்பும் பரிசு இது.

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா..

அம்மா, அப்பா என் மகனுடன்

1.திருமணத்துக்கு முன் கிறிஸ்தவராக இருந்த அம்மா இப்போது எந்த ஒரு விரதமும் தவறவிடாத இந்துவாக மாறியதும் அவருக்காக அப்பா தேவாலயம் செல்வதும் தங்கள் காதலை புரிந்துணர்வை எங்களுக்கு நெகிழ்வாக காட்டும் விடயங்கள்.

2.20 வயதில் உழைக்க ஆரம்பித்த அவரின் 37 வருட அலுவலகப் பயணத்தை எத்தனையோ சண்டைகளின் பின்னர் எனது திருமணத்தை காட்டி நிறுத்திவைத்த பெருமை எனக்கே ஆனது. எங்களுக்காக உழைத்துக் களைத்தவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமல்லவா?

3.ஒலிபரப்பு மீதான எனது தீராக் காதல்,பற்று என்பவை அம்மாவின் ஆதரவினாலேயே வெற்றிகரமாக்க முடிந்தது.அவருடன் சிறு வயது முதலே இலங்கை ஒலிபரப்பு கூட்டு தாபனத்துக்குள் சென்று வந்ததே இந்த ஆர்வத்துக்கான முக்கிய காரணங்கள்.

4.திருமணத்தின் பின்னரே சமையல் பழகினாலும் வித விதமாக,புதிய உணவுகள் சமைப்பதிலும், வட,தென் இந்திய உணவுகள். தொலைகாட்சி,பத்திரிகைகளில் பார்த்த சுவையான ரெசிப்பிகளை உணவாக மாற்றி எங்களை மகிழ்ச்சிப் படுத்துவதிலும் நிகர் அம்மா தான்.
(இப்போது என் மனைவிக்கும் அம்மாவுக்கும் ஒரு ஆரோக்கியமான சுவையான போட்டியே நடக்கிறது)

5.மகன்களுக்குப் பிறகு எங்கள் அம்மாவுக்குப் பிடித்தது மரம்,செடி கொடிகள் அடங்கிய அவரது செல்ல வீட்டு தோட்டம்.மினக்கெட்டு அவர் வளர்க்கும் ரோசா செடிகளும் இதர பூச்செடிகளும் கொஞ்சம் வாடினாலும் மிக வருத்தப் படுவார்.அம்மா எங்கேயாவது வெளியே போயிருக்கும் நேரங்களில் மறந்து போய் நாம் அம்மாவுடைய பூங்கன்றுகளுக்கு நீர் விடாமல் அவை வாடி நின்றால் அதனால் எங்களுக்கு திட்டு விழுவதும் உண்டு.

6.அம்மாவுக்கு பிடித்த உணவுகள்.. பிட்டு, இட்லி, மசாலா தோசை.
அவர் சமைப்பதில் எனக்குப் பிடித்தது பால் அப்பம்.

7.நொறுக்கு தீனி உண்பதில் அலாதிப் பிரியம்.
மிக்ஷர், புளிப்பான உணவுகளான மாங்காய், நெல்லிக்காய், அம்பரேல்லா, கொய்யாக்காய் என்பனவற்றை ரசித்து உண்பார்.

8.எனது தம்பிமார் இருவரிலும் கூடப் பாசம் உண்டெனினும் மூத்த மகன் என்னிடம் ஒரு தனியான பாசமும் உரிமையும் உண்டு. பாசமும் கோபமும் என் மேல் தான் அதிகம் வெளிப்படும்.

9.அம்மா நகத்துக்கு nail polish போட்டோ, தலைமுடி வெட்டியோ இதுவரை நான் கண்டதேயில்லை. அவர் சுடிதார் போடத் தொடங்கியதே நாம் மூவரும் வலியுறுத்தி ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான்.

10.மூன்று மொழிப் பாண்டித்தியம் உடையவர்.மூன்று மொழிகளிலும் எழுத,வாசிக்க,பேச முடியும். சிங்களம் எனக்கு சொல்லித் தந்ததும் அம்மா தான்.

11.இன்றுவரை எனக்கு அலுவலக சம்பந்தமான, இல்லாவிட்டால் வேறு எந்தத் தேவைக்குமான ஆங்கிலக் கடிதங்களை எழுதித் தருபவர் என் அம்மா.

12.அம்மாவின் தந்தை இலங்கையின் முதலாவது தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராக இருந்ததால் அம்மாவிடமும் இயற்கையாக இருந்த ஆற்றலால் அவர் தொடர்ந்து எழுதிய கிராம சஞ்சிகை (அம்மா நடித்தும் இருந்தார்) உண்டா விருதைப் பெற்றுக் கொடுத்தது.

13.எவ்வித பிரதிபலனும் கருதாமல் பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் படைத்தவர் அம்மா.
பல திருமணங்களையும் பொருத்தியதொடு,அப்பாவோடு சேர்ந்து நடத்தியும் வைத்துள்ளார்.

14.நண்பிகள் என்றால் போதும். அவரது பள்ளிக் காலத்திலிருந்து இன்றுவரை ஏராளமான நண்பிகள். அலுவலக நண்பிகளுடன் தொலைபேசி அரட்டை அம்மாவுக்கு மிகப் பிடித்த ஒன்று.நட்புக்கு உயரிய மரியாதை கொடுப்பார்.

15.நேரத்துக்கு தூங்கும் வழக்கம் அம்மாவுக்கு உண்டு. ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணிக்கெல்லாம் தூங்கப் போய்விடுவார். அனால் எவ்வளவு சீக்கிரம் துயில் எழும்பவேண்டி இருந்தாலும் அலுக்காமல் எழும்பி விடும் குணம் உடையவர்.

16.என் மகன் ஹர்ஷஹாசன் தான் இப்போது எங்கள் குடும்பத்தினதே செல்லம் என்பதால் அவனுடன் பொழுதைக் கழிப்பதிலும் விளையாடுவதிலும் அதீத விருப்பம். அவன் செய்யும் ஒவ்வொரு புதிய செய்கைகளிலும் தன்னை மறந்து லயித்திருப்பார்.

17.அம்மாவுக்கு பிடித்த நடிக,நடிகையர்,பாடக,பாடகியர் யார் என்று அறிவது மிகக் கஷ்டம்.
எமது விருப்பங்களே வீட்டில் முதன்மை பெறுவதால் அம்மாவின் ரசனை எங்களுக்கு தெரியாமலே போனது.
எனினும் சூர்யா,ஸ்ரீக்காந்த்,ஜெயம் ரவி பிடிக்கும் என்று உணர்ந்துள்ளேன்.
அசினின் பிறந்தநாளும் இன்றேன்பதால் எனக்கு அசின் பிடிக்கும் என்று நான் சொல்வதால் அம்மாவுக்கும் அசின் பிடிக்கும் என நினைக்கிறேன்.

18.சிங்கள மொழியறிவும் நாடக ஆற்றலும் அம்மாவுக்கு முன்பிருந்து பல சிங்கள திரைப்பட வாய்ப்புக்களை வழங்கினாலும் மறுத்துவந்த அம்மா, பிள்ளைகள் எண்களும் அப்பாவினதும் வற்புறுத்தலுக்குப் பின் ஒன்றிரண்டு நல்ல,தெரிவு செய்யப்பட்ட சிங்கள திரைப்படங்களில் தமிழ் பாத்திரத்தில் நடித்தார்.(பிரதிகளைப் பரிசீலித்து,கேலி செய்யப்படாத தமிழ் பாத்திரங்கள் அவை)

19.பூந்தோட்டம் தவிர புத்தகம்,பத்திரிகைகள் வாசிப்பது,இணையத்தில் உலாவுவது அம்மாவின் அடுத்த பொழுது போக்குகள்.

20.அப்பாவுடன் மாலைவேளைகளில் வெளியே செல்வது அம்மா விருப்பத்துடன் கடமையாக ஏற்றுக் கொண்ட இன்னொரு வழக்கம்.இடையிடையே வாக்குவாதப்பட்டாலும் அப்பா,அம்மாவுக்கிடையிலான அன்பு மிக அற்புதமானது.

21.சேமிப்பதில் மிக அக்கறையானவர் அம்மா. தேவையற்ற செலவுகள் அம்மாவுக்கு எப்போதுமே பிடிக்காது.இதனாலேயே எங்கள் கடைக்குட்டி மயூரன் மீது அம்மாவுக்கு ஏகப்பட்ட பரிவு.

22.எந்தக் காரியமாக இருந்தாலும் தன்னிடம் சொல்லி ஆலோசனை பெறவேண்டும் என்று ஆசைப்படுவார்.நானும் தம்பிமாரும் சிறுவயது முதலே எதுவாக இருந்தாலும் அம்மாவுடன் பகிர்ந்துகொள்வதால் இப்போதும் அப்படித் தான்.
தற்செயலாக ஏதாவது சொல்லாமல் செய்தால் மிக மனம் நொந்துபோவார். very sensitive.

23.தனக்கு அக்கா தவிர (பெரியம்மா) வேறு பெண் சகோதரமோ,பெண் குழந்தைகளோ இல்லை என்ற குறை எப்போதுமே அம்மாவுக்கு உண்டு.

24.அம்மாவுக்கு முன்னர் கிரிக்கெட் என்றாலே பிடிக்காது. எனினும் அப்பா,நாங்கள் எல்லோரும் கிரிக்கெட் வெறியர்கள் என்பதால் வேறு வழியில்லாமல் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து இப்போது வீரர்களின் பெயர்கள் எல்லாம் அத்துப்படி.
அனேகமாக நான் சப்போர்ட் செய்யும் அணிப்பக்கமே அம்மாவும் இருப்பார்.

25.அம்மாவின் சுறுசுறுப்பு,நேரம் தவறாமை,துணிச்சல்,அன்பு ஆகியன நான் வியக்கும் குணங்கள்.
நான் கைது செய்யப்பட்டு உள்ளே இருந்த ஒருவாரமும் என் சிறு மகனோடு மனைவி வெளியே சென்று ஏதும் செய்யமுடியாத நிலையில், அம்மா தம்பி செந்தூரனோடு தனித்து துணிந்து செயற்பட்டதும், ஓடித் திரிந்து முயற்சிகள் எடுத்ததும் நான் எப்போதும் மறக்க முடியாதவை.

26.எனது மனைவி வீட்டுக்கு முதல் மருமகள் என்பதால் மிக எதிர்பார்த்தார். இதனால் அவரிடமே தெரிவு செய்யும் பொறுப்பையும் கொடுத்தேன். எனக்கும் பிடித்ததால் அம்மாவுக்கும் மகிழ்ச்சி.
என் மனைவி பல விதங்களில் அம்மா போலவே என்று பலரும் சொல்வது மற்றுமொரு மகிழ்ச்சிக்குரிய விஷயம்.October 25, 2009

இளைய நட்சத்திரங்களை எதிர்காலத்துக்கு தந்த Champions League


அப்பாடா.. ஒரு வழியாக சாம்பியன்ஸ் லீக் முடிவுக்கு வந்துவிட்டது..
முக்கிய நட்சத்திரங்கள் பல பேர் இல்லாததோ என்னவோ எனக்கென்றால் இந்த கிரிக்கெட் திருவிழா பெரிதாக ஆர்வமூட்டுவதாக இருக்கவில்லை.

பார்த்தால் எனது நண்பர்கள் பல பேருக்கும் கூட போட்டிகளைப் பார்ப்பதிலோ,முடிவுகளை அறிவதிலோ கூட ஆர்வமிருக்கவில்லை..
அறிமுகமில்லாத பல வீரர்கள் விளையாடியதும் கூட இதற்கான காரணமாக இருக்கலாம்..

இலங்கையில் சாம்பியன்ஸ் லீக் பெரிதாக வரவேற்கப்படாதமைக்கு பிரதானமான காரணங்கள் மூன்று என நான் நினைக்கிறேன்..
இலங்கையில் எந்தவொரு தொலைக்காட்சியும் போட்டிகளை ஒளிபரப்பாமை.
டில்ஷான் தவிர வேறு எந்த இலங்கை வீரரும் வயம்ப தவிர்ந்த வேறு அணிகளில் இடம்பெறாமை.
இலங்கையிலிருந்து சென்ற ஒரே அணியும் முதல் சுற்றோடு வெளியேறியமை.

இந்தத் தொடர் ஆரம்பிக்கு முன்னரே நான் நினைத்திருந்தேன் அவுஸ்திரேலியாவின் தேசிய ட்வென்டி ட்வென்டி சாம்பியனான நியூ சவுத் வேல்ஸ் அணியே சாம்பியனாகும் என்று. அது போலவே நடந்தது.

ஆனால் ட்ரினிடாட் & டொபாகோ அணி இறுதி வரை வரும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.நியூ சவுத் வேல்ஸ் அணியைப் பொறுத்தவரை தேசிய அணியில் விளையாடும்,விளையாடிய ஒன்பது வீரர்களும்,இளமையும் அனுபவமும் அவர்களின் பெரும் பலமாக அமைந்தது.

எனினும் ட்ரினிடாட் & டொபாகோ அணியைப் பார்த்தோமானால் அணி ஒற்றுமையும் இளமைத் துடிப்பும்,பயமில்லா துணிகரமுமே இறுதிப் போட்டிவரை தோல்வியில்லாமல் பயணித்தமைக்கான காரணங்கள்.

ஆரம்ப கட்டப் போட்டிகள் விறுவிறுப்பை தராத போதும் அரை இறுதிகளையும் இறுதிப் போட்டியையும் நான் தவற விடவில்லை.

குறிப்பாக பிரெட் லீ மீண்டும் இளமை திரும்பியவராக தனித்து நின்று இறுதிப் போட்டியை வென்று காட்டி 'நானும் ஒரு சகலதுறை வீரர் தானுங்கோ' என்று காட்டியது simply superb.

இம்முறை சாம்பியன்ஸ் லீக்கில் ட்வென்டி ட்வென்டி போட்டிகளை தோற்றுவித்த இங்கிலாந்தின் இரு அணிகளுமே அரையிறுதி காணாமல் வெளியேறியதும், போட்டிகளை நடாத்திய இந்தியாவின் மூன்று அணிகளும் இரு சுற்றுக்களோடு பெட்டிப் பாம்புகளாக சுருண்டதும் ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் கூட.

முதல் சுற்றுக்களில் பெங்களுர் ரோயல் சல்லேன்ஜெர்ஸ் அணியின் ரொஸ் டெய்லரும், டெல்லி அணியின் சேவாக்கும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தும் அவ்விரு அணிகளுமே அரையிறுதியை எட்டிப் பார்க்கவில்லை.
தென் ஆபிரிக்காவின் J.P.டுமினி தான் அதிக ஓட்டங்கள் குவித்தவர்.

இவர்கள் தவிர அதிக ஓட்டங்கள் குவித்த முதல் பத்துப் பேரில் ஏனைய அனைவருமே சர்வதேசப் போட்டிகளில் புதியவர்கள் அல்லது எமக்குப் பெரியளவில் அறிமுகமில்லாதவர்களே.

இரண்டாவது,மூன்றாவது அதிக ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலியர்களான டேவிட் வோர்னர், பில் ஹியூஸ் ஆகியோரும் கூட ஒப்பீட்டளவில் சர்வதேச மட்டத்தில் புதியவர்களே.

பந்துவீச்சில் அதிக விக்கெட் எடுத்தவர் மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் ட்வெய்ன் பிராவோ..

கூடிய விக்கெட் எடுத்த முதல் பத்துப் பேரில் ஸ்டுவார்ட் கிளார்க், டேர்க் நன்னேஸ் (இவர் கூட கடந்த IPL மூலம் தான் வெளியுலகத்துக்கு தெரியவந்தார்), பிரெட் லீ தவிர ஏனைய அனைவருமே புதியவர்கள்/இளையவர்கள்.

சாம்பியன்ஸ் லீக்கை நடாத்தியவர்கள் தெரிவு செய்துள்ள நட்சத்திர அணியிலும் பலர் இளையவர்களே..

ACLT20 All Star XI
Hughes, Warner, Duminy, Taylor, Katich, Pollard, Ramdin, DJ Bravo, Henriques, Lee, McKay

எதிர்பார்த்த பிரபல வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பிரகாசிக்கவில்லை என்பது ஏமாற்றமே..
ஹெர்ஷல் கிப்ஸ், டேவிட் ஹசி, ஜஸ்டின் லங்கர், கௌதம் கம்பீர், டில்ஷான், மக்க்ரா, டிராவிட், மென்டிஸ், கும்ப்ளே, கில்க்ரிஸ்ட், சைமண்ட்ஸ், ரோகித் ஷர்மா என்று சொதப்பிய பிரபலங்களின் வரிசை பெரியது.

எனினும் யாரும் அறியாமல் வந்து அனைவரையும் யார்ரா இது என்று தேடச் செய்து செல்லும் இளைய வீரர்களின் வரிசையும் நீண்டதே.

இவர்களில் பலர் இன்னும் சிறிது காலத்தில் அடிக்கடி பேசப்படலாம்; புகழப்படலாம்;
அடுத்த ட்வென்டி ட்வென்டி உலகக் கிண்ணப்போட்டிகளில் தத்தம் தேசிய அணிகளுக்காக விளையாடலாம்.

அந்த இளைய புதிய நட்சத்திரங்கள் சிலரை அறிமுகப் படுத்துவதே இந்தப் பதிவு.

சகலதுறை வீரராக தனது முத்திரையைப் பதித்த வின் கீரன் பொல்லார்ட் மேற்கிந்தியத் தீவுகளின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம்.
தனது அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலமோ, துல்லியமான பந்துவீச்சின் மூலமோ ஒரு போட்டியை தனித்து வென்று கொடுக்கக் கூடியவர். நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிராக பந்துகளில் ஓட்டங்கள் பெற்று அதிர்ச்சி கொடுத்தது சான்று.IPL 2010இல் இவரை தமது அணியில் சேர்க்க இப்போதே பல அணிகள் துரத்துகின்றன.

கேப் கோப்ராஸ் அணியின் ஹென்றி டேவிட்ஸ்.. துடுப்பாட்ட பாணியில் கிப்ப்சை ஞாபகப்படுத்தும் டேவிட்ஸ் தகுந்த வாய்ப்பு ஒன்று தென் ஆபிரிக்க அணி மூலம் கிடைக்கும் பட்சத்தில் பட்டை கிளப்புவார் என்பது உறுதி.

கேப் கோப்ராஸ் அணியின் தலைவர் அன்றூ பட்டிக்.
நிதானமான ஒரு தலைவராகவும் போட்டிகளின் தன்மைக்கேற்ப அணிக்காக ஆடும் ஒருவராகத் தன்னை நிரூபித்த ஒருவர், தென் ஆபிரிக்க தேசிய அணிக்குள் நுழைய பல தடவை கதவுகளைத் தட்டியிருக்கிறார்.

எனினும் தென் ஆபிரிக்க அணியின் தலைவரான ஸ்மித்தும் இதே அணி என்பதே இவருக்கு பெரிய தடையான விஷயம்.
ஒரே உறைக்குள் இரு வாளா?

ட்ரினிடாட் டொபாகோ அணியின் இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான வில்லியம் பெர்கின்ஸ், அட்ரியன் பரத் ஆகியோர் தமது துணிகரத் துடுப்பாட்டம் மூலம் பலரையும் வியக்க வைத்தவர்கள்.

இவர்களுள் பரத் முன்னர் ப்ரயன் லாராவின் பாராட்டுக்கள்,வாழ்த்துக்களைப் பெற்றவர்.துடுப்பெடுத்தாடும் பொது பார்த்தால் லாரா வலது கையால் அடித்தாடுவது போலவே இருக்கும்.நேர்த்தி,நிதானம் என்பவற்றோடு அழகு,ஆற்றல்,அதிரடியும் கொண்ட துடுப்பாட்டம்.
வெகு விரைவில் மேற்கிந்தியத் தீவுகள் தேசிய அணியில் பரத் விளையாடுவார் என்பது உறுதி.

இந்த அணியின் மற்றுமொரு துடிப்பான வீரர் ஏற்கெனவே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஒரு சில சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள லெண்டில் சிம்மொன்ஸ்.
அதிரடி துடுப்பாட்டம், புத்தி சாதுரியமான மித வேகப் பந்துவீச்சு, மின்னல் வேகக் களத்தடுப்பு என்று அனைத்து திறமைகளும் சரியாகக் கலந்த ஒரு கலவை.இவரை சரியாகப் பராமரித்து கையாள வேண்டியது மேற்கிந்தியத் தீவுகளின் கடமை.

டயமன்ட் ஈகிள்ஸ் அணி அரையிறுதிக்கு வராவிட்டாலும் அந்த அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரீலி ரொஸ்ஸொவின் துடுப்பாட்டம் பலபேரையும் கவர்ந்தது.

வெகு விரைவில் தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ரொஸ்ஸொ வாய்ப்புப் பெறவேண்டும் என்று கூறியிருக்கிறார் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் அல்லன் டொனால்ட்.இதோ இன்னொரு அதிரடி வீரர் தயார்.

விக்டோரியா அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிளின்டன் மக்கே.
ட்வென்டி ட்வென்டி போட்டிகளுக்கேற்ற நிதானமான பந்துவீச்சாளர்.அடுத்த IPLக்கு வாய்ப்புக்கள் இவர் கதவைத் தட்டும் எனத் தெரிகிறது.
இந்தத் தொடரில் பிராவோவுக்கு அடுத்தபடியாக கூடுதலான (10) விக்கட்டுக்கள் எடுத்த இருவரில் ஒருவர் மக்கே.

பத்து விக்கெட்டுக்கள் எடுத்த மற்றவரான மொய்சஸ் ஹென்ரிக்கேய்ஸ் முன்னாள் அவுஸ்திரேலியா வயதுக்குட்பட்ட அணியின் அணியின் தலைவர். தேசிய அணியிலும் ஒரு சில வாய்ப்புக்கள் பெற்றவர்.

இம்முறை சாம்பியன்ஸ் லீக்கில் தனது உச்சபட்ச சகலதுறைத் திறமைகளையும் வெளிப்படுத்தியிருந்தார்.நான் நினைத்தேன் இவருக்கே தொடரின் நாயகன் விருது கிடைக்கும் என்று.

ஆனால் எதிர்கால அவுஸ்திரேலியா அணிக்கு நம்பகமான ஒரு சகலதுறை வீரர் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு சகலதுறை வீரரான அன்றூ மக்டோனால்ட் அண்மைக் காலத்தில் அவுஸ்திரேலியா அணிக்கு தேர்வானவர்.நெருக்கடியான நேரங்களில் கட்டுப்பாடாக பந்துவீசியதொடு விக்கெட்டுக்களை சரித்தவர். துடுப்பாட்டத்திலும் சிக்சர்களை அனாயசமாக விளாசுகிறார்.

இதே போல விக்கெட்டுகளை வீழ்த்தியோரில் முன்னணி பெற்ற நேதன் ஹோரித்ஸ் இப்போது இந்திய மண்ணில் அவுஸ்திரேலியா அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.இன்று விளையாடிய முதல் போட்டியில் அவரது பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது.


சமர்செட் அணியின் அல்போன்சோ தோமசும், விக்டோரியாவின் ஷேன் ஹார்வூடும் சர்வதேசப் போட்டிகளில் இனி அறிமுகம் பெறுவதற்கான வயதெல்லையைத் தாண்டி விட்டாலும் IPL போன்ற போட்டிகளில் இடம்பிடிக்கலாம்.

இந்தப் பதிவிலே நான் காட்டிய இளைய நட்சத்திரங்கள் நாளை மேலும் புகழ்பெறும் பட்சத்தில் நம்மளையும் கொஞ்சம் நினைச்சுக்கோங்க. ;)


Breaking news வசீம் அக்ரமின் மனைவி காலமானார்..


சென்னை வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானின் முன்னாள் சகலதுறை வீரரும் தலைவருமான வசீம் அக்ரமின் மனைவி ஹுமா இன்று காலையில் காலமானார்.

விமானப் பயணம் மேற்கொண்டிருந்தவேளையில் திடீரென மாரடைப்புக்குள்ளான ஹுமா அவசரமாக சென்னை அபோல்லோ தனியார் மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

நேற்றுவரை உயிருக்குப் போராடும் நிலையிலிருந்த ஹுமா அக்ரம் இன்று காலையில் உயிரிழந்தார்.

October 24, 2009

மீண்டும் ஒரு சந்திப்பு

வலைப்பதிவுப் பெருமக்களுக்கு மீண்டும் ஒரு நற்செய்தி.. மறுபடியும் நாமெல்லாம் சந்திக்கப் போகிறோம்.. வருவீங்க தானே?

இலங்கை வலைப்பதிவரின் முதலாவது சந்திப்பு பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்பட்டது. இது பதிவர்களுக்கும் ஊடகவியலாளருக்கும் இடையிலான கலந்துரையாடல் & சந்திப்பாக இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வு.

அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் வலைப்பதிவருக்கும் களம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறம் ஈடுபட்டு வருவது நீங்கள் எல்லோரும் அறிந்ததே.

இருக்கிறம் சஞ்சிகையால் நடத்தப்படவுள்ள இந்த சந்திப்பு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி, பூரணை விடுமுறை தினத்தன்று கொழும்பு 07இல் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

மாலை 3 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கும் என்றும் கலந்துரையாடல்களோடு விருந்துபசாரமும் தாகசாந்தியும் இடம்பெறும் என்றும் (நம் பதிவர் சந்திப்பில் வடையும் பட்டிசும் டீயும் மட்டும் தந்தோம் என்ற நண்பர்களே சந்தோசமா?) இருக்கிறம் சார்பில் அதன் இணை ஆசிரியர் சஞ்சித் எமக்கு தெரிவிக்கிறார்..
அனைத்து வலைப்பதிவர்களையும், இலத்திரனியல்,அச்சு ஊடகவியலாளர்கள் அனைவரையும் இச் சந்திப்பில் இணைந்துகொள்ளுமாறு அழைத்துள்ளனர். கொழும்பு தவிர்ந்த பிற மாவட்டத்திலுள்ள நண்பர்களும் கலந்துகொள்ள வாய்ப்பாகவே விடுமுறை நாளில் நடத்துகின்றார்கள்.

இலங்கை வலைப்பதிவர் குழுமத்தில் தங்கள் மின்னஞ்சல்களை தந்துள்ளவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அழைப்பை அனுப்பவதாகவும், ஊடக நிறுவனங்களுக்கு நேரில் அழைப்பைக் கையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தியா,மற்றும் வெளிநாடுகளில் உள்ளோரும் வரலாம்.. டிக்கெட் செலவுகள்,பயண செலவுகளை நீங்கள் யாரும் பொருட்படுத்தாத பட்சத்தில்.. எங்கள் அன்புக்கு முன்னால் இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன?
உங்கள் வருகைகளை எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் உறுதிப்படுத்துமாறு கேட்டுள்ளனர்.. இருக்கிறமின் மின்னஞ்சல் irukiram@gmail.com
தொலைபேசி 0113150836

மேலதிக விபரங்கள் இருக்கிறம் சஞ்சிகையால் எமக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பில்..
வாங்க..
மீண்டும் சந்திக்கலாம்,சிந்திக்கலாம்,கை கோர்க்கலாம், கலகலக்கலாம்..
(கைகலப்பு விஷயங்கள் ஏதும் இருந்தால் பேசியும் தீர்த்துக்கலாம்.. )

October 23, 2009

இலங்கையில் ஊடக சுதந்திரம் ..


உலகில் மிக பயங்கரமான. அச்சுறுத்தல் நிறைந்த தொழில் எது என்று கேட்டால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் சொல்லக்கூடியது ஊடகவியல் தான்.

இலத்திரன் ஊடகங்கள் ,பத்திரிகை என்ற இரண்டுமே இந்தக் காலகட்டத்தில் அநேகமான நாடுகளில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் எல்லோரும் அறிந்ததே.

வருடாந்தம் எத்தனை ஊடகவியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்..
எத்தனை பேர் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்..
எத்தனைபேர் சித்திரவதை,மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்டுள்ளார்கள்..
எத்தனை அப்பாவி ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்..

சர்வதேசரீதியாக என்னதான் மனித உரிமை,மனிதாபிமானம் என்னும் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் பேனாக்கள்,கமெராக்கள்,ஒலிவாங்கிகளின் கழுத்துகள் நெரிக்கப்பட்டு,திருகப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

தகவல்களை வெளியிடும் அறியும் உரிமைகள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இலங்கையில் மட்டும் அண்மைக்காலத்தில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எத்தனை பேர்? மனதில் பல நல்லவர்கள்,தூய மனம் படைத்த தியாகிகள் வந்து போகின்றனர்..

பல பேர் அங்கவீனர்களாயுள்ளனர்..
எழுதும் கைகள் முறித்துப் போடப்பட்டுள்ளன..
பல பேர் மிரட்டலிலேயே அடங்கி தம் எழுத்துக்கள்,கருத்துக்களை முடமாக்கியுள்ளனர்.
இன்னும் பலர் புலம்பெயர்ந்து விட்டார்கள்..

இப்படியான ஊடகங்களின் மீது,ஊடகவியலாளரின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள்,உரிமை மீறல்கள் தொடர்பாக தொடர்ந்து குரல் எழுப்பிவரும் ஒரு அமைப்பு தான் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு.Reporters Without Borders (Reporters Sans Frontiers)

இந்த RSF எனப்படும் அமைப்பு எனக்கும் மறக்கமுடியாத அமைப்பு ஒன்று.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நான் கைது செய்யப்பட்ட வேளையில் எனக்காகக் குரல் எழுப்பியதோடு, பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தது.
நான் விடுவிக்கப்பட்ட பின்னரும் பல உதவிகளை செய்ய முன்வந்திருந்தது.பிரான்ஸ் வருமாறும் அழைத்திருந்தது. எனினும் அவற்றை நன்றிகளோடு நான் மறுத்திருந்தேன்.

பிரான்சில் இருந்து இயங்கி வரும் இந்த அமைப்பு ஒவ்வொரு வருடமும் உலகில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்களிடமும் ஊடகத்துறைப் பிரதிநிதிகளிடமும் எடுக்கும் தரவுகளின் அடிப்படையில் ஊடக சுதந்திரம் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது.

இதில் புள்ளிகள்,புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஊடக சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளும், ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் நாடுகளும் பட்டியலிடப்படுகின்றன.

இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் ஊடக சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஒரே புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ள ஐந்து நாடுகளுமே ஐரோப்பிய நாடுகள்.. இவற்றுள் நான்கு பால்கன் நாடுகள்.

டென்மார்க்,பின்லாந்து,அயர்லாந்து, நோர்வே, ஸ்வீடன்.
கடந்த ஆண்டில் முதலாவது இடத்தில் இருந்த ஐஸ்லாந்து இம்முறை ஒன்பதாம் இடத்தில்.

இம்முறை எடுக்கப்பட்ட கணிப்புக்கள் அனைத்தும் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.

மிக மோசமாக ஊடகங்கள்,ஊடகவியலாளர்கள் மிதிக்கப்படும்,நசுக்கப்படும் நாடாக ஆபிரிக்க நாடான எரித்ரியா(175ஆம் இடம் ) காணப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக வட கொரியா, துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.

அண்மையில் பதவிக்கு மீண்டும் வந்த ஈரான் ஜனாதிபதியான மகுமூது அகமதிநிஜாடின் பிடியில் ஈரான் ஊடகவியாலளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஈரானுக்கு அடுத்த இடத்தை (172)வழங்கியிருக்கின்றன.

தொடர்ந்து மியான்மார், கியூபா, லாவோஸ்,சீனா, யேமென் என்று செல்லும் இந்த வரிசையில் இலங்கைக்கு 162ஆம் இடம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டுகளை விட இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. கடந்தமுறை 165ஆம் இடத்திலிருந்தது.

எனினும் தற்போதைய கணிப்பு எடுக்கப்பட்ட காலப் பகுதியில் தான் லசந்த விக்ரமதுங்க கொலை, திஸ்ஸநாயகத்துக்கான தண்டனை, போத்தல ஜயந்த மீதான தாக்குதல், மற்றும் பல ஊடகவியலாளரின் கைதுகள் பல்வேறு செய்தி இணையத் தளங்கள் மூடப்பட்டதும், இடம்பெற்றுள்ளன.பல முக்கிய ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு பிறதேசம் போயிருக்கிறார்கள்.

அப்படியிருந்தும் மூன்று ஸ்தானங்கள் உயர்ந்துள்ளது என்றால் மற்றைய நாடுகளில் இடம்பெறும் ஊடகங்களின் மீதான அடக்குமுறைகள் பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது.

இன்னும் சில அவதானிப்புக்கள்..

ஒபாமா(அதான் நோபெல் பரிசை இம்முறை பெற்றாரே அவரே தான்) ஜனாதிபதியான பின்னர் நீண்ட காலத்தின் பின் அமேரிக்கா முன்னேற்றம் கண்டு இருபதாம் இடத்துக்குள் வந்துள்ளது. ஐக்கிய ராஜ்ஜியமும் அதே இடத்தில்..
அதுசரி இரண்டு நாடுகளும் கொள்கை பொதுவாகவே ஒன்று தானே..

இந்தியா 105ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 159ஆம் இடத்திலும், ஈராக் 145ஆம் இடத்திலும் இருக்கின்றன.

என்ன தான் பேனாக்கள் வாள்முனையை விடக் கூர்மையானவை என்று கூறப்பட்டாலும், துப்பாக்கிகள் சூடாகவே பேனாக்களையும்,ஒலிவாங்கிகளையும், கமெராக்களையும் மட்டுமல்ல இணையங்களையும் குறிவைத்தவண்ணமே உள்ளன.

RSF போன்றவற்றின் குரல்கள் கொஞ்சமாவது உலகுக்கு இவற்றை வெளிப்படுத்தி வருகின்றன என்பது ஒரே ஆறுதல்..

இந்தப்பட்டியலை முழுமையாகப் பார்ப்பதற்குOctober 22, 2009

மை நேம் இஸ்...
தமிழராக இருக்கிற அநேகருக்கு இருக்கும் பிரச்சினை பெயர்..
தமிழராக இருப்பதே பிரச்சினை எனும்போது பெயர் எல்லாம் எந்த மூலைக்கு என்று உங்களில் பலர் கேட்பதும் புரிகிறது..

surname,full name,family name என்று விண்ணப்பப் படிவங்களில் இருக்கும் குழப்பத்தினால் அடிக்கடி எங்களில் அநேகமானோருக்கு அப்பாவின் பெயரே எங்கள் பெயராகிவிடுவதுண்டு.

தமிழர் பெயர் எழுதும்போது இந்தக் குழப்பத்தை (full name,surname,family name) இல்லாமல் செய்ய எல்லோரும் ஒரு பொதுவழி நின்றால் தானுண்டு..முரளீதரனைக் கூட இன்றும் முத்தைய்யா என்று அவரது அப்பா பெயரால் அழைக்கிற சிங்கள நண்பர்கள் நிறையப்பேர் உண்டு..

சிங்களவர்களும் ஆங்கில வழக்கப்படி குடும்பப் பெயர்களையே பின்னால் எழுதுவதால் அவர்களது குடும்ப பரம்பரைகளைக் கண்டுபிடிப்பது இலகுவாகிறது.. மாறாக எங்களது மரபில் எனது பாட்டனாரின் பாட்டனாரின் பெயர் கதிர்காமர் என்றால் என் பெயரை வைத்து நான் கதிர்காமரின் (லக்ஷமன் கதிர்காமர் அல்ல) பரம்பரை என்று அறியமுடியாதே..

அதிகமான சிங்களவர்களின் பெயர்கள் பெரேரா,சில்வா,பெர்னாண்டோ எனவே முடிவதாக இருக்கும்... இல்லாவிட்டால் சிங்க,தாச,ரத்னே..

எனவே அதிகமான இனிஷல்களை அவர்கள் தெளிவாக வைத்துக் கொள்வார்கள்.

பழைய வரலாறுகளில் பெயர்கள் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் அரசர்களைப் பொறுத்தவரை இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் பெருவழுதி என்றெல்லாம் வரும்போது ஓரளவாவது அவர்களின் பரம்பரைகளைப் பின்தொடர முடிகிறது.

(சில நம்மவர்களும் புலம்பெயர் தேசங்களில் மட்டுமல்லாமல் இங்கேயும் குடும்பப் பெயர்களைப் பொதுமைப் படுத்தியுள்ளனர்.)

கிரிக்கெட் வீரர்களின் பெயர்களிலும் குடும்பப் பெயர்களையே அதிகமாகப் பயன்படுத்துவதால் பல சுவாரஸ்யமான குழப்பங்களை அடிக்கடி சில நண்பர்கள்,நேயர்களுக்கு வரும்.

அன்றொரு நாள் ஒருவர் எஸ்.எம்.எஸ் அனுப்பி இருந்தார் "மைக்கேல் கிளார்க்கும், ஸ்டுவார்ட் கிளார்க்கும் அண்ணன் தம்பியா " என்று..

அவருக்கு வந்த சந்தேகத்தில் என்ன தப்பு?

ஹசிக்கள் இருவரும் சகோதரர்கள் என்றால் என் கிளார்க்குகள் இருவர் சகோதரர்கள் ஆக இருக்கக் கூடாது?

எனக்கு அடிக்கடி இந்தப் பிரச்சினை வங்கி விஷயங்களிலும், credit card விஷயங்களிலும் தான் சிக்கலைத் தரும்.வீட்டுக்கே தொலைபேசி அழைப்பெடுத்து அப்பாவின் பெயரை சொல்லி இன்னமும் இந்த மாத credit card கட்டணம் கட்டவில்லை என்று இனிமையான குரலில் ஒரு பெண் முறையிடுவாள். அப்பாவி அப்பா ஒழுங்காகக் கட்டணம் கட்டி இருப்பார். (தனது credit card க்கு) ஆனால் நம்பாமல் அம்மா திட்டுவது அப்பாவுக்குத் தான்..

அதுபோலத் தான் ஒரு தடவை (ஒரே தடவை தான்) ஐரோப்பா சென்ற போதும் எல்லா இடங்களிலும் அப்பாவின் பெயர் தான் என் திரு நாமம் ஆனது. ;)

ரொம்பக் கஷ்டப்பட்டு எல்லா இடங்களிலும் ஒவ்வொரு விதமாக எனது அப்பாவின் பெயரைப் போட்டுப் படுத்தி எடுத்தார்கள்..
இன்னுமொரு விஷயம்.. பள்ளி நாட்களில் இருந்து இன்றுவரை எனது முழுப்பெயரை பிழையில்லாமல் சரியாக உச்சரித்தவர்கள் மிக,மிகக் குறைவு.(ஆங்கிலத்திலோ,தமிழிலோ)

என் பெயர் அப்படி.. அதுவும் அப்பாவின் பெயரையும் சேர்க்கும் போது தொலைந்தார்கள் என்னை அழைப்பவர்கள்..

ரகுபதிபாலஸ்ரீதரன் வாமலோசனன்.

இந்த அழகான பெயரை எல்லோரும் சிறுவயது முதலே தாங்கள் விரும்பிய மாதிரியெல்லாம் அழைத்தும்,உச்சரித்தும் பாடாய்ப்படுத்தியதாலேயே, நான் வானொலித்துறைக்கு வந்தவுடனே என்னை வீட்டில் அழைக்கப் பயன்படுத்தும் 'லோஷன்' என்பதை என் பெயராக்கிக் கொண்டேன்.. (அப்பாடா ஒரு பெரிய வரலாற்று ரகசியம் சொல்லியாச்சு..)

எங்கள் அப்பாவின் குடும்பத்தில் எல்லோருக்குமே இப்படி நீளமான,மிக நீளமான பெயர்கள் தான்..

அப்பாவின் அப்பா ஒரு தமிழ்ப் பண்டிதர்.அந்தக் காலத்திலேயே சென்னை போய் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் பெற்றவர்.எனவே தனது பிள்ளைகளின் பெயர் விடயத்திலும் தன் புலமையைக் காட்டி விட்டார்.

பெயர்களைப் பாருங்கள்..

சபாபதி பால கங்காதரன்
இரகுபதி பால ஸ்ரீதரன்
பூபதி பால வடிவேற்கரன்
அமர சேனாபதி பால கார்த்திகைக் குமரன் (எப்படித் தான் சின்ன வயதில் தன் பெயரை இவர் எழுதினாரோ??)
ஸ்ரீபதி பால முரளீதரன்

இவர்களில் என் அப்பா தவிர ஏனைய எல்லோரும் வெளிநாடுகளில்.பாஸ்போர்ட்டில் இந்த ஒரு கிலோ மீட்டர் பெயர்கள் கொள்ளாது என்ற காரணத்தால் குட்டிப் பெயர்களோடும் ,அதற்கு முன் ஏராளமான இனிஷல்களோடும் வாழ்கின்றனர்.

பாடசாலை நாட்களில் பரீட்சைத் தாளில் இவர்கள் பெயர்கள் எழுதிமுடிக்க முதல் பரீட்சை முடிந்து விடுமோ தெரியாது.

ஆண்பிள்ளைகள் தான் இவ்வாறேன்று இல்லை.. எனது மாமிமார் இருவரதும் பெயர்கள்..
அருந்ததி ஆனந்த கௌரி
காயத்திரி ஆனந்த ரமணி

அவதானித்துப் பார்த்தால் எனது பாட்டனார் தனது மகன்களின் பெயர்கள் ஒவ்வொன்றிலும் பால,பதி என்ற சொற்களும்,மகள்களின் பெயர்களில் ஆனந்த என்ற சொல் இடம்பெறுமாறும் பார்த்துக் கொண்டார்.

அந்த நாளில் எங்களுக்கு ஆங்கிலப் பாடம் சொல்லித் தரும் எங்கள் மாமா அமர சேனாபதி என்று தொடங்கும் சித்தப்பாவின் பெயரை தவறில்லாமல் ஆங்கிலத்தில் முதலில் எழுதிக் காட்டுபவருக்கு சொக்லட் பரிசாகக் கொடுப்பார்.அடிக்கடி எனக்குத் தான் கிடைக்கும்..(நம்புங்கப்பா)

இவ்வளவு நீளமான பெயர்களைத் தன் பிள்ளைகளுக்கு வைத்த அவரது பெயர் ஆனந்தர்!!!

மறுபக்கம் எனது அம்மாவின் குடும்பத்தில்,எனது தாத்தாவான இலங்கை வானொலி புகழ் - சானா என்றழைக்கப்பட்ட (எவ்வளவு சின்னப் பெயர் பாருங்கள்) சண்முகநாதன் (லண்டன் கந்தையா) எனது மாமன்மாருக்கும்,அம்மா,பெரியம்மாவுக்கும் சின்னப் பெயர்களாகத் தேடிப் பார்த்து வைத்துவிட்டார்.

ஆண் பிள்ளைகளுக்கு நான்கு எழுத்துப் பெயர்களும்,பெண்களுக்கு மூன்று மற்றும் இரண்டு எழுத்துகளிலும் பெயர்கள்..

அசோகன்
தேவகன்
அமலன்
ராகுலன்
ஜனகன்

உமா
சுமதி

ஆனால் இரண்டு குடும்பங்களிலுமே ஐந்து ஆண்களும்,இரண்டு பெண்களும்..

இது தான் வேற்றுமையில் ஒற்றுமையோ?

நான் பாடசாலையில் படிக்கும் நாட்களிலும் சரி பின் வேலை புரிகின்ற நாட்களிலும் சரி என்னுடைய நீளமான பெயர்கள் பலருக்கு சிரமம் கொடுத்திருக்கின்றன.
குறிப்பாகப் படிவங்கள் நிரப்பும் போது, அடையாள அட்டைகள்,போலீஸ் பதிவு எழுதும் போது (அண்மையில் நிறையப் பேருக்கு வேண்டாமென்று போய் விட்டது.) என்று பல சந்தர்ப்பங்கள்..

கடந்த நவம்பர் சிக்கல்களுக்கு பிறகு பலவிதமாக பலவிடங்களில் பயன்படுத்தப்படும் என் பெயர்களை எல்லாம் ஒரு சட்டத்தரனியைக் கொண்டு இவை அனைத்தும் குறிப்பது என்னையே என்றொரு அத்தாட்சி தயார் செய்தும் வைத்துள்ளேன்.. எதற்கும் தயாராக இருப்பது நல்லதல்லவா?

அதிலும் இப்போது வேலை புரியும் இடத்தில் முதல் மாத சம்பளம் வாங்கும்போது (இங்கே மட்டும் வங்கியில் சம்பளம் போடாமல் கை நிறைய,வெள்ளைக் கடித உறையில் இட்டு கொடுப்பார்கள்) எங்கள் வெற்றி பிரிவில் மட்டும் ஆண்களில் எங்களுக்கு சம்பளம் வழங்கப் படாமல் எங்கள் தந்தைமாரின் பெயர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. நான் வேடிக்கைக்காக எங்கள் பிரதான காசாளரிடம் "வீட்டில் இருக்கும் எங்கள் அப்பாமாருக்கு சம்பளம் கொடுத்தீங்க,பரவாயில்லை..ஆனால் வேலை செய்த எங்களுக்கும் கொடுக்கத் தானே வேணும்" என்றேன்.. ஆளுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.. பிறகு விளக்கிச் சொன்னவுடன் சிரித்தார்.

என் பெயரை எங்கள் குடும்பவழக்கதிற்கும் மாறாக (வழமையாக எங்கள் வீட்டில் அனைவரது பெயர்களையும் பாட்டா- அப்பாவின் அப்பா தான் வைப்பார்) தாத்தா தான் வைத்தார்.. சமஸ்கிருத மொழியில் அழகிய கண்களையுடையவன் என்று அர்த்தமாம்.. (பாருங்கப்பா.. அப்பவே என் அழகைப் பார்த்து தீர்க்க தரிசனத்தோடு மனுஷன் வச்சிருக்காரு ;))

எனக்கு வந்த இந்த நீளப் பெயர் ராசி என் மகனுக்கும் தொடர்கிறது.. நியூமறோலோஜியில் நம்பிக்கை உடைய நான் தேடிப் பிடித்து (அம்மா,மனைவி,தம்பியின் உதவியோடு) யாருக்கும் இல்லாத பெயராக வைத்தது தான் இந்த ஹர்ஷஹாசன்.

எனது கமல் பைத்தியம் பெயரில் தெரிவதாக மனைவி அடிக்கடி சாடுவதும் உண்டு.. எனினும் இந்தப்பெயரில் ஒளி பொருந்தியவன்,மகிழ்ச்சிப் படுத்துபவன்,சூரியன்,சிவன் என்று பல அர்த்தங்கள் உள்ளன..

வளர்ந்த பிறகு என் மகனும் நீளமான பெயர் வைத்து அவஸ்தை தந்துவிட்டேன் என்று என்னைத் திட்டுவானோ தெரியாது.. விரும்பினால் பின்னாளில் மாற்றிக் கொள்ளும் முழு உரிமையையும் அவனுக்குக் கொடுப்பேன்..

நான் என் அப்பருக்குத் திட்டு வாங்கிக் கொடுத்தது போல அவனும் எனக்கு வாங்கிக் கொடுத்து விடுவானோ என்ற பயமும் உண்டு..

ஆண்களின் பெயர்களைப் பற்றியே இந்தப் பொதுப்படைப் பேச்சு.. பெண்களுக்கு பாவம் திருமணத்துக்கு முன்னர் தந்தையின் பெயர் பின்னால்.. திருமணத்தின் பின் கணவனின் பெயர் பின்னால்..

சில மேலைத்தேயப் பிரபலங்களும், தென் ஆசிய அரசியல் பெண்மணிகளும் அதிக பிரபல்யத்துக்காகவும் ஆதாயங்களுக்காகவும் தந்தை வழிக் குடும்பப் பெயர்களையும் தங்கள் பெயர்களோடு ஒட்டிக் கொள்ளும் நிகழ்வுகளும் வரலாறுகள் கண்டுள்ளன.

லீசா மேரி ப்ரெஸ்லே (எல்விஸ் ப்ரெஸ்லெயின் மகள், மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி)

இந்திரா காந்தி., பெனாசிர் பூட்டோ, சந்திரிக்கா பண்டாரநாயக்கே குமாரணதுங்க..

எனக்கு இருக்கும் இன்னொரு குழப்பம் - ஆண்களின் பெயர்களுக்கு முன்னால் நாம் அப்பாவின் பெயரை எழுதுவது போல, ஏன் பெண்களுக்கும் எழுதக் கூடாது?
எனக்கு நாளை ஒரு மகள் பிறந்தால் நான் அதை செயற்படுத்தும் எண்ணம் வரலாம்.. ;)

(இப்போது எனது மகனுக்கு நான் பதிந்துள்ள பெயரின் படி அவனது தாயாரின் பெயரின் முதல் எழுத்தையும் இனிஷலாக சேர்த்துள்ளேன்.. ஆங்கில எழுத்துப் படி எனது பெயரை இரண்டாக்கினால் வருகின்ற எழுத்துக்களும் V .L என் மனைவியின் பெயரோடு ஒத்திசைவது வாய்ப்பாகிப் போய்விட்டது)


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner