
பல காலம் எதிர்பார்க்கப்பட்டு நீண்டகாலத்தின் பின் (மூன்று வருடங்கள் என நினைக்கிறேன்) வெளிவந்து சர்ச்சைகள் பாராட்டுக்கள் என்று பலதரப்பட்ட கலவைக் கருத்துக்களோடு இந்தியா, இலங்கை என்று உலகம் முழுவதும் காட்சி தருபவர் தான் 'நான் கடவுள்'.
சில படங்களைப் பார்க்க முதலே நான் விமர்சனங்களைக் கூடியவகையில் வாசிப்பதைத் தவிர்ப்பதுண்டு. காரணம் விமர்சனம் என்ற பெயரில் முழுக்குறைகளையும் சொல்லி முடிவையும் எழுதிப் படம் பார்க்கும் சுவாரஸ்யத்தையே இல்லாமல் செய்துவிடுவர் சிலர்.
ஆனால் நான் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்ட சில தரம் கூடிய படங்களின் விமர்சனங்களை மட்டும் வாசித்துவிட்டு 'அப்பாடா தப்பிட்டோம்' என்று சொல்லி எஸ்கேப் ஆவதுண்டு.
பதிவர்களின் தலையாய கடமை என்பதற்கேற்ப 'நான் கடவுள்' வந்தவுடனேயே பரபரவென்று விமர்சனங்கள் பதிவுலகம் எங்கும் பிரசுரமாயின.
படத்தைப் பார்த்து பிறகு நண்பர்கள் எல்லோரது (அநேகமாக) விமர்சனங்களையும் வாசித்தேன் பின்னூட்டங்கள் இட்டால் என்னுடைய கருத்துக்கள் அங்கேயே வந்துவிடும் என்ற காரணத்தால் யாருக்குமே பின்னூட்டம் போடவில்லை.
'பாலா தான் கடவுள்'
'படம் என்றால் பாலா போல எடுக்கணும்'
'இதுதான் THE BEST'
என்று ஒரு சில..
மறுபக்கம்
'படமா இது?'
'அகம் பிரம்மாஸ்மி- ஆளை விடுடா சாமி'
'வன்முறை ரொம்ப ஒவர்'
'இதுக்கா மூன்று வருஷம்'
என்று ஒரு சில..
நான் கடவுள் பார்க்கிற நேரமே ஏதாவது எழுதவேண்டும் என்று இருந்த எண்ணங்களை இந்த விதவிதமான வேறுபட்டு இருந்த விமர்சனங்களுக்குப் பிறகு தள்ளிப்போட்டேன். அவை எவற்றின் தாக்கமும் இருக்கக் கூடாதென்று.
நான் விமர்சனம் எழுவதில் expertம் அல்ல. திரைப்படங்கள் பற்றி எழுதப் பெரியளவில் ஆர்வமும் இல்லை!
வாசிப்பதிலும் வானொலியில் அதுபற்றி சினிமா நிகழ்ச்சியில் அலசுவதிலும் இருக்கும் ஆர்வம் ஏனோ எழுதுவதில் இருப்பதில்லை. (அதிக வேலைப்பளு ஏற்படுத்தும் இயற்கையான சோம்பல் இதற்கான காரணமாக இருக்கலாம்)
எனினும் சில திரைப்படங்களைப் பார்க்கும் நேரம் ஏதாவது எழுதத் தூண்டும். அதை எல்லாம் விமர்சனம் என்று எண்ணாமல் என் கருத்துக்கள் என்று எடுத்துக் கொள்ளவும்.
(ஏற்கெனவே ஜெயம்கொண்டான்,சிலம்பாட்டம் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறேன்) பலபேர் கும்மியடித்து குதறிவிட்ட திரைப்படங்களைத் தொட மனமே வராது. (உ.ம் - வில்லு,ஏகன்,படிக்காதவன்)
இனி நான் கடவுளும் நானும்! ..
உங்களில் அநேகர் 'நான் கடவுள்' பார்த்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது சில கருத்துக்கள்.
ஆமோதிப்போ ஆட்சேபமோ பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்.
தமிழ்த்திரைப்படங்களில் நாயகர்களின் படங்கள் என்ற நிலையைக் கொஞ்சமாவது மாற்றி இயக்குநர்களின் படங்களைத் தந்தோர் ரொம்பவும் அரிது.
ஸ்ரீதர்,கே.பாலச்சந்தர்,பாரதிராஜா,மகேந்திரன்,மணிரத்னம் ....
இவர்களின் வரிசையில் அண்மைக்கால வரவுகளான ஷங்கர்,பாலா,சேரன்,தங்கபச்சான்,அமீர் என்போரையும் சேர்ப்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
எனினும் பாலாவின் முன்னைய 3 திரைப்படங்களோடு பாலாவை அதீத உயரத்துக்கு ஊடகங்களும் விமர்சனங்களும் கொண்டுபோயுள்ளதாக நான் கருதுகிறேன்!
'சேது' வில் தென்பட்ட யதார்த்த நிலை 'நந்தா'விலும் 'பிதாமக'னிலும் தொலைந்து போய்,விளிம்பு நிலை மனித வாழ்க்கை,அசாதாரண நடத்தைகள்,அதீத வன்முறை வெளிப்பாடுகளை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த வகையிலும்,கதாநாயகப் படைப்பிலும்,அவனது சில அம்சங்களிலும் இயக்குனர் பாலா பிடிவாதமாக சில ஒரே விதமான அம்சங்களை
(stereo type) பிடிவாதமாக வைத்திருக்கிறார் போலத் தெரிகிறது.
(முரட்டுத் தன்மை,தாய்ப்பாசம் கிடைக்காதவன்/வெறுப்பவன்,ஆவேசமானவன்,மற்ற எல்லோரையும் விட அசாதாரணமான பலம் உடையவன்.. இப்படி அடுக்கிக் கொண்டே போகுமளவுக்கு பாலாவின் ஹீரோக்களுக்கிடையில் ஏராளமான ஒத்த அம்சங்கள்)
சேதுவில் வந்தது போல வாழ்க்கையில் என்னை,உங்களை போல ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்கிற,இயல்பான மனிதர்கள் பாலாவின் கதாநாயகர்கள் ஆவது எப்போது? (பிதாமகன் சூர்யா விதிவிலக்கு)
எங்களுக்கு வடிவேலுவும்,விவேக்கும் வந்து அடிக்கிற அபத்த ஜோக்குகளோ,மரத்தை சுத்தியோ,சுவிட்சர்லாந்து,நியூ சீலாந்து,தாய்லாந்து போயோ ஆடிப் பாடுகிற டூயட்டுக்களோ,வாகனங்கள் அங்கும் இங்கும் பறந்து,வாள்,கத்திகள்,அரிவாள்கள் சீவி சுழன்று இரத்தம் கக்கும் கிளைமக்ஸ்களோவேண்டாம்.
ஆனால் பாலாவின் இவை போன்ற படங்கள் தான் யதார்த்தம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
யாருமே பேசாத மனிதர்கள் பற்றி பாலா தனது திரைப்படங்களில் பேசுகிறார். அதற்காக மிகுந்த பிரயத்தனப்படுகிறார்.சரி ஆனால் திரைமுழுதும் இத்தனை கோரம் அகோரம் இரத்தம் வேண்டுமா?
நேரிலே வாழ்க்கையில் நாம் காணும் இன்ன பிற அழிவுகள் போதாமல் திரையிலும் வேறு வேண்டுமா?
நிஜ வாழ்க்கையில் நடப்பதையே திரையில் காட்டுகிறார் பாலா என்ற வாதத்தை வைத்தாலும் கூட ஒரு சதவீதத்துக்கும் குறைவாக சமூகத்தில் நடக்கும் விடயங்களை பூதக்கண்ணாடி மூலம் பிரசாரப்படுத்துகிறார் பாலா!
பிதாமகனில் விக்ரமின் பாத்திரம் எவ்வாறு அதீதமான விலங்குப் பாவனைகளோடு காட்டப்பட்டதோ (விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தாலும் அந்த பாத்திரத்தின் நாடகத்தன்மையான நடிப்புக்கும் -தங்கமலை ரகசியத்தில் சிவாஜி கணேஷனின் அதீத நடிப்புக்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.)அதே போலத் தான் இதிலும் ஆர்யாவின் பாத்திரத்தில் ஒருவித இறுக்கம்,மிருகத்தனம் கலந்து செயற்கை பூசப்பட்டுள்ளது. கண்களில் மட்டும் ஒரு தனி வெறியும்,ஆழ்ந்த தன்மையும்.
நாயகர்களை உருவாக்கும் பிரம்மா பாலா என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்!
பாலாவின் திரைநாயகர்கள் மூவருமே பாலாவினால் செதுக்கப்பட்டவர்கள்.(விக்ரம்,சூர்யா, இப்போது ஆர்யா) சவடால் வசனங்களைப் பேசும் நாயகர்கள் மத்தியில் - பாத்திரமாக அவர்களை ஒன்றித்து விடும் கலை பாலாவுக்கே உரியது தான்!
தனது திரைப்படங்களில் ஏனைய பாத்திரங்களிலும் அந்தந்த பாத்திரப் படைப்புகளுடன் ஒன்றிக்க வைத்து புதிய வாழ்க்கைகளை உருவாக்கி உலவ விடுவதில் நான் கடவுளிலும் பாலா ஜெயித்திருக்கிறார்.
சேதுவில் - அபிதாவின் அண்ணன்
நந்தாவில் - ராஜ்கிரண்
பிதாமகனில் - மகாதேவன்
போல நான் கடவுளிலும் பாதிரங்களாகவே வாழ்ந்தவர்கள் பலபேர்.
பிரதான பாத்திரங்களில் ஆர்யாவும் பூஜாவும் குறைசொல்ல முடியாமல் தங்கள் வாழ்நாளின் மிகச் சிறப்பான,வாழ்நாள் முழுவதும் பேசப்படக்கூடிய பாத்திரங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாலாவின் இயக்கத்தில் மரம்,மட்டையே நடிக்கும்போது அவர்களால் முடியாதா?
விழிப்புலற்றவராக இதுவரை ஒரு நாயகி இவ்வளவு இயல்பாக (தமிழில்) நடித்து நான் பார்த்த ஞாபகம் இல்லை. எனினும் பூஜா வரும் பாடும் காட்சிகளில் அவரையே பாடவிட்டிருக்கலாம் என்றே தோன்றியது. செயற்கையாக இருந்தவற்றுள் அதுவும் ஒன்று. குறிப்பாக ' அம்மாவும் நீயே' பாடல் நகைச்சுவையாகப் பயன்படுத்தப்பட்ட காட்சியிலும் பூஜா பாடுவது போல வாயசைப்பது மிகப் பெரிய நகைச்சுவை.
புதிய வில்லன் ராஜேந்திரன்(தாண்டவன்) ஒரு பிரமாதமான அறிமுகம். லாவகமாக மிரட்டுகிறார். குரல் தொனியும் முகமும் கொடூர விழிகளும் - எங்கே இருந்தார் இவ்வளவு நாளும்?? எனினும் வேறு யாராவது இயக்குநர் இவரைப் பார்த்திருந்தால் நிச்சயம் இன்னொரு வடிவேலுவாகவோ முத்துக்காளையாகவோ தான் மாற்றியிருப்பார்.
காசியின் பிரதான சாமியார்,கை கால்களற்ற மலைச்சாமியார்,ஆர்யாவின் தங்கை,கவிஞர் விக்ரமாதித்தியன்,முருகனாக நடிப்பவர்(என்ன அருமையாக நடித்திருக்கிறார்.. தேவையான இடங்களில் வன்மம்,குரூரம்,பின்னர் நகைச்சுவை,பரிதாபம்,அனுதாபம் என்று கலவையாக மனிதர் கலக்குகிறார்) பொலீஸ் அதிகாரி என்று அனைவருமே பாத்திரப் படைப்புணர்ந்து பலம் சேர்ந்துள்ளார்கள்.
பாலாவுக்கே இந்தப்பாராட்டுகளும்!
வழமையான பாலா படங்கள் போலவே,இதிலும் நகைச்சுவைக்கென்று தனியாக யாரும் இல்லாமல் பொதுப்படையான பாத்திரங்களே இங்கும் சிரிக்கவைக்கின்றார்கள்.. ரசிக்கக் கூஇயதாகவே இருந்தாலும்,நகைச்சுவை வழியாகவும் ஜெயமோகன் தெரிகிறார்.
பாலாவின் மூன்று ஆண்டு மினக்கேடு பிச்சைக்காரக் கூட்டத்தினரைப் பார்க்கும்போதே தெரிகிறது..அவர்களைத் தேடிப்பிடிப்பதற்கும்,நடிக்கப் பழக்குவதற்கும் ,அதிலும் இயல்பாக நடிக்க சொல்லிக் கொடுப்பதற்கும் நிச்சயம் பாலாவுக்கு காலம் பிடித்திருக்கும்.
அனைவரது உடல் மொழிகள்,அங்க அசைவுகள்,முக பாவனைகள் அருமை..மனதை உருக வைக்கிறார்கள்..
எனினும் அந்த அப்பாவிகளின் அங்கவீனங்களையும்,அவர்களின் பிறப்பின் அகோரங்கள்,அலங்கோலங்கள்,இயலாமைகளை காட்சிப்படுத்தி பரிதாபம் தேடுவது (பிச்சைப் பாத்திரம் பாடல் முழுவதுமே இது தான்) மனதுக்கு கஷ்டமாக/உறுத்தலாக மற்றவர்களுக்கு - குறிப்பாக பாலாவுக்குப்படவில்லையா?
மிருகங்களை வதை செய்து காட்சிப்படுத்துவதைத் தடுக்க Blue cross இருப்பதுபோல இந்த விதமான பரிதாபக் காட்சிபடுதலுக்கு எதிராக எந்த அமைப்பும் இல்லையா என்ற கேள்வி எனக்குள்..
எனினும் இருவேறு கதைக்களங்களைச் செய்ய வந்த பாலா இரண்டில் எதற்குப் பிரதானம் கொடுக்கவேண்டும் என்பதில் அகோரி பக்கம் சாய்கிறார்.
இரண்டு தளங்களையும் ஒன்றாக இணைக்கும் இடமும் தளம்புகிறது. ஏனைய இவரது மூன்று திரைப்படங்களிலும் இல்லாத இந்த வித்தியாசம் பாலாவின் திரைப்பட ஒட்டத்தைப் பெரிதும் பாதிக்கிறது.
இதனால்தான் திரைப்படத்தின் நீளம் கூடியது என்று நான் நினைக்கிறேன். இளையராஜாவின் இசையில் இரு நல்ல பாடல்கள் மட்டுமே படத்தில் வந்து ஏனையவை வராமல் போவதற்கும் இதுவே தான் காரணம் போல!அச்சாணி திரைப்படத்தின் மீள் உருவாக்கப் பாடலான 'அம்மா உன் கோவிலில்' பாடலைத் திரையில் காணச் சென்ற எனக்கும்,இன்னும் பலருக்கும் ஏமாற்றமே.
பின்னணி இசையின் பிதாமகன் தான் தான் என்பதை இளையராஜா மீண்டும் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். அவரின் இசை கலங்க வைக்கிறது,கதறியழ வைக்கிறது,தட தடக்க வைக்கிறது,தவிக்க வைக்கிறது,கண்கலங்க வைக்கிறது... பல இடங்களிலும் ஆர்தர் வில்சனின் கமெராக் கண்ணுக்கு துணை வந்து வழிநெடுக படத்தைக் கொண்டு செல்கிறது.
எனினும் பாலாவின் முன்னைய படங்கள் போலன்றி நான் கடவுளில் கமெரா படத்தின் பிற்பகுதியில் கைகொடுக்கவில்லை.ஆரம்பக் காசி காட்சிகளில் கமெரா கொடுத்த அழுத்தமான,பிரமிப்பான பதிவுகளை ஏனோ பின்னர் வந்த காட்சிகள் தரவில்லை.
பாலாவின் முன்னைய படங்களின் பல பாதிப்புக்கள் பல இடங்களில் சலிப்பைத் தருகிறது.
பழையபாடல்களின் தொகுப்புக்கு ஆடுவது,சண்டைக் காட்சிகளில் தொனிக்கும் அகோர வன்மமும்,வன்முறையும்,நாயகன் எந்த ஒரு பாச உணர்வுக்கும் கட்டுப் படாதது,நீதிமன்ற,போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள்.. இப்படியே அடுக்கலாம்.
பாச உறவுகளைத் துண்டித்து வா என்று காசி சாமியார் சொன்ன உத்தரவை வாங்கி தமிழகம் வரும் ஆர்யா, தாயின் உறவைத் துண்டித்தபின் உடனே காசி திரும்பாமல் இருப்பது தாண்டவன் குழுவினரை வதம் செய்வதற்காக என்றால் கிளைமாக்ஸ் காட்சி வரை என் தாமதம்? அகோரிக்கு பார்த்தவுடன் தீயவரைத் தெரியும் எனும்போது பார்த்த மாத்திரத்திலேயே சிலரை அவர் போட்டுத் தள்ளும் போது (encounterஇன் ஆன்மீக வடிவம்??) இதில் மட்டும் தாமதம் ஏன்?
இன்னொரு பக்கம் நான் அவதானித்து,அதிருப்தியடைந்த இன்னொரு விஷயம் கண்மூடித் தனமாக இந்து சமயத்தை பாலாவும்,தனது எழுத்துக்களின் நுண்ணிய திறன் மூலமாக ஜெயமோகனும் பிரசாரப்படுத்துவது.
நான் இதற்குமுன் 'ஏழாவது உலகம்' படித்திருக்கிறேன்.ஜெயமோகனின் மேலும் சில படைப்புக்களைப் படித்துள்ளேன்.அவரது நுண்ணிய,வலிமையான எழுத்துக்கள் பற்றி வியந்தும் இருக்கிறேன்.எனினும் இந்தப்படத்தில் அவர் பல இடங்களில் தனது பிரசார நெடியை வீசுகிறார்.
ஆரம்பக் காட்சிகளில் பல மூட நம்பிக்கைகள்,முட்டாள் தனமான சம்பிரதாயங்களை சாட்டையடிக்கும் வசனங்கள்,போலி சாமியார்களைத் தோலுரிக்கும் போது மேலும் வன்மை பெற்றுப் பாராட்டுக்களைப் பெறுகின்றன.
எனினும் சிவாஜி,ரஜினி,நயன்தாரா போன்றோரை மிமிக்ரி செய்யும் அந்தக் காட்சி தேவை தானா? அதுவும் பாலா போன்ற ஒருவருக்கு? மக்களுக்கு செய்தி சொல்கிறோம் என்ற பெயரில் தாங்கள் இருக்கும் துறையில் உள்ளோரையும் வாங்கு,வாங்கென்று தாக்குவது எவ்வளவு சரியென்று எனக்குத் தோன்றவில்லை..
ரஜினியை சாடை மாடையாக தாக்கியும் அந்த மனிதர் இந்தப்படம் பற்றிப் பாராட்டியது அவரது பெருந்தன்மையா? 'இன்னா செய்தாரை' குறள் ஞாபகம் வந்தது..
நயன் மீது பாலாவுக்கு என்ன தனிப்பட்ட கோபமோ? ஒருவேளை முதலில் பூஜாவை ஒப்பந்தம் செய்யமுதல் நயன்தாராவிடம் கேட்டிருப்பாரோ?
இறுதிக் காட்சியில் பூஜாவின் பிரசங்கத்தில் (!) இந்து சமயம் மட்டுமே முத்தி தருவதாக மறைமுகமாகக் காட்டப்படுவது உறுத்தவில்லையா? எல்லாப் புகழும் உனக்கே (இஸ்லாம்),ரட்சித்தல்,ரட்சகர்,இயேசு (கிறிஸ்தவம்) என்று ஏனைய சமயங்களைத் தாக்கி கேவலப்படுத்தி இந்து சமயமே வரமும்,தண்டனையும் முறையாகத் தருகிறது என்று நிறுவுவது தமிழின் தரமான இயக்குனர்களில் ஒருவர் என்று கருதப்படும் பாலாவுக்கு எத்துணை அழகு என்று எனக்குத் தெரியவில்லை.
இன்னும் இரு காட்சிகளிலும் இஸ்லாம்,கிறிஸ்தவ மதங்கள் மீது அவதூறு சாயம் பூசப்படுகிறது..பாலாவின் மீதும்,ஜெயமோகன் மீதும் வைத்திருந்த மதிப்பின் மீது சற்றே எனக்கு சரிவு ஏற்படுத்திய விஷயங்கள் இவை.
அவதிப்படுவோருக்கு எல்லாம் மரணங்கள் தான் முடிவென்று பாலா சொல்லவருகிறாரா? அங்கள் இழந்தோர்,அவயவக் குறைபாடு உடையோருக்கு தற்கொலை அல்லது அகோரி வழங்கும் மரணங்கள் தான் முடிவு என்கிறாரா? சுபமான முடிவுகள் தான் திரைப்படங்களுக்கு வேண்டும் என்றில்லை ஆனால் ஆரோக்கியமான சமுதாயத்துக்கு இது போன்ற கருத்துக்கள் மூலமாக சொல்லவரும் கருத்து அபத்தமாக இல்லையா?
இந்து சமயத்தை இவ்வவளவு தூக்கிப் பிடித்தும் காட்டுமிராண்டிக் கொலைகள் மூலமாக தான் வரங்கள் கிடைக்கின்றன என எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்.. மொத்தமாக என்னால் 'நான் கடவுளை' அபத்தம் என்று சொல்லி ஒதுக்க முடியாவிட்டாலும்,பாலாவின் அறிவுஜீவித்தனமான ஒரு சில இயக்கு நுட்பங்களையும்,பாலாவின் கைவண்ணம் தெரியும் நடிகர்களின் திறமை வெளிப்பாடுகளையும்,இளையராஜா என்ற மேதையின் கைவண்ணத்தையும் விட்டுப்பார்த்தால் 'நான் கடவுள்' ஒரு வன்முறை சாயம் தெளிக்கப்பட்ட கோரமான சோகக் கோலம் என்றே எனக்குத் தெரிகிறது..