June 29, 2012

சகுனி






தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே சுவைக்கும் ஒருவருக்கு இடையே ஒரு தோல்வி கிடைத்தால் தான் தன்னிலையை உணர்ந்துகொள்ளக் கூடியதாகவும் அடுத்த தோல்வியைத் தவிர்க்க உதவுவதாகவும் இருக்கும்.
தோதான பாத்திரங்களாலும், கொஞ்சம் அதிர்ஷ்டத்தினாலும் தொடர்ச்சியாக வெற்றியையும் நல்ல பெயரையும் பெற்று வந்த கார்த்திக்கு முதலாவது பெரிய சறுக்கலாக, திருஷ்டி கழிக்க வந்துள்ளது சகுனி.

நான் எங்கள் ஒலிபரப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் (Trailers) செய்யும்போது அடிக்கடி சொல்வது "விளம்பரங்கள் நன்றாக இருக்கத் தான் வேண்டும்; ஆனால் விளம்பரங்களைவிட நிகழ்ச்சிகள் நன்றாக இருக்கவேண்டும் " என்று. 
சகுனியின் நிலையும் அது தான்..
ஆகா ஓகோ.. வசூல் வெற்றி.. கமல் - ரஜினி என்று ஆர்வத்தை ஏற்படுத்திய விளம்பரங்களைப் பார்த்துவிட்டு திரையரங்கு போனால் ஏமாற்றம் பாதி.. எரிச்சல் மீதி.

சிறுத்தையில் கார்த்தி - சந்தானம் கலக்கிய பிறகு அதே formulaவில் கதை கொஞ்சம் கலகலப்பு நிறைய என்று தந்தால் ரசிகர்கள் சிரித்துக்கொண்டே ரசிப்பார்கள் என்று நினைத்து அறிமுக இயக்குனர் ஷங்கர் தயாள் தானும் ஏமாறி, கார்த்தியையும் எம்மையும் சேர்த்தே ஏமாற்றி இருக்கிறார்.

பலம் வாய்ந்த அரசிய்லவாதியை எந்தப் பக்கபலமும் இல்லாத சாதாரண இளைஞன் புத்தி, சூழ்ச்சி, சாதுரியம் என்பவற்றைப் பயன்படுத்தி, கட்டம் கட்டி ஜெயிப்பதே கதை.

இறுதியாக இதே போன்ற கதையை தூளில் இயக்குனர் தரணி தந்திருந்தார். ஆனால் விக்ரமின் அதிரடியும் சேர்ந்து ரியல் மசாலா ஆகி மிகப்பெரிய வெற்றியையும் தூள் பெற்றிருந்தது.அந்த வேகம்,சுவாரஸ்யம் சகுனியில் இல்லை. சந்தானமாவது கொஞ்சம் ஈடுகட்டுவார், வீடு கட்டி விளையாடுவார் என்று பார்த்தால், சச்சின் என்ன எல்லாப் போட்டியிலும் சதம் அடித்து வென்று கொடுக்க முடியுமா என்று சந்தானம் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.


தூளில் சகுனியளவுக்கு நட்சத்திரப் பட்டாளம் கிடையாது. ஆனால் திருப்பங்களையும் கதையின் முடிச்சுக்களையும் அழகாகப் பின்னியிருப்பார் இயக்குனர்.
முடிச்சு அவிழ்ப்பது பற்றியெல்லாம் Trailerஇல் அவிழ்த்துவிட்டுவிட்டு மொக்கை போட்டிருக்கிறார் புதுமுக இயக்குனர்.
தயாரிப்பாளரும் எம்மைப் போல பாவம்.


சகுனியில் ஸ்டார் அந்தஸ்துள்ள கார்த்தி, இன்னொரு ஹீரோவாகவே வலம் வரும், திரையில் அறிமுகமாகும்போதே கார்த்தியை விட அதிக கை தட்டல்களை அள்ளிக்கொள்ளும் சந்தானம், தேசிய விருது நடிகன் பிரகாஷ் ராஜ், நாசர், ராதிகா, கோட்டா சீனிவாசராவ், ரோஜா என்று வரிசையாக திறமையும் அனுபவமும் வாய்ந்த நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு கதையைக் கோட்டை விட்டால் என்ன செய்வது?
இதை விட முன்னைய கதா(சதை)நாயகி கிரண் , இப்போதைய நட்சத்திரங்கள் அனுஷ்கா (ஆமாம் அருந்ததியே தான்) & அன்ட்ரியாவும் உண்டு....
ஆனால் ஏன்? 
கார்த்தியை முன்னிறுத்தியே சகல விளம்பரங்களும் என்பதால் எக்ஸ்ட்ரா பில்ட் அப்?


ஆரம்பக் காட்சிகளில் ஏதோ வித்தியாசம் வரப்போகிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தால் கமல் - ரஜினி (கமலக்கண்ணன் - அப்பாதுரை ரஜினி யாம்) உரையாடலை நீட்டி இழுத்தே அறுக்கிறார்.
ஒரு கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அறுவை. கதாநாயகி பேரும் வேறு ஸ்ரீதேவி என்று நகைச்சுவைக்குப் பதிலாக 'கடி'க்கிறார்.
பிறகு கார்த்தி - பிரணதி காதல்.. சுவையாகவே இல்லை. அப்படியே பழைய வாசனையும் சப்பென்ற நகர்வுகளும்.
அதன் பின்னர் கமல் (கார்த்தி) சகுனியாக மாறுகிறாராம்.
அந்தக் கொடுமையை என்னவென்பது? சகுனியின் பெயருக்கே அவமானம்.. எந்தவொரு சூழ்ச்சியும் பெரிதாக இல்லை.. 
கார்த்தி என்கிற கமலக்கண்ணன் சொல்வதை முதலமைச்சர் பிரகாஷ் ராஜ் தவிர எல்லாருமே வேதவாக்காக எடுத்துக் கேட்கிறார்கள் ; வெல்கிறார்கள். 
ஆனால் அவர் எதற்காக அவசரமாக மீட்க வேண்டிய தன் வீட்டை மீட்பதற்கு நீண்ட கால நோக்கில் சில விடயங்கள் செய்கிறார் என்பது மண்டையை இறுதிவரை பிளக்கும் ஒரு கேள்வி.
கந்துவட்டிக்காரியை மேயராக்குகிறார்; சாதா சாமியாரை சகல வல்லமையுள்ள சர்வதேச சாமியார் ஆக்குகிறார் (அந்த சாமியாரின் இறுதி கெட் அப் இன்னும் ஒரு பிரபல சாமியாரை ஞாபகப்படுத்தவில்லை?) ; இறுதியாக அரசியல் அனாதையாக (இந்த கோட்டா பாத்திரம் ஒரு தமிழக அரசியல் வாதிரி மாதிரியே இல்லை?) இருந்தவரை முதலமைச்சர் ஆக்குகிறார்.

இதெல்லாம் செய்து தன்னை ஏமாற்றிய அரசியல்வாதியை தோற்கடிப்பது தான் சகுனி ஆட்டம்.. ஆனால் ஆட்டத்தில் சுவையும் இல்லை; சுவாரஸ்யமும் இல்லை என்பது தான் ஏமாற்றம்.

அதுசரி தேர்தல்கள் எல்லாம் என்ன சென்னை மின்வெட்டும், இலங்கை விலைவாசி உயர்வும் மாதிரியா? நினைத்த நினைத்த நேரம் வருகிறதே...


இசை - பிரகாஷ் குமாராம்.. பாடல்கள் சுமார். பின்னணி இசை வெகு சுமார்.
ஒலிப்பதிவு, எடிட்டிங், சண்டைக் காட்சிகள் என்று அலட்டிக்கொள்ளவே வேண்டாம்...
இயக்குனர் ரொம்பக் காலம் வாய்ப்புக்காகக் காத்திருந்து தூங்கி எழுந்து வந்தது போல எப்பவோ வந்து நாம் பார்த்து அழுத்த ஐடியாக்களைக் கொண்டு வந்து கொட்டாவி விடவைக்கிறார்.

காதல் காட்சிகள், ராதிகா, நாசர் வகையறாக்களை கார்த்தி தன் வலையில் போட்டுக்கொள்ளும் இடங்கள்.. இப்படி பல..

சகுனியில் பிடித்த வெகு சில...

சந்தானம்.. (ஆனால் முன்னைய படங்கள் அளவுக்கு இல்லை.. கொஞ்சம் தன் பாதையை மாற்றிக்கொள்ளவேண்டும்)
கார்த்தி (சில இடங்களில் வெகுளி, கோமாளி & ரசிக்கவைக்கும் குறும்புத்தனங்கள்.. ஆனாலும் நடனங்களிலும் சரி, நடிப்பிலும் சரி முழுமையான ஈடுபாடில்லாதவர் போலத் தெரிகிறதே.. அப்படியா கார்த்தி?)
சந்தானம் - கார்த்தி ஆரம்பக் காட்சிகள்..
இடையிடையே வரும் சிற்சில வசனங்கள்....
முன்னைய, இந்நாள் தமிழக அரசியல்/ ஆட்சியை ஞாபகப்படுத்தும் சில விடயங்கள் & வசனங்கள் 
சில ஹீரோக்களின் படங்களில் நடப்பது போல நேரடியாக கார்த்தியை முதல்வர் ஆக்காதது.. 



பிடிக்காத/ கடுப்பேற்றிய/ அலுப்பு அளித்த/ கொட்டாவி விடவைத்த .. ஏதாவது போட்டுக்கொள்ளுங்கள்

தும்மல் வரவழைத்த தூசு தட்டிய ஐடியாக்கள்
லொஜிக்கே இல்லாத கதை
கதையே இல்லாத ஓட்டம்
தெரிந்த திருப்பங்கள்
வீணடிக்கப்பட்ட முக்கிய நடிக/நடிகையர்
எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது

இன்னொரு முக்கியமான கடுப்பேற்றும் விடயம்....
சன் மூவீஸ் போலவே இன்னமும் மாபெரும் வெற்றி மண்ணாங்கட்டி வெற்றி என்று தொலைக்காட்சியில் விளம்பரம் போட்டு அறுப்பது.

கார்த்தி & சந்தானம் - அடுத்த கதைத் தேர்வில் வெகு அவதானமாக இருங்கள்.
இயக்குனர் - அடுத்த வாய்ப்பு என்று ஒன்று வந்தால் முதலில் கதை & திரைக்கதையை தீர்மானியுங்கள்....

சகுனி - சப்பை 

June 26, 2012

எதிர்பார்த்த நான்கு + ஒன்றும் எதிர்பாராத இரண்டும் - Euro 2012 & SL vs Pak + JPL


பாகிஸ்தான் அணியை இலங்கை காலியில் துவைத்தெடுத்து ஒரு பக்கம்; விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆரம்பம் ஒரு பக்கம் என்று நேற்றைய நாள் அமோகமாக இருக்க, கால்பந்தாட்டப் பக்கம் அமைதியாக இருக்கிறது.
ஆனால் இன்று (27 June)  முக்கியமான இறுதிக்கட்ட மூன்று போட்டிகளில் முதலாவது போட்டியோடு அமைதி கிழிந்து மீண்டும் கால்பந்தாட்ட ஆர்ப்பரிப்பு ஆரம்பிக்கிறது. 



விக்கிரமாதித்தன் கால்பந்தாட்டப் போட்டிகளில் என்னுடன் விளையாட்டுக்காட்டமாட்டார் என்று சொன்னோமா இல்லையா?

கால் இறுதிகளில் மிக நெருக்கமாக அமைந்த இத்தாலி - இங்கிலாந்து போட்டியைத் தவிர (இதைப் பற்றி நான் எந்தவொரு கணிப்பும் தெரிவித்திருக்கவில்லை) ஏனைய மூன்று போட்டிகளுமே எதிர்பார்த்த அணிகளை அரையிறுதிப் போட்டிகளுக்கு அனுப்பி இருக்கின்றன.

விரிவான அலசல் ஒன்றை தமிழ் மிரரில் எழுதியுள்ளேன்.


ஐரோப்பியக் கிண்ணம் 2012; காலிறுதிப் போட்டிகளும் களைகட்டப் போகும் அரையிறுதிகளும்



வாசித்து உங்கள் கருத்தை அங்கேயோ, இல்லாவிடில் இங்கே இந்த இடுகையின் கீழேயோ இடுங்கள்...

என்னைப் பொறுத்தவரை இந்த அரை இறுதிகளில் பெரிதாக சுவாரஸ்யம் இருக்காது என்றே நினைக்கிறேன்..
மேலேயுள்ள தமிழ் மிரர் கட்டுரையில் நான் எழுதியுள்ளதைப் போலவே 2008ஆம் ஆண்டு இறுதிப் போட்டி போலவே இம்முறையும் ஸ்பெய்ன் எதிர் ஜெர்மனியாகவே அமையும் என்பதற்கான வாய்ப்புக்களே அதிகமாக இருக்கின்றன.


2008ஆம் ஆண்டு டொரெஸ் அடித்த கோல் ஒற்றை வெற்றி கோலாக அமைந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இம்முறை ஹீரோ யாரோ?

-----------------------------------

இலங்கை பாகிஸ்தானை முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிகொண்டது...

இப்படி ஒரு செய்தி நேற்று மாலை வெளியாகும் என்று ஒரு பத்து நாட்களுக்கு முன்னாள் யாராவது சொல்லி இருந்தால் நான் நக்கலாக சிரித்திருப்பேன்...

உமர் குல், சயீத் அஜ்மல், யூனுஸ் கான், மிஸ்பா உல் ஹக் (முதல் போட்டியில் இவர் தடை செய்யப்பட்டது ஒரு நாள் தொடரின் கடைசிப் போட்டியில் தானே?) என்று இவர்கள் அடங்கிய அணி, சரியான பந்துவீச்சு வரிசை ஒன்றை டெஸ்ட் போட்டிகளில் தெரிவு செய்யத் தடுமாறிவரும் இலங்கை அணிக்கெதிராக திணறித் தோற்கும் என்று யார் தான் நினைத்திருப்பார்?
அதிலும் முழுமையான நாள் ஒன்று மீதம் இருக்க?

ஆனால் பாகிஸ்தான் அணியின் தடுமாற்றம் ஒருநாள் தொடரின் தோல்வியில் கொஞ்சம் வெளியே தெரிந்தாலும், இருபது விக்கெட்டுக்களை எடுக்கத் தடுமாறிவரும் இலங்கை அணியால் பாகிஸ்தானை வெல்ல முடியாது என்றே நான் நினைத்திருந்தேன்.

பாகிஸ்தான் அணி அண்மைக்காலத்தில் பெற்று வந்த தொடர்ச்சியான டெஸ்ட் வெற்றிகளையும் இங்கே ஞாபகப்படுத்தவேண்டும்..
இலங்கையும் மத்திய கிழக்கில் வாங்கிக்கட்டி இருந்தது.
ஆனாலும் அப்போது என்னுடைய இடுகையிலும் நான் குறிப்பிட்டிருந்த விஷயம், பாகிஸ்தான் தனக்கு சாதகத் தன்மையை வழங்கும் மத்திய கிழக்கு மைதானங்களுக்கு வெளியேயும் தம்மை நிரூபிக்கவேண்டும் என்று..
இப்போது அது நிரூபணமாகிறது.

ஆனால் பாகிஸ்தானைத் தடுமாற வைத்த இலங்கைப் பந்துவீச்சுத் தெரிவுகள் கொஞ்சம் வித்தியாசமானவை.

பல நாட்கள் டெஸ்ட் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்படாமல் இருந்த நுவான் குலசேகர, முரளிக்குப் பிறகு இலங்கையின் சுழல் பந்துவீச்சு நம்பிக்கை ரங்கன ஹேரத் மற்றும் அணிக்குள் வருவதும் போவதுமாக இருக்கும் சுராஜ் ரண்டிவ்..
இவர்களோடு காயம் காரணமாக நீண்ட காலம் விளையாடாமல் இருந்த நுவான் பிரதீப்..
(இவர் விளையாட ஆரம்பித்தபோது வேகத்துக்காகவும் ஸ்லிங்கிங் பந்துவீச்சுப் பாணிக்காகவும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது)



மீண்டும் இலங்கைத் தேர்வாளர்கள் தங்கள் ஆடுகளங்களுக்கேற்ற அணித் தெரிவு - Horses for the causes என்ற கொள்கை சரியாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி அடையலாம். இது பந்துவீச்சில் மட்டும் தான்.

துடுப்பாட்ட வரிசையின் முதல் ஆறு பேரும் (பரணவிதான தான் இந்த வரிசையில் கொஞ்சம் ஆடுகின்ற பல்) விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்தனவும் மாற்றப்பட தேவையில்லாதவர்களாகத் தொடர்ந்து இருக்கிறார்கள்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை மிக மகிழ்ச்சியடையக்கூடிய விடயமாக டில்ஷான் & சங்கக்காரவின் சதங்களைக் குறிப்பிடலாம்..
ஒரு நாள் தொடரில் டில்ஷான் சதமும், சங்கா சதத்தை அண்மித்திருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் இப்படிப் பெரியளவு ஓட்டங்களை இருவரும் பெற்றிருப்பதானது இலங்கை அணிக்கு அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளுக்குமான நம்பிக்கையையும் மகேலவைத் தாண்டி காலியில் இன்னும் ஓட்டங்கள் குவிக்கக் கூடியதாக இவ்விருவரையும் கூடக் காட்டியிருக்கிறது.

சங்கக்கார பாகிஸ்தானுக்கு எதிரான தன் தொடர்ச்சியான இமாலய ஓட்டக் குவிப்பைத் தொடர்கிறார்.

இந்த காலி டெஸ்ட் வெற்றியில் நான் மனம் மகிழ மிக முக்கியமான காரணம் குலசேகர தேர்வாளர்களுக்கு தன்னை டெஸ்ட் போட்டிப் பந்துவீச்சாளராக நிரூபித்தமை.

சங்கக்கார இன்னுமொரு இரட்டை சதத்தைத் தவறவிட்டமை கொஞ்சம் கவலை.

ஆனால் சர்வதேச நடுவர்கள் விட்ட எக்கச்சக்கத் தவறுகளும், அவை எல்லாமே அநேகமாக பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்பியமையும் உண்மையில் கடுப்பை ஏற்படுத்தியது. வெற்றியில் முழுமையாக மகிழ்ச்சிப்பட முடியவில்லை.
இங்கிலாந்துத் தொடரில் DRSஐப் பயன்படுத்திய இலங்கை- SLC இத்தொடரிலும் அதைப் பயன்படுத்தியிருக்கலாமே....



இலங்கை அணியின் இந்த வெற்றி முரளிதரனின் ஓய்வுக்குப் பின்னர் பெறப்பட்ட மூன்றாவது டெஸ்ட் வெற்றி என்பதோடு பாகிஸ்தானுக்கு எதிராகப் பெறப்பட்ட மிகப்பெரிய வெற்றியும் ஆகும்.

முரளியின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை அணி ஏழு போட்டிகளில் தோற்றுள்ளது ; பத்து போட்டிகளை சமநிலையில் முடித்துள்ளது.
பெற்ற மூன்று வெற்றிகளும் கடைசி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்டுள்ளதால், இலங்கை வெற்றிக்கான வழிவகையை(formula)க் கண்டுள்ளது என்று பொருள் கொள்ளலாமோ?

ஆனால் பாகிஸ்தான்? மிஸ்பாவின் மீள்வருகை ஓரளவு உற்சாகத்தை வழங்கினாலும், காலியில் தடுமாறிய துடுப்பாட்ட வரிசையை எப்படி SSCஇல் தட்டிநிமிர்த்துவார்கள் என்ற கேள்வி எழுகிறது.
பந்துவீச்சு முதலாம் இன்னிங்சில் கொஞ்சம் சோபை இழந்துபோனாலும், இரண்டாம் இன்னிங்சில் இலங்கை அணியின் விக்கெட்டுக்களை வீழ்த்தி இருந்தார்கள்.
குல்லும், ரெஹ்மானும் விக்கெட்டுக்களை எடுப்பதை மறந்தவர்களாகத் தெரிகிறார்கள். ஆனால் அஜ்மல் எப்போதும் போலவே சிறப்பாக செய்கிறார்.

பாகிஸ்தானின் கஷ்டத்தின் மேல் கஷ்டமாக இலங்கைக்கு காலியை விட SSC வெற்றி சதவீதத்தை அதிகம் வழங்கும் ராசியான மைதானம் என்பதும் சேர்ந்துகொள்கிறது.
ஆனால் இலங்கை சமரவீர, மத்தியூஸ், டில்ஷானின் சக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் (பரனவிதானவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா தெரியவில்லை) ஆகியோரிடமிருந்தும் ஓட்டங்களை எதிர்பார்க்கிறது.

இரண்டாம் மூன்றாம் டெஸ்ட் போட்டிகள் எப்படி முடிவுகளைத் தரும் என்று சும்மா வாயைத் திறந்து இருக்கும் நல்லதைக் கெடுத்துக்கொள்ள விருப்பமில்லை....



எதிர்பார்த்து நடந்த ஐந்தாவது எது என்று யோசிக்கிறீர்களா?

யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்த JPL - Jaffna Premier League

தனியார் அமைப்பு ஒன்று நடத்திய ஒரு Twenty 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு எமது வானொலி நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கி விளம்பரப்படுத்தியது. வானொலியின் பணிப்பாளர் என்ற வகையில் (& கிரிக்கெட்டில் கொஞ்சம் அதிகம் ஆரவமுடையவரில் ஒருவன் என்ற வகையிலும்) மட்டுமே இறுதிப் போட்டிகளுக்காக அங்கே அழைக்கப்பட்டிருந்தேன்.

இலங்கையிலேயே ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் நடந்த முதலாவது இவ்வகையான கழக மட்ட T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி என்ற அடிப்படையில் தானாக ஒரு ஆர்வம் தொற்றிக்கொண்டது.
இலங்கை கிரிக்கெட் சபையினாலேயே SLPLஐ நடத்த முடியாமல் இருக்க யாழ்ப்பாணத்திலே இப்படி எட்டு கழகங்களை சேர்த்து நடத்துவதென்றால் எமக்குத் தானாக சந்தோசம் வராதா?

இறுதிப் போட்டி வரை என்ன நடக்கிறது, எவ்வளவு அருமையாக இதை ஒழுங்குபடுத்தி நடத்தி இருந்தார்கள் என்றெல்லாம் மூச்சே விடாதத பல விமர்சகப் பெருந்தகைகளும், கலாசாரக் காவலர்களும் இறுதிப் போட்டியின் பின் பாய்ந்து விழுந்து புராணம் பாடுவார்கள் என்பது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இறுதிப் போட்டி நாளன்றே எனக்குத் தெரிந்தது.

காரணங்கள் மூன்று...
நடனமாடி உற்சாகப்படுத்தும் மங்கையர்
அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த இராணுவ, காவற் துறை, கடற்படை அதிகாரிகள்
பிரதம விருந்தினர்களாக வந்திருந்த அரசியல்வாதிகள் இருவர் - பிரதியமைச்சர் திஸ்ஸ கரலியத்த, முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க

நடந்து முடிந்த போட்டிகள், சாதனை படைத்து வெளியுலகுக்கு தம்மை வெளிப்படுத்தியிருந்த யாழ் மண்ணின் இளம் வீரர்கள், வெற்றியீட்டிய கொக்குவில் மத்திய சனசமூக விளையாட்டுக் கழக அணி, வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள், இந்த வீரர்களுக்கு இனி எப்படியான வாய்ப்புக்கள் இருக்கும் இது பற்றியெல்லாம் எதுவும் இல்லை.

ஆனால் ஆடினார்கள், கலாசார சீரழிவு, இராணுவப் பிரசன்னம் இவை பற்றி மட்டும் செவி கிழிந்து இணையப் பக்கங்கள் தேய்ந்து போகும் அளவுக்கு எதிர்ப்புக்குரல்கள்.

அந்த நடன மங்கையர் ஆட்டத்தில் எனக்கும் இணக்கம் இல்லை தான்..
அது யாழ்ப்பாணம் என்று மட்டுமில்லை; எந்தவொரு கிரிக்கெட் மைதானத்திலும் கிரிக்கெட்டைப் பின் தள்ளி கவர்ச்சிக்கு முன்னிடம் கொடுக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் இடம் இருக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அன்றும் கொக்குவில் அணி அபார வெற்றி பெற்ற பிறகும் அவர்களைக் கொண்டாடாமல் ஆடிக் கொண்டிருந்த மங்கையரை வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தபோது கவலையாகவே இருந்தது.
அதற்காக ஒரு அருமையான, இதுவரை யாரும் முயலாத, யாழ் மண்ணின் வீரர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற ஒரு கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்தவர்களை ஒரேயடியாகத் தூற்றுவதா?

சர்வதேச கிரிக்கெட்டே இப்படியான பின்னர் T20 கிரிக்கெட் என்றாலே இப்படித்தான் என்ற நிலை எல்லா இடமும் வந்துவிட்டதை எங்கே நிறுத்துவது? இதற்கு இம்முறை எழுந்த எதிர்ப்புக்கள் அடுத்தமுறை ஏற்பாட்டாளர்களை யோசிக்க வைக்கக்கூடும். அதை மட்டும் தவறு என்று சுட்டிக்காட்டி நல்ல விடயங்களைப் பாராட்டி இருக்கலாமே இந்தப் புண்ணியவான்கள்.

அடுத்து, இப்படியான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, இராணுவம் மையம் கொண்டுள்ள எல்லாப் பகுதிகளிலுமே இராணுவத் துணை இல்லாமல், அவர்களுக்கு அழைப்பில்லாமல் ஒரு நிகழ்வு, ஒரு விழாவை நடத்தி முடிக்க முடியும் என்று யாராவது சொல்லமுடியுமா?

யுத்த அழிவுகள், மக்களின் வேதனைகள் பற்றிப் பேசிப் புலம்புகின்ற அதே கூட்டம் தான் தாங்கள் மகிழ்வாக இருக்கும் வேளைகளில் அதையெல்லாம் மறக்கும் கூட்டமும் கூட என்பது யாருக்கும் தெரியாத ஒரு விடயம் அல்ல.

இலங்கையில் தமிழ் விளையாட்டு வீரர்களுக்கு இடம் இல்லை; வாய்ப்பில்லை. கிரிக்கெட்டில் இனி முரளிக்குப் பிறகு தமிழன் யார் என்று நுணுக்கம் பார்த்து பிணக்கு செய்யும் இவர்கள் தான், இந்த வேளையில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் வேண்டுமா? அதுவும் சிங்களவன் அர்ஜுன ரணதுங்க வரவேண்டுமா என்று கேட்கிறார்கள்..

யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் போன்ற இடங்களிலிருந்தும் கிரிக்கெட் வீரர்களும் (கல்வி, அடிப்படி வசதிகளை விட்டுவிட்டீர்கள் என்று மீண்டும் முட்டையில் உரோமம் தேடிவராதீர்கள்) வரவேண்டும் என்று ஓயாமல் நாம் சிலர் எம்மால் முடிந்த சிறுசிறு விஷயங்கள் செய்வதை எல்லாம் இந்த சிலர் அறிவார்களோ தெரியாது.

மாற்றுக் கருத்துக்கள், நல்ல விடயங்களை மனம் திறந்து சொல்கிறார் என்று மனமாரப் பாராட்டிய ஒரு தம்பியும் கோவணம் தூக்குகிறார்கள் என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
உண்மையில் எரிச்சலாக இருக்கிறது.

நடந்த எவ்வளவோ நல்ல, எதிர்கால இளம் தலைமுறையை சர்வதேச கிரிக்கெட் பக்கம் ஆர்வம் கொள்ளவைக்கும் நல்ல விடயங்கள் நடைபெற்றிருக்க, அதையெல்லாம் விட்டுவிட்டு பிழை மட்டுமே பிடிக்கும் கூட்டம் ஒன்றை நினைத்தால் இதனால் தான் தமிழன் எங்கே போனாலும் இப்படி என்று சலிப்பும் வருகிறது.

வெற்றிகரமான ஒரு கிரிக்கெட் சுற்றுப் போட்டியை கழகங்கள் மத்தியில் நடத்திக் காட்ட முன் வந்த ஏற்பாட்டாளர்களுக்கு (Ur Friend Foundation - JPL) வாழ்த்துக்கள்..
இனி அடுத்தவருடம், கழகங்களின் சில அடிப்படைத் தேவைகளையும் பார்த்து சிறு குறைகளையும் நீக்கி மேலும் சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள்.

JPL பற்றி என்னை விட விரிவாக அலசியுள்ள இரு இணைப்புக்களில் மேலும் விபரங்களை அறிந்திடுங்கள்.


JPL ஒரு பார்வை...




வாழ்த்துக்கள் ஜே.பி.எல்; வாழ்த்துக்கள் பல, வேண்டுகோள்கள் சில





June 21, 2012

இனித் தான் ஆட்டமே ஆரம்பம்... UEFA Euro 2012


இன்று நள்ளிரவு முதல் ஐரோப்பிய கால்பந்தாட்டத் தொடரின் கால் இறுதிப் போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன.

கால் இறுதிப் போட்டிகளுக்கு எந்த அணிகள் தெரிவாக வேண்டும் என்று நான் விரும்பி இருந்தேனோ, அவற்றில் நெதர்லாந்து, குரோஷியா, உக்ரெய்ன், ஸ்வீடன் ஆகிய அணிகள் அவுட்.
ஆனால் இவற்றில் நான்குமே தெரிவாகும் என்று நான் உறுதியாகத் தெரிவித்திருக்கவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவே வேண்டும்.
(விக்கிரமாதித்தன் இங்கே விளையாடவில்லை)

ஆனால் சில அணிகள் பலமான அணிகள்; நிச்சயம் காலிறுதிக்குத் தெரிவாகும் என்று நம்பி இருந்தேன்.. நான் மட்டுமா உலகமே நம்பி இருந்தது.
அந்த அணிகளில் எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரே அணி ரஷ்யா.
ரஷ்யா தனது கடைசிக் குழுநிலைப் போட்டியில் கிரீசிடம் தோற்றதால் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
மற்றும்படி எல்லாம் கணித்தது போலவே நடந்திருப்பது.



கிரிக்கெட்டில் என்னோடு விளையாடுவது போல விக்கிரமாதித்தன் கால் பந்தில் விளையாட்டுக் காட்டி மூக்குடைப்பது மிக மிக அரிது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சந்தோசம்.

எனது முன்னைய ஐரோப்பிய கால்பந்து இடுகையை மீண்டும் ஒவ்வொரு பிரிவாக வாசித்தீர்களாயின் எனது கணிப்புக்களில் பிரிவு பற்றி சொல்லியுள்ள விடயங்கள் தவிர ஏனைய அனைத்தும் அச்சுப் பிசகாமல் சரியாக வந்திருப்பதை உணர்வீர்கள்.

முதல் சுற்று ஆட்டங்கள் பற்றிய விரிவான ஒரு அலசலை தமிழ் மிரரில் எழுதியுள்ளேன்.
அதையும் முழுமையாக வாசித்து விடுங்கள்..


ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து; கால் இறுதிகளுக்கான அணிகள் எட்டும் தெரிவாகின



உங்கள் கருத்துக்களை அங்கேயே பதியலாம்.. அல்லது இங்கேயே கூடப் பதியலாம் :)

முதல் சுற்று ஆட்டங்களில் எனக்குப் பிடித்த அணியான ஸ்பெய்ன் நான் முன்னைய இடுகையில் சொன்னதைப் போலவே மந்தமாக ஆரம்பித்து பிரகாசமாக அடுத்த சுற்றுக்கு செல்கிறார்கள்..
பிரான்சை அடுத்து சந்திப்பது தான் காலிறுதியின் முக்கியமான போட்டியாக அமையப் போகிறது.

டொரெஸ் மீண்டும் கோல்களைக் குவிக்க ஆரம்பித்திருப்பதும், ஏனைய வீரர்களும் உறுதியாக விளையாடுவதும், கோல் காப்பாளரும் தலைவருமான கசியாஸ் இதுவரை யாராலும் சோதிக்கப்படாமையும் அரையிறுதிக்கான இடம் உறுதி என்பதைக் காட்டுகிறது.

ஸ்பெய்னுக்கு சவாலாக இருக்கப் போகிற ஒரே அணி ஜெர்மனி.
ஆனால் பந்தயக்காரர்கள் இப்போது ஸ்பெய்னை விட ஜெர்மனியையே கூடுதல் வாய்ப்புள்ள அணியாகக் கருதுகிறார்கள்.

கோமேஸ் முன்னணி நட்சத்திரமாகத் தெரிந்தாலும் ஏனைய பின்புலத்தில் இயங்கும் அத்தனை வீரர்களுமே சிறப்பாக விளையாடுகிறார்கள்.
கிரீஸ் அணியின் கிடுக்கிப்பிடித் தனமான தடுப்பு ஆட்டத்தை நிதானமாக முறியடித்தால் அரையிறுதி உறுதி.

இன்னொரு கால் இறுதியும் ஒரு கால் பந்து யுத்தம் போல எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து எதிர் இத்தாலி.

இத்தாலி இங்கிலாந்தை விடப் பலமானது என்று தொடர் ஆரம்பிக்க முதல் கருதிய பலருக்கும், இங்கிலாந்தின் இறுதி இரண்டு வெற்றிகளும் இலேசுப்பட்ட அணியல்ல இது என்பதைக் காட்டி இருக்கும்.

அடுத்து இன்று நள்ளிரவு இடம்பெறவுள்ள முதலாவது காலிறுதிப் போட்டி.
செக் குடியரசு எதிர் போர்த்துக்கல்.
செக் அணியின் முதலாவது தோல்விக்கு அடுத்த நாள் நான் எழுதிய இடுகையின் வசனங்கள்....

செக் அணிக்கும் போட்டிகளை நடத்துகின்ற போலந்து அணிக்கும் இடையில் இரண்டாம் இடத்துக்கான இழுபறியில் சொந்த மைதானம் + ரசிகர்களின் ஆதரவு என்று போலந்துக்கு சாதகமான விஷயங்கள் இருந்தாலும் செக் அணி முதல் இரு போட்டிகளில் விட்ட தவறுகளை கடைசிப் போட்டியில் சரிசெய்யும் என்று நம்புகிறேன்.


ஆனால் இன்று போர்த்துக்கலும் எனக்குப் பிடித்த அணி. தனி நபராகப் பிடிக்காவிட்டாலும் போர்த்துக்கலுக்காக விளையாடும்போது பிடித்துப் போகிற ரொனால்டோ விமர்சனங்களைஎல்லாம் தாண்டி கோல் குவிப்பாளராக மாறியுள்ளார்.

செக்கின் விறுவிறுப்பான பதிலடிகளை எதிர்பார்க்கிறேன்.


கால் பந்து ரசிகர்களுக்காக ஒரு மினிக் கருத்துக் கணிப்பையும் Facebookஇலே நடத்துகிறேன்.. 
எது வெல்லும் என்று நீங்கள் சொல்லுங்கள்.. 



Who is going to lift the 2012 UEFA Euro cup?




இதயத் துடிப்பை எகிற வைக்கும் இறுக்கமான போட்டிகள், மேலதிக நேரங்கள், பெனால்டி உதைகள் என்று இனித் தான் உணர்ச்சியான ஐரோப்பியக் கால்பந்துத் திருவிழா... ரசிப்போம் வாருங்கள்.. 




June 19, 2012

அசத்திய இலங்கை.. அடிவாங்கிய பாகிஸ்தான்.. ஐயோ பாவம் மிஸ்பா

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான Twenty 20 தொடர் போலவே ஒருநாள் சர்வதேசத் தொடரும் சமநிலையிலேயே முடிவடைந்துவிடுமோ என்றிருந்த ஒரு நிலையை மாற்றி இலங்கையை அஞ்சேலோ மத்தியூஸ் கரைசேர்த்த நேற்றிரவு இறுதிப் போட்டியுடன் இலங்கை தொடரை வென்றெடுத்துள்ளது.



அணியாக விளையாடி இவ்விரு அணிகளும் மழையினால் குழம்பிய ஒரு போட்டிதவிர ஏனைய நான்கு போட்டிகளையும் வென்றதை விட, ஒரு சில தனிநபர் சிறப்பாட்டங்களால் வெற்றிகொள்ளப்பட்டவை என்பதே சிறப்பம்சமாகும்.

அதிலும் திசர பெரேரா, அசார் அலி, அஞ்சேலோ மத்தியூஸ், சங்கக்கார, மிஸ்பா உல் ஹக் என்று சிலர் நான்கு போட்டிகளிலும் தனித்துத் தெரிந்திருந்தார்கள்.

ஒவ்வொரு போட்டியிலும் அணிகளின் சமநிலையும், அந்தந்த ஆடுகள நிலைகளை சரிவர உணர்ந்து விளையாடிய வீரர்களின் நிலையுமே போட்டியின் முடிவுகளை வசப்படுத்த உதவியிருந்தது எனலாம்.
இலங்கையின் 3-1 என்ற வெற்றியானது நீண்டகாலம் இலங்கை பாகிஸ்தானிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருந்த அடிகளை சரிசெய்யவும், இலங்கையின் மைதானத்தில் பாகிஸ்தான் வைத்திருந்த ஆதிக்கத்தை இல்லாமல் செய்யவும் உதவியிருக்கிறது.
இப்பொழுது இலங்கையில் வைத்து இலங்கை 16 போட்டிகளையும் பாகிஸ்தான் 14 போட்டிகளையும் வென்றுள்ளன. 

இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் வென்றவுடன் நான் இட்ட இடுகையைப் பொய்யாக்கி இலங்கை வீரர்கள் தொடரில் வெற்றி கண்டிருப்பது இரண்டு விடயங்களில் ஒன்றை உறுதிப்படுத்துகின்றது. 
இலங்கை வீரர்கள் என் பதிவைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள்.. அல்லது விக்கிரமாதித்தன் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நல்ல formஇல் இருக்கிறார்.
(ஹீ ஹீ)

பாகிஸ்தான் அணியோடு ஒப்பிடுகையில் வேகப்பந்துவீச்சிலோ, சுழல் பந்துவீச்சிலோ ஒப்பிட முடியாதளவு கொஞ்சம் பின்தங்கியே இருக்கின்ற இலங்கை அணிக்கு எப்படி இந்த வெற்றி சாத்தியமானது என்று யாராவது விற்பன்னர்கள் கேட்டால், இலகுவான பதில். களத்துக்கு ஏற்ற வீரர்கள் தங்கள் பலம் அறிந்து எதிரணியைப் பதம் பார்த்தார்கள் என்பது தான். 

குலசேகர, மாலிங்க இருவரும் எல்லாப் போட்டிகளிலுமே சிறப்பாக எல்லாக் கட்டங்களிலும் பந்துவீசி இருந்தார்கள்.
இலங்கை தோற்ற ஒரே போட்டியிலும் கூட பந்துவீச்சாளர்களால் இலங்கை அணி தோற்றிருக்கவில்லை.
மூன்றாம் நான்காம் பந்துவீச்சாளர்களாக மத்தியூசும் திசர பெரேராவும் தங்கள் பங்கை எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்திருந்தார்கள். 
ஆனால் இலங்கை வழமையாக சொந்த மண்ணில் சிறப்பாகப் பரிணமிக்க உதவுகின்ற சுழல் பந்துவீச்சாளர்கள் தான் இம்முறை இலங்கைக்குப் பெரிதாக உதவவும் இல்லை; வறட்சியாகவும் தெரிந்தது என்பது தான் புதுமை & கொடுமை.

ஆனால் ஹேரத்துக்கு அவரது சிகிச்சைக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்காகப் பொத்திப் பாதுகாக்க ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவு.
நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட சஜீவா வீரக்கோனுக்கு அவரது 34 வயதில் அறிமுகம் கொடுக்கப்பட்டது. அவரது முதல் போட்டி துரதிர்ஷ்டவசமாகக் கழுவப்பட்டது. இரண்டாவது போட்டியில் வீரக்கோன் சோபிக்கவில்லை. இனி வாய்ப்பு கிடைக்காது பாவம். 
இறுதிப் போட்டியில் மட்டும் விளையாடிய ஜீவன் மென்டிஸ் கலக்கி இருந்தார்.
ஆறாவது பந்துவீச்சாளர் டில்ஷானுக்கு தொடர் முழுவதும் ஐந்தே ஐந்து ஓவர்கள் மாத்திரமே பந்துவீசத் தேவைப்பட்டது.
அந்தளவுக்கு இலங்கையின் பந்துவீச்சுப் பலமாகவும், திடமாகவும் தொடர்ச்சியாக இருந்தது.

மாலிங்க, குலசேகர தலா ஏழு விக்கெட்டுக்களை வீழ்த்த, இந்தத் தொடரின் இலங்கையின் ஹீரோ திசர பெரேரா ஒரு ஹட் ட்ரிக் உள்ளடங்கலாக வீழ்த்திய விக்கெட்டுக்கள் தான் தொடரின் துரும்புச்சீட்டாக அமைந்தது எனலாம்.

இது அவரது கடும் உழைப்புக்கும் சிதறாத குறிக்குமான வெற்றி என்று கருதுகிறேன்.
இவரது துடிப்பான, அர்ப்பணிப்பான களத்தடுப்பு இன்னொரு மேலதிக பலம்.. கலக்குகிறார் திசர... 
இலங்கையின் பயிற்றுவிப்பாளர் கிரகாம் போர்ட் இவரைத் தென் ஆபிரிக்காவின் முன்னாள் சகலதுறைவீரர் லான்ஸ் க்ளூஸ்னருடன் ஒப்பிட்டுள்ளார்.
போர்ட் தென் ஆபிரிக்காவின் பயிற்றுவிப்பாளராக இருந்தபோதே க்ளூஸ்னர் வளர்ச்சிபெற்று புகழடைய ஆரம்பித்திருந்தார்.
போர்ட் வாக்கு பொன் வாக்காக அமையட்டும்.

திசர, மத்தியூஸ் இருவருமே பூரண உடற் தகுதியோடு முதல் டெஸ்ட் போட்டிக்கான குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளமை இலங்கையைப் பொறுத்தவரை ஒரு உற்சாகமான எதிர்பார்ப்பைத் தருகிறது.
மிதவேகப் பந்துவீசும் ஒரு சகலதுறை வீரரைத் தேடித் தவித்துக்கொண்டிருந்த இலங்கை அணிக்கு இப்போது இரு இளம் வீரர்களா? 
கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?

ஆனால் பாகிஸ்தான்... பழைய குருடி கதவைத் திறடி கதை தான்...
அணி பலமானது.. அடுக்கடுக்காக திறமையான வீரர்கள்.. ஆனாலும் வெற்றி பெற என்று வரும்போது ஏதாவது ஒரு பக்கம் சறுக்கி விடுகிறது.
இம்முறை எதிர்பார்த்தபடி யாருமே பந்துவீச்சில் ஜொலிக்கவில்லை.
ஓரளவுக்கு செய்தவர் சொஹய்ல் தன்வீர் மட்டுமே..
அதிலும் அணித்தெரிவும் சேர்ந்து ஆச்சரியப்படுத்தியது.

சில நேரங்களில் ஐந்து பந்துவீச்சாளர்கள்.. இதனால் ஒரு துடுப்பாட்ட வீரர் குறைவு; சில நேரம் ஒரு மேலதிகத் துடுப்பாட்ட வீரர்.. இதனால் ஒரு பந்துவீச்சாளர் குறைவு.. அதிலும் கடைசிப் போட்டியில், தொடர்ந்து சொதப்பிய மூத்த வீரர் யூனுஸ் கானை வெளியே அனுப்பி முஹம்மத் சாமியை அணிக்குள் ழைத்தார்கள். சாமி வரம் கொடுத்து இலங்கைக்கு ஓட்டங்களை அள்ளி வழங்கினார்.
ஆனால் பாகிஸ்தான் இன்னொருவரையும் சேர்த்து வெளியே அனுப்பி இலங்கைக்கு மேலதிக வாய்ப்பை வழங்கியது.
ஆமாம்.. உலகின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் சயிட் அஜ்மல். எப்படிப்பட்ட முட்டாள்தனம்..

பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தைத் தனியாகத் தாங்கியவர் ஒப்பீட்டளவில் புதியவரான அசார் அலி.

இரண்டு அரைச் சதங்களோடு 217 ஓட்டங்களைக் குவித்தார். அவரது இரண்டாம் மூன்றாம் அரை சதங்களாக இவை அமைந்தன. 
இரண்டு சதங்கள் பெறும் வாய்ப்பைக் கை நழுவவிட்டார். ஆனால் இவர் சிறப்பாக ஆடிப் பெரிய ஓட்டங்கள் பெறும்போதெல்லாம் பாகிஸ்தான் தோற்பதைப் பார்க்கையில் பாகிஸ்தானின் அசங்க குருசிங்கவாக மாறுகிறாரோ அசார் அலி என்று தோன்றுகின்றது. 
பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு நல்ல வரவு. ஆனால் தொடர்ந்து நீடிக்கட்டும் பார்க்கலாம்.

அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி இருந்தும் நின்று வெற்றியாக அவற்றை மாற்றிக்கொள்ள முடியவில்லை. 
தலைவராக அவரால் களத்தடுப்பிலும் பந்துவீச்சு மாற்றங்களிலும் கடந்த தொடர்களில் பார்த்த உற்சாகத்தோடு மிஸ்பாவைப் பார்க்கவும் முடியவில்லை.
அதிலும் யாராவது பிடிகள் தவற விடும்போதும், களத்தடுப்பில் சறுக்கும்போதும் செய்வதறியாமல் தவிப்பார் பாருங்கள். பரிதாபம்.
தனியாக விடப்பட்டவர் போல ஒரு விரக்தி நிலையில் நிற்கிறார்; நடக்கிறார்... 

இப்போது பந்துவீச அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்ற முடியாதவாறு தடை செய்யவும் பட்டுவிட்டார். 
பாவம்.... மிஸ்பாவின் இறுதி சர்வதேசத் தொடராக இது அமையலாம்.
முதலாவது டெஸ்ட் போட்டியில் யார் பாகிஸ்தானின் தலைவர் என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வியாக இறுகப் போகிறது.
யூனுஸ் கானின் அனுபவம் பலமாக இருந்தாலும் அவரது துடுப்பாட்ட form ம் பலவீனம்.
அப்படிப் பார்த்தால் இளமைத் துடிப்பான ஹபீசுக்கு வாய்ப்பை வழங்கிப்பார்க்கலாம். 
தொடர்ச்சியாக பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு 16 போட்டிகளில் தலைமை தாங்கிய இம்ரான் கான், வக்கார் யூனுஸ் ஆகியோரின் சாதனையை சமப்படுத்த இருந்த மிஸ்பாவுக்கு பாகிஸ்தான் தலைவர்களின் வழமையான துரதிர்ஷ்டம் பலியிட்டுவிட்டது. 
அதிக டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை தொடர்ந்து வழிநடத்திய பெருமை அவர்களின் முதல் டெஸ்ட் தலைவரான அப்துல் ஹபீஸ் கர்தாருக்கு உரியதாக உள்ளது. 

உமர் அக்மலும், இம்ரான் பார்ஹத்தும் ஒவ்வொரு ஆறுதல் அரைச் சதங்களை இறுதிப் போட்டியில் பெற்றுக்கொண்டார்கள்.

தொடரில் பெறப்பட்ட ஒரே சதம் டில்ஷான் பெற்றது. 119*பள்ளேகலையில்...
சங்கக்காரவும் அசார் அலி போலவே 90களில் ஆட்டமிழந்தார்.
சங்காவும் மஹேலவும் தொடரில் சராசரியாக ஆடி டெஸ்ட் தொடருக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

மத்தியூஸ் இறுதிப் போட்டியில் மீண்டும் தன்னை ஒரு finisherஆக நிரூபித்துக் காட்டியுள்ளார். 
ஒரு பெவான், ஒரு தோனி போல உருவாகி வருகிறார் என்று சொல்ல இது too early என நினைக்கிறேன்.. ஆனாலும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
இந்த இளவயதில் இப்போதைக்கு எத்தனை போட்டிகளை இவ்வாறு கீழ்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களோடு சேர்ந்து மத்தியூஸ் வென்று கொடுத்துள்ளார்...
வாழ்த்துக்கள் மத்தியூஸ். இதை டெஸ்ட் போட்டிகளிலும் தொடருங்கள்.


திரிமன்னே, சந்திமால் ஒவ்வொரு போட்டிகளில் தம்மிடம் சரக்கு இருக்கிறது என்று காட்டியிருந்தார்கள்.
ஆனால் தரங்க ஏமாற்றமே.. இலங்கைக்கு டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிக்கு மீண்டும் வெற்றிடம் நிரப்பப்படவேண்டும்.. சீக்கிரமே.

இவ்விரு அணிகளுக்குமிடையில் மிகப் பெரிய வித்தியாசமாக அமைந்து தொடர் வெற்றியையும் தீர்மானித்த ஒரு மிக முக்கிய விடயம் 'களத்தடுப்பு'.
இலங்கை எவரெஸ்ட் சிகரம் என்றால் பாகிஸ்தான் எங்கேயோ பள்ளத்தாக்கில் விழுந்துகிடக்கிறது.
Julien Fountain என்ற விற்பன்னரைக் கொண்டுவந்தும் ம்ஹூம்.. எதுவும் முன்னேறியதாக இல்லை.
தொட்டில் பழக்கமும், இயல்பான சோம்பலும் தொடர்கிறது.

ஒரு நாள் தொடர் வெற்றி இலங்கைக்கு நிச்சயம் இமாலய தைரியத்தையும் இதையே டெஸ்ட்டிலும் செய்து காட்டலாம் என்ற நம்பிக்கையையும் கொடுக்கும்.
ஆனாலும் பாகிஸ்தானிடம் உள்ள பந்துவீச்சுப் பலமும், சமநிலையும் இலங்கையிடம் இல்லை என்பது நிதர்சனம்.
அதேவளை இலங்கையின் துடுப்பாட்ட பலம் பாகிஸ்தானிடம் இல்லை தான்.
எனவே டெஸ்ட் தொடரானது 
இலங்கையின் துடுப்பாட்டம் vs பாகிஸ்தானின் பந்துவீச்சு

முக்கிய விடயம்...
நேற்றைய வெற்றிக்குப் பின் மைதானத்துக்குள் சந்தோசத்தைக் கொண்டாட நுழைந்த இலங்கை ரசிகர்கள் கொஞ்சம் கவலை தருகிறார்கள். உலக T20 நெருங்கி வரும் வேளையில் இலங்கையின் தயார்ப்படுத்தல்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வீரர்களின் பாதுகாப்பு குறித்து சீரியசான கேள்விகளை இது எழுப்பப்போகிறது.
நேற்றைய வெற்றி உண்மையில் அனைவரையும் மெய்மறக்கச் செய்ய வைத்த வெற்றி & கொண்டாடப்படவேண்டியது தான்.
ஆனால் என்றைக்கும் இல்லாதவாறு மைதானத்துக்குள் ரசிகர்கள் ஓடுவதென்பது ... 
அதுவும் இலங்கையில்...
ம்ம்ம்ம் 

UEFA EURO 2012 கால் இறுதிக்கான அணிகளின் தெரிவு பற்றி நாளைக்குப் பார்க்கலாம் நண்பர்ஸ்...



June 13, 2012

கணிப்புக்களும் விருப்பங்களும் - ஒரு விரிவான பதிவு - UEFA Euro 2012



ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் முதல் வாரம்..

ஐரோப்பியக் கிண்ண ஆரம்பத்தில் எனது இடுகையொன்றில் மேலோட்டமாக சில விஷயங்களை சொல்லி இருந்த நான், தமிழ் மிர்ரரில் விரிவாக ஒரு கட்டுரை வரைந்திருந்தேன். வாசிக்காதவர்கள் இந்த சுட்டி வழியாக செல்லுங்கள்.


A பிரிவு தவிர ஏனைய எல்லாப் பிரிவுகளிலும் உள்ள அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளையே விளையாடியுள்ளன.

இந்த கால்பந்துத் தொடர் ஆரம்பிக்க முதல் UEFA Euro 2012 கிண்ணத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணிகள் என்ற வரிசை
நடப்புச் சாம்பியன் ஸ்பெய்ன்
ஜெர்மனி
பிரான்ஸ்
இங்கிலாந்து
இத்தாலி
ரஷ்யா
ஒல்லாந்து 
போர்த்துக்கல்


ஆனால் இந்த வரிசையில் உள்ள அணிகளில் தத்தம் முதலாவது போட்டியில் வெற்றி எட்டிய அணிகள், ஜெர்மனி, ரஷ்யா ஆகியன மட்டுமே.. 

ஏனைய அணிகளில் ஒல்லாந்து டென்மார்க் அணிக்கெதிராக அதிர்ச்சித் தோல்வியைக் கண்டது. மற்றைய அணிகள் வெற்றி தோல்வியற்ற முடிவுகளையே கண்டன. 
ஐரோப்பாவைப் பொறுத்தவரை எல்லா அணிகளுமே சராசரியாகப் பலமான அணிகள் என்ற அடிப்படையில் இறுக்கமான போட்டிகள் சாதாரணமாக எதிர்பார்க்கப்படுவதே.
அத்துடன் எவ்வளவு தான் பலம் வாய்ந்த அணியாக ஸ்பெய்ன் இருந்தாலும் பொதுவாக எந்தவொரு தொடரிலும் மந்தமாகவே ஆரம்பிப்பது வழக்கம்.
நான் கூட ஸ்பெய்ன் அணி பற்றி ட்விட்டரில் Slow starters but strong finishers :) #spain 

என்று குறிப்பிட்டு இருந்தேன்.

(நம்பிக்கை தான்யா வாழ்க்கை)



உலகக் கால்பந்து அணிகளில் எனக்கு மிகப் பிடித்த அணி ஆர்ஜென்டீனா. (இது உங்களில் பலருக்கும் 2010 உலகக் கிண்ண நேரமே தெரிந்திருக்குமே) 
இதற்கு அடுத்தபடியாக ஆசிய அணிகள் சிலவற்றைப் பிடிக்கும்.. பாவம் முன்னேறக் காத்திருக்கும் அணிகள் என்ற பச்சாதாபம். 
அதேபோல எந்த விளையாட்டிலும் நான் விரும்புகின்ற ஆஸ்திரேலியாவை கால்பந்திலும் பிடிக்கிறது.

ஐரோப்பாவில் இருக்கும் அணிகளில் பிரதானமாக ஸ்பெய்ன், போர்த்துக்கல், ஒல்லாந்து போன்ற அணிகளைப் பிடிக்கும்.. ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக ஸ்வீடன், அயர்லாந்து, நோர்வே, க்ரோஷியா, செக், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, செவ்ஷேன்கே என்ற ஒரு தனி நபருக்காக உக்ரெய்ன் என்று சில அணிகளின் மீதும் அவை எனது விருப்புக்குரிய அணிகளுக்கெதிராக விளையாடாத நேரத்தில் விருப்பம் இருக்கும்.. 



இந்த இடுகை இமுறை ஐரோப்பியக் கிண்ணத்தில் எனது விருப்ப அணிகள் மீதான எதிர்பார்ப்பு & கால் இறுதிப் போட்டிகளுக்கு செல்லக் கூடியதான எல்லா அணிகளின் வாய்ப்புக்கள் பற்றி ஆராய்கிறது.

(யாரது அங்கே 'விக்கிரமாத்தித்தாய நமஹா' என்று மந்திரம் சொல்வது?)

இந்த இடுகை மூலமாக என் விக்கிரமாதித்தன் பட்டத்தைக் கழற்றி வைத்துவிடும் மறைமுக நப்பாசையும் இருக்கிறது. 
ஆனால் கடந்த 2010 கால்பந்து உலகக் கிண்ணத்தின்போது எனது எதிர்பார்ப்புக்கள்/ ஊகங்கள் வீதம் சரியாக இருந்தமையை நான் இங்கே பெருமையுடன் சொல்லத் தான் வேண்டும். 




பிரிவு A

இப்போதைக்கு ரஷ்ய அணிக்கு கால் இறுதி செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
செல்லும் என்று நானும் நம்புகிறேன். இதன் இறுதிப் போட்டி கிரீஸ் அணிக்கு எதிராக என்பதால் உறுதியாகிறது.
செக் அணிக்கும் போட்டிகளை நடத்துகின்ற போலந்து அணிக்கும் இடையில் இரண்டாம் இடத்துக்கான இழுபறியில் சொந்த மைதானம் + ரசிகர்களின் ஆதரவு என்று போலந்துக்கு சாதகமான விஷயங்கள் இருந்தாலும் செக் அணி முதல் இரு போட்டிகளில் விட்ட தவறுகளை கடைசிப் போட்டியில் சரிசெய்யும் என்று நம்புகிறேன்.

 சிவப்புக் கலர் செக் அணி 

செக்கோஸ்லாவேக்கியா உடைந்ப்து செக் அணி உருவான போது 1996ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தின்போது இந்த அணியின் வேகமும் விறுவிறுப்புமான ஆட்டம் பிடித்துக்கொண்டது. சிறு அணி ஒன்று என்பதால் ஆதரவு வழங்கி இருந்தேன்.
அதே போல அதே ஐரோப்பியக் கிண்ணத்தில் முதல் தடவை களமிறங்கிய யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த க்ரோஷியாவையும் பிடித்துப்போனது.
(பிரிந்து போய் தனியா நின்று போராடும் அணிகளை யாருக்குத் தான் பிடிக்காது?)

நேற்று கிரீஸ் அணியை வென்றாலும் முதல் ஆறு நிமிடங்களில் பெற்ற கோல்கள் தவிர தொடர்ந்து வந்த நிமிடங்களில் க்ரீசிடம் திணறியது.
மிலன் பரோஸ்,ரொசிக்கி, பிலர், பெட்டர் செக் போன்ற பிரபல வீரர்களிடம் இன்னும் எதிர்பார்க்கலாம். பார்க்கலாம். 


பிரிவு B

இது தான் இம்முறை ஐரோப்பியக் கிண்ணத்தின் சிக்கலான பிரிவு. Group of Death என்று சொல்லலாம்.. 
கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் என்று கருதப்படும் மூன்று அணிகள் உள்ள பயங்கரப் பிரிவு. டென்மார்க் தான் இந்த நான்கு அணிகளில் பலவீனமான அணி என்று கருதினாலும் முதலாவது போட்டியிலேயே ஒல்லாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது டென்மார்க்.
இந்தப் பிரிவில் கடந்த ஐரோப்பியக் கிண்ணத்தில் இரண்டாம் இடம் பெற்ற போர்த்துக்கல் மட்டுமே இதுவரை ஐரோப்பியக் கிண்ணம் வெல்லாத அணி. (இம்முறை போர்த்துக்கல் வென்றால் மகிழ்வடையும் முதலாவது நபராக நான் இருப்பேன்)
ஜெர்மனி - போர்த்துக்கல் மோதல் ஒரு காட்சி 

அடுத்த சுற்றுக்கு இப்பிரிவில் இருந்து போர்த்துக்கலும் ,ஒல்லாந்தும் செல்லவேண்டும் என்பதே என் விருப்பம்.
ஆனாலும் ஜெர்மனியைத் தாண்டி இவ்விரு அணிகளும் செல்ல முடியும் என்பது சாத்தியமில்லைத் தான்.
அதிலும் போர்த்துக்கல் - ஒல்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும் இருக்கிறது.
ஒல்லாந்து இனி ஜெர்மனியையும் சந்திக்கவேண்டி இருப்பதால் போர்த்துக்கலுக்கே இரண்டாவது அணியாகத் தெரிவாகும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். 

ரொனால்டோ, நானி ஆகியோர் இன்றிரவு டென்மார்க்குக்கு எதிராகத் தமது வழமையான formக்குத் திரும்புவார்கள் என நம்பி இருக்கிறேன்.

நெதர்லாந்து இன்றிரவு ஜெர்மனியை சந்திக்கும் போட்டி மிக விறுவிறுப்பானதாக அமையும் என்று நம்புகிறேன். உலகின் மிகப் பிரபல நட்சத்திரங்கள் இரு தரப்பிலும் விளையாடினாலும், அணியாக விளையாடும் போது ஜெர்மனியின் பலம் உயர்வு. 
ஜெர்மனியின் கோமேஸ், ஒசில், பொடோல்ஸ்கி, போட்டேங்,முல்லேர்,லாம் ஆகிய ஆறு நட்சத்திரங்களும் கழக மட்டத்தில் விளையாடிய தமது formஐ Euro 2012க்கும் கொண்டு வந்துள்ளார்கள் என்பது சிறப்பு. 

ஒல்லாந்து அணியின் செம்மஞ்சள் சட்டை வீரர்களிலும் இப்படியே பல நட்சத்திரங்களை அடுக்கலாம்..
ஆர்ஜென் ரொப்பேன், வெஸ்லி ஸ்னைடர், வான் பேர்சி, வன் பொம்மேல்,ஹைட்டிங்கா இப்படி... 

ம்ம்ம்ம் ஒல்லாந்து வெல்லும் என்று சொல்லவில்லை; வென்றால் நல்லா இருக்குமே என்கிறேன்.


பிரிவு C

மேலோட்டாமாக பார்த்தால் நடப்பு ஐரோப்பிய, உலக சாம்பியனான ஸ்பெய்னும், பாரம்பரிய கால்பந்து பயில்வான் இத்தாலியும் இலகுவாகக் காலிறுதிக்குள் நுழைவார்கள் என்று தெரிந்தாலும், அயர்லாந்தும் க்ரோஷியாவும் இந்த இரு அணிகளையும் கவிழ்க்கும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை மறுக்க முடியாது.
நடப்பு சாம்பியன்கள் ஸ்பெய்ன் 

எனக்கு என்றால் இப்பிரிவிலிருந்து ஸ்பெய்னும், க்ரோஷியாவும் தெரிவானால் திருப்தி.
அதற்கேற்றது போல க்ரோஷியா முதலாவது போட்டியில் அயர்லாந்து அணியை அசரடித்துள்ளது.

ஆனால் ஸ்பெய்னுக்கு ஈடு கொடுத்து இத்தாலி விளையாடிஇருந்ததைப் பார்த்தால் இத்தாலி நிறைய வாய்ப்புள்ள அணியாகவே தெரிகிறது.  
ஸ்பெய்ன், இத்தாலி இவ்விரு அணிகளின் கோல் காப்பாளர்களுமேமே இந்த அணிகளின் அத்திவாரங்கள்.
அனுபவம் வாய்ந்த கசியாஸ் மற்றும் பபன்(நம்ம குஞ்சு பவன் இல்லை.. இது Buffon)

ஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி அணியின் பெரும்பான்மையான வீரர்களான பாப்ரேகாஸ், டொரெஸ், சவி ஹெர்னாண்டஸ், இனியெஸ்டா , பிக்கே, சில்வா போன்றோர் இருந்தாலும், ஓய்வுபெற்ற தலைவர் புயோலும், காயமுற்றுள்ள டேவிட் வியாவும் இல்லாமை ஸ்பெய்னை முதலாவது போட்டியில் மிக சிரமப்படுத்தியிருந்தது. 
நாளை அயர்லாந்தை எதிர்கொள்ளும்போது எப்படி விளையாடுகிறது என ஆர்வத்துடன் காத்துள்ளேன்.

இத்தாலி கிரிக்கெட்டில் பாகிஸ்தான் போல.. அடிக்கடி ஏற்படும் சூதாட்ட சர்ச்சைகள், வீரர்களை அடிக்கடி மாற்றுவது இப்படி பல.. ஆனாலும் முன்னணி அணி தான்.. முக்கிய அணி தான்..
இந்த அணியில் பிர்லோ, டி ரோச்சி ஆகிய முக்கிய வீரர்கள் கவனிக்கக் கூடியவர்கள்.

குரோஷியா அணியைப் பொறுத்தவரை, ஒலிக், க்ரஞ்ச்கர்,எடுவார்டோ, ஸ்ர்னா, மொட்றிக் ஆகிய வீரர்கள் அசத்தக் கூடியவர்கள். 
குரோஷியா இத்தாலியை நாளை என்னுடைய ராசியான நாளில் வீழ்த்தும் என்று நம்பி இருக்கிறேன். (நல்ல மூக்கு பிளாஸ்டிக் சேர்ஜரி எங்கே செய்யலாம் நண்பர்ஸ்?)



பிரிவு D

பிரான்ஸ் - இங்கிலாந்து என்ற பழைய எதிரிகள் இருக்கும் பிரிவு. யாருக்கும் சேதாரமில்லாமல் தமக்கிடையேயான முதல் போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டார்கள்.
அன்றே செவ்ஷேங்கோ என்ற ஒரு வயதேறிய போராளி விளையாடும் உக்ரெய்ன் தன் சொந்த மண்ணில் விளையாடுவதால் (அதிலும் உக்ரேய்னின் முதலாவது ஐரோப்பியக் கிண்ணம் இது) உக்ரெய்ன் அடுத்த சுற்றுக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அடுத்த அணி பிரான்ஸ் என்றே கருதப்படுகிறது.
நானும் அப்படியே கருதுகிறேன்.
இங்கிலாந்து - ரூனி இல்லாமலும் முடியுமா?

ஆனால் இங்கிலாந்தும் சுவீடனும் எனக்குப் பிடித்த அணிகளில் உள்ளன.. 
நான்கு அணிகளிலும் உள்ள ஒற்றுமை ஒரு குறித்த நாளில் உலகின் எந்த அணியையும் இவை வீழ்த்தும்.. இன்னொரு நாளில் சொதப்பும்.

ஸ்வீடன் அணி 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கிண்ணத்தில் விளையாடிய விதத்தினால் என்னைக் கவர்ந்த அணி. இன்று வரை இந்த அணியின் விளையாட்டு விதம், மற்றும் சீருடை வர்ணம் ஆகியன மனம் கவர்ந்தவை.
இப்ராஹிமொவிச், கல்ஸ்ட்றோம், லார்சன் ஆகியோர் நட்சத்திரங்கள்...
ஆனால் உக்ரெய்னிடம் தோற்ற விதத்தைப் பார்த்தால் பிரான்சை வெல்ல முடியாது என்றே தோன்றுகிறது.

பிரான்சிடம் உள்ள அவர்களது அனுபவமும் துடிப்பும் கலந்த சமபல அணி.. 
ரிபேரி, நஸ்ரி, பென்சீமா, பென் அப்ரா, மலூடா, பட்ரிஸ் எவரா என்று நட்சத்திரப் பட்டாளம்.

மறுபக்கம் உலகம் முழுக்கப் பிரபலமான இங்கிலாந்து ஏனோ ஒரு அணியாகப் பலமானதாக தெரியவில்லை..
ரூனியின் தடை முதல் ஆட்டத்தில் அவரை விளையாட விடவில்லை.அடுத்த ஸ்வீடன் போட்டியிலும் அவர் விளையாட முடியாது. இறுதி முதல் சுற்று ஆட்டத்தில் ரூனி வர முதலே இங்கிலாந்து வெளிஈரிவிடுமோ என்பதே கேள்வி.
ரூனி இல்லாத இங்கிலாந்தில், டெரி, ஜெரார்ட், ஆஷ்லி கோல், வோல்கொட், டீ போ போன்ற வீரர்கள் இருந்தாலும் ஏனோ சறுக்கி விடுகிறார்கள்.

இறுதியாக ஷேவ்ஷேங்கோவின் உக்ரெய்ன். 35 வயதான இவரை நம்பியே இன்னமும் இந்த அணி ஓடுகிறது. வொரோனின், குசேவ் போன்ற வீரர்கள் முன்னணி வீரர்களாக இருந்தாலும் கிழட்டுக் குதிரை தான் இன்னமும் இந்த வண்டியை இழுக்கிறது. கால் இறுதிக்கு சென்றால் நிம்மதியாக ஷேவ்ஷேங்கோ தன் ஓய்வை அறிவிப்பார் என்று நினைக்கிறேன்.


இவை என் கணிப்புக்கள் & விருப்பங்கள்.
எத்தனை நடக்கும் என்று பார்க்கலாம்.

தமிழ் மிரரின் ஆசிரியர் நண்பர் மதன் கேட்டதற்கிணங்க வாரத்தில் சில விளையாட்டுக் கட்டுரைகளை அதற்கென்று பிரத்தியகமாக எழுத ஆரம்பித்துள்ளேன். அவற்றையும் வாசித்து விமர்சனங்களை வழங்குங்கள்.
இதுவரை பிரசுரிக்கப்பட்ட இரு கட்டுரைகள்.


(என்னுடைய வலைப்பதிவுகளில் இருக்கின்ற ஏதோ இந்தக் கட்டுரைகளில் இல்லை என்றும், இங்கே இல்லாத ஏதோ அங்கே இருக்கின்றது என்றும் நண்பர்கள் சிலர் கருத்து சொல்லி இருந்தார்கள்.. அது தான் தேவை.. எனவே மகிழ்ச்சி)


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner