June 09, 2014

கால்பந்து கோலாகலம் ஆரம்பம்... FIFA World Cup 2014

என்ன தான் நாங்கள் எல்லோரும் கிரிக்கெட் பக்தர்களாக இருந்தாலும், உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடர் ஆரம்பிக்கிறது என்றவுடன் அது ஒரு திருவிழா உணர்வைக் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது.

உலகத்தில் அதிக ரசிகர்கள் கால்பந்துக்குத் தான்.
இலங்கையைப் பொறுத்தவரை ஏழை மகனின் விளையாட்டு இது.
கால்பந்தை விளையாடுவதற்கு சாதாரணமாக ஒருவருக்கு ஒரு பந்து மட்டுமே போதும்.

ஆனாலும் இலங்கையிலும் இந்தியாவைப் போலவே கால்பந்துக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை தான்.
கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் ஆதரவு, அனுசரணை என்பவற்றில் கால் பங்கேனும் வழங்கப்பட்டால் இவ்விரு நாடுகளிலும் ஊர்களிலும், பாடசாலைகளிலும், கழகங்களிலும் விளையாடப்படும் கால்பந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணும்.

சர்வதேசக் கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தரப்படுத்தலில்
இலங்கைக்கு மேலே எல்லா தெற்காசிய நாடுகளும் இருப்பதைப் பார்த்தால் இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு இலங்கை மட்டுமல்ல, இந்தியாவும் கூட உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டிகளில் விளையாடமுடியாது என்று தோன்றுகிறது.

தெற்காசிய நாடுகளில் FIFA Rankings
ஆப்கானிஸ்தான் - 130
மாலைதீவு - 147
இந்தியா - 154
பாகிஸ்தான் - 164
நேபாளம் - 164
பங்களாதேஷ் - 167
நம்ம இலங்கை - 179

இது பற்றியெல்லாம் பெருமூச்சு விட்டுக் கொண்டு, பெரியதாக திட்டம் போட்டு, இலங்கையில் கால்பந்தை முன்னேற்றலாம் வாரீர் என்று அழைத்துக்கொண்டிருக்க இப்போது நேரமில்லை.

காரணம், 20வது FIFA உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் இதோ இந்த வாரம் மிகக் கோலாகலமாக ஆரம்பிக்கப்போகின்றன.


கிரிக்கெட்டில் சர்வதேசப் போட்டிகள் முதல், எங்கேயாவது மூலை முடுக்கில் நடக்கும் சின்னச் சின்னப் போட்டிகளுக்கே பரபரத்து ஸ்கோர் அறிந்துக்கொள்ளும் அளவில் கூட, கால்பந்தின் மிக முக்கிய உலகளாவிய போட்டி பற்றி எங்கள் நாடுகளில் தான் பெரிதாக ஆர்வம் இல்லை.

சர்வதேசம் எங்கும் கால்பந்துக் காய்ச்சலும் கோலாகல விழாக்கோலமும் தான்.

என்னைப் பொறுத்தவரை என்னைப்போலவே சுற்றியுள்ள நண்பர்களிலும் சில நூறு பேராவது கால்பந்து ரசிகர்களாகவும், அதில் சிலர் வெறியர்களாகவும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியே.

நான் கால்பந்தைத் தீவிரமாகத் தொடர்பவனாக இல்லாவிட்டாலும் விளையாட்டுச் செய்திகளை சரியாக வழங்கவேண்டும் என்பதற்காக(வும்) முக்கியமான கால்பந்துப்போட்டிகளைத் தொடர்ந்தே வருகிறேன்.

அதையும் விட எனக்குப் பிடித்த அணிகள்(நாடுகளில் ஆர்ஜென்டீனா, ஸ்பெயின், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் ஆசிய அணிகள், கழகங்களில் பார்சிலோனா, New Castle) மற்றும் வீரர்களையும் (முக்கியமாக மெசி, டி மரியா, ஜெரார்ட், டேவிட் வியா,அகுவேரோ) பற்றி அறிவதிலும் தனி கவனம் என்பதனால் நானும் ஒரு சராசரி கால்பந்து ரசிகனே.

கிரிக்கெட்டைப் போல ஒரு நாளையோ, சில வேளைகளில் ஐந்து நாட்களையோ வீணடிக்காமல் மிஞ்சி மிஞ்சிப்போனால் இரு மணிநேரத்திலேயே முடிந்து விடக்கூடியது உலகம் முழுதும் இதற்கு மில்லியன் கணக்கான ரசிகர்களைத் தந்துள்ளது.

விதிகள் கூட கிரிக்கெட் அளவுக்கு சிக்கல் இல்லை.

தீவிர ஈடுபாட்டோடு ரசிக்க ஆரம்பித்தால் கிரிக்கெட்டை விட விறுவிறுப்பான, வேகமான, சுவாரஸ்யமான விளையாட்டாக கால்பந்தையே நாம் ரசிப்போம் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

ஆனால் கிரிக்கெட்டை விட கால்பந்தைத் தொடர்வதும், கால்பந்து பற்றிய செய்திகளைச் சொல்வதும் எழுதுவதும் சவாலானது.

காரணம் அத்தனை அணிகள், அதைவிட அதிகமான விளையாட்டு வீரர்கள்.

கிரிக்கெட்டில் 12 அணிகள் விளையாடும் தொடர் ஒன்றில் கூட அதிகபட்சம் 180 வீரர்களைத் தெரிந்தால் போதும்...

ஆனால் இந்த 2014 உலகக் கிண்ணப் போட்டிகளில் 32 அணிகளிலிருந்து மொத்தமாக 736 வீரர்கள்.
இத்தனை போரையும் தெரிந்துகொள்ள வேண்டாம்.
ஆனால் இவர்களில் 300 பேராவது உலகம் முழுதும் அறியப்படும் பிரபல வீரர்கள்.

எத்தனை பெரிய வேலை இது?ஆனாலும் 1986இல் சித்தப்பாமாரின் ஆர்வத்தினால் மெக்சிக்கோவில் இடம்பெற்ற உலகக்கிண்ணம் பார்க்க ஆரம்பித்த எனக்கு அப்போது தான் மரடோனா, ஆர்ஜென்டீனா இரண்டும் மனதில் ஆழமாகப் பதிந்துபோனது.
அதன் பிறகு இது நான் தவறவிடாமல் பார்க்கப்போகிற 8வது கால்பந்து உலகக்கிண்ணம்.

ஒலிபரப்பில் நான் இணைந்த பிறகு 4வது உலகக்கிண்ணம்.
இம்முறையும் விசேடமாக உலகக்கிண்ண கால்பந்து ஸ்பெஷல் செய்வதற்கான ஏற்பாடுகளின் இடையில்,
உலக T20 கிண்ணப் போட்டிகள், IPL போட்டிகள் என்று கிரிக்கெட்டோடு கிடக்கும் எங்கள் ரசிகர்களைக் கொஞ்சம் கொஞ்சமாவது கால்பந்து சுவையூட்டி உலகக்கிண்ணம் ஆரம்பிக்கும் நேரம் சூடேற்ற, சூரிய ராகங்களின் Facebook ரசிகர் பக்கத்தில் தொடர்ச்சியாக countdown குறிப்புக்களோடு தொடர்ச்சியாக உலகக் கிண்ணம் பற்றிய சுவையான, முக்கியமான விடயங்களையும் பதிவிட்டு வந்தேன்.

அவற்றை காலக்கோட்டோடு கழிந்து போய்விடாமல் ஒரு இடுகையாகத் தருவதோடு கடந்த 2010 உலகக்கிண்ணம் போலவே இம்முறையும் தொடர்ந்து உலகக்கிண்ண இடுகைகளை இடலாம் என்று நம்புகிறேன்.

FIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்

முன்னைய இடுகைகளுக்கு வரவேற்பு கிடைத்ததோ என்னவோ போல் ஒக்டோபஸ் மாதிரி விக்கிரமாதித்தன் என்ற நாமம் கிடைத்தது.

---------------------

உலகக்கிண்ண வரலாற்றின் சில முக்கிய குறிப்புக்கள்.


உலகக் கிண்ணக் கால்பந்தின் முதல் ஆட்டத்துக்கு உலகமே காத்திருக்க,
உத்தியோகபூர்வ ஆரம்ப விழா எதிர்வரும் 12ஆம் திகதி எங்கள் நேரப்படி இரவு 8 மணிக்கு பிரேசில் தலைநகரம் ரியோ டி ஜெனீரொவில் இடம்பெறவுள்ளது.

முதலாவது போட்டி போட்டிகளை நடத்தும் பிரேசில் அணிக்கும் குரோஷிய அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.
ஆனால் நேரம் எங்களுக்கு ரொம்ப சிக்கலானது.
அதிகாலை 2 மணி.

இம்முறை இடம்பெறும் போட்டித் தொடர் பல உலக சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்வையிட்ட தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் 3.2 பில்லியன்.

ஒவ்வொரு போட்டிகளையும் பார்த்த சராசரியான பார்வையாளர்கள் 188.4 மில்லியன் பார்வையாளர்கள்.

ஸ்பெய்ன் உலகச் சம்பியனான இறுதிப் போட்டியைப் பார்த்து ரசித்தோர் 619.7 மில்லியன்.

இம்முறை இந்த சாதனைகள் எல்லாம் உடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
--------------------

பிரான்ஸ் நாட்டின் சாதனை வீரர் ஜஸ்டின் ஃபொன்டெய்ன் 1958 உலகக்கிண்ணப் போட்டிகளில் பராகுவே நாட்டுக்கு எதிராக அறிமுகத்தை மேற்கொண்டபோது அவரிடம் ஒரேயொரு கால்பந்து பூட்ஸ் மட்டுமே இருந்தது. அதன் ஜோடி பழுதடைந்திருந்தது.

சக வீரரான அந்தப் போட்டியில் விளையாடாத ஸ்டீபன் ப்ருவேஇடம் கடன் வாங்கிய பூட்சினால் ஃபொன்டெய்ன் ஆறு போட்டிகளில் 13 கோல்களை போட்டு சாதித்தார்.

பிரான்ஸ் அந்த உலகக்கிண்ணத் தொடரில் 3ஆம் இடத்தைப் பெற்றது.

ஃபொன்டெய்ன் பெற்ற 13 கோல்கள் ஒரு உலகக் கிண்ணத் தொடரில் பெறப்பட்ட சாதனையாக இன்றும் நிலைத்து நிற்கிறது.

------------------

இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பித்து ஜூலை 13ஆம் திகதி வரை நடக்கவிருக்கும் போட்டிகளுக்காக 736 வீரர்கள் மொத்தமாகப் பங்கேடுக்கவுள்ளனர்.

ஒவ்வொரு அணியிலும் தலா 23 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
----------------------

உலகக் கிண்ணக் கால்பந்தில் இதுவரை ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட அதிக கோல்களின் எண்ணிக்கை 12.

1954 - ஸ்விட்சர்லாந்து உலகக்கிண்ணப் போட்டியில், போட்டிகளை நடத்திய ஸ்விட்சர்லாந்தை ஒஸ்ட்ரியா (அவுஸ்திரியா) 7-5 என வெற்றிகொண்டது.

5 கோல்கள் அடித்தும் தோற்ற இன்னும் ஒரேயொரு அணி, போலந்து.
1938 உலகக்கிண்ணப் போட்டிகளில் பிரேசில் அணியிடம் 6-5 எனத் தோற்றது.

உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த கோல்களும் 1958ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் போதே பெறப்பட்டன.

பிரேசில் அணி ஸ்வீடன் அணியை 5-2 என வீழ்த்தியது.

-------------------------
உலகக்கிண்ணக் கால்பந்தாட்ட வரலாற்றில் அதிகமான போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமை ஜேர்மனிய அணியின் முன்னாள் தலைவர் லோதர் மத்தேயசுக்கு (Lothar Matthaus) உரியது.

1982 முதல் 1998 வரை மத்தேயஸ் தொடர்ச்சியாக 5 உலகக் கிண்ணங்களில் விளையாடியிருக்கும் இந்த ஜேர்மனிய ஹீரோ, உலகக்கிண்ண வரலாற்றில் 5 உலகக் கிண்ணங்களில் விளையாடிய இரண்டே இரண்டு வீரர்களில் ஒருவராவார்.

மற்றவர் மெக்சிக்கோவின் கோல் காப்பாளர் அன்டோனியோ கர்பஜால் (Antonio Carbajal) (1950-66)

இத்தாலிய சிரேஷ்ட வீரரும் கோல் காப்பாளருமான கியன்லூகி புஃபோன் (Gianluigi Buffon) இம்முறை தனது 5வது உலகக் கிண்ணப் போட்டிக்கு செல்வதாக இருந்தாலும், அவரது முதலாவது உலகக்கிண்ணமான 1998இல் எந்தவொரு போட்டியிலும் விளையாடியிருக்கவில்லை.

----------------------

இன்னும் நிறைய இருப்பதால் இன்னொரு இடுகையாக மீதியை இடலாம் என்று எண்ணம்.
அதற்கிடையில் தமிழ் மிரர் இலும் ஒரு விரிவான முன்னோட்டக் கட்டுரையை எழுத எண்ணம்.

முன்னைய கால்பந்து பற்றிய தமிழ் மிரரில் நான் எழுதிய கட்டுரைகள்.

ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்துத் தொடர்ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner