November 26, 2014

உலகக்கிண்ண அணியைத் தேடும் இலங்கை அணி !!! - இலங்கை எதிர் இங்கிலாந்து ஒருநாள் தொடர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்திருக்கிறது.
7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்..

சொந்த மண்ணில் வைத்தே இலங்கை அணியிடம் ஒருநாள் போட்டித் தொடரிலும் தோற்றுப்போன இங்கிலாந்தினால், இலங்கையில் வைத்து  இலங்கை அணியை வீழ்த்துவது சிரமமானதே என்று அனைவரும் இலகுவாக ஊகிக்கக்கூடிய ஒன்று தான்.

ஆனால் 2007இல் இங்கிலாந்து இறுதியாக ஒரு முழுமையான ஒருநாள் தொடருக்கு இலங்கை வந்திருந்த நேரம் இலங்கை 3 - 2 என தொடரை இழந்திருந்தது.

அப்போது இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்த்தன, இங்கிலாந்துக்கு தலைவர் போல் கொல்லிங்வூட்.

அப்போது விளையாடிய அணிகள் இரண்டிலும் ஏராளமான மாற்றங்கள்.
அத்தோடு இலங்கையின் தற்போதைய அணியின் ஸ்திரத்தன்மை மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றோடு ஒப்பிடும்போது இங்கிலாந்து அணியின் அனுபவக் குறைவு மற்றும் ஆசிய ஆடுகளங்களில் தம்மை நிரூபித்த வீரர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் கொலிங்வூட் ஆகியோர் மற்றும் 2007ஆம் ஆண்டு தொடரில் பிரகாசித்த ஓவைஸ் ஷா ஆகியோரும், ஸ்வான், ப்ரோட் ஆகியோரும் இப்போது அணியில் இல்லை.

எனினும் அண்மைக்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செய்து வரும் இளைய இங்கிலாந்து வீரர்களான ஒய்ன் மோர்கன், மொயின் அலி, ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ரவி போப்பரா, ஜோ ரூட் என்று பலர் இங்கிலாந்துக்கு உலகக்கிண்ண எதிர்பார்ப்பையே ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால் ஆசிய ஆடுகளங்கள் இவர்களுக்கான பரீட்சைகளாக இருக்கும்.
அத்துடன் அணித் தலைவர் அலிஸ்டயார் குக்கின் தலைமை மற்றும் துடுப்பாட்டம் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதால், இங்கேயும் ஓட்டங்கள் வராவிட்டால் அழுத்தம் அதிகரிக்கும்.பதவி மோர்கனிடம் போனாலும் ஆச்சரியம் இல்லை.

இங்கிலாந்து இலங்கையுடன் இலங்கை மண்ணில் விளையாடியுள்ள 16 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நான்கே நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
10 தோல்விகள், இரு போட்டிகள் மழையினால் குழம்பியுள்ளன.

இம்முறையும் இதிலிருந்து மாற்றம் வருவதாக இல்லை.
7 போட்டிகள் கொண்ட நீளமான  தொடராக இருப்பதால் இலங்கை அணி வீரர்களை சுழற்சி முறையில் மாற்றி விளையாடும்போது இலங்கை அணி பலவீனப்பட்டால் ஒழிய, இங்கிலாந்து அணியினால் போட்டிகளை வெல்வது அபூர்வம்.

மழையும் தனது விளையாட்டை பெரும்பாலான போட்டிகளில் காட்டும் என்றே காலநிலையைப் பார்த்தால் தோன்றுகிறது.
ஆனாலும் ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளுக்கு மேலதிக நாள் (Reserve Day) இருப்பதால் மழையையும் மீறி போட்டிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

------------------
எனினும் ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தது போல குகைக்குள்ளே வரும் அப்பாவி மான்களை வேட்டையாட நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கும் கம்பீர சிங்கமாக இலங்கை அணி இல்லை.

ஒரு இந்திய சுற்றுலாவும் அங்கே தோலுரித்துத் தொங்கவிடப்பட்ட 5 -0 என்ற படுதோல்வியும் இலங்கை அணியை நொண்டச் செய்திருக்கிறது.
அணித் தலைவர் மத்தியூஸ் சொல்வது போல ஒரு தொடர் தோல்வியானது ஒரேயடியாக ஒரு அணியை மோசமான அணியாக மாற்றிவிடாது தான்.
ஆனால் ஐந்து போட்டிகளிலும் கண்ட இப்படியான தோல்வி இலங்கை அணியின் மூன்று மிகப் பலவீனமான பகுதிகளைக் காட்டியுள்ளது.1. டில்ஷானுடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இறங்கும் அடுத்த வீரர் யார் என்ற மிகப் பெரிய கேள்வி 
இந்தியாவில் மூன்று பேரை டில்ஷானுடன் தேர்வாளர்கள் இறக்கிப் பார்த்தார்கள்.
தரங்க, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல
மூவரில் உபுல் தரங்க, அனுபவம் வாய்ந்தவர். நிதானம் மிக்கவர். ஆரம்பத்தில் ஓட்டவேகம் குறைவாக இருந்தாலும் அதையெல்லாம் பின்னர் வேகமாகக் குவிக்கும் ஓட்டங்கள் மூலமாக அணியை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்லக் கூடியவர்.

இலங்கை அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் 8ஆம் இடத்திலும் சதங்கள் குவித்தோர் வரிசையில் 5 ஆம் இடத்திலும் இருக்கிறார்.
Strike Rate - 73.69 - சதங்கள் 13

இலங்கை சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தோர்
அட்டவணை 1


அண்மைக்காலத்திலும் உள்ளூர்ப் போட்டிகளிலும் சிறப்பாகவே ஆடிவருகிறார். சர்வதேசப் போட்டிகளில் பெரிதாக வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லையே.

இவரை விட இன்னொரு சிறப்பான தெரிவு என்றால் அது தானாக விரும்பி ஆரம்ப வீரராகக் களமிறங்குகிறேன் என்று முன்வரும் மஹேல ஜெயவர்த்தன மட்டுமே.
ஆரம்ப வீரராக துடுப்பெடுத்தாடும்போதெல்லாம் ஓட்டங்களைக் குவித்துள்ள ஒருவர்.

32 இன்னிங்க்சில் நான்கு சதங்கள், 7 அரைச் சதங்கள். strike rate இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் சனத் ஜயசூரியவை விட மட்டுமே குறைவு.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இலங்கை வீரர்களில் கூடுதலான ஓட்டங்கள் பெற்றோர்
அட்டவணை 2


இப்படிப்பட்ட ஒருவரை, இலங்கைக்கு இந்த வேளையில் அத்தியாவசியத் தேவையான ஆரம்பத் தூணை, மத்திய வரிசைக்கு அனுபவம் தேவை என்று தேர்வாளர்கள் தடை போட்டு வைத்திருப்பது உலகக்கிண்ணம் நெருங்கி வரும் வேளையில் எவ்வளவு பெரிய இழப்பு.

சங்கக்காரவுடன், மத்தியூஸ், திரிமன்னே, சந்திமால் போன்றவர்களும் இப்போது போதிய அனுபவம் பெற்றிருப்பதால் மஹேலவை ஆரம்பத்துக்கு அனுப்புவதில் இன்னும் என்ன சிக்கல்?

இந்தத் தொடரிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வரிசையையை இலங்கை இன்னும் பரீட்சிக்கப் போவதாகவும், இதைத் தொடர்ந்து இலங்கை செல்லவுள்ள நியூ சீலாந்து தொடருக்கு ஒரு உறுதியான அணி தயாராகிவிடும் என்று இந்தத் தொடருக்கு முன்னதாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அணித் தலைவர் மத்தியூஸ் சொன்னதும், அறிவிக்கப்பட்ட அணியில் குசல் இருந்து, தரங்கவோ வேறு எந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரோ இல்லாமல் போயிருப்பது டில்ஷான் & குசல் ஆரம்ப ஜோடி என்பதை உறுதி செய்கிறது.

எனக்கு என்றால் குசல் தனது பலவீனங்களைக் களைவார் என்ற நம்பிக்கை இல்லை;
(குசல் கடைசி 12 இன்னிங்க்சில் ஒரு தரமேனும் அரைச்சதம் பெறவில்லை; அதிலும் கடைசி ஐந்து இன்னிங்க்சில் இரண்டு பூஜ்ஜியங்கள், மேலும் இரு தடவைகள் பத்துக்கும் குறைவு)

எனவே மஹேல இரண்டாவது மூன்றாவது போட்டியிலேயே ஆரம்ப வீரராக அனுப்பப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
கண்டம்பி, ஜீவன் மென்டிஸ் ஆகியோரும் முதல் 3 போட்டிகளுக்கான குழுவில் இருப்பதால் மத்திய வரிசை பற்றி பயப்படவேண்டிய தேவை இருக்காது எனலாம்.


2. மாலிங்க, ஹேரத்தை விட்டால் பந்துவீச்சாளர்கள் இல்லை ?? 
மாலிங்கவின் காயமும், ரங்கன ஹேரத்தை பாதுகாத்து, சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தும் முடிவும், சச்சித்திர சேனநாயக்கவின் தடையும் இலங்கை அணியில் வேறு பந்துவீச்சாளர்களே இல்லை என்னும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் எல்லா பந்துவீச்சாளர்களையும் போட்டுத் துவைத்து எடுத்த நேரம், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தவோ, விக்கெட்டுக்களை அவசரத்துக்கு எடுப்பதற்கு கூட மத்தியூசுக்கு கைகொடுக்க ஒருவர் இருக்கவில்லை.
மென்டிஸ் எடுத்த விக்கெட்டுக்கள் மிக அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தன.

ஆனால் இப்போது தேர்வாளர்கள் எடுத்திருக்கும் முடிவின் அடிப்படையில், உலகக்கிண்ணத்தைக் குறிவைத்து அணியில் கடந்த ஒன்றரை வருடங்களாக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த பந்துவீச்சாளர்கள் சீக்குகே பிரசன்ன, சதுரங்க டீ சில்வா இவர்களோடு அணியின் முக்கியமான பந்துவீச்சாளராக பல ஆண்டுகள் விளங்கிய நுவான் குலசெகரவும் வெளியே.
குலசேகரவின் சர்வதேச கிரிக்கெட் முடிந்தது என்றே கொள்ளவேண்டியுள்ளது - அடுத்த 4 போட்டிகளுக்கும் அழைக்கப்படாவிட்டால்.
நியூ சீலாந்து போன்ற ஆடுகளங்களில் இவரது ஸ்விங் உபயோகமாக இருந்தாலும் வேகம் சடுதியாகக் குறைந்துவருகிறது.

(இவர்களோடு சகலதுறை வீரர் அஷான் பிரியஞ்சனும் கூட)

இப்படி உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு நான்கு மாத காலம் இருக்கும் நிலையில் இனி புதிய பந்துவீச்சாளர்களைத் தேடுவது எவ்வளவு புத்திசாலித்தனமானது என்று தெரியவில்லை.

புதிய வேகப்பந்துவீச்சாளர் லஹிரு கமகேயின் வேகமும் மணிக்கு 140 கிலோ மீட்டரைத்  தொடுவதாக இல்லை. அவுஸ்திரேலிய, நியூ சீலாந்து ஆடுகளங்களுக்கு உசிதமான வேக, அதிவேக, ஸ்விங் பந்துவீச்சாளர்களை இலங்கை தேர்வாளர்கள் இந்தத் தொடரில் இனங்கண்டு உறுதிப்படுத்துவார்களா ?

ஷமிந்த எரங்க, சுரங்க லக்மல் (இன்னும் உபாதை), தம்மிக்க பிரசாத் ஆகியோரோடு மாலிங்க ஆகிய நால்வரே இப்போதைக்கு உருப்படி போல தெரிகிறது.

3. இலங்கைக்கு எப்போதுமே பலமாக இருந்த களத்தடுப்பில் ஓட்டை 
இலங்கை கிரிக்கெட்டின் ஆரம்பகாலம் முதல் மிகப் பெரும் பலமாகவும், அடையாளமாகவும் விளங்கிய களத்தடுப்பு படு மோசமாகவுள்ளது.
வயதேறிய வீரர்கள் என்றால் பரவாயில்லை. இளம் வீரர்களே தடுமாறுவதும் இலகு பிடிகளைக் கோட்டைவிடுவதும் மிகக் கவலையான நிலை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்புத் தேர்ச்சி பெற்ற ட்ரெவர் பென்னியை களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக நியமித்திருப்பது பலன்களைக் கொண்டுவருகிறதா என்று இந்தத் தொடரில் கண்டுகொள்ளலாம்.

------------------------

திலின கண்டம்பி (32 வயது) , ஜீவன் மென்டிஸ் (31 வயது), டில்ருவான் (32 வயது) என்று அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே வயதேறிக் காணப்படும் இலங்கை அணிக்கு மேலும் வயதை ஏற்றிவிடுகிறார்கள்.

இம்மூவரும் உள்ளூர்ப் போட்டிகள், மற்றும் பங்களாதேஷ் லீக் போட்டிகளில் பிரகாசித்து நல்ல formஇல் இருப்பவர்கள். உலகக் கிண்ணம் வரை இதை இப்படியே தொடர்ந்தால் இலங்கை அணிக்கு நல்லது தான்.

ஆனால், அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் பிரட் ஹடின், க்றிஸ் ரொஜர்ஸ் போன்றோரைப் பயன்படுத்துதல் போல குறுகிய கால நோக்கத்தில் இலங்கை அணியும் இந்த 'அனுபவ' வீரர்களைப் பயன்படுத்துதல் நலமே.
வாய்ப்புக் கிடைத்த இளையவர்கள் அதை சரியாகப் பயன்படுத்தாத நேரம் அணிக்கு உபயோகப்படுவார்கள் என்றால் கண்டம்பி போன்றோரைப் பயன்படுத்துதல் சாலச் சிறந்ததே..

இன்னும் கப்புகெதர, பர்வீஸ் மஹ்ரூப் ஆகியோரும் வாய்ப்புக்களுக்காகக் காத்திருந்தாலும் யாரை வெளியேற்றுவது?
----------------

இந்தியத் தொடரில்  கன்னிச் சதம் பெற்ற அஞ்சேலோ மத்தியூசும், அடுத்தடுத்த அரைச் சதங்கள் பெற்ற லஹிரு திரிமன்னேயும், ஓட்டங்களை சராசரியாகப் பெற்ற டில்ஷானும் இந்தத் தொடரில் எதிர்பார்க்க வைக்கிறார்கள்.

மஹேல, சங்கா ஓட்டங்களைப் பெறாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
சங்கக்காரவின் இலங்கை மண்ணில் இறுதித் தொடராக இது அமையும் என்ற எண்ணமும் இத்தொடரின் மீது ஒரு மனம் கனத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

(ரோஹித் ஷர்மாவுக்குக் கொடுத்த உலக சாதனை 264ஐ நெருங்காவிட்டாலும் பரவாயில்லை, யாராவது பாதியாவது அடியுங்கப்பா )

முன்பிருந்தே திலின கண்டம்பி மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.
இவருக்கு சரியான, நீண்ட வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்றே கருதுகிறேன்.
அதேபோல ஜீவன் மென்டிஸ்..

இவ்விருவருக்கும் இந்தத் தொடர் திருப்புமுனைத் தொடராக அமையட்டும்.
இங்கிலாந்தின் பட்லர், ஹேல்ஸ் (வாய்ப்புக் கிடைத்தால்), மொயின் அலி ஆகியோரும் எதிர்பார்க்க வைக்கிறார்கள்.

மழை குழப்பாமல் சிறப்பான தொடராக அமையட்டும்.
----------------

இலங்கையை வெள்ளை அடித்து அதே வேகம், தாகத்துடன் அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி பற்றியும் அந்த தொடர் பற்றிய பார்வையையும் அடுத்த இடுகையில் பகிரக் காத்திருக்கிறேன்.

-------------------

படங்கள் - Sri Lanka Cricket, ESPN Cricinfo
Stats - ESPN Cricinfo

November 20, 2014

லிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்


இந்த வருடத்தில் மட்டும் இசைப்புயல் ரஹ்மான்  தனது 9வது படத்தின் பாடல்களை (ஹிந்தி, ஆங்கிலமும் சேர்த்து) வெளியிட்டுள்ளார் என்பது எல்லா இசை ரசிகர்களையுமே ஆச்சரியப்படுத்தக்கூடிய ஒன்று தான்.

நேரம் எடுத்து, ஆறுதலாக செதுக்கி செதுக்கி ஒவ்வொரு பாடல்களையும் ஒன்றிலிருந்து வேறுபடுத்தி, வித்தியாசம் காட்டும் ரஹ்மானின் பாடல்கள், அவரது இந்தப் புதுமை புகுத்தும் முயற்சிகளாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னையும் இசையையும் புதுமைப்படுத்தும் மேம்படுத்தல் பரீட்சார்த்தங்களால்  தான் அனேக சராசரி ரசிகர்களிடம் போய்ச் சேர்வது கிடையாது.

அல்லது சில காலத்தின் பின்னரே எல்லாத் தரப்பாலும் ரசிக்கப்படுவதுண்டு.
ரஹ்மானின் பாடல்கள் கேட்கக் கேட்கத் தான் பிடிக்கும் என்று பரவலாகக் கருதப்படுவதற்கும் இதே தான் காரணம்.

ஆனால் கேட்ட உடனே சட்டென்று பிடித்துப் போகும் இசைப்புயலின் பாடல்களும் இருக்கின்றன.

நான் இந்த லேட்டாத் தான் பிடிக்கும், போகப் போகப் பிடிக்கும் கட்சி இல்லை.
சில ரஹ்மான் பாடல்கள் உடனடியாகவே மனசுக்குள் ஏறி உட்கார்வதும் உண்டு..
 பல ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டில் உள்ள மஜிக் புரிந்தும் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை ரஹ்மான் எந்த இயக்குனரினால் வேலை வாங்கப்படுகிறாரோ அங்கே தான் தீர்மானிக்கப்படுகிறது இந்த ரசனை சார்ந்த விடயம்.

ஷங்கர், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் வரும் ரஹ்மானின் இசைக்கும், சில ஹிந்திப் படங்களில் வரும் ரஹ்மானின் இசை & பாடல்களுக்கும், K.S.ரவிக்குமார் மற்றும் இதர இயக்குனர்களின் படங்களில் வரும் இசைக்கும் இடையிலான வித்தியாசம் இங்கே தான்.


நண்பர் JKயின் ஒரு Facebook நிலைத்தகவலின் கீழ் கருத்திட்டபோது நானும் அவரும் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே தரப்படுவது 'லிங்கா' பாடல்கள் பற்றி பேசும்போது முக்கியமானவை எனக் கருதுகிறேன்..

JK ஜெயகுமாரன் சொன்னது -
லோஷன்.. ஒரு பாட்டு உடனடியா பிடிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கும் இந்தப்படத்தில் மனோ பாடிய பாடல் உடனடியாகவே பிடித்துக்கொண்டது. ஆனால் சிலர் லிங்கா ( ஐ கூட) மொக்கை என்கிறார்கள். ஒரு பாட்டு மொக்கை என்று சொல்வதற்கு அட்லீஸ்ட் இருபது வருஷமாவது வெயிட் பண்ணவேண்டுமென்பது என்னுடைய எண்ணம். அதுவும் ரகுமானுடைய பாடல்களில் இரண்டு வகையே உண்டு. "பிடித்த பாடல்கள்", "இன்னமுமே பிடிபடாத பாடல்கள்"

Loshan : அது தான் உடன் விமர்சனம் ப்ரோ...
உடன பிடிக்காட்டி அப்போதைக்கு மொக்கை.. பிறகு லேட்டா பிடிக்கிற நேரம் 'எண்ண மாற்றம்' - சிந்தனையில் பரிணாம உயர்வு
ஆனால் ரஹ்மானின் இசையில் 'எனக்கு' பிடிக்கவே பிடிக்காத பாடல்கள் ஒரு முப்பதாவது இருக்கும்.
அவற்றை என் ரசனைக்கு செட் ஆகாதவையாக நினைத்துவிட்டுப் போவதுண்டு.
-------------------------------
இதைத் தான் நான் எனது முன்னைய சில பதிவுகளில் ரஹ்மானின் பாடல்கள் பற்றி எழுதும்போது குறிப்பிட்டவை.
ஹிந்தி, சர்வதேசம் என்று ரஹ்மான் தனது சிறகுகளை அகல விரித்தபின்னர், அவரது தேடல்கள் விரிய ஆரம்பித்தபின்னர் எனக்கும் என்னைப்போன்ற ரசனையுடையவர்க்கும் ரஹ்மானின் சில பாடல்களுடன் முன்பு மாதிரி நெருங்கி உறவாட முடியவில்லை.
அதற்குக் காரணம் அவர் தனது ரசனையை உயர்த்தியது; நாங்கள் அந்த ரசனையளவுக்கு எங்கள் ரசிகத் தன்மையை உயர்த்திக்கொள்ளவில்லை.
--------------------------------
ஐ பாடல்களுக்கும் லிங்கா பாடல்களுக்கும் ஒப்பீடு, ஐ அளவுக்கு லிங்கா பாடல்களில் புதுமை இல்லை என்று பாடல்கள் வந்து ஐந்தாவது நாளான இன்று நீங்கள் பீல் பண்ணுபவராக இருந்தால்,

1. சில நாட்கள் கழித்து உங்களுக்கு அந்தப் பாடல்கள் பிடிக்கலாம் - இது ரஹ்மான் பாட்டு கேட்க கேட்க போபியா
2. இது ரவிக்குமார் - ரஜினி படம்..
கதைக்கும் கூட்டுக்கும் படம் ரஜினியின் பிறந்தநாளுக்கு வரவேண்டும் என்ற அவசரத்துக்கும் இது போதும் (அல்லது எது தேவை) என்று இசைப்புயலுக்கு எம்மை விடத் தெரிந்திருக்கும்.
----------------------------
ஐ பாடல்கள் கேட்ட சுகானுபவத்தொடு ரஹ்மானின் 'லிங்கா'வுக்குக் காத்திருந்த எனக்கு பாடல்கள் பற்றிய விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டவுடனேயே மிகப் பெரும் குதூகலம்.
உடனே Facebookஇல் கீழ்வரும் தகவலைப் பதிவு செய்தேன்.

வாவ் லிங்கா..
‪#‎Lingaa‬ ‪#‎ARRahman‬
சந்தோஷப்பட நிறைய விஷயங்களை இசைப்புயல் தந்திருக்கிறார்.

1.மீண்டும் வைரமுத்துவோடு முழுமைக் கூட்டணி..
ஓ நண்பா, உண்மை ஒருநாள் வெல்லும் இனி சூரிய ராகங்களின் முதல் மணிநேரத்துக்கு என்று வைத்துக்கொள்ளலாம்.
மன்னவனேயில் மனம் தொலைக்கலாம்.
(ஒரேயொரு பாடல் வைரமுத்து இல்லை.. ஆனால் குட்டிப்புலி நம்ம கார்க்கி Madhan Karky. அந்தப் பாடலின் ஆரம்ப வரியே எதிர்பார்க்க வைக்குது.
Mona Gasolina - இந்தப் பாடலுக்குள் என்ன புதுமை வைத்துள்ளீர்கள் கார்க்கி?)

2.மீண்டும் SPB - WELCOME Legend S. P. Balasubrahmanyam
(நம்ம நாட்டின் தினேஷும் சேர்ந்து பாடியிருப்பது ஸ்பெஷலான பெருமை. வாழ்த்துக்கள் Dinesh Aaryan Kanagaratnam )

3.நீண்ட காலத்துக்குப் பிறகு ஸ்ரீனிவாசுக்கு ஒரு பாடல்.

4.இன்னும் நீண்ட காலத்துக்குப் பிறகு மனோ..
(ஓஹோ கிக்கு ஏறுதே இன்னும் fresh ஆ மனசுல நிக்குது)

5.எந்திரன் - இரும்பிலே பாடி அதிரவைத்த இசைப்புயல் மீண்டும் ரஜினிக்காக 'இந்தியனே வா' என்று அழைக்கப் போகிறார்.
தேசப்பற்று மசாலா தூவி அரசியல் பஞ்ச் வைரமுத்து வைப்பார் எனலாம்.
ரஹ்மானின் குரலில் சிறு இடைவெளிக்குப் பிறகு வரும் பாடல் என்பதால் புதுமையை இதிலும் எதிர்பார்க்கலாம்.


எதிர்பார்த்தது வீண்போகவும் இல்லை.
நான் நினைத்த மாதிரியே ஐந்து பாடல்களில் நான்கு எனக்குப் பிடித்த மாதிரியே வந்துள்ளன.
(அந்த ஐந்தாவது பாடல் என்பதை ஊகித்து வைத்துக்கொண்டே வாசியுங்கள்..)
'ஐ'யோடு ஒப்பிட விரும்பாத காரணத்தால் முத்து, படையப்பா போலவே ரஜினிக்கான K.S. ரவிக்குமார் படத்துக்கான பாடல்களை ரஹ்மான் வழங்கியுள்ளார், அதில் திருப்தியே.நண்பர் ஒருவருக்கு வழங்கிய கருத்தில் "ரஜினியை இன்னும் இளமையாகக் கொண்டு வர ரஹ்மான் இங்கே இசையை பயன்படுத்தியுள்ளார் "என்று சொன்னது பாடல்களில் நிரூபணம்.

சனிக்கிழமை இரவு பாடல்களை முதலில் ரசிக்கக் கிடைத்தவுடனேயே SPBயின் குரலில் இப்படியொரு பாடலையே வைரமுத்துவின் வரிகளில் எதிர்பார்த்திருந்த எனக்கு உடனே விரல்கள் பரபரக்க, அடுத்த நான்கு பாடல்களைக் கேட்க முதலே போட்ட status

'இளமை என்றும் போகாது, முதுமை எனக்கு வாராது' என்று வைரமுத்து எழுதியது ரஜினிக்கு இல்லை, SPBக்கு தான் என்பது நிச்சயம்.
ஓ நண்பா.... மீண்டும் SPBயை இன்னும் ஒரு 20 ஆண்டுகள் வயதைக் குறைத்து, எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது..
பாடும் நிலா என்றும் இனிக்கும் இளமை நிலா தான்.
வைரமுத்துவோடு சேரும்போது மட்டும் இசைப்புயலுக்கு இன்னும் அதிகமாக வலிமையையும் மென்மேலும் இனிமையும் சேர்ந்து விடுகிறது.
‪#‎லிங்கா‬

-----------------------------------

ஓ நண்பா 
வா கலக்கலாமா 
ஏ நண்பா வான் திறக்கலாமா
ஆசை இருந்தால் நண்பா சொர்க்கம் திறக்கும் நண்பா 
நாம் அத்தனைக்கும் ஆசைப்பட்டு முத்தெடுப்போம் நண்பா
வானம் வலது கையில் 
பூமி இடது கையில் 
வாழ்வே நமது பையில்..
‪வைரமுத்து‬ ‪எழுதியுள்ள இளமை துள்ளும் வரிகளை SPBயின் என்றும் மாறா இளமைக் குரலில் கேட்கும்போது ஒரு தனி உற்சாகம்.

காலம் மீண்டும் பின்னோக்கி ஓடி 'முத்து' காலத்துக்கு போன நினைவு.
ரஜினி என்றால் அங்கே ரஹ்மானோ தேவாவோ, ஏன் வித்யாசாகரோ - வைரமுத்து + SPB இருந்தால் தான் அங்கே கிக்.

இளமையை மேலும் தூக்கி நிறுத்த நம்மவர் தினேஷ் கனகரட்ணத்தின் rap.
பாடலின் நான்கரை நிமிடங்கள் ஓடி முடிவது தெரியாதளவுக்கு இசை கலக்கல்.
என்னுடைய ரிங் டோனாக உடனே மாற்றிக்கொண்டேன்.

வைரமுத்து வரிகளில் நின்று ஆடியிருக்கிறார்.

உன் எல்லை அறிந்துகொண்டால்
தொல்லை உனக்கு இல்லை
மீனே தண்ணீரைத் தாண்டித் துள்ளாதே

உன்னோடு செல்வம் எல்லாம் சேர்த்துக்கோ
கொண்டாட நண்பன் வேணும் பார்த்துக்கோ
முன்னோர்கள் சொன்னால் சொன்னால் ஏத்துக்கோ
வேலைக்கு ஆகாதென்றால் மாத்திக்கோ

இதுக்குத் தான் பெரியவர் வேண்டும் என்பது.

----------------------

என் மன்னவா

மீண்டும் ஸ்ரீநிவாசை ரஹ்மான் அதே மென்மையுடன் அழைத்து வந்து அழகு பார்த்திருக்கிறார் ரஹ்மான்.
குரலின் கனதியும் மென்மையில் வழியும் வைரமுத்துவின் காதலழகும் பாடலுக்கு சிறப்பு.

ரஹ்மான் ஒரு சஹானா பாடலை நிகர்க்க முனைந்திருக்கிறார்.
படமாக்கப்பட்டு வெளிவந்துள்ள promo teaserஇலும் அதே தோற்றப்பாடு.

"என்னைவிட அழகி உண்டு - ஆனால்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை" என்று தனக்கேயுரிய பாணியில் காதல் பாடலிலும் கொஞ்சம் (அரசியல்) பஞ்ச் வைக்கும் வைரமுத்து,

"வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கி விட்டாய்"
"தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே
பாலன்னம் நீ – நான்
பசிகாரன் வா வா" என்றெல்லாம் புதுச் சுவையும் தமிழ்ச் செழுமையும் சேர்த்து ரசிக்க வைக்கிறார்.

ஆனால்
"மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்திவை ராணி" என்று அட, இன்னும் இந்த அரதப்பழசுகளை விடவில்லையா என்று கொஞ்சம் சலிக்கவும் வைக்கிறார்.

கவிஞரே, இது கார்க்கி காலம். இன்னும் புதுசா வேண்டும் எமக்கு..

ஆனால் படத்தில் இந்தப் பாடல் 'பழைய' ரஜினிக்கு வருவதால் அந்தக் காலகட்டத்துக்கு ஏற்றது போல வரிகளையும் யாத்து இருப்பாரோ?

இந்தப் பாடலின் பெரிய திருஷ்டி பாடகி அதிதி போல்.

ஐ படப் பாடல்கள் மூலமாக ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.
குரலில் இனிமை வழிந்தாலும் சில சொற்களைக் குதறி வைக்கிறார்.
ரஹ்மானின் பாடல்களில் பொதுவாக இப்படியான குறைகள் காண்பது அரிது.
அவசரம்??

-----------------------------


3. இந்தியனே வா...

வைரமுத்துவின் எழுச்சி வரிகளில் ரஹ்மான் கொஞ்சம் கிளர்ச்சியும் கொஞ்சம் நெகிழ்ச்சியும் கொள்ளவைக்கிறார்.
லிங்கா அணை கட்டும் பாடல் என்று வைரமுத்து தனது Twitter இல் குறிப்பிட்டுள்ளார்.

இசையிலும் ரஹ்மான் 'ஒரே பாடலில் அணை கட்டப்படும்' இசை  உணர்வைக் கொடுக்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக பாடல் வேகமெடுத்து பிரவாகிக்கும் விதம் ரசனை.

"இந்தியனே வா – புது
இமயத்தை உண்டாக்க வா 
இளையவனே வா – மழைத்
தண்ணீரில் பொன்செய்வோம் வா"
இப்படியொரு ஆரம்பம் பாடலில் புதுமை பொங்கி வருவதைக் காட்டிவிடுகிறது.
இங்கே தான் வைரமுத்து நிற்கிறார் என்று அடித்து சொல்வேன்.

இளைஞனுக்கான அழைப்பு அன்றைய பாரதியின் "ஒளி படைத்த கண்ணினாய்" என்று புதிய பாரதத்தை அழைத்தது போல உணர்ச்சியோடு இருக்கிறது.

பாடலில் ஒரு துள்ளல் நடையும், ரஹ்மானின் அழைப்பில் மேவி நிற்கும் உணர்ச்சியும் அனுபவித்து ரசிக்கக் கூடியது.

வைரமுத்துவின் கவிதையோ பாடலோ எங்களை எங்கள் பதின்ம காலம் தொட்டு ஊடுருவி ஆட்கொள்ளக் காரணம், தமிழோடு அறிவியலும் கலந்து வந்த புதுமை தானே..
இந்தப் பாடலிலும் வைக்கிறார் விருந்து...

இரு மலைகளைப் பொருத்தி
நதிகளை நிறுத்தி
விஞ்ஞானக் கோயில் ஒன்று கட்டுவோம்
இன்னும்,
வெள்ளை இருள் நீங்கி
காந்தி தேசம்
பேர் பெறவேண்டும்
என்று இப்பாலம் கட்டப்படும் காட்சியை சொல்பவர்,
கங்கை காவேரி
தொட வேண்டும் – நம்
பாலை வனத்தில்
பாலை விடவேண்டும்
என்று நதிநீர் இணைப்பையும் தொட்டு நிற்கிறார்.
---------------------------

உண்மை ஒருநாள் வெல்லும்

இந்தப் பாடலின் வரிகளை வைரமுத்து அறிமுகம் செய்தபோது மிகப்பெரும் எதிர்பார்ப்பு..
ஆனால் கூடவே மீண்டும் ஹரிச்சரண்!!?? என்ற சலிப்பு..

வரிகள் தைத்தாலும், பாடலில் விசேடம் இல்லாதது போல இருக்கிறது.
இதே பாடலை ஹரிஹரன் அல்லது ஷங்கர் மகாதேவன் பாடியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என்றும் கூடவே எண்ணம்.
போகப் போக பிடிக்கப்போகும் (பீடிக்கப்போகும்) பாடலாக இருக்கலாம்.

முத்து - விடுகதையா இந்த வாழ்க்கை
பணக்காரன் - மரத்தை வச்சவன்
பாடல்கள் போல ரஜினியின் உருக்கப் பாடல்களில் இடம்பெறுமா என்பது படத்தின் காட்சியமைப்பிலே தான் இனித் தங்கியுள்ளது.

பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் இசை ஜித்தன் படத்தின் 'காதலியே' பாடலையும் ஞாபகப்படுத்துகிறது.

"சிரித்துவரும் சிங்கமுண்டு
புன்னகைக்கும் புலிகளுண்டு
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு

பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு"

-----------------------

மோனா கசோலினா..

வைரமுத்து என்னும் அனுபவப் புலி எழுதிய நான்கு பாடலுக்கும் இணையாக குட்டிப் புலி மதன் கார்க்கி படைத்துவிட்ட ஒரே புயல்.

பெண் குரலோடு மயக்கும் மென்மையோடு ஆரம்பித்து, மனோவின் ஆண்மையும் முரட்டுத் தன்மையும் கலந்த அதிகாரத் தோரணையுடன் உச்சம் தொடும் பாடல் கட்டமைப்பு.

வரிகளில் புதுமைச் சாயத்துடன் ரசிக்கும் ஓசை நயத்தையும் தந்து கலக்கியிருக்கிறார் கார்க்கி.
தனித் தமிழில் ஐ பாடலை வடித்து ஆச்சரியப்படுத்திய அன்புக்குரிய iபாடலாசிரியர்

உன் கண்ணு compassஆ?
நான் உன் Columbusஆ?
நங்கூரம் நான் போட
நீ ஆட,
கடல் வெடிக்குது பட்டாசா 
என்று பரபரக்க வைக்கிறார்.

கப்பல் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள பாடல் என பாடல் promo மூலம் தெரிவதால், பாடல் வரிகள் கப்பலைக் கொண்டே சுற்றுவதும் ரசனை.
ஒரு சுகமான கப்பல் பயணம் ஆரம்பிப்பது போல மென்மையாக ஆரம்பித்து, மனோவின் குரல் வந்து தெறித்துவிழும் இடம் அலைமோதும் நடுக்கடல் போல அமைவது கலக்கல்.

சாரங்கி நரம்பா நான் ஏங்கிக் கிடந்தேன்
என்று நாயகி இசையுடன் ஏங்க,
பீரங்கிக் குழலில் நான் தூங்கிக் கிடந்தேன்
நீ காதலைக் கொடுத்தே நான் வானில் பறந்தேன் 
என்று நாயகன் பதில் தரும் இடமும் சுவை.

இசைப்புயல் இந்தப் பாடலில் காட்டிய வித்தையளவுக்கு வேறேந்தப் பாடலிலும் இத்திரைப்படத்தில் மினக்கெடவில்லை என்னும் அளவுக்கு பாடல் செதுக்கப்பட்டிருக்கிறது.
சின்னச் சின்ன ஓசைகள், இசையின் கலப்பு, வாத்தியக் கருவிகளின் கோர்ப்பு என்று அமர்க்களம்.

ஆனால் கொஞ்சம் கூர்ந்து அவதானித்துக் கேட்டால்,
இதே ரஜினி நடித்து ரஹ்மான் இசையமைத்த 'பாபா' படத்தின் 'மாயா மாயா' பாடலின் புதிய மேம்படுத்தல் வடிவமே இந்தப் பாடல் என்று கண்டறியலாம்.
(நம்ம அலுவலக 'இசைப்புயல்' ஹனியின் கண்டுபிடிப்பு.. அச்சொட்டாக மிக்ஸ் பண்ணிக் காட்டியபோது அசந்துபோனேன்)

பாபா தான் சரியாகப் போகவில்லை, லிங்காவிலாவது மெட்டுக்கு மோட்சம் கிடைக்கட்டும் என்று பாடல்களின் பிரம்மா மீண்டும் படைத்திருப்பார்.

மனோ ரஹ்மானோடு சேர்ந்த பாடல்கள் எல்லாமே ஒரு தனி விதமாக, அந்தந்தப் படங்களின் மெகா ஹிட் பாடல்களாக அமைவதன் தொடர்ச்சி பெரிய இடைவெளிக்குப் பிறகு 'லிங்கா'விலும்..

முக்காலா - காதலன்
வீரபாண்டிக் கோட்டையிலே/ புத்தம்புது பூமி/ கண்ணும் கண்ணும் - திருடா திருடா
தில்லானா - முத்து
வானில் ஏணி - புதிய மன்னர்கள்
ஆத்தங்கரை மரமே - கிழக்குச் சீமையிலே
ஓஹோ கிக்கு - படையப்பா

------------------------------

கார்க்கியுடன் நேற்று முன்தினம் உரையாடியபோது இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே A.R.ரஹ்மான் இசையமைத்த மெட்டுக்களுக்கு எழுதியவை என்ற தகவலையும் தந்திருந்தார்.

இந்தப் பாடல்களின் படமாக்கலில் நான் பெரிய எதிர்பார்ப்பு வைக்கவில்லை.
பார்த்த இரு பாடல்களின் promo வடிவங்கள் இது தான் கே.எஸ்.ஆர் ஸ்டைல் என்று காட்டியிருப்பதால் கேட்பதோடு சரி..

ஆனால் தொழினுட்பம் முன்னேறிய இந்தக் காலத்தில் பாலம் கட்டும் பாடலுக்காவது இயக்குனர் நியாயம் செய்வார் என்று நம்புவோமாக.


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner