March 31, 2010

அங்காடித் தெரு - என் பார்வை



அங்காடித் தெரு பற்றிய என் பதிவுக்குள் செல்ல முன் திரைப்பட ரசிகர்களே, தயவுசெய்து இப்படியான நல்ல திரைப்படங்களை நம் எல்லோரும் சேர்ந்து ஊக்கம் வழங்கி வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன்.


இல்லாவிடின் தரமான,புதிய முயற்சிகளைத் தருகின்ற படைப்பாளிகள் ஊக்கமிழந்து விடுவர்.


'வெயில்' மூலம் ஆச்சரியபடுத்தி, உருகவைத்த வசந்தபாலனின் மூன்றாவது  படைப்பு.(அல்பம் தான் முதல் படம் 2003- ஞாபகப் படுத்தியமைக்கு நன்றிDream girl) 


வெயிலில் மனித மனங்களின் சலனங்கள்,பாசம்,உறவுக் கட்டமைப்பின் உணர்ச்சிகளைக் காட்டிய வசந்தபாலன், 'அங்காடித் தெரு'வில் எங்களுக்குள்ளே இருந்து கதாமாந்தரை எடுத்து, வாழ்க்கையில் தினமும் நாம் சந்திக்கின்ற ஆனால் கவனிக்கத் தவறுகிற சில மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.




 பெரு நகரங்களின் பல்பொருள் அங்காடிகள்,பெரிய ஆடையகங்கள் இன்னும் தொழிற்சாலைகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கொத்தடிமைகளாக கிடந்தது தம் குடும்பங்களுக்காக உழலும் எத்தனையோ இளைய சமுதாயத்தினர் பற்றி எம்முள் எத்தனை பேருக்குத் தெரியும்?


 கிராமத்திலிருந்து பசுமையான உலகம் காணப் பட்டணம் புறப்பட்டு வந்து படும்பாடுகளை செய்ரகியாக அல்லாமல் படு யதார்த்தமாக சொல்வதே அங்காடித் தெரு.
அடிக்கடி இந்தியா செல்லும் எனக்கு இனி ரங்கநாதன் தெருப் பக்கம் ஷொப்பிங் செல்லும் போதெல்லாம் கடை ஊழியர்கள்,சிப்பம்ந்திகளைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவிதப் பரிதாப உணர்வு ஏற்படுவது நிச்சயம்.


இறுதியாக கடந்தவருடம் போயிருந்தபோதும் கூட, அந்தத் தெருவின் நெரிசலில் பலவித முகங்களை,பலவித தொழில் செய்வோரைப் பார்த்தபோது அவர்களின் வாழ்க்கைக் கதைகள் எத்தனைவிதமாக இருக்கும் என தற்செயலாக யோசித்தது இப்போது மனதுக்குள் மீள ஓடுகிறது.  


இயல்பு மாறாமல்,எளிமையாக, யதார்த்த வாழ்க்கையில் இப்படியும் எங்களை சுற்றி நடக்கின்றன என்று முகத்தில் அறையும் கதை.


புதுமுகம் மகேஷ் கதாநாயகன். கிராமங்களில் நாம் காணும் திறமையான,ஆனால் உயர்கல்வி கற்க முடியாத குடும்ப சூழ்நிலையில் வாடும் இளைஞனாக அச்சொட்டாகப் பொருந்துகிறார்.
வெகு இயல்பான நடிப்பு.துடிப்பான வெகுளியான ஒரு அச்சு அசல் கிராமத்து இளைஞன்.  


கதாநாயகி அஞ்சலி- கற்றது தமிழில் பார்த்த அந்தப் பிஞ்சு முகத்தில் இந்தப்படத்தில் தான் எத்தனை முகபாவங்கள்?
அஞ்சலி தான் அங்காடித் தெருவின் அச்சாணி. 
கனி என்ற இவர் பாத்திரப் பெயர் மனதிலே ஒட்டிக்கொண்டு விட்டது.
கண்களும் உதடுகளும் உணர்ச்சிகளைக் காட்டும் விதம் அபாரம்.இயக்குனர்கள் பொருத்தமான பாத்திரங்களை இவருக்கு வழங்கும் பட்சத்தில் தமிழில் இன்னொரு சிறந்த நடிகையை நாம் காணலாம்.


கதாநாயகனின் நண்பனாகப் படம் முழுவதும் வரும் முக்கிய பாத்திரம் கனாக் காணும் காலங்கள் - விஜய் டிவி புகழ் பாண்டிக்கு.
சிரிக்கவைக்கும் பல காட்சிகளில் அசத்துகிறார். அப்பாவியான தோற்றத்துடன் பல இடங்களில் குணச்சித்திர நடிப்பையும் காட்டுகிறார்.


கடையின் மேற்பார்வையாளராக கருங்காலி என்ற பட்டப் பெயரோடு வில்லனாக வரும் பாத்திரம் பிரபல இயக்குனர் வெங்கடேஷுக்கு.கடையில் வேலை செய்யும் அப்பாவி பையன்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமல்லாமல் பார்க்கும் எங்களுக்கும் எரிச்சல் தரும் பாத்திரத்தில் மனிதர் அசத்துகிறார்.
சில காட்சிகளில் நேரில் கண்டால் கொலை செய்யும் அளவுக்கு கோபமும் வருகிறது.
பேசாமல் சரத்குமார்,சிம்பு,அர்ஜுன் இவர்களை வைத்துக் கொலைவெறி,மொக்கை,மசாலாக்களை எடுப்பதை விட்டுவிட்டு (அடுத்தபடம் மாஞ்சாவேலுவாம்..கடவுளே) வில்லனாகவே வெங்கடேஷ் நடித்தால் எமக்கும் நல்லது;அவருக்கும் நல்லது.


அது சரி சினேகாவுக்கு என்னாச்சு? பாவம்.. இப்போதெல்லாம் இப்படி துண்டு,துக்கடா பாத்திரங்கள் தான்.. 
ஆனால் அவர் வரும் இடமென்னவோ ரசிக்கலாம்.. முக்கியமாகப் பாண்டியினதும்,கடை முதலாளியினதும் குசும்புகள்.


படத்தின் அநேகமான பாத்திரங்கள் புதியவர்களாகவே இருப்பதால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு தோன்றாமல் வாழ்க்கையில் நடப்பவற்றை நாம் நேரே பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.


அந்தந்த தொழில் செய்வோரை அப்படியே பயன்படுத்தினாரா வசந்தபாலன்?


அவ்வளவு நேர்த்தி,இயல்பு,மிகைபடா நடிப்பு.


சிறு சிறு பாத்திரங்களும் மிகக் கவனமாகத் தேர்வு செய்யப்பட்டுக் கையாளப் பட்டிருப்பதும், அவர்கள் படத்தின் முக்கிய கட்டங்களைத் தீர்மானிப்பதும் அருமை.
தற்கொலை செய்துகொள்ளும் பெண்,அவளது கோழைத்தனமான காதலன், வீதியோரத்தில் வியாபாரம் செய்யும் விழிப்புலனற்ற முதியவர்,கழிவறையை தன் வியாபார முதலீடாக்கும் இளைஞன், வீதியோரக் குள்ள மனிதர், அவரின் விபசார மனைவி, ஆறுதல் சொல்லும் இஸ்லாமியப் பெரியவர், கதாநாயகனினதும் கதாநாயகியினதும் தங்கைமார், முதல் காதலி அஷ்வினி (வாயுக் கோளாற்றால் காதல் பிரிந்த முதல் சரித்திரம்) என்று மனதில் நிற்கிறார்கள்.


இவர்களோடு இடங்களும் படத்தில் முக்கியமாகின்றன.
பனி புரியும் அங்காடி,அந்தத் தெரு, ஆண்களும் பெண்களும் தங்கும் இடங்கள்,சாப்பிடும் மெஸ் .. இவற்றைக் காட்டியிருக்கும் படு யதார்த்தம் வசனங்களால் கூட ஏற்படுத்த முடியாத தாக்கத்தைத் தருகிறது.  


வசனம் ஜெயமோகன். தனது மேதாவித்தனத்தையோ,புலமையையோ காட்டாமல் இந்தையல்பான படத்துக்கு எப்படி வசனங்கள் தேவையோ அளந்து அழகாகத் தந்திருக்கிறார்.
சின்ன சின்ன வசனங்களில் மனதின் மெல்லிய இடங்களைத் தொட்டுவிடுகிறார்.பாராட்டுக்கள்.
வசனகர்த்தா என்றால் இப்படித் தான் இருக்கவேண்டும்.


அவரது மீதிப் பணியை நேர்த்தியாக செய்கிறது ரிச்சர்ட் மரிய நாதனின் கமெரா.
குலுக்காமல் கண்களை அலுக்க விடாமல் இயற்கை வெளிச்சத்துடன் நேர்த்தியான கோணங்களில் காட்சிகளைத் தந்துள்ளார்.
கடைக் காட்சிகளும், வீதியைப் படம் பிடித்திருக்கும் விதமும் எம்மையும் உள்ளே இருப்பவர்களாக எண்ண வைக்கிறது.
மேலதிக வெளிச்சமின்றி தங்குமிடக் காட்சிகளில் அவர்கள் படும் துன்பங்களையும் அந்த இடங்களின் இட நெருக்கடியையும் அவலத்தையும் நுட்பமாகக் கமெரா பதிவு செய்கிறது.
பாடல் காட்சிகளிலும் இயல்பை மீறாத இயக்குனர்,ஒளிப்பதிவாளரை பாராட்டலாம்.


பாடல்கள் எல்லாவற்றிலும் (யானைக்காது தவிர) ஒரு மென் சோகம் இழையோடுகிறது.
இரு பாடல்கள் விஜய் அண்டனியின் இசையிலும், நான்கு பாடல்கள் ஜி.வீ.பிரகாஷின் இசையிலும் இனிக்கின்றன.


கண்ணில் தெரியும் வானம், மைக்கேல் ஜாக்சன்,ரஹ்மானின் இசையில் கலவை. 
ஆனால் காட்சிகளின் சோகமும், வரிகளின் ஆழமும் கண்கலங்க வைக்கின்றன.
அவள் அப்படியொன்றும் அழகில்லை சுவாரஸ்யம்.. சிரிக்கவும் வைக்கிறது.
உன் பேரை சொன்னாலே - சினிமா நட்சத்திரங்களாக தம்மை எண்ணி ஆடும் அந்த அப்பாவிகளின் உணர்வைத் தொனிக்கவிடுகிறது.ரசிக்கலாம்.


பாடல்களின் இடையூறு படத்தைப் பெரிதாகத் தொய்யவிடாது இருப்பதற்கு கதை ஓட்டம் ஒரு காரணமாக இருக்கலாம்.


எனினும் பின்னணி இசையில் விஜய் அன்டனி சொதப்பி இருக்கிறார். இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். அங்காடித் தெருவை இன்னும் அது மெருகேற்றி இருக்கும்.




படத்தின் ஆரம்பத்திலேயே இந்தப் படக் கதையோ, சம்பவங்களோ, பாத்திரங்களோ யாரையும் குறிப்பிடுவன அல்ல.. என்ற வழமையான வசனங்கள்.. ஆனால் அடிக்கடி காட்டப்படும் சில காட்சிகள்,சீருடைகள், பின்னணியில் இடையிடையே வேண்டுமென்று காட்டப்படும் இன்னொரு பிரபல ஆடையகம்/பல்பொருள் அங்காடி, ஸ்னேஹாவின் சேலை விளம்பரம், செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் என்ற பெயர், முதலாளியாக வருபவரின் நடை,உடை,பாவனைகள் என்று பல விஷயங்கள் எங்கேயோ,யாரையோ சாடை மாடையாக அடிப்பது போலிருக்கே.. 
(சென்னைவாசிகள் தான் உண்மை சொல்லவேண்டும்)


இவ்வளவு இயல்பான ஒரு துன்பியல் கோர்வைக்கிடையிலும் இடையிடையே இயல்பான, படத்தின் பாதையை விட்டு விலகாத நகைச்சுவைகளையும் லாவகமாகப் புகுத்தியது இயக்குனரின் திறமை தான்.


பல காட்சிகளில் கண் கலங்கி விட்டேன்.


மேற்பார்வையாளரின் பாலியல் கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு குடும்பத்துக்காக உழைக்கும் நாயகி ஒரு கட்டத்தில் பொங்கி வெடிப்பது, வேலை போய்விடும் என்ற அச்சத்தில் காதலன் கோழையாவது கண்டு மனம் வெதும்பி காதலி தற்கொலை செய்துகொள்ளும் அந்த இடம் (என்ன ஒரு உருக்கமான நடிப்பு - அந்தப் பெண் பாராட்டுக்குரியவள்) - அந்தக் கோழைப் பயல் மீது கொலை வெறியே வந்தது,வயதுக்கு வந்த தங்கை இருக்கும் நாய்க் கூடு, அவளுக்கு சடங்கு செய்ய முடியாத இயலாநிலைக்கு வருந்துவது, கடைசிக் காட்சிகளில் தொனிக்கும் இயலாமை,அன்பின் வெளிப்பாடு,பரிதாபம் என்று எதைத் தான் விடுவது?


குருவிகள் இரண்டின் தலையில் பனங்காயை அல்ல பலாப்பழத்தை வைத்து த்நிச்சலாக அந்த இனிய பழத்தை எங்களுக்கு கனியக் கனிய தந்திருக்கும் இயக்குனரின் துணிச்சல்+திறமைக்கு வாழ்த்துக்கள்.


பல காட்சிகளில் முக்கியமாக தானாகத் தொழில் தேடும் இளைஞன், இறுதிக் காட்சி என்று இயக்குனர் இளைஞர்களுக்கு நம்பிக்கை விதைகளை ஊன்றவும் தவறவில்லை. அதற்கும் வாழ்த்துக்கள்.


இயக்குனர் வசந்தபாலன் மீண்டும் ஜெயித்துள்ளார்.ஈரமுள்ள இதயங்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள்.
பலர் திருந்துவதற்கும் இடமுள்ளது.


இயக்குனர் இந்தப் படத்தை எடுப்பதற்கு ரங்கநாதன் தெரு, சென்னையின் ஷாப்பிங் தலை நகர் T நகரில் எத்தனை நாள் தன உதவி இயக்குனர்களோடு தகவல் திரட்டில் ஈடுபட்டிருந்தாரோ .. அசத்தல். விளம்பரப் படம் முதல் வியாபார யுக்தி வரை அத்தனை விஷயங்களையும் விலாவாரியாகத் தந்துள்ளார்.


இப்படியான நல்ல படங்களை வெற்றி பெற வைக்காவிட்டால் தொடர்ந்தும் தமிழ்படம் சாட்டையடி கொடுத்த அதே சகதிக்குள் கிடந்தது உழலும் சாபக்கேட்டுக்குள் அகப்படவேண்டியது தான்.



March 27, 2010

அகப்பட்டார் அக்கறையுள்ள அனானி

இதற்குமுன் நான் இட்ட சாமியார்கள் பற்றிய பதிவு பெரும் பின்னூட்ட யுத்தங்களை உருவாக்கி ஏதோ சில தீர்வுகளை (!?) நோக்கிப் பயணித்துக் கொண்டுள்ளது.
போலி சாமியார்கள்,மயக்கமான பக்திகள் பற்றி எழுதினால் ஒரு சிலரின் (அல்லது ஒருவரின்)அனானிப் பின்னூட்டங்கள் வேறொரு திசையில் கருத்தோட்டத்தை இழுத்து செல்லப் பார்க்கின்றன. பரவாயில்லை.. இதெல்லாம் வலையுலகில் சகஜம் தானே..


சமயங்கள் பற்றி எப்போது எழுதினாலும் சச்சரவு,சர்ச்சை தான்.. அதுக்காக உண்மையை எழுதாமல் இருப்பதா?


படு துவேஷமாக வந்த இரு பின்னூட்டங்கள் தவிர (ஒன்று இந்து சமயத்துக்கெதிராக,இன்னொன்று இஸ்லாம் மார்க்கத்துக்கெதிராக) ஏனைய எல்லாவற்றையும் பிரசுரித்தேன்.


எனினும் இன்று அனாமதேயமாக இரு தடவை ஒரே பின்னூட்டம் மிக அக்கறையாக வேறொரு பதிவுக்கு வந்திருந்தது.


Anonymous has left a new comment on your post "நாளை விடியலில்.. கடவுள்களும்,அவதாரங்களும்": 


லோஷனுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் வரோ,கோபி போன்றவர்களுடன் பதிவர் சந்திப்பு என்ற பெயரில் கடற்கரைக்கு செல்வது போன்ற செயற்பாடுகளை அவர்கள் புகைப்படங்களாக தமது பதிவுகளில் போடுவதன் மூலம் உங்களை போன்ற சமூகத்தால் நன்கு அறியப்பட்ட பொறுப்பு மிக்க ஒரு நபர் கடற்கரையில் பெண்களை பார்த்து கலாசார சீரழிவுகளில் ஈடுபடுவது போலவும் ,உங்களை ஒரு தவறான முன்மாதிரியாகவும் காட்ட முயல்கிறார்கள்.தயவு செய்து இதற்க்கு துணை போகாதீர்கள் உங்கள் பங்கு சமூகத்தில் என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.அவர்களின் இப்படிப்பட்ட பதிவுகளை நீக்க முயற்சி எடுங்கள்


இது தான் அது.


வழமையாக இவ்வாறு மற்றவர்களது பெயர்களையும் குறிப்பிட்டு அனானிப் பின்னூட்டங்கள் வந்தால் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பதுண்டு.
யாராயிருக்கும்,என்ன காரணமாயிருக்கும் என்று..


மேலே சொன்னது போல என்னைத் தவறாகவோ,எனது சமூக அந்தஸ்தை(!?) கேலி செய்தோ எந்தவொரு பதிவும் வந்ததாகவும் தெரியவில்லை.
சில வேடிக்கைகள்,நகைச்சுவைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும் என நினைப்பவன் நான்.




படப்பதிவுகளில் கூட அப்படியொன்றும் பின்னூட்டத்தில் சொன்னது போல பெண்களைப் பார்ப்பது போலவோ,வேறெந்த ஆபாசமாகவோ எதுவும் இல்லை. எனது பதிவுலக நண்பர் வட்டத்தின் நாகரிக எல்லை,சமூகப் பொறுப்புணர்வு எனக்கும் தெரியும்.


எனவே, அட என்ன கொடும சார் இது என யோசித்துக் கொண்டே...


 இப்படி ஒரு அநாமதேயப் பின்னூட்டம் வந்தது பற்றி குறித்த பதிவர்களுக்கும்,சக குழுமப் பதிவர்களுக்கும் அறியத் தந்தேன்.. 


மின்னஞ்சல் அரட்டையில் ஒவ்வொருவரது ஆதங்கங்களும் இப்படி ....


கண்கோன் கோபி - ஆகா....
எல்லாத்திலயும் நான் வாறனே....
கதைக்காம பேசாம இருந்தாலும் வாறாங்கள்... அவ்வ்வ்வ்...




// நபர் கடற்கரையில் பெண்களை பார்த்து கலாசார சீரழிவுகளில் ஈடுபடுவது போலவும் //


எனக்குத் தெரிந்து அப்பிடியான பதிவுகளை யாரும் இடவில்லை...




அதுசரி, கடைசிச் சந்திப்புப் பற்றி யார் யார் பதிவிட்டீர்கள்?
வரோ, பவன்? சதீஷ் அண்ணா? வேறு யார்?




வந்தியத்தேவன் - 
அரசியலில் இதெல்லாம் சகஜம்.


ஆனாலும் என்னை விட்டுவிட்டு கோல் பேஸ் போனது சரியில்லை. 


இந்த வசனம் தான் இவரை சிக்க வைத்தது.. ஆகா அகப்பட்டார் என்று பிடித்துக் கொண்டோம்..  


சுபாங்கன் - நீங்களும் எங்களை விட்டுட்டு லண்டனுக்குப் போனது சரியில்லைத்தானே?


கண்கோன் கோபி - 
வந்தியண்ணா! என் மேல அப்பிடி என்ன கோவம்? :P


லோஷன் - ஒரு வேளை அன்று தானே நான் கங்கோனை புதிய வந்தி என்று அறிவித்தேன்.. அது தான் காரணமோ? ;)


(வந்தியரின் கல கல வெற்றிடத்தை அண்மைக்காலமாக பதிவுலக,ட்விட்டர் அரட்டைகளில் கொஞ்சமாவது போக்கி வருவது கலக்கல் பதிவர் கங்கோன் தான்)


 
சுபாங்கன் - க.க.க.போ. அன்று இதை நான் ஸ்கைப்பில் சொன்னபோது அவரது பதில் - சில நாட்களில் நான் திரும்பவும் பதிவெழுத வந்துவிடுவேன். இப்பதான் பிசி. இதிலேருந்து என்ன தெரியுது?


கண்கோன் கோபி - ஹா ஹா ஹா....
அதேதான்...
குத்துக் கல்லாட்டம் தானிருக்கேக்க தனக்கு போட்டியா ஒருத்தன களமிறக்கிற கோவம் போல?
வந்தியண்ணா! அந்தப் பதவிய நான் இன்னும் ஏற்கேல...




ஆகா அகப்பட்டார் அக்கறையுள்ள அனானி என்று ஒரு மொக்கைப் பதிவு போடலாம்னு முடிவெடுத்து உடனேயே நம்ம நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டிட்டுத் தான் ஆரம்பித்தேன்.
வந்தியும் கோபிக்க மாட்டார் என்ற நம்பிக்கயுடன். அவரின் பதில் தான் இன்னும் வரவில்லை.
கோபித்தாலும் என்ன லண்டனில் இருந்து இதுக்காக மினக்கட்டு இலங்கை வரவா போகுது மனுஷன்.. ;)


ஆனால் ஒன்று நான் தான் 'புதிய வந்தி' என்று சொன்னாலும் கூட அதை தம்பி கங்கோன் கோபி ஏற்றிருக்கக் கூடாது தான்.. என்ன சொல்றீங்க?(அப்பாடா சுபாங்கன் சொன்னதை செய்தாச்சு)


ஆனாலும் அரட்டையில் இதைப் பரபரப்பாகக் கிளப்பி பற்ற வைத்ததால் பெட்டி சுபாங்கன் இன்று முதல் பரட்டை (பத்த வைத்ததால்) சுபாங்கனாக தமிழ் கூறும் நல்லுலகத்தால் அழைக்கப்படுவார் என்று சொல்லிவிட சொன்னார் தம்பி பவன்.


பி.கு- இது வெறும் வேடிக்கைக்காக மட்டுமே.உண்மையில் என் மேல் உள்ள அன்பினாலும்,அக்கறையினாலும் அந்தப் பின்னூட்டத்தை யாரோ ஒரு நண்பர் அனுப்பி இருந்தால் அவரை நான் எவ்விதத்திலும் புண்படுத்தவில்லை. 
ஆனாலும் எந்தவொரு பதிவரும் என்னைப் பற்றி அப்படியொன்றும் தவறாக சித்தரிக்கவில்லை என்பதை அனானி நண்பருக்கு உணர்த்தவே இந்தப் பதிவு.


இல்லாவிட்டால் வேறு ஏதாவது காரணமாக அந்தப் பின்னூட்டம் அனுப்பப்பட்டிருந்தால், என்ன கொடுமை இது என்று சிரித்துக்கொண்டே விட்டு விட வேண்டியது தான்..




இனி வந்தியரின் என் உளறல்கள் அடிக்கடி கேட்கும் என நினைக்கிறேன்.. :)
(ஆனால் படிப்பையும்,பெண் - மனைவியை சொன்னேனப்பா பார்ப்பதையும் தொடருங்கோ மாமா)


March 24, 2010

அய்யோ அம்மா சாமி.. பக்தியும் சாமியார்களும் ஒரு மீள்பார்வை


கடந்த புதன் கிழமை எனது வெற்றி வானொலியின் (வெற்றி FM) காலை நிகழ்ச்சியான விடியலில் அண்மைக்காலப் பரபரப்பு விடயமான சாமியார்கள்,கடவுளின் அவதாரங்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியை போதுமான முன் அறிவித்தல், ஆனால் அளவுக்கதிகமான விளம்பரம் இல்லாமல் செய்திருதேன்.

நித்தியானந்தா விவகாரம் பரபரப்பாகியிருந்த நேரம் இந்த நிகழ்ச்சியை காலையில் நிகழ்ச்சியில் தலைப்பாக வழங்குமாறு பல நண்பர்கள்,நேயர்கள்,சக அறிவிப்பாளர்கள் கேட்டிருந்தபோதும் அந்தவேளை இத் தலைப்பை வழங்கி இருந்தால் எல்லாக் கருத்துக்களும் ஒரே மையப் பொருளுடன் ஒரு நோக்கு சார்ந்ததாகவே அமைந்திருக்கும் என்பதாலும், அந்நிகழ்ச்சியே சன் நியூஸ் போல மலிவான ஒரு விளம்பர யுக்தியாக அமைந்துவிடும் என்பதாலுமே நித்தியானந்தா விவகாரம் சற்று ஓய்ந்து போன பிறகு இத்தலைப்பை ஒரு ஆராய்ச்சி பூர்வமான விடயமாக நேயர்களிடம் விட்டிருந்தேன்.

அந்நிகழ்ச்சி பற்றிய பதிவொன்றைப் பலரும் கேட்டிருந்தீர்கள்..

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே நான் எனது முன்னைய பதிவிலே (
http://loshan-loshan.blogspot.com/2010/03/blog-post_16.html)சொன்னது போல
கடவுளை நம்புகிறீர்களா?கடவுளின் அவதாரங்கள்,கடவுளின் தூதுவர்கள்,கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?

எந்தவொரு சமயத்தையும் தனிப்படத் தாக்காமல் உங்கள் உங்கள் சமய நியாயங்களை,நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்று குறிப்பிட்டு விட்டே நிகழ்ச்சியை ஆரம்பித்தேன்.

இன்னொரு விடயமும் எனக்கொரு சந்தேகமாகவே இருந்தது.நிகழ்ச்சியிலும் பெரிதாக இந்த சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

அதென்ன போலி சாமியார்கள்,கடவுளின் அவதாரங்கள் மற்றும் கடவுளை அடைய வழி காட்டுவோர் அனைவரும் அல்லது அதிகமானோர் இந்து மதத்திலேயே தோன்றுகின்றார்கள்?
நிறையக் கடவுள்கள் இருப்பதாலா?

இன்னொரு விஷயத்தையும் ஆரம்பத்திலேயே என் தனிப்பட்ட கருத்தாக சொல்லி இருந்தேன்..

எந்தவொரு கடவுளையும் பெரிதாக நான் நம்புவதில்லை என்றாலும் இந்து சமயத்தின்படி வளர்க்கப்பட்டவன் என்றபடியாலும், இப்போதும் சமயமாக இந்து சமயத்தையே குறிப்பிடுவதாலும் இந்தப் போலி சாமியார்கள் அகப்படும்போதேல்லாம் இந்து சமயத்தை இவர்கள் கேவலப்படுத்துவதால் சமயத்தின் மீது மேலும் மேலும் வெறுப்பும் நம்பிக்கையீனமும் தோன்றுகிறது.

அதிக கடவுள் நம்பிக்கையுடையவராக இருந்த என் மனைவியும் கூட இப்போது கோவில் போவதில் ஆர்வம் காட்டாத அளவுக்கு இந்த சம்பவங்கள் மாற்றியுள்ளன.

இனி நேயர்கள் சொன்ன கருத்துக்கள்&sms மூலமும் மின்னஞ்சலிலும் அனுப்பிய விஷயங்கள்.

பதிவர் கங்கோன் மின்னஞ்சலிய விஷயம் -

அண்ணா....
முதலில் இந்த அருமையான நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்...

கடவுளை நம்புகிறீர்களா?
இதுவரை நம்பியதுமில்லை, நம்பாமல் விட்டதுமில்லை.
எமம்மைத்தாண்டிய நிகழ்வுகள் நடப்பதால் கடவுள் இல்லை என்று சொல்ல முடியாத நிலை, ஆனால் இதற்கு முன்பைய காலத்தில் எம்மைத் தாண்டிய அமானுசிய விடயங்கள் என்று கருதியவை தற்போது விஞ்ஞான ரீதியாக வேறு விதத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் நம்புவதிலும் யோசிக்க வேண்டிய நிலை.
கடவுளுக்கே இந்த நிலை என்பதால் சமயம் பற்றி சிந்திக்க முடிவதில்லை. :)
(உ+ம் புளியமரத்தில் பேய் இருப்பதாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் நம்பியிருந்தோம், ஆனால் விஞ்ஞானம் அதில் உண்மை என்ன என்பதை விளக்கமாகச் சொல்லியிருக்கிறதல்லவா)

கடவுளின் அவதாரங்கள்,கடவுளின் தூதுவர்கள்,கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?
கடவுளையே நம்புவதில் கஷ்ரம் இருக்கும் போது தூதுவர்களை எல்லாம் நம்புவது எம்மாத்திரம்?
இவர்கள் மக்களின் நம்பிக்கைகளை முதலீடாக வைத்து பணம் உழைக்கும் வியாபாரிகள்.
ஆனால் ஆன்மிக வாதிகளையும் இந்தத் தூதுவர்களையும் வேறுபடுத்திப் பார்க்கிறேன்.
தூதுவர்கள் பணம் உழைக்கக் கிளம்பியவர்கள், ஆன்மிகவாதிகள் தாங்கள் உறுதியாக நம்பும் ஒன்றை மற்றவர்கள் அறிய வேண்டும் என நினைப்பவர்கள்.
இதுவரை கடவுளின் தூதுவர்கள், வழிகாட்டுபவர்கள் என்று புறப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சட்டரீதியற்று அல்லது சமயத்தின் மார்க்கத்திற்கப்பாற்பட்டு செயற்பட்டது வரலாறு என்பதால் இவர்களை எதிர்க்கிறேன்.

நீண்டுவிட்டதோ?
கேள்வி அப்படி... 140 அல்லது 160 எழுத்துக்களில் விடையளிப்பது கடினம்... :)

மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா...

ஹனுமான் பூஜையை மல்லிகா ஷெராவத் மூலமாக ஆரம்பித்து வைத்த வாடா இந்திய (ஆ)சாமியார்

பிரேமகுமார்
கடவுளை நம்புகிறீர்களா?
கடவுளின் அவதாரங்கள்,கடவுளின் தூதுவர்கள்,கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?
கடவுளை நம்புகிறீர்களா? ஆம்
இந்துக் கடவுளர்களில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்களுள் விஷ்ணுவும் ஒருவர். சிவனும், பிரம்மாவும் ஏனைய இரு கடவுள்கள். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச் சொல்லப்படுகின்றது. விஷ்ணு சங்க காலத்திலிருந்தே தமிழில் திருமால் என்றும் அழைக்கப்படுகிறார். இந்துசமயத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தினர் விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

விவிக்தன் மின்னஞ்சல் மூலமாக
பாபாவோ- பகவானோ எல்லோரும் மனிதர்களே எனும் தெளிவு மக்களுக்கு வரவேண்டும். இயற்கையை மீறிய சக்தியென்று எவருக்கும் எக்காலத்திலும் இருந்ததில்லை. அப்படி ஒருவர் கூறுவாராக இருந்தால் அவர் ஒன்று ஏமாற்றுப் பேர்வழியாக அல்லது புத்தி பேதலித்தவராகத்தான் இருப்பார் எனும் உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு சட்டமும், ஊடகங்களும் துணை நிற்க வேண்டும்!
-----
அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பவனை உடனடியாக கைது செய்வதற்கு சட்டம் இருப்பதுபோல் எவனாவது நானே கடவுள் என்றோ அல்லது கடவுளின் அவதாரம் என்றோ கூறித்திரிந்தால் அவர்களையும் கைது செய்ய சட்டம் இருக்கவேண்டும். இப்படிப்பட்டவர்களின் கடந்தகாலங்களை ஆராய்ந்து மக்களுக்குத் தெளிவுபடுத்த ஊடகங்களும் போட்டி போட்டு செயற்பட வேண்டும்!

காலை வணக்கம் அண்ணா.

இந்த மோசடிகள் ஏமாற்றுக்கள் எல்லாம் எமது சமயத்திலேயே உள்ளன ஏனைய மதங்களில் அவ்வளவு கோப்பறேற் சாமிகளையோ அல்லது ஆசாமிகளையோ அதிகம் காணமுடியாது. எது எவ்வாறாயினும் எனது கருத்து இவ்வளவுதான் "மனிதன் மனிதன்தான் - கடவுள் கடவுள்தான்" இப்போது நடப்பவற்றை பார்த்தால் எனக்கு விவேக்கின் ஒரு நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது. இப்பபடிப்பட்ட சாமியார்களிடம் போய் தம்மைச் சீரளிக்கும் இவர்களுக்கு 100 அல்ல 1000 பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது.

நன்றி
நிசா - மலேசியா


பல நேயர்கள் சாமியில் நம்பிக்கை உள்ளதென்றும் சாமியார்களில் நம்பிக்கை கிடையாதென்றும் சொல்லி இருந்தாகள்.
ஒரு சிலர் முன்னர் இறை தூதர்கள்,நாயன்மார்கள் ஆகியோர் உண்மையாக இறைவனின் வடிவமாக அருள் பெற்றே வந்திருந்தார்கள் என்றும் ஆனால் இப்போது அவ்வாறு சொல்வோர் மோசடி செய்து பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்களென்றும் கூறினர்.
--
ஒரு சிலரின் கருத்துக்களில் ஏமாற்றப்பட்ட கோபமும்,கொதிப்பும் தெரிந்தது..
சில மதங்களில் இருப்பது போன்ற பகிரங்க,பயங்கரத் தண்டனைகள் இந்து சமயத்தில் வேண்டும் என்று தெரிவித்தார்கள்.சுட வேண்டும்,தூக்கில் இட வேண்டும். (இவற்றுள் சிலவற்றை நான் வானொலியில் வாசிக்கவில்லை)

இன்னும் சிலரின் கருத்துக்கள்

கடவுளுக்கு இடைத் தூதர்,இடைத் தரகர் தேவையில்லை.
கடவுளுக்கு வழிகாட்ட காசு ஏன் வாங்குகிறார்கள்?
கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றும் யாரையும் அரசாங்கங்கள் தடை செய்ய வேண்டும்.
சாமியார்களும் தொழிலாகவே இதை நடத்துவதால் வியாபார சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்து பிசிநெசாக செய்யலாம்.
(இந்த ஐடியா நல்லா இருக்கே.. நாமும் கூட பார்ட் டைமா செய்யலாம் போலிருக்கேன்னு யோசித்தேன்)

மதுவுக்கு அடிமையாவது போல இந்த மடத்தனத்துக்கு அடிமையாகிறார்கள்.இதற்கான விழிப்புணர்ச்சியை அனைத்து ஊடகங்களும் ஏற்படுத்தவேண்டும்.
வானொலிகள்,தொலைக்காட்சிகள் இந்தப் போலி ஆசாமிகளின் விளம்பரங்களைத் தவிர்ப்பது போலப் பத்திரிகைகள்,சஞ்சிகைகளும் உறுதியாக செய்ரபடவேண்டும்.
சாமியார்களை நான் ஏன் வணங்க வேண்டும்? அவர்களுக்கு என்னை விட சிறப்பாக வித்தியாசமாக உடலில் எதுவும் இல்லையே..
இதுவரைகாலமும் வருமான வரித்துறையினர் சாமியார்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டுல்லார்களா?
சமயம் உண்மை,.அது இல்லாவிட்டால் நாட்டில் மேலும் குற்றங்கள் அதிகரிக்கும். ஆனால் சமயத்தின் பெயரால் மூட நம்பிக்கைகள் வளர்ப்பதையும்,பணம் சம்பாதிப்பதையும்,மோசடிகள் செய்வதையும் தடுக்க வேண்டும்.


கடவுளையே நம்பலை.இதுக்குள்ளே இந்தக் கேவலமான ஜென்மங்கள் கடவுளுக்கு வழி காட்டுறாங்களா?
அடுத்து யார்?
இந்த நவீன காலத்தில் இணையம்,வீடியோ,கமெரா எல்லாம் வந்த பிறகே இவங்க இப்படிக் கூத்தாடினால் அந்தக் காலத்தில் இருந்த சாமியார்கள்,அவதாரங்கள் என்னென்ன திருவிளையாடல்கள் நடத்தினாங்களோ?

கதவைத் திறந்து காற்று வரச் செய்த அண்மைக்கால கதாநாயகர்

ஒரே ஒருவர் மட்டும், கொஞ்சம் வித்தியாசமாக சாமியார்களில் பிழையில்லை என்றும், அவர்கள் பல நல்ல விஷயங்களை சொல்லித் தந்துள்ளார்கள் என்றும், அவர்களின் தவறான பக்கங்களை நீக்கி நல்ல விஷயங்களை மட்டும் வாழ்க்கைக்கு எடுப்பது நல்லது;அப்படியில்லாதவர்கள் முட்டாள்கள் என்றும் சொல்லியிருந்தார்.
இப்போது சர்ச்சையில் மாட்டி இருக்கும் நித்தியானதாவும் கூட யோகா,தியானம் பற்றி பல நல்ல விஷயங்களை சொல்லியுள்ளார் என்பது அவரது கருத்து.

(எல்லாம் நல்லா தான் சொன்னாரு.. ஆனா அவரு மட்டும் ரொம்ப நல்லாவே செய்திட்டாரே..)

ஆனால் எனக்குப் பெரும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்த ஒரு விடயம், யாரோருவரும் என்னுடன் இத்தலைப்பை வழங்கியது தொடர்பாகவும்,சாமியார்கள்,பகவான்கள் பற்றி ஆதரித்தும் என்னுடன் சண்டைக்கோ,வாக்குவாதத்துக்கோ வராதது தான்.. ;)

இவ்வளவுக்கும் அவ்வேளையில் பிரபலமாக இருந்த சாமியார் ஜோக்சை இடையிடையே கடித்துக் கொண்டிருந்தேன்.
அடியவர்களே ரொம்பவே ஏமாத்திட்டீங்க..

எமது மக்கள் ரொம்பவே விழிப்பாக இருப்பதைப் பார்த்தால் இனி வருங்காலம் இந்தப் போலிகள்,பகவான்கள்,அவதாரங்கள் ஓடி ஒழிவார்கள் போலவே தெரியுது..


இவற்றோடு இன்றைய,நேற்றைய சில பரபரப்புக்களையும் பாருங்கள்..

கல்கி சாமியார் (அம்மா பகவான்) கூத்து...
அதான் நிறையப் பேர் வீடியோவே போட்டிட்டாங்களே.. நான் வேற ஏன் வலைப்பதிவை அசிங்கப் படுத்தணுமா?

பிரபல ஆங்கிலப் பாடகர் ஏகொன்(Akon) புத்த உருவத்தை அசிங்கப்படுத்தி விட்டதாக அவர் மீது எழுந்த குற்றச் சாட்டும், இலங்கை அரசு அவரது வீசாவை மறுத்தது.


சிந்தியுங்கள்.தெளிவாகுங்கள்.
முடிந்தால் குழம்பியிருக்கும் உங்கள் அன்புக்குரியவர்களையும் தெளிவாக்குங்கள்.


மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.

March 18, 2010

பாசத் தலைவா...


பாசமிகு தமிழினத் தலைவா

உங்களுக்கு இம்மடலை வரையவேண்டுமென்ற எண்ணம் பற்பல நாட்களுக்கு முன்னரே எனக்குத்தோன்றினாலும் பலவேறு காரணங்களினால் தள்ளிப்போட்டுக்கொண்டே போய்விட்டது.

என்னுடைய சுகவீனம், நித்தியானந்தா பரபரப்பு,IPL என்று உங்களை நான் தொடர்புகொள்ளத்தான் எத்தனை விதமான தடைகள்.

பவளவிழாக் கண்டும் பதவியிலிருக்கும் இளைஞரே, சக்கர நாற்காலியிலிருந்தாலும் சளைக்காமல் உலாவரும் சாதனை மன்னரே.. அல்ல சக்கரவர்த்தியே... (இந்த வாலி, வைரமுத்து கலந்துகொள்ளும் உங்கள் விழாக்கள், கவியரங்குகள் பார்த்த தோஷம், பிடித்த தோஷம்)

உங்களால் மட்டும் எப்படி முடிகிறது?


அரசியலில் நீங்கள் ஒரு சாணக்கியர்... அதில் மாற்றுக்கருத்தில்லை. மூன்று பிள்ளைகளையும் பிரச்சினையில்லாமல் (குடும்ப 10 கட்சி) மூன்று முக்கிய இடங்களில் அமர்த்திவிட்டீர்கள்.

உங்களுக்குப் பின் மகன் வர இனித்தடையில்லை.
எதிர்க்கட்சிகள் எழ இனி உடனடி வாய்ப்பில்லை.

குரல் கொடுக்கக்கூடியவர்கள், முனைந்தவர்கள் என்று பலராலும் கருதப்பட்ட, உசுப்பேற்றப்பட்டு வந்த பல திரை ஸ்டார்களும் அடக்கப்பட்டு உள்ளார்கள் - இல்லை பல் பிடுங்கப்பட்டுவிட்டார்கள்.

விஜயகாந் அடங்கிவிட்டார்: சரத்குமார் நுரைதள்ள மீண்டும் உங்களிடமே சரண்: விஜய் ஒரு அடி வைக்க முதலே கட்டம் கட்டப்பட்டுவிட்டார்: அஜித்?

பாருங்க ஐயா என்று முறையிட்டதற்கே முறிச்சு எடுத்தீட்டீங்களே... என்ன ஒரு ராஜதந்திரம்!

ஈழத்தமிழர் பிரச்சினைகளில் நீங்கள் நடந்துகொண்டவிதம் எதிர்கால அரசியல்வாதிகளுக்கு ஒரு முழுமையான பாடத்திட்டம்.

மன்மோகன், சோனியா, மகிந்தர் - இவர்கள் மூவரையும் சமாளித்து, தமிழ் அனுதாபிகளையும் போராட்டம் நடத்தியவர்கள், விமர்சித்தவர்களையும் அடக்கிய விதம் இருக்கிறதே – யாருக்கு வரும்?

உங்கள் வழிமுறைகளை அப்படியே நம்ம நாட்டுகேற்ப மாற்றி இங்கேயும் நம் ஜனாதிபதி மன்னராக மாறி தொடர் வெற்றியீட்டி வருகிறார். (சில விஷயங்களை உங்களையும் விஞ்சி காய் நகர்த்துகிறார்)உங்கள் வழிமுறைகள்,அரசியல் ஞானத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லாமல் வேறு என்ன?

அப்படியே அடிக்கடி உங்களை சந்தித்து ஆலோசனைகள்,ஆசிகள் பெறும் நம் தமிழ்த் தலைமைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுத் தரக்கூடாதா?

ஆனால் இதுக்கெல்லாம் மனதுக்குள்ளே உங்களைப்பற்றி வியந்தேனே தவிர கடிதம் எழுதிப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றியதில்லை..

ஆனால் 'பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா' உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்ததில் இருந்து எப்படியாவது உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும் எனத் தோன்றியது.

மீண்டும் அதே கேள்வி.. எப்படி ஐயா தங்களால் மட்டும் முடிகிறது?

இதற்கு முதலும் நீங்கள் கலந்து கொண்ட திரையுலகம் உங்களுக்கு நடத்திய பாராட்டு விழாக்களைப் பார்த்துள்ளேன்..
நான்கைந்து மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக வாளி,வாளியாக ஒவ்வொருவரும் உங்களைப் புகழ்ந்து தள்ளும்போது எவ்வாறு பொறுமையாக,கூச்சத்தால் நெளியாமல் உங்களால் இருக்க முடிகிறது?

பழகிவிட்டீர்களா?பழக்கி விட்டார்களா?
அதுவம் சும்மாவா.. இந்திரனே,சந்திரனே என்று அவர்கள் புகழ்வதும், போற்றிப் பாடி ஆடுவதும் பார்க்கும்போது ஏதோ மன்னர் காலத்துக்கு நாம் வந்துவிட்டோமோ என்று ஒரு பிரமை..

திரையில் எம்மைப் போன்ற சாதாரண ரசிகர்கள் காண ஏங்கித் தவிக்கும் மிகப் பெரிய நட்சத்திரங்கள் எல்லோரும் உங்கள் முன்னாள் சர்வசாதாரணமாக வந்து குத்துப் பாட்டுக்கும், உங்களைப் போற்றிப் பாடும் பாட்டுக்கும் 'பய'பக்தியுடன் ஆடுவது எமக்கெல்லாம் பரவசம்.

நீங்கள் வேண்டாமென்றாலும் உங்கள் அன்புக்குரிய 'அடி'யவர்கள் அவர்களையெல்லாம் காட்டுவது காட்டி அழைக்கிறார்கலாமே ஐயா.. ;) (இது அஜித் சொன்னது மாதிரி எல்லாம் இல்லீங்கோ)

பாசத்தலைவன் உங்களுக்கான விழாவில்,இந்திய சினிமாவின் உயர நடிகர் அமிதாப் மேடையில் பேசப்படும் விஷயம் புரியாமல் முழி பிதுங்கிக் கொண்டு அருகில் உள்ள கமலின் மொழிபெயர்ப்பை கேட்டு நெளிவதும், தமிழின் இரு சிகரங்கள் ரஜினியும் கமழும் என்ன விழா நடந்தாலும் உங்களுடனேயே அருகில் பயபக்தியுடன் இருப்பதுமாக உங்களுக்கான மரியாதை என்பதைவிட நிர்பந்தமாகவே தெரிகிறது.

அதுக்காக அஜித் சொனது சரியென்று நான் சொல்வேனா? அமிதாப்,கமல்,ரஜினி,இசைஞானி இவர்கள் எல்லாம் கம்முனு இருக்கும்போது இவருக்கு என்ன வந்துது?
உங்க பாசக் குழந்தைகள் பொங்கியதில் தப்பே இல்லை ஐயா..

ஈழத்து நாட்டவன் உனக்கென்ன வந்துது என்று உங்கள் பராசக்தி பாணியில் என்னிடம் கேட்டால், இதோ காரணங்களை அடுக்குகிறேன்..

பல விஷயங்களில் உங்களைப் பின்பற்றும் எங்கள் நாட்டில் கடந்த தேர்தலில் அடிக்கடி விருந்துகள் நடந்தது உங்களுக்குத் தெரியுமோ எனவோ, இன்னும் இந்தப் பாராட்டு விழாக் கலாசாரங்கள் தொடங்கவில்லை.
இந்த விஷயங்களைஎல்லாம் நம்ம நாட்டுப் பக்கம் கற்றுத் தந்துவிட வேண்டாம் என்று அன்பாக வேண்டிக்கொள்ளவே இந்தப் பாசமான மடல்.

அதுசரி அதிகமான பாராட்டுவிழாக்கள் கண்ட தலைவர் நீங்கள் தான் என்று அதற்கு ஒரு பாராட்டு விழா நடத்த உங்கள் அன்புக்குரிய உடன் பிறப்புக்களும், உங்கள் பாசத்துக்குரிய கலைக் குடும்பத்தினரும் தயாராகின்றனராமே.. உண்மையா?
இப்போதே கண்ணைக் கட்டுதே.. அதுவும் கலைஞர் தொலைக்காட்சியில் வருமா?

இப்படியே போனால் செம்மொழி மாநாட்டைக் கூட உங்கள் புகழ் பாடும் மாநாடாக நடத்தி விடுவீர்கள்.. மன்னிக்க விடுவார்கள் என்று பயமாக இருக்கிறதைய்யா..

மீண்டும் ஒரு வெற்றி கிடைத்தால் உங்கள் பாணியை இங்கேயும் பின்பற்றி விடுவார்கள் என மன சொல்லுதைய்யா.. அது தான் கண்ணைக்கட்டுகிறது.
அண்ணன் தம்பிமாரோடு இப்போது அடுத்த தலைமுறையும் களமிறங்கி இருப்பதால் தமிழக வடிவம் இங்கே மேலும் ஸ்திரத்தோடு தொடங்கிவிடும் போலிருக்கு.

எதற்கும் இன்னும் ஒரு மாத காலத்துக்காவது மேலும் ஒரு பாராட்டு விழா வேண்டாமே..
(அஜித் பொங்கியதற்குப் பிறகு நீங்களே அந்த முடிவில் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.. எதுக்கும் ஒரு தடவை உங்கள் திருச் செவியில் போட்டு வைக்கலாமே என்று தான்)

ஐய்யா இன்னும் இரண்டு ஐயங்கள்..

ஒண்ணுமில்லாத வெத்து வேட்டுக்கள் நாங்களே வலைப்பதிவுகள் ஆரம்பித்து உங்களைப் போல பெரிய,மகா பெரியவர்களை கலாய்க்கும் போது எல்லாத் துறைகளிலும் கரைகண்ட நீங்களும் ஒன்றை ஆரம்பித்தால் என்ன?
பின்னூட்டங்களும்,கும்மிகளும் களை கட்டும்..
வாக்கு மழையாய்ப் பொழியும்.
உடன் பிறப்புக்கள் உங்கள் பதிவுகளுக்காகவும் உயிரையும் கொடுப்பார்கள்.
இன்னும் கொஞ்சம் தேர்தல் வாக்குகளை அள்ளலாம்.. 'அம்மா'வையும் ஒரு வழி பண்ணலாம்..

நித்தியானந்த பற்றி நண்டு,சுண்டு எல்லாம் பலப்பல சொன்ன பிறகும் பகுத்தறிவு சிங்கம் தாங்கள் இன்னும் அது பற்றி கவிதையோ ,கடிதமோ எழுதலையே ஏன்? (ஒரு அறிக்கையோடு முடிந்ததா?)

உங்கள் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவிலாவது நேரில் வந்து கலந்துகொண்டு உங்களுக்காக அஜித் மகள்,விஜய் மகன், சூர்யா மகள்,தனுஷ் மகன் ஆடும் நடனங்களை(அப்போதாவது சித்தப்பா நடிகர்மார் ஓய்வு பெறுவார்கள் என நம்புவோமாக), அப்போதும் கமல்,ரஜினி வழங்கும் வாழ்த்துக்களைப் பார்த்து ரசிக்கக் காத்திருக்கும்

எளிமையான ஈழத்து மைந்தன்.


March 16, 2010

நாளை விடியலில்.. கடவுள்களும்,அவதாரங்களும்


நாளை (புதன் கிழமை) எனது காலை நேர வெற்றி FM நிகழ்ச்சியான விடியலில் சமயங்கள், கடவுள்கள், அண்மைக்காலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கடவுளின் தூதுவர்கள் பற்றி நேயர்களின் கருத்துக்களோடு அலசி ஆராய இருக்கிறேன்.


கடவுளை நம்புகிறீர்களா?கடவுளின் அவதாரங்கள்,கடவுளின் தூதுவர்கள்,கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?

எந்தவொரு சமயத்தையும் தனிப்படத் தாக்காமல் உங்கள் உங்கள் சமய நியாயங்களை,நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..

முற்கூட்டியே உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் வாயிலாக எனக்கு அனுப்பி வைக்கலாம்..
vettri@voa.lk

நாளைக் காலை ஏழு மணி முதல் விடியல் கேளுங்கள்..

பல நாட்களாக பல பேரின் வேண்டுகோளின் பேரில் சில பரபரப்புக்கள அடங்கிய பிறகு இந்த நிகழ்ச்சியை நாளை விடியலில் தருகிறேன்.



March 15, 2010

அடி சக்கை IPL - முதல் மூன்று நாள் அலசல்



IPL 2010ன் முதல் 3 நாட்களின் நிகழ்வுகளின் தொகுப்பு இது.

ஒரு வருடத்தின் பின் தாயகம் திரும்பிய IPL இன் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆரம்ப நிகழ்வுகள் - கலை நிகழ்ச்சிகள் அயர்ச்சியையும் அசதியையும் தந்திருந்தன.

ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த ஆரம்ப நிகழ்வுகளில் சிக்கென்ற உடையில் A.R.ரஹ்மானின் ஒஸ்கார் புகழ் ஐய்ஹோ பாடலுக்கு ஆடிய நடனம் மட்டுமே பார்க்கக்கூடியதாக இருந்தது.

நாணய சுழற்சியும் தாமதமாக, ஒரு கட்டத்தில் எரிச்சல் வந்து பொறுமை இழக்கும் நிலைக்குச் சென்றுவிட்டேன்.

என் வீட்டின் Dish TV இணைப்பில் IPL ஐ ஒளிபரப்பும் Set Max இருக்கவில்லை. ஒருசில நாட்கள் முன்னர்தான் மேலதிக பணம் செலுத்தி இணைப்பைக்கேட்டிருந்தேன்.

இந்தியாவில் IPLஇன் பரபரப்பினால் Set Maxற்கு ஏற்பட்ட அதிக வரவேற்பு எனக்கு கிடைக்கவேண்டிய இணைப்பைத் தாமதமாக்கிவிட்டது.

இதனால் IPLஇன் நேரடி இணைய ஒளிபரப்பிலே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எப்படி இருந்திருக்கும்?

நல்லகாலம் அடுத்தநாளே Set Max வந்துவிட்டது.

=======

IPL ஐப் பணமயமாக்கி கிடைக்கும் ஒவ்வொரு இடுக்கிலும் பணம் பார்க்கும் லலித்மோடி கடந்த IPLஇல் Strategy breakஎன்ற இடைவேளையை உருவாக்கி, ஒவ்வொரு பத்து ஓவருக்குமிடையில் 7 1/2 நிமிடங்களை விளம்பரமாக்கி காசு பார்த்திருந்தார்.

எனினும் இந்த இடைவேளையானது வீரர்களின் மனநிலையையும் போட்டியில் விரைவுத் தன்மையையும் பாதிப்பதாகக் கண்டனங்கள் எழுந்திருந்தன. முக்கியமாக சச்சின், கில்கிறிஸ்ட், சங்கக்காரவிடமிருந்து

இதனால் இம்முறை இந்த இடைவேளை (விளம்பர இடைவேளை) 2 1/2 நிமிடங்களாகக் குறைக்கப்பட்;டதோடு, பந்துவீசும் அணியின் வியூகங்களை திட்டமிடலாம் என மாற்றப்பட்டுள்ளது.

நல்லது.
ஆனால் இந்த இடைவேளைக்கும் ஒரு அனுசரணையாளர். என்ன கொடுமை இது Mr.மோடி.



IPL போட்டிகளை இம்முறை தொலைக்காட்சியில் பார்ப்பது கடந்த முறைகளில் பார்த்த கேளிக்கை உணர்வுகளை தராமல் வழக்கமான கிரிக்கெட் போட்டிகள் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

காரணம் முதல் இரு IPLஇலும் ஒரு ஓவருக்குள் நான்கைந்து தடவையாவது திரைகளில் ப்ரீத்திகளும், ஷில்பாக்களும், ஷாருக்களும், Cheer leading girlsமே தெரிவார்கள். இல்லை மோடி கோட் சூட்டுடன் தெரிவார்.

இந்தத் தடவை கிரிக்கெட்டே அதிகமாகத் திரையில் தெரிகிறது. மகிழ்ச்சி!

(நீங்க வேற... வயதேறிய ப்ரீத்தியையும், ஷில்பாவையும், தைய்யா தக்காவென குதிக்கும் cheer leading பெண்களையும் பார்த்து விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டிகளைக் கடுப்பாக்கிக்கொள்வதைவிட only cricket எவ்வளவோ பரவாயில்லை)

===========

கடந்த முறை தடுமாறிய அணிகளே இம்முறை Favourites என்று கருதப்படும் பலம்வாய்ந்த அணிகளைத் தோல்வியுறச் செய்துள்ளன. நேற்றிரவு நடப்புச் சம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ் மட்டும் தம்மை நடப்புச் சம்பியனாக நிரூபித்துக்கொண்டார்கள்.

வட்மோர் - வசிம் அக்ரம் - கங்குலியின் கூட்டில் கொல்கத்தாவும் (மத்தியூஸ் மாயாஜாலம் மிகமுக்கியமானது) – சச்சின் - ரொபின்சிங் - ஜொண்டியின் கூட்டில் மும்பாயும் கலக்குகின்றன.

கொல்கத்தாவின் உத்வேகம் அசத்துகிறது.

=========

IPL என்றால் வீரர்களுக்குப் பணம் கொழிக்கும் போட்டிகள் தானே ஞாபகம் வரும்?
ஆனால் நான்கு தலைவர்கள் இந்த ஐந்து போட்டிகளுக்குள்ளாக தலா 20000 டொலர்களை இழந்துள்ளார்கள்.. தண்டப்பணமாக.

தமது அணிக்குரிய ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டமைகாக கங்குலி,டெண்டுல்கர்,சங்கக்கார, கம்பீர் ஆகிய நால்வருமே பணத்தைக் கொடுத்த பாவிகள்.
இப்படியே ஒவ்வொரு போட்டியிலும் நடந்தால் இவர்கள் சம்பளமும் காலி.போட்டிகளில் விளையாடவும் முடியாது.


=============

அணிகளின் ஜேர்சிகளில் சென்னை, பெங்களுர், பஞ்சாப் மாற்றவில்லை. ராஜஸ்தான் வாய்க்கவில்லை.

கொல்கொத்தாவில் ஊதா அதிர்ஷ்டம் மேல இருக்கிறது. ஆனால் அழகில்லை.

டெல்லி பரவாயில்லை. டெக்கான் நீலம் அழகாயிருக்கிறது.
மும்பாய் தான் இம்முறை நேர்த்தியான அழகு. அடர் நீலத்தில் அழகான தங்க நிற வேலைப்பாடு.

============

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று – ஒதுங்கியிருந்தும் கில்கிறிஸ்ட், வாஸ், சைமண்ட்ஸ் ஆகியோரின் கலக்கல் அதிரடிகளும், இன்னும் fit ஆக இருக்கும் ஹெய்டன், கங்குலி, வோர்ன், கும்ப்ளே ஆகியோரும் ஆச்சரியப்படுத்துகின்றனர்.

இளையோருக்கு நல்ல எடுத்துக்காட்டுக்கள்.

இவர்களுடன் இணைந்துகொள்ள மேற்கிந்தியத்தீவுகளின் பிரையன் லாராவுக்கும் வலை விரிக்கப்படுகிறது. கொல்கொத்தா-பெங்களுர் போட்டியின்போது மோடியுடன் தொலைக்காட்சியில் லாராவும் வந்த போதே IPL 4 இற்கு லாராவை அழைப்பது பற்றி சிரிப்புடன் கொஞ்சம் சீரியசாகக் கேட்டபோது லாரா உடனே மறுக்கவில்லை.

"ஜிம்முக்குப் போக வேண்டும் போல இருக்கு.. என் உடல் இன்னும் ஒரு சில மாதங்களில் என்ன சொல்கிறதோ அதன்படி செய்யலாம் "என்றார் லாரா சிரித்தபடி.
லாராவுக்கு வயது 40 .

=========

இதுவரை ஐந்து போட்டிகளில் 54 சிக்சர்கள் பறந்திருக்கின்றன.இது தென் ஆபிரிக்காவில் நடந்த கடந்த IPL ஐ விட அதிக ஓட்டங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்பதையே காட்டுகிறது. இந்திய ஆடுகளங்களும் துடுப்பாட்ட சாதகமானவை தானே..

நேற்று சென்னையில் நடந்த போட்டியில் பல சுவாரஸ்யங்கள்..

தமிழ்க் குத்துப்பாடல்களை இடையிடையே கேட்கக் கூடியதாக இருந்தது.
சிவமணியின் ட்ரம்ஸ் வாத்திய வாசிப்பு..ரசிகர்களின் ஆர்வம்..
இதெல்லாவற்றையும் விட இன்னொன்று..
நாயொன்று போட்டியை இடையிடையே ஸ்தம்பிக்க வைத்தது..
கடந்த IPL இலும் சென்னையின் முதல் போட்டியில் நாயொன்று புகுந்தது ஞாபகமிருக்கலாம்..

சிங்கங்களுக்கு நாய் வருவது துரதிர்ஷ்டமோ??

==========

இந்த மூன்று நாட்களில் யூசுப் பதானின் அதிவேக சதம் தான் மிக முக்கியமான மைல் கல். அசுர அடி அது.ஆனால் பாவம் அவரது அணி தான் தோற்று விட்டது.இன்றிரவும் அவர் மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது.

IPL வரலாற்றில் வேகமான சதம் இது.ட்வென்டி 20௦ போட்டிகளில் இரண்டாவது வேகமான சதம்,
(வேகமான ட்வென்டி 20 சதம் அன்றூ சைமண்ட்சினால் இங்கிலாந்து பிராந்தியப் போட்டியொன்றில் 34 பந்துகளில் பெறப்பட்டது)

ஆனால் இப்போதைக்கு இந்த IPL இன் கதாநாயகர்கள் இருவருமே இலங்கையர்கள் தான்...

பந்தாலும்,துடுப்பாலும் இரு போட்டிகளிலும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அஞ்சேலோ மத்தியூசும், இரு போட்டிகளிலும் துல்லியமான பந்துவீச்சின் மூலம் விக்கெட்டுக்களை சரித்து இலங்கைத் தேர்வாளர்களின் முகத்தில் கரி பூசியுள்ள சமிந்த வாசுமே அவர்கள்.

மத்தியூஸ் தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலுமே உலகறியத் தன் சகலதுறைத் திறமைகளைக் காட்டி வருகிறார். பலம் வாய்ந்த அச்சுறுத்தும் பெங்களுர் அணியின் துடுப்பாட்ட வரிசையை உடைத்து நான்கு விக்கெட்டுக்களை குறைவான ஓட்டங்களுக்கு எடுத்தும் நேற்று போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது மனோஜ் திவாரிக்கு வழங்கப்பட்டது.

மீண்டும் form க்கு திரும்பியிருக்கும் அவரை ஊக்குவிக்கவோ? இல்லை அடுத்தடுத்த போட்டிகளில் மத்தியூசுக்கு கொடுக்கக் கூடாதென நினைத்தார்களோ?

தனது பந்துவீச்சில் வேகத்தையோ,பவுன்சையோ நம்பாமல் துல்லியம்,ஸ்விங் ஆகியவற்றினூடு விக்கெட்டுக்களை எடுக்கும் அதே வாஸை இரு போட்டிகளிலும் பார்த்தேன்.தேர்வாளர்களே எதிர்வரும் ட்வென்டி 20 உலகக் கிண்ணத்தில் வாசின் பங்களிப்பு நிச்சயம் உதவும்.கொஞ்சம் யோசியுங்கள்.

15 வருடங்கள் பின்னோக்கி சென்றால் இன்றைய இதே நாள் தான் வாஸ் தன்னை உலகறியச் செய்து இலங்கை அணிக்கு சரித்திரபூர்வமான முதலாவது வெளிநாட்டு டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த நாள்.
நியூ சீலாந்தில் வாஸ் இரு இன்னிங்க்சிலும் தலா ஐந்து விக்கெட்டுக்கள் எடுத்து சாதனை படைத்தார்.
ஆனால் இப்போது கொஞ்சம் வேகம் குறைந்தாலும் அதே ஈடுபாட்டையும் துல்லியத்தையும் பார்க்கிறேன்.

என்னைக் கவர்ந்த இன்னொருவர் கில்க்ரிஸ்ட்.ஓய்வு பெற்றும் என்ன துடிப்பு.. என்ன அதிரடி. கில்லி கில்லி தான். பதானுக்கு அடுத்தபடியாக கூடுதல் ஓட்டங்கள் குவித்துள்ளவரும் இவரே தான்.தலைமைத்துவத்திலும் ஜொலிக்கிறார்.

கம்பீரின் நிதானமான ஆட்டமும் கவர்ந்தது.தலைமைத்துவப் பொறுப்பான ஆட்டம் அது.

இன்று டெல்லியும் ராஜஸ்தானும் சந்திக்கும் போட்டி இரவில்.
முதல் போட்டியில் சோபிக்கத் தவறிய சேவாக்,டில்ஷான், ஷேன் வோர்ன்,ஷோன் டைட் ஆகியோருக்கான சந்தர்ப்பம்.
அதுபோல 'அசுர' பதான் இன்று என்ன செய்யப் போகிறார் என்பதையும் ஆவலோடு காத்திருக்கிறேன்..



March 13, 2010

IPL 2010 அலசல் - பகுதி 2



மூன்றாவது IPL இன் முதலாவது போட்டி மிக விறுவிறுப்பாக நிறைவுக்கு வந்துள்ளது.
சௌரவ் கங்குலியின் தலைமையிலான கொல்கொத்தா அணி மிக நேர்த்தியாகவும்,நிதானமாகவும் ஆடி நடப்பு சம்பியன் டெக்கானை மண்கவ்வ வைத்துள்ளது.

முதல் ஓவரிலேயே இரு விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் கொல்கொத்தாவின் மீளக் கட்டிஎழுப்பலும், பின்னர் கில்க்ரிஸ்ட்டின் அதிரடியின் பின்னர் பந்துவீச்சில் காட்டிய தீவிரமும் கொல்கொத்தாவுக்கு அபாரமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளன.

இலங்கையின் அஞ்சேலோ மத்தியூஸ் உலகத் தரமான சகலதுறை வீரராக தான் வளர்ந்துவருவதை மீண்டும் சர்வதேச அரங்கொன்றில் பிரம்மாண்டமாகக் காட்டியுள்ளார்.
டெல்லி அணியினால் சரியாகப் பயன்படுத்தப்படாத ஒவேயிஸ் ஷா இன்று கொல்கொத்தாவுக்காக ஆடிய அதிரடி ஆட்டம் அவர் எவ்வளவு பயனுள்ள ஒரு வீரர் என்பதைக் காட்டி இருக்கும்.

கில்லி,வாஸ் - வயதேறினாலும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் சிங்கங்கள் சிங்கங்களே..

இனி கடந்த பதிவின் தொடர்ச்சியாக ஏனைய நான்கு அணிகளின் பலம்,பலவீனங்களை அலசுவோம்..


கிங்க்ஸ் XI பஞ்சாப்
புதிய தலைவராக குமார் சங்கக்காரவுடன் களமிறங்கும் பஞ்சாப் அணி முகாமில் இம்முறை உற்சாகம் கொஞ்சம் குறைவு தான்.கட்டிப்பிடி வைத்தியம் செய்ய ப்ரீத்தி சிந்தாவும், காசை வாரி வழங்க கணக்கற்ற அனுசரணையாளர் இருக்கும்போதும், காயத்தின் காரணமாக முக்கியமான பல வீரர்களை இழந்து பலவீனமாகத் தான் இம்முறை பஞ்சாப் ஆரம்பிக்கிறது.

முன்னாள் தலைவரும் அதிரடி ஆணிவேருமான யுவராஜ் சிங் அண்மையில் தான் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளார்.
ஷோன் மார்ஷ்,ப்ரெட் லீ,இர்பான் பதான், ஜெரோம் டெய்லர் ஆகியோரின் உபாதைகள் அவர்களை முதல் சில வாரங்களுக்காவது விளையாட விடாது எனத் தெரிகிறது.

எனினும் அனுபவமும் ஆற்றலும் கொண்ட இலங்கை இரட்டையர் மஹேல,சங்கா இருவரில் தான் அதிக பொறுப்புக்கள் சுமத்தப்பட இருக்கின்றன.யுவராஜும் பூரண சுகத்தோடு களமிறங்கினால் அணியின் மத்திய வரிசை உறுதியாகிவிடும்.

இவர்கள் தவிர இங்கிலாந்தின் ரவி போபரா,ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் ஹோப்ஸ் ஆகியோரது சகலதுறைத் திறமைகளும், ஸ்ரீசாந்த்,யூசுப் அப்துல்லா,பியுஷ் சாவ்லா, ரமேஷ் பவார், புதிதாக இம்முறை இணைந்துகொள்ளும் மேற்கிந்திய இளம் துடுப்பாட்ட வீரர் அட்ரியன் பரத், எல்லோராலும் கழற்றிவிடப்பட்டு பஞ்சாப் அடைக்கலம் கொடுத்துள்ள மொகமத் கைப் (ஞாபகமிருக்கா இவரை?) போன்றோரும் நம்பிக்கை தருகிறார்கள்.
யுவராஜ்,கைப்பின் சகா சோதி,இளம் வீரர்கள் கோயேல்,ஸ்ரீவத்சவா ஆகியோரும் பிரகாசிக்கக் கூடியவர்களே.
எனினும் எல்லா அணிகளையும் விட விஞ்சி இம்முறை பஞ்சாப் அணி நம்பிக்கையாக இல்லை.

முதலாம் சுற்றில் சில போட்டிகளை வெல்வதற்கே சங்காவும் சகாக்களும் மிக சிரத்தையோடும், மிக சிறப்பாகவும் விளையாட வேண்டி இருக்கும்.

அரையிறுதி இம்முறையும் சிரமமே.



ராஜஸ்தான் ரோயல்ஸ்

ஷேன் வோர்னின் மாயஜாலத்தாலும்,ஆஸ்திரேலியா பயன்படுத்திக்கொள்ளாத அவரது தலை சிறந்த தலைமைத்துவப் பண்புகளாலும் முதலாவது IPL இல் வெற்றிக் கனி பறித்த ராஜஸ்தான் கடந்த முறை தென் ஆபிரிக்க ஆடுகளங்களில் தடுமாறி இருந்தது.இப்போது மீண்டும் பழக்கமான களங்களில் கலக்கும் எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது.

40 வயதாகிற மந்திரவாதி வோர்ன் இம்முறையும் அதே போன்ற துடிப்புடன் இருக்கிறாரா என்பதே எல்லோரதும் ஆர்வமான கேள்வி.
வெளிநாட்டு வீரர்களை முழுமையாக நம்பாமல் உள்ளூர் 'வளங்களை' சரியாக இனம் கண்டு பயன்படுத்துவதே வோர்னின் வெற்றியின் ரகசியம்.இம்முறையும் அவர் ஊக்கப்படுத்தி இளைய இந்திய வீரர்கள் மூலமாக சாதிக்கவே நினைக்கிறார்.
வோர்னின் பிரியத்துக்குரிய அதிரடி மன்னன் யூசுப் பதான் தன கிரிக்கெட் வாழ்க்கையின் மிக சிறந்த அதிரடி form இல் இருக்கிறார்.
ஸ்வப்னில் அஸ்னோட்கர்,நாமன் ஓஜா,த்ரிவேடி,முனாப் படேல்(எனக்கென்றால் கண்ணில் காட்டமுடியாதவர் இவர்),கடந்த முறை அதிரடியைக் கலக்கி பந்துவீச்சுப் பாணியின் சர்ச்சையில் காணமல் போன கம்ரான் கான் ஆகியோர் வோர்னின் அதிரடி ஆயுதங்கள்.

ஆனால் ராஜஸ்தானின் சர்வதேச வீரர்கள் இம்முறை அனைத்து அணிகளையும் அச்சுறுத்தக் கூடியவர்களாகத் தெரிகிறது.
அனைவரும் வோர்னினால் பிரத்தியேகமாக சேர்க்கப்பட்டவர்கள்.

காயத்திலிருந்து மீண்டுகொண்டிருக்கும் தென் ஆபிரிக்கத் தலைவர் ஸ்மித், ஜொஹான் போதா,வேகப்பந்துவீச்சாளர் மோர்னி மோர்கல், ஆஸ்திரேலியாவின் form இல் இருக்கும் முன்னணி சகலதுறைவீரர் வொட்சன்,ஆஸ்திரேலியாவின் ஓய்வுபெற்ற வீரர் டேமியன் மார்டின், இங்கிலாந்தின் அதிரடி சகலதுறை வீரர் மச்கேரனாஸ், இவர்களுடன் இப்போது அண்மைக்காலமாக அதிவேகமாகப் பந்துவீசி அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் அச்சப்படுத்திவரும் ஷோன் டைட் என்று வரிசை நீளம்.

ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் சகலதுறைத் திறமைகளை ராஜஸ்தான் இம்முறை அதிகமாகவே இழக்கப் போகிறது.இரகசியமாக தன்னை உயர் விலைக்கு வேறொரு அணிக்கு தானே விர்கப்பார்த்து கையும் களவுமாக மோடியிடம் அகப்பட்டு இம்முறை தடை செய்யப்பட்டுள்ளார் ஜடேஜா.

ராஜஸ்தான் வோர்னின் முழுமையான ஆளுகையில் இருப்பது தான் அவர்கள் பலமும் பலவீனமும்.. சில நட்சத்திரங்களின் பலம் பிரம்மாண்டமாய் தெரிந்தாலும், வயதேறிச் செல்லும் வோர்னும்,மார்ட்டினும் இளைய வீரர்களின் உத்வேகத்துக்கு ஈடுகொடுப்பார்களா என்பதைப் பொறுத்தே ராஜஸ்தானின் ராஜ நடை உள்ளது.
அணிக்கு ஷில்பா ஷெட்டியின் மேலதிக பயிற்சிகள் தேவைப்படலாம்,, உற்சாகத்துக்கு..

அரையிறுதியை எட்டிப் பார்க்கும் வாய்ப்பு உள்ள அணி இது..


மும்பை இந்தியன்ஸ்

உலகின் பணக்கார இந்தியரின் சொந்த அணி..
உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் தலைமை தாங்குகிறார்.
உலகின் சிறந்த வீரர்கள் பலர் உள்ள அணி.
நல்ல form இல் உள்ள பல வீரர்கள் உலா அணி..
இப்படி மும்பை அணி இம்முறை கனவு அணிகளில் ஒன்றாக IPL களம் காண்கிறது.

சச்சின் தனது வாழ்நாளில் மிக சிறந்த ஓட்டங்கள் குவிக்கும் காலகட்டத்தில் தலைமை தாங்குகிறார்.
அவரோடு சக ஆரம்ப ஜோடியாக அதிரடி மன்னன் சனத் ஜெயசூரிய.
அர்சிகர்களுக்கு கேட்க வேண்டுமா?
கனவு அணிஎன்று சொன்னதில் என்ன தப்பு?

ஆரம்ப பந்து வீச்சு ஜோடி.. சகீர் கான்&லசித் மலிங்க.
சுழல் பந்துவீச்சுக்கு ஹர்பஜன் சிங்..
FORM இல் உள்ள அதிரடி வீரர் கீரன் பொல்லார்ட் அதிக விலைக்கு வாங்கி புயல் கிளப்பக் காத்துள்ளார்.
சகலதுறை நட்சத்திரங்கள் டுமினி,பிராவோ..
இன்னும் டில்கார பெர்னாண்டோ(எமக்கு மட்டும் தான் இவர் மீது நம்பிக்கை இல்லை அப்படியா?),நேப்பியர்,மக்ளறேன்,மற்றும் இளைய இந்திய நட்சத்திரங்கள் அபிஷேக் நாயர்,தவல் குல்கர்னி,ஷீகர் தவான்,அம்பாடி ராயுடு என அணி மிகப் பலமானது.

இவர்களோடு ICL இல் பிரகாசித்து மீண்டுள்ள தமிழக வீரர் ராஜகோபால் சதீஷையும் கவனியுங்கள்.ஒரு நேர்த்தியான அதிரடி துடுப்பாட்ட வீரரும்,சகலதுறை வீரரும்.

எனவே என்ன இல்லை இந்த அணியிடம் எனும் அளவுக்கு அபாரமான அணியாகவே மும்பை தெரிகிறது.போதாக்குறைக்கு பயிற்சியளிக்க பொல்லாக்,ஜோன்டி ரோட்ஸ்..

இத்தனையும் போதாதா இறுதிப் போட்டியிலும் வென்று IPL சாம்பியனாக?
அஆனாலும் என மனது என்னவோ மும்பை அரையிறுதி சென்றாலும் அதன் பின் சறுக்கும் என்றே சொல்கிறது.. (இது சோதிடம் அல்ல)

அதிரடிகளை மும்பை போட்டிகளில் பார்க்கலாம்..
இறுதி வரை செல்லக் கூடிய பலமான அணி இது..


கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்

கிங் கானின் அணி. கங்குலி மீண்டும் தலைவராக மாறியதை அடுத்து அணி திடம் பெற்று அணிக்குள் ஒற்றுமை வந்தாலும் கூட இன்னமும் முழு உத்வேகம் பெறவில்லை என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால் கெயில்,மக்கலம் போன்ற அதிரடி நட்சத்திரங்கள் இல்லாமலேயே இன்று பெற்ற முதல் வெற்றி கொல்கொத்தாவை இனி உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் எனக் காட்டுகிறது.

சீருடை கருப்பில் இருந்து ஊதாவாக மாறியுள்ளது.பயிற்றுவிப்பாளராக நல்ல விளைவைத் தரக்கூடிய டேவ் வாட்மோர், பந்துவீச்சாளர்களுக்கு தக்க ஆலோசனை தர வசீம் அக்ரம் என்று கொல்கொத்தா இம்முறை ஒரு கை பார்க்கலாம் என ஷா ருக் கானுடன் கிளம்பியுள்ளது.

அதிரடி,அனுபவம்,இளமை என நல்லதொரு கலவை.
உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷேன் பொன்டை அதிக விலைக்கு வாங்கியுள்ளர்கள்.ட்வென்டி 20 சர்வதேசப் போட்டிகளில் சதமடித்த இருவருமே இவர்கள் அணியில்.(கெயில்,மக்கலம்) உலகில் ட்வென்டி 20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் குவித்த ஹோட்ஜும்,T 20 சர்வதேசப் போட்டிகளில் கூடுதல் ஓட்டங்கள் குவித்துள்ள மக்கலமும் இந்த அணியில்.

க்றிஸ் கெயில்,பிரெண்டன் மக்கலம்,பிராட் ஹோட்ஜ்,அஜந்த மென்டிஸ்,ஒவேயிஸ் ஷா,சார்ல் லாங்கவெல்ட்,அஞ்சேலோ மத்தியூஸ் என்று பிரபல இறக்குமதிகள்.

அனுபவமிக்க இந்திய வீரர்கள் அகர்கர்,திண்டா,முரளி கார்த்திக்,ரோகான் கவாஸ்கர்,சுக்லா,புஜாரா,மனோஜ் திவாரி,சகா, இஷாந்த் ஷர்மா என்று அணி பளிச்சென ஜொலிக்கிறது.

ஆனால் முன்னைய தொடர்களில் நைட் ரைடர்ஸ் சொதப்பக் காரணமாக அமைந்தது தேவையான சூழ்நிலைக்கேற்ற அணியை அவர்கள் தேர்வு செய்யாததே.இம்முறை நலதொரு திட்டமிடல் குழு அமைந்திருப்பது பலன் தரும் என நம்பலாம்.
அத்துடன் தேவையான நேரத்தில் உள்ளூர் வீரர்கள் பிரகாசிக்கவேயில்லை.இம்முறை பல இடங்களில் இருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட திவாரி,விக்னேஷ் போன்றவர்கள் பிரகாசிக்கவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

டெல்லியிலிருந்து வாங்கப்பட்ட ஷாவும்,இலங்கை அணிக்கு அண்மையில் சில வெற்றிகளை அனைத்து துறையிலும் காட்டிப் பெற்றுக் கொடுத்த மத்தியூசும் இன்று கொல்கொத்தாவுக்கு பெரிய வெற்றியொன்றை வழங்கியுள்ளார்கள்.

கெயில்,பொன்ட்,மக்கலம் தேசியக் கடமைகளை முடித்து வர நைட் ரைடர்ஸ் இன்னும் வேகம் எடுக்கலாம்.

அரையிறுதி வரும் குறிகள் தெரிகின்றன.


===============

ஆனால் டெஸ்ட்,ஒரு நாள் போட்டிகள் போலல்லாமல் இவ்வகை ட்வென்டி ௨௦ போட்டிகள் ஒரே ஓவரில் மாறக்கூடியவை,ஒரு தனிநபரின் சாகசம் அல்லது சொதப்பல் போட்டியை மாற்றிவிடும்..
எனவே அவசரப்பட்டு இப்போதே கிண்ணம் நிச்சயமாய் யாருக்கு என சொல்லி மூக்குடைபடாமல்,அதை சில நாட்கள் போக ஊகிப்போம்.


நாளை (இன்றாகி விட்டது) இரு போட்டிகளும் இரத்த ஓட்டங்களை எகிற வைக்கும் விறுவிறுப்பு தருபவை.

மாலையில் சச்சின்-ஷேன் வோர்ன் மோதலாக மும்பை-ராஜஸ்தான் போட்டியும், இரவில் டெல்லி-பஞ்சாப் போட்டியும் இடம் பெறுகின்றன.

இனியென்ன தினமும் IPL கூத்து தான்..

March 12, 2010

IPL 3 ஆரம்பம்.. அணிகள் ஒரு பார்வை.



மீண்டும் உலக கிரிக்கெட் திருவிழா ஆரம்பிக்கிறது.
இன்று முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரை இனி ஒவ்வொரு நாளும் IPL தான் ஒவ்வொருவர் பேச்சாகவும்,பலரின் மூச்சாகவும் இருக்கப் போகிறது.

கடந்த வருடம் தென் ஆபிரிக்கா சென்று மீண்டும் IPL தாயகம் திரும்புவது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், முன்னைய இரு தொடர்களைப் போலப் பெரிதாக பரபரப்பைக் காணோம்.
ரசிகர்களுக்குக் கொஞ்சம் போரடித்து விட்டதோ?
ஆனால் வீரர்களுக்கு மட்டும் பணம் கொழிக்கும் இந்த சுரங்கம் எப்போதுமே தேவை.

அடுத்த முறையிலிருந்து பத்து அணிகளாக மாறவுள்ள இத்தொடரில் இமமுறையும் எட்டு அணிகளே.
தமது வளத்தையும் பலத்தையும் காட்டிக் களத்தில் இன்று முதல் குதிக்கின்றன.

இம்முறை IPL தொடரின் முதல் சில வாரங்களுக்கு ஆஸ்திரேலியா, நியூ சீலாந்து,இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளின் நட்சத்திர வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள்.

இம்முறை அணிகளைப் பார்த்தால் டெல்லி அணியும்,பெங்களுர், டெக்கான் அணிகளும் பலம் போருந்தியனவாகத் தெரிகின்றன.

ஐந்து அணிகளுக்கு இந்திய வீரர்களும், ராஜஸ்தானுக்கு ஆஸ்திரேலியாவின் ஷேன் வோர்னும், பஞ்சாபிற்கு இலங்கையின் தலைவர் குமார் சங்கக்காரவும், நடப்பு சம்பியன்கள் டெக்கான் அணிக்கு கடந்த அவருடம் போலவே அடம் கில்க்ரிஸ்ட்டும் தலைமை தாங்குகிறார்கள்.

கடந்த முறை தென் ஆபிரிக்காவில் முதல் சுற்றில் அசத்தி, அரையிறுதிக்கு முன்கூட்டியே தெரிவான சென்னையும்,டெல்லியும் மண் கவ்வ இறுதியில் பெங்களுர் அணியும் டெக்கான அணியும் மோதி இருந்தன.

இம்முறை மோதுகின்ற எட்டு அணிகளின் பலம்,பலவீனங்களை இந்தப் பதிவில் அலசுவோம்.
இன்றிரவு எட்டு மணிக்கு முதலாவது போட்டி ஆரம்பிக்கு முன் எப்படியாவது உங்களை இந்தப் பதிவு அடையவேண்டும் என்ற அவசரம் எனக்கு.

IPL 2 இல் அணிகள் பெற்ற நிலைகளின் அடிப்படையில் அணிகளை வரிசைப்படுத்துகிறேன்.


2009 IPL சம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ்

நடப்பு சம்பியன்.
அதிரடி துடுப்பாட்ட வீரர்களும், கில்க்ரிஸ்ட்டின் தலைமைத்துவ அணுகுமுறையும் பழங்கள்.அதேவேளையில் டரன் லீமனின் பயிற்றுவிப்பின் பின்புலமும் கடந்த முறை வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தன.

சர்வதேச நட்ச்சத்திரங்கள் அன்றூ சைமண்ட்ஸ்,ஹெர்ஷல் கிப்ஸ்,சமிந்த வாஸ்(இவருக்கு இம்முறையும் அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை),ட்வெய்ன் ஸ்மித் ஆகியோர் அணியில் இருப்பது ஒரு பலமே.

எனினும் கடந்த முறை வேகத்தால் அச்சுறுத்திய பிடேல் எட்வேர்ட்ஸ் இம்முறை இல்லை. காயமுற்ற அவருக்குப் பதிலாக இன்னொரு அதிவேகப் புயலை மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து அழைத்துள்ளார்கள்.அவர் கெமர் ரோச்.
ஆஸ்திரேலிய இளைய அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் இம்முறை உன்னிப்பாக அவதானிக்கக்கூடிய இன்னொரு வீரர்.

எனினும் கில்லிக்குப் பின்னர், இந்திய இளம் வீரர்கள் சிலரே இந்த அணியின் முதுகெலும்புகள்.
கடந்த முறை கூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய ஆர்.பீ.சிங், அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா, சகலதுறை நட்சத்திரம் வேணுகோபால் ராவ், சுழல் பந்து வீச்சாளர் ஓஜா ஆகியோருடன் கில்லி பிரமாதமாக பரிந்துரை செய்யும் இளைய விக்கெட் காப்பாளர் மோனிஸ் மிஸ்ராவும் பிரகாசித்தவர்கள்;கலக்குவார்கள்.

லக்ஸ்மன் பாவம்.அணியில் விளையாடினாலே பெரிய விஷயம்.

கில்லி,சைமண்ட்ஸ் ஆகியோரின் அதிரடி எதையும் மாற்றக்கூடியது.
இந்திய ஆடுகளங்களில் ஜெயிக்கும் சுழல் பந்து வீச்சுப் பலம் இல்லையென்பது குறையே.

தெலுங்கானா பிரச்சினையால் இம்முறை சொந்தமைதானத்தில் போட்டிகளை விளையாட முடியாமல் போவது டெக்கான் அணிக்கு இன்னும் ஒரு குறையே.

கடுமையாக முயன்றால் அரையிறுதி வரலாம்.



2009 இல் இரண்டாமிடம் பெங்களுர் ரோயல் சலேஞ்சர்ஸ்

பணக்காரப் பின்னணி கொண்ட பலம் வாய்ந்த அணி.
அனுபவமும் அதிரடியும் இணைந்த அணி இது.
கடந்த முறை கும்ப்ளே அணிக்குத் தலைவராகக் கொடுத்த உறுதியும் நம்பிக்கையும் இம்முறையும் தொடர்வது ஆரோக்கியமானது.

கும்ப்ளேயின் கூலான தலைமையில்,டிராவிடின் அனுபவம்&நிதானம், ஜாக்ஸ் கலிஸின் உலகத்தரம்,பீட்டர்சனின் அதிரடி,பவுச்சர்,ரோஸ் டெய்லரின் கலக்கல்,உத்வேகம்,டேல் ஸ்டெய்னின் அதி வேகம், இவற்றுடன் இப்போது உச்ச Form இல் இருக்கும் கமேரோன் வைட்டும் இணைந்துகொள்ளும் போது இந்த அணியால் எந்த அணியைத் தான் வீழ்த்த முடியாது?

போதாக்குறைக்கு இம்முறை இங்கிலாந்தின் புதிய அதிரடி மன்னர் ஒயின் மோர்கனும் பெங்களுர் அணியில் இணைந்துள்ளார்.

உள்ளூர் நட்சத்திர வரிசையும் பெங்களுர் அணியின் மிகப்பெரும் பலம்...
விராட் கொளி, பிரவீன் குமார், மனிஷ் பாண்டே, ராபின் உத்தப்பா,வினய் குமார் என்று பெயர்களைக் கேட்டாலே பலம் தெரியும் அணி இது.

எனினும் அணியை சமச்சீராக,சமபலத்துடன் பேணுவதிலேயே பெங்களூரின் வெற்றி நடை தங்கியுள்ளது.

இத்தனை நட்சத்திரங்களில் நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் பலமான அணியை சரியாகத் தெரிவு செய்வதில் கும்ப்ளேயும்,பயிற்றுவிப்பாளர் ரே ஜென்னிங்க்சும் வெற்றி பெற்றால் அதுவே பாதி வெற்றியாகும்.

இம்முறை கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அணி இது.


டெல்லி டெயார்டெவில்ஸ்

கம்பீரின் தலைமையில் டெல்லி அணி இம்முறை மிகப்பலமான அணிகளில் ஒன்றாகக் களம் காண்கிறது.
அதிரடித் துடுப்பாட்ட வீரர்கள் நிறைந்த அணியாகவும்,கடந்த இரு முறையும் கடைசி நேரத்தில் அரையிறுதியில் சறுக்கி வெற்றிக் கிண்ணத்தைக் கோட்டைவிட்ட துரதிர்ஷ்ட அணியாகவும் டெல்லியை நோக்குகிறோம்.

சேவாக்,டில்ஷான்,டேவிட் வோர்னர், டீ வில்லியர்ஸ்,தினேஷ் கார்த்திக் என்று சர்வதேச அதிரடி வீரர்களையும், மிதுன் மன்ஹாஸ்,ரஜத் பாட்டியா போன்ற டெல்லி துடுப்பாட்ட வீரர்களையும் கொண்ட பலமான அணி.

மக்கரா இம்முறை இல்லாத குறையை நீக்க டேர்க் நன்னாஸ், ஆசிஷ் நெஹ்ரா, பிரதீப் சங்கவான்,அவிஷ்கார் சால்வி ஆகியோருடன் இம்முறை ஆச்சரியம் தரும் விதத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இளம் தென் ஆபிரிக்கக் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னலும் எதிரணிகளை அச்சுறுத்துகிறார்கள்.
இவர்களோடு மூன்று முக்கிய சகலதுறை வீரர்களாக மகரூப்,மக்டோனால்ட் மற்றும் மொயசாஸ் ஹென்றிக்கேஸ்..
சுழல் பந்துவீச அமித் மிஷ்ரா இருக்கிறார்.


இரு முறை விட்ட குறையை இம்முறை நீக்கக வேண்டும் என்பதில் குறியாக வெறியோடு இருக்கும் இளைய,உத்வேகமான அணி இது.
களத்தடுப்பிலும் கலக்கும் அணி இது.

அணியின் சமபலத்தைப் பேணுவதே இந்த அணிக்கும் சவாலான விடயம்.
முக்கியமான சர்வதேச வீரர்கள் சிலர் (வெட்டோரி,கோல்லிங்க்வூத்,ஷா) இம்முறை இல்லாதது சிறு குறையே.எனினும் இன்னும் சில வீரர்கள் விளையாடாமல் இருக்கவேண்டும்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுக்கான தெரிவுகள் பல இருப்பதும்,வேகப்பந்து வீச்சுத் தெரிவுகளும் பல இருப்பதும் குழப்பத்தைத் தரலாம்.

பிரச்சினையான ஆடுகளம் டெல்லி அணிக்கு அடுத்த சவால்.

சம்பியனாகக்கூடிய அணி.


சென்னை சூப்பர் கிங்க்ஸ்


இரு தடவை கிட்டே வந்து சறுக்கிய இன்னொரு அணி.ஆனால் கடந்த முறைகளை விட இம்முறை கொஞ்சம் பலவீனமாகவே இருக்கிறது.
டோனி,ஹெய்டன்,முரளி என்ற மூன்று பெரும் தலைகள் தவிர வேறு யாரும் பெரிய நட்சத்திரங்களாக இம்முறை இல்லை.

மைக் ஹசி சிலவாரங்களின் பின்னே வந்து இணைந்து கொள்ளவுள்ளார்.
ந்டினி வயதேறி தென் ஆபிரிக்க அணியிலும் இல்லை.
அல்பி மோர்க்கலும் அண்மைக்காலமாக அதிரடியாடுவதாக இல்லை.
திலான் துஷாரா இப்போது தான் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார்.

நட்சத்திர சகலதுறை வீரர்கள் ப்ளிண்டோபும்,ஜகொப் ஒராமும் இம்முறை காயத்தால் விளையாட முடியாதுள்ளனர்.
ICL இல் இருந்து மீண்டுள்ள தென் ஆபிரிக்காவின் ஜஸ்டின் கேம்ப் இவர்கள் இடத்தை நிரப்புவாரா?
இல்லை இலங்கையின் புதிய அதிரடி வரவு திசர பெரேரா கலக்குவாரா?

பத்ரிநாத்,ரெய்னா, முரளி விஜய்,பாலாஜி,அஷ்வின்,ஹெமாங் பதானி(ICL இல் இருந்து திரும்பியுள்ளார்), மொன்ப்ரீத் கோனி,சுதீப் தியாகி போன்ற உள்ளூர் நட்சத்திரங்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.
பெரிய நட்சத்திரங்கள் சறுக்கிய நேரம் இவர்கள் பிரகாசித்து வெற்றிகளைப் பெற்றது மறக்கவில்லை,.


சுருக்கமாக சொன்னால் அணியாக செய்ரபட்டாலே அடுத்தகட்டத்தைத் தாண்டக்கூடிய அணி.தோனியின் அதிர்ஷ்ட லக்ஷ்மி(ராய் இல்லை) ஹெய்டனின் அதிரடி,முரளியின் மாயாஜலத்துடன் இணைந்து ஏதாவது செய்தாலே சென்னை ஜெயிக்கும்.

பயிற்றுவிப்பாளர் பிளெமிங் புதிய யுக்திகளை வகுப்பாரா என்பதும் ஒரு கேள்வி.

முரளி,அஷ்வின்,ஷதாப் ஜகதி ஆகியோரின் சுழல் பந்துவீச்சு இணைப்பு கொடுக்கும் தாக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அரை இறுதிக்கான வாய்ப்பு சிரமமே.


===========
ஏனைய நான்கு அணிகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்..

எட்டு மணிக்கு நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ், கடந்த முறை கடைசி இடம் பிடித்த கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.

கங்குலியா கில்க்ரிஸ்ட்டா?
கிங் கான் ஆடுவாரா? ;)
விறுவிறுப்பை ரசிப்போம்..


இவற்றையும் பார்த்து ரசியுங்கள்...




கடந்த வருடத்தின் IPL பற்றிய முன்னோட்டம்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner