December 31, 2010

சில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மனம் திறக்கிறேன்

வருடம் விடைபெற முன்னர் மனதில் இருக்கின்ற சில விஷயங்களைக் கொட்டி விடுகிறேன்.. 
இது சிலருக்கு பாடம், சிலருக்கு விடைகள், சிலருக்கு செய்திகள்.. சிலருக்கு எச்சரிக்கை..
எனக்கும் இன்னும் ஒரு சிலருக்கும் மனதின் பாரம் குறைதல்..  

கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சிலரின் வலைப் பதிவுகளை, வலைப்பதிவுகளோடும் தொடர்புபட்ட கடவுச் சொற்களைக் கைப்பற்ற யாரோ ஒரு வேலையற்ற ஒரு கும்பல் அல்லது ஒருவர் முயன்று கொண்டே இருக்கிறார்.

எனக்கு மட்டும் என்றில்லாமல், சக இலங்கைப் பதிவர்களான ஆதிரை(ஸ்ரீகரன்),கண்கோன்,சுபாங்கன் ஆகியோருக்கும், லண்டனில் வசிக்கின்ற வந்தியத்தேவன்,சதீஷ் ஆகியோருக்கும் இந்தத் தொல்லை சில காலமாக இருந்துவருகிறது.

ஒரு தடவை என்றால் பரவாயில்லை.. இது பல தடவை பல விதமாக..
ஆனால் இந்த Hacking வேலையில் ஈடுபடுவோர்(இவர்கள் செய்யும் சிறுபிள்ளைத் தனமான,முட்டாள் தனமான முயற்சிகளை Hacking என்று சொல்வது உண்மையான Hackersக்கு கேவலமாக அமையலாம்) இலக்கற்ற முட்டாள்கள்.

காரணம், எந்தவொரு மேலதிகமான தொழிநுட்ப அறிவும் இல்லாமல் சும்மா மேம்போக்காகக் குருட்டு இலக்கில் கடவு சொல்லுக்கு முயற்சி செய்தால் வேறு என்ன சொல்வது?

கடந்த புதன் கிழமை மட்டும் என்னுடைய மின்னஞ்சல்(ஜீமெயில்) கடவுச் சொல்லை உடைப்பதற்கு மட்டும் ஒன்பது தடவை முயன்றுள்ளார்கள் இந்த புத்திஜீவிகள்.

அதன் பின் என்னுடைய பேஸ் புக்க்குள்ளும் நுழைய முயன்றுள்ளார்கள்.

பாவம்.. இவ்வளவு முட்டாள்களாக இருப்பார்கள் என்று தெரிந்திருந்தால் என்னிடம் நேரே கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்.. பாவம்.

கண்கோனுக்கும் மற்றோருக்கும் கூட இவ்வாறே முயன்றுள்ளார்கள்.
எம்மைப் பற்றி எம் ரசனைகள் பற்றியாவது கொஞ்சம் தெரிந்திருந்தால் கடவுச் சொற்களை ஊகிப்பது இலகுவாக இருந்திருக்கும்..

அதுசரி மற்றவர்களின் மின்னஞ்சலகளைத் தோண்டித் துருவி என்ன செய்யப் போகிறார்கள்? ஏன் மற்றவர்கள் பற்றி ஆராய்வதே இவர்களின் வேலையாக இருக்கிறது?

இந்த கடவுச் சொல் களவாடும் வேலை ஆரம்பித்தது இன்று நேற்று அல்ல.. ஆரம்பத்தில் அநாமதேயப் பின்னூட்டங்கள் மூலமாகக் கேவலமான விஷயங்களைப் பரப்ப, சிலருக்கிடையில் பிளவுகளை பிரச்சனைகளை ஏற்படுத்த முனைந்தவர்கள் தான் பின்னர் இப்படி முயல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பின்னூட்டங்கள் மூலமாக இதில் குறிப்பிடப்பட்டவர்கள் தவிர வேறு பலரைப் பற்றியும் அவதூறு பரப்ப முற்பட்டவர்/முற்பட்டவர்களின் IP + இதர விபரங்கள் எங்களுக்குத் தெரிந்தே இருந்தன ..
(ஆனால் எரிச்சல்.தாழ்வு மனப்பான்மை தவிர வேறு என்ன நோக்கம் அவர்களுக்கு இருந்தது என்று இன்று வரை தெரியவில்லை)


ஆஸ்திரேலியாவில் இருந்தே ஒரே குறித்த IPஇல் இருந்தே இந்த விஷம/தகாத பின்னூட்டங்கள் சிலரைக் குறிவைத்து எமதும் பலரதும் பதிவுகளுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன.
(இதுக்குள் வலைப்பதிவை முடக்குகிறேன், ஹக் செய்கிறேன் என்று மிரட்டல்கள் + முடிஞ்சாக் கண்டுபிடி என்று ஜம்பங்கள் வேறு)


VISITOR ANALYSIS
Referrerhttp://www.blogger.com/profile/03043239239939605371
Host Name123-243-127-139.static.tpgi.com.au
IP Address123.243.127.139 [Label IP Address]
CountryAustralia
RegionVictoria
CityHawthorn
ISPTpg Internet Pty Ltd.
Returning Visits0
Visit LengthMultiple visits spread over more than one day


VISITOR ANALYSIS Referrer http://www.blogger.com/profile/03043239239939605371 Host Name 123-243-127-139.static.tpgi.com.au IP Address 123.243.127.139 [Label IP Address]Country Australia Region Victoria City Hawthorn ISP Tpg Internet Pty Ltd. Returning Visits 0 Visit Length Multiple visits spread over more than one day


Tpg Internet Pty Ltd. (123.243.127.139) [Label IP Address]

Australia Hawthorn, Victoria, Australia, 2 returning visits


இத்தோடு இலங்கையின் கொழும்பிலிருந்தும், இடையிடையே யாழ்ப்பாணத்திலிருந்தும் சில குறித்த IPகளில் இருந்து சில விஷமப் பின்னூட்டங்கள் வந்துகொண்டே இருந்தன.

எனவே குறைந்தது இரண்டு பேர் இந்த வலையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது.
ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல, நல்லவர்கள் போல இவர்கள் நட்புறவாடியது கண்டும் சிரித்துக் கொண்டேன்/டோம்.

சில மாதங்களுக்கு முன்னர் இருந்த பரபரப்பான (வேண்டத்தகாத சூழலில்) இவர்களை அப்பட்டமாக ஆதாரங்களோடு காட்டியும் இருக்கலாம்.
ஆனால் அதற்கும் ஆதாரங்களைப் பொய்யானவை என்று கூசாமல் கூறவும் இவர்கள் தயங்கார் என உணர்ந்தோம். தேவையில்லாமல் சேற்றுக்குள் உருள நான்/நாம் தயாரில்லை.

 இவை  பற்றியெல்லாம் பெரிதாக நாம் யாரும் அலட்டிக்கொள்ளாமைக்கான காரணம் தேவையில்லாமல் பதிவுலகில் இருக்கும் சர்ச்சைகளில் ஏன் நாமும் எங்கள் பங்குக்கு குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும்; பிரித்துக்கொண்டு அடிபட வேண்டும் என்று.

பதிவுலகப் பின்னூட்டங்கள், போலிக் கணக்குகள், அநாமதேயப் பின்னூட்டங்கள் சகஜமானவை;தவிர்க்க முடியாதவை என்பதனால் இவ்வளவு காலமும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் கொஞ்சம் அடங்கி இருந்த வெளிநாட்டு IPகாரர் இப்போது கொஞ்சம் தொழினுட்பத்தை/கறள் பிடித்துள்ள மூளையைத் தட்டி மீண்டும் விஷம அனானிப் பின்னூட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளார். நாள் ஒரு நாட்டு IPஇல் இருந்து..

இதே நபர் தனது வேலையை போலி Profileமூலமாக கன்கோனுடன் வாலாட்டுவதும் குறிப்பிடத் தக்கது.
எம்மில்/உங்களில் பலரின் பதிவுகளில் கன்கோன் என்ற போலி Profile மூலமாக பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
http://www.blogger.com/profile/10226248193881788515

 (இவரது அதிமேதாவித்தன வேலைகளை IP இல்லாமலும் இவரது வழமையான சில அடையாளங்கள் (?), உடைந்துபோன ஆங்கிலம் மூலமாக யாவரும் இனம் கண்டுகொள்ளலாம்)

இப்போது மின்னஞ்சல்/வலைப்பதிவுகளின் கடவுச் சொற்களைக் களவாடும் நடவடிக்கையையும் ஆரம்பித்த பிறகு எல்லோரையும் எச்சரிப்பது எனது கடமையாகிறது.
எனவே தான் இந்த வருடத்தின் இறுதி நாளில் இதைப் பதிவாக அல்லாமல் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாகக் கொடுத்துள்ளேன்.

இவர்கள் திருந்திவிட்டோம்;வருந்துகிறோம் என்று சொல்லிப் பழக வந்தால் கூடப் பரவாயில்லை.
பிழையே செய்யவில்லை என்று போக்குக் கட்டி,நடித்து,விளக்கங்கள் சொல்லிக் கொண்டு போலி நட்புப் பூணும் நேரத்தில் என்னால் மனதில் இருப்பதை மறைத்துப் போலியாக வார்த்தைகளில் கனிவு+இனிப்பு தடவிப் பொய்யாக என்னால் பழக முடியாது.

மனதில் இருப்பதை நேரே கொட்டுபவன் நான். அதையே வலைப்பதிவுகளிலும் கடைக் கொண்டு வருகிறேன்.

நல்லவர்கள் என்று எல்லோரையும் நம்பிப் பழகும் அப்பாவிகள் பலரும் எம் வலைப்பதிவு சமூகத்தில் இருக்கும் நிலையில் இந்த நடிப்பு சிகாமணி நரிகள் யாரோ,எவரோ என்று அடையாளம் கண்டுகொள்வது உங்களுக்கும் நல்லது இல்லையா?

உண்மையிலேயே நல்லவர்களுக்கு கொஞ்சம் தொழிநுட்ப அறிவைப் பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவுகள்,மின்னஞ்சல்களைப் பாதுகாத்திடுங்கள். பல நூறு நல்லவர்களுக்கிடையில் இருக்கும் விஷக் கலைகளை அடையாளம் கண்டிடுங்கள்.

அவர்களுக்கு, புது வருடத்திலாவது திருந்துங்கப்பா..

இதை இந்த வருடத்தின் இறுதிப் பதிவாக இட மனம் ஒப்பவில்லை. ஆனாலும் நாளை முதல் எம் 'வெற்றி'யில் ஏற்படவுள்ள நம்பிக்கையான,புதிய மாற்றங்கள் மூலமாக தலையில் வந்து குவிந்துள்ள வேலைகளால் நேரம் தான் கைவசம் இல்லை. :)

பார்க்கலாம். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குள் முடிந்தால் இன்னொரு பதிவுடன் வருகிறேன்...

எல்லா நண்பர்களுக்கும் எனது இனிய புது வருட வாழ்த்துக்கள் !!!!!
பிறக்கும் 2011 உங்கள் அனைவருக்கும் உங்கள் நல்ல மனங்கள் போல நல்ல வாழ்க்கையும் மகிழ்ச்சியும் தரட்டும்.

December 30, 2010

Boxing Day Tests பார்வை

நேற்றைய தினம் இந்த வருடத்தின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி நாளாக அமைந்தது. Boxing Day Test போட்டிகளின் இறுதி நாட்களாக அமையவேண்டிய இன்றைய நாளுக்கு முன்பதாகவே முடிந்துபோனதும், இதற்கு முந்தைய போட்டிகளில் வென்ற அணிகள நேற்று சுருண்டு தோற்றதும், போட்டிகளை நடத்திய,ஆடுகளங்களை சாதகமாக அமைக்க வாய்ப்பிருந்த (அமைத்தனவோ, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டனவோ அவர்களுக்கே வெளிச்சம்) இரு அணிகளுமே பரிதாபமாகத் தோற்றது ஆச்சரியமான ஒற்றுமைகள்.


மெல்பேர்ன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றி ஓரளவு எதிர்பார்த்ததே. பேர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அதிவேகத்தில் தடுமாறித் தோற்றாலும் இங்கிலாந்தின் திட்டமிடலும் ஆடுகளத்தைப் புரிந்து செயற்படும் ராஜதந்திரமும் இத்தொடரில் மட்டுமல்ல, ஸ்ட்ரோஸ்+அன்டி பிளவர் கூட்டணியின் ஆரம்பம் முதலே பல அபார வெற்றிகளைக் கொடுத்துவந்த அம்சங்கள்.

மேல்பேர்னிலும் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை உருட்டி ஓரங்கட்ட முக்கிய காரணங்களாக அமைந்தவை இவை மட்டுமல்ல என்பது எல்லோருக்குமே தெரியும்.
ஆஸ்திரேலிய அணி என்ற மரத்தின் ஆணிவேர் ரிக்கி பொன்டிங்கின் தொடர்ச்சியான தடுமாற்றம் அவருக்குத் தன்னையும் உற்சாகப்படுத்திக்கொள்ள முடியாது போயுள்ள நேரத்தில், தளர்ந்து போயுள்ள அணியை எவ்வாறு உத்வேகப்படுத்தி வெற்றியைத் தொடர்ச்சியாகப் பெற்றுத் தருவதாக மாற்றமுடியும்?

மைக் ஹசியைப் போல (ஹசியும் மெல்பேர்னில் படுமோசமாக மிகைக் குறைவான ஓட்டப் பெறுதிகளுக்கு ஆட்டமிழந்தது மேலும் அதிர்ச்சி), வொட்சனைப் போல(எப்போது அரைச் சதங்களை சதமாக்கப் போகிறார்???) ஓட்டங்களைக் குவித்து தலைவர் பொன்டிங்கின் பாரத்தை,அழுத்தத்தைக் குறைக்கக் கூட ஒருவருமே இல்லை.
ஆஷஸ் தொடங்க முதலில் அதிகம் பேசப்பட்ட கலும் பெர்குசன், உஸ்மான் கவாஜா ஆகியோர் பற்றித் தேர்வாளர்கள் மறந்துவிட்டார்களா?

யார் இந்த ஸ்டீவ் ஸ்மித்? அணிக்குள் என்ன செய்கிறார் இவர்?
என்னைப் பொறுத்தவரை ஹியூஸ், கிளார்க்,ஸ்மித் ஆகியோரை உடனடியாக அணியை விட்டுத் துரத்தவேண்டும்.

ரிக்கி பொன்டிங்கைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற அண்மைய கருத்துக்களில் (முன்னைய ஆஷஸ் தோல்விகளின் பின்னரும் இதே போன்ற விமர்சனங்கள் எழுந்த விமர்சனங்களும் இவையே) எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை.ஆனாலும் இப்போது இருக்கும் தடுமாற்றமான இல் பொன்டிங்கினால் இது போன்ற பலமான இங்கிலாந்து அணியை இங்கிலாந்துக்கும் சமபல சாதகமுள்ள ஆடுகளங்களில் ஜெயிக்கவைக்க முடியாது என்பது தெரிகிறது.

ஆனாலும் சிட்னி டெஸ்ட் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பொன்டிங்கைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கி வேறொருவரைத் தலைவராகக் கொண்டுவருவதானது மாபெரும் முட்டாள்தனமாக அமையும்.அத்துடன் புதிய தலைவராக வருபவர் மீது பல மடங்கு அழுத்தத்தைக் கொடுக்கும்.
  ஆனால் கிரேக் சப்பெலும் அதிமேதாவித்தனமான ஏனைய தேர்வாளர்களும் முதலில் பதவி விலகவேண்டும்.. அணித்தேர்விலே முதலில் கோட்டைவிட்டுத் தலைவரையே முடமாக்கியதன் முழுப் பொறுப்பையும் இவர்களே ஏற்கவேண்டும்..

இப்படியெல்லாம் நேற்று இரவு வரை எழுத்துக்களைக் கோர்த்துவிட்டு,இன்று காலை வந்த செய்திகளால் அதிர்ச்சியடைந்து போனேன்..

ரிக்கி பொன்டிங் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்..
இடது கை விரல் முறிவு காரணம்..

நம்ப முடியவில்லை. காயம் காரணமாகத் தான் பொன்டிங் விளையாடவில்லை என்பதை யாரும் நம்பப்போவதில்லை. வெளியேற்றுவது எப்படி என்று நினைத்த தேர்வாளருக்கு ஒரு சாட்டு விரல் முறிவு ரூபத்தில் கிடைத்துள்ளது.
பாவம் ரிக்கி பொன்டிங் .... 36 வயதில் மீண்டும் போராடி அணிக்குள் வருவதும் தலைமைப் பதவியை அடுத்த தொடரில் மீட்பதும் ஆஸ்திரேலியக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில் மிக சிரமமானதே..

ஆஷஸ் டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள ஒரு நாள் தொடருக்கான அணியில் பொண்டிங்குக்கு இடம் வழங்கப்படுமா என்பதிலிருந்து ('விரல் முறிவு' குணமடைந்தால்) உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பொன்டிங் தலைமை தாங்குவாரா என்பது தெரியும்.

ரிக்கி பொன்டிங்கை விட மனதில் சோர்ந்திருக்கும் formஇல் தளர்ந்திருக்கும் மைக்கேல் கிளார்க் தான் புதிய தலைவராம்..

வாழ்க தேர்வாளர்கள்.. வாழ்த்துக்கள் இங்கிலாந்து..
24 வருடங்களின் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் உங்கள் கரத்தில் வெற்றியுடன் கிடைக்கப் போகிறது.

மெல்பேர்ன் வெற்றியில் இங்கிலாந்தின் ஜொனதன் ட்ரோட், ஜ்மேஸ் அன்டர்சன், ட்ரேம்லெட், மட் ப்ரையர் ஆகியோரின் அசாத்திய தனித் திறமைகளை விட, அதிகூடிய விக்கெட்டுக்களை இத்தொடரில் எடுத்திருந்த ஸ்டீவ் பின்னை அணியிலிருந்து நிறுத்தி அவருக்குப் பதிலாக அழைக்கப்பட்டிருந்த டிம் ப்ரெஸ்னன் காட்டிய முயற்சியும் அபார திறமைகளும் ரசிக்கத் தக்கன.

சிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்து ஒயின் மோர்கனுக்கு சிலவேளை வாய்ப்பை வழங்கலாம்.. (போல் கொளிங்க்வூடின் சறுக்கல்களுக்கு ஒரு ஓய்வு??)

இங்கிலாந்து முயல்கின்றது, வேகத்துடன் விவேகத்தையும் உறுதியையும் அடித்தளமிட்டு ஆஷசை வசப்படுத்தியுள்ளது.அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் தொடரை சமப்படுத்தலாம் ஆனால் ஆஷஸ் கிண்ணம் இங்கிலாந்துக்கு செல்வதைத் தடுக்க முடியாது.

கிளார்க் தலைவர் என்பதால் சமநிலை முடிவைக் கூட நான் எதிர்பார்க்கவில்லை.
நீண்டகாலம் form உடன் காத்திருந்த உஸ்மான் கவாஜா சிட்னியில் தன்னை நிரூபிப்பாரா என்று பார்க்கலாம்.

-----------------------------


சகீர் கான் என்ற ஒரு நபரின் வருகை இந்தியாவுக்குக் கொடுத்திருக்கும் மாற்றத்தை மாயஜாலத்தைப் பாருங்கள்..
முதல் போட்டியில் இன்னிங்சினால் துவண்ட அணி தென் ஆபிரிக்காவை சொந்த மண்ணில் துவைத்து எடுத்துள்ளது.

இந்தியா பதினெட்டு ஆண்டுகளில் தென் ஆபிரிக்காவில் பெற்ற இரண்டாவது டெஸ்ட் வெற்றி இது என்பதால் மகத்துவம் பெறுகிறது.
இதன் மூலம் தனது டெஸ்ட் Number One இடத்தை மீண்டும் உறுதிப் படுத்தி இருப்பதோடு, Starting trouble மட்டுமே பிரச்சினை என்று மீண்டும் காட்டியுள்ளது.

சாகிர் கானின் ஆரம்பப் பந்துவீச்சுக் கொடுத்த உளரீதியான உற்சாகமே இந்த மறக்க முடியாத டேர்பன் டெஸ்ட் வெற்றியை வழங்கியிருக்கிறது.

தென் ஆபிரிக்காவை தோற்கடிக்க ஆஸ்திரேலியா முன்பு கடைக்கொண்ட, இங்கிலாந்து இடையிடையே பயன்படுத்திய யுக்தி இது.
இறுக்கமான,வியூகம் வகுத்த துல்லியமான பந்துவீச்சும், போராடக் கூடிய துடுப்பாட்டமும்..

சாகிர் கானின் ஆரம்பம் அபாரம் என்றால் ஸ்ரீசாந்தும்,ஹர்பஜனும் காட்டிய விடாமுயற்சியும் கொஞ்சம் குசும்புடன் கூடிய சீண்டி விடும் ஆவேசமும் தென் ஆபிரிக்காவை சுருட்டிவிட்டது.

சாகிர் காட்டிய வேகமும் தென் ஆபிரிக்க வீரர்களை சோதித்து ஆட்டமிழக்கச் செய்த விதமும் மெய் சிலிரிக்கவைத்தவை.

ஸ்ரீசாந்தின் சில பந்துகளில் அப்படியொரு வேகமும் விஷமும்..
குறிப்பாக கலிசை இரண்டாம் இன்னிங்க்சில் ஆட்டமிழக்கச் செய்த விதம்.. அந்தப் பந்துக்கு வேறொன்றும் செய்ய முடியாது.


லக்ஸ்மன் - இந்தியாவின் புதிய இரும்புச் சுவர்.

இந்த வருடம் அம்லாவைப் போலவே இவருக்கும் ராசியான வருடம்.
இந்தவருடத்தில் மட்டும் எத்தனை போட்டிகளை இரண்டாம் இன்னின்க்சின் விடாமுயற்சியுடனான துடுப்பாட்டம் மூலமாக வென்று கொடுத்திருப்பார்..

அவ்வளவு போராடி இந்தியாவைக் கரை சேர்த்த லக்ஸ்மனுக்கு நான்கே நான்கு ஓட்டங்களால் அற்புதமான சதம் ஒன்று தவறிப்போனது அநியாயம்.
(கிடைத்திருந்தால் பிரவீன் அம்ரே பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றதன் பின் பெற்ற ஒரே சதம்)

இந்த டேர்பன் டெஸ்ட் வெற்றி இந்தியாவுக்குக் கொடுத்த உற்சாகம் முக்கியமான இறுதி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் தன்னம்பிக்கையைக் கொடுக்குமா?
சொல்ல முடியாது..
தென் ஆபிரிக்க ஆடுகளங்களும், இந்தியாவின் நம்பகமில்லாத் தன்மைகளும் அவ்வாறு சொல்ல வைக்கின்றன.

ஆனால் சாகிர்+லக்ஸ்மன் செய்துகாட்டிய வரலாற்றில் சச்சின்,சேவாக்,டிராவிடும் இணைந்தால் புது வருடம் இந்தியாவுக்கு மங்களமாக ஆரம்பிக்கும்..

ஆனால் தென் ஆபிரிக்கா அடிபட்ட புலிகள்.. சீண்டிய பிறகு அடங்கிப் போவதை விட அடிபோடவே விளைவார்கள். அத்துடன் சொந்த மண்ணில் அவமானப்பட அவர்கள் எப்போதும் விரும்புவதில்லை.
டேர்பனில் விட்ட தவறுகள் மீண்டும் எழச் செய்யும்.

நிற்க,
டேர்பனில் தென் ஆபிரிக்க வீரர்கள் யாருமே நாற்பது ஓட்டங்களைக் கூடப் பெறவில்லை.
லக்ஸ்மன் பெற்றது மட்டுமே ஒரே அரைச் சதம்...

ஆசியாவில் இப்படியான ஆடுகளங்கள் இருந்திருந்தால் விமர்சன விண்ணர்கள் எப்படிப் பொங்கியிருப்பார்கள் என் நினைத்தேன்...
 வேகப் பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்தால் தான் சிறந்த ஆடுக்கலாமாம்.

------------------

வருடத்தின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த வருடத்தில் அதிகம் பெயர் நாறிப்போன பாகிஸ்தானுக்கு ஒரு ஆறுதல் வெற்றி :)
முதல் இரண்டு போட்டிகளில் அடிவாங்கிய பிறகு ஒரு ஆறுதல் வெற்றி தான்...

ஆனால் மூன்று போட்டிகளிலும் நியூ சீலாந்தின் சிறிய ஆடுகளங்களில் புண்ணியத்தில் சிக்சர் மழைகளை ரசித்தேன்...


புதுவருடம் எல்லா அணிகளுக்கும் நல்ல பலன்களையும் வழங்கட்டும்.

December 26, 2010

கொலைக்காற்று - 05

சுபாங்கனால் ஆரம்பிக்கப்பட்டு நண்பர்களால் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் 'கொலைக்காற்று' மர்மத்தொடரின் ஐந்தாவது பாகத்தில் நான் இணைந்திருக்கிறேன்.

இதற்கு முந்திய பகுதிகள்...

கொலைக்காற்று - 01  தரங்கம் - சுபாங்கன்

கொலைக்காற்று - 02  எரியாத சுவடிகள் - பவன்
கொலைக்காற்று - 03  சதீஸ் இன் பார்வை - சதீஸ்


இதோ....

கொலைக்காற்று 
கட்டிலில்..
"ஜெனி கொலை செய்யப்பட்டிருக்கிறா.. அதுக்குப் பிறகு சேகர்.. உங்கட க்ளோஸ் பிரென்ட்.ஆனால் நீங்கள் கொஞ்சமும் அப்செட் ஆனா மாதிரித் தெரியேல்லையே.."
"அப்ப, என்னை நீ சந்தேகப்படுறியா வர்ஷா?"
"சொறி கௌதம்.. எனக்குக் குழப்பமா இருக்கு.." கண்கலங்கி,தலை குனிந்துகொண்டாள் வர்ஷா.

தளர்ந்துபோய் கலங்கி இருந்தவளை, நகர்ந்துசென்று கைகளால் முதுகை அணைத்து,ஆதரவாகத் தலையைக் கோதிக்கொண்டே,மெல்லிய குரலில்
"அப்செட் ஆகாமல் இல்லை டார்லிங்.. ஆனால் எனக்கு நெருங்கின இரண்டுபேரின் கொலைகள் என்டபடியால் தான் கொஞ்சம் யோசிக்கவேண்டி இருக்கு.. ஜெனி,சேகர் ரெண்டு பேரின் mobile போனுக்கும் நேற்று யோசிக்காமல் கோல் பண்ணிட்டேன். அது ரெண்டும் பொலிஸ்சிட்ட இருக்கும் எண்டு யோசிக்கேல்லை.நாளைக்கு எப்பிடியும் பொலிஸ் ஸ்டேஷன் போகவே வேணும்"

அறையின் ஏசிக் குளிருக்கு கௌதமின் அணைப்பு இதமாக இருந்தாலும், விது -பட விவகாரம் மனசில் கறையான்களின் அரிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது.கௌதமிடம் சொல்லலாமா? சொன்னால்  தன்னை நம்புவானா? கௌதம் நம்பினாலும் விது பதிலடியாக என்ன செய்வானோ? என்று பலப்பல சிந்தனைகள் கலங்கடித்துக்கொண்டிருந்தன.

"என்ன மகாராணி இன்னும் சந்தேகம் போல இருக்கே..விட்டா கௌதம் கொலைகாரன்  எண்டு நீயே பேப்பர்,ரேடியோ,டீவீக்கு நியூஸ் குடுத்துடுவாய் போல இருக்கே" சிரித்து சிரிக்க வைக்க முயன்றான் கௌதம்.

சிரிக்கும் மனநிலையில் இல்லாவிட்டாலும் இந்தநிலையில் சிரித்துவைக்காவிட்டாலும் கௌதம் மனம் நோந்துபோகும் என்பதற்காக மெல்லியதாக சிரித்துவைத்தாள் வர்ஷா.
"அடடா இதுக்கே சிரிப்பாய் என்று தெரிஞ்சிருந்தா குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறமாதிரி ஏதாவது ஜோக் சொல்லியிருப்பேனே" என்று அர்த்தபுஷ்டியோடு சொன்ன கௌதமின் பார்வை ஆசையோடு வர்ஷாவின் வளவள கழுத்தில் இருந்து கீழிறங்கி மேய ஆரம்பித்தது.


----------------------

கழுத்தா அது? கண்ணாடிக் குடுவை.தண்ணீர் அவள் குடிக்கும் நேரத்தில் வெளியே இருந்து வழுக்கி செல்வதைப் பார்க்கலாம் போல அவ்வளவு மென்மை.

பூமியில் உள்ள அழகிய பூக்கள் எல்லாம் சேர்ந்து திரட்டி பிரம்மன் செய்த பூப்பந்துகள் என்று வைரமுத்து வர்ணித்த அளவெல்லாம் இல்லை.ஆனாலும் பார்ப்பவர்களை மூச்சுமுட்ட செய்கிற அழகுகள் வர்ஷாவிடம் இருந்தன. பல்கலை நாட்களில் அவள் விளையாடும் வலைப்பந்தைக் காணக் கூடும் கூட்டமெல்லாம் பரிமாற்றப்படும் பந்தைப் பார்த்ததை விட அவள் நெஞ்சப்பந்துகளை வட்டமிட்டதை அவளும் அறிவாள்.

உடுக்கை இடுப்பு என்று தமிழிலும் Hour Glass என்று ஆங்கிலத்திலும் வர்ணிக்கப்படும் அம்சமான இடையும், உடலின் மேற்பாதியை சமன் செய்யும் வளைவு நெளிவுகளுடைய கீழ்ப்பாதியும் தக்கதொரு சிற்பியால் செய்த உயிருள்ள சிலையோ எனப் பார்ப்பவரை பார்க்க செய்யும்.

நினைவுகளும்,சூடான பெருமூச்சுக்களும் சேர்ந்துகொண்டே,
திருமணத்தின் பின்னர் புதிய அழகு பெண்களிடம் சேர்ந்துவிடுகிறது என்பது உண்மைதான். உடலெங்கும் புதிதாக தங்கமுலாம் பூசியதுபோல மினுமினுப்பாக இருந்த வர்ஷாவை மீண்டும் மனசில் ரீவைண்ட் செய்து செய்து மனத்தைக் கிளர்வுபடுத்திக்கொண்டு குளுகுளு ஏசி அறையின் மெதுமெது மெத்தையில் தனியாகப் புரண்டுகொண்டிருந்தான் விது.

கையில் இருந்த அந்தப் புகைப்படங்களை மீண்டும் எடுத்துப் பார்த்துக்கொண்டே
"அதிர்ஷ்டக்கார கௌதம்.. இப்ப தூக்கத்தால் இடையில் எழும்பி எத்தனையாவது ரவுண்ட் போறியோ" மனதுக்குள் கருவிக் கொண்டே மீண்டும் நூற்றுப் பதினெட்டாவது தடவையாக பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

வர்ஷு என்ன செய்வாள்? மிரட்டலுக்கு இணங்கி நாளை தானாக வருவாளா? இன்னும் ஏதாவது தான் இறங்கி செய்யவேண்டி ஏற்படலாமா? யோசித்துக்கொண்டே ஒரு கையில் பற்றவைத்த சிகரெட்டை வாயில் அமர்த்திவிட்டு, தன் டொஷீபா லாப்டாப்பைத் திறந்து நோண்ட ஆரம்பித்தான்.

வர்ஷு என்ற folderஐத் திறந்து ரகசியமாக எடுத்த படத்தில் அரைகுறையாக ஆபாசமாகத் தெரிந்த வர்ஷுவைக் காமத்தோடு விழுங்கிக்கொண்டே,"எத்தனை பேரடி இப்பிடி ஆரம்பத்தில் டிமாண்ட் காட்டிவிட்டுப் பிறகு மடங்கி இருப்பீங்க? பார்க்கிறேனே.. இங்கே ரூமைச் check out பண்ண முதல் உன்னை check out பண்றேன்" என்று பழைய சத்யராஜாக குரல் கொடுத்துக்கொண்டே, இப்பவே நெட்டில் ஏற்றிவைக்கலாமா,பிறகு பார்த்து ஏற்றிக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டே இணைய இணைப்பிநூடாகத் தன் ஏதோவொரு fake profileஇல் loginஆகி இணையத்தில் எதோ ஒரு வம்பு வேலையைத் தொடங்கும் நேரம் அதிகாலை 3.55.

அறைக்கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.

-------------------------------
காலை 7.45
'நீல வானம்... நீயும் நானும் ' கௌதமின் செல்பேசி கமலின் குரலை அறையெங்கும் பரவவிட்டு போர்வைக்குள் கலைந்து,களைத்துக்கிடந்த கௌதம்+வர்ஷாவை எழுப்பியது.

அலுத்துக்கொண்டே "ஹெலோ" சொன்ன கௌதமுக்கு மறுமுனையில் எடுத்த நண்பன் சொன்ன விஷயம்
- அதே ஹோட்டலில் அதிகாலை நேரம் பயங்கரமாக சுடப்பட்டு இறந்துபோன இளைஞன் பற்றி...

விது பற்றி எனக்கும் உங்களுக்கும் வர்ஷாவுக்கும் தெரிந்த அளவு கௌதமுக்குத் தெரிந்திருக்காது போலும்.. இளவயதிலேயே இறந்துபோனவனுக்காகப் பரிதாபப்பட்டுக்கொண்டே

"என்ன இது நாங்கள் போற இடமெல்லாம் கொலை கொலையா நடந்துகொண்டே இருக்கு" என்று வர்ஷாவிடம் அலுத்துக்கொண்டே "வர்ஷாம்மா போலீசுக்குக் கோல் பண்ணி ஜெனி,சேகர் கொலைகள் பற்றிக் கேக்கப் போறேன்.எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை சொல்லப்போறேன்.இனியும் லேட்டாக்கினா உன்னை மாதிரியே அவங்களும் என்னைக் கொலைகாரன் லிஸ்ட்டில் சேர்த்திடுவான்கள்"
--------------------

"ஒரு கிழமைக்குள்ள மூன்றாவது கொலை.. இவனும் ஒரு softwareகாரன். ஏதாவது தொடர்பிருக்கலாமோ?" இன்ஸ்பெக்டர் சூரியப்ரகாஷ் தன் மனதிலிருந்த சந்தேகத்தை கான்ஸ்டபிளிடம் கேட்டே விட்டார்.

"சார் கொலையுண்டிருக்கிறவன் நேற்றுத் தான் இங்கே வந்து தங்கி இருக்கிறான்.கண்மூடித்தனம சுடப்பட்டிருக்கிறான். அவனுடைய லேப்டாப் சிதறியிருக்கு.இறந்து போன விதுரன் என்றவன்ட வோலேட் (wallet) தவிர வேற தடயங்கள் இல்லை"

"இவனைப் பற்றி இன்னும் விசாரிக்கவேணும்.அதுசரி முதல் ரெண்டு கொலைகளின் கை ரேகை ரிப்போர்ட்டுக்களை மறுபடி பார்க்கணும்.அந்த மொபைல் நம்பர்களுக்கு வந்த கோல் யார்ட்ட இருந்து வந்ததெண்டு கண்டுபிடிச்சாச்சா?" கேட்டுக்கொண்டே இருந்த சூரியப்பிரகாஷின் செல்பேசி கிணு கிணுத்தது.

கான்ஸ்டபில் மேசையில் கொட்டிக்கொண்டிருந்த விதுவின் வொலேட்டிலிருந்து நான்கைந்து கிரெடிட் கார்டுகள்,சில விசிட்டிங் கார்டுகள்,சில்லறைகளுடன் முன்னைய பலகலைக்கழக அடையாள அட்டை,தேசிய அடையாள அட்டை, ஐந்தாறு சிம்களுடன் இறுதியாக விழுந்தது ஒரு போட்டோ...

கொலைக்காற்று இனி ஆதிரை(ஸ்ரீகரன்)யின் தளத்திலிருந்து வீசும்.

December 23, 2010

மன் மதன் அம்பு

மூன்று பேருக்கிடையிலான காதல்,பத்துக்குட்பட்ட பாத்திரங்களின் பங்குபற்றுதலில் நிறையக் கலகல கொஞ்சம் ஆழமான காதல்,கொஞ்சம் அழுத்தமான செண்டிமெண்டோடு தொய்யாமல் துரிதமாகப் பயணிக்கும் அருமையாகக் கோர்க்கப்பட்ட அழகான படம்.

மன் மதன் அம்பு என்று மூவரையும் தனித்தனியாகப் பிரித்து ஏற்கெனவே விளம்பரங்கள் காட்டிவிட்டாலும் கதை என்ன என சுவாரஸ்யமாகத் திரைப்படம் மூலமாகவே விவரிப்பது கமலின் திரைக்கதையும் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கமும் தான்.

த்ரிஷா நடிகை, மாதவன் அவரின் காதலன்,பணக்காரர், கமல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர், சங்கீதா விவாகரத்தானவர், இரு குழந்தைகளின் தாயார்.
 இந்த நான்கு முக்கிய பாத்திரங்கள்+சங்கீதாவின் குறும்புக்கார மகன், மலையாள இயக்குனர் குஞ்சு குருப்(என்ன பெயரைய்யா இது), ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, உஷா உதூப் என்று ஒரு சில பாத்திரங்களோடு சுவாரசியமாகப் பயணிக்கிறது கதை.

மற்றவர்கள் தொடத் தயங்கும் சில விஷயங்களை துணிச்சலாக எடுத்து லாவகமாகக் கதை சொல்வதில் கமலுக்கு நிகர் அவரே.. மீண்டும் மன்மதன் அம்புவில் நிரூபித்துள்ளார்.
நடிகையின் காதலும்,காதலின் இடையே புதிய காதலும்..

ஆள் மாறாட்ட வித்தைகள் தமிழ் சினிமாவில் வழக்கமே என்றாலும்,இதில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது நியதிஎனினும் சொல்லும் விதத்தில் சொதப்பாமல்,சுவையாக சொல்வதில் ஜெயிக்க வேண்டுமே.. அதில் கமலும்,இயக்குனர் ரவிக்குமாரும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்கள்.

இப்போதே சொல்லிவைக்கிறேன்..

கமலுக்கு அடுத்தவொரு பிரம்மாண்ட வெற்றிப்படம்.
உதயநிதி ஸ்டாலின் போட்டதற்குப் பல மடங்கு எடுத்துவிடுவார்.
அவரது செழுமையின் உறுதி கண்களுக்கு ஐரோப்பிய சுற்றுலா இலவசமாகப் போய்வந்த குளிர்ச்சியைக் கொடுக்கிறது.

சூர்யா கௌரவ நடிகராக வந்து ஒரு அசத்தல் ஆட்டம்+அலட்டல் இல்லாத அறிமுகம் காட்டிவிட்டு செல்கிறார். அதே காட்சிகளில் கே.எஸ்.ஆரும் தனது சென்டிமென்டான தலைகாட்டலைக் காட்டிவிட்டு திருப்தியாகிறார்.

படத்தின் 90 சதவீதமும் நடப்பது ஐரோப்பிய நாடுகளிலும்,நகர்கின்ற கப்பலிலும் தான்.
ஆனாலும் அந்நியத்தனம் இல்லாமல் அழகு தமிழை ரசிக்கக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் கமல்.

கமலின் வயது படத்துக்குப் பெரிய ப்ளஸ்.பாத்திரத்தில் கச்சிதமாகக் கமல் ஒட்டவில்லை என்றால் தானே அதிசயம். முதல் காட்சியில் அதிரடி அறிமுகம் முதலே ரசிக்கவைக்கிறார்.

கதை,திரைக்கதை,வசனம் - கமல்..
கமல் படமே தான் என்றாலும் த்ரிஷாவை சுற்றித் தான் கதை.
ஆனாலும் த்ரிஷாவை கனமான பாத்திரமாகப் பார்க்கும் முதல் படம் எனும் வகையில் கமல் அவரிலும் தெரிகிறார்.
எந்தவொரு காட்சியும் அனாவசியம் என்று சொல்ல முடியாமல் தொய்வில்லாமல் கதை செல்கிறது.

இடையிடையே சினிமா நடிகர்களை, குறிப்பாக நடிகைகளை சமூகம் பார்க்கும் விஷமா,விமர்சனப் பார்வையை மாதவன் பேசும் வசனங்கள் மூலமாகக் கொட்ட வைக்கிறார்.

அறிவுஜீவித்தனமான தமிழ்+ஆங்கில வசனங்களும்,புத்திசாலித்தனமான தர்க்கங்களும், கிரேசி மோகன் பாணியிலான நகைச்சுவை சரவெடிகளும் கலந்துகட்டி ஒரு அருமையான வசன விருந்தே படைத்திருக்கிறார்.(உலக நாயகனின் வழமையான நண்பர் குழாம் கதை விவாதத்தில் இடம்பெற்றிருந்தாக அறிந்தேன்)

நேர்மையானவங்களுக்கு திமிர் என்பது ஒரு கேடயம்.
இது ஒரு சாம்பிள் வசனம்.. வசனக் கூர்மைகளை ரசிக்கவென மீண்டும் இரு தடவையாவது பார்க்கும் திட்டம்.

மிக முக்கியமான விடயம் அண்மைக்காலத்தில் சர்ச்சை கிளப்பிய கமல்-த்ரிஷா கவிதை இன்று நான் பார்த்த இலங்கையில் முதல் காட்சியில் இடம் பெற்றிருந்தது.
(இலங்கையின் தணிக்கைக் குழுவிலும் நேற்று இது பற்றி விவாதங்கள் இடம்பெற்றதாக அறிந்தேன். இனித் தூக்கப்படுமா தெரியவில்லை)



பாடல்கள் படத்தின் ஓட்டத்தோடேயே கதை சொல்லிகளாகப் பயணிப்பதும் நல்ல யுக்தி..
அதிலும் 'நீலவானம்' நான் முன்பு ரசனைப் பதிவில் சொன்னது போல, முன்னைய காதலைக் கமல் Flashbackஆக சொல்வதாக அமைத்துள்ளார்கள்.
ஆனால் காட்சிகள் பின்னோக்கி செல்வதாக அமைத்திருப்பது புதுமை.. காட்சிகள் Rewindஇல் செல்கையில் வாயசைப்பு மட்டும் சரியாக அமைவதும் புதிய பாராட்டக்கூடிய முயற்சி. வாயசைப்பில் சிரமம் உண்டு என்பதால் இடை நடுவே சொற்கள் தடுமாறி,இடம் மாறுவதைப் பொறுக்கலாம்.

பாடல் முடிகையில் அரங்கம் நெகிழ்ந்து சில வினாடிகள் அமைதியாகி,பின்னர் கரகோஷித்தது இங்கே ஒரு புதுமை.

தகிடுதத்தம் காட்சியோடு பொருந்தி ஒவ்வொரு வரிகளுக்கும் அர்த்தம் கொடுத்தது. நடன அசைவுகள்,பாடல் காட்சியில் வரும் வெள்ளைக்காரரும் ஆடுவது ரசனை.

கமல்+த்ரிஷா கவிதை முடியும்வரை ரசித்துக் கரகோஷம் கொடுத்த ஒரு ரசனை மிக ரசிகர்களோடு இருந்து பார்த்த பெருமை.. (நம் பதிவர்கள் சுபாங்கன்,பவன் ஆகியோரும்,சில நம் பதிவுலக ரசிகர்களும் வந்திருந்தது இடைவேளையின் பின்னரே தெரிந்தது)

கமலின் முகபாவ மாறுதல்கள் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்தனை அற்புதம்.எத்தனை Close up காட்சிகள்.. கண்கள் பேசுகின்ற விதங்கள் லட்சக்கணக்கான வார்த்தைகள் சொல்லாத விடயங்கள்.
அத்தனை காட்சிகளிலும் கண்கள்,உதடுகளின் அசைவுகளைக் கவனித்தாலே சிலைகளும் நடிக்கக் கற்றுக்கொண்டு விடும்.

அதிலும் த்ரிஷாவுக்குத் தன் கடந்தகாலம் பற்றி சொல்லி, த்ரிஷா மன்னிப்புக் கேட்கும் இடத்தில் சோகம்+விரக்தியுடன் உதடு காய்வது போல ஒரு அசைவு கொடுப்பார்.. Class !!!

கமலுடன் சேர்ந்த ராசி த்ரிஷாவின் நடிப்பில் அப்படியொரு பக்குவம். முதல் தடவை கலக்கி இருக்கிறார் என நினைக்கிறேன். நடிகை என்பதனால் கொஞ்சம் கவர்ச்சியாகவே வலம் வருகிறார்.அவரது தொடை, மார்பு Tattoo தெரியவேண்டும் என்றே திட்டமிட்டு தேர்வு செய்துள்ள ஆடை வடிவமைப்பாளர் கௌதமிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. வாலிப சமூகம் சார்பாக.

தமிழ் நடிகைகளின் தமிழ் பற்றிக் கமல் கிண்டல் பேசும் இடங்களில், முகத்துக்குப் பூச்சையும் பேச்சில் ஆங்கிலத்தையும் பூசிவிடவேண்டும் என்று சொல்லும் இடத்தில் அப்படியொரு முகபாவம்.
மாதவனுடன் ஆரம்பக் காட்சிகளிலும் கமலுடன் இடையில் வரும் காட்சிகளிலும் ஜொலிக்கிறார்.

மாதவன் - நிறைய வித்தியாசம் காட்டி நடிக்க வசதியான பாத்திரம்.சந்தேகம்,உருகுதல்,காதல்,கோபம்,அப்பாவித்தனம் என்று கலக்குகிறார். கொஞ்சம் அன்பே சிவம் மாதவன் எட்டிப் பார்த்தாலும்,மாதவன் த்ரிஷாவுடன் கோபப்படும் இடங்களில் காரம்.

கமல்- மாதவன் தொலைபேசி உரையாடல்கள், தண்ணி அடித்து உளறும் காட்சிகள்,கடைசி நிமிடங்கள் - சிரிப்பு சரவெடிகள்.ஒவ்வொரு சொல்லையும் அவதானித்து ரசிக்கவேண்டிய இடங்கள்.

சங்கீதா குண்டாக,காமெடியாகக் கலக்குகிறார். பாத்திரத்துக்குக் கனகச்சிதம்.சில காட்சிகளில் த்ரிஷாவையும் விஞ்சி வெளுத்துவாங்குகிறார்.
இவரின் மகனாக வரும் அந்தக் குட்டிப் பையன் படு சுட்டி.. பிரமாதப்படுத்துகிறான்.கண்ணாடியும் அவனும்,அவனின் கூர்மையான அவதானிப்பும் பல திருப்பங்களைத் தருகின்றன.

வெற்றிப் படத் தயாரிப்பாளராக வரும் குஞ்சன் (இவரது உண்மைப் பெயரே இதானாம்) வரும் நேரமெல்லாம் சிரிப்பு வெடி தான்.
ரமேஷ் அரவிந்த் கமலின் நண்பராக,ஊர்வசி அவர் மனைவியாக.. கொஞ்சம் நெகிழ்ச்சிக்காக.
புற்றுநோய் நோயாளியாக இருந்தும் கமலுடன் ரமேஷ் அரவிந்த் பேசும் கட்சிகள் நெகிழ்ச்சியான நகைச்சுவைகள்.. கொஞ்சம் யதார்த்தமான கவிதைகள் எனவும் சொல்லலாம்.
 கமலின் வழமையான நடிகர் பட்டாளத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளவர்கள் இவர்கள் இருவருமே..


 கமலின் முதல் மனைவியாக கொஞ்ச நேரமே வந்தாலும் கண்களையும், மனதையும் அள்ளி செல்கிறார் அழகான ஜூலியட். தொடர்ந்தும் தமிழ்ப்படங்கள் நடிக்கலாமே அம்மணி?

யாழ்ப்பாணத் தமிழ் பேசிக்கொண்டு வரும் பாத்திரம் சுவாரஸ்யம். அவரது பாத்திரம் இயல்பாகவே இருக்கிறது.புலம்பெயர் இலங்கைத் தமிழரைக் கொஞ்சம் ஈர்ப்பதற்கான ஒரு கொக்கி? அவரது மனைவி வரும் ஒரே காட்சியும் ரசனை.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் ஒரு (ஒரேயொரு) frameஇல் வந்துபோகிறார். எது என்று கண்டுபிடிப்போருக்கு அவரே பரிசளிக்கட்டும்.


கதையோட்டத்தில் கண்ணுக்கு விருந்தான அழகான இடங்களையெல்லாம்,உல்லாசக் கப்பலின் அழகான பகுதிகளை இன்னும் அழகாகக் காட்டும் ஒளிப்பதிவாளர் புதியவராம்.. வாழ்த்துக்கள். முதல் படத்திலேயே கவர்ந்திருக்கிறார் மனுஷ நந்தன். இவர் பிரபல எழுத்தாளர் ஞானியின் மகன் என்பது கூடுதல் தகவல்.

பிரான்ஸ்,ஸ்பெயின், இத்தாலி ஆகிய இடங்களின் அழகு அப்படியே படத்துக்குப் பொலிவு கொடுக்கிறது.

எடிட்டரும் புதியவராம் ஷான் முஹம்மத்.மேருகூட்டியே இருக்கிறார்.

பாடல்களில் கலக்கிய DSP படத்தின் பின்னணி இசையிலும் பின்னி எடுத்துப் பிரகாசித்துள்ளார். சென்டிமென்ட் காட்சிகளில் வயலினும் சேர்ந்து உருக்குகிறது.ஆனால் சில இடங்களில் வசனங்களை இசை விழுங்குவதாக நான் உணர்ந்தேன்.

ஆரம்பக் காட்சிகளில் வரும் பாடல் வரிகளும் இசையும் மனதைத் தொட்டது.. ஆனால் அது இறுவட்டில் வரவில்லை.தேடிப் பார்க்கவேண்டும்.

எனக்குப் படம் பார்க்கையில் சலிப்பையும் எரிச்சலையும் தந்த ஒரே விடயம் கீழே ஆங்கிலத்தில் இடப்பட்ட உப தலைப்புக்கள். பல இடங்களில் கவனத்தை சிதறடித்துவிட்டது.இதற்காகவும் படத்தை மீண்டும் பார்க்கவேண்டும்.

இடைவேளை வரும் இடம் நெஞ்சைத் தொட்டது. அதிலும் த்ரிஷா - கமலின் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கக் காரணமான சம்பவம் என்பவற்றை ஒரே புள்ளியில் இணைப்பது திரைக்கதையில் உள்ள நெகிழ்ச்சியான ஒரு சாமர்த்தியம்.

 இடைவேளைக்குப் பிறகு என்னவொரு வேகம்+விறுவிறுப்பு.. ஒரு நிமிடம் அங்கே இங்கே திரும்பமுடியாமல் செய்திருக்கிறார்கள் கமல்+ KSR கூட்டணி..

வசனங்களின் இடையே திரையுலகம்,சமூகம்,திருமணத்தின் சில முட்டாள் தனமான பிணைப்புக்கள், காதல் பற்றிய தன எண்ணம்,மேல் தட்டு வாழ்க்கை, தமிழின் பிரயோகம் என்று பல விஷயங்களையும் கமல் தன பார்வையில் அலசினாலும் பாத்திரங்களை ஓவராக புத்திஜீவித்தனமாக அலைய விடாததும்,அலட்ட விடாததும் பாராட்டுக்குரியது.

*** கதை என்ன,எப்படி என்று நான் எதுவுமே சொல்லவில்லை;அது என் வழக்கமும் இல்லை. பார்த்து ரசியுங்கள்;சிரியுங்கள்.

ரசிக்கவும்,சிரிக்கவும்,மெச்சவும் அருமையான ஒரு விருந்து....

மன்மதன் அம்பு - ஜோராப் பாயுது..


பிற குறிப்பு - 9வது கமல் படம் தொடர்ந்து முதற்காட்சி பார்த்து சாதனை வைத்துவிட்டேன்.அதுவும் அலுவலக நேரத்தில்... அலுவலகம் வந்தால் நம்ம தலைவர் "கமல் படம் ரிலீசா? அதான் இவ்வளவு நேரமும் பண்ணவில்லை" என்று சொன்னது ஹைலைட். இவ்வளவுக்கும் நம் பெரியவர் சிங்களவர்.
இப்படிப்பட்டவங்க இருக்கிற காரணத்தால் தானே மழையே பெய்யுது ;)


* கமலின் இரண்டாவது மகளின் காதலர் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த இளைஞரும் எம்முடனேயே கடைசி வரிசையில் இருந்து படம் பார்த்திருந்தார் என்பது கூடுதல் விசேஷம்.
(தம்பி திருமணம் நடந்தாக் கூப்பிடுங்க)

ரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு

சந்திப்பில் கலந்துகொண்டவருக்கு இது ஒரு ஞாபக மீட்டல்; சந்திப்பைத் தவறவிட்டவருக்கு என்னால் முடிந்த முக்கிய விடயங்களின் தொகுப்பு.


ஞாயிற்றுக் கிழமை மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு.. இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் மூன்றாவது சந்திப்பு..

மீண்டும் கொழும்பில்.. அதாவது அதிகார மையத்தில் .. ;) (என்ன கொடும சார், என்ன கொடும சார்- இது அவர் முகமூடி, இந்த சக்திவாய்ந்த சொல்லைக் காமெடியாக்கிட்டீன்களே)

முதல் நாள் கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக ஒழுங்கு செய்த அதே இளமைத் துடிப்புள்ள இளைஞர் கூட்டணி அதை விடப் பெரியதாக,சிறப்பாக,நேர்த்தியாக சந்திப்பையும் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நிரூஜா எனப்படும் மாலவன், வதீஸ், பவன், அனுதினன், வரோ, அஷ்வின்  ஆகிய ஆறு துடிப்பான இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வெள்ளவத்தை, தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி அரங்கில் காலை 9.30க்கு ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.
நான் கொஞ்சம் தாமதமாக உள்ளே நுழையும் நேரம், யாழ்ப்பானத்திலிருந்து முதல் நாளே எங்களுடன் கிரிக்கெட்டில் கலக்கிய ஜனா,கூல் போய், ஜி ஆகியோரும், அஷோக்பரனும் வாசலில் புன்முறுவலுடனும் என்னுடன் இணைய,நாம் உள்ளே நுழைய, நிரூஜா ஒலிவாங்கியை இயக்கி, வணக்கம் சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பிக்க சரியாக இருந்தது.


அதிகார மையமே தாமதமாக வந்தால் எப்படி என்று கன்கோன் அனுப்பியிருந்த smsஐ வாசித்துக் கொண்டே ஆசனத்தில் அமர்ந்து, அசோக்கின் தொப்பை பற்றித் தான் 'மையம்' என சொல்லி இருக்கிறான் என்று சிசிர்த்துக்கொண்டேன். (எப்படியெல்லாம் மொக்கை போடுறாங்க)

வணக்கம்+அறிமுகத்தைத் தொடர்ந்து, பதிவர்கள் தத்தமாய் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
பல புதியவர்கள் (எமக்கும்,பதிவுலகுக்கும்), பல பழையவர்கள்(வயதில்,பதிவுலகில்),இடையில் ஓய்வை அனுபவித்துக் கொண்டிருக்கும் சில சிரேஷ்டர்கள் என்று பலரும் வந்திருந்தார்கள்.
பெண் பதிவர்கள் என்று தேடிப்பார்த்தால் ஐந்தே ஐந்து பேர் தான்.. (ஆனாலும் எழுத்துக்களில் ஆண்,பெண் பேதம் வேண்டாமே..அனைவரும் பதிவர் என்று ஒன்றுபட்டவர்கள் எனப் பின்னர் சகோதரி நிலா சொன்னதை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்)

அடுத்து, இலங்கைப் பதிவர் எல்லாரையும் ஒன்றிணைக்கும் கூகிள் குழுமம் பற்றிக் கலந்துரையாடல் ஆரம்பித்தது.

இலங்கையின் அனேக தமிழ்ப் பதிவர்கள் தங்கள் புதிய பதிவுகளை இணைக்கவும், தொழிநுட்ப, இதர சந்தேகங்களைத் தீர்க்கவும், வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும், அறிவித்தல்களை வெளியிடவும் பயன்படுகிற இந்தக் குழுமத்தை எவ்வாறும் மேலும் வினைத்திறனுடையதாகப் பயன்படுத்தலாம் என்று குழுமத்தின் மட்டறுப்பாளர்களில் ஒருவராக இருக்கின்ற 'நா' கவ் போய் மது உரையாற்றினார். சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

http://groups.google.com/group/srilankantamilbloggers

கா.சேது அய்யா பேஸ் புக் நண்பர்களால் பகிரப்படும் Notesஐயும் புதிய பதிவுகளாக சேர்க்கலாமா என்ற யோசனையைக் கொண்டுவதார்.எனினும் நண்பர்களாக சேர்க்கப்பட்டவர்கள் மட்டுமே அவற்றைப் பார்வையிடலாம் என்ற Privacy settings பிரச்சினைகளால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

மு.மயூரன் குறிப்பிட்ட ஒரு விடயம் முக்கியமானது - பதிவுலகின் பொற்காலம் முடிந்துவிட்டது. முன்பெல்லாம் தங்கள் எண்ணக் கருத்துக்களை வெளிப்படுத்தும் களமாக இருந்த வலைப்பதிவுகள் மாறி, இப்போதெல்லாம் கருத்துவெளிப்பாட்டுக் களங்களாக Facebookஉம் Twitterஉம் மாறிவிட்டன.
சிந்தித்துப் பார்த்தால் உண்மை தான். நீட்டி முழக்கி சில கருத்துக்களை வலைப்பதிவில் இடுகை இடுவதை விட காலச் சுருக்கத்தைக் கருதி 140 எழுத்துக்களை Twitterஇலோ, அல்லது கொஞ்சம் நீளமாக Facebookஇலோ இட்டுவிட முடிகிறது.


எங்களின் கும்மி,இதர விஷயங்களால் நட்புக்களை இழந்துவிடக் கூடாது என்பதற்காக குழுமத்தின் மட்டுறுப்பாளராக சிறப்பாக,நேர்த்தியாக செயற்பட்டு வந்த மது, இடையில் விலகிக்கொண்டார். மது வந்து 'சக பதிவரே' என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே கும்மியைக் கட்டுப்படுத்தியும் சரியான திரிகளில் மட்டுமே இடுகைகள்,வாழ்த்துக்களை சேர்த்தும் பதிவர்கள் பொறுப்பாக நடந்து வந்தனர்.

மு.மயூரன்,நிமல் ஆகியோரும் மட்டுறுப்பாளராக இருந்துவந்தாலும் மதுவின் பின்னர் யாரும் இந்தப்பணியை செய்யவில்லை.

எனவே மீண்டும் மதுவையே மட்டறுப்பாளராகக் கொண்டுவருதல் குழுமத்தின் வினைத்திறனுக்கு நன்மைஎன்பதால் நான் அதை முன்வைத்தேன்.
வேறு யாராவது முன்வந்தால் அவர்களிடம் கையளிக்கலாம் என்று மது அழைப்பு விடுத்தாலும் பொருத்தமான யாரும் முன்வராததால், மதுவை  எல்லோரும் ஏகமனதாகத் தெரிவு செய்தோம்.

யாராவது மதுவை மீண்டும் குழுமத்தில் சேர்த்துவிடுங்கப்பா.. :)



முதலாவது சந்திப்பிலே ஆரம்பிக்கப்பட்டு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி நிறைவடையாமல் நிறுத்தப்பட்ட விடயம் மீண்டும் இங்கே கலந்துரையாடலுக்கு விடப்பட்டது..

எழுத்துருக்கள்,தட்டச்சும் முறை, விசைப்பலகை பற்றிய கலந்துரையாடல்.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு கொட்டாவி வரவைக்கும் விடயம் இது...
எனக்கு இலகுவான வழியில் நான் விரல்களால்,என்னிடம் இருக்கும் கணினி,அல்லது மடிக் கணினியில் உள்ள விசைப்பலகையில் இப்போது கூகிளின் உதவியுடன் Phonetic முறையில் தட்டச்சுகிறேன்..

முக்கியமாக கா.சேது அய்யா, எழில்வேந்தன் அண்ணா, மு.மயூரன் ஆகியோர் சில முக்கியமான விடயங்களை முன்வைத்தனர்.
அவர்களில் மயூரன் முன்பே இது பற்றி விளக்கமாகப் பதிவொன்று இட்டுள்ளார்.



பின்னர் எந்த முறையை அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள் என்று வாக்கெடுப்பும் இடம்பெற்றது.

பாமினி அதிகமானவர்களாலும், phonetic அடுத்தபடியாகப் பலராலும் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது.

பயனுள்ள விவாதங்கள்,கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட, கொஞ்சம் தொழிநுட்ப விஷயங்கள் அதிகமாக வந்ததால் புதியவர்கள் கொஞ்சம் உற்சாகம் இழந்ததை அவதானித்த நிரூஜா சுருக்கி முடித்து இடைவெளியை அறிவித்தார்..

அப்பாடா என்று கிடைத்தவற்றை வெளுத்துவாங்கலாம் என்று பரிமாறும் பையன்களை எதிர்பார்க்கவும் நண்பர்களுடன் அரட்டையடிக்கவும் ஆரம்பித்தோம்.
இடைவேளையில் பரிமாறப்படும் பதார்த்தங்கள் பற்றி இலங்கைப் பதிவுலகத்தில் பெரீய எதிர்பார்ப்பு இருந்தது..
காரணம் அஷ்வின் ஏற்கெனவே பக்கோடா பற்றிக் கதையைக் கசிய விட்டிருந்ததும், கிரிக்கெட் போட்டி முடிந்த அன்று மாலை அனுத்திணன் வீட்டில் ஏற்பாட்டுக் குழுவும் இன்னும் சிலரும் ஒன்றுகூடி பலகாரம் சுடுவதில் ஈடுபட்டிருந்ததும்.

பக்கெட்டில் அடைக்கப்பட்ட பக்கோடா, அனுத்தினனின் அம்மாவின் கைவண்ணத்தில் ரோல்ஸ் (இதில் கிழங்குக்குத் தோல் உரித்த கன்கோன்,அனுத்தினன் தங்கள் பெயர்களை மறக்காமல் பொறித்துவிட சொன்னார்கள்) நிரூஜாவின் அம்மாவின் கைவண்ணத்தில் கேசரி + அன்னாசிப் பானம் ஆகியன அமிர்தமாக இனித்தன..

(அன்னாசிப் பானத்தை அளவு கணக்கில்லாமல் குடித்து அவதிப்படும் கன்கோனுக்கு ஏற்பாட்டாளர்கள் சிகிச்சைக்கான நஷ்ட ஈடு கொடுப்பார்களா என்பதே இன்றைய முக்கிய கேள்வி)

சபைக்கு அடக்கமாக ஒவ்வொரு ரோல்ஸ்,கேசரியுடன் முடித்துக் கொண்டு மீண்டும் நிகழ்ச்சிகளோடு ஒன்றித்தாலும் நிகழ்ச்சி முடிந்த பிறகு ரோல்சையும் கேசரியையும் ஒரு கை பார்க்கவேண்டும் என்று நான் மட்டுமில்லை,பலர் குறிவைத்திருந்ததை முகக்குறிப்புக்களில் அறியக் கூடியதாக இருந்தது. (கடைசியில் ரோல்ஸ் பரபரப்பாக முடிய கிடைத்த கேசரியை வெளுத்து வாங்கிவிட்டு 'ரோல்ஸ் போச்சே' என்று பலர் புலம்பியது சோகக் கதை)

வசூல் ராஜா குஞ்சு பவன் .... 
கணக்குக் காட்டுங்க ராஜா.. 
டீ சேர்ட் வாசகங்களைக் கவனிக்கவும்.

பதிவர்கள் பதிவுலகம் தாண்டி மேலும் பயனுள்ள என்னென்ன விடயங்களில் ஈடுபடலாம் என்பது குறித்தான கலந்துரையாடல் அடுத்து..

இடம்பெற்ற கலந்துரையாடல்களில் அதிகம் பயனுள்ளதும் பரபரப்பானதும் பல பயனுள்ள சிந்தனைகளுக்கும் வழிவகுத்த கலந்துரையாடல் இது..

அருண் - விக்கிலீக்ஸ் பற்றி விவரமாகப் பேசி பதிவர்களும் சமூக அக்கறையுடன் பல விஷயங்களை மக்களுடன் பகிரலாம்;பகிர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன் பின்னர், மு.மயூரன், கா. சேது, கோபிநாத், மன்னார் அமுதன், அஷோக்பரன், ஜனா என்று பலரும் பல முக்கியமான விடயங்களை விவாதித்தனர். முன் வைத்தனர்.

பதிவர்களின் பதிவுகளில் சிலதைத் தெரிந்து நூலாக வெளியிடலாம் என்ற எண்ணக்கருவுக்கு வடிவம் கொடுக்க எழில்வேந்தன் அவர்கள் முன்வந்தார். தன்னால் தொகுத்து அச்சுப்பதிக்க முடியும்;ஆனால் பொருளாதார சிக்கலை அனைவரும் பங்கெடுத்து தீர்க்கலாம் என்பது அவரது கருத்து.

ஒரு அமைப்பாக செயற்படலாம்.. பல இடங்களிலும் கல்வித் தேவைகள்,சிரமதானங்களை நிகழ்த்தலாம் என்பது மன்னார் அமுதன் சொன்ன விஷயமாக இருந்தது.

எனினும் அமைப்பாக இருந்தால் பதவி சிக்கல்கள்,பிரிவுகள் வரலாம் என்று மறுதலித்தார் அஷோக்பரன்.
தானே தான் அமைப்புக் கதையை இரண்டு வருடங்களுக்கு முன்னால் முன் வைத்ததாகவும் இப்போது கருத்தியல் மாற்றத்துக்குள்ளான கதையைப் பகிர்ந்தார் அவர்.

சில வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு மு.மயூரன் சொன்ன ' ஒவ்வொரு பணிகள்/செயற் திட்டங்கங்களுக்கும் ஒரு குழு அமைப்பது' என்ற எண்ணக்கருவுக்கு பலத்த வரவேற்புக் கிடைத்தது.

பதிவுகள்/இடுகைகள் - எப்படிப்பட்டவையாக இருக்கவேண்டும்,யாருக்காக எழுதப்படவேண்டும் என்ற கருத்துக்களும் பலரால் பல விதமாக விவாதிக்கப்பட்டன.
அவை எப்படியும் இருக்கலாம்;யாருக்காகவும் எழுதப்படலாம்; பதிவை இடுபவருக்காகவும் கூட என்ற எனது தனிப்பட்ட எண்ணக்கருத்து பலரின் கருத்தாக இருந்தது மகிழ்ச்சி.

ஆனால் கோபிநாத் சொன்ன ஒரு விஷயத்தை இங்கே பதிந்து வைக்க ஆசைப்படுகிறேன் - எப்படியும் எழுதுங்கள்;எதையும் எழுதுங்கள்;ஆனால் நாம் இருக்கும் நிலையில்,நம் சமூகத்துக்காகவும் கொஞ்சமாவது எழுதுங்கள்.

சில நண்பர்கள் நான் அதிகமாகப் பேசவில்லை என்று குறைப்பட்டு/ஆச்சரியப்பட்டிருந்தார்கள் - பயனுள்ளதாக எல்லோரும் பேசுகையில் அவதானிப்பதே சாலச் சிறந்தது. தேவையான போது தேவையானதை சொன்னேன் தானே?

மது நேரலையாக சந்திப்பு மூன்றாவது தடவையாக வெற்றிகரமாக உலகம் முழுதும் செல்ல தன்னை அர்ப்பணித்திருந்தார்.
பல பதிவர்களும்,ஆர்வலர்களும் இணைந்திருந்ததில் மகிழ்ச்சி.



இவர்கள் தான் என்றால் காவல்துறையும் கூட..
என்ன நடக்குதென்று விசாரிக்க மூன்று பேர் வந்திருந்தார்கள். (சந்திப்புக்கு வந்த பெரும்பாலானோருக்கு இதை நாம் அப்போது சொல்லி இருக்கவில்லை)
நானும் சேது அய்யாவும் கோபிநாத்தும் சென்று சிங்களத்தில் நடப்பதை விளங்கப்படுத்தி,இது புரட்சிக்கான கூட்டம் எதுவுமல்ல;இணையத்தில் எழுதுவோர் சந்தித்துள்ளோம். வெறும் ஒன்றுகூடல் மட்டுமே இது என்று புரியப்பண்ணி கைலாகு கொடுத்து அனுப்பிவைத்தோம்.

நண்பர்களே நாங்கள் கவனிக்கப்படுகிறோம்.. சந்தோஷப்படுங்கள். அதற்காக உங்களுக்கு மீண்டும்/மேலும் கவசம் போட்டிடாதீர்கள்.

ஜனா சொன்ன சில விஷயங்களும் நான் எனது ஐந்நூறாவது பதிவில் சொன்ன விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வலைப்பதிவோடு இயங்கும் அவரை சந்தித்தது இந்த சந்திப்பு தந்த இனிய தருணங்களில் ஒன்று.

ஓய்வில் இருப்பதாக அறிவித்த புல்லட்,அடிக்கடி சந்திக்கும் ஏனைய பதிவர்கள், பல புதிய நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியையும் இம்முறை சந்திப்பு மீண்டும் தந்தது.


முன்னைய இரண்டாம் சந்திப்பின் தொகுப்பை என்று எழுதியது போல இதையும் பதிவர் சந்திப்பும் பக்கொடாவும் என்று பதிவிட்டிருக்கலாம். ஆனால் பக்கோடாவை விட அன்று விரைவாகத் தீர்ந்ததும் பலர் தேடியதும் ரோல்ஸ் தான்..
அடுத்தபடியாக அன்னாசி பானம் கரைத்தவாறு இப்போது கன்கோன்,அஷோக் உட்படப் பலர் தேடுவதாகத் தகவல்.

சந்திப்பு முடிந்தபின்னர் சிலபேர் நாம் நின்று அரட்டை அடித்துக்கொண்டு நின்றவேளை அனைவரும் ஒன்றுபட்டு பேசிய ஒரு விஷயம் - அடுத்த சந்திப்பு கொழும்பைத் தாண்டி வெளியூர் ஒன்றில் வைப்பது என்று.

அது குளு குளு மலையகத்தில் என்றால் எனக்கு மகிழ்ச்சி.. (யோகா கவனிக்க)
கடற்கரையோர நகர் எதாவதேன்றாலும் பலருக்கு மகிழ்ச்சி.. (யாழ்,திருகோணமலை,மட்டக்களப்பு பதிவர்களும் கவனத்தில் எடுக்கலாம்)

அதிகாரமையம் இடம் மாறுவது கண்டு சிலருக்கு சந்தோஷமாக இருக்குமே.. பதிவர்கள் பதிவுலகம் கடந்து ஒன்றிப்பதற்கும் கிரிக்கேட்டோடு சேர்ந்து ஒருமித்ததாக ஒரு சிரமதானம்,சுற்றுலா,கல்வி கற்பித்தல் முகாம் என்று பயனிப்பதற்கும் வெளியூர் சந்திப்பு எதுவாக அமையும்.
எதோ யோசிச்சு செய்யுங்கப்பா...



மூன்று சந்திப்புக்களிலும் கலந்துகொண்ட திருப்தி இருக்கிறது. அதுபோல ஒரு சில சிறு சிறு உரசல்கள்,அரசல் புரசலான சர்ச்சைகள் வந்தபோதிலும் இலங்கைப் பதிவர்களிடையே காணப்படும் ஒற்றுமையும்.புரிந்துணர்வும்,சிநேகபூர்வ செயற்பாடுகளும் தொடர்ந்தும் நீடிப்பதும் வளர்ந்துவருவதும் ஆரோக்கியமான உணர்வுகளைத் தோற்றுவிப்பதோடு எதிர்காலத்தில் பதிவுலகத்தால் மேலும் நல்ல விஷயங்கள் நல்ல முறையில் நடப்பதற்கு வழி சமைக்கும் என்ற நம்பிக்கையையும் புதியவர்கள்,இளையவர்கள் பலர் பதிவுலகில் நுழைவார்கள் என்ற நம்பிக்கையையும் தருகிறது.

நேரலையில் பார்த்திராதவர்கள் முழுமையாகப் பார்த்து ரசிக்க,
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 3 இன் காணொளிகள்...





நான் மறந்த/தவற விட்ட விடயங்களையும் பார்த்து அறிந்திடுங்கள்....




December 22, 2010

பரீட்சை மண்டபத்தில் Cheer girls????

இப்போது பரீட்சைகள் காலம் இல்லையா?
ஆனால் பரீட்சை எப்படி என்று கேட்டாலே, பொறி கலங்கி பூமி அதிருவது போல எல்லாரது மூஞ்சிகளும் மாறிவிடும்.. (எங்களது கடந்த கால அனுபவமும் இதுவே தானே)

இதற்காக பரீட்சைகளை எப்படி சுவாரசியமாக மாற்றுவது என்று ரூம் போட்டு யோசித்துப் பார்த்தேன்...

உலகம் முழுக்க IPL மூலமாக கிரிக்கெட் பரபர விற்பனைப் பொருளாக மாறியது போல, பரீட்சையையும் மாணவர்கள் விரும்புகிற ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மாற்ற நம்மால் முடிந்த சில ஐடியாக்கள்...

IPL பாணியில் பரீட்சைகள்..

1. பரீட்சை நேரத்தை ஒரு மணித்தியாலமாக மாற்றி,புள்ளிகளை 50ஆக மாற்றிவிடுவது..
2. பதினைந்தாவது நிமிடத்தில் Strategy break அறிமுகப்படுத்தப்படும்.
3. மாணவர்களுக்கு ப்ரீ ஹிட் (Free hit) கொடுப்பது; அவர்களுக்கான கேள்விகளை அவர்களே எழுதி விடைகளையும் அவர்களே எழுத ஒரு வாய்ப்பு
4. முதல் பதினைந்து நிமிடங்கள் Power Play... பரீட்சை அறைக்குள் மேற்பார்வையாளர் இருக்கமாட்டார்.. மாணவரகள் இஷ்டப்படி புகுந்து விளையாடலாம்.
5. கொப்பி அடிக்காமல், பிட் அடிக்காமல் எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த Fair Play விருதுகளை அறிமுகப்படுத்தல்.. (ரொம்ப நல்லவங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்போமே)
6. பரீட்சைத் தாளில் பிழையான வினா ஒன்று கேட்கப்பட்டிருந்தால் அடுத்த கேள்விக்குத் தவறான விடை சொன்னாலும் புள்ளிகள் கழிக்கப்படாது..
இதுவும் ஒரு வகை Free hit தான்.

எல்லா மாணவர்களும் விரும்பப்போகின்ற முக்கியமான விஷயம் இது....

ஒவ்வொரு சரியான விடை எழுதும் நேரமும் ஊக்குவித்து உற்சாகப்படுத்த பரீட்சை மண்டபங்களில் Cheer Girls  இருப்பார்கள்...
மாணவிகள் விரும்பினால் Cheer Boysஉம் ஏற்பாடு செய்யலாம்....



ஹலோ.. எங்கேப்பா எல்லாரும் பரீட்சைகளுக்குப் படிக்கத் தயாராகிறீங்களா? இன்னும் அமுல்படுத்தலீங்க.. நீங்கள் எல்லாம் ஆதரவளித்து இந்த ஐடியாவை வரேவேற்று வெற்றிபெறச் செய்தால் வந்திடும் விரைவில்.
(வாக்குக் குத்துங்கன்னு மறைமுகமாக சொல்றேனாக்கும்)

* IPL 4 பரபரப்பு ஆரம்பித்திருக்கும் நேரத்தில் இப்படியொரு மொக்கை போடலாமேன்னு தான்.. அடுத்த இரு பதிவுகள் கொஞ்சம் சீரியசாக இருப்பதால்...

* இன்று காலை விடியலில் ஏக வரவேற்பைப் பெற்ற விஷயம் இப்போ இடுகையாக..

இதன் ஒரிஜினல் ஆங்கில வடிவம் ;)

IPL style Exams ;)

December 21, 2010

இந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் - எதிர்பார்த்ததே

நேற்று செஞ்சூரியன் Super Sport Parkஇல் தென்னாபிரிக்கா இந்தியாவை இன்னிங்சினால் தோற்கடித்தது எதிர்பார்த்ததே – எனினும் துவைத்தெடுக்கும் என்று எதிர்பார்த்தது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் போராட்டத்தினால் இன்னிங்சினாலும் 25 ஓட்டங்களினாலுமே வென்றது தென்னாபிரிக்கா.

மழை முதல் நாளில் வெறும் 38 ஓவர்கள் மட்டுமே பந்துவீச அனுமதித்தும் கூட, இறுதிநாளின் 98 வீதமான நேரம் மீதியாக இருக்க தென் ஆபிரிக்கா இந்தியாவைத் தோற்கடித்துள்ளது.

விக்கிரமாதித்தன் இம்முறை விளையாட்டுக்காட்டவில்லை. முன்னைய எதிர்வுகூறலில் சொன்னது போலவே அத்தனையும் நடந்துள்ளன.
3வது நாளின் பின் ஆடுகளம் தனது வேகத்தையும் உயிர்ப்பையும் கொஞ்சம் இழந்ததனால் மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் - குறிப்பாக சேவாக் + கம்பீர் – பின் தோனி ஆகியோரின் வேகமான அதிரடிகளாலும் தென்னாபிரிக்காவின் வெற்றி தாமதப்படுத்தப்பட்டது.

சேவாக் -  கம்பீரின் 2ம் இன்னிங்ஸில் காட்டிய பதிலடி வேகத்தை முதலாம் இன்னிங்ஸில் காட்டியிருந்தால் தென்னாபிரிக்கா கொஞ்சமாவது நிலை குலைந்திருக்கும். அடுத்த டெஸ்ட்டில் இந்த உபாயத்தைக் கையாண்டு பார்க்கலாம்.

லக்ஸ்மன், ரெய்னாவின் தடுமாற்றம் - தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் வேக, அதிவேக + பவுன்ஸ் பந்துகளால் முதலாம் இன்னிங்சில் இந்தியாவை முழுதும் உருட்டி எடுத்தார்கள். இரண்டாம் இன்னிங்சில் நான்கு பேரைத் தவிர ஏனைய அனைவருமே மாட்டிக்கொண்டார்கள்.

ஆனால் சதம் பெற்ற சச்சின் + அரைச்சதங்கள் அடித்த மூவரும் கூட, வேகம் + எகிறி எழும் பந்துகளால் தான் வீழ்த்தப்பட்டார்கள்.

இது தென்னாபிரிக்காவுக்கு அடுத்த டெஸ்ட்டுக்கு சொத்சொபேயை விட வேகமான ஒருவரை (பார்னெல்/மக்லாரென்/வேறுயாராவது) அழைக்கும் எண்ணத்தை ஏற்படுத்தலாம்.

மறுபக்கம் இந்தியாவின் பந்துவீச்சு – சஹீர்கானும் இல்லாமல் நொண்டியடித்தது. தென்னாபிரிக்க வீரர்கள் ஒவ்வொருவருமே தாம் விரும்பியபடி ஓட்டங்களைக் குவித்துவிட்டு பின்னர் ஆட்டமிழந்தனர். கலிசின் இரட்டைச்சதம், இரு சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் என்று துடுப்பெடுத்தாடிய அனைவருமே இந்தியப்பந்துவீச்சாளர்களை இலகுவாகக் கையாண்டார்கள்.

இவற்றில் கலிசின் இரட்டைச்சதம் - சச்சின் டெண்டுல்கரின் 50வது டெஸ்ட் சதம் போலலே முக்கியமானது – மைல்கல்லானது.

15 வருடங்களாக விளையாடிவரும் உலகின் மிகச் சிறந்த சகலதுறை வீரரின் முதலாவது இரட்டைச்சதம் இது. 36 வயதிலே தனது முதலாவது இரட்டைச்சதத்தை ஐக்ஸ் கலிஸ் பெற்றுள்ளார்.
அப்பாடா ஒருவாறாக ஒரு இரட்டை சதம்.. 

கலிஸின் பொறுமையான நிதானமான துடுப்பாட்டத்தின் பலாபலன்கள் தான் தென் ஆபிரிக்காவின் உறுதியான துடுப்பாட்ட வரிசை பல அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவது. கலிசை மையப் படுத்தியே உலகின் மிக அச்சுறுத்தலான துடுப்பாட்ட வரிசைகளில் ஒன்று தென் ஆபிரிக்காவினால் கட்டிஎழுப்பபட்டுள்ளது.

ஆனாலும் இருநூறு ஓட்டங்கள் என்ற மெயில் கல்லைத் தாண்ட முடியாமல் கலிஸ் அடிக்கடி தடுக்கி வீழ்ந்துகொண்டே இருந்தார். இவருக்குப் பின் வந்த அம்லா,வில்லியர்ஸ் கூட இரட்டை சதம் பெற்றுள்ள நேரம், கலிஸின் இமாலய சாதனைகளுக்கு இப்போது இந்த இரட்டை சதம் மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது.

அவர் இந்த மைல் கல்லை எட்டும்வரை தாம் மிகுந்த பதற்றத்தோடு இருந்தததாக ஸ்மித் கூறுகிறார்.
ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் நேரத்திலேயே அவரது சத சாதனையை ரிக்கி பொன்டிங் முறியடிப்பார் என நாம் நம்பியிருந்தோம். ஒரே சதம் இருவருக்கிடையில் வித்தியாசமாக இருந்தது. இப்போது சச்சின் 50 சதங்கள்,பொன்டிங் 39,கலிஸ் 38....

அதிலும் கலிஸின் இருநூறு ஓட்டங்கள் பெறப்பட்டதும் வேகமாகவே.. இது தென் ஆப்ரிக்கா இந்தியா மீது மேலும் அழுத்ங்களைப் பிரயோகிக்க ஏதுவாக அமைந்தது. பந்துவீச்சாளருக்குத் தாராளமாக நேரம் இருந்தது.

அம்லா இன்னொரு கலிஸ்.. கடந்த வருடத்திலிருந்து ஓட்டங்களைக் குவிக்கும் இயந்திரமாக தென் ஆபிரிக்காவுக்கு மாறியுள்ளார்.. ஒரு நாள்,டெஸ்ட் இரண்டிலும் ஓட்ட மழை பொழிகிறார்.

அடுத்த தென் ஆபிரிக்கத் தலைவர் என்றும் ஸ்மித்தின் செல்ல நண்பன் என்றும் வர்ணிக்கப்படும் டீ வில்லியர்ஸ வந்து நிகழ்த்தியது கொலை வெறித் தாண்டவம்.ஐந்து சிக்சர்களுடன்,அவ்வளவு நேரம் கொஞ்சம் ஆறுதலாக ஆடிவந்த கலிசையும் வேகமாக ஆட ஊக்கப் படுத்தி(கலிசும் ஐந்து சிக்சர்கள் அடித்தார்) இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார்.

அம்லா - கலிஸ் இணைப்பாட்டம் 230 ஓட்டங்கள் - 52 ஓவர்களில்.
கலிஸ் - டீ வில்லியர்ஸ் இணைப்பாட்டம் 224 ஓட்டங்கள் - 38 ஓவர்களில்

டீ விலியர்சின் சதம் டெஸ்ட் போட்டியொன்றில் தென் ஆபிரிக்க வீரர் ஒருவர் பெற்ற வேகமான சதமாகும்.

 இந்தியாவின் இரண்டாம் இன்னிங்க்ஸின் முக்கிய இணைப்பாட்டமான சச்சின் - தோனி இணைப்பாட்டம் இவற்றுக்குக் கொஞ்சம் ஈடு கொடுப்பதாக அமைந்தது.ஆனாலும் இன்னும் அதிக ஓட்டங்கள் தேவைப்பட்டன..
41 ஓவர்களில் 177 ஓட்டங்கள்.

இந்தியாவின் அறிமுகப் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் ஒரு சில பந்துகள் சிறப்பாக வீசினாலும் இன்னும் வளரவேண்டி இருக்கிறது. சாகீர் கான் காயத்திலிருந்து முற்றாகக் குணமடைந்துள்ளார் என்று சொல்லப்படுவதால் அவரது இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கான வருகை இந்தியாவை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.

இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்க்சில் தென் ஆபிரிக்கப் பந்துவீச்சாளர்கள் மிக சிரமப்பட்டுத் தான் விக்கெட்டுக்களை எடுக்கவேண்டி இருந்தது. ஆனாலும் இந்தியா அதிரடியாக ஆடியபோதும் 128 ஓவர்கள் சளைக்காமல் வியூகங்களை மாற்றி மாற்றி தென் ஆபிரிக்கா விக்கெட்டுக்களைக் குறிவைத்தது மெச்சத் தக்க ஒரு விடயம்.

முதலாம் இனிங்க்சில் 484 ஓட்டங்கள் பின்னிலையில் இருப்பதென்பது தரும் தாக்கம் வெற்றியைப் பற்றியோ, ஏன் சமநிலை பெறுவதைப் பற்றியோ கூட ச்நிதிக்க விடாது. இது ஓரளவு மனதை இலகுவாக்கின்ற விடயமும் கூட..
தலைக்கு மேலே பொய் விட்டது.. இனி சாண் என்ன முழம் என்ன என்ற நிலை தான்..

இதனால் தான் சேவாக்,கம்பீர் ஆகியோர் அதிரடியை ஆரம்பித்தார்கள். லக்ஸ்மன், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இன்னும் கொஞ்சம் நின்று பிடித்திருந்தால் இந்தியா குறைந்தபட்சம் இன்னிங்க்ஸ் தோல்வியையாவது தவிர்த்திருக்கலாம்.
 ரெய்னாவின் இடம் அடுத்த போட்டியுடனே மாற்றப்படுமா? அப்படியாக இருந்தால் யார்?
அடுத்த போட்டி வாய்ப்பு ரெய்னாவுக்கு வழங்கப்படாவிட்டால் என்னைப் பொறுத்தவரை முரளி விஜயை அணிக்குள் அழைப்பது பொருத்தமாக இருக்கும். புஜாராவை விட அனுபவமும், எழுகின்ற வேகப் பந்துகளையும் சந்திக்கும் ஆற்றல் விஜயிடம் இருக்கிறது.
லக்ஸ்மன் அனுவபத்தினால் அடுத்த போட்டியில் திருந்துவாரா பார்க்கலாம்.

சச்சின் - இன்னும் என்ன சொல்லவேண்டும் இவர் பற்றி?
என்ன சாதனை இவரிடம் இல்லை? இவரோடு போட்டிபோட்டு வந்த பொன்டிங்கின் இடம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால் 21 ஆண்டுகள் விடாமல் ஆடிய களைப்பேதும் இல்லாமல் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சதம் அடித்து அசரவைக்கிறார்.
சச்சின்+சதம் = அடிக்கடி பார்க்கும் காட்சி 

இவர் இந்த சூழ்நிலையில் சதம் அடித்து தனது மைல் கல்லை நிலைநாட்டியது ஆச்சரியமே இல்லாத விஷயம். சச்சினும் இதை ஒரு பெரிய சாதனையாக (பெருந்தன்மையுடன்) கருதவில்லை என்கிறார்.
ஆனால் 37 வயததைத் தாண்டிய ஒருவர் ஐம்பது டெஸ்ட் சதங்களைப் பெற்றும் 14500 ஓட்டங்களை டெஸ்ட் போட்டிகளில் பெற்றும் இன்னும் இளையவர்களை விடத் துடிப்போடு ஆடிக் கொண்டிருப்பதானது இமாலய சாதனை தானே?

சாதனைகள் மட்டுமே சச்சினின் இலக்கு என்ற விமர்சனங்களுக்கும் சச்சின் பதில் சொல்லி இருக்கிறார்
"சாதனைகள் படைப்பது மட்டுமே எனது இலக்காக இருந்திருந்தால் ஒருநாள் போட்டிகள் விளையாடுவதிலிருந்து எப்போதோ நின்றிருப்பேன்"

2009 இன் ஆரம்பத்திலிருந்து சச்சின் இருப்பது அசுர formஇல்.. 19 போட்டிகள், 30 இன்னிங்க்சில் 80.15 என்ற சராசரியில்
2084 ஓட்டங்கள். 9 சதங்கள்,8 அரைச் சதங்கள்.. கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்வதில் தப்பே இல்லையே..

ஓய்வு பெற முதல்(ஓய்வு எப்போது என்று யாராவது கேட்பீங்களா?) இன்னும் எத்தனை சாதனைகள்+சதங்களோ?

ஆனால் தென் ஆபிரிக்காவில் வைத்து தொடரை விடுங்கள்,ஒரு டெஸ்டையாவது வெல்வதற்கு சச்சின் டெண்டுல்கரின் சிறப்பான தனியாட்டம் மட்டும் போதாது.
அணியில் மற்றத் துடுப்பாட்ட வீரர்களும் தாக்குப் பிடிக்கவேண்டும்.
தோனியின் 90 ஓட்டங்கள் முக்கியமானவை.ஆனாலும் ஒரு நாள் வேகத்தில் ஆடிய அவர் இன்னும் கொஞ்சம் நிதானம் காட்டி இருக்கவேண்டும். சச்சின் மேலும் குற்றம் இருக்கிறது.
தோனியுடன் ஆடும்போது அவர் பந்தை எதிர்கொள்வதற்கு வாய்ப்புக் கொடுத்தது பரவாயில்லை. ஆனால் தோனியின் விக்கெட் போனபிறகு ஏனைய மூன்று விக்கெட்டுக்களையும் இந்தியா துரிதமாக இழந்த நேரம் சச்சின் டெண்டுல்கர் strikeஐத் தான் எடுத்து பொறுப்புணர்வுடன் ஆடியிருக்க வேண்டும். இறுதி மூன்று வீரர்களுடன் சச்சின் புரிந்த இணைப்பாட்டம் வெறும் 59 பந்துகள்..
இதில் சச்சின் எதிர்கொண்டது 29 பந்துகளே.. இந்தியா இன்னும் 25 ஓட்டங்கள் எடுத்திருந்தால் இன்னிங்க்ஸ் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்.

 இந்தியா நீண்ட காலமாகவே ஒரு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் தடுமாறியே வந்திருக்கிறது.. (உள்நாட்டிலும் கூட) அதே போல, போகப் போக இதுவும் சரியாகிவிடும் என்று இருந்துவிட முடியாது..
தென் ஆபிரிக்கர்கள் அசுரவெறியுடனும் வேகத்துடனும் இருக்கிறார்கள்.
ஸ்டேய்நும் மோர்க்கேலும் உருட்டி எடுத்து விடுவார்கள் போலத் தான் தெரிகிறது..

இன்னொரு முக்கிய விஷயம் - இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கவேண்டுமாக இருந்தால் இந்தத் தொடரில் எஞ்சிய இரு போட்டிகளில் ஒன்றையாவது சமப்படுத்த வேண்டும்.
இப்போதிருக்கும் நிலையில் சாகீர்+சச்சின்+சேவாக் சேர்ந்து ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால் மட்டுமே இது சாத்தியம் எனத் தோன்றுகிறது.


December 20, 2010

வேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்

விக்கிரமாதித்தனின் ராசிப்படியே பேர்த்தில் நடைபெற்ற மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பற்றிய எனது எதிர்வுகூறல் பிழைத்துப் போனது.(ஒரு சில முக்கிய விஷயங்கள் சரி வந்திருந்தன) ஆனால் அதிலும் மிக சந்தோஷமே.. பின்னே, எவ்வளவு காலத்துக்குப் பின்னர் இப்படியொரு ஆஸ்திரேலிய வெற்றி.. அதுவும் இரண்டாம் நாளில் இருந்தே உறுதி செய்யப்பட வெற்றி இது.

பொன்டிங் + ஆசி அணி - எத்தனை காலத்தின் பின் இந்த உற்சாகம் 

ஆடிக் கொண்டிருந்த, அல்லது இன்னும் ஆட்டம் கண்டுகொண்டே இருக்கின்ற பொன்டிங்கின்  தலைமைப் பதவியைக் குறைந்தது இந்தத் தொடர் முடிவடையும் வரையாவது தக்கவைக்கக் கூடிய மிகச் சிறந்த 36வது பிறந்தநாள் பரிசு இது.

இரண்டாவது டெஸ்ட்டில் மிக மோசமாக ஆஸ்திரேலியா தோற்றதன் பின்னர் வெற்றி பெரும் மனநிலைக்குத் திரும்புவதென்பது இயலாத காரியமாகவே இருக்கும் என நான் உட்படப் பலரும் நினைத்திருந்தோம். எம்மில் பொன்டிங்கும் கூட ஒருவராக இருந்திருக்கலாம்.
காரணம் நான் முன்னைய எதிர்வுகூறல் இடுகையில் சொன்னது போல, தலைவர்,உப தலைவர் மற்றும் முக்கிய பந்துவீச்சாளர்கள் தடுமாறும் ஒரு அணியால் சமநிலை முடிவைப் பெறுவதுகூட சிரமம் என்பது எல்லோருக்குமே தெரியும்.

ஆனால் பேர்த் ஆடுகளத்தின் வேகம்,பௌன்ஸ் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணித்து அதற்கேற்ற பந்துவீச்சாளரைத் தெரிவு செய்த ஆஸ்திரேலியா இங்கிலாந்தை உருட்டித் தள்ளியுள்ளது.

நான்கு வேகப் பந்துவீச்சாளரைத் தெரிவு செய்தது பற்றியும் சுழல் பந்துவீச்சாளர் பியரைத் தெரிவு செய்யாதது பற்றியும் பொன்டிங் அதிருப்திப் பட்டதாகப் பரவலாகப் பேசப்பட்டது.
ஆனால் ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளருக்கு சாதகமாக மாற்றமடையும் என் எதிர்பார்க்கப்பட்ட இறுதி நாள் வரை என்ன,நான்காவது நாளின் மதியபோசன இடைவேளை வரையே போட்டி செல்லவில்லை அல்லது ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் செல்ல விடவில்லை என்பது தான் முக்கியமானது.

69 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை முதல் நாளில் ஆஸ்திரேலியா இழந்தபோது பழைய குருடி கதை தானோ என்று நினைத்தேன்.

ஆனால் மீண்டும் இந்தத் தொடர் முழுது ஆஸ்திரேலியாவைக் காப்பாற்றும் மைக் ஹசி,ஹடின் ஆகியோரின் பொறுமையான துடுப்பாட்டம் ஓட்டங்களை சேர்த்தது என்றால் இந்த பேர்த் போட்டியில் யார் மீண்டும் formக்குத் திரும்பினால் ஆஸ்திரேலியா வெல்லும் என்று எல்லோரைப் போலவே நானும் எதிர்பார்த்தேனோ,எதிர்வு கூறினேனோ அதே மிட்செல் ஜோன்சன் அரைச்சதம் எடுத்து ஆஸ்திரேலியாவை கௌரவமான ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்து சென்றார்.

இங்கிலாந்தின் துடுப்பாட்டம் முதல் தடவையாக இந்தத் தொடரில் சுருண்டது. ஜோன்சன் ஆறு விக்கெட்டுக்களை எடுத்த விதம் அலாதியானது. அதிலும் குக்,ட்ரொட்,பீட்டர்சன்,கொலிங்வூட் என்று நால்வரையும் ஜோன்சன் துரிதமாக அனுப்பிவைத்ததில் அவர் இந்த ஆடுகளத்தை மீண்டும் தனக்குப் பரிச்சயம் ஆக்கிவிட்டார் என்பதும் என்பதும் தெளிவாகவே புரிந்தது.
  Magic Ms - Michael Hussey & Mitchell Johnson

இத்தொடரில் இதுவரை ஆஸ்திரேலிய நாயகனாக இருக்கின்ற மைக் ஹசியின் இரு இன்னிங்க்ஸ் துடுப்பாட்டமும் அவரை Mr.Cricket என அழைப்பதுக்கான காரணங்கள் கூறும்.
இங்கிலாந்தின் குக்,பீட்டர்சன் இரட்டை சதங்களைப் பெற்றுள்ளபோதும்,ஹசி போல consistency இல்லை என்பது முக்கியமானது.
ஹசி - இவரையா தூக்க இருந்தார்கள்??

ஆஸ்திரேலியா துடுப்பெடுத்தாடிய நேரம் ட்ரெம்லெட் சிறப்பாக ஆடுகளத்தின் வேகத்தையும்,தனது உயரத்தையும் பயன்படுத்தி இருந்தாலும், மிட்செல் ஜோன்சன் உக்கிரமாகப் பந்துவீசியபோது தான் மைதானம் சில பல ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் அதிவேக மைதானமாக இருந்த அந்த நாள் ஞாபகங்கள் வந்தன.

இதற்கு முதல் அடிலெய்டில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் மரண அடி வாங்கிய நேரம் ஒரு விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய ஒரே ஒருவரான ரயன் ஹரிசும் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்து 187 ஓட்டங்களுக்கு சுருண்டபோது இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு பலருக்கும் தெரிந்துபோனது.காரணம் இருநூறு ஓட்டங்களுக்குள் சுருண்ட பின்னர் இங்கிலாந்து ஒரு டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை வென்று இருபது வருடங்களுக்கு மேலாகிறது.

வரலாறுகள் படைக்கின்ற அணியாக ஸ்ட்ரோசின் இங்கிலாந்தைப் பலர் சொன்னாலும் பேர்த்தில் ஹசி,ஜோன்சன்,வொட்சன் ஆகியோரை மீறி வெல்லும் ஆற்றல் இங்கிலாந்துக்கு இருக்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியர்கள் எதிர்பார்த்த சில முக்கிய விஷயங்கள் மீண்டும் நடக்கவில்லை.
ஹியூஸ்,பொன்டிங்,கிளார்க்,ஸ்மித் ஆகிய நால்வருமே பெரியளவு ஓட்டங்கள் பெறவில்லை.

ஸ்மித்தின் 36 ஓட்டங்கள் முக்கியமானவையாக இருந்தாலும் ஆறாம் இலக்கத் 'துடுப்பாட்ட' வீரருக்கு இந்த ஓட்டங்கள் போதுமா என்பது கேள்விக்குறியே..
ஆனாலும் வெற்றி பெற்றதனால் ஹியூஸ்,ஸ்மித் இருவருக்குமே அடுத்த டெஸ்ட்டிலும் விளையாடும் அதிர்ஷ்ட வாய்ப்புக் கிடைத்துள்ளது.
கிளார்க்,பொன்டிங்குக்கும் கூட மீண்டும் ஒரு (இறுதி) வாய்ப்புத் தான்.

81 ஓட்ட முதல் இன்னிங்க்ஸ் முன்னிலை ஆஸ்திரேலிய அணிக்குத் தந்தது புதிய உற்சாகம் என நினைத்தால் மீண்டும் அதே காவலர்கள் தான் காப்பாற்றிக் கரை சேர்க்கவேண்டி இருந்தது.

வொட்சனின் 95 ஓட்டங்களும்(சதங்களை நழுவவிடும் தடுமாற்றத்தை வொட்சன் விரைவில் களைந்தால் உலகின் மிகச் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மிளிரலாம்), Mr.Cricketஇன் 116 ஓட்டங்களும் மிக மிகப் பெறுமதி வாய்ந்தவை என்பது இந்த ஆஷஸ் முடியும்போது தெரியவரும்.

முதல் இன்னிங்சில் இருநூறு ஓட்டங்களையே பெறத் தடுமாறிய இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியா வழங்கிய 391 இலக்கு மிகப் பெரியது என்பது மட்டுமல்ல,எட்ட இயலாததும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.
ஆனால் அடிலெய்ட் போல,பிரிஸ்பேன் போல குக்கோ,டிறோட்டோ,பீட்டர்சன்னோ யாரோ ஒருவர் நின்று பிடித்தால் இலக்கை எட்டிவிடும் இங்கிலாந்து என்ற நப்பாசை யாராவது ஒரு இங்கிலாந்து ரசிகருக்கு வந்திருக்கலாம்.
Tremlett - இங்கிலாந்தின் ஒரே ஆறுதல் 

அதை விட ஆஷஸ் ஆரம்பிக்குமுன் இங்கிலாந்து அணி பேர்த் நகரில் பத்துநாட்கள் முகாமிட்டிருந்து தம்மைத் தயார்ப் படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஐந்து தடவை தொடர்ந்து இங்கே மண் கவ்வியிருந்த அவமானத்தை இம்முறையாவது மாற்ற ஆசைப்பட்ட இங்கிலாந்தின் கனவும் நிராசையாகிப் போனது.

பேர்த் மைதானத்தில் கடைசி 12 இன்னிங்சில் இங்கிலாந்து ஏழு தடவைகள் இருநூறைத் தாண்டவில்லை. இறுதியாக முந்நூறைத் தாண்டி 24 வருடங்கள் ஆகிறது. அதே ஆண்டில் தான் இங்கிலாந்து இறுதியாக ஆஸ்திரேலியாவில் வைத்து ஆஷசைத் தனதாக்கியிருன்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை உருட்டிய அதே ஹரிசும் ஜோன்சனும்இரண்டாவது இன்னின்க்சிலும் கரம்கோர்த்து உருட்டினார்கள்.
மீண்டும் இருவரும் சேர்த்து ஒன்பது விக்கெட்டுக்கள். இம்முறை ஹரிஸ் ஆறு+ஜோன்சன் மூன்று.
ரயன் ஹரிஸ் - புதிய புயல் 

இங்கிலாந்தின் 123 ஓட்டங்கள் என்பது இதற்குமுன் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்துக்கு அவமானம் மட்டுமல்ல. அடுத்த போட்டிகள் பற்றி நிறையவே சிந்திக்க வைக்கின்ற அபாய சங்கும் கூட.
இயன் பெல்லை வரிசையில் மேல் கொண்டுவருவது பற்றியும், கொலிங்வுட்டை அணியை விட்டுத் தூக்குவது பற்றியெல்லாம் இங்கிலாந்து யோசிக்க ஆரம்பித்துள்ளது.
நான் கடந்த பேர்த் முன்னோட்டப் பதிவில் சொன்னது போல

எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.

இப்போது இங்கிலாந்து யோசிக்கும் நேரம்...
ஆனால் ஆஸ்திரேலியா வென்ற உற்சாகத்தில் இருந்தாலும் இன்னும் அடுத்த வெற்றி பற்றி உறுதியாக இருக்க முடியாது.

துடுப்பாட்டம் கொஞ்சம் இன்னமும் தளம்புகிறது.இன்னும் ஓட்டங்கள் பெறக்கூடிய இன்னும் இரண்டுபேராவது வேண்டும்.. தனிய ஹசி,வொட்சன்,ஹடின் எல்லாப் போட்டிகளிலும் ஓட்டங்கள் பெற முடியுமா?

அடுத்த டெஸ்ட் போட்டி சுழல் பந்துவீச்சாளருக்கு சாதகம் தரக்கூடிய மெல்பேர்ன் ஆடுகளத்தில். இங்கிலாந்தின் ஸ்வானை ஒத்த ஒருவரும் ஆஸ்திரேலியாவில் இல்லை.
ஸ்மித் ?? பியர்?? இவர்களை விட என்னைக் கேட்டால் மைக்கேல் கிளார்க் பரவாயில்லை என்பேன்..

பியர் சிலவேளை தனது முதல் டெஸ்ட் போட்டியில் (மெல்பேர்னில் விளையாடக் கிடைத்தால்) கலக்கலாம்.. யார் கண்டார். காரணம் மெல்பேர்னில் தான் வளர்ந்தார். பல உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியும் இருக்கிறார்.அத்துடன் ஷேன் வோர்னின் பூமியல்லவா? ஷேன் வோர்னின் சிபாரிசும் இவர் தான்.
எனக்கு இந்த பியர் பற்றித் தெரியாது..

ஆனால் அண்மையில் மொக்கை போட்ட விஷயம்..
நல்ல காலம் பியர் துடுப்பாட்ட வீரராக இல்லை.
இருந்திருந்தால், பொன்டிங் அடித்து ஆடுகிறார் என்று சொல்வது போல, பியர் அடித்து ஆடுகிறார் என்று சொல்வது நல்லாவா இருக்கும்? ;) 

ஆஸ்திரேலியாவுக்காக பதினொருவர் கொண்ட அணியில் ஹசி,ஹடின்,வொட்சன்,ஹரிஸ்.ஜோன்சன்,ஹில்பென்ஹோஸ் ஆகிய அறுவர் மட்டும் சிறப்பாக விளையாடி எல்லா டெஸ்ட் போட்டிகளையும் வென்று விட முடியாது.
விரல் முறிந்தால் பரவாயில்லை தலைவா, மனசு முறியாமல் பார்த்துக்கோ 

எனவே இந்த ஆறு நாட்களில் எப்படி பொன்டிங் சுண்டுவிரல் காயத்திலிருந்து மீளப் போகிறார்(இவர் குணமடையாவிட்டால் கிளார்க்கின் தலைமையில் ஆஸ்திரேலியா Boxing Day Test விளையாடப் போகிறது என நினைத்தாலே ஸ்ட்ரோசின் கையில் ஆஷஸ் கிண்ணம் இருப்பது போன்ற காட்சி கண்ணில் விரிகிறது) ஆஸ்திரேலியா அணியைப் பேர்த்தில் வென்றது போல உறுதியான +நம்பிக்கையுடைய அணியாக மாற்றப் போகிறார்  என்ற வரலாறுக்காகக் காத்திருக்கிறேன்.

ஆனால் ஒரு முக்கிய விடயம்.. பேர்த்தில் இங்கிலாந்து தோற்ற விதம்,தோற்ற பின்னர் இங்கிலாந்து வீரர்களின் முகபாவங்களைப் பார்த்தபின்னர் ஒரு விஷயம் உணர முடிகிறது.
ஆஸ்திரேலியா போல தோல்வியிலிருந்து மீண்டு வரும் ஆற்றல் இங்கிலாந்துக்குக் குறைவு.
அதே போல ஒரு சில வீரர்களைத் தவிர ஐந்து டெஸ்ட் போட்டித் தொடர் ஒன்றில் நின்று பிடிக்கும் உடல் ஆற்றலும் குறைவு.
இவை இங்கிலாந்தின் கால்களை வாரிவிடலாம்.

மிட்செல் - மீண்டும் திரும்பிய மிடுக்கு  

அத்துடன் ஆஸ்திரேலியர்கள் தங்கள் ரகசிய ஆயுதமான ஆடுகளப் பேச்சு தாக்குதலான sledgingஐ பேர்த்தில் வலிந்து மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்..

இது மனோரீதியான தாக்கத்தை இங்கிலாந்துக்கு வழங்கலாம்.
ஆஸ்திரேலியாவின் ஜோன்சன்,சிடில்,வொட்சன்,ஹடின் போன்றோர் இதில் வல்லவர்கள்.இங்கிலாந்திலும் பீட்டர்சன்,ஸ்வான் போன்றோர் இருந்தாலும் முக்கியமான 'போக்கிரி' ப்ரோட் இதிலும் இல்லையே..

மொத்தத்தில் சுவாரஸ்யமான டெஸ்ட் Boxing Dayஅன்று காத்திருக்கிறது..

படங்கள் - நன்றி Cricinfo

பி.கு 1 - பொன்டிங்குக்கு இப்போது தலைமைப் பதவி ஆபத்தில்லைஎனினும் தற்செயலாக பொன்டிங் காயம் காரணமாக விளையாட முடியாது போனால் அடுத்த தலைமைக்கான என் தெரிவு... பிரட் ஹடின்.
கிளார்க் முதலில் மீண்டும் form க்கு வரட்டும்.

பி.கு 2 - நாளை (செவ்வாய்) இந்திய - தென்னாபிரிக்க டெஸ்ட் பற்றி சிறு அலசல் வரும் :)

December 18, 2010

Latest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்கள்

வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது இலங்கைத் தமிழ் பதிவர் சந்திப்பு நாளை இடம்பெறுவது அனைவரும் அறிந்த விடயமே.
அதற்கு முன்னதாக இன்று முதல் தடவையாக(இன்னொரு வரலாற்று சிறப்பு மிக்க போட்டுக் கொள்ளுங்கள்) ஒழுங்குசெய்யப்பட்ட பதிவர் கிரிக்கெட் திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

சனிக்கிழமை பலருக்கு வேலை நாள் எனவே பங்குபற்றுதலை நாம் பெரிதாக எதிர்பார்த்திருக்கவில்லை.ஆனாலும் யாழ்ப்பாணம்,கண்டி,மட்டக்களப்பு,திருகோணமலை என்று பல இடங்களிலும் இருந்து ஆர்வத்துடன் கிட்டத்தட்ட முப்பது பேர் வந்திருந்தமை எல்லோருக்கும் மகிழ்ச்சியை தந்திருந்தது.

நேற்றிரவு பெய்த மழை போட்டி பற்றிய சந்தேகங்களை எழுப்பி இருந்தது, மது வேறு போட்டியை நேரலை செய்யப்போவதாக சொன்னதால் மழை பெய்வதே பரவாயில்லை என நினைத்தேன்.
ஆனால் இன்று காலையிலிருந்து எங்கள் பதிவர்களின் முகங்கள் போலவே பிரகாசமான வெயில்.
வெள்ளவத்தையில் இருக்கும் முருகன் பிளேஸ்,பாடசாலை மைதானம் அப்படியொரு அழகு..

உருண்டு விழுந்து களத்தடுப்பு செய்தாலும் காயம்படாத அளவுக்கு புல் நிறைந்தது.
(ஆனால் நான்,கன்கோன்,நிருஜா(மாலவன்) ஆகியோர் விழாமல் இருப்பதை மைதானப் பாதுகாவலர் ஒருவர் கண்காணித்துக்கொண்டே இருந்தது பெரிதாகக் கவனிக்கத் தேவையில்லாத விஷயம் இங்கே)

நேரலையாக இணையம் வழியே ஒளிபரப்பும் பணியை மதுவும் அவரது நண்பரும் செவ்வனே சிரமேற்கொண்டு கலக்கினார்கள்.இணையம் வழியாகவும் எம் செல்பேசிகள் மூலமாகவும் வந்து ஊக்கப்படுத்திய சர்வதேசப் பதிவர்களுக்கு நன்றிகள்.(பலர் எதிர்பார்த்த 'முக்கியமான' ஒருவர் மட்டும் வரவில்லை.)

இரண்டு அணிகளாகப் பிரித்து ஆட்டம் ஆரம்பித்தது.

பதிவர் சந்திப்பு ஏற்பாட்டாளர்களான மாலவனும் அனுத்தினனுமே அணிகளுக்குத் தலைமை தாங்கினார். IPLக்கு சவால் விடுவது போல அணி வீரர்களை ஏலம் எடுத்தனர் இரு தலைவர்களும்.
யார்ரா இது என்னை உடனே எடுத்தது என்று நம்பவே முடியல. அட நம்ம நிரூஜா(வந்தி மாமா கோவிக்கப் போறார்).

இரு தலைவர்களும் கிட்டத்தட்ட சமபலனான அணிகளைத் தெரிவு செய்து விளையாட நாணய சுழற்சியில் ஈடுபட்டனர்.

முதலாவது நாணய சுழற்சியில் வென்ற அனுத்திணன் தன் அணி துடுப்பெடுத்தாடும் என்று அறிவித்தார்.
சரி போகட்டும் என நாம் விட்டு விட்டோம்.

மாலவன் அணியின் ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் கோபிநாத்தும்,மருதமூரானும்(பிரவீன்) மிக சிறப்பாக பந்துவீசினார்கள்.
மருதமூரானின் இடது கைப் பந்துவீச்சு பார்ப்பதற்கே அழகாக இருந்தது.

ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கினாலும் யாழ்ப்பானத்திலிருந்து வந்த களைப்பு கொஞ்சம் கூடத் தெரியாமல் ஜனா அதிரடியாட்டம் ஆட ஆரம்பித்தார்.
அப்போது தான் பந்துவீச வந்திருந்த அப்பாவி லோஷன் ஒரு விக்கெட்டை எடுத்த சந்தோசம் தீர முன்னரே ஜனாவினால் ஆறு ஓட்டத்துக்காக வெளுக்கப்பட்டார்.
மூன்று ஓவர்களிலும் ஜனா ஒவ்வொரு ஆறுகளை அடித்தாலும் லோஷனின் மித வேகம்,வேகம் குறைந்த பந்துகளில் மற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.
நான்கு விக்கெட்டுக்களை லோஷன் கைப்பற்றினார்.

நிதர்ஷன் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி இருந்தார்.

ஜனாவின் அதிரடி ஆட்டம் தந்த மகிழ்வை ஏனைய அனு அணி வீரர்கள் வழங்கவில்லை. ஜனா அடித்த நான்கு சிக்சர்களும் அற்புதமானவை.
மாலவன் அணியும் பதிவர்களுக்கிடையிலான அன்னியோன்னியத்தைக் காட்டும் வகையில் வகை,தொகை இல்லாமல் பிடிகளை விட்டு நட்பின் பெருமையைக் காட்டினார்கள்.

93 ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆட ஆரம்பித்த மாலவன் அணிக்கு பால்குடி என்று பதிவர்களால் அறியப்படும் தனஞ்செயன் நல்ல அதிரடி ஆரம்பத்தைக் கொடுத்தார். ஒரு சிக்சரும் ஒரு நான்கு ஓட்டமும், ஆனாலும் அனு அணியின் ஐந்து பந்துவீச்சாளருமே வியூகம் வகுத்துத் துல்லியமாகப் பந்துவீசியிருந்தனர்.
குறிப்பாக நிரூஜன் மூன்று விக்கெட்டுக்களை எடுத்து அச்சுறுத்தலாக இருந்தார்.

லோஷன், தலைவர் நிரூஜாவை ரன் அவுட்டாக்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.(உள் வீட்டுத் தகராறு எல்லாம் இல்லப்பா) விக்கெட்டுக்கள் போய்க் கொண்டிருக்க கண்டியில் இருந்து வந்த அரிவாள் யோகா வந்தார்..
அந்த நேரம் தானா பலிக்காடா போல அணித் தலைவர் அனுத்தினன் பந்துவீச வரவேண்டும்?
தனது அரிவாள் கட்டுக்களால் அடுத்தடுத்து சிக்சர் மழை பொழிந்தார் யோகா.

அனுத்தினன் அவரை சமாளித்து ஆட்டமிழக்க செய்ய அடுத்து கோபிநாத் நுழைந்தார்.
அவரது அதிரடி மற்றும் கீழ்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களைப் பாதுகாத்து ஆடிய ஆட்டம் மாலவன் அணிக்கு வெற்றியைத் தந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பை உருவாக்க, வியூகம் வகுத்து அனுத்தினன் அணி கடைசி விக்கெட்டுக்களை உடைத்து வெற்றியை ஐந்து ஓட்டங்களால் பெற்றது.
தலைவர் அனுத்தினன் தனது பந்துவீச்சால் எதிரணியைத் தடுமாற வைத்திருந்தார். நான்கு விக்கெட்டுக்கள்.

வெயில் நடு மண்டையில் நர்த்தனமாடும் நேரம் இரண்டாவது போட்டியை சூட்டோடு சூட்டாக வைக்கலாம் என்று முடிவெடுத்தோம்.
இடைவேளையில் ஜனா தன் அன்பால் குளிர்பானங்கள் வாங்கித் தந்து எம்மையெல்லாம் குளிர்வித்தார்.
சேது அய்யாவும் மகிழுந்தில் வந்து தன் கமெராவால் எங்களை சுட்டுவிட்டு ப்ரெசென்ட் போட்டுவிட்டுப் போனார்.

இரண்டாவது போட்டியிலும் வெற்றிகரமாக மாலவன் நாணய சுழற்சியில் கோட்டை விட்டார்.
அனுத்தினன் அணி யோசித்து மீண்டும் துடுப்பெடுத்தாட இறங்கியது.
ஆனால் இம்முறை நினைத்தது போல துடுப்பாட்டம் இலகுவாக அமையவில்லை.

மாலவன் அணியின் பந்துவீச்சு அவ்வளவு இறுக்கமாக இருந்தது. ஆனால் களத்தடுப்பு பாகிஸ்தான் அணி கூடத் தோற்றுப் போகும் அளவுக்கு.
பால் குடி,யோகா ஆகியோரின் இரு அபாரமான பிடிகளுடன் வதீசின் ஒரு பிடியும் அற்புதம்.ஆனால் விட்ட பிடிகள் ஓட்ட எண்ணிக்கையுடன் போட்டி போடும்.

அனுத்தினன் அணியின் துடுப்பாட்டத்தில் மைந்தன்,துஷி ஆகியோர் மட்டுமே பத்து ஓட்டங்களை விடக் கூடுதலாகப் பெற்றவர்கள்.
ஜனா ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்ததும் (முதல் போட்டியில் கன்கோன் கோபியின் Golden Duck போல) முக்கியமானது(என்னைப் பொறுத்தவரையில் ஸ்பெஷல் :))

லோஷன் இம்முறை வழக்கத்துக்கு மாறாக முதல் இரு ஓவர்களில் சிக்சர் எதையும் கொடுக்காமல் விக்கெட்டுக்களை சரித்துக் கொண்டிருந்தார்.
(என்னுடைய வேகம் குறைவான பந்துகள் சரியான நீளத்தில் விழுந்த போது அடிக்க சென்று ஆட்டமிழந்தவர்களே அநேகர்.. இதுக்காக இலங்கையின் உலகக் கிண்ண அணியில் என்னைத் தெரிவு செய்யாவிட்டால் கொடிபிடிப்போம்,கோஷம் போடுவோம் என்று சொல்வதெல்லாம் ரொம்பவே ஓவர் ரசிகர்மாறே)
மூன்றாவது ஓவரில் ஒரு சிக்சரைக் கொடுத்தாலும் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி மொத்தமாக ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திக் கொண்டார்.

மறுபக்கம் மருதமூரான்,கோபிநாத் ஆகியோரும் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தி அனு அணியை மடக்கி சுருட்டினர்.

இதற்கிடையில் நான்கு சிக்சர்கள் என்று எங்களால் 'புகழப்படும்' அனுத்தினன் (எடுத்த சிக்சர்கள் அல்ல ;))தனக்கும் பந்துவீச மூன்று ஓவர்கள் தரப்பட்டால் தானும் ஐந்து விக்கெட்டுக்களை எடுப்பேன் என்று ஒரு மெகா குளிர்பானத்துக்காக பந்தயம் பிடித்த சிறு பரபரப்பை ஏற்படுத்தப் பார்த்தார்.

ஆனால் அவரது இரண்டாவது ஓவர் பந்துவீசப்படும் போதே மாலவன் அணி போட்டியை முடித்தது வேறு கதை.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக இறங்கிய கோபிநாத்தும் மாலவனும் நல்ல இணைப்பாட்டத்தை வழங்கி வெற்றியின் பாதையை இலகுபடுத்தினர்.
இடையிடையே விக்கெட்டுக்கள் மூன்று போனாலும் கோபிநாத்தின் அபாரமான அதிரடி அரைச் சதத்துடன் வெற்றி இலக்கு நான்கு ஓவர்கள் மீதமிருக்கையில் அடையப்பட்டது.
அய்யாவும் வெற்றியைப் பெறுகையில் ஆடுகளத்தில் கோபியுடன் இணைப்பாட்டம் புரிந்தது ஸ்பெஷல்.



ஸ்கோர் விபரங்கள்.. சுருக்கமாக..

முதலாம் போட்டி 

அனுத்தினன் அணி 15 ஓவர்களில் 92 ஓட்டங்கள்
ஜனா 33
கார்த்தி 11
ஜனகன் 10

பந்து வீச்சில்
லோஷன் 4 விக்கெட்டுக்கள்
நிதர்ஷன் 3
மருதமூரான் 2

மாலவன் அணி 15 ஓவர்களில் 87 ஓட்டங்கள்
யோகா 32
கோபிநாத் 27
தனஞ்செயன் 11


இரண்டாவது போட்டி

மாலவன் அணி 15 ஓவர்களில் 78 ஓட்டங்கள்
மைந்தன் 11
துஷி 10

பந்துவீச்சில்
லோஷன் 5 விக்கெட்டுக்கள்
மருதமூரான் & கோபிநாத் 2 விகெட்டுக்கள்

மாலவன் அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 79 ஓட்டங்கள்
கோபிநாத் ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்கள்

யாருக்கும் மனம் நோகாமல் இரு பக்கமும் தலா ஒவ்வொரு வெற்றிகள் பெற்றதோடு போட்டிகளை முடித்துக்கொண்டோம்.
இன்னும் கொஞ்ச நேரம் நின்றாலும் தோல்கள் பொசுங்கி இருக்கும்.போட்டிகள் முடிந்த மணிக்கு அப்படியொரு கடும் வெயில்.

கிண்ணங்கள்,பரிசுப் பணத்தொகை,மதிய போசனம் தராத ஏற்பாட்டுக் குழுவுக்குக் கண்டனங்கள்.
அதைவிட விளையாடிக் களைத்த வீரர்களை உற்சாகப்படுத்த எந்தவொரு Cheer leadersஐயும் கூப்பிடாததற்கு அணிகளின் வீரர்கள் எல்லோர் சார்பாகவும் கண்டனங்கள்.

படங்கள் போட நேரமில்லை. சுபாங்கனின் தரங்கம்,லோஷன்,கா.சேது ஐயா,வரோவின் பேஸ்புக் பார்க்கவும்.

நாளை பதிவர் சந்திப்பில் சந்திக்கலாம்..
வெளிநாடுகளில் இருப்போர்,வர முடியாதோர் லைவ் ஸ்ட்ரீம் பார்க்க..

  http://www.livestream.com/srilankantamilbloggers





ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner