October 31, 2008

கம்பீருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை..

நேற்று ஆஸ்ட்ரேலிய வீரர் ஷேன் வோட்சனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலும்,கையினால் அவரை இடித்தததானாலும் இந்தியத் துடுப்பாட வீரர் கௌதம் கம்பீர் குற்றவாளியாகக் காணப் பட்டு ஒரு டெஸ்ட் போட்டித் தடைக்கு ஆளாகியுள்ளார்.எனவே 6ஆம் திகதி நாக்பூரில் இடம்பெறவுள்ள இருத்தி டெஸ்ட் போட்டியில் கம்பீர் விளையாட முடியாது.. சிறப்பாக ஒட்டங்களைக் குவித்து வரும் கௌதம் கம்பீர் தடை செய்யப்பட்டுள்ளமை இந்திய அணிக்குப் பேரிழப்பு என்பது மட்டும் நிச்சயம்.எனினும் வோட்சன் 10 சதவீத தண்டப் பணத்துடன் தப்பித்துக் கொண்டார். இந்திய கிரிக்கெட் தரப்பில் இருந்து இது குறித்து முணுமுணுப்புகள் எழும் என்று கருதப் படுகிறது.

எனினும் கம்பீர் இந்தப் போட்டித் தடைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக போட்டித் தீர்ப்பாளர் கிறீஸ் பிரொட் தெரிவித்துள்ளார்.
                        
சில முன்னாள் இந்திய வீரர்கள் ஆங்கிலேயரான பிரோடின் செயல் வீழ்ந்து கிடக்கும் ஆஸ்ட்ரேலிய அணிக்கு உதவும் முயற்சி என்றும்,இந்திய அணி வீரர்களின் மன நிலையை சிதைக்கும் செயல் என்றும் பொங்கி உள்ளனர்..

இப்போதைக்கு இந்த 3 ஆம் டெஸ்ட் போட்டி சமநிலை முடிவை நோக்கியே செல்கிறது என்று நினைக்கிறேன்.. மத்தியு ஹேடனும் அரைச் சதம் பெற்று மீண்டும் formக்கு திரும்பியுள்ளார்.. இந்தியாவுக்கு தலைவலி எல்லா ரூபத்திலும் ஆரம்பமோ? 

இப்போ நேரம் இல்லாததால் இன்று மாலை இது பற்றி மேலும் பல விஷயங்களை பதிகிறேன்..

  அதுவரை வணக்கம்ம்ம்......   

October 29, 2008

வியர்வை வழியும் உடலோடு இரவு.. விமான அனுபவம்

 நேற்று இரவு.. வெளியே விருந்தொன்றுக்காகப் போய் வீடு திரும்பி, உறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தோம்.வழமையாகவே பதினொரு மணிக்கு முதல் தூங்கவேண்டும் என்று முடிவெடுத்தாலும் எங்கள் குறும்பு கண்ணனின்(என் ஒரு வயதை அண்மிக்கும் மகன்) குழப்படி விளையாட்டுக்கள் காரணமாக எப்படியும் இன்னொரு மணித்தியாலமாவது செல்லும் தூங்குவதற்கு.. இரவு நேரம் என்றால் அவனுக்கு எங்கிருந்து தான் அந்த உற்சாகம் வருகிறதோ.. எனக்கென்றால் அடுத்த நாள் அதிகாலை 4.30க்கு எழுந்தால் தான் வேலைக்கு சரியான நேரத்துக்கு சென்று நிம்மதியாக காலை நிகழ்ச்சியை வானொலியில் ஆரம்பிக்க முடியும்.

அதுவும் நேற்று எங்கள் அப்பாவும் எங்களோடு தங்கியதால் கரைபுரண்ட உற்சாகம் அவனுக்கு,, ஓடி(தவழ்ந்து தான்) விளையாடி வியர்த்து வழிய,கிட்டத் தட்ட குளித்தது போல அவனது உடல் முழுதும் வியர்வை..  எனக்கும் அவன் பின்னாலே ஓடித் திரிந்து களைத்து விட்டது.வியர்த்து வழிய நின்ற போது தான் மின்சாரம் தடைப் பட்டது.

நிறைய வலைத்தளங்கள் பார்க்கும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது தமிழகமும் ஆற்காடு வீராசாமியும் தான்.. ;)

மழை நாட்களில் இதையே ஒரு தடவை மின்சாரம் நின்று பின் வரும்.. அதற்கிடையில் நான் மின்சார சபையின் அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அங்கு இரவு உறங்கத் தயாராக இருக்கும் இரவுக் கடமை ஊழியருக்கு தொல்லை கொடுப்பதுண்டு.நேற்றும் அது போலத் தான்.. பல தடவை எடுத்தும் அந்த இலக்கம் செயல் இழந்தது போலவோ, receiverஐத் தூக்கி வெளியே வைத்தது போலவோ ஒரு tone கேட்டுக் கொண்டிருந்தது.. மனத்துக்குள் அவனைத் திட்டிவிட்டு பால்கனி வழியாக வெளியே பார்த்தேன்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்குமே மின்சாரம் இல்லை என்று தெரிந்தது.ஆனால் கொஞ்சம் தொலைவிலுள்ள கிருலப்பநை காவல் நிலயத்தில் இருந்து வானுக்கு ஒளி வெள்ளம் (para meter light) பாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் எனக்குப் புரிந்தது இது கொஞ்சம் விவகாரமான விஷயம் என்று.. 
 
கொழும்புக்குள்ளே அடையாளம் காணப் படாத விமானம் (புலிகளின் விமானத்துக்கு இவ்வாறு தான் சொல்வார்கள்)  புகுந்து விட்டது என்று புரிந்தது.. (அல்லது வரப் போகிறது என்று பயம் வந்து விட்டது என்று விளங்கியது) ஏற்கெனவே முதல் தடவை இவ்வாறு கொழும்பிலே புலிகளின் விமானத் தாக்குதல் நடந்த போது இலங்கையின் உயரமான கட்டடத்திலே கடமையில் இருந்தேன் நான்.(சூரியனில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் ஸ்கோர் விபரங்கள் வழங்கிக் கொண்டிருந்தேன்)
 
ஆகா மறுபடியுமா என்று யோசித்தேன்.. எங்கே போடுவார்கள்?? ஜனாதிபதி மாளிகை? இராணுவத் தலைமையகம்?? நாடாளுமன்றக் கட்டடம்?? சப்புகஸ்கந்த எண்ணெய்க் குதம்?? அல்லது வேறு எங்கே??

யோசித்த படியே எங்கள் வெற்றியின் செய்தி ஆசிரியர் பென்சிக்கு அழைப்பெடுத்தேன்.. மன்னார்,தள்ளாடி இராணுவ முகாம் மீது புலிகளின் விமானத் தாக்குதல் நடத்திய விஷயம் சொன்னார்..கொழும்புக்குள்ளும் விமானங்கள் வரலாம் என்ற அச்சத்தினாலேயே மின்சாரம் நிறுத்தப் பட்டதாக சொன்னார் அவர்.. (அது சரி தான் இருட்டுக்குள்ள எப்படி கண்டு பிடிப்பாங்க எங்கே குண்டு போடுவதென்று?) எனக்கொரு சின்ன ஐடியா எங்கெங்கே குண்டு போடுவார்கள் என்று சந்தேகம் இருக்கோ அங்கெல்லாம் மட்டும் மின்சாரம் துண்டிததால் வருகின்ற விமானங்கள் குழம்பி விடுமே.. ஏன் செய்ய மாட்டேங்கிறாங்க?  

சரி இன்று விடிய விடிய மின் விசிறியும் போட முடியாமல் வியர்வையுடன் அவதிப் படவேண்டும் என மனத்தில் திட்டிய படியே பால்கணியில் நின்று காற்று வாங்கிக் கொண்டிருந்தேன்.. சின்னவனோ வியர்வையுடன் போராடிக் கொண்டிருந்தான்..விளையாடும் போது அவனுக்குப் பிரச்சினையில்லாமல் இருந்த வியர்வை தாயார் தூங்க வைக்கும் போது அவனுக்கு எரிச்சல் ஏற்படுத்தி இருக்கவேண்டும்.தூங்க மாட்டேன் என்று அடம் பிடித்து அழுதான்.. 

அதற்கிடையில் அலுவலகத்தில் கலையகக் கடமையில் இருந்த சுபாஷ் தொடர்புகொண்டு களனி திஸ்ஸ மின்வழங்கு நிலயத்தில் குண்டு போடப்பட்ட விஷயத்தை சொன்னார்.பாதுகாப்பாக இருக்குமாறு அவரிடம் அறிவுறுதிவிட்டு பென்சியை மறுபடி அழைத்தேன்.. குண்டு போடப்பட்ட இடம் பற்றி எரிவது தெரிவதாக சொன்னார்.. 

கிழிஞ்சு போச்சு.. காலை வரை மின்சாரம் வராது என்று நினைத்தேன்.. மறுபக்கம் அப்பா காலையில் தான் நினைத்திருந்த கதிர்காமம் பிரயாணம் ரத்து தான் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்.. 

எனக்கு ஒரு சந்தேகம்(எப்ப தான் வராது?) அது மட்டும் தான் இலக்கா அல்லது இன்னும் வேறெங்காவது போடுவார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.. ம்ஹூம் இல்லை.. மயான அமைதி வானெங்கும்.. மொட்டை மாடியில் நின்று பார்த்தால் எதுவுமே தெரியவில்லை.. வியர்வையும் கொஞ்சம் குறைந்தது.. வீட்டுக்குள்ளே என் சின்னவன் ஓடி திரிந்து கொண்டிருந்தான்..
 
நண்பர்கள் மாறி மாறி sms மூலமாக விசாரித்த படி .. தெரிந்தததை சொன்னேன்..
 
அதிகாலை ஒரு மணி போலே மின்சாரம் வந்தது.. அப்பாடா பெரிய நிம்மதி.. காற்று நன்றாகவே மின்சார விசிறி மூலமாக வந்தது.. சின்னவன் தூங்க ஆரம்பித்தான்.நாங்கள் பரவாய் இல்லை.. கொழும்பில் வேறு பல இடங்களுக்கு காலை 5 மணிக்குப் பிறகு தான் மின்சாரம் வந்ததாம்.

காலையில் அப்பா கதிர்காமம் போகத் தயாராகி விட்டார்.வீதிகளில் வழமை போலவே வாகனங்கள்.. எந்த அசாதாரண மாற்றங்களும் இல்லை.. கொழும்பும் விமானத் தாக்குதல்களுக்கு பழகி விட்டது.. 
பற்றி எரிகிறதாமே.. 

தள்ளாடியில் பயங்கர அடியாமே என்ற விஷயங்களை யோசித்துக் கொண்டே அலுவலகம் வந்தால் செய்தி அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் பாதிப்பு எதுவுமே இல்லை; புலிகளின் எண்ணம் பலிக்கவில்லை என்ற பாணியில் சொல்லப் பட்டது.. 

சரி தான்.. டிடீயிலு சொல்லிட்டாங்கையா என்று நினைத்தேன்.. 

இந்த தாக்குதலினால் மின்விநியோக நிலையத்திலிருந்த மின் மாற்றிகளுக்கே சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மின்மாற்றியை திருத்தியமைக்கும பணிகளை துரித கதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

பற்றி எரியும் அளவுக்கு வேறு எதுவுமே தாக்கப் படவில்லையாம்.. அது போல மன்னாரிலும் மூன்று பேர் தான் பலியாம்.. 

அடப் பாவிகளா அப்பா இதுக்காகவா எங்களை வியர்வையில் நனைய விட்டீர்கள் என்று கேட்கலாமோ என்று தோன்றியது...ஆனால் கொழும்பும் கொஞ்சம் விமானம் என்றால் நடுங்கட்டுமே என்று ஒரு சின்னத் திருப்தியும் தான்.. 

எல்லாவற்றையும் பிடித்து விட்டோம் என்றும் வன்னியை நெருங்கி வருகிறோம் என்று சொல்வதெல்லாம்???
விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று சொன்னதெல்லாம்???? 
தானியங்கி விமான எதிர்ப்பு ஏவுகனைகள் செயல்படுவதாக சொன்னதெல்லாம்???

என்னடா நடக்குதிங்கே..... (அடிக்கடி நிறையக் கேள்வி கேட்கிறேனோ?)

யோசித்தால், கேட்டால் மறுபடி வியர்க்கும்.. எனக்கல்ல..;) 

October 28, 2008

இன்று எனக்குப் பதில் தெரியாத 15 கேள்விகள்

இன்று என்னிடம் உள்ள சில கேள்விகள்..

என் மண்டையைக் குடைகிற கேள்விகள்..சரி என்கிட்டயே வைத்து இருந்தால் சரி வராது.. நான் மட்டும் யோசித்துக் கொண்டிருக்க நீங்கள்லாம் ஜாலியாக இருக்கலாமா? இதோ பிடியுங்கள்.. நீங்களும் யோசியுங்க.. நான் பெற்ற இன்பம் பெறுக நீவிரெல்லாம்.. ;)
 
  
                       
1.உண்மையில் வன்னிக்குள் என்ன நடக்கிறது?புலிகள் அதே பலத்துடன் உள்ளார்களா? இராணுவத்தின் கை ஓங்குகிறதா?

2.இலங்கை அரசியலில் -  கருணா அம்மான் (இப்போ மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் முரளிதரன் )தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (அதுதான் TMVP) பெயரை மாற்றப் போவதாக சொல்லி இருக்கிறாரே.. என்ன பெயர் வைப்பார்? (புலிகளை யாருக்கும் இலங்கையிலும்,சர்வதேசத்திலும் பிடிப்பதில்லை என்று அவர் சொல்லி இருக்கிறார்.)

3.முதலாம் திகதி உண்ணாவிரதத்துக்கு யாரெல்லாம் வருவார்? யாரெல்லாம் வர மாட்டார்? என்னென்ன சொல்லுவார்?(அதனால் என்னென்ன பயன் கிடைக்கும்? என்னென்ன புது சர்ச்சைகள் தொடங்கும்?)

4.பேச்சு மூலமான தீர்வுக்கு இந்தியாவிடம் உண்மையில் பசில் உறுதியளித்தாரா?(அல்லது அது சும்மா பேச்சுக்கு தானா?)

5.பசில் ராஜபக்ஸவின் சந்திப்புக்குப் பிறகு இந்திய மத்திய அரசு இலங்கைக்கு மேலும் ஆயுதங்களை வழங்குமா?அவர் சொன்ன காரணங்களை முழுவதுமாக இந்தியா நம்பி விட்டதா?

6.இன்று வரை காலக்கெடு வைத்த கலைஞர் பிரனாப் முகர்ஜியின் வேண்டுகோளுக்கு இணங்கி பின் தள்ளிப் போட்டது இலங்கைத் தமிழருக்கு தோல்வியா? இல்லையா? 

7.தயாநிதி மாறனின் ராஜீனாமாக் கடிதத்தை மீண்டும் கலைஞர் அவரிடமே கொடுப்பாரா?

8.உண்ணாவிரதத்துக்கு அஜித் வந்த பிறகு (வந்தால்...;)) ஐரோப்பிய நாடுகளில் ஏகன் மறுபடி திரையிடப் படுமா?(இலங்கையில் ஏகன் பார்க்க வேண்டாம் என்று SMS பரப்பிய ஒருவரை கைது செய்துள்ளார்களாம்)

9.நாளை ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கும்பிலே விளையாடத் தான் போகிறாரா? அமித் மிஷ்ரா விளையாடாமல் கும்பிலே விளையாடுவது அவுஸ்திரேலிய அணிக்கு நல்லதா?

10.அண்மையில் காணாமல் போன அறிவித்தலோடு பலர் தேடிக் கொண்டிருக்கும் விஜயகாந்த் எங்கே?அவரது இலங்கைத் தமிழர் பற்றிய நிலைப்பாடு என்ன?

11.வைகோ,திருமாவளவன்,அமீர் ஆகியோர் கைத்து செய்யப் பட்ட வேளையில்,வைகோவின் கைது உண்மையில் பேச்சு இந்தியப் பிரிவினை பற்றி அமைந்தததனாலா அல்லது அரசியல் விவகாரமா?(கூட்டணி உடைப்பு?????)

12.விஜய், ரஜினி போன்றோரின் படங்கள் வந்தால் திரௌஸர் கழற்றும் பதிவர்கள் அஜித்தின் 'ஏகன்' பற்றி பரபரப்பு ஏற்படுத்தாதது ஏன்? இலங்கைத் தமிழர் விவகாரம் முன்னிடம் பிடித்ததா அல்லது ?????

13.மாத இறுதி வருகிறது.. (எனக்கு சம்பளம் வெள்ளிக் கிழமை) எல்லோரும் என்னைப் போலவே கிட்டத் தட்ட காலியான wallettஉடன் credit cardsஐ நம்பிக் கொண்டு தான் திரிகின்றனரா?

14.இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நிம்மதியைத் தரும் தீர்வு என்று யாராவது பேசுகையிலேயே புலிகளுக்கு ஆதரவாகத் தான் பேசுகிறோம் என்று நினைப்பவர்கள் (இலங்கையர்கள் - குறிப்பாக குஷியாக வெளிநாடுகளில் குந்தி இருப்போர் தான் இதில் அதிகம்) திருந்தவே மாட்டார்களா?

15.இந்தப் பதிவுக்கு எத்தனை பின்னூட்டம் வரும்? (சும்மா ஒரு நப்பாசை தான்..அதில திட்டி வாராது எத்தனையோ?)

உங்கள்ள  யாருக்காவது பதில் தெரிந்தா போற போக்கில பின்னூட்டமா போட்டுட்டு போங்க.. புண்ணியமாப் போவும்.
                                                          

October 26, 2008

விழுந்தாலும் வீரர்களே..

இன்னும் என் தலைவலி போகவில்லை.. இன்றும் பல பதிவுகள், பல பின்னூட்டங்கள் பார்த்தேன்.. கேட்ட கேள்வி,முன்வைத்த கருத்து ஏதோ.. அதற்கு பதிலை வித்தியாசமாக சொல்கிறேன் என்று வெட்டித் தனமாக,வெங்காயத் தனமாக,முகம் காட்ட மறுத்து அனானியாக பலர் பதில் சொல்லும்போது சிரிப்பும்,தலைவலியும் சேர்ந்து வருகிறது...

உதாரணமாக இலங்கை விஷயத்தில் இந்தியாவின் தலையீடு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு வந்துள்ள சில பதில்கள்..நானும் பின்னூட்டம் போடலாம் என்று போனால் சிலர் அனானிகள் பெயரில் நடத்தியுள்ள விஷமம் பார்த்து வெறுத்துத் திரும்பி விட்டேன்.. வேணாம்டா சாமி....
அதையெல்லாம் நண்பர்கள் கொளுவி,கிரிஷ்ணா போன்றோர் பார்த்துக் கொள்ளட்டும்.. முடிந்தால் என் குழப்பங்கள்,தலைவலி குறைந்தால் நாளை ஒரு கை பார்க்கலாம்.. 
அதுதான் கொஞ்சம் relaxஆக இந்தப் புகைப்படங்கள்.. அது சரி எங்களுக்குrelax.விழுந்து பார்த்தால் தெரியும்..;) 

ஆனால் இந்தப் பதிவின் தலைப்பிலோ படங்களிலோ ஏதாவது அரசியல் விவகாரம் பின்னணியில் உள்ளது என்று யாராவது யோசித்தால் நான் பொறுப்பாளி அல்ல.. ;) 



















October 25, 2008

'தல' வலிக்குது.. ஆனாலும் எழுதுகிறேன்

இப்போதெல்லாம் எனக்கு இணையத் தளங்களிலும்,வலைத்தளங்களிலும்,பத்திரிகைகளிலும் எதையாவது வாசிக்க தலைவலியாகவும்,பிடிக்காமலே போகிறது.ஏன் எங்கள் வெற்றி FMஇலும் கூட செய்திகளை வாசிப்பதற்கு வெறுப்பாக உள்ளது.

 வன்னி மக்கள் அவதி.. நாளாந்தம் பலர் பலி.. கொழும்பில் பலர் கைது.. இனப் பிரச்சினை தீர்வுக்கு இதோ ஒரு புதிய வழி.. பேசுவார்த்தைக்கு வருவார்களா?.. மற்றொரு குண்டு வெடிப்பு.... வன்னிக்குள் இராணுவம்..புலிகள் பதிலடி.. இப்படியான வழமையான இலங்கை பற்றிய செய்திகளோடு இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விடயங்களாக யார் யார் ஈழத் தமிழருக்கு ஆதரவு? யாரெல்லாம் பேரணி,மனித சங்கிலிப் போராடடத்துக்கு வருகின்றனர்? யாரெல்லாம் உண்ணாவிரதத்துக்கு வருவர்? என்பவையே இப்போதெல்லாம் பேசு பொருள்,எழுது பொருள்.


நானும் இது பற்றி பதிந்திருந்தேன்.. தமிழக ஆதரவு அலை எந்தவிதத்திலும் இந்திய மத்திய அரசை அசைத்துப் பார்ப்பதாக இல்லை..மன்மோகன் இன்னமும் கூறியதே கூறிக் கொண்டிருக்கிறார். இலங்கை அரசுக்கு எல்லா(ஆயுதம் உட்பட)உதவியும் இந்தியா செய்யும் என்று! இப்போது இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் (அவரது சகோதரரும் கூட) பசில் ராஜபக்ஸ இந்திய வெளியுறவு அமைச்சரை சந்திக்க டெல்லி போகிறார். 

மறுமுனையில் வைகோ,திருமாவளவன்,இயக்குநர் அமீர் ஆகியோர் கைது. இவர்கள் கைது செய்யப் பட்ட செய்தி கேட்ட இலங்கைத் தமிழர் உண்மையிலேயே கவலைப் பட்டனர்.ஆனால் இவர்கள் ஈழத் தமிழருக்காகப் பேசியதற்காகவன்றி இந்தியப் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காகவே கைது செய்யப் பட்டதாக கைது செய்யப் பட்டதாக சொல்லப் படுகிறது. இவர்களில் உண்மையாகவா அல்லது பிரபல்யத்துக்கா செய்கின்றார்கள் என்று நான் ஆராயப் போவதில்லை. குரல் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும். இலங்கையில் தெய்வங்களாகக் கருதப்படும் சிலர் மௌனமாக இருக்க,சிலர் படப் பிடிப்புகளில் பிசியாக இருக்க கொஞ்சம் மனது வைத்துக் கலந்து கொண்டார்களே.. அதனாலும்.. கொட்டும் மழையிலும் நேற்று மனித சங்கிலிகளாக இணைந்து இருந்தார்களே அதற்காகவும். (சிலர் உண்ணாவிரதத்துக்கு வந்தால் போதும் என்று எண்ணியுள்ளார்கள்)


இது பற்றி எழுத நினைத்தாலே எனக்கு வெறுப்பாகவும்,தலைவலியாகவும் இருக்கிறது.. எல்லோரும் எழுதிய இவை பற்றிய பதிவுகளை நான் படித்துவிட்டேன்(சில ஒரே மாதிரியானவை;சில மாற்றுக் கருத்துகள்;ஒரு சில சிலரின் மீது தனிப்பட்ட தாக்குதல்கள்) பலதில் பின்னூட்டம் போட்டும் உள்ளேன்..

எதை எழுதுவது எதை விடுவது? ஏன் மனத்தில் பட்டவற்றை இங்கே கொட்டுகிறேன் ..

இந்தியாவில் உள்ளவர்களை கட்டாயம் எமக்காகப் பேசுமாறும் போராடுமாறும் நாங்கள் அழுத்தம் கொடுக்க முடியுமா?அவர்களுக்கே இப்போது ஏராளமான பிரச்சினை.. மின்சாரம்,விலைவாசி உயர்வு..2011இல் யார் தமிழக முதல்வர்.. இவ்வாறு பலபல..ஆனால் அவர்களுக்கு உள்ள கடமையின் படி குரல் கொடுக்கவேண்டும்..(எனக்கே குழம்பி விட்டது)

கலைஞருக்கு தமிழ் மக்களின் பெரும் தலைவர் என்று அழைக்கப்படுவதனால் அந்தக் கடமை உள்ளது என்றும் நான் நம்புகிறேன்..

நடிகர்களுக்கு நிச்சயமாக நன்றி உணர்வு இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்..அநேகமான நடிகர்கள் இலங்கை வந்து போய் இருக்கிறார்கள்; அவர்களை உயர்த்தவென்றே இங்கே பல தொலைக் காட்சிகள்;வானொலிகள்..புலம் பெயர் இலங்கைத் தமிழர் இவர்களின் படங்கள்,இவர்கள் வரும் கலை நிகழ்ச்சிகளுக்கு தாம் குளிரிலும்,பனியிலும் உழைத்த பணத்தை அள்ளி இறைக்கிறார்களே.. அதற்காகவேனும்(நாங்க பார்க்க சொன்னோமா என்று கேட்கப் படாது)

இன்று காலையில் என்னைத் துயில் எழுப்பியதே அஜித் இப்படி சொல்லிட்டாரே என்று புலம்பிய ஒரு தொலைபேசி அழைப்புத் தான்.. எனக்கு கோபம்,வெறுப்பு வந்ததாயினும் நான் இதை,இது மாதிரி செய்திகளை எதிர் பார்த்தேன்.. யாராவது நாங்கள் ஏன் செய்யவேண்டும் என்று கேட்பார்கள் என்று யோசித்தேன்...காரணம் அனுதாபம்,தொப்புள்கொடி உறவு,மனிதாபிமானம்,இலங்கையில் வாழ்வோரும் தமிழரே என்னும் சில காரணங்களைத் தவிர அவர்களை (தமிழகத்தினரை) நாம் எமக்காகக் குரல் கொடுங்கள் என்று கேட்க முடியுமா என்று ஒரு மாற்று மனசாட்சி எனக்குள் குரல் எழுப்புவதுண்டு..

எனது சக நண்பர்களும் இதையே எதிரொலித்தார்கள்..ஆனாலும் நாங்கள் ஒன்றுபட்ட ஒரு கருத்து..ஆரம்பத்திலேயே (80களில்) இயக்கங்களுக்க் ஆதரவு,உதவி செய்து பழக்கி விட்டார்கள்; 1987இல் அமைதி காக்கும் படை (!) வந்து செய்த அட்டூழியங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற கடப்பாடு;தமிழினமே இலங்கையில் அழிவதை தடுக்கவேண்டும் என்ற சில காலத்தின் கடப்பாடுகள் இருக்கின்றன.. 

நம்மவர்க்கு இடையேயே ஒற்றுமை இல்லாத போது வேறு யாரும் உதவி செய்வார் என்று நாம் நம்பி இருக்கலாமா?சில அநானி பின்னூட்டங்களை சில பதிவுகளில் பார்த்தாலே தெரியுமே..  

அஜித் சொன்னாரா சொல்லவில்லையா என்று நான் ஆராயமாட்டேன்.. ஆனால் நெருப்பிலாமல் புகையாது என்பது ஒரு பக்கம் இருக்க,ராமேஸ்வரத்தில் வைத்து இயக்குநர் சேரன் விஜயைத் தாக்கிப் பேசியதால் அஜித்‌தின் புதிய திரைப்படம் ஏகனை ஓட விடாமல் செய்யப் புறப்பட்ட வதந்தி தான் இது என்றும் கருத்து இருக்கிறது.. ஆனால் என் மனத்தில் இருந்து அஜித்தும்,அர்ஜுனும் சரிந்துவிட்டனர்.

அஜித்,அர்ஜுன் ஆகிய இருவரின் படங்களும் இனி இலங்கையிலோ,இலங்கையர் அதிகமாக வாழும் வெளிநாடுகளிலோ திரையிடப் பட்டால் நல்லபடி ஓடுமா என்பது சந்தேகம் தான்..இலங்கையில் இன்று முதல் நாளே ஏகன் திரைப்படத்துக்கு பெரிதாக கூட்டமே இல்லை.அஜித்தை திட்டி,வசை பாடி sms,மின்னஞ்சல்கள்,facebookஇல் தகவல்கள் பரவி வருகின்றன. நாளையே யாராவது திரையரங்கைக் கிழித்தாலும் ஆச்சரியம் இல்லை.

மறுபக்கம் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவ்ப் ஹாக்கிம் இந்திய அரசின் தலைய்யீட்டை எதிர்த்தும்,மறுபக்கம் தமிழகத் தமிழர்,குறிப்பாக தமிழக அரசு இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்காக் குரல் கொடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.இலங்கை விஷயத்தை இலங்கையே பார்த்துக் கொள்ளும் என்று அறிக்கை விட்டுள்ளார் அவர். (அரச விசுவாசம் போலும்.. இவ்வளவு நாள் அவர் என்ன செய்தார் என்று நம்ம நண்பர் ஒருவர் கேட்கிறார்) 

இரண்டிலும் ஒரு குழப்பம் நிலவி வருவதோடு இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தாம் பேசும் பாஷையை வைத்துக் கொண்டே தமது இனத்தை தீர்மானிப்பத்துடன்,இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தம்மை ஒரு மதம் சார்ந்த இனம் என்று கருதப்பட வேண்டும் எனக் கோருவதும்,அவ்வாறே வாழ்வதும் இங்கு வித்தியாசமானது..

இனி முதலாம் திகதி யார் யார் வருவர் என்று நம்மவர்கள் காத்திருப்பர்.. அதற்கு முதல் 28ஆம் திகதி என்ன நடக்கும் என்று நான் பார்த்திருப்பேன்.

ஆனால் தினம் தினம் மாறிவரும் தமிழக ,இந்திய சூழ்நிலையில் நான் யாரையும் எதிர்பார்கப் போவதுமில்லை;இந்தியாவின் அரசை நம்பப் போவதும் இல்லை;என்ன நடந்தாலும் ஆச்சரியப் படப் போவதுமில்லை!

October 23, 2008

என் அப்பா சொல்லித் தந்த சினிமா

பல நண்பர்களின் சினிமா சம்பந்தமான மலரும் நினைவுகளை வாசித்தபோது ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது. ஒரு சின்ன அறியாமை இருந்ததனாலேயே சிறுபிராயத்திலே எங்களுக்கு சினிமா ருசித்திருக்கிறது என்று!.

என் அப்பா சினிமாவின் தொழிநுட்பங்கள் சம்பந்தமான நிறைய விஷயங்களைப் படம் பார்க்கும்போது சின்ன வயதில் சொல்லித் தந்ததனால் தான் அவற்றின் பின்னணியோடே நானும் சினிமா ரசிகனாகிறேன். பின்னாளில் ஒலிபரப்புத்துறையிலும் அது நிறையவே உதவியுள்ளது. இன்னும் பல சினிமாத் தேடல்களுக்கும் அடிகோலியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் எங்கள் ஊரில் (இணுவில்) நான் நினைவு தெரிந்து இருந்த காலம்.ஆறு வருடங்கள் மட்டுமே என்பதனால் நண்பர்களும் அதிகளவில் இல்லை மணல்வெளி,சனசமூக நிலைய சினிமா,மினி சினிமா வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை. எனினும் வீட்டில் கசெட் எடுத்துப் பார்க்கும் போதெல்லாம் அப்பா பழைய நல்ல திரைப்படங்களையும் ரசனையிலுயர்ந்த திரைப்படங்களையும் எடுத்துக்காட்டுவார். பார்க்கும் போதே பல விஷயங்கள் பின்னணித் தகவல்லாம் சொல்வார்.(கிசு கிசு,சாதனை,தொழினுட்ப விஷயம் இப்படி எல்லாமே) அப்படிப் பார்த்த படங்கள் தான் பாசமலர்,பாகப்பிரிவினை,கப்பலேட்டிய தமிழன்,வீரபாண்டிய கட்டபொம்மன்,வசந்த மாளிகை,முள்ளும் மலரும்,வீடு,சிறை,முதல் மரியாதை,சிந்துபைரவி,சலங்கை ஒலி,மூன்றாம் பிறை,வைதேகி காத்திருந்தாள்,பந்தபாசம்,படித்தால் மட்டும் போதுமா,படகோட்டி,நாடோடி மன்னன் இன்னும் பல.....

இப்படி ஒருநாள்,சுரேஷ் நடித்த ஒருபடம் பார்த்தக் கொண்டிருந்தபோது ஒரு காட்சி.. நாயகனும் நாயகியும் நேருக்கு நேர் சைக்கிளில் வந்து மோதுண்டு விழுந்து விடுவார்கள் உடனெ என்தம்பி (அப்போது வயது 5) சொன்னான் "இப்ப பாருங்கோ ரெண்டு பேருக்கும் லவ் வரும். உடனே பாட்டு வரும்." எல்லோரும் ஒரு கணம் திகைத்தோம்;பிறகு சிரித்தோம்.

யாழ்ப்பாணத்தில் நான் இறுதியாகப் பார்த்த படம் ராஜா திரையரங்கில் ராஜாதிராஜா! கொழும்பு வந்த பிறகு முதலில் திரையரங்கில் பார்த்தது புதுப்புது அர்த்தங்கள்.ஈரோஸ் தியேட்டரில்.இரண்டுமே மனது மறக்காதவை.இப்போது இந்தப்படங்கள் தொலைக்காட்சியில் போனாலும் முன்னர் பார்த்த ஞாபகம் இருந்த ஸீட்டு,குடித்த பானம் அத்தனையும் ஞாபகம் வரும்.

A/L படிக்கும் காலம் வரை - அப்பாவை விட சினிமா அறிவு எனக்கு வந்துவிட்டது என்ற இறுமாப்பு கொஞ்சம் எனக்கு வரும் வரை- எப்போது திரையரங்கு போனாலும் அப்பாவின் பக்கத்திலிருந்து தான் நான் படம் பார்ப்பேன் யாருக்கும் அந்த இருக்கையை விட்டுத் தரமாட்டேன் (அப்போதெல்லாம் வாரத்தில் ஒரு தரமாவது எங்களைத் திரையரங்கு அழைத்துச் செல்வார் அப்பா)

பிறகு நானும் தம்பியும் உழைக்கத் தொடங்கிய பின் எப்போதாவது ஓரு தடவை குடும்பமாகப் போவோம்; இப்போது எல்லோருடைய நேர கால அட்டவணைகளும் மாறியுள்ளதால் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்.

ரோஜா படம் பார்க்க திரையரங்கு போனநேரம் (1992)அப்பாவின் பக்கத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த சித்தப்பா இருந்துவிட்டார் என்பதற்காக அட்ம்பிடித்து,அழுது பின் அந்த இடத்தைப் கைப்பற்றினேன். அவ்வளவு தூரம் நானும் அப்பாவும் பல விஷயங்களை டிஸ்கஸ் பண்ணிக் கொண்டே படம் பார்ப்போம்.

யாழ்ப்பாணத்தில் நான் சிறுவனாக இருக்கும்போதே Sean Conneryயின் James Bond படம் பார்க்க அழைத்துச் சென்று ஆங்கிலப்பட சுவை ஆரம்பித்த விட்டவரும் அப்பாதான் கொழும்பிலும் பின் Jurassic Park பார்த்தோம். அதன் பின் நண்பர்களோடு ரகசியமாகப் பார்த்த ஆங்கிலப்படங்கள் எண்ணிக்கையிலேயே இல்லை.Savoy theatreக்கு போகமட்டும் கொஞ்சம் பயம் காரணம் அங்கு Manager எங்கள் குடும்ப நண்பர். எங்கே வீட்டில் போட்டுக் கொடுத்து விடுவாரோ என்று பதுங்கிப் பதுங்கி காமசூத்திர,American pieயும் பார்த்தது இன்று வரை thrill தான்.

இப்போது தனித்தனியாக வசித்தாலும் கூட இரவுகளில் சன் டிவியில் 10.30க்கு நல்ல பழைய படங்கள் போடும்போது (இப்போது நிறுத்திவிட்டு பார்த்து அலுத்த நகைச்சுவைகளைப் போட்டு அறுக்கிறார்கள்.) அப்பாவும் நானும் ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்திக் கொள்வோம். அதேபோல் Cinemax,HBOஇல் நல்ல ஆங்கிலப் படங்கள் போனால் (நானும் தம்பியும் thrillers,action,suspenseபிரியர்கள்) தம்பியும் நானும் பகிர்ந்து கொள்வோம்.

அப்பாவுடன் படம் பார்க்கச் செல்வது குறைந்த பிறகு அல்லது நின்ற பிறகு நல்ல நண்பர்கள் சிலருடன் தொடர்ந்து சென்று வருகிறேன். தாஸ் மற்றும் விமல்.தம்பி செந்தூரன்,பிரதீப்பும் இடை இடையே இணைந்து கொள்வர்.

நாங்கள் பொதுவாக எல்லா விடயத்தையும் பகிர்நது கொள்வதுண்டு படித்த பார்த்த சினிமா தகவல்கள் முதல் டிக்கட் பணம் (சிலவேளை எங்களுக்கு complimentary tickets) தியேட்டர் செலவு வரை.

எனக்கிருக்கும் இன்னுமொரு பழக்கம் தான் படித்த சினிமாத் தகவல்கள் பொருந்தி வருகிறதா என படத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது சஞ்சிகைகளிலே இணையத்தளத்திலே பார்த்த ஸ்டில்கள் படத்திலே வருகிறத, எந்த எந்த இடங்களிலே camera angles,இசை எப்படி என்றெல்லாம் பார்ப்பது பக்கதிலிருப்பவருடன் என் reaction ஒப்பிட்டுப் பார்ப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம். அதிலும் கமல் படங்களை முதல் தடவை படமாகவும் இரண்டாவது தடவை கமலின் முக,உடலசைவுகளை மட்டுமே பார்க்கின்ற பாடமாகவும் பார்ப்பதுண்டு.

சில விமர்சனங்கள் கதையை கதையின் முடிவையே சொல்லி படம் பார்க்கும் ஆசையையே கொன்று விடுவதனால் படம் ஒன்றைப் பார்க்கும் வரை விமர்சனஙளை நான் படித்ததில்லை. ஆனால் இப்போது வெற்றி எப் எம்மில் சினிமாலை நிகழ்ச்சியில் விமர்சனம் நான் சொல்வதனால் ;கடனே என்று விமர்சனங்களைப் புடித்துத் தொலைப்பதுண்டு.

உண்மையில் பல சஞ்சிகைகளில் (விகடன்,குமுதம்,குங்குமம்) வரும் சில விமர்சனங்களை விடவும் வலைப்பதிவர்கள் பலர் பலமடங்கு மேல். குறிப்பாக நான் லக்கிலுக்,அதிஷா,கார்க்கி,இட்லிவடை,டோன்டு,பரிசல் போன்றவர்களின் சினிமா,விமர்சனங்களின் காதலன்.

இப்போது கொழும்புத் திரையரங்குகளில் எனது வருகைக்காகக் காத்தபடி 5 புதிய திரைப்படங்கள். எப்போது போவேன் யாரோடு போவேன் என்பது எனக்கே தெரியாதபடி பிஸியாக நான்.

நண்பர்களின் பார்வையில்
சக்கரகட்டி - ஒரு கார்ட்டூன்; ரஹ்மானை மட்டும் கேட்கலாம்
துரை - வழமையான அர்ஜூன் படம்.
ராமன் தேடிய சீதை - சேரன் வழமைபோல் அழுகிறார்
ஆனால் நல்லபடம்
காதலில் விழுந்தேன் - பாடல்கள் சுப்பர்
குணா காதல் கொண்டேன் பெட்டர்
பந்தயம் - ஐயோ கொடுமை

திருமணம்-மனைவி-சினிமா என்று திருமணத்தின் பின்னரான மனைவியுடனான என் சினிமா அனுபவங்கள் மற்றும் சுவாரசியமானவை!அதுபற்றி இன்னுமொரு பதிவில்!

October 22, 2008

போரொடுங்கும் புகழொடுங்காது!

2001ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் கொழும்பில் இடமெற்ற கம்பன் விழாக் கவியரங்கில் என்ற தலைப்பில் நான் படித்த கவிதை..

கவியரங்கத் தலைமை கவிக்கோ அப்துல் ரகுமான்.

ஓரளவு (!) நன்றாக எனது கவிதை இருந்ததாக சொல்லப் பாத்தாலும்,இதன் பின்னர் எனக்கு கம்பன் விழாக்களில் கவி பாட அழைப்புக்கள் வரவில்லை.. (அரசியலில் எனது வரிகள் கொஞ்சம் அதிகமாகவே விளையாடியதும் ஒரு காரணம் எனப் பின்னர் அறிந்தேன்) எனினும் சொல்லரங்கம் போன்ற சில நிகழ்வுகளில் இணைந்து கொண்டேன்..

இங்கே நான் ராமன் என்று யாரை நினைத்துக் கவி வடித்தேன் என்று இலங்கை,ஈழம் பற்றி அறிந்தோருக்கு நன்றாகவே புரியும் என்று நம்புகிறேன்..அது புரிந்தால் ஏனைய விஷயங்கள் புரிவதில் சிக்கல் இருக்காது! (ராமன் காடாண்டவன் என்பது எல்லோருக்கும் தெரியுமே!

என் கவிதை முடிய, கவிக்கோ "அன்று ராமனுக்கு ஒரு அனுமான் தூதன்; இன்று இவர் சொன்ன ராமனுக்கு யாருமில்லை எஜமான்; எனவே இந்தப் பெருமான் (என்னையே தாங்க) இந்த ரகுமான் மூலமாக பாரதத்துக்கு தூது விட்டுள்ளார்" என்று கை தட்டல் வாங்கிக் கொண்டார்.

அண்மைக் காலத்தில் (2007,2008) அழைத்தாலும் ஏதாவது காரணம் சொல்லி கம்பவாரிதி அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகி விடுகிறேன்.. (என் வாயும் எழுத்தும் சும்மா இருக்காது.. கம்ப ராமாயணம் பற்றி பாட சொன்னாலும் நான் கந்தலாகிப் போன எம்மக்கள் நிலை பற்றித் தான் தொடர்பு படுததுவேன்..ஏன்யா வம்பு? அவருக்கும் சரி.. எனக்கும் சரி.. )


போரொடுங்கும் புகழொடுங்காது!

கவிபாடும் எண்மரில் முதல்வன் யான்!
வரிசையில்,இருக்கையில்
வயதினில் இளையவன்!
வாக்கிலும் இளையவன்!
அரங்கிற்குப் புதியவன்!
அதனால் சிறியவன்!
வார்த்தைகளை வளைத்து
கவி வடிப்பதிலும் இளையவனேயாயினும்
சளைத்தவனல்ல எனக்காட்ட
இக்கம்பன் கவியரங்கு
காட்டவேண்டும் வழி!
கவியரங்கிற்குக் களையூட்ட
எம்மைக் களிப்பூட்டக் காத்திருக்கும்
சக கவித்தோழருக்கு சமர்ப்பித்தேன் என தோழமை வணக்கத்தினை

அரங்கில் அடியேனையேற்றி
வலிந்தழைத்து வாய்ப்பளித்த
ஐயா கம்பவாரிதிக்குக்
கனிவான நன்றிகள்
இக்காற்றலையில் கற்றறியும் கற்றுக்குட்டிக் கவியிடமிருந்து!

கம்பன் புகழ் மேவி
கன்னித் தமிழ் பருக வந்துற்ற சபையவரே
உமக்கும் சக்தி மைந்தனிவன் சாற்றினேன் தமிழ்வணக்கம்!

சினிமா கொத்த சிற்பி வேண்டாமென
சிதையாத கவி சிற்பம் மட்டுமே செதுக்கும்
பாவின் மன்னன்
பால்வீதி படைத்த அண்ணல் !
இலங்கைக்குக் கவிப்பாலம் கட்டும்
கவிதைகளின் மன்னன்
பாரெங்கும் ஒரே கவிக்கோ
இன்று எம் கவியரங்கின் கோ
அண்ணல் அப்துல் ரஹ்மானைப் பணிந்தேன்.

அன்றொரு நாள்!
இன்றைப் போல் அவலங்கள் சூழாத –
அடுத்த பொழுது என்னாகுமோ ஏதாகுமோ என
நெஞ்சு எண்ணிப் பதைக்காத
எவனெவன் இங்கு வந்து
என்னென்ன சொல்வானோ
ஏதேது செய்வானோ என
இன்னலுறாத நாள்

அயோத்தி மாநகர்!
அமைதியின் பிறப்பிடம்!
அருளின் சிறப்பிடம்!
ஆண்மை,அன்பின் தரிப்பிடம்!
தலைமகன் இவனே!
தலைவன் இவனே!
தகைமை இவனுக்கே என
ஒருவரிருவரின்றி ஒட்டு மொத்தப்பேரும்
ஒன்றாக ஏற்றவன் இராமன்!

முடிதரித்து அயோத்தி ராமனாக ஆகும்வேளை,
அந்தணப்பெருந்தகை வசிஷ்டர்
அவன் காதில் ஒதியது
போரொடுங்கும் புகழொடுங்காது!

பலியெடுக்கும் போரை நிறுத்திப்
பகைக்கருள் ராமா,
உன் புகழ் நிலைக்கும்!

அன்றைய வாக்கு அந்தணர் வாக்கு-அறவாக்கு
இன்றைய நாளில் அதே வாக்கு
போரெங்கும் புகழொடுங்காது!

அப்படியே போட்டுப் பார்ப்போம்
அந்தோ பரிதாபம்!
அழகான பாதத்திலே
அளவு பெரிதான
அழுக்கான சப்பாத்தாக
அந்த வார்த்தைகள்!

ஜனகன் மகளை ஜானகியை சிறையெடுத்தோனை
சிதைத்தவன் ராமன்!
அதர்ம வழி சென்றவன்
தர்மத்தினால் வதையுண்டனன்
கதையறிவொம் நாம்.

பத்துத் தலை இருந்தென்ன
பலமான சேனையிருந்தென்ன
பல்லாண்டு தவமிருந்து பெற்ற வரமிருந்தென்ன
பலமான சோதரர்,புதல்வர் இருந்தென்ன!
செல்லும் வழி தவறாயின்
சீர் சிறப்பு எல்லாம் சிதறும்
ராமன் சொன்ன பாடம்!
ராவணன் கற்ற பாடம்! - காலம் கடந்து

அது ராமராவண யுத்தம்!
போர் ஒங்கியதங்கு!
ராமனின் புகழோக்கியதன்று!
அறவழிப்போர் அது!
அதர்மத்தை அழித்த போர் அது!

அன்றந்தப் போர் அடங்கியிருந்தால்,
ஒடுங்கியிருந்தால்
வீரனா ராமன்?
ராமனா வீரன்?
ராமன் வீரனா?
பற்பல தலைப்புகளில்
பலப்பல பட்டிமன்றங்கள்
பரவலாக நடந்திருக்கும்

ராவணவதை நீதியானது;
நிகழ்ந்திருக்க வேண்டியது
ஒத்துக்கொள்வீரோ?
உண்மையை ஏற்பீரோ?

அன்றந்த இராவணன் வதையது
வரலாறானது!

இன்றிங்கு நவீன ராவணரை
ராமர்கள் வதைப்பதை நீவிர் தடுப்பதேனோ?
வாளினாலும் வேலினாலும்
அன்றெம்மவர் வாழ்ந்து காட்டியதை-எமக்கு வாழ்க்கை காட்டியதை
இன்று வாயினால் காட்டுமாறு கேட்டு நிற்றல்
பொருந்துமா? காலப் பொருத்தமா?

நவீன காலம் இது
தட்டினால் தான் எதுவும் நடக்கும்!
தட்டச்சு தட்டு! தாளில் எழுத்து!
கதவு தட்டு! தாள் திறக்கும்!
கணினி தட்டு! வலையில் உலகம்!
முதுகில் தட்டு! முன்னேற்றம் காண்பாய்!
முன்னிற்பவனைத் தட்டு! முன்னணியில் நீயே!
எதிர்ப்பைத் தட்டு! ஏற்றமுண்டு!

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது
அன்றைய வார்த்தைகளில்
கொஞ்சம் புதிய குருதி சேர்த்துப்
புதிய சொற்கள் செய்வோம்
உயிரற்றுப் போன உளுத்துப் போன
பழையவற்றுக்குப் புதிய உயர் கொடுப்போம்.
ஆண்டபரம்பரை அன்று மறந்தவற்றை
வேண்டாம் இவையினியென்று
வெறுத்தொதுக்கியவற்றை
மீண்டும் தூசு தட்டி மெருகேற்றுவோம்
இன்றைக்கேற்றபடி இப்பொழுதுகேற்றபடி..

போரொடுக்கும் புகழொடுங்காது
அன்று பொருந்தியது!
அழிவு தந்த அனர்த்தம் நின்று
அமைதி வந்தால்
அன்று மகிழ்ச்சி
இன்றும் தான்!

மண்ணாசை மனதில் கொண்டு
பிறநாட்டின் பொன் மீது மோகம் கொண்டு
பிறன் பெண் மீது மையல் கொண்டு
போர் நடத்தி பேரழிவு உண்டாக்கின்
போர் ஒடுங்கல் பேராண்மை!
பெருநன்மை!
அர்த்தமொன்று இருந்து
அடையாளங்கள்
மரபு அடையாளங்கள் காக்க
யுத்தங்கள் எனின்
போர் ஒடுங்கின் ஒடுங்குவது
போர் மட்டுமல்ல
போர்ப்பரணி பாடி ஊருலகம் முழுதும்
பறைதட்டிய நாம், நம் மண்,நம் மானம்,
நம் இருப்பு,நம் புகழும் தான்.

ஐந்தாண்டு திட்டங்கள் அமுல்படுத்தியவுடனேயே
அடங்குவதுபோல்
அவசரகாலச் சட்டங்கள்
ஆறேழு கைகளோடு அரங்கேறுதல் போல்
அன்றந்தத் தவமுனி
அண்ணல் ராமனுக்கு
அறவோதிய அருள்மாழி
போரொடுங்கும் புகழொங்காது!

பொருத்தமானதே அன்று!
மானமும் வீரமும் அறமும்
அன்று ஒங்கி நின்ற காலம்!
அரசர் செங்கோலாட்சி ஒச்சி நின்ற காலம்!

இன்று
வாழ்க்கையில் சந்தோஷங்களை விட
நாம் சந்திக்கும் தோஷங்களும்
கோஷங்களும் தான் அதிகம்
வாழ்க்கை அதிகமான கேள்விக் குறிகளைத்
தாங்கி நிற்பதால்
அதிகமாக எதிர்ப்பார்ப்பதென்னவோ
ஆச்சரியக் குறிகளைவிட முற்றுப்புள்ளிகளைத்தான்.
கேள்விக் குறிகளாக
வாழ்க்கையின் முதுகுகள் வளைந்து
எதிர்காலங்கள் கொமாவைப் போட்டுக் கொண்டிருப்பதால்
விரைவிலேயே இங்கொரு முற்றுப்புள்ளி
செந்நிற முற்றுப்புள்ளி வேண்டும்

புள்ளி வைக்க யார் வருவர்?
எப்போது வருவர்?
வரும்வரை இங்கிருப்பவை இங்கிருக்குமோ?
சிதைத்தவை - புதைந்தவை
மண்ணோடு மண்ணாகி மக்கி மறைந்தவை
எரித்தழிந்தவை உயிர்பெற்றெழுந்தால்
அவை தம் சாட்சியமும்
விசாரணைக் குழுக்களிடம் சென்று முறையிடும்!
எம் மண்ணில் புதைகுழிகட்டுப் பேச்சு வந்தால்
வசிட்டரிடமே கேட்கும்
"ஐயா இக்காலத்தில் தாங்கள் கூறியது பொருத்தமா?"என!

போர் ஒடுக்கி புகழ் பெருக்க
வாள்வேல் வில்லை ஒருபுறம் வைத்துவிட்டு
இன்றைய ராமன்
அளவளவாவி முடிவு காண
காடு விட்டு
நகர் வந்தானாயின்.....
நாம் சற்றுக்கற்பனையில் சிந்திப்போம்!

காட்டுமிராண்டி ஆட்சி செய்யும் கூட்டத்துக்கு
ராமனைக் காட்டிக் கொடுத்து
கூத்து நடத்தும் நவீன பரதர்களிருக்கும் போது
அரசவையில் அரைவாசி உரிமைகூட அதிகமென்றும்
அடி பிடி தான் உகந்ததென்றும் அடம்பிடிக்கும்
விக்ரம வில்லன்கள் விடாப்பிடியாய் நிற்கும்போது
நீயா நானா என்று முட்டிமோதும்
நீசர் இருக்கும்போது
கேசம் மழித்தும் துவேஷம் மழிக்காத
துறவிகள் பலர் இருக்கும்போது
சாவிகொடுத்து சாவாட்டம் பார்க்கும்
அயல் அரசர் இருக்கும்போது
எங்கிருந்து தீர்வு வரும்?

நம் ராமனுக்கு அவன் மணமகள்
எம் மண்மகள் எப்படிக் கிடைப்பாள்?

இந்தப்போர் ஒடுக்கியும் ஒடுக்க முடியாப்போர்!
ஒடுங்கினால் மடங்கிப் போகும்
எம் மானம்,மரபு!

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

சற்று மாற்றிப்பார்ப்போம்
போர் என்றோ பொசுங்கிப் போகலாம்
போர் புரிவோர் பொடிப் பொடியாகலாம்
விதையாய் வீழ்ந்து வெந்துமடியலாம்
போர் ஒடுங்கிப் பொய்யாய்ப் போகலாம்
ஆயின் உரிமைப் போரிதற்கு உதிர்ந்ததனால்
எமது புகழ் ஒடுங்காது!
ஒங்குமிங்கு!

போரினின்று ஒதுங்காமல்
போரிதனை ஒடுக்காமல்
பதுங்கினாலும் பின் பாய்ந்து
இலக்குகளை எட்டுவதே
இன்றைய எம் முடிவு!
இதனாலேயே கிட்டக்கூடும் நாளைய விடிவு!

நம் நவீன ராமனுக்கு
வசிட்டர் இன்றிருந்தால்
சொல்லியிருப்பார் அதனையே

இனியெல்லாம் அவன் கையில்!
போர் ஒடுங்கும்! புகழ் ஒடுங்காது!

காலங்கடந்தும் கம்பவரி
மீண்டும் மீளவும் தந்து நிற்கும் மிடுக்கு இது!

காலம் மாறினாலும்
கவிக் கோலம் மாறி நின்று
கூறி நிற்கும் பொருளை மீட்டிப் பார்த்தேன்

வழுவிருப்பின் பொறுப்பீர்!
மனதினுள்ளே மறுப்பீர்!

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner