December 31, 2012

கும்கி + பிட்சா - கொஞ்சம் லேட்டா & ஷோர்ட்டா 2


கும்கி


மைனா தந்த பிரபு சொலமனின் இன்னொரு களத்தில் அமைந்த படம்.
காட்டு யானை, மலைவாசிகளும் அவர்களது வாழ்க்கையும் கலந்த கதை என்று இயக்குனர் பேட்டியளித்துத் தந்த ஆர்வங்கள் தூண்டிவிட்டது ஒருபக்கம், பிரபுவின் மகனின் அறிமுகம் இன்னொரு பக்கம், பிரபு சொலமன் மைனா மூலம் ஏற்படுத்தி வைத்துள்ள பிம்பம் இன்னொரு பக்கம்... இவையெல்லாம் தாண்டி 'கும்கி' பாடல்கள் எல்லாம் மனதை அள்ளி இருந்தன.

ஒரு படத்தின் அத்தனை பாடல்களும் ரசிக்கவைக்கும் அந்த சூட்சுமம் இசையமைப்பாளர் இமானுக்கு அண்மைக்காலத்தில் தெரிந்திருக்கிறது.
இந்த கும்கி பாடல்களையெல்லாம் கேட்கும்போது மனதில் ஒரு ரசனை கலந்த பிழியும் உணர்வு.

மலை வாழ் மக்களின் நீண்ட காலப் பாரம்பரியமும் அமைதியும் கலந்த வாழ்க்கை மற்றும் அவர்கள் தம் விவசாயத்தையும் சுமுக வாழ்க்கையையும் ஒரு மூர்க்கமான கொம்பன் யானை கெடுக்கிறது. அரசாங்க, போலீஸ் உதவிகள் இல்லாமல் இருக்கும் அவர்கள் தாங்களாகவே பணம் சேர்த்து காட்டு யானையை விரட்டும் 'கும்கி' எனப்படும் யானையைத் தங்கள் கிராமத்துக்கு வரவழைக்கிறார்கள்.

அந்த கும்கியின் பாகன், அந்த யானை மேல் பாசத்தைக் கொட்டி வளர்க்கும் இளைஞன் பிரபு விக்ரம்.
கிராமத் தலைவரின் மகள் மீது கண்டதும் காதல்...
ஆனால் அவளோ அது பற்றி உணராமலே யானை மீது மட்டும் பாசம் வைத்துத் திரிவது அவ்வளவு அந்தக் காதலை எங்களை ரசிக்கச் செய்யவில்லை.
இதனால் நாயகனின் காதல் உருக்கம் சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது.

ஒளிப்பதிவு தான் படத்தின் ஹீரோ. ஆரம்பம் முதல் சிலிர்க்கவும் ரசிக்கவும் உருகவும் பிரமிக்கவும் வைக்கிறது. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இயற்கை அழகை இவரது கமெரா காட்டியது போல அண்மைக்காலத்தில் வேறு எந்தப் படத்திலும் பார்த்து ரசித்த ஞாபகம் இல்லை.

அதிலும் பாடல் காட்சிகளில் துல்லியமும், பிரமாண்டமும் அற்புதம்.
சொல்லிட்டாளே பாடலில் காட்டப்படும் அருவி, மலையுச்சி அப்படியொரு அழகு. அந்த ஒளிப்பதிவில் தொலைந்த மனது இன்னும் அதைச் சுற்றியே... உடனடியாக ஒரு இறுவட்டு வாங்கி மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் இயக்குனர் பாடல்கள், ஒளிப்பதிவில் கிடைத்த பலன்களை எல்லாம் கதை சொல்லும் விதத்தில் தவற விட்டுவிட்டார்.
படத்தின் முக்கிய விஷயமாக ஆரம்பம் முதல் சொல்லப்படும் கொம்பன் யானையின் கோரத் தாக்குதலைப் பற்றி பெரிய Build up கொடுத்துவிட்டு, கடைசி யானைச் சண்டையை கொமெடியாக்கி விடுகிறார்.

கிராமியப் பண்டைப் பாரம்பரியம்,  யானைப் பயிற்சி, தம்பி ராமையாவின் கொஞ்சம் நகைச்சுவை, நிறையப் புலம்பல் என்று அலையும் பகுதிகள் என்று அலையும் கதையில் இயக்குனர் படமாக்குவதில் தடுமாறியிருக்கிறார் என்று புரிகிறது.
ஆனால் மைனாவில் தந்த அதிர்ச்சியான முடிவைப் போலவே துணிச்சலான முடிவு ஒன்றை கும்கியிலும் தந்திருப்பதற்கு  இயக்குனருக்கு வாழ்த்துக்களை சொல்லியே ஆகவேண்டும்.


அறிமுகம் பிரபு விக்ரமிடம் பரம்பரை அலகுகள் செறிந்து இருக்கின்றன. தேவையான அளவு நடித்திருக்கிறார். நடிகர் திலகம், பிரபு இருவரதும் சாயல்கள், கண்கள், மூக்கில் தெரிகின்றன.
ஏற்கெனவே சுந்தரபாண்டியனில் அறிமுகமான லக்ஷ்மி மேனன் புதிய ஆரோக்கியமான கண்டுபிடிப்பு.
கிராமத் தலைவராக வரும் நடிகரும் சிறப்பாக செய்திருக்கிறார்.

காட்சிகள் கவர்ந்த அளவுக்குக் கதையும் திரைக்கதையும் மனதில் ஒட்டவில்லை.

கும்கி - கண்ணுக்குக் குளிர்ச்சி

------------------------

பிட்சா


தமிழில் திகில் படங்கள் வருவது மிகக் குறைவு என்று குறைப்படும் ரசிகர்களில் ஒருவரா நீங்கள்? உங்களுக்கான திகில் த்ரில்லர் பிட்சா.
திரையரங்கு ஒன்றில் தனியே இருந்து இந்தப்படத்தைப் பார்த்தால் நீங்கள் கெட்டிக்காரர் தான்.
நாங்கள் பார்த்த மாளிகாவத்தை ரூபி (திருத்திக்கட்டி A/Cயும் போட்டுள்ளார்கள்) திரையரங்கிலும் அன்று எம்முடன் சேர்த்து இருந்தவர்கள் இருபதுக்கும் குறைவே.

அதில் வேடிக்கை முன் இருக்கைகளில் தனியாக இருந்து பார்த்துக்கொண்டிருந்த சில இளைஞர்கள் அவசர அவசரமாகக் கொஞ்ச நேரத்தின் பின்னர் பின்னால் வந்து அமர்ந்துகொண்டார்கள்.

விசில் படத்துக்குப் பிறகு (காஞ்சனா, முனி எல்லாம் சில காட்சிகளில் தானே) ஒரு தமிழ்ப்படம் முழுமையாகப் பயமுறுத்துகின்ற அளவுக்குக் காட்சித் தொடர்ச்சியோடும், படத்தோடு ஓட்டிச் செல்லும் கதையோடும் வந்துள்ளது என்றால் அது பிட்சா தான்.

முன்னர் கலைஞர் TV யின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இப்படத்தைக் குறும்பட வடிவில் பார்த்த ஞாபகம். யாராவது உறுதிப்படுத்தி சொன்னால் நல்லது...

பிட்சா கடையொன்றில் Delivery boy ஆகக் கடமையாற்றும் இளைஞன் மைக்கேல், அவனோடு வாழும் அவன் காதலி (திருமணமும் செய்கிறான்) - இவளுக்கு அமானுஷ்ய விஷயங்கள், பேய் பற்றி ஆராய ,வாசிக்க விருப்பம், அந்த பிட்சா கடை முதலாளி, அங்கே பணிபுரியும் இருவர் என்ற வட்டத்தில் நிற்கும் கதை, மைக்கேல் ஒரு இரவில் தனியான பங்களா ஒன்றுக்கு பிட்சா கொடுக்கச் செல்லும் நேரம் இடம்பெறும் சம்பவங்களுடன் திகிலாகிறது.
முதல் பாதியில் கொஞ்சம் மெதுவாகச் செல்லும் கதை இடைவேளையின் பின்னர் எடுக்கும் வேகமும் அத்தோடு சேர்ந்து திகிலுமாக படத்தோடு ஓட்ட வைக்கிறது.

அளவான பட்ஜெட்டில் படம் முழுக்க பிரமிக்க வைத்துள்ளார் புதுமுக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
இவரது இளமைக் கூட்டணி (இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், எடிட்டர் லியோ ஜோன் போல்) கலக்கியிருக்கிறது.

யதார்த்தத்தை மீறி, அல்லது பயமுறுத்தவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், நிறைவான ஒரு கதையைத் தந்து ரசிக்கிற விதத்தில் பயமுறுத்தியதற்கு வாழ்த்துக்கள்.


நடிகர்களில் அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக இயல்பான நடிப்பால் கவர்ந்துவரும் விஜய சேதுபதி இதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். (அடுத்து இவரது நடுவில சில பக்கத்தைக் காணோம் பார்க்கணும்)

குள்ளநரிக் கூட்டம் மூலமாக மனத்தைக் கொள்ளையடித்த ரம்யா நம்பீசன், நிறைவாக இருக்கிறார். அழகாக சிரிக்கிறார். ரசிக்கவைப்பது போல நடித்தும் இருக்கிறார். இவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புக்கள் வரவேண்டுமே...

ஆடுகளம் நரேன் - ஜெயப்பிரகாஷ் அண்மைக்காலத்தில் பல்வேறு பாத்திரங்களில் கலக்கி வருவது போல இந்த நரேனும் கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் வெளுத்து வாங்கி வருகிறார்.

அந்த நித்யா யாரப்பா? அந்தக் கண்களும் பார்வையும்... பெயரைக் கேட்டாலும், அந்த பங்களாவை நினைத்தாலும் லேசா மயிர்க் கூச்செறிகிறது.

காட்சிகள் சிலவற்றை அதிகமாக ரசித்தேன்... குறிப்பாக சேதுபதியும் ரம்யாவும் அமர்ந்திருந்து பேசும் அறைக் காட்சிகள்... காதல் பேசுகையில் லைட்டிங், கமெராக் கோணங்களும், பின்னர் அமானுஷ்ய விஷயங்கள் பேசுகையில் மாற்றங்களும் கலக்கல்.
அந்த பங்களாக் காட்சிகளின் பயமுறுத்தல்களுக்கும் கமெரா, இசையோடு எடிட்டிங்கின் நுட்பத்தையும் லாவகமாகக் கையாண்டுள்ளார் இயக்குனர்.
அத்துடன் ஒரு காதல் பாடல் கதையோட்டத்துடன் செல்லுகையில் சற்றே மெதுவாக இருந்தாலும் ரசிக்கலாம்.

தெளிவான கதையோட்டம், திடீர் திருப்பங்கள், அளவான பாத்திரங்கள், நேர்த்தியான நடிப்பு, படைப்பு என்று குறைந்த பட்ஜெட்டில் வெற்றியையும் அள்ளி, பாராட்டுக்களையும் அள்ளி எடுத்துள்ள பிட்சா குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

இது போன்ற ஆரோக்கியமான படைப்புகளை நாளை பிறக்கும் 2013இலும் நாம் எதிர்பார்ப்போம்.

பிட்சா - சுவை, சுவாரஸ்யம் & சூடு.

---------------------
இன்றைய நாள் பழைய ஆண்டுக்கு விடை கொடுக்கும் ஒரு இனிய, மாறாக முடியாத நாள்.
இந்த ஆண்டில் நடந்த நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே, கவலை தந்த, அழிவு தந்த நினைவுகளைக் கழுவித் துடைத்துத் தூர எறிந்துவிட்டு, பிறக்கும் 2013ஐ நம்பிக்கையோடும் நல்ல எண்ணங்களோடும் வரவேற்போம்...

இனிய புது வருட வாழ்த்துக்கள் நண்பர்களே...

December 29, 2012

மூன்று மரணங்கள் - சில செய்திகள் & பகிர்வுகள்


இன்று காலையிலே சற்றுத் தாமதமாகத் துயில் எழுந்தது மூன்று மரணச் செய்திகளுடன்...

இலங்கையின் பிரபல நாடகக் கலைஞர் உபாலி செல்வசேகரன்
டெல்லியில் ஆறு மிருகங்களால் வன்புணர்வு செய்யப்பட்டு பல நாட்களாக வாழ்க்கைக்காகப் போராடி வந்த டெல்லி மாணவி
கிரிக்கெட்டின் ஆங்கில நேர்முக வர்ணனையின்  ஆளுமையாக விளங்கிய டோனி கிரெய்க்

இந்த மூன்று மரணங்களுமே வெவ்வேறு தாக்கங்களை எனது மனதில் ஏற்படுத்தியவை; பல்வேறு தடங்களை இன்னும் விட்டுச் செல்லக் கூடியவை.
நாளாந்தம் எம்மைச் சுற்றி எதோ ஒரு மரணச் செய்தி கிடைத்தவண்ணமே இருக்க, இந்த மூன்றும் எனக்ச் சொல்லியவை என்ன?

உபாலி S. செல்வசேகரன் 


இலங்கையின் சிரேஷ்ட நாடக, திரைப்படக் கலைஞர். தமிழ் மட்டுமன்றி சிங்கள மொழியிலும் தனது முத்திரையைப் பதித்த ஒரு அற்புதக் கலைஞர்.
எனது தாத்தா - லண்டன் கந்தையா (சானா) சண்முகநாதன் காலத்தில் உருவாகிய ஒரு நாடக அணியின்  தொடர்ச்சியாக உருவான அற்புதக் கலைஞர்களின் கூட்டணியில் ஒருவர்.

அந்த நாட்களில் இலங்கை வானொலியில் ஒரு கலக்குக் கலக்கி தமிழ் நேயர்கள் மனதில் இடம் பிடித்த கோமாளிகள் கூட்டணியில் - அப்புக்குட்டி ராஜகோபால், மரிக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன் என்று இந்த மூவரையும் (இவர்களோடு பண்டிதராக அன்புக்குரிய அண்ணன் அப்துல் ஹமீதும்) சிறு வயது முதலே குடும்ப நண்பர்களாகப் பரிச்சயம்.
தாத்தா வழியாகவும், அப்பாவுடன் இவர்கள் மூவரும் கொண்ட நட்பு வழியாகவும் தெரிந்தே இருந்தது.

அப்பா, அம்மா சொல்லி இவர்கள் பற்றி அறிந்ததும் அந்த வேளையிலேயே வானொலி கேட்பதாலும் , பின்னர் சிறுவர் மலர் சிறுவர் நிகழ்ச்சியில் பங்குபற்றும்போதே தெரிவு செய்யப்பட நாடகக் கலைஞனாகத் தெரிவாகியவுடன் நாடகங்கள் நடிக்க ஆரம்பித்ததும் இவர்களது அறிமுகம் அதிகமானது.

1974ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட இவர்களின் நாடகப்பகுதி
அண்ணன் கானா பிரபாவின் Facebook இலிருந்து எடுத்தது...

நான் நடித்த முதலாவது வானொலி நாடகம் ஒரு இலக்கிய நாடகம் - அகளங்கன் அவர்கள் எழுதிய 'அம்பு ஒன்று தைத்தது' - தசரதனின் புத்திர சோக நாடகத்தில் எனக்கு தசரதனின் அம்பு பட்டு இறக்கும் சிறுவன் பாத்திரம். தசரதனாக திரு.K.சந்திரசேகரனும், என்னுடைய பார்வையற்ற தந்தையாக அமரர் செல்வசேகரனும்.
எழில் அண்ணா தான் தயாரிப்பாளர்.

அன்று முதல் இவருடனும், திரு.ராமதாஸ் அவர்களுடனும் எனக்கும் என் தம்பிக்கும் பல நாடகங்கள் நடிக்கும் வாய்ப்பு.
எத்தனையோ தசாப்த அனுபவங்களையும் நுணுக்கங்களையும் தங்களோடு நடிக்கும் எமக்கும் சொல்லித் தந்து வளர்த்துவிட்டவர்கள்.

பின்னாளில் சூரியன் வானொலியில் நான் முகாமையாளராகப் பணியாற்றியவேளை முகாமைத்துவத்தால் நாடகங்கள் செய்வதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து 'அரங்கம்' என்ற பெயரிட்டு வாரத்தில் நான்கு நாட்கள் நாடகங்களை ஒலிபரப்பி வந்தோம்.

வெளியே ஒரு கலையகத்தில் செல்வா அண்ணா, சந்திரசேகரன் அண்ணன், ராமதாஸ் அங்கிள், ராஜா கணேஷன் அவர்கள் ஆகிய சிரேஷ்ட கலைஞர்களையும் இன்னும் பல வெளிக்கலைஞர்களையும் கொண்டு தயாரிப்பாளராக பிரதீப்பை அமர்த்தி 'அரங்கம்' நாடகங்களை உருவாக்கினோம்.

தமிழ் ஒலிபரப்பில் மறக்க முடியாத கலைஞர்கள் பலரை ஒன்றாகச் சேர்த்து மீண்டும் அவர்களது நேயர்களையும் எங்கள் வசபடுத்திய அந்த வாய்ப்பும், இவர்களின் அனுபவங்களை எங்கள் இளம் ஒலிபரப்பாளர்களுக்கும், எமக்கும் சேர்த்துப் பெற்ற அந்தக் காலம் உண்மையில் எங்களுக்கும் ஒரு பொற்காலம் தான்.

இப்போதும் இந்தப் பெரியவர்கள் எங்கே எம்மைக் கண்டாலும் 'அரங்கத்தை' ஞாபகப்படுத்துவதும் எங்களுடன் மிக இயல்பாகப் பழகுவதும் இன்னும் இவர்கள் மீது எங்கள் மதிப்பை உயர்த்தியவை.

பிறகு வெற்றி FM இல் நான் பணியாற்றிய நேரம், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கலைஞர்களை மீள நினைவுபடுத்தும் 'வெற்றி பெற்றவர்கள்' என்று நிகழ்ச்சி மூலமாகவும் திரு.செல்வசேகரன் அவர்களைப் பேட்டி கண்டிருந்தோம்.
(தயாரிப்பாளர் - விமல் & பேட்டி கண்டவர் - பிரதீப்)


இந்த அற்புதமான செல்வா அண்ணா சிங்களத் திரையுலகிலும், தொலைகாட்சி நாடகங்களிலும் கூட பெரு மதிப்பைப் பெற்றிருந்தவர்.
மொழிபெயர்ப்பிலும் கெட்டிக்காரர்.

'சரசவிய' விருது பெற்ற ஒரே தமிழ் கலைஞர் உபாலி' செல்வசேகரன் தான்.
இன்னமுமே இவர் போன்ற எங்களின் அற்புதமான கலைஞர்களை நாம் இன்னமும் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று வருத்தம் இருந்துகொண்டே இருக்கிறது.

உபாலி செல்வசேகரன் அவர்களுக்கு அஞ்சலிகள்.

---------


வன்புணர்வு, பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு, ரேப் இப்படியான சொற்கள் பத்திரிகைகள், இணையத் தளங்கள், செய்திகள் எங்கும் இறைந்து கிடக்கும் ஒரு காலப்பகுதியில் நாம் பயணித்துக்கொண்டிருகிறோம் என்பதே மனிதகுலத்துக்கு இழிவு தரும் ஒரு விடயமல்லவா?

இந்தியத் தலைநகரில் ஒரு இளம் மாணவி ஆறு மிருகங்களால் ஓடும் பேருந்தில் கொடுமையாக சீரழிக்கப்பட்டு கொடுமையாக நிர்வாணமாக வீசி எறியப்பட்டிருக்கிறாள்.
இந்த செய்தி ஏற்படுத்திய தாக்கம், இதற்கு எதிராக எழுந்த குரல்கள், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் ஆகியன எதிர்காலத்தில் இப்படியொரு விடயம் நடக்கக்கூடாது என்பதற்கான முடிவைத் தந்தால்  நல்லது தான்.

ஆயினும் அதன் பின்னரும் நீதி, தகுந்த தண்டனை வேண்டும், இனி இவாறு நடக்கக் கூடாது என்று வலியுறுத்திய மாணவர் போராட்டங்கள் அடக்கப்பட்டது அவ்வளவு ஆரோக்கியமான மாற்றங்களைத் தரும் என்ற நம்பிக்கையை வழங்கவில்லை.


அத்துடன் அதற்குப் பிறகும் பல சம்பவங்கள்.... இந்தியாவிலும் பல பகுதிகளில்..
இலங்கையின் வடக்கில் மண்டைதீவில் நேற்று ஒரு சின்னஞ்சிறுமியை சிதைத்துக் கொன்றுள்ளார்கள்.

1987இல்  IPKF இனால் குதறப்பட்ட ஆயிரக்கணக்கான எம் தமிழ்ப் பெண்கள், பின்னர் கிருஷாந்தி குமாரசாமி முதல் இசைப்பிரியா, இறுதிக்கட்ட யுத்தக்கட்டங்களில் இராணுவத்தால்  சீரழிக்கப்பட்ட பல பெண்கள் என்று தோல்வியுற்ற ஒரு சமூகத்தில் குலைந்துபோன எம் பெண்கள் பற்றிக் குரல் எழுப்பியும் வெளியே வராத சத்தத்துடன் நாம் குமுறிக்கொண்டிருக்கிறோம்.

டெல்லியில் நடந்தால் வெளியே பெரிதாகத் தெரியும் ஒரு சம்பவம் இலங்கையில் மட்டுமல்ல.. இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் கிராமமொன்றில் நடந்தாலும் வெளியே வராது; அல்லது ஒரு மூலையில் பெட்டிச் செய்தியோடு முடிந்துவிடும்.


காலாகாலமாகப் பெண்களின் உடலமைப்பினாலும் எங்கள் சமூகக் கட்டமைப்பினாலும் பாலியல் ரீதியிலான வதைகளும் அதன் மூலமான சீரழிவுகளும் தொடரத் தான் போகின்றன.

இதற்கான தண்டனைகள், விழிப்புணர்ச்சி, தகுந்த பாதுகாப்பு பற்றி அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒரு கட்டத்தை அந்த பாவப்பட்ட டெல்லிப் பெண்ணின் சம்பவமும், வாழ்வதற்காகப் போராடி இன்று சிங்கப்பூரில் மரணித்த அவளது மரணமும் ஏற்படுத்திவிட்டுப் போயுள்ளன.
இனியும் எம்மில் உலா வரும் மிருகங்கள் திருந்தும் என்று நான் நம்பவில்லை; திருந்தாத மிருகங்களை சட்டங்கள் மூலமாக வருந்தச் செய்வதிலாவது வெற்றி காண முடியுமா?

------------------------

டோனி கிரெய்க்


கிரிக்கெட் பார்த்து, நேர்முக வர்ணனையைக் கேட்டு ரசிக்க ஆரம்பித்த காலத்தில் நன்கு மனதில் பதிந்த இரு குரல்கள் Richie Benaud & Tony Greig.
இலங்கையிலிருந்து ஏதாவொரு ஆங்கில நேர்முக வர்ணனையாளரும் இல்லாதிருந்த காலகட்டத்தில் கிரெய்க் தான் எம் அணிக்காக (பரிதாபப்பட்டோ என்னவோ) பரிந்து பேசி நேர்முக வர்ணனை செய்வார்.

அவரது பிரபலமான Little Sri Lankans, Marvelously talented Aravinda(rr) De silva, Captain cool Ranatunga, my dear Little Kaloo (Kaluwitharana) இப்படியான இலங்கை , இலங்கை வீரர்கள் பற்றிய வர்ணனைகளும் ,

அவருக்கே உரித்தான கம்பீரமான குரலில் வந்து விழுந்த வார்த்தைப் பிரயோகங்களும் கிரிக்கெட் போட்டிகளை சுவாரச்யமாக்கித் தந்திருந்தன.
"Dear oh dear this Little master (Tendulkar) has all magic in his blade"
'Once again Jayasuriya(rr) taking this game away singlehandedly"
“This Test is done and dusted.”
"These Sri Lankans are very very good, they catch everything."

1996 உலகக் கிண்ணம் வென்றபோது இலங்கையரைப் போலவே ஆனந்தப்பட்ட இன்னொருவர் என டோனியை நாம் கண்டோம்..
'These little Sri Lankans are giving the Aussies a real hiding'
 ‘This is a little fairytale. The thing that I like about these guys is that they not only win, but they win in style. It is only a small place Sri Lanka. And what a moment this is for Sri Lankan people.’

இன்று அந்தக் கிண்ணம் வென்று ரணதுங்க கிண்ணம் தூக்கும் காட்சிகளைப் பார்த்தாலும் குதூகலிக்கும் கிரேய்க்கின் குரலை நாம் ரசிக்கலாம்.

தென் ஆபிரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் போராடி அணிக்குள் நுழைந்து தலைவராகி, பின்னர்  கெரி பக்கருடன் சேர்ந்து கிரிக்கெட்டில் ஏற்படுத்திய World Series புரட்சி, அதன் பின்னர் நேர்முக வர்ணனையாளர் என்று அனைத்திலும் தடம்பதித்தவர் இறுதியாகப் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த இந்தக் காலத்திலும் தனது உயர்ந்த தோற்றம் போலவே கம்பீரமாகவே நின்றிருந்தார்.

டோனி யின் இறுதிப் பேட்டியில்  அவர் சொல்வதை அவதானியுங்கள்Twitterஇல் அண்மையில் தான் இணைந்துகொண்ட இவர் அளவாக, யாரையும் புன்படுத்தாமலே அதிலும் தன் கருத்துரைத்து வந்திருந்தார்.

கண்ட சில சந்தர்ப்பங்களில் ஆசைக்காக ஒரு சில வார்த்தைகள் பேசினாலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது. மிக நேசித்த ஒரு மனிதர்...

நண்பர் Rex Clemetine தனது Facebook இல் இவர் பற்றி சொல்லியிருப்பவை...
Tony Greig,  
Born in South Africa  
Played for England
 
Lived in Australia
 
Supported Sri Lanka
 
Rest in Peace.

ஆங்கில வார்த்தைகளின் அழகை சொல்லித்தந்த சிலரில் ஒருவரை இழந்த சோகம் மனதில் கனக்கிறது.

We will miss you Tony (Greig).December 27, 2012

நீர்ப்பறவை + அம்மாவின் கை பேசி - லேட்டா & ஷோர்ட்டா


கொஞ்சம் (என்ன கொஞ்சம் முழுமையாகவே என்பது தான் பொருத்தம் என்று நீங்கள் சொன்னா சரிதானுங்கோ) ஓய்வாக இருப்பதால் சில தெரிவு செய்யப்பட புதிய படங்களை - திரையரங்குக்கு வராதவற்றை - வீட்டிலே பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்த பின்பு மீண்டும் திரையரங்கில் பார்த்த படங்கள் கும்கி & பிட்சா.

இவை வெளிவந்து சில பல நாட்கள் ஆனதால் விமர்சனம் என்று நீட்டி முழக்குவதை விட, கொஞ்சமாக ஒவ்வொன்று பற்றியும் சொல்லலாம் என...


நீர்ப்பறவை 


தென்மேற்குப் பருவக்காற்று தந்த சீனு ராமசாமியின் படம்...
கரையோர மீனவர் வாழ்வின் ஒரு பகுதியைக் காதலோடும், காத்திருப்போடும் சேர்த்துப் படமாக்கியிருக்கிறார்.

'அழகி' நந்திதா தாஸ் முதல் காட்சியில் மர்மத்தோடு வருவதால் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தை எதிர்பார்த்தேன்.

விஷ்ணு, சுனைனா இரண்டுபெரினதும் இயல்பான நடிப்பு படத்தின் ஓட்டத்தை ரசிக்கச் செய்திருந்தது. நந்திதா தாஸ் சுனைனாவின் முதிர்ந்த பாத்திரம் என்று இருந்தாலும் அவருடன் ஒப்பிடும் அளவுக்கு சிறப்பாகவே செய்துள்ளார்.

சீனு ராமசாமியின் தென் மேற்குப் பருவக்காற்றை நிறைவாக்கிய சரண்யாவை மறக்காமல் இங்கேயும் பாசக்கார அம்மாவாக்கியுள்ளார்கள். சரண்யா எப்போது அம்மாவாக நடித்தாலும் அப்படியே ஒரு பாசம் எங்களுக்குள்ளும் பொங்கி வழிவதை என்னைப் போல நீங்களும் உணர்ந்துள்ளீர்களா?

மீனவர் வாழ்க்கை, குடிகார மகன், தேவாலயத்தை முன்னிறுத்திய கரையோரக் கிராம வாழ்க்கை இவற்றை இயல்பாகப் படமாக்கியிருப்பதொடு, இந்திய மீனவர்கள் கடலில் வைத்து இலங்கைப் படையினரால் சுடப்படுவதையும் மனதைத் தொடுகிறமாதிரிக் காட்சிப்படுத்தியுள்ளார்.

பாடல்களும் பின்னணி இசையும் மனதில் படத்தை ஓட்டவைத்ததில் மிக முக்கியமானவை.

வைரமுத்துவின்  ஒவ்வொரு வார்த்தையுமே கடலோர வாழ்க்கை, மீனவர் வாழ்க்கை பற்றி அழகாக சொல்கின்றன.
கடலைப் பின்னணியாகக் கொண்ட காட்சிகள் கண்ணுக்குக் குளிர்மையும் இதமும்.

தாய்மையின் தியாகத்தை முந்தைய படத்தில் சொல்லியிருந்த இயக்குனர், ஒரு பெண்ணின் ஆழமான காதல், தாய்மையின் பாசத்தை விட ஒருவனைத் திருத்தி ஆளாக்க உறுதியானது என்ற கருப்பொருளைத் தந்திருக்கிறார் நீர்ப்பறவை மூலமாக.

நீர்ப்பறவை - நேர்த்தி


அம்மாவின் கைப்பேசி


தங்கர் பச்சானின் கைவண்ணம்.
சாந்தனுவுக்கு இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக நடிக்க வாய்ப்பு.
ஆனால் கதாநாயகனாக இப்போது பெரிய வாய்ப்பில்லாத சாந்தனுவை பெயருக்குப் போட்டுவிட்டு தங்கர் தான் படம் முழுக்க வரும் பாத்திரத்தை எடுத்திருக்கிறார்.

அம்மா சென்டிமென்டை படத்தின் ஊற்றினாலும் அதில் புதுசாக எதையும் காணோம்.என்னாச்சு தங்கர்?

ஆனாலும் பொறுப்பற்ற மகனாக இருந்தும் அம்மா மீது பாசத்தையும் மாமன் மகள் மீது காதலையும் வைத்துள்ள இளைஞன்.
தொழில் செய்யும் இடத்தில் வளரும் பகையினால் நடக்கும் கொலையும், தாய்க்காக சேர்த்த பணமும் அவனது கைப்பேசியும் அப்பாவி அடியாளான தங்கரிடம் அகப்பட அதன் தொடர்ச்சி தான் கதை.

குடும்பச் சிக்கலால் வேற்றூருக்குப் போய் வேலை பார்க்கும் மகனுக்கும் தாய்க்கும் இடையிலான தொடர்பூடகமாக மாறும் செல்பேசி படத்தின் இன்னொரு பாத்திரம்.

ஆரம்பத்தில் பிழைக்கத் தெரியாத தங்கரும் அவரின் மனைவியினதும் வாழ்க்கையில் ஆரம்பிக்கும் கதையும், அவரிடம் உள்ள பெருமளவு பணம் பற்றிய மனைவியின் சந்தேகத்தோடு விரிகிற கதை, இன்னொரு பக்கம் சாந்தனுவின் கதையுடன் இணையும் திருப்பம் அழகு.
ஆனால் அதன் பின் கதையின் மெதுவான நகர்வும், இழுவையும் அயரவைக்கிறது.

அழகம்பெருமாளும், தாயாக நடித்துள்ளவரும், வில்லன் சிட்டிபாபுவாக வரும் நடிகரும், இனியாவும் (அடக்கமாகவும் அழகாகவும் இருக்கிறார்) அசத்தல்; மனதில் நிற்கிறார்கள்.

பின்னணி இசையும் பாடல்களும் படு அறுவை.

மனித மனங்களின் உணர்வுகளை இயல்பாகத் தரும் படங்களைத் தங்கர் பச்சான் தருவது அவர் படங்களை எப்போதும் மனதிற்கு நெருக்கமாக்குவது.
இதிலும் மனித மனங்களின் இயல்பான சலனங்களும், பாசம் உண்டாக்கும் பாரங்களும், அன்பும் பிரிவும் உண்டாக்கும் தாக்கங்களும் சொல்லப்பட்டிருந்தாலும் ஏனோ மனதில் ஆழப்பதியவில்லை.
எழுபதுகள், எண்பதுகளில் வந்த கொஞ்சம் அழுகை, சென்டிமென்ட் திரைப்படங்கள் போல இழுவை தான் காரணம் போலும்.

அம்மாவின் கைப்பேசி - அழுகையும் இழுவையும் கூடிப்போச்சு 

கும்கி , பிட்சா படங்கள் பார்த்த படங்களில் அதிகம் ஈர்த்தவை... அடுத்த இடுகையில் அவை பற்றி...


December 24, 2012

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு - சில சந்தேகங்கள் - ஒரு அலசல்


சச்சின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு...

இது பற்றியே இந்த இரண்டு நாட்களாகப் பேச்சு...இந்த ஓய்வு எதிர்பார்த்ததே என்றாலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விளையாடிவிட்டு ஓய்வுபெறக் காத்திருக்கிறார் என்றதால் தான் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் பின்னர் சச்சின் ஓய்வை அறிவிக்கவில்லை என்று நான் நினைத்திருந்தேன்.

உண்மையில் நாற்பது வயதை நெருங்கும் சச்சின் முன்பை விட ஆடுகளத்தில் பந்துகளைத் தேர்வு செய்து துடுப்பாடுவதிலும், பந்துகளை அடிக்காமல் விடுவதிலும் கூடத் தடுமாறுகிறார் என்பது அவரது அங்க அசைவுகள், பார்வைகள், ஏன் ஆட்டமிழப்புக்கள் மூலமாகக் கூடத் தெரிகிறது.

இங்கிலாந்துத் தொடரில் அவரது தொடர்ச்சியான தடுமாற்றம் பற்றி கடந்த வாரம் நான் தமிழ் மிரரில் எழுதிய கட்டுரையில் சொல்லி இருந்தேன்.

இந்தத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் ஒரு இன்னிங்சில் பெற்ற 76 ஓட்டங்களைத் தவிர ஏனைய 5 இன்னிங்சில் 36 ஓட்டங்களையே எடுத்திருக்கிறார். சராசரி 18.66. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட்கள் அடங்கிய தொடர் ஒன்றில் சச்சின் பெற்ற மிக மோசமான சராசரி இதுவே.
நாற்பது வயதாகும் உலகின் அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற சாதனையாளர் தொடர்ந்து தடுமாறியும், தளர்ந்தும் வருகிறார் என்பது அவரது கடந்த இரு வருடப் பெறுபேறுகளிலேயே தெரிகிறது. 18 டெஸ்ட் போட்டிகளில் 1113 ஓட்டங்கள். சராசரி 35.90. ஒரேயொரு சதம்.
ரஹானே, திவாரி, இன்னும் பல இளம் வீரர்கள் வெளியே வாய்ப்புக்காகக் காத்திருக்க, சச்சின் தானும் தடுமாறி அணியையும் தடுமாற வைத்துக்கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்கள் கிளம்பியுள்ளன வழமை போலவே...
இந்தியா அடுத்த டெஸ்ட் தொடர் விளையாட சில மாதகாலம் இருப்பதால் சச்சின் என்ன முடிவை எப்போது எடுப்பார் என்று அனைவருமே காத்துள்ளார்கள்.

ண்மைக்காலத்தில் அனேக பிரபல. சிரேஷ்ட வீரர்களுக்கு அவரவர் அணிகள் இறுதியாக ஒரு போட்டியை தங்கள் ஓய்வை அறிவித்துவிட்டு விலகும் வாய்ப்பாக வழங்கி வந்துள்ளார்கள்.

இந்தியாவின் டிராவிட், லக்ஸ்மன் ஆகியோர் மட்டுமே இரு டெஸ்ட் தொடர்களுக்கிடையில் போட்டிகள் நடக்காத நிலையில் தங்கள் ஓய்வுகளை அறிவித்தவர்கள்.
(லக்ச்மனின் ஓய்வு ஏற்படுத்திய சர்ச்சையின் மூலம் அவர் ஓய்வு பெற வைக்கப்பட்டார் என்பது தெளிவானது)

எனவே சச்சின் இங்கிலாந்துக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட் போட்டியின் முன்னர் அல்லது தொடர் முடிந்த உடன் அறிவிப்பார் என்று பார்த்தால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய ஒருநாள் சர்வதேச அணி அறிவிக்கப்பட ஒரு சில நிமிட நேரங்களுக்கு முன்னர் தனது ஓய்வை - ஒருநாள் சரவதேசப் போட்டிகளில் இருந்து மட்டும் - அறிவிக்கிறார்.

இது உண்மையில் பலரும் எதிர்பாராததே..

டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் சச்சின் விலகுவார் என்றே நான் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருந்தோம். (என்னதான் கிரிக்கெட் கடவுளாக இருந்தாலும் 2015 உலகக் கிண்ணத்தில் சச்சின் விளையாட மாட்டார் என்பது இப்போது சச்சின் ஓய்வு பெற்றதற்காக உண்ணாவிரதம், தீக்குளிப்பில் ஈடுபடும் ரேஞ்சுக்குப் போயுள்ள ரசிக / பக்த சிகாமணிகளுக்கும் நன்றாகவே தெரியும்)

பாகிஸ்தான் தொடரில் விளையாடுவது எல்லா இந்திய வீரர்களுக்கும் ஒரு பெரிய விஷயம்.. மிக நீண்ட காலத்தின் பின்னர் இந்தியா வருகின்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை சச்சின் கூட தவறவிடுவாரா?

இந்தியத் தெரிவாளர்கள் (தோனியுடன் சேர்ந்து தான்) அண்மைக்காலத்தில் எடுத்துவரும் கடுமையான முடிவுகள் & சச்சினின் தொடர்ச்சியான தளம்பல்கள் இரண்டும் சேர்ந்து இந்த அவசர ஓய்வு, சச்சின் தானாக எடுத்ததா அல்லது தேர்வாளர்களுடன் பேசி அவர்களாகக் கொடுத்த ஐடியாவா என்ற கோணத்திலும் யோசிக்க வைக்கக் கூடியவை.

அறிவிக்கப்பட்ட இந்திய ஒருநாள் அணியிலும் சாகிர் கான் இல்லை.. சேவாக் சேர்க்கப்பட்டதும் ஆச்சரியத்தை அளித்திருந்தது.

சச்சின் ஓய்வை அறிவிக்காமல் இருந்திருந்தால், தேர்வாளர்கள் சேவாக்கா சச்சினா என்ற குழப்பத்திற்கு ஆளாகி இருக்கலாம்...

எனவே தான் கலந்தாலோசித்து இந்த ஓய்வை சச்சின் அணி அறிவிக்க சில நிமிட  நேரங்களுக்கு முன்னர் அறிவித்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எப்படா இந்த ஆள் ஓய்வு பெறுவார் என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த பலருக்கும், ஏன்டா இப்ப ஓய்வு பெற்றார் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் - இப்போது இந்த ஒருநாள் ஓய்வை, அதை மட்டும் அறிவித்திருப்பதற்கு ஆறு காரணங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். (ஆறில் ஒன்று இல்லாவிட்டால் ஆறுமே)

1.அண்மைக்காலத் தொடர்ச்சியான தளம்பல்கள் & தடுமாற்றங்கள்.

உலகக்கிண்ணத்தின் பின்னர் இருந்தே சச்சின்  தடுமாறி வருகிறார்.  ஒருநாள் சராசரியாக 44.83 ஐக் கொண்டுள்ள சச்சின் உலகக் கிண்ணத்தின் பின்னர் விளையாடியுள்ள பத்து ஒருநாள் போட்டிகளில் கொண்டுள்ள சராசரி  31 மட்டுமே. தனது நூறாவது சர்வதேச சதமாக எடுத்த ஒருநாள் சதம் தான்  21 மாதங்களில் சச்சின் பெற்றுள்ள ஒரே சதம்.

2.2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்காக இளைஞர்களுக்கான இடத்தை வழங்க

இந்திய அணியில் நுழைவதற்கு மிகச் சிறந்த பெறுபேறுகளுடன் & ஆற்றல்களுடன் காத்துள்ள இளைய வீரர்கள் பலரை வைத்து அடுத்த உலகக் கிண்ணத்துக்கான அணியைக் கட்டியெழுப்பும் முயற்சியின் குறுக்கே தான் இருக்க கூடாது என்று சச்சின் நினைத்திருக்கலாம்.

3.ஆஸ்திரேலியாவில் தோனி கடைக்கொண்ட சுழற்சித் தெரிவு

சச்சின், சேவாக், கம்பீர் ஆகிய மூன்று 'மூத்த' வீரர்களையும் ஒரு சேர அணியில் விளையாட வைக்க முடியாது; இதனால் களத்தில் இருபது ஓட்டங்களாவது அநியாயமாகப் போகிறது என்று  தோனி பகிரங்கமாகத் தெரிவித்த கருத்தும் அதைத் தொடர்ந்து மாறி மாறி வழங்கப்பட்ட ஓய்வும் சச்சினை யோசிக்க வைத்திருக்கலாம்.
(ஆனால் இந்த சுழற்சியை சச்சினும் ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது)

4.வயது, களத்தடுப்பு & டெஸ்ட்

நாற்பது வயதாகுவதால் இயல்பாகவே களத்தடுப்பில் சச்சின் கொஞ்சம் மந்தமாகியிருக்கிறார். இதனால் டெஸ்ட் போட்டிகளில் சமாளித்தாலும் ஒருநாள் போட்டிகளில் இளையவர்களுக்குத் தான் ஈடுகொடுக்க முடியாது என நினைத்திருக்கலாம்.
டெஸ்ட் போட்டிகளில் இன்னும் கொஞ்சம் நின்று பிடிக்கலாம் என சச்சின் நினைத்தாலும், அண்மைக்காலத்தில் அவர் தடுமாறியதைப் பார்க்கையில், ஐந்து நாள் போட்டிகளை விட, ஐம்பது ஓவர்களில் சச்சின் கொஞ்சமாவது அதிகம் செய்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

5.ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிக் குழப்பம் & கோளியின் எதிர்காலம்

சச்சின் தொடர்ந்து இருப்பதால் யாரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்புவது என்ற குழப்பம் நீடிக்கிறது. அத்துடன் சேவாக், கம்பீரோடு சச்சினும் விளையாடினால் முதல் மூன்று இடங்களும் நிரப்பப்படுவதால் இந்த வருடத்தில் சர்வதேச ஓட்டங்களை அதிகமாகக் குவித்த, அருமையான Form இலுள்ள விராட் கோளி நான்காம் இலக்கத்துக்கு தள்ளப்படுகிறார். இதனால் கோளிக்கு மட்டுமில்லாமல் இந்தியாவுக்குமே நஷ்டம்.
இதை 23 வருடங்களாக இந்திய அணியை உணர்ந்து, மிக அனுபவஸ்தராக விளங்கும் சச்சின் உணர்ந்திருக்கலாம்.

6. தேர்வாளர்கள் சச்சினைத் தெரிவு செய்யவில்லை என்பதைப் போட்டுடைத்திருக்கலாம்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீக்காந்த் தலைமையிலான குழுவினருக்கு  இல்லாத தைரியம் சந்தீப் பாட்டில் குழுவினருக்கு இருந்தாலும் சச்சினை நீக்கும் அளவுக்கு இருக்குமா என்ற கேள்வி எழுந்தாலும், அவரது மோசமான form உம் வயதும், இளம் வீரர்களின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்களும், பாகிஸ்தான் தொடரை(யாவது) வென்றாகவேண்டும் என்ற காரணங்கள் முக்கியமானதாக இருந்திருத்தல் வேண்டும்.

இதனால் அணியை விட்டு சச்சினைத் தூக்கியாச்சு என்ற அவப்பெயர் இந்தியாவின் மிகச் சிறந்த சாதனை நாயகனுக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒரு மரியாதை நிமித்தம் (ஆஸ்திரேலிய பாணியில்) சச்சினை முதலில் அறிவிக்கச் செய்திருக்கலாம்.
(அப்படி இருந்தாலும் நம்ம ஊரு சனத் ஜெயசூரிய எம்.பி மாதிரி விடைபெற என ஒரே ஒரு போட்டியைக் கேட்டுப் பெற்று விடைபெற்றிருக்கலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை)
அவர் அறிவித்த சில நிமிடங்களில் இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ஒய்வு பெறமாட்டார்களா என்று அழுத்தம் வழங்கப்பட்டு தங்கள் ஓய்வை அறிவித்த கபில்தேவ், கங்குலி போன்ற சிலர் ஞாபகம் வருகிறார்கள்.
இன்னும் கொஞ்சம் விளையாட மாட்டார்களா என்று எதிர்பார்த்து ஏங்கவைத்து விலகிச் சென்ற கவாஸ்கர், கும்ப்ளே, டிராவிட் போன்றோரும் நினைவுக்கு வருவார்கள்.
சச்சின் தனது டெஸ்ட் ஓய்வை அறிவிக்கையில் இதில் எந்த ரகத்தில் வரப்போகிறார் என்ற கேள்வியும் எழுகிறது.


எம்மில் சச்சினை ரசிகராக, பக்தராக ரசிக்கும் பலருக்கு சச்சின் ஒய்வு கிரிக்கெட்டிலே ஒரு வெறுமைத் தோற்றத்தைத் தரலாம்.. (எனக்கு முரளியின் ஒய்வு தந்த உணர்வு போல)
ஆனால் அவரது ரசிகராக இல்லாத பலருக்கும் கூட, சச்சின் ஒரு கிரிக்கெட்டின் கால அடையாளம்.

1989க்கு முன்னரே கிரிக்கெட்டைப் பார்க்க, ரசிக்க ஆரம்பித்தாலும் எனக்கு வசிம் அக்ரம், முரளிதரன், ஸ்டீவ் வோ, பிரையன் லாரா, ஷேன் வோர்ன், சச்சின், சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா  முதலானோர் தான் அந்தந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட்டை ஆண்டு எனக்கு கிரிக்கெட்டை ஊட்டியவர்கள்.

இப்போது இறுதியாக சச்சினும் விடைபெறுகிறார்.
ஒருநாள் போட்டிகள் சிவப்புப் பந்து, வெள்ளை உடைகளில் இருந்து இப்போதைய Twenty 20 போட்டிகளால் மாறிவரும் ஒருநாள் போட்டிகள் வரை மாறாமல் இருந்த ஒரே விடயம் சச்சின் தான்....
இனி சச்சின் டெஸ்டில் மட்டும் எனும்போது எங்களுக்கு வயதேறிவிட்டது என்பது மனதில் உறைக்கவில்லையா?

சச்சினின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் எங்கும் அவரது சாதனைகள் பற்றிப் போற்றுவதிலும், அவரது சாதனைகள் பற்றி மீண்டும் நினைவூட்டுவதிலும் இருக்க, முன்னாள் வீரர்கள் ஓய்வை நியாயப்படுத்துவதிலும், சிலர் இப்போது ஏன் என்று அதிர்ச்சிப்பட,
சச்சினின் IPL அணியான மும்பை இந்தியன்சின் ட்விட்டர் கணக்கு @Mipaltan சச்சின் அணிந்த பத்தாம் இலக்க ஜெர்சியை இனி யாருக்கும் வழங்கக்கூடாது என்று ஒரு கோரிக்கையை ட்விட்டரில் ஆரவாரமாக நடத்திக்கொண்டிருகிறது.
#RetireTheJerseyNo10

சச்சின் என்ற சாதனையாளன் 2011 உலகக் கிண்ண வெற்றியுடன் விடை பெற்றிருக்க வேண்டும்.

அது அவருக்கான மிக உச்ச கௌரவமாக இருந்திருக்கும். சொந்த மண்ணில்.. சொந்த மைதானத்தில், அணி முழுதும் அவருக்காகப் பெற்ற கிண்ணம் என்று பரிசளித்த வெற்றி அது.

இல்லாவிட்டால் தான் எந்த அணிக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தாரோ அதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி விடை பெற்றிருக்கவேண்டும்.

இரண்டும் இல்லாமல், இடை நடுவே தடுமாற்றம் & சந்தேகங்களோடு விடை பெறுவது சாதாரண ஒரு கிரிக்கெட் ரசிகனாக எனக்கும் சற்றுக் கவலையே.

சச்சினை ஒய்வு பெறச் சொல்வது பற்றி அண்மைக்காலமாகவே இருந்துவரும் வாதப் பிரதிவாதங்கள் பற்றிய ஒரு கருத்துச் சித்திரம். ட்விட்டரில் இருந்து உருவியது....


கிரிக்கெட்டை எப்படி அங்குலம் அங்குலமாக வாசிக்கத் தெரியுமோ அதைவிடவும் தன்னையும் அதிகமாக வாசிக்கத் தெரிந்த சச்சின் அடுத்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அதுதான் அவருக்கும் உரிய விடைபெறலாக இருக்கும்.
(ஆனால் இப்போதிருக்கும் இந்திய அணியின் நிலையில் இந்தியாவுக்குத் தொடர் வெற்றியைப் பரிசளித்து சச்சினால் செல்ல முடியாது என்பதுவும் உறுதி)


         *** நத்தார் கொண்டாடும் நண்பர்களுக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள் ***

December 20, 2012

இலங்கை - நம்பிக்கை & இந்தியா - புதியதா?


உலகம் நாளைக்கு அழியப்போகுதாம்... இன்று தான் இறுதியாக ஒரு முழு நாளும் என்று வரும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை.

தற்செயலாக அழிந்தாலும், அதற்கு முன்னதாக இறுதியாக ஒரு கிரிக்கெட் இடுகை போடலாமே னு தான்..... ;)

கடந்த வாரம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடுத்தடுத்த நாட்களில் முடிவுக்கு வந்திருந்தன.

நாக்பூரில் இந்தியா வென்றால் தொடர் சமப்படும் என்ற நிலையில் ஆரம்பித்த இந்திய-இங்கிலாந்து  டெஸ்ட் போட்டி , முதல் நாளிலிருந்தே ஆமை வேக ஓட்ட வேகத்துடன் நகர்ந்து, மிகப் பரிதாபகரமான சமநிலை முடிவும், இந்தியாவுக்கு எட்டு வருடங்களில் சொந்த மண்ணில் கிடைத்த முதலாவது டெஸ்ட் தொடர் தோல்வியையும், இந்தியாவுக்குத் தமது அணி, தலைமை, சொந்த மண் அனுகூலங்கள் ஆகியவற்றை சுய பரிசோதனை செய்துகொள்ளும் தேவையையும் வழங்கி இருக்கிறது.

இதன் பின் எழுந்த சில முக்கிய கேள்விகள் / குழப்பங்கள்....

தோனியின் தலைமைத்துவம் மாற்றப்படுமா? (குறைந்தது டெஸ்ட் போட்டிகளிலாவது)
சச்சின் எப்போது ஓய்வை அறிவிப்பார்?
அல்லது தேர்வாளர்கள் அவருடன் 'பேசுவார்களா'?
சேவாக்கின் நிலை?
இந்தியப் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆடுகளங்கள்....

இவை பற்றித் தேவையான அளவு விரிவாக 'தமிழ் மிரரில்' ஒரு நீளமான கட்டுரை எழுதியுள்ளேன்..
வாசியுங்கள்.. கருத்திடுங்கள். (இங்கே அல்லது அங்கே)


இந்தியா இனி: தோல்வியும் டோணியும் & சச்சின் இனியும்???மாறுபட்ட கருத்துக்களை நீங்கள் கொண்டிருந்தால் அது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழி சமைக்கும்.

இன்று ஆரம்பிக்கும் Twenty 20 தொடர் இன்னும் இந்தியாவின் இளம் வீரர்களுக்கான மேடையாக அமையவுள்ளதுடன், தோனிக்கான தனிப்பட்ட தலைமைத்துவப் பரீட்சையாகவும் உள்ளது.
ஆர்வத்துடன் அவதானிக்கக் காத்திருக்கிறேன்.

-------------

ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் டெஸ்ட் போட்டி இலங்கை அணிக்கு பெரியதொரு சவாலை வழங்கி இருந்தது.

இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் எந்தவொரு டெஸ்ட் வெற்றியும் பெறாத இலங்கை அணிக்கு (இதுவரை ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் வைத்து மட்டுமே இலங்கையால் எந்த ஒரு டெஸ்ட் வெற்றியையும் பெற முடியவில்லை) , அதற்கான அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த முரளிதரனுக்குப் பிறகு, அந்த பொற்கால அணியில் இருந்த நான்கு முக்கிய வீரர்களான மஹேல, சங்கக்கார, டில்ஷான், சமரவீர ஆகியோரின் இறுதி ஆஸ்திரேலியத் தொடராக இந்தத் தொடர் அமையக்கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.


மஹேல ஜெயவர்த்தன இந்தத் தொடரின் பின்னர் தலைமையிலிருந்து விலக இருப்பதாக அறிவித்த  பின், அவர் மீதும் மத்தியூஸ் மீதும் மஹேல மீதும் கூர்ந்த அவதானங்கள் திரும்பியுள்ள நிலையில் ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் இலங்கை எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும்? எப்படித் தோற்கும் என்று விமர்சகர்கள் மட்டுமல்ல இலங்கை ரசிகர்களும் கூடக் காத்திருந்தார்கள்.

இலங்கையின் பந்துவீச்சு ஒன்றும் வெளிநாடுகளில் பெரிதாக டெஸ்ட் போட்டிகளை வென்று தரக்கூடிய உலகத் தரம் வாய்ந்த ஒன்று அல்ல.
ஆனால் ஹேரத் இருக்கிறார். உலகின் சிறந்த துடுப்பாட்ட வரிசைகளையும் தடுமாற வைத்துக்கொண்டிருக்கிறார்.

தென் ஆபிரிக்காவிலே இப்படி ஒரு பந்துவீச்சு வரிசையை வைத்துக்கொண்டு தான் இலங்கை ஒரு சரித்திரபூர்வ டெஸ்ட் வெற்றியைப் பெற்றது.
இலங்கையின் அதிகம் அறிமுகமில்லாத வேகப்பந்துவீச்சாளர்கள் திடீரென ஆஸ்திரேலியர்களையும் தடுமாற வைக்கக்கூடும்.

இப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தாலும், தென் ஆபிரிக்காவிடம் கண்ட  டெஸ்ட் தொடர் தோல்வியானது ஆஸ்திரேலிய அணியை விழிப்படையவும், பொன்டிங்கின் ஓய்வின் பின்னதான புதிய சகாப்தத்தின் முதல் டெஸ்ட்  போட்டி என்பதால் உத்வேகமாக விளையாடவும் வைத்திருந்தது.

முதலாம் இனிங்க்ஸ் இலங்கையின் பந்துவீச்சு 'வழமையான வெளிநாட்டு மண்ணில் இலங்கையின் பந்துவீச்சு'.

500 ஓட்டங்கள் பெற வாய்ப்பு இருந்தும் அதற்கு முன்னதாகவே கிளார்க் ஆஸ்திரேலிய அணியின் இனிங்க்சை நிறுத்தியது, தகுந்த தீர்க்கதரிசனம் என்று இலங்கையின் நான்காவது இனிங்க்சின் பொறுமையும், இடை நடுவே அச்சுறுத்திய மழையும் மட்டுமல்லாமல் முதலாம் இனிங்க்சிலேயே காயமடைந்து வீழ்ந்த வேகப் பந்துவீச்சாளர் பென் ஹில்பென்ஹோசின் உடல் தகுதியும் காட்டியிருந்தன.

இலங்கை அணியின் முதலாம் இனிங்க்ஸ் துடுப்பாட்டத்தில் டில்ஷான் - மத்தியூசின் இணைப்பாட்டம் தான் மிகத் தீர்மானம் மிக்கதொன்று.
இதுவரை எந்தவொரு வீரரும் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டைச் சதம் பெற்றதில்லை. சங்கக்கார கடந்த தொடரில் ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் போராடிப் பெற்ற 192 ஓட்டங்கள் தான் அதிகபட்சம்.

டில்ஷானின் 147 ம் அதற்கு இணையான ஒன்று தான்.

ஆடுகளத் தன்மையை புரிந்து அவர் ஆடிய விதமும், மத்தியூசுடன் சேர்ந்து அமைத்த இணைப்பாட்டமும் இலங்கையின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கும் அடுத்த போட்டிகளுக்கு உற்சாகம் கொடுக்கக் கூடியவை.

முதலாம் இனிங்க்சில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய 109 ஓவர்களும் இரண்டாம் இன்னிங்சின்  119 ஓவர்களும் உண்மையில் ஆரோக்கியமானவை.

காரணம் சிடிளின் இரண்டு இன்னிங்க்ஸ் பந்துவீச்சும் (பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சர்ச்சையைத் தவிர்த்து) எந்த ஒரு தரமான அணியையும் சிதைத்துவிடக் கூடியது.

அதேபோல முக்கியமான மஹேல, சங்கா (இரண்டாவது இனிங்க்ஸ் அரைச்சதம் தவிர) இருவரின் பெரியளவு பங்களிப்பில்லாமலேயே இத்தனை ஓவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் தாக்குப்பிடித்தது பெரிய விஷயமே.
ஆனால் மஹேல கொஞ்சம் நின்று ஆடி இருந்தால் வெற்றி தோல்வியற்ற முடிவைப் பெற்றிருக்கலாம்.

இந்தியாவின் சச்சினின் துடுப்பாட்டம் சரிந்துகொண்டே போவது போல, மஹேலவின் துடுப்பாட்டமும் தளர்ந்து கொண்டு வருகின்றது.
குறிப்பாக வெளிநாட்டு மண்ணில்...
தம்பி கண்கோன் கோபிகிருஷ்ணா இதுபற்றி விரிவாக ஆராய்ந்து அலசி இட்டுள்ள ஆங்கிலப்பதிவு இது பற்றி விரிவாகச் சொல்கிறது.


Do we really need Mahela Jayawardene?இலங்கை அணிக்கு தொடர்ந்து வரும் இரு போட்டிகளில் நம்பிக்கை தரக்கூடிய சில விஷயங்கள்...

புதிய வீரர் திமுது கருணாரத்னவின் நம்பிக்கையளிக்கும் துடுப்பாட்டம்
வேகப்பந்துவீச்சாளர்கள் காட்டிய கடும் உழைப்பு
எதிர்பார்த்தபடி ஹேரத் சிறப்பாக செய்கிறார்.

இவற்றோடு சங்கா, மஹேல ஆகியோரும் தங்களைத் தாங்களாக வெளிப்படுத்தினாலும், மத்தியூஸ் ரண்டு இன்னின்க்சிலும் பொறுமையாக ஆடி அடித்தளம் இட்ட பின் அவசரப்பட்டு ஆட்டமிழப்பதைத் தவிர்த்தாலும் இலங்கை முதன் முதலாக ஒரு டெஸ்ட் வெற்றியை ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்யலாம்.


ஆஸ்திரேலியாவுக்கு கிளார்க், ஹசி ஆகியோரின் தொடர்ச்சியான ஓட்டக் குவிப்பும், சிடில் தொடர்ந்தும் ஆக்ரோஷமாகப் பந்துவீசி வருவதும் , ஹியூஸ், கொவான், வோர்னர் ஆகிய மூவரும் இலங்கையுடனான முதலாவது போட்டியில் ஓட்டங்களைப் பெற்றதும் நம்பிக்கை அளித்துள்ளது.

ஆனால் அவர்களது உபதலைவர் ஷேன் வோட்சனின் தடுமாற்றம்  தரும் சிக்கலைப் போலவே, வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்படும் காயங்கள் + உபாதைகளும் தலைவளையையே கொடுக்கின்றன.

எல்லாவற்றிலும் பெரிய தலைவலியாக அணித்தலைவர் கிளார்க் 26 ஆம் திகதி ஆரம்பிக்கும் Boxing Day Test போட்டியில் விளையாடும் உடற்தகுதி பெறுவாரா என்ற கேள்வி.

அவர் விளையாடாதவிடத்து இலங்கைக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்..  காரணம் கிளார்க் இந்த வருடம் முழுவதும் குவித்துவரும் ஓட்டங்கள்.

கிளார்க் இல்லாவிட்டால் அணியில் தன் இடத்தையே நிலை நிறுத்தத் தடுமாறும் வொட்சன் அவ்வளவு திறம்பட அணியை வழிநடத்துவாரா என்பது இயல்பான சந்தேகமே...

இதற்கு முதல் இலங்கை ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய Boxing Day Test போட்டியானது (1995-96) வரலாற்றில் சர்சைக்காகப் பெயர்பெற்றது.
முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றது என்று நடுவர் டரல் ஹெயார் வழங்கிய தீர்ப்பு.
இந்தமுறை சர்ச்சைகளோ? சாதனைகளோ?

முதலாவது டெஸ்ட் போட்டிகளிலும் சிறு சர்ச்சைகள் இல்லாமல் இல்லை..

1.பீட்டர் சிடில் பந்தை சேதப்படுத்தியது - வீடியோ காட்சிகளில் பதிவானாலும் இலங்கை அணி உத்தியோகபூர்வமாக இது பற்றிப் போட்டித் தீர்ப்பாளரிடம் முறையிடவில்லை.
ஆதாரம் இருப்பதால் முறைப்படி நடுவர்கள் + போட்டி மத்தியஸ்தரே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இலங்கை நிர்வாகத்தின் முறையான கருத்து.
ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என போட்டித் தீர்ப்பாளரான க்றிஸ் ப்ரோட் அறிவித்திருந்தார்.

2. நடுவர் டோனி ஹில்லின் சில தீர்ப்புக்கள். இலங்கை அணிக்கு எதிராகவே எல்லாமமைந்தன.
DRS மூலமாக இலங்கை வீரர்கள் சிலவற்றிலிருந்து தப்பினாலும், இலங்கை அணியின் தலைவர் மஹேல இன்னும் சரியாக இதைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

நல்லகாலம் இந்திய - இங்கிலாந்து டெஸ்ட் தொடரைப் போல DRS இல்லாமும், நாக்பூர் போட்டியில் குக்குக்கு நடந்தது போலும் நடக்காது என்று நம்பியிருக்கலாம்.

இலங்கை ஆஸ்திரேலிய அணியிடம் 3-0 என்று தோற்றுத் தான் நாடு திரும்பும் என்று நினைப்போர் மத்தியில் முதலாவது போட்டியில் கடைசி வரை காட்டிய போராட்டம் தந்த தெம்பு காரணமாக (அதற்கு முதலேயே நண்பர்களிடம் இலங்கை அவ்வளவு மோசமாகத் தோற்காது என்று சொல்லி இருந்தேன்) இலங்கை அணியில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது என்கிறேன்.

தலைவர் மஹேலவுக்கு தலைமைப் பதவியிலிருந்து கௌரவ வழியனுப்பல் கொடுக்கவாவது...


December 17, 2012

நானும் குக்கும் தோனியும் சச்சினும் கூடவே Unofficial மாலிங்கவும்

இப்போதெல்லாம் கிரிக்கெட் மற்றும் ஏனைய விளையாட்டு இடுகைகள் குறைந்துவிட்டன என்று சில நண்பர்கள் குறைப்பட்டிருந்தார்கள்...

அதற்கான முக்கிய காரணங்கள்...
தமிழ் மிரர் இணையத்துக்காக அடிக்கடி விளையாட்டுக் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
எனவே எனது வலைப்பதிவிலும் எழுதினால் அதே விடயங்கள் வந்துவிடும் என்ற ஒரு எச்சரிக்கை உணர்வு.
இன்னொன்று ஒரே நேரத்தில் விளையாடப்படும் பல போட்டிகள்...

சில நேரங்களில் எந்த ஒன்றையுமே ஒழுங்காகப் பார்க்கக் கிடைப்பதும் இல்லை.
பார்க்கும் நேரங்களில் நண்பர்களுடன் Twitter, Facebook இல் பகிர்வதோடு சரி...

ஆனாலும் இப்போது நடைபெறும் சில சுவாரஸ்ய போட்டிகளைப் பற்றியும், முக்கிய விடயங்கள் பற்றியும் பதிவிடலாம் என எண்ணுகிறேன்.

அதற்கு முதல், இதுவரை தமிழ் மிரருக்காக எழுதிய எனது விளையாட்டுக் கட்டுரைகளின் சுட்டிகளை இங்கே தந்துவிடுகிறேன்.
உங்களில் பலர் ஏலவே வாசித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வாசிக்காத சிலருக்காக...


ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்துத் தொடர்பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டி: ஒரு முழுமையான பார்வைஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து; கால் இறுதிகளுக்கான அணிகள் எட்டும் தெரிவாகின


28 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் வைத்து அலிஸ்டேயார் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் வைத்து டெஸ்ட் தொடர் ஒன்றை வென்ற முதலாவது இங்கிலாந்து அணி  என்ற பெருமையை அடைந்துள்ளது.

தலைவராகத் தானே முன்னின்று முதல் மூன்று போட்டிகளிலும் ஒவ்வொரு சதங்கள் பெற்று தனது அணிக்கு வெற்றிக்கனி பறித்துக் கொடுத்த குக் தொடரின் நாயகனாகவும் தெரிவாகியுள்ளார்.

இங்கிலாந்தில் கண்ட டெஸ்ட் தொடர் தோல்விக்கு இந்தியா 4-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் பழி தீர்த்துக்கொள்ளும் என்று எண்ணியிருந்த அனிவருக்கும் முகத்தில் இந்தியக் கரியை அள்ளிப்பூசிவிட்டுப் போகிறது சமையல்காரரின் அணி...

இனி இந்திய அணியின் தோல்வியின் பிரேத பரிசோதனையும்,
 சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு எப்போது?
தோனி  எப்போது டெஸ்ட் தலைமையை விட்டு விலகுவார் ?
சேவாக்கை இனியாவது டெஸ்ட் அணியிலிருந்து துரத்துவார்களா?

இப்படியான வழமையான கேள்விகளும், இன்னும் பல இந்திய அணி மீதான நக்கல்கள் நையாண்டிகள் + தோனி மீதான விமர்சனங்கள் வரப் போகின்றன

இதில் பல தோனியாகத்  தேடிக்கொண்டவை என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே..

இந்தத் தொடர் பற்றிய சில முக்கிய விஷயங்களை  தமிழ் மிரருக்கு எழுதவுள்ளேன்.
இன்னும் சில விஷயங்களை இங்கும் பதியலாம் என நினைக்கிறேன்.

நாளை முடியும் ஹோபார்ட் டெஸ்ட் போட்டி பற்றி இப்போ ஏதும் சொல்வதற்கில்லை... ;)
(விக்கிரமாதித்தன் விளையாடிவிடுவார் என்று பயம் தான்)

லசித் மாலிங்க, அதாங்க அந்த மும்பாய் இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் இலங்கையின் Twenty 20 Freelancer ஐ இலங்கை டெஸ்ட் அணிக்கு அழைத்திருக்கிறார்கள். தெரியுமா சேதி?
(உத்தியோகபூர்வமாக இல்லை என்பது நிச்சயம்)

நடைபெற்றுவரும் Big Bash League இல் கலக்கும் மாலிங்க இலங்கை டெஸ்ட் அணிக்கு விளையாடினால் நல்லாத்  தான் இருக்கும்.
ஆனால் பேச்சுவார்த்தைகள், இத்யாதிகள் எப்படியோ?December 15, 2012

நீதானே என் பொன்வசந்தம்
இளையராஜாவின் பாடல்கள் வர முதலே என் நண்பர்கள், நான் பழகும் வட்டத்தில் ஒரு விஷயம் சொல்லி இருந்தேன்.. "கௌதம் வாசுதேவ மேனன், விண்ணைத்தாண்டி வருவாயா இளைஞர் வட்டாரத்தில் எடுத்துத் தந்த நல்ல பெயரையும் அந்த காதல் hype ஐயும் வைத்தே நீ தானே என் பொன்வசந்தத்தை ஓட்டிவிடப் பார்க்கிறார்; இதில் வேறு இளையராஜாவின் மீள்வருகை என்று விளம்பரம் வேறு பண்ணி பரபரப்பாக்கப் பார்ப்பார்"

பாடல்கள் வந்தபோது குழாயடிச் சண்டை போல Twitter, Facebook, Forum ஆகியவற்றில் பாடல்கள் பற்றி ராசா ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் (ரஹ்மான் ரசிகர்கள் உட்பட) நடந்த வாதபிரதிவாதங்கள் வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடியவை. ;)

நீ தானே என் பொன்வசந்தம் பார்த்தபோதும் இயக்குனர் GVM இன்னமும் விண்ணைத் தாண்டி வருவாயாவின் Hangover இலேயே இருக்கிறார் என்பதைத் தெளிவாக உணரமுடிந்தது.

"உங்கள் காதல் கதை" என்று சொல்லி ஆர்வத்தைத் தூண்டிவிட்டவர், சமந்தா - ஜீவாவை (நித்யா - வருண்) எப்படியாவது ஜெசி - கார்த்திக்  அளவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதற்காகக் காதலை அள்ளி ஊற்றப் பார்த்திருக்கிறார். ஆனால் அது அலப்பறை ஆகியிருக்கிறது.

இசைஞானி இளையராஜா இசையமைத்துத் தந்த எட்டுப் பாடல்களையும் வீணாக்காமல் பயன்படுத்தவேண்டும் என்று முனைந்தும் இருக்கிறார். சும்மாவே அந்த எட்டுப் பாடல்களும் மொத்தமாக 42 நிமிடங்கள்.. இதற்குள் சில இரண்டு மூன்று தடவையும் விட்டு விட்டு வருகின்றன. GVM சில பேட்டிகளில் சொல்லி இருந்ததைப் போல "Musical romantic Hit" ஆக்குவதற்கு முயன்றிருக்கிறார்.

ஆனால் காதல் என்றால் இவை தான், அதுவும் பள்ளிப்பருவ, கல்லூரிக்காலக் காலக் காதல்களில் இவை இவை இருக்கும் என்று நினைக்கின்ற அதே விஷயங்களையே காட்டி இருக்கிறார் படம் நெடுகிலும்...

அதை சுவாரஸ்யமாகக் காட்டி இருந்தால் பரவாயில்லை; கொட்டாவி வருகிற மாதிரி (குறிப்பாக இரண்டாம் பாதியில்) எடுத்தால் யாருக்குத் தான் இது எங்கள் காதல் என்ற எண்ணம் வரும்?

கௌதம் வாசுதேவ மேனன் படங்களில் காட்டிய திரைக்காதல் எங்களையும் காதலிக்க வைத்தவை ... மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா இவற்றின் கதாநாயகர்களாக, நாயகிகளாக எம்மை உருமாற்றிக் கனவிலே காதல் செய்திருப்போம் நாங்கள்..

நீதானே என் பொன்வசந்தத்திலும் அந்த மந்திரசக்தி முற்றாக இல்லாது விடவில்லை. ஆனால் போதாது...
சில காட்சிகளில் சும்மா ஜிவ்வென்று அந்தரத்திலே எங்களைத் தூக்கி சிலிர்க்க வைக்கிறார்...
சில காட்சிகளில் அட, அவளோடு போடா... ஏய் நித்யா அவனைப் புரிஞ்சுக்கடி என்று எங்கள் மனசுக்குள்ளேயே எங்களைக் கத்த வைக்கிறார்.
அவர்கள் சிரிக்கையில், சிலிர்க்கையில் எங்களையும் திரைக்குள் இழுத்துச் செல்கிறார்.

சிறுவயதுக் காதல், பள்ளிக்காதல், கல்லூரிக் காதல், பின் திருமணத்துக்கு முன்னதான என்று நான்கு பருவங்களிலும் சேர்ந்து, பிரிந்து, கூடி, மோதி காதலித்து செல்பவர்கள் இறுதியாக சேர்ந்தார்களா இல்லையா, ஏன் என்று சொல்வது தான் 'நீதானே என் பொன் வசந்தம்'

ஆனால் முதல் இரு பருவக் காதல்கள் பெரிதாக பிரிதல் ஒட்டவில்லை. இதனால் ஏதோ ஒரு சம்பவமாகக் கடந்து சென்று விடுகிறது.
ஆனால் அந்த டியூஷன் கிளாஸ் சம்பவங்களும், பேட்ச, பழக முயலும் காட்சிகளும் எங்களையும் பின்னோக்கி அழைத்துச் செல்பவை.

கல்லூரிக் காதல் கொஞ்சம் ரசனை.. ஆனாலும் பிரிவுக்கான காரணத்தில் அழுத்தம் போதாது.

தன குடும்ப சூழலை சொல்ல முடியாத காதலனோ, அவனை அவ்வளவு உயிருக்கு உயிராக நேசிக்கிற காதலிக்கு அவனது குடும்ப சூழலோ புரியாமல் இருக்குமா?
காதலுக்காக தனது காதலனுக்காக எதை வேண்டுமானாலும் அப்பாவுக்குத் தெரியாமல் தரக்கூடிய ஒரு காதலி இருந்தால் வேறென்ன வேண்டும்? அவள் மீது அப்படியே பைத்தியமாக வேண்டாமா?

சில நெருக்கமான, ரசனையான காதல் காட்சிகள் கௌதம் ஸ்பெஷல்.
அதன் பின்னதான ஏக்கமும், பிரிவும், திருமண ஏற்பாடும் டச்சிங் தான்..
ஆனால் மணப்பாறை பயணமும் காட்சிகளும், வி.தா.வ வை ஞாபகப்படுத்தாமல் இல்லை.

ஜீவாவின் திருமணத்துக்கு முன்னதான அந்த இரவு சந்திப்பும், பழைய நினைவுகள் மீட்டல்களும் மனதை நெகிழச் செய்வது உண்மை.
ஜீவாவின் இடத்தில் எங்களை வைத்துப் பார்த்து ஒவ்வொருவரும் கொஞ்சம் உருகியிருப்போம்.

சமந்தாவை முதல் தடவையாகக் கல்லூரியில் காணும் நேரம் அவரைக் கவர்வதற்காக ஜீவா "நினைவெல்லாம் நித்யா"வில் இளையராஜா தந்த என்றும் இனிக்கின்ற 'நீதானே என் பொன் வசந்தம்' பாடலைப் பாடுகின்ற நேரம் சமந்தாவின் கண்களும், உதடுகளும் காட்டும் அந்த வெட்கம், காதல், துடிப்பு இவை எல்லாமே ஒரு முழு நீளப்படம் பார்த்த பூரண திருப்தி.
அந்தப் பாடலையும் அவ்வளவு மோசமாகப் பாடாமல் நன்றாகவே (ஒரு கல்லூரி மேடைப் பாடகர் என்ற அளவில்) பாடி  காதுகளைக் காப்பாற்றித் தந்த இயக்குனருக்கு நன்றி.
ஆனால் அதே படத்தில் வந்த சிறிய ஹம்மிங் பாடலான "நினைவெல்லாம் நித்யா"வையும் எங்கேயாவது சொருகி இருக்கலாம்.

படத்தின் கதைப் பயணத்தோடு "முதல் முறை", "என்னோடு வா வா" ஆகியன (மட்டுமே) மனதில் ஒட்டுகின்றன.
என்னோடு வா வா பாடல் மட்டுமே பாடல்கள் வெளியான நாளில் இருந்து எனக்குப் பிடித்திருந்தது என்று அடிக்கடி சொல்லிவந்தேன். படத்திலும் ஏமாற்றவில்லை.மனதை அள்ளுகிறது.

பல பாடல்களைக் கதை சொல்லிகளாகவே கௌதம் பயன்படுத்தியிருக்கிறார். இளையராஜா பாடிய 'வானம் மெல்ல' உட்பட..
இசைஞானி மற்றும் அவரது ரசிகர்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவல்.

இந்த இடத்தில் தான் நான் கௌதம் வாசுதேவ மேனனுக்கு முன்பு இசையமைத்த ஹரிஸ் ஜெயராஜும், A.R.ரஹ்மானும் நினைவு வருகிறார்கள். அவர்களை இங்கே ஒப்பிட்டே ஆகவேண்டி இருக்கும்..
இளையராஜா கொடுத்த காதலை விட இவர்கள் இருவரும் இன்னும் பின்னணியிலும் கதையோட்டத்துக்குப் பொருத்தமான பாடல்களிலும் கலக்கி இருப்பார்கள். - இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

பீரியட் படம் என்பதால் தான் ராசாவின் தெரிவு என்று கௌதம் சொல்வாரேயானால், அப்படி ஒன்றும் ராஜா பிரமாதப்படுத்தவில்லையே?
ஹரிஸ் வாரணம் ஆயிரத்தில் இதைவிட ரசிக்கச் செய்திருந்தாரே?

படத்திலும் படம் முடிந்த பிறகும் முழுமையாக மனதில் நிறைந்திருக்கும் ஒரே விடயம் சமந்தா(நித்யா)வின் பாத்திரம்.

இப்படியொரு காதலும் காதலியும் கிடைத்தால் வேறென்ன வேண்டும்? வெறித்தனமாகக் காதலித்துக்கொண்டே இருக்கலாம். (அப்படியான காதலால் தான் எனது வாழ்க்கை எந்த சந்தர்ப்பத்திலும் இனிக்கிறது)
இளைஞர்கள் பைத்தியம் பிடித்து அலையப் போகிறார்கள்.

அழகுக்கு அழகு, பார்வை, முகபாவங்கள், வசீகரிக்கும் புன்னகை, ஏன்டா என்னைப் புரிந்துகொள்கிறாய் இல்லை எனும் ஒரு பரிதாப ஏக்கம், காதலா இதோ என் உயிரையே தருகிறேன் என்று உணர்த்தும் கண்களும் உதடுகளும்..... அற்புதமான தெரிவு.

உணர்ச்சிமிக்க காட்சிகள் இயல்பாகத் தெரிய இவர் மட்டுமே ஒரே காரணம் என்று சொன்னாலும் தப்பில்லை. இவரை அழ வைத்ததில் ஜீவா மீதும், கௌதம் மீதும் கூடக் கோபம் தான் வருகிறது.
கௌதமின் படங்களில் மட்டுமே இப்படி நாயகியர் இவ்வளவு அழகாகத் தெரிகிறார்கள்.

ஜீவாவும் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். ஸ்மார்ட் ஆக இருக்கிறார். காதல், ஏக்கம், காதலைத் தவிர்க்கவும் பின்னர் சேரவும் தடுமாறுவது என்று நன்றாகவே செய்திருக்கிறார். கடைசிக் காட்சிகளில் கலக்கி இருக்கிறார்.
அந்த இயல்பான சிரிப்பும், நகைச்சுவைக் காட்சிகளும் இவரது பிளஸ்.

சந்தானம் படத்தின் மிக முக்கிய ஒரு உயிர் நாடி. படத்தை ஓரளவாவது தொய்வில்லாமல் கொண்டு செல்ல இவர் தான் தேவைப்பட்டிருக்கிறார்.
அந்த இயல்பான படு கஷுவலான நக்கல் தொனி ரசனைக்குரியது.
"லாரிக்கு கீழ விழுந்தவனைக் கூட காப்பாத்தலாம்.. ஆனா லவ்வுல விழுந்தவனைக் காப்பாத்தவே முடியாதுடா"
'ஏன்டா சல்வார் சாயம் போன பிறகு தான் pant பக்கம் வருவீங்களா?"
இப்படிப் போகிற போக்கில் செமையாக வாருகிறார். திரையரங்கம் அதிர்கிறது.
சமந்தாவுக்கு அடுத்தபடியாக வரவேற்பும் இவருக்குத் தான்.

இந்த மூவருக்குள்ளேயே முக்கியமான கட்டங்கள் நகர்ந்துவிடுவதால் ஏனையோர் பற்றிப் பெரிதாகக் கவனிக்கத் தேவையில்லை.

எடிட்டர் அன்டனி பாவம்.. அவரும் எவ்வளத்தை தான் வெட்டி, குறைத்து, பொருத்தி கோர்த்திருப்பார். ஆனால் நேர்த்தியாக உழைத்திருக்கிறார். கௌதமுக்குப் பிடித்தபடி.

ஒளிப்பதிவு - M.S.பிரபு & ஓம் பிரகாஷ்.. கண்களுக்கு இதமாகவும், தேவையான இடங்களில் பிரமிப்பையும், சில இடங்களில் ரசனையோடு ஈர்க்கவும் வைக்கின்றன.

காதலர்களுக்கு இடையிலான மோதல்கள், ஈகோ'க்கள், எதிர்பார்ப்புக்கள், விட்டுக்கொடுப்பது யார் என்ற விடாப்பிடிகள், possessiveness, பொறாமைகள், சின்னச் சண்டைகள் பெரிய பிளவுகளாக மாறுவது என்று அத்தனையும் எங்கள் வாழ்க்கை, எங்கள் காதல்களுக்கு உரியவை தான்...

காதலி பாவம்... உயிரைக் கொடுத்து காதலித்த அவளை காதலன் தான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்ற ஒரு சமநிலை இல்லாத தோற்றப்பாட்டையும் கொடுத்து நிற்கிறது திரைப்படம். இதனாலும் நித்யா மனதில் நிறைந்துபோகிறாள்.

ஆனால் இழுத்த இழுவையோ, அல்லது ஏற்கெனவே நாம் பார்த்ததோ, அல்லது கௌதம் ஹிந்தி , தெலுங்கிலும் சமாந்தரமாக எடுக்கும் ஆர்வத்தில் திரைக்கதையை ஐதாக்கியதோ சமந்தாவை மட்டும் ரசிக்கச் செய்து 'நீதானே என் பொன்வசந்தத்தை' மனதில் நுழையாமல் செய்து விட்டிருக்கிறது.

நீதானே என் பொன்வசந்தம் - நெருங்கவில்லை நெஞ்சை 


December 12, 2012

பாரதி - 12-12-12 - ரஜினி


பாரதி


கவிதை - தமிழ் - பாடல் இவை மூன்றையும் நேசிக்கச் செய்த என் அன்புக்குரிய பாரதியின் பிறந்தநாள் நேற்று.

வழமையாக வானொலியில் சிறப்பு நிகழ்ச்சி செய்கின்ற வாய்ப்பு இம்முறை இல்லாமல் போனாலும், காலையில் Dialog தலைப்பு செய்திகள் வாசிக்க எழுந்த பொழுதிலிருந்து, மனதுக்குப் பிடித்த பாரதி கவிதைகளை வாசித்து, நயந்து கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பாரதி கவிதைகளை முழுமையாகத் தேடும் நண்பர்களுக்கு நான் வாசித்த வரையில் தவறுகள், எழுத்துப் பிழைகள் இல்லாத ஒரு இணையப் பக்கம் கிடைத்தது.
உங்களோடும் பகிர்ந்துகொள்வதன் மூலம் பாரதியை இன்னும் பலருக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்க....

மகாகவி பாரதியார் கவிதைகள்

(வேறு இணையத் தளங்கள் இருந்தாலும் பின்னூட்டங்கள் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அறியத் தாருங்கள் நண்பர்களே)

பாரதி என்பவனை பாடல்கள், கவிதைகள் மட்டுமே எழுதிய ஒருவனாக எண்ணுகின்ற எம்மிற் பலர் உள்ளார்கள். அவர்களில் தப்பில்லை....
பாரதியின் கட்டுரைகளை பதிப்பித்தவர்களோ, வாசித்துப் பகிர்ந்தவர்களோ ஒப்பீட்டளவில் குறைவு தானே?
இணையத்தில் பாரதி கட்டுரைகளைத் தேடியவேளையில் கிடைத்த அரிய தளம் ஒன்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் திருப்தி.

பாரதியார் கட்டுரைகள்


தமிழை பண்டிதரிடமிருந்து பாமரருக்குக் கொண்டுசென்று சேர்த்த முதலாமவன் என்ற பெருமையுடன், எமது எதிர்காலத் தலைமுறைக்கும் தமிழைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கவும் பாரதி கவிதைகள் & பாடல்கள் ஒரு மிகச் சிறந்த ஊடகம் என்று மனமார நம்புவதால், பெருமையுடனும் பூரிப்புடனும் பாரதியை மீண்டும் நன்றியுடன் வாழ்த்துகிறேன்.

--------

12-12-12


இப்படியான வித்தியாசமான எண் கோலங்கள் திகதிகளாக வரும்போது அதில் கிளர்வும், அதிசயமும் காணும் பலர் எம்மில் இருக்கிறோம்.

1900களில் இருந்து 2000 என்பதற்குள் பயணித்த வாய்ப்புடையவர்கள் என்பதால் எமக்கு இப்படி பல எண் கோலங்களைப் பார்த்து சுவாரஸ்யப்படும் வாய்ப்புக் கிடைத்தது.

இன்றைய திகதி போல இன்னொரு திகதி இன்னும் நூறு வருடத்துக்கு வராது (12-12-2112) என்று சிலரும், ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு தான் வரும் (12-12-3012) என்று சிலரும் வேறு சண்டை.

இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளுமே போனால் வராது.. இதை மட்டும் ஏன்டா கொண்டாடுறீங்க என்று சலித்துக்கொள்ளும் சிலரையும் Facebook மூலைகளில் கண்டேன்...

எவ்வளவோ விஷயங்களை அர்த்தமே இல்லாமல் கொண்டாடும் எமக்கு இது மட்டும் பெரியதொரு விஷயமா? கொண்டாடி குஷிப்படுபவர்கள் கொண்டாடிட்டுப் போகட்டுமே..

ஆனால் பாருங்கள், இந்த முறை மட்டும் இந்த அதிசயமான திகதியில் கொஞ்சம் நடுக்கமும் சிலருக்கு.

மாயன் கலண்டர், உலக அழிவு பற்றிப் பேசி மாய்ந்து கொண்டிருக்கும் உலக மாந்தருக்கு, இந்தத் திகதியும் பயம் தருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லையே...
இன்றைய நாளையே உலகத்தின் இறுதி நாளாகக் கருதும் பலரும் இருக்கிறார்களாம்.


12/12/12 Is it the end?மாயன் கலண்டரில் உலக அழிவு நாளாக சொல்லப்பட்டிருப்பது 2112-2012.
அதாவது அவர்களது 5125 வருடங்கள் நீண்டு செல்லும் நாட்காட்டி அந்தத் திகதியுடன் முடிகிறது.

(புது வருஷத்துக்கு வாழ்த்து சொல்றதுக்கு தயாராகும் என்னைப் போன்றவர் எல்லாம் என்ன செய்வது? )

இது பற்றி சில வருடங்களாகவே....
உலகம் அழியப் போகிறது.... இதோ வருகிறது உலகத்தின் இறுதிநாள்.
இப்படியான பரப்புரைகள், பதற்றங்கள் ஒரு பக்கம்...
இதன் மூலமான மதம் சார்ந்த பிரசாரங்கள் ஒரு பக்கம்..
உலகம் அழியுமா அழியாதா என்ற வீண் வாதங்கள், விவாதங்கள் இன்னொரு பக்கம்...

என்று ஒரே அலம்பல்களும், அழிச்சாட்டியங்களும்..
அதை விட இப்போது சில நாட்களாக, Twitter, Facebook, பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகள், ஏன் தனிப்பட்ட மின்னஞ்சல்கள், sms வழியாகவும் பயமுறுத்தல்களும், கேள்விகளும்...
முடியலடா..

கலண்டர், டைரி விற்பனை கூட இம்முறை மந்தமாம்..
இவங்கல்லாம் 21ம் திகதிக்குப் பிறகும் உலகம் இருந்தால் என்ன செய்யப் போறாங்க?

அண்மையில் இது பற்றித் தேடி வாசித்த சில ஆராய்ச்சி விஷயங்களை - இவை பயமுறுத்தல்கள்- பினாத்தல்களாக இல்லாமல் - பல்வேறு கோணங்களில் தேடி எழுதப்பட்ட விடயங்களாக இருப்பதனால் - உங்களோடும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.அடுத்து தமிழில் இது பற்றிய முழுமையான ஒரு ஆராய்ச்சியாக ஒரே கட்டுரையை/ தொடர் கட்டுரையை அவதானித்தேன்.
 ராஜ் சிவா உயிர்மையில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரையின் தொகுப்பு இது.


2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் என்ன ஆச்சரியம் என்றால், முன்பு வானொலியில் வியாழக்கிழமைகளில் நேயர்கள் கேள்விகளைக் கேட்டு என்னிடம் பதிலைத் தேடித் பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில் வாராந்தம் ஒரு மூன்று பேராவது கேட்கும் ஒரு கேள்வி தான்
"உலகம் இந்த வருடத்துடன் அழியுமா?"

அதற்கு நான் சிரித்துக்கொண்டே சொல்லும் பதிலைப் போன்ற ஒரு பதிலைத் தான் ராஜ் சிவா அவர்களும் கொடுத்துள்ளார்கள்..

"22ம் திகதி ஒரு தேநீர் விருந்தில் சந்திக்கலாமே"

அழிந்தாலும் தனியே நீங்களோ நானோ மட்டுமே போகப் போறதில்லையே? எல்லாரும் எல்லாமும் சேர்ந்து தானே? அதுக்கெல்லாம்  போய் அலட்டிக் கொள்ளலாமா?
வாழும் வரை நல்லபடியா வாழ்ந்திட்டுப் போகலாம்...

நாசாவே சொன்ன பிறகு நான் வேறயா?
அதெல்லாம் ஒன்னும் அழியாது.. போய்ப் பிழைப்புக்களைப் பாருங்கய்யா...ரஜினி63 வயது - நடிக்க வந்து 36 வருடங்கள்...
பேரனும் பாடசாலை செல்ல ஆரம்பித்துவிட்டான்.
தலையில் நரையுடன், வழுக்கை..
சுருங்கிப்போன தேகத் தசைகள்.
பெரிதாக அழகென்றும் சொல்ல முடியாது.

ஆனால் இன்றும் பாடசாலை மாணவரும் கூட இவரை ரசிக்கிறார்கள்...
என் வீட்டில் எனது ஐந்து வயது மகனுக்கும் இவரது படங்கள் பிடிக்கிறது.

இவரது அடுத்த படத்தை எதிர்பார்க்கும் கூட்டமும், இந்தக் கால இளைய நடிகர்களுக்கே இல்லாத வசூல் நம்பிக்கையும் இவர் மேலே...
காரணம் - ஏதோ ஒரு ஈர்ப்பு.... அந்த ஸ்டைல் , screen presence அதையெல்லாம் தாண்டிய எளிமை.

நான் ரஜினி ரசிகன் இல்லை.. ஆனாலும் ரஜினியை அவருக்கென்று பொருந்தும் பல ரசனையான இடங்களில் ரசித்திருக்கிறேன். (சில இடங்களில் விமர்சித்திருந்தாலும்)

இன்னொரு பக்கம் ஒரு தனிமனிதனாக  தன்னம்பிக்கையோடு முன்னேறி, ஏறிய  ஒரு வெற்றிகர உழைப்பாளியாகவும் ரஜினியை மிக மதிக்கிறேன்.
சினிமா ஹீரோக்களுக்கான இலக்கணம் என்று சொல்லப்படும் (சொல்லப்பட்ட என்பதே பொருத்தம்) எதுவும் அற்ற சிவாஜிராவ் தன்னை வளர்த்து வளப்படுத்தி இன்று தன்னை ஒரு மைல் கல்லாக இப்போதைய ஹீரோக்களுக்கு உருவாக்கிவைத்திருப்பது வாழ்க்கைக்கான நம்பிக்கை தானே?

ரஜினியின் சில அரிதான படங்களைத் தொகுத்து அவரது பிறந்தநாள் ஸ்பெஷல் இடுகைகளாக எனது படங்கள், காணொளிகளை பதிவேற்றும் வலைப்பதிவில் தந்துள்ளேன்.


ரகம் ரகமாக ரஜினி - ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் 1
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார்.


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner