February 25, 2012

ஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இருப்பது என்ன? முடிவு + முக்கிய பகுதி


இதற்கு முந்தைய இடுகையின் தொடர்ச்சி....



இலங்கையில் இடம்பெற்று வந்த முப்பதாண்டு கால யுத்தம் 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நிறைவுக்கு வந்தது.
இந்த முப்பது ஆண்டுகளும் தலையிடாத ஐக்கிய நாடுகள் அமைப்பு, யுத்தத்தின் அகோர கட்டங்களில் நேரடித் தலையீடுகளை மேற்கொள்ளாத ஐ.நா அமைப்பு இப்போது எல்லாம் நடந்து முடிந்து மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் postmortem  நடத்தி விசாரணைகளைக் கொண்டு வந்து இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டுவருவது என் என்ற கேள்விகளுக்கு அரசியலில் கரைகண்ட ஞானிகளும், சாணக்கியர்களும் தான் தெளிவான விடை பகிரவேண்டும்.

ஆனால் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மேலே ஐ.நா அமையத்தின் சாசனங்களில், மனித உரிமைகள் ஆணையகத்தின் பரிந்துரைகளில் சொல்லப்பட்ட அத்தனை விடயங்களையும் அரசாங்கம் மீறியுள்ளது என்பதை இதற்கு முந்தைய இடுகையில் குறிப்பிட்ட விடயங்களில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

ஒரு போராளிக்குழு - அது விடுதலை இயக்கமாக இருக்கலாம்.. அல்லது தீவிரவாத/ பயங்கரவாத இயக்கமாக இருக்கலாம் - இப்படியான விதிகளை, ஒப்பந்தங்களை மீறினால் அது ஒரு பெரிய விடயமாக சர்வதேச ரீதியில் கருத்தில் கொள்ளப்படாது. ஆனால் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபடும்/ஈடுபட்ட ஒரு அரசாங்கம் எனும்போது தங்கள் குடிமக்களுக்கு எதிராக இந்த விதிகளை மீறும்போது அது நிச்சயம் இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச நாடுகளின் விமர்சனங்களையும் கண்டனங்களையும் உருவாக்கக் கூடியது.

மூன்று தசாப்த கால யுத்தத்தின்போது இலங்கை சர்வதேச நாடுகளுக்கும், ஐ.நா சபைக்கும் தொடர்ந்து அறிவித்து வந்தது - பிரிவினைவாத பயங்கரவாத கிளர்ச்சி அமைப்புக்கெதிராக இடம்பெறும் போராட்டம் இது என்று.
எனினும் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் சாசனத்தை ஏற்றுக் கையொப்பம் இட்ட நாடுகளில் ஒன்று.

இலங்கையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் சுமார் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து,
இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கைகளின் மூலமே அரசாங்கம் தீவிரவாதத்தை இல்லாதொழித்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.



இதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் மக்கள் வசிக்கும் பிரதேசங்களின் மீது விமான குண்டு வீச்சு நடத்தியதாகவும் ஷெல் தாக்குதல் மேற்கொண்டதாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களாலும் புலம் பெயர் தமிழர்கள் அமைப்பினாலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையினாலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் புரியவில்லை என்பதோடு யுத்தகுற்றங்களும் இடம்பெறவில்லை எனவும் அறிவித்தது.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட பாரிய மனித அவலங்களின் மீதான கண்டனங்களை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் சாசனத்திற்கு ஏற்றவாறு இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகள் நடைபெறும் என இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டது.


இதன்பிரகாரமே இலங்கை விவகாரங்களில் ஜெனீவாவில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் சபை தலையீடு செய்கின்றது.


இந்நிலையில இலங்கை அரசாங்கம் தெரிவிப்பது போன்று இலங்கையில் யுத்த குற்றச்சாட்டுக்கள் இடம்பெறவில்லை என்றால் இலங்கையில் சுயாதீன விசாரணை ஒன்றை நடத்த அனுமதியளிக்குமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் சர்வதேச நாடுகளின் தலையீடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

இலங்கையில் வெளிநாட்டு குழுக்களுக்கு யுத்த குற்றச்ச்hட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இடமளிக்காத அரசாங்கம் சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கி தருமாறு பல நாடுகள் வலியுறுத்தின.
பல நாடுகள் வலியுறுத்தியும் இணக்கம் தெரிவிக்காத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் போக்கு அமைந்திருந்தது.

இதன்போதே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிக்கையே தருஸ்மன் அறிக்கை எனவும் நிபுணர் குழு அறிக்கை எனவும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கைக்கு பதிலளிக்காத இலங்கை அரசாங்கம் குறித்த அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு இல்லை எனவும் அறிக்கையை நிராகரிப்பதாகவும் அறிவித்தது.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கும் நிபுணர் குழு அறிக்கையை சமர்ப்பித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுனர் குழு.
அரசாங்கத்திற்கு அடுத்த நெருக்கடியை தந்தது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 18 ஆவது கூட்டத்தொடர் கடந்த வருடத்தில் ஓகஸ்ட் காலப்பகுதியில் இடம்பெற்றது.

இதில் பங்கேற்கும் கடப்பாடும் இலங்கை மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் கட்டாய நிலையில் இலங்கை அரச பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவாவிற்கு விஜயம் செய்தது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 18 ஆவது கூட்டத்தொடரில் விளக்கமளித்து உறுதியான தீர்வின்றி சமாளித்து தாயகம் திரும்பியது ஜெனீவாவிற்கு விஜயம் செய்த இலங்கை பிரதிநிதிகள்.

சர்வதேச மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விஷேட தூதுவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்கவின் குழுவினர் ஜெனீவா தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளளோம் என அறிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் சூடு பிடிக்காமைக்கு காரணம் இரண்டாவது முறையாகவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவி வகிக்க பான் கீ மூன் போட்டியிட்டமை.
இலங்கை மீதான குறித்த குற்றச்சாட்டை சாதகமாக பயன்படுத்தி பான் கீ மூனுக்கே வாக்களிக்க செய்தமை அவரின் இராஜ தந்திரம் என்றும் சொல்லலாம்.
ஆனால், இலங்கை மீது பொருளாதார தடையை ஏற்படுத்தவும் பல நாடுகளிடம் இதற்கு ஆதரவு திரட்டவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் உள்ளிட்ட ஐரோப்பிய தரப்பினர் மறைமுகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அத்தோடு இந்தியாவின் மறைமுக ஆதரவும், இலங்கை தனக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் வியூகம் வகுத்து தடைகளைக் கொண்டுவருவதாக இருந்தால் அவற்றுக்கு எதிரான வியூகங்களை வகுக்க ரஷ்யா, சீனா ஆகியவற்றின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் உத்தியும் இலங்கையைத் தற்காலிகமாகக் காப்பாற்றித் தக்க வைத்தது என்று சொல்லலாம்.


19 ஆவது கூட்டத்தொடரை சமாளிக்குமா 57 பேர் கொண்ட இலங்கை அரச பிரதிநிதிகள் குழு??


முன் அனுபவமற்ற இலங்கை அரசாங்கம் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) என ஒரு குழுவை நியமித்து 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சிகளை பதிவு செய்தது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்களை கொண்டு அறிக்கை ஒன்றை தயாரித்து பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
இது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை என அனைவராலும் அழைக்கப்படுகிறது.

அரசாங்கத்தினால் தயாரித்து வழங்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் யுத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க போதுமானதாக அமையவில்லை என சர்வதேச நாடுகள் விமர்சித்தன.
எனினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளையாயினும் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தியது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதால், இப்போது இலங்கை எதிர்நோக்கும் மிக முக்கிய சிக்கல், யுத்தம் நடந்துமுடிந்த மூன்று ஆண்டுகளிலும் இலங்கை என்ன செய்தது? சர்வதேசத்தால் எழுப்பப்பட்ட சந்தேகங்களை இலங்கை எவ்வாறு தெளிவுபடுத்திக்கொண்டது, இல்லாவிட்டால் அதற்கான தெளிவாக்கல் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டிருக்கிறதா என்ற கேள்விகளை இலங்கை எதிர்கொள்ளும்.

அத்துடன் நேற்றும் கூட, பிரித்தானியாவும், அமெரிக்க அரசின் ராஜாங்கப் பிரதிநிதிகளும் நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையாவது நடைமுறைப் படுத்துமாறு வலியுறுத்தி இருக்கின்றன.

எனவே திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனீவ கூட்டத்தொடரில் இதுவரை இலங்கை காணாத அழுத்தங்களை இலங்கை இம்முறை எதிர்கொள்ளும் என்பது உறுதி.

இதில் பங்கேற்கும் வகையிலும் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தின் புத்தி ஜீவிகளாக பட்டியல்படுத்தப்பட்ட 57 பேர் குழுவொன்று ஜெனீவா பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், மஹிந்த சமரசிங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் சிறி பால டி சில்வா, ரிஷாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்களும் சட்ட மா அதிபரும், சட்டமா அதிபர் காரியாலயத்தின் பிரதிநிதிகள் 50 பேரும் விஜயம் செய்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை முன்வைக்கும் எனவும் அதற்கு அதரவாக அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் செயற்படும் எனவும் அண்மையில் ஹலரி கிளிண்டன் தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு எதிரான பிரேணைகள் முன்வைக்கப்பட்டால் அதனை வெற்றிகரமாக நிராகரிக்கும் உண்மை சான்றுகளுடனேயே நாம் ஜெனீவா சென்றுள்ளோம் எனவும் ஜெனீவாவிற்கான இலங்கை அரசாங்கத்தின் பிரதிநதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டுவருவதில் ஐரோப்பிய நாடுகள் இவ்வளவு முனைப்புக் காட்டுவதில் மனித உரிமை பற்றிய அக்கறை தாண்டி ராஜதந்திர, அரசியல் ரீதியான வல்லரசு முனைப்புக்களும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இலங்கையின் நட்புக்கலான சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் மூக்கை உடைக்கவும் , இந்தியாவின் நேரடித் தலையீடு இலங்கையிலும் இந்து சமுத்திரப் பகுதியிலும் இருப்பதைக் கொஞ்சமாவது குறைக்கவும் அமெரிக்கா தனது நேச நாடுகளுடன் சேர்ந்து இலங்கையை முடக்குவதனூடாக அடையும் என்பதும் தெளிவு.

இந்தக் கூட்டத்தொடரில் வருடாந்தம் நடைபெறுவதைப் போல, ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவையும் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பு நாடுகளின் மனித உரிமை மீளாய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த மீளாய்வு நடத்தப்பட உள்ளது.

நாட்டின் மனித உரிமை நிலைமைகள் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டநடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு இந்த அமர்வில் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இம்முறை இலங்கைக்கான இந்த வாய்ப்பை இலங்கை எவ்வாறு பயன்படுத்தும் என்ற கேள்வி எல்லோருக்குமே உள்ளது.

இலங்கை ஒன்றில் ராஜதந்திர அஸ்திரங்களை (கெஞ்சல், கொஞ்சல், சரணடைதலும் இவற்றுள் அடங்கும்) பயன்படுத்தி பேரவையின் கூடத்துக்கு முதல் தனக்கெதிரான தீர்மானங்களை நிறுத்தப் பார்க்கும் - இதற்காகத் தான் இத்தனை பெரிய தூதுக்குழு முற்கூட்டியே ஜெனீவா பயணமாகியுள்ளது.
இல்லை தகுந்த ஆதாரங்களையும், பெரிய ஆதரவுகளையும் பயன்படுத்திப் பார்க்கும்
மூன்றாவது - இவை இரண்டும் சரிவராமல் போனால் கால அவகாசம் கேட்டு, ஒக்டோபர் மாதத்துக்குள் ஏதாவது செய்துகொள்ள முயற்சிக்கும்.

இதை விடுத்து இலங்கையில் ஆம் திகதி அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மக்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் செய்து மக்களை உசுப்பேற்றி திசை திருப்பி விடுவதெல்லாம் சும்மா தான்..

இலங்கைக்கு எதிராக வரும் தீர்மானம் மூலம் நடைபெறக் கூடிய விடயங்கள் -
நிதியுதவிகள் நிறுத்தப்படலாம்
பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்படலாம்
யுத்தக் குற்ற விசாரணைகள் மேலும் தீவிரமாகக் கொண்டு வரப்படலாம்.. (போஸ்னிய - செர்பிய யுத்தக் குற்ற விசாரணைகள் மூலம் ஸ்லோபோடன் மிலோசெவிக் தண்டிக்கப்பட்டது போல)

ஆனால் ஏற்கெனவே விலையேற்றம், ஆர்ப்பாட்டங்கள், மீண்டும் ஆரம்பித்திருக்கும் ஆட்கடத்தல்கள் மூலமாக நொந்துபோயிருக்கும் அப்பாவி மக்களையே இந்த நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் என்பதும் யோசிக்கவேண்டிய விஷயமே..

மீண்டும் உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள், மேலும் தெளிவாக்கல் + திருத்தங்களுக்காக..

உங்களுடன் சேர்ந்து திங்கள் இரவுக்காக காத்திருக்கிறேன்..

February 23, 2012

ஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இருப்பது என்ன?


இலங்கையிலும், இலங்கையைப் பற்றிய அக்கறை உள்ள உலகின் ஏனைய இடங்களிலும் இப்போது அதிகமாகப் பேசப்படுகிற ஒரு விடயம்.. ஜெனீவா.

இலங்கையில் தமிழரின் இனப் பிரச்சினை + போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகின் ஒவ்வொரு இடங்கள், நகரங்கள் அதிகமாகப் பேசப்பட்டு கவனங்கள் குவியும் இடங்களாக இருந்திருக்கின்றன.

80களில் திம்பு (பூட்டான்), சென்னை, கொழும்பு, டில்லி, நல்லூர், பின்னர் 90களில் வன்னியின் பல இடங்களும் 2000களில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்த வெளிநாட்டு நகரங்களும் (குறிப்பாக ஒஸ்லோ), யுத்தங்கள் உக்கிரம் அடைந்து எங்கள் அடையாளங்கள் தொலைந்துபோன பல்வேறு சிறு ஊர்களும் கூட முக்கியத்துவம் வாய்ந்த செய்தி மையங்களாக மாறிப் போயின..
இறுதியாக முள்ளிவாய்க்கால்.



இப்போது தமிழரின் தலைவிதி யார் யாராலோ எழுதப்படும் வேளையில் இலங்கைக்கு தலையிடியைக் கொடுக்கின்ற ஒரு இடமாக மாறியுள்ள நகரம் ஜெனீவா.


ஜெனீவா தொடர்பில் இன்று நம்மில் பேசாதவர்கள் இல்லை. முழு தமிழ் சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் தொடர்பில்தான்.

இந்நிலையில் இலங்கையில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் இன்றைய வியாழன் விடியலில் (வழக்கமாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் நாள்) தகவல்கள், தரவுகள், பின்னணிகளைத் தேடி எடுத்து (இதில் எங்கள் செய்தி ஆசிரியர் லெனின்ராஜ் எனக்கு நிறையவே உதவி இருந்தார்) இன்று வழங்கி இருந்தேன்..

பல நண்பர்கள் + நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதைப் பதிவாகவும் தரலாம் என்று எண்ணி இந்த இடுகை.
மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள வது வருடாந்த அமர்வு பற்றிப் பார்க்க முதல் கொஞ்சம் வரலாற்றுப் பின்னணிகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.



இலங்கை அரசுக்கு கேட்டாலே ஈயத்தை காதில் ஊற்றும் ஒன்றாக இருக்கும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம் இதில் முக்கியமானது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வரலாற்றில் உதித்து பரிணமித்ததே சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம்.

ஆரம்ப கால கட்டத்தில் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற யுத்தங்களினால் அதிகமான பொது மக்கள் உயிரிழந்தனர்.
அத்துடன் உள்நாட்டு யுத்தங்களும் காணப்பட்டன.
இந்த நிலை வலுவடைந்து இனம் மற்றும் மத ரீதியான யுத்தமாக மாறின.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டம் ரீதியாக உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டதே மனித உரிமைகள் ஆணையகம் ஆகும்.

இதன் முதற்கட்டமாக ஆரம்பத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போர்வீரர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச பேச்சுவார்த்தை ஒன்று 1864 ஆம் அண்டு Jean Henri Dunant   நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கை ஒன்று உருவாக்கப்பட்டது.
ஆரம்ப காலகட்டத்தில் இந்த உடன்படிக்கையை ஐரோப்பிய வல்லரசு நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

அத்துடன் 1864 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையின பரிந்துரைகள் 1906 ஆம் ஆண்டு சீர்திருத்தப்படடதுடன் கடல் மார்க்க யுத்தங்களுக்கும் இவை பொருந்தும் என பரிந்துரைக்கப்பட்டது.

1929 ஆம் ஆண்டு மூன்றாவது உடன்படிக்கையின் போது யுத்தத்தை முறையாக நடத்துவது  தொடர்பான நிபந்தனைகள் இதில் சேர்க்கப்பட்டன.

இதன்போதே அனைத்து நாடுகளுக்க அதிர்ச்சியளிக்கும் இரண்டாம் உலகப்பேர் ஆரம்பமாயிற்று.
இதற்கமைய 1945 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் இரண்டாம் உலகப்போர் வலுப்பெற்று அமெரிக்காவின் ஆதிக்கம் உலக நாடுகளுக்கு விளங்கியது.

இரண்டாம் உலக போர் நிறைவின் பின்னர் அதிகமான நாடுகள் உடன்படிக்கையை மீறியதாக மனித உரிமைகள் ஆணையகம் அறிவித்தது.

தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சுவீடனின் ஸ்டொக்ஹம் நகரில் இடம்பெற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்;தின் மாநாட்டில் மனித உரிமை ஆணையகத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட சட்டங்களில் புதிய நான்கு உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன.

குறித்த நான்கு புதிய உடன்படிக்கைகளுக்கும் 1949 இல் ஜெனீவாவில் இடம் பெற்ற மாநாட்டின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இது தான் இன்று வரை சர்வதேச யுத்தங்கள், உள்நாட்டு யுத்தங்களின்போது கடைப்பிடிக்கவேண்டிய மனிதாபிமான சட்டங்கள் அடிப்படையாகக் கொண்டுவரப்பட்டன.



இதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை என அனைவராலும் தற்போதும் பேசப்படுகின்றது..

இந்த நான்காவது உடன்படிக்கையின் பிரகாரம் யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் யுத்த பிரதேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருத்தல், 
தனி நபரையோ குழுக்களாகவோ பொதுமக்களை நாடுகடத்தல், 
பாலியல் ரீதியில் துன்புறுத்தல் 
உடல் உள ரீதியில் வதைத்தல், 
விசாரணையின்றி விளக்கமறியலில் வைத்தல், 
நியாமின்றி சொத்துக்களை அழித்தல், 
இன மத தேசிய ரீதியில் மற்றும் அரசியல் ரீதியிலும் பாரபட்சம் காட்டுதல் 
என்பன முற்றாக தடைசெய்யப்படல் வேண்டும் என சரத்துக்களில் பரிந்துரைக்கப்பட்டன.

எனினும் இரண்டாவது உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சி, மற்றும் விடுதலை போராட்டங்கள் காரணமாக குறித்த உடன்படிக்கை மீண்டும் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலை மேலும் மோசமடைய 1977 ஆண்டு ஜுன் 8 ஆம் திகதி 1949 உடன்படிக்கைகளுடன் மேலும் இரண்டு புதிய உடன்படிக்கைகள் இணைத்துக்கொள்ளப்பட்டன.

1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கைகளில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்தன.
உட்னபடிக்கைகள் தொடர்பில் நாம் பார்க்க வேண்டுமானால் முதலாவது உடன்படிக்கை.

1864 ல் முதலாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது.
2. எல்லாத்தரப்பைச்சேர்ந்த வீரர்களுக்கும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.
3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
4. இந்த உடன்படிக்கையின் கீழ் பணிபுரியும் நபர்களையும்  உபகரணங்களையும் இனங்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும்

1929 ல் மூன்றாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்துதல்.
2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கல்.
3. கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குதல்

1949 ல் நான்காவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது.
2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது
3. யுத்த கைதிகளை நடாத்தும் விதம் பற்றியது
4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது.

இதற்கமைய 1977 உடன்படிக்கையின் சாரம் இவ்வாறு அமைகின்றது.
சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள் (கெரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது.

இது வரை குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் மனித உரிமை ஆணையகம் தோற்றம் பெற்றமைக்கு பிரதான காரணங்களாக அமைந்தவையும் மற்றும் அந்த ஆணையகத்தின் நிபந்தனைகளும்.

--------------

இன்னும் விரிவான, இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், இலங்கை அரசாங்கம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள், விசாரணைக் குழு அறிக்கைகள், இதர முக்கிய விடயங்கள் மற்றும் ஜெனீவாவில் இம்முறை இலங்கைக்கு என்ன நடக்கும் என்ற விடயங்கள் பற்றி அடுத்த இடுகையில் பகிர்கிறேன்...

எனது / எமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எடுத்து, தொகுத்த விடயங்களே இவை.. தவறுகள் இருந்தால் திருத்தவும்.
மேலதிக சேர்க்கைகள் இருந்தால் பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக அறியத்தாருங்கள்.

February 20, 2012

மெரீனா




மிகத் தாமதமாகப் பார்த்த படம்.. தெஹிவளை கொன்கோர்ட் அரங்கில் பார்த்த காட்சி தான் கொழும்பில் இறுதிக் காட்சி.
உங்களில் பலர் பார்த்திருக்கலாம்; பல விமர்சனங்களும் வாசித்திருக்கலாம்..

ஆனால் பார்த்த உடனேயே நினைத்தது விமர்சனமாக இல்லாவிட்டாலும் ஏதாவது எழுதவேண்டும்.

'மெரீனா' நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஒரு படம்..
'பசங்க' பாண்டிராஜ், சின்னத்திரையில் மனம் கவர்ந்த சிவ கார்த்திகேயன், பட விளம்பரங்களில் வந்த சிறுவர்கள், 'வணக்கம் வாழவைக்கும் சென்னை' விளம்பரப் பாடல் என்று பல விஷயங்கள்...

ரொம்ப சிரமப்பட்டு விமர்சனங்கள் எவற்றையும் வாசிக்காமல், படம் பார்த்தவர்கள் கதை சொல்லாமல் இருக்கப் பார்த்துகொண்டு படம் பார்க்கப் போயிருந்தேன்..

மெரீனா கடற்கரையில் நிகழும் சம்பவங்கள், அந்தக் கடற்கரையோரம் வாழும் சிறுவர்கள், ஆதரவற்றோர், அங்கே பிழைப்பு நடத்தும் மக்கள் பற்றிய கதை..
மெரினாவை ஒரு கதைக்களமாக மாற்றிய இயக்குனர் பாண்டிராஜ் பாத்திரங்களையும் பார்த்துப் பார்த்துப் படைத்திருக்கிறார்.

வணக்கம் வாழவைக்கும் சென்னை பாடலின் பின்னணியுடன் வரும் பெயரோட்டத்தில் 'பக்கோடா' பாண்டியின் பெயர் முதலாவதாக வரும்போதே இயக்குனர் எதோ ஒரு வித்தியாசம் வைத்திருக்கிறார் என்று புரிகிறது.
'மெரீனா'வின் கதாநாயகன் என்று சொல்லப்பட்டு வந்த சிவகார்த்திகேயனின் பெயர் மூன்றாவதாக வருகிறது.



கதையும் அப்படித்தான்.. படம் முழுக்க விரிந்து நிற்கிற கதாபாத்திரம் சின்னஞ்சிறுவனான பாண்டி தான்.. பெற்றோரை இழந்து சித்தப்பாவின் அசுரப்பிடியிலிருந்து தப்பி சென்னையில் பிழைக்கவும் படிக்கவும் ஆசை கொண்ட சிறுவன் அம்பிகாபதியை சுற்றி செல்லும் கதை..
அவனுக்கு நண்பன் ஆகிற கைலாசம், உதவி செய்கிற ஆதரவற்ற பிச்சைக்காரத் தாத்தா, கூடத் தொழில் செய்யும் சிறார்கள், குதிரையை வைத்துப் பிழைப்பு நடத்துவோர், டோலக் வாசித்துப் பாட்டுப் பாடி மகளை ஆடவைத்துப் பிழைப்பு நடத்தும் ஒருவர், இந்த சிறார்களுக்கு உதவும் மனது கொண்ட தபால்காரர் என்று மெரினாவை விட்டு கதை வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்வது இயக்குனரின் திறமை.

ஆனால் சொல்ல வந்ததை அவர் சரியாக சொன்னாரோ, அல்லது நாம் இவர் சொல்வார் என்று எதிர்பார்த்ததை பாண்டிராஜ் சொல்லாமல் விட்டாரோ என்பது விவாதத்துக்குரியது..
பாசம், பராமரிப்பு, படிப்பு இல்லாமல் அவதிப்படும் கடற்கரையோர சிறார்களைக் காட்டுவதற்குப் பதிலாக - ஆடிப்பாடி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டு, நேரகாலம் தெரியாமல் நண்பர்களோடு கும்மாளமிட்டு, தமக்குள்ளே மகிழ்ச்சியாக வாழும் சிறுவர்களைத் தான் 'மெரீனா' காட்டுகிறது.
இதுவே இன்னும் வீட்டில் கோபித்துக்கொண்டு, கல்வி வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு எத்தனை சிறுவர்களை கடற்கரை சிறுவர் தொழிலாளர்களாக மாற்றிவிடுமோ என்ற ஆதங்கம் உண்மையில் வருகிறது.
உருக்கமான ஒரு சில காட்சிகளை உப்பு, உறைப்பு போல ஆங்கங்கே தூவிவிட்டு நகைச்சுவைக் காட்சிகள், நக்கல் நையாண்டி, சிறுவர்களின் குறும்பு என்றே படம் முழுக்க செல்கிறது.
பிச்சைக்காரத் தாத்தா, பாடகரும் மகளும் என்று சில சில பாத்திரங்கள் உருக்க என்றே உலா வருகின்றன.

அப்போ, சிவகார்த்திகேயனும் ஓவியாவும் என்ன செய்கிறார்கள் என்றால்??
அவர்கள் தான் நகைச்சுவைப் பகுதியை பூர்த்தி செய்கிறார்கள். அவர்களின் காதல் காட்சிகள் செம காமெடி.. ஊடல்களும் மோதல்களும் அதற்குப் பதிலடிகளும் என்று கலகல தான்.. அலுக்காமல் ரசிக்க வைத்திருக்கும் காட்சிகள்.
சிரிப்பொலிக்கு குறைவேயில்லை.. (நான் பார்த்த நேரம் மொத்தமே ஒரு இருபது பேர் தான்)

இடைவேளைக்கு கழிவறை போன போது நடுத்தர வயது மனிதர்கள் இருவர் பேசிக்கொண்டது
"இப்பிடியான படங்கள் எண்டால் பயப்பிடாமல் மனுசி, பிள்ளையளோட வரலாம்.. மற்றப் படங்கள் எண்டால் என்னத்தைக் காட்டுவான்களோ எண்டு பயந்துகொண்டேல்லே பார்க்க வேண்டி இருக்கு"

இன்னொரு டயலாக் - இது ஒரு இளைஞர் ஆதங்கப்பட்டது "மச்சான், சிவா பாவம்டா.. ஹீரோ எண்டு பில்ட் அப் குடுத்து சந்தானம் மாதிரி ஆக்கிட்டான் இந்த டிரெக்டர்"

வணக்கம் பாடல் தவிர, வேறெந்தப் பாடலுமே மனதில் ஒட்டவில்லை.. எல்லாப் பாடல்களும் கதை சொல்லிகளாக (montage) வந்தது தான காரணமோ தெரியவில்லை..

எப்படிப்பட்ட படமாக இதைத் தரப்போகிறேன் என்று இயக்குனர் முடிவெடுத்திருந்தாலும் , கடற்கரையோர சிறுவர்களின் கல்வி பற்றி, அவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு பற்றி அழுத்தமாக படத்தில் கௌரவ வேடம் ஏற்றுள்ள ஜெயப்பிரகாஷ் பேசுவதால் கொஞ்சம் சீரியஸ் தன்மையும் இந்த சிறுவர் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைப் பற்றி 'மெரீனா' சொல்லும் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் ஏமாற்றமாகிப் போவதால் எதோ அரைகுறைப் படைப்பு ஒன்றைப் பார்ப்பதாக ஒரு ஏமாற்றம் வருவதைத் தவிர்க்க முடியாததாகிறது.

'பசங்க' மூலம் மனதில் இடம் பிடித்தவராதலால் பாண்டிராஜே அந்த என்னத்தை எமக்குள் ஏற்படுத்தி இருக்கிறாரோ என்னவோ?
அதிலும் சிறுவர்களைப் பிரதானப்படுத்தியே இந்தப்படமும் வந்திருப்பதாலும் அதே பசங்க நேர்த்தியை நாம் எதிர்பார்க்கிறோமோ?

கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கோர்வையான விவரண விஷயங்கள் என்று வந்திருக்கும் மெரீனா பாண்டிராஜுக்குப் பாராட்டுக்களைப் பெரிதாகக் கொடுக்காது.. ஆனாலும் பாடங்கள் சிலவற்றைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.

மெரீனா - இன்னும் எதிர்பார்த்தேன். 

February 15, 2012

நீ! - காதலும் காதலர் தினமும்


முற்குறிப்பு - கூகிள் திடீரென எனது வலைப்பதிவுகளை சுருட்டி இரு நாள் ஒளித்து வைத்ததனால் பதறிப்போனேன். என்னுடன் சேர்ந்து தேடிய, கவலைப்பட்டு விசாரித்த அத்தனை அன்பு நண்பர்களுக்கும் நன்றிகள்.
காணாமல் போன பொக்கிஷம் மீண்டும் வந்த மகிழ்ச்சியோடு, நேற்று வந்திருக்க வேண்டிய இடுகை இன்று.. 

காதலர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்...





மனது முழுக்கக் காதல் இருக்கையில் எல்லா நாளும் எங்களுக்கு காதலர் தினம் தானே? 
ஆனாலும் இந்த நாளில் மனதில் ஒரு அதிகப்படியான சந்தோஷமும், எங்களுக்கான நாள் என்ற ஒரு உற்சாகமும் வருகிறது தானே?
அது தான் இந்த விசேட நாளின் சிறப்பு.



நான் என்று இருப்பதை நாம் என்று மாற்றிக்கொள்ளவே நாம் அனைவருமே விரும்புகிறோம்..

தனித்து வாழ்வதில், தனித்து சுவைப்பதில் எப்போதுமே ஆர்வம் இருக்காது எவருக்கும்..

நானை நாமாக மாற்றுவதில் யாருக்கும் துணை வருவது உரிமையுள்ள 'நீ' 
இந்த 'நீ' மீது எப்போதுமே எனக்கு ஒரு தீராக் காதல்.. 
நீ என்பது மரியாதை இல்லாத சொல்லாக 'நீ' சொல்லப்படலாம்.. ஆனாலும் 'நீ'யில் இல்லாத உரிமை வேறெதிலும் இல்லை.
நெருக்கமானவர்களை நீ என்று அழைத்து உரிமை கொண்டாடுவது எப்போதுமே எனக்குப் பிடித்தமானது.
உரிமை + அன்பு இருந்தால் மட்டுமே அந்த 'நீ ' வரும்....

ஆனால் இந்த 'நீ' கொஞ்சம் வித்தியாசமான நீ.. உரிமையான நீ.. கொஞ்சம் பழைய நீ.. 
நான் என்றோ எழுதி.. என் டயரியில் கிடந்தது, பின் ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி..
மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு இடுகையாக வந்தது..
இப்போது மீண்டும் :) 
அண்மையில் ஒரு அழகான கையெழுத்தில் இந்த 'நீ' கவிதையைப் பார்த்து என் கவிதை என்பதே மறந்து போய், அந்த எழுத்தின் அழகில் (லும்) இந்தக் கவிதையை புதிதாய் உணர்ந்து ரசித்து அதன் பின் தான் இதை எழுதியதே 'லோஷன்' என்று உணர்ந்து சிலிர்த்தேன் :) 
நல்ல காலம் காதலர் தின நேரம் ஞாபகம் வந்தது.. 




நீ...


நீ...
ஒற்றைச் சொல்லில் உரிமையெடுத்து
உயிரனைத்தையும் ஒன்றுபடுத்தி
ஒருமையில் - தனிமையளித்தும்
தன்மையை அழித்தும்
தன்மையாக ஒலிக்கும் -
முன்னிலையாக உள்ள
படர்க்கைச் சொல் இது!

நீயெல்லாம் - நானாக
நானென்பது நீயென்ன
நீயும் நானும் - நீயானோம்!
நானும் நீயும் - நானானோம்!
நீயின்றி – நானும்
நானின்றி நீயும் - தீயானோம்!

நீ – நீண்டு ஒலிக்கையில்
அளவற்ற அன்பு!
குறுகிச் சிறுக்கையில்
சுருக்கமான தெளிவு!

ஆங்கில YOUவில் இல்லாத
அழகு – அன்பின் அடர்த்தி
தமிழின் 'நீ'யில் உண்டு
தமிழின் 'நீ' மெல்லினம்!
எனவே மென்மையுண்டு!
தனிச் சொல்லாதலால் - மேன்மையுமுண்டு!

நீங்களில் 'கள்' இருக்கலாம்
ஆனால் மயக்கம் இல்லை
ஆம்!
அன்பின் மயக்கம் இல்லை!
நீயில் உரிமையுண்டு
உணர்ச்சியும் உண்டு!

நீரின் குளிர்மை!
தீயின் வெம்மை!
நீரோட்டத்தின் வேகம்!
தீராத மோகம்!
அத்தனையும் சேர்ந்த அற்புதக் கலவை நீ!

புரிந்து கொள்ள முடியாத புதிர் நீ!
கனவு போலக் கலைவாய்
காற்றுப் போலவும் நீ
சிலநேரம் வீசியடிக்கும் கோபப்புயல்
சிலநேரம் இன்பம் தரும் தென்றல்
அடிக்கடி மாறும் காலநிலை போல்
புரிந்து கொள்ள முடியாத புதிர்ப்புதையல் நீ!

யாரோ நீ என்று தேடுவதிலே கழியும்
என் சந்தோஷக் கணங்கள்..
கண்டு விட்டால் கலைந்துவிடுமோ
இல்லை காதலால்
நீயும் நானும்
நாமுமாகி
நீ என்பதே நானாகுமோ??

நானெல்லாம் நீயான பின்
தனியாக 'நீ' ஏது?





February 10, 2012

நேர்சரிக்கு bomb வைப்பமா? - ட்விட்டடொயிங் - Twitter Log


2012ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்து ஜனவரி மாதம் முடிந்த வரையிலான எனது  ட்வீட்களில் தெரிவு செய்யப்பட்டவை.. 







நான் இதுவரை பார்த்த உலகின் மிகச் சிறந்த காதலர்களின் 34வது திருமணப்பூர்த்தி ஆண்டு நிறைவு இன்று.. வாழ்த்துக்கள் அப்பா & அம்மா 
9:48 AM - 31 Jan 12 via web ·




பனி விழும் மலர்வனம் .. உன் பார்வை ஒரு வரம்.. நினைவெல்லாம் நித்யா.. சிறுவயது முதல் இன்று வரை என் evergreen Favorite. SPB + IR + VM :)  
8:59 AM - 31 Jan 12 via web 




'விடியல்' இல்லாத விடுமுறைக் காலை வீணாய்ப் போனது போல அலுப்பாக உள்ளது. 




கொஞ்சம் அலுவல்..கொஞ்சம் ஷொப்பிங்..கொஞ்சம் அலைச்சல்..இப்பிடிக் கொஞ்சம் கொஞ்சமா நிறைய நேரம் சென்னையிலே கழியிங் நோ நண்பர்ஸ் மீட்டிங் :/  
11:10 PM - 29 Jan 12 via web




அருண்மொழியின் குரலில்.. அரும்பு தளிரே.. எப்போது கேட்டாலும் அப்படி மயங்கி விடுகிறேன்.. 

மனோவின் குரலில் நான் அதிகமாக ரசிக்கும் பாடலில் ஒன்று - மந்திரம் சொன்னென் வந்துவிடு.. வேதம் புதிது..


நான் என்பது நீ அல்லவோ தேவதேவி... அருண்மொழியின் குரலும் சேர்ந்து மனசைக் கொஞ்ச நேரம் மிதக்க வைத்துவிட்டது 
8:55 AM - 27 Jan 12 via web

உள் மன உணர்வுகள் சொல்பவை அநேகமாக உண்மையாகவே இருக்கின்றன. K Tvஇல் வேட்டையாடு விளையாடு பார்க்கிறேன்
9:04 PM - 26 Jan 12 via Twitter for iPhone

உனக்கு என்றால் அது உனக்கு மட்டும் தான். உனக்குப் பிறகு என்றால் அது எனக்கு மட்டும் தான். 

துரோகங்களுக்கும் மன்னிப்புக்கள் கிடைக்கும் அற்புத தருணங்களில் மகா கெட்டவனுக்கும் மகாத்மா ஆகிவிடும் எண்ணம் வந்துவிடுகிறது.



தனது நேர்சரி போர் அடிக்குதாம்.. bomb வைப்பமா என்று கேட்கிறான் நாலே வயதான மகன் ஹர்ஷு.. #கலிகாலம் #பார்ரா
10:46 PM - 19 Jan 12 via web


நேற்று 3 Idiots மீண்டும் நாலாவது தடவையாக பார்த்த பிறகு மேலதிகமாக சிலது எழுதணுமா என்று திங்கிங் லோஷன்: நண்பன் http://www.arvloshan.com/2012/01/blog-post_16.html
8:48 PM - 19 Jan 12 via Tweet Button


உன் பேரை யாரும் சொல்லவும். விடமாட்டேன்; அந்த சுகத்தையும் தரமாட்டேன். - வைரமுத்து - இந்தியன் - டெலிபோன் மணிபோல் #lyricsForLoshan
5:49 PM - 19 Jan 12 via Twitter for iPhone 


மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா.. :) - அம்மா திரைப்படம் எப்போது கேட்டாலும் ஒரு இனிய சுகம்.... #NowPlaying #Vidiyal 
9:38 AM - 19 Jan 12 via web


இலங்கை கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்றுவிப்பாளராமே? அதுக்குள்ளேயா? #cricket #News 
9:05 AM - 19 Jan 12 via web


நுரை போலே நீ, அலை போலே நான் :) Catchy lines from ஓ சுனந்தா - முப்பொழுதும் உன் கற்பனைகள் 
8:00 PM - 18 Jan 12 via Twitter for iPhone 


அப்துல் ரகுமான் - என் பேனா எனது ஆறாம் விரல் வைரமுத்து - ஆறாம் விரலாய்ப் பேனா கேட்டேன் பா.விஜய் - உன் இடுப்பே ஆறாம் விரலு #extra
10:08 AM - 18 Jan 12 via web


இலியானா இடுப்பு ஆறாம் விரலாம் ;) #Nanban அப்துல் ரஹ்மான் - என் பேனா என் ஆறாம் விரல் பா.விஜய் - உன் இடுப்பே ஆறாம் விரலு..! #சும்மா
9:46 AM - 18 Jan 12 via web

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே #MGR Birthday 9:35 AM - 17 Jan 12 via web 


நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி #MGR Birthday #vidiyal 
9:32 AM - 17 Jan 12 via web 


அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை நல்ல கொள்கைக்கு நான் அடிமை தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை #MGR birthday #Vidiyal 
9:04 AM - 17 Jan 12 via web 


ஏன் என்ற கேள்வி -இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் - கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை#MGR Birthday #Vidiyal
  7:36 AM - 17 Jan 12 via web

பச்சை & பச்சை - பசுமை, குளிர்மை, இனிமை & இளமை ;) நம்ம கலர் நல்ல கலர். #noPolitics Talking about dress on tv show ;)
9:00 AM - 15 Jan 12 via Twitter for iPhone

நாங்க நல்லவங்கோ.. அடி படாமலே ஆட்டமிழந்திடுவோம் ;) கிண்ணம் அவங்களுக்கு.. இறுதியில் அடிவாங்குறது யாருன்னு தான் நமக்குள்ள போட்டி ;)
2:59 PM - 14 Jan 12 via web
Australia, India & Sri Lanka Triangular

அட.. தரங்க சிக்ஸ் அடிக்கனும்னே டுமினிக்கு bowling குடுத்தானா? AB நீ தெய்வம்யா.. #SLvSA
2:56 PM - 14 Jan 12 via web 


சட்டி இருக்கா இல்லையா என்பது முக்கியமில்லை பாஸ்.. ஜட்டியோட நாட்டுக்குத் திரும்புறோமா என்பது தான் முக்கியமே ;) #எப்பூடி
2:53 PM - 14 Jan 12 via web


நாலு போச்சே.. மூன்றெழுத்து முக்கியஸ்தரும் (VVS) போயிட்டார்.. அடுத்து நடுவிரல் நாயகன் வருகிறார் ;) இவர் எத்தனை பந்தோ? ;) #AUSvIND 
2:38 PM - 14 Jan 12 via web


Sachin out.. இப்ப சரி தானே? வாங்கய்யா இனி நம்ம இலங்கை அடி வாங்குறதைப் பார்க்கலாம்.. #cricket #AUSvIND#SLvSA
2:23 PM - 14 Jan 12 via web 


சதத்தை நோக்கி மீண்டும் சச்சின் ஆடுகளத்தில்.. சப்பா முடியலடா.. இன்னும் எத்தனை போட்டிகளில் இதையே சொல்றது.. இன்று ஒருவேளை அடிச்சிடுவாரோ? 
2:03 PM - 14 Jan 12 via web 


ஆறு மாதத்துக்கு முதல் Test Ranking number one team இந்தியாவாமே? அப்பிடியா? :p
1:27 PM - 14 Jan 12 via web 


பேசாம அஷ்வினை விளையாட விட்டிருந்தா கொஞ்ச ரன்சாவது கிடைச்சிருக்குமே.. பரவால்ல.. அஷ்வின் நாளைக்கு நிம்மதியா பொங்கல் கொண்டாடலாம்.#AUSvIND 
12:54 PM - 14 Jan 12 via web 


வழமையா அமைதி காக்கும் VVS இம்முறை ஆரம்பத்தில் வாய் திறந்து, தொடரில் பெரிதாக ஏதும் செய்யாமல் இருப்பதால் இன்று சதம், கிதம் அடிக்கப் போறாரோ? 
12:29 PM - 13 Jan 12 via web


நினைத்ததை முடிப்பவன் நான் .. நான் .. நான்.. விக்கிரமாதித்தன் பாடுவது கேட்குது. Virat Kohli 44. ;) :p#AUSvIND
12:22 PM - 13 Jan 12 via web

புலியைப் பார்த்து பூனை கோடு போட்ட மாதிரி,சூரியாவைப் பார்த்து யாரோ சிக்ஸ் பக்குக்கு முயன்ற மாதிரி..இந்திய அணி.. 4 pronged pace attack :p 
9:36 AM - 13 Jan 12 via web 



"மூக்கோடு மூக்கு மோதும் மோகம் இது " ரேஷ்மியின் குரலில் கேட்கும்போது ஒரு தனிச் சுவை... உன் அழகைப் பாடச் சொன்னால்-ஜேம்ஸ்பாண்டு #vidiyal 8:47 AM - 13 Jan 12 via web 


வேறு வேலை ஏதுமின்றி காதல் செய்வோம் வா வா - நா.முத்துக்குமார் வரிகள் ;) நல்லாத் தானிருக்கு மீண்டும் ரசிக்க #GoodTimes  
7:46 PM - 12 Jan 12 via Twitter for iPhone



Paarlஇல் பாழாய்ப் போனோமே.. ஆனாலும் 35ஐத் தாண்டி 43அடித்து பாசாய்(pass) ஆனோமே ;) #SLvSA 
8:46 AM - 12 Jan 12 via web 


நடந்த நாள் மறக்கவே.. நடக்கும் நாள் இனிக்கவே.. சொர்க்கம் மதுவிலே பாடலில் கண்ணதாசன் #vidiyal 
8:38 AM - 12 Jan 12 via web



இதற்கு முதல் 'சிவப்புத் தாலி' படத்தில் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் - ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகவும் ஆகாது.. என் மனசு மாறவும் மாறாது :)
ஒரே உவமை.. ஒரே மாதிரியான கற்பனை.. ஒரே மாதிரியான வரிகள் :)
இன்னும் பல உள்ளன.. இது உடனடியாக ஞாபகம் வந்த பாடல் வரிகள்.
#வைரமுத்து

- //உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது//

வழமையான வைரமுத்து வரிகள்..ஆனால் சுஜாதாவின் குரலில் சுகமாக உள்ளது
Posted Wednesday 11th January 2012 from Twitlonger


//உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது// வழமையான வைரமுத்து வரிகள்..ஆனால் சுஜாதாவின் குரலில் சுகமாக உள்ளது 
8:47 AM - 11 Jan 12 via web 



ஆகா.. மீண்டும் ஒல்லி ஜெல்லி பெல்லி மனசுக்குள் நிழலாடுதே ;) நண்பன் பாடல் ஒலிக்கிங்.. இருக்காண்ணா ;) 
9:09 AM - 11 Jan 12 via web



காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு வேதமடி நீ யெனக்கு வித்தையடி நானுனக்கு #வீணையடி நீ எனக்கு #பாரதியார் 
11:12 AM - 10 Jan 12 via web 



தென் ஆபிரிக்காவுக்கு பகிரங்க சவால்.. எஞ்சிய 17 விக்கெட்டுக்களையும் முடிஞ்சா இன்றைக்குள்ள விழுத்திக் காட்டுங்கடா பார்ப்போம் ';) #நாம யாரு?4:18 PM - 5 Jan 12 via web


அதே அண்ணே.. உங்க (இந்தியா) வழி எங்க வழியும் கூட.. ழி க்கு பதிலா லி யையும் போடலாம் ;)4:12 PM - 5 Jan 12 via web 
மாறி, மாறித் தோற்கும் அண்ணன் தம்பி அணிகள் பற்றி..


தென் ஆபிரிக்காவுக்கு பகிரங்க சவால்.. எஞ்சிய 17 விக்கெட்டுக்களையும் முடிஞ்சா இன்றைக்குள்ள விழுத்திக் காட்டுங்கடா பார்ப்போம் ';) #நாம யாரு?
4:18 PM - 5 Jan 12 via web 


Lunch timeஆம். தென் ஆபிரிக்கா தான் இலங்கையின் ஐந்து விக்கெட்டுக்களை சாப்பிட்டிட்டாங்களே அவங்களுக்கு எதுக்கு?
நம்ம பட்டினிப் பயல்களுக்கு விட்டமினோட சாப்பாடு குடுங்கோ #SLvSA


South Africa நீங்க ரொம்ப நல்லவங்கடா :) அளவோட அடிச்சிட்டு இத்தோட போதும்னு நிறுத்தினீங்க பாருங்க. அது பிடிச்சிருக்குடா. #SLvSA
6:11 PM - 4 Jan 12 via Twitter for iPhone 


சப்பா இண்டைக்கு ஒருத்தனைக் கழற்றவே இந்தப் பாடு படுறமே.. இன்னும் ஆறு விக்கெட் இருக்கே.. சாப்பிட்டிட்டு வந்து சாத்தப் போறாங்களே ;) #SLvSA
4:07 PM - 4 Jan 12 via web 


நம்பிக்கை பாஸ்.. நம்பிக்கை தான் வாழ்க்கை.. நாலு நாளில் அடி வாங்கி ஓடின நாம நாலே நாளில திருப்பி அடிக்கலை? ;) #SLvSA
2:23 PM - 4 Jan 12 via web 


கர்ப்பக்கிரகம் விட்டு சாமி வெளியேறுது - விருமாண்டி பாடல் ஒலிக்க ஆரம்பிக்க Ricky Ponting 40வது சதம் அடிக்கிறார். #AusVsInd
8:00 AM - 4 Jan 12 via web 


மேலும் மேலும் அழகாய் மாறிப் போனேன் நானே ;) Fresh :) after a wash
10:15 PM - 3 Jan 12 via Twitter for iPhone 


என் குட்டிக் கவிதை எங்கள் பெயர்களைக் கிறுக்குகிறது. இரவென்ன பகலென்ன அவனுக்கு? எப்போதுமே விடியல் தான் ;) #Harshu 
11:31 PM - 2 Jan 12 via Twitter for iPhone 


உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி? வைரமுத்து வரிகள் ரஹ்மானின் இசையில் தூக்கத்தைத் துரத்துகின்றன #Vettri @vettrifm
11:26 PM - 2 Jan 12 via Twitter for iPhone 


என் சுவாசக் காற்றே நீயடி - காற்றின் சிறகுகள் தூங்க விடாமல் செய்கிறது ❤ #romantic
11:25 PM - 2 Jan 12 via Twitter for iPhone 


காலையில் முதல் நாள் அலுவலகத்துக்கு உற்சாகமாய் வெளிக்கிட்டு வாகனத்துக்குக் கிட்ட வந்தால், காத்துப் போன டயருடன் பல்லிளிக்கிறது என்னருமை வாகனம். (not எருமை.. lol)#அருமையான 2012 ஆரம்பம்
Monday 2nd January 2012 from Twitlonger


வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும்;போதும் - நான் மகான் அல்ல பாடல் ஒலிக்கிங் :) #விடியல்
9:32 AM - 2 Jan 12 via web 


நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன் #TouchingLyrics #தென்மதுரை வைகை
8:29 AM - 2 Jan 12 via web 


இன்று முதல் விடியலில்.. புதிதாக ' விடியலிசம்' அறிமுகம்.... உங்களைப் பற்றியும் எங்களைப் பற்றியும் பேசும் 'விடியலிசம்' :) #vidiyal
8:07 AM - 2 Jan 12 via web 


நண்பன் இசை வெளியீடு - இலியானா நடிக்கிறார் என்பதற்காக ஆரம்பத்திலேயே இடுப்பாட்டமா? ;) I mean belly dance ;) #Nanban
4:05 PM - 1 Jan 12 via Twitter for iPhone 


பிறக்கும் புது வருடம் அன்புக்குரிய உங்கள் அனைவருக்கும் நல்லனவற்றையும் மகிழ்ச்சியையும் மட்டுமே வழங்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
11:23 PM - 31 Dec 11 via Twitter for iPhone 




ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner