February 24, 2015

ஓட்டக் குவியல்கள், சாதனை மேல் சாதனைகள், அதிர்ச்சிகள், அதிரடிகள் - உலகக்கிண்ணம் 2015இன் முதல் பத்து நாட்கள் #cwc15

உலகக்கிண்ணப் போட்டிகளின் முதல் பத்து நாட்கள் நிறைவுக்கு வந்துள்ளன.
15 போட்டிகளின் முடிவில்,

கிறிஸ் கெயில் சிக்ஸர் மழை பொழிந்து ஓட்டங்களை மலையாகக் குவித்து சாதனைகளை உடைத்து பெற்ற 215 ஓட்டங்கள் இந்த உலகக்கிண்ணத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது.

ஒரே இரட்டைச் சதம், ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளது.

உலகக்கிண்ணத்தின் அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கை.
முன்னைய கரி கேர்ஸ்டனின் 188 ஓட்டங்களை முறியடித்தார்.

உலகக்கிண்ணத்தின் முதலாவது இரட்டைச் சதம்.
(இதைப் பற்றி முன்பே எதிர்வுகூறியிருந்தேன் 
//அதேபோல இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகளிலும் இரட்டைச் சதம் மிக இலகுவாகப் பெறப்படுவதால், இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் சிலவேளை முதலாவது உலகக்கிண்ண இரட்டைச் சதத்தைத் தரலாம்.//

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 3வது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வேகமான இரட்டைச் சதம்.
- 138 பந்துகள்
முன்னைய சாதனை 140 பந்துகள் சேவாக்.

அத்துடன் *இந்தியாவுக்கு வெளியே பெறப்பட்ட முதலாவது ஒருநாள் இரட்டைச் சதம் & இந்தியர் அல்லாத ஒருவர் பெற்றுள்ள முதலாவது ஒருநாள் இரட்டைச் சதம்.

ஒரு நாள் போட்டியொன்றில் பெறப்பட்ட அதி கூடிய இணைப்பாட்டம் :

கிறிஸ் கெய்ல்- செமுவெல்ஸ் 372

உலகக் கிண்ணப் போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற அதிகூடிய 6 ஓட்டங்கள்:
கெய்ல் 16

ஒருநாள் போட்டியொன்றில் அதிகூடிய 6 ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் ஏ.பி. டீ விலியர்ஸ் , ரோஹித் சர்மா ஆகியோரோடு இன்று கிறிஸ் கெய்ல் இணைந்துகொண்டார்.

அத்துடன் இன்று ஒருநாள் சர்வதேசப் போட்டி வரலாற்றில் அதிகூடிய ஒருநாள் இணைப்பாட்ட சாதனையும் கெயில் - சாமுவேல்ஸ் ஆகியோரால் முறியடிக்கப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் - ராகுல் டிராவிட் ஆகியோர் நியூ சீலாந்துக்கு எதிராக பெற்ற 331 ஓட்டங்களை இன்று இவர்கள் முறியடித்தனர்.

ஒருநாள் சர்வதேச இணைப்பாட்ட சாதனைப் பட்டியல்


கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஒரேயொரு அரைச்சதத்தை மட்டுமே எடுத்திருந்த கெயில் 2013 ஜூன் மாதத்தில் இலங்கை அனிக்கெதிராகப் பெற்ற சதத்துக்குப் பின்னர் இன்று அசுர formக்கு திரும்பியுள்ளார்.

சீசாக்குள்ளே இருந்த பூதத்தை சிம்பாப்வே வெளியே எடுத்துள்ளது.
இனி யார் யாரை விழுங்கித் தள்ளப் போகிறதோ?

பல்வேறு சாதனைகளுடன் இரட்டைச் சதம் பெற்ற கெயில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 9000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.

மேற்கிந்தியத் தீவுகளின் அணித் தலைவர் ஹோல்டர் சில நாட்களுக்கு முன்னர் சொன்னது போல, கெயிலின் பெரிய பங்களிப்பு இல்லாமலேயே 300 ஓட்டங்களை இரு தடவை கடக்க முடிந்தால் கெயில் formக்கு திரும்பும்போது 400 ஓட்டங்களைப் பெறலாம் என்பது கிட்டத்தட்ட நடந்துள்ளது.

இன்று சாமுவேல்ஸ் மட்டும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால் 400 ஓட்டங்கள் நிச்சயம்.

இது 1996க்குப் பிறகு முதல் தடவையாக அரையிறுதிக்கு அழைத்துச் செல்லுமா எனப் பார்க்கவேண்டும்.

அதேபோல சிம்பாப்வே அணியும் சளைக்காமல் இன்று 289 ஓட்டங்கள் வரை துரத்தியிருந்தது.
மூன்று போட்டிகளிலும் 275 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளது.
இந்த உலகக்கிண்ணத் தொடரில் சிம்பாப்வே ஏதாவது சாதிக்காமல் செல்லாது என்பது உறுதி.

சிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர், ஷோன் வில்லியம்ஸ் இருவரும் தொடர்ந்து பிரகாசித்துவருகின்றனர்.


தென் ஆபிரிக்காவை மேற்கிந்தியத் தீவுகள் சந்திக்கவுள்ள போட்டி களைகட்டும் என்பது இனி உறுதி.
தென் ஆபிரிக்காவில் வாங்கியதற்கெல்லாம் இங்கே திருப்பிக் கொடுக்குமா என்று கவனிக்கவேண்டும்.
இந்திய - மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டமும் போட்டிக்குரியதாக இருக்கும்.

பிரிவு Aயில் நியூ சீலாந்து, அவுஸ்திரேலிய அணிகளின் ஆதிக்கம் அதிகமாகத் தெரியும் நிலையில், பிரிவு Bயில் எதிர்பார்த்திருந்த தென் ஆபிரிக்க அணியை நேற்று தோல்வியடையச் செய்த நடப்பு சம்பியன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இதுவரை அயர்லாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளை வென்றது மட்டுமே பெரிய அதிர்ச்சியான முடிவாக இருந்தாலும், ஸ்கொட்லாந்து நியூ சீலாந்தையும், சிம்பாப்வே தென் ஆபிரிக்காவையும், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் சிம்பாப்வேயையும் எல்லாவற்றையும் விட ஆச்சரியமானதாக ஆப்கானிஸ்தான் இலங்கையையும் இறுதிவரை நடுங்க வைத்து, திணற வைத்து Associates என்று அழைக்கப்படும் 'சிறிய' அணிகளை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை அழுத்தமாகப் பதிந்துள்ளன.


காலிறுதி வரக்கூடிய வாய்ப்புடையவையாக இவற்றுள் ஒன்றிரண்டு அணிகளுக்கு வாய்ப்பு இருப்பதையும் மறுக்கமுடியாது.

இதுவரை ஸ்கொட்லாந்து, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் மட்டுமே எந்தவொரு வெற்றியையும் பெறாத அணிகள்.

முன்பே இந்தப் பகுதியில் நாம் எதிர்வு கூறியிருந்ததைப் போல, கூடிய ஓட்டங்கள் குவிக்கப்பட்ட தொடராக இந்த உலகக்கிண்ணம் இதுவரை தெரிகிறது.

15 போட்டிகளில், 10 தடவை 300 ஓட்டங்களுக்கு மேல் பெறப்பட்டுள்ளன.
இவற்றில் ஒரே போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற 300+ ஓட்டப்பெறுதியை அயர்லாந்து கடந்திருந்தது.

இன்று மேற்கிந்தியத் தீவுகள் அணி பெற்ற 372 ஓட்டங்களே இப்போதைக்கு கூடிய ஓட்ட எண்ணிக்கை.
இதுவே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிகூடிய ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்ட எண்ணிக்கையும் ஆகும்.

நியூசீலாந்துக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற 123 ஓட்டங்களே இதுவரை குறைவான ஓட்டங்கள்.

தனி நபர் ஓட்ட எண்ணிக்கையில் கிறிஸ் கெயிலின் இன்றைய பேயாட்டம் தவிர, தென் ஆபிரிக்காவின் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 138, ஷீக்கர் தவான் 137, ஏரொன் ஃபிஞ்ச் 135 என்ற வரிசையில் 10 சதங்கள் பெறப்பட்டிருக்கின்றன.

இதுவரைக்கும் கூடுதலான ஓட்டங்கள் பெற்றிருப்போர்


கூடுதலான விக்கெட்டுக்களை வீழ்த்தியிருப்போர்


இவர்களில் டிம் சௌதீ ஒரே போட்டியில் 7 விக்கெட்டுக்களை இங்கிலாந்துக்கு எதிராக வீழ்த்தியிருந்தார்.
இது உலகக்கிண்ணப் போட்டிகளில் மூன்றாவது மிகச்சிறந்த பெறுதி என்பதோடு, நியூ சீலாந்து பந்துவீச்சாளர் ஒருவர் பெற்றுள்ள மிகச்சிறந்த ஒருநாள் பந்துவீச்சாகும்.


இன்றைய சாதனை வேட்டையைத் தவிர,

​மில்லர் - டுமினியின் 257 ஓட்ட இணைப்பாட்டம் (சிம்பாப்வேக்கு எதிராக) 5வது விக்கெட்டுக்கான புதிய உலக சாதனையானது இந்த உலகக்கிண்ணத் தொடரின் இன்னொரு முக்கிய விடயம்.

அத்துடன் மொயின் அலி - இயன் பெல் ஆகியோர் ஸ்கொட்லாந்துக்கு எதிராக இன்று பெற்ற 172 ஓட்டங்கள் உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்தின் மிகச்சிறந்த ​ஆரம்ப இணைப்பாட்டமாகும்.

இந்தப் பத்து நாட்களில் அணிகளாக ஆதிக்கம் செலுத்தியவை ஒரு பக்கம் இருக்க, தனி நபர்களாகக் கலக்கியவர்களாக..

இரண்டு போட்டிகளிலும் கலக்கியுள்ள தவான்
தவான் போலவே சதமும் அரைச்சதமும் பெற்றுள்ள லென்டில் சிமன்ஸ்
இங்கிலாந்தை துவம்சம் செய்து, உலகக்கிண்ணப் போட்டிகளில் வேகமான அரைச்சத சாதனையைப் பெற்ற பிரெண்டன் மக்கலம்

பந்துவீச்சில் தொடர்ச்சியாகக் கலக்கும் சௌதீ
அதே நியூ சீலாந்து அணியில் ஓட்டங்களை மிக சிக்கனமாகக் கொடுத்து வரும் வெட்டோரி
சிறிய அணிகளின் பந்துவீச்சுக்கு உரம் கொடுத்துவரும் ஹமிட் ஹசன், டேவி
தங்களது அணிகளுக்காக சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ள கோளி, ரஹானே, மஹேல ஜயவர்தன , மொயின் அலி, டரன் சமி, ஷோன் வில்லியம்ஸ், பிரெண்டன் டெய்லர்
என்று சாதனையாளர் பட்டியல் நீள்கிறது.


தவான் - கோளி  மற்றும் மக்கலம் - கப்டில் ஆகியோர் இதுவரை  இரண்டு சத இணைப்பாட்டங்களைப்  பெற்றுள்ளனர் என்பது இன்னொரு கவனிக்கக்கூடிய விடயமாகும்.

இந்த ஓட்டக்குவிப்புக்கள் மூலமாக முன்னரே எதிர்பார்த்த நியூ சீலாந்தும், அதிகமாக எதிர்பார்க்காத, ஆனால் நடப்பு சாம்பியன்களான இந்தியாவும் தத்தம் பிரிவுகளில் முன்னிலை பெறக்கூடிய அணிகளாகத் தெரிகின்றன.

அவுஸ்திரேலியாவின் ஒரு போட்டி மழையினால் கழுவப்பட்டது பங்களாதேஷ் அணிக்கெதிரான இலகு வெற்றியொன்றைப் பறித்திருந்தாலும், இந்தப் பிரிவைத் தீர்மானிக்கும் போட்டி நியூ சீலாந்தை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் போட்டியே.

எதிர்வரும் சனிக்கிழமை ஒக்லாந்தில் இடம்பெறவுள்ள போட்டி இது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும், தென் ஆபிரிக்காவும், இலங்கையும் தத்தமது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள அணிகளாகக் காணப்படுகின்றன.

ஆனால் ஒவ்வொரு அணிக்கும் தலா 6 போட்டிகள் இருப்பதால் சுதாரித்துக்கொண்டு தத்தம் பலவீனங்களைக் களைந்து மீண்டும் வெற்றிபெறும் வழிவகைகளுடன் காலிறுதிக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகளுக்கும் தமது திறமையை அழுத்தமாக வெளிக்காட்டவேண்டிய உலகக்கிண்ணப் போட்டித் தொடராக இது அமைகிறது.

2019இல் 10 அணிகள் மட்டுமே விளையாடலாம் என்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் எண்ணக் கருத்தை பலரும் விமர்சித்துவரும் இந்த நேரத்தில் அதற்குப் பதிலடியாக சிறப்பாக விளையாடி தமது திறமைகளைக் காட்டவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
-------------------------------


 பாகிஸ்தானிய அணி நான் முன்னைய கட்டுரையில் சொல்லியிருந்தது போல, அஜ்மல், ஹபீஸ்,ஜுனைத் கான் ஆகியோரின் இன்மையை அதிகமாக உணர்கிறது.
இன்னும் சப்ராஸ் அஹமத்தை அணிக்குள் சேர்க்காமல் அணி சிதைந்துபோய், ஏதாவது ஒரு அதிசயத்துக்காக எதிர்பார்த்திருக்கிறது.

மேலதிகமாக தேவையற்ற ஏராளமான சர்ச்சைகளும் அணியை ஒருநிலையில் வைத்திருக்க உதவுவதாக இல்லை.
முதலில் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளருடன் மோதல், இப்போது தலைமைத் தேர்வாளர் மொயின் கானின் கசினோ விஜயம்.
இவர்கள் திருந்துவதாகவோ, வருந்துவதாகவோ இல்லை.
------------------------

இந்திய அணிக்கு துடுப்பாட்டம் எப்போதுமே அவர்களது பலம்.
ஆனால் பலவீனமான அம்சங்களாகக் கருதப்பட்ட பந்துவீச்சும், களத்தடுப்பும் புதிய உத்வேகத்துடன் எழுந்திருப்பது ஏனைய அணிகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.

பலம் வாய்ந்த தென் ஆபிரிக்காவே திணறிப்போனது.
கட்டுப்பாடான வேகப்பந்து வீச்சும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தும் துரித களத்தடுப்பும் இந்திய அணியின் வெற்றிகளைப் பிரம்மாண்டமாக்கியிருக்கின்றன.

எனினும் பந்துகள் எகிறும் வேகமான ஆடுகளங்களில் எப்படி இந்தியா ஆடும் என்ற கேள்வி ஆர்வமூட்டுவது.

உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பிக்க முன் இஷாந்த் ஷர்மாவின் உபாதை, மோஹித் ஷர்மாவை இந்தியாவுக்குப் பரிசளித்தது.

இதேபோல அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் போல்க்னரின் காயமும் மிட்செல் மார்ஷை அவுஸ்திரேலியாவுக்கு வழங்க 5 விக்கெட்டுக்கள் கிடைத்தன.

-------------------

இப்போது கிடைத்திருக்கும் செய்தியில் இலங்கை அணியின் ஜீவன் மென்டிஸ் காயமடைந்துள்ளாராம்.

அவருக்குப் பதிலாக (நான் முன்னரே பல தடவை குறிப்பிட்ட) இலங்கை அணியின் முன்னணி ஒருநாள் போட்டி வீரரான உபுல் தரங்கவை அனுப்ப ஏற்பாடுகள் நடக்கின்றன.
(இப்படி ஏதாவது நடந்து தரங்கவை அழைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தே இருந்தேன்)

தரங்க உலகக்கிண்ண அணியில் முன்னரே இடம்பிடித்திருக்கவேண்டும். இப்போதாவது அவரை சேர்த்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிட்டியிருப்பதும் இலங்கைக்கான வாய்ப்பாக அமையலாம்.

ஆனால் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவா அல்லது மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராகவா தரங்க விளையாடவுள்ளார் என்ற கேள்வியும் எழுகிறது.
தரங்க இரண்டிலும் சிறப்பாக செய்யக்கூடியவர்.

தரங்கவை ஏனைய வீரர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்..
ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீரர்களின் மொத்த ஓட்டங்கள்


ஆனால் ஸ்விங் அதிகமாக உள்ள ஆடுகளங்கள் இவரை(யும்) சோதிக்கலாம்.
ஆனால் உள்ளூர்ப் போட்டிகளில் நல்ல form இல் ஓட்டங்களைக் குவித்து வருகிறார்.


அடுத்து ஏற்கெனவே குழுவில் உள்ள, இதுவரை வாய்ப்பு வழங்கப்படாத தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்னவுக்குப் பதிலாக அணிக்குள் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுகிறது.
சந்திமால் ஒருநாள் போட்டிகளில் மத்திய வரிசையில் ஓட்டங்கள் சேர்க்கக்கூடிய ஒருவர்.

தடுமாறி வரும் இலங்கையின் மத்தியவரிசைக்கு சந்திமாலும், தரங்கவை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்பிய பின், திரிமான்னவும் தேவை.

திசர பெரேராவும் ஆப்கானிஸ்தான் அணியுடன் காட்டிய நிதானத்துடன் கூடிய அதிரடியுடன் விளையாடினால் இலங்கை அண்மைக்காலமாக சொதப்புகிற slog overs சறுக்கலை நிவர்த்திக்கலாம்.

ஆனால், அதிரடியாக ஆடும் இன்னும் ஒரு வீரர் அவசியம்.
கடந்த வருடம் முழுதும் ஓட்டக்குவிப்பு இயந்திரமாக விளங்கிய அணித் தலைவர் மத்தியூஸ் மீண்டும் அதே formஇல் தேவைப்படுகிறார்.

பந்துவீச்சில் மாலிங்க, லக்மால், மத்தியூஸ் ஆகியோர் நம்பிக்கை தருகிறார்கள்.
குறிப்பாக லக்மாலின் கட்டுப்பாடு, ஸ்விங், எகிறும் வேகம் ஆகியன இலங்கைக்கு புத்துணர்ச்சி கொடுக்கின்றன.
ஆனால் ஹேரத்தும் விக்கெட்டுக்களை எடுக்கவேண்டும்.

அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்ள முதல் பங்களாதேஷ் அணியை வியாழன் அன்று இலங்கை சந்திக்கும்போது இந்தக் குறைகளை இலங்கை களைந்துகொள்ள வேண்டும்.

இல்லாவிடில் 1999ஐப் போன்ற இன்னொரு மோசமான உலகக்கிண்ணம் காத்திருக்கிறது இலங்கைக்கு.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 233 என்ற இலக்கைக் கடப்பதற்குள்ளேயே உயிர் போய்வந்த உணர்வு. அது மிக மோசமான ஒரு வெற்றி.
மீண்டும் வேண்டாம் அப்படியொரு மாரடைப்பு !!!


படங்கள் & புள்ளி விபரங்கள் - நன்றி ESPN Cricinfo

February 17, 2015

உலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15

B பிரிவுகளின் அணிகளின் அலசலாக ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு எழுதிய கட்டுரையுடன்,
மேலதிகமாக சில விடயங்களை சேர்த்து இடும் பதிவு இது.


உலகக்கிண்ணத்தில் நான்கு நாட்கள் முடிந்திருக்கின்றன.
6 போட்டிகள் - நியூசீலாந்து மட்டுமே இரு போட்டிகளை விளையாடியிருக்கின்றது.

ஒரு டெஸ்ட் விளையாடும் அணி, டெஸ்ட் அந்தஸ்தில்லாத சிறிய அணியிடம் தோல்வியுற்ற அதிர்ச்சி முடிவு.
அதுவும் 300க்கு மேற்பட்ட ஓட்ட இலக்கைத் துரத்தி வென்றுள்ளது அயர்லாந்து.

ஆறு 300க்கு மேற்பட்ட ஓட்டங்கள்.

5 சதங்கள்.
3 ஐந்து விக்கெட் பெறுதிகள்.

ஆனால் நேற்றுவரை  வெற்றி பெற்ற அணிகள் ஐந்துமே மிக இலகுவாக வென்றிருந்தன.

இறுதி இரண்டு போட்டிகளைத் தவிர ஏனைய நான்கு போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகளே வெற்றி பெற்றிருந்தன.

எனினும் இன்றைய போட்டியில் ஸ்கொட்லாந்து, அதிக வாய்ப்புக்களை உடைய நாடாகப் பலரும் கருதியுள்ள. சொந்த ஆடுகள அனுகூலங்களையும் கொண்ட நியூசீலாந்து அணியைக் கடுமையாக சோதித்திருந்தது.
7 விக்கெட்டுக்களை இழந்தே 143 என்ற இலக்கைக் கடக்கக் கூடியதாகவிருந்தது.

ஆடுகளத்தின் அனுகூலமும், முயற்சியும் இருந்தால் எந்த சிறிய அணியும் பெரிய அணிகளுக்கு சவால் கொடுக்கக்கூடிய தொடராக இந்த உலகக்கிண்ணம் மாறிவருகிறது.

B பிரிவு அணிகளில் முக்கிய அணிகளாகப் பலராலும் கருதப்படாத இரு அணிகளான சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளைப் பற்றி முன்னைய கட்டுரையில் சிலாகித்து, கவனிக்கக்கூடிய அணிகள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அவற்றில் 'Dark Horses' சிம்பாப்வே தென் ஆபிரிக்காவுக்கே சவால் கொடுத்தது.

அயர்லாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளை மண் கவ்வச் செய்து,
2007இல் பாகிஸ்தான் & பங்களாதேஷ்
2011இல் இங்கிலாந்து,
வரிசையில் உலகக்கிண்ணப் போட்டிகளில் டெஸ்ட் அணியொன்றை நான்காவது தடவையாக வீழ்த்தியுள்ளது.

தனது அணியின் முக்கிய வீரர்களை இங்கிலாந்தின் வாய்ப்புக்களுக்கு இழந்து வந்தாலும் கூட, தொடர்ந்தும் வெற்றிகளைப் பெற்று முன்னேறி வரும் திறமையான அயர்லாந்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு, தனக்கான டெஸ்ட் வாய்ப்பை மீண்டும் அழுத்தமாக கோரிய விண்ணப்பம் இது.

இதே போல முன்னைய கட்டுரையில் நான் சொன்னது போல,

//எனது கணிப்பில் இரண்டு போட்டிகளாவது நிச்சயமாக எதிர்பாராத அதிர்ச்சியான முடிவுகளைத் தரும் என நம்புகிறேன்.//
என்பதில் இன்னும் சில முடிவுகள் இதே போல ஆகும் போல தெரிகிறது.

ஓட்டக்குவிப்பு அதிகமுள்ள உலகக்கிண்ணத் தொடர் என்பது ஒவ்வொரு போட்டியிலுமே குவிக்கப்படும் 300+ ஓட்டங்கள் நிரூபித்துக்கொண்டிருக்க,

 சாதனைகளில் சிலவாவது உடைக்கப்படும் என்று கூறியிருந்தேன்.

தென் ஆபிரிக்காவின் மில்லர் - டுமினியினால் உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டுமில்லாமல், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே 5வது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை முறியடிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் மோர்கனும் போபராவும் அயர்லாந்து அணிக்கெதிராக 2013இல் பெற்றிருந்த 226 ஓட்டங்களை முறியடித்து, 256 ஓட்டங்கள் என்ற புதிய சாதனையைப் பதிந்தனர்.

இன்னும் பல சாதனைகள் வரிசையாக முறியும், உடையும் போல தெரிகிறது.

இந்த உலகக்கிண்ணப் போட்டிகளின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்திய - பாகிஸ்தான் போட்டியும் பெரிய விறுவிறுப்பு இல்லாமல் முடிவுக்கு வந்தது.
6வது தடவையாகவும் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றுப்போனது.

முதல் தடவையாக இந்திய வீரர் ஒருவர் பாகிஸ்தானிய  அணிக்கெதிராக  உலகக்கிண்ணப் போட்டிகளில் சதம் பெற்றுள்ளார்.

-----------------
இதுவரை நடந்துள்ள 6 போட்டிகளில் இரண்டு முக்கிய சர்ச்சைகள் தொடர்ந்தும் விவாதத்துக்கு உள்ளாகும் போல தெரிகிறது.

1.அவுஸ்திரேலிய - இங்கிலாந்து போட்டியில் இறுதியாக ஜேம்ஸ் அன்டர்சனின் ரன் அவுட் முறை மூலமான ஆட்டமிழப்பு.
நடுவரின் தவறு காரணமாக போட்டி முடிந்தவுடனேயே சர்வதேச கிரிக்கெட் பேரவை மன்னிப்பும் கோரியது.
விதிமுறைகள் தெரியாத குழப்பத்தினால் நடுவர்கள் குமார் தர்மசேன, ஸ்டீவ் டேவிஸ் ஆகியோர் விட்ட தவறு, ஜேம்ஸ் டெய்லர் என்ற இளம் துடுப்பாட்ட வீரரின் உலகக்கிண்ண சதம் பெறும் அரிய வாய்ப்பை இல்லாமல் செய்தது.

2. இந்திய - பாகிஸ்தான் போட்டியில் உமர் அக்மலின் ஆட்டமிழப்பு.
துடுப்பில் பட்டதா படவில்லையா என்று சந்தேகமான ஆட்டமிழப்பு, தொலைக்காட்சி நடுவர் மூலமாக ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது.

Out or Doubt? Controversial Snicko Dismissal of Umar Akmal - India vs Pakistan

ஆனால் snickometer கூட தெளிவான முறையில் பந்து துடுப்பில் பட்டதை உறுதிப்படுத்தவில்லை.
வாதப் பிரதிவாதங்களும், இனி வரும் போட்டிகளில் இப்படியான முடிவுகள் பற்றிய யோசனைகளும் தொடரும்.

----------------------

B பிரிவு அணிகளில் ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணி மட்டும் இன்னும் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.​
A பிரிவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இனித் தான் போட்டிகள்.நாளை.

மிக குழப்பமான, அதேவேளை கடுமையான போட்டி நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B அணிகள் பற்றிய அலசல்.


தென் ஆபிரிக்கா 


92ஆம் ஆண்டிலிருந்து உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிவரும் தென் ஆபிரிக்கா,3 தடவைகள் அரையிறுதிக்கு வந்தும் இதுவரை இறுதிப்போட்டி ஒன்றிலேனும் விளையாடமுடியாத துரதிர்ஷ்டசாலி அணி.

உலகக்கிண்ணம் வெல்ல மிக வாய்ப்புள்ள அணியாக 1996 முதல் ஒவ்வொரு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா கூறப்பட்டு வந்தாலும் முக்கியமான தருணங்களில் எப்படியாவது தோற்று வேளியேறிவிடுவதனால் எதிர்பார்க்கும்போது தோற்றுவிடுபவர்கள் - chokers என்ற பட்டம் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.

ஒரு சாபம் போல தென் ஆபிரிக்காவைத் துரத்தும் உலகக்கிண்ண இன்மை இம்முறையாவது தென் ஆபிரிக்காவின் பொற்காலப் பரம்பரை என்று சொல்லப்படும் ஏபி டீ வில்லியர்ஸ், ஹாஷிம் அம்லா, டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்க்கல், டுமினி, டூ ப்ளேசிஸ், பிலாண்டர் போன்றோர் அடங்கியுள்ள அணி மூலமாகத் தீரும் என்று தென் ஆபிரிக்க ரசிகர் மட்டுமல்லாது, எல்லோருமே நம்புகின்றனர்.

அண்மைக்கால தொடர்ச்சியான வெற்றிகள், எந்த ஆடுகளங்கள், எந்த சூழ்நிலைகளிலும் வெற்றிபெறக்கூடிய அணியாக, முக்கியமாக அத்தனை வீரர்களும் மிகச் சிறப்பான formஇல் உள்ள அணியாகத் தென் ஆபிரிக்கா வளர்ந்து நிற்கிறது.

உலகின் முதல் நிலை அணியாக நிற்கும் அவுஸ்திரேலிய அணிக்கு அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து சவால் விடக்கூடிய ஒரே அணியாகவும் தென் ஆபிரிக்கா மட்டுமே தெரிகிறது.

உறுதியான மிக நீண்ட துடுப்பாட்டம், உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு, உயர் தரக் களத்தடுப்பு என்று எல்லா விதத்திலும் பலமாகத் தெரியும் ​தென் ஆபிரிக்காவின் மிகப் பெரும் ​பலம் மும்மூர்த்திகளான டீ வில்லியர்ஸ், அம்லா மற்றும் ஸ்டெயின்.

அதிலும் எந்த வேளையிலும் அடித்து நொறுக்கி ஓட்ட எண்ணிக்கையை அதிவேகமாக உயர்த்தக்கூடிய ஒரு துடுப்பாட்ட சூறாவளியான அணித்தலைவர் டீ வில்லியர்ஸ் அண்மையில் கூட ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் வேகமான அரைச்சத, சத சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

தென் ஆபிரிக்காவின் பலவீனமாகக் கருதப்பட்ட சுழல்பந்துவீச்சு இம்ரான் தாஹிரினால் ஓரளவு நிவர்த்திக்கப்பட்டாலும், இன்னும் சில நேரம் தடுமாறுகிறது.

முக்கியமான தருணங்களில் தடுமாறுவதை தென் ஆபிரிக்கா நிவர்த்தி செய்துகொண்டால் இறுதி வரை பயணிப்பது மட்டுமல்ல கிண்ணத்தையும் வெல்லலாம்.

முதல் போட்டியில் சிம்பாப்வேயினால் சோதிக்கப்பட்டது போக, மில்லர், டுமினி ஆகியோரின் சத்தங்கள் இன்னொரு விதமான நம்பிக்கையையும் கொடுத்துள்ளன.

​​கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - ​​டீ வில்லியர்ஸ், அம்லா


இந்தியா 


நடப்பு உலக சம்பியன்கள் என்பது ஒரு பக்கம் நம்பிக்கை இன்னொரு பக்கம் அழுத்தம்.
அவுஸ்திரேலிய மண்ணில் அண்மைக்கால தடுமாற்றங்கள் பாகிஸ்தான் அணியுடனான வெற்றியினால் துடைக்கப்பட்டு, சோர்ந்து போயிருந்த இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

அடுத்தடுத்த உலகக்கிண்ணங்களை வென்ற கிளைவ் லொயிட், ரிக்கி பொன்டிங்கின் வரிசையில் சேர்வதற்கான வாய்ப்பு மகேந்திர சிங் தோனிக்கும் கிடைக்குமா என்பது மிக முக்கியமாக இந்தியாவின் பலமான துடுப்பாட்டத்திலேயே தங்கியுள்ளது.

ஓட்டங்களை மலையாகக் குவிக்கும் கோளி, ரோஹித் ஷர்மா, தவான், ரெய்னா, ரஹானே, தோனி என்று உலகின் அத்தனை பந்துவீச்சு வரிசைகளையும் அச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசை.

வாய்ப்புக் கிடைத்தால் 400 ஓட்டங்களையும் நெருங்கக்கூடிய நம்பிக்கையான துடுப்பாட்டம்.

அதிலும் அண்மைக்காலத்தில் ஓட்டக் குவிப்பு இயந்திரமாக மாறிவரும் கோளியும், பெரிய ஓட்ட எண்ணிக்கைகளை அடிக்கடி பெற்றுவரும் ரோஹித் ஷர்மாவும் இந்தியாவின் மிகப் பெரும் பலங்கள்.

எனினும் எகிறும் வேகப்பந்துகளும், தடுமாற வைக்கும் ஸ்விங் பந்துகளும் இந்திய துடுப்பாட்ட வீரர்களை அடிக்கடி சோதித்தே வருகின்றன.

அடுத்து, இந்தியாவின் மிகப் பலவீனமான புள்ளி அவர்களது பந்துவீச்சு.
எனினும் இப்போது உமேஷ் யாதவும், ஷமியும் துல்லியத்தை தமது துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றனர்.
எனினும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தியத்போல  அஷ்வின் பந்துவீசினால் இந்தியாவுக்கு இன்னொரு குறை நீங்கும்.

தேவையான போது புவனேஷ் குமாரின் துல்லியமான பந்துவீச்சும், ஸ்டுவர்ட் பின்னியின் மிக சாதுரியமான மிதவேகப்பந்துவீச்சும், அவரது சகலதுறைத் திறமையும் கைகொடுக்கும்.

ரெய்னா, கோளி, ஜடேஜா, ரஹானே போன்ற இளைய தலைமுறை வீரர்கள் தரும் நம்பிக்கை தரக்கூடிய களத்தடுப்பு.


​​கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - விராட் கோளி, சுரேஷ் ரெய்னா

இதே போல விளையாடினால், அழுத்தத்துக்கு உட்படாவிட்டால் காலிறுதி தாண்டி அரையிறுதி வரை செல்வது உறுதி.


பாகிஸ்தான் 


அஜ்மல், ஜுனைத் கான், ஹபீஸ் ஆகியோர் இல்லாமல் ​பலவீனப்பட்டுப் போயிருக்கும் பந்துவீச்சும், உறுதியில்லாமல் இருக்கும் அணித் தெரிவுகளும் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடிய விதமும் எந்தவொரு நம்பிக்கையையும் தருவதாக இல்லை.

இந்தக் குறைகள் நீக்கப்படாவிடின், இந்தப் பிரிவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய அணிகளான அயர்லாந்து, சிம்பாப்வே ஆகிய அணிகளிடமும் தோற்றுவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

எதிரணிகளை அச்சுறுத்தக்கூடிய பநதுவீச்சாளரோ, நீண்ட நேரம் துடுப்பெடுத்தாட நம்பி இருக்கக்கூடிய துடுப்பாட்ட வீரர்களோ இல்லாத குறையோடு மோசமான களத்தடுப்பும் சேர்ந்து பாகிஸ்தானை பலிகொள்ளப் போகிறது.

போதாக்குறைக்கு நம்பகமான சப்ராஸ் அஹ்மத்தை நீக்கிவிட்டு, உமர் அக்மலை விக்கெட் காப்பாளராக போடுவது பாகிஸ்தானுக்கு அனுகூலங்கள் தருவதை விட, முக்கியமான பிடிகள் தவறவிடப்பட்டு பாதகங்கள் தான் தரப்போகிறது.

சப்ராஸ் உபயோகமான ஓட்டங்களும் பெற்றுத்தரக்கூடியவர்.

மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான், அஃபிரிடி ஆகிய மூத்த வீரர்கள் தான் அணியை எப்போதும் காப்பாற்ற வேண்டும் என்பதை விட  இந்த அணி இளையவர்களான அஹ்மட் ஷெசாட், சொஹைல் ஹரிஸ்,உமர் அக்மால் மற்றும் சொஹைல் கான் மூலமாக அணி முன்னேறுவது ஆரோக்கியமானது.

அப்ரிடி அதிரடி துடுப்பாட்டம் மூலாமாக முக்கிய ஓட்டங்களையும், விக்கெட்டுக்களை உடைக்கும் பந்துவீச்சின் வீரியத்தையும் காட்டின் பாகிஸ்தான் உற்சாகம் பெறும்.

​கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - அஹ்மட் ஷெசாட், சொஹைல் கான்.

​இப்படியே போனால் காலிறுதி வந்தாலே பெரிய விஷயம்.


மேற்கிந்தியத் தீவுகள்.


​கிரிக்கெட் சபை - வீரர்கள் சண்டையினால் சின்னாபின்னம் ஆகியுள்ள முன்னாள் சம்பியன்கள்.
முக்கியமான மூன்று வீரர்கள் இன்மை, அணிக்குள்ளே சுமுக நிலை இல்லை, அணித் தலைவருக்கும் அனுபவம் இல்லை, நட்சத்திர வீரர்கள் கெயில், சாமுவேல்ஸ், சமி, ரோச், ட்வெய்ன் ஸ்மித் போன்ற வீரர்கள் இருந்தும் வெற்றி பெறுவது எப்படியென்று மறந்துபோயுள்ள ஒரு அணி.

தொடர்ச்சியான தோல்விகள் அணிக்குள்ளே நம்பிக்கையீனத்தை நீண்ட நாட்களாக விதைத்துள்ளன.

கெயில், சாமுவேல்ஸ் எல்லாம் தனித்து ஒருநாள் போட்டியை வென்று கொடுத்து நாட்களாகின்றன.
பணம் கொழிக்கும் T20 போட்டிகள் பலவற்றில், பல நாடுகளின் லீக்குகளில் அதிகமாக விளையாடியோ என்னவொ ஒருநாள் போட்டிகளில் ஒரு அணியாக ஒட்டி விளையாடுவது சிரமமாக இருக்கிறது.

அணிக்குள் வரும் இளையவர்களும் நம்பிக்கை தருவதாக இல்லை.

அயர்லாந்துடனான தோல்வி இந்த அணிமீது இன்னும் நம்பிக்கையீனத்தையும், அணிக்குள்ளேயே சலிப்பையும் ஏற்படுத்தியிருக்கும்.

சமி, லென்டில் சிமன்ஸ் ஆகியோரின் சிறப்பான அன்றைய ஆட்டமும், டரன் பிராவோ போன்ற திறமை கொண்ட இளம் வீரர்களும் அணியின் அனுபவம் குறைந்த தலைவர் ஹோல்டரை நம்பிக்கையுடன் வழிநடத்தும் உற்சாகத்தை வழங்கவேண்டும்.

ட்வெய்ன் ப்ராவோ, பொலார்ட், சுனில் நரெய்ன் ஆகியோர் இல்லாத ஓட்டைகள் அடைக்கமுடியாதளவு பெரிதாக இருக்கின்றன.
ஆனால், யாரும் நம்பமுடியாதளவு பெரிய அணிகளை திடீரென வீழ்த்தக்கூடிய ஆற்றலும் ஒளிந்துள்ள அணி என்பது உண்மை.

காலிறுதி வாய்ப்புக்கள் அயர்லாந்துடனான தோல்விக்குப் பின் ஊசலாடுகின்றன.
பெரிய அணியொன்றை வீழ்த்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தினால் மீண்டும் உற்சாகத்துடன் மேலே மேலே பயணிக்கும்.


கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - டரன் சமி, க்ரிஸ் கெயில்.


அயர்லாந்து


இந்த உலகக்கிண்ணத்தில் கவனிக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஆச்சரிய அணி.
இதுவரை டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணியாக அதிக டெஸ்ட் விளையாடும் அணிகளை உலகக்கிண்ணத்தில் வீழ்த்திய அணி என்ற பெருமை அயர்லாந்துக்கே உள்ளது.

சில முக்கிய வீரர்களை காலாகாலம் இங்கிலாந்துக்கு இழந்துகொண்டு வந்தாலும் திறமை கொண்ட வீரர்களைக் கண்டெடுத்து,அனுபவம் வாய்ந்த அணியாகக் கட்டமைக்கப்பட்டுள்ள ஆற்றல்கொண்ட அணி.

அணியின் முக்கிய ஆறு வீரர்களும் ஏனைய டெஸ்ட் அணிகளுக்காக விளையாடி இருந்தால் இப்போது 100க்கு மேற்பட்ட ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி இருப்பார்கள்.

இந்த ஆறு பேரும் அணியின் பெரும் தூண்கள்..

தலைவர் போர்ட்டர்பீல்ட், ஓ பிரையன் சகோதரர்கள், ஜோய்ஸ், மூனி, ஸ்டேர்லிங்.
இவர்களோடு கூடவே குசாக் மற்றும் இளைய சுழல்பந்து வீச்சாளர் டொக்ரெல்.

வெற்றிக்கான தாகத்தோடு, ஒற்றுமையாக விளையாடும் இந்த அணிக்கு, பயிற்றுவிப்பாளர் பில் சிமன்ஸ் மற்றும் இங்கிலாந்து பிராந்தியப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஆகியன மேலதிக பலங்களாக சேர்கின்றன.

அயர்லாந்து அணி அதிரடியாக, ஆக்ரோஷமாக விளையாடும்போது டெஸ்ட் அனுபவம், பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஆகியன் இன்மை என்பது மட்டுமே பலவீனமாக இருக்கும்.

காலிறுதி செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன்.

சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி இதை முடிவு செய்யும்.

இந்தப் போட்டி, இந்த உலகக்கிண்ணத்தின் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன்.


கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - கெவின் ஓ பிரையன், ஸ்டேர்லிங்சிம்பாப்வே


ஒரு மாதத்துக்கு முன்பு வரை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளப்படாத ஒரு அணியாக இருந்த சிம்பாப்வே வெற்றி பெற வழிகள் அறியாமல் தவித்தது.
ஒழுங்கான பயிற்றுவிப்பாளர் இல்லாமல்,அணியில் இருந்த திறமையான வீரர்களுக்கு ஒரு நம்பிக்கை இல்லாமல் அணி ஏனோ தானோவென்று இருந்தது.
போதாக்குறைக்கு ஊதிய சிக்கல்கள், ஒப்பந்த இழுபறி என்று காலாகாலமாக சிம்பாப்வே கிரிக்கெட்டை நாசமாக்கும் பல விடயங்கள்.

அணியின் இளம் வீரர்கள் பலர் தாமாக விலகிச் செல்லவும் விழைந்தனர்.

அனுபவம் வாய்ந்த டேவ் வட்மோர் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், அணியில் எப்படியானதொரு எழுச்சி.

மீண்டும் தலைவராக சிக்கும்புரா நியமிக்கப்பட்டு அணி சரியான முறையில் கட்டமைக்கப்பட்டு, அவரவருக்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டு இப்போது சில காலம் முன்பு இருந்த வெற்றி பெறும் வாய்ப்புக்கள் கொண்ட சிம்பாப்வே அணி உருவாகியுள்ளது.

பயிற்சிப் போட்டிகளில் காட்டிய திறமை சிம்பாப்வே மீது கவனமாக இருக்கவேண்டும் என சொல்கிறது.

பிரெண்டன் டெய்லர், மசகட்சா, உத்செயா, தலைவர் சிக்கும்புரா போன்ற அனுபவ வீரர்களுடன், மிகத் திறமையான எதிர்காலத்துக்கான வீரர்கள் ஷோன் வில்லியம்ஸ், க்ரெய்க் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் சிம்பாப்வே அணியின் தூண்கள்.

சிம்பாப்வேயின் களத்தடுப்பு எப்போதுமே ஏனைய அணிகளுக்கு நிகராக சொல்லக் கூடியது.
அத்துடன் சுழல்பந்து வீச்சும் தகுந்த ஆதரவுள்ள ஆடுகளங்களில் எதிரணிகளை உருட்டிவிடும்.
எனினும் நம்பியிருக்கக்கூடிய வேகப்பந்து வீச்சு இன்மை தான் பலவீனம்.

வட்மோரின் சாதுரியமும், தேடலும் முயற்சியும் மிக்க அணியும் சேர்ந்து சிம்பாப்வேயையும் அயர்லாந்து போலவே காலிறுதி வாய்ப்பைப் பெறக்கூடிய அணியாகவே காட்டுகிறது.

கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - ஷோன் வில்லியம்ஸ், பிரெண்டன் டெய்லர்


ஐக்கிய அரபு ராஜ்ஜியம்


இந்த உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் அணிகளில் மிகப் பலவீனமான அணி.

தலைவர், உப தலைவர் இருவருமே இந்த உலகக்கிண்ணத்தில் விளையாடும் வயது கூடிய வீரர்கள்.
மொஹம்மட் டாக்கிர், குராம் கான் ஆகிய 40 வயதைத் தாண்டிய அனுபவங்கள் இளைய வீரர்களுக்கு வழி காட்டலாம்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கழக மட்டப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சில வீரர்கள் கொஞ்சம் நம்பிக்கை தரலாம்.

முக்கியமாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அன்ட்ரே பெரெஞ்சர், இந்தியாவின் கேரளாவுக்காக விளையாடியுள்ள சகலதுறை வீரர் கிருஷ்ண சந்திரன் ஆகியோர் ஊக்கமாக விளையாடுகின்றனர்.

மஞ்சுள குருகே என்ற இன்னொரு இலங்கை வீரரும் விளையாடுகிறார்.

ஒரு வெற்றியையும் பெறக்கூடிய அறிகுறிகள் தென்படவில்லை.


----------------------

அணிகளின் அண்மைக்கால ஆட்டங்களும், முன்னைய தரவுகளும் சொல்கின்ற விடயங்கள் இவை.

எனினும் ஆட்டங்களில் வீரர்கள் காட்டும் திறமையும் அந்தந்த சந்தர்ப்பங்களுமே உலகக்கிண்ணத்தின் விதியைத் தீர்மானிக்கப்போகின்றன.
போட்டிகளை ரசிப்போம்.

அடுத்தடுத்த பகுதிகளில் போட்டிகளின் பெறுபேறுகள், நிலவரங்கள்,சாதனைகள் போன்றவற்றை அலசுவோம்.
பட்டியலிடுவோம்.


February 13, 2015

உலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார்? - முழுமையான பார்வை #cwc15

11வது உலகக்கிண்ணம்...

என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டனில் எழுதிய கட்டுரையை மேலதிக சுவையூட்டல் சேர்க்கைகளுடன் இங்கே பதிகிறேன்...

சில எதிர்வுகூறல்கள், உலகக்கிண்ணம் பற்றி முன்னரே நான் Twitter, Facebook மூலமாகச் சொல்லியிருந்த விடயங்களையும் இங்கே சேர்த்துள்ளேன்.

உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டங்களாகத் தெரிவியுங்கள்.
அவை என்னுடைய முன்னோட்டத்தின் நீட்சியாகவே இருக்கும்.

--------

உலகக்கிண்ணம் வென்ற தலைவர்கள்.
இரு தடவை வென்றவர்கள் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள்.


23 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலியா - நியூ சீலாந்து மீண்டும் இணைந்து நடத்துகின்றன.
1992 ஆம் ஆண்டு இவ்விரு நாடுகளும் சேர்ந்து நடத்திய உலகக்கிண்ணம் முதல் தடவையாக வர்ண சீருடைகள், வெள்ளைப் பந்துகள் போன்றவற்றோடு, 15 ஓவர்கள் விதிமுறை, தொலைக்காட்சி ஒளிபரப்பில் புதிய புரட்சி என்று பல இன்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்காத பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தியது.

இதெல்லாவற்றையும் விட, யாரும் எதிர்பாராத புதிய உலக ஒருநாள் சம்பியனையும் தந்திருந்தது.
இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் அதே நாடுகளுக்கு உலகக்கிண்ணம் திரும்பும் நிலையில், கிரிக்கெட்டில் நம்பமுடியாதளவு மிகப் பாரிய மாற்றங்கள்.

விரைவுத் துடுப்பாட்ட முறைகள், விதிகளில் பல்வேறு மாற்றங்கள், தொழினுட்பத்தின் முன்னேற்றத்தினால் நிறையவே வித்தியாசங்கள்.

14 நாடுகளுடன் மீண்டும் திரும்பும் உலகக்கிண்ணம் கடந்த உலகக்கிண்ணம் போலவே  போட்டிகளை நடத்தும் நாடுகள் இரண்டும் இறுதிப் போட்டியில் சந்திக்கக்கூடிய வாய்ப்பினை அதிகளவில் கொண்ட போட்டியாக அமையவுள்ளது.

களநிலை, காலநிலை சாதகத் தன்மை போட்டிகளை நடத்தும் இரு நாடுகளுக்கும், கூடவே தென் ஆபிரிக்காவுக்கும் அதிக சாதகத் தன்மையைத் தரும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த அணிகளுக்கு அடுத்தபடியாக இலங்கை அணிக்கு கூடுதலான வாய்ப்புக்கள் இருப்பதாக விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் பயிற்சி ஆட்டத்தில் சிம்பாப்வேயிடம் கண்ட அதிர்ச்சித் தோல்வியானது இலங்கையின் பந்துவீச்சின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, அதிர்ச்சிகளை ஏற்படுத்தி கிண்ணத்தை யாரும் எதிர்பாராமல் வெல்லும் அணியை 'Dark Horses' என்று குறிப்பிடுவார்கள்.

தொடர் ஆரம்பிக்க முதல், பெரிய நட்சத்திரங்கள் இல்லாவிடினும் ஆச்சரியங்களை ஏற்படுத்தும் அணி எனக் கருதப்பட்ட மேற்கிந்தியத் தீவுகளைத் தாண்டி, பயிற்சி ஆட்டங்களில் காட்டிய பெறுபேறுகளின்படி சிம்பாப்வேயை உற்று நோக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

Zimbabwe beat #SriLanka today & made Co hosts #NewZealand to struggle the other day, looks like a unit capable of creating upsets #cwc15
96இல் இலங்கை உலகக்கிண்ணம் வென்றபோது பயிற்றுவித்த தேவ் வட்மோர் இப்போது சிம்பாப்வேயை நெறிப்படுத்துகிறார் என்பது அவ்வணி பற்றி இன்னும் கொஞ்சம் கவனமாக ஏனைய அணிகள் இருக்கவேண்டும் என்பதற்கான இன்னொரு முக்கிய காரணம்.

அதேவேளை இங்கிலாந்து அணியின் புதிய கட்டமைப்பும் அவர்களும் புதிய தலைமையின் கீழ் ஆச்சரியங்களை ஏற்படுத்தக்கூடிய அணியாகவே தெரிகிறது.

ஆசிய பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடிய அணிகள் அல்ல.

அதிலும் உலகக்கிண்ணம் என்று வரும்போது உயிரைக்கொடுத்தும் விளையாடக்கூடியன.
அதில்வேறு, நடப்பு சம்பியனாக இந்தியா இருப்பதனால், தனது பட்டத்தை எப்பாடுபட்டாவது தக்க வைத்துக்கொள்ள முனையும்.

பத்தாவது டெஸ்ட் அணியான பங்களாதேஷில் திறமையான வீரர்கள் சிலர் இருந்தும் அந்த அணியை காலிறுதிக்குக் கூடச் செல்லும் அணியாகக் கருதமுடியாது.

அதிலும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அயர்லாந்து அணியிடம் கண்ட தோல்வி பங்களாதேஷ் அணி பற்றிய எந்த ஒரு நம்பிக்கையையும் தருவதாக இல்லை.

இந்த 10 நாடுகளுடன் விளையாடும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத 4 அணிகளில், ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணி தவிர்ந்த ஏனைய மூன்று அணிகளுமே பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கக் கூடிய ஆற்றலும், இப்போது அனுபவமும் கொண்டன.

2011 உலகக்கிண்ணத்திலேயே இங்கிலாந்தை தோல்வியடையச் செய்து உலகை ஆச்சரியப்படுத்திய அயர்லாந்து.

அசந்தால் எந்தப் பெரிய அணியையும் அசைத்து ஆடிவிடும் ஆப்கானிஸ்தான்.

அண்மைக்காலத்தில் துரித வளர்ச்சியைக் காட்டிவரும் ஸ்கொட்லாந்து.
நடந்த இரு பயிற்சிப் போட்டிகளிலும் ஸ்கொட்லாந்து அசத்தியது.
ஸ்கொட்லாந்தை விட பலமான அணியாகக் கருதப்படும் அயர்லாந்து அணியை வீழ்த்தியதோடு, மேற்கிந்தியத்தீவுகள் அணி பெற்ற 313 ஓட்டங்களையும் விடாமல் துரத்தி மூன்றே மூன்று ஓட்டங்களால் மட்டுமே தோற்றிருந்தது.

எனவே இரு பிரிவுகளையும் பார்த்தால், எனது கணிப்பில் இரண்டு போட்டிகளாவது நிச்சயமாக எதிர்பாராத அதிர்ச்சியான முடிவுகளைத் தரும் என நம்புகிறேன்.பயிற்சிப் போட்டிகளில் எல்லா அணிகளுமே தங்களது வீரர்களைப் பரீட்சித்துப் பார்க்கவே விரும்பியிருக்கும் என்பதாலும், அதனால் வெற்றியை விட, உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான வியூகங்களையே அதிகமாகக் கருத்தில் கொண்டிருக்கும் என்பதாலும் அந்தப் பயிற்சிப் போட்டிகளின் முடிவுகளை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது.

ஆனாலும், சிறிய அணிகள் தம்மை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக அந்தப் போட்டிகளைப் பயன்படுத்தியிருந்தன.
அதேபோல விளையாடிய வீரர்களில் தடுமாறியவர்களை வைத்து, அந்தந்த அணிகளின் பலவீனங்களையும் கணக்கிட்டுக்கொள்ளலாம்.

இந்த உலகக்கிண்ணத்தைப் பொறுத்தவரையில் ஏதாவது அதிர்ச்சிகள் நிகழாதவிடத்தில், தரப்படுத்தலில் முதல் 8 இடங்களிலும் உள்ள நாடுகள் தடம் மாறாமல் காலிறுதிக்கு செல்லும்.

எனவே Associate Members என்று குறிப்பிடப்படும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகளுக்கு தங்களை சர்வதேச மட்டத்தில் / உலகக்கிண்ண அளவில் தங்களை வெளிப்படுத்தும் இறுதிவாய்ப்பாகவும் இதுவே.

காரணம், அடுத்ததாக 2019இல் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளில் 10 நாடுகளாக மட்டுப்படுத்தப்படவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் தரப்படுத்தலில் குறிப்பிட்ட ஒரு கால எல்லையில் முதலிடத்தில் உள்ள 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும். 
ஏனைய இரு டெஸ்ட் அணிகளும், அந்தஸ்தில்லாத அணிகளோடு மோதி அதிலிருந்து தான் தெரிவாகும் வழியுள்ளது.
எனவே பங்களாதேஷ்,சிம்பாப்வே ஏன் சிலவேளைகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கூட இது ஒரு இறுதி வாய்ப்பு தான்.

இலங்கையின் இரு பெரும் கிரிக்கெட் சிகரங்களான மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார ஆகியோர் இந்த உலகக்கிண்ணத்தின் பின்னர் ஒய்வு பெறவுள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்னும் பாகிஸ்தானின் ஷஹிட் அஃப்ரிடியும் உலகக்கிண்ணத்தின் பின்னர் ஒய்வு பெறுவதாக முன்னரே தெரிவித்திருந்தார்.

இவர்களைத் தவிர மைக்கேல் கிளார்க், மகேந்திர சிங் தோனி, மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான், ப்ரட் ஹடின், டில்ஷான், ஹேரத் இன்னும் பலருக்கும் இது இறுதி உலகக்கிண்ணமாக அமையலாம்.இன்னும் பல முன்னைய சாதனைகள் தகர்க்கப்படலாம்.

அதில் உலகக்கிண்ணத்தில் அதிக மொத்த ஓட்டங்கள், மொத்த விக்கெட்டுக்கள், ஒரு தொடரில் கூடிய ஓட்டங்கள், விக்கெட்டுக்கள் போன்றவை நிச்சயம் முறியடிக்கப்படா.

எனினும் விக்கெட் காப்பில் அதிக ஆட்டமிழப்புக்களை செய்த கில்கிறிஸ்ட்டின் (52) சாதனையை இம்முறை சங்கக்கார (46) முறியடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகளிலும் இரட்டைச் சதம் மிக இலகுவாகப் பெறப்படுவதால், இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் சிலவேளை முதலாவது உலகக்கிண்ண இரட்டைச் சதத்தைத் தரலாம்.

நியூ சீலாந்தின் சிறிய மைதானங்களில் இந்தியா - பேர்முடா அணிக்கேதிராகப் பெற்ற 413 ஓட்டங்கள் என்ற சாதனையை ஏதாவது ஒரு அணி முறியடிக்கும் என்று நம்ப இடமுண்டு.

உலகக்கிண்ணத்தை இதுவரை ஒரு தடவை தானும் வெல்லாத முக்கியமான அணிகள்...
இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, நியூ சீலாந்து.

இதில் தென் ஆபிரிக்கா அல்லது நியூ சீலாந்து தங்களது முதலாவது உலகக்கிண்ணத்தை இம்முறை வெல்லக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பைக் கொண்டுள்ளன.

இதைப் பற்றித்தான் இப்படி சொல்லியிருந்தேன்...

உலகக்கிண்ணம் பற்றி எழுதும் நேரத்தில், அது பற்றி யோசிக்கையில் சரேலென மனதில் ஒரு எண்ணம் வந்தது...ஒரு அசரீரி மனதிலே சொன்ன மாதிரி.,. (விக்கிரமாதித்தனோ என்று கேட்டால் கெட்ட கோபம் வரும்)
1992 உலகக்கிண்ணப் போட்டிகளின் போது தான், தென் ஆபிரிக்க, நியூ சீலாந்து அணிகளுக்கு 'சாபம்' விழுந்தது.திறமையான அணிகளாக- கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புக்கள் இருந்தும் துரதிர்ஷ்டமாக அரையிறுதிகளோடு வெளியேறியிருந்தன.
இப்போது இந்த இரண்டு அணிகள் தான், ஏனைய எல்லா அணிகளையும் விட திடமான அணிகளாக, தொடர்ந்தும் பிரகாசித்துவரும் பலமான அணிகளாகத் தெரிகின்றன.தொடர்ந்து வெல்கின்றன.தலைவர்கள் ABD, McCullum & Run Machines Amla, Kane Williamson தொடர்ந்தும் ஏனைய அணிகளுக்கு சிம்ம சொப்பனங்களாக விளங்கிவருகிறார்கள்.
எங்கே 'சாபம்' ஆரம்பித்ததோ, அங்கேயே முறிந்து, இதுவரை உலகக்கிண்ண இறுதியை எட்டிப் பார்க்காத இவ்விரு அணிகளும் இம்முறை மெல்பேர்னில் இறுதிப் போட்டியில் விளையாடுமோ?
வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.

உலகக்கிண்ணம் ஆரம்பமாவதற்கு இன்னும் சில மணிநேரமே இருக்கும் நேரத்தில் வழமையாக நான் குறிப்பிடும் சில ஊகங்கள், அனுமானங்கள்....

ஜனவரி 24 நான் குறிப்பிட்ட காலிறுதிக்கான அணி வரிசைகள்..

https://www.facebook.com/arvloshan/posts/10155108225685368
‪#‎WorldCup‬ ‪#‎CWC15‬
Early prediction
Based on the current form and performances in Australia and New Zealand my prediction for Quarter Finals
Australia vs WI
NZ vs Pak
SL vs India
England vs SA
so every possibilities of a Aus vs SA Final.

இதே போல மூன்று முக்கியமான டெஸ்ட் விளையாடும் அணிகள் இம்முறை நிச்சயமாக உலகக்கிண்ணத்தை வெல்லாது என்று அடித்துச் சொல்லி வைக்கிறேன்.
இந்தியா 
பாகிஸ்தான் 
இங்கிலாந்து 

இவற்றோடு மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் ஆகியவற்றை நீங்களும் கூட கணக்கில் கொள்ள மாட்டீர்கள் என எனக்கும் தெரியுமே...இனி இரு பிரிவுகளிலும் உள்ள அணிகளை சுருக்கமாக அவற்றின் வாய்ப்புக்கள், முக்கிய வீரர்கள்,பலம், பலவீனங்களோடு பார்க்கலாம்.


பிரிவு A 

அவுஸ்திரேலியா 

4 தடவை உலகக்கிண்ணம் வென்ற உலகத்தின் கிரிக்கெட் சக்கரவர்த்தி.
ஐந்தாவது கிண்ணத்தைக் குறிவைத்து நம்பிக்கையோடு களம் இறங்குகிறது.
சொந்த மைதானங்களும் மேலதிக சாதகத்தன்மையைத் தரும் நிலையில், உலகக்கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகப் பலரும் கருதுவது அவுஸ்திரேலியாவையே.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு, என்று சகலதுறையிலும் மிகச் சிறந்த நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு முழு நிறைவான அணி.
ஒருநாள் போட்டிகளில் இப்போது தரப்படுத்தலில் முதலாமிடம்.

வோர்னர், பிஞ்ச், ஸ்மித், மக்ஸ்வெல் என்று எல்லோருமே துடுப்பாட்டத்தில் கலக்கி வருகிறார்கள்.
ஜோன்சன், ஸ்டார்க், புதியவர் ஹெசில்வூட் ஆகியோர் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சைக் கட்டமைத்துள்ளனர்.

சகலதுறை வீரர் மக்ஸ்வெல் எந்தவொரு போட்டியையும் சில ஓவர்களில் தனது துடுப்பாட்டம், பந்துவீச்சு அல்லது களத்தடுப்பினால்  மாற்றி, அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியாக மாற்றக்கூடியவர்.

ஆனால் காயமுற்றுள்ள போல்க்னர் இன் இன்மை அவுஸ்திரேலியாவுக்கு நிச்சயம் ஓரளவு பாதிப்புத் தான்.

தலைமைப் பிரச்சினை ஆரம்பத்தில் இருந்தாலும், இப்போது மைக்கேல் கிளார்க்கின் உபாதை குணமாகியிருப்பதால், அது சிக்கல் இல்லாமல் முடிந்திருக்கிறது.

கிளார்க் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட முடியாது என்பது  சிறிய தாக்கம் எனினும், கிளார்க் உள்ளே வர பெய்லி அணியை விட்டு நீக்கப்படுவார் என்பது ஒரு வித வேடிக்கை தான்.

4 தடவை சாம்பியனான அவுஸ்திரேலியா, இரு தடவை இறுதிப்போட்டியில் தோற்றும் இருக்கிறது.

சுழல்பந்து வீச்சும், சில நேரங்களில் சுழல்பந்து வீச்சுக்குத் தடுமாருவதுமே அவுஸ்திரேலியாவின் பலவீனங்களாகத் தெரிகிறது.
முதல் சுற்றுப்போட்டிகளில் நியூ சீலாந்துக்கு எதிரான ஒரே போட்டியைத் தவிர, எல்லாவற்றையும் சொந்த நகரங்களிலேயே விளையாடக்கூடிய வாய்ப்புடைய அவுஸ்திரேலியாவுக்கு ரசிகர்களின் ஆதரவு ஊக்கமாகவும், சில நேரம் அழுத்தமாகவும் இருக்கப்போகிறது.

கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - மக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித்.

உலகக்கிண்ணம் வெல்லும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.


நியூ சீலாந்து 


6 தடவைகள் அரையிறுதி வந்தும், ஒரு தரம் தானும் இறுதிப்போட்டியை எட்டிப் பார்க்காத துரதிர்ஷ்டசாலி அணி.
இறுதியாக உலகக்கிண்ண இறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு 1992இல் இங்கேயே உலகக்கிண்ணம் நடைபெற்ற வேளையில் இருந்தது.

இறுதியாக இரண்டு தரமும் இலங்கையினாலேயே அரையிறுதியில் தோல்வி கண்டு வெளியேறியிருந்தது.
இது தவிர இலங்கை அணியை உலகக்கிண்ணப் போட்டிகளில் கடைசியாக சந்தித்த 5 போட்டிகளிலும் தோல்வியையே கண்டுள்ளது.
இறுதியாக நியூ சீலாந்து வென்றது அதே 1992இல், இதே நியூ சீலாந்தில் வைத்து.

1992 மார்ட்டின் க்ரோ போலவே, இம்முறை மக்கலமின் தலைமையில் சிறந்த அணியொன்று நம்பிக்கையுடன் களம் காணுகிறது.
அவுஸ்திரேலிய அணியைப் போலவே சகலதுறைகளிலும் கலக்குகின்ற சிறந்த வீரர்களைக் கொண்ட பலமான அணியாகத் தெரிகிறது.

மக்கலம், கப்டில், வில்லியம்சன், டெய்லர், ரொங்கி என்று அனைவருமே தொடர்ச்சியாக ஓட்டங்களை மலையாகக் குவித்துவருகின்றனர்.

சௌதீ, போல்ட், மில்ன் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களும், வெட்டோரியின் அனுபவ சுழல்பந்துவீச்சும் சேர்ந்து, கூடவே கொரி அன்டர்சனின் மிதவேகப்பந்துவீச்சும் நியூ சீலாந்தை இன்னொரு மிகச் சிறந்த பந்துவீச்சு அணியாகக் காட்டுகிறது.

களத்தடுப்பும் உயர்தரத்தில் இருக்கும் ஒரு அணி.
வேகமாக ஓட்டங்களைக் குவிப்பதும், பெரிய ஓட்ட எண்ணிக்கைகளைப் பெறுவதும், நீண்ட துடுப்பாட்ட வரிசையும் நியூ சீலாந்தின் பலமாக இருக்கின்றன.

சுழல்பந்துவீச்சுக்கு சில நேரங்களில் தடுமாறுவதும், அழுத்தங்களுக்கு உட்படும் நேரம் எதிர்பாராத தோல்விகளும் நியூ சீலாந்தின் பலவீனம்.

கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - கேன் வில்லியம்சன், பிரெண்டன் மக்கலம்.

தங்கள் முதலாவது உலகக்கிண்ணத்தை இம்முறை வெல்லும் வாய்ப்புடைய அணியாகத் தெரிகிறது.இலங்கை 


1996இல் கிண்ணம் வென்ற பிறகு கடைசி இரு தடவைகளும் இறுதியில் தோல்வி கண்ட அணி.

மஹேல, சங்கக்கார, டில்ஷான், ஹேரத், மாலிங்க, குலசெகரபோன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களோடு களம் காணும் இலங்கை அணி அரையிறுதி வரை தடையின்றி நடைபோடக்கூடிய அனியென்பதைஅண்மைக்காலத்தில் பலவீனமான பந்துவீச்சு ஐயப்படுத்துகிறது.

இன்னமும் அதிகமாக மூத்த வீரர்களில் தங்கியுள்ள துடுப்பாட்டம், டில்ஷான், சங்கக்கார ஆகியோரின் அண்மைக்கால சிறப்பான ஓட்டக்குவிப்பு மற்றும் கடந்த வருடம் முதல் ஓட்டங்களை அதிகளவில் பெற்றுவரும் தலைவர் அஞ்சேலோ மத்தியூசையுமே எதிர்பார்த்திருக்கிறது.

மாலிங்க, குலசேகர, ஹேரத் மற்றும் சச்சித்திர சேனநாயக்க ஆகிய நால்வரும் சிறப்பாகப் பந்துவீசினால், இலங்கையின் பந்துவீச்சும் சவாலானதாக விளங்கும்.

இலங்கையின் களத்தடுப்பு எப்போதும் சிறப்பாக இருப்பது ஒரு பலம்.

எகிறிக் குதிக்கும் பந்துகளையும் சமாளித்துவிடும் இலங்கை அணிக்கு, ஸ்விங் பந்துகள் சிக்கலைக் கொடுத்துவருகின்றன.
நியூ சீலாந்து ஆடுகளங்களும், இரு முனைகளிலும் பயன்படுத்தப்படும் வெள்ளைப்பந்துகளும் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களை சிரமப்படுத்தும்.

அடுத்து இலங்கை அணியின் தடுமாறும் மத்திய வரிசைத் துடுப்பாட்டம்.
வேகமாக ஓட்டங்கள் குவிக்கப்படவேண்டிய slog overகளில் (35 -50) இலங்கை அணி மிகத் தடுமாறி விக்கெட்டுக்களையும் இழக்கிறது.

கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - அஞ்செலொ மத்தியூஸ், குமார் சங்கக்கார 

அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மேலே செல்வது இலங்கை அணியின் அதிவிசேட திறமை மற்றும் அணியின் ஒற்றுமையினால் மட்டுமே.

உலகக்கிண்ணம் வென்று மஹேல, சங்காவை சிறப்பாக வழியனுப்பி வைத்தால் இலங்கை ரசிகர்களுக்கு அதைவிட கொண்டாட்டம் வேறேது?இங்கிலாந்து 


1992க்குப் பின்னர் அரையிறுதி வரை எட்டிப்பார்க்காத ஒருநாள் போட்டிகளின் மிக மோசமான அணிகளில் ஒன்று.
1979, 87, 92 ஆகிய மூன்று இறுதிப்போட்டிகளில் தோல்வியுற்ற துரதிர்ஷ்டசாலி அணி.

தலைவரை மாற்றி, வெற்றிபெறக்கூடிய வியூகங்களுடன் ஒருநாள் போட்டிகளுக்கான விசேடதத்துவ ஆற்றல் கொண்ட வீரர்களுடன் களம் காண்கிறது.
அண்மைக்கால தோல்விகள் தந்த பாடங்களுடன் சாதகமான களநிலைகள் அமைந்தால் எந்தப் பெரிய அணியையும் கவிழ்த்துவிடும் ஆச்சரியப்படுத்தக்கூடிய அணி.

இளைய துடுப்பாட்ட நட்சத்திரங்கள், மொயின் அலி, ஜோ ரூட், கரி பலன்ஸ், ஜேம்ஸ் டெய்லர், ஜோஸ் பட்லர் ஆகியோர் அணிக்கு புது ரத்தம் பாய்ச்சியுள்ளார்கள்.

ஒருநாள் போட்டிகள் என்றால் கலக்கும் தலைவர் ஒயின் மோர்கன், எனினும் இவரது அண்மைக்கால தடுமாற்றம் கொஞ்சம் கவலை தரும்.

கூடவே திடமான வேகப்பந்துவீச்சு வரிசை.
அண்டர்சன், வோக்ஸ். ப்ரோட்.

சுழல்பந்து வீச்சு தான் இங்கேயும் பலவீனமானதாகத் தெரிகிறது.
கூடவே உலகக்கிண்ணம் என்றாலே இறங்கிவிடும் இவர்களது சக்தி மட்டம்.

கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - மொயின் அலி, ஜேம்ஸ் டெய்லர்.

காலிறுதி உறுதி. அதற்கு மேல் இவர்களது முதற்சுற்று ஆட்டங்களில் ஆடும் விதம் தான் சொல்லும்.


பங்களாதேஷ் 


ஹத்துருசிங்க பயிற்றுவிப்பாளாரக வந்த பிறகு எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை இருந்தது.
பெரிதாக எதுவும் மாறவில்லை.

ஷகிப் அல் ஹசன், மோர்ட்டசா, முஷ்பிகுர் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும், ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை போட்டியை வெல்லும் அணி.

சொந்த மைதானங்களும், சுழல் பந்துக்கு சாதகமான மைதானங்களும் இருந்தால் மட்டுமே வெல்லும் சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாக தெரிகின்ற அணி.

அண்மைக்காலப் பெறுபேறுகளைப் பார்த்தால், ஆப்கானிஸ்தான் அல்லது ஸ்கொட்லாந்து கூட சிலவேளைகளில் இம்முறை பங்களாதேஷுக்கு ஆப்பு அடிக்கலாம்.

ஷகிப்பின் தனித்த சாதனைகளோடு இன்னும் சில வீரர்கள் பிரகாசித்தால் மட்டுமே பெரிய அணிகளுடன் போராட முடியும்.

கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - ஷகிப் அல் ஹசன், தஜியுள் இஸ்லாம்.
ஆப்கானிஸ்தான் 


டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகளில் கவனிக்கக் கூடிய அணியும் விரைவாக மேலெழுந்து வருகின்ற அணியாகவும் உள்ள அணி.

உலக T20 கிண்ண அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் இது முதலாவது உலகக்கிண்ணம்.

எந்தப்பெரிய அணியையும் கவிழ்த்துவிடும் ஆற்றல் கொண்டதும், இறுதிவரை போராடக்கூடியதாவும் காணப்படுகிறது.

அதிரடித் துடுப்பாட்டமும், ஆச்சரியப்படுத்தக்கூடிய வேகப்பந்துவீச்சும் இந்த அணியின் பலமாகத் தெரிகிறது.

நவ்ரோஸ் மங்கல், அஸ்கர் ஸ்டனிஸ்கை, ஷென்வரி ஆகியோரோடு தலைவர் மொஹமட் நபி ஆகியோரின் துடுப்பாட்டமும், சட்றான் , ஹமீத் ஹசனின் துல்லியமான பந்துவீச்சும் பெரும்பலம்.

கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - சபூர் சட்ரான், அஸ்கர் ஸ்டனிஸ்கை


ஸ்கொட்லாந்து 


கவனிக்கப்படாமல் இருந்த இந்த அணியின் அண்மைக்கால வளர்ச்சி ஆச்சரியப்படவைக்கிறது.
தலைவராக மொம்சன் வந்த பிறகு இந்த அணி பெரிய அணிகளையும் வீழ்த்தும் ஆற்றல் பெற்றதாகத் தெரிகிறது.
இங்கிலாந்தில் விளையாடிப் பழகிய அனுபவம், நியூ சீலாந்து, அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் கை கொடுக்கும் போல தேர்கிறது.

தங்களது மூன்றாவது உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடும் ஸ்கொட்லாந்து, இதுவரை 8 உலகக்கிண்ணப் போட்டியிலும் தோற்றிருக்கிறது.

இம்முறை எப்படியாவது தங்களது முதலாவது வெற்றியைப் பெறவேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறது.

அனுபவம் வாய்ந்த துடுப்பாட்டம் இவர்களது பலம்.

தலைவர் மொம்சன், மக்லியொட், பெரிங்க்டன், மட் மச்சான், கைல் கொட்சர் என்று குறிப்பிடத்தக்க வீரர்கள் தெரிகிறார்கள்.

பந்துவீச்சும் முன்னரை விட முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆச்சரியம் கொடுக்கும் அணிகளில் ஒன்றாகக் குறித்து வைக்கலாம்.


கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - கொட்சர், பெரிங்க்டன் 


----------------------

பிரிவு  B யின் அணிகள் பற்றிய அலசல் தொடரும்.
நாளைய பிரிவு Aயின் போட்டிகளை ரசித்துக்கொண்டே ஞாயிறு பிரிவு B போட்டிகளுக்கு முன்னதாக அணிகளைப் பார்ப்போம்.


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner