December 28, 2016

சன்டா - Santa - காலம் ஓடுது


இத்தனை விஷயம் வாசிக்கும் ஹர்ஷு இன்னுமா வருவார், நல்ல பிள்ளையாக வருடம் முழுவதும் இருந்தால் கடிதம் எழுதிக் கேட்கும் பரிசுகள் தருவார் என்பதை நம்புகிறான் என்பதை நானும் ஆச்சரியத்தோடு தான் நோக்குகிறேன்.

ஒருவேளை, கள்ளப்பயல் எப்படியாவது தான் விரும்பும் பரிசுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நம்புகிற மாதிரி நடித்து எம்மை நம்பவைக்கிறானோ என்றும் சந்தேகம் வருவதுண்டு.

சிலவேளை, "அப்பா தான் எனக்குப் பரிசுகளை Santa போல கொண்டுவந்து தருகிறாரோ? "என்று லவ்சுகியிடம் சந்தேகமாகக் கேட்டவன் , ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் பரிசுகளை தாறுமாறாக ஆராய்வான்.
made in, Labels, Price tag etc.
பிறகு சின்னப்பிள்ளைக்கேயான குணத்தோடு சண்டாவுக்கு நன்றி சொல்லிவிட்டு "அடுத்த வருடம் இன்னும் நல்ல பிள்ளையாக இருந்து இன்னும் நிறைய பரிசுகள் பெறவேண்டும்" என்றுவிட்டு கிடைத்த புத்தகங்களை வாசிக்கவோ, விளையாட்டுப் பொருட்களோடு விளையாடவோ போய்விடுவான்.

மூட நம்பிக்கைகள் அவனை அண்டக்கூடாது என்பதற்காக சின்ன வயதில் இருந்து அவனுக்குப் புரிகின்ற விதத்தில் அநேகமானவற்றுக்கு விளக்கம் சொல்லியே வளர்த்துவருகிறோம். 
எனினும் சமய விஷயங்களில் என்னுடைய வாதங்கள், விளக்கங்களை அவனுக்குள் இப்போதைக்குப் புகுத்தவேண்டாம் என்ற மனைவியின் வேண்டுகோளினால் அவனாக வாசித்து என்னிடம் கேட்டால் ஒழிய எனக்குத் தெரிந்த 'பகுத்தறிவை' அவனுக்கு புரியச் செய்யப்போவதில்லை.

அவனும் நிறைய வாசிக்கிறான்.
ஆங்கிலத்தில் Wimpy Kid முதல் தமிழில் ஆதிரையின் சில பக்கங்கள் என்று ஆழமான வாசிப்பின் முதற்கட்டத்தில் இருக்கிறான்.
அடுத்து பொன்னியின் செல்வனையும் அறிமுகப்படுத்தவிருக்கிறேன்.

அப்பாவும் அம்மாவும் தான் தனக்கான பரிசுகளை வழங்கிய Santa Claus என்பதை அவன் இந்த வருடமே புரிந்துகொள்வான் என்று நினைக்கிறேன். 
அவனது மழலைப் பராயத்தின் கற்பனை மகிழ்ச்சிகளில் ஒன்று அத்தோடு உடைந்துவிடும் என்று எண்ணும்போது மனதில் அடக்கமுடியாத ஒரு சோகம்.

நேற்றுக்கூட அவன் கடிதத்தில் எழுதியிருந்த பரிசுகளை கண்கள் அகல விரிய விரிய அவன் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்துக்கொண்டே பார்த்தபோதும், 'Santa எழுதிய' கடிதத்தை எனக்கும் மனைவிக்கும் சந்தோஷத் தொனியில் வாசித்துப் பெருமைப்பட்டபோதும், Santaவின் உண்மையான போட்டோ ஒன்று வேண்டும் என்று அவன் கேட்டபடி கிடைத்த புகைப்படத்தை (Google ஆண்டவர் துணையிருக்க வேறு யார் வேண்டும் எனக்கு ;) ) - 
"அட நான் கேட்டபடி அனுப்பிட்டாரே.. நம்பாமல் இருக்கிற என் friends ற்கு காட்டவேண்டும்" என்று பத்திரப்படுத்தியபோதும் -
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வரும் பரவசம் அது.

ஒவ்வொரு வருடமும் 'சன்டா எழுதும்' அந்தக் கடிதத்தில் ஹர்ஷுவைப் பாராட்டக்கூடிய விடயங்களைக் குறிப்பிட்டு அவனை ஊக்குவிப்பதோடு, அவன் செய்கின்ற குழப்படிகளையும் சுட்டிக்காட்டி, அவன் செய்யவேண்டிய விடயங்களையும் குறிப்பிட்டு ஒரு அறிக்கையிடலாக தொகுப்பதுண்டு.
தனது அந்த வருடத்துக்கான தேர்ச்சி அறிக்கையாகக் கருதி மிகவும் ஆர்வத்துடன் வாசிப்பான்.

உண்மையை அவன் விளங்கிக்கொள்ளும்போது அவன் அடையப்போவது என்னவிதமான உணர்வு என்பது தான் எனக்கு இருக்கும் குழப்பம்.
அப்பா தனக்காகத் தேடித் திரிந்து தான் கேட்டவற்றையே வாங்கித் தந்தார் என்று பெருமைப்படுவானா? இல்லை  இத்தனை காலமாக வட துருவத்தில் இருந்து வருகிறார் என்று நம்பியிருந்தது கடிதம் போட்டு முட்டாளாக்கிட்டானே என்று நொந்துபோவானா?

தங்கைக்கும் சேர்த்து பரிசுகள் வேண்டும் என்று கேட்ட பாசமிகு அண்ணன், அப்பாவுக்கு (நான்) தன்னோடு சேர்ந்து செலவழிக்க போதுமான நாட்கள் வேண்டும் என்று கேட்ட அந்த அப்பாவிக் குழந்தைத்தனம் கட்டியணைத்துக் கொஞ்சத் தூண்டியது.

​குழந்தைத் தனத்தின் இறுதிக் கட்டத்திலிருந்து என் செல்லக்கண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வஞ்சக உலகத்தில் தன்னைத் தான் வழி நடத்தும் வயது வந்தவனாக மாறும் பருவத்தை கேட்கிறான் என்பதே மனதில் சுருக்கென்ற ஒரு வேதனை.
வளர்ந்துவிடாமலே இவன் இருந்துவிடக்கூடாதா?
எந்தவொரு கவலையுமில்லாமல், வகுப்புகள், பயிற்சிகள், படிக்கவேண்டும், நேரத்துக்கு எழவேண்டும் என்ற கவலையில்லாமல், எந்தவொரு tensionஉம் இல்லாத அந்த குட்டி ஹர்ஷு தான் எனக்கு வேண்டும்.


அழகான மட்டுமில்லை, மகிழ்ச்சியான ஹர்ஷு அவன்.

இப்போது போதாக்குறைக்கு எங்கள் குட்டி இளவரசி வேறு வேகவேகமாக வளர்கிறாள். பேச ஆரம்பிக்கிறாள்.
அடுத்த வருடங்களில் ஹர்ஷு தன்னை பரபரப்பான கணங்களில் தொலைக்க, இவள் சன்டாவுக்கு கடிதம் எழுதப்போகிறாள்.

​காலம் ஓடுது..
வளராமலே இருக்கமாட்டீர்களா என் செல்வங்களே...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner