கற்பழிக்கிறார்கள் பாடல்களை

ARV Loshan
20
ரீமிக்ஸ் என்ற பெயரில் இந்தக் கால இசையமைப்பாளர்கள்; அருமையான முன்னைய தமிழ்த்திரைப்பாடல்களைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில ரீமிக்ஸ் பாடல்களே கேட்க சகிக்கக் கூடியதாக இருந்தாலும் ஏனையவை கர்ணகடூரங்கள்!

இனிய பாடல்களையும் நல்ல கவிதைகளையும் அழகான பெண்களோடு ஒப்பிடும் எங்கள் தமிழ் சமூகத்தில், அவற்றைக் கொத்திக் குதறும் இந்த ரீமிக்ஸ் செய்வதை கற்பழிப்பு என்று தானே கருதவேண்டியுள்ளது..

முன்னைய இனியபாடல்களின் சுவையையும் ரசனையையும் மறக்கச் செய்யும் அளவுக்கு எரிச்சலூட்டுவனவாக அமையும் இவ்வகை ரீமிக்ஸ்க்கு நல்ல (நாசமாப் போன) உதாரணம் -

தமிழகத் தனிப்பெரும் தமிழ்ப்பேரன் (அதாங்க கலைஞரின் பேரன்) மு.க.மு.அறிவுநிதி பாடிய 'பெருமாள்' படப் பாடல் 'காதல் வைபோகமே' (ஒரிஜினல் - சுவரில்லா சித்திரங்கள் படத்தில்) 
ஸ்ரீகாந்த் தேவாவின் கையில் நல்லதொரு பழையபாடல் அகப்பட்டால் அது குரங்கு கையில் பூமாலை நிலைதான்!

இந்த ரீமிக்சின் முதல் ஆரம்பங்களில் ஒன்று என்று எனக்கு இருக்கும் சினிமா அறிவு கொண்டு நான் நினைப்பது 80களில் நடுப்பகுதியில் 'தாய்க்கு ஒரு தாலாட்டு'படத்தில் 'புதியபறவை' 'உன்னை ஒன்று கேட்பேன்' பாடல் மெட்டில் - இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற 'இளமைக்காலம் இங்கே' என்ற பாடல் டி.எம்.எஸ் & பி.சுசிலா பாடியது. சிவாஜி & பத்மினி நடித்ததனால் பொருத்தமாக அமைந்தது.

அண்மையில் இரவு 'சிரிப்பொலி டிவியில்' ஒரு பாடல் பார்த்தேன்.  சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவுக்கு மலேசியா வாசுதேவன் குரல் கொடுத்த 'ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் கண்ணம்மா' என்ற பாடல். படிக்காதவனுக்காக (இப்போ வந்த கொடுமையல்ல – பழைய ஒரிஜினல் ரஜினிபடம்) இளையராஜா போட்ட மெட்டை அப்படியே எடுத்துக் கொண்டார் சந்திரபோஸ்.

விசுவின் குறும்புகள் வரிகளின் குசும்புகளோடு ரசிக்கக் கூடியதாகவிருந்தது.

இந்தக்காலத்தில் காட்சிக்குப் பொருத்தமோ இல்லையோ பழைய பிரபல்யத்தை விளம்பரமாக்கவும் பரபரப்பாக்கவும் ரீமிக்ஸைப் பயன்படுத்தி அதை எங்களுக்கு ஒரு சாபமாகவே மாற்றிவிட்டார்கள்.

அண்மைக்காலத்தில் கொஞ்சம் ரசிக்க வைத்த ரீமிக்ஸ் பாடல்கள் என்றால் நியு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 'தொட்டால் பூமலரும்' (படகோட்டியின் பாடல் - மெட்டு வித்தியாசம்)

நான் கடவுளுக்காக இளையராஜா செதுக்கியும் படத்தில் வராத 'அம்மா உன் கோவிலில்' - 'அச்சாணி' படப்பாடல் எனினும் ராஜாவினதோ எங்களதோ தூரதிர்ஷ்டம் திரைப்படத்தில் வரவில்லை!  

ரீமிக்ஸ் செய்பவர்கள் இந்த இருபாடல்களிலிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள் - எப்படி முன்னைய படைப்புக்களைக் கொடுக்காமல் முன்னைய படைப்பாளிகளைக் கேவலப்படுத்தாமல் ரீமிக்ஸலாம் என்று.

யுவன் சங்கர்ராஜாவும் (பில்லா படத்தின் மை நேம் இஸ் பில்லா & வெத்தலயப் போட்டேன்டி தவிர) தந்தை என்ற காரணத்தால் இசைஞானியின் காலத்தால் இறவா பாடல்களை எடுத்துத் தன்போக்குக்கு சிதைப்பதை (தயாரிப்பாளர் வற்புறுத்தி , வலியுறுத்தினாலும் கூட) கொஞ்சம் சிந்தித்துப்பார்த்து செய்யட்டும்.



Post a Comment

20Comments

Please Select Embedded Mode To show the Comment System.*