Showing posts with label அலசல். Show all posts
Showing posts with label அலசல். Show all posts

January 05, 2018

#SAvIND - அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம்!!! - தென் ஆபிரிக்கப் புயலை எதிர்கொள்ளுமா கோலியின் 'புதிய' இந்தியா


(Freedom Trophy - நெல்சன் மண்டேலா - மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் அர்ப்பணிக்கப்படும் இந்தக் கிண்ணத்தை மீட்கும் அணித் தலைவருக்கான சிறைவைக்கப்பட்டிருப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ள வடிவம் என்னைக் கவர்ந்துள்ளது)

தென் ஆபிரிக்கா தனக்கு சாதகமாக புற்கள் மேவிக்கிடக்கும் ஆடுகளத்தைத் தயார் செய்து, நாணய சுழற்சியிலும் வென்று துடுப்பாட்டத்துக்கு சாதகமான முதல் இரு நாட்கள் துடுப்பெடுத்தாட முனைந்திருக்க, இந்தியப் பந்துவீச்சாளர்கள் இந்த எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி முதல் நாளிலேயே 286 ஓட்டங்களுக்கு சுருட்டி எடுப்பார்கள் என்று யார் எதிர்பார்த்தார்?

நம்புவீர்களோ இல்லையோ, நான் கொஞ்சமாவது நினைத்தேன்... இந்தியாவிடமும் இப்போது உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைகளைத் தடுமாற வைக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆரோக்கியமான அணித்தெரிவு சிக்கலை ஏற்படுத்தக்கூடியளவுக்கு சிறப்பான பெறுபேறுகளைக் காட்டும் ஐந்து பேர் இருக்கிறார்கள்.

பல தடவை இவ்வாறு சொந்த செலவில் சூனியம் வைத்த கதைகள் பலவான் அணிகளுக்கே நடந்திருக்கின்றன.
அண்மைய உதாரணம் புனேயில் இந்தியா சுழல் பந்துக்கு சாதகமான ஆடுகளம் செய்து வைக்க, பெரிதாக அறியப்படாத, ஓ கீப் யாருமே எதிர்பாராத வகையில் 12 விக்கெட்டுக்களை எடுத்து மூன்று நாட்களில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வியைப் பரிசளித்த கதை.

ஆனால் 286 என்பதையே ஒரு பெரிய, சவால்மிக்க ஓட்ட எண்ணிக்கையாக மாற்றிக்காட்ட தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களால் முடியும். முடியுமா என்று நான் இட்ட ட்வீட்டுக்கு சில நிமிடங்களிலேயே மூன்று விக்கெட்டுக்களைப் பறித்து பதிலளித்துள்ளார்கள்.
தென் ஆபிரிக்காவுக்கு டீ வில்லியர்ஸ் - டூ ப்ளேசி இணைப்பைப் போல, பின் வந்த தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சாளரும் விக்கெட் காப்பாளரும் சேர்த்துக் கொடுத்த ஓட்டங்கள் போல சேர்க்காவிட்டால் தென் ஆபிரிக்கா நான்கு நாட்களுக்குள் போட்டியை முடிக்கும்.

நாளை காலை வேளை தென் ஆபிரிக்காவின் வேகப்பந்துவீச்சை இந்தியா சமாளிக்கும் வகையில் தான் இந்தப் போட்டி செல்லும் பாதை உள்ளது.
ரஹானே இல்லாத வெறுமையும், சகாவை இப்படியான ஆடுகளத்தில் ஆறாம் இலக்கத்தில் ஆடவைக்கும் தவறான முடிவும் நாளை தென் ஆபிரிக்காவின் நான்கு முனை வேகத்திலேயே தங்கியிருக்கிறது.

28/3 என்று இந்தியா இப்போதிருக்கும் நிலையைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகம் இருந்தாலும் புஜாரா இந்தியாவின் தூணாக இருப்பார் என்பதும், ரோஹித்தின் அண்மைய பெறுபேறுகளும்  இந்தியாவுக்கு உற்சாகம் தரலாம்.

இந்தியாவின் துடுப்பாட்ட வரிசையின் பலம் பற்றி சிலாகித்தும்  - பொதுவாகவே இன்று கோலி, விஜய் ஆகியோர் ஆட்டமிழந்த விதமாகவே இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் வெளிநாடுகளில் சொதப்பினாலும் கூட- அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டு வரும் கோலியின் தலைமையிலான இந்தியாவின் மேலுள்ள நம்பிக்கையால் - தென் ஆபிரிக்காவின் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சு பற்றி வியந்தும் - இந்த இரண்டு காரணிகளும் மோதும் தொடராக இது அமையும் என்று குறிப்பிட்டு இன்று Sports Tamil க்கு எழுதிய கட்டுரையில் சில மேலதிக சேர்க்கைகளோடு இந்த இடுகை..

இந்தியா vs தென் ஆபிரிக்கா - அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம் 


இன்று தென் ஆபிரிக்காவில் ஆரம்பிக்கும் கிரிக்கெட் தொடரானது உலகின் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு தொடராக அமையப்போகிறது. கிரிக்கெட்டின் பழம்பெரும் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் முடிவுறும் நேரத்தில் தென் ஆபிரிக்க - இந்தியத் தொடர் ஆரம்பிப்பது கிரிக்கெட்டின் குதூகலம் இல்லாமல் வேறென்ன?


கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக சொந்த நாட்டிலும், இந்தியாவை ஒத்த கால நிலை, களத்தன்மைகளைக் கொண்ட இலங்கையிலும் பெரியளவில் சவால்களை எதிர்கொள்ளாமல் இலகுவாக வெற்றிகளைக் குவித்து டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதலாம் இடத்திலுள்ள இந்திய அணி அண்மைக்காலத்தில் தனது முதலாவது பெரும் சவாலை சந்திக்கப்போகிறது.

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளின் மோதல் இது.
எனினும் 3-0 என்று தென் ஆபிரிக்காவிடம் இம்முறை தோற்றாலும் முதலிடம் பறிபோகாது எனும் அளவுக்கு கடந்த சில மாதகாலத் தொடர்ச்சியான வெற்றிகள்.
அதிலும் 9 டெஸ்ட் தொடர்களைத் தொடர்ச்சியாக வென்று சாதனையை சமப்படுத்தியுள்ளது. ஆனால் சாதனையை முறியடிக்கும் 10வது தொடர் வெற்றி நிச்சயம் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதி.

தென் ஆபிரிக்காவுக்கோ கடைசியாக 2015ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவில் வைத்துக் கண்ட 3-0 என்ற (4 டெஸ்ட்களில்) தோல்விக்கு வேகப்பந்து ஆடுகளங்களில் வைத்துப் பழி தீர்க்கும் எண்ணமுள்ளது. 

இதுவரைக்கும் தென் ஆபிரிக்காவிலே  எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் வெல்லாத இந்திய அணிக்கு இது ஒரு மிகப் பெரும் சோதனை தான்.
உலகின் மிகச் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வரிசை என்று சொல்லக்கூடியளவுக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் கடந்த 2017இல் மாறி மாறி ஓட்டங்களை மலையாகக் குவித்திருந்தார்கள். அவுஸ்திரேலிய, இங்கிலாந்து, நியூ சீலாந்து பந்துவீச்சாளர்களையும் சந்தித்திருந்தார்கள். ஆனால் அவை அனைத்தும் இந்திய ஆடுகளங்களில்..
ஒன்றில் தட்டையான துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள். இல்லையேல் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்.

இன்று முதல் இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை சந்திக்கவிருப்பதோ உலகின் எந்தவொரு துடுப்பாட்ட வரிசையும் அச்சுறுத்தும் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு வரிசை.
மற்ற அணிகள் எல்லாம் அதிகபட்சம் 2 அல்லது 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துத் தடுமாறிக்கொண்டிருக்க தென் ஆபிரிக்கா மிக உறுதியான 5 உயர்தரமான வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு (ஸ்டெயின், மோர்னி மோர்க்கல், பிலாண்டர், றபாடா, க்றிஸ் மொரிஸ்), மேலதிகமாக மிதவேகப்பந்தை வீசும் பெலகாவாயோவும் இருக்கிறார்-  யாரைத் தெரிவு செய்வது, யாரை விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது.
உலகின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினையே ஓய்வு அளித்து மற்றையவர்களைப் பயன்படுத்தலாமா என்று சிந்திக்கிறார்கள் என்றால் எத்தகைய பலம் அது?

அதுவும் இன்று கேப்டவுனில் ஆரம்பித்துள்ள டெஸ்ட் போட்டி முதல் அத்தனை ஆடுகளமுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான எகிறும் ஆடுகளங்களை விரும்புகிறார்கள் என்று சொன்னால் அவர்களது நோக்கம் எத்தகையது என்று புரிந்துகொள்ளலாம்.

இதுவரை காலமும் இவ்விரு அணிகளின் டெஸ்ட் மோதல்களில் 
விளையாடியவை - 33
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி - 13
இந்தியாவுக்கு வெற்றி - 10
சமநிலை - 10

ஆனால் தென் ஆபிரிக்காவில்,
17 டெஸ்ட் போட்டிகளில்,
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி - 8
இந்தியாவுக்கு வெற்றி - 2
சமநிலை - 7

இந்த நிலையை இப்போதிருக்கும் வெற்றிக்காக ஆவேசத்துடன் விளையாடக்கூடிய தனது இளைய அணியின் மூலம் அடையும் விருப்போடு இருக்கிறார் விராட் கோலி.

அதற்கு ஏற்றதாக இந்தியாவின் பலம்வாய்ந்த அசத்தல் துடுப்பாட்ட வரிசை இருக்கிறது. தென் ஆபிரிக்காவின் ஆடுகளங்களிலும்  ஈடுகொடுத்து ஆடக்கூடிய நுட்பங்கள் கொண்ட துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.
முக்கியமாக கடந்த வருடத்தில் 1000 ஓட்டங்களுக்கு மேலே குவித்த புஜாராவும் கோலியும்.
இதிலே மூன்றாம் இலக்கத்தில் ஆடும் புஜாரா உலகின் மிக நம்பகமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே வார்க்கப்பட்டவர் போல. கடந்த வருடத்தில் 4 சத்தங்களுடன் 1140 ஓட்டங்களைக் குவித்திருந்த புஜாராவின் ஓட்டக்குவிப்பும் நின்று நிலைப்பும் இந்தியாவுக்கு மிக அவசியமாகிறது.
அதேபோல உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முன்னின்று ஓட்டக்குவிப்பிலும் வழிநடத்தி 5 சதங்களைப் பெற்ற (இவற்றில் இரண்டு இரட்டை சத்தங்கள்) கோலி இங்கிலாந்தில் தடுமாறியதைப் போல இல்லாமல் நேர்த்தியாக, துணிச்சலாக ஆடினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக அமையும்.

முரளி விஜய் இன்னொரு முக்கியமான வீரர். வெளிநாட்டு மண்ணில் தடுமாறும் இந்திய வீரர்களுக்கு மத்தியில் விஜய் மிக நேர்த்தியாக ஆடக்கூடிய வீரர். ரஹாநேயும் அவ்வாறு இருந்தாலும் இலங்கை அணியோடு தொடர்ச்சியாகத் தடுமாறியிருப்பது அவரது formபற்றிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் தான் கிடைத்த டெஸ்ட் வாய்ப்புக்களில் தன்னை நிரூபித்தவரும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் சிறப்பான ஓட்டக்குவிப்பில் இருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தவான், ராகுல் ஆகிய இருவருமே தம்மை நிரூபித்தவர்கள். எனினும் தவானே இந்தியாவின் தெரிவாக அமைய அவரது அனுபவமும் அதிரடியும் காரணமாக அமையும்.
இந்தியா மேலதிகமாக ஒரு வேகத்தையும் சேர்த்துக்கொள்ள பாண்டியாவின் சகலதுறைத் திறமை பயன்படுள்ளது.

எதிர்பார்த்ததைப் போல ஒருநாள் போட்டிகளில் கலக்கிய பும்ராவுக்கு அறிமுகத்தை வழங்கி மூன்று வேகப்பந்து வீச்சாளரோடு களம் கண்டிருக்கிறது. 
பும்ரா எதிர்பார்த்தளவுக்கும் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் காட்டிய திறமையளவுக்கு சிறப்பாக செய்யாவிடினும் அவரது முதல் விக்கெட் ஏபி டீ வில்லியர்ஸ்.
எனும் அனுபவம் வாய்ந்த இஷாந்த் ஷர்மாவை இன்று தெரிவு செய்திருக்கலாமோ என்று கோலி இனி எண்ணலாம்.
ஜடேஜா உடல்நலக்குறைவு அஷ்வினை மட்டும் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

தென் ஆபிரிக்கா மிக நீண்ட காலத்துக்குப் பிறகு உபாதை சிக்கல்கள் எதுவும் இல்லாமல் தன்னுடைய மிகச்சிறந்த அணியோடு இறங்கியுள்ளது.
துடுப்பாட்டத் தெரிவுகளில் பெரிய சிக்கல் இல்லாவிட்டாலும் சிறப்பாக ஆடிவந்த பவுமாவை இன்று விட்டுவிட்டு ஆடவேண்டிய நிர்ப்பந்தம்.
எனினும் அம்லா, டீன் எல்கர் (கடந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தவர்) மீண்டும் டெஸ்ட் அணிக்குள் வந்துள்ள உபாதை கடந்த டீ வில்லியர்ஸ், அணித் தலைவர் டூ ப்ளேசிஸ் ஆகியோரோடும் உலகத் தரம் வாய்ந்தததாகத் தெரிகிறது.

எனினும் ஐந்து முழு நேரப் பந்துவீச்சாளரைத் தெரிவு செய்திருப்பதால் ஒரு துடுப்பாட்ட வீரர் குறைவாக விளையாடும் அபாயம்.
டீ கொக்கும் ஒரு சிறப்பான துடுப்பாட்ட வீரரே. எனினும் அவருக்குப் பிறகு பிலாண்டர் வருவது துடுப்பாட்டம் பலவீனமானதாகவே தெரிகிறது.
ஆனாலும் முக்கியமான மூன்று வீரர்களும் 12 ஓட்டங்களுக்கு ஆடுகளம் விட்டு அகன்றும் கூட சமாளித்த திறமை மெச்சக்கூடியது.

ஆயினும் தென் ஆபிரிக்கா தன்னுடைய வேகப்பந்துவீச்சாளரில் வைத்துள்ள நம்பிக்கை அது.

இதனால் தான் இந்தத் தொடர் தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளரின் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சுக்கும் இந்தியாவின் ஓட்டக்குவிப்பில் ஈடுபடும் அசத்தல் துடுப்பாட்ட வீரருக்கும் இடையிலான மோதல் தொடராகக் கருதப்படுகிறது.

இதுவரை கலக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளரை உலகின் நம்பகமான துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட தென் ஆபிரிக்கத் துடுப்பாட்ட வரிசை சமாளிக்குமா என்பதே தொடரின் முதலாவது கேள்வி. 
புவனேஷ்வர் குமாருக்கு 4 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொடுக்க உதவிய ஆடுகளம் நாளை தென் ஆபிரிக்காவின் புயல்களுக்கு என்னென்ன சாதகத்தை வழங்குமோ?

இதுவரை ஸ்டெயின், பிலாண்டர், மோர்க்கல் ஆகியோர் தலா ஒன்று..
இன்னும் புதிய புயல் காகிஸோ றபாடாவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை இவரது நாளாக அமையலாம். அப்படி அமைந்தால் இந்தப் போட்டி நான்கு நாட்களில் முடிந்து போகலாம்.
அண்மையில் தான் சிம்பாப்வேயுடன் இரண்டே நாளில் ஒரு டெஸ்ட் போட்டியைத் தென் ஆபிரிக்கா முடித்திருந்தது.




April 13, 2013

13ம் 14ம் - ஒரு IPL அலசல்

2013 ஆம் ஆண்டின் IPL போட்டிகளின் 13 போட்டிகள் முடிவடைந்த பிறகு, நேற்றைய போட்டி - Delhi Dare Devils vs Sun Risers Hyderabad - 14வது போட்டியாக நடைபெற முதல் வழமையாக நான் எழுதும் 'தமிழ் மிரரின்' விளையாட்டுப் பகுதிக்காக எழுதிய கட்டுரை இது....

எனினும் சில பல தொடர்பு, தொழிநுட்ப சிக்கல்களால் பிரசுரிக்க முடியாமல் போக, 14வது போட்டியும் முடிந்த பிறகு, 13ஆம் திகதியாகிய இன்று கொஞ்சம் தாமதமாக இங்கே இடுகிறேன்.

-----------
13ம் 14ம் - ஒரு IPL அலசல் 




IPL 2013 இன் 13 போட்டிகள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. மே மாதம் 26 ஆம் திகதி வரை நீண்டு செல்லப் போகிற தொடர் என்ற காரணத்தால் இப்போதே எந்த அணிகள் இறுதிச் சுற்றுக்குள் (அரை இறுதிப் போட்டிகள் இல்லாத காரணத்தால்) நுழையத் தகுதி பெறும் என்று ஊகிப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது.

அதிகமாக ஒரு அணி நான்கு போட்டிகளையே விளையாடியிருக்கும் நிலையில் (பெங்களூர் றோயல் சலேஞ்சர்ஸ்) புள்ளிகளின் அடிப்படையில் பெங்களூர் றோயல் சலேஞ்சர்ஸ் அணியே முதலாம் இடத்தில் இருக்கிறது.
பல நட்சத்திரங்களைக் கொண்டுள்ள மும்பாய் இந்தியன்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் கடந்த காலங்களில் தடுமாறி வந்த அணி உரிமையாளர் மற்றும் பெயரை மாற்றியவுடன் வெற்றிப் பாதையில் பயணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகள் தலா இரண்டு வெற்றிகளைத் தாம் விளையாடியுள்ள 3 போட்டிகளில் பெற்றுள்ளன.

நடப்பு சாம்பியன் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலாவது போட்டியில் வெற்றியோடு ஆரம்பித்தாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்விகள்.
அதே போல ஒவ்வொரு முறையும் பலமான அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் முதல் போட்டியில் தோற்றாலும் அடுத்த போட்டியில் தன்னை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளது.

இதுவரை நடந்த போட்டிகள் அணிகள் தங்களை திடப்படுத்திக்கொள்ளவும், அணிகளின் கட்டமைப்பை அறிந்துகொள்ளவும் உதவியிருக்கலாம்.

ஆனால் முன்னைய கட்டுரையில் நான் எழுதியிருந்ததைப் போல, களம், காலநிலை போட்டிக்குப் போட்டி வேறுபடுவதாலும், இருபது ஓவர்களே கொண்ட போட்டிகள் என்பதாலும் மட்டுமல்லாது, நான்கு வெளிநாட்டு வீரர்களே ஒரு போட்டியில் விளையாடலாம் என்பதும் அணிகளை ஒவ்வொரு போட்டியிலும் தாம் செய்யும் வீரர்களை மாற்றவைக்கும் என்பது உறுதி.

ஆறாவது IPL இல் இதுவரை படைக்கப்பட்ட சாதனைகளை விட, சர்ச்சைகள் அதிகம் எனலாம்...

ஆரம்பத்திலேயே இலங்கை மீதான போர்க்குற்றம் பற்றி எழுந்த எதிர்ப்பும், மாணவர் போராட்டமும், ஜெயலலிதாவின் தடையும் ஒருபக்கம் மிகப் பெரிய அளவில் இருந்தன.
லலித் மோடி பற்றிய ஊழல் சர்ச்சைகளுக்கு அடுத்தபடியாக இதுவே IPL போட்டிகளை நிறுத்தும் அல்லது தடுக்கும் அளவுக்கு இருந்தன. 
ஆனால் தமிழ்நாட்டில் (சென்னையில்) நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்களைத் தடை செய்வதோடு அது முடிந்தது.

இலங்கை வீரர்களை IPL ஐப் புறக்கணிக்கச் செய்யும் பிசுபிசுத்த முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டாலும்,  இலங்கை வீரர்களில் தற்போதைய T20 சர்வதேசத் தலைவர் சந்திமாலைத் தவிர ஏனைய அத்தனை வீரர்களுமே இப்போது IPL இல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஹர்பஜன் ஸ்ரீசாந்தைக் கன்னத்தில் அறைந்ததைப் போலவோ, ஷாருக் கானின் குடிவெறிக் கூத்தைப் போலவோ அல்லது கடந்த வருடத்தின் போதை வஸ்துக் கைதுகள் போலவோ எந்தவொரு பாரிய சர்ச்சை சம்பவங்கள் இம்முறை இதுவரை IPL இல் இடம்பெறாவிட்டாலும், ஆங்காங்கே சின்ன சின்ன சம்பங்கள் இடம்பெற்றே இருந்தன.
அப்படி இல்லாவிட்டால் அது IPL இல்லையே...

நேற்றிரவு கம்பீர் - கொஹ்லி மோதல் தான் இப்போதைக்கு பெரியது & சுவாரஸ்யமானது.
இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரும் சில போட்டிகளில் தலைமை தாங்கியவருமான கம்பீருடன் - இவர் இளம் வீரர் விராட் கொஹ்ளியின் டெல்லி அணியில் சிரேஷ்ட வீரரும் கூட- விராட் கோஹ்லி வார்த்தைகளால் மோதியது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் கொஞ்சம் கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னொரு ஸ்ரீசாந்த் - ஹர்பஜன் விவகாரம் போல இது பெரியதாக இல்லாவிட்டாலும், எதிர்கால இந்திய அணியின் தலைவர் என்று கருதப்படும் கொஹ்லி இப்படியான அடிப்படை ஒழுங்குப் பிரச்சினைகளில் பல முறை சிக்கி வருவதும், இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரை மதிக்காமல் நடந்திருப்பதானதும் நல்லதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. 

(இதுக்குத் தான் இவரைப் பற்றி அப்போவே இப்படி சொல்லியிருந்தேன்.. 
எப்பூடி?

இருவருமே போட்டித் தீர்ப்பாலரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

இம்முறை சில புதிய முகங்கள் அறிமுகப்போட்டிகளில் பிரகாசித்திருப்பது ஒருபக்கம், வயது முதிர்ந்த மூத்த நட்சத்திரங்கள் தங்கள் அனுபவத் திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது மறுபக்கம் என இளமையும் அனுபவமும் கலந்த ஒரு அற்புதக் கலக்கலாக இந்த IPL 6 விளங்குகிறது.

பஞ்சாப்பின் மானான் வோஹ்ரா, ஹைதராபாதின் ஹனுமா விகாரி, மும்பையின் பும்ரா ஆகியோர் இம்முறை தங்கள் கைகளை உயர்த்திக் காட்டியுள்ள புதியவர்கள்.

இந்தாவின் பெருஞ்சுவர் ராகுல் திராவிட் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் தனது கிரிக்கெட் திறமைகளுக்கு ஓய்வே கிடையாது என்பதை வெளுத்து விளாசுகிறார்.
இதற்குள் அபாரமான பிடிஎடுப்பு வேறு.

அதே போட்டியில் ஆஸ்திரேலியாவின் நாற்பது வயதை அண்மிக்கும் பிரட் ஹோட்ஜின் சிறப்பான களத்தடுப்பு. இவர் ஓட்டங்களையும் குவித்து வருகிறார்.
மறுபக்கம் ரிக்கி பொண்டிங்கின் டெல்லிக்கு எதிரான போட்டியில் எடுத்த பிடியும் மிகச் சிறந்த ஒன்று.
இன்னொரு மூத்தவர் அண்மையில் ஓய்வு பெற்ற மைக்கேல் ஹசி. சென்னைக்காக இவர் குவித்த வேகமான ஓட்டங்களும் களத்தடுப்பும் இளையவர்களைப் பொறாமைப் பட வைக்கக் கூடியது.

இன்னும் முரளிதரன், சச்சின் டெண்டுல்கர் , அடம் கில்கிரிஸ்ட் போன்றவர்களின் பிரகாசிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இதற்குள் இன்றைய போட்டி இலங்கையின் இரு பெரும் நட்சத்திரங்களின் நேரடி மோதலாக அமையவிருக்கிறது.
மஹேல ஜெயவர்த்தன தலைமை தாங்கும் டெல்லி டெயார்டெவில்ஸ் இன்று குமார் சங்கக்கார தலைமை தாங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்திக்கிறது.

இவர்கள் தவிர, ஒவ்வொரு IPL தொடர்களையும் போலவே க்றிஸ் கெய்ல், விராத் கொஹ்லி, டேவிட் வோர்னர் ஆகியோர் துடுப்பாட்டத்தில் இதுவரை ஜொலித்திருக்கிறார்கள். 
ஆனால் அபாரமான அரைச் சத்தங்கள் குவிக்கப்பட்ட இந்த 13 போட்டிகளில் இதுவரை எந்த சதமும் பெறப்படவில்லை.
கொஹ்லி பெற்ற ஆட்டமிழக்காத 93, க்றிஸ் கெயில் பெற்ற ஆட்டமிழக்காத 92 ஆகிய இரண்டு ஆட்டங்களும் சதங்களை நெருங்கிய இரு சந்தர்ப்பங்கள். 

பந்துவீச்சில் கடந்த வருடம் போலவே சுனில் நரேனும், வினய் குமாரும் முன்னணியில் உள்ள அதே வேளை, IPL வரலாற்றில் கூடுதல் விக்கெட்டுக்களை சரித்தவர்களில் ஒருவரான R.P.சிங் கும் விக்கெட்டுக்களை எடுத்து வருகிறார்.

நேற்றைய போட்டியை சேர்க்காமல்..

அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள்...


அதிக விக்கெட்டுக்களை எடுத்தவர்கள்...



2013 இன் இதுவரையான 13 போட்டிகளில் இலங்கை வீரர்களில் சகலதுறை வீரரான திசர பெரேரா கூடுதலாக தனித்துத் தெரிகிறார்.
எதிர்பார்க்கப்பட்ட மாலிங்க, முரளிதரன், மஹேல, சங்கக்கார , குசல் பெரேரா ஆகியோர் இனித் தான் சாதிப்பார்கள் போலும்.

இதேவேளை பூனே வோரியர்சின் தலைவர் மத்தியூஸ், கடந்த வருடத்தையும் சேர்த்து 11 போட்டிகளின் தோல்விக்குப் பிறகு அந்த அணிக்கு நேற்று வெற்றி ஒன்றைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

இன்றைய இரவுப் போட்டி இலங்கையின் சிங்கங்கள் தங்களுக்கான வெற்றிகளை குறிவைக்கின்ற போட்டி என்பதிலும், மூன்று போட்டிகளிலுமே தோற்று தங்கள் முதலாவது வெற்றிக்குத் தவமிருக்கும் டெல்லியை மஹேல மீட்பாரா என்று கேட்கின்ற போட்டியாகவும், உபாதையினால் இதுவரை விளையாடாமல் இருக்கும் சேவாக் மீண்டும் திரும்புகிற போட்டியாக இது அமைவதும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

--------

இந்தியத் தலைநகரில் நேற்று மோதிய இரு அணிகளின் தலைவர்களும் இலங்கையர்கள். மஹேல, சங்கா மோதலில் சங்காவின் சன்ரைசர்ஸ் ஜெயித்திருக்கிறது.
டெல்லிக்கு தொடர்ச்சியான நான்காவது தோல்வி, நிச்சயம் அணியின் வீரர்களின் இடங்களைப் பற்றிக் கேள்விகளை எழுப்பியிருக்கும்.

இதேவேளை எத்தனை நட்சத்திரங்களைக் கொண்டிருந்தாலும் கடந்த காலங்களில் பலவீனமான அணி என்று முத்திரை குத்தப்பட்டிருந்த தற்போதைய சன்ரைசர்ஸ் அணி இம்முறை வீறு கொண்டெழுந்துள்ளது.

பெயர் மாற்ற ராசியோ?

தொடர்ந்து வரும் போட்டிகளில் பார்க்கலாம் .....




December 20, 2012

இலங்கை - நம்பிக்கை & இந்தியா - புதியதா?


உலகம் நாளைக்கு அழியப்போகுதாம்... இன்று தான் இறுதியாக ஒரு முழு நாளும் என்று வரும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை.

தற்செயலாக அழிந்தாலும், அதற்கு முன்னதாக இறுதியாக ஒரு கிரிக்கெட் இடுகை போடலாமே னு தான்..... ;)

கடந்த வாரம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடுத்தடுத்த நாட்களில் முடிவுக்கு வந்திருந்தன.

நாக்பூரில் இந்தியா வென்றால் தொடர் சமப்படும் என்ற நிலையில் ஆரம்பித்த இந்திய-இங்கிலாந்து  டெஸ்ட் போட்டி , முதல் நாளிலிருந்தே ஆமை வேக ஓட்ட வேகத்துடன் நகர்ந்து, மிகப் பரிதாபகரமான சமநிலை முடிவும், இந்தியாவுக்கு எட்டு வருடங்களில் சொந்த மண்ணில் கிடைத்த முதலாவது டெஸ்ட் தொடர் தோல்வியையும், இந்தியாவுக்குத் தமது அணி, தலைமை, சொந்த மண் அனுகூலங்கள் ஆகியவற்றை சுய பரிசோதனை செய்துகொள்ளும் தேவையையும் வழங்கி இருக்கிறது.

இதன் பின் எழுந்த சில முக்கிய கேள்விகள் / குழப்பங்கள்....

தோனியின் தலைமைத்துவம் மாற்றப்படுமா? (குறைந்தது டெஸ்ட் போட்டிகளிலாவது)
சச்சின் எப்போது ஓய்வை அறிவிப்பார்?
அல்லது தேர்வாளர்கள் அவருடன் 'பேசுவார்களா'?
சேவாக்கின் நிலை?
இந்தியப் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆடுகளங்கள்....

இவை பற்றித் தேவையான அளவு விரிவாக 'தமிழ் மிரரில்' ஒரு நீளமான கட்டுரை எழுதியுள்ளேன்..
வாசியுங்கள்.. கருத்திடுங்கள். (இங்கே அல்லது அங்கே)


இந்தியா இனி: தோல்வியும் டோணியும் & சச்சின் இனியும்???



மாறுபட்ட கருத்துக்களை நீங்கள் கொண்டிருந்தால் அது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழி சமைக்கும்.

இன்று ஆரம்பிக்கும் Twenty 20 தொடர் இன்னும் இந்தியாவின் இளம் வீரர்களுக்கான மேடையாக அமையவுள்ளதுடன், தோனிக்கான தனிப்பட்ட தலைமைத்துவப் பரீட்சையாகவும் உள்ளது.
ஆர்வத்துடன் அவதானிக்கக் காத்திருக்கிறேன்.

-------------

ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் டெஸ்ட் போட்டி இலங்கை அணிக்கு பெரியதொரு சவாலை வழங்கி இருந்தது.

இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் எந்தவொரு டெஸ்ட் வெற்றியும் பெறாத இலங்கை அணிக்கு (இதுவரை ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் வைத்து மட்டுமே இலங்கையால் எந்த ஒரு டெஸ்ட் வெற்றியையும் பெற முடியவில்லை) , அதற்கான அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த முரளிதரனுக்குப் பிறகு, அந்த பொற்கால அணியில் இருந்த நான்கு முக்கிய வீரர்களான மஹேல, சங்கக்கார, டில்ஷான், சமரவீர ஆகியோரின் இறுதி ஆஸ்திரேலியத் தொடராக இந்தத் தொடர் அமையக்கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.


மஹேல ஜெயவர்த்தன இந்தத் தொடரின் பின்னர் தலைமையிலிருந்து விலக இருப்பதாக அறிவித்த  பின், அவர் மீதும் மத்தியூஸ் மீதும் மஹேல மீதும் கூர்ந்த அவதானங்கள் திரும்பியுள்ள நிலையில் ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் இலங்கை எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும்? எப்படித் தோற்கும் என்று விமர்சகர்கள் மட்டுமல்ல இலங்கை ரசிகர்களும் கூடக் காத்திருந்தார்கள்.

இலங்கையின் பந்துவீச்சு ஒன்றும் வெளிநாடுகளில் பெரிதாக டெஸ்ட் போட்டிகளை வென்று தரக்கூடிய உலகத் தரம் வாய்ந்த ஒன்று அல்ல.
ஆனால் ஹேரத் இருக்கிறார். உலகின் சிறந்த துடுப்பாட்ட வரிசைகளையும் தடுமாற வைத்துக்கொண்டிருக்கிறார்.

தென் ஆபிரிக்காவிலே இப்படி ஒரு பந்துவீச்சு வரிசையை வைத்துக்கொண்டு தான் இலங்கை ஒரு சரித்திரபூர்வ டெஸ்ட் வெற்றியைப் பெற்றது.
இலங்கையின் அதிகம் அறிமுகமில்லாத வேகப்பந்துவீச்சாளர்கள் திடீரென ஆஸ்திரேலியர்களையும் தடுமாற வைக்கக்கூடும்.

இப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தாலும், தென் ஆபிரிக்காவிடம் கண்ட  டெஸ்ட் தொடர் தோல்வியானது ஆஸ்திரேலிய அணியை விழிப்படையவும், பொன்டிங்கின் ஓய்வின் பின்னதான புதிய சகாப்தத்தின் முதல் டெஸ்ட்  போட்டி என்பதால் உத்வேகமாக விளையாடவும் வைத்திருந்தது.

முதலாம் இனிங்க்ஸ் இலங்கையின் பந்துவீச்சு 'வழமையான வெளிநாட்டு மண்ணில் இலங்கையின் பந்துவீச்சு'.

500 ஓட்டங்கள் பெற வாய்ப்பு இருந்தும் அதற்கு முன்னதாகவே கிளார்க் ஆஸ்திரேலிய அணியின் இனிங்க்சை நிறுத்தியது, தகுந்த தீர்க்கதரிசனம் என்று இலங்கையின் நான்காவது இனிங்க்சின் பொறுமையும், இடை நடுவே அச்சுறுத்திய மழையும் மட்டுமல்லாமல் முதலாம் இனிங்க்சிலேயே காயமடைந்து வீழ்ந்த வேகப் பந்துவீச்சாளர் பென் ஹில்பென்ஹோசின் உடல் தகுதியும் காட்டியிருந்தன.

இலங்கை அணியின் முதலாம் இனிங்க்ஸ் துடுப்பாட்டத்தில் டில்ஷான் - மத்தியூசின் இணைப்பாட்டம் தான் மிகத் தீர்மானம் மிக்கதொன்று.
இதுவரை எந்தவொரு வீரரும் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டைச் சதம் பெற்றதில்லை. சங்கக்கார கடந்த தொடரில் ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் போராடிப் பெற்ற 192 ஓட்டங்கள் தான் அதிகபட்சம்.

டில்ஷானின் 147 ம் அதற்கு இணையான ஒன்று தான்.

ஆடுகளத் தன்மையை புரிந்து அவர் ஆடிய விதமும், மத்தியூசுடன் சேர்ந்து அமைத்த இணைப்பாட்டமும் இலங்கையின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கும் அடுத்த போட்டிகளுக்கு உற்சாகம் கொடுக்கக் கூடியவை.

முதலாம் இனிங்க்சில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய 109 ஓவர்களும் இரண்டாம் இன்னிங்சின்  119 ஓவர்களும் உண்மையில் ஆரோக்கியமானவை.

காரணம் சிடிளின் இரண்டு இன்னிங்க்ஸ் பந்துவீச்சும் (பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சர்ச்சையைத் தவிர்த்து) எந்த ஒரு தரமான அணியையும் சிதைத்துவிடக் கூடியது.

அதேபோல முக்கியமான மஹேல, சங்கா (இரண்டாவது இனிங்க்ஸ் அரைச்சதம் தவிர) இருவரின் பெரியளவு பங்களிப்பில்லாமலேயே இத்தனை ஓவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் தாக்குப்பிடித்தது பெரிய விஷயமே.
ஆனால் மஹேல கொஞ்சம் நின்று ஆடி இருந்தால் வெற்றி தோல்வியற்ற முடிவைப் பெற்றிருக்கலாம்.

இந்தியாவின் சச்சினின் துடுப்பாட்டம் சரிந்துகொண்டே போவது போல, மஹேலவின் துடுப்பாட்டமும் தளர்ந்து கொண்டு வருகின்றது.
குறிப்பாக வெளிநாட்டு மண்ணில்...
தம்பி கண்கோன் கோபிகிருஷ்ணா இதுபற்றி விரிவாக ஆராய்ந்து அலசி இட்டுள்ள ஆங்கிலப்பதிவு இது பற்றி விரிவாகச் சொல்கிறது.


Do we really need Mahela Jayawardene?



இலங்கை அணிக்கு தொடர்ந்து வரும் இரு போட்டிகளில் நம்பிக்கை தரக்கூடிய சில விஷயங்கள்...

புதிய வீரர் திமுது கருணாரத்னவின் நம்பிக்கையளிக்கும் துடுப்பாட்டம்
வேகப்பந்துவீச்சாளர்கள் காட்டிய கடும் உழைப்பு
எதிர்பார்த்தபடி ஹேரத் சிறப்பாக செய்கிறார்.

இவற்றோடு சங்கா, மஹேல ஆகியோரும் தங்களைத் தாங்களாக வெளிப்படுத்தினாலும், மத்தியூஸ் ரண்டு இன்னின்க்சிலும் பொறுமையாக ஆடி அடித்தளம் இட்ட பின் அவசரப்பட்டு ஆட்டமிழப்பதைத் தவிர்த்தாலும் இலங்கை முதன் முதலாக ஒரு டெஸ்ட் வெற்றியை ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்யலாம்.


ஆஸ்திரேலியாவுக்கு கிளார்க், ஹசி ஆகியோரின் தொடர்ச்சியான ஓட்டக் குவிப்பும், சிடில் தொடர்ந்தும் ஆக்ரோஷமாகப் பந்துவீசி வருவதும் , ஹியூஸ், கொவான், வோர்னர் ஆகிய மூவரும் இலங்கையுடனான முதலாவது போட்டியில் ஓட்டங்களைப் பெற்றதும் நம்பிக்கை அளித்துள்ளது.

ஆனால் அவர்களது உபதலைவர் ஷேன் வோட்சனின் தடுமாற்றம்  தரும் சிக்கலைப் போலவே, வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்படும் காயங்கள் + உபாதைகளும் தலைவளையையே கொடுக்கின்றன.

எல்லாவற்றிலும் பெரிய தலைவலியாக அணித்தலைவர் கிளார்க் 26 ஆம் திகதி ஆரம்பிக்கும் Boxing Day Test போட்டியில் விளையாடும் உடற்தகுதி பெறுவாரா என்ற கேள்வி.

அவர் விளையாடாதவிடத்து இலங்கைக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்..  காரணம் கிளார்க் இந்த வருடம் முழுவதும் குவித்துவரும் ஓட்டங்கள்.

கிளார்க் இல்லாவிட்டால் அணியில் தன் இடத்தையே நிலை நிறுத்தத் தடுமாறும் வொட்சன் அவ்வளவு திறம்பட அணியை வழிநடத்துவாரா என்பது இயல்பான சந்தேகமே...

இதற்கு முதல் இலங்கை ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய Boxing Day Test போட்டியானது (1995-96) வரலாற்றில் சர்சைக்காகப் பெயர்பெற்றது.
முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றது என்று நடுவர் டரல் ஹெயார் வழங்கிய தீர்ப்பு.
இந்தமுறை சர்ச்சைகளோ? சாதனைகளோ?

முதலாவது டெஸ்ட் போட்டிகளிலும் சிறு சர்ச்சைகள் இல்லாமல் இல்லை..

1.பீட்டர் சிடில் பந்தை சேதப்படுத்தியது - வீடியோ காட்சிகளில் பதிவானாலும் இலங்கை அணி உத்தியோகபூர்வமாக இது பற்றிப் போட்டித் தீர்ப்பாளரிடம் முறையிடவில்லை.
ஆதாரம் இருப்பதால் முறைப்படி நடுவர்கள் + போட்டி மத்தியஸ்தரே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இலங்கை நிர்வாகத்தின் முறையான கருத்து.
ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என போட்டித் தீர்ப்பாளரான க்றிஸ் ப்ரோட் அறிவித்திருந்தார்.

2. நடுவர் டோனி ஹில்லின் சில தீர்ப்புக்கள். இலங்கை அணிக்கு எதிராகவே எல்லாமமைந்தன.
DRS மூலமாக இலங்கை வீரர்கள் சிலவற்றிலிருந்து தப்பினாலும், இலங்கை அணியின் தலைவர் மஹேல இன்னும் சரியாக இதைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

நல்லகாலம் இந்திய - இங்கிலாந்து டெஸ்ட் தொடரைப் போல DRS இல்லாமும், நாக்பூர் போட்டியில் குக்குக்கு நடந்தது போலும் நடக்காது என்று நம்பியிருக்கலாம்.

இலங்கை ஆஸ்திரேலிய அணியிடம் 3-0 என்று தோற்றுத் தான் நாடு திரும்பும் என்று நினைப்போர் மத்தியில் முதலாவது போட்டியில் கடைசி வரை காட்டிய போராட்டம் தந்த தெம்பு காரணமாக (அதற்கு முதலேயே நண்பர்களிடம் இலங்கை அவ்வளவு மோசமாகத் தோற்காது என்று சொல்லி இருந்தேன்) இலங்கை அணியில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது என்கிறேன்.

தலைவர் மஹேலவுக்கு தலைமைப் பதவியிலிருந்து கௌரவ வழியனுப்பல் கொடுக்கவாவது...


September 29, 2012

தீவுகளின் மோதலும் குழம்பியுள்ள கப்டன் கூலும் இந்திய - பாக் போரும் - #ICCWT20


இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான இன்றைய ஆட்டம் உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஒரு விறுவிறு போட்டி...

ஒரு தீவுக்குள்ளே ஒரு தீவுடன், பல தீவுகள் சேர்ந்த கூட்டணியின் மோதல் இன்றைய இரவின் சுவாரஸ்ய மோதல்.



இரண்டு அணிகளுமே இம்முறை  ICC உலக Twenty 20 வெல்வதற்கான பெரிய வாய்ப்புடைய அணிகள்.
இரண்டுமே மந்திரவாதிகள் என்று சொல்லப்படும் சுழல்பந்துவீச்சாளர்களையும், அச்சுறுத்தும் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களையும் கொண்ட அணிகள்.
இரண்டு அணிகளுமே ஆச்சரியப்படும் விதமாக தத்தமது இலகுவாக வெல்ல வேண்டிய முதலாவது Super 8 போட்டிகளில் தட்டுத் தடுமாறி, இறுதி சந்தர்ப்பம் வரை சென்று வென்றுள்ளன.
இன்று வெல்கின்ற அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பைத் தம் வசப்படுத்தும்.

Favoritesஆ அல்லது Hostsஆ என்பதே இன்றைய கேள்வி.
மென்டிஸ் (இன்று அணியில் இடம் கிடைத்தால்) எமக்கு சொல்லியபடி கெய்லை அசத்துவாரா என்றும் பார்க்கவேண்டும்.

மகளிர் போட்டிகளில் அண்மைக்காலத்தில் சாதித்து, முன்னேறி வரும் மேற்கிந்திய மகளிரை இலங்கை மகளிர் நேற்று ஆச்சரியப்படுத்தி வென்ற உற்சாகத்தை இன்று இலங்கை ஆண்கள் அணி தனக்கு உத்வேகமாக மாற்றிக் கொள்கிறதா என்று பார்க்கலாம்.

இதுவரை இவ்விரு அணிகளும் சந்தித்துள்ள 3 T20 போட்டிகளிலும் இலங்கை அணியே வெற்றியீட்டியுள்ளது.

இதுவரை ஹம்பாந்தோட்டை, கொழும்பில் பெய்த மழை, பள்ளேக்கலையில் மட்டும் பெய்யவில்லை; ஆனாலும் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான மையம் சொல்லியிருக்கிறது.
இன்றும் மழை பள்ளேக்கலையில் விட்டுக்கொடுத்து மைதானம் நிறைந்த விறுவிறுப்பான போட்டியொன்றை நடத்த இடம் தரவேண்டும் என்று வருணபகவானிடம் கேட்போம்.

இன்றாவது கொழும்பை விட்டு வேறிடத்தில் இடம்பெறும் இம்முறை ICC உலக Twenty 20  போட்டி யொன்று பார்க்கலாம் என்று பார்த்தால் விதி சதி செய்துவிட்டது.
என் தலைவிதி அவ்வளவு தான்.
அவதாரத்தோடு பார்ப்போம்..  

------------------


இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் தோனியை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கிறது.
எத்தனை தலைவலிகளைத் தான் தாங்கிக்கொள்வார்?

வென்றால் ஒரேயடியாக உச்சத்தில் ஏற்றுவதும் தோற்றால் அவரையே குறிவைத்துத் தாக்குவதும், அணித்தெரிவில் அவரையே முழுமுதல் காரணியாக மாற்றி யாராவது ஒரு வீரர் அணியில் சேர்க்கப்படாவிட்டால் தோனி அவரை வேண்டுமென்றே அணியில் சேர்க்கவில்லை என்று கொடும்பாவி கொழுத்துவதும், குறிவைத்து வெட்டுகிறார் என்பதும், ஜோகீந்தர் ஷர்மா, பாலாஜி, ரவீந்திர ஜடேஜா போன்றோர் அணிக்குள் வந்தால் தோனியின் 'ஆசி' பெற்றவர்கள் என்று (அஷ்வின், கோஹ்லி, ரோஹித் ஷர்மா போன்றோருக்கும் இவ்வாறே சொல்லப்பட்டது என்பதும் தனிக்கதை) பரபரப்பதும் சகஜமே.

நேற்றைய இந்தியா ஆஸ்திரேலியாவிடம் வாங்கிக்கட்டிய போட்டியில் (விக்கெட்டுக்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் நான்காவது பெரிய வெற்றி) இந்தியா தோற்றதை விட, ஆஸ்திரேலியாவின் ஷேன் வோட்சனின் சகலதுறைப் பெறுபேறு, வொட்சன் - வோர்னரின் ஆரம்ப சாதனை இணைப்பாட்டத்தை (ஆஸ்திரேலியாவின் எந்த விக்கெட்டுக்குமான மிகச் சிறந்த இணைப்பாட்டம் & இம்முறை ICC உலக Twenty 20 போட்டிகளில் மிகச் சிறந்த ஆரம்ப இணைப்பாட்டம்) விட, இந்தியப் பந்துவீச்சாளர்கள்   தங்கள் வியூகங்களைத் தவறவிட்டு மிக மோசமாகப் பந்துவீசியதை விட (வோர்னர் & வொட்சன் விட்டால் தானே?) அதிகம் பேசப்பட்டு, அலசப்பட்டு, தோனி தாறுமாறாக விமர்சிக்கப்பட்ட விடயம் - விரேந்தர் சேவாக் அணியில் நேற்று சேர்க்கப்படாதது.

உலகிலேயே அதிகமாக அறிவுரை சொல்லப்படுகிற சில மனிதர்களில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருப்பதைப் போல, உலகில் அதிகமான கிரிக்கெட் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்கிற இருவரில் ஒருவராக (மற்றவர் நிச்சயம் சச்சின் டெண்டுல்கர் தானே?) தோனி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய தொடரில் மூத்த வீரர்களுடன் தோனிக்கு இடம்பெற்ற நேரடி, மறைமுக மோதல்கள் இன்று வரை தொடர்ந்தவண்ணமே உள்ளன.
ஐந்து வயது கூடிய வீரர்களில், தோனியின் வார்த்தைகளில் "Those 5 senior people" டிராவிடும், லக்ஸ்மனும் ஓய்வை அண்மையில் அறிவித்தார்கள்.
(லக்ஸ்மன் ஓய்வு பெற்றதும், தோனியை விருந்துக்கு அழைக்காததும் தனியான சுவாரஸ்யக் கதைகள்)
சச்சின் T20 போட்டிகளில் விளையாடுவதில்லை. (அவரது ஓய்வு எப்போது என்று யாரும் கேட்கப்படாது.. உஸ்)

அடுத்தது சேவாக் .... இவர் தான் அண்மையில் தூக்கப்படுவதும் சேர்க்கப்படுவதுமாக இருக்கிறார்.
ஆனால் அண்மைக்காலத்தில் தான் அணியில் நிரந்தரமாக இருக்கப்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் விரு, விறுவிறு ஆட்டம் ஏதும் ஆடியதாகவும் இல்லை.
அவரை அணியை விட்டுத் தூக்கி, ஐந்தாவது பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்துக்கு எதிராக சரியான முடிவாகவே இருந்தது.

ஆனால் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இர்பான் பதான் சோபிக்கவில்லை.
நேற்று பந்துவீச்சாளர்களால் எதையும் செய்ய முடியவில்லை; (தோனியிடம் கேட்டபோது அவர் வழமையாகவே தோற்றவுடன் அடுக்கடுக்காக எடுத்துவிடும் காரணங்களில் சிலவற்றை நேற்றும் சொன்னார் - "மழை எங்கள் வேகத்தைத் தடுத்துவிட்டது;  மழை ஈரம் சுழல் பந்துவீச்சாளர்களின் கைகளை வழுக்கிவிட்டது") ஆனால் பதான் தான் இந்தியாவின் அதிகூடிய ஓட்டங்கள் பெற்றவர்.

ஆனால் தோனியின் துடுப்பாட்டத் தடுமாற்றம், இந்தியாவின் நேற்றைய படுதோல்வி ஆகியன ரசிகர்கள், விமர்சகர்கள், ஊடகங்களின் அழுத்தம் ஆகியன நாளைய முக்கிய கிரிக்கெட் யுத்தமான பாகிஸ்தானுடனான போட்டியில் சேவாக்கை அணிக்குள் உள் எடுக்கச் செய்யுமா என்ற வினாவை எழுப்புகிறது.

ஆஸ்திரேலியாவுடனோ, இங்கிலாந்துடனோ தோனி செய்ததைப் போல மூன்று/ இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களைப் பாகிஸ்தானுடன் ஈடுபடுத்துவது சிக்கலானது. சிலவேளை அஷ்வினையும், ஹர்பஜனையும் சேர்த்து விளையாடவிடலாம்..(பகுதி நேரப் பந்துவீச்சாளர்களே தமது பலம் என்று தோனி இந்த உலகக் கிண்ண ஆரம்பத்திலேயே சொல்லி இருப்பதால் பஜ்ஜி பாகிஸ்தானை சந்திப்பது சிலவேளை தான்)
எனவே செய்யப்படும் மாற்றங்களில் சேவாக் உள்ளே வரலாம்...

இங்கிலாந்தை வென்றபிறகு யாரை எடுப்பது, யாரை விடுவது என்ற ஆரோக்கியமான குழப்பம் இருப்பதாகப் பேட்டியளித்த தொனிக்குன் இப்போது இப்படியொரு தர்மசங்கடம்... Captain Cool ஆகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும் தோனியின் ஆழ்மனதில் எத்தனை குழப்பங்களோ?

ஆனால்  ICC உலக Twenty 20  ஆரம்பிக்க முதல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தோனியும் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிளெச்சரும் எம்மை சந்தித்த நேரம், அதற்கு முதல் நாள் தான் நியூ சீலாந்து அணிக்கெதிரான ஹைதராபாத் T20 போட்டியில் தோனியினால் இந்தியா தோற்றிருந்ததாக விமர்சனங்கள் எழுந்திருந்த நேரம், அணித் தெரிவுகள், முன்னைய தொடர் பற்றி பேச்சுக்கள் வந்தபோது தோனி சாமர்த்தியமாக அதேவளை கூலாக "இந்த  ICC உலக Twenty 20 பற்றியே கேள்விகள் இருக்கட்டும். வேறு விஷயங்கள் வேண்டாம்" என்று நழுவிக்கொண்டார்.

அப்படி இருந்தும் சேவாக், கம்பீர் இருவரது அணி இருப்பு பற்றியும், ஹர்பஜன், யுவராஜ் மீண்டும் பயிற்சிப் போட்டிகள் இல்லாமல் அணிக்குள் வந்தது பற்றிய கேள்விகள் சுற்றி சுற்றி வந்தபோது, தோனியின் முகம் கொஞ்ச மாற, இடையே குறுக்கிட்ட பிளெச்சர் கொஞ்சம் கடுகடுத்த தொனியில் "அதான் முதல்லையே சொன்னமில்ல,  ICC உலக Twenty 20 பற்றி மட்டுமே கேட்க சொல்லி?" என்றார்.

ஆனால் தோனி மீண்டும் கூலாக ஏனைய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
யுவராஜ்  தெரிவானது அனுதாபத்தினலா என்ற கேள்விக்கு மட்டும் " அது ஒரு தெரிவுக்குழு முடிவு; ஆகவே அது பற்றிக் கருத்து சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு சகலதுறை வீரராக அவரது வருகை, தலைவராக எனக்கு மகிழ்ச்சி தருகிறது" என்று பக்குவமான பதிலைத் தந்திருந்தார்.

தோனி அன்று சொன்ன ஒரு விடயம், நான்கு பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்குப் போதும்; ஐந்தாவது நான்கு ஓவர்த் தொகுதியை வீசத் தரமான பந்துவீசும் சகலதுறையாளர்கள் இந்தியாவிடம் இருக்கிறார்கள் என்று.
யுவராஜ் சிங், கோஹ்லி, ரெய்னா, ரோஹித் ஷர்மா என்று பட்டியல் நீள்கிறது. போதாக்குறைக்கு சர்ச்சை நாயகன் சேவாக்கும் இருக்கிறார்.
இவர்களில் யுவராஜுக்கு இன்னும் சரியான வாய்ப்பு பந்துவீசுவதில் வழங்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது.
3 போட்டிகளில் 6.4 ஓவர்களே வழங்கப்பட்டுள்ளன. இதற்குள் நான்கு விக்கெட்டுக்கள்.
தோனி நாளை யோசிக்க வேண்டிய விடயத்துள் இதுவும் ஒன்று.

--------------

இந்தியா நேற்று ஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கியதற்கு சில மணிநேரம் முன்பாக, அதே மைதானத்தில் பாகிஸ்தான் தென் ஆபிரிக்கா என்ற பலமான அணியை நேற்று பலரும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் வீழ்த்தி அதீத மனோ தைரியத்தோடு இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது.

இதுவரை எந்தவொரு உலகக் கிண்ணக் கிரிக்கெட்டிலும் இந்தியாவை வென்றிராத பாகிஸ்தானுக்கு நாளை அரியதொரு வாய்ப்பு.

இதுவரை ஐந்து 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவை வெல்ல முடியாமல் தொற்றுள்ள பாகிஸ்தான், T20 போட்டிகள் இரண்டிலும் வெற்றிக்கு சமீபமாக வந்தும் இரண்டிலும் தோற்றுள்ளது.
ஒன்று சமநிலையில் முடிவுற்று Bowl out இல் இந்தியா வென்றது.
அடுத்தது எல்லோருக்கும் ஞாபம் இருக்கிற மிஸ்பா ஸ்ரீசாந்த்துக்கு கொடுத்த பரிசு மூலம் இந்தியா முதலாவது  ICC உலக Twenty 20 கிண்ணம் வென்ற இறுதிப் போட்டி.


பஞ்சாப், மொஹாலியில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட உலகக் கிண்ண அரையிறுதியை நேரடியாகப் பார்த்த பின்னர், நாளையும் நம்ம கொழும்பில் நேரடியாகப் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறேன்.

அதற்கு முதல் இடம்பெறும் ஆஸ்திரேலியா - தென் ஆபிரிக்க போட்டியும் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை முக்கியமானது & விறுவிறுப்பானது தான். ஆனால் ரசிகர்களுக்கு அதையெல்லாம் விட இந்திய - பாகிஸ்தான் யுத்தம் தானே பரவசம்?



September 27, 2012

மழையா கிரிக்கெட்டா? Super 8 - ICC World Twenty20


27 போட்டிகள் கொண்ட உலக T20  கிண்ணத்தின் பன்னிரண்டு போட்டிகள் நிறைவடைந்து இன்று பிற்பகல் முதல் Super 8 சுற்று ஆரம்பிக்கிறது.
இதிலும் பன்னிரண்டு போட்டிகள்.
ஆனால் இரு பிரிவுகள்...

இந்தப் போட்டிகள் பற்றியும், நடந்து முடிந்த முதல் சுற்றுப் போட்டிகள் பற்றியும் முடிந்தளவு முழுமையாக தமிழ் மிரரில் எழுதியுள்ளேன்.


'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை



அதில் எழுதாத மேலும் சில விடயங்கள்.....

காலியில் நேற்று முதல் ஆரம்பித்துள்ள மகளிர் உலக T20 யின் முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு இலவசம். இதன் மூலமாவது பெண்கள் கிரிக்கெட்டைப் பிரபல்யப்படுத்த முயல்கிறது ICC.

முதல் தடவையாக மகளிருக்கான தரப்படுத்தல்களும் இம்முறையே வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இம்முறையும் கிண்ணம் வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணிகள் என்று தெரிந்தாலும், வேகமாக வளர்ந்து வரும் இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடம் இருந்து போட்டியை எதிர்பார்க்கிறேன்.

இலங்கை மகளிர் அணி முதல் சுற்றில் ஒரு போட்டியை வென்றாலே பெரிது.


ஆனால் உலகமே இம்முறை அதிகமாகப் பார்க்கப் போகிறது என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த உலக T20  கிண்ணத்தொடர் மழையினால் விழுங்கப்படும் அபாயம் இருக்கிறது.
பள்ளேக்கலை போட்டிகள் மழையினால் பெரிதாகப் பாதிக்கப்படாது எனினும் கொழும்புப் போட்டிகளை மழை கழுவி முடிக்கும் அபாயம் உள்ளது.
முதல் சுற்றில் ஒரேயொரு போட்டி மழையினால் சமநிலையில் முடிந்தது.
இரு போட்டிகளில் டக்வேர்த்-லூயிஸ் (Duckworth - Lewis) விதி பயன்படுத்தப்பட்டது.  

எனினும் இந்த முக்கியமான இரண்டாம் சுற்றில் எத்தனை போட்டிகள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருமோ என்ற கேள்வி எழுகிறது.

மழைத் தொந்தரவு இல்லாமல் போட்டிகள் நடந்தால் எல்லாப் போட்டிகளுமே மிக விறுவிறுப்பாக அமையும் என்பது எல்லோரதும் எதிர்பார்ப்பு.
இலங்கை அணி விளையாடுகின்ற மூன்று போட்டிகளுக்குமே டிக்கெட்டுகள் விற்று முடிந்துள்ளன.
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்திய - பாகிஸ்தான் போட்டியினது டிக்கெட்டுக்களும் முடிந்துள்ளன.
ஒரே நாளில், ஒரே மைதானத்தில் இரு போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்களுக்கு ஒரே டிக்கெட்டில் இரண்டு விறுவிறு போட்டிகள் என்னும் மகிழ்ச்சி.


மேற்கிந்தியத் தீவுகளை Favorites என்று கொண்டாடிக் கொண்டிருந்த பந்தயக்கரர்கள் எல்லாரும் இப்போது தென் ஆபிரிக்காவை முதலாவது தெரிவாக்கி விட்டார்கள்.
இலங்கை இரண்டாவது, இந்தியா மூன்றாவது & பாகிஸ்தான் நான்காவது.


சங்கக்கார வேறு இப்போதைய இலங்கை ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் சாதகத் தன்மை வழங்குவதில்லை; ஆடுகளங்கள் மாறியுள்ளன. வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு சாதகத் தன்மையை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லியுள்ளதைப் பார்க்கையிலும், முதல் சுற்றின் சில பெறுபேறுகளைப் பார்க்கையிலும் யார் வேண்டுமானாலும் சிறப்பாக ஆடினால் ஆதிக்கம் செலுத்தலாம் என்பது உறுதியாகிறது.

இதுவரை புதிய வீரர்கள் எவரும் தம்மை இந்தத் தொடர் மூலமாக அடையாள படுத்தாவிட்டாலும்,
ஹர்பஜன் சிங், அஜந்த மென்டிஸ், இம்ரான் நசீர், பிரெண்டன் மக்கலம், ரோஹித் ஷர்மா, நசீர் ஜம்ஷெட், லக்ஷ்மிபதி பாலாஜி, யசீர் அரபாத் ஆகிய 'பழைய' மறந்து போனவர்கள் தம்மை நிரூபித்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.

நான் எதிர்பார்த்த எந்தவொரு அதிர்ச்சி (upset)  முடிவும் இம்முதற் சுற்றில் இடம் பெறவில்லை எனினும் , தென் ஆபிரிக்கா இலங்கையை வென்றதும், ஆஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியதும், நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து இந்தியாவிடம் தோற்றதையும் இந்த வகைக்குள் சேர்க்கலாம்.

தொடர் ஆரம்பிக்க முதலே எதிர்பார்த்தது போல சாதனைகள் சில உடைக்கப்பட்டுள்ளன. இனியும் சில உடையலாம்.

மக்கலம்  அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுள்ளார்.
அஜந்த மென்டிஸ் மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பெற்றுள்ளார்.
இனி உடையப் போகின்றவை என்னென்ன?

ஏற்கெனவே நேற்று எதிர்வுகூறியது போல அகில தனஞ்செய விளையாடுகிறார். ஆனால் காயத்திலிருந்து குணம் அடைந்துவிட்டாரா என்று சந்த்கத்தில் இருந்து அஜந்தா மென்டிசும் இன்று விளையாடுகிறார் என்பது இலங்கை ரசிகர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய செய்தி இது.
டில்ஷான் முனவீர தனக்கான வாய்ப்புக்கள் இரண்டைப் பயன்படுத்துவதால் மஹேல மீண்டும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆகிறார்.

பிறந்தநாளை இன்று கொண்டாடும் பிரெண்டன் மக்கலமும் அவரது அணியும் இன்று ஒன்றுக்கு இரண்டு மந்திரவாதிகளை எப்படி சமாளிப்பார்கள் என்று பார்க்க ஆவலாகவுள்ளது.
அத்துடன் அறிமுகமாகவுள்ள 18 வயதான தனஞ்செயவின் நான்கு ஓவர்களையும் தவறவிடப் போவதில்லை.
தம்பி என்ன செய்வார் என்று பார்ப்போம்.
இலங்கைக்காக T20 சர்வதேசப் போட்டியில் விளையாடும் மிக இள வயதானவர் இவர் தான்.
 

காத்திருந்து ரசிக்கலாம்..

போட்டி நடைபெறும் நாட்களில் இன்னும் சுவாரஸ்ய, பின்னணிக் கதைகளையும், பரபர விஷயங்களையும் கூடப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஷஹிட் அப்ரிடி எமக்கு சொன்ன கதையும், நான் அவருடன் சீண்டிக்கொண்ட ஒரு விடயமும் கூட வரும்..



September 17, 2012

ஆரம்பமாகிறது ICC World Twenty20


19 நாள் திருவிழா..
பரபரப்புக்குக் குறைவில்லை.
ESPN-STAR ஒளிபரப்பு நிறுவனங்களின் கூற்றுப்படி இம்முறை நடைபெறும் இத்தொடரானது ஒளிபரப்பு, பார்வையாளர் சாதனைகளைஎல்லாம் முறியடித்துவிடுமாம்.

ஆமாம் நாளை ஆரம்பமாகவுள்ள  ICC World Twenty20 என்று அழைக்கப்படுகின்ற Twenty 20 போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர்   பற்றித் தான் சொல்கிறேன்.

SLPL வணிகரீதியில் வெற்றியைத் தந்த பின்னர் இன்னுமொரு வசூல் வெற்றியைத் தரக்கூடியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இது அமையப் போகிறது.
அநேகமான போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் பெருமளவில் விற்று முடிந்திருக்கின்றன. கண்டி, ஹம்பாந்தோட்டையிலும் கூட.
அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் அத்தனையும் காலி.

நல்ல காலம் நான் ஊடகவியலாளனாக ICCயின் அடையாள அட்டை அனுமதிப் பத்திரம் (Media accreditation) பெற்றுக்கொண்டேன்.
ஆர்வமுள்ள அப்பா, குடும்பத்தாருக்கு (நம்ம ஹர்ஷு இப்ப ஒரு கிரிக்கெட் ரசிகன்.. சங்கா, மத்தியூஸ், தோனி, பிராவோ அவனுடைய favorites) டிக்கெட்டுக்கள் வாங்கிவிட்டேன்.

அமெரிக்க சுற்றுலாவுக்குப் பின்னர் வீட்டிலும், வெளியிலும் குவிந்து கிடந்த வேலைகளுக்கு மத்தியிலும் வந்திருந்த கிரிக்கெட் அணிகளின் ஊடக சந்திப்புக்கள், பேட்டிகள், சில பயிற்சிப் போட்டிகள், படம் பிடித்தல்கள் என்று முடியுமானவரை ஓடி ஓடி திருப்தியாக விஷயங்கள் சேகரித்துவிட்டேன்.

படங்களைத் தொகுப்பாக என் பேஸ்புக் பக்கங்களில் பதிந்துள்ளேன்.

அவற்றின் பின்னால் சுவாரஸ்யமான பல சம்பவங்களும் இருக்கின்றன.

இனி போட்டிகள் நடைபெறும் தினங்களிலும் முடியுமானவரை ஒவ்வொரு நாளிலும் சிறு சிறு இடுகைகள் மூலமாக சேர்த்து வைத்துள்ள அந்த விஷயங்களைப் பகிரலாம் என்று நம்புகிறேன்.
(சிரிக்காதீங்க பாஸ்.. நம்பிக்கை தானே வாழ்க்கை)

2011 உலகக் கிண்ண நேரம் ஓடி ஓடி உழைத்துக் களைத்ததை விட,  நான்கு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் இந்த T20 தொடர் அதிகமான நேரத்தை எடுக்காதே....

அதை விட மனதுக்கு மிகத் திருப்தியான விடயம் ICC World Twenty20 என்று அழைக்கப்படுகின்ற Twenty 20 போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர் பற்றிய முழுமையான முன்னோட்டப் பார்வையை ஒரு விரிவான இடுகையாக இட வேண்டும் என்று எண்ணி அதில் வெற்றியும் கண்டுவிட்டேன்.

தமிழ் மிரர் இணையத்துக்காக இரு பகுதிகளாக எழுதியுள்ளேன்.
கீழேயுள்ள சுட்டிகளின் வழி அவற்றை வாசித்து விட்டு மீண்டும் வாருங்கள்..

இன்னும் சில நம்ம ஸ்பெஷல்கள் இங்கே இருக்கின்றன.
அவற்றையும் வாசித்துக் கீழே கருத்திடலாம், கலந்துரையாடலாம், இல்லை கலாய்க்கலாம்..


உலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1




உலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2




வாசித்தீர்களா?

இப்போ வாருங்கள்..

ஆசியாவிலே இடம்பெறும் முதலாவது  Twenty 20 போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர் இது.

கடந்த ICC World Twenty20 பற்றிய முன்னோட்ட இடுகைகள்


T 20 உலகக் கிண்ணம் 2010- என் பார்வை





ஆசிய அணிகள்+ஆஸ்திரேலியா - உலகக் கிண்ண உலா





எந்த அணிக்கான/அணிகளுக்கான வாய்ப்பு அதிகம் என்று ஊகிக்க முடியாதவாறு அனேக அணிகள் சம பலத்தோடு இருக்கின்றன/ தெரிகின்றன.



அண்மையில் தான் விருதுகளை மலையாகக் குவித்து வென்று வரும் சங்கக்கார ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார், இலங்கையின் ஆடுகளங்கள் இப்போது நிறையவே மாறிவிட்டன.. எனவே சுழல் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகத்தன்மையை இத்தொடர் வழங்கும் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று..

T20 போட்டிகள் என்றாலே அதிகம் சாதிக்கின்ற அல்லது அதிக முக்கியத்துவம் பெறுகின்ற சகலதுறை வீரர்களும், அதிரடி சிக்சர் மன்னர்களும் குதித்துள்ள களத்திலே தனித்துத் தெரியப் போகின்றவர்கள் யார் எனும் ஆர்வம் ....

கடந்த ICC World Twenty20 இல் டில்ஷான், அப்ரிடி ஜொலித்தது போலவும், மத்தியூசின் அபார பிடி உலகப் புகழ் பெற்றது ;போலவும், இம்முறை யார் நட்சத்திரமாகப் போகிறார்?

புதிதாக வெளிவரப் போகிற புதுமுக நட்சத்திரங்கள் யார்?

என்னென்ன புதிய சாதனைகள் படைக்கப்படும்?
இவ்வாறான எதிர்பார்ப்புக்களைத் தாண்டி, எனக்கு இருக்கும் சின்னச் சின்ன ஆசைகளாக ஆப்கானிஸ்தான், அயர்லாது ஆகிய அணிகள் தங்கள் தடம் படைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

இலங்கை கிண்ணம் வெல்லவேண்டும் என்பது ஓவரான ஆசையோ தெரியவில்லை.. ஆனால் இந்த சிறு அணிகள் தங்களைப் பெரியளவில் வெளிப்படுத்தவேண்டும் என்பது நியாயமான ஆசை தானே?

T20 போட்டிகளில் கணிப்புக்கள் செய்வது என்பது எமது மூக்கை நாமே உடைத்துக்கொள்வது போல.. அனுபவப்பட்டிருக்கிறேன்.

அய்யோ அம்மா.. என்னா அடி இது..



ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்வேன்...
Favorites என்ற முத்திரையோடு வருகிற சில அணிகளுக்காவது அதிர்ச்சிகள் காத்திருக்கும்...

நாளை  இரவு 7.30 முதல் இனி கிரிக்கெட் கோலாகலம் தான்...

June 21, 2012

இனித் தான் ஆட்டமே ஆரம்பம்... UEFA Euro 2012


இன்று நள்ளிரவு முதல் ஐரோப்பிய கால்பந்தாட்டத் தொடரின் கால் இறுதிப் போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன.

கால் இறுதிப் போட்டிகளுக்கு எந்த அணிகள் தெரிவாக வேண்டும் என்று நான் விரும்பி இருந்தேனோ, அவற்றில் நெதர்லாந்து, குரோஷியா, உக்ரெய்ன், ஸ்வீடன் ஆகிய அணிகள் அவுட்.
ஆனால் இவற்றில் நான்குமே தெரிவாகும் என்று நான் உறுதியாகத் தெரிவித்திருக்கவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவே வேண்டும்.
(விக்கிரமாதித்தன் இங்கே விளையாடவில்லை)

ஆனால் சில அணிகள் பலமான அணிகள்; நிச்சயம் காலிறுதிக்குத் தெரிவாகும் என்று நம்பி இருந்தேன்.. நான் மட்டுமா உலகமே நம்பி இருந்தது.
அந்த அணிகளில் எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரே அணி ரஷ்யா.
ரஷ்யா தனது கடைசிக் குழுநிலைப் போட்டியில் கிரீசிடம் தோற்றதால் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
மற்றும்படி எல்லாம் கணித்தது போலவே நடந்திருப்பது.



கிரிக்கெட்டில் என்னோடு விளையாடுவது போல விக்கிரமாதித்தன் கால் பந்தில் விளையாட்டுக் காட்டி மூக்குடைப்பது மிக மிக அரிது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சந்தோசம்.

எனது முன்னைய ஐரோப்பிய கால்பந்து இடுகையை மீண்டும் ஒவ்வொரு பிரிவாக வாசித்தீர்களாயின் எனது கணிப்புக்களில் பிரிவு பற்றி சொல்லியுள்ள விடயங்கள் தவிர ஏனைய அனைத்தும் அச்சுப் பிசகாமல் சரியாக வந்திருப்பதை உணர்வீர்கள்.

முதல் சுற்று ஆட்டங்கள் பற்றிய விரிவான ஒரு அலசலை தமிழ் மிரரில் எழுதியுள்ளேன்.
அதையும் முழுமையாக வாசித்து விடுங்கள்..


ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து; கால் இறுதிகளுக்கான அணிகள் எட்டும் தெரிவாகின



உங்கள் கருத்துக்களை அங்கேயே பதியலாம்.. அல்லது இங்கேயே கூடப் பதியலாம் :)

முதல் சுற்று ஆட்டங்களில் எனக்குப் பிடித்த அணியான ஸ்பெய்ன் நான் முன்னைய இடுகையில் சொன்னதைப் போலவே மந்தமாக ஆரம்பித்து பிரகாசமாக அடுத்த சுற்றுக்கு செல்கிறார்கள்..
பிரான்சை அடுத்து சந்திப்பது தான் காலிறுதியின் முக்கியமான போட்டியாக அமையப் போகிறது.

டொரெஸ் மீண்டும் கோல்களைக் குவிக்க ஆரம்பித்திருப்பதும், ஏனைய வீரர்களும் உறுதியாக விளையாடுவதும், கோல் காப்பாளரும் தலைவருமான கசியாஸ் இதுவரை யாராலும் சோதிக்கப்படாமையும் அரையிறுதிக்கான இடம் உறுதி என்பதைக் காட்டுகிறது.

ஸ்பெய்னுக்கு சவாலாக இருக்கப் போகிற ஒரே அணி ஜெர்மனி.
ஆனால் பந்தயக்காரர்கள் இப்போது ஸ்பெய்னை விட ஜெர்மனியையே கூடுதல் வாய்ப்புள்ள அணியாகக் கருதுகிறார்கள்.

கோமேஸ் முன்னணி நட்சத்திரமாகத் தெரிந்தாலும் ஏனைய பின்புலத்தில் இயங்கும் அத்தனை வீரர்களுமே சிறப்பாக விளையாடுகிறார்கள்.
கிரீஸ் அணியின் கிடுக்கிப்பிடித் தனமான தடுப்பு ஆட்டத்தை நிதானமாக முறியடித்தால் அரையிறுதி உறுதி.

இன்னொரு கால் இறுதியும் ஒரு கால் பந்து யுத்தம் போல எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து எதிர் இத்தாலி.

இத்தாலி இங்கிலாந்தை விடப் பலமானது என்று தொடர் ஆரம்பிக்க முதல் கருதிய பலருக்கும், இங்கிலாந்தின் இறுதி இரண்டு வெற்றிகளும் இலேசுப்பட்ட அணியல்ல இது என்பதைக் காட்டி இருக்கும்.

அடுத்து இன்று நள்ளிரவு இடம்பெறவுள்ள முதலாவது காலிறுதிப் போட்டி.
செக் குடியரசு எதிர் போர்த்துக்கல்.
செக் அணியின் முதலாவது தோல்விக்கு அடுத்த நாள் நான் எழுதிய இடுகையின் வசனங்கள்....

செக் அணிக்கும் போட்டிகளை நடத்துகின்ற போலந்து அணிக்கும் இடையில் இரண்டாம் இடத்துக்கான இழுபறியில் சொந்த மைதானம் + ரசிகர்களின் ஆதரவு என்று போலந்துக்கு சாதகமான விஷயங்கள் இருந்தாலும் செக் அணி முதல் இரு போட்டிகளில் விட்ட தவறுகளை கடைசிப் போட்டியில் சரிசெய்யும் என்று நம்புகிறேன்.


ஆனால் இன்று போர்த்துக்கலும் எனக்குப் பிடித்த அணி. தனி நபராகப் பிடிக்காவிட்டாலும் போர்த்துக்கலுக்காக விளையாடும்போது பிடித்துப் போகிற ரொனால்டோ விமர்சனங்களைஎல்லாம் தாண்டி கோல் குவிப்பாளராக மாறியுள்ளார்.

செக்கின் விறுவிறுப்பான பதிலடிகளை எதிர்பார்க்கிறேன்.


கால் பந்து ரசிகர்களுக்காக ஒரு மினிக் கருத்துக் கணிப்பையும் Facebookஇலே நடத்துகிறேன்.. 
எது வெல்லும் என்று நீங்கள் சொல்லுங்கள்.. 



Who is going to lift the 2012 UEFA Euro cup?




இதயத் துடிப்பை எகிற வைக்கும் இறுக்கமான போட்டிகள், மேலதிக நேரங்கள், பெனால்டி உதைகள் என்று இனித் தான் உணர்ச்சியான ஐரோப்பியக் கால்பந்துத் திருவிழா... ரசிப்போம் வாருங்கள்.. 




June 13, 2012

கணிப்புக்களும் விருப்பங்களும் - ஒரு விரிவான பதிவு - UEFA Euro 2012



ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் முதல் வாரம்..

ஐரோப்பியக் கிண்ண ஆரம்பத்தில் எனது இடுகையொன்றில் மேலோட்டமாக சில விஷயங்களை சொல்லி இருந்த நான், தமிழ் மிர்ரரில் விரிவாக ஒரு கட்டுரை வரைந்திருந்தேன். வாசிக்காதவர்கள் இந்த சுட்டி வழியாக செல்லுங்கள்.


A பிரிவு தவிர ஏனைய எல்லாப் பிரிவுகளிலும் உள்ள அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளையே விளையாடியுள்ளன.

இந்த கால்பந்துத் தொடர் ஆரம்பிக்க முதல் UEFA Euro 2012 கிண்ணத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணிகள் என்ற வரிசை
நடப்புச் சாம்பியன் ஸ்பெய்ன்
ஜெர்மனி
பிரான்ஸ்
இங்கிலாந்து
இத்தாலி
ரஷ்யா
ஒல்லாந்து 
போர்த்துக்கல்


ஆனால் இந்த வரிசையில் உள்ள அணிகளில் தத்தம் முதலாவது போட்டியில் வெற்றி எட்டிய அணிகள், ஜெர்மனி, ரஷ்யா ஆகியன மட்டுமே.. 

ஏனைய அணிகளில் ஒல்லாந்து டென்மார்க் அணிக்கெதிராக அதிர்ச்சித் தோல்வியைக் கண்டது. மற்றைய அணிகள் வெற்றி தோல்வியற்ற முடிவுகளையே கண்டன. 
ஐரோப்பாவைப் பொறுத்தவரை எல்லா அணிகளுமே சராசரியாகப் பலமான அணிகள் என்ற அடிப்படையில் இறுக்கமான போட்டிகள் சாதாரணமாக எதிர்பார்க்கப்படுவதே.
அத்துடன் எவ்வளவு தான் பலம் வாய்ந்த அணியாக ஸ்பெய்ன் இருந்தாலும் பொதுவாக எந்தவொரு தொடரிலும் மந்தமாகவே ஆரம்பிப்பது வழக்கம்.
நான் கூட ஸ்பெய்ன் அணி பற்றி ட்விட்டரில் Slow starters but strong finishers :) #spain 

என்று குறிப்பிட்டு இருந்தேன்.

(நம்பிக்கை தான்யா வாழ்க்கை)



உலகக் கால்பந்து அணிகளில் எனக்கு மிகப் பிடித்த அணி ஆர்ஜென்டீனா. (இது உங்களில் பலருக்கும் 2010 உலகக் கிண்ண நேரமே தெரிந்திருக்குமே) 
இதற்கு அடுத்தபடியாக ஆசிய அணிகள் சிலவற்றைப் பிடிக்கும்.. பாவம் முன்னேறக் காத்திருக்கும் அணிகள் என்ற பச்சாதாபம். 
அதேபோல எந்த விளையாட்டிலும் நான் விரும்புகின்ற ஆஸ்திரேலியாவை கால்பந்திலும் பிடிக்கிறது.

ஐரோப்பாவில் இருக்கும் அணிகளில் பிரதானமாக ஸ்பெய்ன், போர்த்துக்கல், ஒல்லாந்து போன்ற அணிகளைப் பிடிக்கும்.. ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக ஸ்வீடன், அயர்லாந்து, நோர்வே, க்ரோஷியா, செக், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, செவ்ஷேன்கே என்ற ஒரு தனி நபருக்காக உக்ரெய்ன் என்று சில அணிகளின் மீதும் அவை எனது விருப்புக்குரிய அணிகளுக்கெதிராக விளையாடாத நேரத்தில் விருப்பம் இருக்கும்.. 



இந்த இடுகை இமுறை ஐரோப்பியக் கிண்ணத்தில் எனது விருப்ப அணிகள் மீதான எதிர்பார்ப்பு & கால் இறுதிப் போட்டிகளுக்கு செல்லக் கூடியதான எல்லா அணிகளின் வாய்ப்புக்கள் பற்றி ஆராய்கிறது.

(யாரது அங்கே 'விக்கிரமாத்தித்தாய நமஹா' என்று மந்திரம் சொல்வது?)

இந்த இடுகை மூலமாக என் விக்கிரமாதித்தன் பட்டத்தைக் கழற்றி வைத்துவிடும் மறைமுக நப்பாசையும் இருக்கிறது. 
ஆனால் கடந்த 2010 கால்பந்து உலகக் கிண்ணத்தின்போது எனது எதிர்பார்ப்புக்கள்/ ஊகங்கள் வீதம் சரியாக இருந்தமையை நான் இங்கே பெருமையுடன் சொல்லத் தான் வேண்டும். 




பிரிவு A

இப்போதைக்கு ரஷ்ய அணிக்கு கால் இறுதி செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
செல்லும் என்று நானும் நம்புகிறேன். இதன் இறுதிப் போட்டி கிரீஸ் அணிக்கு எதிராக என்பதால் உறுதியாகிறது.
செக் அணிக்கும் போட்டிகளை நடத்துகின்ற போலந்து அணிக்கும் இடையில் இரண்டாம் இடத்துக்கான இழுபறியில் சொந்த மைதானம் + ரசிகர்களின் ஆதரவு என்று போலந்துக்கு சாதகமான விஷயங்கள் இருந்தாலும் செக் அணி முதல் இரு போட்டிகளில் விட்ட தவறுகளை கடைசிப் போட்டியில் சரிசெய்யும் என்று நம்புகிறேன்.

 சிவப்புக் கலர் செக் அணி 

செக்கோஸ்லாவேக்கியா உடைந்ப்து செக் அணி உருவான போது 1996ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தின்போது இந்த அணியின் வேகமும் விறுவிறுப்புமான ஆட்டம் பிடித்துக்கொண்டது. சிறு அணி ஒன்று என்பதால் ஆதரவு வழங்கி இருந்தேன்.
அதே போல அதே ஐரோப்பியக் கிண்ணத்தில் முதல் தடவை களமிறங்கிய யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த க்ரோஷியாவையும் பிடித்துப்போனது.
(பிரிந்து போய் தனியா நின்று போராடும் அணிகளை யாருக்குத் தான் பிடிக்காது?)

நேற்று கிரீஸ் அணியை வென்றாலும் முதல் ஆறு நிமிடங்களில் பெற்ற கோல்கள் தவிர தொடர்ந்து வந்த நிமிடங்களில் க்ரீசிடம் திணறியது.
மிலன் பரோஸ்,ரொசிக்கி, பிலர், பெட்டர் செக் போன்ற பிரபல வீரர்களிடம் இன்னும் எதிர்பார்க்கலாம். பார்க்கலாம். 


பிரிவு B

இது தான் இம்முறை ஐரோப்பியக் கிண்ணத்தின் சிக்கலான பிரிவு. Group of Death என்று சொல்லலாம்.. 
கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் என்று கருதப்படும் மூன்று அணிகள் உள்ள பயங்கரப் பிரிவு. டென்மார்க் தான் இந்த நான்கு அணிகளில் பலவீனமான அணி என்று கருதினாலும் முதலாவது போட்டியிலேயே ஒல்லாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது டென்மார்க்.
இந்தப் பிரிவில் கடந்த ஐரோப்பியக் கிண்ணத்தில் இரண்டாம் இடம் பெற்ற போர்த்துக்கல் மட்டுமே இதுவரை ஐரோப்பியக் கிண்ணம் வெல்லாத அணி. (இம்முறை போர்த்துக்கல் வென்றால் மகிழ்வடையும் முதலாவது நபராக நான் இருப்பேன்)
ஜெர்மனி - போர்த்துக்கல் மோதல் ஒரு காட்சி 

அடுத்த சுற்றுக்கு இப்பிரிவில் இருந்து போர்த்துக்கலும் ,ஒல்லாந்தும் செல்லவேண்டும் என்பதே என் விருப்பம்.
ஆனாலும் ஜெர்மனியைத் தாண்டி இவ்விரு அணிகளும் செல்ல முடியும் என்பது சாத்தியமில்லைத் தான்.
அதிலும் போர்த்துக்கல் - ஒல்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும் இருக்கிறது.
ஒல்லாந்து இனி ஜெர்மனியையும் சந்திக்கவேண்டி இருப்பதால் போர்த்துக்கலுக்கே இரண்டாவது அணியாகத் தெரிவாகும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். 

ரொனால்டோ, நானி ஆகியோர் இன்றிரவு டென்மார்க்குக்கு எதிராகத் தமது வழமையான formக்குத் திரும்புவார்கள் என நம்பி இருக்கிறேன்.

நெதர்லாந்து இன்றிரவு ஜெர்மனியை சந்திக்கும் போட்டி மிக விறுவிறுப்பானதாக அமையும் என்று நம்புகிறேன். உலகின் மிகப் பிரபல நட்சத்திரங்கள் இரு தரப்பிலும் விளையாடினாலும், அணியாக விளையாடும் போது ஜெர்மனியின் பலம் உயர்வு. 
ஜெர்மனியின் கோமேஸ், ஒசில், பொடோல்ஸ்கி, போட்டேங்,முல்லேர்,லாம் ஆகிய ஆறு நட்சத்திரங்களும் கழக மட்டத்தில் விளையாடிய தமது formஐ Euro 2012க்கும் கொண்டு வந்துள்ளார்கள் என்பது சிறப்பு. 

ஒல்லாந்து அணியின் செம்மஞ்சள் சட்டை வீரர்களிலும் இப்படியே பல நட்சத்திரங்களை அடுக்கலாம்..
ஆர்ஜென் ரொப்பேன், வெஸ்லி ஸ்னைடர், வான் பேர்சி, வன் பொம்மேல்,ஹைட்டிங்கா இப்படி... 

ம்ம்ம்ம் ஒல்லாந்து வெல்லும் என்று சொல்லவில்லை; வென்றால் நல்லா இருக்குமே என்கிறேன்.


பிரிவு C

மேலோட்டாமாக பார்த்தால் நடப்பு ஐரோப்பிய, உலக சாம்பியனான ஸ்பெய்னும், பாரம்பரிய கால்பந்து பயில்வான் இத்தாலியும் இலகுவாகக் காலிறுதிக்குள் நுழைவார்கள் என்று தெரிந்தாலும், அயர்லாந்தும் க்ரோஷியாவும் இந்த இரு அணிகளையும் கவிழ்க்கும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை மறுக்க முடியாது.
நடப்பு சாம்பியன்கள் ஸ்பெய்ன் 

எனக்கு என்றால் இப்பிரிவிலிருந்து ஸ்பெய்னும், க்ரோஷியாவும் தெரிவானால் திருப்தி.
அதற்கேற்றது போல க்ரோஷியா முதலாவது போட்டியில் அயர்லாந்து அணியை அசரடித்துள்ளது.

ஆனால் ஸ்பெய்னுக்கு ஈடு கொடுத்து இத்தாலி விளையாடிஇருந்ததைப் பார்த்தால் இத்தாலி நிறைய வாய்ப்புள்ள அணியாகவே தெரிகிறது.  
ஸ்பெய்ன், இத்தாலி இவ்விரு அணிகளின் கோல் காப்பாளர்களுமேமே இந்த அணிகளின் அத்திவாரங்கள்.
அனுபவம் வாய்ந்த கசியாஸ் மற்றும் பபன்(நம்ம குஞ்சு பவன் இல்லை.. இது Buffon)

ஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி அணியின் பெரும்பான்மையான வீரர்களான பாப்ரேகாஸ், டொரெஸ், சவி ஹெர்னாண்டஸ், இனியெஸ்டா , பிக்கே, சில்வா போன்றோர் இருந்தாலும், ஓய்வுபெற்ற தலைவர் புயோலும், காயமுற்றுள்ள டேவிட் வியாவும் இல்லாமை ஸ்பெய்னை முதலாவது போட்டியில் மிக சிரமப்படுத்தியிருந்தது. 
நாளை அயர்லாந்தை எதிர்கொள்ளும்போது எப்படி விளையாடுகிறது என ஆர்வத்துடன் காத்துள்ளேன்.

இத்தாலி கிரிக்கெட்டில் பாகிஸ்தான் போல.. அடிக்கடி ஏற்படும் சூதாட்ட சர்ச்சைகள், வீரர்களை அடிக்கடி மாற்றுவது இப்படி பல.. ஆனாலும் முன்னணி அணி தான்.. முக்கிய அணி தான்..
இந்த அணியில் பிர்லோ, டி ரோச்சி ஆகிய முக்கிய வீரர்கள் கவனிக்கக் கூடியவர்கள்.

குரோஷியா அணியைப் பொறுத்தவரை, ஒலிக், க்ரஞ்ச்கர்,எடுவார்டோ, ஸ்ர்னா, மொட்றிக் ஆகிய வீரர்கள் அசத்தக் கூடியவர்கள். 
குரோஷியா இத்தாலியை நாளை என்னுடைய ராசியான நாளில் வீழ்த்தும் என்று நம்பி இருக்கிறேன். (நல்ல மூக்கு பிளாஸ்டிக் சேர்ஜரி எங்கே செய்யலாம் நண்பர்ஸ்?)



பிரிவு D

பிரான்ஸ் - இங்கிலாந்து என்ற பழைய எதிரிகள் இருக்கும் பிரிவு. யாருக்கும் சேதாரமில்லாமல் தமக்கிடையேயான முதல் போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டார்கள்.
அன்றே செவ்ஷேங்கோ என்ற ஒரு வயதேறிய போராளி விளையாடும் உக்ரெய்ன் தன் சொந்த மண்ணில் விளையாடுவதால் (அதிலும் உக்ரேய்னின் முதலாவது ஐரோப்பியக் கிண்ணம் இது) உக்ரெய்ன் அடுத்த சுற்றுக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அடுத்த அணி பிரான்ஸ் என்றே கருதப்படுகிறது.
நானும் அப்படியே கருதுகிறேன்.
இங்கிலாந்து - ரூனி இல்லாமலும் முடியுமா?

ஆனால் இங்கிலாந்தும் சுவீடனும் எனக்குப் பிடித்த அணிகளில் உள்ளன.. 
நான்கு அணிகளிலும் உள்ள ஒற்றுமை ஒரு குறித்த நாளில் உலகின் எந்த அணியையும் இவை வீழ்த்தும்.. இன்னொரு நாளில் சொதப்பும்.

ஸ்வீடன் அணி 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கிண்ணத்தில் விளையாடிய விதத்தினால் என்னைக் கவர்ந்த அணி. இன்று வரை இந்த அணியின் விளையாட்டு விதம், மற்றும் சீருடை வர்ணம் ஆகியன மனம் கவர்ந்தவை.
இப்ராஹிமொவிச், கல்ஸ்ட்றோம், லார்சன் ஆகியோர் நட்சத்திரங்கள்...
ஆனால் உக்ரெய்னிடம் தோற்ற விதத்தைப் பார்த்தால் பிரான்சை வெல்ல முடியாது என்றே தோன்றுகிறது.

பிரான்சிடம் உள்ள அவர்களது அனுபவமும் துடிப்பும் கலந்த சமபல அணி.. 
ரிபேரி, நஸ்ரி, பென்சீமா, பென் அப்ரா, மலூடா, பட்ரிஸ் எவரா என்று நட்சத்திரப் பட்டாளம்.

மறுபக்கம் உலகம் முழுக்கப் பிரபலமான இங்கிலாந்து ஏனோ ஒரு அணியாகப் பலமானதாக தெரியவில்லை..
ரூனியின் தடை முதல் ஆட்டத்தில் அவரை விளையாட விடவில்லை.அடுத்த ஸ்வீடன் போட்டியிலும் அவர் விளையாட முடியாது. இறுதி முதல் சுற்று ஆட்டத்தில் ரூனி வர முதலே இங்கிலாந்து வெளிஈரிவிடுமோ என்பதே கேள்வி.
ரூனி இல்லாத இங்கிலாந்தில், டெரி, ஜெரார்ட், ஆஷ்லி கோல், வோல்கொட், டீ போ போன்ற வீரர்கள் இருந்தாலும் ஏனோ சறுக்கி விடுகிறார்கள்.

இறுதியாக ஷேவ்ஷேங்கோவின் உக்ரெய்ன். 35 வயதான இவரை நம்பியே இன்னமும் இந்த அணி ஓடுகிறது. வொரோனின், குசேவ் போன்ற வீரர்கள் முன்னணி வீரர்களாக இருந்தாலும் கிழட்டுக் குதிரை தான் இன்னமும் இந்த வண்டியை இழுக்கிறது. கால் இறுதிக்கு சென்றால் நிம்மதியாக ஷேவ்ஷேங்கோ தன் ஓய்வை அறிவிப்பார் என்று நினைக்கிறேன்.


இவை என் கணிப்புக்கள் & விருப்பங்கள்.
எத்தனை நடக்கும் என்று பார்க்கலாம்.

தமிழ் மிரரின் ஆசிரியர் நண்பர் மதன் கேட்டதற்கிணங்க வாரத்தில் சில விளையாட்டுக் கட்டுரைகளை அதற்கென்று பிரத்தியகமாக எழுத ஆரம்பித்துள்ளேன். அவற்றையும் வாசித்து விமர்சனங்களை வழங்குங்கள்.
இதுவரை பிரசுரிக்கப்பட்ட இரு கட்டுரைகள்.


(என்னுடைய வலைப்பதிவுகளில் இருக்கின்ற ஏதோ இந்தக் கட்டுரைகளில் இல்லை என்றும், இங்கே இல்லாத ஏதோ அங்கே இருக்கின்றது என்றும் நண்பர்கள் சிலர் கருத்து சொல்லி இருந்தார்கள்.. அது தான் தேவை.. எனவே மகிழ்ச்சி)


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner