நாளை எனது தந்தையாரின் அறுபதாவது பிறந்த நாள்.
எனது வாழ்க்கையில் மிக முக்கியமானவர். எனக்கு உருவம் தந்தவர் என்பது மட்டுமல்லாமல், உண்மையான வாழ்க்கையின் அர்த்தத்தை நான் உணரும்படி வாழ்க்கையின் பல கட்டங்களிலும் உணர்த்தியவரும் அப்பா (ரகுபதி பாலஸ்ரீதரன்) தான்..
அப்பாவுக்கான சில வரிகள்..
இவை தனிப்பட்ட முறையில் அப்பாவை அடைவதை விட பகிரங்கமாக வருவது பல பேருக்கும் வாழ்க்கையின் பாடங்களைத் தரும் என்பதாலேயே இந்தப் பதிவு..
அப்பா, இந்த அறுபது வருடங்களில் நீங்கள் வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளும் கற்ற பாடங்களும் பல..நீங்கள் அடைந்த வெற்றிகளில் எப்படி நாங்கள் அனைவரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அடைந்தோமோ, நீங்கள் கண்ட சில தோல்விகளில் நாங்கள் பெற்ற வேதனைகளும்,கற்ற பாடங்களும் அதிகம்..
உங்கள் ஒரு சில பலவீனங்கள் உங்களிடம் அதிகமாக நிறைந்திருக்கும் உங்கள் மிகப் பெரும் பலங்களையும் நீர்மையாக்கிவிடுவதையும் நாங்கள் கண்டிருக்கிறோம்;அந்த விடயத்திலேயே அடிக்கடி உங்களோடு முரண்பட்டு,மூர்க்கமாகவும் உங்களோடு நான் நடந்திருக்கிறேன்.இப்போதும் நான் மனம் வருந்துவதாக சில சம்பவங்கள் நடந்திருந்தாலும், உங்கள் மீதான என் அன்பு எவ்வாறு குறையவில்லையோ,அது போலவே என் மீதான உங்கள் அன்பும் கொஞ்சமும் குறையவில்லை என்றும் எனக்குத் தெரியும்..
அப்பாவி, அன்பை வெளிப்படுத்த தெரியாது,யாரையும் நம்பிவிடும் சுபாவம்,சட்டென்று வரும் முன்கோபம்,கடவுள் மீதான ஆழ்ந்த பக்தி,தமிழ்,தமிழர் மீதான ஆத்மார்த்தமான பற்று என்று உங்களை நான் ஒரு சராசரி நடுத்தர வர்க்கத் தமிழனின் கலைவையாகப் பார்த்துள்ளேன்..
உங்களிடம் இருந்த எல்லா நல்ல விஷயங்களையும் என்னுள்ளே நான் எடுத்துக் கொண்டுள்ளேன்.. உங்களிடம் இருக்கும் சில விரும்பத் தகாத விஷயங்களும் கூட எங்களுக்கு வாழ்க்கையில் பாடங்கள் ஆகி எங்களை நல்வழிப்படுத்தி இருக்கின்றன..
எனக்கும்,தம்பிமாருக்கும் நீங்கள் கற்றுத் தந்த பல விஷயங்களை நாம் எப்போதும் வாழ்க்கையில் மறக்கப் போவதில்லை..
குறிப்பாக எனக்கு உங்கள் ரசனைகளும்,வாழ்க்ள்கையில் நீங்கள் கடைப்பிடித்த சில கொள்கைகளும்,நீங்கள் எனக்கு சொல்லித் தந்த சின்ன சின்ன விடயங்களும் என் வாழ்வின் அடிப்படைகளாகவும்,எனது வாழ்க்கையின் அம்சங்களாகவும் மாறிப் போயுள்ளன..
தமிழ்,வாசிப்பு,திரைப்படங்கள்,பாடல்கள்,கிரிக்கெட்,செய்திகள் என்ற இவை எல்லாமே எனக்கு இப்போது சோறு போடும் விஷயங்களாக மாறியுள்ளன..
இந்த ஒவ்வொரு விஷயங்களிலும் நீங்கள் சொல்லித் தந்த நுணுக்கங்களும் என்னை இப்போதிருக்கும் நிலை வரை கொண்டு வந்துள்ளன..
கிரிக்கெட்டில் கமெண்டரி கேட்பது,பத்திரிகைகளில் ஆங்கில கிரிக்கெட் செய்திகள் வாசித்துப் பொருள் அறிவது, எனக்காகவே யாழ்ப்பாணத்தில் நாங்கள் இருந்த யுத்த சூழ்நிலையிலும் தேடிப் பிடித்து ஆங்கில செய்திதாள்கள் நீங்கள் கொண்டு வருவது இன்னமும் நிழலாடுகிறது..
உங்கள் பக்கம் இருந்து, உங்களுடன் டிஸ்கஸ் செய்தவாறே பார்த்த திரைப்படங்கள் ஏராளம்.. இன்று நண்பர்கள்,எனது மனைவியுடன் கூட அந்த சுவாரஸ்யம் எனக்கு வாய்ப்பதில்லை..
எனக்கு நீங்கள் ஊட்டிவைத்த தமிழ் சஞ்சிகை,நாவல்கள் ரசனை, சின்ன வயதிலேயே கொண்டு தந்த 'பொன்னியின் செல்வன்','கடல்புறா','பாவை விளக்கு' இன்னும் பலபல நாவல்கள்,விலை மதிக்க முடியாத நூல்கள் எனக்குக் கற்றுத் தந்த தமிழறிவும்,தமிழ்ச் சுவையும் வேறு எந்த குருவும் தராதவை.
கவிதை,பேச்சு,விவாதம்,பட்டி மன்றம்,பின்னர் நாடகம்,அறிவிப்பு என்று நான் படிப்படியாக வளர்ந்த போது ஒவ்வொன்றிலும் உங்களின் பின்னணி எனக்குள்ளே எழுப்பிய தாக்கம் மிகப்பெரியது..
எனது நல்ல ரசனைகள் எல்லாமே உங்களிடம் இருந்து நான் பெற்றவையே..
'மனிதனுக்கு மூன்று விஷயங்களில் சுத்தம் மிக முக்கியம்- கை,நாக்கு,நெஞ்சு ' என்று நீங்கள் அடிக்கடி சொல்லும் அந்த வசனம் இன்னமும் அடிக்கடி என் மனதில் எதிரொலிக்கிறது.
அரசியலில் உங்களைப் பயன்படுத்தியவர்களின் மீதான எனதும்,தம்பிகளினதும் கோபம் ; இதன் காரணமாக உங்களோடு நாங்கள் நடத்தும் அரசியல் வாதப் பிரதிவாதங்கள் எங்களுக்கு சொல்லித் தந்த அரசியல் பாடங்கள் ஏராளம்.
பார்க்கப் போனால் நீங்கள் எங்களுக்கு, அதிலும் எனக்கு ஒரு மிகப் பெரிய all rounder/hero.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து எங்கள் மூவரின் கல்விக்காக நீங்கள் காட்டிய அக்கறையும்,தியாகமும் எங்களால் எந்தக் காலத்திலும் திருப்பித் தர முடியாதவை..தம்பிமார் இருவரும் கல்வி மூலம் உங்களைப் பெருமைப்படுத்தினாலும் கூட, என்னால் கல்வித்தரம் மூலம் உங்களையும்,அம்மாவையும் மகிழ்ச்சிப்படுத்த முடியவில்லையே என்ற மனக்குறை உள்ளது..
எனினும் என்னை உங்கள் மகன் என்பதை விட, உங்களை ஆனந்தர் வாத்தியாரின் மகன் என்பதை விட இப்போது அநேகர் லோஷனின் அப்பா என்று சொல்கின்றார்கள் என்று நீங்கள் சொல்லி அடையும் சந்தோஷத்தை தந்துள்ளேன் என்பது எனக்கு ஒரு வித திருப்தி.
அதுபோல எந்த விதத்திலும் உங்களை நான் எங்கேயும் அவமானப்பட,தலைகுனிய விட வைக்கவில்லை என்பதும் உங்களிடம் பட்ட கடனைக் கொஞ்சமாவது நான் அடைத்திருக்கும் விடயங்கள்.
இந்த அறுபதாவது பிறந்த நாளில் நீங்கள் எங்களோடு இல்லாமல் இந்தியாவிலே உங்கள் நண்பர்களோடு சந்தோஷமாக இருப்பது எங்களுக்கு கொஞ்சம் பிரிவைத் தந்தாலும்,உங்கள் வெறுமையில் நிறைய விஷயங்கள் புரிகிறது..
நீங்கள் பக்கத்தில் இருந்திருந்தால் இத்தனை விஷயங்களையும் நேரடியாகவோ,இல்லை இப்படி ஒரு மடலாகவோ தந்திருப்பேனோ தெரியாது..
அண்மையில் 'வாரணம் ஆயிரம்' படம் பார்த்த போது ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். அந்த தந்தை சூர்யா உங்களின் ஒரு பிரதி விம்பம் போலவே இருந்த ஒரு பாத்திரம்.
உங்களிடமும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இன்று வரை நான் கலந்துரையாடி இருக்கிறேன்.
நீங்களும் உங்கள் வாழ்க்கையின் பல கட்டங்களைப் பற்றியும் என்னிடம் ஒளிவு மறைவில்லாமல் சொல்லி இருக்கிறீர்கள்..
ஒரு தந்தையாக எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் காட்டிய பல இடங்கள் என் மகனுக்கு என்னை ஒரு நல்ல தந்தையாக உருவாக்கும்.
எனினும் இப்போது உங்கள் பாத்திரம் நல்லதொரு பாட்டனாராக எனது மகனுக்கும் இருக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு உங்களிடம் இருந்து நாங்கள் அடிக்கடி கேட்கும் வரத்தைக் கேட்கிறோம்.உங்கள் உடல் நலத்தில் நீங்கள் இன்னமும் சிரத்தை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தானே உங்களுக்கும் எங்களுக்கும் அடிக்கடி சண்டை,சச்சரவு.. இப்போது எங்களுக்காகவல்ல.. உங்களிடமிருந்து எங்களைப் போல நல்ல விஷயங்ககளைக் கற்க காத்திருக்கிற உங்கள் பேரனுக்காக..
உங்களுக்கு எப்படி அன்பை அதீதமாக வெளிப்படுத்த தெரியாதோ அதுபோலவே எனக்கும்.. இப்படி முன்பு நான் உங்களுக்கு தந்த வாழ்த்து அட்டையுடனான கடிதம் ஒன்றைப் போல கடிதம் மூலமாகவே எனது மனம் நிறைந்த நன்றிகளையும்,அன்பையும் வெளிப் படுத்த தெரிகிறது..
அப்பா, எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு..
Happy 60th Birthday appa...