தலை - விலை - நிலை

ARV Loshan
17
மு.கு (அதாங்க முற் குறிப்பு) - தயவு செய்து இது 'தல' அஜித் பற்றிய பதிவு என்று யாரும் வந்திருந்தா நான் பொறுப்பாளியல்ல..


ஒருசில நாட்களுக்கு முன்னர் வாசித்த கதை ஒன்று...


அசோகச் சக்கரவர்த்தி தனது பரிவாரம் சூழ வந்து கொண்டிருந்தார்.(கலிங்கத்து போரின் பின்,அசோகர் பௌத்தராக மாறிய பின்னர்.)

எதிரே ஒரு பௌத்த துறவி வந்து கொண்டிருந்தார்.அவரைக் கண்டதுமே உடனடியாக ஓடிச்சென்று பணிவுடன் பௌத்த துறவியின் காலில் விழுந்து வணங்கினர் அசோகர்.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு மனம் பொறுக்கவில்லை.ஒரு மாபெரும் சக்கரவர்த்தி ஒன்றுமில்லாத ஒரு துறவியின் பாதத்தில் விழுந்து வணங்குவதா என்று பொருமினார்.

அரண்மனை வந்தவுடன் மன்னருக்குத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்."எத்தனை எத்தனை தேசம் வென்ற பெருமை மிகுந்த மணிமகுடம் தாங்கும் தங்கள் சிரம் யாரோ ஒரு பரதேசியின் காலில் படுவதா?" என்று வருத்தமும், அதிர்ப்தியும் கலந்த குரலில் சொன்னார் அமைச்சர்.

மன்னர் அசோகர் பதிலேதும் சொல்லாமல் அர்த்த புஷ்டியோடு சிரித்தார். ஒரு சில நாட்களின் பின்னர் மன்னர் அமைச்சரை அழைத்தார்.

"அமைச்சரே, எனக்கு உடனடியாக மூன்று தலைகள் வேண்டும்.
ஒரு ஆட்டின் தலை, ஒரு கரடித்தலை, ஒரு மனிதத் தலை உடனடியாக கொண்டு வாருங்கள்" உத்தரவிடுகின்றார் அசோகர்.

ஆடு பலியிடப்பட்டது - ஆட்டுத்தலை பெறப்பட்டது.

கரடி வேட்டையாடப்பட்டு - கரடித்தலையும் தயார்.

மரண தண்டனைக் கைதி ஒருவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு மனிதத் தலையும் பெறப்பட்டது.

மன்னரிடம் அவர் கேட்டபடியே மூன்று தலைகளையும் கொண்டு போனார் அமைச்சர்.

அசோகச் சக்கரவர்த்தி "மிக நல்லது அமைச்சரே இப்போதே இந்த மூன்று தலைகளையும் கொண்டு சென்று சந்தையில் விற்று வாருங்கள்" என்று உத்தரவிடுகின்றார். (அப்போது மன்னர்களுக்கும் அமைச்சர்களுக்கும் வேற வேலையே இருந்திருக்காது போல)

அமைச்சர் சந்தைக்கு மூன்று தலைகளோடும் போனார்.

ஆட்டின் தலை முதலில் விலை போனது.

கரடியின் தலையும் பாடம் பண்ணி வீட்டில் வைக்க என்று யாரோ ஒரு பந்தாக்காரர் வாங்கிப் போனார்.

மனிதத் தலையை மட்டும் வாங்குவார் யாருமில்லை; மாறாகப் பார்ப்பவர் எல்லோரும் அருவருப்புடனும் அச்சத்துடனும் விளகிப்போயினர்.

மன்னரிடம் போய் விஷயத்தை சொன்னார் அமைச்சர்.

"சரி பரவாயில்லை மனிதத் தலையை மட்டும் இலவசமாகக் கொடுத்துப் பாருங்கள்" என்று சொன்னார் அசோகர்.

ம்ஹூம்...
யாரும் வாங்குவதாயில்லை.

மன்னர் இலவசமாகக் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியும் கூட யாருமே வாங்குவதாயில்லை.

அரண்மனை திரும்பிய அமைச்சர் அசோகச் சக்கரவர்த்தியிடம் சொல்கின்றார்.

பௌத்த துறவியின் காலில் விழுந்து வணங்கிய சம்பவத்தை நினைவூட்டிய அசோகர், "பார்த்தீரா அமைச்சரே, உயிர் என்ற நிலை இருக்கும் வரைதான் தலைக்கு விலை உண்டு. அதனால் உயிருள்ளவரை பணிபவரை பணியவும், வணங்குபவரை வணங்கவும் இந்தத் தலை தாழ்வது தவறாகாது. நிலையறிந்து தலை தாழ்வது எம் நிலையை உயர்த்தும்" என்று விளங்கினாராம் அசோகர்.

தலை பற்றித் தெரிந்து கொண்ட அமைச்சர் தலைகுனிந்து, தலையாட்டினாராம்.

வாசித்த பின் கொஞ்சநேரம் யோசித்து பார்த்தேன்,
அசோகர் சொன்னது சரி.

எனினும் அசோகரின் மகன் கொண்டுவந்த அறம் ஆதிக்கம் செலுத்தும் எம் நாட்டில் அசோகர் போன்றவர்கள் ஆட்சியிலும் இல்லை !
நாம் தலைகுனிந்து வணங்கும் அளவுக்குத் தகுதியான அறமுணர்ந்த,அகிம்சை வழி நிற்கும் பௌத்த துறவிகளும் இல்லை!


Post a Comment

17Comments

Please Select Embedded Mode To show the Comment System.*