July 31, 2009

சிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு... பகுதி 7
சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்....
ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி - 7


கடந்த அங்கத்தில் இலங்கை வானொலி, தொலைக்காட்சிகளைப் பற்றி சில விஷயங்கள் என்று முடித்தவுடனேயே, பலபேருக்கும் பல கேள்விகள்...

இப்போது பல பதிவுகளில் பரவலாகப் பேசப்படும் தமிழும் ஒலி/ஒளிபரப்பும் பற்றி ஏதாவதா என்றும் சிலபேர் தனி மடலில் என்னிடம் கேட்டிருந்தனர்.

விஷயம் இது தான்...

இத்தனை பிரயோசனமான கண்காட்சியில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து வந்திருந்த ஒலி, ஒளி ஊடகங்கள் மிகச் சொற்பமே...

நான் (வெற்றி FM) , கடந்த வருடம் எமது ஆங்கில ஒலிபரப்பான ரியல் ரேடியோவின் முகாமையாளர் ஜிம்மிடீன், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் (அவர் வந்து இனி ஆகப்போவது தான் என்ன?), நெத்FM என்ற சிங்கள ஒலிபரப்பின் பொறியியலாளர் மட்டுமே வந்திருந்தனர்.

இப்படியான பயனுள்ள விடயங்களை ஏனோ எம்மவர் பயன்படுத்துவது இல்லை!

கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பற்றி கொஞ்சம் விரிவாகவே சொன்னால் பலபேருக்கும் குறிப்பாக ஒலிபரப்பாளர்கள் ஃ தொழிநுட்பவியலாளருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதனால் இந்த அங்கம் முழுதும் நாம் எக்ஸ்போவில் Communic Asia / Broadcast Asiaவில் சுற்றிவரலாம்.

(முழுக்க விரிவாக சொன்னால் நான் தொழிநுட்பப் பதிவராக வேண்டியதுதான்.)

பல கண்காட்சிசாலைகளிலும் இலவசமாக வழங்கப்பட்ட பலவற்றுள் எனக்குப் பயனுடையதாக பல புதிய கருவிகள்/இயக்குநுட்பங்களின் கைநூல்கள் வாய்த்தன.

என்னை வியக்க வைத்த சாலைகளில் ஒன்று கணினி வரைபுகளினாலும், புதிய மென்பொருள்களாலும் விரும்பிய செட்களை உருவாக்கக்கூடிய இந்திய நிறுவனம் ஒன்றின் சாலை. நிமிடங்களில் விரும்பிய செட்களைத் தத்ரூபமாக தொலைக்காட்சித் திரைகளில் காட்டி அனைவரையும் வியக்கவைத்தனர்.

எங்கள் Chairman அசந்து போய் அவர்களுடன் பேரம் பேசி (!) சில நுட்பங்கள், மென்பொருள்களைப் பெறுவதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டார்.

இத்தாலிய நிறுவனமொன்றின் காட்சித்திடலின் கணினி அமைப்பினால் செயற்படுத்தக்கூடிய Virtual DJ என்ற ஒலிபரப்பு இயக்குநுட்பம் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. எங்களிடம் இருப்பதை விட கொஞ்சம் சிக்கலானதாகவே தோன்றியது.

அங்கிருந்த இத்தாலிய இளைஞனிடம் சில விஷயங்கள் கேட்டுத்தெரிந்துவிட்டு கொஞ்சம் இயக்கிப்பார்த்தேன். தமிழில் பேசி இத்தாலிய, ஆங்கிலப் பாடல் இசைக்கலவை செய்த முதல் சுது நானாகத்தானிருக்கும்.

“ Mmm… you are pretty good at this… You use this same software back at home? ” ( நல்லாச் செய்றீயே... உங்கள் நாட்டிலும் இதையே தான் பயன்படுத்துகிறீர்களா? )

இல்லையென்றும் எனினும் இது பயன்படுத்துவதற்கு எம்முடையதை விட இருப்பதாக சொன்னதும்,
“What? Our DJs say this is so complicated to operate… Learn Italian and come to Rome...”

(இத்தாலிய DJக்கள் இதை சிரமமானது என்று சொல்கிறார்களே... பேசாமல் நீ இத்தாலிய மொழி படித்துவிட்டு ரோமுக்கு வா) என்று பாராட்டிவிட்டு எனது Visiting cardஐயும் பெற்றுக்கொண்டார்.

(இன்னும் இத்தாலியன் மொழி பேச நான் கற்றுக்கொள்ளவும் இல்லை, இத்தாலியில் இருந்து அழைப்புமில்லை.)

இன்னொரு இத்தாலியக் காட்சிசாலையில் தான் ஒவ்வொரு வருடமும் எமது நிறுவனத்தார் எப்போதும் கருவிகள் இயந்திரங்கள் வாங்குவது வழமை.

இம்முறையும் கிட்டத்தட்ட 50,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை எமது Chairman கொள்வனவு செய்தார்.

புதிதாய் எமது நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள Kiss FM என்ற புதிய ஆங்கில வானொலிக்கே அதிக பொருட்கள்.

அப்போது தான் எங்கள் பெரியவர் சொன்னார் எல்லா வெளிநாட்டவரிலும் இத்தாலியர்கள் தான் நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள் என்றும் நன்றி மறவாதவர்கள் என்றும். பெரியவர் சொன்னதும் உலகிலேயே அழகான பெண்கள் இத்தாலியப் பெண்கள் என்று எங்கேயோ படித்ததும் அதே இத்தாலியக் காட்சித்தளத்திலேயே நிரூபணமானது.

இன்னொரு காட்சித் தளத்திலே எங்கள் குரல் அடர்த்தி / செறிவு (Richness / Depth) போன்றவற்றை அளக்கும் ஒரு நவீன கருவியிருந்தது. என்னுடைய குரல்வளத்தைப் பரிசோதித்த போது சராசரிக்கும் மேலே என்று காட்டியது (அப்படியா, சொல்லவேயில்லை)

இந்தக்கருவி உபயோகப்படுமா என்று பெரியவர் கேட்டபோது, உச்சரிப்பு பற்றி ஆராயும் கருவியொன்றிருந்தால் எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்க வேண்டும் என்றேன். "தமிழிலும் இதே பிரச்சினையா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

ஓஹோ! அப்படியானால் வீட்டுக்கு வீடு வாசற்படியா?

ஒலிவாங்கிகளின் நுட்பம் குறித்து ஜெர்மனிய நிறுவனமான 'செனஹைசர்'(Senneheiser) நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் பல பயனுள்ள விஷயங்கள் கிடைத்தன. ஜெர்மனியர்கள் வீம்புக்காக ஆங்கிலேயருடன் முரண்பட்டு தங்கள் நாட்டில் ஆங்கிலம் பேச மறுத்தாலும் இது போன்ற இடங்களில் என்னமாய் ஆங்கிலம் பேசுகிறார்கள்...

முதல் நாள் Office wear + கழுத்துப்பட்டியுடன் திரிந்தபோது இருந்ததைவிட அடுத்த நாள் டீ ஷேர்ட்டும், டெனிமுமாக உலாவந்தது இலகுவாகவும், களைப்பில்லாமலும் இருந்தது.

இரண்டாம் நாள் நாம் அதிகமாக சுற்றித்திரிந்தது செல்பேசி, செய்ம்மதி, இணையநுட்பங்கள் பற்றிய காட்சித்திடல்களில்...

யாஹு, LG , மோட்டரோலா, பிளக்பெர்ரி, சாம்சுங் போன்ற பல பிரபல நிறுவனங்களின் பிரம்மாண்டமான காட்சித் திடல்கள் அனைவரையும் வாய்பிளக்கச்செய்திருந்தன.

அவை ஒவ்வொன்றிலுமே தங்களது புத்தம் புதிய தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தும் களமாக இந்த மாபெரும் கண்காட்சியைப் பயன்படுத்தியதோடு, கண்கவர் லேசர் விளையாட்டுக்கள் அரைகுறை ஆடை மங்கையர் (அந்த ஆடைகள் அரைகுறையிலும் அரைகுறை) ஆளை அசத்தும் நடனங்கள் என்று ஒன்றையொன்று முந்த முயன்றுகொண்டிருந்தன.

அந்தக் கண்காட்சித் திடல்களின் சில படங்கள் கீழே..


இப்போ நம்புறீங்களா? அரை குறை.... ;)


மேலயும் கீழேயும் இருப்பவை புகைப்படக் கருவிகளல்ல.. காமெரா வசதியுள்ள நவீன செல்பேசிகள்..இதில் யாகூ திடலினுள்ளே நுழைந்தபோது நாம் கண்ட காட்சி....

அடுத்த அங்கத்தில்..


பி.கு - ஆதிரை உங்கள் எதிர்வுகூறலை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும்.
எமது வெற்றி FMஇனால் நடாத்தப்படும் புட்சால்(Futsal) - Vettri FM Futsal challenge 2009 என்ற மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஏற்பாடுகளோடு கொஞ்சம் பிசி.

கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கக் கூட முடியாதளவு வேலை.
இதை இன்று பதிவேற்றமுன்னரே நாக்குத் தள்ளிவிட்டது.
எனினும் பதிவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி விடக் கூடாது என்பதற்காகவே இந்த அங்கம்.

(நேரம் கிடைக்கும் போது பகுதி 8 தொடரும்...)

July 27, 2009

ஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்


நேற்று ஞாயிற்றுக்கிழமை, முழுநாள் வீட்டில் இருப்பதாக முடிவுசெய்த உடனேயே போட்ட திட்டங்களில் ஒன்று சன் டிவியில் காட்டுவதாக இருந்த ஆயிரத்தில் ஒருவன் இசை வெளியீட்டு விழா பார்ப்பது.
இந்தத் திரைப்படம் பலபேராலும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு பிரமாண்டப்படைப்பு. இதற்குப் பல காரணங்கள்... முக்கியமாக இயக்குனர் செல்வராகவன் தனது முன்னாள் தோஸ்த் யுவனுடன் பிரிந்த பிறகு வர இருக்கும் திரைப்படம்... அது போல மிகப் பெரிய வெற்றி பெற்ற பருத்திவீரனுக்குப் பிறகு கார்த்திக்கின் முதல் படம்...
MGR திரைப்படத் தலைப்பு வேறு ஒரு பக்கம் பிரம்மாண்டம் இன்னொரு பக்கம் பரபரப்பு.. (வழமையாக MGR படப் பெயர்களை இளைய தளபதி தானுங்கணா எடுப்பாரு.. இதை செல்வா கார்த்திக்கு எடுத்ததால கடுப்பாயிருப்பாரே)
ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கமே இந்தப் படத்தைப் பற்றிய ஆர்வத்தையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
பல பதிவர்களும், விமர்சகர்களும் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் பற்றி பாராட்டி, புகழ்ந்து எழுதியதையெல்லாம் வாசித்திருப்பீர்கள்...
G.V.பிரகாஷின் master piece என்றும் வைரமுத்துவின் ஆழமான வரிகள், காத்திரமான வரிகள் என்றும் அனைவருமே புகழ்ந்துதள்ளி சிலாகித்துள்ள பாடல்களில் பெம்மானேயும், தாய் நின்ற மண்ணேயும் எப்போது கேட்டாலும் என் மனம் பாடல் வரிகளோடு சேர்ந்து அழும்.
இதில் வருகின்ற ஜல்சா, ஜாலி பாடல்களை எழுதி இருப்பவர் செல்வராகவனே தான்.. மூன்று முக்கியமான முத்தான பாடல்கள் தான் வைரமுத்து எழுதியவை
இது பற்றி சில பதிவுலக நண்பர்கள் எழுதிய பதிவுகள் என்னைவிட அதிகமாக, அழகாக சொல்லியிருக்கும்.
இந்த வரிகளுக்காகவே செல்வா – யுவனைக் கழற்றிவிட்டதும் G.V.பிரகாஷோடு சேர்ந்ததும் நல்லது என்று நினைக்கின்ற ஆயிரத்தில் நானும் ஒருவன்.
எனினும் பாடல்களுக்கு ஆணிவேராக அமைந்த வைரமுத்து நேற்று சன் டிவியில் காட்டப்பட்ட இசை வெளியீட்டில் காணப்படவேயில்லை. அவர் தந்த ஒரு சிறு கருத்து மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. ஏதாவது உள்வீட்டு சிக்கலா?
வைரமுத்து சொல்லிய ஒரு விஷயம் "இந்தப் படமும் களமும் சோழர் காலம் செல்வதால் பழைய கல்வெட்டுக்கள்,பண்டைத் தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் ஒரு மாணவனாக மாறிப்போனேன். இதுபற்றி செல்வாவுக்கு சொல்லவில்லை.. வெற்றி விழாவின்போது சொல்லுவேன்".
நம்பிக்கை பாருங்கள்.. முத்துக்குமார் செல்வா-யுவனுடன் அமைத்த வெற்றிக் கூட்டணியை வைரமுத்து-செல்வா-G.V முந்தவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
G.V.பிரகாஷீக்கோ தலை விறைத்துப் போகுமளவுக்குப் பாராட்டு! வெயிலுக்குப் பிறகு பாராட்டப்பட வேண்டியளவு முதல் தடவையாக செய்திருக்கிறார் G.V.
உருக வைக்கும் தாய் நின்ற மண்ணே, பெம்மானே...
ஆடவைக்கும் ஓ! ஈசா, உன் மேல ஆசைதான்...
ஆண்களை மயக்கும் மாலைவேளையில்
இரண்டு பின்னணி இசைகள்..
என்று கலவையாகக் கலக்கியிருக்கிறார் இசைப்புயலின் இளம்புயல். எனினும் ஈசனையும், கோவிந்தனையும் Oh yeah baby... என்று clubbing அழைத்திருப்பது கொடுமையென்றே தோன்றுகிறது.
படத்தின் ஒரு சில காட்சிகள் / நிழற்படங்கள் காட்டப்பட்டன.
கார்த்திக், ரீமா சென், ஆன்ட்ரியா ஆகியோர் தோன்றும் அந்தக் காட்சிகள் பல ஆங்கிலப் படங்கள் சிலவற்றை எனக்கு ஞாபகப்படுத்தின.
Pirates of the Carribean , Indiana Jones, மற்றும் Mummy Returns போன்ற இன்னும் பல புதையல் தேடும் ஆங்கிலத்திரைப்படங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் தான் அதிகம்.
நம்ம செல்வராகவன் ஏற்கனவே கமலின் குணாவை சுட்டு காதல் கொண்டேனையும், பல ஆங்கிலத்திரைப்படங்களின் கலவையாக 7G Rainbow Colony ஐயும் கொடுத்திருந்தவர் என்பதையும் யாரும் மறுக்கமாட்டார்கள்.
புதுப்பேட்டை கூட பல மெக்சிக்கன் திரைப்படங்களின் தழுவலே! ஆங்கிலப்பட/ சர்வதேசப்பட அறிவு அதிகம் உள்ளவர்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் அது என்ன படம் என்று.
இதனாலேயே நான் எப்போதும் செல்வராகவனை நல்ல படைப்பாளி(Creator) என்று நினைத்ததில்லை, அவர் நல்லதொரு இயக்குனர் மட்டுமே.
அதிலும் - பார்த்தீபன் தான் பேசும் போது அடிக்கடி இது English படம் தான் என்று அடித்துச் சொன்னதும் எங்கேயோ எதுவோ இடிக்கிறது.
இந்தப் படம் 2009இல் ஆரம்பித்து 7ம் நூற்றாண்டு வரை செல்லும் கதை என்று சொல்கிறார்கள்... சோழநாட்டு – பாண்டிய சரித்திரங்களைப் பற்றியும் வைரமுத்து பாடல்களில் பேசுவதால் ( இவற்றில் பல வரிகள் எம் நாட்டு மக்கள் நிலை பற்றியும் உருகியிருந்தன... அல்லது உருகியது போலிருந்தது ) நிறையவே எதிர்பார்த்துள்ளேன்...
பார்த்தீபன் என்ற புதுமைப்பித்தரும் ஒரு வித்தியாசமான பாத்திரம் ஏற்றுள்ளதனால் (இவர் தான் சங்ககால / சோழர்கால பிரதான பாத்திரமோ ) உண்மையிலேயே வித்தியாசமான படம் தானோ என்று ஆர்வத்துடன் இருக்கிறேன்.
பேசியவர்களில் பார்த்தீபன் வந்தவுடனே மேடை கலகலத்தது. திறந்துவிட்ட சட்டையுடன் ( Button opened shirt ) வந்தவர் 'வழமையாக டப்பிங் முடித்த பிறகு சட்டையே செய்யமாட்டேன்.. இப்போது பட்டனே செய்யமாட்டேன்' என்று கடித்தவர் பின் ஆயிரத்தில் ஒருவனின் தமிழ் டப்பிங் உரிமையைத் தான் செல்வராகவனிடம் கேட்டதாக படத்தின் பீட்டர் தனத்தை நக்கலாக வாரினார்.
இப்போதெல்லாம் கதாநாயகிகள் தமிழில் பேசுவதே பெரும்பாடாய் இருக்கும்போது, அழகான ஆண்ட்ரியா அழகாக இருப்பதோடு, அழகாகப் பாடவும் செய்கிறார்.
கவர்ச்சியாக இல்லாமல், கண்ணை உறுத்தாமல் அவர் பாடும் அழகே தனி.
இன்னும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.. நடிகையாகவோ, கதாநாயகி ஆகவோ.. பச்சைக்கிளி முத்துச்சரம் படம் பார்த்ததுமே யோசித்தேன்.. ஏன் இவருக்கு இன்னமும் சரியான வாய்ப்புக்கள் அமையவில்லையோ தெரியவில்லை..
ரீமா சென் பாட மாட்டாங்களா? அவங்க பாடலேன்னா என்ன நேற்றுக் காட்டிய சாம்பிள் போதும் படத்துல அவங்க ஏன் இருக்காங்க என்று சொல்ல.. ;)
தனுஷும் அவர் மனைவியும் வந்து ஆடிப் பாடி.. (பாடி என்பதை விட, கத்தி என்பது கொஞ்சம் கூடப் பொருத்தம் என்று நினைக்கிறேன்) கலகலப்பூட்டினார்கள்.
கார்த்திக், நித்யஸ்ரீ, விஜய் யேசுதாஸ் எல்லோரும் பாடியபோதும், இசை நேரடியாக வழங்கப்படவில்லை என்பதும் cdக்கு மேல் பாடகர்கள் பல நேரம் வாயசைத்தும்
சில நேரம் பாடியும் இருந்தார்கள் என்பது உறுத்திய ஒரு விஷயம்.
தனுஷ் குழுவினரும், அண்ட்ரியாவும் தவிர என்னைப் பொறுத்தவரை வேறு எந்தப் பாடலுமே cdஇல் கேட்ட தாக்கத்தை கொஞ்சமாவது மனதில் ஏற்படுத்தவில்லை.
இதிலும் தாய் தின்ற மண்ணே பாடலுக்கு * பூர்ணாவின் .. (திருத்தியதுக்கு நன்றி அனானி) பரத நாட்டியம் வேறு.
கொலை செய்யும் அளவு வெறி வந்தது..
பின்னே.. ஐட்டம் பாடலுக்கு ஆடும் ஆடை போன்ற ஒன்றோடு வந்து இந்த அற்புத பாடலுக்கு ஆடினால்?
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ! மன்னன் ஆளுவதோ!
இந்த வரிகளுக்கு சிரித்துக் கொண்டே ஸ்ரேயா காட்டிய பாவங்களைப் பார்த்த நேரம் தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டுடைக்கும் வெறி வந்தது.(என்னுடைய சொந்த டிவி என்பதால் தப்பித்தது)
இதையே தான் திரைப்படத்திலும் செல்வா செய்யப் போகிறாரா?
செல்வா, மற்றப் பாடல்களை உங்கள் வழமையான மஜா பாடல்களாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..தயவு செய்து ஈழத்து உணர்வுகளும் கலந்துள்ள இந்தப் பாடலில் சிருங்கார ரசம் வேண்டாம்.
இப்படியான பொருட்செலவுள்ள திரைப்படங்களுக்கு யாராவது ஒரு தாராள மனம் படைத்த தயாரிப்பாளர் வைக்கவேண்டுமே, இதற்கு ஒரு புதிய தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார்.
பிறகேன்ன செல்வா கொட்டி முழக்கப் போகிறார்.
செல்வராகவன் படம் என்பது மேலோங்கி பாடல்கள் தரும் உணர்வுகள் எழுந்து நிற்கிற படமாக இப்போதைக்கு ஆயிரத்தில் ஒருவன் தென்படுகிறது..
பாடல்கள் உச்சக் கட்டத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் படமும் வெளியிடப்பட்டால் வரவேற்பு எக்கச்சக்கம் நிச்சயம்.
இப்படியான நல்ல முயற்சிகள் நான் ரொம்பக் காலமாய் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன்(கல்கி), மருதநாயகம் போன்றவற்றுக்கு உயிர்ப்பு கொடுக்காதா என்றொரு நப்பாசை தான்..
பி.கு - படத் தலைப்புக்கு பொருத்தமாக தான் அந்த 1000 போட்டுக் கொண்டேன். எனக்கு இருப்பது இத்தனை எதிர்பார்ப்புக்கள் தானுங்கோவ்..

July 25, 2009

சிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு... பகுதி 6எக்ஸ்போ என்ற சிங்கப்பூரின் கண்காட்சி நிலையத்தில் தான் ஆசியாவின் மிகப்பெரிய தொழிநுட்ப, ஊடக நுட்ப கண்காட்சி நடைபெற்று வந்தது. Communic Asia 2009/ Broadcast Asia 2009

இங்கே விசாரித்துப் பார்த்த போது நம்ம நாடு போல இல்லாமல் வருடத்தின் நாட்களுமே ஏதாவது கண்காட்சி, நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்குமாம்.. மிகப் பிரம்மாண்டமான ஒரு இடத்திலே மூன்று கட்டடத் தொகுதிகளாக அமைந்திருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் உலகின் மிகப்பெரும் தொழிநுட்ப உற்பத்தி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு, ஊடகங்கள் சம்பந்தமான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை மிகப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி விளம்பரம் செய்வார்கள்.

எங்கள் நிறுவனத்தாரும் வருடாந்தம் ஒலிபரப்புக்குத் தேவையான கருவிகள் பலவும் இங்கே தான் வந்து வாங்குவது வழக்கம். இப்போது சியத எனும் பெயரில் தொலைக்காட்சியும் பரீட்சார்த்தமாக இயங்குவதால் அதற்கான ஒளிபரப்பு சாதனங்களும் வாங்குவதாக இம்முறை திட்டமிருந்தது. (வெகு விரைவில் வெற்றியின் தொலைக்காட்சியும் ஆரம்பிக்கும் என்பது பலரும் ஊகிக்கக்கூடிய விஷயமே)

கண்காட்சி நடக்கும் இடத்துக்கு நாம் சென்றது தொடரூந்தில். MRT என்று அழைக்கப்படும் இந்த தொடரூந்து சேவை சிங்கையில் என்னைக் கவர்ந்த இன்ன்னொரு அம்சம்.

விரைவு, நேரம் தவறாமை, இலகுவானது என்பவற்றால் பலரையும் ஈர்த்துள்ள விஷயம் இது.

ஏற்கெனவே 2002இல் நான் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கு சென்றிருந்ததனால், இது போன்ற மெட்ரோ ரெயில்களில் நான் பயணித்திருந்தாலும் சிங்கை போன்ற ஆசிய நாடொன்றில் கண்டது மகிழ்ச்சியே.

இலகுவாகப் பிரவேசச் சீட்டு எடுக்க முடிவது, செல்லும் இடம், தொடரூந்து வரும் நேரம், இறங்கும் இடங்களை இலகுவாக அறிதல் போன்ற விஷயங்கள் இலகுவாக இருந்ததனால் ஏற்கெனவே சிங்கப்பூர் அனுபவம் பெற்றிருந்த டினால்,நிஷாந்த போனோர் எமக்கு முன்னரே இலங்கை திரும்பிய பின்னரும், கடைசி இரு நாட்கள் நானும், குருவிட்டவும் பல இடங்கள் சுற்றித் திரிய இலகுவாக இருந்தது.

கண்காட்சி நிலையத்தில் வழமையான பதிவு சடங்குகள் முடித்து அத்தை உறுதிப்படுத்தி அவர்கள் வழங்கிய அட்டைப் பட்டியைக் கழுத்தில் தொங்கவிட்டபடி கண்காட்சிக் கூடங்களைப் பார்வையிட ஆரம்பித்தோம்.

ஒன்றா இரண்டா? சிலவற்றை நான் மேம்போக்காகப் பார்த்து தவிர்த்து விட்டேன்.. என் அறிவுக்கு எட்டாத நுணுக்கமான பெரிய விஷயங்களை எல்லாம் மூளைக்குள் போட்டுக் குழப்பிக் கொள்ள விரும்பாமல், நமக்குத் தெரிந்த நம் துறையோடு சம்பந்தப் பட்ட விஷயங்களாகத் தேடி பார்த்து புது விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்தேன்.

ஒவ்வொரு காட்சி சாலைகளுக்கும் செல்லும் முன் அங்கே இங்கே திரிந்து கொண்டிருந்த உதவியாளர்களான பெண்கள்(பல பேரும் மொடல்கள் மற்றும் மாணவிகள்) எங்கள் கைகளில் பெரிய வண்ண வண்ண பைகளை கொடுத்தார்கள்..

விளம்பர் யுக்தி என்று யோசித்தேன்.. அதிலே இன்னொரு விஷயமும் அடங்கியிருந்தது..
ஒவ்வொரு காட்சி சாலைகளிலும் கொடுக்கப்பட்ட ஏராளமான நினைவுச் சின்னங்கள், பரிசுப் பொருட்களை போடுவதற்காகவே இதை முன்கூட்டியே கொடுத்திருந்தார்கள் எனப் பிறகு புரிந்தது.

ஏற்கெனவே இந்தக் கண்காட்சிகளுக்குப் பலமுறை விஜயம் செய்திருந்த டினால்,நிஷாந்த மற்றும் எங்கள் நிறுவனத் தலைவர் ஆகியோர் சொன்னார்கள் , ஒவ்வொரு நிறுவனமும் தருகிற பொருட்களை மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள்.. அவை பிரயோச்னப்ப்படுமாக இருந்தால்..

நாங்கல்லாம் ஓசியில கொடுத்தால் ஓயிலையே குடிப்பவர்கள்.. சும்மா தந்தால் சுண்ணாம்பே சாப்பிடுபவர்கள்.. இதையெல்லாம் விடுவோமா?

பேனாக்கள், பாக்கெட் calculatorகள், digital diaries, momentos, pen drives, சின்ன சின்ன சுவாரசயமான பொருட்கள், bags என்று ஏராளம் ஏராளம்..

குருவிட்ட சிரித்துக் கொண்டே சொன்னார்.. " பெரிதா இங்கே ஷொப்பிங் செய்யத் தேவையில்லை.. bags எல்லாம் நிரப்பிட்டாங்க"
நாகரிகப்படி எங்கள் visiting cardகளையும் பரிமாறிக் கொண்டோம்.. பல முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்த இது நல்ல வழி.

பார்த்தவரை ஒன்றிரண்டு இந்திய நிறுவனங்களும், ஒரே ஒரு இலங்கை நிறுவனமும் மாத்திரமே கடை விரித்திருந்தன.

காட்சிப்படுத்தப்பட்டிருந்த புதிய நுட்பங்கள், கருவிகளைப் பார்த்த போது தான் எங்கள் நாட்டில் நாம் பயன்படுத்தும் சில உபகரணங்கள் இன்னும் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றன எனப் புரிந்தது.

எனினும் இலங்கையில் இறுதியாக ஆரம்பித்த வானொலி என்பதால் எங்கள் வானொலியில் நாம் பயன்படுத்துகின்ற இயக்குவிசைப்பலகை( Console board), ஒலிவாங்கிகள், ஒலிபரப்பு மென்பொருள் போன்ற பல விஷயங்கள் ஒப்பீட்டளவில் புதியனவாகவும், கண்காட்சி சாலைகளில் கேள்வி (Demand) உள்ளனவாகவும் இருந்ததைக் கண்டு பெருமையாகவும் இருந்தது.

விலைகளை விசாரித்த போது தலைசுற்றியது.

ஒரு வானொலி நிலையத்தை முதலிட்டு ஆரம்பிப்பதென்பது எவ்வளவு செலவான, ரிஸ்க்கான விஷயமென்று புரிந்தது.

இந்த வேளையில் எனது தனிப்பட்ட துறைசார் வளர்ச்சியில் பெரும் துணையாக இருந்த சூரியன்FM வானொலியின் 11வது பிறந்ததினம் இன்று.

6 வருடங்கள் எனது வாழ்வின் அங்கமாக விளங்கிய சூரியனுக்கு மனமார வாழ்த்துகிறேன்!

சிங்கப்பூர் கண்காட்சிகளின் போதுதான் எனக்கு இலங்கையின் வானொலி, தொலைக்காட்சிகளைப் பற்றிய இன்னுமொரு விஷயமும் புரிந்தது.

அது என்ன?

அது அடுத்த அங்கத்தில்.....

(நேரம் கிடைக்கும் போது பகுதி 7 தொடரும்...)


பி.கு - தலைப்பைக் கொஞ்சம் மாத்திப் போட்டேன்.. கொஞ்சம் கிக்காய் இருக்கட்டுமே என்று.. ;) நண்பர்கள் கேட்டபடியால் மறுபடி சஸ்பென்சில் விட்டுப் போறேன்.. எதிர்பார்ப்பு இருக்கட்டுமே..

July 24, 2009

முத்தங்களும் விருதுகளும்


ஒரே விருது இரண்டு தடவை இரு அன்புக்குரியவர்களால் கிடைத்துள்ளது.

சுபானு முதலில் எனக்கு வழங்கிய சுவாரஸ்ய விருதைத் தொடர்ந்து இப்போது ஆதிரை (கடலேறி)யும் வழங்கி இருக்கிறார்.

மகிழ்ச்சி.. நன்றி..

நீங்கள் எனக்கு வழங்கியுள்ள அன்பு என்னை நெகிழவைக்கிறது.

அண்மையில் விஜய் டிவி விருதுகள் விழாவில் நடிகர் பார்த்திபன் சொன்னது போல விருதுகளும்,பட்டங்களும் முத்தங்கள் போல.. கொடுத்தாலும் சுவைக்கும்;பெற்றாலும் இனிக்கும்..

(யாருக்கு கொடுத்தல், யாரிடமிருந்து பெறுதல் என்பதில் முத்தங்களிலிருந்து விருத்துகள் வேறுபட்டு நிற்கிறது)

ஆனால் ஏற்கெனவே நான் அறுவரைத் தேர்ந்தெடுத்து சுவாரஸ்ய விருது கொடுத்திருப்பதால் மீண்டும் இன்னும் அறுவரைத் தேர்ந்தேடுக்கப்போவதில்லை..


அண்மைக்கால பதிவுலக சண்டை,சச்சரவுகளை நேற்றும் இன்றும் தான் முழுவதுமாக தேடி,வாசித்து அறிந்தவேளை நல்லகாலம் நான் எதிலுமே சம்பந்தப்படவில்லை என்பது ஆறுதலே..

இந்த விருதுகள் வழங்குதல்,பெறுதலும் கூட இதற்கான காரணம் என்பதும் இங்கே நோக்கத் தக்கது.

இன்று காலையில் கோவியாரின் பதிவைப் பார்த்தபோது கலவை உணர்வுகள் தோன்றியது.

எனினும் அன்பின் விளைவாக விருதுகளை எடுத்துக்கொள்ளுங்கள் எந்த பிரச்சினையும் இல்லை..

உணர்வுகளை வெளிப்படையாக நாம் கொட்டும் இடம் என்பதாலும், அனைவரது உணர்வுகளின் கலந்துகட்டி கலவையாக சந்திப்பதாலும் அடிக்கடி இந்த முறுகல்களும், பின் தெளிதலும் சகஜமானதே.

மீண்டும் நன்றிகள்..

விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

பி.கு- இன்னும் என்னென்ன விருதுகள் கொடுத்து சங்கிலிகளை ஆரம்பிக்கப் போறாங்களோ? கண்ணைக் கட்டுதே,,

July 23, 2009

சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 5

கடந்த சில நாட்களாக இருந்த வேறு வேலைகள். விருதுகளால் போடவேண்டியிருந்த பதிவுகளால் சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்திலேயே ரொம்ப நாட்கள் காக்கவைத்துவிட்டேன்.

இனி வெளியே வரலாம்...விமானம் ஏறுவதற்கு முன் நடந்த இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும்.

அப்போதைய காலகட்டத்தில் (இப்போதும் கூடத்தான்) சில ஊடகவியலாளர்கள் (தமிழர்கள் மட்டுமன்றி) வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது அனைவரும் அறிந்ததே.

அதிலும் எனது நவெம்பர் மாத சம்பவமும் அது சம்பந்தமாக இனியும் ஏதாவது சந்தேகம் இருக்கலாம் என்பதையும் எங்கள் அலுவலக நிர்வாகம் அறிந்தே இருந்தது.

என் மீது அவர்கள் காட்டிய அக்கறை வெளிப்பட்ட தருணம் அது. புலனாய்வு அதிகாரிகள் செயந்துள்ள நுழைவாயில் பகுதியில் மிகப்பக்குவமாக எனக்கு முன்னால் குருவிட்ட அவர்களை அனுப்பிய பின் என்னைப் போகவிட்டு பின்னாலேயே எங்கள் பெரிய தலைகள் வந்திருந்தார்கள்.

தற்செயலாக எனக்கு ஏதாவது சிக்கல் நேர்ந்தாலும் என்று இந்த முன்னெச்சரிக்கை..

கடந்த அங்கத்தில் நான் விட்ட இடம்...

யாரோ இரண்டு இளம் வாலிபர்கள் தூரத்திலிருந்தே என்னையே உன்னிப்பாகப் பார்த்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று விளங்கியது. தமிழர்கள் என்றும் தெரிந்தது.
அப்படியே என்னை நோக்கி நடந்து வர ஆரம்பித்தார்கள்...


அந்த இருவரும் கிட்ட வந்து புன்னகைத்த பின்னரும் எனக்கு அவர்களை யாரென்று அடையாளம் காணவில்லை.. அவர்களாக அறிமுகப் படுத்திக்கொண்டார்கள்.

அண்ணனும் தம்பியுமான அந்த இருவரும் நீண்டகால எனது நேயர்கள். தம்பி சிங்கப்போரில் தொழில் செய்கிறார்.அண்ணன் கனடாவிலிருந்து விடுமுறைக்காக தம்பியிடம் வந்திருந்தார்.

குசலம் விசாரித்து நாட்டு நடப்புக்கள்,நிலைமைகள் குறித்து கேட்டறிந்துகொன்டார்கள்.
சிங்கப்பூரில் இறங்கிய உடனேயே நம்ம நேயர்களா? பரவாயில்லையே..

எனது Chairmanக்கும் பெரிய பெருமிதம்.. இங்கேயும் இவனுக்கு நேயர்கள் இருக்கிறார்கள் என்று.

லோஷன் அண்ணா என்று இன்னுமொரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு இளம் பெண், அருகே அவரது கணவர் மற்றும் ஒரு சிறுமி.. மகளாக இருக்கவேண்டும்நான் யாரென்று புதிர்ப்பார்வை பார்க்க, தாங்களாகவே அறிமுகப்படுத்தினார்கள்.

எனது நீண்டகால நேயர்களில் ஒருவரான சிசிலியாவின் தங்கை குடும்பத்தினர். சிசிலியா எனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மறக்காமல் ஏதாவது ஒரு பரிசு அனுப்பி வைப்பவர். அவரது பிறந்த நாளும் எனது பிறந்தநாள் அன்றே (ஜூன் 5) எனது ஒவ்வொரு ஒலிபரப்பு மைல் கற்களையும் ஞாபகித்து வைத்து வாழ்த்து சொல்பவர்.

தாங்கள் இங்கே வாழ்ந்து வருவதாகவும், யாரோ உறவினர் ஒருவரை வரவேற்க வந்திருப்பதாகவும் சொன்னார்கள். நலம் விசாரித்து விடை பெற்றேன். வாயில் கடப்பதற்குள் மேலும் ஒரு சிலர்.. இணையத்தளத்தில் வெற்றி FM கேட்கும் நண்பர் ஒருவர் என்னை அடையாளம் கண்டு பேசினார். தனது நண்பர்களையும் அறிமுகப் படுத்தினார்.

"பேசாமல் லோஷனை இங்கேயே விட்டிட்டு போனால் இங்கேயே ஒரு வெற்றியைத் தொடங்கிடுவார் போல இருக்கு " என்று டினால் கிண்டலடித்தார்.

வெளியே வந்து இல ஏறி நாம் தங்கவிருந்த hotelக்கு பயணித்தோம்..
இருபக்கமும் பசுமையான மரங்களும் அழகான சுத்தமான வீதியும், நெடிதுயர்ந்த கட்டடங்களும் எனக்கு ஐரோப்பிய நாடுகளையே ஞாபகப்படுத்தியது.

இந்த நாட்டையா எங்கள் நாடு இன்னும் 25 வருடங்களுள் எட்டிப் பிடிக்கப் போகிறது என்று எண்ணிப் பார்த்தேன்..

எனினும் வியப்பை அளித்த ஓரிரு விஷயங்கள்..

போக்குவரத்து நெரிசல் இல்லா வீதிகள்..
காலை வேளைக்கான எந்தவொரு பரபரப்பும் இல்லை..

2002ஆம் ஆண்டு Modelக்குரிய Toyotaகாரில் மணிக்கு 120என்ற வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தும் எந்தவொரு குலுக்கலசைவுகளும் இல்லை.

எங்கள் Chairman,அவரது மனைவி ஆகியோர் வேறிடத்திலும் நாங்கள் கேலாங் என்ற இடத்திலும் (சிங்கப்பூர் நண்பர்கள்/சிங்கப்பூரை நன்கு அறிந்தவர்கள் சிரித்துக் கொள்வார்கள்) தங்குவதாக ஏற்பாடு.

எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மூன்று நட்சத்திர விடுதியை அடைந்தோம்.
ஓய்வெடுக்க நேரமில்லை.. அவசர அவசரமாக அலுப்புத் தீர குளித்து ஆடை மாற்றி கண்காட்சிக்கு புறப்பட்டோம்.

ஊர் சுற்றிப் பார்ப்பதற்கும், சிங்கப்பூருக்கு முதன்முறையாக வந்துள்ள எனக்கும்,குருவிட்ட அவர்களுக்கும் இடங்கள்,இடக்குறிப்புக்கள் காட்டுவதற்காகவும் தொடரூந்து மூலமாக செல்வதாக ஏற்பாடு.

போகிறவழியிலேயே காலை சாப்பாட்டை ஒரு இந்தியக் கடையிலே முடித்துக் கொண்டோம்..

உள்ளே நுழைகிற நேரம்
"ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" ஒலி வானொலிப் பாடல் வரவேற்றது.

அடுத்த அங்கம் கண்காட்சித் திடலில்..

(நேரம் கிடைக்கும் போது பகுதி 6 தொடரும்...)

July 22, 2009

நானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதைஇது மீண்டும் விருதுகள் , தொடர்பதிவு சீசன் போலும்..
ஒரு பக்கம் பட்டாம்பூச்சி பரபரப்பு.. சுவாரஸ்ய பதிவர் விருதுகள்.. இன்னொரு பக்கம் 32 கேள்விகள் மற்றும் நடிகரைப் பிடிக்க பத்து விஷயங்கள்..

நான் பாட்டுக்கு இந்த சங்கிலிகளில் மாட்டுப் படாமல் சத்தமில்லாமல் சிங்கப்பூர் பயணம் பற்றியும் கிரிக்கெட் பற்றியும் எழுதிக் கொண்டிருந்தால் இந்த வாரம் இரண்டு விருதுகளை நண்பர்கள் வழங்கி என்னையும் விருது வழங்குமாறும் மாட்டி விட்டார்கள்.

விருதுகள் என்று அல்லாமல் இவற்றை அங்கீகாரம் மற்றும் அன்பளிப்பாகவே நான் கருதுகிறேன்.தங்கள் அன்புக்குரியவர்களுக்கு விருது கொடுக்கையில் பெற்றுக் கொள்வது பெருமை.. பெறுவதும் வழங்குவதும் பல நேரங்களில் பெருமையும் பெருந்தன்மையும் கூட.

அன்பு நண்பர் செந்தழ்ழ்ல் ரவி ஆரம்பித்து வைத்த இந்த சுவாரஸ்ய பதிவர் விருது வழங்கும் சடங்கு இப்போ களை கட்டித் தொடர்கிறது. அனைவரும் வழங்குக என செந்தழல் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து வழங்கவேண்டும் என்று நான் நினைத்தாலும்.. (இனிவரும் வசனத்தை நடிகர் திலகம் ஸ்டைலில் - நேற்று அவரது நினைவு தினம் வேறு-வாசிக்கவும்) என்ன செய்வேன் என்ன செய்வேன்.. காலம் நேரம் இடம் தரவில்லையே...

ஆனாலும் அன்புக்குரிய சுபானு எனக்கு இந்த விருதை வழங்கிவைத்து அன்பான சிக்கலில் என்னை அழகாக மாட்டிவிட்டார்..

எனினும் அவருக்கு முதற்கண் நன்றிகள்..
பின்னே.. ஒரு நாளைக்கு எத்தனை எத்தனை பதிவுகள் படிக்கிறோம்.. யாரைத் தெரிவு செய்வது? யாரை விடுவது?

இந்த சங்கிலியில் எல்லோருக்கும் மாறி மாறி கொடுபடுவதால், யாரை நாம் தெரிவு செய்வது?

நல்லகாலம் செந்தழல் கொடுத்தவருக்கே மறுபடி கொடுக்கலாம் என அனுமதியளித்தார்.

அப்படி இருந்தாலும் முடியுமானவரை இதுவரை சுவாரஸ்ய விருது பெறாதவர்களாக அறுவரைத் தெரிவு செய்யலாம் என தீர்மானித்து நான் அறிவிக்கும் (!) ஆறு பதிவர்கள்..

நேற்று பட்டாம்பூச்சி விருதுக்கு ஐவரை தேர்வு செய்த நேரமே இவர்களையும் மனதில் இருத்திவிட்டேன்.

நான் மனதில் வைத்திருக்கும் இன்னும் பலர் இருக்கிறார்கள்.. அவர்களில் பலர் விருதுகள் பெற்றும் விட்டார்கள்.

இந்த அறுவரின் பதிவுகளையும் நான் இலேசில் தவற விடுவதில்லை.. எழுத்துநடைகளை,இவர்களின் எண்ணங்களை, நோக்கங்களை,சமூகம் மீதும், மற்றவர் மீதும் என் மீதும் காட்டும் அக்கறையை அன்பை நேசிக்கிறேன்.

இந்த ஆறு அன்பு நெஞ்சங்களும் எனது அன்புப் பரிசான இந்த சுவாரஸ்யப் பதிவர் விருதை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

காலம் வரையும் கோவி கண்ணன்

இவரது எழுத்துக்களின் ஆழமும்,நேர்மையும் கண்டு ஒரு வாசிப்பாளனாக வியந்துள்ளேன்.
ஆழமான அறிவும்,ஆராயவும், மானுடம் மீதான வரையறை கடந்த நேசமும் உடையவர்.
பதிவுலகில் நானும் இன்னும் பலரும் தடம் பதிக்கையில் ஆரம்ப உத்வேகமும்,உற்சாகமும் வழங்கியோரில் இவரும் முக்கியமானவர்.

நேரடியாக அண்மையில் சந்தித்தபோது உண்மையில் இவரது அன்பின் நிஜம் கண்டு மகிழ்ந்தேன்.

இவரது பதிவின் வாசகன் நான் என்பது எனக்கு மகிழ்வளிக்கும் ஒரு விடயம்.சாரல் தரும் சயந்தன்

எனது பதிவுலகின் ஆரம்ப காலத் தயக்கம் மயக்கம் நீக்கிய அருமைத் தோழர்.
இவர் வழங்கிய ஊக்கம் என்றும் என் நினைவில் இருந்து நீங்கா.
இவரது தீவிர, நேர்மையான சிந்தனைகளும், துல்லியமான நெற்றியில் அறைகிற வெப்ப எழுத்துக்களும் அவ்வப்போது நகைச்சுவையாக உண்மையை நாசூக்காக சொல்கிற எழுத்துப் போக்கும் மிகப் பிடித்தவை.

நாட்டு நடப்புக்களை நேர்மையாகத் தன் பாணியில் விமர்சிப்பதில் வல்ல ஒரு பதிவர்.

இவரது பல சிறுகதைகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.


டுமீல் தரும் புல்லட்

நக்கல்,நையாண்டி என்று தான் பலரும் இவரை நினைத்தவேளை தனக்கே உரிய விதத்தில் அனைவரும் விளங்கக்கூடிய விதத்தில் அறிவியல் விஷயங்களை அநாயசமாகத் தந்து அசத்தி வரும் கில்லாடி.
தனக்கெல்லாம் எதுக்கு போர்த்தேங்காய்? என்று தேங்காயைத் தன் வித்தியாச வழியால் பயன்படுத்துபவர்.
நான் அடிக்கடி வாசித்து ரசித்து சிரிக்கும் ஒரு அருமையான பதிவர். கொஞ்ச நாளாக பதிவுகள் இடுவதில்லை.. படிப்பின் காரணமாக பிசியோ?

இந்த விருதின் மூலமாக மீண்டும் டுமீலிடுவார் என நினைக்கிறேன்.வித்தியாசமான எழுத்துநடை.. அனைத்து விஷயமும் அலசும் ஒரு all rounder.
இவரது துரித கிரிக்கெட் பதிவுகள் ரொம்பப் பிடித்தவை.
இலகு தமிழில் பல விஷயம் எழுதும் தமிழன் எட்வின் பலதும் எழுதுபவர் என்பதே இவர் பலம்.


குசும்பனின் குசும்பு..

மனசு மகிழ்ச்சியடைய இதைவிடப் பதிவுலகில் வேறு இடம் கிடையாது என்பேன்..
யாரை வேண்டுமானுலும் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கிண்டல் கேலி பண்ணிக் காலி பண்ணிவிடும் கை தேர்ந்த ஆசாமி இவர்.

சில நேரம் சிரிப்போடு வியந்து நிற்பதும் உண்டு.. மனிதர் எப்படியெல்லாம் சிந்திக்கிறார் என்று,,

இவரது பிறப்பிலேயே ஊறிய சிரிப்பு எங்களைப் போன்ற பலரின் மனதுகளை மலர் வைக்கிறது.
சமயத்தில் கிரிக்கெட் வீரர்களை இவர் வாருவது இவரது ஸ்பெஷாலிடி என்பேன்.நான் அன்போடு நினைக்கின்ற இன்னுமொரு அன்பர். முதலில் எனக்கு அங்கீகாரம் அளித்து தொடர்பதிவுக்கு அழைத்த பிரபலம். வாசிக்கும் காலம் முதல் நேசித்த பதிவர்.

கலவை ரசனையும் பரந்த பார்வையும் கொண்ட ரசனையான மனிதர்.

ஆழமான பதிவுகளும், அலட்டல் இல்லாத அலசல்களும், கனதியான கருத்துப் பகிர்வுகளும் இவர் எங்கள் நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் மாயவஸ்துக்கள்.

பந்தா இல்லாத பிரபலம்.என்னை கௌரவப்படுத்திய நண்பர் சுபானுவுக்கும், இந்த ஆரோக்கியமான சங்கிலித் தொடரை ஆரம்பித்துவிட்ட செந்தழல் ரவிக்கும் நன்றிகள்.

விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இனி இந்த அறுவரும் தொடர்வார்களாக..


பி.கு - சிங்கப்பூருக்கு நாளை போலாமா? இன்னைக்கு சூரிய கிரகணம் காரணமாக flights எல்லாம் cancelled.July 21, 2009

பள பளக்கிற பட்டாம்பூச்சி..கொஞ்சக் காலமாய் இந்தப் பட்டாம்பூச்சிகள் விருதுகளாகப் பலரின் பதிவுப் பக்கங்களிலும் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில் (எனது பதிவுலகின் ஆரம்ப கட்டத்தில்)எனக்கும் ஒரு நப்பாசை தான்.. யாராவது தர மாட்டாங்களான்னு..

பிறகு பார்த்தால் எல்லோரும் பட்டாம்பூசிகளோடு திரிகிறார்கள்.. அங்கீகாரம் என்பதை விட நண்பர்கள்/தெரிந்தவர்களுக்கான அன்பளிப்பாகவும், பரிசுகளாக அல்லாமல் மற்றவர்களுக்கு pass செய்துவிடும் ஒரு பாரமாகவுமே பதிவர்களுக்கு தெரிந்ததைப் பார்த்த பின்னர் கிடைத்தால் பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன்.

பட்டாம்பூச்சி வந்து எங்கள் பதிவுத் தளத்தில் இருக்க யாருக்குத் தான் ஆசையில்லை?

என் மீது அதீத அன்புகொண்ட நண்பர் சந்த்ரு (இவர் எங்கள் வெற்றி FM சந்த்ரு அல்ல) தனது அரைச்சதப் பதிவை எட்டிப் பிடிக்கும் நேரம் (இன்று அரைச் சதம் பெற்று விட்டார்.) எனக்குப் பட்டாம்பூச்சியைப் பரிசளித்துள்ளார்.

நன்றிகள் அவருக்கு.. அவரது அன்பையும் உரிமையையும் மதிக்கிறேன்.

பட்டாம்பூச்சி தந்த பாரிவள்ளல் சந்த்ரு வாழ்க.. ;)

இப்போது நான் இந்தப் பட்டாம் பூச்சியை இன்னும் ஐவருக்கு பரிசளிக்கவேண்டும்.(ஆகா மாட்டி விட்டுட்டாங்களே..)

மற்றவர்கள் பட்டாம்பூச்சி பரிசளிக்காத ஐவராகத் தெரிந்தெடுக்கிறேன்..
(இல்லாவிடில் பட்டாம்பூச்சி பெறாதவர்கள் என நினைக்கிறேன் & இப்போது மனதில் ஞாபகம் வந்த சிலர். இன்னும் சிலருக்கு ஏற்கெனவே பட்டாம்பூச்சிகள் கிடைத்துள்ளன)

நான் ரசிக்கும் சிலரை எனக்கு சுபானு அளித்துள்ள சுவாரஸ்ய விருதுக்காக தேர்ந்து வைத்துள்ளதால் இன்னும் ஐவரை பாராட்டும் விதத்தில் அறிவிக்கிறேன்.

கிடுகுவேலி எழுதும் கதியால்..

புதிய சிந்தனைகளுடைய, புதிதாய் சிந்திக்கக்கூடிய ஒரு ஆர்வமான இளைஞர்.சிங்கப்பூரில் தொழில்புரியும் இலங்கை இளைஞர். அன்பு கொண்ட ஒரு நண்பர்.
அனைத்துத் துறையிலும் இவர் எழுத்துக்கள் புகுந்து விளையாடுகின்றன.

நேற்றைய காற்று எழுதும் கிருஷ்ணா

அருமையாக எழுதும் ஒரு ஒலிபரப்பாளர். நான் சூரியனில் முகாமையாளராக இருந்தபோது தனித்திறமையோடும், கவிதை ஆற்றலோடும் இரவு நேரம் நேற்றைய காற்றைப் படைத்தவர். இப்போது கனடாவில் இருந்து கனதியான பதிவுகள் இடுகிறார்.

ஆழமான, அரசியல்,அனுபவப் பதிவுகள் இடுகிறார்.


அம்மா அப்பா எழுதும் ஞானசேகரன்

அமைதியான, ஆர்ப்பாட்டம் இல்லாத எழுத்துக்களால் சிந்திக்கக்கூடிய பல விஷயம் பதிபவர்.
இயற்கையின் காதலர் என்பது இவர் பதிவுகளைப் பார்த்தாலே தெரியும்.
அண்மையில் சுவாரஸ்ய விருதையும் பெற்றுள்ளார்.


பதுங்கு குழியில் உள்ள (!) டொன் லீ

தனது பதிவுத் தளத்தின் பெயராலேயே என்னைக் கவர்ந்த இவர் தன எழுத்துக்கள் மூலமாகவும் என்னை ஈர்த்தவர். சிம்பிளாகப் பல விஷயம் சொல்பவர்.
இப்போது ஐரோப்பியத் திக் விசயத்தில் இருக்கிறார்.

சிங்கப்பூர் பயணத்தில் என்னுடன் நெருக்கமானவர். பயணக் கட்டுரைகள் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட இவரும் ஒரு காரணம்.

அருண்..

எங்கள் வெற்றி FM செய்திப் பிரிவின் ஆர்வமான இளைஞன். தேடலும் துடிப்பும் உள்ளவர். துரிதமாக முன்னேறி வருகிறார்.
இவரது ஆர்வத்துக்காகவும்,மேலும் முன்னேறவேண்டும் என்றும் இந்த அன்புப் பரிசு.
எனது அன்புப் பரிசாக இந்தப் பட்டாம்பூச்சிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
இனி நீங்க கொடுங்க..கலக்குங்க..

நாளை எனக்கு சுபானுவால் வழங்கப்பட்டுள்ள சுவாரஸ்யப் பதிவர் விருதை ஏற்றுக் கொண்டு இன்னும் அறுவருக்கு வழங்கும் பொறுப்பு உள்ளது.

சிங்கப்பூர் பயணத்தில் என்னோடு இணைந்துகொள்ளக் காத்திருந்த அன்பர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டுகிறேன்.

July 20, 2009

ஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்


இன்று இலங்கை பாகிஸ்தானிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆரம்பித்துள்ளது..

இலங்கைக்கு white wash (3-0) அடிப்படையில் தொடர் வெற்றியைப் பெற்றுத் தரப் போகிற போட்டி என்பதை விட சமிந்த வாஸ் என்ற இலங்கையின் வரலாற்றில் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளரின் இறுதி டெஸ்ட் போட்டி என்பது தான் இந்த டெஸ்ட் போட்டியில் செல்வாக்கு செலுத்துகின்ற பிரதான காரணியாக மாறியுள்ளது.

இந்தவேளையில் ஒருவாரம் பின்னோக்கி போய் பார்க்கலாம் வாரீங்களா?

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ஒரு Flashback சுருளை சுற்றி விடுங்கள்..

இலங்கை அணிக்கெதிராக நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே உருட்டப்பட்டு, பந்தாடப்பட்டுள்ள பாகிஸ்தானிய அணிக்கு ஒரு நம்பிக்கை தரும் கீற்றாகக் கிடைத்திருப்பவர், ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதால் தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே பலிக்கடாவாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக அனுப்பப்பட்ட இளம்வீரர் பவாட் அலாம்.

சகலதுறைவீரராகவும், குறிப்பாக ஒருநாள் மற்றும் T 20 வகைப்போட்டிகளுக்கு பொருத்தமான சுழல்பந்து வீசும் மத்திய வரிசைத்துடுப்பாட்ட வீரராகக் கருதப்பட்ட அலாம் முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே விளையாடியிருக்க வேண்டும் என பாகிஸ்தானின் முதலாவது டெஸ்ட் தோல்விக்குப் பிறகு குரல்கள் எழுந்தன.

முதலாவது இனிங்சில் சொதப்பியபோதும் (16 ஓட்டங்கள்) இரண்டாம் இனிங்சில் அலாம் இலங்கை அணிக்கு தனது 168 ஓட்டங்கள் மூலம் ஆபத்து அலார்மை (Alarm) அடித்திருந்தார்.

அலாமின் அந்த கன்னி சதம் - அற்புதமானது, அபாரமானது, அசத்தலானது, அரியது, ஓப்பீடற்றது, பாகிஸ்தானினால் அநியாயமாக்கப்பட்டது என்று எது வேண்டுமானாலும் சொல்லுங்கள்.

ஆனால் சுருக்கமாகச் சொல்லப்போனால் பல மைல்கற்கள், சாதனைகளை உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தானிய வீரர் ஒருவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் பெற்ற 2வது கூடிய ஓட்ட எண்ணிக்கை ( யசீர் ஹமீட் பங்களாதேஷீக் கெதிராகப் பெற்ற ஓட்டம் 170 )

பாகிஸ்தானிய வீரர் ஒருவர் அறிமுகப் போட்டியில் வெளிநாட்டு மண்ணில் பெற்ற முதலாவது சதம் இதுவே. (இவ்வளவு நாளும் எல்லோரும் தங்கள் நாட்டிலே தான் அறிமுக சதங்களை அடித்துள்ளார்கள். )

இதெல்லாம் பலருக்கும் தெரிந்தவை – பலபேர் அறியாத இரு ஆரூடங்கள் அல்லது தீர்க்க தரிசனங்களும் இந்த சதத்தோடு இணைந்திருக்கின்றன.

கிரிக்கெட் என்பது எவ்வளவு தான் கடும் பயிற்சி – விடாமுயற்சியுடன் இணைந்ததாக இருந்தாலும் சில அதிர்ஷ்டங்கள் - நம்பிக்கைகளும் முக்கிய இடம்பிடித்தே இருக்கின்றன.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்க்சில் பாகிஸ்தானின் விக்கெட்டுக்கள் சுருண்டுகொண்டிருக்க,ஆடுகளத்தில் அலாம் நின்று கொண்டிருந்த நேரம், ஏற்கெனவே ஆட்டம் இழந்திருந்த பாகிஸ்தானிய அணித் தலைவர் யூனிஸ் கான்(இவர் அதிர்ஷ்ட விஷயங்களில் மிகுந்த நம்பிக்கை உடையவர்) வீரர்கள் ஆடை மாற்றும் அறைக்குள்(dressing room) இருந்தவாறே ஒரு கிரிக்கெட் பந்தை எடுத்து அதில் ஓட்டுகிற டேப்பை(tape) எடுத்து சுற்றி (தேவையில்லாத வேலை தான்.. ) அதிலே பேனாவால் "Alam debut century" (அறிமுகப் போட்டி, அலாம் சதம்) என்று எழுதி வைத்தாராம்..

பார்த்தால் அலாம் 16 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க, பாகிஸ்தானும் 90 ஓட்டங்களுக்கு சுருண்டது.

வெறுத்துப் போன யூனிஸ் அந்தப் பந்தை அப்படியே தூக்கி ஒரு மூலையில் எறிந்து விட்டார்.

ஆச்சரியம் பாருங்கள்..
அடுத்த இன்னிங்க்சில் அலாம் தனது அபார சதத்தைப் பெற்றவேளையில் அவரோடு ஆடுகளத்தில் இருந்தவர் அதே யூனிஸ் கான்..

அலாமைக் கட்டியணைத்து வாழ்த்திய பின்னர் அலாமின் காதுகளில் யூனிஸ் கிசுகிசுத்தது "நீ இந்தப் போட்டியில் சதம் அடிப்பாய் என்று எனக்கு முன்பே தெரியும். dressing roomக்கு வா.. உனக்கொரு அதிசயம் காட்டுகிறேன்"

யூனிசினால் எழுதப்பட்ட பந்தை பார்த்த பின் அசந்து போனார் அலாம்.

இதைவிட இன்னொரு அதிசயம்...

பவாட் அலாமின் தந்தையார் தாரிக் அலாம் பாகிஸ்தானின் கராச்சியில் ஒரு பிரபல துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர். குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது எப்படி என்று நுணுக்கமாகக் கற்றுக் கொடுப்பவர்.

எத்தனையோ வீரர்களை டெஸ்ட் வீரர்களாக அவர் உருவாக்கி விட்டும் கூட தன்னால் பாகிஸ்தானிய அணிக்காக விளையாட முடியாமல் போனது குறித்து அவருக்கு மனக்கவலை.

இறுதியாக மகன் பவாட் விளையாட ஆரம்பித்தது அவருக்கு மிகப் பெருமையும் மகிழ்ச்சியும் தந்த விஷயம்

எனினும் தந்தையின் கனவை தான் நனவாக்கினாலும் முதல் இன்னிங்சில் சரியாகத் துடுப்பெடுத்தாடவில்லை என்று கவலையுடன் தந்தைக்கு அழைப்பெடுத்து மன்னிப்புக் கோரினாராம்.

தாரிக் அலாம் மகனுக்கு சொன்ன விஷயம் "மகனே இன்று தான் முதல் நாள்.. இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அடுத்த முறை இவ்வளவு தொலைவிலிருந்து நீ அழைப்பெடுத்து என்னுடன் பேசும்போது சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொள்ளுவாய்"

அடுத்த அழைப்பு பவாட் தனது தந்தைக்கு எடுத்தது தனது சதம் பற்றி சொல்லத் தான்..

இது ஆரூடமா இல்லை அதிர்ஷ்டமா.. இல்லை தீர்க்க தரிசனமா? இல்லை குருவி (இளைய தளபதி இல்லீங்க்ணா) உட்காரப் பனம்பழம் விழுந்த கதையா?


நாளை சிங்கப்பூரில் நாங்கள் சேர்ந்து உலாத்தலாம்..


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner