June 10, 2018

காலா !


காலா பற்றிய பார்வைக்குச் செல்ல முதல்...

கதையைச் சொல்லிவிடுவேனோ என்ற பயமில்லாமல் படம் பார்க்காதவர்களும் வாசிக்கலாம்.
கழுவி ஊற்ற/கலாய்க்க எதிர்பார்த்திருப்பவர்கள் முன்னைய காலா பற்றிய என் ட்வீட்ஸ் பார்த்து விட்டு வரலாம்.

நடுநிலை எல்லாம் தேவையில்லை எனக்கு.. இது விமர்சனமும் கிடையாது. வழமையான படங்களுக்கு நான் எழுதுவது போல காலா பற்றிய என் பார்வை மட்டுமே :)

அடுத்து,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் தெரியுமா, charisma தெரியுமா, கரீனா தெரியுமா ?
அவர் திரையில் நின்றாலே அதிரும் தெரியுமா?
இந்தப் படத்தில் ரஜினிக்குப் பதிலாக யார் நடிச்சாலும் எடுபடாது தெரியுமா?

தலைவா.. கோஷக் கூட்டங்கள்..
வசூல் கணக்கு மணித்தியாலம் தோறும் தேடி அப்டேட்டும் கணக்குப்பிள்ளைகள்,
இந்த கோஷப் பார்ட்டிகள், கதை கிடக்கிறது, படம் சொல்லும் விடயம் கிடக்கிறது ரஜினி மட்டுமே போதும் என்று குதூகலிக்கிற குஞ்சுகள்,

எல்லாரும் ஓரமாய்ப்போய் கூலா ஒரு கோலா குடிச்சிட்டு ஓரமாய் நின்று கம்பு சுத்தலாம்.

ஒரு stylish icon ஆக அநேக ரஜினி படங்களில் ரஜினி தோன்றும் காட்சிகளில் கிடைக்கிற அந்த கிக் எனக்கு காலாவிலும் கிடைத்தது. ஆனால் இங்கே பதியப்போவது காலா என்ற ஒரு படத்தைப் பற்றியது.

ரஜினி என்ற ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு சக்தியின் ஆளுமையும் ஆகர்சமும் கூட சரியான விதத்தில் பயன்படுத்த முடியாமல் போய் படுபாதாளத்தில் வீழ்ந்த அல்ல அல்ல பலூனில் பறந்து வீழ்ந்த லிங்கா போன்ற படங்களும் பார்த்திருக்கிறோம். ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கபாலி போன்றவையும் வந்தே இருக்கின்றன.

கபாலியில் கற்றுக்கொண்ட பாடங்களையும் சேர்த்துக்கொண்டு ஏற்கெனவே தனக்கு இருக்கும் திறமையான இயக்குனர் என்ற முத்திரையையும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியுடன், மிக நேர்த்தியான தயார்ப்படுத்தலுடன் 'காலா'வில் கை வைத்துள்ளார்.

உழைக்கும் மக்களுக்கு நிலம் சொந்தம் !
இந்த ஒரு வரியின் ஆழமான அரசியலை நேரடியாகவும் அதைச் சூழவுள்ள இந்தியாவின் தேசியவாத, பிராந்திய அரசியலையும் மதவாதப் பிரிவினைகள் மூலமாகப் போராட்டங்கள், மக்கள் எழுச்சிகளைத் திசை திருப்புவதையும் ரஜினியின் மக்கள் மீதான ஈர்ப்பு என்பதைக் கருவியாகக் கையாண்டு குறிப்புக்கள் ஊடாகவும், குறியீடுகளின் கோர்வையாகவும் - பல இடங்களில் நேரடியாகவும் போட்டுத் தாக்கியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.

"
குறியீடுகளின் கோர்வை.. ரஜினியைக் கருவியாக்கி எடுத்திருக்கும் அதிகாரத்துக்கு எதிரான தன் பிரசாரம். "

சந்திரமுகி, சிவாஜி, கபாலி ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டு ரஜினி இயக்குனரின் நடிகர் ஆகியிருக்கிறார்.
ரஜினியின் ஈர்ப்பை எங்கெங்கே பயன்படுத்தவேண்டுமோ அந்தந்த இடங்களில் எல்லாம் சிக்ஸர் அடித்திருக்கும் ரஞ்சித் பல இடங்களில் தன்னுடைய படம் இது என்பதை கதையை மேலெழச் செய்து அழுத்தம் காண்பித்துள்ளார்.

முள்ளும் மலரும் திரைப்படத்தின் பின் முழுமையாக அனைத்து வித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புக்கொண்ட பாத்திரம் காலா - கரிகாலனாக.

சிறு குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடி bowled ஆவதோடு தாத்தாவாகவும், ஒரு பெரிய குடும்பத்தின் பாசமுள்ள தலைவனாகவும் அறிமுகமாகின்ற ரஜினிக்கு நிகராகக் காட்டப்படுகின்ற அவரது மனைவி செல்வியின் பாத்திரத்தில் ஈஸ்வரி ராவ். ரஜினி ரசிகர்கள் கபாலியில் ராதிகா ஆப்தேக்கு அதிருப்தி காட்டியவர்கள். எனினும் இந்தப் படத்திலும் இனியும் இதை பழகிக்கொள்ளத்தான் வேண்டும்.

ஈஸ்வரி ராவ் கனதியான அந்தப் பாத்திரத்தைக் கையாளும் விதம் அற்புதம். வெட்டென்று பேசும் வெகுளித்தனம், மனதில் அன்பை வைத்து மறுகும் பாசம், காலாவையே கட்டுப்படுத்தும் கண்டிப்பு என்று கலக்குகிறார்.
செல்வி மட்டுமன்றி ஏனைய இரண்டு பெண் பாத்திரங்கள் - முன்னாள் காதலி சரீனா, மராத்தி பேசும் புயலு என்று மூன்று பெண் பாத்திரங்களூடாகவும் சமூகத்தைப் பற்றியும் அரசியலில் பெண்களின் வகிபாகம் பற்றியும் பேச முயற்சித்துள்ளார் ரஞ்சித்.
என்னும் அந்தப் பெண் பாத்திரங்கள் தங்கியிருப்பதையும் தனியாக ஜெயிக்க முடியாமல் போவதையும் குறியீடாகக் காட்டுவதையும் கவனிக்கவேண்டும்.

ரஜினிகாந்தின் அரசியல் மோடி, பிஜேபி சார்ந்தது என்று பேசப்பட்டு விமர்சிக்கப்படும் இப்போதைய காலகட்டத்தில், காவி நிறம், தூய்மை இந்தியா போல தூய்மை மும்பாய், ராமர் கடவுள் (ராம ராஜ்ஜியம் ?), மோடியைப் போலவே படங்கள், கட் அவுட்டில் சிரிக்கும் ஹரி தாதா, போராட்டங்கள், மக்கள் எழுச்சிகள் திசை திருப்பப்படல் என்று பார்த்துப் பார்த்து பகிரங்கமாக ரஜினியை வைத்தே வெளிப்படையாக எதிர்ப்பது கொள்கையின் துணிச்சல்.
அதில் முத்தாய்ப்பு அந்த இறுதியாக வரும் 'சிங்காரச் சென்னை'.

படங்களின் ஒவ்வொரு காட்சியிலும் தாராளமாக குறியீடுகளைப் பின்னணியில் வைத்து தன்னுடைய கொள்கையைக் கொண்டு செல்வதில் ரஞ்சித் ஒரு சமர்த்தர் ; முதல் படத்திலிருந்து.
ரஜினி - கறுப்பு, ஹரி தாதாவினால் தொடர்ச்சியாக ராவணன் என்று கூறப்படும் இடங்கள், ஒரு காட்சியில் பின்னணியில் 'ராவண காவியம்' என்று ராவணனைப் போற்றியுள்ளார் (ராவண காவியத்துக்கு அப்பால் ஈழத்து எழுத்தாளர் டானியலின் நாவலும் தெரிகிறது), கிடைக்கும் இடங்களில் எல்லாம். காலா கூட 'தங்க செல' பாடலில் ஒற்றைத்தலை ராவணன் பச்சப்புள்ள ஆவதாகப் பாடுகிறார்.

ராவணனைப் போற்றி நேரடியாக ராம பக்தர்களை வம்புக்கு இழுக்கும் இடம் அது மட்டுமல்ல.
உச்சக்கட்டக் காட்சிகளில் அதற்கான தனியான இடமுண்டு.

கதாநாயகன் காலாவின் பின்னணியில் புத்தர், கிராமியக் கடவுள் காலா, என்றும் வில்லன் ஹரிதாதாவின் பின்னணியில் ராமர் என்றும் குறிகாட்டி இருப்பது மட்டுமன்றி, ரஜினியின் உச்சக்கட்ட ஹீரோயிசக் காட்சியான மேம்பால சண்டைக்காட்சியில் வில்லனின் வதத்தின் பின்னர் கணபதி சிலைகள் ஆற்றில் கரையும் காட்சியும் உண்டு.

மகனின் பெயர் லெனின்..
எனினும் மகன் கடைக்கொள்ளும் 'விழித்திரு' மக்கள் போராட்ட முறையை எதிர்க்கிறார் காலா. பயனில்லை என்கிறார். எனினும் வன்முறையில் தனது சொந்த இழப்பின் பின்னர் மக்களை சேர்த்து மாபெரும் புரட்சியைத் தானே கொள்கிறார்.

ரஜினியின் தளபதி செல்வமாக வரும் 'வத்திக்குச்சி' திலீபனுக்கு அற்புதமான பாத்திரம். சிறுசிறு பாத்திரத் தெரிவிலும் அக்கறையாக இருந்திருக்கிறார் இயக்குனர். அரவிந்த் ஆகாஷ் ஏற்றுள்ள பொலிஸ் பாத்திரத்தின் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்.


ரஞ்சித்தின் கொள்கை + புத்திசாதுரியம், அண்மைய மக்கள் அரசியல், தலித்திய தத்துவங்கள் என்று படம் முழுக்க விரவி நின்றாலும் அழுத்தமான காட்சிகளாக ரஜினி என்ற ஜனரஞ்சக நடிகனின் சில அழுத்தமான காட்சிகள் எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கக்கூடியது.
படத்தின் பிரசார நெடியை சற்றே தணிக்கக்கூடியதாக  அமைவன அவை.
காலாவின் வீட்டுக்கு நானா பட்டேக்கர் (ஹரி தாதா) வந்து, பேசி கிளம்பும் நேரம் "நான் போக சொல்லலையே" என்று அழுத்தமாக சொல்லும் இடமும், அதைத் தொடர்ந்து நானாவின் அழுத்தமான முகபாவங்களும் கலக்கல்.

ஒரு தேர்ந்த நடிகராக நானா பட்டேக்கர் அமைதியான வில்லா முகம் காட்டி ரஜினிக்கு ஈவு கொடுத்து படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்.

பாட்ஷாவுக்கு ரகுவரன் போல இந்த காலாவுக்கு நானா முக்கியமான ஒரு தூண்.

பாட்ஷா, தளபதி போல போலீஸ் காட்சிகளில் பரபர தீப்பொறி.

"குமார், யார் இந்த ஆளு?" கரகோஷங்களை எழுப்பும் காட்சி.

ஹரி தாதா வீட்டுக்கு காலா போகும் காட்சியும் அங்கே நடக்கின்ற உரையாடலும் அண்மைக்காலத்தில் ஹீரோ - வில்லன் உரையாடல்களில் மிக நுண்ணியமான, அதேவேளையில் கலக்கலான காட்சிகளில் ஒன்று.
(விக்ரம் வேதா இன்னொன்று)
படையப்பா - நீலாம்பரி சந்திப்பு, சிவாஜி - ஆதிசேஷன் சந்திப்புக்களில் பார்த்த அதே ரஜினியின் நெருப்பு.

வெள்ளை - கறுப்பு , இரண்டடி மட்டுமே தூரம், நிலம் எங்களுக்கு வாழ்க்கை உங்களுக்கு அதிகாரம், எங்கள் நிலத்தைப் பறிப்பது உங்கள் கடவுளாக இருந்தால் அந்தக் கடவுளையும் எதிர்ப்பேன் என்று சொல்லும் இடங்கள் தத்துவ சாரங்கள்.
ரஜினியின் மாஸ் அப்பீலும் சேர்ந்து கொள்வதால் தீப்பிடிக்கிறது.

முதுகிலே குத்திக்கோ என்று சொல்லி நடக்கும் அந்த நடை.. ரஜினி ரஜினி தான்.
இத்தனை இருந்தும் மும்பாய் - தாராவி - தமிழர்கள் - நிலம் - போலீஸ் என்ற பின்னணிகளும் காலா சேட் - அவரது நண்பர் வாலியப்பா (சமுத்திரக்கனி)வும், நாயகனை ஞாபகப்படுத்தாமல் இல்லை.
90களில் அப்போதிருந்த சூழ்நிலையை மணிரத்னம் காட்டியதற்கும், இப்போது நவீனமயப்படுத்திய நாயகனாக இந்தக் கால சமூக வலைத்தளங்கள், புதிய தொழிநுட்பங்கள் என்பவற்றுடன் ரஞ்சித் கொண்டுவந்த காலா நாயகனின் புதிய version என்பதற்கும் பெரியளவில் சிந்திக்கவேண்டியதில்லை.

எம்மைக் காட்சிகளில் கோர்ப்பதற்கு காமெராவும் மைக்கும் கையுமாக அலையும் ஒரு ஊடகவியலாளர் (ரமேஷ்) கதை சொல்லியாக ரஞ்சித்தினால் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். கொஞ்சம் பழைய உத்தி. ஆனால் கடைசிக் காட்சிகளில் அதன் அழுத்தம் முக்கியமானது.

கபாலியைப் போலவே காலாவிலும் காதலும், தொலைந்து போய் மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தேடிவரும் காதலும் உண்டு. அதே போன்ற கலவரத்தில் காணாமல் போன காதல்.
அந்தக் காதலுக்கு இடையில் ரஜினிக்கும் மனைவிக்கும் இடையிலான பாசம் இழையோடும் காட்சிகளும் உண்டு.
ரஞ்சித்தின் படங்களில் மட்டும் கலவரத்தில் காதல் காணாமல் போவதும், காதலர்கள் பின்னர் ஒரு காலம் வரும்வரை தேடாமல் இருப்பதும் நடக்கிறது.

கல்யாணம் நிற்கவும் காணாமல் போகவும் , அந்த வேளையில் வேங்கையனின் மரணத்துக்கும் காரணமான ஹரி தாதாவை சரீனாவுக்கும், ஹரி தாதாவுக்கு வேங்கையனின் தளபதியாக இருந்த கரிகாலனைத் தெரியாமலிருப்பதும் எமக்கு வைக்கப்பட்ட டுவிஸ்ட்??

காலா குடும்பத்தை விட்டு நகர்ப்புற வசதிகளுடன் வெளியேற நினைக்கும் மகன்மாருடன் நிகழ்த்தும் உரையாடல் எத்தனை பேருக்கு தேவர் மகன் சிவாஜி -கமல் காட்சிகளை நினைவில் கொண்டுவந்தது?

ரஞ்சித்தின் வழமையான formula வில் மேலதிகமாக வெளிப்படையான அரசியல் , இப்போது தமிழகத்தில் தகித்துக்கொண்டிருக்கும் அரசியலை மிக சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறார்.

அதற்கு காலாவின் கறுப்பு தேவைப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் லெனின் மூலமாக சிவப்பையும் கையாண்டுள்ளார். இறுதிக் காட்சியில் நீலத்தாலும் பூசி முடிக்கிறார். இவை நிச்சயம் பேசப்படும்; விவாதிக்கப்படும்.

சந்தோஷ் நாராயணனின் இசையின் பங்களிப்பு படத்தின் மிகப்பெரும் பலம். பாடல்களை எல்லாம் எத்துணை திட்டமிட்டு உருவாக்கியுள்ளார்கள் என்பது வியப்புக்குரியது. கூடவே படம் முழுக்கப் பயணிக்கும் இசை ஒரு தனிப்பாத்திரம்.
சந்தோஷும் படத்தின் இன்னொரு இயக்குனர் என்றால் அது மிகையில்லை.
தாராவியைக் காட்டும் விதத்திலும் காட்சிகளூடு எம்மைக் காவிச் செல்வதிலும் ஒளிப்பதிவாளர் முரளியின் பங்கும் பெரியது.

ஆனால் கூடவே சம்பவங்களுக்குப் பாடி ஆடும் அந்த நான்கைந்து பேரின் காட்சிகளை ரஞ்சித் இன்னும் எத்தனை படங்களில் கையாளப்போகிறார்?


இதையெல்லாம் தாண்டி கரிகாலன் இறந்தாரா இருக்கிறாரா என்ற கேள்வியைத் தொக்க வைத்திருக்கும் விதம் சிந்திக்க வைக்கக்கூடியவொன்று.
கிளைமக்சில் ரசிகர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்ற தெளிவான ஊகத்தைத் தந்துவிட்டு, கதை மாந்தருக்கும் திரைப்பட முடிவுக்கும் சந்தேகம் ஏற்படுவது போல வைத்திருப்பது ஈழத்தினதும், புலம்பெயர் தேசத்தினதும் சிந்தனையில் சிறு பொறியைத் தட்டுவதற்கா?
காரணம் இராவணனின் தலைகள் கொய்யக் கொய்ய முளைப்பது பற்றி சொன்ன இயக்குனர், ஒரு காலா போனாலும் தாராவியில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலா தான் என்று வேறு ஆழமாகச் சொல்லியும் வைக்கிறார்.

 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவன் "சோழன் பயணம் தொடரும்" என்று காட்டியதை நினைவுபடுத்தும் ரஞ்சித் சுபமான முடிவுக்காக செய்த விட்டுக்கொடுப்பா அது?

காலா - எனக்கு நான் அலுப்பின்றி ரசித்துப் பார்த்த அனுபவம். இயக்குனரின் சாமர்த்தியங்களை ரசித்தேன். குறியீடுகளைக் குறித்துக்கொண்டேன்.
மறைபொருள் அரசியலையும் ஒரு களிமண்ணாக ரஜினியை வைத்துப் பிசைந்து தனக்குத் தேவையான இறுதிப் பொருளை உருவாக்கியதையும் ரசித்தேன்.
சூப்பர் ஸ்டாராக மட்டும் பார்க்க விரும்பும் ரஜினி ரசிகர்களையும் திருப்தி செய்யக்கூடிய மசாலா நுட்பமும் கபாலி கற்றுத் தந்த பாடமாகக் கைவந்துள்ளது.

எனினும் ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கும் அவர் பேசும் சாமர்த்திய அரசியலுக்கும் ரஞ்சித்தின் 'காலாவுக்கும் இடையில் மயிரளவு கூட சம்பந்தமே இல்லை என்பதை ரஜினி என்ற அரசியல்வாதிக்கும் சேர்த்துக் கொடி பிடிப்போர் புரிந்துகொண்டால் அது தான் தமிழக அரசியலுக்கான விடிவாக இருக்கும்.

எனினும் ஒவ்வொரு காட்சிக்கும் இனி ஒவ்வொருவராகத் தரப்போகும் வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் நினைத்தால் தான்...

காலா - காலம் சொல்லும் கோலம்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner