M.S.தோனியின் இந்திய அணிக்கு – முன்னர் மார்க்டெய்லர்,ஸ்டீவ்வோவின் அவுஸ்திரேலியா அணிக்கு இருந்த அதே வியாதி பீடித்துள்ளது. COMPLACENCY..
தொடரை வென்றவுடன் தொடர் முடிவில் மாற்றமேதும் ஏற்படுத்தாத கடைசிப்போட்டியை Dead rubber/Dead match என்று அழைப்பார்கள். இப்போதைய அவுஸ்திரேலிய அணி வெற்றியொன்றைப் பெறவே தட்டுத்தடுமாறி வந்து இப்போதுதான் வெற்றிகளைத் தொடர்ந்து சுவைக்க ஆரம்பித்துள்ள அணி. எனினும் முன்னைய சம்பியன் அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் போன்ற தொடர்களில் வரிசையாக எல்லாப் போட்டிகளையும் வென்றபின்னர்,தொடர் தமது வசமான பின்னர்,கடைசிப் போட்டியில் கொஞ்சம் கவனயீனமாக அல்லது அக்கறையில்லாமல் விளையாடித தோற்பது வழமையானது.
இதனால் அவுஸ்திரேலியா white wash செய்யாமல் விட்ட தொடர் பலப்பல! எனினும் வேறு பெரிய இழப்புக்கள் ஏற்படவில்லை!
ஆனால் இந்திய அணி அண்மையில் இரண்டு dead rubberகளை இழந்தது. இலங்கையில் வைத்து முதல் நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை வென்றபின்னர் ஐந்தாவது போட்டியில் தோற்றது. அந்தப் போட்டியை வென்றிருந்தால் ICC ஒருநாள் தரப்படுத்தலில் முதலாமிடத்தைப் பிடித்திருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாகப் பத்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்ற மைக்கல்லையும் கோட்டை விட்டார்கள்.
இலங்கையில் வைத்து White wash அடிப்படையில் ஒருநாள் தொடரை முதல் தடவையாக வென்ற பெருமையையும் பெறமுடியாமல் போனது.
இப்போது மீண்டும் நியூசிலாந்தில் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டு மீதி எல்லாப் போட்டிகளிலும் இந்தியா வென்றபின்னர் இறுதியாக இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் நியூசிலாந்திடம் கோட்டை விட்டது.
இதனால் இம்முறை இந்தியா இழந்திருப்பது ICC யின் தரப்படுத்தலில் முதலாம் ஸ்தானத்தை மட்டுமல்ல – பெறுமதிவாய்ந்த பணப்பரிசையும் தான்!
இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்துள்ள ஒராண்டுக் காலக்கட்டத்தில் டெஸ்ட்,ஒருநாள் தரப்படுத்தல்களில் முதலிடம் பெறும் அணிகளுக்கும் பெரும் பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.
சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் தோல்வியுற்றதுடன் இந்தியாவுக்கு இன்னமும் எஞ்சியுள்ள ஒருமாதத்துக்குள்ளே முதலிடத்தைப் பெறும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. 3இடம் தான்!
முதலிடத்துக்கான பணப்பரிசு இனி அவுஸ்திரேலியாவுக்கு அல்லது தென் ஆபிரிக்காவுக்குத் தான்1
தொடர்ந்து வெற்றிகளை சுவைத்து வரும் இளமையும் துடிப்பும் மிக்க இந்திய கிரிக்கட் அணியிடம் complacency என்பது இல்லை என்று அடிக்கடி தோனி சொல்லி வருகிறார். ஒவ்வொரு போட்டியுமே வெல்லப்படவேண்டியவை என்றும் வலியுறுத்தி வருகிறார்.
நியூசிலாந்திடம் தோற்றுப்போன போட்டியிலும் கூட தினேஷ் கார்த்திக்,ப்ரக்யான் ஒஜ்ஹா,இர்பான் பதான் போன்றோருக்கான பயிற்சி வாய்ப்புக்கள் கூட வழங்கப்படாமல் முழுமையான அணியே விளையாடிருந்தது. சச்சின் டெண்டுல்கர் உபாதை
காரணமாக விளையாடவில்லை.
தோல்வியும் வெற்றியும் சகஜமே.ஆனாலும் கூட இவ்வாறான முக்கியமான,வெல்லப்பட வேண்டிய போட்டிகளில் தோற்பது அதுவும் தொடர்ச்சியாகத் தோற்பது ஒரு தொடர் வியாதியாகிவிடக் கூடாது.
முன்பு ஒருகாலம் இந்திய கிரிக்கட் அணிக்கு ஒரு வியாதி இருந்தது.சிறப்பாக விளையாடி வந்தாலும் எந்தவொரு தொடரினதும் இறுதிப்போட்டியில் (final) தோற்றுவிடும். (இங்கிலாந்தின் Nat west cup,1998 ஷார்ஜா கிண்ணம்,2002 மினி உலகக் கிண்ணப் போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது.)
M.S.தோனியின் தலைமை அதை மாற்றியமைத்து,உத்வேகமான எந்த சவாலையும் எதிர்கொண்டு எந்த அணிக்கெதிராகவும் எந்த சூழ்நிலையிலும் எங்கேயும் வெற்றி பெறும் ஒரு அணியாக மாற்றியிருந்தாலும்,இப்போது தொடங்கியுள்ள இந்த COMPLACENCY வியாதி பயங்கரமானது அணியின் எதிர்காலத்தை சிதைத்துவிடக் கூடியது.
கிரிக்கட் ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட விளையாட்டு என்பதனால் இந்த வியாதியை ஆரம்பித்திலேயே குணப்படுத்தாவிட்டால் பின்னர் விளைவுகள் குணப்படுத்த முடியாமல் பல தோல்விகளைத் தந்துவிடும்!