சச்சின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு...
இது பற்றியே இந்த இரண்டு நாட்களாகப் பேச்சு...
இந்த ஓய்வு எதிர்பார்த்ததே என்றாலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விளையாடிவிட்டு ஓய்வுபெறக் காத்திருக்கிறார் என்றதால் தான் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் பின்னர் சச்சின் ஓய்வை அறிவிக்கவில்லை என்று நான் நினைத்திருந்தேன்.
உண்மையில் நாற்பது வயதை நெருங்கும் சச்சின் முன்பை விட ஆடுகளத்தில் பந்துகளைத் தேர்வு செய்து துடுப்பாடுவதிலும், பந்துகளை அடிக்காமல் விடுவதிலும் கூடத் தடுமாறுகிறார் என்பது அவரது அங்க அசைவுகள், பார்வைகள், ஏன் ஆட்டமிழப்புக்கள் மூலமாகக் கூடத் தெரிகிறது.
இங்கிலாந்துத் தொடரில் அவரது தொடர்ச்சியான தடுமாற்றம் பற்றி கடந்த வாரம் நான் தமிழ் மிரரில் எழுதிய கட்டுரையில் சொல்லி இருந்தேன்.
இந்தத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் ஒரு இன்னிங்சில் பெற்ற 76 ஓட்டங்களைத் தவிர ஏனைய 5 இன்னிங்சில் 36 ஓட்டங்களையே எடுத்திருக்கிறார். சராசரி 18.66. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட்கள் அடங்கிய தொடர் ஒன்றில் சச்சின் பெற்ற மிக மோசமான சராசரி இதுவே.
நாற்பது வயதாகும் உலகின் அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற சாதனையாளர் தொடர்ந்து தடுமாறியும், தளர்ந்தும் வருகிறார் என்பது அவரது கடந்த இரு வருடப் பெறுபேறுகளிலேயே தெரிகிறது. 18 டெஸ்ட் போட்டிகளில் 1113 ஓட்டங்கள். சராசரி 35.90. ஒரேயொரு சதம்.
ரஹானே, திவாரி, இன்னும் பல இளம் வீரர்கள் வெளியே வாய்ப்புக்காகக் காத்திருக்க, சச்சின் தானும் தடுமாறி அணியையும் தடுமாற வைத்துக்கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்கள் கிளம்பியுள்ளன வழமை போலவே...
இந்தியா அடுத்த டெஸ்ட் தொடர் விளையாட சில மாதகாலம் இருப்பதால் சச்சின் என்ன முடிவை எப்போது எடுப்பார் என்று அனைவருமே காத்துள்ளார்கள்.
அண்மைக்காலத்தில் அனேக பிரபல. சிரேஷ்ட வீரர்களுக்கு அவரவர் அணிகள் இறுதியாக ஒரு போட்டியை தங்கள் ஓய்வை அறிவித்துவிட்டு விலகும் வாய்ப்பாக வழங்கி வந்துள்ளார்கள்.
இந்தியாவின் டிராவிட், லக்ஸ்மன் ஆகியோர் மட்டுமே இரு டெஸ்ட் தொடர்களுக்கிடையில் போட்டிகள் நடக்காத நிலையில் தங்கள் ஓய்வுகளை அறிவித்தவர்கள்.
(லக்ச்மனின் ஓய்வு ஏற்படுத்திய சர்ச்சையின் மூலம் அவர் ஓய்வு பெற வைக்கப்பட்டார் என்பது தெளிவானது)
எனவே சச்சின் இங்கிலாந்துக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட் போட்டியின் முன்னர் அல்லது தொடர் முடிந்த உடன் அறிவிப்பார் என்று பார்த்தால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய ஒருநாள் சர்வதேச அணி அறிவிக்கப்பட ஒரு சில நிமிட நேரங்களுக்கு முன்னர் தனது ஓய்வை - ஒருநாள் சரவதேசப் போட்டிகளில் இருந்து மட்டும் - அறிவிக்கிறார்.
இது உண்மையில் பலரும் எதிர்பாராததே..
டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் சச்சின் விலகுவார் என்றே நான் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருந்தோம். (என்னதான் கிரிக்கெட் கடவுளாக இருந்தாலும் 2015 உலகக் கிண்ணத்தில் சச்சின் விளையாட மாட்டார் என்பது இப்போது சச்சின் ஓய்வு பெற்றதற்காக உண்ணாவிரதம், தீக்குளிப்பில் ஈடுபடும் ரேஞ்சுக்குப் போயுள்ள ரசிக / பக்த சிகாமணிகளுக்கும் நன்றாகவே தெரியும்)
பாகிஸ்தான் தொடரில் விளையாடுவது எல்லா இந்திய வீரர்களுக்கும் ஒரு பெரிய விஷயம்.. மிக நீண்ட காலத்தின் பின்னர் இந்தியா வருகின்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை சச்சின் கூட தவறவிடுவாரா?
இந்தியத் தெரிவாளர்கள் (தோனியுடன் சேர்ந்து தான்) அண்மைக்காலத்தில் எடுத்துவரும் கடுமையான முடிவுகள் & சச்சினின் தொடர்ச்சியான தளம்பல்கள் இரண்டும் சேர்ந்து இந்த அவசர ஓய்வு, சச்சின் தானாக எடுத்ததா அல்லது தேர்வாளர்களுடன் பேசி அவர்களாகக் கொடுத்த ஐடியாவா என்ற கோணத்திலும் யோசிக்க வைக்கக் கூடியவை.
அறிவிக்கப்பட்ட இந்திய ஒருநாள் அணியிலும் சாகிர் கான் இல்லை.. சேவாக் சேர்க்கப்பட்டதும் ஆச்சரியத்தை அளித்திருந்தது.
சச்சின் ஓய்வை அறிவிக்காமல் இருந்திருந்தால், தேர்வாளர்கள் சேவாக்கா சச்சினா என்ற குழப்பத்திற்கு ஆளாகி இருக்கலாம்...
எனவே தான் கலந்தாலோசித்து இந்த ஓய்வை சச்சின் அணி அறிவிக்க சில நிமிட நேரங்களுக்கு முன்னர் அறிவித்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எப்படா இந்த ஆள் ஓய்வு பெறுவார் என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த பலருக்கும், ஏன்டா இப்ப ஓய்வு பெற்றார் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் - இப்போது இந்த ஒருநாள் ஓய்வை, அதை மட்டும் அறிவித்திருப்பதற்கு ஆறு காரணங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். (ஆறில் ஒன்று இல்லாவிட்டால் ஆறுமே)
1.அண்மைக்காலத் தொடர்ச்சியான தளம்பல்கள் & தடுமாற்றங்கள்.
உலகக்கிண்ணத்தின் பின்னர் இருந்தே சச்சின் தடுமாறி வருகிறார். ஒருநாள் சராசரியாக 44.83 ஐக் கொண்டுள்ள சச்சின் உலகக் கிண்ணத்தின் பின்னர் விளையாடியுள்ள பத்து ஒருநாள் போட்டிகளில் கொண்டுள்ள சராசரி 31 மட்டுமே. தனது நூறாவது சர்வதேச சதமாக எடுத்த ஒருநாள் சதம் தான் 21 மாதங்களில் சச்சின் பெற்றுள்ள ஒரே சதம்.
2.2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்காக இளைஞர்களுக்கான இடத்தை வழங்க
இந்திய அணியில் நுழைவதற்கு மிகச் சிறந்த பெறுபேறுகளுடன் & ஆற்றல்களுடன் காத்துள்ள இளைய வீரர்கள் பலரை வைத்து அடுத்த உலகக் கிண்ணத்துக்கான அணியைக் கட்டியெழுப்பும் முயற்சியின் குறுக்கே தான் இருக்க கூடாது என்று சச்சின் நினைத்திருக்கலாம்.
3.ஆஸ்திரேலியாவில் தோனி கடைக்கொண்ட சுழற்சித் தெரிவு
சச்சின், சேவாக், கம்பீர் ஆகிய மூன்று 'மூத்த' வீரர்களையும் ஒரு சேர அணியில் விளையாட வைக்க முடியாது; இதனால் களத்தில் இருபது ஓட்டங்களாவது அநியாயமாகப் போகிறது என்று தோனி பகிரங்கமாகத் தெரிவித்த கருத்தும் அதைத் தொடர்ந்து மாறி மாறி வழங்கப்பட்ட ஓய்வும் சச்சினை யோசிக்க வைத்திருக்கலாம்.
(ஆனால் இந்த சுழற்சியை சச்சினும் ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது)
4.வயது, களத்தடுப்பு & டெஸ்ட்
நாற்பது வயதாகுவதால் இயல்பாகவே களத்தடுப்பில் சச்சின் கொஞ்சம் மந்தமாகியிருக்கிறார். இதனால் டெஸ்ட் போட்டிகளில் சமாளித்தாலும் ஒருநாள் போட்டிகளில் இளையவர்களுக்குத் தான் ஈடுகொடுக்க முடியாது என நினைத்திருக்கலாம்.
டெஸ்ட் போட்டிகளில் இன்னும் கொஞ்சம் நின்று பிடிக்கலாம் என சச்சின் நினைத்தாலும், அண்மைக்காலத்தில் அவர் தடுமாறியதைப் பார்க்கையில், ஐந்து நாள் போட்டிகளை விட, ஐம்பது ஓவர்களில் சச்சின் கொஞ்சமாவது அதிகம் செய்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
5.ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிக் குழப்பம் & கோளியின் எதிர்காலம்
சச்சின் தொடர்ந்து இருப்பதால் யாரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்புவது என்ற குழப்பம் நீடிக்கிறது. அத்துடன் சேவாக், கம்பீரோடு சச்சினும் விளையாடினால் முதல் மூன்று இடங்களும் நிரப்பப்படுவதால் இந்த வருடத்தில் சர்வதேச ஓட்டங்களை அதிகமாகக் குவித்த, அருமையான Form இலுள்ள விராட் கோளி நான்காம் இலக்கத்துக்கு தள்ளப்படுகிறார். இதனால் கோளிக்கு மட்டுமில்லாமல் இந்தியாவுக்குமே நஷ்டம்.
இதை 23 வருடங்களாக இந்திய அணியை உணர்ந்து, மிக அனுபவஸ்தராக விளங்கும் சச்சின் உணர்ந்திருக்கலாம்.
6. தேர்வாளர்கள் சச்சினைத் தெரிவு செய்யவில்லை என்பதைப் போட்டுடைத்திருக்கலாம்
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீக்காந்த் தலைமையிலான குழுவினருக்கு இல்லாத தைரியம் சந்தீப் பாட்டில் குழுவினருக்கு இருந்தாலும் சச்சினை நீக்கும் அளவுக்கு இருக்குமா என்ற கேள்வி எழுந்தாலும், அவரது மோசமான form உம் வயதும், இளம் வீரர்களின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்களும், பாகிஸ்தான் தொடரை(யாவது) வென்றாகவேண்டும் என்ற காரணங்கள் முக்கியமானதாக இருந்திருத்தல் வேண்டும்.
இதனால் அணியை விட்டு சச்சினைத் தூக்கியாச்சு என்ற அவப்பெயர் இந்தியாவின் மிகச் சிறந்த சாதனை நாயகனுக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒரு மரியாதை நிமித்தம் (ஆஸ்திரேலிய பாணியில்) சச்சினை முதலில் அறிவிக்கச் செய்திருக்கலாம்.
(அப்படி இருந்தாலும் நம்ம ஊரு சனத் ஜெயசூரிய எம்.பி மாதிரி விடைபெற என ஒரே ஒரு போட்டியைக் கேட்டுப் பெற்று விடைபெற்றிருக்கலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை)
அவர் அறிவித்த சில நிமிடங்களில் இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் ஒய்வு பெறமாட்டார்களா என்று அழுத்தம் வழங்கப்பட்டு தங்கள் ஓய்வை அறிவித்த கபில்தேவ், கங்குலி போன்ற சிலர் ஞாபகம் வருகிறார்கள்.
இன்னும் கொஞ்சம் விளையாட மாட்டார்களா என்று எதிர்பார்த்து ஏங்கவைத்து விலகிச் சென்ற கவாஸ்கர், கும்ப்ளே, டிராவிட் போன்றோரும் நினைவுக்கு வருவார்கள்.
சச்சின் தனது டெஸ்ட் ஓய்வை அறிவிக்கையில் இதில் எந்த ரகத்தில் வரப்போகிறார் என்ற கேள்வியும் எழுகிறது.
எம்மில் சச்சினை ரசிகராக, பக்தராக ரசிக்கும் பலருக்கு சச்சின் ஒய்வு கிரிக்கெட்டிலே ஒரு வெறுமைத் தோற்றத்தைத் தரலாம்.. (எனக்கு முரளியின் ஒய்வு தந்த உணர்வு போல)
ஆனால் அவரது ரசிகராக இல்லாத பலருக்கும் கூட, சச்சின் ஒரு கிரிக்கெட்டின் கால அடையாளம்.
1989க்கு முன்னரே கிரிக்கெட்டைப் பார்க்க, ரசிக்க ஆரம்பித்தாலும் எனக்கு வசிம் அக்ரம், முரளிதரன், ஸ்டீவ் வோ, பிரையன் லாரா, ஷேன் வோர்ன், சச்சின், சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா முதலானோர் தான் அந்தந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட்டை ஆண்டு எனக்கு கிரிக்கெட்டை ஊட்டியவர்கள்.
இப்போது இறுதியாக சச்சினும் விடைபெறுகிறார்.
ஒருநாள் போட்டிகள் சிவப்புப் பந்து, வெள்ளை உடைகளில் இருந்து இப்போதைய Twenty 20 போட்டிகளால் மாறிவரும் ஒருநாள் போட்டிகள் வரை மாறாமல் இருந்த ஒரே விடயம் சச்சின் தான்....
இனி சச்சின் டெஸ்டில் மட்டும் எனும்போது எங்களுக்கு வயதேறிவிட்டது என்பது மனதில் உறைக்கவில்லையா?
சச்சினின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் எங்கும் அவரது சாதனைகள் பற்றிப் போற்றுவதிலும், அவரது சாதனைகள் பற்றி மீண்டும் நினைவூட்டுவதிலும் இருக்க, முன்னாள் வீரர்கள் ஓய்வை நியாயப்படுத்துவதிலும், சிலர் இப்போது ஏன் என்று அதிர்ச்சிப்பட,
சச்சினின் IPL அணியான மும்பை இந்தியன்சின் ட்விட்டர் கணக்கு @Mipaltan சச்சின் அணிந்த பத்தாம் இலக்க ஜெர்சியை இனி யாருக்கும் வழங்கக்கூடாது என்று ஒரு கோரிக்கையை ட்விட்டரில் ஆரவாரமாக நடத்திக்கொண்டிருகிறது.
#RetireTheJerseyNo10
சச்சின் என்ற சாதனையாளன் 2011 உலகக் கிண்ண வெற்றியுடன் விடை பெற்றிருக்க வேண்டும்.
அது அவருக்கான மிக உச்ச கௌரவமாக இருந்திருக்கும். சொந்த மண்ணில்.. சொந்த மைதானத்தில், அணி முழுதும் அவருக்காகப் பெற்ற கிண்ணம் என்று பரிசளித்த வெற்றி அது.
இல்லாவிட்டால் தான் எந்த அணிக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தாரோ அதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி விடை பெற்றிருக்கவேண்டும்.
இரண்டும் இல்லாமல், இடை நடுவே தடுமாற்றம் & சந்தேகங்களோடு விடை பெறுவது சாதாரண ஒரு கிரிக்கெட் ரசிகனாக எனக்கும் சற்றுக் கவலையே.
சச்சினை ஒய்வு பெறச் சொல்வது பற்றி அண்மைக்காலமாகவே இருந்துவரும் வாதப் பிரதிவாதங்கள் பற்றிய ஒரு கருத்துச் சித்திரம். ட்விட்டரில் இருந்து உருவியது....
கிரிக்கெட்டை எப்படி அங்குலம் அங்குலமாக வாசிக்கத் தெரியுமோ அதைவிடவும் தன்னையும் அதிகமாக வாசிக்கத் தெரிந்த சச்சின் அடுத்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அதுதான் அவருக்கும் உரிய விடைபெறலாக இருக்கும்.
(ஆனால் இப்போதிருக்கும் இந்திய அணியின் நிலையில் இந்தியாவுக்குத் தொடர் வெற்றியைப் பரிசளித்து சச்சினால் செல்ல முடியாது என்பதுவும் உறுதி)
*** நத்தார் கொண்டாடும் நண்பர்களுக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள் ***