December 28, 2016

சன்டா - Santa - காலம் ஓடுது


இத்தனை விஷயம் வாசிக்கும் ஹர்ஷு இன்னுமா வருவார், நல்ல பிள்ளையாக வருடம் முழுவதும் இருந்தால் கடிதம் எழுதிக் கேட்கும் பரிசுகள் தருவார் என்பதை நம்புகிறான் என்பதை நானும் ஆச்சரியத்தோடு தான் நோக்குகிறேன்.

ஒருவேளை, கள்ளப்பயல் எப்படியாவது தான் விரும்பும் பரிசுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நம்புகிற மாதிரி நடித்து எம்மை நம்பவைக்கிறானோ என்றும் சந்தேகம் வருவதுண்டு.

சிலவேளை, "அப்பா தான் எனக்குப் பரிசுகளை Santa போல கொண்டுவந்து தருகிறாரோ? "என்று லவ்சுகியிடம் சந்தேகமாகக் கேட்டவன் , ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் பரிசுகளை தாறுமாறாக ஆராய்வான்.
made in, Labels, Price tag etc.
பிறகு சின்னப்பிள்ளைக்கேயான குணத்தோடு சண்டாவுக்கு நன்றி சொல்லிவிட்டு "அடுத்த வருடம் இன்னும் நல்ல பிள்ளையாக இருந்து இன்னும் நிறைய பரிசுகள் பெறவேண்டும்" என்றுவிட்டு கிடைத்த புத்தகங்களை வாசிக்கவோ, விளையாட்டுப் பொருட்களோடு விளையாடவோ போய்விடுவான்.

மூட நம்பிக்கைகள் அவனை அண்டக்கூடாது என்பதற்காக சின்ன வயதில் இருந்து அவனுக்குப் புரிகின்ற விதத்தில் அநேகமானவற்றுக்கு விளக்கம் சொல்லியே வளர்த்துவருகிறோம். 
எனினும் சமய விஷயங்களில் என்னுடைய வாதங்கள், விளக்கங்களை அவனுக்குள் இப்போதைக்குப் புகுத்தவேண்டாம் என்ற மனைவியின் வேண்டுகோளினால் அவனாக வாசித்து என்னிடம் கேட்டால் ஒழிய எனக்குத் தெரிந்த 'பகுத்தறிவை' அவனுக்கு புரியச் செய்யப்போவதில்லை.

அவனும் நிறைய வாசிக்கிறான்.
ஆங்கிலத்தில் Wimpy Kid முதல் தமிழில் ஆதிரையின் சில பக்கங்கள் என்று ஆழமான வாசிப்பின் முதற்கட்டத்தில் இருக்கிறான்.
அடுத்து பொன்னியின் செல்வனையும் அறிமுகப்படுத்தவிருக்கிறேன்.

அப்பாவும் அம்மாவும் தான் தனக்கான பரிசுகளை வழங்கிய Santa Claus என்பதை அவன் இந்த வருடமே புரிந்துகொள்வான் என்று நினைக்கிறேன். 
அவனது மழலைப் பராயத்தின் கற்பனை மகிழ்ச்சிகளில் ஒன்று அத்தோடு உடைந்துவிடும் என்று எண்ணும்போது மனதில் அடக்கமுடியாத ஒரு சோகம்.

நேற்றுக்கூட அவன் கடிதத்தில் எழுதியிருந்த பரிசுகளை கண்கள் அகல விரிய விரிய அவன் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்துக்கொண்டே பார்த்தபோதும், 'Santa எழுதிய' கடிதத்தை எனக்கும் மனைவிக்கும் சந்தோஷத் தொனியில் வாசித்துப் பெருமைப்பட்டபோதும், Santaவின் உண்மையான போட்டோ ஒன்று வேண்டும் என்று அவன் கேட்டபடி கிடைத்த புகைப்படத்தை (Google ஆண்டவர் துணையிருக்க வேறு யார் வேண்டும் எனக்கு ;) ) - 
"அட நான் கேட்டபடி அனுப்பிட்டாரே.. நம்பாமல் இருக்கிற என் friends ற்கு காட்டவேண்டும்" என்று பத்திரப்படுத்தியபோதும் -
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வரும் பரவசம் அது.

ஒவ்வொரு வருடமும் 'சன்டா எழுதும்' அந்தக் கடிதத்தில் ஹர்ஷுவைப் பாராட்டக்கூடிய விடயங்களைக் குறிப்பிட்டு அவனை ஊக்குவிப்பதோடு, அவன் செய்கின்ற குழப்படிகளையும் சுட்டிக்காட்டி, அவன் செய்யவேண்டிய விடயங்களையும் குறிப்பிட்டு ஒரு அறிக்கையிடலாக தொகுப்பதுண்டு.
தனது அந்த வருடத்துக்கான தேர்ச்சி அறிக்கையாகக் கருதி மிகவும் ஆர்வத்துடன் வாசிப்பான்.

உண்மையை அவன் விளங்கிக்கொள்ளும்போது அவன் அடையப்போவது என்னவிதமான உணர்வு என்பது தான் எனக்கு இருக்கும் குழப்பம்.
அப்பா தனக்காகத் தேடித் திரிந்து தான் கேட்டவற்றையே வாங்கித் தந்தார் என்று பெருமைப்படுவானா? இல்லை  இத்தனை காலமாக வட துருவத்தில் இருந்து வருகிறார் என்று நம்பியிருந்தது கடிதம் போட்டு முட்டாளாக்கிட்டானே என்று நொந்துபோவானா?

தங்கைக்கும் சேர்த்து பரிசுகள் வேண்டும் என்று கேட்ட பாசமிகு அண்ணன், அப்பாவுக்கு (நான்) தன்னோடு சேர்ந்து செலவழிக்க போதுமான நாட்கள் வேண்டும் என்று கேட்ட அந்த அப்பாவிக் குழந்தைத்தனம் கட்டியணைத்துக் கொஞ்சத் தூண்டியது.

​குழந்தைத் தனத்தின் இறுதிக் கட்டத்திலிருந்து என் செல்லக்கண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வஞ்சக உலகத்தில் தன்னைத் தான் வழி நடத்தும் வயது வந்தவனாக மாறும் பருவத்தை கேட்கிறான் என்பதே மனதில் சுருக்கென்ற ஒரு வேதனை.
வளர்ந்துவிடாமலே இவன் இருந்துவிடக்கூடாதா?
எந்தவொரு கவலையுமில்லாமல், வகுப்புகள், பயிற்சிகள், படிக்கவேண்டும், நேரத்துக்கு எழவேண்டும் என்ற கவலையில்லாமல், எந்தவொரு tensionஉம் இல்லாத அந்த குட்டி ஹர்ஷு தான் எனக்கு வேண்டும்.


அழகான மட்டுமில்லை, மகிழ்ச்சியான ஹர்ஷு அவன்.

இப்போது போதாக்குறைக்கு எங்கள் குட்டி இளவரசி வேறு வேகவேகமாக வளர்கிறாள். பேச ஆரம்பிக்கிறாள்.
அடுத்த வருடங்களில் ஹர்ஷு தன்னை பரபரப்பான கணங்களில் தொலைக்க, இவள் சன்டாவுக்கு கடிதம் எழுதப்போகிறாள்.

​காலம் ஓடுது..
வளராமலே இருக்கமாட்டீர்களா என் செல்வங்களே...

April 21, 2016

லியொனல் மெஸ்ஸி 500 - மெஸ்ஸியின் மகுடத்தில் இன்னொரு வைரம்

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படும் - இந்த வருடம் பெற்ற தங்கப் பந்து விருது மூலமாக அதை உறுதிப்படுத்திக்கொண்ட லியொனல் மெஸ்ஸி அவரது ரசிகர்கள் மட்டுமன்றி, கால்பந்து ரசிகர்கள் அனைவருமே எதிர்பார்த்திருந்த ஒரு மைல்கல் சாதனையைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை எட்டியிருக்கிறார்.

கால்பந்துப் போட்டிகளில் தனது 500வது கோல் பெற்ற சாதனையே அதுவாகும்.

ஆர்ஜென்டின கால்பந்தாட்ட அணியின் தலைவரும், உலகப் புகழ்பெற்ற நட்சத்திர கோல் குவிக்கும் எந்திரமாக விளங்குகிற  லியொனல் மெஸ்ஸி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கால்பந்தாட்டக் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.ஞாயிற்றுக்கிழமை  நடந்த லா லீகா தொடரின் லீக் ஆட்டத்தில் வெலென்சியா மற்றும் பார்சிலோனா அணிகள் மோதின. 

இந்தப் போட்டியிலேயே மெஸ்ஸி தன்னுடைய 500வது கோலை அடித்திருந்தார்.

 அண்மைய சில போட்டிகளில் பார்சிலோனா கழகம் சற்றே சறுக்கிவரும் அதேநேரம், மெஸ்ஸியும் கோல்கள் பெறத் தவறியிருந்தார்.

(இந்தத் தோல்விகளில் பார்சிலோனா தொடர்ச்சியாக 39  போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்த சாதனையை நிறுத்திய பரம வைரிகள் ரியல் மாட்ரிட்டிடம் கண்ட தோல்வியும், சம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் அட்லெடிக்கொ மாட்ரிட் அணியிடம் கண்ட அதிர்ச்சித் தோல்வியும் அடங்குகின்றன)

*எனினும் நேற்று பார்சிலோனா பெற்றுள்ள 8-0 என்ற வெற்றி மீண்டும் ஒரு புதிய எதிர்பார்ப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மெஸ்ஸி நேற்றும் ஒரு கோல் அடித்ததோடு, இரண்டு கோல்களுக்கு உதவியும் வழங்கியிருந்தார்.

இந்தப் போட்டியிலும் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டம் மெஸ்ஸிக்கு அவரது சாதனைத் தடத்தில் ஒரு மைல்கல்லைக் கொடுத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி 63ஆவது நிமிடத்தில் போட்ட கோலின் மூலம் சர்வதேச மற்றும் கழகப் போட்டிகளில் 500 கோல்களைப் போட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.இது மெஸ்ஸியின் 632வது போட்டியாகும்.

சர்வதேச மற்றும் கழகப் போட்டிகளில் 500 கோல்களுக்கு மேல் பெற்றவர்கள் வரிசையில் 27வது வீரராக இணைந்துள்ளார் மெஸ்ஸி.


ஆர்ஜென்டின வீரர்களில் இவருக்கு முதல் டீ ஸ்டேபனோ மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

சமகாலத்து வீரர்களில் மெஸ்ஸியின் போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே (557) மெஸ்ஸியின் இந்த சாதனையை நிகர்த்திருக்கிறார். எனினும் மெஸ்ஸியை விட மிக அதிகமான போட்டிகளில் ரொனால்டோ (791) விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடக்கூடியது.வருகின்ற ஜூன் மாதம் தனது 29 வயதை எட்டும் மெஸ்ஸி, பார்சிலோனா கழக அணிக்காக 450 கோல்களையும், ஆர்ஜன்டின அணிக்காக 50 கோல்களையும் போட்டிருக்கிறார். 

அவர் அடித்த 500 கோல்களில் 406 கோல்கள் இடது காலால் போட்டப்பட்ட கோல்களாகும்.

(இடது கால் பாவனையாளர் இவர் என்பதால் கிட்டத்தட்ட 80 சதவீதம் இது)

 மிகுதி கோல்களில் 71 கோல்கள் வலது காலாலும் 21 கோல்கள் தலையால் முட்டித் தள்ளியும் 2 கோல்களை  இதர வகையிலும் அடித்துள்ளார்.

அவர் அடித்த 500 கோல்களை அடித்த முறையை அவதானித்தால் அவற்றில் 25 கோல்கள் நேரடி ப்ரீ கிக் (Direct Free Kick) மூலமும், 64 கோல்களை பெனால்டி மூலமும் 411 கோல்கள் நேரடி கோல்களாக (Open Play) போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பணத்துக்காகவும் வசதிகளுக்காகவும் பல்வேறு கழக அணிகளுக்காக காலாகாலம் வீரர்கள் மாறி மாறி விளையாடிவரும் காலகட்டத்தில் மெஸ்ஸி தனது நாட்டுக்காகவும், கழகத்தில் பார்சிலோனா என்ற ஒன்றுக்காகவும் மட்டுமே விளையாடி வருவது பலரால் பாராட்டக்கூடிய ஒரு விடயமாக இருக்கிறது.

எனினும் மெஸ்ஸி அடிக்கடி சந்திக்கும் ஒரு விமர்சனம், ஆர்ஜென்டீன அணியை விட பார்சிலோனா அணிக்காகவே அதிக திறமை காட்டுகிறார் என்று.

மெஸ்ஸி கோல்கள் பெற்றுள்ள சதவீத பெறுமானங்களும் இதைக் காட்டினாலும், அவருக்கு ஒத்தாசையாக விளையாடும் ஏனைய வீரர்களிலும் தங்கியுள்ளது என்பது நிச்சயம்.
டனி அல்வேஸ் இவருக்கு அதிகமான கோல்களுக்கு பந்துகளைப் பரிமாறியுள்ளார்.

இதேவேளை மெஸ்ஸி 201 கோல்களுக்கு உதவியும் (assist) உள்ளார் என்பதும் கவனிக்கவேண்டிய ஒரு விடயமாகும்.

இதுவரை ஆர்ஜென்டீன அணிக்கு உலகக்கிண்ணம்,  அமெரிக்கக் கிண்ணம் ஆகியவற்றை வென்று கொடுக்காத ஏக்கம் இன்னமும் இருக்கும் லியோ, இந்தப் பருவகாலத்தில் பார்சிலோனா அணிக்கு எஞ்சியுள்ள 5 போட்டிகளில் இன்னும் சில கோல்களைப் பெற்றுக்கொடுத்து லா லீகா பட்டத்தை வென்று கொடுப்பாரா என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

வரைபடங்கள் - BBC SPORT 

தமிழ் மிரருக்கு எழுதிய கட்டுரை.

மெஸ்ஸி இதுவரை பெற்றுள்ள 500 கோல்களும் ஒரே காணொளியில்..

Lionel Messi ● ALL 500 Career Goals in ONE SINGLE video ● 2004-2016April 06, 2016

6,6,6,6 - சமியின் சம்பியன்கள் - சரித்திரம் படைத்த கரீபியன் வீரர்கள் #WT20

ஒரு புயல் அடித்து ஓய்ந்தது போலிருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒரு மாத காலமாக சுழற்றியடித்த உலக T20 புயல், மேற்கிந்தியத் தீவுகள் பக்கமாகக் கரை ஒதுங்கியவுடன் தான் ரசிகர்கள் வேறுவேறு வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.


 ஆனால்,இன்னமுமே மேற்கிந்தியத் தீவுகளின் விதவிதமான வெற்றிக் கொண்டாட்டங்கள், அந்த வலி சுமந்த வெற்றியின் பின்னர் அணித் தலைவர் டரன் சமியின் உரை + பேட்டி, மார்லன் சாமுவேல்ஸின் திமிரான 'பழிவாங்கும்' வார்த்தைகளும் செய்கைகளும் அடங்கிய பதிலடி என்று பரபரப்புக்களுக்கும் செய்திகளுக்கும், பாராட்டுக்களுக்கும் குறைவில்லை.

அதிலே மிக முக்கியமானதாக நான் கருதுவது, இத்தனை நாளாக மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வீரர்களைத் தீண்டத் தகாதவர்கள் போல நடத்திவந்த, வீரர்களது சம்பளக் கோரிக்கைகள், ஒப்பந்தம் பற்றிய மனக்குமுறல்கள் பற்றிக் கவனிக்காத மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் சபை, இந்த வெற்றியை அடுத்து (குறிப்பாக வெற்றி மேடையில் சமியின் பொங்குதலுக்குப் பிறகு) அணியோடு பேசுவதற்கும், கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்கும் இணங்கியுள்ளது.

டரன் சமியின் சொந்த நாடான செயின்ட்.லூசியாவில் உள்ள பீசஜோர் (Beausejour) மைதானம் இப்போது டரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம் எனப் பெயரிடப்படுள்ளது.

1970கள், 80களில் எழுந்து நின்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் போல இன்னொரு அணி கரீபியன் பக்கமிருந்து வராத என்று ஏங்கிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மூன்று கிண்ணங்களை ஒரே மாதத்தில் வென்று சிறிய நம்பிக்கைக் கீற்றை வழங்கியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.

எனினும் சமியின் T 20 சம்பியன்கள் போல இதே வலிமையையும் போராட்டகுணமும் வெற்றிக்கான தாகமும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளிடமும் போய்ச் சேருமா என்பது கேள்விக்குரிய ஒரு விஷயமே.
டரன் சமியிடம் இருந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தலைமைப் பதவிகள் பறிக்கப்பட்ட நேரமே ஒற்றுமையாகிக் கட்டமைத்து வந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி சிதைந்துபோனது.


சமி எப்போதும் எனக்குப் பிடித்த வீரர்களில் ஒருவர்.
இவரது அணிக்கான அர்ப்பணிப்பும், எல்லா வீரர்களையும் சேர்த்து வழிநடத்தும் இயல்பும்,எம்மைப் போன்ற ஊடகவியலாளரோடு சகஜமாக பழகும் விதமும் இவர் மீது மதிப்பை உயர்த்தியுள்ளது.
அடிக்கடி இவை பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால், கடந்த தசாப்த காலமாகவே முறுகிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் சபையும், டெஸ்ட் போட்டிகளை விட IPL மற்றும் இதர பணம் கொழிக்கும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டும் T 20 specialistகளும் மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் தருபவர்களாக இல்லை.

--------------

'சிக்சர்கள் சம்பியன்கள் !! மிடுக்கோடு எழுந்த மேற்கிந்தியத் தீவுகள்' என்ற தலைப்பில் தமிழ் மிரர் + தமிழ் விஸ்டன் ஆகியவற்றுக்கு எழுதிய கட்டுரையை மேலதிக சேர்க்கைகள், புதிய இணைப்புக்கள் + புதிய விடயங்களுடன் சேர்த்து தரும் இடுகை இது.

உலகக்கிண்ணத்தை (50 ஓவர்கள்) முதன்முறையாக இரண்டு தடவை தனதாக்கிய சாதனையை நிகழ்த்திய அதே மேற்கிந்தியத் தீவுகள் உலக T20 கிண்ணத்தையும் இரண்டு தடவைகள் வென்ற முதலாவது அணி என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டது.

இந்த வெற்றி இன்னொரு வகையில் மேலும் சரித்திரப் பிரசித்தி பெற்றதாக மாறியுள்ளது.
19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணம், இதற்கு முன்னதாக நேற்று பிற்பகல் நடந்த மகளிர் உலக  T20 கிண்ணம் இவற்றோடு மூன்றாவது 'உலகக்கிண்ணம்' இரு மாத கால இடைவெளியில் மேற்கிந்தியத் தீவுகளின் வசமாகியுள்ளது.

ஆண்களின் அணியும் பெண்களின் அணியும் ஒரே நேரத்தில் உலக T20 கிண்ணத்தைத் தம் வசம் வைத்துள்ள பெருமையும் இப்போது இந்தக் கரீபியன் கலக்கல் வீர, வீராங்கனைகளிடம்.

இவர்களின் கோலாகலக் கொண்டாட்டங்கள் நேற்று, இன்று அல்ல இன்னும் நான்கு வருடங்களுக்கு தொடர்ந்து இருக்கப்போகிறது.
அடுத்த உலக T20  இனி 2019இல் தான்.

எந்த அணி வென்றாலும் இந்த அணி(கள்) தங்கள் வெற்றிகளைக் கொண்டாடும் கலகலப்பான குதூகலம் வேறெங்கும் பார்க்க முடியாதது.

2012 உலக T20 வென்றபோது கிறிஸ் கெயில் ஆடிய கங்கனம் ஆட்டம் போல, இந்த உலக T20யை ஆட்டிப்படைத்து நேற்றைய வெற்றிக்குப் பின் ரசிகர்களின் வெற்றி கீதமாக மாறியிருப்பது ட்வெயின் ப்ராவோ  உருவாக்கி, பாடி வந்திருக்கும் 'Champions' பாடலும், பாடலுக்கான துள்ளாட்ட அசைவுகளும் இப்போது ரசிகர்களின் தேசிய கீதமாகியிருக்கின்றன.

ஒன்றல்ல, இரண்டல்ல தொடர்ச்சியாக நான்கு சிக்சர்கள்..
(இதுவரை T20 சர்வதேசப் போட்டிகளில் இவ்வாறு நான்கு சிக்சர்கள் அடுத்தடுத்துப் பெறப்பட்ட 4வது சந்தர்ப்பம் இது.எனினும் கடைசி ஓவரில் இதுவே முதல் தடவை)
கடைசிப் பந்தில் இந்தியாவின் சேட்டன் ஷர்மாவின் பந்தில் ஆறு ஓட்டம் அடித்து கிண்ணம் வென்ற ஜாவெட் மியாண்டாடை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ​அசுர சிக்சர் அடிகள் மூலமாக சாதனை நிகழ்த்திப் போயிருக்கிறார் கார்லோஸ் ப்ரத்வெயிட்.

அதிக ஓட்டங்கள் துரத்திப் பெறப்பட்ட உலக T20 இறுதிப்போட்டியில் துடுப்பு, பந்து இரண்டுக்கும் இடையிலான ஆரோக்கியமான போட்டி நிலவியிருந்தது.

ஆனாலும் இறுதியாக அரையிறுதியைப் போலவே மேற்கிந்தியத் தீவுகளின் அசுர பலம் ஜெயித்திருந்தது.


எந்தப் பந்தையும் அடித்து நொறுக்கலாம் என்ற அவர்களது தன்னம்பிக்கை காரணமாக அவர்கள் நல்ல பந்துகளுக்கு தேவையற்று அடிக்கச் செல்லாமல், நின்று நிதானமாக விளையாடக்கூடியதாகவும், விக்கெட்டுக்கள் போனால் பொறுமையாக இணைப்பாட்டம் புரிந்து அணியைக் கட்டியெழுப்பக் கூடியதாகவும் இருக்கிறது.


கெயில் பற்றியே எல்லா ஊடகங்களும் விமர்சகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை முன்னிறுத்தி அவர் அடித்தால் தான் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் என்று ஒரு பிரமையை ஏற்படுத்தி இருந்தனர்.
(எனினும் முக்கிய போட்டிகளில் சறுக்கிவிடும் இயல்புடையவர் இவர் என்று நான் அடிக்கடி சொல்லி வந்திருந்தேன்)


கெயில் அரையிறுதி, இறுதி ஆகிய இரு முக்கிய போட்டிகளிலும் சறுக்கி விட, ஒவ்வொரு போட்டியிலும் புதிது புதிதாய் வெற்றியாளர்களும் மேற்கிந்தியத் தீவுகளின் கதாநாயகர்களும் உருவாகினார்கள்.

இதனால் தான் இறுதிப் போட்டிக்கு முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளின் தலைவர் டரன் சமி தம்மிடம் 15 வெற்றியாளர்கள் இருப்பதாகச் சொன்னார்.


இறுதிப் போட்டியிலும் அவ்வாறு தான்..

நான்கு  முக்கிய நாயகர்கள் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கான அடிகோலியவர்கள்.
பத்ரி, சாமுவேல்ஸ், ப்ராவோ + ப்ரத்வெயிட்

அரையிறுதியில் இந்தியாவுக்கு விழுந்த மரண அடியைப் பார்த்தவர்கள் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை மேற்கிந்தியத் தீவுகள் இலகுவாகவே வெல்லும் என்றே எதிர்பார்த்திருந்தனர்.


முதல் பந்திலேயே பத்ரியின் சுழல் இங்கிலாந்தின் அரையிறுதி ஹீரோ ஜேசன் றோயைப் பறித்தெடுக்க, 

 முதல் 2 விக்கெட்டுக்கள் 8 ஓட்டங்களுக்கு சரிந்தது.


இங்கிலாந்துக்கு இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய ஜோ ரூட் இடையிடையே கிடைத்த இணைப்பாட்ட வாய்ப்புக்களை உருவாக்கி நல்லதொரு ஸ்திர நிலையை நோக்கி இங்கிலாந்தை அழைத்துச் செல்ல முனைந்துகொண்டிருந்தார்.


எனினும் பத்ரியின் சுழல் இங்கிலாந்தை உலுப்பிக்கொண்டெ  இருந்தது.

இந்த உலக T20 தொடரில் ஓட்டங்களைக் குறைவாகக் கொடுத்து எதிரணிகளைத் தடுமாற வைத்த சிறப்பான பந்துவீச்சாளர்களில் ஒருவர் தற்போது 


T20 தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் உள்ள சாமுவேல் பத்ரி.


பத்ரியின் கூக்ளியில் அணித் தலைவர் மோர்கன் மீண்டும் ஒரு குறைந்த ஓட்டப் பெறுதியுடன் ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் அதிரடி வீரர் பட்லர் சேர்ந்துகொண்டார்.

பட்லரின் 3 சிக்சர்கள் இங்கிலாந்துக்கு தெம்பு கொடுத்து, ஓட்ட வேகத்தையும் உயர்த்திய நேரம் தான், ஒரு B தனது நான்கு ஓவர்களை முடிக்க அடுத்த இரு Bகள் (ப்ராவோ, ப்ரத்வெயிட் ) தங்கள் விக்கெட் எடுப்பு வித்தைகளைக் காட்ட ஆரம்பித்தனர்.


ரூட் அரைச் சதத்தோடு ஆட்டமிழந்த பிறகும் கூட, சகலதுறை வீரர் டேவிட் வில்லி தன்னுடைய அடித்தாடும் ஆற்றல் மூலமாக போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றைப் பெறச் செய்திருந்தார்.

20 ஓவர்கள் முடியும் நேரம் இங்கிலாந்து அகல விக்கெட்டுக்களையும் இழக்காமல் இருந்தது இங்கிலாந்துக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பது நிச்சயம்.

தன்னை ஒரு பந்துவீச்சாளராகப் பயன்படுத்துவதை ஏனோ மறந்துவருகிறார் என்று நான் குறைப்பட்ட தலைவர் சமி, சுலைமான் பென்னுக்கு விழுந்த அடிகள் காரணமாக (அந்த வேளையில் எனது ட்வீட்டும் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது) ஒரு ஓவர் பந்துவீசவேண்டி ஏற்பட்டது. 
எனினும் 12 ஓட்டங்களைக் கொடுத்ததுடன் ஏமாற்றமாகிப்போனது,எனக்கும் சேர்த்து.


இதற்கு முந்தைய 7 போட்டிகளில் மொத்தமாக இரண்டே விக்கெட்டுக்களை எடுத்திருந்த கார்லோஸ் ப்ரத்வெயிட் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசி வீழ்த்திய 3 விக்கெட்டுக்கள் முக்கியமானவை.


அவரது பின்னைய துடுப்பாட்ட சாகசங்களும் சேர்ந்து இவரையும் இறுதிப் போட்டியின் நாயகனாக விருது வழங்கியிருக்கலாம் என்பது நான் எதிர்பார்த்த விடயம்.


ஆனால் மார்லன் சாமுவேல்ஸ் 2012இல் கொழும்பில், இலங்கைக்கு எதிராக இறுதிப் போட்டியில் நிகழ்த்திய அதே சாகசங்களை, அணியின் துடுப்பாட்டத்தைத் தாங்கி இறுதிவரை கொண்டு சென்றது உண்மையில் எல்லோராலும் முடியாதது.

எதிர்பார்க்கப்பட்ட கெயில், அரையிறுதி ஹீரோக்களில் ஒருவரான சார்ல்ஸ் ஆகியோரை ஜோ ரூட் ஆச்சரியப்படுத்திய இரண்டாவது ஓவர் பந்துவீச்சில் பறித்தெடுத்த இங்கிலாந்து போட்டியின் போக்கைத் திசை மாற்றப்போகிறதோ என்று திகைத்திருக்க, 


5/2 என்றிருந்த நிலை, 11/3 என மாறியது.

இங்கிலாந்தின் அரையிறுதி ஹீரோ ஜேசன் ரோய் போலவே, மேற்கிந்தியத் தீவுகளின் ஹீரோ லெண்டில் சிமன்சும் பூஜ்ஜியத்துடனே ஆட்டமிழந்தார்.

இதோ இங்கிலாந்து கிண்ணம் வெல்கிறது, மேற்கிந்தியக் கதை முடிந்தது என்றிருந்த ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து காத்திருந்தது.


சாமுவேல்ஸ் - ப்ராவோ  (ப்ராவோ சகலதுறை வீரராக மீண்டும் கலக்கிய போட்டி இது. 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய பிறகு அவரது ஓட்டங்களும் முக்கியமானவையாக அமைந்தன) ஆகியோரின் பொறுமையான இணைப்பாட்டம், கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து, இறுதியாக 10 ஓவர்களில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தபோது, அடுத்துக் காத்திருக்கும் அதிரடி வீரர்கள் மூலமாக மேற்கிந்தியத் தீவுகள் வென்று விடும் என்ற நம்பிக்கை பிறந்தது.

எனினும் அடுத்த அரையிறுதிக் கதாநாயகன் ரசலும் விரைவாகவே ஆட்டமிழந்து ஏமாற்றிவிட, தலைவர் சமி களம் புகுந்தார்.
அவரும் 2 ஓட்டங்கள்.

ஆனால் வற்றாத ஊற்றுப் போல அடித்தாடக்கூடிய அசுரர்களை கீழே கீழே வைத்திருந்த மேற்கிந்தியத் தீவுகளின் நேற்றைய ரகசிய ஆயுதம் கார்லோஸ் ப்ரத்வெயிட் 8 ஆம் இலக்கத்தில் ஆட வந்த நேரம், போட்டி இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு உரியதாகவிருந்தது.

தற்செயலாக இவர்களில் ஒருவர் ஆட்டமிழந்திருந்தாலும் நேர்த்தியாக ஆடக்கூடிய தினேஷ் ராம்டின் இன்னமும் இருந்திருந்தார்.

விக்கெட்டுக்களை வீழ்த்திக்கொண்டிருந்த வில்லியைத் தாண்டி, ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ஏனைய களத்தடுப்பாளரின் சாகசங்கள் தாண்டி (இரு பிடிகள் தவறவிடப்பட்டதும் இங்கே கவனிக்கத் தக்கது) ஒரு பந்துக்கு இரண்டு ஓட்டங்கள் என்று இருந்த சவால், மேலும் இறுக ஆரம்பித்தது.

ஆனால், சாமுவேல்ஸ் ஒரு பக்கம் நங்கூரம் பாய்ச்சியிருந்தார்.

அரையிறுதியில் தோனி பந்துவீச்சு மாற்றங்களில் செய்த தவறுகள் எதையும் விடாத ஒயின் மோர்கனின் கடைசி ஓவர் தெரிவு பென்  ஸ்டோக்ஸ்.

இலங்கைக்கு எதிரான போட்டியில், மத்தியூஸ் துடுப்பாடிய வேளையில் 15 ஓட்டங்களில் 4 ஐ மட்டுமே கொடுத்து அணியைக் காப்பாற்றிய ஸ்டோக்ஸ்சின் சாதுரியமான பந்துவீச்சில் 19 ஓட்டங்களைப் பெறுவதென்பது எவருக்கும் சாத்தியமே இல்லை என்று மோர்கன் நினைத்ததில் தப்பில்லைத் தான்.

ஆனால் நடந்தது என்னவோ யாரும் நம்ப முடியாதது.
மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளின் அசுர பலம் ஜெயித்தது.

ஓரிரண்டு சிக்சர் அடிக்கவே தடுமாறும் பலர் இருக்க, ப்ரத்வெயிட் 4 சிக்ஸர்களை அடுத்தடுத்து விளாசி வென்று கொடுத்தார்.
(2010 உலக T20 தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மலின் பந்துவீச்சில் இறுதி ஓவரில் அடுத்தடுத்து மிஸ்டர்.கிரிக்கெட் மைக்கேல் ஹசி விளாசிய மூன்று சிக்சர்களை முந்தியது இந்த மரண அடி)

ஆஸ்திரேலிய வழிப்பறி - பரிதாப பாகிஸ்தான்


எனினும் ஸ்டோக்ஸ் வீசிய பந்துகள் எவையும் மோசமானவை அல்ல.
அருமையான பந்துகளே.
ஆனால் ப்ரத்வெயிட்டின் அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்கியிருந்தன.

கிண்ணம் மேற்கிந்தியத் தீவுகள் வசமாகியிருந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் சாமுவேல்ஸ் தனக்குக் கிடைத்த வாய்ப்பில் தன்னை தொடர்ந்து விமர்சித்த ஷேன் வோர்னையும், தன்னுடன் வார்த்தைகளால் மோதிய  ஸ்டோக்சையும் பதம் பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்.
ஷேன் வோர்ன் உடனான அவரது 3 வருட கால மோதல்  அரையிறுதியில் சாமுவேல்ஸ் சொதப்பியதன் காரணமாக ஷேன் வோர்ன் அவரை அணியை விட்டு நீக்குமாறு கூற, அதை மனதில் வைத்துக்கொண்ட சாமுவேல்ஸ் தான் வென்ற போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை ஷேன் வோர்னுக்கு 'அர்ப்பணிப்பதாக' சொல்லி பழியைத் தீர்த்துக்கொண்டார்.


ஆனாலும், ஊடகவியாளர் சந்திப்பில் கால்களை மேசை மேலே தூக்கி வைத்து யாரையும் சற்றும் மதிக்காமல் ஒரு திமிர்த் தோரணையோடு சாமுவேல்ஸ் வழங்கிய பேட்டி கண்டிக்கப்படவேண்டியது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை சாமுவேல்ஸ் வென்ற பிறகு மேலாடையைக் கழற்றி இங்கிலாந்து அணி வீரர்கள் பக்கம் சென்று வசவு வார்த்தைகளுடன் சாமுவேல்ஸ் நிகழ்த்திய 'வெற்றிக் கொண்டாட்டங்களை' கண்டித்து தண்டப்பணமும் அறவிட்டது எதிர்கால வீரர்களுக்கான எச்சரிக்கையே.

ஆனால் தலைவர் டரன் சமியோ தனது அணியை அங்கீகரிக்காத, தங்களுக்கான ஊதிய, ஒப்பந்தங்களை சரியாக நிறைவேற்றாத கிரிக்கெட் சபையைக் கடிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக உலக T20 கிண்ணம் வழங்கப்பட்ட மேடையைப் பயன்படுத்தியிருந்தார்.
(இது பற்றிய விமர்சனங்கள் பல்வகைப்பட்டு இருந்தாலும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையாலேயே தீர்க்கமுடியாத சிக்கலை இப்படி பகிரங்கப்படுத்தி கிரிக்கெட் சபையைப் பணிய வைத்த தலைவனை பாராட்டவே வேண்டும்)

ஆனால் அணியாக நின்று வென்ற இந்த அசைக்கமுடியாத சம்பியன்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் சாதிக்கவேண்டும் என்ற வெறியும் பாராட்டக் கூடியது.

மீண்டும் எழுச்சி கொள்ளும் - இதற்கான சாத்தியங்கள் பற்றி மேலே ஆராய்ந்துள்ளேன் - மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட், கிரிக்கெட்டுக்கு நல்லது.

தொடரின் நாயகனாக விராட் கோலி தெரிவானார்.
அவரது தொடர்ச்சியான பெறுபேறுகளை வேறு யாரும் நிகர்த்திருக்கவில்லை. தனியொருவராக நின்று அவர் போராடியது இந்தியாவுக்கு ஒரு பக்கம் நன்மை, இன்னொரு பக்கம் அவரையே நம்பியிருந்து தோற்றுப் போனது.

ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியாக நின்று ஒருவர் விட்டால் இன்னொருவர் தாங்கி கிண்ணம் வென்றது.
இதே போன்று அணியாக செயற்பட்ட இன்னொரு அற்புதமான அணி இங்கிலாந்து அடித்தடிக்கும் ஆற்றல் கொஞ்சம் குறைவானதால் நேற்று மயிர்ழையில் கிண்ணத்தைக் கோட்டை விட்டது.


சமி சொன்ன "உடுத்தும் ஆடைகளும் இன்றி இங்கே வந்தோம். ஒவ்வொருவரும் எங்களைக் குறைவாகக் கருதி விமர்சித்த ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களுக்கு உரமேற்றின" என்ற வார்த்தைகளும்,

இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் சொன்ன "ஸ்டோக்ஸின்  சோகத்தில் நாமும் பங்கெடுக்கிறோம்.வெற்றிகளைப் பகிர்வது போலவே, தோல்விகளையும் அணியாக நாம் ஏற்றுக்கொள்வோம்"
என்ற வலிமிகு வார்த்தைகளும்....

கிரிக்கெட் ஒரு அற்புத ஆட்டம்.

April 02, 2016

மேற்கிந்திய சிமன்ஸ் & ரசல் அசுர பல அதிரடி - கோலியின் தனி மனித போராட்டம் சிதறடி

அதிரடியால் இறுதிக்கு தகுதி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் !!
என்ற தலைப்பில் தமிழ் மிரர் மற்றும் தமிழ் விஸ்டன் ஆகியவற்றுக்காக இன்று எழுதிய கட்டுரையின் மீள்பதிவு, சிற்சில சேர்க்கைகள் மற்றும் புதிய படங்களுடன்..


மேற்கிந்தியத் தீவுகளின் மும்பாய் வெற்றி பலருக்கும் மாபெரும் அதிர்ச்சியை வழங்கியிருக்கிறது.
இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வி கண்ட அணி என்ற அவமானத்துடன் அரையிறுதிக்கு வந்த அணி இது.

ஆனால் மும்பாய் ஆடுகளத்தின் தன்மை, ஏலவே முன்னைய கட்டுரையில் நான் சொல்லியிருந்ததைப் போல IPL விளையாடிப் பழகிய அனுபவத்தில் இந்திய ஆடுகளங்கள் ​பற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களின் பரிச்சயம் பற்றி அறிந்தவர்களுக்கு இந்த வெற்றியும் T20 போட்டிகளில் கிடைக்கக்கூடிய இன்னொரு முடிவு மட்டுமே என மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களின் அதிரடியைப் பாராட்டிவிட்டுக் கடந்து போக முடியும்.

விராட் கோலியின் அபார ஆட்டம், அத்தோடு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்வதற்காக உசெய்ன்  போல்ட் ஓட்டுவதை விட வேகமாக ஆடுகளத்தின் இரு முனைகளுக்கு இடையில் அவர் மாறி மாறி ஓடியே எடுத்த ஓட்டங்கள், இதற்கு முந்தைய இந்திய அணியின் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியைப் போலவே தனியொரு நபராக அவர் நின்று ஆடிய விதங்கள் ஆகியனவற்றை மேற்கிந்தியத் தீவுகளின் சிக்சர் + பவுண்டரிகள் அடிக்கும் அசுர பலம் விஞ்சியது.

நாணய சுழற்சி, இரவு வேளையில் மைதானத்தின் சூழலை மாற்றும் எனக் கருதப்பட்ட பனிப்பொழிவு - Dew எல்லாவற்றையும் தாண்டி என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டியின் முடிவில் தாக்கம் செலுத்தியது இரண்டு அணிகளும் பெற்ற 4,6 ஓட்டங்களுக்கு இடையிலான வித்தியாசம் தான்.
(இதை விட இந்திய அணித் தலைவர் விட்ட மாபெரும் தவறுகளை கட்டுரையில் பின்னர் பார்க்கலாம்)

இந்தியா 95 ஓட்டங்களை ஓடியும், 17 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 92 ஓட்டங்களை பவுண்டரிகளிலும் பெற்றது.

ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் 
அணியோ வெறும் 44 ஓட்டங்களை ஓடி எடுத்தது.
146 ஓட்டங்களை (20 நான்கு ஓட்டங்கள் + 11 ஆறு ஓட்டங்கள்) அடித்தே பெற்றுக்கொண்டது.

இந்த வித்தியாசம் தான் போட்டியில் பெருமளவு செல்வாக்கு செலுத்தியிருந்தது.
ஒரு சில நல்ல பந்துகளில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறியிருந்தபோதும், அடிக்கக் கிடைத்த இலகுவான பந்துகளை எல்லைக் கோட்டைத் தாண்டி வெளியே அனுப்புவதில் சற்றும் சளைக்காமல் மேற்கிந்தியத் தீவுகளின் சிமன்ஸ், சார்ல்ஸ், ரசல் ஆகியோர் ஆடியிருந்தார்கள்.

இதன் மூலம் உலக T20 போட்டிகளில் துரத்தி அடிக்கப்பட்ட 3வது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் பதியப்பட்டுள்ளது.

சுப்பர் 10 சுற்றுக்களில் 4 போட்டிகளில் 14 சிக்சர்களையே கொடுத்திருந்த இந்தியா இந்த ஒரே போட்டியில் 11 சிக்சர்களை வாரி வழங்கியது.
ஒரு போட்டியில் இந்தியா கொடுத்த இரண்டாவது கூடிய சிக்சர்கள் இவையாகும்.

காயமுற்றிருந்த ஏட்ரியன் ப்ளட்ச்சருக்குப் பதிலாக அணிக்குள் அவசரமாக மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து அழைக்கப்பட்ட லெண்டில் சிமன்ஸ் இந்தப் போட்டியைத் தனக்கும், தனது அணிக்கும் மறக்கமுடியாத ஒரு போட்டியாக மாற்றியிருந்தார்.

இந்திய மண்ணில் IPL போட்டிகள் மூலமாக தனக்கென ஒரு தனித்தடம் பதித்துள்ளவர், கிடைத்த அற்புதமான வாய்ப்பு மூலமாக தனது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையையும் பதிவு செய்து, போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும் தனதாக்கிக் கொண்டார்.
51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்கள்..
5 சிக்சர்கள், 7 நான்கு ஓட்டங்கள்.


இதே போலத் தான் இலங்கைக்கு எதிரான சுப்பர் 10 ஆட்டத்திலும் உபாதையுற்ற கெயிலுக்குப் பதிலாக ஆரம்ப வீரராக அனுப்பப்பட்ட பிளட்ச்சர் ஆடிய அதிரடி ஆட்டமும்.

அண்மைக்காலமாக ஒரு அற்புதமான சகலதுறை வீரராக மாறிவரும் அன்ட்ரே ரசலும் தன்னுடைய அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையை இந்தப் போட்டியில் பெற்றுக்கொண்டார்.

ஊதிய, ஒப்பந்தப் பிரச்சனைகள் இன்னமும் கனன்று கொண்டே இருக்கும் ஒரு குழப்பமான சூழ்நிலையிலும் கூட இப்படியான ஆற்றலோடும், அணியில் ஒற்றுமையோடும் ஆட முடியுமாக இருந்தால்,அதெல்லாம் தீர்க்கப்பட்ட, புத்தெழுச்சி ஊட்டப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி எப்படி ஆடும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.


பனிப்பொழிவினால் பின்னர் பாதிக்கப்படலாம் என்று கருதப்பட்ட மும்பாய், வான்கடே மைதானத்தில் நாணய சுழற்சியில் வென்றவுடன் முதலில் துடுப்பாட டரன் சமி இந்தியாவை அழைத்தபோதே அதில், அண்மைக்காலத்தில் துரத்தியடிப்பதில் துல்லியமாக ஆடிவரும் விராட் கோலி + இந்தியாவையும் நினைத்திருக்கக் கூடும்.
மேற்கிந்தியத் தீவுகளும் துரத்தி அடித்த போட்டிகளில் (ஆப்கானிஸ்தான் தவிர) கலக்கி இருந்தது.

காயமடைந்து வெளியேறிய யுவராஜ் சிங்குக்குப் பதிலாக மனிஷ் பாண்டேயை (பாவம் துடுப்பெடுத்தாட வாய்ப்பே கிட்டவில்லை) அணிக்குள் கொண்டு வந்த இந்தியா, தொடர்ந்து தடுமாறி வந்த தவானை இப்படியான ஒரு முக்கியமான போட்டியில் நீக்கி, அஜியாங்கே ரஹானேயை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்பி வைத்தது.

பொதுவாக மாற்றங்களை விரும்பாத தோனியின் இந்த முடிவு இந்தியாவுக்கு மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுத்தது.

ரஹானே உறுதியாக நின்று கொள்ள முதலில் ரோஹித் ஷர்மாவின் அதிரடி, பின்னர் கோலி சரவெடி என்று முதல் இரு விக்கெட் இணைப்பாட்டங்கள் அரைச் சதங்கள்.

முதல் நான்கு போட்டிகளில் வெறும் 18 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த ரோஹித் ஷர்மா தன சொந்த ஊர் மும்பாயில் இந்தப்போட்டியில் form க்குத் திரும்பினார்.
3 ஆறு ஓட்டங்களுடன் 31 பந்துகளில் 43.

கோலியுடன் சேர்ந்து விறுவிறு என்று ஓடி ஓடி ஓட்டங்கள் சேர்த்த ரஹானே 40.

வந்த நேரம் முதல் ஒரு விதமான பதற்றத்துடன், ஒரு ஓட்டத்துடன் இருக்கும் நேரம் கோலியை ரன் அவுட் ஆக்கக்கூடிய இலகுவான சந்தர்ப்பங்களை ஒரே பந்தில் கோட்டை விட்டது மே.இ.
பக்கத்தில் இருந்த ஸ்டம்பை நோக்கி எறிவதில் ரம்டின், பிராவோ இருவருமே குறி தப்பியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

அதற்குப் பிறகு முழுக்க முழுக்க கோலி ராஜ்ஜியம் தான்.
ஒற்றைகளை இரட்டையாக மாற்றி ஓடி, ஓடி ஓட்டங்களை அதிகரித்த கோலி, அண்மைக்காலமாக அனைவரையும் பரவசப்படுத்திவரும் அற்புதமான துடுப்பாட்டப் பிரயோகங்கள் மூலமாக நான்கு ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

89 ஓட்டங்கள் 47 பந்துகளில்.
தனது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை  ஒரே ஒரு ஓட்டத்தால் தவறவிட்டிருந்தார்.
எனினும் தலா 15 50+ ஓட்டப் பெறுதிகளைப் பெற்றுள்ள கெயில், பிரெண்டன் மக்கலம் ஆகியோரை முந்தியுள்ளார்.

கோலி - தோனி இணைந்து 27 பந்துகளில் பெற்ற 64 ஓட்டங்களில் தோனி 9 பந்துகளில் 15 ஓட்டங்கள் மட்டுமே..
மீதி கோலியின் தாண்டவம் தான்.


சமி  ஐந்தே ஐந்து பந்துவீச்சாளர்களுடன் 20 ஓவர்களைப் போட்டு முடித்தார்.
தான் ஒரு பந்துவீச்சாளரும் கூட என்பது அடிக்கடி சமிக்கு மறந்து போகிறது போலும்.
ஒரு ஓவராவது போட்டுப் பார்த்திருக்கலாம்.

193 என்ற இலக்கு மேற்கிந்தியத் தீவுகளை தடுமாற வைக்கும் என்றே பலரும் கருதினர்.
நினைத்தது போலவே கெயில் பும்ராவின் பந்தில் பறக்க, 
(பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட கெயில் இப்படியான முக்கியமான போட்டிகளில் சொதப்புவது வழமையே.)
கொஞ்சம் தடுமாறிய பின் சாமுவேல்ஸும் ஆட்டமிழக்க, இத்தொடரில் பெரிதாக சோபிக்காத சார்ல்ஸ், இந்தப் போட்டியில் முதன்முறையாக ஆடும் சிமன்சோடு சேர்ந்து கொண்டார்.

முதலில் நிதானமாக ஆரம்பித்த இணைப்பாட்டம் கொஞ்சம் நம்பிக்கை சேர்ந்த பிறகு அதிரடியாக மாறி பவுண்டரிகள் பறக்க ஆரம்பித்தன.
சிமன்ஸ் ஆரம்பம் முதலே நம்பிக்கையுடன் ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார்.
அவருக்கு அதிர்ஷ்டமாக இரு ஆட்டமிழப்பு சந்தர்ப்பங்கள் இந்தியப் பந்துவீச்சாளரின் நோ போல் பந்துகளால் தவறிப்போனது.
அவற்றில் ஒன்று கிடைத்த free hit இல் சிக்சராக மாறியது இந்திய அணிக்கு வெந்த புண்ணில் பாய்ச்சிய வேல்.

ஆட்டமிழப்பு என்பதால் கவனிக்கப்பட்ட இந்த இரு நோபோல்களை விட இன்னும் எத்தனை நோபோல்கள் நடுவர்களின் கவனத்தில் இருந்து தப்பினவோ?

61 பந்துகளில் 97 ஓட்டங்களை விளாசித் தள்ளி, தடுமாறிக்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளை முந்தக்கூடிய நிலைக்குக் கொண்டு வந்தது இந்த இணைப்பாட்டம்.

விக்கெட் ஒன்றை எடுத்தே ஆகவேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்ட தோனி, ரெய்னாவை பயன்படுத்தாதது ஆச்சரியம்.
யுவராஜ் இல்லாதது ஒரு இழப்பாகக் கருதினாலும் ரெய்நாவைப் பயன்படுத்தாத சந்தர்ப்பத்தில், யுவராஜ் இருந்தால் மட்டும் பயன்படுத்தி இருப்பாரா என்ற கேள்வியும் வருகிறது.

இதேவேளை ஓவர்களை சரியான முறையில் பகிர்ந்து கடைசி ஓவர்களுக்கு தன்னுடைய முக்கிய பந்துவீச்சாளரை வைத்துக்கொள்ளும் தோனி, என்ன காரணத்தாலோ கடைசி இரு ஓவர்களுக்கு தடுமாறிப் போனார்.

அவருடைய முன்னணி (?) சுழல் பந்து வீச்சாளராகக் கருதப்படும் அஷ்வினின் 2 ஓவர்களில் 20 ஓட்டங்கள் அடிக்கப்பட்டதால் அவரை நிறுத்திக் கொண்டவர் பின்னர் இடை நடுவே ஒரு ஓவர் தானும் பயன்படுத்திப் பார்க்கவும் இல்லை.

இந்தியாவின் துரும்புச் சீட்டு என்று அழைக்கப்படும் அஷ்வின் பாகிஸ்தானுடன் 3 ஓவர்கள், அவுஸ்திரேலியாவுடன் 2 ஓவர்கள் ஏன்று முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.

துடுப்பாட்ட ராசியைப் பந்துவீச்சுக்கும் கொண்டுவந்த கோலி முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்தார்.
அந்த ஓவரில் நான்கு ஓட்டங்கள்.
ஆனால் அடுத்த ஓவரை அவருக்கு வழங்காமல் தனது வழமையான death bowlers நேஹ்ரா, பும்ரா இருவரையும் முடித்துக்கொண்ட தோனிக்கு கடைசி இரு ஓவர்களும் சிக்கலாக மாறிப்போனது.

24 பந்துகளில் 42 ஓட்டங்களாக இருந்த நிலை, ரசல் & சிமன்சின் அதிரடிகளால் 12 பந்துகளில் 20 ஓட்டங்களாக மாறிய நிலையில் ஜடேஜாவை அழைத்தார் தோனி.

முதல் நான்கு பந்துகள் எல்லாமே இந்தியாவுக்கு வாய்ப்பாகவே இருந்தது.
ஐந்தாவது பந்தில் ரசல் அடித்த மிக நீளமான சிக்சர் பார்வையாளருக்கு இடையில் போய்த் தொலைந்து போனது.
இவ்வாறு பந்து தொலைந்து பின் மாற்றுவது என்பது இப்படியான நேரத்தில் பாதகமானது.
சர்ச்சைக்குரிய விதத்தில் பந்தை மாற்றினார்கள்.

அடுத்த பந்தில் மேலும் ஒரு நான்கு ஓட்டம்.

இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள்.

அஷ்வினா கோலியா என்ற கேள்விக்கு தோனியின் பதில் அனுபவத்தை விட அன்றைய நாளின் வாய்ப்பு என்றே அமைந்தது.
2007 உலகக்கிண்ண இறுதியில் ஜோகிந்தர் ஷர்மா போல, 1993 ஹீரோ கிண்ண அரை இறுதியில் சச்சின் டெண்டுல்கர் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக 4 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் ஒரே ஒரு ஓட்டத்தைக் கொடுத்து வென்றது போல, கோலியைப் பயன்படுத்த எண்ணியிருந்தார் தோனி.

எல்லா நாட்களுமே ராசியான நாட்கள் ஆகிவிடுவதில்லையே..


கோலியின் ராசி அணியைத் தனியே தாங்கிக் கொண்டு செல்வது இந்த இறுதி ஓவரிலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தோனிக்கும் இருந்திருக்கலாம்.
ஆனால் அனுபவம் வாய்ந்த அஷ்வின், என்ன தான் பனிப்பொழிவு (ஆனாலும் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை), சுழல்பந்து என்றிருந்தாலும் சிலவேளை மேற்கிந்தியத் தீவு வீரர்களைத் தடுமாற வைத்திருக்கலாம்.

முதல் பந்தில் சிமன்ஸ் ஒரு ஓட்டம், அடுத்த பந்தில் ரசலால் ஓட்டம் எதுவும் பெற முடியவில்லை.
மைதானம் முழுவதும் திரண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு ஒரு சின்ன நம்பிக்கை.
ஆனால் அசுர பலம் கொண்ட அன்ட்ரே ரசல் அடுத்த பந்தை இழுத்தடித்து நான்கு ஓட்டம் எடுத்தார்.
இன்னும் மூன்று பந்துகளில் நான்கு தேவை.

ரசலின் கட்டுமஸ்தான உடம்பும் எஃகு போன்ற கரமும் வேறு எதற்கு இருக்கிறது?
நான்காவது பந்து பல மீட்டர்கள் கடந்து ஆறாக மாறியது.


கோலி கொண்டுவந்த இந்தியா, கோலியின் ஓவரிலேயே முடிந்து போனது.

ரசல் - 20 பந்துகளில் 43 ஓட்டங்கள், அதிலே 36 ஓட்டங்கள் பவுண்டரிகளில் (4 ஆறுகள், 3 நான்குகள்)

தோனியின் கணக்கு பிழைத்தது.
தனியே கோலியை நம்பிய இந்திய அணியை, தனியே கெயிலை மட்டும் நம்பாத மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

சமி முன்பே சொன்னது போல, மேற்கிந்தியத் தீவுகளிடம் நம்பிக்கையும் 15 வெற்றியாளர்களும் இருக்கிறார்கள்.
இதனால் தான் அவர்களால் வெற்றியை சுவைக்க முடிகிறது.
அந்த வெற்றிகளைக் கோலாகலமாகக் கொண்டாடவும் முடிகிறது.


இப்போது மேற்கிந்தியத் தீவுகளின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டுமே இறுதிப் போட்டியில்.

அண்மையில் தான் மேற்கிந்தியத் தீவுகளின் இளையவர் (19 வயதுக்குட்பட்ட ) அணி உலகக்கிண்ணம் வென்றது குறிப்பிடத்தக்கது.

சுப்பர் 10 சுற்றில் சந்தித்த அதே இரு அணிகள் மீண்டும் இறுதிப் போட்டியில்.
யார் நினைத்திருப்பார்கள்?
வெல்லும் அணிக்கு இரண்டாவது உலக T20 கிண்ணம்.

முன்னைய போட்டியில் கெயில் புயலால் அடிபட்டுப் போன இங்கிலாந்து இப்பொழுது புத்துணர்ச்சியோடு எழுந்து நிற்கிறது.
அதே போல மேற்கிந்தியத் தீவுகளும் அசுர அடியோடு உயர்ந்து நிற்கிறது.
விறுவிறுப்பான இறுதிப்போட்டி நாளை காத்திருக்கிறது.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner