March 02, 2009

எது நடுநிலைமை? சீரியசான ஒரு பதிவு...

நான் இணைந்திருக்கும் ஒரு Forumஇல் அண்மையில் விமர்சனம் செய்தல் நான் எழுப்பிய ஒரு சந்தேகம் சர்ச்சையை ஏற்படுத்தி அந்த மன்றத்திலே நடுநிலைமை என்றால் என்னவென்று வரைவிலக்கணம் தேடி ஒரு புதிய தலைப்பை ஆரம்பிக்கப்பட்டது.

(நம்ம பெயர் 'நாரதர்' இல்லை என்ற போதும் அடிக்கடி சர்ச்சைகள் உருவாக ஏனோ காரணம் ஆகிவிடுகின்றேன்!)

இந்தக் காலகட்டத்தில் எல்லோராலும் பேசப்படுகின்ற ஆராயப்படுகின்ற ஒரு விஷயமாக நடுநிலைமை இருப்பதால். அங்கே மன்றத்தில் ஆராயப்பட்ட சில முக்கிய விஷயங்களையும் எனது கருத்தாக நான் முன்வைத்த விடயங்களையும் இங்கேயும் பதியலாம் என்று எண்ணியுள்ளேன்.

நடுநிலைமை(Neutral) என்பது முன எப்போதையும் விட இப்போது பேசுதற்குரிய விவாதத்துக்குரிய/ஐயத்துக்குரிய ஒரு விடயமாக மாறிவிட்டது.

Ø நடுநிலை நாடு
Ø நடுநிலை சமூகம்
Ø நடுநிலைக் கருத்து
Ø நடுநிலைக் கொள்கை
Ø நடுநிலை நாளிதழ்

உலகளாவிய ரீதியில்,நாட்டு நடப்பில்,இந்தியாவில்,தமிழகத்தில்,இலங்கைப் பிரச்சனையில்,விமர்சன ரீதியில் என்று பலவிதமாக, பலராலும் அணுகப்படும் பதம்/கருத்து இது.

எது தான் நடுநிலை?

நீங்களும் உங்கள் மனதில் இதுவரை காலமும் நடுநிலை என்பதற்கு வைத்திருந்த வரைவிலக்கணத்தோடு இதை முழுவதுமாக வாசித்துப் பாருங்கள்..

ஆமோதிப்பையோ,எதிர்ப்பையோ,ஆதங்கத்தையோ,ஆட்செபத்தையோ பின்னூட்டங்கள் மூலமாக அறியத் தாருங்கள். 

தடித்த ஊதா நிற எழுத்துக்களில் இருப்பதெல்லாம் அடியேனின் எண்ணக் கருத்துக்கள்..

---------------------------------------

நடுவுநிலைமை

தகுதி எனவொன்று நன்றே பகுதியான் 
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

அன்புடைய நண்பர், அன்பற்ற பகைவர், அறியாத அயலார் என்ற மூவரிடத்தும் நீதி தவறாது நிற்றலே நடுவுநிலைமை. அஃதே சிறந்த அறம். 

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி 
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. 

நடுவுநிலைமை உடையவனின் செல்வம் அவன் வழித் தோன்றல்களுக்கு நன்மை தரும். அவனுக்கும் சிறந்த பாதுகாப்பு அளிக்கும். 

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை 
அன்றே ஒழிய விடல். 

நன்மையே தருவதாய் இருந்தாலும், ஒருவன் நடுவுநிலைமை தவறுதலால் வரும் செல்வத்தை ஏற்றல் கூடாது. அதை அக்கணமே விட்டொழிக்க வேண்டும்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப் படும்.

ஒருவன் நடுவுநிலைமை உடையவனா ? அற்றவனா ? என்பது அவனுக்குப் பின் எஞ்சி நிற்கும் மக்களாலும் அவன் பெற்ற புகழ், பெருமை முதலியவற்றாலும் அறியப் படும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
கோடாமை சான்றோர்க்கு அணி.

ஆக்கமும் அழிவும் இந்த உலகில் புதுமையாய்த் தோன்றினவை அல்ல. நாம் தோன்றும் முன்பே அவையும் தோன்றி இருந்தன. இதனை நினைத்து நடுவுநிலைமை தவறாது இருத்தல் வேண்டும். அதுவே சான்றோர்க்கு அழகு. அதனால் அது மற்றவர்க்கும் அழகாகும். 

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
நடுவொரீஇ அல்ல செயின். 

மனம் நடுவுநிலைமை தவறிய செயல்களைச் செய்வோம் என்று எண்ணும் போதே நாம் நிச்சயம் அழிவோம் என்பதை உணர வேண்டும். நினைத்தலும் செய்தலுக்கு சமமே !

கெடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 

07 : நடுவுநிலைமை தவறாத ஒருவனின் வறுமை நிலையை இவ்வுலகம் இழிவாகக் கருதாது. நடுவு நிலைமையில் நின்று செயல்களைச் செய்பவனுக்கு வறுமை ஏற்படாது. ஒரு வேளை வறுமை ஏற்பட்டாலும் அது வளர்ச்சியே ஆகும்.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் 
கோடாமை சான்றோர்க்கு அணி.

தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு பின் தன்னிடம் இடப்பட்ட பொருள்களை சமமாகப் பங்கிட்டுத் தரும் தராசு போன்றவர்கள் சான்றோர்கள். வேண்டியவர், வேண்டாதவர், அறியாதவர் என்ற மூவரிடத்தும் சமமாக நடத்தலே சான்றோர்க்கணி. 

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா 
உட்கோட்டம் இன்மை பெறின். 

மனத்தின் கண் நடுவுநிலைமை உடையவனின் வாய்ச் சொற்கள் ஒரு போதும் குற்றம் செய்வதில்லை. சொல்லின் கண் தவறாமையே நடுவுநிலைமை. சொல்லே செயலுக்கு அடிப்படை. செயல் எண்ணத்திற்கு அடிப்படை.

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் 
பிறவுந் தம்போற் செயின். 

வாணிபத்திற்கு நடுவுநிலைமை மிக மிக இன்றியமையாதது. பிறர் பொருளையும் தன் பொருளாக நினைத்து வாணிபம் செய்திட வேண்டும். கொடுப்பதும் குறையக் கூடாது. கொள்வதும் மிகை படக் கூடாது.
- தாமரை 
__________________
  
நடுநிலைமை என்பதை நான் அகம் சார்ந்தவையாகவே காண்கிறேன்..

விழிப்புணர்வை போல நடுநிலைமை என்பதும் ஒரு பக்குவம்.. அது சுலபமாக யாரிடமும் வந்தடைவதில்லை.. 

விழிப்புணர்வை அடைந்த பின் யாரும் விழித்து கொள்வதில்லை
விழித்தவாறு யார் விழிப்புணர்வின் பாதையில் செல்கிறார்களோ அவர்களே விழிப்புணர்வை அடைகிறார்கள்..

இது போலத்தான் நடுநிலைமையும்.. அந்த தராசை கையில் ஏந்தி கொண்டு தன்னுடைய செயல்களை தானே நிறுக்க பழக வேண்டும், தராசு தரும் விடைகளை கொண்டு தன்னுடைய ஒட்டடைகளை நேர்மையாய் துப்புறவு செய்ய முனைய வேண்டும்.. இவற்றை செய்தாலே நடுநிலைமையை அடைதல் சாத்தியம்..


"Face the Truth" என்னும் ஆன்மீக தத்துவம் நடுநிலைமையையே குறிக்கிறது..

காந்தி தன் வாழ்வின் நிகழ்வுகளில் உள்ள நிதர்சனங்களை உண்மையாய் நேர் கொண்டார், அதனால் தான் நமக்கு சத்திய சோதனை கிடைத்தது,,

என்னை பொருத்த மட்டில் நடுநிலைமை தராசை சரியாக கையாண்ட நடுநிலைமைவாதி காந்தி தான்..
__________________
அன்புடன் ஆதி
----------------------------------------------
நடுநிலைமை - நடுவுநிலைமை இரண்டும் ஒன்றே என எண்ணி என் கருத்தைத் தர விழைகிறேன்.

இருபக்கமும் சாராதவர் நடுவர்..நடுவிலே நிற்பதால் அல்லது எப்பக்கமும் சாராதவர் என்பதனால் அவர் போதுப்படையானவர் என்று கருதப்படுகிறார். விளையாட்டிலும் இது தான் நடுவருக்கான வரையறை.

எனினும் எங்கள் நாட்டு ஊடகங்கள்/பத்திரிகைகள் எப்பக்கமும் சாராமல் நடுவிலே நின்று பட்டும்படாமலும் இருப்பது என்று பொருள் படுகிறது..

ஒரு தடவை எனது கவிதையொன்றில் கருப்பும் இல்லை,வெள்ளையும் இல்லை சாம்பல் தான் இங்கே நடுநிலை என்று சொன்னேன்.

ஆனால் தனிப்பட்ட என் கருத்துப்படி, கொள்கைகள்,கோட்பாடுகள் என்று நடுநிலைக்கு வரையறை வைக்க முடியாது.

அந்தந்த இடங்கள்,நேரம்,சமூகம்,நிலை,சந்தர்ப்பதுகேற்ப நடுநிலை மாற்றம் பெறுகிறது.
ஒரு குழுமம்,சமூகம் சார்பாக யாரோ ஒருவர் எடுக்கும் தீர்மானம் என்று வரும்போது முன்பொரு தடவை தாமரை அவர்கள் சொன்னதுபோல ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரால் அது சொல்லப்படும்போது அது நடுநிலையாகிறது என்று குறிப்பிடப்படுகிறது.

எல்லாராலும் என்று வரும்போதே அது பூரணம் பெறும்.ஜனநாயகத்திலேயே பெரும்பான்மை தான் ஜெயிக்கிறது. சிறுபான்மை எதிர்ப்பு அங்கேயும் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை 'உண்மைக்கு முன் நடுநிலைமை என்பது இல்லை' என்பது சரியே. உண்மையான நோக்கில் தகவல்களை தரும்பொழுது "நடுநிலைமை கலைவதில்லை"


நடுநிலைமை பற்றி நான் ஆழமாக ரசித்த கவிதையொன்று..

நடுநிலை மேதாவிகள்

ஓட்டோ ரேனே காஸ்டில்லோ (கௌதமாலா கொரில்லா போராளி)
தமிழாக்கம் - செம்மலர் இரா சிந்தன்

ஒரு நாள்
என் தேசத்தின்
நடுநிலை மேதாவிகள்
சாதரண மனிதர்களால்
விசாரிக்கப்படுவார்கள்

"உங்கள் தேசம்
மெதுவாக
மரணமடைந்து கொண்டிருந்த போது
தனியே ஒதுங்கி நிற்கும்
ஒரு அழகிய தீயைப் போல . .
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?"
என்று கேள்வி கேட்கப்படுவார்கள்

நடுநிலை மேதாவிகளே ...

உங்கள் உடைகளைப் பற்றி ....
மத்திய உணவிற்கு பின்
உங்கள் குட்டி தூக்கத்தைப் பற்றி....
அவர்கள் கேட்கப் போவது இல்லை

"ஒன்றுமில்லாதத்தின் உள்ளடக்கம்" பற்றிய
உங்கள் உப்பு சப்பற்ற விவாதங்களை...
அவர்கள் தெரிந்துகொள்ளப் போவதில்லை

உங்கள் வருமானம் குறித்த
மிகுந்த பட்டறிவு குறித்து.....
அவர்களுக்கு கவலை இல்லை

கேள்விகள்

கிரேக்க மெய்ஞானத்திலிருந்தோ
அல்லது
உங்களில் ஒருவன்
மரணமடைந்து கொண்டிருந்த போது
'உங்கள் கேவலமான சொந்த நலனுக்காக'
மௌனம் காத்தது பற்றியோ....
இருக்கப் போவதில்லை

பொய்களின் நிழலில் பிறந்த
உங்கள் வியாக்யானங்கள் தொடர்பாக
அவர்கள் ஒன்றுமே கேட்கப் போவதில்லை
..........

ஒரு நாளில்
அந்த சாதாரண மனிதன் வருவான்

மேதாவிகளின்
புத்தகங்களிலும் கவிதைகலிலும் காணப்படாத
ஆனால்
தினமும் அவர்களுக்கு
அரிசியும் பாலும்
ரொட்டியும் முட்டையும்
கொடுத்த
அவர்களின் ரதங்களை ஓட்டிய
அவர்களின் நாய்களையும் தொட்டங்களையும் கவனித்த
அவர்களுக்காய் உழைத்த

அந்த சாதரண மனிதன் கேட்பான்

"என் போன்ற ஏழைகள்
தன் வாழ்க்கையையும் காதலையும் தொலைத்து
துன்பத்தில் உழன்று கொண்டிருந்த போது ...
நடுநிலை மேதாவிகளே !!!
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

என் இனிய தேசத்தின்
நடுநிலை மேதாவிகளே
உங்களால் பதில் சொல்ல முடியாது !

அப்போது
மௌனம் எனும் கழுகுகள் வந்து
உங்கள் குரல்வளையை கவ்வும்

உங்கள் பாவங்கள்
உங்கள் ஆன்மாவையே தூக்கிச்செல்லும்

"அந்தக் கேள்வியின் முன்
நீங்கள் ஒரு நிமிடம் வெட்கித் தலைகுனிந்து
கூனிக் குறுகி நிற்பீர்கள் "


தாமரை அண்ணா தந்த திருக்குறள் விளக்கங்கள் அருமை. அதில் சொல்லப்பட்ட விடயங்கள் அனைத்தும் பொதுவாக நாங்கள் ஏற்றுக்கொள்ளும் விடயங்களே.. அந்தக் குறள் விளக்கங்களோடு நான் ஓரளவு ஒத்துப்போகிறேன். வள்ளுவர் சொன்ன பொதுப்படையான நடுநிலைகள் மனிதர்களிடம் இருந்தால் அவர்கள் மகாத்மாக்களே.. காரணம் மனிதர்களுக்கு பக்கசார்பு எதோ ஒருவகையில் இயல்பாகவே அமையும் என்ற கூற்றில் உண்மையுண்டு.

__________________
A.R.V.LOSHAN

www.arvloshan.com


நடுநிலைமையில் மூன்று ரகங்கள் இருக்கின்றன.

1. பிரச்சனைகள் எதுவுமில்லாமல் இருக்கும் காலம். இங்கு பலரின் பார்வைகளை முன் வைத்து, அவற்றை பின் அலசி, நன்மை தீமைகளை அலசி உண்மையை வெளிப்படுத்தல். இதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தத் திரி அந்தவகையில் நடுநிலைமைக்கு எடுத்துக் காட்டாய் இருக்கும் என நம்புகிறேன். இதில் எதையும் யாரும் வற்புறுத்துவதுமில்லை, எல்லோரும் ஒப்புக் கொண்டாக வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஒரு பொது மேடையாக பலரின் கருத்துக்களை பலருக்கு கொண்டுசேர்ப்பது அவ்வளவுதான்

2. சுயகருத்து சொல்லாமல் இருத்தல். சட்டசபைகளில் இதை பலர் கண்கூடாக காணலாம், ஒரு விவாதம் போன்ற விஷயங்கள் வரும்பொழுது தன்னுடைய கருத்தைச் சொல்லாமல் வாத-பிரதிவாதங்களைச் செய்வோரின் இறுதி முடிவிற்கேற்ப விட்டுவிடுதல். 

3. ஒரு பிரச்சனையை நன்மை தீமைகளை அலசி ஒருபக்கச் சார்பில்லாமல், பொதுவான நீதி என்னும் ஒரே ஒரு அலகினைக் கொண்டு சரியான தீர்வாகத் தோன்றுவதை சொல்வது.

இது மூன்றுவகையான இடத்திற்கேற்ற மூன்றுவகையான நடுநிலைமை என நான் கருதுகிறேன்.

ஒரு செயல் / பேச்சு நடுநிலையானதா என்பதை உடனே அறிவது என்பது மிகக் கடினமான ஒன்றாகும். அதைத்தான் "எச்சத்தாற் காணப் படும்" என வருங்காலமே சொல்லும் என வள்ளுவன் சொல்லி இருப்பதாக கருதுகிறேன்.

நடுநிலைமை என்பது எந்தச் சார்பும் அற்றது - என்பது தவறாகும்.

ஒருவர் எல்லோரையும் ஒரே மாதிரி தாக்கினா அது நடுநிலைமை என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். 

எல்லோரையும் புகழ்வதையும் அப்படித்தான் யாரும் நடுநிலைமை என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

நடுநிலைமைக்கு அடிப்படை ஆதாரமாக பொதுநீதி என்பதை கொள்ள வேண்டும் என்கிறது எனது அறிவு, நல்லது எதுவோ அதன் பாற்பட்டே நடுநிலையான் ஒழுக வேண்டும் என்றும் சொல்கிறது குறள்.

எனவே நடுநிலைமை என்பது பொதுநன்மை என்ற ஒன்றைச் சார்ந்துதான் இருக்கிறது. எதையும் சாராமல் இருப்பதில்லை.

எப்படி துலாக்கோல் எடை என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்கிறதோ அதே போல் பொதுநன்மை ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்ளுதல் நடுவு நிலைமையாம். 

அப்படிப் பார்க்கப் போனால் நடுநிலைமைக்கு மிக அவசியத்தேவை பேரறிவு, அறிவாளனாய் இல்லாதோன் நடுநிலையாய் இருக்க முயற்சித்தாலும் இயலாது. காரணம் அவன் நல்லது என்று நினைப்பது அல்லாததாய் கூட இருக்கலாம்.

தராசுக்கு கூட பிரிஸிஷன் மிக முக்கியம். பத்து தசமத்தானச் சுத்தமாக எடை போடும் கருவி போல காய்கறித் தராசால் எடை போட முடியாதல்லவா? காய்கறித்தராசில் தங்கம், வைரம் போன்றவற்றை எடை போட முடியும் ஆனால் செய்ய மாட்டோம் அல்லவா?

ஆக நடுநிலையாய் இருக்க விழைந்தாலும் நடுநிலையாய் இருத்தல் என்பது மிகவும் கடினமானது. எனக்கு இதைப் பற்றி அதிகம் தெரியாது, என் மனதுக்கு இப்படித் தோன்றுகிறது என்று சொல்வது நடு நிலைமையா என்றால் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு பயன் கிடையாது.

நடுநிலையாய் இருத்தலால் பொதுநன்மை ஏற்படுதல் வேண்டும். அப்பொழுதுதான் அது நடுநிலைமை என ஏற்கப்படுகிறது, ஆனால் தற்காலிக பொதுநன்மையா அல்லது நீண்டகால பொதுநன்மையா என்று அறிய பலகாலங்கள் ஆகிவிடுகிறது. அப்படி இருக்க இன்னார் நடுநிலையாளர் எப்படி அடையாளம் காணுதல் எங்ஙனம்?

ஆகவே சட்டென்று யாரையும் நடுநிலையாளர், நடுநிலையாளர் அல்ல எனப் பிரித்துவிடுவது இயலாத காரியம். அதற்கு பதிலாக நடுநிலைமையுடன் இருக்க விரும்புவோர்.. விரும்பாதோர் என்று மட்டுமே பிரிக்க இயலும் என நம்புகிறேன். 

- தாமரை 

பலரின் கருத்துக்களின் அடிப்படையில் நடுநிலை பற்றிப் பொதுவான அடிப்படைகள் என்று பலரும் கருதுபவை..
1. பலரின் கோணத்தில் ஆராய்தல்
2. தன் தவறுகளை மறைக்காமல் ஒப்புக் கொள்ளுதல்
3. வெளிப்படையான கருத்துக்கள்
4. சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளால் பாதிக்கப்படாதது.
5. உணர்வுகளுக்கு இடமில்லை
6. நியாயம் மட்டுமே அளவுகோல்
7. பல்நோக்கு ஆய்வு
8. மனசாட்சியின் படியான செயல்பாடு
9. உறவுகள், பிணைப்புகள், சார்புகள் இல்லாத பொதுப்பார்வை. நண்பர், பகைவர், அறிந்தவர், உறவு, தெரியாதவர் என்ற பாகுபாடு காட்டாதிருப்பது
10. அறிந்த வரையில் உண்மையை மட்டுமே அடிப்படையாக கொண்டது.
11. நீடித்த நன்மையை அளிக்கக் கூடியது
12. அமைதியை, சமாதானத்தை உண்டாக்கக் கூடியது. இயன்றவரை அனைவருக்கும் நன்மைதரக் கூடியது
13. ஒரே அடிப்படை நீதியைக் கொண்டது.

நடுநிலைமை இயலாத ஒன்று என்பதற்கான வாதங்கள்


1. நடுநிலை நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து மாறுகிறது. 

2. நடுநிலைமை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுகிறது,

3. நன்மை தீமை நல்லது கெட்டது என்பது பற்றிய கருத்துக்கள் மாறுபடுகிறது.

4. நடுநிலை என்பது மாயை. எப்பொழுதுமே எதோ ஒரு பக்கம் சாய்ந்தே ஆக வேண்டி இருக்கிறது.

5. நடுநிலைமை நோக்கி செல்வதால் வளர்ச்சி குறையும். பல மாறுபட்ட செயல்பாடுகள், கோணங்கள், பார்வைகள் இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும்.

உலகமே குழம்பி இருக்கும் இந்த அம்சத்தின் உண்மைப் போருஅளைத் தேடும் விவாதம் அங்கே நீண்டு கொண்டே போகிறது.. அனுமார் வால் போல(அனுமார் வால் என்று நான் சொல்லக் காரணம் நல்ல விஷயமாக முடியும் என்பதால்)

நீங்களும் மன்றத்தில் இணைந்து இதுபோன்ற ஆரோக்கியமான வாதங்களில் பங்கெடுக்க இங்கே சொடுக்குங்கள்...


நல்ல விஷயத்துக்கு கூட்டம் சேர்த்தா தப்பே இல்லை..

அதுசரி, இதை வாசித்த நீங்கள் தெளிந்தாச்சா? இன்னும் இல்லை இன்னும் அதிகமாகக் குழம்பிட்டீங்களா?

 

10 comments:

Anonymous said...

சார் கொஞ்சம் பொறுங்க.. boss ஒரு நாள் லீவு கொடுத்தா நீட்டி நிதானமா வாசிச்சு கருத்து சொல்றேன்.. உங்க officeல மாதிரி மத்தவங்க officeல blog வாசிக்க எல்லாம் டைம் கொடுக்க மாட்டாங்க..

Anonymous said...

மற்றவன் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதை நீ அவனுக்கு செய்வதும், நீ மற்றவனுக்கு செய்ய விரும்பாததை மற்றவன் உனக்கு செய்யாமலிருப்பதும் தான்.p

Anonymous said...

//சார் கொஞ்சம் பொறுங்க.. boss ஒரு நாள் லீவு கொடுத்தா நீட்டி நிதானமா வாசிச்சு கருத்து சொல்றேன்.. உங்க officeல மாதிரி மத்தவங்க officeல blog வாசிக்க எல்லாம் டைம் கொடுக்க மாட்டாங்க..//

றிபீட்டே

Anonymous said...

புரிஞ்ச மாதிரி இருக்கு ஆனா புரியல

சி தயாளன் said...

ஆகா..இந்து கல்லூரி நாட்களுக்கு திரும்புகிறீர்களா...?

இந்தப் பதிவு பற்றி கருத்துக்கூறாமல் நான் நடுநிலமை வகிக்கிறேன் :-)

Anonymous said...
This comment has been removed by the author.
ARV Loshan said...

//என்ன கொடும சார்.. said...
சார் கொஞ்சம் பொறுங்க.. boss ஒரு நாள் லீவு கொடுத்தா நீட்டி நிதானமா வாசிச்சு கருத்து சொல்றேன்.. உங்க officeல மாதிரி மத்தவங்க officeல blog வாசிக்க எல்லாம் டைம் கொடுக்க மாட்டாங்க..//
ஹா ஹா,, ம்ம்ம் ஒத்துக்கொள்கிறேன்.. நீளமாத் தான் போச்சு.. ;)
லீவு எல்லாம் bossமாருங்க தர மாட்டங்க சகோதரா.. நாங்களா எடுக்கணும்.அதுக்கெல்லாம் தனி talent வேணும்.. ;)

//
pukalini said...
மற்றவன் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதை நீ அவனுக்கு செய்வதும், நீ மற்றவனுக்கு செய்ய விரும்பாததை மற்றவன் உனக்கு செய்யாமலிருப்பதும் தான்.p//
மெத்த சரி ..ஆனால் நான் நீட்டி முழக்கியதை நீங்கள் இப்படி சுருக்கியது அவ்வளவு நல்லா இல்லையே.. ;)

//
Anonymous said...
//சார் கொஞ்சம் பொறுங்க.. boss ஒரு நாள் லீவு கொடுத்தா நீட்டி நிதானமா வாசிச்சு கருத்து சொல்றேன்.. உங்க officeல மாதிரி மத்தவங்க officeல blog வாசிக்க எல்லாம் டைம் கொடுக்க மாட்டாங்க..//

றிபீட்டே//
அனானி, என்ன கொடும சாருக்கு சொன்னதையே உங்களுக்கு நான் உங்க பாணியிலே ரிப்பீட்டு அடிக்கிறேன்.. ;)

//
Risamdeen said...
புரிஞ்ச மாதிரி இருக்கு ஆனா புரியல//
அது தான் நடுநிலை.. குறிப்பா எங்க நாட்டில்..

//
’டொன் லீ said...
ஆகா..இந்து கல்லூரி நாட்களுக்கு திரும்புகிறீர்களா...?//
அது ஒரு காலம்.. விவாதங்கள்,பட்டி மன்றங்கள்.. நன்றி சகோதர பசுமையான நினைவுகளை உங்கள் பின்னூட்டம் ஊடக தந்ததற்கு.

//இந்தப் பதிவு பற்றி கருத்துக்கூறாமல் நான் நடுநிலமை வகிக்கிறேன் :-)//
இதிலேயுமா? கலிகாலமடா சாமி.

// Triumph said...
//பலரின் கருத்துக்களின் அடிப்படையில் நடுநிலை பற்றிப் பொதுவான அடிப்படைகள் என்று பலரும் கருதுபவை..
1. பலரின் கோணத்தில் ஆராய்தல்//

We cant say that its "நடுநிலை" coz many ppl agreed it. Generally, many ppl disagree with "நடுநிலை"..

//2. தன் தவறுகளை மறைக்காமல் ஒப்புக் கொள்ளுதல்//

is not this honesty? Just asking.

//
3. வெளிப்படையான கருத்துக்கள்//

COuld be

//4. சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளால் பாதிக்கப்படாதது.//
That is not being neutral.. You are gonna comfort the person so you cant be neutral..

//
5. உணர்வுகளுக்கு இடமில்லை
6. நியாயம் மட்டுமே அளவுகோல்
7. பல்நோக்கு ஆய்வு
8. மனசாட்சியின் படியான செயல்பாடு
9. உறவுகள், பிணைப்புகள், சார்புகள் இல்லாத பொதுப்பார்வை. நண்பர், பகைவர், அறிந்தவர், உறவு, தெரியாதவர் என்ற பாகுபாடு காட்டாதிருப்பது
10. அறிந்த வரையில் உண்மையை மட்டுமே அடிப்படையாக கொண்டது.//

Absolutely right...

//
11. நீடித்த நன்மையை அளிக்கக் கூடியது// again compromising...

//
12. அமைதியை, சமாதானத்தை உண்டாக்கக் கூடியது. இயன்றவரை அனைவருக்கும் நன்மைதரக் கூடியது//

compromising..

//

13. ஒரே அடிப்படை நீதியைக் கொண்டது.

// Right..//
உங்கள் கருத்துக்களின் படி அந்தக் கருத்துக்களின் சுருக்கம் தானா நாடு நிலை?

Anonymous said...
This comment has been removed by the author.
Unknown said...

நடுநிலமைக்கு இளையதம்பி தயானந்தா ஒரு தடவை சொன்ன கருத்து தான் அடிக்கடி என் நினைவில் வருவதுண்டு. காகம் என்ன நிறம் என்றால் கறுப்பு என்று சொன்னால் பலருக்குப் பிடிக்காது. ஆனால் அதற்காக காகம் வெள்ளை என்றால் அது முழுப்பொய்யாகி விடும். ஆகவே காகம் சாம்பல் நிறமானது என்பதே நடுநிலமை... சரி...நீங்கள் இணைந்துள்ள கருத்துக்களம் யாது என அறியமுடியுமா?

ம.தி.சுதா said...

என்னை நான் திருத்திக் கொள்கிறேன்.. உலகம் திருந்தாவிடில் நான் என்ன செய்யலாம்...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner