August 31, 2011

மண்ணாகிப் போன மங்காத்தா


அஜித்தின் ஐம்பதாவது படம், அதிலும் பெரிய நட்சத்திரப் பட்டாளம்.. வெங்கட் பிரபுவின் இயக்கம்.. ஏற்கெனவே ஹிட் ஆகிய பாடல்கள் என்று மங்காத்தாவுக்காகக் காத்திருந்ததன் பலனை அனுபவிக்க ஊடக அனுசரணை வழங்கியதால் கிடைத்த ஓசி டிக்கேட்டுக்களுடன் நிம்மதியாக இரவுக் காட்சிக்குப் போயிருந்தோம்...

ஆனால் சவோய் திரையரங்கில் முதல் காட்சி என்றது கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. காரணம் வழமையாகவே ஆங்கில, ஹிந்தி, சிங்களத் திரைப்படங்களை மட்டுமே திரையிடும் அத்திரையரங்கில் ஏதாவது வெகு சில பெரிய தமிழ்த் திரைப்படங்களை மட்டுமே திரையிடுவதுண்டு.

இல்லாவிட்டால் EAP நிறுவனம் வாங்கும் தமிழ்த் திரைப்படங்களின் முதல் காட்சியோடு சரி.
அதற்கும் ஆப்பு வைப்பதாக வேட்டைக்காரனின் முதல் காட்சி அமைந்தது பற்றி உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆர்வ மிகுதியால் ரசிகர்கள் ஆவேசப்பட்டு திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால் சவோய் திரையரங்குக்குப் பல லட்ச ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டதனால், இனி மேலும் தமிழ்த் திரைப்படங்களை த்திரையிடுவதே இல்லை என  EAP நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனாலும் இந்த மங்காத்தா அறிவிப்பு கொஞ்சம் ஆச்சரியம் தான். ஒரு வேலை அஜித் ரசிகர்கள் ரொம்ப நல்லவர்கள் என்று நினைத்தார்களோ? 
ஆனால் திடீரெனப் பெய்த மழையும் சேர்ந்துகொள்ள, 10.30 க்கு ஆரம்பிகவேண்டிய காட்சி திரையரகுக்கு முன்னால் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களின் முண்டியடித்தலுடன்  உள்ளே நுழைவதே பெரும்பாடாகியது.
கடைசியில் நண்பர்களின் கடும் முயற்சியினால் உள்ளே நுழைந்து ஆசனத்தில் இடம் பிடித்து 'மங்காத்தா' ஆரம்பிக்கும்போது நேரம் இரவு 11.45. 

ஓரளவு வசதியான ஆசனம் எனக்கும், என்னுடன் வந்தோருக்கும் கிடைத்தாலும், என் அருகே இருந்த இரு ஆசனங்களை வெளியே எங்களை உள்ளே எடுக்க உதவி மற்றவர்களை உள்ளே எடுத்துக்கொண்டிருந்த நண்பர்களுக்காகப் பிடித்துவைத்திருந்தேன்.
அந்த ஆசனங்களை வம்பினால் எடுக்க முயன்று, வாய்த்தர்க்கம் புரிந்து வலுச் சண்டைக்கு வந்த ஒருவரால் எழுத்தோட்டம், அஜித்தின் அதிரடி அறிமுகம் எல்லாம் பார்க்க முடியாமலே போச்சு...

ஆனால் ஒரே விஷயத்தை அந்தக் களேபரத்திலும் கவனித்தேன்.. அஜித் திரையில் வர கீழே இருந்த ஒருவர் ஓடிச் சென்று சீட்டுக்கட்டினால் திரைக்கு அபிஷேகம் செய்த 'கன் கொள்ளாக்' காட்சி... (அட பாவிகளா.. இங்கேயுமா?)

கொஞ்சம் அமைதியாக இன்னும் சில நிமிடங்கள் போக, கொஞ்சம் திரைப்படத்தோடு ஒன்றிக்க, மீண்டும் அதே வம்பு.. இம்முறை கொஞ்சம் கோபமாகக் கையினால் அடக்க வேண்டியேற்பட்டது எனக்கு.. 
பொது இடம், பதவி என்பதெல்லாம் கடந்து எழுந்த அந்தக் கோபம் தவிர்க்க முடியாதது.
நண்பர்களும் பொங்கி எழுந்துவிட்டார்கள்.
சில நிமிடப் பரபரப்புக்குப் பிறகு அந்த வம்பு நபர் வெளியே போய்விட அமைதியாகிப் போனாலும் எழுத்தோட்டம் தவற விட்டது, எழுந்த கோபம் குறையாதது படத்தை ரசிக்கவிடவில்லை.
எனினும் கதையின் வேகம் ரசிக்கவைத்துவிட இடைவேளையில் 'Strictly No Rules' அஜித் சொல்லிவிட , இனித் தான் "மங்காத்தாடா" என்று நானும் நினைத்துக்கொண்டேன்.

இன்று விடுமுறை முதலிலேயே எடுக்கத் தீர்மானித்திருந்ததனால் வீடு போனவுடன் விமர்சனப் பதிவொன்று போட்டிட வேண்டும் என்று திருப்தியோடு 'தலை'யை ரசிக்க ஆரம்பித்தால், எனக்குப் பின்னால் இருந்து படம் பார்த்துக்கொண்டிருந்த நம் நிறுவனத்தலைவர் 
"அடிபட்டு வெளியே நாம் தூக்கியெறிந்த பாம்பு அவ்வளவு நல்லதில்லை" என்று எச்சரிக்கை செய்ததால், சூழ்நிலை கருதியும், குடும்பத்தோடு வந்ததாலும் கொஞ்சநேரத்தில் புறப்படலாம் என்று முடிவெடுத்தேன்..
(அதற்குள் வெளியே காவல்துறை வேறு வந்து என்ன நடந்தது என்று என்னை அழைத்துக் கேட்டுப் போனதாலும் சில நிமிடங்கள் போயிருந்ததால் மீண்டும் ஒரு தடவை ஆரம்பமுதல் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்)

கடத்திய பணம் என்னவாச்சு என்று விநாயக், சகாக்களோடு தேடிக்கொண்டிருக்க, வாகனத்தை தேடி நாங்கள் வெளியே வந்தோம்..

படம் பாதியில் போச்சே என்ற கடுப்பு ஒரு பக்கம், தனியாக வந்திருந்தாள் துணிவாக நின்றிருக்கலாமே என்ற வெறுப்பு ஒரு பக்கமாக "மங்காத்தா" மண்ணாகிப் போச்சு எனக்கு.

பார்த்தவுடன் இப்படியான படங்களுக்கு சூடான விமர்சனம் வந்துவிடுமே, மங்காத்தாவுக்கு மட்டும் என்னாச்சு என்று அக்கறையாகக் கேட்டு மின்னஞ்சல், குறுஞ்செய்தி எனுப்பிய நண்பர்களுக்காக ஒரு சுய விளக்கம் இது..

(ரௌத்திரம் பார்க்கப் போனால் ஒரு வித்தியாச அனுபவம்.. மங்காத்தா முதல் நாளிலேயே ரௌத்திரம் காட்டவேண்டிய நிலை.. என்னடா லோஷா நடக்குது..
நல்லவனா இருக்க விடமாட்டாங்க போல..)

இன்றைய யாழ் பயணம் முடித்து, வந்து மீண்டும் முழுசாய் மங்காத்தா பார்த்த பின்னர் விமர்சனம் வரும்...
(ஓடிக்கொண்டிருக்கும் சொகுசு வண்டியில் பதிவை தட்டடிச்சு, பதிவேற்றுவதும் ஒரு சுகமான முதல் அனுபவம் தான்)

==============================
இன்னொன்று....

வேண்டாம் என்று 'விக்கிரமாதித்தன்' தடுத்தாலும் சொல்லித்தான் ஆகணும்..
காலியில் நடந்தது பார்த்தீங்களா?
இலங்கை அணியை அடிக்கடி மாற்றிக் குழப்புகிறார்கள் என்று தேர்வாளர்கள் மீது வரும் விமர்சனங்களுக்கு இடையிடையே நான் சொல்லும் பதில்.. இவ்வகையான தெரிவுகள்..
காலநிலை, கள நிலைக்கேற்ப செய்யப்படுபவை என்று....
(Selection of Horses for the causes)
இன்றைய அணித்தேரிவும் அத்தகையதே..

மந்திரவாதி எனப்பட்ட அஜந்த மென்டிஸ், ஒருநாள் தொடரில் பிரகாசித்து டெஸ்ட் அறிமுகம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷமிந்த எரங்க ஆகியோருக்கு மாற்றாக இன்று தெரிவு செய்யப்பட்ட சுரங்க லக்மால், ரண்டிவ் ஆகியோரின் பெறுபேறுகள் பாராட்டப்படக்கூடியவை.
273 என்ற ஒட்ட எண்ணிக்கைக்கு ஆஸ்திரேலியாவை மட்டுப்படுத்தியது பெரிய விஷயமே..


மைக் ஹசியை formக்குக் கொண்டு வந்தது மட்டுமே இலங்கைக்கு இனி சிக்கல்.
ஹசியின் இன்னிங்க்ஸ் திராவிட் பாணியிலான ஒரு பொறுப்பான ஆட்டம்.. பாவம் சதம் பெற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.. 
டில்ஷானின் சிறப்பான வழிநடத்தலுக்குக் கிடைத்த பரிசு ஹசியின் விக்கெட்.

டில்ஷான் ஒரு டெஸ்ட் அணித் தலைவராக இன்று தான் எனக்கு சில தீர்மானங்கள் மூலம் மகிழ்ச்சியளித்தார்.
ஆனாலும் இனி துடுப்பாடும் இலங்கை முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களையாவது பெற்று இரண்டாம் இன்னிங்க்சிலும் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும்.

இரண்டாவது இன்னின்க்சின் பத்து விக்கெட்டுக்களை எடுப்பது முரளிதரன் இல்லாத இந்த இலங்கை அணிக்கு சிக்கலாக அமையலாம்.
இன்றைய ஆஸ்திரேலியாவின் தடுமாற்றம் ஏழு ஆண்டுகளுக்கு முதல் இலங்கையில் இடம் பெற்ற இலங்கை - ஆஸ்திரேலிய தொடரை மீண்டும் ஞாபகப்படுத்தியது.
அந்தத் தொடரின் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் முதல் இன்னிங்சில் சுருண்டு பின்னர் மூன்று டெஸ்ட் போட்டிகளையுமே போராடி வென்றது அப்போதைய பொன்டிங்கின் ஆஸ்திரேலிய அணி.

ஆனால் இப்போதைய அணியில் எத்தனை மாற்றங்கள்..
அப்போது வென்று கொடுத்த ஷேன் வோர்னும் இல்லை. ஏனையோர் தடுமாறிய வேளையில் ஓட்டங்கள் குவித்த மார்ட்டின். லீமனும் இல்லை.

இலங்கைக்கு முரளியும் வாசும் மட்டுமே இல்லை.. காலி ஆடுகளம் இருக்கிறதே.. 
ஹெரத்தின் துல்லியமும், ரண்டீவின் சுழற்சியும் மிக்க நம்பிக்கை தருகிறது.
பார்க்கலாம்..
ஆஸ்திரேலியாவின் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சை அனுபவம் வாய்ந்த நம்பகரமான துடுப்பாட்ட வீரர்கள் முறி யடித்தால் எல்லாம் சுபமே..


இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்...
August 30, 2011

அவசரகால சட்டம் - நீக்கமும், நோக்கமும்.. இனி? + தூக்குத் தண்டனை தள்ளிவைப்பு


இலங்கையில் 1977ஆம் ஆண்டுக்குப் பிறந்த எங்கள் தலைமுறையினர் எல்லாருக்குமே சாதாரண சட்டத்துக்கும் அவசரகால சட்டத்துக்கும் (Emergency Regulations) இடையில் வித்தியாசம் தெரிந்திராது. இதுவே இலங்கையின் சட்டங்களின் நிலையாகிப் போனது.

அவசரகால சட்டம் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவே சர்வதேசத்தில் பிறப்பிக்கப்படும் என்று சட்டங்கள் பற்றி நாம் படித்துள்ளோம்..
இலங்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமாக இலங்கை சுதந்திரம் அடையும் போது உருவாக்கப்பட்ட பொதுவான சட்டம் (Public Security Ordinance) 1953இலேயே மக்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராகக் கிளர்ந்த்போது முதலாவது அவசரகால சட்டத்தில் கொஞ்சம் வளைந்துபோனது.

இலங்கையின் அவசரகால சட்டமும் ஏனைய நாடுகளில் உள்ளதைப் போலவே அதே விதமான அடிப்படை விதிகளையே கொண்டிருப்பதாலோ என்னவோ, இலங்கை அரசுக்கெதிரான கிளர்ச்சிகள் 1970களில் உக்கிரமடைய ஆரம்பித்த நேரத்தில் புதிய மேலும் இறுக்கமான சட்டம் ஒன்று தேவைப்பட்டது.
அந்த வேளையில் உருவாக்கப்பட்டது தான் இன்று வரை எத்தனையோ இளைஞர்களை இல்லாமல் செய்தும், காணாமல் ஆக்கியும், கண்ணீர்க்கடலில் பெற்றோரையும் உறவினர்களையும் தள்ளி, மனைவியர் பலரை நிஜமாகவும், பெயரளவிலும் விதவைகளாகவும் வைத்திருக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டம் - The Prevention of Terrorism Act 0f 1979.அவசரகால சட்டத்தின் சில நலிவான பாகங்களை வலுவூட்டும் விதமாக சட்டத்தின் அத்தனை ஓட்டைகளையும் அடைத்து இறுக்கமாகக் கொண்டுவரப்பட்ட இலங்கையின் பயங்கரவாத தடுப்பு சட்டம் உலகின் அரசுகளால் கொண்டுவரப்பட்ட சட்டங்களில் மிக வலிதானதாகக் கருதப்படுகிறது.

அவசரகால சட்டத்தை நாம் அண்ணனாக எடுத்துக்கொண்டால், பயங்கரவாத தடைச் சட்டம் தம்பி என்று சொல்லாம்.
அவசரகால சட்டம் தான் இருக்கிறதே, அது இருக்க அப்புறம் ஏன் தனியாக பயங்கரவாத தடைச் சட்டம்???

அவசரகால சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் வாக்களிப்பில் விடப்படவேண்டும்.. ஆனால் PTA அரசினால் ஜனாதிபதியின் உத்தரவோடு நீட்டிக்கப்படலாம்.

மற்றும்படி பெயர்கள் தான் வேறுபட்டனவே தவிர விஷயம் ஒன்றாகவே இருந்துவருகிறது.

ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ரோகன விஜேவீர தலைமையில் மக்கள் விடுதலை முன்னனி (JVP) முதலில் ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தபோது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கே பயன்படுத்தியது அவசரகால சட்டத்தைத் தான்.
தமிழ் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் J.R.ஜெயவர்த்தன மூர்க்கத்தனமாக அதை அடக்கக் கையில் எடுத்த ஆயுதம் தான் பயங்கரவாதத் தடைச் சட்டம்.

இதன் மூலம் நிறைவேற்றதிகாரம் கையில் இருந்தததால் ஜனாதிபதியே நேரடியாக நாடாளுமன்ற அனுமதியில்லாமல் பயங்கரவாதத்தை மட்டுமன்றி, அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் எந்தவொரு சக்தியையும் நசுக்கும் வகையில் இந்த சட்டத்தின் சில பிரிவுகள் இன்றுவரை உதவுகின்றன.

கூட்டம் கூட்டும் உரிமை. கைது செய்து, தடுத்து வைத்து, விசாரணை செய்யும் உரிமை, ஏதுவான காரணம் இன்றி எவராலும் எங்கே வைத்து விசாரிக்கக் கூடிய உரிமை, காரணம் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் பாதுகாப்புப் படையினரால் தேடல் நடத்தக்கூடிய வசதி, நீதிம்ன்டற உத்தரவு எந்தவொரு நடவடிக்கைக்கும் தேவைப்படாத வசதி என்று இந்த இரு சட்டங்களுக்கும் பொதுவான பல விடயங்கள் உள்ளன.

எனினும் இலங்கையின் நீதிமண்டரங்களிலும் ஒரு வழக்கு அவசரகால சட்டத்தினூடாக செல்வதை விட பயங்கரவாதத் தடை சட்டத்தினூடாக  செல்லும்போது அதன் வலிமையும் சந்தேகனபருக்குக் கிடைக்கும் தனடனையும் அதிகமானதாக உள்ளது.
(அனுபவபூர்வமாக உணர்ந்தவன் நான்)
இதனால் தான் அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீக்கி விட்டதாகப் பெரியளவில் பிரசாரம் செய்தும் கூட அது முதல் நாளில் தந்த பெரிய ஒரு போலியான மகிழ்ச்சியும் பிரம்மாண்ட தன்மையும் அடுத்த நாளே புஸ் ஆகிப் போயின..
வெளிநாடுகளில் கூட அரசின் இந்த விளம்பரம் பயன்படவில்லை.

அவசரகால சட்டம் போனாலும் அதன் தம்பி பயங்கரவாதத் தடுப்பு சட்டம் இருப்பதால் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை என்பது சட்டம் தெளிந்த அறிஞர்கள் அனைவருமே ஏற்றுக்கொண்ட ஒரு விடயம்.
அதிலும் அவசரகால சட்டத்தில் இல்லாத மேலதிக இறுக்கங்கள் வேறு அதிலே உள்ளன.

உதாரணமாக சாதாரண சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும்போது அவர் மணித்தியாலங்களுக்குள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும்; அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும்.
அவசரகால சட்டத்தின் கீழ் அவர் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படலாம்.நீதிமன்றத்தில் ஒரு வாரத்துக்குள் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் கூட அந்த நபர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கான ஒரு சான்றே அன்றி வேறேதும் இல்லை.
அவசர கால சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் மட்டும் ஒருவர் 18 மாதகாலம் வரை தடுத்துவைக்கப்படலாம்..

அது நீதிமன்ற உத்தரவு இல்லாமலேயே மேலும் நீட்டிக்கப்படலாம்..
இப்போது அது தான் இல்லையே என்று ஆறுதல்படுவோருக்கு -----
பயங்கரவாதத் தடை சட்டத்தில் பாதுகாப்பு செயலாளர்  (1997ஆம் ஆண்டு முதல் சேர்க்கப்பட்ட புதிய விதி ) / ஜனாதிபதியின் உத்தரவுடன் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஒருவர் எங்கு வேண்டுமானாலும் தடுத்து வைக்கப்படலாம்..

எனவே தடுப்புக் காவல், கைது, விசாரணை போன்றவற்றில் இனியும் கூட மாற்றங்கள் இருக்காது..
அவையெல்லாம் அப்படியே இருக்கும்.. ஆனால் நடவடிக்கை பாயும் சட்ட விதி மாறுபடும்..

பாதுகாப்பு, கைது சட்ட நடவடிக்கைகள் பற்றி ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கள் இவ்வளவு நாளும் அவசரகால விதிகளின் கீழும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும் மட்டறுக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு வந்தன(இது S.J.சூர்யாவின் இருக்கு - ஆனால் இல்லை காமெடி போல தான்)
இனிய அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக வாய் திறந்தாலும் படை நடவடிக்கை, கைதுகள் சம்பந்தமாக அதே பழைய குருடி கதவைத் திறடி கதை தான்.

அரசியல் கைதுகள் மட்டுமே இனி வரும் காலத்தில் வழக்குகள் மூலமாக வெல்லப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இதனால் தான் பல்வேறு அமைச்சர்களும் அவசரகால விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 'சாதாரண' சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்று சொல்லியுள்ளார்களே தவிர, விடுவிக்கப்படுவார்கள் என்றோ, அவர்கள் 'அரசியல் கைதிகள்' என்றோ சொல்லவில்லை.

இனியும் நாடாளுமன்ற அங்கீகாரம் ஜனாதிபதிக்கோ, பாதுகாப்பு செயலாளருக்கோ தேவைப்படாது.. (அது இவ்வளவு நாளும் மட்டும் தேவைப்பட்ட மாதிரி)
விரும்பியபடி PTA மூலமாக நடவடிக்கைகளை எடுக்க முடியும்.ஆனாலும் அரசியல் வட்டார முணுமுணுப்பு ஒன்று உள்ளது.
அது அவசரகால சட்டத்தை நீக்குவதாக ஜனாதிபதி எவ்வாறு அறிவிக்கலாம் என்பது தான்.
அடுத்த மாதம் ஏழாம் திகதியே இப்போது நடைமுறையில் உள்ள அவசரகால சட்டம் காலாவதியாகிறது. அதுவும் நாடாளுமன்ற நடைமுறைகளின்படி சபாநாயகரே அதை அறிவித்து நீக்க வேண்டும். அப்படியிருக்க நாடாளுமன்ற சிறப்புரிமைகளில் ஜனாதிபதி தலையிட்டது தான் அந்த சிக்கல்.
ஆனாலும் அறிவித்தலைக் கொடுக்க முதல் நாளே ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வந்து சபையை நடத்தியது இதற்கு ஒரு ஒத்திகை தான் என்று சொல்லப்படுகிறது.
பூனைக்கு மணி கட்டும் எலிகள் தான் இல்லையே,,

வெளிநாடுகளின் எச்சரிக்கை, நிர்ப்பந்தம் என்பதெல்லாவற்றையும் இந்த அவசரகால சட்ட நீக்கம் மூலமாக சமாளித்ததாக அரசாங்கம் காட்டி, ஐ.நாவில் வரப்போகிற நடவடிக்கையை முறியடிக்கத் தன் நேச நாடுகளிடம் உதவி கேட்கிறது.

முஷ்டி முறுக்கிக் கொண்டிருந்த இந்தியா தன் தலைப் பேன்களுடன் தடுமாறுகிறது..
அன்னா ஹசாரேயும், மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டமும் இந்தியாவைக் கொஞ்சம் சலனப்படுத்தி இலங்கையின் பிரச்சினையிலிருந்து அப்புறப்படுத்திவிட, நாமோ இன்னும் வாள் போனாலும், இன்னும் வாசலில் தொங்கிக்கொண்டிருக்கும் கொடுவாக் கத்தியை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் ஒரு முக்கிய விடயம் - அவசர கால சட்ட நீக்கத்தின் பின் கிரீஸ் மனிதர்களின் அட்டகாசங்கள் கிழக்கு, தென் கிழக்கு, மலையகப் பகுதிகளில் அறவே இல்லை..
ஆனால் வடக்கில் இன்னமும் உள்ளது.
"அவசரகால சட்டம் தான் வேண்டாம் என்றீர்களே.. இப்போ நீக்கிவிட்டோம்.. இனி எப்படி அந்த மர்ம மனிதர்களைக் கைது செய்வது ?" என்று அரசாங்கம் கையை விரித்துவிடும் என்று சிலர் ஆரூடம் கூறுகிறார்கள்.
எங்கள் அப்பாவி மக்களுக்குத் தான் அவசரகால சட்டம் போனாலும் PTA இருக்கு என்று தெரியாதே..


-----------------------------------


இன்று ஆறுதல் தந்த ஒரு விடயம், ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்துக்காக இருபது வருடங்கள் சியரியில் வாடிக்கொண்டிருக்கும் மூவருக்கு நாள் குறித்துக் காத்திருந்த தூக்குத்தண்டனை நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டமை..

ஒத்திவைக்கப்படுமா என்று சந்தேகத்தோடு இருந்த எம் எல்லாருக்கும், எட்டு வாரங்கள் தள்ளிப் போனது கொஞ்சம் ஆறுதல் என்றாலும், இந்த எட்டு வாரத்துள் இன்னும் இருக்கமாகுமோ என்ற சந்தேகம் எழாமலும் இல்லை.

ஒன்று பட்ட மக்கள் எழுச்சியும், அதிலும் அரசியல்வாதிகளின் தலையீடு இன்றிய ஒரே குறிக்கோளுடனான போராட்டமும் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி புதியது.
இந்த ஒரு மனிதாபிமான கடமைக்கு ஒன்றாகக் குரல் கொடுத்துக் களத்தில் குதித்த மக்கள் இனியும் தங்களுக்காக தாங்களே வீதியில் இறங்குவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
இது எம் நாட்டிலும் தொற்றிக்கொண்டால் நல்லது என்ற நப்பாசையும் வருகிறது.
எங்கள் நாட்டில் வீதிக்கு இறங்கப் பயம், நம்பிக்கையின்மை மட்டுமன்றி ஒற்றுமையின்மையும் முக்கியமானது.

எதுவரினும் பரவாயில்லை என்று தன்னலமின்றி இறங்கிப் போராடிய அத்தனை தமிழக உறவுகளும் பாராட்டுதற்குரியவர்கள்..
அந்தத் துணிச்சலும் ஒருமித்த குரலும் மரியாதைகளுக்குரியவை.
வணங்குகிறேன்.


ஆனால் தன்னைத் தான் மாய்த்துக்கொண்ட செங்கொடியின் மரணம் கவலைக்கும் அனுதாபத்துக்கும் மட்டுமன்றி, கண்டனத்துக்கும் உரியது.
முத்துக்குமார் அன்று.. இன்று செங்கொடி..
இலங்கையில் நாம் இழந்த உயிர்கள் போதும்.இனியும் இழக்க உயிர்கள் வேண்டாமே..

தமிழக முதலமைச்சர் தூக்குத் தண்டனையை ரத்தாகும் அதிகாரம் இல்லை என்றவுடன், 'கை விரித்தார் ஜெ' என்று ஏமாற்றத்துடன் இருந்த மக்கள், இன்று தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேறிய தீர்மானத்தால் மகிழ்ந்தோம் என்றால் மறுபேச்சில்லை.
அந்த நம்பிக்கை ஒளியூட்டிய தமிழக முதல்வருக்கு நன்றிகள்.

ஆனால் இந்த மூன்று உயிர்களும் காப்பாற்றப்ப்படுமானால் அது உண்மையாக மனிதாபிமானத்தின் வெற்றியாக அமையும் என்று உறுதிபடக் கூறலாம்.
மீண்டும் சட்ட சிக்கல்கள், ஓட்டை ஓடிசல்கள் பேச்சுக்களில் வந்து போகும்..
இந்திய ஜனாதிபதியின் கருணை மன்னிப்பு, தமிழக முதல்வரின் அதிகாரம் என்று வருகின்ற வாரங்கள் இந்திய சட்டப்புத்தகங்களின் சகல பக்கங்களையும் புரட்டிப்போடும்.

ஆனால்ம் சில நாட்கள் கொதித்த மரணதண்டனைக்கு எதிரான குரல்கள் எட்டுவார கால இடைவெளிக்குள் அடங்காமல், மறக்காமல் இருக்கட்டும் என்பதே எனது விருப்பம்.


August 16, 2011

ரௌத்திரம்
கோ தந்த பிரமிப்பு + திருப்திக்குப் பிறகு வரும் ஜீவாவின் படம் என்பதால் எதிர்பார்ப்போடு காத்திருந்த படம்.
பாரதியின் புதிய ஆத்திசூடியின் "ரௌத்திரம் பழகு" என்பது எப்போதும் என மனதுக்கு மிக நெருக்கமான வாசகம் என்பதும் திரைப்படம் பற்றிக் கொஞ்சமாவது பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
(வேலைப்பளு மிகுந்த கடந்த வாரங்களால் ஒசியாகப் பார்க்கக் கிடைத்தும் பிளையார் தெரு கடைசி வீடு, மார்க்கண்டேயா மிஸ் ஆனதில் ஆறுதல்)


தன்னை சுற்றி சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஒருவன் பொங்கியெழும் ரௌத்திரம் தேவையானது என்று போதிக்கிறது கதை.

புதுமுக இயக்குனர் கோகுலின் கதையை நம்பி எடுத்திருக்கும் ஜீவா துணிச்சல்காரர் தான். ஆனால் திரைக்கதையிலும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம்..

முக்கிய நட்சத்திரங்கள் - ஜீவா, ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீநாத், சத்யன், பாபு அன்டனி, சென்ராய்

இதில் பிரகாஷ் ராஜ் ஆரம்பக் காட்சிகளில் பளீர்.. திரைப்படத்துக்கு ஒரு கம்பீரமான அறிமுகத்தைக் கொடுக்கிறார்.
மிகச் சிறிய பாத்திரமாக முடிந்துபோனது கவலை தான்.

பாபு அன்டனி வீணடிக்கப்பட்டதாக உணர்கிறேன்..

சென்ராய் - குருவி தலையில் பனங்காய். படம் ஆரம்பித்த நேரத்திலிருந்து எல்லாரும் டெர்ரராக சொல்லும் 'கெளரி' இவர் தான் எனும்போது சப்பென்றாகிவிடுகிறது.. (படம் இதுவரை பார்க்காதோருக்கு வெரி சொறி)
எவ்வளவு தான் கோரத்தைக் காட்ட முனைந்தாலும் காமெடியாகவே இருப்பது படத்தின் weak link.

ஸ்ரீநாத் - கலகலக்க வைக்கிறார். நல்ல நடிப்புத் திறமையுள்ள இவருக்கு, ஈரம் படத்துக்குப் பின் கொஞ்சம் பெரிய பாத்திரம்.

சத்யன் - சில காட்சிகளே ஆனாலும் சிரிக்க வைக்கிறார். அப்பாவித் தனமாக பில்ட் அப் காட்டும் சீன்கள் சிரிப்பு வெடிகள். குறிப்பாக "அட ஏன் நீங்க என் பெயர் சொல்லல?" மற்றும் "ஏன் ஆர்ம்சைத் தொட்டுப் பாருங்க"

ஜெயப் பிரகாஷ் - படத்தில் அதிகமாக என்னைக் கவர்ந்தவர். குணச்சித்திர நடிப்பில் அடுத்த விருதுக்குரியவர் தயாராகிறார்.
ஒவ்வொரு படத்திலும் முத்திரை பதித்து வருகிறார்.

கவுன்சிலர், கல்லூரி ரவுடி, கௌரியின் நேரடி உதவியாளர், ஜீவாவின் தாயார், கிட்டுவாக வரும் ஹிந்தி நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா என்று சிறு சிறு பாத்திரங்களும் இயற்கையாகவே பொருந்திப் போகின்றார்கள்.ஸ்ரேயா - கொஞ்சம் நடிக்க முயன்றிருக்கிறார். வேறெந்தப் படத்திலும் இதுவரை (நான்) பார்த்திராத அளவுக்குக் கவர்ச்சி காட்டுகிறார். அதுவும் ஒரு பாடல் காட்சியில் அப்படியொரு கவர்ச்சி.. தனியே மேல்சட்டையுடன் ஓடுகிறார், தாவுகிறார், தாவுகிறார்...
பாவம் அப்பாவி ஜீவா.
அனேக காட்சிகளில் ஜீவாவின் அக்கா மாதிரியொரு தோற்றம்.. முப்பது பராயம் நெருங்குகிறதோ?


ஜீவா- படிப்படியான முன்னேற்றம் என்றால் அது ஜீவா தான். கோவுக்குப் பிறகு இந்தப் பாத்திரம் சரி தான். தன்னால் முடிந்தளவு எல்லாமே செய்கிறார். ஆக்ரோஷம், துடிப்பு, காதல் என்று அனைத்து உணர்ச்சிகளையும் அந்த கூர் மூக்குக்கு இடையில் இருக்கும் இரு குட்டிக் கண்களில் கொட்டித் தருகிறார்.
தந்தையின் தயாரிப்பில் நீண்ட காலத்துக்குப் பின் இறங்கியுள்ளதால் அதிக, அதீத ஈடுபாடோ?

இசை - பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் தனது அறிமுகத்தில் பெரிதாக ஈர்க்கவில்லை பிரகாஷ் நிக்கி..
பாரதியின் வரிகளில் அறிமுகப் பாடல் ஏமாற்றம்.
சண்டைக்காட்சிகளில் அடிதடியுடன் இசையும் சேர்ந்து இரைச்சல்.

ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம்
ரசிக வைக்கிறார். கமெரா கோணங்களில் ஈர்க்கிறார். தூர இருந்து கமெராவில் சில காட்சிகள் கண்களுக்குக் கொடுவருவதில் சிம்பிளாக சாதிக்கிறார்.
பாடல் காட்சிகளில் கற்பனை வறட்சி இருந்தாலும் ஒளிப்பதிவால் ஏதோ சமாளித்துவிடுகிறார்.

சண்டைக்காட்சிகள் - நான் மகான் அல்லவில் பாராட்டுக்களைப் பெற்ற அதே அனல் அரசு. வித்தியாசமாக அமைத்து அட சொல்லவைத்துள்ளார்.கலக்கல்.
மிரட்டுகிற மாதிரி செய்து காட்டி இருக்கிறார்.
ஜீவா ரௌத்திரத்துடன் அடிக்கும் ஒரே அடியில் வில்லன்கள் விழுந்துவிடுவது கொஞ்சம் உறுத்தினாலும், தனுஷின் சண்டைக்காட்சிகலையே நம்பும் எமக்கு, தாத்தா பிரகாஷ்ராஜிடம் பழகிய வித்தைகளை அதே வேகத்துடன், நியாயத்துடன் அடிக்கும் அடிகள் இடி போல இறங்கும் (நன்றி முன்பு வாசித்த ராணி காமிக்ஸ் ;)) என்பதை நம்பலாம்.


இயக்குனர் கோகுல் முதல் திரைப்படத்திலேயே சமூக நீதி, சமூக நியதிகளை அக்கறையுடன் போலியில்லாமல் பேசி இருப்பது அவர் மீது நம்பிக்கையைத் தருகிறது.
எனினும் முதல் பாதியில் காட்டியுள்ள நேர்த்தியையும் வேகத்தையும் இரண்டாம் பாதியிலும் காட்டியிருந்தால் பாராட்டு மழையும் வசூல் மழையும் சேர்ந்தே பொழிந்திருக்கும்.

இயக்குனரை சில பாத்திரப் படைப்புக்களுக்காகப் பாராட்டும் அதே இடத்தில் தான் அளவுக்கதிகமான வில்லன் கூட்டம், ஓவர் பில்ட் அப்புடன் வரும் சென்ராய், ராஜேந்திரன் போன்ற பாத்திரங்களைக் காட்டி சொதப்புவதில் குட்டவும் வேண்டி வருகிறது.
கோகுல் இந்தக் குறைகளைக் களைந்து அடுத்த திரைக்கதையை சீராகத் தந்தால் இன்னொரு ஷங்கராக வந்தாலும் ஆச்சரியமில்லை என்பேன்.

முடிவு (இதை சொல்லாமல் விடுவது தார்மீக நியாயம்) கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தால் படம் கொஞ்சம் ஓடி இருக்குமோ என்னவோ? ஆனால் இப்படித்தான் அமைய வேண்டும் என்று முடிவெடுத்து அதையே செய்தியாகத் தந்துள்ள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தவே வேண்டும்.

ரௌத்திரம் - நல்ல முயற்சி.. ஆனால் முழுமையில்லை.


பி.கு ஆனால் மு.கு (பிற்குறிப்பு ஆனால் முக்கியமான குறிப்பு)

சமூகத்திலே எது நடந்தாலும் எமக்கு என்ன என்று இருக்கும் பலர் போல இருந்துவிடாது, யாராவது துணிச்சலான ஒருவர் தட்டிக் கேட்க முன்வரும்போது தான் நீதி, நியாயம் கிடைக்கும் என்ற செய்தி மிக முக்கியமானது தான்.

அதை நேரடியாகப் படம் பார்க்கும் திரையரங்கில் உணர்ந்தேன்..

ஈரோஸ் திரையரங்கில் கிடைத்த அழைப்பில் நான் மனைவி,மகனுடன் தான் சென்றிருந்தேன்.
திரையரங்கைப் புதுப்பித்துள்ளார்கள். திருப்தியாக உள்ளது.
திரை,ஆசனங்கள் புதிதாகியுள்ளன. ஏசி நன்று.. தரைவிரிப்பு அழகாக உள்ளது. ஆனால் Dolby ஒலித்தெளிவு போதாது.

நாம் இருந்த Balconyஇல் எங்களுக்குப் பின் ஆசனத்தில் தனியாக ஒரு நபர் அமர்ந்திருந்தார். நடுத்தர வயது. இடைவேளை நேரம் ஹர்ஷு ஓடிச் சென்று பல்கனியின் விளிம்பில் நின்றதை எமக்குக் காட்டிவரும் அவரே.

ஆனால் இடைவேளையின் பின் ஸ்ரேயாவின் கவர்ச்சிமிகு பாடல் காட்சி போய்க்கொண்டிருந்த நேரத்தில் எனக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்த அவர் அசாதாரணமாக அசைவது போலிருந்தது.
திரும்பிப்பார்த்தால் அவரது கைகள் ஆசனத்தின் மேலும் கீழும் அசைந்துகொண்டிருந்தன..புரிந்துகொண்டேன்.
அவருக்குப் பின்னால் யாரும் இருக்கவில்லை.
ஆனால் அவரின் வலது மூலையில் இரு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் கவனித்தார்களோ தெரியாது.

பொது இடத்தில் இப்படி அசிங்கம் செய்கிறாரே என்று ஒரு முறைப்பு முறைத்தேன்..
இருட்டுக்குள் அவசர அவசரமாகத் தன்னை சுதாரித்துக்கொண்டு என் கண்களைத் தவிர்த்தார்.

கொஞ்ச நேரத்தின் பின்மீண்டும் ஏதோ அரவம் கேட்டவுடன் திரும்பினேன்.. தலையைக் குனிந்த அந்த ஆசாமி, அவசர அவசரமாகத் தான் சேர்ட்டை இழுத்து தன கால்சட்டையை மறைத்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டார்.

முதல் தரமே எழுந்து அறைந்திருக்கலாமோ என்று யோசித்தாலும், பொது இடம் என்பதிருக்க, அவன் யாரையும் தொந்தரவு செய்யாமல் தன்பாட்டில் தானே சுய இன்பம் பெற்றுக்கொண்டிருந்தான் என்ற எண்ணமும் வந்தது.
பொது இடமொன்றில் அவன் செய்தது தப்பா இல்லையா என்ற எண்ணம் மனதில் இன்னும் உண்டு..
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

August 15, 2011

இந்தியா ...


முதலில் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள் என் அன்புக்குரிய அத்தனை இந்திய நண்பர்களுக்கும்..

சுதந்திரம் என்ற சொல் எனக்கு எப்போதும் இரு நாடுகளை ஞாபகப்படுத்தும்..

ஒன்று இந்தியா.... பாரதியின் கவிதைகள், காந்தியின் அகிம்சை, பகத் சிங்கின் வீரம், தியாகிகளின் போராட்டங்கள்....

அடுத்தது அமெரிக்கா .. அந்த வலிமையான போராட்டமும், சிதறிக்கிடந்த குடியரசு மாநிலங்களை ஒன்றாக இணைத்ததும், அமெரிக்காவின் சுந்தந்திரப் போராட்டப் பிரகடனமும்..அதன் பின் தம்மை ஆண்ட பிரித்தானியரையே தம் பின்னால் வரச் செய்த வளர்ச்சியும்..

எமக்குத் தான் 'சுதந்திரம்' என்ற சொல்லின் மகத்துவம், அது தரும் உணர்ச்சி இன்னும் முழுமையாகக் கிட்டவில்லையே...

-----------------

இந்தியா இலங்கைக்குத் தந்த தாக்கங்கள்; தந்துகொண்டே இருக்கும் தாக்கங்கள் பற்றி அடுக்கப் போனால் மொழி, அரசியல், கலை, உணவிலிருந்து இன்றைய எம் வலைப்பதிவு வரை வந்து வாழ்க்கை முழுக்க நிறைக்கும்..

இன்றைய விடியலில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு "இந்தியா என்றவுடன் உங்கள் மனதிலே உடனே ஞாபகம் வருவது என்ன?" என்று நேயர்களிடம் கருத்துக் கேட்டிருந்தேன்....

அப்பப்பா எத்தனை விதமான கருத்துக்கள்..
இந்தியா - ஒரு வித்தியாசமான கலவை

அதிகமாக சொல்லப் பட்டவையும் வித்தியாசமானவையாகக் குறிப்பிடப்பட்டவையும்..

அதிகமாக சொல்லப் பட்டவை முதலில்..

மகாத்மா காந்தி (அதிகப்படியானோரின் தெரிவு)
கலைகள்
சினிமா
கோவில்கள், தலங்கள்
அப்துல் கலாம் (அட பாருங்களேன் சச்சினைக் கூட வென்றிட்டார்)
சச்சின் டெண்டுல்கர்
சேலை, வேட்டி
ரஹ்மான்
தாஜ்மஹால்
இளையராஜா
கமல்ஹாசன்
MGR
பெண்களின் ஆடைகள்
விஜய்
அரசியல் நாடகங்கள் (முள்ளிவாய்க்கால் துரோகம் முக்கியமாக சொல்லப்பட்டது)
கலைஞர் கருணாநிதி (அவரது சூழ்ச்சி, கபடங்கள் எல்லாமே கிழிக்கப்பட்டன)
ஜெயலலிதா
கிரிக்கெட்
உலகக்கிண்ணம்
இந்தியத் தேசிய கீதம்
தேசிய ஒற்றுமை
IPKF  (இந்திய அமைதி காக்கும் படையின் இலங்கை வருகை)
பாரதி
வைரமுத்து
திலீபனின் உண்ணாவிரதம்
IPL
அரசியல்வாதிகள்
2G Spectrum ஊழல்

ஒரு நேயரின் வாசகம் - நம்மினத்தை நிர்க்கதிக்குள் தள்ளிய மூல சூத்திரதாரி...

எனக்கும் தலைப்புப் பற்றி நேயர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது மனதில் எனக்கும் இந்தியா பற்றி எவ்வளவோ விஷயங்கள் வந்து போனது..

சிறுவயதில் இந்தியா என்பது எனக்கு அறிமுகமானது தமிழக அரசியல் மூலமாக.. அப்பா தீவிர MGR ரசிகர்.. MGR இறக்கும் வரை தீவிர அதிமுக அனுதாபி. அதன் பின் கலைஞரின் தமிழுக்காக தி.மு.க தவறு செய்தாலும் மெளனமாக ரசித்தவர்.
அப்போது ஐந்து வயது கூட ஆகியிருக்கவில்லை ஆனால் அப்பா வீட்டில் அரசியல் பேசும்போது மனதில் திமுக - அதிமுக, MGR - கலைஞர் என்பன தான் இந்தியாவின் அமசங்கலாக மனதில் பதிந்து போனவை.

சினிமா ஏனோ இந்தியாவாக மனதுக்குள் நிற்கவில்லை. (அப்போதே அப்படி ஊறிவிட்டது போலும்)
அதன் பின்னர் கிரிக்கெட்.. அப்போது ஸ்ரீக்காந்த், கவாஸ்கர், கபில்தேவ் என்பவர்கள் இந்தியாவின் பிம்பமாக மாறிப்போனார்கள்.
இந்திய அணியின் ரசிகனான எனக்கு ஸ்ரீக்காந்த், அசாருதீன், வெங்க்சர்க்கார் ஆகியோர் என் ஹீரோக்கள்.
87ஆம் ஆண்டு வரை நீடித்த இந்த உறவு அந்த ஆண்டில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை (!?) நுழைந்தபின் முழுக்க மாறிப்போனது.

இடையில் எனது வாசிப்புப் பழக்கம் தொற்றிக்கொண்ட காலத்தில் முதலில் அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம் பின்னர் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி என்று இந்தியப் பேச்சுவழக்கு இந்தியா என்றவுடன் என் மனதில் நிறையும் பல எண்ணங்களாகிப் போயின.

அதன் வழியாக மனதில் பதிந்து போன இந்தியர்கள் மனதுக்கும் நெருக்கமாகிப் போனார்கள்..
மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா, இந்திரா காந்தி, ஏன் எழுத்தாளர்கள்.. இப்படிப் பலர்..
நான் வாசித்த மகாபாரதமும், ராமாயணமும் இந்தியாவைப் பற்றிய பெருமையான எண்ணங்களை மனதில் விதைத்தது.
இன்றுவரை இந்தியாவுக்கு எப்போது பயணித்தாலும் சிறுவயதில் மகாபாரதத்தில் வந்த இடங்கள் எங்கேயாவது இருக்கா என்று தேடும் சுவாரஷ்யம் நீடிக்கிறது.
சிறுவயதில் மனதில் நிறைந்த வாசிப்பு மூலமாக இன்றும் கூட இந்திய அரசியலின் சுவாரஷ்யங்கள் மனதில் இலங்கை அரசியலை விடப் பிடித்துள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு மாநில அரசியலும் கூட (விரல் நுனியில் இல்லாவிட்டாலும்) கொஞ்சம் அதிகமாகவே தெரிந்துவைத்திருக்கிறேன்.

இந்திய அரசியலை விரும்பும் அளவுக்கு இந்திய அரசியல்வாதிகளை வெறுக்க அநேகமான இலங்கையர் போலவே எனக்கும் காரணமாக அமைந்த பின்னணி அவர்கள் மற்றும் இந்திரா காந்தி அம்மையாரின் மரணத்துடன் ஆரம்பமானது.
 இந்தியப் படைகளின் வருகையும் அவர்களது அட்டூழியங்களும் மனதில் வெறுப்பை மண்டவைத்த விடயங்களாகின.

இந்திய விமானங்கள் யாழ் வானில் பறந்து உணவுப் பொட்டலங்கள் போட்டபோது பூரிப்புடன் இந்தியாவைப் போற்றிய அப்போதைய என் சிறுவயது மனதில்,
சுதுமலையில் தலைவர் பிரபாகரனின் உரை முடிய அவர் அப்படியே விமானத்தில் (Helicopter) ஏற்றப்பட்டது, பின் ஆயுதக் களைவு, திலீபனின் உண்ணாவிரதம் என்று இந்தியா என்றாலே வெறுப்பாக மாறியது இன்றும் அப்படியே திரைப்படம் போல ஓடுகிறது.

87  வரை எங்கள் இணுவில் வீட்டை விட்டு எப்போதுமே இடம்பெயராத நாம், இந்தியப் படைகளின் செல்லடியில் வீட்டையும் ஆசையாக வளர்த்த ப்ரவ்ணி (Browney) என்ற நாயையும் விட்டுவிட்டு தோட்டக் காணிகளால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடித்தப்பி, இணுவில் கந்தசுவாமி கோவிலில் தஞ்சம் புகுந்ததும் தொண்ணூறு நாட்கள் இருந்த காலமும் மனதில் மறக்காதது.
அந்தத் தொண்ணூறு நாள் வாழ்க்கையே அப்படியென்றால் வருடக்கணக்காக அகதி வாழ்வு வாசிக்கும் பலர் பற்றி எண்ணுகையில்... சபிக்கப்பட்ட சமூகம் நாம்..

இந்திய ராணுவம் எங்கள் ஊரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், வெள்ளைக் கொடியுடன் அப்பாவும் ஊரவரும் வீடு பார்க்க சென்றிருந்தார்கள்..
அப்பா வந்து சொன்ன கோரக் காட்சிகள்..
அம்மாவுக்கு தான் சொன்னாலும் காதில் விழுந்த அந்தக் கோரக் காட்சிகள்.. கொடுமை.. இன்னும் மறக்காதவை..
இதற்குள் ஒரு தமிழ் சிப்பாய் சொன்னானாம் "யோவ் மானேஜர் (எங்கள் அப்பா அப்போது வங்கி உத்தியோகத்தர்) ஏன்யா பயப்படுறே.. உன் குழந்தை, குட்டியோடு வந்து குந்துய்யா"
அவன் கேட்ட இன்னொரு கேள்வியை அப்பா இப்போதும் அடிக்கடி சொல்வார் "உங்களுக்குத் தான் கிணறு இருக்கு, சொந்த வீடுகள் பெரிய காணிகளோட இருக்கு.. கோவில் குளம், வீடு வரப்பு, வசதியான வாழ்க்கை என்று நல்லாத் தானே இருக்கீங்க? அப்பிடி இருக்கும்போது ஏன்யா தனிநாடு? தமிழ்நாடு மாதிரியே சேர்ந்து இருங்களேன்"

எம் சிக்கலின் அடிநாதம் தெரியாமலேயே அனுப்பப்பட்ட அடிமைகளில் ஒருவன் அவன்..
தமிழனே அப்படி இருக்கையில் தனித்து வெறியோடு வந்த மற்ற மாநிலத்தவர்களிடம் மனிதத்தை எதிர்பார்த்திருக்க முடியுமா?
அவர்கள் தங்கள் கேளிக்கைப் பொருட்களை வெறியோடு எடுக்க வந்தோர் தானே?

இந்தியப் படைகளின் வெறிச் செயல்களில் என் உறவுகள் யாரும் அகப்படாவிட்டாலும் கூட, தெரிந்த நண்பர்களின் சகோதரியர், அறிந்த சிலர் பாதிக்கப்பட்டபோது மனம் முழுவதும் வெறுப்போடு இந்தியா என்றாலே (தமிழ் தவிர்த்து) ஒரு வெறுப்புக்குரிய விடயமாக மாறிப்போனது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஒரு வெறித்தனமான திருப்தி இருந்தது உண்மை. இப்போது மனம் கொஞ்சம் பக்குவப்பட்ட நிலையில் அதற்காக வெட்கப்பட்டாலும் போர்க்களத்தில் நிகழ்ந்த தர்மப் பழிவாங்கலாக நினைத்து ஆறுதல்படுத்திக்கொள்கிறேன்.
எனினும் இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வருவதும், இந்தியாவில் இருக்கும் நண்பர்களும் எப்போதும் இந்தியாவின் பசுமையான நினைவுகளைத் தருபவை..
கடல் கடந்து உயிரிக் காப்பாற்றிக்கொல்லச் செல்லும் எங்கள் உறவுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்னை பூமியாக இந்தியாவை எப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்பவன் நான்.

எனது பதிவுகளில் அடிக்கடி சொல்வது போல இந்திய அரசியல்வாதிகளின் மீது இருக்கும் வெறுப்பு ஒரு பக்கம் கிடக்க, அப்பாவிகளான, எம் மீது இரக்கமும் மாறா அன்பும் வைத்திருக்கும் அந்த அன்பு தமிழக உறவுகளை நம் எப்போதும் நன்றியோடு நேசிக்கவேண்டும்..
இங்கே என்ன நடக்கிறது என்டர தெளிவே இல்லாமல், வெயிலிலும் மழையிலும் காய்ந்தும் நனைந்தும் போராட்டம் நடத்தி, குரல் எழுப்பி, ஏன் தீயிலும் குளித்த அவர்கள் எப்போதும் எங்கள் நினைவுகளில் வைக்கக் கூடியவர்களே..

முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்திலும், யுத்தத்தின் இறுதி நாட்களிலும் இந்தியா எமக்கு உதவவில்லை என்றும், இலங்கை இராணுவத்துக்கு உதவியது என்றும் 'இந்தியா - துரோகி' என்றும் குரல் எழுப்பி இந்தியாவை சபிக்கும் எம்மிற் பலர்  ஒன்றை மறந்துவிடுகிறோம்....
தொப்புள் கொடி உறவாக இருந்தாலும் எம் பிரச்சினையை நாம் அல்லவா தீர்க்க வேண்டும்?
மற்றவர் யாராயினும் தேவையில்லாத தலைவலியை எடுத்துக் கொள்வார்கள் என நினைப்பது தப்பல்லவோ?

தங்கள் அரசியல் நலனுக்காக இலங்கைக்காக இந்திய அரசு உதவியதையும் உணர்ச்சியை ஓரமாக வைத்துவிட்டுப் பார்த்தோமானால் நியாயம் என்றே தோன்றும்....

ஆனால் மனதோரம் வரும் சிறு வழியும், அதனால் பொங்கும் வெறுப்பும் ஏதோ சில தருணங்களில் எப்படியாவது வெளிப்பட்டு விடுகிறது.
அது நண்பர்களின் உறவுகளில் விரிசல் வராமல் பார்த்துக்கொள்கிறேன்..
இன்று எனது தொழிலும் கூட இந்தியாவை மையமாகத் தான் கொண்டு  ஏதோ ஒருவிதத்தில் ஓடுகிறது..
பாடல்கள், சினிமா... ஏன் கிரிக்கெட்டும் கூட..
தமிழர் எம் கலைகள், கலாசாரம்,பொழுதுபோக்குகளின் ரசனைகளின் மையமே இந்தியா தானே?

ஆனாலும் எங்கள் தனித்துவத்தையும் காத்து நிற்பது காலத்தின் கடமையாக எமக்கு அமையும் என்பதை நாம் நினைவில் கொள்வது எங்கள் எதிர்கால இருப்புக்கும், என்றோ ஒருநாள் எம் சந்ததி,பரம்பரை தனியாக இலங்கைத் தமிழர் என்றொரு இனம் 'வாழ்ந்தது' என்று அறிவதற்கும் முக்கியமானது.

இந்தியாவுடனான எம் உறவுகள் எப்படியும் பல்வேறு வடிவில் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் தொடரும்.. வசப்படுத்தும்.. மகிழ்விக்கும்.. ஆட்கொள்ளும்.. ஆக்கிரமிக்கும்..

காரணம் 'தமிழ்' என்ற ஒரே இரத்தம் பாக்குநீரிணை கடந்தும் எமக்குள் ஓடுகிறது....


இந்தியா - ஒரு வித்தியாசமான கலவை தான்..


August 14, 2011

சுருட்டப்பட்ட இந்தியாவும், சுழற்றக் காத்துள்ள இலங்கையும்.. ஒரு கிரிக்கெட் சுழல் அலசல்.


ஒரு பக்கம் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்திடம் மரண அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியிலும் பந்துவீச்சாளர் பக்கம் இருந்து நல்ல சகுனம் எதுவும் இதுவரை இல்லை.
இங்கிலாந்து தனது திறமைக்கேற்ற தகுதிக்கேற்ற White Wash தொடர்வெற்றியைப் பெற்றுக்கொள்ளப் போகும் சகல அறிகுறிகளும் தென்படுகின்றன.

ஆஸ்திரேலியா இலங்கையில் வந்த உடன் அடுத்தடுத்து இரு T 20 போட்டிகளில் அடிவாங்கி அதை ஒரு நாள் போட்டிகளில் தவிர்க்கப் படாத பாடு படப் போகிறது என்று நினைக்கையிலேயே வெற்றியுடன் ஒரு நாள் தொடரை ஆரம்பித்துள்ளது.

எவ்வளவு தான் மிகப் பலம் வாய்ந்த அணிகளாக இருந்தாலும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு கிரிக்கெட் சுற்றுலா வருகையில் எதிர்பாராத அதிர்ச்சிகளுக்குத் தம்மை தயார்படுத்திக்கொண்டே வரவேண்டியது நியதி.

எவ்வளவு தான் பலமான துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தாலும் சுழல் பந்து என்ற பெரும் சூறாவளிக்குள் அகப்பட்டு திக்கித் திணறித் தான் செல்வது வழக்கம்.

முன்னைய இந்தியாவின் வெங்கட்ராகவன் - பேடி - பிரசன்னா - சந்திரசேகர் தொடங்கி, அண்மைய இலங்கையின் முரளி - மென்டிஸ்- ஹேரத், இந்தியாவின் கும்ப்ளே - ஹர்பஜன் வரை தொடர்ந்தே இருக்கிறது.

அண்ணன்மார் எப்போ போவார்கள் என்று பார்த்திருந்த ஏனைய அணிகளுக்கு கும்ப்ளே, முரளிதரன் ஆகியோரின் ஓய்வுகள் உற்சாகத்தை ஓரளவுக்கு அளித்தது உண்மை தான்.

ஆனால் ஹர்பஜனால் இந்திய அணிக்கு தனித்து நின்று உள்ளூர்ப் போட்டிகளைப் பெரிதாக வென்று கொடுத்ததாக அண்மைக்காலத்தில் இல்லை.
அவர் பற்றி ஏற்கெனவே நான் எழுதிக் 'கிழித்து' விட்டதால் இந்தியா இங்கிலாந்தில் அடி வாங்கக் காரணம் பற்றி மட்டும் சிறிதாக நோக்குவோமானால்,
 இந்தியாவுக்கு கிடைத்த தோல்விகளுக்கான நேரடியான ஒரே காரணம் என நான் நினைப்பது தேவையான வீரர்கள் இன்மை..

இதற்குக் காயங்கள், வீரர்கள் தேவையான நேரத்தில் பிரகாசிக்காமை, குறித்த சூழ்நிலை, கள நிலைமைக்கேற்ற வீரர்கள் விளையாடாமை என்று பலவற்றையும் உள்ளடக்கலாம்.
இங்கிலாந்தில் சுழல்பந்துவீச்சாளர்கள் பெரிதாக செய்ய மாட்டார்கள் என்பதையெல்லாம் முரளி, வோர்ன், கும்ப்ளே முன்பு உடைத்துக் காட்டியுள்ளார்கள்.. ஏன், பாகிஸ்தானின் சக்லேய்ன் முஷ்டாக், முஷ்டாக் அஹ்மத் கூட இங்கிலாந்தில் விக்கெட்டுக்களை அள்ளியுள்ளார்கள்.

எனவே இந்தியாவுக்கு ஒரு நல்ல சுழல்பந்துவீச்சாளர் இல்லாதமை இத்தொடர் முழுவதும் படுத்தி எடுக்கிறது.


ஹர்பஜனும் மிஸ்ராவும்.. நீயென்ன நானென்ன..

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அமித் மிஸ்ராவை அழைத்துள்ளார்கள். ஆனால் எல்லாப் பந்துவீச்சாளர்களையும் துவைத்து எடுக்கும் இங்கிலாந்து அணிக்கெதிராக இவரை விட பிரக்யான் ஓஜா பொருத்தமாக இருந்திருப்பார் என நம்புகிறேன். 
இது மூன்றாவது டெஸ்ட் போட்டி இல் ஆரம்பிக்கும்போது நான் 'விடியல் தரும் விளையாட்டு வலத்தில்' சொன்னது.

  இந்தியா தோற்றுப்போன அந்தப் போட்டியில் அன்றூ ஸ்ட்ரோசின் விக்கெட்டை அதிக சுழற்சி காரணமாக எடுத்தாலும், மிஷ்ராவினால் அவரது அதிக சுழற்சியையும் தன் கால்கள் எல்லையைத் தாண்டி பல No ballகள் விழுவதையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தியா ஒரு நல்ல சுழல் பந்துவீச்சாளர் இல்லாத வறட்சியினால் இங்கிலாந்து ஓட்டங்களைக் குவித்த வேளையில் சுரேஷ் ரெய்னாவிடமிருந்தும் ஓவர்கள் தேவைப்பட்டிருந்தன..
சுழல்பந்துவீச்சாளர்களின் விளைநிலங்களில் ஒன்றான இந்தியாவுக்கு இப்படியா? என்ன கொடுமை இந்தியா?

இந்தியா அதனது அடுத்த கட்ட டெஸ்ட் சுழல்பந்துவீச்சாளர் ஒருவர் வளர்வதை அடுத்து சொந்தமண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரிலேயே (Home test series) பரீட்சித்துப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

இந்தியாவின் படுதோல்வியும், முதலாம் இடத்தைப் பறிகொடுத்ததும் இனி இந்திய அணிக்குள் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரும்.. மிக முக்கியமாகப் பந்துவீச்சாளர்கள்.
உற்று நோக்கிக் கவனிக்கப்பட்டு இடம் பறிக்கப்பட்டவர்கள் சிலரின் வரிசையில் பாவம் ஹர்பஜனும் இருக்கப் போகிறார்.

(இந்தியாவின் படுதோல்வி, இங்கிலாந்தின் படிப்படியான முதலிடம் நோக்கிய வளர்ச்சி பற்றித் தனிப்பதிவு இடலாம் என்னும் எண்ணமும் உண்டு..)


மறுபக்கம் இலங்கை...
இன்று இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி..
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இலங்கை முதல் இரு T20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை உறட்டி இருந்தும், ஒரு நாள் போட்டியில் அந்த வேகத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

இலங்கை அணிக்கு ஜோன்சனின் வேகம் சிம்மசொப்பனம் ஆகியிருந்தது.
இலங்கை அணி ஆஸ்திரேலியாவை முதலாவது T20 போட்டியில் டில்ருவான் பெரேராவை வைத்தும், இரண்டாவது T20 போட்டியில் அஜந்த மென்டிஸ் என்ற பழைய மந்திரவாதியை Formக்குக் கொண்டு வந்தும் உருட்டியது போல, இன்று யாரை வைத்து சுருட்டப் போகிறது என்று காத்திருக்கிறேன்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் ஆரம்பிக்கு முன்னர் எங்கள் அலுவலகத்தில் விளையாட்டு செய்திகள், நிகழ்ச்சிகளில் என்னுடன் ஈடுபடும் விமல், கோபி(கங்கோன்) ஆகியோரோடு கிரிக்கெட் பற்றிப் பேசும் போது நான் சொன்ன ஒரு விடயம்
"இருந்து பாருங்கள்.. ஹேரத், மென்டிஸ், ரண்டீவ் இல்லாவிட்டாலும் பெயரே அறியாத யாராவது ஒரு சுழல் பந்துவீச்சாளரை வைத்தாவது ஆஸ்திரேலியாவை சுருட்டி அனுப்பும் இலங்கை.  நாங்கல்லாம் ஜயந்த சில்வாவை வைத்துக்கொண்டே டெஸ்ட் போட்டிகளில் வென்றவர்கள்"


முன்னையவரும், பின்னையவரும்.. மந்திரவாதிகள்??

சுழல் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு ஆடும் அணி என்று பெயர் எடுத்த இந்தியாவே சச்சின், கங்குலி, திராவிட், லக்ஸ்மன் என்று நான்கு பெரும் நாயகர்கள் இருந்தபோதும் கூட, இலங்கையில் வைத்துத் தொடர் ஒன்றை வெல்ல முடியவில்லை என்றால் பாருங்களேன்..

(இந்த நால்வருடன் சேவாக் + கம்பீரும் சேர்ந்த துடுப்பாட்ட அணி இலங்கையுடன் கண்ட மிகப்பெரும் தோல்வியும் இங்கே ஞாபகப்படுத்தக் கூடியது.
http://www.espncricinfo.com/ci/engine/match/343729.html
நேற்றைய Birmingham படுதோல்வியைப் பெருமளவு ஒத்த படுதோல்வி இது. இந்திய அணி கண்ட மிக மோசமான இன்னிங்க்ஸ் தோல்விகள் இரண்டு இவை. நேற்றைய தோல்வி இந்தியாவின் மிக மோசமான மூன்றாவது பெரிய தோல்வி.. இலங்கையுடன் மூன்று வருடங்களுக்கு முன் கிடைத்தது நான்காவது பெரிய இன்னிங்க்ஸ் தோல்வி)

ஆஸ்திரேலியா அணி இம்முறை முதல் இரு தோல்விகளுக்குப் பிறகு முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறக் காரணமாக அமைந்த மாற்றம், ஜோன்சனின் பந்துவீச்சைத் தவிர சுழல்பந்துவீச்சை சிறப்பாக, நேர்த்தியாக எதிர்கொள்ளக் கூடிய அனுபவம் வாய்ந்த துடுப்பாட்டம்..
ரிக்கி பொன்டிங் + மைகேல் கிளார்க்.

இந்த இருவருடன் சுழல் பந்தை எதிர்கொண்டு ஆடக்கூடிய வொட்சன், மைக்கேல் ஹசி ஆகியோரும் தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவித்ததாலேயே ஆஸ்திரேலியா வெல்வதைப் பற்றியல்ல, தோல்வியிலிருந்து தப்புவதைப் பற்றியே சிந்திக்கலாம்.

ஆனால் அண்மைக்காலத்தில் இலங்கை வந்த அணிகளில் ஆஸ்திரேலியா கொஞ்சம் வித்தியாசமானது.. இலங்கை அணியை அச்சுறுத்தக் கூடிய வேகப்பந்துவீச்சு அவர்களின் பலம்.

ஆனால் இலங்கை ஆடுகளங்களில் ஒருநாள் போட்டிகளில் கூட மூன்று வேகப் பந்துவீச்சாளருடன் விளையாடுவதைப் பற்றி யோசிக்கின்ற அணிகள் டெஸ்ட் போட்டிகளிலும் எப்படியும் ஒரு சுழல்பந்துவீச்சாளரைப் பயன்படுத்தவேண்டுமே..

ஓரளவு சிறப்பாக செய்த ஸ்டீவ் ஓகீப் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இல்லை. முதலாவது போட்டியில் கொஞ்சமாவது இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களை யோசிக்கவைத்த சேவியர் டோஹெர்ட்டியும் டெஸ்ட் குழுவில் இல்லை.
நேத்தன் லியோன், மைக்கேல் பியர் ஆகிய அனுபவமற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இலங்கையின் துடுப்பாட்ட சக்கரவர்த்திகளால் 'ஆசீர்வாதம்' செய்யப்படப் போகிறார்களா?
அல்லது ஷேன் வோர்ன் இலங்கையில் வைத்து நட்சத்திரமாகக் கிளம்பியது போல இவர்களும் மாறுவார்களா?

முதலாவதுக்கே வாய்ப்புக்கள் அதிகம்.. அதற்கு முதல் ஒருநாள் தொடர் என்ன தரும்?
இன்றைய போட்டிக்குப் பின் நாம் ஊகித்துக்கொள்ளலாம் என நினைக்கீறேன்..

என்னைப் பொறுத்தவரை துடுப்பாட்டவீரர்கள், பந்துவீச்சாளர்களின் தாக்கத்தைவிட தலைவர்களின் நுட்பமான தீர்மானங்களும், தீர்மானமிக்க வழிநடத்தல்களுமே இந்த ஒருநாள் தொடரின் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்கும் என நினைக்கிறேன்.
இதை மைக்கேல் கிளார்க்கின் சில முடிவுகள் முதல் போட்டியில் காட்டி இருந்தன.

ரண்டீவும் ஹேரத்தும்... போட்டாபோட்டி...

இலங்கைத் தேர்வாளரின் முதல் மூன்று டெஸ்ட் சுழல் பந்துவீச்சுத் தெரிவுகளான ரங்கன ஹேரத், அஜந்த மென்டிஸ் , சுராஜ் ரண்டீவ் ஆகியோருடன் இரண்டு சச்சித்ரக்கள் இருக்கிறார்கள். சச்சித்ர சேனநாயக்க & சச்சித்ர சேரசிங்க.
இவர்களுடன் பலரும் மறந்துபோன மாலிங்க பண்டாரவும் இருக்கிறார். தொடர்ந்து விக்கெட்டுக்களையும் எடுத்துக் கொண்டிருக்கும் அவரையும் கொஞ்சம் கவனிக்கலாமே...

எனக்கென்னவோ இலங்கை ஆஸ்திரேலியாவை சுழலால் சுருட்டும் என்றே தோன்றுகிறது...
(இலங்கையின் வழமையான பலமான துடுப்பாட்டமும் துணை வருமிடத்து)

டெஸ்ட்டில் இந்தியாவின் முதலிடம் போனாலும், இன்று முதல் அடுத்துவரும் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை வென்றால் இலங்கைக்கு ஒருநாள் தரப்படுத்தல் முதலிடம் சொந்தமாகும்..

August 10, 2011

பனியனுள் சனியனும் தோனியும் தோல்வியும் - ட்விட்டடொயிங் - Twitter Log

முன்னைய எனது ட்வீட்களின் தொகுப்புப் பதிவுக்கு 
கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து இது இரண்டாவது தொகுப்பு...
(வரவேற்பு கிடைக்கலேன்னா மட்டும் விட்டிடுவேனா?)
 தொடர்ந்து திண்ணையில் கச்சேரி போடாதோருக்காக என்னாலான ஒரு சின்ன சேவை...

இதோ....

ட்விட்டடொயிங் - Twitter Logஎனக்கு இந்த மாதிரி கள்ளு சாவி.. கள்ள சாவி எல்லாம் வேண்டாம் ;) என் மனக் கதவு எப்போதும் திறந்தே கிடக்கும் ;) #எப்பூடி? #Loshanism
18 Jul

நீங்கள் கொடுப்பதற்கு வாக்குகள் வேண்டாம்.. நிறைய இருக்கு.. அவற்றைத் திருப்பிக் கொடுங்கள். #Elections #Loshanism
20 Jul

இலவசமாகக் கிடைப்பவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அவையெல்லாம் உங்களுக்கு எப்போதோ கிடைத்திருக்கவேண்டியவையே.. #election #Loshanism
20 Jul

பொய்க்கும் நடிப்புக்கும் இடையில் நேரடியான தொடர்பு மறைமுகமாக இருக்கு.. அப்படியானால் நடிகர்கள் = பொய்யர்கள்??
20 Jul

 ராஜா, ரஹ்மானும் காப்பியடித்தவர்கள் தான். வித்யாசாகர் தன்னை விளம்பரப்படுத்தி முன்னிறுத்தத் தெரியாதவர்
21 Jul

எல்லாத்துக்கும் அழும் சில முதலைகளைப் பார்க்க வெறுப்பாய் இருக்கிறது.. அல்ல அல்ல சலிப்பாய், சிரிப்பாய் இருக்கிறது.

வரும் வழியில் எதோ ஒரு வாகனத்தில் அடிபட்ட நாய்க்குட்டியின் வேதனை ஊளை இன்னும் மனதில் உழல்கிறது :(
21 Jul

உழைத்தால் தான் எல்லோருக்கும் சோறு. சும்மா உக்காந்தா சோறு போட யாரு.. மின்சாரக்கண்ணா சொன்ன நல்ல விஷயம்.. #vidiyal
22 Jul


மன்மதன் அம்பு - தகிடு தத்தம் & வேங்கை - என்ன சொல்லப் போறே;  DSPஒரே தாளக்கட்டில் கொஞ்சம் மெட்டு மாற்றி இருக்கிறார் #அவதானிப்பு

வம்பு செஞ்சா வஞ்சம் வைப்பேன்.. அன்பு செய்தா அடங்கி நிப்பேன்.... பந்தம் படப் பாலில் பதிந்த வரிகள்..
22 Jul


யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக் கூடாது என்பதே முக்கியம்.... #தேர்தல் #VoteEarly
23 Jul


தெய்வத்திருமகள் வந்த பிறகு - முன்பு அபியும் நானும் தந்த அதே Feeling, இந்த தந்தை-மகள் உறவு ஒரு trend ஆகி இருக்கிறது #அவதானிப்பு
23 Jul


தவறான புரிதல்களும், தவறான வழிகாட்டல்களை ஏற்றுக்கொள்வதும் வீணான புலம்பல்களிலேயே விட்டு வைக்கும். #அவதானிப்பு
23 Jul

எதையும் செய்ய, சொல்ல, செய்யச்சொல்ல முதல் யோசிக்கணும்.. நடந்துமுடிந்த எவையும் வாழ்க்கையில் ரீவைண்ட் செய்தால் வரா #Loshanism
23 Jul

இத்தனை அழகாய்ப் பாடிய மஞ்சுளா அதன் பின் எங்கே போனார்? உன்னைத்தானே - நல்லவனுக்கு நல்லவன் @vettrifm #vidiyal
25 Jul

சலூனில் ஒலித்த பழைய பாடல்கள் வீடு வந்த பிறகும் மனதில் சீடியாக சுழல்கின்றன. பாச மலர், சவாலே சமாளி, பணத்தோட்டம், அன்பே வா + etc
இன்று பகல் ஒரு வானொலியில் - பெண் அறி - யாரடி நீ மோகினி ஆண் அறி - உங்களை சொன்னீங்களா? பெண் அறி - மோகினி என்ன செய்யும் 1/2
2/2 பெண் அறி - மோகினி என்ன செய்யும் தெரியும் தானே? ஹீ ஹீ #என்ன கொடுமை 

இரு நண்பர்கள் தமக்குள்ள பேசிக் கொள்ளாதிருக்க மூன்றாவதாக நாம் நடுவில் இருப்பது தான் உலகில் சகிக்க முடியாத தர்மசங்கடம்.. #அனுபவம் #அவஸ்தை


குமரி குமரி சைஸு குமரி.. பார்த்துவிட்டா காலி மெமரி. கத்தரி கத்தரி பார்வை கத்திரி பார்த்துப்புட்டா ஆசுபத்திரி. என்ன lyrics பா. #காஞ்சனா


ஒரே சொல்.. ஆனால் எப்படி அர்த்தம் மாறிப் போகிறது.. தாத்தா.. சிங்களத்தில் அப்பா.. தமிழில் அப்பாவின்/அம்மாவின் அப்பா... #அவ்வ்


அஞ்சு எடுத்தவன் அமைதியா இருக்க ரெண்டு எடுத்தவன் துள்ளுரானாம் ;)


- ஸ்ரீசாந்த் பற்றிப் போட்ட ட்வீட்

அழுத்தமாக சில விஷயங்கள் பேசும்போது பலருக்கும் 'மட்டும்' என்ற சொல் புரிவதில்லைப் போலும்..
சனியன்களை இழுத்து பனியனுக்குள் ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்? #போலி 
ராமராஜனுக்குக் கொடுத்து இந்தப் பாடலைக் கொன்றுவிட்டார்களே.. நிலவுக்குப் பிறந்தவள் இவளோ - மேதையாழ் மாவட்ட MP எண்ணிக்கையைக் குறைத்தாலாவது UNP அடுத்தமுறை எதிர்க்கட்சியாக வருமா? அரசாங்கம் +எதிர்க்கட்சி கூட்டு சதி?  


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner