December 30, 2011

இலங்கையின் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும், வெற்றியும் விருதும்


நேற்றைய நாள் உண்மையில் ஒரு கிரிக்கெட் ரசிகனாக நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
இந்த ஆண்டின் இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே நான் ஆதரிக்கும் அணிகளுக்கு வெற்றியாக முடிந்தது தான் இந்த மகிழ்ச்சிக்கான காரணம்.

முதலில் ஆஸ்திரேலியா இந்தியாவை உருட்டித் தள்ளியது. அடுத்து இலங்கை தென் ஆபிரிக்காவை சுருட்டி எடுத்தது. இரண்டுமே ஒரு நாள் மீதம் இருக்கப் பெற்ற வெற்றிகள்.

நேற்று இலங்கைக்கு தென் ஆபிரிக்க மண்ணில் முதலாவது டெஸ்ட் வெற்றி..



இது உண்மையில் இந்த வருடத்தின் இறுதி நாட்களில் உலக கிரிக்கெட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு முடிவு என்று சொன்னால் யாருமே மறுப்பதற்கில்லை.
2011 முழுவதும் டெஸ்ட் போட்டிகளில் அடி வாங்கிவந்த இலங்கை அணிக்கு பிறக்க இருக்கின்ற புதிய வருடத்துக்கான நம்பிக்கையை நேற்றைய டேர்பன் டெஸ்ட் வெற்றி வழங்கி இருக்கின்றது.

ஒரு விறுவிறுப்பான படத்தில் முக்கிய கட்டத்தில் ஒரே பாட்டில் ஒரு ஹீரோ ஏழையாக இருந்து பணக்காரனாக மாறுவாரே அதே போல தான் இலங்கை கிரிக்கெட்டின் நிலையம்.....

முரளிதரனின் டெஸ்ட் ஓய்வின் பிறகு பதினைந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை சுவைக்க முடியாமல் (இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளிலும் கூட என்பது மேலதிக பரிதாப அம்சம்) தவித்து வாத இலங்கை அணிக்கு முரளியின் பிரதியீடாக ஓரளவாவது நம்பிக்கை தந்த ரங்கன ஹேரத்தின் சிறப்பான பந்து வீச்சு (போட்டியில் 128 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள்) வெற்றியைத் தந்திருப்பது இன்னொரு விசேட அம்சம்.

தொடர்ச்சியான டெஸ்ட் தோல்விகள், உலகக் கிண்ண இறுதிப்போட்டியின் இறுதிப் போட்டித் தோல்வி, அதைத் தொடர்ந்த முரளிதரன், லசித் மாலிங்கவின் ஓய்வுகள், குமார் சங்கக்காரவின் தலைமைப் பதவி விலகல், இடைக்கால கிரிக்கெட் சபையின் நிர்வாக சிக்கல்கள், இழுபறி, உஅகக் கிண்ணத்தை நடத்திய பின்னர் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு, நஷ்டங்கள், கடன் தொல்லைகள், கிரிக்கெட் வீரர்களுக்கே எட்டு மாதம் சம்பளம் கொடுக்க முடியாத நிலை, தேர்வுக் குழப்பங்கள் என்று தொட்டதெல்லாம் துரதிர்ஷ்டம் என்ற நிலையில் தான் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணி எழ முடியாத அளவுக்கு மரண அடி வாங்கி இருந்தது.


இலங்கை அணியினால் இப்போதைக்கு ஒரு டெஸ்ட் வெற்றியைப் பற்றி அதுவும் வெளிநாட்டு மண்ணில் அதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், யோசிக்கவே முடியாத நிலையில் தென்னாபிரிக்க அணியைப் பந்தாடி நான்கு நாட்களுக்குள் உருட்டுவது என்றால் பெரிய விஷயம் தானே?

இலங்கை அணியின் தற்போதைய பலவீனமான பந்துவீச்சை வைத்துக் கொண்டு விக்கெட்டுக்களை எடுத்து ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வது நடக்கிற காரியமா என்று கண்ணை மூடிக் கொண்டு இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிப்பவரும் சந்தேகப்பட்ட நிலையில் இலங்கையின் பந்துவீச்சாளர்களால் இந்த வெற்றி பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பது முக்கியமானது.



என்ன தான் சமரவீர, சங்கக்கார ஆகியோர் சதங்களைஅடித்து இருந்தாலும், சந்திமால் தனது அறிமுகப் போட்டியில் இரட்டை அரைச் சதங்களைப் பெற்றிருந்தாலும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையோடும், திட்டத்தோடும் செயற்பட்டது தான் நேற்றைய அபாரமான டெஸ்ட் வெற்றி.

ஹேரத்தின் 9 விக்கெட்டுக்கள், வெலகேதரவின் முதலாம் இன்னிங்க்ஸ் ஐந்து விக்கெட் பெறுதி இவை மட்டுமல்லாமல் தேவையான நேரங்களில் முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இணையாக பவுன்சர் பந்துகளால் மிரட்டியதும் முக்கியமானது.

ஒரு மாதிரியாக சரித்திரம் படித்தாயிற்று.. பல சாதனைகளும் வேறு..

ஆனால் இப்போது கேள்வி, இந்த உத்வேகத்தை அடுத்த டெஸ்ட் போட்டிக்கும் கொண்டு செல்ல முடியுமா? ஒரு அரிய தொடர் வெற்றியைத் தமதாக்க முடியுமா?

ரொம்ப ஓவரான ஆசைன்னு யாரும் நினைக்கப்படாது.. காரணம் தென் ஆபிரிக்காவே இப்படித்தான்..  முதல் போட்டியில் அபாரமாக வெல்வதும் அடுத்த போட்டியில் மரண அடி வாங்குவதும்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இப்படித் தானே நடந்தது?  மிக விறுவிறுப்பான அத்தொடரில் மூன்றாவது போட்டி இடம்பெறாமல் போனது அநியாயம்.

தரப்படுத்தலில் மிகக் கீழே வீழ்ந்துள்ள ஒரு அணியான இலங்கையிடம் கிடைத்த தோல்வியை அடுத்து தென் ஆபிரிக்க முகாமுக்குள்ளே பெரிய குழப்பங்கள் +
கொஞ்ச நாளாகத் தொடர்ந்து தடுமாறி வரும் சில வீரர்களுக்கு இறுதி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இந்த அழுத்தங்களை இலங்கை அணி பயன்படுத்திக் கொண்டால் தொடரும் வசமாகும்.

இலங்கை அணியின் நேற்றைய வெற்றிகள் பல புதிய சாதனைகளையும் மைல் கற்களையும் உருவாக்கியுள்ளது.

இது தென் ஆபிரிக்க மண்ணில் இலங்கையின் முதலாவது டெஸ்ட் வெற்றி.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராகப் பெறப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் வெற்றி.
வெளிநாடுகளில் இலங்கை பெற்ற ஒன்பதாவது டெஸ்ட் வெற்றி. (இதில் மூன்று சிம்பாப்வேயில்)

முரளிதரனின் ஓய்வுக்குப் பின்னர் ஐந்து தோல்விகளும், பத்து வெற்றி தோல்வியற்ற முடிவுகளுமே இலங்கைக்குக் கிடைத்திருந்தன.

தென் ஆபிரிக்காவுக்கு இந்த டேர்பன் மைதானம் மிகப் பேரும் துரதிர்ஷ்டம் வாய்ந்தது. இது இந்த மைதானத்தில் கண்ட நான்காவது தொடர்ச்சியான தோல்வி.
அத்துடன் சொந்த நாட்டில் நடைபெற்ற Boxing day டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியான நான்காவது தோல்வி.


ரங்கன ஹேரத் இலங்கையின் தற்போதைய முதல் தர சுழல் பந்துவீச்சுத் தெரிவு. இதை அடிக்கடி நன் சொல்லி வந்திருக்கிறேன்.
மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார்.
தென் ஆபிரிக்காவில் இலங்கையர் ஒருவர் பெற்ற இரண்டாவது சிறந்த பந்துவீச்சுப் பெறுதி இது.
முதலாவது முரளி என்பதை சொல்லவும் வேண்டுமா?

அத்துடன் ஹெரத்தின் மிகச் சிறந்த போட்டிப் பெறுதியும் இதுவே.
இந்த சிறப்பான பந்துவீச்சோடு ஹேரத் தனது மிகச் சிறந்த தரப்படுத்தலையும் பெற்றுள்ளார். இப்போது உலக டெஸ்ட் வரிசையில் ஏழாவது இடம்.

சமரவீர பெற்ற சதம் நீண்ட கால இடைவேளையின் பின் தென் ஆபிரிக்காவில் இலங்கையர் ஒருவர் பெற்ற சதம். ஹஷான் திலகரத்னவுக்குப் பின்.. (இலங்கையை அழைத்தால் தானே?)
சங்கக்காரவும் அந்தப் பட்டியலில் அடுத்த இன்னிங்க்சிலேயே சேர்ந்துகொண்டார்.

இதன் மூலம் சங்கா தனது டெஸ்ட் தரப்படுத்தல் முதலிடத்தைத் தொடர்ந்து தன் வசப்படுத்தி அடுத்த வருடத்தில் நுழைகிறார்.
ஆனால் இரண்டாம் இடத்தில் இருந்த ஜாக்ஸ் கல்லிஸ் இரு இன்னிங்க்சிலும் பெற்ற பூச்சியங்களோடு, நான்காம் இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளார்.

இது கல்லிசின் 149 டெஸ்ட் வரலாற்றில் முதல் இரட்டைப் பூச்சியங்கள் (pair).
சங்காவுடைய இன்னொரு சுவாரஸ்ய நிகழ்வு முதல் இன்னிங்சில் பூச்சியமும், இரண்டாம் இன்னிங்சில் சதமும் பெற்றமை.
இலங்கையர் ஒருவர் இவ்வாறு பூச்சியமும் சதமும் பெற்ற எட்டாவது சந்தர்ப்பம் இது.

சமரவீரவும் இப்போது தரப்படுத்தலில் 13ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முதலிலேயே இவரைத் தெரிவு செய்யாமல் விட்ட தேர்வாளர்களின் முகங்களில் டேர்பன் கரி ;)
இதேவேளை இன்னொரு விடயத்தையும் இங்கே சொல்லவேண்டும்...

வெற்றி டிவி யில் புது வருடத்தை முன்னிட்டு இடம்பெறும் பல விசேட தொகுப்பு, மீள் பார்வை நிகழ்ச்சிகளில் நானும் விளையாட்டுத் தொகுப்பு ஒன்றை வழங்குகிறேன்.

அதில் நான் குறிப்பிட்ட விடயம் - 2011ஆம் ஆண்டு புதிய, அறிமுக வீரர்களுக்கான ஆண்டு என்று,,

இந்த ஆண்டில் மட்டும் எட்டு வீரர்கள் தங்கள் அறிமுகப்போட்டியில் ஐந்து விக்கெட் பெறுதிகளைப் பெற்றிருந்தார்கள்.
வருடத்தின் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவின் மேர்ஷன்ட் டீ லங்கேயும் அந்தப் பட்டியலில் இணைந்து கொண்டார்.

மற்றோர் அறிமுகம் தினேஷ் சந்திமால் இரட்டை அரைச் சதங்களுடன் தனது வருகையை அறிவித்துள்ளார். பாவம் பிரசன்னா ஜெயவர்த்தன. வயதும் காரணமாக இனி அமைய இளையவர் சந்திமால் இனி நிரந்தரமாகிவிடுவர்,
புதிய வருடம் இலங்கை அணிக்கு வெற்றிகரமான வருடமாகட்டும்.
ஆனால் அதற்கு தலைவர் டில்ஷான் துடுப்பாட்ட வீரராகவும் தன்னை வெளிப்படுத்தவேண்டும்.

-----------------
 மெல்பேர்னில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு ஒரு அடி கொடுத்து நிதர்சனத்தை மீண்டும் காட்டியுள்ளது.



இந்தியா எவ்வளவு தான் அனுபவம் வாய்ந்த, பலமான, பயங்கரமான இப்படி இத்யாதி இத்யாதி புகழ்பெற்ற துடுப்பாட்ட வரிசையைக் கொண்டிருந்தாலும் வெளிநாட்டின் ஆடுகளங்களில் அப்பாவிப் பூனைக்குட்டிகள் போல சுருண்டுவிடும் என்பது வரலாறு..

மீண்டும் மெல்பேர்னில் இது நிரூபணம்.

சச்சினின் நூறாவது சதத்துக்கான தடுமாற்றத்துடனான தேடல் தொடர்கிறது. இரு இன்னின்க்சிலுமே வேகமாகவும், நம்பிக்கையாகவும் ஆரம்பித்து தடுமாறி சிடிலின் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார்.

அடுத்து வரும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலாவது சச்சின் தனது சாதனையை நிகழ்த்துவாரா என்று..

மறுபக்கம் அழுத்தத்துக்குள்ளாகி இருந்த ரிக்கி பொன்டிங், மைக்கேல் ஹசி ஆகியோர் பொறுப்பான இரு ஆட்டங்கள் மூலமாகத் தம் கிரிக்கெட் ஆயுளை நீடித்துக் கொண்டுள்ளார்கள்.

நான் ட்விட்டரில் அடிக்கடி வலியுறுத்தி வந்த எட் கொவான் அறிமுகமாகி அதில் சிறப்பாக அரைச் சதமும் பெற்றுள்ளார்; மகிழ்ச்சி.
ஜேம்ஸ் பட்டின்சன் தன்னைத் தொடர்ந்து நிரூபித்து வருவதுடன் சகலதுறை வீரருக்கான சில கூறுகளையும் காட்டி வருகிறார். நம்பிக்கை தருகிறார்.

காயமுற்றுள்ள ஷேன் வொட்சன், ரயன் ஹரிஸ் ஆகியோரும் மீண்டும் திரும்பி வர ஆஸ்திரேலியா மீண்டும் மிடுக்காக எழும் :)

-------------------------
வெற்றி FM வானொலியில் நாளைய வருட இறுதி அவதாரம் இந்த 2011ஆம் வருடத்தின் முக்கிய சர்வதேச விளையாட்டுக்கள் அத்தனையையும் மீள்பார்வையாகத் தரவுள்ள்ளது.
அதேவேளை முதலாம் திகதி, புத்தாண்டு தினத்தில் வெற்றி டிவி யில் இரவு 8.30க்கு விளையாட்டு சிறப்புத் தொகுப்பையும் வழங்கவுள்ளேன்.

--------------------
வெற்றி கிரிக்கெட் விருதுகள்....

ஜனவரி ஏழாம் திகதி அவதாரம் நிகழ்ச்சியில் கடந்த வருடம் கிரிக்கெட்டில் சிறப்பாகப் பிரகாசித்த நட்சத்திரங்களுக்கான விருதுகளை வழங்க இருக்கிறோம்..
விபரங்களை இங்கே அறிந்துகொள்வதொடு உங்கள் வாக்குகளையும் வழங்குமாறு கோருகிறேன்.

https://www.facebook.com/VettriFMOfficial?sk=app_190322544333196


Vettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்



--------------------

அனைத்து நண்பர்கள், வாசகர்கள், ரசிகர்களுக்கும் என் இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்....


பிறக்கும் வருடம் 2012 உங்கள் அனைவரது மனதுக்கும் நிம்மதியையும் மன மகிழ்ச்சியையும், எதையும் வெல்லும் திடத்தையும் மற்றவருக்கு நலத்தையே நினைக்கும் வல்லமையையும் வழங்கட்டும்.
நல் வாழ்த்துக்கள்....


December 29, 2011

ராஜபாட்டை


சில பேர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கையில் அந்த நம்பிக்கையை எல்லாம் சும்மா அலேக்காப் போட்டு மிதிச்சு உங்கள் முகத்தில் கரி பூசுவார்கள் பாருங்கள்..
ராஜபாட்டை பார்த்த போதும் அதே உணர்வு.



அழகர்சாமியின் குதிரைக் குட்டி படத்தைப் பற்றி நான் இட்ட இடுகையின் சில முக்கிய வரிகளைக் கவனியுங்கள்..

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல அடுத்து இது என மூன்று வெவ்வேறான தளங்களில் வித்தியாசம் காட்டிவரும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். இவர் இயக்கும் அடுத்த படத்தை இப்போதே எதிர்பார்க்கும் முதலாமவன் நான் ஆகட்டும்.


சுசீந்திரன் எனது அபிமானத்துக்குரிய இயக்குனர்களில் ஒருவராக இப்போதே மாறியுள்ளார்.





நான் மகான் அல்ல பார்த்தபோதே சிலாகித்தவன் நான். ராஜபாட்டையிலும் ஏதாவது புதுசா (அது மசாலா என்று ஆரம்பத்திலேயே சுசீந்திரன் சொல்லி இருந்தாலும் கூட) செய்திருப்பார் என்று நம்பினேன்.

அதே போல விக்ரம் - தெய்வத் திருமகள் தந்த பெயரால் ஏமாற்ற மாட்டார் என்றும் நம்பி இருந்தேன்.

அந்த யுகபாரதியின் பாடலைப் போட்டு தாளிச்சிருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் நல்லாவே இருந்தன என்பதை எல்லோருமே ஏற்கத் தான் வேண்டும்.

பார்க்கப் போறதுக்கு முதலில் எந்தவொரு விமர்சனமும் வாசிப்பதில்லையாயினும், விமர்சனத் தலைப்பிலேயே படம் பற்றிப் பலர் கருத்து சொல்லிவிடுவதால் ராஜபாட்டை பற்றியும் ஓரளவு அறிந்துகொண்டே தான் ஈரோஸ் போனேன்..

(சத்தியமா ஓசி டிக்கெட் என்றபடியால் தான் போனேன் )


இப்போது தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் நில அபகரிப்புத் தான் திரைப்படத்தின் முக்கிய கரு..
கதாநாயகனை ஒரு திரைப்பட அடியாள் நடிகன் (Gym Boy).. ஒரு சிறந்த வில்லன் நடிகனாக உயரவேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கும் அவர் தற்செயலாக நில அபகரிப்பு சிக்கலுக்குள் அகப்படும் பெரியவர் ஒருவருடன் சம்பந்தப்பட, இதனால் பலம் மிக்க அரசியல்வாதியுடனும் அவரது கொலைவெறிக் கும்பல், அரசியல்வாதியின் பினாமி ஆகியோருடன் மோதல் ஏற்படுவதும் அதன் பிறகு நடக்கும் டிஷ்யூம், டிஷ்யூம் களும் தான் கதை..

வழமையான இந்த மாதிரி மசாலாத் திரைப்படங்கள் என்றால் மன்னிக்கலாம்.. இது இப்படித் தான் என்பது தெரியும்.
ஆனால் நல்ல படங்கள் மூன்றைத் தந்த சுசீந்திரன் ஒரு மசாலாவைத் தந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாகத் தருவர் என்று தானே எதிர்பார்ப்போம்?

அதிலும் மிகப் பலமான ஆரோக்கியமான கூட்டணியுடன் சுசீந்திரன் களம் இறங்கும்போது இன்னும் எதிர்பார்ப்பு ஏற்படும் தானே?
இசை - யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு -R. மதி
வசனம் - பாஸ்கர் சக்தி

அத்தனை உழைப்பும் வீண்..
கூடவே விக்ரமின் உடல் உழைப்பு + அர்ப்பணிப்பு & புகழ்பெற்ற இயக்குனர் K.விஸ்வநாத்தின் இந்தத் தள்ளாத வயதிலும் வெளிப்படுத்திய துடிப்பு..

லொஜிக்கை விடுங்கள்.. ஒரு லொசுக்குக் கூட ஒழுங்காக இல்லையே...

படத்தின் நல்ல விஷயங்களை விரல்விட்டு எண்ணலாம்....


விக்ரமின் உழைப்பு...
தெய்வத் திருமகளில் நோஞ்சானாக இருந்தவர் என்ன மாதிரியாக உடலை வருத்தி ஒரு மாமிச மலையாகக் கட்டுமஸ்தான உடலோடு வருகிறார்.
உடலை வருத்தி உழைத்தவர் கொஞ்சம் கதையையும் கவனித்திருக்கலாம் தான்.
(ஆனால் சாதாரண ஒரு அடியாள் நடிகர் ஒவ்வொரு நாளும் புதிய புதிய dress + Cooling glass உடன் வருவது பயங்கரமாக உதைப்பது வேறு கதை)
வில்லாதி வில்லன் பாட்டில் பல வேஷம் கட்டி ஆடுவதில் நீண்ட நாள் ஆசையை எல்லாம் தீர்த்திருப்பது தான் விக்ரமுக்கு ஒரே ஆறுதல் போலும்..

"கமலுக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்தவனாக்கும்" என்று சொல்கின்ற இயக்குனர் K.விஸ்வநாத்தின் நடிப்பு.

தம்பி ராமையாவின் இயல்பான நடிப்புடனான நகைச்சுவை & அடியாளாக வரும் அருள்தாசின் நகைச்சுவை....

புதிய அறிமுகமாக வரும் வில்லி.. அக்கா என்று படம் முழுக்க மிரட்டலாக அவர் வலம் வரும்போது (பெயர் சனாவாம்) ஜெயலலிதா ஞாபகம் வருகிறது.
நில அபகரிப்பு, வழக்குகள், பினாமி, அடியாட்கள், கை அசைப்பு என்று பல ஒற்றுமைகள்..
தமிழக நண்பர்கள் தான் சொல்லவேண்டும்..

சுசீந்திரன் டச் சில காட்சிகளில் இருக்கின்றன; அவை ரசிக்கவும் வைக்கின்றன.
ஆனால் இடைவேளையின் பின்னதான பாதியிலும் அவசர முடிவினாலும் முடிவுறும் இந்த ஆண்டின் மோசமான படங்களில் ஒன்றாக மாறிவிடுகிறது.

சினிமா அறிவு போதியளவு இல்லாத எமக்கே இந்தப் படம் தேறாது என்று தெரிகிற நேரம், இயக்குனர், நடிகர்கள், லட்சக்கணக்கைக் கொட்டிப் படம் எடுக்கும் தயாரிப்பாளருக்குப் படம் எடுத்து முடிந்து முழுக்கப் பார்க்கையில் விளங்கி இருக்காதா?
அவசரமாக முடிந்த மாதிரி ஒரு சப் முடிவு..

முடிந்த பிறகு தான் ஸ்ரேயாவும், ரீமா சென்னும் சேர்ந்து ஆடும் 'லட்டு லட்டு' பாட்டு வருகிறது..

படத்தில் இதை விட மோசமான விடயங்கள்...

கதாநாயகி .. வட இந்திய இறக்குமதியாம்.
தீக்ஷா சேத். என்ன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்?

ஒன்றுமே இல்லை இவரிடம்... இவருக்காக விக்ரம் கனவுப் பாட்டுப் பாடும்போது மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த "பொடிப்பையன் " பாடல் செத்துப் போச்சு.

திருப்பங்கள் என்று எதுவுமே இல்லாத கதை.
வரட்சியான கற்பனை..
சுசீந்திரனின் சரக்குத் தீர்ந்து விட்டதோ?

பாவம் விக்ரம்....
விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று அத்தனை பேரும் மாறி மாறி பெரிய ஹிட்டுக்கள் கொடுக்கிற நேரம் இப்படியொரு புஸ் கறுப்புப் புள்ளியாக.

ராஜபாட்டை சொல்லும் நீதி - எவ்வளவு தான் நட்சத்திரங்கள் சேர்ந்தாலும் நல்ல கதையும், சீரான திட்டமிடலும் இல்லாவிட்டால் கதை கந்தல் தான்.

ராஜபாட்டை - எல்லாம் ஓட்டை.

குறிப்பு -

2011 வருடம் முடியும் தருணம், இந்த வருடத்தின் எனது இறுதி திரைப்பட விமர்சனமாக இருக்கும்.
இந்த வருடத்தில் எழுத ஆசைப்பட்ட சில நல்ல திரைப்படங்களை நேரம் இல்லாமலும், தாமதமாகப் பார்த்தமையினாலும், எழுத எண்ணியபோது நேரம் வராமையினாலும் தவறிப்போன நல்ல திரைப்படங்கள் ஐந்தினையும் சொல்லிப் பரிகாரம் தேடிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

மைனா (2010 இறுதியில் வெளிவந்தாலும் பார்த்தது இவ்வாண்டில் தான்)
வாகை சூட வா
பயணம் 
காஞ்சனா 
ஆரண்ய காண்டம் 

விரைவில் போராளி, உச்சி தனை முகர்ந்தால் ஆகியவற்றைப் பார்த்துவிடுவேன்.

புதுவருடத்துக்கான வாழ்த்துக்களை இப்பொழுதே தர எண்ணமில்லை; இந்த எஞ்சிய மூன்று தினங்களுக்குள் ஒரு பதிவாவது தர மாட்டேனா? ;)


December 27, 2011

நண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)



ஷங்கர் - விஜய் இந்த இணைப்பே போதும் 'நண்பனுக்கான' எதிர்பார்ப்பை எகிறச் செய்ய.. ஆனால் அதை விடப் பெரியதொரு இருக்கிறது இந்த நண்பன் மீது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த..

அது அமீர்கான் நடித்து அபார வெற்றி பெற்ற 3 Idiotsஇன் தமிழ் வடிவம் என்பது தான்.
ஆனால் பாடல்களைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் ஜனரஞ்சகப் பாடல்களைக் கொடுத்துவரும் ஹரிஸ் ஜெயராஜின் இசையில் வருவதால் இசைப் பிரியர்களின் தனியான எதிர்பார்ப்பும் இருந்தது.

காரணம் 1 ஹரிஸ் ஜெயராஜ் முதன்முதலாக இளையதளபதிக்கு இசையமைக்கிறார். 
காரணம் 2 ஹரிசின் அண்மைக்காலப் பாடல்கள் எல்லாமே எங்கேயோ முன்னர் கேட்ட மெட்டுக்கள் என்ற கடும் விமர்சனம். (ஆனால் என்ன மாயமோ ஹிட் ஆகிவிடுகின்றன)

ஹரிஸ் ஜெயராஜுக்கு மட்டுமல்ல பாடலாசிரியர்களுக்குமே இந்தப் பாடல்கள் பெரும் சவாலாக இருந்திருக்கும். காரணம் 3 Idiotsஇல் எல்லாப் பாடல்களும் இசையினாலும் ஹிட்; வரிகளாலும் ரசனையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஆங்கில உபதலைப்புக்களுடன் பார்த்த என் போன்றவர்களுக்கும் திரைப்படத்தின் ஓட்டத்தில் பாடல்கள் தந்த உணர்வுரீதியிலான தாக்கம் அற்புதம்.

அதேபோல விஜய் ரசிகர்களுக்கு என்று ஒரு வித்தியாசமான பாணியை இசையமைப்பாளர்கள் விஜய் படங்களில் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்தது.
விஜயைப் பற்றி ஒரு அறிமுகப் பாடல் இல்லாத விஜய் படமா?

இப்படியான ஒரு பாடல் எப்படி படத்தில் வருகிறது என்பதற்கும், 
3 Idiotsஇல் என்னைக் கவர்ந்த All is well பாடல் தமிழில் எப்படி வருகிறது என்பதற்காகவும் மிகுந்த ஆவலுடன் நண்பனுக்காக காத்திருந்தேன்.

Promo songs எனப்பட்ட குறுகிய நேர அளவைக்கொண்ட பாடல்கள் வெளிவந்து, பின் முழுமையான பாடல்கள் வெளிவந்து, மீண்டும் மீண்டும் பல தடவை கேட்டு ரசித்து, உள்வாங்கிய பிறகு இப்போது நண்பன் பாடல்கள் பற்றி....

ஹரிஸ் ஜெயராஜின் ரசிகர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது...
இந்தப் படத்திலும் சில பாடல்களில் பழைய மெட்டுக்களும், பழைய பாடல்களின் பகுதியளவான இசை உருவல்களும் தெரிகின்றன.
ஆனால் வரிகளின் செழுமையால் அவை மறைக்கப்படுகின்றன/மறைந்து போகின்றன.

(ஒருவேளை இயக்குனர்கள் தான் அப்படியே கேட்டு வாங்கிக்கொள்கிறார்களோ?)

உடனடியாக மனதில் மூன்று பாடல்கள் பச்சக் :)
எனக்குப் பிடித்த பாடல்களின் வரிசையிலேயே பாடல்கள் பற்றி...

1.என் பிரெண்டைப் போல யாரு மச்சான் 
எழுதியவர் :- விவேகா
பாடியவர்கள் :- க்ரிஷ், சுசித் சுரேசன்

விஜய்க்கேன்றே எழுதப்பட்ட வரிகளா, படத்தில் வருகின்ற அனைத்தையும் மாற்றும் நாயகனுக்கான வரிகளா என்று யோசிக்க வைக்கும் விவேகாவின் வரிகள்..
ரசனையான, கூலான இசை..

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டை எல்லாம் மாத்தி வைச்சான்

காணாமல் போன நண்பனைத் தேடிச் செல்லும் பயணத்தில் வரும் பாடல் என நினைக்கிறேன்...

நட்பால நம்ம நெஞ்ச தைச்சான்
நம் கண்ணில் நீரை பொங்க வைச்சான்

இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..

தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி

விவேகா ஒரு ரசனையான பாடலாசிரியர்.. 
சந்தமும் ஓசையும் சரேலென்று நெஞ்சைத் தாக்கும் அனாயசமான உவமைகளும் என்று கலந்து கட்டித் தருபவர்...

இந்தப் பாடலையும் ஜொலிக்க வைத்துள்ளார்.
ஒரு தாயை தேடும் பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்..

நட்பு என்பது கற்பைப் போன்றது என்ற உவமையையும் விஞ்சி விட்டார்.

நான் எப்போதும் கிரிஷின் குரலையும் அதில் தொனிக்கும் உணர்ச்சிகளையும் ரசிப்பவன். 
ஹரிஸ் ஜெயராஜின் இசையில் க்ரிஷ்ஷுக்கு பல நல்ல வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. இது மேலும் ஒரு பெயர் சொல்லும் பாடல்.

Airtel இன் அண்மைக்கால ஹிட் சுலோகமான 'ஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்' ஐ ஞாபகப் படுத்தினாலும் மனது முழுக்க நிறைகிறது பாடல்.
தொடர்ந்து beatsஐக் கேட்ட போது சென்னை சூப்பர் கிங்க்சின் விளம்பரப் பாடல் "இது சென்னை சென்னை சூப்பர் கிங்க்ஸ்" பாடல் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.


2.அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
எழுதியவர் :- மதன் கார்க்கி
பாடியவர்கள் :- விஜய் பிரகாஷ், சின்மயி, சுவி(Rap பகுதிகள்)

ஹரிஸ் ஜெயராஜ் வித்தியாசமான இசை வடிவங்கள் சிலவற்றை இந்தப் பாடலில் இணைத்துத் தந்திருக்கிறார்.
அதனாலோ என்னவோ, முன்னர் வெளிவந்த பல பாடல்களைக் கேட்ட ஞாபகமும் வந்து இந்தப் பாடலை ஆழ்ந்து அனுபவிக்காமல் செய்கிறது. 

கனவு காணலாம் வரியா - ஜெய் 
கண்டேனே - மாசி 
சில்லென்று வரும் காற்று - ஏழுமலை (மெல்லிடையோடு வளைகோடு பாடல் வரி வருமிடம்)

ஆனால் விஜய் பிரகாஷ், சின்மயியின் ரசிக்க வைக்கும் குரலும் அழகியலான வார்த்தைகளும் காதல் இறக்கைகளைக் காதுக்குள் பொருத்துகின்றன எமக்கு. 

16 மொழிகளில் காதலைச் சொல்லி ஆரம்பித்து இதமான வரிகளுடன் செதுக்கி இருக்கிறார் மதன் கார்க்கி.
இவரது முதல் பாடலில் இருந்து ஒவ்வொரு பாடலிலும் என்னை ரசிக்கவும், ஆச்சரியப்படவும் வைக்கிறார்.
தந்தையைப் போலவே காதலுக்குள் அறிவியலையும், பாடலுக்குள் வார்த்தைகளுடன் வளமான மொழிச் செழுமையையும் தொடர்ந்து ஊட்டிக் கொண்டிருக்கிறார்.
இவரது பல்கலை ஆராய்ச்சியின் தேடலோ என்னவோ, புதுப் புது சொற்கள் மொழிக்கு சினிமாப் பாடல்கள் மூலமாக வந்து கிடைக்கின்றன.

ஒன்றா இரண்டா.. எத்தனை வரிகளை இங்கே எடுத்துக் காட்ட முடியும்?

மதன் கார்க்கியின் வலைத்தளத்திலிருந்து அவரது ஒட்டுமொத்த வரிகளையுமே தந்துவிடுகிறேனே...


அஸ்க் லஸ்கா



ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

பெண் குரலின் மெல்லிய சுகமான தழுவலோடு ஆரம்பிப்பதே ஒரு ஸ்பரிச உணர்வு.....


முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்.

மதன் கார்க்கியின் வர்ணிப்பில் இலியானாவுக்கு மட்டும் தமிழ் தெரிந்திருந்தால் தேடி வந்து ஒரு இச் கொடுத்திருப்பார்.

பாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்

இலக்கியத்தைத் திரட்டி இக்காலத்துக்குத் தரும் முயற்சியினாலான இந்த வரிகளைத் தொடர்ந்து 
அழகான புது நயத்தைத் தருகிறார்...

உன் நெஞ்சில் நாடிமானி வைக்க

முன்னர் நடந்தது மறுபடி நடப்பதாக எமக்குத் தோன்றுவதை என்போம்..
இந்த வார்த்தை முதல் தடவையாக ஒரு தமிழ்ப் பாடலில்... அதுவும் பொருத்தமாக..
தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்

ஒரு அழகுக்கான வர்ணனை.. ஒரு அழகிய காதலிக்கான, குறும்பான குழந்தை போன்ற ஒரு அழகிக்கான வர்ணனை வர்த்திகள்..


எங்கள் காதலியர்க்கு நாங்கள் இவரிடம் இரவல் வாங்கக்கூடிய வரிகள் தொடர்கின்றன...

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்

புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..
Virus இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே

அழகான தமிழைக் கொல்லாமல், மென்று துப்பாமல் உணர்ந்து பாடி, உயிர் கசியச் செய்த பாடகர்களைத் தேர்வு செய்த ஹரிஸ் ஜெயராஜுக்கு வாழ்த்துக்கள் பல கோடி.


3.இருக்காண்ணா 

எழுதியவர் :- பா.விஜய்
பாடியவர்கள் :- விஜய் பிரகாஷ், ஜாவிட் அலி, சுனிதி சௌஹான்

ஹரிசின் இசையில் வரும் துள்ளல் காதல் பாடல்களின் வகையறா இது.. 
பா.விஜய் வார்த்தை சந்த , சிந்து விளையாட்டில் புகுந்து விளையாடி இருக்கிறார்.
முதல் வரியிலிருந்து சிலேடை, உவமை,, உருவகம் என்று இருக்கும் தமிழ் அணிகளைப் போட்டு, கலக்கி எடுத்திருக்கிறார்.

கதாநாயகி இலியானாவின் புகழ்பெற்ற இடையை வைத்தே ஆரம்பிக்கிறது பா.விஜயின் வார்த்தை விளையாட்டு....

இருக்காண்ணா
இடுப்பிருக்காண்ணா
இல்லையாண்ணா இலியானா 

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி
மல்லி வாச மல்லி
உன் மேனி வெண்கல வெள்ளி

சொல்லி சொல்லி உன்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

கற்பனை சும்மா சிறகடிக்கிறது.. வழு வழு இடையை ஜெல்லி பெல்லி என்பதும், வாச மல்லியையும், மேனியின் வெண்கல வெள்ளி நிறத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதுமாகக் கவிஞர் ஜொலிக்கிறார்.

விஜய்க்காக கிள்ளிக்குப் பின்னதாக 'கில்லி' :)
இருக்காண்ணா , இலியானா என்று ஆரம்பித்து அதே ஓசை நயத்தோடு கலக்கலாக முடிவது அருமையான finishing touch.

இழைச்சானா குழைச்சானா- ரொம்ப
செதுக்கி செதுக்கி உழைச்சானா

நீ ஜெங்கிஸ்கானா
நீ உன் கிஸ் தானா
நான் மங்குஸ் தானா
உன் கையில் கஸகஸ்தானா..?? (இல்லை அது கசக்கத்தானாவா? ;))

விஜய் பிரகாஷ், ஜாவேத் அலியின் உற்சாகக் குரல்களுடன் சுனிதா சௌஹானின் கிரக்கும் குரலும் சேர்ந்து உற்சாக டோனிக் தருகிறது இந்தப் பாடல்.


4.ஹார்ட்டிலே பட்டறி 

எழுதியவர் :- நா.முத்துக்குமார்
பாடியவர்கள் :- ஹேமசந்திரன், முகேஷ்

வாரணம் ஆயிரம் - ஏத்தி ஏத்தி மெட்டும் ஹிந்தி 3 Idiots - All is well பாடலின் பாணியும் கலந்து கட்டி ஹரிஸ் தந்துள்ள mix இந்தப் பாடல்.

நா.முத்துக்குமாரின் உற்சாகம் தரும் இளமை வரிகள் ரசனை..
இளைஞர்களுக்கு உற்சாகம்.
வாழ்க்கையில் என்ன நடந்தாலும் கவலைப்படாதே ... எல்லாவற்றிலும் வாழ்க்கை உள்ளது என்று 'யூத்' தத்துவம் சொல்கிறது முத்துவின் முத்து வரிகள்.

தோல்வியா tension ஆ சொல்லிடு
All is well..
tight ஆகா lifey ஆனாலும்
லூசாக நீ மாறு

நான் எப்போதும் மனதுக்குள் வைத்துக்கொள்ளும் விதியை நா. முத்துக்குமார் பாடலிலே கொட்டித் தள்ளி இருபது மகிழ்ச்சி....

மூளையதான் மூட்டை கட்டு
follow your heart-u beat-u root-u
மனது சொல்வதை செய் :)

கொஞ்சம் யோசித்துக் குபீர் என்று சிரிக்க வைக்கும் வரிகளும் பாடலிலே உள்ளன..
பாத்ரூமுக்குள் பாம்பு வந்தால்
All is well
தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு
All is well

joker என்பதால் zero இல்லை
All is well
சீட்டு கட்டிலே நீ தான் hero

                                                                            Nanban
                                                                      

5.எந்தன் கண் முன்னே..

எழுதியவர் :- மதன் கார்க்கி
பாடியவர் :- ஆலாப் ராஜ்

காதலின் தவிப்பு + பிரிவு உணர்த்தும் ஒரு சிறு பாடல்....
ஆலாப் ராஜுவின் குரலில் தவிப்புடன் உணர்ச்சியும் சேர்ந்து மதன் கார்க்கியின் வரிகளின் வலிமை தொனிக்கிறது.

காதல் முன் காணாமல் போவதும், காதலி இல்லாமல் வீணாக ஆவதும் சின்ன வரிகளால் ஆனால் சுருக் என்று உணர்த்தப்படுவது ரசனை.

எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!

யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!

இரு வரிகளில் தந்தையார் வைரமுத்துவின் 'காதல் ஓவியம்' பாடல் "சங்கீத ஜாதி முல்லை" யில் வரும் வரிகளையும் ஞாபகப்படுத்துகிறார்...
தந்தை வைரமுத்து - 
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்.. 
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்..

மகன் மதன் கார்க்கி -
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்

சந்தர்ப்பங்களும் கற்பனையும் வித்தியாசம்.. ஆனால் நிகர்க்கிறார் இளவல்.

பலரின் இரவுகளின் ஏகாந்தங்களுக்கு துணை வரப்போகும் பாடல்.


6.நல்ல நண்பன்...

எழுதியவர் :- நா.முத்துக்குமார்
பாடியவர் :- ராமகிருஷ்ணன் மூர்த்தி

மரணப்படுக்கையில் கிடக்கும் நண்பனை மீட்டுக்கொள்ளப் பாடும் பிராத்தனைப் பாடல்?
இரக்கம், இறைஞ்சல், சோகம் என்று கலவையுணர்வு கொட்டிக் கோர்த்த முத்துக்குமாரின் வரிகள்..

இசை எங்கேயோ கேட்ட ஹிந்தி பாடலின் இசை என்று நினைக்காதீர்கள். ஹிந்தியின் 3 Idiotsஇல் வரும் பாடல் ஒன்றே தான்.
புதிய பாடகர்(?) ராமகிருஷ்ணனின் குரலில் இழையோடும் சோகம் எம்மையும் அழுத்துகிறது.

 நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணமும் நினைகின்றதா..?

சோகத்தை அள்ளி இறைக்கும் வரிகள்.... ஆனாலும் இந்த சோகப் பாடலில் எதோ ஒன்று மிஸ் ஆவதாக மனம் சொல்கிறது. என்ன அது?

-----------------------

எங்கேயோ கேட்ட மெட்டுக்கள் என்ற ஹரிஸ் ஜெயராஜின் வழமையான ஒரே சிறு குறையைத் தாண்டி, ஒரு முழு நிறைவான இசைத் தொகுப்பைக் கேட்ட சுகம்...
முதல் மூன்று பாடல் வரிகள் எப்போதுமே மனசுக்குள் + உதடுகளில் மாறி மாறி.. 

ஷங்கரின் மீது முழுமையான நம்பிக்கை இருப்பதால் காட்சிகளாகவும் 'நண்பன்' பாடல்களை ரசிக்கலாம் என்று காத்திருக்கிறேன்.

நன்றி - பாடல் வரிகளை தேடி எடுக்க உதவிய தம்பி ஜனகனின் வலைப்பதிவுக்கு 
#Nanban

December 22, 2011

Tintin 2011 - டின்டின்



எங்களில் அனேகரது சின்ன வயது ஹீரோ.. ஆங்கிலம் சரியாக வாசிக்க வராத காலத்திலேயே ஒட்ட வெட்டிய தலை முடியில் ஒரு கற்றை முடி மட்டும் குத்திட்டு நிற்க அப்போதே எமக்கு spike முடியலங்காரத்தை அறிமுகப்படுத்தியிருந்தவர் தன் செல்ல நாயுடன் பல்வேறு துப்பறியும் சாகசங்களில் ஈடுபட்ட டின்டின்.

அப்போது அம்மா தன் அலுவலகத்தின் நூலகத்திலிருந்து கொண்டுவரும் Adventures of Tintin, Asterix and Obelix படக் கதைகள் தான் பல புதிய ஆங்கில சொற்களைக் கற்றுக் கொடுத்திருந்தன.
Captain Haddock அடிக்கடி சொல்கின்ற Thundering thypoons, Blistering barnacles ஆகியன தான் நான் நினைவறிந்து முதல் தெரிந்த ஆங்கில வசவு வார்த்தைகள்...


இவற்றுள் நான் ரசனையோடு இப்போதும் மனதில் வைத்திருப்பது - 
"Billions of bilious blue blistering barnacles"


டின்டின் தன் அழகான வெள்ளை நாய் ஸ்னோவியுடன் சாகசங்களுக்காக செல்லும் இடங்கள் தான் நான் சென்ற முதலாவது வெளிநாட்டுப் பயணங்களாக இருந்து இருக்கும்..
சின்ன வயதிலே இந்தப் படக் கதைகளைத் தெரிந்தவரை நானும் தம்பிமாரும் வாசித்துக் கதைப் போக்கை ஓரளவு ஊகித்துக் கொள்வோம்.
மீதியை அம்மா வாசித்து டின்டின் சாகசங்களை முடித்து வைப்பார்.

அப்போதெல்லாம் எனது கொமிக்ஸ் நாயகர்கள் திரைப்படங்களாக வரமாட்டார்களா என்று நினைக்கும்போதெல்லாம் (அந்தச் சின்ன வயதில் ஜேம்ஸ் பொண்டைப் பெரிதாகப் பிடிக்காது - காதல் மன்னன் என்பதால்.. ஆனால் பதின்ம வயதில் ஜேம்ஸ் பொண்டைப் பார்த்து எரிச்சல் படவே ஆரம்பித்திருந்ததும் ஏங்கியதும் வேறு கதை) முகமூடி வீரர் மாயாவி, டின்டின் ஆகியோர் திரைப்படங்களில் வர மாட்டார்களா என்று தான் அதிகமாக விரும்பியிருக்கிறேன்.
இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கும் இதே ஆசை + கனவு முப்பதாண்டுகளுக்கு மேல் இருந்திருக்கிறது என்பது எனதும் அதிர்ஷ்டம் தான்..

ஆனால் நான் ரசித்த எனது சின்ன வயது கொமிக்ஸ் நாயகன் Tintin எனது மகன் தன் அபிமான கார்ட்டூன், கொமிக்ஸ் நாயகர்களை ரசிக்கும் வயதில் தான் திரைப்படத்தில் வந்திருக்கிறார் என்பது ஒரு சுவாரஸ்ய விஷயம்.


 Performance capture 3D film / Motion  Capture முறை மூலம் எடுக்கப்பட்டு வந்துள்ள Animation படம் ஏற்கெனவே விளம்பரம் மூலமாக ஆர்வத்தைத் தூண்டி விட்டிருந்தது.
இலங்கையில் 3 D படங்கள் பார்க்கக் கூடிய திரையரங்கம் திறக்கப்பட்டதனால் நம்ம டின்டின்னை 3 D ஆகப் பார்க்க முடியும் என்று ஆசையுடன் இருந்தால் Twitter மூலமாக Elephant House நிறுவனம் நடத்திய போட்டியில் ஓசி டிக்கெட் கிடைத்தது.
(நாமல்லாம் யாரு- ஓசியில் கிடைத்தால் ஓயிலையும் குடிப்பமுல்ல)
Elephant House நிறுவனத்தால் காண்பிக்கப்பட்ட சிறப்புக்காட்சியைக் கையில் ஐஸ் சொக்குடன் ரசித்துப் பார்க்கும் வாய்ப்பு.
என்ன ஒன்று 3 D மட்டும் இல்லை. 

அபாரமான animation  காட்சிகளை 3 Dயும் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக, விறுவிறுப்பாக ரசித்திருக்கலாம்.

ஸ்பீல்பெர்க்கின் முதலாவது முழுமையான அனிமேஷன் படமாம் இது. 
Raiders of the Lost Ark, Jurassic Park, Indiana Jones and the Kingdom of the Crystal Skull, War of the Worlds போன்ற அதிவீர சாகசப் படங்களை எடுத்த ஸ்பீல்பேர்க் இதை மட்டும் ஏன் அனிமேஷனாகத் தந்துள்ளார் என்பதற்கு படத்தின் பிரம்மாண்டமும், முக்கியமாக கப்பல் சண்டைக் காட்சிகள் + மொரோக்கோவில் இடம்பெறும் துரத்தல் காட்சிகள் (Chasing scenes) விடை சொல்கின்றன.

தற்செயலாக டின்டின் வாங்கும் ஒரு கப்பல் நினைவுச் சின்னத்துடன் (Unicorn) டின்டின்னைத் தொடரும் பிரச்சினைகளும், ஒன்றன் பின் ஒன்றாக ஒன்றோடு ஒன்று பின்னியதாக வரும் திருப்பங்களும், முடிச்சவிழ்ப்புக்களும், 17ஆம் நூற்றாண்டுக் கப்பல் + கடற்கொள்ளையர் யுத்தம் அதனுடன் இணைந்த புதையல் தேடலும் என்று வழமையான டின்டின் புத்தகங்களில் வரும் விறுவிறுப்பான கதை திரையில் விரிகிறது.


Unicorn என்ற கப்பலின் மாதிரிகள் மூன்றையும் தேடுவதும், அதனுள் இருக்கும் வரைபடங்கள் மூன்றுக்கான தேடலும், கப்பல் + கடற பயண சாகசங்கள், பாலைவன அலைச்சல், மொரோக்கோ துரத்தல் என்று பரபர, விறுவிறு தான்.

இதையெல்லாம் சும்மா நடிகர்களை வைத்து எடுத்திருப்பது சாத்தியமே இல்லைத் தான்.
ஆனாலும் பல பிரபல ஹொலிவூட் நடிகர்களின் பங்களிப்பும் உருவ வழியாகவும் (motion picturizing) , குரல் வழியாகவும் படத்தில் இருக்கிறது.
முக்கியமாக அண்மைய ஜேம்ஸ் பொண்ட் டானியல் க்ரெய்க். ஆனால் இவர் வில்லனாக நடித்திருக்கிறார்.(அல்லது இவர் முகம்)
டின்டின்னாக தோன்றி இருப்பவர் ஜேமி பெல். அந்த டின்டினின் பச்சிளம்பாலகன் தோற்றம் (குறிப்பாக கன்னச் சிவப்புடன்) அற்புதம்.

The Secret of Unicorn என்று பெயரிடப்பட்டாலும் இந்த டின்டின் திரைப்படம் இன்னும் இரண்டு கதைகளும் சேர்த்து பின்னிய திரைப்படத்துக்கான கதையாம் இது.

டின்டினின் அமைதியான, மதிநுட்பமான புத்தி சாதுரியங்கள், கப்டன் ஹடொக்கின் குடிவெறிக் கூத்துக்கள், முன் கோப மூர்க்கங்கள், தொம்சன் இரட்டையரின் பிரசன்னங்கள், ஸ்னோவி திடீர்த் திருப்பங்களைக் கொண்டு வருவது, வில்லன் குழுவின் அட்டகாசம் என்று ஒரு total action + entertaining package.



படத்தில் அதிகமாக நான் ரசித்தவை -

பாத்திரங்களை ஒரு அசைவு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாங்கைக் கூட செயற்கை ஆக்காமல் இயல்பான மனிதர்களைத் திரையில் பார்ப்பது போலவே காட்சிப்படுத்தியிருக்கும் குழு பாராட்டுக்களை வெல்கிறது.

படத்தின் ஆரம்ப எழுத்தோட்டம். என்ன ஒரு படைப்பாற்றல்....

சண்டைக் காட்சிகள், துரத்தல் காட்சிகள் மிரட்டல்.
அதிலும் 17ஆம் நூற்றாண்டு கப்பல் யுத்தம், பின்னர் மொரோக்கோ மோட்டார் சைக்கிள் துரத்தல் இரண்டும் தத்ரூபம்.
டின்டின் - ஹடொக்கின் முதல் சந்திப்பு மோதலும், அதன் பின் 17ஆம் நூற்றாண்டுக் கதையை டின்டின்னை வதைத்துக் கொண்டே சுவாரஸ்யமாக ஹடொக் சொல்லும் இடமும்..

துறைமுகத்தில் ஹடொக்கும் வில்லனும் பாரம் உயர்த்திகளை வைத்துப் போடும் சண்டை.. 
இவர்கள் இருவரின் முன்னோர்கள் செய்த வாட்சண்டையை ராட்சத தனமாக இயக்குனர் ஞாபகப்படுத்துகிறார்.

தமிழில் ஷங்கரின் எந்திரன் என்ற மாபெரும் கனவை சன் பிக்சர்ஸ் மூலம் மாறன் எவ்வாறு பணத்தைக் கொட்டிக் கொடுத்து சாத்தியமாக்கினாரோ அதே போல ஸ்பீல்பேர்க்கினதும் எமதும் கனவுகளை நனவாக்க உதவிய தயாரிப்பாளர் பீட்டர் ஜாக்சனும் எம் நன்றிக்குரியவராகிறார்.

என் பக்கத்தில் அமர்ந்து தன்னை மறந்து டின்டின் பரவசப்பட்ட ஹர்ஷு போலவே நானும் எனது சிறிய வயதுப் பராயத்துக்கு செல்ல வைத்த டின்டின் பரவச அனுபவத்தை முடிந்தால் ஒருதடவை அனுபவித்திடுங்கள்...

ஸ்பீல்பெர்க் + ஜாக்சன் சேர்ந்து இந்தப் படத்தின் வெற்றியின் தொடர்ச்சியாக இன்னொரு படமும் தருவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.



December 18, 2011

அன்புள்ள எதிரிகள்


எதிரிகள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமற்றது; சுவையே இல்லாதது.
ஆனால் நண்பர்களே இல்லாத, எதிரிகள் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள்...
ஒரே கொலைவெறியாக இல்லை?

எதிரிகள் எப்போதுமே எங்களை மேலும் மேலும் போராட செய்கிறார்கள்; ஓய்வாக இருக்க விடாது தொடர்ந்து சிந்திக்க, செயற்பட செய்கிறார்கள்..
ஆனால் இதே எதிரிகள் தான் எங்கள் நிம்மதியையும் பல நேரங்களில் கெடுத்துவிடுகிறார்கள்.

உங்களுக்கு எதிரிகளே வேண்டாமா?
மிக இலகுவான வழியொன்று இருக்கிறது..
ஒன்றும் செய்யாமல் 'சும்மா' இருங்கள்..


எதிரிகள் உருவாவது எங்கள் செயற்பாடுகளிலும் உள்ளதைப் போலவே எங்கள் மனநிலையிலும் இருக்கிறது. காரணம் நாம் செய்யும் செயல்களில் ஒருவர் எமது எதிரியாக மாறுவதைப் போல, எம்மாலும் எதிரிகளை உருவாக்கிவிட முடியும். இதே போல நாம் ஒருவரை எதிரியாகக் கற்பிதம் செய்துகொள்ளவும் முடிகிறது. ஆனால் சிலவேளைகளில் அவர் உண்மையாக எமது எதிரியாக இல்லாதிருக்கலாம்.

எனக்கு ஒருவரை எதிரியாகப் பார்ப்பது எப்போதுமே பிடிக்காத விஷயம்.
காரணம் நண்பர்கள் எப்போதுமே எனது பலம்; நட்பு எப்போதுமே எனது வாழ்க்கையை வளப்படுத்துகிறது. நண்பர்கள் எனக்கு மிக அதிகம்; தொடர்ந்து நாளாந்தம் நட்பு வட்டம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

மறுபக்கம் பகையும், பகையாளிகளும் இருக்கிறார்கள் என்று எண்ணும்போதே அது ஒருவிதமான பலவீனத்தைத் தருவதாக எண்ணுகிறேன்.
இதனால் என்னால் எனக்கு எதிரியொருவர் உருவாகுவதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

 ஆனால் எனது சில கருத்துவெளிப்பாடுகள் நான் அறிந்தோ, அறியாமலோ எதிர்க் கருத்துடையவர்களையும், அதன் வழி எதிரிகளையும் உருவாக்கிவிட்டிருக்கிறது; உருவாக்கி வந்துகொண்டே இருக்கிறது.. இது எனக்கும் தெரியும்.
இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

அப்படியானவர்கள் என்னுடன் பழகுகின்ற சந்தர்ப்பங்களில் தான் அவர்களுக்கு நான் அதிப் புரியவைக்கவும் முடியும்; அவர்களாலும் புரிந்துகொள்ளவும் முடியும்.

எதிரிகளைப் பற்றி நான் வாசித்து, பின்பற்றும் நான்கு வழிகளை உங்களோடும் பகிர்ந்துகொள்ள இந்தப் பதிவு..

1.உங்கள் நண்பர்களை எப்போதும் எதிரிகளாக மாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களை விடவும் உங்களை அறிந்தவர்கள் உங்கள் நண்பர்கள் தான். அவர்கள் உங்கள் எதிரிகளாக மாறும்போது அதை விட ஆபத்து வேறேதும் கிடையாது.


2.உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை எதிரியாகக் கணித்துக் கொண்டிருந்தால் உங்களது இயல்புகளை அவருக்கு சரியாகப் புரியச் செய்து ஒரு எதிரியைக் குறைத்துக் கொள்ளுங்கள்.


3.நீங்கள் அறியாத ஒருவர் உங்களை எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கிறாரா? விட்டுவிடுங்கள்.. தெரியாத ஒருவர் பற்றித் தேவையில்லாமல் யோசித்து மனதை ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?
வேலி-ஓணான் கதை தான் இது.




4.வேண்டும் ஒன்றே ஒருவர் உங்களைத் தன் எதிரியாக்கி உங்களுடன் மோதுகிறாரா? நீங்கள் நண்பராக அணுக விரும்பினாலும் எதிரியாகவே இருப்பேன் என்று முரண்பிடிக்கிறாரா?
இல்லாவிடில் நண்பராக அவரை மாற்றிக் கொண்டாலும் 'துரோகியாக' மாறி விடுவார் என்று நீங்கள் தயங்குகிறீர்களா? விட்டுவிடுங்கள்..
அவர் தானாக உங்களுக்குப் பிரபல்யத்தையும் புகழையும் உருவாக்கித் தருகிறார்.
அதை உங்களுக்கான வெகுமதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

முக்கியமான ஒன்றே ஒன்று எதிரிகள் இருக்கிறார்களோ இல்லையோ, நண்பர்களை உருவாக்கப் பழகிக்கொள்ளுங்கள்.


ஆனால் தொடர்ந்து குழிபறிப்பில் ஈடுபடும் எதிரிகள், உங்களைக் கொலைவெறியுடன் துரத்துவோர், உங்கள் நிம்மதியைப் பறிப்போராக இருந்தால் அடித்து நொறுக்கி அழித்தே விடுங்கள்...


பி.கு - மக்கள்ஸ் இது யாருக்குமான உள்குத்துப் பதிவல்ல :)
வெள்ளிக்கிழமை விடியலில் தலைப்புக்குப் பொருத்தமாக சொந்தமாக அவிழ்த்துவிட்ட சிந்தனைகளின் விரிவு :)

நேற்றைய மரணம்/ கொலை ஒன்று (தொழில்முறை எதிரிகளாலான கொலை என்றும் ஒரு சந்தேகம் நிலவுவதால்)  மேலும் எதிரிகள் பற்றி சிந்திக்கச் செய்துவிட்டது. அவ்வளவு தான்.....


December 16, 2011

நிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்டுப் பெயர் கெடுப்போரும் - ட்விட்டடொயிங் - Twitter Log

மீண்டும் ஒரு 

ட்விட்டடொயிங் - Twitter Log


கடந்த இரு மாதங்களில் எனது ட்வீட்களின் தெரிந்தெடுத்த தொகுப்பு. 
பீட்டர் பினாத்தல்கள், கிரிக்கெட் மசாலாக்கள், பிடித்த ட்வீட்களின் Retweet எவையும் இல்லாமல் என்னுடையவை மட்டும்....

இந்த ட்விட்டடொயிங் - Twitter Log க்காக முன்னைய ட்வீட்களை மீண்டும் வாசிக்கின்றபோது தான்..
அந்தந்த ட்வீட்களில் கலந்துள்ள அந்தக் கணங்களின் மகிழ்ச்சிகள் அல்லது மனவருத்தங்கள், கோபங்கள் அல்லது குதூகலிப்புக்கள் என்று உணர்வுகளின் கலவைத் தொகுப்பு..



"உன்னை சுற்றியுள்ள எல்லாமே வெறுப்பைத் தருவதாக நீ உணர்ந்தால் உனக்குள் நீ வெறுப்புடன் இருக்கிறாய் என்று தான் அர்த்தம் " - ஓஷோ
    9:46 AM - 16 Dec 11 via web 
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது #சொல்லாமலே  பழனிபாரதி கலக்கியுள்ளார் :)

எதிர் கருத்து கூடாது என்பதல்ல.எதிர் கருத்தை ஆதாரபூர்வமாக சொல்லுங்கள்..வன்மத்தோடு , உள் நோக்கத்தோடு சொல்லாதீர்கள். #படித்ததில் பிடித்தது
11:01 AM, Dec 14th via web 


பழைய sms, FB msg, Twitter DMகளை மீண்டும் வாசித்து அசைபோடும்போது தான் உறவுகள் விரிவதும், தொடர்வதும், பிரிவதும் எப்படி எனப் புரிகிறது.#LIFE
9:41 AM, Dec 14th via web · Details

அவனுங்க ஏற்கெனவே நொந்து போயிருக்காணுக.. இந்தத் திருட்டுப் பயலுகள் வேற "After Harbhajan's passport, Praveen Kumar's revolver stolen"
2:53 PM, Dec 13th via web · Details

இதென்னைய்யா புது விதமா இருக்கு.. வரமாட்டேன் என்று சொன்னாலும் அழைப்பிதழில் பெயரைப் போட்டு பெயரைக் கெடுக்கிறாங்களே..
9:38 PM, Dec 13th via web · Details

60களில் ராஜா = A .M .ராஜா , எழுபது, எண்பதுகளில் - இளையராஜா, இப்போ திஹார் ராஜா 
2:10 PM, Dec 13th via web · Details
ராஜா என்றாலே இளையராஜா என்று சொன்ன இசைஞானி பிரியருக்கு..

 யோவ் EUROPE தவிர எல்லாக் கண்டமுமே ஆரம்பிப்பதும் முடிவதும் A இல் தான்
2:09 PM, Dec 13th via web · 
நண்பர் ஒருத்தரின் கண்டம் கடந்த காதலுக்குக் கடித்தது

கத்தும் நாய்க்கு காரணம் எது? தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும் - வைரமுத்து
8:05 AM, Dec 13th via web

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேர் என்னடி... பாடலில் SPB ஆரம்பிக்கும் இடம் அற்புதமாக இருக்கும் #Vidiyal
9:52 AM, Dec 8th via web

நீ வெளிச்சத்தில் நேராக நின்றால் உன் நிழல் கோணலாகக் கீழே விழாது - சீனப் பழமொழி
8:06 AM, Dec 8th via web

கடவுளே இல்லை எனும்போது எங்க கடவுள், உங்க கடவுள் என்று சண்டை போட்டால் நான் எங்கே போய் முட்ட?
9:14 PM, Dec 7th via web

பொதுவாச் சொன்னாலும் தனித்தனியாப் பிரிச்சு உயர்வு , தாழ்வு பார்க்கிறாங்களே.. உணரவும் மாட்டாங்க.. உருப்படவும் மாட்டாங்க.
9:08 PM, Dec 7th via web

தங்க விலை தகிடுதத்தோம்.. ஏறின மாதிரியே இறங்கிடுச்சே
11:40 AM, Dec 7th via web 

கனாக்காணும் காலம்.. அக்னி சாட்சி பாடல்... எப்போது கேட்டாலும் ஒரு மேகத்தில் மிதக்கும் உணர்வு... #vidiyal @vettrifm vettrifm.com
9:28 AM, Dec 7th via web

நான் சொன்னதும் மழை வந்துச்சா.. படத்தில் வர்ற நேரம் சரியில்லையே..
8:41 AM - 6 Dec 11 via Tweet Button 

போகும் பாதை தவறானால், போடும் கணக்கும் தவறாகும்.... தற்செயலாக இன்று பார்த்த 'அண்ணன் என்ன தம்பியென்ன' பாடலின் வரிகள்.. #life
8:11 AM - 6 Dec 11 via web

மொழி பெயர்ப்பு , முழி பிதுங்கல்.. இன்றைய நாளில் நான் அதிகமாக சிரித்த விஷயம்.. நல்ல காலம் அவசரப்பட்டு வாழ்த்தேல்லை ;)
8:23 PM - 3 Dec 11 via web 


Kalou காலை வாரி விட்டானே.. கவிழ்ந்தது #NCFU கனவு :( Pizza போச்சே..
8:08 PM - 3 Dec 11 via web 

அந்தியேட்டியில் தயவு செய்து அசைவ சாப்பாடு போடுமாறு எழுதிவிட்டு சாகவும் ப்ளீஸ் ;)
6:25 PM - 3 Dec 11 via web 
சாகலாம் என்று தோன்றுகிறது என்று சொன்ன ஒரு நண்பிக்கு 

சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி உயிரோடு சேரும் சுருதி - வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலமிது #vidiyal @vettrifm
8:51 AM - 1 Dec 11 via web 

நேற்றைய நாளின் நிஜப்பிரபலம் - கனிமொழி தொடரும் பாடல் - கலைஞர் பாடுவதாக - வா வா என் தேவதையே - அபியும் நானும் #kolaveri #vidiyal
7:58 AM - 29 Nov 11 via web 

“வாழ்க்கையில நாம என்ஜாய் பண்ற வேலையை செய்யணும்... இல்லைன்னா செத்துடணும்...” #மயக்கம்என்ன
10:58 PM - 28 Nov 11 via web

என்றோ ஒரு நாள் விடியும் என்றே இரவை சுமக்கும் நாளே.. அழாதே #இயலாமை+வெறுப்பு+விரக்தி = வேறென்ன சொல்வது?
10:18 PM - 27 Nov 11 via web 


தாய் தின்ற மண்ணே பிள்ளையின் கதறல் ஒரு பேரரசன் புலம்பல் #எனக்கும் உங்களுக்குமானவர்களுக்கான புலம்பல்
10:12 PM - 27 Nov 11 via web

இருண்ட வானம், இறுக்கமான மனது, விட்டு விட்டுத் தூறும் மழை, மெல்லிய புழுதி வாசம் - மே இறுதிக்கட்ட ஞாபகங்கள் ம்ம்ம்ம் #27thNov
5:49 PM - 27 Nov 11 via Twitter for iPhone 

தலைவர் என்று முதல் முதலாக மனதார நினைத்த ஒருவரை இன்று நினைப்பதை விட வேறேதும் செய்துவிட முடியாது. :( மனம் வலிக்கிறது. #26thNov
5:15 PM - 26 Nov 11 via web 

மாயம் செய்தாயோ, 'காயம்' செய்தாயோ என்று விவேகா வேலாயுதம் பாட்டில் எழுதி இருக்கிறாரே.. வரு முன் எச்சரிக்கிறாரோ?
9:16 AM, Oct 3rd via web

தாத்தா வாலி இன்னும் இளமையை மையில் ஊற்றி ரசிக்க வைக்கிறார். மெட்டும் ரசனை... இச்சு இச்சு இச்சுக் கொடு.. - வெடி
9:02 AM, Oct 4th via web 

நான் கூறிய கருத்துக்களில் தவறிருந்தால் அவற்றைப் பின் வாங்கிக் கொள்வதில் எனக்கு சங்கடம் இருப்பதில்லை. மயக்கம் என்ன பாடல்களும் அவ்வாறே:) 1/3
8:35 AM, Oct 5th via web · 

ஓட ஓட, காதல் என் காதல் - தனுஷ் பாடிய பாடல்கள் கேட்க, கேட்க பிடிக்கின்றன.கவித்துவம் என்பதை விட்டுப் பார்த்தால் ரசிக்க நல்லாவே இருக்கின்றன 2/3
8:45 AM, Oct 5th via web · 

ரசனை வரிகள், இளமை துள்ள, எளிமையான இசையில்.. ம்ம்ம்ம் .. 3/3 but continued.. ;)
8:47 AM, Oct 5th via web


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner