எங்கள் அலுவலகத்தில் கொஞ்ச நாளாகவே ஆவிகள்,பேய்கள் பற்றிய ஒரு பரபரப்பு!
பணிபுரிகிற நாங்களே அப்படித்தான் என்றபோதிலும்,மேக் அப் போட்டால் எங்கள் பெண்கள் சிலபேரும்,போடாமல் பலபேரும் பேய்களாகத் தான் திரிகின்றனர் என்ற போதிலும் பேய் பிசாசு ஆவிகள் எங்கள் அலுவலகக் கட்டடத்துக்குள்ளேயே இரவுநேரங்களில் உலவுவதாகவும் பலபேர் கண்டதாகவும் பயத்துடன் கூடிய பரபரப்புக்கள் கடந்த ஒரு மாதத்துக்குள் பலதடவை கேட்டுவிட்டோம்.
ஒருவர்,இருவர் என்றால் பரவாயில்லை.அதுவே பலபேர் என்றால்!
சிலீரென்று குளிர் காற்று போல் ஏதோ உடல் தழுவிப் போவது போல
யாருமில்லாத கலையக அறைகளிலே அலுவலக அறைகளிலே யாரோ ஒருவரோ இருவரோ பேசுவது போலவும்
யாரோ தொட்டு வருடிப் போவது போலவும்
கண்ணாடி ஜன்னல் கதவினூடாக வித்தியாசமான உருவம் எட்டிப் பார்ப்பது போலவும்
என்று ஒவ்வொருவரும் பலவிதமான பயங்கலந்த கதைகள் சொல்லினர்.
ஹோல்மங், பூதயா (சிங்களத்தில் பேய் குறித்து சொல்லப்படும் வார்த்தைகள்) எங்கள் அலுவலகத்தில் கொஞ்ச நாளாக ரொம்ப சாதாரணம்.
பகலிலும் தனியாக இருக்கவோ,தனி அறைகள்,கலையக அறைகளுக்கு செல்லவோ பயப்படுகிறார்கள் என்றால்,இரவில் கேட்கவா வேண்டும்?
இதற்காகவே இரவு நேர நிகழ்ச்சி செய்பவர்கள் அடிக்கடி யாருக்காவது தொலைபேசி தனிமையை நீக்க முயல்கிறார்கள்..
சில வேளைகளில் எனக்கே எடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.(இதற்காக யாரயாவது என்னால் துணையாக அனுப்ப முடியுமா? நல்ல கதை)
நான் பேய்கள் பிசாசுகள் ஆவிகள் பற்றி நம்பிக்கையில்லாதவனாக இருந்தாலும் மற்றவர்கள் மிகவும் பயந்து,உணர்வுகள் உந்தப்பட்டு, சத்தியம் பண்ணிச் சொல்லும்போது 'இப்படியும் நடக்குமா' என ஆச்சரியப்படும் ஒருவன்!
எனினும் கண்ணால் கண்டோ உண்மையாக உணர்ந்தோ அப்படியொன்று இருப்பதை சாட்சியபூர்வமாக நானே அறியும் வரை நம்பவேமாட்டேன்.
எனினும் நம்ம செய்திப்பிரிவின் அருண் (இவர் ஒரு பதிவரும் கூட aprasadh.blogspot.com) ஒருதடவை அதிகாலை இரு ஆவிகளையோ அரூப உருவங்களையோ கண்டதாக பதைபதைத்துப் பயந்தபோதும் (அதன் விளைவு - இலங்கைப் பேய்களுக்கென்று தனியாக ஒரு வலைத்தளமே தொடங்கிவிட்டார் - www.tamilghost.tk) பின்னர் எமது இரவு நேர நிகழ்ச்சி அறிவிப்பாளர் ரஜீவனும் இரவுநேரம் உருவம் ஒன்று சரேலென்று வந்து மறைந்ததாகவும் சொன்ன பிறகு நாங்கள் சில துப்பறியும் வேலைகளில் இறங்கினோம்.
கிடைத்த சில விஷயங்கள் -
எங்கள் அலுவலகக் கட்டடம் முன்பு எங்கள் நிறுவன உரிமையாளரின் வீடாக இருந்தபோது தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக ஒரு இளம்பெண்ணின் தற்கொலை.
அருகேயுள்ள வீடொன்றில் இளம் காதல் ஜோடி ஒன்றின் தற்கொலை.
அலுவலகக் கட்டடத்தில் ஏற்கெனவே உலவுவதாக சொல்லப்பட்ட 3 ஆவிகள் பேய்கள் அதில் ஒன்றை பௌத்த மதகுரு ஒருவர் விசேட பூஜை மூலமாக விரட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆவிகள் பேய்களைக் கண்டதாகச் சொன்னவர்கள் கண்டநேரம் இரவு 10மணியிலிருந்து அதிகாலை 5மணிக்குள்.
(24மணிநேர ஒலிபரப்பு நிலையமொன்றாலும் இரவு நேரங்களில் மொத்தமாக அலுவலகத்தில் இருப்பவர்களே ஐந்தோ ஆறுபேர் தான்)
நான் அலுவலகம் செல்வது காலை 5.30 மணி அளவில்.
நானும் கண்டால் நல்லா இருக்குமே என்று யோசித்ததுண்டு கண்டாலும் பயப்படமாட்டேன் என்ற உறுதிதான.;
நேற்று முன்தினம் காலை அப்படியொரு வாய்ப்பு!
காலை செய்தியறிக்கையின் பின்னர் எனது கணினியைத் தட்டித் துருவிக் கொண்டிருந்தபோது சிங்கள வானொலி 'சியத' முகாமையாளர் ஜெயநித்தி என்னைக் கூப்பிட்டு ஆண்கள் கழிவறைப் பக்கம் காட்டிய காட்சி!
ஒரேயொரு கணம் திகைத்தாலும் என் கையிலிருந்த செல்பேசி கமெராவினால் உடனே படமெடுத்துவிட்டேன்.
இந்தப்படத்திலே கண்ணாடிக் கதவின் மேல் ஒரு வெள்ளை ஸ்டிக்கர் முன்பிருந்தே ஒட்டப்பட்டுள்ளது.. எனினும் உள்ளே கலங்கலாகத் தெரியும் உருவம் தான் மர்மமாக உள்ளது.
உடனே கழிவறைக் கதவைத் தள்ளித் திறந்த பின் எதுவுமே இல்லை!
MMS மூலமாக எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி, பின் நமது நிறுவன உயரதிகாரிகள் உட்பட அனைவருக்கும் இதைத் தெரியப்படுத்தி நேற்று முன்தினம் முழுக்க ஒரே பரபரப்பு.
பேய் பிசாசு மீது நம்பிக்கையற்றவனான என் மூலமாகவே இந்தப்படம் வெளி வந்தது மேலதிகப் பரபரப்பு! ஏதோ கடவுளே நாத்திகன் ஒருவனுக்கு சாட்சி தந்தது போல..
கொஞ்சநேரத்தில் நம்ம அலுவலகத்தில் அன்றைய தினம் பாகிஸ்தானில் இடம்பெற்ற இலங்கைக் கிரிக்கெட் அணியின் மீதான தாக்குதலே பின் தள்ளப்பட்டது.
சொல்லப் போனால் நானும் என் மொபைலும் தான் அன்றைய நாளின் நிஜப் பிரபலங்கள்..
படத்தில் கறுப்பாயும் வெள்ளையாயும் ஏதோ தெரிவது/தெரிந்தது என்ன?
யாருக்குமே புரியவில்லை!
என் வலைப்பூ விருந்தாளிகளே உங்கள் கருத்து என்ன?
யாராவது பேய்,ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்வோருக்கும் இந்தப்படத்தை அனுப்பி வைக்க தயாராக இருக்கிறேன்.