July 29, 2011

இதெல்லாம் தானா வாறது ;) - ட்விட்டடொயிங் - Twitter Log



பதிவுகள் போட நேரம் இல்லாத நேரம் இப்போதெல்லாம் ஒரு சில வரிகளில், சில சமயம் சில சொற்களில் மனத்தில் நினைப்பதை சொல்ல முடிந்துவிடுகிறது..
Micro Blogging எனப்படும் Twitterஐ சொல்கிறேன்..
பல முன்னாள் பதிவர்கள் இப்போது ட்விட்டர்கள் ஆகிவிட்டார்கள்..

எமது எண்ணங்கள், கருத்துக்கள், புலம்பல்கள், செயல்கள் என்று அனைத்தையுமே நினைக்கின்ற நேரத்தில் மற்றவருடன் ட்விட்டர் மூலமாகப் பகிர்ந்து கொள்ள முடிவது மட்டுமில்லை.. அங்கிருந்து Facebookஇற்கும் உடனேயே அனுப்பிவிட முடிவதால், யாரை எங்கள் கருத்துக்கள், நாங்கள் சொல்பவை போய்ச் சேரவேண்டுமோ உடனே அவை சேர்வதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது..

இப்போது எனது Apple I phone 4 இலிருந்து தமிழில் தட்டச்சி ட்வீட் செய்யவும் முடிவது இரட்டிப்பு திருப்தி..
அதற்காக பதிவுலகை ஒரேயடியாகத் துறந்துவிடும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை..
(உண்ணாவிரதம், தீக்குளிப்பு மாதிரியான விஷயங்களைப் பற்றி எண்ணாதீர் உடன்பிறப்புக்களே)

எங்கள் ட்வீட்சை தொகுத்து பதிவாக இடும் ஒரு வழக்கத்தை ஆரம்பித்து வைத்த எங்கள் குஞ்சு பவனுக்கு முதலில் நன்றிகள்..


இப்போது மருதமூரானின் Facebook status பதிவுகளும் தொடர்ந்து வருகின்றன..
எனவே முன்பு பதிவர் சந்திப்பில் மு.மயூரன் கவலையாக சொன்னது போல அன்றி குறும்பதிவு - Micro Blogging என்பது பதிவுலகைப் பாதிக்காது என்று ஓரளவாவது நிம்மதியாக நம்பலாம்.. 


ஆனாலும் வாராந்தம் ட்விட் பதிவு போடுமளவுக்கு நான் தத்துவங்களைத் தமிழில் மட்டும் கொட்டுவதில்லை. :)
எனவே ட்விட்டுகள் சேரும் நேரத்தில் பதிவுகளாகக் கொட்டலாம் என்று ஒரு ஐடியா :)
Twitter, Facebook Timeline இல் மிஸ் பண்ணியவர்கள் படிக்கட்டுமே என்று ஒரு நல்லெண்ணம் தான்..



கொஞ்சம் பழைய, (எனக்கு) மறக்க முடியாதவை.. 

உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை-பேராசிரியர் சிவத்தம்பி
11 Nov 09

குட்டி, புத்தி, பக்தி.. இவை மூன்றுமே ஒன்றோடொன்று இணைந்தவையா? ;) ஒன்றில் ஒன்று தங்கியவையா? #சந்தேகம்
28 Dec 09

வாழ்க்கை என்பது சப்பாத்து மாதிரி..
அளவு சரியாக இருக்கவேண்டும். பெரிசாக இருந்தால் விழுந்துவிடுவோம்.. சிறிசாக இருந்தால் பயனில்லை.
அடிக்கடி மினுக்கிக் கொள்ளவேண்டும்
பிய்ந்தாலும் கிழிந்தாலும் தைத்துப் பயன்படுத்தவேண்டும்.. புதுசு வாங்காவிட்டால்
#Loshanism

முயற்சியும் இல்லாமல் சரக்கும் இல்லாமல் முன்னுக்கு வந்தவர் எவரும் இல்லை - மாயக் கண்ணாடிக்காக இசைஞானி பாடுகிறார் @vettrifm

இலங்கை அரசியல் ஆபத்தானது.இந்திய அரசியல் சுவாரஸ்யமானது.. எமக்கு..

 ஆயுதம் இல்லாதவன் எப்போதும் ஆபத்தில்லாதவன் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள் ..


எவ்வளவு தான் மனதை வேறு திசைகளில் மாற்ற எண்ணினாலும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே நாளையே சுற்றி சுற்றி வருகிறது... :(
17 May

கடவுள்கள் அழிந்தால் கவலைப்படப் பலருண்டு.. பரிதாப பக்தர்கள் கொத்தாகப் பலியுண்டது பற்றி.... :( மறக்காமல் இருப்பதே என்னால் செய்யக் கூடியது
17 May

எங்கள் கடவுள்களுக்கும் மரணம் உண்டு என சொன்ன நாட்கள்.. :(

இன்றைய நாள்.....
பிரிவுத் துயரை உணர்த்தும் நாள்.. இதனால் அருகில் இருக்கும் உங்கள் உறவுகளின் மேன்மையைப் புரிந்துகொள்ளக் கூடிய நாள்..
நாம் செய்த தவறுகளை மனதுக்கு உணர்த்தி, இனி அத்தவறுகளை செய்யக்கூடாது என்று உணர்த்தும் நாள்..
உற்றவருக்கும் மற்றவருக்கும் உதவ வேண்டும் என்று உணர்த்தும் நாள்..
இன்னும் வாழ்க்கையும் வரலாறும் இருக்கிறது என்று சொல்லும் நாள்...
MAY 18

 நிறைய ஆசிரியர்கள் தங்கள் மாணவிகளை மனைவியராக்கிய வரலாறு அறிந்துள்ளேன் ;)

 ஏன்யா உலகத்தில் என்ன நடந்தாலும் உங்களுக்கே என எடுத்துக் கொள்றீங்க? உங்களுக்கு என்ன சுப்பீரியர் கோம்ப்லேக்சா?(Superior complex)

நல்லவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளலாம்.. ஆனால் சிலர் தங்களை 'ரொம்பவே' நல்லவர்களாக காட்டிக் கொள்ள முயலும்போது அவர்களின் முகமூடிகளைக் கிழித்து மூக்கில் குத்தி உடைக்க ஆத்திரம் வருகிறது.


கடந்த ஓரிரு மாதங்களில் கொட்டியவை.. 

புதிய இசையமைப்பாளர்கள் பலருக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுவது மகிழ்ச்சி.. அந்தப் பாடல்கள் புத்துணர்ச்சியாகவும் இருக்கின்றன #அவதானிப்பு
6 Jun

ஸ்லிம் என்றால் எங்களை விடக் கொஞ்சமே கொஞ்சம் எடை குறைந்தவர்கள். உங்களை 'ஒல்லிப்பிச்சான்கள்' என்று தான் சொல்வார்கள் ;)
- மெல்லிய உடல்வாகு உள்ள ஒருவருக்கு சொன்னது ;)

ஊசி போல உடம்பிருந்தால் நேரே மோச்சரி தான். அதனால் தான் கவிஞர் பார்மசி தேவலை என்றார் ;)

பேசும்போதும், கேட்கும்போதும் சில சொற்களின் முக்கியத்துவத்தை நாம் கவனிப்பதில்லை..
"சிலவேளை, எப்போதும், இப்போது, முன்பு, நான் நினைக்கிறேன், இருக்கலாம், பொதுவாக,....."

சதை, கதை, உதை.. கொண்டை, மண்டை, சண்டை, பெண்டை.. நல்ல காலம் விவேகா இத்தோட நிப்பாட்டிட்டார்.. #வேங்கை திரைப்படப் பாடல்

நான் சரியென நினைக்கும் சரியான பல விஷயங்கள் இருக்கலாம். ஆனால் பொது நிலைக்கு வந்துவிட்டவன் என்ற அடிப்படியில் தவறாக இருக்கலாம் என்ற விஷயங்களை சரியாக நான் என்றும் நிலைப்படுத்திக் காட்டியதும் இல்லை; காட்ட முனையப் போவதுமில்லை.

'பிரபலம்' என்பது எப்போதுமே 'ப்ராப்ளம்' என்பதைத் தான் காட்டுதோ?

இடையிடையே பதிவு போடாவிடில் பதிவர் என்று எப்படி ஒத்துக்க மாட்டாங்களோ, IPOக்கு apply செய்யாவிட்டால் Share Trading செய்கிறோம் என்றும் ஏற்க மாட்டாங்களாம்.
#Loshanism

சில விடயங்களில் எஸ்கேப் ஆகும் எல்லாரும் அண்மைக்காலத்தில் பயன்படுத்தும் காரணம் - மனநிலை சரியில்லை. #என்னாங்கடா
23 Jun

சிலருக்கு ஏன்டா குருவாக இருந்தோம் என்று சிலநேரம் யோசிக்க வைக்கிறார்கள்.
நான் தான் அவர்களின் துரோணர் என்று சொல்லாமல் விடுவதே அவர்கள் எனக்குத் தரும் குரு தட்சணையாக இருக்கட்டும்
#நிச்சயமாக ஆணவக் கூற்று அல்ல இது

 பஞ்சு போல மனசு இருந்தா பிரச்சினையில்லை ;) பிஞ்சு போனாலும் பரவாயில்லை.. ஆனால் பஞ்சு போல.... ;#censored

எல்லோருக்கும் இடமுண்டு.. ஒருவருக்கு மட்டும் என்று எதுவும் இல்லை #சும்மா வந்த தத்துவம்.. ;)

எலி டிரஸ் போட்டு ஓடினால் ஏதோ விஷயம் இருக்கு ;) #இதெல்லாம் தானா வாறது ;)
28 Jun


நிறுத்துறது, விலத்துறது எல்லாம் என் வாழ்க்கையில் நடக்காது தம்பி #punch

புதிய இசையமைப்பாளர்கள் பலருக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுவது மகிழ்ச்சி.. அந்தப் பாடல்கள் புத்துணர்ச்சியாகவும் இருக்கின்றன #அவதானிப்பு


மதன் கார்க்கியின் இந்தப் பாடல் வரிகள் ரசிக்கவைக்கின்றன.. புதிய பாதையில் பாடல்களை எதிர்பார்க்கவும் வைக்கின்றன. 'நீ கோரினால் வானம் வாராதா?'

 :)பலவீனம் என்ன என்பதை மற்றவருக்குக் காட்டும் எதையும் வெளிப்படுத்தவும் கூடாது :) #அட்வைஸ்

சதை, கதை, உதை.. கொண்டை, மண்டை, சண்டை, பெண்டை.. நல்ல காலம் விவேகா இத்தோட நிப்பாட்டிட்டார்.. #வேங்கை திரைப்படப் பாடல்

இளையராஜாவின் ஒரிஜினலை யுவன் மாற்றியவிதம் ரசிக்கக் கூடியது.. என்னோட ராசி - தாஸ் * ஒரிஜினல் மாப்பிள்ளை படத்தில்..

ஒருத்தனை நல்லவனாக மாற்ற என்ன வேண்டுமானாலும் #விடியல் செய்யும்

சில விடயங்களில் எஸ்கேப் ஆகும் எல்லாரும் அண்மைக்காலத்தில் பயன்படுத்தும் காரணம் - மனநிலை சரியில்லை. #என்னாங்கடா

உன்னைப்போல அளவோடு உறவாட வேண்டும்.... கண்ணதாசன் சொன்னது ம்ம்ம்ம் உண்மை தான்.. #பரமசிவன் கழுத்தில் இருந்து

சிலருக்கு ஏன்டா குருவாக இருந்தோம் என்று சிலநேரம் யோசிக்க வைக்கிறார்கள்.
நான் தான் அவர்களின் துரோணர் என்று சொல்லாமல் விடுவதே அவர்கள் எனக்குத் தரும் குரு தட்சணையாக இருக்கட்டும்
#நிச்சயமாக ஆணவக் கூற்று அல்ல இது



நன்றி மறப்பது எப்பவுமே, எல்லோருக்குமே நன்றன்று #Felt

தானாக லேசில் வந்த எதையுமே என் நெஞ்சம் ரசிக்காதே.. #தில்லாலங்கடி டிங் டிங் பாடல் @vettrifm #Avatharam

அடப் பாவிங்களா.. இங்கேயும் வட்டங்கள் இருக்கிறதே.. இதுக்கும் யாராவது பதிவு போடுவாங்களோ? #google+ http://t.co/NJAZz5T - Google Plus பற்றி ;)
6 Jul

பாட்மிண்டன் விளையாடுவது எப்படி என்று @anuthinan கேட்டார்...
வழிகள் சொல்லிக் கொடுத்தேன்...
இறுக்கிப் பிடிச்சு மெதுவா அடிக்க வேண்டும் ;)
நடுவில் வலை போட்டு உள்ளுக்குள் விழுவதாக அடிக்கவேண்டும் ;)

நானும் திறந்த புத்தகம் தான்.. என்னுடன் ரொம்ப நெருங்கிய, நம்பிக்கைக்கு உரியோரிடம் மட்டும் #Just
7 Jul

நல்ல விஷயங்களை நான்கு என்ன நாற்பது இடத்திலே வாசித்தாலும் தப்பில்லை :) #நானேசொன்னது

வச்சுக்கத் தெரியாதவனுக்கு எதுக்குடா .. பேனா? ;) #புதிய பேனாவைத் தொலைத்த அலுவலக ஊழியனுக்கு சொன்னது #Loshanism

கமலின் சலங்கை ஒலி பிழை பிடிப்புக் காட்சியைக் காட்டிவிட்டு தொலைகாட்சி அறிவிப்பாளர் "களையைக் களையாகப் பார்க்கவேண்டும் ; பிலையை ஏற்றுக் கொண்டால் தான் களை வளரும்" என்கிறார். #கருமம் #கொலை
#NotVettriTV

மீதியை நான் உரைப்பதும் நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை.. #பலவிஷயங்களில் - ரசிக்க வைக்கும் வைரமுத்து
14 Jul

உருக வைக்கும் வைரமுத்து வரிகள், அழ வைக்கும் SPBயின் குரல் + அங்கிங்கு அசைய விடாமல் தடுக்கும் saxophone இசை.. #என்காதலே - டூயட்
15 Jul

முத்து பாடலில் 15 வருடங்களுக்கு முதலில் ரசித்த அதே வரிகள் இப்பவும் பிடிக்கின்றன.."இனிமை இனிமேல் போகாது.. முதுமை எனக்கு வாராது" #வைரமுத்து
15 Jul


தெய்வத் திருமகள் நேற்றுப் பார்த்து நெகிழ்ந்ததில் இருந்து 'நிலா' மனசெல்லாம்..
15 Jul

இப்போதைக்கு ஷேவ் எடுக்கத் தேவையில்லை. "தாடி உங்களுக்கு சூட் ஆவுது" இருபத்து மூன்றாவது கமென்ட் :)


ட்வீட் தொல்லைகள் தொடரும்... 

July 27, 2011

கதை சொல்லப் போறேன்....


கடந்த வெள்ளி விடியல் நிகழ்ச்சியை கதை சொல்லும் பாடல்களுடன், நேயர்களுக்கு மனது மறக்காத கதைகளையும் கேட்டு நடத்தி இருந்தேன்..
சிறுவயதில் கேட்ட, ரசித்த கதைகளைப் பல நேயர்கள் பகிர்ந்திருந்தார்கள்..
அம்புலிமாமா கதைகள், தெனாலி ராமன், பாட்டி-வடை-காக்கா- நரி கதை, முயல் - ஆமை கதை, அக்பர் - பீர்பால், தெனாலி ராமன், மகாபாரதம் என்று சிறு வயதுக் கதைகள் தான் ஏகப்பட்டவரால் சந்தோஷமாக நினைவுகூரப்பட்டிருந்தன..

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே நம்ம பதிவர் யோகா ஒரு நெகிழ்வான கதையை ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தார்....


ஒரு தந்தையும் மகளும் நடந்து செல்லும் வழியில் (தெய்வத்திருமகள் வந்த பிறகு - முன்பு அபியும் நானும் தந்த அதே Feeling, இந்த தந்தை-மகள் உறவு ஒரு trend ஆகி இருக்கிறது) ஒரு தொங்குபாலத்தைக் கடக்கவேண்டி வருகிறது. 


அதன் மீது நடக்கும்போது மகள் பயந்துவிடுவாள் என்றெண்ணி, "என் கையைப் பிடித்துக்கொள்" என்கிறார் தந்தை.
"இல்லை அப்பா.. நீங்கள் என் கையைப் பிடிச்சுக் கொள்ளுங்கோ" என்கிறாள் அந்த 'நிலா'.
"நீ என் கையைப் பிடிப்பதற்கும், நான் உன் கையைப் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?" கொஞ்சம் ஆச்சரியமாகக் கேட்டார் தந்தை.


"அப்பா, நாங்கள் பாலத்தில் நடக்கும்போது, தற்செயலாக விழுந்துவிட்டால், நான் உங்க கையைப் பிடித்திருந்தால் உங்க கையை நான் விட்டிட்டால் விழுந்திடுவேன்.. ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்திருந்தால் எப்பிடியும் விடமாட்டீங்க"
நம்பிக்கையோடு சொன்னாள் அந்த மகள்.

இந்த நம்பிக்கை தானே உறவுகளையும், நட்புகளையும் இணைத்து உலகை ஓட்டிக் கொண்டிருக்கிறது.
உறவுகள் ஒன்றையொன்று விடாது என்பதும், நாம் பிடிகளைத் தவறவிட்டாலும், அந்த உறவுகள் எம்மை விட்டு விலகாது என்ற நம்பிக்கை தானே வாழ்க்கை.

கதைகள் சொல்வதிலும் கேட்பதிலும் சிறுவயது முதலே அதீத ஈடுபாடு.. இதனால் தான் விடியலில் கதை சொல்லி சொல்லி காலத்தை ஓட்ட முடிகிறது. கஞ்சிபாயுடன் காலத்தை ரசிக்கவும் முடிகிறது.. பதிவுகளிலும் பொழைப்பைக் கட்ட முடிகிறது.

ஆனால் நல்ல கதை சொல்லியாக நான் இருப்பது இப்போது தான் அவசியப்படுகிறது..
(வானொலியில் நான் ஓரளவு நல்ல கதை சொல்லியாக நேயர்களால் ஏற்கப்பட்டிருக்கிறேன் என நம்புகிறேன்.. ஆனால் பதிவுகளில் எழுதும்போது அதே சுவாரஸ்யத்தைக் கொண்டுவருவது கொஞ்சம் கஷ்டம் என உணர்ந்தும் இருக்கிறேன். )
முன்பு பலருக்கும் கதை விட்ட, கதை சொல்லிக் கடத்திய காலம் மலையேறி, இப்போது சொல்லும் கதை செல்லுபடியாகவேண்டிய கட்டாய காலம்.
அதான்.. என் வீட்டுப் பெரியவர் ஹர்ஷுவுக்குக் கதை கதையாக சொல்லியாகவேண்டிய கட்டாயம்.

அந்தக் காலத்தில் எல்லாம் எங்கள் அப்பா,அம்மா சொல்கின்ற பாட்டி, வடை, நரி, முயல், பூனை, நாய் கதைகளை அப்படியே கேட்டுவிட்டு உம் போட்டு, தலையாட்டி பின் தூங்கி விடுவது தானே வழக்கம்..
ஆனால் இந்தக் காலம் அப்பப்பா.. நம்ம பாடு பெரும் கஷ்டம்..

ஹர்ஷு என்னிடம் சொல்லும் மிருகங்களை வைத்துத் தான் கதைகளை நான் உருவாக்க வேண்டி இருக்கும்..
அவன் கார்ட்டூன்களில் பார்த்த, படங்களில் கேள்விப்பட்ட மிருகங்களை எல்லாம் எங்கள் தூக்க நேரத்தில் கொண்டு வந்துவிடுவான்..

ஒரு நாள் டைனோசர் வரும்.. இன்னொருநாள் நீர் யானை வரும்.. இன்னொரு நாளோ அவனுக்கும் எனக்கும் பிடித்த Zebra - வரிக்குதிரை வரும்..
நானும் மனைவியும் நாங்கள் அறிந்த கதைகளில் இவற்றைப் பிரதியிட்டு கொஞ்சம் புதிய முலாம் பூசி ஒப்பேற்றிவிடுவோம்..

கோடரிக் கதை எல்லாம் கொஞ்சம் என்ன நிறையவே புதுசாக்க வேண்டி இருக்கும்..
அத்துடன் நவீன சாதனங்கள், Laptop, Mobiles, planes, etc.. நவீன விஷயங்கள் எல்லாம் சேர்த்து தாளிக்க வேண்டி இருக்கும்..
இடையிடையே "தெய்வத்திருமகளில்" நிலா கேட்டவை போன்ற குறுக்குக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்...

பத்து, பதினோரு மணிக்கு ஆரம்பிக்கும் கதை கேட்கும், சொல்லும் படலம் சில சமயம் நள்ளிரவு தாண்டியும் செல்லும்.. எனக்கோ அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு எழும்பவேண்டும்..
வேலை அலுப்பும் தூக்கக் கலக்கமும் கண்ணை சுழற்றினாலும் அவனை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக ஏதோ ஒரு கதையையாவது சொல்லிவிட்டே தூங்க செல்வது வழமை....

சிலவேளை சினிமாக் கதைகளை மிருகங்களை வைத்துப் பிரதியிட்டும் சமாளிப்பதுண்டு.. அதிலே குரங்கு தனுஷ் போல அரிவாள் எடுக்கும், சிங்கம் சூரியா போல பஞ்ச் பேசும்.. குதிரை விஜய் போல வில்லனுக்குப் பாய்ந்து பாய்ந்து அடிக்கும்..
ஹர்ஷுவுக்கு இப்படியான கதைகள் என்றால் பாகங்கள் பல போனாலும் கவலை இல்லை.
ஆனாலும் கடைசியாக ஒரு நீதி சொல்லி முடித்துவைப்போம்..

ஒரு நாள் திடீரென்று அதிகாலை 2 மணிபோல தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி "அப்பா முயல் கதை சொல்லுங்கோ" என்றான்..
கண்ணைத் திறக்க முடியாத அசதியுடன், ஏதோ ஒரு முயல் கதை சொல்லிக் கொண்டிருந்தேன்.. அந்தக் கதையில் முயல் ஒரேஞ் சாப்பிடுவதாக உளறிவிட்டேன்..
அந்த நேரத்திலும் அலெர்ட்டாக "அப்பா ரபிட் ஒரேஞ் சாப்பிடாது.. கரட் தான் சாப்பிடும்" என்றவன் குட் நைட் சொல்லிவிட்டான்..
அதுக்குப் பிறகு எனக்கு தூக்கம் போச்சு.
அட முயல் ஒரேஞ்சைத் தேடித் போகுதே... ஹர்ஷுவிடம் இதைக் காட்டத் தான் வேணும்..

இன்னொரு நாள் நல்ல அசதியாக மூவரும் தூங்கத் தயார்.. மனைவி காய்ச்சல் என்று படுத்தவுடன் தூங்கி விட்டார், எனக்கும் கண்கள் சொருகிக் கொண்டு வருகையில், "அப்பா எனக்கு டைனோசர், ஜிராப்(Giraffe - ஒட்டக சிவிங்கி) கதை சொல்லுங்கோ"
ஹர்ஷுவின் குரல்..
வாயசைக்கவே சோம்பலாக இருக்கும் நேரம் கதையா?
கடுப்பைக் காட்டிக் கொள்ளாமல்.. கண்ணை மூடிக்கொண்டே..
"ஒரு ஊரில ஒரு டைனோசரும் ஜிராபும் இருந்துதாம்.. ஒரு நாள் டைனோசருக்கு பயங்கரப் பசியாம்.. ஜிராபைப் பிடிச்சுத் திண்டுட்டுதாம்.. கதை முடிஞ்சுதாம்"



அவன் தன் மழலை மனதுக்குள் எப்படித் திட்டினானோ தெரியவில்லை.. "ஐயோ அப்பா எனக்குக் கதை வேணும்.. இது கதை இல்லை" என்று கொஞ்சம் முணுமுணுத்தான்.. தூங்கி விட்டான்..

இதுக்கு பதிலடி இவ்வளவு சீக்கிரம் விழும் என்று நான் நினைக்கவில்லை..

அண்மையில் ஒரு நாள் இரவு வழக்கம் போல அவன் என்னிடம் கதை கேட்க, "இண்டைக்கு ஹர்ஷு எனக்கொரு கதை சொன்னால் தான் நான் சொல்வேனாம்"  என்று சொன்னேன்.
வழமையாக முடியாது என்று சொல்பவன் " ஓகே அப்பா" என்று உற்சாகமாகத் தொடங்கும்போதே நான் நினைத்திருக்கவேண்டும்..

"ஒரு ஊரில் ஒரு சிங்கமும், குதிரையும் இருந்துச்சாம்.. சிங்கத்துக்குப் பசி வந்துதாம்... குதிரையைக் கடிச்சு சாப்பிட்டுதாம்.. கதை முடிஞ்சுது.. இப்ப நீங்க பெரீய கதை சொல்லுங்கோ"

ம்ம்ம்ம்.. இபோதும் இந்தக் கதைகள் இரவுகளில் எங்கள் வீடுகளில் நடந்துகொண்டு தானிருக்கு..
கதைகளின் ஸ்டொக் முடியாது என்ற நம்பிக்கையுடன்..
கொஞ்ச நாளில் கஞ்சிபாய் கதைகளையும் சொல்ல ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.

July 25, 2011

தேர்தலில் த.தே.கூ வெற்றி.. சொல்பவை என்ன?



இலங்கையின் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று நேற்று முழுமையான முடிவுகளும் வெளிவந்துள்ளன.
மோசடிகள், வன்செயல்கள் கொஞ்சம் ஆங்காங்கே இடம்பெற்றாலும்(அதெல்லாம் கண்காணிப்பாளர்கள் + தேர்தல் ஆணையாளர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லையாம்)

நேற்று காலையில் நான் ட்வீட்டியதைப் போல தமிழர் வாழும் பகுதிகளில் அரசாங்கக் கட்சி இரண்டாம் இடத்தையே பெற்றாலும், ஏனைய இடங்கள் எல்லாம் அரசாங்கத்துக்கே எழுதி வைத்தார் போல இலகு வெற்றி..

தேர்தல் நடைபெற்ற 65 தொகுதிகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 45 சபைகளிலும், தமிழ் அரசுக் கட்சிக்கு 18 சபைகளிலும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 2 சபைகளிலும் வெற்றி கிடைத்துள்ளது.

முழுமையான விபரங்களை கீழ்க்காணும் சுட்டிகளில் காண்க..

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2011 - முழுமையான தொகுப்பு


முழுமையான மாவட்டரீதியிலான விபரங்கள்


இந்தத் தேர்தல் பற்றி முன்னதாக எழுந்த கருத்துக்கள், பயன்கள் அத்தனையும் காற்றிலே பறந்து காணாமல் போயுள்ளது எல்லோருக்குமே ஆச்சரியமாகியுள்ளது.
ஆளும் தரப்பு மேற்கொண்ட முன்னாயத்தங்கள், முஸ்தீபுகள், அந்தந்த தமிழ்ப் பகுதிகளிலேயே நாட்கணக்காக, மாதக்கணக்காக தங்கியிருந்து முன்னெடுத்த 'அபிவிருத்தி'ப் பணிகள் எல்லாம் என்னாச்சு?
எனக்கும் இது பெரிய ஆச்சரியம் தான்.

அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது நேரடியாகப் பார்த்தவை உட்பட, எல்லோருமே அவதானித்த செய்திகளைப் பார்த்தால் மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் மனதுக்குள் அடித்திருக்கும்..

ஆனால் சில வாக்காளர் அட்டைக் கொள்ளை, சில மிரட்டல்கள்+அச்சுறுத்தல்கள், சில பல வன்முறைகள் தவிர, பெரும்பான்மையான இடங்களில் முடிவுகள் வாக்காளர்களின் விருப்பப்படியே வந்திருப்பதில் திருப்தி.

ஆனாலும் எப்படி இவ்வளவு நேர்மையாக என்ற ஆச்சரியமும் வராமல் இல்லை.. இதற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ?

அரசாங்கத்துக்கு இந்தத் தேர்தலில் வெற்றியும் தமிழ் மக்களின் வாக்குகளும் அத்தியாவசியமாகத் தேவைப்பட்டன..
ஏற்படுத்திய தலைக்குனிவையும் அவமானத்தையும் உலகின் எதிர்ப்பையும் துடைக்க தமிழ் மக்கள் தம்முடன் தான் என்று காட்டுவதற்கு இந்த வட மாகாணத்தின் சபைகளின் வெற்றி அவசியப்பட்டது.

இதனால் தான் முதலில் அபிவிருத்தி+ உதவிகள், பின் அமைச்சர்கள், அதன் பின் படையினர், இறுதியாக ஜனாதிபதி என்று யாழ் குடாநாடே கதிகலங்கியது..
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் வாக்காளர்களின் வாக்குகளை விட முடிவுகள் வித்தியாசப்படும் என்றே எண்ணத் தோன்றியது..
ஆனால் வடக்கு + அம்பாறை முடிவுகள் ஆளும் கட்சியின் மூக்கை உடைத்துள்ளன.

எனினும் இன்னொரு பக்கமாக சிந்தித்தால்,இவ்வளவு முனைப்பாக ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் எம்மையெல்லாம் 'அசத்திய' அரசாங்கம் இந்த முறை இன்னொரு விதமாக எம்மை ஆச்சரியப்படுத்தியதற்கு தெளிவான பின்னோக்கிய காரணம் ஒன்று இருக்கும்.

இவ்வளவு சுதந்திரமாக மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளோமே, எங்களையா சந்தேகப்பட்டு, தடை செய்து ஒதுக்கிறீங்க என்று அமெரிக்கா உட்பட்ட நாடுகளிடம் கேள்வி எழுப்ப, அப்பாவியாகத் தம்மை வெளிப்படுத்த இதை ஒரு வாய்ப்பாக அரசு பயன்படுத்தி இருக்கலாம்.

Channel 4 காணொளிகள் தந்த அழுத்தங்களை எல்லாம் கழுவ அரசாங்கம் இதைப் பயன்படுத்தி இருக்குமா? அப்படியாக இருந்தால் உலகிலேயே மிகச் சோர்ந்த ராஜதந்திரிகள் இலங்கையில் தான் இருக்க முடியும்..

ஆனால் ஆளும் தரப்பு இறுதி நேரத்தில் தான் இப்படி 'நல்லவர்களாக' மாறும் முடிவை எடுத்ததா என்ற சந்தேகமும் வருகிறது..

அப்படியாக இந்த முடிவுகள் இவ்வாறு வெளியிடப்பட அரசாங்கத்தின் 'தூர நோக்கு' தான் காரணம் என்று வந்தாலும், மாடாக உழைத்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்,. கட்சி சார்ந்தோர், தமிழ் அமைச்சர்கள்? பாவம்..

இதை நண்பர் ரமணன் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.


உள்ளுராட்சி மன்ன தேர்தல் வடக்கில் உண்மையில் வென்றது யார் ?




தமிழ் மக்கள் இன்னும் அரசாங்கத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மட்டுமல்ல, மன்னிக்கவும் தயார் இல்லை என்பதைத் தான் மிகத் தெளிவாக இந்த முடிவுகள் காட்டுவதாய் நான் எண்ணுகிறேன்.

வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு, சில வீதிகள் திறந்துவிடப் பட்டு (இவற்றுள் ஒரு சில தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டதும் இனி மூடப்படலாம் என்று பேச்சு இருப்பதும் கவனிக்கத்தக்கது) மேலும் சில அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டும் மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் தேர்வு என்று வந்தபோது மிகத் தெளிவாக ஒருநிலைப் பட்டுள்ளார்கள்.

இன்னொரு பக்கம் வெட்டப்பட்ட நாய்களுக்கும், மிரட்டப்பட்ட நேரத்துக்கும், இலவசங்கள் வந்தாலும் இழிநிலைக்குட்படுத்தப்பட்டதற்கும் தகுந்த பதிலை மக்கள் புள்ளடிகள் மூலம் வழங்கியுள்ளார்கள்.

இதன் காரணம் இலகுவாக ஊகிக்கக் கூடியதொன்று..
ஆனால் இதிலும் 'ஏகப் பிரதிநிதிகள்' என்ற மாயையில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது...

காலையில் தம்பி ரேஷாங்கன் ட்விட்டியிருந்த விஷயம் தீர்க்கமானது...
"எதிர்ப்பை மட்டுமே மக்கள் காட்டியிருக்கிறார்கள்; தமக்கான சரியான அரசியலை யாழ்ப்பாண மக்கள் இன்னும் நாடியே நிற்கிறார்கள் #Politics #SL"

இது தான் அது.. அம் மக்களின் ஆளும் தரப்பு, அதை சார்ந்தோர் மீதான எதிர்ப்பை வெற்றி பெற்ற தமிழ்த் தரப்பு மீதான அபரிதமான ஆதரவாக யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இதை முன்னாள் பதிவர் கன்கோன் நேற்று ட்வீட்டி இருந்தார் ..
சிலரை எதிர்ப்பதற்காக இன்னும் சிலருக்கு ஆதரவளிப்பதை, அந்த இன்னும் சிலர், தங்களுக்கான ஆதரவாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இதை நான் அழுத்தமாக சொல்லக் காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை (இந்த மூன்று ஆண்டுகளில்) முன்னெடுத்த காரண காரியங்களை அடிப்படியாக வைத்தே.
யாரொருவரும் மாற்றாக வராத காரணத்தால் யாழ் வாக்காளரின் தெரிவாக 'வீடு' இருந்திருக்கிறது.

த.தே.கூ மீது விமர்சனங்கள் இருந்தாலும் இம்முறை வாக்காளரின் தெரிவு வீடு ஆகவே இருக்கவேண்டும் என்றே நான் விரும்பி இருந்தேன்; எனக்குத் தெரிந்தவர்கள்,கேட்டவர்களிடம் வலியுறுத்தியும் இருந்தேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது இருக்கும் நிலையில் புது இரத்தம் பாய்ச்சினாலேயே எதிர்காலத்துக்கு போராடும் என்று சொல்வோரை நான் மறுதலிக்கிறேன். மாற்று ஒன்று உருவாகவே வேண்டும்.
இந்த த.தே.கூ எங்கள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மாதிரி.. ஆட்களை மாற்றினாலும் புதியவரிடமும் சில விஷயங்கள் தொற்றிக் கொள்ளும்.
எல்லாமே புதிதாக வேண்டும்.

எதிர்க்கும் நேரத்தில் எதிர்த்து, பெறவேண்டிய விஷயங்களை உரத்த ஒருமித்த குரலில் கோரவேண்டிய , மக்களுக்கு சொன்னதை சரியாக செய்யவேண்டிய ஒரு மாற்று காலத்தின் தேவை. அது அரைகுறையாக உருவாகாமல் முழுமையாக உருப்பெறும் வரை த.தே.கூவே இருக்கட்டும்.
ஆனால் ஏக பிரதிநிதிகள் என சொல்லும்போது உதைக்கிறதே..

காரணம் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது முக்கிய இடமான கிளிநொச்சியில் (அது வென்ற இரு இடங்களில் த.தே.கூ போட்டியிடவில்லை) வென்று தன் இருப்பையும், தீவகப் பகுதிகளில் வழமையாக நடப்பதைப் போல ஈ.பீ.டீ.பீ தன் வலிமையையும் காட்டியுள்ளன.
இனி வென்ற இந்த 18 சபைகளில் த.தே.கூ உறுப்பினர்கள் முன்னெடுக்க இருக்கும் நடவடிக்கைகள், மக்களுக்கான தங்கள் முன்னெடுப்புக்கள் குறித்து நாம் விமர்சனத்துடன் நோக்க வேண்டும். சும்மாவா யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் தமிழ் அரசுக் கட்சி சார்பாக 137 உறுப்பினர்கள்.

எனது சிங்கள நண்பர் ஒருவர் என்னிடம் நேற்றுக் கேட்டார் "உங்கள் ஆட்கள் இப்படி நன்றி இல்லாமல் நடந்தது சரியா?"
அவரிடம் நான் கேட்டேன் "இந்த அபிவிருத்தி, உதவிகளை எல்லாம் இப்போ தான் செய்திருக்கனுமா? இது அவர்களுக்கு வழங்கப்படிருக்க வேண்டிய உரிமைகள் தானே?"

"போரை நிறுத்தி, புலிகளுக்கு வழங்கிய ஆதரவையும் மறந்து ஜனாதிபதி உதவி செய்தும் ஏன் இவ்வாறு வாக்களிக்காமல் விட்டார்கள்?" அவரின் கேள்வி.

"இதற்காக விலை போவதாக இருந்தால் நம்மவர்கள் எப்போதோ புலிகளைத் தூக்கி எறிந்தும் இருப்பார்கள்;  இந்த தேவைகள் தான் முதன்மையாக இருந்திருந்தால் அடங்கியே போயிருந்திருப்பார்கள்." எனது பதில்.

ம்ம்ம்ம்.. எம்மவர்களை, எம்மவரின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொள்ள இவர்களில் பலருக்கு முடிவதில்லை..

இந்த முடிவுகள் மூலம் அவதானிக்கக் கூடிய மேலும் சில...

அரசாங்கம் சிங்கள மக்களால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது..
என்ன தான் விமர்சனங்கள் இருந்தாலும், ஊழல், அதிகாரம் என்று குற்றச்சாட்டுக்கள் குவிந்தாலும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு ஆபத்து எந்த வடிவிலும் இலங்கையில் இல்லை என்பது மீண்டும் உறுதியாக நிரூபணம் ஆகியுள்ளது.

அடுத்த வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னதாக இதனால் வேறெங்காவது இன்னொரு சிறு தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி முனையலாம்.

ஐக்கிய தேசியக் கட்சி- UNP , JVP ஆகியன மக்களால் ஒரேயடியாக ஒதுக்கப்பட்ட கட்சிகளாக மாறியுள்ளன..
இப்படியே போனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (தமிழ்கரசுக் கட்சி) இரண்டாவது கூடிய ஆசனங்கள் பெற்ற தனிக்காட்சியாக மாறும் நாள் தொலைவில் இல்லை.
ரணில் இனியாவது சஜித்துக்கு வழிவிட்டு ஒதுங்குதல் இலங்கையின் வெகுஜன அரசியலுக்கே நல்லது..

இப்படி ஒரு தனிக்கட்சி முழு ஆதிக்கம் செலுத்தி வருவதானது ஜனநாயகத்துக்கே ஆபத்தானது..

அது எங்கே இருக்கு என்று யாரும் கேட்கப்படாது..

ஆனால் இந்தத் தேர்தலில், முடிவுகள் வெளிவந்து வெற்றியின் உற்சாகத்தைத் தமிழர் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் 83 இனக்கலவரம், கறுப்பு ஜூலை இன்று 28வது ஆண்டு நினைவுகளைத் தருகிறது.


83இல் தமிழர், 84இல் சீக்கியர்.. ஒரு ஒப்பீட்டுக் குமுறல்



பழசை மறக்கவேண்டும் என்று பலர் சொன்னாலும், இவையெல்லாம் மறக்கப்படக் கூடியவையா?
இழப்புக்கள் அப்படியானவை..
அன்று ஆரம்பித்த தீ தானே 25 வருடங்களின் பின் இறுதியாக எமக்கெல்லாம் கொள்ளி வைத்து?

July 22, 2011

மறுபடியும் பாரதி - கவியரங்கக் கவிதை + ஒலிப்பதிவு - இது ஒரு வித்தியாசமான இடுகை


யாழ் மாவட்டத்தின், பருத்தித்துறை, புற்றளையில் உள்ள பிரசித்தி வாய்ந்த விநாயகர் ஆலயத்தில் அண்மையில் வருடாந்த உற்சவம் இடம்பெற்றது.
அங்கே ஒரு கவியரங்குக்காக எம்மை அந்த ஆலய நிர்வாக குழு சார்பாக பதிவர் பால்குடி(தனஞ்செயன்) அழைத்திருந்தார்.

ஏற்றிச் சென்று, பின் ஊர் சுற்றிக்காட்டி, பத்திரமாகக் கொண்டு இறக்கிவிட வாகன வசதியும் ஏற்பாடு செய்து தந்து,அன்பாக இருக்குமிட வசதி, உணவு வசதி, உபசரிப்பும் செய்த தனஞ்செயன் - பால்குடிக்கு நன்றிகள்..
(அதிலும் நானும் என் குடும்பமும் தங்கியிருக்கத் தன் அழகான வீட்டை அன்பான குடும்பச் சூழலுடன் தந்தமைக்கு விசேட நன்றிகள்)

யாழ்ப்பாணம், தேர்தல் காலம், ஆலய சூழல்.. கொழும்பில் இருந்து எட்டு மணிநேரப் பயணத் தூரம்.. மீண்டும் திரும்ப வேண்டும் என்று பல கோணங்களில் சிந்தித்து கவியரங்கிற்கு தலைமை வகித்த நானும், ஆதிரை(ஸ்ரீகரன்), நிரூசா(மாலவன்), சுபாங்கன், பவன் ஆகிய நான்கு கவிஞர்களும் தேர்வு செய்த கவியரங்கத் தலைப்பு - "மறுபடியும் பாரதி"

பாரதியாரின் நான்கு கவிதை அடிகளைத் தெரிவு செய்து அவற்றைத் தலைப்புக்களாக மாற்றிக் கொண்டார்கள் தோழர்கள்....


கடந்த பதினாறாம் திகதி சனிக்கிழமை இரவு, புற்றளை ஆலய முன்றலில் இடம்பெற்ற கவியரங்கை முழுமையாக இந்தத் தொடர் பதிவினூடாக ஒரு கவியரங்கு போலவே தரலாம் என்று எண்ணினோம்..


இந்த இடுகையை நீங்கள் ஒரு கவியரங்கை ரசிப்பது போலவே வாசிக்க வேண்டும்.....

கவியரங்கத்தைத் தலைமை தாங்கிய என் ஆரம்பம், அதன் பின் ஒவ்வொரு கவிஞர்களினதும் வலைத்தளங்களுக்கு சென்ற மீள்க...
ஒரு சுவாரஸ்யக் கவித் தொடர் இடுகை இது..

இந்தக் கவியரங்கக் கவிதைத் தொகுப்பை நான் இடுகையில் தந்திருக்கும் அதே வரிசைக் கிரமமாக சென்று , வந்து வாசித்தீர்களானால் முழுமையான கவியரங்கை வாசித்த திருப்தி கிடைக்கும்..
உங்கள் விமர்சனங்கள் எங்கள் குறைகளைத் திருத்தி மெருகேற்ற உதவும்....

கவியரங்கம் - மறுபடியும் பாரதி....




அறிமுகம் - ஒலிவடிவம் 






புலமை கொண்டோரின் ஒலி தவழும் புலோலியம் பதியில்
புல்லிலும் தமிழ் தழைக்கும்,
கல்லிலும் கலை மிளிரும் புற்றளையூரில்
காற்று வந்து கதை பேசும் இனிய இரவில்
திருவிழா முடித்த சந்தோஷக்களையில்
கவியரங்கு காண வந்துள்ள கலாரசிகர்களே..
பெரியோரே, பேரன்புத் தாய்மாரே,
சகோதர,சகோதரியரே
நண்பர்களே..


உங்கள் நேசமிகு அழைப்பால்
நீண்ட தொலைவு தாண்டி
பாச மிகு தமிழால்
பழகிப் பேச வந்துள்ளோம்..


பிறந்த இடம் தவழ்ந்த இடம், தமிழ் பழகிய இடம்
இந்த வட புல வளமான தமிழ் மண்ணாக இருந்தும்,
முப்பது வருடப் போரும்
முடிவில்லாமல் தொடர்ந்த இருண்ட யுகமும்
எம்மை இங்கே இருந்து விரட்டி
உறவுகளிலிருந்து விலக்கி
வெளியே வைத்திருந்தது..
தலைநகரில் இருந்தாலும் தாய் மடியை
நீங்கித் தவித்திருந்தோம்..
தமிழ் என்ற பாலம்
எப்போதும் எம்மை இணைப்பதால்
இப்போது சந்திக்கிறோம்..


காற்றில் கதை பேசி
கலை வீசி தொலை பேசும்
கலைஞன் நான் இன்று இந்தக் கவிஞரின் தலைவனாக
வந்திருக்கக் காரணம் தந்து
ஆசனமும் தந்து அழகு பார்த்துள்ள அன்பர்களுக்கு நன்றி.


மனதுக்கு அமைதி நாடி கண்ணால் காணாப்
பரம்பொருளிடம் வேண்டி, விழா எடுத்து
பா அரங்கு பார்க்க வந்துள்ள உங்களுக்காக
எது பற்றி கவிபாடலாம் என்று
பலவாறு யோசித்து, பலநாளும் யோசித்து
பாட்டுடைத் தலைவனாக
நாம் எல்லோரும் நேசிக்கும்
எம் தமிழால் தினம் பூசிக்கும்
இந்தியர் ஒருவரை அழைக்கலாம் என்று முடிவுகொண்டோம்...


இங்கிருந்து எட்டி நடந்தால்.. அல்ல அல்ல நீந்தினால்
ஒரு சில கிலோமீட்டர் தூரத்திலுள்ள அண்டை நாட்டவர் தானே?
அப்படியொன்றும் அன்னியரல்லவே..
எமக்கு நேர்ந்த எல்லாம் பார்த்தும்
தலைகள் தலையிடத் தயங்கிய வேளையில்
தவியாய்த் தவித்து
தங்கள் தசையாடிக் கவலை கொண்ட
தமிழக மக்கள் எப்போதும் எங்கள் நெருங்கியவரே..


அழகான தமிழால் ஆண்டாண்டு காலமாக எம்மை
அள்ளி அரவணைத்து
அணையாத தாகத்தையும் வேகத்தையும்
நெஞ்சில் உரத்தையும் நேர்மைத் திறத்தையும்
தந்து நிற்கும்
மறைந்தும் மறையாக் கவி
மகாகவி பாரதியே எங்கள் தலைவன்..
எங்கள் இன்றைய கவியரங்கத் தலைவன்..
இறந்தும் எம்முடன் வாழும் இனியவன் அவனை
இங்கே அழைத்து வருகிறோம்..


மறுபடியும் பாரதி....


மாண்டவர் சிலர் மீண்டு வந்தால்
மனது மகிழ்வு கொள்ளும்,,
மனதில் இடம்பிடித்த நல்லவர் சிலர்
மண்ணுலகில் மீண்டும் தோன்றிவந்தால்
மனம் நிம்மதி காணும்..
அப்படி ஒருவராக நம் பாரதியை
முறுக்கு மீசை, முண்டாசுக் கவிஞனை இங்கே மீண்டும் அழைக்கப் போகிறார்கள்
இந்த இளைய கவிகள்..


கல்வியில் கரைகாணக் கற்றுக் கொண்டே இருக்கும் கவிஞர்கள்..
பட்டங்கள் பெற்ற இருரும்
கற்றுக்கொண்டுள்ள இருவருமாக நால்வர்.


ஓடிவிளையாடும் பாப்பா முதல்
உலகை ஆளும் மகாசக்திவரை தன்
பாட்டு உலகத்தில் அள்ளி அடக்கிய பாரதியின்
தேடிஎடுத்த நாலு வரிகளைத் தத்தமது கவித்தலைப்பாக மாற்றியுள்ளார்கள்
இந்த நால்வர்.


பாரதி மீண்டும் வந்தால்...
நினைத்துப் பார்க்கவே நெஞ்சினிக்கவில்லை?


சிங்களத் தீவுக்குப் பாலம் அமைக்க சொன்னவன்
தான் சொன்னது நடப்பதைப் பார்த்து
சந்தோஷப்பட்டிருப்பனா?
பாலம் அமைப்பதை நான் சொல்லவில்லை..


புதுமைப் பெண்கள் புரட்சிகர மாந்தர்
புதுசு புதுசாக் கிளம்புவது பற்றி
புளகாங்கிதம் அடைவானா?


பாப்பா பாடல் பாடிய பாவலன்
பாட்டுக்கு பத்து லகரம் வாங்கும்
படப் பாடலாசிரியனாக மாறும் எண்ணம் கொள்வானோ?


sms, போன், மெயில், இன்டர்நெட் படுத்தும்
படாத பாடுகள் பார்த்து
செல்வீர் எட்டுத் திக்கும் எனும் தன் வாக்கை மாற்றி
செல்போன் மட்டும் எடுத்து வராதீர் என்று சொலக்கூடுமோ?


அன்பென்று கொட்டுமுரசே
மக்கள் அத்தனைபேரும் நிகராம்
என்று பாடிய அவன்..
இன்றெம் நிலை பார்த்து
அச்சமில்லை என்று பாடிய வரிகளையும் மாற்றி
அச்சப்படு எல்லாத்துக்கும் அச்சப்படு என்று மாற்றுவானோ?


அன்புக் கவிஞர்கள் அன்பன் பாரதியை
 மீண்டும் அழைத்து
எங்கே கொண்டுவருகிறார்கள்..
என்னென்ன கேட்கிறார்கள்..
ஆசையுடன் உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்...




முதலில் கவிபாட..
இவர்களில் இளையவர்..


ஆனால் குஞ்சாக இருந்தாலும் நெஞ்சு நிமிர்த்தி
விஞ்சு கவி தரக்கூடிய வித்தகன் இவன்..
திருமலை தந்த திருநிறை செல்வன்..
பட்டக் கல்வி படித்துக்கொண்டே பதிவுலகிலும்
சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவன்..
தமிழின் உணர்வும், சிரிப்பின் சுவையும்
கவியின் சிறப்பும் கலந்தே தருவான்..
நித்தியானந்தன் பவானந்தன்..


பாரதி என்ற பாவலனை அழைத்து
பவானந்தன் கேட்பது
வல்லமை தாராயோ...

பவனின் கவிதையைக் கேட்டு, வாசித்து ரசிக்க.....

"வல்லமை தாராயோ?"



பவனுக்கான தொகுப்பும், மாலவனுக்கான அறிமுகமும் - ஒலி வடிவம்






விக்கலையும் விக்கியையும் வெற்றியையும் சேர்த்து
முத்துக் கவி தந்த பவானந்தன்...


வாலிப வயதில் வனிதையருக்கு மடல் வரையும் பருவத்தில்
வாழும் வயதில் வானகம் சென்ற பாவலனிடம் வல்லமை தரவேண்டி
மடல் வரைந்த பவனின் கவிதை கேட்டோம்..


கிளாஸ் முடிந்து வீதியில் நின்று
காற்றில் காதல் வரைந்து
இரவு முழுதும் smsகளாலேயே காதலை முடித்து
கலவி வரை கணினியிலேயே முடித்து
காதல் என்பதைக் கடைச் சரக்கிலும்
கீழாக மாற்றிய எங்கள் வாலிபரின் காலத்தில்
இந்த இளைஞன் கேட்ட வல்லமை வலியது..
பெரியது.. 
எமக்கு காலத்தில் உரியது...


சுரண்டல்களின்றி பதுக்கல்களின்றி
தணிக்கைகளின்றி தாமதமின்றி
தயக்கங்களின்றி தடைகளுமின்றி
மடலொன்று வரைய - அது
மாற்றங்களின்றி உனை வந்தடைய
மரித்த மனத்தான் எனக்கு வல்லமை தாராயோ




ஆகா.. ரசித்தோம் உங்கள் ரசாயன வரிகளை..
ரசித்தோரே கரகோஷம் கொடுப்பீர் மறுபடி..


கடுகு சிறிதானாலும் காரம் பெரிது..
இவன் கவிதையின் சாரமும் பெரிது..
மெலியோர் வலிமை கேட்டுக் கேட்டு
மேலும் மேலும் மீளாத்துயரில்
ஆழ்ந்துபோகும் காலத்தில்,
மீசை முறுக்கி உரத்து
உண்மை பொழிந்த ஒருவனிடம் உண்மை கேட்பது நியாயம் தானே?




அடுத்து மேடைக்கு வரும்
அன்புக் கவிஞர்
அடுக்கு மொழியிலும் அழகான நடையிலும்
கவிதை மழை தரும் கணினிப் பொறியியல் கவிஞன்..
பாலநவநீதன் மாளவன்.


யாழ் மண்ணில் விளைந்து வன்னியில் வளர்ந்து
லண்டனில் பின் இப்போ கொழும்பிலும்
மூளையால் கணினியை முந்தி
வைக்கிறார் தகவல் பந்தி..
கணினியின் காவலனாக பூமிப் பந்தை
உருட்டிக் கையில் வைத்திருப்பதால்
இவர் ஒரு ஐ.டி (IT) அரிச்சுவடி..
அதனால் எழுதுகிறார் வலைப்பதிவு சுவடி.


பரந்த நெஞ்சும் விரிந்த வயிறுமாக வரும் எங்கள்
கவிதைக் காவலர் பாவலன் பாரதியை அழைக்கிறார்
தன் நெஞ்சு கொதிக்கும் நிகழ்கால நிஜங்களைக்
கொட்டி உரைக்க..
"நெஞ்சு பொறுக்குதில்லையே"

நிரூசா(மாலவன்)வின் கவிதையைக் கேட்டு, வாசித்து ரசிக்க....

"நெஞ்சு பொறுக்குதில்லையே"


மாலவனின் கவிதைக்கான தொகுப்பும், சுபாங்கனின் அறிமுகமும் - ஒலி வடிவம்





சைக்கிள் ஒட்டி ஒருவர் விமானம் ஒட்டி நடத்திய வினோத சாதனை பார்த்தோம்..
சொந்தக் கதை சொல்லிய கோலத்தில்
மீண்டும் உயிர்த்த பாரதி
அந்தோ அதோ தலை முண்டாசு அவிழ்ந்து விழுவதும் அறியாது
கறுப்புக் கோட் காற்றில் பறப்பதும் உணராது
கட்டுத் தெறித்து கடித்து வேகமாக
காடு மேடு தாண்டி ஓடுகிறான்...


லட்சம் லட்சமா சீதனம் இருக்காம்..
லட்சணமாப் பெண்ணும் இருக்காம்..
கொழும்பில் வீடும் இங்கே காணியும் இருக்காம்..
ம்ம்ம்.. மென்பொருளாளர் என்றால் மெத்த டிமாண்ட் தான்..
மற்றக் கவிஞர்கள் மேலும் கீழுமாய்ப் பெருமூச்சு விட்டெரிவதைப் பாருங்கள்..
இப்போ அவர்களல்லவா சொல்லவேண்டும்..
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட உலகத்தை நினைத்துவிட்டால்..


அதுசரி மாளவரே இந்த டிமாண்டும், இப்படிப்பட்ட சேதியும்
அவங்களும் அறிவார்களோ?


மென் பொருளாளரின் மெல்லிதயத்தை
ரணமாக்கி
மேனியைச் சூடாக்கிய விடயங்கள்
சிரிப்போடு தொடங்கினாலும் சீரியசானவை
பலவும் செறிந்தே இருந்தன..
சிந்திக்க வைத்திருக்கும்
சிக்கலான பல விஷயங்களும்
பட்டும் படாமலும் பகிர்ந்தவர்
எம்மைப் பாடாய்ப் படுத்தியவற்றைப்
பற்றியும் பலவுரைத்தார்..
ம்ம்ம்.. நெஞ்சு பொறுக்காது தான்.
நெஞ்சு முழுக்க மனிதம் இருக்கும்
மாந்தர் எவர்க்கும் நெஞ்சு பொறுக்காது..




நெஞ்சு கொள்ளாத நவீன உலக நடப்புக் கேட்ட எமக்கு
அடுத்து பாரதியை மீண்டும் உயிர்ப்பிக்க
நெடிதுயர்ந்து மெலிந்த மென்மைக் கவி
பாலசுப்ரமணியன் சுபாங்கன் கொண்டு வரும் 
கவி கேட்கும் வாய்ப்பு..
மனமுண்டு குணமுண்டு கவிதைத் தனமுண்டுஆனாலும்
கற்ற கல்விக் கனம் தலையில் ஏறாப்
பண்பாளன் இந்த சுபாங்கன்..


பொறியியல் கற்றுத் தேர்ந்து
பொறுமையாகப் பொருள் ஏராளம் குவிக்கும் வாய்ப்புக்குரிய
தொழில் தேடிக் கொண்டிருக்கும் இளைய கவி..
சிறுகதைகள் வரையும் சின்னமாமா
என்று சிறுவர் மட்டுமல்ல இளைஞரும்
ரசிக்கும் இன்முகத்தோன்..
பலதுறையும் அறிந்த பன்முகத்தோன்..


தொட்டதெல்லாம் துலங்கும் காலம் கிட்டிவர
மகாகவி சொன்ன ஜயமுண்டு பயமில்லை மனமே
இவரது பாடுபொருள்..


தயவுண்டு தாட்சண்யமுண்டு
ஆனாலும் பயமென்ற ஒன்று பாடாய்ப்படுத்தும்
இக்காலப் பொழுதில்
காலனைக் காலால் உதைக்கத் திடமாய் நின்ற
பாரதியை அழைக்கும் இக்கவிதை கேட்போம்..

சுபாங்கனின் கவிதையைக் கேட்டு, வாசித்து ரசிக்க...
ஜயமுண்டு பயமில்லை மனமே



சுபாங்கனின் கவிதைக்கான தொகுப்பும், ஆதிரைக்கான அறிமுகமும் - ஒலி வடிவம்







ஜயமுண்டு பயமில்லை சொன்னவன்
இன்று மீண்டும் வந்து
புது விதி உணர்த்திப் போயுள்ளான்..
சுபாங்கனின் சுள்ளென்ற வரிகளில் இருந்த சூக்குமம் ரசித்தோம்..
இந்த அமைதிக்குள் இத்தனை ஆங்காரமா?
இத்தனை ஆதங்கமா?


நீதான் கவிஞனாயிற்றே - எங்கள்
கசியும் மௌனங்களில் இருந்தே
கண்டுபிடித்துக் கொள்ளேன் என்றேன்.
நான்கும் தெரிந்தவனப்பா நான் என்றான்.
பொறு என்று சொல்லிப் பொங்கத் தொடங்கினான்.


பொங்கியது புதிய பாரதி மட்டுமா?
மங்கிய பொழுதுகளுக்கு முன்பு
எத்தனை பொங்கல் பொசுங்கியே போயின..


வாழ்விக்க வந்தவர்கள் வரலாறாய்ப் போகலாம்
தாழ்வுக்கு வித்திட்டோர் தறிகெட்டும் ஆடலாம்.
ஊருக்கு வெளியே பத்திரமாய் இருக்கும்
ஒற்றைப் பனையிலும் இடி வந்து வீழலாம்


அர்த்தமுள்ள புதிய பாரதியின் பொங்கும் வரிகளில்
நெருப்பின் பொறுமை நீறு பூக்கக் கண்டோம்..


நீராக மாறி இருக்குமிடத்தின் தன்மையை 
எடுத்துக்கொள்ள சொன்ன
இக்கால நியதி கேட்டோம்.. 
ம்ம் காலம் அப்படி
காத்திருத்தலே இப்போதைய கட்டாய ராஜதந்திரம்..


நீர் போல் மாறு
பாத்திரத்தின் வடிவம் படிக்கப் பழகு
ஆழ் அடி மௌனத்தை அப்படியே விட்டுவிட்டு
அடித்து ஆர்ப்பரிக்கும் ஆழி பழகு
வாய்க்கால் வழியே ஆற்றின் திசை மாற்று
சும்மா கிடக்கும் தரை கிடக்கட்டும்
தொடர்ந்து தட்டும் அலையாய் உழை
ஜயமுண்டு பயமில்லை மனமே




நான்காவது கவிஞன்
நாற்றாக முளைத்த தன் பூமியிலே
ஊற்றாகத் தன் கவிதையை ஊற்றி உருக்கி
காற்றெல்லாம் கவி மணக்க வந்துள்ளான்..
கல்யாண மேளம் கேட்கும் காலம் காண தொலைவில் இல்லை என்பதால்
தலை முதல் கால் வரை பளபளக்கும் புது மெருகு பாருங்கள்..
வடமராட்சி மைந்தன் இவன்
அரியகுமார் ஸ்ரீகரன்..


அற்புதமாய் அமைதியாய் ஆனால் அடக்கமாய்
கவிதை தரும் ஆதிரை என அறியப்படுபவன்..
சுருக் கருத்துக்கள்..
சுருளாத நேர்மை, பிறழாத பாதை
தவறாத வார்த்தை
மறவாமல் கற்ற பொறியியலால்
தொழிலில் உயர்ந்து நிற்கிறான் கொழும்பில்..


கட்டிளம் காளைக்குக் கல்யாணப் பருவம் என்பதால்
காதலே தன் கவிப் பொருளாகக் கொண்டான் பாருங்கள்..
கவிஞன் பாரதிக்கோ காதல் ஒரு கற்கண்டு..
கண்ணம்மாவைக் காற்றுவெளியிடையே காதலித்து உருகியவன் அவன்..
கண்ணனைக் காதலிக்கக் கன்னியாக உருமாறியவன்..
இந்தக் கவிஞனோ 
கடுகதிப் பயணத்திலேயே காதல் வளர்ப்பவன்..
பருவம் அப்படி..
அதனால் எடுக்கிறான்
"காதல் போயின் சாதல்"

ஆதிரை(ஸ்ரீகரன்)யின் கவிதை கேட்டு,வாசித்து ரசிக்க..
"காதல் போயின் சாதல்"



கவியரங்கின் முடிவுரை.....



தற்காலக் கோலம் பேசி, செத்திடலாம் போல இருக்கும்
தன் காதல் உள்ளம சொன்ன ஸ்ரீகரனின் கவிதை ரசித்தோம்..
ஏசிக்குள் வேர்க்கும் இனிப்புக் கூட கசக்கும்
பஸ் பயணங்கள் தனியே போனால்
பத்து நிமிடம் கூடப் பல நாள் போலவும்
எட்டு மணிநேரப் பயணங்கள் துணையும் வந்தால்
எட்டே செக்கன் போலவும் ஆகிப் போகும்..
என்ன இன்னும் ஏழே வாரம் தானே..
அதன் பின் எல்லாம் சுகமாகும்..


காதல் போயின் சாதல் சொன்ன பாரதி வாழ்க..
சாதலே எமது நாளாந்த வாழ்வாகிப் போனாலும் எங்கள் வாழ்வு
காதலும் காதலைக் காத்தலும்
மோதல் நடந்த போதே மூண்டெழுந்த காதல்களின்முற்றுப்பெறா
சரிதமான தேடலும் நிறைந்தவை தான்..


அன்னத் தூது காதல் முதல்
இன்று இணையத் தூது காதல் வரை
வடிவம் மாறினாலும்
காதல் காதல் தான்..
வரைமுறை மாறினாலும் வாசம் காதல் தான்..
அதுதான் இந்த
வடமராட்சி மைந்தன் வயப்பட்டு
காதல் வசப்பட்டு இங்கே
பாடிவைத்துப்போன கவிதை..
தோழரே நீங்கள் பேசாதீர்
இவர் போல
இவரதைப் போல உங்கள் செல்பேசட்டும்..
காதல் sms சொல் வீசட்டும்


அக்காலத்துக் கவி என்று எப்போதும்
பாரதியை யாரும்
சொல்லாத காரணத்தை
இக்கவியரங்கக் கவிஞர் எடுத்தியம்பிய பொருள் கேட்டு
உணர்ந்திருப்பீர் சபையோரே..
அவன் பாடாப் பொருள் எது?
இக்காலம் உணர்ந்தும் அவன் அன்றே பாடிய
எத்தனை எத்தனை பாடல்களை
நாம் இன்று எங்கள் மனதில் வைத்துள்ளோம்..
தூங்கிக் கொண்டிருந்த எம் தமிழினத்தை விழிக்க வைக்க
அவன் பாடியதால் தான்
தாலாட்டை மட்டும் பாடாமல் தவிர்த்தானாம்..


காளி பற்றி, கண்ணன் பற்றி
காணி நிலம் வேண்டிப் பாடியவன்
அன்று கண்டிராத ஆனந்த சுதந்திரம் பற்றியும்
கற்பனை செய்தே களிப்புற்றான்


கற்பனையில் எட்டாத உயரங்களை எட்டிநின்ற அக்கவிஞனை
இக்கவியரங்க மேடை மூலம்
மீண்டும் எம்மால் உயிர்ப்பாக்கும்
இனிய வாய்ப்புக் கிட்டியது


புதுக்கோட்டையிலும் எட்டயபுரத்திலும்
மீண்டும் உதிக்காத பாரதியைப்
புற்றளையில் கூட்டிவந்து காட்ட
வாய்ப்புத் தந்த
அன்பு நண்பர்களுக்கு எம் நன்றிகள்..


பாரதி சொன்ன பற்பல விடயங்கள் பற்றி
பத்தி பத்தியை சொன்ன போதினில்
பொறுமையாய்க் கேட்டு
அருமையாய் ரசித்த
உங்களுக்கும் நன்றிகள்..


மீண்டுஜ்ம் வந்த மீசைக் கவியை நாம் என்ன கேட்டோம்?


வல்லமை தாராயோ - எளியோராக, ஏமாந்துபோவோராக இருக்கும் நாம்
ஏற்றமடைய வழி அது


நெஞ்சு பொறுக்குதில்லையே - கண்ணால் கண்டு, காதால் கேட்டு
வெம்பி மனதில் வேதனையுடன் இருக்கும் விஷயங்களைக்
கொட்டித் தீர்க்க வழி அது


ஜயமுண்டு பயமில்லை மனமே - வளமான எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை
வளர்கிற போதிலே
வசந்தங்கள் எம்மிடம் வருகிற போதிலே
வஞ்சகம் ஏதாவது அதனுள் இருக்குமோ
எனக் கேட்க ஒரு வழி அது


காதல் போயின் சாதல் - சாதல் பல கண்டவர் நாம் என்பதாலும்
காதலின் பல வடிவம் கண்டவர் நாம் என்பதாலும்
எம் காதலுக்குரிய கவிஞனிடம் பேசியது அது


பாரதி சொன்ன வார்த்தைகள்
எங்கும் பழங்கதை ஆனதில்லை
அவன் பாடல்கள் சொன்ன புதுவிதி எவையும்
பொய்யென ஆனதுமில்லை


பாரதி மூலம், மறுபடி பாரதி மூலம்
பலவிடயம் சொல்லப்
பத்திரமாய் ஒரு மேடை தந்தீர்
பகிர்ந்தோம்..
பத்திரமாய் நாம் பாதை திரும்ப
பக்குவமாய்ப் பகிர்ந்துள்ளோம்


பிழைகள் இருப்பின் பொறுப்பீர்..
இல்லை பொருள் பற்றி நாம் சொன்ன
பொருள் விளங்கி
எம் கவி மனதில் எடுப்பீர்..
மதிப்பீர்..
மனதில் ஒரு இடம் கொடுப்பீர்..


பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’


நன்றி



என் செல்பேசியில் ஒலிப்பதிவு செய்த முழுக் கவியரங்கை நேர்த்தியாக வலைப்பதிவுக்காக மாற்றித் தந்த அலுவலக IT நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
படங்களில் உதவி செய்த சகோதரன் வலைப்பதிவர் ஜனகனுக்கு நன்றிகள்...

July 15, 2011

தெய்வத்திருமகள்

இன்று வேலைப்பளு அதிகரித்த நாள்; எழுத்து வேலையும் தலைக்கு மேல் இருந்தாலும், மனதார ரசித்த விஷயத்தை நண்பர்களிடம் பகிரவேண்டும் என்பதற்காகவும்,  நிலாவுக்காக ஒரு மணிநேரம் எடுத்து வருகிறது இப்பதிவு.

தெய்வத் திருமகள் நேற்றுப் பார்த்து நெகிழ்ந்ததில் இருந்து 'நிலா' மனசெல்லாம்..

ஒரு நல்ல நோக்கத்திற்காக நிதி சேகரிக்க யாழ் இந்துவின் பழைய மாணவர்களின் கொழும்புக் கிளை ஏற்பாடு செய்திருந்த விசேட முதல் காட்சியில் எம் வெற்றி FM வானொலி மூலமாக நாமும் சிறு பங்காக இணைந்திருந்தோம்..

ஓசி டிக்கெட் என்றாலும் அவர்கள் சேர்க்க வேண்டிய நிதி திருப்திகரமாக இருக்கவேண்டும் என்ற நினைப்புப் படம் ஆரம்பித்துப் பாதி நேரம் வரை மனதோடு பயணித்தது.

படம் பற்றி அறிந்ததில் இருந்து மிக எதிர்பார்த்திருந்த ஒரு படம்..
விக்ரம், பாடல்கள் தந்த எதிர்பார்ப்பை விட இயக்குனர் விஜய் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது..
தனது முதல் மூன்று படங்களிலுமே சிலாகிக்க வைத்து ரசிக்க வைத்தவர்.. கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசபட்டினம்..

(அனுஷ்கா, அமலா பால் ரசிகர்கள் ஓடிப் போங்க... )

ஆனால் இந்தத் திரைப்படம் ஆங்கிலப் படம் I am Samஇன் தழுவல் என்று தெரிந்த பிறகும், அந்த I am Sam ஐப் பார்த்த பிறகும் காத்திருந்த காரணம், அதில் உள்ள சில சிக்கலான பகுதிகளை எவ்வாறு தமிழ்ப்படுத்தப் போகிறார் விஜய் என்கிற ஆர்வம் தான்.
ஆனால் தழுவல் மட்டுமே.. ஆங்கிலப் படத்தின் முக்கியமான கதையோட்டத்தை மட்டுமே எடுத்துக்கையாண்ட விஜய் சிக்கலான, எங்களுக்குப் பொருந்தாத பகுதிகளைத் தமிழ் சினிமாவின் போக்கில் மாற்றிவிட்டார்.



ஆங்கிலப் படத்தில் சீன் பென் காட்டியிருந்த அற்புத நடிப்பை நம் விக்ரம் முந்துவார் என்று எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அனுஷ்காவும் மிஷேல் பீபரை நெருங்க முயற்சித்திருந்தார்.
ஆனால் ஆங்கிலப்படம் பார்க்காமல் தெய்வத் திருமகளைப் பார்ப்பது படத்தோடு ஒன்றவும் உணரவும் உங்களுக்கு உதவும்.

ஆனால் விஜயிடம் நான் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கவில்லை.
எழுத்து - இயக்கம் - விஜய்..
குறைந்த பட்சம் Inspired by I am Sam என்றாவது போட்டிருக்கலாமே..

மனவளர்ச்சி குன்றிய தந்தைக்கும், தாயில்லாமல் அவனுடன் வளரும் குழந்தைக்கும் இடையிலான பாசமும், குழந்தையின் எதிர்காலத்துக்காக அந்தப் பெண் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் குஹ்ழ்ந்தையின் தாய் வழி உறவுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வதுமே கதை....

பார்வைகள், இசை, வசனங்கள், உணர்ச்சிகள் மிகு காட்சிகள், அற்புதமான ஒளிப்பதிவு என்று எல்லாம் அளவான ஒரு நிறைவான திரைப்படம்..

விஜயின் மனம் உருவாக்கிய இந்தப் படத்தைக் காவிச் செல்லும் அறுவர் என நான் நினைப்பது..
விக்ரம் - இவர் நடிப்பைப் பற்றி புதுசாக சொல்லவேண்டுமா?

அனுஷ்கா - முன்பு உடலைக் காட்டிய இந்த ஆறடி அழகுப் பதுமை அமைதியாக, ஆவேசமாக, அன்பாக நடித்து அசர வைக்கிறது.

அமலா பால் - இவரை இப்படி மாங்கு மாங்கென்று எல்லாரும் வழிந்து தலையில் தூக்கி வைக்க என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தேன். (மைனா பார்த்திருந்தும்) நடிக்கிறார்.. கொஞ்சம் கறுப்பழகியாக இருந்தாலும் கண்களும், உதடுகளும் வாவ் சொல்ல வைக்கின்றன..


அந்த அழகான சின்னக் குழந்தை - சாராவா பெயர்? அள்ளி அனைத்து உச்சிமோந்திட வைக்கும் அழகும் துறுதுறுப்பும்.
இந்தச் சின்ன வயதிலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம்.. தந்தையின் மனவலர்ச்சியைத் தன வளர்ச்சி முந்துகிறது என்று காட்டும் காட்சிகள்.. வாவ்..

நிலா.. நேற்று படம் முடிந்து வானில் பௌர்ணமி நிலாவைப் பார்க்கும்போதும் இந்த நிலா தான் மனதிலே..

நீரவ் ஷா - மனதை ரம்மியப்படுத்தும் ஒளிப்பதிவு.. ஊட்டியில் குளிர்மையும். பின் வரும் காட்சிகளில் தெள்வும் என்று கலக்குகிறார். விழிகளில் பாடலில் மென் வேக ஒளிப்பதிவு, வெண்ணிலவே பாடலின் இருள் ஓவியம் என்பவை விசேடமாக உள்ளன.
close up காட்சிகளிலும் நீரவ் ஷா நிமிர்ந்து நிற்கிறார்.

G.V.பிரகாஷ் - படம் முழுக்க உணர்ச்சிகளைக் காட்டும் உயிர் இசை தான். பாடல்கள் எல்லாமே படத்தோடு ஒன்றைச் செய்வதும், தேவையான இடத்தில் தேவையான இசையைப் பேச வைப்பதும் என்று விஜயுடன் சேர்ந்தாலே G.V.பிரகாஷ் கலக்குவார் என்பதை மூன்றாவது தரமாக நிரூபிக்கிறார்.


ரசிக்க வைத்த பல காட்சிகளில் அதிகமாக ரசித்தவை..

நிலாவும், ஸ்வேதா(அமலா பால்)வும் சந்திக்கும் பள்ளிக் காட்சிகள்
நீதிமன்றக் காட்சிகளில் அனுஷ்காவும் நாசரும் மோதிக்கொள்ளும் இடங்களும் முகபாவமும்
நாசரின் நடிப்பு class..

நீதிமன்றத்தில் ஒரு பக்கம் உச்சக்கட்ட விவாதம் நடந்துகொண்டிருக்க, தங்களைப் பற்றியது தான் அது எனப் புரிந்துகொள்ளாத, விக்ரமும் நிலாவும் தங்களுக்குள் சைகையால் உணர்ச்சியுடன் பேசிக் கொள்ளும் இடம்..

கதை சொல்லப் போறேன் பாடல்.. என் வீட்டிலும் ஹர்ஷுவுடன் அடிக்கடி இதே போல கோக்குமாக்காகக் கதை சொல்லி நான் திணறுவதால் சேம் ப்ளட்..

ஜகடதோம் பாடலில் அனுஷ்காவின் தந்தையாக வரும் Y.G.மகேந்திரன் மனம் மாறும் காட்சிகள்..

M.S.பாஸ்கர் பாண்டியினால் மனம் மாற்றப்பட்டும் கொதிக்கும் இடங்கள். ஆரம்பத்தில் சிரிப்பாக மாறி பின் சீரியசாகும் இடமும் திருப்பம் வரும் இடமும்..
சந்தானம் - வழமையான ரெட்டை அர்த்தகடிகள் இல்லாமலேயே வெளுத்து வாங்குகிறார். அலுத்துக் கொள்வதும்,அலம்பல் செய்வதுமாக சிம்பிளான சிரிப்புவெடிகள்.

''ஒரு சம்பவம் நடக்குறதுக்கு ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தர் விவரமாய் இருந்தாலே போதும்'' இந்த வசனம் ஹைலைட்டாக மாறும் இடம் கலக்கல்..

தந்தை - மகள் பாசம் அபியும் நானும் திரைப்படத்தில் காட்டியது ஒரு பக்கம் என்றால் இது இன்னொரு அழுத்தமான பாசம்..
நாசரின் மன உணர்வுகள் மாறும் இடமும், அமலா பாலின் தந்தையாக வருபவரின் முகபாவங்களும், பாசத்தால் மனிதர்கள் எல்லோருமே உருகிவிடக் கூடியவர்கள் என்பதற்கான நிரூபணம்.


விக்ரம் - மனிதருக்கு வயது போகிறது என்பது தான் கவலையாக இருக்கிறது. அப்படியே நாம் காணும் விசேட தேவைக்குரியோரைக் காட்டுகிறார். வாழும் பாத்திரமாக..
கனவுக்காட்சியில் கூட அவரை ஹீரோவாகக் காட்டாமைக்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
ஆனால் Why DR சீயான் விக்ரம்? ரசிகர்கள் கேலியாக டாக்டர் விஜய் என்று கூவுகிறார்கள்.

சில சிறு பாத்திரங்களும் ரசனைக்குரியவர்கள்..
அனுஷ்காவின் நண்பி, அவரை வழிந்து வழிந்து காதலிக்கும் ஜூனியர் வக்கீல், விக்ரமை சீண்டும் குறும்பன் என்று இயக்குனர் செதுக்கியிருக்கிறார்.

கொஞ்சம் கண் கலங்கி, கொஞ்சம் ரசனையாக சிரித்து, மடியில் இருந்து படம் பார்த்த மகனை ஆசையுடன் தடவி,செல்லமாக முத்தமிட்டு அனுபவித்த தெய்வத் திருமகளை நீங்களும் அனுபவியுங்கள்..

விஜய் - வாழ்த்துக்கள்...

தெய்வத் திருமகள் - தேயாத நிலா 

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner