January 17, 2018

புதிய ஆண்டு, புதிய இணைப்பு - வெற்றி இனியாவது வருமா? - மத்தியூஸ் + ஹத்துருவின் புதிய இலங்கை !

முன்னெச்சரிக்கை : மிக நீளமான பதிவு. கிரிக்கெட்டில், அதிலும் இலங்கை கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தால் மட்டும் தொடர்ந்து வாசியுங்கள்.

குறிப்பு : போட்டி ஆரம்பிக்க முதல் வெளியிட வேண்டும் என்று விரும்பினாலும் கடைசிவரையும் நீடித்த அத்தியாவசியமான கடமைகள் இப்போது தான் வழிவிட்டன.
அதுவும் நல்லதுக்குத் தான்..
இப்படிப்பட்ட இலங்கை அணியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

------

வங்கப் புலிகளின் சுழல் பொறிக்குள்ளே வந்து மாட்டிக்கொள்ள வாருங்கள் சிங்கங்களே என்று வரவேற்புப் பதாதை வைக்காத குறையாக தமது முன்னாள் பயிற்றுவிப்பாளரை வன்மம் கலந்த வெறியுடனும், 2017 முழுதும் அதிக தோல்விகளைக் கண்ட இலங்கை அணியை அடித்து வீழ்த்துவதன் மூலம் தமது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் ஆர்வத்துடனும் காத்திருக்கிறது பங்களாதேஷ்.

சிம்பாப்வேக்கு எதிராகப் பெற்ற  மிக இலகுவான வெற்றியோடு ஆரம்பித்துள்ள முக்கோணத் தொடர் பங்களாதேஷ் தான் அதிக வாய்ப்புள்ள அணி என்று கோடிட்டுக் காட்டுவதாக இப்போதே பங்களா ஆதரவாளர்களைக் குதூகலக் குரல் எழுப்ப வைத்திருக்கிறது.

தரப்படுத்தலில் இப்போது பங்களாதேஷுக்கும் கீழே இருந்து அல்லாடிக்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு இன்று தான் இந்தப் புது வருடத்தின் முதலாவது போட்டி.

மத்தியூஸ் + ஹத்துருசிங்க - புதிய இணைப்பு புத்தாண்டில் வெற்றிகளைத் தருமா?
என்ற தலைப்பில் நேற்று ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு எழுதிய கட்டுரையுடன் சேர்த்து சில புதிய விபரங்கள்...

இன்று ஆரம்பிக்கிறது இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஆரம்பம்..
புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவுடன், மீண்டும் ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஞ்செலோ மத்தியூசும் சேர்ந்து புதிய இணைப்பாட்டம் ஒன்றை ஆரம்பிக்கிறார்கள்.

ஆரம்பிப்பது, எழுவது போல கொஞ்சம் எழுவது, ரசிகர்களுக்கு நம்பிக்கை வரும் நேரம் அப்படியே அடி வாங்கிக்  கீழே விழுவது என்று கடந்த 2,3 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட்டை ஏதோ  ஒன்று போட்டு ஆட்டிக்கொண்டு/ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கின்ற நேரம், இந்த தொடர் தோல்விகளிலிருந்து விமோசனம் கிட்டாதா என்று பார்த்திருக்கும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏதாவது சிறு துரும்பு கிட்டுமா என்று தான் ஆரம்பித்துள்ளது பங்களாதேஷ் முக்கோணத் தொடர்.


மஹேல, சங்கக்கார, டில்ஷான் என்று பெரிய நட்சத்திரங்களின் ஓய்வின் பின்னர் இலங்கை அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக எழுந்த ஒரு சர்வதேசத் தரம் வாய்ந்த அஞ்செலோ மத்தியூஸ் தொடர்ச்சியான உபாதைகளின் பின்னர் ஒரு சில ஓவர்கள் மட்டும் பந்துவீசும் தனியே துடுப்பாட்ட வீரராக மாறியுள்ள நிலையில் மீண்டும் (பூரண உடற்தகுதி இன்னும் இல்லை என்ற சந்தேகத்துடனேயே ) அணியில். இதற்கு  முதல் தலைவராக அவர் கடமையாற்றிய காலத்தில் குறிப்பிடத்தக்க பல வெற்றிகளைப்  பெற்றுக்கொடுத்து நம்பிக்கை தரக்கூடிய அணியாகக் கட்டியெழுப்பி வந்தாலும், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகிகளுடன் இழுபறிகள் , மோதல்கள், அணித் தெரிவில் தேர்வாளருடன் மோதல், முரண்பாடு என்று பிற்பாதி மிக மோசமாக அமைந்தது.
இலங்கையில் வைத்தே சிம்பாப்வேக்கு எதிரான நம்பமுடியாத மோசமான ஒருநாள் தொடர் தோல்வியோடு மத்தியூஸ் தலைமைப் பதவிக்கு விடைகொடுத்திருந்தார்.

நான்கைந்து தலைமைத்துவ மாற்றங்களால் எதுவித மாற்றமும் நிகழாத தடுமாற்றத்தின் பின்னர், இப்போது நிர்வாகம் கொஞ்சம் சீர்பெற்றுள்ள நம்பிக்கையுடன் புதிய பயிற்றுவிப்பாளர் - நீண்ட காலத்துக்குப் பின் முதற்தடவையாக ரசிகர்களால் அதிருப்தி இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அணியோடு தன்னுடைய 99வது போட்டியில் தலைமை தாங்கவுள்ளார்.

இதுவரை மத்தியூஸ் தலைமை தாங்கிய 98 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 47 போட்டிகளில் வெற்றியும், 45 போட்டிகளில் தோல்வியையும் கண்டுள்ளார்.
தனது 100வது தலைமைத்துவப் போட்டியையும், 50வது வெற்றியையும் இந்த முக்கோணத் தொடரில் காணக்கூடிய வாய்ப்பையும் கொண்டிருக்கிறார்.

வாழ்க்கை ஒரு சுழற்சி என்பது போல, எந்த சிம்பாப்வேக்கு எதிரான தொடர் மத்தியூஸின் தலைமையை இழக்கக் காரணமாக அமைந்ததோ அதே அணிக்கு எதிராக தனது மீள் வருகையை ஆரம்பிக்கிறார்.


எந்த அணியின் பயிற்சியாளராக தன்னை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்தி தனக்கான பெருமையை உருவாக்கினாரோ அதே அணிக்கு எதிராக, அதே நாட்டில் வைத்து தான் பிறந்த, விளையாடிய நாடான இலங்கை அணியின் இழக்கப்பட்ட கௌரவத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு ஹத்துருசிங்கவுக்கு. தொடர்ச்சியான தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் இலங்கை அணியை வெற்றியின் பாதையில் திருப்புவதன் மூலம் உலகில் உற்றுநோக்கப்படக்கூடிய ஒரு பயிற்றுவிப்பாளர் என்ற பெயரைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.
மிக நீண்ட காலமாக இலங்கையின் பயிற்றுவிப்பாளராக சேவை புரிந்து தன்னை வெளிப்ப்டுத்தவேண்டும் என்று தணியாத தாகத்தோடு இருக்கும் ஹத்துருவுக்கு அருமையான வாய்ப்பு.


​அண்மையில் இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் உபாதைக்குள்ளான மத்தியூஸ் இப்போது பூரண தகுதியுடன் பயிற்சிகளில் ​ஈடுபடுகிறார். அது மட்டுமன்றி மிக நீண்ட காலத்தின் பின்னர் முழுமையான ஆரோக்கியமான, பலமான இலங்கை அணி கிடைத்துள்ளது.

எல்லா முக்கிய வீரர்களும் ஆரோக்கியமாக தெரிவுக்காக இருப்பது மத்தியூஸ் + ஹத்துருவின் அதிர்ஷ்டமே.

குசல் மெண்டிசும் சந்திமலும் கூட அணியிலே இருப்பது கூட அணியில் ஆரோக்கியமான தெரிவுக் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

சண்டக்கான், அகில தனஞ்செய இரண்டு இளைய, திறமையான சுழல்  பந்துவீச்சாளரோடு சகலதுறைத் திறமையும் கொண்ட வனிது ஹஸறங்கவுக்கும் பொருத்தமான வாய்ப்புக்கள் தக்க ஆடுகளத்தில் வழங்கப்படுவது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லது.ஆடுகளத்துக்கு ஏற்ற சமபல அணியைத் தெரிவு செய்வதே நோக்கமாக இருக்கட்டும். இதுவே 2019 உலகக்கிண்ணம் நோக்கிய இலங்கை அணியின் பயணத்துக்கு உகந்தது.

நேற்றைய பங்களாதேஷின் வெற்றி இலங்கை அணிக்கு ஆடுகளம் பற்றிய சில தெளிவாக்கல்களை வழங்கியிருக்கும்.

இது மட்டுமன்றி ஹத்துருசிங்கவுக்கு தெரியாத பங்களாதேஷா?புதிய ஆண்டில் புதியஇணைப்பும் உறுதியான அணியும் இலங்கை அணிக்கு வெற்றியுடன் புதிய சகாப்தமாக அமையட்டும்.--------------

இலங்கையின் இன்றைய பதினொருவர் யார் யார் என்பது இலகுவில் ஊகிக்கவே முடியாத ஒரு புதிராகவே இருக்கிறது. முடிந்தால் சரியாக பதினொருவரையும் கண்டுபிடியுங்கள் என்று சூரிய ராகங்களில் ஒரு போட்டியும் வைக்கும் அளவுக்கு நிலை..

ஆனால் ஆடுகளம் தான் இன்று இதைத் தீர்மானிக்கும்.
அநேகமாக இரண்டு சுழற்பந்து வீச்சாளரோடு களம்  காணும் இலங்கை அணியின் வரிசை மத்தியூஸ் தனது உடற்தகுதியுடன் எத்தனை ஓவர்கள் பந்துவீசக்கூடியதாக இருக்கும் என்பதிலே தான் தங்கியிருக்கிறது.
இன்றைய 
அநேகமாக இன்று  விளையாடாமல் இருக்கப் போகும் ஐவர் - (என்று நான் நினைத்தவர்கள்)

தனுஷ்க குணதிலக , தினேஷ் சந்திமால், வனிது ஹசரங்க , துஷ்மந்த சமீர, ஷெஹான் மதுஷங்க.(சிலவேளைகளில் டெஸ்ட் தலைவர் சந்திமலின் துடுப்பாட்டத் திறனுக்காக அவருக்குப் பதிலாக அசேலவை இன்று தெரிவு செய்யாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. என்ன தான் உங்களில் பலர் அண்மைய முன்னாள் தலைவர் திசர பெரேராவை நீக்கினால் என்ன என்று நினைத்தாலும் அவர் விளையாடுவது அணியின் சம பலத்துக்கு முக்கியமாக அமைகிறது)

ஆனால் இன்று விளையாடும் பதினொருவர் : 
Upul , Chandimal, Mendis, Janith, Angelo, Asela, Thisara, Wanindu, Akila, Chameera & Lakmal.-----------------


இந்த ஆண்டு பிறந்தநேரம் சந்திக்க ஹத்துருசிங்கவின் நியமன அறிவிப்போடு ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு எழுதிய

'2018 என்ன கொண்டுவரும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு?' 

என்ற கட்டுரையை  சில மாற்றங்களுடன் இங்கே சேர்ப்பது பொருத்தமாக இருக்கும்..

கடந்து சென்ற 2017ஐப் போல மிக மோசமான ஒரு ஆண்டு இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு அமைந்ததே இல்லை.
மூன்று விதமான போட்டிகளிலும் இதே நிலைமை.
மூன்று வகையான போட்டிகளையும் சேர்த்து விளையாடிய 57 போட்டிகளில் வெறும் 14 வெற்றிகள் & 40 தோல்விகள்.
தரப்படுத்தல்களில்
டெஸ்ட் – 6ஆம் இடம்.
ஒருநாள் – 8 ஆம் இடம்.
T 20 – 8 ஆம் இடம்.
தலைவர்கள் மாறி மாறி வந்தார்கள். பயிற்றுவிப்பாளர்களில் மாற்றம் வந்தது. இறுதியாகத் தேர்வாளர்களும் மாற்றப்பட்டார்கள்.
ஆனால் வெற்றிகள் மட்டும் கைகூடவில்லை.
3 மிக மோசமான வெள்ளையடிப்புக்கள் – ஒருநாள் தொடர்களில்.
இலங்கையில் வைத்து இந்தியா அனைத்துவிதமான போட்டிகளிலும் 9-0 என்று துடைத்துவிட்டுப்போனது பேரவமானம்.
பல முக்கியமான வீரர்களுக்கு ஏற்பட்ட உபாதைகளும் காயங்களும் சேர்ந்து இலங்கை அணிக்கு ஏற்கனவே இருந்த நிலையை மோசமாக்கின. குறிப்பாக முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், சகலதுறை வீரர் அசேல குணரத்ன, வேகப்பந்துவீச்சாளர்கள் தம்மிக்க பிரசாத், துஷ்மந்த சமீரா, ஷமிந்த எறங்க, நுவான் பிரதீப் ஆகியோரின் உபாதைகள் இலங்கை அணிக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
பிரதியீட்டு வீரர்களாக உள்ளே வந்த புதிய வீரர்களும் தங்கள் இடங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள சிறப்பாக ஆடியது மிகக் குறைவு. ஒரு சில வீரர்களைத் தவிர மற்றையோர் எல்லோருமே மிகப்பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருந்தனர்.
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளையெல்லாம் பாருங்கள், யாராவது ஒரு சிரேஷ்ட வீரர்/ நிரந்தர வீரருக்கு உபாதை ஏற்படும்போது அல்லது ஒய்வு வழங்கப்படும்போது அதை பயன்படுத்தி உள்ளே வரும் வீரர் மிகச் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தி தெரிவாளருக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்துவார்.
வெளியே சென்ற வீரர் தனது இடத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியாமல்போகும் சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன.
அண்மைக்காலமாக இங்கிலாந்து, நியூ சீலாந்து அணிகளிலும் இதே நிலைமை.
அந்தளவுக்கு இந்த அணிகளில் மேலதிக வீரர்களின் பலம் – Bench Strength மிகையாகவே உள்ளது.
இந்தியா எல்லாம் இப்போதுள்ள வீரர்களின் போட்டித்தன்மை மற்றும் வள நிறைவைப் பார்த்தால் இன்னொரு சர்வதேச அணியை உருவாக்கிவிடலாம்.
ஆனால் இலங்கை அணியின் 2017ஐ மீளப்பார்த்தால் பதினொருவர் கொண்ட உருப்படியான அணி ஒன்றை உருவாக்குவதே மிக சிரமமான விடயமாக இருந்துள்ளது.
உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் என்று அவர்களை சர்வதேச மட்டத்தில் அறிமுகப்படுத்தும் நேரம் மிகமோசமாக அவர்கள் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறார்கள்.
இது அண்மைக்காலத்தில் இலங்கையின் முன்னாள் வீரர்கள் பலரால் விமர்சனத்துக்குள்ளான இலங்கையின் உள்ளூர் மட்டக் கிரிக்கெட் போட்டிகளின் கட்டமைப்பின் மிகப் பலவீனமான தன்மையைக் காட்டுவதாக இருக்கிறது என்பது தெளிவு.
அப்படியும் நம்பிக்கையைக் காப்பாற்றி தமது சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய சில இளைய வீரர்களை நம்பிக்கை வழங்காமல், தொடர்ச்சியான வாய்ப்புக்களை வழங்காமல் விட்ட தேர்வாளர்களை என்னவென்பது?
இலங்கைக்கு கடந்த ஒரு வருட காலமாகச் சிறப்பாகத் துடுப்பாடி வந்த குசல் மெண்டிஸ் கடந்த இந்தியத் தொடருக்கு அணியில் சேர்த்துக்கொள்ளப்படாமை, தனஞ்சய டீ சில்வா அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறூராக ஆடிய பின்னர் காரணமே இல்லாமல் கழற்றிவிடப்பட்டமை, ரோஷென் சில்வா போன்ற வீரர்களுக்கு மிகத் தாமதமாக வாய்ப்பு வழங்கியது என்று பலவித உதாரணங்களைக் குறிப்பிடலாம்.
முன்னுக்குப் பின் முரணான பல தெரிவுகளும் முட்டாள்தனமான முடிவுகளும் இலங்கை அணியையே கேலிக்கூத்தாக மாற்றியிருந்தன.
எனினும் இப்போது சந்திக்க ஹத்துருசிங்க முழுமையாகப் பொறுப்பேற்ற பின்னர் சுயாதீனமாக செயற்பட அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இந்த அடிப்படையிலேயே ஹத்துருசிங்க பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஷின் பயிற்றுவிப்பாளராக இருந்தபோது ஹத்துருசிங்க தேர்வாளராகவும் செயற்பட்டிருந்தார். எனினும் இலங்கையணியைத் தெரிவுசெய்யும் தேர்வாளராக அவர் கடமையாற்றப்போவதில்லை. ஆனாலும் முன்னைய இலங்கைப் பயிற்றுவிப்பாளரின் காலங்களில் இலங்கைத் தேர்வாளர்கள் மட்டுமன்றி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகமும் சேர்ந்தே தலையிட்டு பல தலைவலிகளை வழங்கிவந்ததை போல ஹத்துரு காலத்தில் நடக்காது என்று நம்பலாமா?
ஹத்துருசிங்க பொறுப்பு எடுத்த பின் பயிற்றுவிப்புக்கள் மிக நேர்த்தியாக இடம்பெறுவதாக இப்போதைக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன. தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு, சோர்ந்து போன இலங்கை வீரர்களுக்கு உற்சாகமும் சேர்ந்திருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது இலங்கையைச் சேர்ந்த ஒரு பயிற்றுவிப்பாளர் என்பதால் தமது குறை, நிறைகளையும் தேவைகள் மற்றும் கருத்து வெளிப்பாடுகளையும் தயக்கமில்லாமல் தமது மொழியிலேயே வெளிப்படுத்தக்கூடிய ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது.
ஹத்துருசிங்கவின் அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச அனுபவமும் கைகொடுக்கும் என நம்பலாம்.
பதவியேற்ற சில நாட்களிலேயே வீரர்களின் சில நடத்தைகளில் முக்கிய திருத்தங்களை மேற்கொண்ட ஹத்துரு சில முக்கிய விதிகளையும் அறிவித்துள்ளார்.

போட்டிகளின் போது தங்க ஆபரணங்களை அணிந்துகொள்வது, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது, இசை கேட்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. கண்ணாடியைத் திருப்பினா  ஆட்டோ ஓடுமா என்ற கேள்வி எழுந்தாலும் சில சிறிய அடிப்படை ஒழுக்க விதிமுறைகள் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்பது உறுதி.
இன்னும் சுவாரஸ்யமான ஒரு விடயம் எந்த அணியின் பயிற்றுவிப்பாளராக ஹத்துரு இருந்தாரோ அதே நாட்டிலேயே தனது முதலாவது பணியை ஆரம்பிக்கப்போகிறார்.
இன்று  முதல் முக்கோணத் தொடருடன் ஆரம்பிக்கவுள்ள இலங்கையின் புதிய கிரிக்கெட் ஆண்டு, பங்களாதேஷுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருடன் முக்கியத்துவம் பெறுகிறது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளையே சொந்த மண்ணில் வைத்து மண்கவ்வ வைத்த பங்களாதேஷ் தற்போது தடுமாறிக்கொண்டிருக்கும் இலங்கை அணியின் வருகையை ஆவலுடன் பார்த்துள்ளது.
அதிலும் இலங்கையில் வைத்து இலங்கையை வீழ்த்திய உற்சாகமும் ஹத்துருசிங்கவை பழி தீர்க்கும் ஆர்வமும் சேர்ந்தே இருக்கிறது.
இந்த சவாலில் ஜெயிப்பது இலங்கை அணிக்கு நிச்சயம் பெரிய உற்சாகத்தை 2018 முழுவதும் தரும்.
அதன் பின் தொடரவுள்ள போட்டித் தொடர்கள் –
மார்ச்சில் இலங்கையில் இடம்பெறவுள்ள T 20 முக்கோணத் தொடர் – மற்றைய அணிகள் இந்தியா, பங்களாதேஷ்.
ஜூன் – ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளில் 3 டெஸ்ட் போட்டிகள்.
இலங்கை முதன்முறையாக சரித்திரபூர்வமான பார்படோஸ் மைதானத்தில் விளையாடவுள்ளது.
ஓகஸ்ட்டில் இலங்கைக்கு தென் ஆபிரிக்கா வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள்.
ஒக்டோபரில் இங்கிலாந்து இலங்கை வருகிறது. 3 Test, 5 ODI and 1 T20
இந்த அணிகளை இலங்கை தனது சாதக சூழ்நிலைகளை பயன்படுத்தி வெல்வதன் மூலம் தரப்படுத்தலை உயர்த்திக்கொள்ளும் ஒரு அரிய வாய்ப்புக் கிட்டலாம்.
இடையே இந்தியாவில் ஆசியக் கிண்ணப்போட்டிகள். ஒருநாள் போட்டிகளில் சரிந்து கிடைக்கும் இலங்கை அணி தன்னை அதற்கு முதலேயே திடப்படுத்தவேண்டும்.
இவ்வருடத்தில் இறுதியாக இலங்கை அணி நியூசீலாந்துக்குப் பயணிக்கும். 2 Test, 3 ODI and 1 T20
அவ்வேளையில் இலங்கை அணி இருக்கும் நிலை பற்றி இப்போதைக்கு ஊகிப்பது சிரமம் தான்.
எனினும் 40 வயதாகும் ரங்கன ஹேரத்தின் ஓய்வினை கவலையுடன் இலங்கை எக்கணமும் எதிர்கொள்ளவேண்டி வரலாம். ஒரு சின்ன உபாதை கூட அவரை ஓய்வுக்குத் தள்ளிவிடும்.
டெஸ்டில் இலங்கையின் துரும்புச் சீட்டு ஹேரத் இல்லாத காலத்துக்கு இலங்கை இப்போதைக்குத் தயாரில்லை. புதிய நம்பகமான சுழற்பந்து கரங்களைத் தயார்படுத்தவேண்டும்.
அதே நிலை தான் இப்போது தேர்வாளர்களால் ‘ஓய்வு ‘ வழங்கப்பட்டுள்ள லசித் மாலிங்கவுக்கு. வயதேறி வரும் தம்மிக்க பிரசாத்தும் நீண்டகாலத்துக்கு உகந்த வீரரில்லை.
இவர்கள் எல்லோரையும் விட முக்கியமாக அஞ்சலோ மத்தியூஸ். இப்போது தான் 30 வயது ஆனாலும் அடிக்கடி உபாதைக்கு உள்ளாகும் மத்தியூஸ் இப்போதெல்லாம் பந்துவீசுவது குறைவு. அப்படியே பந்து வீசினாலும் வெகுசில ஓவர்கள் மட்டுமே. நீண்ட நேரம் துடுப்பாடினால் உபாதையடைகிறார். இவரையும் நீண்ட கால நோக்கில் முடியாது.
புதிய, இளைய தலைமுறை பொறுப்பேற்று திடப்படுத்தவேண்டும்.2017 இல் சிறப்பாகத் துடுப்பாடி நம்பிக்கை தந்த தற்போதைய தலைவர் தினேஷ் சந்திமால், டிமுத் கருணாரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, உபுல் தரங்கவோடு எதிர்காலத்துக்கான வீரர்களாக நம்பிக்கையளிக்கும் குசல் மெண்டிஸ், தனஞ்சய டீ சில்வா, ரோஷென் சில்வா ஆகியோரும் தம்மைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தவேண்டும்.
பந்துவீச்சாளர்கள் சர்வதேசத் தரத்துக்கு உயரவேண்டும். அதற்கேற்ற தெரிவும் இருக்கவேண்டும். முன்பிருந்த இலங்கை அணியின் தரமான களத்தடுப்பு மீண்டும் வேண்டும்.
தன்னை வங்கப்புலிகளை மேலுயர்த்தி ஆச்சரிய வெற்றிகளைப் பெற வழிகாட்டிய ஹத்துருசிங்கவின் கைகளில் இப்போது இலங்கைச் சிங்கங்கள்.
பார்க்கலாம் பிறந்துள்ள 2018 எப்படி அமைகின்றது என்று…


January 05, 2018

#SAvIND - அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம்!!! - தென் ஆபிரிக்கப் புயலை எதிர்கொள்ளுமா கோலியின் 'புதிய' இந்தியா


(Freedom Trophy - நெல்சன் மண்டேலா - மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் அர்ப்பணிக்கப்படும் இந்தக் கிண்ணத்தை மீட்கும் அணித் தலைவருக்கான சிறைவைக்கப்பட்டிருப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ள வடிவம் என்னைக் கவர்ந்துள்ளது)

தென் ஆபிரிக்கா தனக்கு சாதகமாக புற்கள் மேவிக்கிடக்கும் ஆடுகளத்தைத் தயார் செய்து, நாணய சுழற்சியிலும் வென்று துடுப்பாட்டத்துக்கு சாதகமான முதல் இரு நாட்கள் துடுப்பெடுத்தாட முனைந்திருக்க, இந்தியப் பந்துவீச்சாளர்கள் இந்த எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி முதல் நாளிலேயே 286 ஓட்டங்களுக்கு சுருட்டி எடுப்பார்கள் என்று யார் எதிர்பார்த்தார்?

நம்புவீர்களோ இல்லையோ, நான் கொஞ்சமாவது நினைத்தேன்... இந்தியாவிடமும் இப்போது உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைகளைத் தடுமாற வைக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆரோக்கியமான அணித்தெரிவு சிக்கலை ஏற்படுத்தக்கூடியளவுக்கு சிறப்பான பெறுபேறுகளைக் காட்டும் ஐந்து பேர் இருக்கிறார்கள்.

பல தடவை இவ்வாறு சொந்த செலவில் சூனியம் வைத்த கதைகள் பலவான் அணிகளுக்கே நடந்திருக்கின்றன.
அண்மைய உதாரணம் புனேயில் இந்தியா சுழல் பந்துக்கு சாதகமான ஆடுகளம் செய்து வைக்க, பெரிதாக அறியப்படாத, ஓ கீப் யாருமே எதிர்பாராத வகையில் 12 விக்கெட்டுக்களை எடுத்து மூன்று நாட்களில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வியைப் பரிசளித்த கதை.

ஆனால் 286 என்பதையே ஒரு பெரிய, சவால்மிக்க ஓட்ட எண்ணிக்கையாக மாற்றிக்காட்ட தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களால் முடியும். முடியுமா என்று நான் இட்ட ட்வீட்டுக்கு சில நிமிடங்களிலேயே மூன்று விக்கெட்டுக்களைப் பறித்து பதிலளித்துள்ளார்கள்.
தென் ஆபிரிக்காவுக்கு டீ வில்லியர்ஸ் - டூ ப்ளேசி இணைப்பைப் போல, பின் வந்த தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சாளரும் விக்கெட் காப்பாளரும் சேர்த்துக் கொடுத்த ஓட்டங்கள் போல சேர்க்காவிட்டால் தென் ஆபிரிக்கா நான்கு நாட்களுக்குள் போட்டியை முடிக்கும்.

நாளை காலை வேளை தென் ஆபிரிக்காவின் வேகப்பந்துவீச்சை இந்தியா சமாளிக்கும் வகையில் தான் இந்தப் போட்டி செல்லும் பாதை உள்ளது.
ரஹானே இல்லாத வெறுமையும், சகாவை இப்படியான ஆடுகளத்தில் ஆறாம் இலக்கத்தில் ஆடவைக்கும் தவறான முடிவும் நாளை தென் ஆபிரிக்காவின் நான்கு முனை வேகத்திலேயே தங்கியிருக்கிறது.

28/3 என்று இந்தியா இப்போதிருக்கும் நிலையைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகம் இருந்தாலும் புஜாரா இந்தியாவின் தூணாக இருப்பார் என்பதும், ரோஹித்தின் அண்மைய பெறுபேறுகளும்  இந்தியாவுக்கு உற்சாகம் தரலாம்.

இந்தியாவின் துடுப்பாட்ட வரிசையின் பலம் பற்றி சிலாகித்தும்  - பொதுவாகவே இன்று கோலி, விஜய் ஆகியோர் ஆட்டமிழந்த விதமாகவே இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் வெளிநாடுகளில் சொதப்பினாலும் கூட- அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டு வரும் கோலியின் தலைமையிலான இந்தியாவின் மேலுள்ள நம்பிக்கையால் - தென் ஆபிரிக்காவின் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சு பற்றி வியந்தும் - இந்த இரண்டு காரணிகளும் மோதும் தொடராக இது அமையும் என்று குறிப்பிட்டு இன்று Sports Tamil க்கு எழுதிய கட்டுரையில் சில மேலதிக சேர்க்கைகளோடு இந்த இடுகை..

இந்தியா vs தென் ஆபிரிக்கா - அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம் 


இன்று தென் ஆபிரிக்காவில் ஆரம்பிக்கும் கிரிக்கெட் தொடரானது உலகின் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு தொடராக அமையப்போகிறது. கிரிக்கெட்டின் பழம்பெரும் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் முடிவுறும் நேரத்தில் தென் ஆபிரிக்க - இந்தியத் தொடர் ஆரம்பிப்பது கிரிக்கெட்டின் குதூகலம் இல்லாமல் வேறென்ன?


கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக சொந்த நாட்டிலும், இந்தியாவை ஒத்த கால நிலை, களத்தன்மைகளைக் கொண்ட இலங்கையிலும் பெரியளவில் சவால்களை எதிர்கொள்ளாமல் இலகுவாக வெற்றிகளைக் குவித்து டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதலாம் இடத்திலுள்ள இந்திய அணி அண்மைக்காலத்தில் தனது முதலாவது பெரும் சவாலை சந்திக்கப்போகிறது.

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளின் மோதல் இது.
எனினும் 3-0 என்று தென் ஆபிரிக்காவிடம் இம்முறை தோற்றாலும் முதலிடம் பறிபோகாது எனும் அளவுக்கு கடந்த சில மாதகாலத் தொடர்ச்சியான வெற்றிகள்.
அதிலும் 9 டெஸ்ட் தொடர்களைத் தொடர்ச்சியாக வென்று சாதனையை சமப்படுத்தியுள்ளது. ஆனால் சாதனையை முறியடிக்கும் 10வது தொடர் வெற்றி நிச்சயம் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதி.

தென் ஆபிரிக்காவுக்கோ கடைசியாக 2015ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவில் வைத்துக் கண்ட 3-0 என்ற (4 டெஸ்ட்களில்) தோல்விக்கு வேகப்பந்து ஆடுகளங்களில் வைத்துப் பழி தீர்க்கும் எண்ணமுள்ளது. 

இதுவரைக்கும் தென் ஆபிரிக்காவிலே  எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் வெல்லாத இந்திய அணிக்கு இது ஒரு மிகப் பெரும் சோதனை தான்.
உலகின் மிகச் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வரிசை என்று சொல்லக்கூடியளவுக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் கடந்த 2017இல் மாறி மாறி ஓட்டங்களை மலையாகக் குவித்திருந்தார்கள். அவுஸ்திரேலிய, இங்கிலாந்து, நியூ சீலாந்து பந்துவீச்சாளர்களையும் சந்தித்திருந்தார்கள். ஆனால் அவை அனைத்தும் இந்திய ஆடுகளங்களில்..
ஒன்றில் தட்டையான துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள். இல்லையேல் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்.

இன்று முதல் இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை சந்திக்கவிருப்பதோ உலகின் எந்தவொரு துடுப்பாட்ட வரிசையும் அச்சுறுத்தும் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு வரிசை.
மற்ற அணிகள் எல்லாம் அதிகபட்சம் 2 அல்லது 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துத் தடுமாறிக்கொண்டிருக்க தென் ஆபிரிக்கா மிக உறுதியான 5 உயர்தரமான வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு (ஸ்டெயின், மோர்னி மோர்க்கல், பிலாண்டர், றபாடா, க்றிஸ் மொரிஸ்), மேலதிகமாக மிதவேகப்பந்தை வீசும் பெலகாவாயோவும் இருக்கிறார்-  யாரைத் தெரிவு செய்வது, யாரை விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது.
உலகின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினையே ஓய்வு அளித்து மற்றையவர்களைப் பயன்படுத்தலாமா என்று சிந்திக்கிறார்கள் என்றால் எத்தகைய பலம் அது?

அதுவும் இன்று கேப்டவுனில் ஆரம்பித்துள்ள டெஸ்ட் போட்டி முதல் அத்தனை ஆடுகளமுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான எகிறும் ஆடுகளங்களை விரும்புகிறார்கள் என்று சொன்னால் அவர்களது நோக்கம் எத்தகையது என்று புரிந்துகொள்ளலாம்.

இதுவரை காலமும் இவ்விரு அணிகளின் டெஸ்ட் மோதல்களில் 
விளையாடியவை - 33
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி - 13
இந்தியாவுக்கு வெற்றி - 10
சமநிலை - 10

ஆனால் தென் ஆபிரிக்காவில்,
17 டெஸ்ட் போட்டிகளில்,
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி - 8
இந்தியாவுக்கு வெற்றி - 2
சமநிலை - 7

இந்த நிலையை இப்போதிருக்கும் வெற்றிக்காக ஆவேசத்துடன் விளையாடக்கூடிய தனது இளைய அணியின் மூலம் அடையும் விருப்போடு இருக்கிறார் விராட் கோலி.

அதற்கு ஏற்றதாக இந்தியாவின் பலம்வாய்ந்த அசத்தல் துடுப்பாட்ட வரிசை இருக்கிறது. தென் ஆபிரிக்காவின் ஆடுகளங்களிலும்  ஈடுகொடுத்து ஆடக்கூடிய நுட்பங்கள் கொண்ட துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.
முக்கியமாக கடந்த வருடத்தில் 1000 ஓட்டங்களுக்கு மேலே குவித்த புஜாராவும் கோலியும்.
இதிலே மூன்றாம் இலக்கத்தில் ஆடும் புஜாரா உலகின் மிக நம்பகமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே வார்க்கப்பட்டவர் போல. கடந்த வருடத்தில் 4 சத்தங்களுடன் 1140 ஓட்டங்களைக் குவித்திருந்த புஜாராவின் ஓட்டக்குவிப்பும் நின்று நிலைப்பும் இந்தியாவுக்கு மிக அவசியமாகிறது.
அதேபோல உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முன்னின்று ஓட்டக்குவிப்பிலும் வழிநடத்தி 5 சதங்களைப் பெற்ற (இவற்றில் இரண்டு இரட்டை சத்தங்கள்) கோலி இங்கிலாந்தில் தடுமாறியதைப் போல இல்லாமல் நேர்த்தியாக, துணிச்சலாக ஆடினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக அமையும்.

முரளி விஜய் இன்னொரு முக்கியமான வீரர். வெளிநாட்டு மண்ணில் தடுமாறும் இந்திய வீரர்களுக்கு மத்தியில் விஜய் மிக நேர்த்தியாக ஆடக்கூடிய வீரர். ரஹாநேயும் அவ்வாறு இருந்தாலும் இலங்கை அணியோடு தொடர்ச்சியாகத் தடுமாறியிருப்பது அவரது formபற்றிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் தான் கிடைத்த டெஸ்ட் வாய்ப்புக்களில் தன்னை நிரூபித்தவரும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் சிறப்பான ஓட்டக்குவிப்பில் இருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தவான், ராகுல் ஆகிய இருவருமே தம்மை நிரூபித்தவர்கள். எனினும் தவானே இந்தியாவின் தெரிவாக அமைய அவரது அனுபவமும் அதிரடியும் காரணமாக அமையும்.
இந்தியா மேலதிகமாக ஒரு வேகத்தையும் சேர்த்துக்கொள்ள பாண்டியாவின் சகலதுறைத் திறமை பயன்படுள்ளது.

எதிர்பார்த்ததைப் போல ஒருநாள் போட்டிகளில் கலக்கிய பும்ராவுக்கு அறிமுகத்தை வழங்கி மூன்று வேகப்பந்து வீச்சாளரோடு களம் கண்டிருக்கிறது. 
பும்ரா எதிர்பார்த்தளவுக்கும் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் காட்டிய திறமையளவுக்கு சிறப்பாக செய்யாவிடினும் அவரது முதல் விக்கெட் ஏபி டீ வில்லியர்ஸ்.
எனும் அனுபவம் வாய்ந்த இஷாந்த் ஷர்மாவை இன்று தெரிவு செய்திருக்கலாமோ என்று கோலி இனி எண்ணலாம்.
ஜடேஜா உடல்நலக்குறைவு அஷ்வினை மட்டும் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

தென் ஆபிரிக்கா மிக நீண்ட காலத்துக்குப் பிறகு உபாதை சிக்கல்கள் எதுவும் இல்லாமல் தன்னுடைய மிகச்சிறந்த அணியோடு இறங்கியுள்ளது.
துடுப்பாட்டத் தெரிவுகளில் பெரிய சிக்கல் இல்லாவிட்டாலும் சிறப்பாக ஆடிவந்த பவுமாவை இன்று விட்டுவிட்டு ஆடவேண்டிய நிர்ப்பந்தம்.
எனினும் அம்லா, டீன் எல்கர் (கடந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தவர்) மீண்டும் டெஸ்ட் அணிக்குள் வந்துள்ள உபாதை கடந்த டீ வில்லியர்ஸ், அணித் தலைவர் டூ ப்ளேசிஸ் ஆகியோரோடும் உலகத் தரம் வாய்ந்தததாகத் தெரிகிறது.

எனினும் ஐந்து முழு நேரப் பந்துவீச்சாளரைத் தெரிவு செய்திருப்பதால் ஒரு துடுப்பாட்ட வீரர் குறைவாக விளையாடும் அபாயம்.
டீ கொக்கும் ஒரு சிறப்பான துடுப்பாட்ட வீரரே. எனினும் அவருக்குப் பிறகு பிலாண்டர் வருவது துடுப்பாட்டம் பலவீனமானதாகவே தெரிகிறது.
ஆனாலும் முக்கியமான மூன்று வீரர்களும் 12 ஓட்டங்களுக்கு ஆடுகளம் விட்டு அகன்றும் கூட சமாளித்த திறமை மெச்சக்கூடியது.

ஆயினும் தென் ஆபிரிக்கா தன்னுடைய வேகப்பந்துவீச்சாளரில் வைத்துள்ள நம்பிக்கை அது.

இதனால் தான் இந்தத் தொடர் தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளரின் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சுக்கும் இந்தியாவின் ஓட்டக்குவிப்பில் ஈடுபடும் அசத்தல் துடுப்பாட்ட வீரருக்கும் இடையிலான மோதல் தொடராகக் கருதப்படுகிறது.

இதுவரை கலக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளரை உலகின் நம்பகமான துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட தென் ஆபிரிக்கத் துடுப்பாட்ட வரிசை சமாளிக்குமா என்பதே தொடரின் முதலாவது கேள்வி. 
புவனேஷ்வர் குமாருக்கு 4 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொடுக்க உதவிய ஆடுகளம் நாளை தென் ஆபிரிக்காவின் புயல்களுக்கு என்னென்ன சாதகத்தை வழங்குமோ?

இதுவரை ஸ்டெயின், பிலாண்டர், மோர்க்கல் ஆகியோர் தலா ஒன்று..
இன்னும் புதிய புயல் காகிஸோ றபாடாவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை இவரது நாளாக அமையலாம். அப்படி அமைந்தால் இந்தப் போட்டி நான்கு நாட்களில் முடிந்து போகலாம்.
அண்மையில் தான் சிம்பாப்வேயுடன் இரண்டே நாளில் ஒரு டெஸ்ட் போட்டியைத் தென் ஆபிரிக்கா முடித்திருந்தது.
ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner