March 30, 2009

????? + 20 - 200வது பதிவு



இன்று கணக்கின் அடிப்படையில் எனக்கு 200வது பதிவு.

பதிவுகள் 200ஐ எட்டும் நேரம் வருகைகள் 150,000ஐத் தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  alexaவின் வரிசைப்படுத்ததிலும் 180,000க்குள்ளேயே இடம்பெற்றுள்ளேன்.
நம் பதிவுகளுடன் தொடர்ந்து வருவோர் (Followers) 96 (எப்படியாவது இன்னிக்கே சதமடிக்க உதவுவீங்கன்னு தெரியுமே!)

பல மைல்கல்களை ஒரே நேரத்தில் பதிவு செய்யும் இந்தப் பதிவில் எனது நண்பர்கள் என் வலைத்தள வாசகர்கள் சில அனானிகள் (இவர்கள் இரண்டு பிரிவுகளுள்ளும் அடங்காதவர்கள்) ஆகியோரின் கேள்விகள் சிலவற்றுக்கான பதில்களைத் தரலாமென்று எண்ணியுள்ளேன்.

இந்தக்கேள்விகள் (சந்தேகங்கள்) மின்னஞ்சல்கள் பின்னூட்டங்கள் smsகள் மற்றும் நேரடியாகவும் வந்தவை.என்னுடைய பல பதிவுகளிலேயே சில விஷயங்களை ஏற்கெனவே சொல்லியிருந்த போதிலும் இந்த 200வது பதிவிலேயே அவற்றை மீண்டும் அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்பதனால் மீண்டும் சில இடம்பெறுகின்றன.

இதோ உங்கள் கேள்விகள் எனது கேள்விகளாகவும் என் பதில்களும் -

கே - உங்கள் துறையை விட அதிகமாக கிரிக்கெட் சினிமா பற்றி எழுதுவது ஏன்? ஹிட்சுக்காகவா?

-  ஒலிபரப்புத்துறையிலேயே ஏழுநாளும் இருபத்து நான்கு மணிநேரமும் இருப்பதனால் அதுபற்றியே எழுத சிலவேளை சலிப்பாக இருக்கும். எனினும் ஒலிபரப்பு என்றுமே எனக்கு சலிப்பதில்லை.

ஆனால் நான் ஆரம்பித்த எனது பத்துவருடகால ஒலிபரப்பு அனுபவங்கள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் - பதிவிடுவேன்

சில வானொலி விஷயங்களை விரிவாக நான் எழுத முடியாமலிருக்கிறது. நான் இன்னமும் வானொலியில் பணியாற்றுவதால் போட்டி வானொலிகளை (நான் முன்னர் பணியாற்றிய வானொலிகள்) பற்றிப் பல விஷயங்களை எழுத முடியாத நிலையும் எனது வெற்றி எப் எம் பற்றிய சில தொழிநுட்ப விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியாமலுள்ளது.

எனினும் எப்போதெல்லாம் ஒரு சுவாரஸ்யமான இடம்பெறும் நேரம் எனக்கும் பொறுமையும் நேரமும் இருந்தால் ஒலிபரப்பு பற்றிய பதிவு வரும்.

கிரிக்கெட் எனது மனதுக்குள்ளேயே சிறுவயது முதல் ஊறிப்போன ஒரு விடயம்! ஒலிபரப்புக்கு முதல் கவிதையை விட படிப்பை விட எனக்கு கூடுதலாகப் பிடித்தது கிரிக்கட். இப்போதும் விடாமல் தினமும் நான் தொடர்வதும் என்னைத் தொடர்வதும் கிரிக்கெட்தான்.

அதுபோல தினந்தோறும் கிரிக்கெட்டிலும் சினிமாவிலும் தான் (அரசியல் தவிர) ஏதாவது புதிதாய் நடந்து கொண்டேயிருக்கும். இவையிரண்டுமே வாசிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.  எனவே தான் அடிக்கடி கிரிக்கெட் - இதற்கு அடுத்தபடியாக சினிமா. எனினும் ஓப்பீட்டளவில் என் சினிமாப் பதிவுகள் குறைவானவையே!

ஹிட்சுக்கேன்றே சில பதிவுகளை எழுதினாலும் கூட என் ஒலிபரப்புத் துறை சார்ந்த பதிவுகளும் கூட பல ஹிட்ஸ் பெற்றவையே.. 

கே - ஒவ்வொரு நாளும் பதிவு போடுமளவுக்கு அலுவவலகத்தில் வெட்டியா?

- அப்படியில்லை. Time management– நேர முகாமைத்துவமும் என்னுடைய தொழில் துறையும் சக ஊழிய நண்பர்களின் ஒத்துழைப்புமே காரணங்கள்.

சாதாரணமாக மற்றவர்களுக்கெல்லாம் 8 – 8 ½ மணிநேர வேலை. ஆனாலும் நானோ 10 முதல் 12 மணிநேரம் வரை அலுவலகத்தில் பணிபுரிபவன். இதில் 4மணிநேர நிகழ்ச்சி. அதன்பின் இருக்கும் நேரத்தில் முகாமைத்துவ, ஒலிபரப்பு, பிரதியெழுதும் வேலைகளும் சில கூட்டங்களில் கலந்துகொள்வதும் கூட்டங்களை நடத்துவதும் எனக்கான கடமைகள். 
இவற்றுக்கிடையில் கிடைக்கும் நேரத்தை என் வலைப்பதிவுலகத்துக்கும் பயன்படுத்திக் கொள்கிறேன்.

வீட்டில் நேரம் கிடைக்கும் போது பதிவிடுவது தவிர எழுதிக் கொண்டு வருவதை நான் அடிக்கடி சொல்லும் அருந்ததி அக்காவின் அனுசரணையில் பதிவேற்றக் கூடிய வாய்ப்பும் எனக்கான அதிர்ஷ்டம் தான். (இந்தப் பதிவு கூட அப்படிதான்)

கே - பதிவுலகில் நுழைந்ததும் தனிப்பட்ட வாழ்க்கையிலோ தொழிலிலோ பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதா?

- ஆமாம் - சின்னச் சின்னப் பாதிப்புக்கள் தான்!
இல்வாழ்க்கை விவாகரத்து வரை போகவில்லை
வேலைக்கு இதுவலை வந்தப் பிரச்சனையுமே இல்லை.

ரொம்ப பரபரப்பான ஆர்வமான நாட்களில் வீட்டில் எந்த நேரமும் கணணி முன் இருந்தால் சண்டை சச்சரவு வராதா?  இதனால் தான் கணணி முன் அமராமல் கூடுதலான வரை எழுதிக் கொண்டு தட்டச்சி பின் பதிவேற்றுகிறேன்.

அலுவலகக் கடமைகளைப் பொதுவாகப் பாதிக்காத வகையில் பதிவில் ஈடுபட்டாலும் சில நாட்களில் 4மணிநேர நிகழ்ச்சியிடையே பல தடவை கலையகத்துக்கும் எனது இருக்கைக்கும் இடையே ஒடி ஒடி உழைப்பதுண்டு.

கே - பதிவுகளில் இவ்வளவு நேரத்தை செலவிடுவதில் ஏதாவது ஆதாயம்?

- அட்சென்ஸ் மற்றும் பல விளம்பரங்கள் போட்டிருந்தாலும் அந்த விளம்பரங்களுக்கான வெகுமதியெல்லாமே On the way தான். வந்து சேரும் போது மில்லியன் கணக்கில் வந்து சேரும் போல தெரியுது.

ஆனால் இதனைவிட அதிகமாகப் பெற்றவை பல உண்டு.வானொலியினால் பெற்ற பிரபல்யத்தை விட இப்போது வலைப்பதிவர் என்ற பிரபல்யம் சர்வதேச ரீதியாக அதிகம்.

பல புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். பழைய நண்பர்கள் நெருக்கமாகியுளளனர். இவையெல்லாவற்றையும் விட முன்பை விட வாசிப்பும் பழக்கம் அதிகரித்துள்ளது.எப்போதும் வாசிப்பவனாக நான் இருந்தாலும் இப்போ எழுத ஆரம்பித்த பிறகு எங்கேயாவது இசகு பிசகா எழுதிடுவேனா என்று அதிகமாகவே வாசிக்கிறேன்.

இது ஒலிபரப்பிலும் எனக்கு நிறையவே உதவுகிறது. 


கே -  அனானிகளின் கடுமையான விமர்சனங்களின் பயம் தான் பின்னூட்டங்களுக்கு மட்டுறுத்தல் போட வைத்ததா? முன்பெல்லாம் துணிச்சலாக திறந்து விட்டிருந்தீர்களே?

-  ஆமாம்.. எதற்கும் ஒரு எல்லை இருக்கு தானே.. சில விமர்சனங்கள் எல்லை மீறி என்னை மட்டுமல்லாமல் பலரையும் தனிப்பட்ட முறையில் சீண்டும் போதும், எனக்கு அந்த அனானிப் பின்னூட்டங்கள் ஏதாவது சிக்கலை ஏற்படுத்தும் எட்ன்று நான் கருதியபோதும் தான் அன்புக்குரிய சிரேஷ்ட பதிவர் ஒருத்தர் "உங்கள் தளத்தை மற்றவர் அசிங்கம் செய்து குப்பையாக்க என் அனுமதிக்கிறீர்கள் " என்று ..
மட்டுறுத்தல் போட்டேன்.. அனால் இன்றும் பெயர் தாங்கி (உண்மைப் பெயர்) வரும் எந்தவொரு விமர்சனத்தையும் (அது பிரசாரம்,மற்றவர் மீதான வசைபாடலாக இல்லாத இடத்தில்) என் தளத்தில் பிரசுரிக்கிறேன்.

அனானிகளை ஒரு போதும் நான் வெறுப்பதோ,இல்லையேல் தடை செய்யப்போவதோ இல்லை.. காரணம் பல வாசகர்கள் இல்லாததால் அனானிகளாக வந்து பின்னூட்டுகிறார்கள். பலர் பல காரணங்களினால் பெயர்களை சொல்லாமல் மறைக்கிறார்கள்.. எனினும் எனது எல்லா வாசகர்கள்/நண்பர்களுக்கும் சின்ன வேண்டுகோள்.அனானிகளாக வந்து பின்னூட்டினாலும் பெயர் இடம் என்பவற்றை மட்டும் வெளிப்படுத்துங்கள்.. 

கே -  இலங்கைப் பிரச்சினை பற்றி எழுதுவதைக் குறைத்து/நிறுத்தி விட்டீர்களா? பயமா?

-  ஆம்.. பயமில்லை என்று பொய் சொல்ல மாட்டேன்.. எனக்கு மட்டும் ஆபத்து என்றால் பரவாயில்லை.. என் சார்ந்தோருக்கும் என்று வரும்போது ஏன் வம்பு?

அப்படியிருந்தும் சில விஷயங்களை தெரியப்படுத்தும் விதத்தில் அறியத் தருகிறேன்..

அரைகுறையாக பட்டும் படாமலும் சொல்வதை விட சொல்லாமலே விடலாம் என்று தான் சில விஷயங்களில் நான் கை வைப்பதே இல்லை.. (அதற்குரியவர்கள் அந்தந்த விஷயங்களை சரியாக செய்யும் போது நான் எதுக்கு?)
 
முன்பே நான் சொன்னது போல காலம் வரும்வரை காத்திருக்கிறேன்.. ஏன் கைகளையும் கருத்துக்களையும் கட்டி வைத்துக் கொண்டே..


கே -  இலங்கைப் பதிவர் என்ற அடையாளம் உங்களுக்கு advantage?/dis advantage?

-  இரண்டுமே இல்லை.. என்னைப் பொறுத்தவரை தமிழ் பதிவர் என்பதே எனதும் எல்லோரும் அடையாளம் என்றிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. 
பிரிந்து கிடந்து படுகிறோமே போதாதா?

இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே இப்போது கொட்டி,பதில்களையும் கொட்டினால் "எங்க அலுவலகத்தில் வலைப்பதிவு படிக்க மேலதிக நேரம் கொடுக்க மாட்டாங்க" னு சண்டைக்கு வரலாம் .. So,இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்..

இன்னமும் உங்களிடம் இருக்கும் என் பதிவுகள்,என் பற்றிய கேள்விகளைத் தயவுசெய்து அனுப்புங்கள்..
arvloshan@gmail.com
மாதமொரு முறையாவது பதில் தரலாமே..

   --- ****----

நான் இதுவரை எழுதிய 200 பதிவுகளில் நானே ரசித்து எழுதிய 20 பதிவுகள்..

நேரமிருந்தால்,முன்பு வாசித்திராவிட்டால் கொஞ்சம் எட்டிப்பார்த்து வாசித்துப் போங்களேன்.. அந்தப்பதிவுகளும் ஜென்ம சாபல்யம் பெறும்...

ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மறுபடி சுவைக்கலாம் .. தப்பில்லை.. (கொடுமைன்னெல்லாம் சொல்லப்படாது.. )






















இந்தியாவுக்கு சோதனை..சுவருக்கு மேலும் சாதனைகள்..


நேப்பியர் டெஸ்ட் போட்டியில் தோல்வியிலிருந்து தப்புவதற்கு இந்தியா போராடிவரும் நிலையில், நேற்றைய (ஞாயிறு) நாள் முழுவதும் மந்தகதியில் ஆடி இந்தியா ஒரு நம்பிக்கையை வரவழைத்துள்ளது.. ஆபத்தான கட்டத்தை இந்திய அணி தாண்டிவிட்டது என்கிறார்கள் கிரிக்கெட் விற்பன்னர்கள்..எனக்கென்னவோ இன்னமும் மொத்த ஓட்ட எண்ணிக்கையை முழுவதுமாகத் தாண்டாத நிலையில் இன்னும் ஒரு விக்கெட் போனாலும் இந்தியா சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என்ற நிலை தான் இருப்பதாகத் தோன்றுகிறது..நியூசீலாந்து அணியை மீண்டும் துடுப்பெடுத்தாட வைக்கவே இன்னமும் 62 ஓட்டங்கள் இருக்கும் நிலையில் இன்றைய இறுதி நாள் ஆடுகளம் வேறு..  

நம்பிக்கை எல்லாம் கம்பீர், சச்சின் மற்றும் லக்ஸ்மன் மீது தான் .. 
பார்க்கலாம்.. நியூசீலாந்து அணியும் இறுதி வரை போராடும் அணி என்ற காரணத்தால் ஒரு கை பார்க்கவே நினைப்பார்கள்..

ஆனால் இந்திய எப்படியாவது இந்தப் போட்டியில் தோல்வியிலிருந்து தப்பித்துக் கொண்டால் அதற்கு முக்கிய காரணங்களில் ஒருவரான இந்தியத் துடுப்பாட்ட பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் நேற்று (இந்தபதிவு போடும் நேரம் நள்ளிரவைத் தாண்டியுள்ளதால்) மேலும் மூன்று புதிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

இந்திய அணி சார்பாக அதிக டெஸ்ட் போட்டிகளில் இரு இன்னிங்க்சிலும் அரைச் சதங்கள் பெற்றவர் (10)

உலகிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக சத இணைப்பாட்டங்களின் பங்காளர். (75 தடவை சத இணைப்பாட்டங்களில் இணைந்திருக்கிறார்)

டெஸ்ட் போட்டிகளில் அதிக நேரம் ஆடுகளத்தில் (மைதானத்தில் அல்ல) கழித்தவரும் இப்போது டிராவிடே. (முன்னர் இந்த சாதனை ஆஸ்திரேலிய முன்னாள் தலைவர் அலன் போர்டருக்கு சொந்தமாக இருந்தது)

இந்த சாதனை எப்படியும் சுவருக்கு சொந்தமாகாவிட்டால் பெயர் பொருத்தம் இல்லையே..

டிராவிட் எவ்வளவு தான் மிகப் பொறுமையாக (நியூசீலந்து பார்வையாளர்கள் கொட்டாவிகளை kilo கணக்காக விடும்படி) ஆடினாலும் கூட தனது டெஸ்ட் வாழ்க்கையின் 15வது ஆறு ஓட்டத்தை (sixer) நேற்றுப் பெற்றது ஒரு புதுமை தான்.. கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் டிராவிட் இடமிருந்து ஒரு சிக்சர். (கவாஸ்கர் கூட 26 சிக்சர் அடித்துள்ளாராம்)

பார்க்கலாம் இந்தியா தப்புமா இல்லை வழமை போல் இறுதிநாள் ததிங்கினத்தோம் தானா என்று..




March 28, 2009

தலை - விலை - நிலை

மு.கு (அதாங்க முற் குறிப்பு) - தயவு செய்து இது 'தல' அஜித் பற்றிய பதிவு என்று யாரும் வந்திருந்தா நான் பொறுப்பாளியல்ல..


ஒருசில நாட்களுக்கு முன்னர் வாசித்த கதை ஒன்று...


அசோகச் சக்கரவர்த்தி தனது பரிவாரம் சூழ வந்து கொண்டிருந்தார்.(கலிங்கத்து போரின் பின்,அசோகர் பௌத்தராக மாறிய பின்னர்.)

எதிரே ஒரு பௌத்த துறவி வந்து கொண்டிருந்தார்.அவரைக் கண்டதுமே உடனடியாக ஓடிச்சென்று பணிவுடன் பௌத்த துறவியின் காலில் விழுந்து வணங்கினர் அசோகர்.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு மனம் பொறுக்கவில்லை.ஒரு மாபெரும் சக்கரவர்த்தி ஒன்றுமில்லாத ஒரு துறவியின் பாதத்தில் விழுந்து வணங்குவதா என்று பொருமினார்.

அரண்மனை வந்தவுடன் மன்னருக்குத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்."எத்தனை எத்தனை தேசம் வென்ற பெருமை மிகுந்த மணிமகுடம் தாங்கும் தங்கள் சிரம் யாரோ ஒரு பரதேசியின் காலில் படுவதா?" என்று வருத்தமும், அதிர்ப்தியும் கலந்த குரலில் சொன்னார் அமைச்சர்.

மன்னர் அசோகர் பதிலேதும் சொல்லாமல் அர்த்த புஷ்டியோடு சிரித்தார். ஒரு சில நாட்களின் பின்னர் மன்னர் அமைச்சரை அழைத்தார்.

"அமைச்சரே, எனக்கு உடனடியாக மூன்று தலைகள் வேண்டும்.
ஒரு ஆட்டின் தலை, ஒரு கரடித்தலை, ஒரு மனிதத் தலை உடனடியாக கொண்டு வாருங்கள்" உத்தரவிடுகின்றார் அசோகர்.

ஆடு பலியிடப்பட்டது - ஆட்டுத்தலை பெறப்பட்டது.

கரடி வேட்டையாடப்பட்டு - கரடித்தலையும் தயார்.

மரண தண்டனைக் கைதி ஒருவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு மனிதத் தலையும் பெறப்பட்டது.

மன்னரிடம் அவர் கேட்டபடியே மூன்று தலைகளையும் கொண்டு போனார் அமைச்சர்.

அசோகச் சக்கரவர்த்தி "மிக நல்லது அமைச்சரே இப்போதே இந்த மூன்று தலைகளையும் கொண்டு சென்று சந்தையில் விற்று வாருங்கள்" என்று உத்தரவிடுகின்றார். (அப்போது மன்னர்களுக்கும் அமைச்சர்களுக்கும் வேற வேலையே இருந்திருக்காது போல)

அமைச்சர் சந்தைக்கு மூன்று தலைகளோடும் போனார்.

ஆட்டின் தலை முதலில் விலை போனது.

கரடியின் தலையும் பாடம் பண்ணி வீட்டில் வைக்க என்று யாரோ ஒரு பந்தாக்காரர் வாங்கிப் போனார்.

மனிதத் தலையை மட்டும் வாங்குவார் யாருமில்லை; மாறாகப் பார்ப்பவர் எல்லோரும் அருவருப்புடனும் அச்சத்துடனும் விளகிப்போயினர்.

மன்னரிடம் போய் விஷயத்தை சொன்னார் அமைச்சர்.

"சரி பரவாயில்லை மனிதத் தலையை மட்டும் இலவசமாகக் கொடுத்துப் பாருங்கள்" என்று சொன்னார் அசோகர்.

ம்ஹூம்...
யாரும் வாங்குவதாயில்லை.

மன்னர் இலவசமாகக் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியும் கூட யாருமே வாங்குவதாயில்லை.

அரண்மனை திரும்பிய அமைச்சர் அசோகச் சக்கரவர்த்தியிடம் சொல்கின்றார்.

பௌத்த துறவியின் காலில் விழுந்து வணங்கிய சம்பவத்தை நினைவூட்டிய அசோகர், "பார்த்தீரா அமைச்சரே, உயிர் என்ற நிலை இருக்கும் வரைதான் தலைக்கு விலை உண்டு. அதனால் உயிருள்ளவரை பணிபவரை பணியவும், வணங்குபவரை வணங்கவும் இந்தத் தலை தாழ்வது தவறாகாது. நிலையறிந்து தலை தாழ்வது எம் நிலையை உயர்த்தும்" என்று விளங்கினாராம் அசோகர்.

தலை பற்றித் தெரிந்து கொண்ட அமைச்சர் தலைகுனிந்து, தலையாட்டினாராம்.

வாசித்த பின் கொஞ்சநேரம் யோசித்து பார்த்தேன்,
அசோகர் சொன்னது சரி.

எனினும் அசோகரின் மகன் கொண்டுவந்த அறம் ஆதிக்கம் செலுத்தும் எம் நாட்டில் அசோகர் போன்றவர்கள் ஆட்சியிலும் இல்லை !
நாம் தலைகுனிந்து வணங்கும் அளவுக்குத் தகுதியான அறமுணர்ந்த,அகிம்சை வழி நிற்கும் பௌத்த துறவிகளும் இல்லை!


March 27, 2009

1977 – அய்யோ அம்மா

Loshan
வழமையாக விமர்சனங்கள் வாசிக்காமல் படம் பார்க்கப் போகும் என்னையே நம்ம நண்பர் வந்தியத்தேவனின் எச்சரிக்கைப் பின்னூட்டம் தந்து போகாதே என்று கெஞ்சியும்,லக்கியாரின் விமர்சனம் படித்துக் கூட 1977 பார்க்கப் போனேனே என்னை நண்பர் காலாண்டியின் பாழாய்ப்போன பழஞ்செருப்பால் தான் விளாசவேணும்.

சரத்குமாரின் திரைப்படங்கள் பற்றி ஏற்கெனவே எனக்கு ஒரு மதிப்பீடு(?) இருக்கும் நிலையிலும் இந்தப்படம் பார்க்கவே வேண்டும் என்று விடாப்பிடியாக நான் பார்க்கப்போக ஒரு காரணம் இருக்கு! (உடனே நமீதா தான் காரணம் என்று யாரும் விஷமமாக என்ன வேண்டாம்)

அப்பா மகனின் பழிதுடைக்கும் கதை மற்றொரு தமிழ் ஜேம்ஸ்பொன்ட் கதை என்றவுடன் வில்லுவின் இன்னொரு versionஆ எது பெட்டர் என்று ஒப்பிடும் ஆர்வமே அது! (தேவையா?) உண்மையில் ஒன்று கோடம்பக்கத்தினரே இனி யாரும் ஜேம்ஸ் பொன்டைக் கூப்பிடாதீர்கள்.பாவம் அந்த பரிதாப உளவாளி!

எழுத்தோட்டம் முகிலினூடாக செல்லும்போது James Bond படங்களை நினைவுபடுத்தினாலும் பின்னர் தான் புரிந்தது. அது symbolicஆகச் சொன்னது எங்கள் காதுகளில் வரப்போகும் புகையை!

எம்.ஜி.ஆர்,கறுப்பு எம்.ஜி.ஆர்,இளைய குட்டி எம்.ஜி.ஆர் (அதாங்க 'சைலன்ஸ்' புகழ் இளையதளபதி) வரிசையில் 'நம்ம சுப்ரீம் ஸ்டாரும்' கட்சிக்கொடிக் கலர்கள் காட்டி கடற்கரையில் ஆடிப்பாடும் 'வங்கக் கடல்' பாடலின் தொடர்ச்சியாக படத்தின் மேலும் இரு பாடல்களைக் கடற்கரையிலேயே போட்டு நனைத்து எடுக்கிறார் புதுமுக MBA இயக்குனர்.

ஆனால் பர்சானா (புதிய கவர்ச்சிகுண்டு)வும் நமீதாவும் சரத்குமாரோடு கடற்கரையில் நனைந்து ஆடும்போது எங்களுக்கு குளிரடிக்கிறது. போதாக்குறைக்கு சீன மலாய் பெண்கள் வேறு துண்டு துக்கடா உடையோடு உடல் குலுக்கி கிளுகிளுப்பாக்குகிறார்கள்.

இதையெல்லாம் விடப் பெரிய பயமுறுத்துகிற விஷயம் நமீதா பர்சானாவுக்கு போட்டியாக நம்ம 'சமத்துவ' சரத்குமாரும் மேற்சட்டை கழற்றித் தன் பிரமாண்ட உடம்பு காட்டி அசத்துகிறார். (அதில வேறு ஒரு பாட்டுல சரத்தின் உடல் முழுக்க tattoo ! ஏன்யா இப்படி எல்லாம் கிலி பிடிக்க வைக்கிறீங்க?)

பர்சானா பார்க்கும் போது கொஞ்சம் வசுந்தரா தாஸ்(பாடகி & சிட்டிசன் நாயகி) + கொஞ்சம் ஜெனீலியா + கொஞ்சம் கிரண் (மாமி) கலந்த ஒரு கவர்ச்சிக் கலவை..

(ஒரு ரவுண்டு வருவார் போல..)  


மலேசியா செல்லும் சரத்தை எங்கே கண்டாலும் கட்டிப் பிடித்து உருள்வதும்,இடை தெரிய ஆடை அணிந்து செய்தி சேகரிக்க செல்வதுமே இவர் பணி..(இப்படிப்பட்ட ஒரு செய்தியாளர் எங்களுடன் இல்லையே என்று பொறாமை தான் வருகிறது.. ம்ம்ம் எல்லாம் ஒரு ராசி.)

படத்தின் ஆரம்பத்திலேயே 'பத்மஸ்ரீ' விவேக் என்று பெயர் வரும்போது சத்தியமாக சிரிப்பு தான் வந்தது!

ஆனால் படம் போகப் போக விவேக்கை விட ஏராளமான நகைச்சுவை விஷயங்களைக் காட்டுகிறது.. குறிப்பாக வில்லன்..

யார்ரா இது என்று கேட்கவைக்கும் ஒரு வில்லன்.. பயங்கரமாக சிரிக்கிறார்.. செயற்கையாக நடிக்கிறார்.. காது கிழிய (எங்களதும்,அவரதும்) கத்துகிறார்..மொத்தத்தில் 70களில் வந்திருக்கவேண்டிய படத்தில் 80களில் நடித்திருக்க வேண்டிய ஒரு வில்லன்.. 

இதில வேற சரத் இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞாநியாம்.. விஞ்ஞானத்தைத் தவிர வேறு எல்லாம் செய்கிறார்.. 

நமீதா வழக்கறிஞர்..ரொம்ப பெரிய கேஸ் மட்டும் தான் கையாளுவாங்க போல.. கனவுக்காட்சிகளிலும்,சரத்துடன் திரியும் போதும் மட்டும் கட்டையாக,இறுக்கமாக ஆடை அணிந்து மிரட்டுகிறார்..

இயக்குனர் தினேஷ்குமார் இந்த விஷயங்களில் மட்டுமல்லாமல்,மலேசிய action காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் கூட பிரம்மாண்டம் காட்டி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் பூபதிக்கும் பாராட்டுக்கள் போக வேண்டும்.. விரிவுக்கும் விரிவுக்கும் அவரே காரணம்..


அதிலும் ஒரு பாடல் காட்சியில் கமெராவைப் போட்டு குலுக்கி எடுக்கிறார் பாருங்கள்.. அப்படி ஒரு கிளு கிளுப்பு..

உலகம் சுற்றும் வாலிபன் படம் புதிய ஆக வந்தால் இப்படித் தானிருக்கும் என்று இயக்குனர் சொன்னாராம். பல காட்சிகளில் தும்மல் வருகிறது.. ரொம்பப் பழசாய் போய் தூசி தட்டியதாலோ? சரத் குமார் என்ன நம்பிக்கையில் இப்படி ஒரு படத்தை சொந்தமாகத் தயாரித்தார் என்று தெரியவில்லை..

உண்மையில் இடைவேளை வரை கொஞ்சம் பரவாயில்லை.. விவேக்கும் ஓரளவு சிரிக்கவைக்கும் இடங்களைத் தருவதால்.. குறிப்பாக சீன அழகியுடன் ஆவாஸ் அன்ஜிங் காட்சிகள்.. (வேற ஒன்னும் தப்பா யோசிக்காதேங்கோ.. நாய் ஜாக்கிரதை தான்) எனினும் கதை இலகுவாக ஊகிக்கக் கூடியதாக இருப்பதால் இடைவேளையின் பின் கொட்டாவி தான் வருகிறது..

பேசாமல் என்பதற்கு பதிலாக ஆவாஸ் 1977 என்று படம் பார்க்க வரும் எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கலாம்..

முப்பது ஆண்டுகளுக்கு முந்திய காட்சிகளில் பெரிதாக மாற்றங்கள் காணோம்..
ஆனால் தந்தை சரத்தின் கம்பீரமும்,தாயாக வரும் ஜெயசுதாவின் மாறாத இளமையும் அழகு..

எனினும் பழைய சிவாஜி காலத்து போலீஸ் படங்கள் பார்த்த நினைவு வந்து தொலைக்கிறது.. நம்ம மொக்கைப் பதிவுகள் கூட பரவாயில்லை போல.. 

நல்ல ஒரு தொழிநுட்ப ரீதியான சில விஷயங்களையும் மொக்கையாக மோசமாகக் கையாண்டு சொதக்ப்பியுல்லார்கள்..

மைத்துனர் என்ற தோஷத்துக்காக ராதாரவியும் பலிக்கடா ஆகியுள்ளார்.. பாவம்.
விஜயகுமாரோ பரிதாபம்.. (நாட்டாமை திரைக்கதையை மாத்து என்று யாரோ தியேட்டரில் கத்திக் கேட்டது)

இதை விடக் கொடுமை கிளைமாக்ஸ் காட்சி.

துப்பாக்கி சூடு மும்முரமாகும் வேளையில் நானும்,என்னுடன் வந்த நண்பர்களும் சீட்டுக்குக் கீழே பயத்தில் குனிந்து படுத்துக் கொண்டோம்.. கண்ணை மூடிக்கொண்டு மலேசிய போலீசும்,வில்லனும் சரத்தும் மாறி மாறி சுடுவது திரையைக் கிழித்துக் கொண்டு எம்மீது பட்டு விடும் என்ற பயம் தான்..

மகெல பாகிஸ்தானில் வைத்து சொன்னது போல,இலங்கையில் வாழ்வது இயற்கையாகவே கற்றுத் தந்த பாதுகாப்பு உள்ளுணர்வு தான் எங்களைக் காப்பாற்றியிருக்கு.. படம் முடிஞ்சு பார்த்தால் தியேட்டர் சுவர்,சீட்டெல்லாம் குண்டு பாய்ந்து சேதம்..   

மவனே, இனி மேலும் யாராவது உலகம் சுற்றும் வாலிபன், ஹாலிவுட் தர action,அது இதுன்னு சொல்லி எங்களுக்கு படம் காட்டினீங்க ........................................................................................................................................

என்னால ஒன்னும் செய்ய முடியாது.. கேப்டன் விஜயகாந்துகிட்டே சொல்லி காலை சுவர்ல எத்தி கண்டபடி உதைக்க சொல்லுவேன்..

டிஸ்கி- இந்தப்படத்துக்கு பிறகு முடிவெடுத்திட்டேன். இனி சரத்குமாரின் எந்தப்படத்தையும் தியேட்டர் சென்று பணம் செலுத்திப் பார்ப்பதில்லை..    
 

March 25, 2009

IPL தென் ஆபிரிக்காவில் ..ஏன் & இனி?


ஒரு மாதிரியாக IPL சர்ச்சைகள் எல்லாம் முடிந்து இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் இந்தியாவில் இடம்பெறாமல் தென்னாபிரிக்காவில் இடம்பெறும் என உத்தியோகபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.  

IPLஉம் SCA என்று அழைக்கப்படும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையும் விடுத்த உத்தியோகபூர்வ அறிக்கையில் ஏப்ரல் 18ஆம்திகதி முதல் IPL இம்முறை தென்னாபிரிக்காவில் இடம்பெறும் என்பது உறுதியாகவுள்ளது.

IPLஇன் தலைவரும் எந்த சர்ச்சைக்கும் பிரச்சனைக்கும் சளைக்காத இரும்பு மனிதருமான லலித்மோடி இங்கிலாந்தையே தெரிவு செய்வர் என்று பலபேர் எதிர்பார்த்தாலும் தென்னாபிரிக்காவில் IPL இடம்பெறுவது உறுதியாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

தென்னாபிரிக்காவில் காலநிலை சீராக இருக்கிறது. இங்கிலாந்தில் ஏப்ரல் மாத மழை மிக மோசமானதாம்.

ஏற்கெனவே T-20 உலகக்கிண்ணப் போட்டிகளை 2007இல் நடத்திய அனுபவமும் ரசிகர்கள் மத்தியில் இவ்வகை குறுகிய ஆட்டங்களுக்கு இருக்கும் மோகமும்.

இங்கிலாந்தைப் போலவே தென் ஆபிரிக்காவிலும் ஒரே நேரத்தில் பல இடங்களில் போட்டிகளை நடத்தக் கூடியளவுக்கு பல மைதானங்கள் இருக்கின்றன.

நேர வித்தியாசம் இங்கிலாந்தை விடக்குறைவு.

இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை இந்தியாவிலிருந்த IPL போட்டிகள் வெளியேறியதன் பின்னர் எங்கு நடந்தால் தான் என்ன என்பதே நிலை.

லலித் மோடியும் IPL உம் இந்திய ரசிகர்களுக்காக போட்டியின் ஒலிபரப்புநேரம் இந்திய இலங்கை நேரப்படி மாலை 4மணி மற்றும் இரவு 8மணி என்று அறிவித்த பின்னர் தொலைக்காட்சி இருந்தால் தான் கவலை இல்லையே!

எனினும் அனேக நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு குறிப்பாக இந்திய வீரார்களுக்கு இங்கிலாந்தில் IPL போட்டிகளை நடாத்தியிருந்தால் நன்றாயிருக்குமே என்ற எண்ணம் உள்ளது.

காரணம் -
1) அனேகமான வீரர்களுக்கு இங்கிலாந்து 
இரண்டாவது தாய்நாடு போல – அடிக்கடி விஜயம் செய்துள்ளனர். பல நண்பர்கள் உறவுகள் அங்கே உள்ளனர்.

2) பிராந்திய அணிகளுக்காக (County teams)  விளையாடிய அனுபவமும் தென் ஆபிரிக்காவை விடப் பழக்கமான இங்கிலாந்தின் ஆடுகளங்களுக்கும் பரிச்சயமானவை.

3) இங்கிலாந்து சிறிய நாடு என்பதனால் 
நீண்ட பயணங்கள் இருக்காது களையப்படையத் தேவையில்லை.

  4)  எல்லாவற்றிலும் முக்கியமானது - இம்முறை 
 20 – 20 உலகக்கிண்ணப் போட்டிகள் 
இங்கிலாந்திலே இடம்பெறவுள்ளதனால் IPL போட்டிகள் நடைபெறும் ஐந்து வாரங்கள் பிரயோசனமான அனுபவங்களையும் ஆடுகள காலநிலைப் பரிச்சயத்தையும் தந்திருக்கும்.

எனினும் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள மேற்கிந்திய டெஸ்ட் ஒருநாள் போட்டிகள் FA கிண்ண கால்பந்து போட்டிகளின் அரையிறுதி இறுதிப்போட்டிகள் லண்டன் மரதன் ஒட்டம்,G20 மாநாடு என்று பல முக்கிய நிகழ்வுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேள்விக் குறியாக்கி

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைப் பிரச்சினையும் செலவுகளும் சேர்ந்துக்கொள்ள தென்னாபிரிக்காவுக்கு IPL சென்றுள்ளது. 

இந்தியாவில் நடத்தவதை விட தென் ஆபிரிக்காவில் நடத்துவது செலவு கூட என்று எல்லோருக்குமே தெரியும்.

தென் ஆபிரிக்க அரசு செய்து கொடுத்திருக்கும் வசதிகள் இன்னும் பலபல.. 10000பேருக்கு வீசாக்கள்(வீரர்கள்,பணியாட்கள்,முக்கிய பிரமுகர்கள்) பாதுகாப்பு வசதிகள், சலுகை அடிப்படையில் விமானப்பயண சீட்டுக்கள்.. 

இதற்கு மேல் மோடி தென் ஆபிரிக்க ஹோடேல்களில் இப்போதே 30000 பேருக்கு அறைகள் பதிவு செய்து வைத்துள்ளார்.

தென் ஆபிரிக்கர்களுக்கு பல வரவுகள்..

இதை விட இன்று காலை எனது நண்பர் ஒருவர் சொன்னது "தென் ஆபிரிக்காவில் போட்டிகள் நடைபெறும் போது,போட்டிகள் சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும் வந்திருக்கும் சிட்டுக்களையே ரசிக்கலாம்.. இது மட்ட்டுமில்லாமல் க்கும் எந்த தடையும் இருக்காது.." 

ஆமாங்கோவ்.. உலகக் கிண்ணம் நடைபெறும்போது போட்டிகளை யார் பார்த்தாரோ இல்லையோ இவையெல்லாம் பார்த்திருப்பார் தானே..

கிரிக்கெட் அபிமானம் நிறைந்த இந்திய ரசிகர்கள் நிறைந்த மைதானங்களிலிருந்து போட்டிகளைப் பார்க்கக் கிடைக்காதது எங்களுக்குத் தூரதிர்ஷ்டமே எனினும் எதிர்கால இந்தியக் கிரிக்கெட் வீரர்களான பல்வேறு இந்திய மாநிலங்களையும் சேர்ந்த இளைஞர்களுக்கு சர்வதேச அங்கீகாரமும் வெளிநாடொன்றில் விளையாடும் வாய்ப்போடு கிடைப்பது பெரிய விஷயம் தானே?

இந்தியத் தேர்தலா - இந்தியன் பிரிமியர் லீக்கா என்ற கேள்விக்கு இந்திய அரசு மிகத் தெளிவான பதிலை அளித்துவிட்டது.

உலகின் மிகப் பணக்கார கிரிக்கெட் சுற்றுப்போட்டியான IPL இந்தியாவை விட்டு இடம்பெயர்ந்தது அவமானமொன்றும் இந்திய இயலாமை என்றும் நேற்று இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக்கணிப்பில் பலர் கருத்துச் சொல்லி இருந்தனர்.

இந்தியத் தேர்தலில் இதுவும் ஒரு முக்கிய தாக்கமாக இருக்குமா என்பதை இந்திய அரசியல் அவதானிகள் தான் சொல்லவேண்டும். காரணம் பா.ஜ.க.வும் சிதம்பரமும் முட்டி மோதிக் கருத்துக்களால் குதறியிருந்தார்கள்.

இந்தியன் பிரீமியர் லீக் என்று ஆரம்பிக்கப்பட்டதில் கடந்த வருடத்தில் ராஜஸ்தான் ரோய்ல்ஸ் அணிக்கு மட்டுமே ஒரு வெளிநாட்டவர் (ஷேன் வோர்ன்) தலைமை தாங்கி இருந்தார் (பின்னர் லக்ஸ்மனுக்கும் டெண்டுல்கருக்கும் ஏற்பட்ட காயங்களால் மும்பாய்,டெக்கான் அணிகளுக்கும் தலைமைகள் மாறின)

இம்முறையோ நான்கு வெளிநாட்டுத் தலைமைகள் இருப்பர் என எதிர்வு கூறப்படுகிறது- முதல் பலியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கங்குலி மாற்றப்பட்டு நியூசிலாந்தின் பிரென்டன் மக்கலம் தலைவராக்கப்படலாம் என்று ஊகங்கள் உலவுகின்றன.

இதேவேளை இன்று மாலை வெளியான புதிய தகவல் ஒன்றில் பல தலைவர்களை கொல்கொத்தா அணி பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. Saurav Ganguly, Brendon Mccullum, Chris Gayle, Brad Hodge மாற்றி.. மாற்றி.. இது புதுசு..
பயிற்றுவிப்பாளர் மருத்தவர்கள் ஆலோசகர்கள் என்று 90வீதம் ஆனோர் வெளிநாட்டவர்களாக மாறியுள்ள நிலையில் IPLம் இந்தியாவை விட்டு இப்போது வெளியேறும் தருணத்தில் அணிகளின் உரிமையிலும் பெயர்களிலும் மட்டுமே 'இந்தியன்' இருக்க இந்தியன் பிரீமியர் லீக்கின் அடையாளம் மாறப் போகிறதா?

சுவை கண்டுவிட்டால் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவோ,இங்கிலாந்தோ IPLஐ நடத்தக் கேட்கலாம்.. அதிக பணம் வந்தால் லலித் மோடியும் அவர் சொல்லுக்கு அசையும் இந்திய கிரிக்கெட் சபையும் ஆமாம் போடலாம்..

எனக்கெல்லாம் இவை எல்லாவற்றையும் விட பதினெட்டாம் திகதி வரை இன்னும் எத்தனை நாள் இருக்கு என்று எண்ணுவதிலும் இலங்கையில் எந்த சேனல் இதை ஒளிபரப்பும் என்பதிலுமே ஆர்வாமாக் இருக்கிறது.. 

எந்த செனலுமே ஒளிபரப்பு உரிமை வாங்காவிட்டாலும் வீட்டில் இணைப்பு எடுத்துள்ள கேபிளில் ஒழுங்கா போட்டி காட்டுற சேனல் வந்தால் சரி..  







லலித் மோடியும்,IPLஉம் தவறவிட்ட அருமையான மைதானம்..

லலித் மோடியும்,IPLஉம் தவறவிட்ட அருமையான மைதானம்..

தென் ஆபிரிக்காவுக்கும்,இங்கிலாந்துக்கும் ஓடியோடிக் களைத்துப் போன லலித் மோடியும் அவர் தம் IPL குழுவினரும் முதலிலேயே என்னிடம் பேசி இருந்தால் இந்த அருமையான மைதானத்தை அதன் உரிமையாளருடன் பேசிக் குறைந்த விலைக்கு எடுத்துக் குடுத்து இருப்பேன்..


Loshan
அடுத்த முறையாவது என்னோடு கலந்து பேசுங்கப்பா..

மைதானத்தின் இன்னொரு புறத் தோற்றம்.. ;)

Loshan

நன்றி நண்பர் விமல்.. (நிச்சயமா கோபிக்க மாட்டீங்கன்னு தெரியும்.. நான் தான் FACEBOOKல போடலேயே)




March 24, 2009

எப்படி முடிகிறது உங்களால்? பதிவுகள் பற்றிய பதிவு

Loshan
சில பதிவர்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும்,சில சமயம் கொஞ்சம் பொறாமையாகவும் (ஆரோக்கியமானது மட்டுமே) இருக்கும்.  நாளாந்தம் பதிவு போடுவார்கள்;பலரது பதிவுகளில் பின்னூட்டம் போடுவார்கள் - சிலர் பதிவுகளில் கும்மியும் அடிப்பார்கள்- தங்கள் பதிவுகளுக்கு வருகின்ற பின்னூட்டங்களுக்குப் பொறுமையாக நன்றிகள் பதில்கள் சொல்லியும் இருப்பார்கள்.
எப்படித்தான் முடிகிறதோ????

நான் ஒவ்வொரு நாளும் பதிவு போட ஆசைப்படுபவன். என் தளத்துக்கு வருவோர் ஏமாறக்கூடாது என்று நினைப்பதால்; எனினும் பதிவு போட விஷயமேதும் இல்லாவிட்டால் வலிந்து மொக்கைப்பதிவு போடுவதை அண்மைக்காலம் வரை தவிர்த்தே வந்தேன்! வலிந்து போடப்படும் பதிவுகள் கட்டாயக் கல்லூரிப் பாடங்கள் போல!

முன்பு போரடிக்கும் நாட்களில் போட என்று எங்கேயாவது மின்னஞ்சலில் வந்த சுவாரஸ்யமான படங்கள் தேடியெடுத்த படங்கள் போன்றன இருக்கும்.  அவை பிரபலமாகி வரவேற்பையும் பெற்றுள்ளன.  இப்போ கொஞ்ச நாளா ஒருவிதம் போல படங்கள் போடாமல் எழுதிய வருகிறேன். (படங்கள் மின்னஞ்சல் பெட்டியில் நிறைந்துகிடக்கின்றன.)

கொஞ்சநாள் Alexaவில் நம்ம தளத்தின் நிலை பார்த்து (இப்போது உலகளவில் 186,760) என்னுடைய வரைபைத்(graph) தொடர்ந்து பேணுவதற்காகவே ஒவ்வொரு நாளும் பதிவு போட முனைந்தும் உண்டு.

எனினும் வலைப்பதிவுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்று ஒரு பிடிவாதத்தோடு வேண்டுமென்றே சிலநாள் பதிவு போடாமல் விடுவதும் உண்டு. இன்னும் சில நாட்களில் பதிவுகள் போட பரபரப்பான விஷயம் ஏதாவது இருந்தும் வேலைப்பளு அல்லது வீட்டு அலுவலகங்கள் காரணமாகப் பதிவுகள் போடமுடியாது போகும்! 

அலுவலகத்தில் பொதுவாக வேலைகள் குறைவென்றாலும் எனக்கிருக்கும் 4மணிநேர நிகழ்ச்சி,ஒலிப்பதிவுகள்,கையெழுத்திடல் (ஆமா....பெரீய வேலை), பிரதி எழுதுதல், கூட்டங்கள் (சில நேரம் மகா அறுவை) போன்றவற்றின் மத்தியில் சில நாட்களில் ஆர்வத்துடன் ஏதாவது பதிவு ஒன்றை இடமுன்னரே நாக்குத் தள்ளிவடும்.

வீட்டிலிருந்தே நேரம் கிடைக்கும் போது எழுதிவரும் பிரதிகளை எங்கள் அன்பு அக்கா அருந்ததி(தீ அல்ல..) தட்டச்சித் தருவதால் பதிவராய் பிழைப்பு நடக்கிறது.

வீட்டிலோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் மின்னஞ்சல் பார்த்து மட்டுறுத்துவதோடு சரி.கொஞ்சம் அதிகநேரம் கணனிக்கு முன் இருந்தால் என் குறும்புக்காரப் பையனுக்கு பிடிக்காது. ஏதாவது குழப்படி செய்து நிறுத்திவிடுவான் எல்லாத்தையும். அவனது குட்டி பிஞ்சு விரலால் சிலவேளை switchஐயே நிறுத்திவிடுவான்.

நான் தொடர்கிற பதிவுகள் பலப்பல. எல்லாவிதமான பதிவுகளும் படிக்கப் பிடிக்கும். நான் எழுதுவது போலவே படிப்பிலும் கலவை ரசனையுடையவன்.

அரசியல்,இலக்கியம்,கலகல,கிளு கிளு,சினிமா,சீரியஸ் என்று எதையும் விடுவதில்லை. பின்னூட்டம் போட மனசும் நேரமும் இடம் கொடுக்காவிட்டாலும் பிரிண்ட் எடுத்தாவது வாசிப்பதுண்டு.

நான் தொடருகின்ற பல பதிவுகளிலேயே நான் பின்னூட்டமிடத் தவறும் வேளையிலும் வாசிக்காமல் விடுவதில்லை.
(யாரோ ஒரு நண்பர் முன்பு பதிவுலகில் எழுதியது போல நான் எழுதுவதை விட அதிகமாக வாசிப்பதால் மோசமான எழுத்தாளன் இல்லை.) 

சிலபேரின் தளங்களுக்கு பின்னூட்டமிட்டதில்லையே என்று அவமானமாகக் கூட இருக்கும். அவ்வளவு அழகாக நேர்த்தியாக தரமாக எழுதிவந்திருப்பார்கள். ஏனோ என் பார்வையில் பட்டிருக்காது. அப்படி அண்மையில் வாசித்து நான் பின்னூட்டமிட்டதிலேயே பெருமை கொண்ட பதிவுகள் பலப்பல. 

 அத்தோடு மற்றவர்கள் மனம் வைத்து எனக்குத் தொடர்ந்து ஒட்டு போடுவது போலவே நானும் ஒரு பதிவு பிடித்திருந்தால், பலருக்கு அந்தப் பதிவு போய்ச் சேருவது நல்லது என்று நான் எண்ணினால் கட்டாயம் வோட்டும் போட்டுவிடுவேன்!

அதுபோல எனக்கு பின்னூட்டமிட்ட பலருக்கும் நன்றி பதில் சொல்லவேண்டும் என்று யோசித்தாலும் நேரப்பற்றாக்குறை(சிலநேரம் படுசோம்பல்) இன்னும் சிலநேரம் புதிய பதிவு ஏதாவது போடவேண்டும் என்று இருக்கிற வேகத்தில் பின்னூட்டங்களை சரியான முறையில் பின்னபற்றுவதில்லை.

என்னுடைய பதிவுகளின் எண்ணிக்கை 200ஐ அண்மித்து வரும் நேரத்தில் (இவற்றுள் சிலவற்றை எண்ணிக்கைக்கு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் என்று எனக்குத் தெரியும்) இனி ஒரு கட்டுக்கோப்புக்குள் எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளவேண்டும் என எண்ணியுள்ளேன். பார்க்கலாம்!


அதுசரி பரபர என்று எந்தநேரமும் பதிவுகளும் தந்து பின்னூட்டங்களிலும் கும்மிகளிலும் கூட எந்நேரமும் இருக்கின்ற பதிவர்களே நண்பர்களே உங்கள் ரகசியத்தை சொல்லுங்கள! 
எப்படி முடிகிறது?

முழுநேரத் தொழிலே இதுவா?(கோபிக்காதீங்க.. உண்மையிலேயே சந்தேகங்க) இல்லை தொழிலுடனும் குடும்பத்துடனும் எப்படி சமாளிக்கிறீர்கள், என்னைப் போலவே மற்றவர்களின் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்க முடிகிறதா?

சில நண்பர்களுக்கு நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் வந்தாலும் சளைக்காமல் நன்றி பதில் சொல்லி சமாளிக்கிறார்கள் - எப்படி?

பலபேர் ஒன்றுக்கு மேற்பட்ட வலைத்தளங்களை நேர்த்தியாகப் பேணிப் பராமரித்து வருகிறார்கள். எனக்கோ வல்லாவற்றுக்கும் வசதியான வேலை எழுத்தோடு இணைந்த துறை கிடைத்தும் ஒன்றோடே சமாளிப்பது பெரும்பாடாயுள்ளது.


இன்னுமொரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும். பல விஷயம் எழுத நினைத்தும் இருக்கும் சூழல் நிலை எழுதவிடாமலே பண்ணிவிடும். அதிலே எழுத நினைக்கிற ஏழு நாட்கள் பற்றிய பதிவொன்றும் உண்டு. (மறக்கமுடியாத மறக்க நினைக்கிற ஏழு நாட்கள் அவை)

இன்னும் பற்பல நிகழ்வுகள் கொடுமைகளும் உண்டு. எனினும் நினைத்தாலும் முடியாது. எழுதினால் அதுவே முடிவுரை.

காத்திருப்போம் காலம் வரும்.. அப்போது எழுதலாம்..





March 23, 2009

ரஜினிக்கும்,செந்திலுக்கும் பிறந்தநாள் இன்று..

புதிய வார்ப்புரு ஒன்றை என் வலைத்தளத்துக்கு கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனது நண்பர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.. எனக்கும் அந்த ஆசை இருந்தாலும், ஒரு பயம் இருப்பதையும் கெடுத்து விடுவேனோ என்று.. அது போல ராசியாக இருந்த பழைய அடிப்படி வார்ப்புருவை மாற்றவும் விருப்பமில்லை..

இன்னொன்று எனக்குப் பிடித்த மாதிரி (அது எப்படின்னு எனக்கே தெரியல) ஒரு வார்ப்புருக்களும் அகப்படவுமில்லை.. எனினும் அண்மைக் காலமாக ஹிட்ஸ் கூடி வரும் நிலையில் அமெச்சூர்த் தனமாக வலைத்தளம் இருக்கிறது என்று சில வலையுலக நண்பர்களும்,எனது நண்பர்களும் அடிக்கடி சொல்லி வந்த (கிட்டத்தட்ட நச்சரிக்காத குறை) நிலையில் இன்றைக்கு முதல் எப்படியாவது மாற்றவேண்டும் என்று தீர்மானித்து நேற்று ஒரு மாதிரியாக புதிய ஆடையை எனது வலைத்தளம் என்ற காதலிக்கு கொடுத்து விட்டேன்..

"எவனெவனோ நாள் தோறும் மாத்துறான் (காதலியை அல்ல) நீங்கள் இதுவரைக்கும் மாத்தலேயே.. எத்தனை பேர் ஒவ்வொரு நாளும் உங்க தளத்துக்கு வர்றாங்க. நீங்க எப்படியும் நல்லதொரு டெம்ப்ளேட் மாற்றியே ஆகணும் " என்று விடாப் பிடியா சண்டை பிடித்து எனக்காக நேற்று ஞாயிற்றுக் கிழமை தான் தூங்கும் பகல் நேரத்தையும் தியாகம் செய்து எனது லொள்ளு,கடிகள்,சந்தேகங்களையும் தாங்கிக் கொண்டு இதை வெற்றிகரமாக முடித்துத் தந்த நண்பர்/பதிவர் மது(ஹர்ஷேந்த்ரா)வுக்கு நன்றிகள் ..

இந்தப் புதிய வார்ப்புரு பற்றிய உங்கள் கருத்துக்களை அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்..

காரணம் என்னை விட அதிக நேரம் என் வலைத்தளத்திலே உலா வருபவர்கள் நீங்கள் தான்.. இதை விட நல்லா இருக்கக் கூடிய வார்ப்புருக்கள் இருந்தால் எனக்கு அனுப்பி விட்டால் கூட கோடி புண்ணியம்..

-------------
       
இனி தலைப்பு விஷயம். *(எப்பிடியாவது உங்களையெல்லாம் வரப்பண்ணனும் என்று முடிவெடுத்தேன்.. ஹீ ஹீ )

இன்று நடிகர் செந்திலுக்கு பிறந்த நாள் என்று அறிந்தேன்.

பாவம் தான் பட்ட வலிகளால் (எத்தனை வருடம் எத்தனை விஷயத்துக்காக,எத்தனை விதமாக கவுண்டரிடம் அடி வாங்கி இருப்பார் மனுஷன்) எங்களை சிரிக்க வைத்த ஒரு அப்பாவி ஜீவனை கொஞ்சமாவது ஞாபகப் படுத்துவது பிழையாகாது என்று தோன்றியது..
 
அத்துடன் நம் செய்திப் பிரிவில் ஒரு கதாநாயகனாக வளம் வரும் நண்பர் ரஜனிகாந்தனுக்கும் இன்று பிறந்த நாள்.. (மதிய போசனத்துக்கு செலவில்லை.. அப்பாடா)

அண்மையில் விடுமுறையில் ஊருக்கு (யாழ்ப்பாணம்) போய் வந்த பின்னர் நண்பர் ஒரு மார்க்கமாகத் தான் இருக்கிறார். அடிக்கடி சிரிக்கிறார்..வழக்கத்தை விட அழகாக ஆடைகள் உடுத்திறார்.. போன் பில் அதிகமாகக் கட்டுகிறார்..ஏதோ நல்லா நடந்தால் சரி..

செந்தில் தான் எப்படியும் சாப்பாடு அனுப்பப் போவதில்லை.. நம்ம ரஜினி எப்படியும் தருவார்.. வாழ்க ரஜினி பல்லாண்டு..

அவசரத்துக்கு ரஜினியின் படம் கிடைக்கவில்லை.. அதனால் தான் சூப்பர் ஸ்டார்.. ஹீ ஹீ..



March 21, 2009

உலகின் முதலாவது தமிழ் பதிவரிடம் 11 கேள்விகள்..

இந்த பதினோரு ஜோதியில் கலக்கலாம் என்று இன்று சும்மா யோசித்தேன்.. இது மனசுள் இருந்த சில சந்தேகங்கள்.. உண்மையிலேயே யாருக்காவது விடை தெரிந்தாலும் சொல்லுங்கள்..




Loshan
  1. உலகின் முதலாவது தமிழ் பதிவர் யார்?(எப்போது தனது வலைத்தளம் தொடங்கினார் & இன்னும் போடுகிறாரா என்பது உப கேள்விகள்)
  2. அவர் ஆரம்பித்த உலகின் முதலாவது தமிழ் வலைப்பூ/வலைத்தளத்தின் பெயரென்ன?
  3. அவரின் முதலாவது வலைப்பதிவு எதைப் பற்றியதாக இருந்திருக்கும்?(நாமெல்லாம் ஆரம்பிச்சது போல வணக்கம் & அறிமுகம் தானோ?)
  4. முதலாவது பின்னோட்டம் யாரிடமிருந்து வந்திருக்கும்? (வலைப்பதிவு உருவாகு முன்னரே அனானிகள் இருந்ததாக சுவாமி வலையானந்தா அருள்வாக்கியிருக்கிறார்)
  5. தமிழிச்,தமிழ்மணம்,தமிழ், ஈதமிழ் போன்ற திரட்டிகள் எல்லாம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் வாசிப்போர் எப்படி இது பற்றித் தெரிந்திருப்பார்?
  6. மொக்கையா சீரியசா என்று முதல் பதிவை யார்,எப்படி தீர்மானித்திருப்பர்?
  7. நம்மையெல்லாம் மாதிரி அட்சென்ஸ், ஹிட்ஸ், போல்லோவேர்ஸ் (followers), வோட்டுக்கள் பற்றியெல்லாம் கவலைப்பட்டிருக்க மாட்டாரே? (வேறு ஏதாவது குடும்ப,கடன் தொல்லைகள் தாங்காமல் அதைக் கொட்டத் தான் பதிவு போட வந்தாரோ?)
  8. உள்குத்து,நுண்ணரசியல்,கும்மி,அனானிகள் இல்லாத அந்த தமிழ்ப்பதிவு அவருக்கே போரடித்திருக்காதா?
  9. அனானிகளாக வந்து பழைய /புதிய பகை, எரிச்சல்,பிரசாரம்,விளம்பரம் பண்ணும் தொல்லைகள் அப்போதே ஆரம்பித்திருக்குமா?
  10. தான் தான் தமிழின் முதல் பதிவர் என்று வலைத்தளம் ஆரம்பித்த போதே அவருக்கு தெரிந்திருக்குமா?
  11. லோஷன் என்ற ஒருத்தன் ஒரு சோம்பலான,போரடிக்கும் சனிக்கிழமையில் தன்னைப் பற்றித் தன்னிடமே இப்படி ஒரு பதிவு போட்டு, பதினோரு கேள்வி கேட்பான் என்று அப்போதே யோசித்திருப்பாரா?

March 20, 2009

பாவிகளும், காமக் கொடூரர்களும்.. என்ன செய்யப் போகிறோம்?

அண்மையில் இலங்கையின் கிழக்கு நகரான திருகோணமலையில் அண்மயில் நிகழ்ந்த கொடூரம்..

ஆறு வயதே நிரம்பிய தமிழ் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு மறு நாள் சடலமாக மீட்கப்பட்டாள். கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்த அந்தப் பிஞ்சு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது இன்னுமொரு அகோர அதிர்ச்சி..

பாவிகளுக்கு எப்படித் தான் இப்படிப்பட்ட வக்கிர எண்ணங்கள் வந்து வாய்க்கிறதோ..

விசாரணைகள் முடுக்கி விடப்பட்டதும் இந்த கடத்தல் கொலை சம்பவத்தில் தமிழ் பேசும் இளைஞர்கள் ஆறுபேர் சம்பந்தப்பட்டிருந்தனர்.. 
கப்பம் பெறுவதற்காக கடத்தி விட்டு தாம் அகப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் சிறுமியைக் கொடுமையாகக் கொலை செய்து உறப்பையினுள் இட்டு போட்டு விட்டார்கள் அந்தப் பாவிகள்..

சடலம் காணப்பட்ட இடமும் சில பரிதாபகரமான படங்களும்..





இதை விட பார்க்கவே சகிக்காத, மனம் கலங்கும் மேலும் சில படங்களை நான் பிரசுரிக்க விரும்பவில்லை..

கைது செய்யப்பட்ட ஒருவர் தப்பி ஓடும் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.. மேலும் ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளார்..

ஏற்கெனவே சொல்லொணா துயரங்களை அனுபவித்து வரும் எம்மக்களுக்கு இப்படியும் பரிதாப அவலங்கள்..

-------------------------------------

இன்னுமொரு அவல செய்தி நேற்று இணைய செய்திகளினூடாகவும், NDTV தொலைக்காட்சியின் மூலமும் நான் அறிந்தது..

இந்தியாவிலே தந்தை என்ற பண/காம வெறியன் தன் இரு மகள்களை பாலியல் பசி தீர்த்த சம்பவம்..


தான் பணக்காரர் ஆவதற்காக ஒரு போலி சாமியார் ஒருத்தனின் பேச்சை நம்பி ஒன்பது வருடங்களாக தனது மூத்தமகளை பாலியல் உறவுகொண்டு கொடுமைப் படுத்தியுள்ளான் தந்தை என்ற அந்த ராட்சசன்..

பின்னர் தனது இரண்டாவது மகளை அந்த பூசாரிக்கே படையலாக்கியுள்ளான் அந்தப் பாவி..

பெற்ற தாயும் வேறு இதற்கு உடந்தை..

பிஞ்சுகள் இரண்டுமே வயது இருபது தாண்டாதவை.. 

பிஞ்சிலேயே கருகிய இந்த இரு பெண்களும் ஒன்பது வருடங்களுக்குப் பிறகே தங்களுக்கு நிகழ்ந்த கொடுமையை வெளியே சொல்லியுள்ளார்கள்..

இந்த கொடூரர்களை கழுவேற்றியோ,கல்லெறிந்து கொன்றோ,சித்திரவதை செய்தோ கடுமையான தண்டனை வழங்கினாலே இனி மேலும் எந்த ஒரு பாவியும் இது போன்ற செயலைப் பற்றி சிந்திக்கவே அஞ்சுவார்கள்..

என்ன செய்யப் போகிறோம் நாம்?    

   

March 19, 2009

உலகச் சாம்பியன் இலங்கை

1996 மார்ச் 17 - இலங்கையின் வரலாற்றில் - குறிப்பாக விளையாட்டுக்களின் பக்கத்தில் பொன்னெழுத்துக்களால் எழுதப்படவேண்டிய தினம் - கிரிக்கெட்டின் 6வது உலகக் கிண்ணத்தை இலங்கை தன்வசமாக்கிக் கொண்டநாள் அது!

சரியாக 13 ஆண்டுகள் இருநாட்களுக்கு முன்னர் (17-03-1996) பாகிஸ்தானின் பூங்கா நகர் என்று அழைக்கப்படும் லாகூர் விழாக்கோலம் பூண்டு,ஒரு மாற்றத்தை உலக கிரிக்கட்டில் ஏற்படுத்தப் போகின்ற தாவீத்-கோலியத் யுத்தமொன்றைக் காணக் காத்திருக்கிறது.

94ஆம் ஆண்டிலிருந்து படிப்படியான முன்னேற்றத்துடன் சில ஆச்சரியமான சாதனைக்குரிய வெற்றிகளை இலங்கை கிரிக்கெட் அணி பெற்றுவந்திருந்தது.

உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மண்ணிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை இலங்கை பெற ஆரம்பித்து,விற்பன்னர்கள் மத்தியில் இலங்கைக் கிரிக்கெட் அணி இனிமேலும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய அணி என்று குறிப்பிடவைத்தது.

(பாகிஸ்தான்,நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வைத்து ஈட்டப்பட்ட டெஸ்ட் தொடர் வெற்றிகள்)

அர்ஜூன் ரணதுங்க என்ற God father போன்ற அனுபவமும் துணிச்சலும் சூழ்ச்சி நெளிவு சுளிவுகள் புரிந்த தலைவரின் வழிநடத்தலில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக அப்போதே நோக்கப்பட்ட அரவிந்த டீ சில்வா,ரொஷான் மகாநாம,அசங்க குருசிங்க போன்றோரோடு ஒரு சில ஆண்டுகால அனுபவத்தினோடு அப்போதே போட்டிகளைத் தனித்து வென்று கொடுக்கக் கூடிய பெறுபேறுகளை வழங்கிவந்த முத்தையா முரளீதரன்,சமிந்த வாஸ்,சனத் ஜயசூரிய,ரொமேஷ் களுவிதாரண,ஹஷான் திலகரட்ண என்று இளமையும் அனுபவமும் கலந்த ஒரு அணி உலகத் தரம் வாய்ந்த அணிகளுக்கு சவால்விடும் அணியாக வளர்ந்து வந்து கொண்டிருந்தது.

எனினும் consistency என்று சொல்லப்படும் தொடர்ச்சியான வெற்றிகள் இலங்கை அணிக்கு கிடைப்பதற்கு இலங்கை அணி விசுவரூபம் எடுப்பதற்கு முதல் விதை விழுந்தது அவுஸ்திரேலிய மண்ணில்.

முரளீதரனின் பந்துவீச்சு சர்ச்சை இலங்கை அணியின் மீதான திட்டமிட்ட பழிவாங்கல்கள் நடுவர்களின் பக்கச்சார்பு (பின்னர் இந்தியாவும் இவ்வாறே குறிவைக்கப்பட்டது அனைவருமே அறிந்தது)  இனத்துவவேஷம் விஷம சீண்டல்கள் (இலங்கைக்கேயா? பழனிக்கே பஞ்சாமிர்தமா?) போன்றவை தீயை வளர்த்து விட இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியின் உச்சம் கூர்மையானது!

விதை போட்டவர்களுக்கே அறுவடை லாகூரில் கிடைத்தது தான் விதியின் விளையாட்டு!
(பின் அதே லாகூரில் அண்மையில் இலங்கை கிரிக்கெட அணயோடு தீவிரவாதம் விபரீதமாக விளையாடியது கொடுமையிலும் கொடுமை)

உலகக்கிண்ணப் போட்டிகள் ஆசிய சகோதரங்கள் இந்தியா பாகிஸ்தான் இலங்கை ஆகியன இணைந்து நடத்தப் போவதாக முடிவெடுக்கப்பட்ட உடனேயே இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு சாம்பியனாக வாய்ப்புள்ளது எனப் பரவலாக ஆரூடங்கள் எழுந்தன. எனினும் அவுஸ்திரேலியாவில் கிளம்பிய சரவெடிகளான ஜெயசூரிய களுவிதாரண ஆரம்ப இணைப்பாட்டப் பட்டாசுகளைக் கொளுத்திப் போட முடிவு மாறும் என யார் கண்டார்?

குண்டுவெடிப்பு அச்சத்தைக் காரணம் காட்டி அவுஸ்திரேலியாவும் அவர்களுக்கு வால்பிடித்து மேற்கிந்தியத் தீவுகளும் இலங்கையில் போட்டிகளில் விளையாடாமல் Forfeit அடிப்படையில் புள்ளிகளை இலங்கைக்கு கொடுத்தது இலங்கையர்களுக்கும் கிரிக்கெட் அணிக்கும் மேலும் அக்கினிப் பிழம்பை விசிறிவிட்டாலும் அரையிறுதிவரை முன்னேறப் பாதையை அந்த புள்ளிகள் இலகுவாக்கின.

எந்தவொரு தோல்வியையும் சந்திக்காமல் லாகூரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி தனது வெற்றிப்பாதையில் பல சாதனைப் பதிவுகளைப் படையலாக்கியது சிறப்பம்சம்!

  • கென்ய அணிக்கெதிராக அதிக ஒட்ட உலக சாதனை – அப்போது இலகுவில் அந்த 398 என்ற சாதனை முறியடிக்கப்படாது என்றே கருதப்பட்டது.(இப்போதெல்லாம் அடிக்கடி கடப்பது நடந்து கொண்டிருக்கிறது..)
  • டெல்லியில் இந்திய அணியை முதற் சுற்றிலும் பின் அரையிறுதியில் கொல்கத்தாவிலும் துவைத்துப் பிழிந்து வெளியேற்றியது.
  • Tournament Favourites என்ற பெயரோடு நட்சத்திர அணியாக விளங்கிய இந்தியாவுக்கு இரு தோல்விகளும் இலங்கை மூலமாக வழங்கப்பட்டது கிரிக்கெட் உலக முழுவதுமே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
  • கொல்கத்தா ரசிகர்கள் அதிருப்தி அதிர்ச்சியின் உச்சக்கட்டத்தில் வன்முறை நிகழ்த்தி அன்பான இந்தியாவின் விருந்தோம்பல் பண்புக்கே கரிபூசினர்.
  • 1975இல் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பின் ரணதுங்கவின் இலங்கை மட்டுமே. ஒரு உலகக் கிண்ணத்தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஒரே அணி – unbeaten Champs

ஆஸ்திரேலிய அணி மீது ஆசியர்களுக்கு இருந்த எதிர்ப்பும், தொடர்ந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த காரணத்தால் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இருந்த எதிர்பார்ப்பும்,இலங்கை ஒரு வளர்ந்துவரும் அணி என்று இருந்த அனுதாபமும் லாகூர் முழுவதும் இலங்கை அணி சார்பாக ஆதரவு தெரிவிக்க,இலங்கையிலே கூட அவ்வாறான முழுமை ஆதரவு இருந்ததில்லை இலங்கைக்கு.. 

தொடர் முழுவதும் இலங்கை அணி செய்ததைப் போலவே,வாசின் ஆரம்பப் பந்து வீச்சும், முரளி,ஜெயசூரிய,தர்மசேன,டீ சில்வா ஆகிய சுழல் பந்துவீச்சாளர்களின் திணறச் செய்யும் இறுக்கமான,கட்டுப்பாடான பந்து வீச்சும் துடிப்பான களத்தடுப்பும் ஆஸ்திரேலியாவின் ஓட்டங்களைக் கட்டிப்போட,இலங்கை அணி 241 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

பகல் இரவுப் போட்டியில் இந்த இலக்கு ஒரு சவாலான இலக்கு மட்டுமல்ல,இதற்கு முன்னர் எந்த ஒரு அணியுமே இறுதிப்போட்டியில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி உலகக் கிண்ணம் வென்றதில்லை.அத்துடன் இந்த உலகக் கிண்ணம் ஆரம்பித்த போதே சொல்லப்பட்ட இன்னொரு ஆரூடம் சொல்லப்பட்டது.. உலகக் கின்னப்போட்டிகளை நடத்திய எந்த நாடுமே அந்த உலகக் கிண்ணத்தை வென்றதில்லை.. 

இந்தப் போட்டியிலும் முதல் இரு விக்கெட்டுக்கள் சரிந்த போது அவ்வாறே எண்ணத் தோன்றினாலும், டீ சில்வா-குருசிங்க இணைப்பாட்டம் (125)நிலைமையை மாற்றிப் போட்டது.. 

அரவிந்த டீ சில்வாவின் நுணுக்கமான,அழகான பிரயோகங்களும்,தேவையான போது அதிரடியாடிய விதமும், மக்க்ரா,வோர்ன் போன்றோரை ஓட ஓட விரட்டிய விதமும் இன்றும் பலர் நினைவுகளில் நிழலாடும். அதிலும் குருசிங்கவும்,ரணதுங்கவும் ஷேன் வோர்னுக்கு அடித்த இரண்டு அடிகள் இன்று வரை மனதை விட்டு மறையாதவை.. 


தலைக்கு மேல் பறக்கும் பந்தை இயலாமையோடு பார்க்கும் வோர்னும், நகம் கடித்து விரக்தியோடு நிற்கும் ஆஸ்திரேலிய அணித் தலைவர் மார்க் டேய்லோரும், தோல்வியை நெருங்க நெருங்க இடிந்து போன ஆஸ்திரேலியாவின் வீரர்களும் புகைப்படங்களாகி இன்று வரை காலத்தால் மறக்க முடியா பதிவுகளாகியுள்ளனர்.  

தலைவரும்,உப தலைவருமாக இலங்கையை வெற்றியை நோக்கி தமது 97 ஓட்ட இணைப்பாட்டம் மூலமாக அழைத்து செல்ல மிகப் பொருத்தமாக அர்ஜுன க்ளென் மக்ராவின் பந்தில் பெற்ற நான்கு ஓட்டங்களுடன் இலங்கைக்கு 1996ஆம் ஆண்டின் WILLS உலகக் கிண்ணம் கிட்டுகிறது..


லாகூரே மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது.. உலகம் முழுவதும் ஆனந்தமும் அதிர்ச்சியும் கலந்த அலைகள்.. இலங்கையெங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் கரைபுரண்டோடுகிறது..

இதுவரை நடந்த ஐந்து உலகக் கிண்ணப்போட்டிகளில் வெறுமனே நான்கு போட்டிகளில் மட்டும் வெற்றி ஈட்டிய அணி உலக சாம்பியன்.

Whipping boys என்று எல்லாராலும் விரட்டி விரட்டி அடிக்கப்பட்ட இலங்கை சர்வதேச கிரிக்கெட்டுக்குள் முழுமை அந்தஸ்துள்ள அணியாக பிரவேசித்து பதினான்கு ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை சுவீகரிப்பது என்றால் சும்மாவா?   

இறுதிப் போட்டியில் இலங்கை அணியால் மேலும் பல சாதனைகள்..

அரவிந்தவின் சதம் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஒரு வீரர் பெற்ற மூன்றாவது சதம்..

இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி வெற்றி பெற்ற ஒரே அணி (பின்னர் 2003இல் ஆஸ்திரேலியாவும் இதை நிகர்த்தது) 

இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே தொடர் முழுவதும் அசத்தி,வேகமான,துடிப்பான கிரிக்கெட்டுக்கு புது வரைவிலக்கணம் கொடுத்த சனத் ஜெயசூரிய தொடரின் மிகப் பெறுமதிவாய்ந்த வீரர் (Most valuable player) என்ற விருதை வென்றிருந்தார்..

எனினும் இறுதிப் போட்டியில் அசத்திய அரவிந்த டீ சில்வாவும் அந்த விருதுக்குப் பொருத்தமாகவே இருந்தார்.. அரை இறுதியிலும்,இறுதியிலும் அவர் காட்டிய சகல துறைப் பெறுபேறுகள் யாரோடும் ஒப்பிடப்பட முடியாதவை..

இலங்கையின் இந்த மகத்தான வெற்றி ஒருநாள் கிரிக்கெட்டின் பரிமாணத்தையே மாற்றியது..

இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட அதிரடிகள்,பின் வரிசையின் தாங்கிப் பிடிக்கும் திறன்,அதி பாதுகாப்பான,துடிப்பான களத் தடுப்பு,சுழல் பந்து வீச்சாளர்கள் மூலம் சாதுரியமாக எதிரணி துடுப்பாட்ட வீரர்களை திணறடிப்பது என்று அத்தனை நுட்பங்கலுமே எதோ ஒரு வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது..

1983இல் இந்திய அணியின் உலகக் கிண்ண வெற்றி இந்திய உப கண்டம் முழுவதுமே கிரிக்கெட்டை மதம் போல பரப்பியது போல, 1996இல் இலங்கையின் வெற்றியும் ஒரு பெரிய மாற்றத்தையும்,குறிப்பாக இலங்கையில் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் அலையையும் ஏற்படுத்தியது..  

இலங்கையில் கிரிக்கெட் வீரர்களுக்கு கடவுளுக்கு அடுத்த அந்தஸ்து,பண்ணையார்களை ஒத்த சொத்து,சுகம்,இன்னும் பிரபலம்,விளம்பரம் என்று பல்கிப் பெருகவும்,ஏழ்மை வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்த பல கிரிக்கெட் வீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும் இந்த வெற்றி தந்த ஊட்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல.

உலகக் கிண்ண வெற்றி அலை மூலம் கிடைத்த வாய்ப்பையும்,சர்வதேச அந்தஸ்தையும் இதன் மூலம் விரிவாக்கக்கூடிய சந்தர்ப்பத்தையும் சரியான வழியில் பயன்படுத்திக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று டெஸ்ட் போட்டிகளிலும் பெயர் சொல்லக் கூடிய முன்னணியாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சரியான முறையில் இளையவர்களுக்கான தலைமைத்துவ மாற்றம் தொண்ணூறுகளின் இறுதியில் நடைபெறாது தான் பெரிய தாக்கம் ஒன்றையும்,தேக்கத்தையும் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியில் உருவாக்கியது. 

முன்னர் தேயிலை,இரத்தினக் கற்கள், பின்னர் ஈழ விடுதலைப் போராட்டம்,யுத்தம் (இன்று வரை இது நீடித்தபடியே இருப்பது பெரும் துயரம்) என்று இலங்கையை உலகப் புகழ் (!) பெற வைத்த, உலக வரைபடத்தில் உற்று நோக்க வைத்தவற்றுக்குப் பின்னர் உலகக் கிண்ண வெற்றியும் இலங்கையை பலரும் கவனிக்க வைத்தது..

இன்று வரை இலங்கை கிரிக்கெட்டில் பல சாதனையாளர்களை தந்து கொண்டே இருக்கிறது.. பல சாதனைகளும் இலங்கையின் பெயர் தாங்கி நிற்கின்றன,,..

உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியில் இடம் பெற்ற மூன்று வீரர்கள் இலங்கையின் ஒரு நாள் அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.. சனத் ஜெயசூரிய, முத்தையா முரளிதரன் & சமிந்த வாஸ் 


டிஸ்கி -  இலங்கையின் பெயர் ஓரளவு நன்றாக பேசப்பட காரணமாக இருந்த விண்வெளி ஆராய்வாளர்,விஞ்ஞானி, புனைகதை எழுத்தாளர் ஆர்தர் சி கிளார்க் அவர்களின் நினைவு தினம் இன்று.. (இலங்கையின் குடியுரிமையை வேண்டிப் பெற்று நீண்ட காலம் இந்தப் பாவ பூமியில் வசித்த பெருமகன் அவர்.  

மறக்க முடியா இறுதிப் போட்டியின் ஒளிப்படப் பதிவுகளைப் பார்க்க,கீழே சொடுக்குங்க.. 
பார்த்திட்டு மறக்காமல் மறுபடி வந்து வோட்டையும்,பின்னூட்டத்தையும் போட்டிட்டு போங்க.. :)

Australian innings




ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner