January 05, 2015

ஒரு நாள் மகுடம் சூடும் புள்ளடி ராஜாக்கள் நாம் !

ஜனவரி 8!!!

இந்த ஒரேயொரு நாளுக்காக நாட்டை ஆளும் ராஜாக்களும் தேடி வந்து​ எம் காலில் விழக்கூடத் தயாராக இருப்பார்கள்.

எல்லாம் எங்கள் கைகளால் இடப்போகும் அந்தப் புள்ளடி அவர்களுக்குத் தரப்போகும் நாடாளும் ஆணை.ஒவ்வொரு வாக்காக தேடும் ஒவ்வொரு தரப்பும், இலங்கையின் இம்முறை ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை இரு தரப்பும் காலில் விழாக்குறையாக கைகளைக் கூப்பித் தொழுது, செய்தவை, செய்யாதவை, இனி செய்ய இருப்பவை என்று அடுக்கி, அடுக்கி அள்ளிப் போடுங்கம்மா வாக்கு என்று சாதாரணர்கள் எங்களுக்கு மேலான அந்தஸ்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.


வழமையாக ஆட்சி எங்கேயோ நடக்கும், நாம் ஆளப்பட்டுக்கொண்டிருப்போம்.

எங்களுக்கானது தான் ஆட்சி என்ற நிலை தாண்டி, ஆட்சிக்குள்ளே நாம் வாழப் பழகியிருப்போம்.


சகிப்புத்தன்மை என்பதே எங்கள் நரம்புகளுக்குள் ஓடிக்கொண்டிருப்பதால் யார் என்ன செய்தாலும் 'அட்ஜஸ்ட் ' என்பதே தாரக மந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவிகள் எமக்கு ஐந்து, ஆறு வருடங்களுக்கு ஒருமுறை தான் இப்படியான ராஜ மரியாதை கிடைக்கும்.எங்கள் குரல்களே எடுபடாமல், அவர்களின் குரல்களை மட்டுமே நாம் தினமும் கேட்டுப் பழகிப்போன நிலையில், எங்கள் குரல்கள், கோரிக்கைகள், அபிலாஷைகள் என்பவற்றை ஆளப்போகிறவர்கள் / ஆண்டவர்கள் கேட்கும் அல்லது  கேட்பவதாகப் பாவனை செய்யும் அதிர்ஷ்டம் வாய்ந்த நாட்கள் இவை.இவற்றுள் மேலும் ஒரு மகுடம் வைக்கும் நாள் தான் வரும் 8ஆம் திகதி.

தேர்தல் நாள் நாங்கள் தான் ராஜாக்கள்.

எங்கள் கைகள் இடும் புள்ளடிகள் தான் அரச ஆணை.

யாரை நோக்கி எங்கள் கரங்களின் ஆதரவு நீள்கிறதோ அவருக்கு ஆட்சி பீடம்.

நாங்கள் யாரை வேண்டாம் என்கிறோமோ அவருக்கு அது (இம்முறை) எழமுடியாத மரண அடியாக அமையும்.


உங்கள் உங்கள் தீர்மானங்கள் மனதில் எப்போதோ உறுதியாக எழுதப்பட்டிருக்கும்.
அவரா இவரா என முடிவு செய்திருப்பீர்கள்.
யாருக்கு வேண்டுமானாலும் வாக்கை நீங்கள் அளிக்கும் ஜனநாயக உரிமை உங்களுக்கு இருக்கிறது.
வாக்கை நிராகரிக்கும் உரிமை, ஏன் வாக்களிக்காமல் புறக்கணிக்கும் உரிமை கூட உள்ளது.

ஆனால் இலங்கையின் தற்போதைய நிலையைப் பொறுத்தவரை, கடைசி இரு வழிமுறைகளும் எப்போதும் கைகொடுக்காது என்பது அனுபவபூர்வமாக நாம் வலியோடு கண்ட உண்மைகள்.

​அதேபோல, யார் வந்தாலும் என்ன?
ராமன் என்ன ராவணன் என்ன நம்ம வாழ்க்கை நம் கையில் என்று இருந்துவிடுவதனால் மோசமான ஆட்சி ஒன்று உருவானால் அது பற்றி விமர்சிக்க, குறை சொல்ல ஏன் புலம்புவதற்கான தார்மீக உரிமையை இழந்துவிடுகிறோம்.​

அதேபோல எங்களுக்கு சுதந்திரமாக இருக்கும் ஒரே (அல்லது மிக முக்கியமான )உரிமையான வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருப்பதும், அதை இன்னொருவருக்கு விட்டுக்கொடுப்பது போன்றதே.

மாற்றம் செய்வதாக இருந்தால் கூட ஏதாவது செய்தாகவேண்டுமே..
வேண்டுவது வேண்டாதது என்பதைத் தீர்மானிப்பது எம் கைகளாக இருக்கவேண்டும்.
இந்த ஒருநாள் ராஜா பதவிகளை பயன்படுத்துவோமே...

பதிவு செய்துள்ள வாக்காளர்கள்  - மாவட்ட - தொகுதி வாரியாக 


'ஜனநாயகம்' என்பது பெயரளவிலேனும் ஒரு அடிப்படை அம்சமாக நாட்டில் இருக்கையில், கட்சி மாறல்கள், பதவிக்காக கொள்கை மாறல்கள், கூட்டணி சேர்த்தல்கள், விலகல்கள் என்று நடக்கும் பலவிதமான கூத்துக்களிலும் வாக்காளர்களாக எமது விருப்பு, வெறுப்புக்கள் இருப்பதில்லை.

எனவே தான் யார் வரவேண்டும் என்று தீர்மானிப்பதிலாவது  வாக்குரிமையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று மற்றவர்களையும் நாம் ஊக்குவிக்கவேண்டி இருக்கிறது.
​"யார் வரவேண்டும் ​என்று பார்த்து வாக்களிப்பது இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தெரிவுகளுக்குள் சிரமமாக இருக்கலாம் ; ஆனால் யார் வரக்கூடாது என்று தீர்மானிப்பதில் பெரியளவு சிக்கல் இருக்கப்போவதில்லையே"


எனவே அங்கே தான் வாக்களிக்காமல் விட்ட, செல்லுபடியற்ற வாக்கை வழங்கிய மந்தைகளுள் ஒருவராக நாம் ஆயிடாமல், ஏதாவது ஒரு தெரிவை வழங்கவேண்டியது அவசியமாகிறது.

இந்த முறை 2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி ஒரு மில்லியனுக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.
இவர்கள் இளையவர்கள்.

அவர்களுக்கு இந்த ஜனநாயகத் தெரிவு முறை மேல் நம்பிக்கையை வழங்குவதும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்காக குரல் கொடுக்கும் எமது நம்பிக்கையை வைக்கக்கூடிய பிரதிநிதிகளை நாம் அனுப்பிவைக்கலாமென்ற நம்பிக்கையை வழங்குவதற்கும் வாக்களிக்கத் தூண்டவேண்டும்.

காரணம் இளைய தலைமுறை நம்பிக்கை இழந்துபோன பல விடயங்களுள் ஒன்றாக எமது பிரதிநிதிகளை, எம்மை ஆளுவோரை நாமே தெரிவு செய்வதும் மாறிவிடக்கூடாது என்பதே எனதும் அக்கறையாகும்.

கடந்த காலங்களில் பதிவு செய்த வாக்காளர்களாகிய எம்மில் கால்வாசிப் பங்குக்கும் அதிகமானோர் வாக்களித்ததில்லை.
இது இலங்கை போன்ற கல்வியறிவில் முன்னிலை பெற்ற ஒரு நாட்டுக்கு எவ்வளவு வெட்கக்கேடான ஒரு விடயம்?


------------


வாக்களிக்கும் முறை..

நேரடியாக நாம் எமது ஒரே தெரிவை நாம் செலுத்தலாம்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு பெரும்பான்மை / 50.1% வாக்குகள் கிடைக்காவிடில் இரண்டாவது சுற்றுக்கணிப்புக்கு போகவேண்டிய நிலைமை ஏற்படும்.
(அவ்வாறு இதுவரை ஏற்பட்டதில்லை)
இதற்காக மூன்று விருப்பத் தெரிவுகள் வழங்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

கீழே விளக்கப்படம் உள்ளது.


வாக்களிக்கும் முறை பற்றிய சந்தேகங்கள் இன்னும் இருப்பின் கீழ்வரும் ஆங்கில இணையத் தொடுப்பை க்ளிக்கி அறிந்துகொள்ளவும்.


இல்லையேல் இந்த இடுகையின் கீழே comments ஆக இடுங்கள். முடியுமானவரை பதிலிடுகிறேன்.


நாம் வாக்கிடுவோம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

புள்ளி ராஜாக்களாக தேர்தலுக்குப் பின் பூஜ்ஜியங்களாக  ஆகாதிருக்க (இம்முறையும் ஏமாறினால் - அதை பிறகு பார்க்கலாம் - எத்தனை ஏமாற்றம் கண்டுவிட்டோம் - நம்பிக்கை தானே வாழ்க்கை) புள்ளடி போட்ட ராஜாக்களாக பெருமையுடன் விரலில் முடிசூடிக் கொள்வோம்.


"யார் வேண்டும் என்று வாக்களிப்பது மனதுக்கு இம்முறை ஒவ்வாவிட்டால், யார் எமக்கும் எம் எதிர்காலத்துக்கும் வேண்டாம் என்று வாக்களியுங்கள்."
தெளிவும் தெரிவும் இலகு.

------------------
நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைகின்றன. இலத்திரனியல், அச்சு, இணைய ஊடகங்கள் வழியான விளம்பரங்களும் பிரசாரங்களும் நாளையுடன் முற்றுப்பெற வேண்டும். 

ஆனால், இணையவெளியில் பல்கிப் பெருகியிருக்கும் சமூக வலைத்தளங்கள் மூலமான விளம்பரங்கள், பிரசாரங்களை எவ்வாறு தேர்தல் திணைக்களம் கட்டுப்படுத்தப்போகின்றது என்ற கேள்விக்கு யாரிடமும் சரியான பதில் இல்லை.
நிறுவனங்களாக, அமைப்புக்களாக இவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் தனிநபர்கள் தத்தம் விருப்பு வெறுப்புக்களைக் கொண்டு பிரசாரம் செய்யப்போவதை எவ்வாறு தடுக்கலாம்?

சிக்கலான கேள்வி இது..
தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை இது தொடரும்.
அதிலும் இம்முறை எழுச்சி கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கும் என்று என்ணத்தோன்றுகிறது.


January 03, 2015

உலகக்கிண்ண அணிகள் - யாரந்த 15 பேர் ?? - ஒரு ஊகம் + அலசல் #CWC15


உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்னும் 6 வாரங்கள்..
அல்லது மேலும் சரியாக சொல்வதாக இருந்தால் 41 நாட்கள்.

இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடவுள்ள 14 அணிகளில் இதுவரை ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் மட்டுமே உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட அணிகளை அறிவித்துள்ளன.

இரு பிரிவுகள், தலா ஏழு அணிகள்..


எல்லா அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணிகளை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முதல் அறிவிக்கவேண்டும் என்பது சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ள விடயம்.

இவற்றுள் ஆறு அணிகள் தங்களுக்கிடையில் டெஸ்ட் போட்டிகளை விளையாடிவருகின்றன.

7ஆம் திகதிக்கு முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் எவையும் இடம்பெறாத நிலையில் ஏற்கெனவே அணிகளின் தெரிவுகள் இடம்பெற்றிருக்கலாம் என்பதோடு சில வீரர்களின் உபாதைகளின் இறுதி உறுதியான முடிவுகளுக்காகவும், டெஸ்ட் போட்டிகளின் formஐ வைத்து உலகக்கிண்ண அணிக்குள் சேர்ப்பதா இல்லையா என்பதை இறுதி முடிவு செய்துகொள்வார்கள் என்று நம்பலாம்.

சில அணிகளில் அவரா, இவரா என்பதைத் தீர்மானிக்கும் வாய்ப்பாக இந்த சில நாட்கள் இருக்கலாம்.

நான் அவதானித்த வரை சில அணிகளின் 15 வீரர்களை ஊகிக்கலாம் என்று இந்த இடுகை.

அயர்லாந்து, சிம்பாப்வே, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், ஸ்கொட்லாந்து போன்ற அணிகளைத் தொடர்ந்து அவதானிக்கவில்லை.
பங்களாதேஷின் அணித் தெரிவுகளிலும் (எனக்கு) தெளிவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னைய பாகிஸ்தான் அணி போல..
யார் வேண்டுமானாலும் அணியில் இருக்கலாம் ; யார் வேண்டுமானாலும் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற நிலையில் இருக்கிறது.

இப்போதைக்கு ஜேசன் ஹோல்டர் (இவர் யார் என்று கேட்பவர்களை நான் வரவேற்கிறேன்) அணியி.ன் ஒருநாள்
மேற்கிந்தியத் தீவுகளின் ஒருநாள் சர்வதேச அணியின் தூண்கள், இந்த அணியின் அதி முக்கிய இணைப்பு வீரர்கள் - அதிக விலைக்கு வெளிச்சந்தைகளில் (T 20 லீக்குகளில்) வாங்கப்படும் கெயில் (காயம்), ட்வெயின் பிராவோ, டர்ரென் சமி, கெய்ரொன் பொலார்ட் ஆகிய நால்வரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் ப்ராவோவையும் பொலார்டையும் கழற்றிவிட்டார்கள்.

உலகக்கிண்ண அணிக்குள் இவர்கள் இருப்பார்களா? சமிக்கு என்ன நடக்கும்?
கெயில் மீண்டும் காயமடைவாரா என்று யாராலுமே ஊகிக்க முடியாது.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பிக்க முதலே உலகக்கிண்ண 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்படவேண்டி இருப்பதால், எதை வைத்து தலைமையை முடிவு செய்வார்கள் என்றும் சொல்ல முடியாது.
எனவே கரீபியன் குழப்பத்தையும் விட்டுவிடுகிறேன்.இந்த அணிகளின் தெரிவுகள் அண்மைக்கால அந்தந்த அணிகளின் ஒருநாள் தெரிவுகள் மற்றும் வீரர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் என் ஊகங்கள் மட்டுமே.
வீரர்களின் திடீர் காயங்களுக்கு நான் பொறுப்பாகேன் .
அதே போல விக்கிரமாதித்தன் விதி விளையாடுவதற்கும் லோஷன் பொறுப்பாளியல்ல.
-------------------

இலங்கை 

முதலில் இப்போதைக்கு தெரிவு இலகுவாக இருக்கும் இலங்கை அணியைப் பார்க்கலாம்.
நியூ சீலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணியிலிருந்தே 15 பேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது ஒன்றும் பெரிய ரகசியம் அல்ல.
ஆனால் மாலிங்கவின் உபாதை எதிர்பார்த்தது போல குணமடையாவிட்டால் இன்னொரு வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்புக் கிடைக்கும்.
அது நுவான் பிரதீப்பாக இருக்கலாம்.

எனது இலங்கை உலகக்கிண்ண அணி

Angelo Mathews (capt), Tillakaratne Dilshan, Kumar Sangakkara, Mahela Jayawardene, Lahiru Thirimanne, Dinesh Chandimal, Jeevan Mendis, Thisara Perera, Suranga Lakmal, Lasith Malinga (If unfit Nuwan Pradeep) , Dhammika Prasad, Nuwan Kulasekara, Rangana Herath, Sachithra Senanayake, Shaminda Eranga

திமுத் கருணாரத்னவின் டெஸ்ட் சதம் அவரை ஒருநாள் அணிக்குள் உள்வாங்கி இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு ஜீவன் மென்டிஸ் ஒரு சகலதுறை வீரராக தேவைப்படுவார்.

------------------

இந்தியா

இந்திய ஒருநாள் அணித்தெரிவு அவ்வளவு சிக்கலான ஒன்றல்ல..
நடப்பு உலக சம்பியன்கள் டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் போட்டிகளில் பலமும் சமநிலைத் தன்மையும் பெற்றவர்கள்.

பெரிய மாற்றங்கள் இராது..

Mahendra Singh Dhoni (Captain), Shikhar Dhawan, Rohit Sharma, Murali Vijay, Virat
 Kohli, Suresh Raina, Ambati Rayudu, Ajiyanke Rahane, Ravindra Jadeja, Ravichandran Ashwin, Akshar Patel, Bhuvanesh Kumar, Ishant Sharma, Mohamed Shami, Umesh Yadav.

சகலதுறை வீரர் ஸ்டுவர்ட் பின்னி அணிக்குள் இடம்பெறுவது அவுஸ்திரேலிய - நியூ சீலாந்து ஆடுகளங்களுக்கு உசிதமானதே எனினும் இப்போதைய வேகப்பந்து வீச்சாளர்களின் form, ரஹானேயின் துடுப்பாட்ட லாவகம் இந்திய அணிக்குத் தேவையானவையாக இருக்கப்போகின்றன.

உத்தப்பா, கரன் ஷர்மா போன்றோரும் தேர்வாளர்களின் பரீசலனையில் இருக்கலாம்.

இதை எழுதியதன் பின்னர் சில நிமிடங்களில் வந்த செய்தியில் ஜடேஜாவின் உபாதை அவரை உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றவிடாத அளவுக்குப் பாரியது என்று சொன்னது.

எனவே அவர் விளையாடாத பட்சத்தில் எனது தெரிவு ரொபின் உத்தப்பா.

-------------------------------

பாகிஸ்தான்

யார் தலைவர் என்பதே முதலாவது முக்கியமான கேள்வி.
ஷஹிட் அஃப்ரிடியின் நியமனம் மிஸ்பா உல் ஹக்கிற்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இடம்பெற்றது. இதுவரை அஃப்ரிடி T20 அணியின் தலைவராகவும் மிஸ்பா ஒருநாள் அணியின் தலைவராகவும் தொடர்கின்றனர்.

ஆனால், அஃப்ரிடி நியூசீலாந்து அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் தோற்றாலும் தலைவராகவும் சகலதுறை வீரராகவும் பிரகாசித்து இருந்தார்.
அவரது தலைமைத்துவம் ஆக்ரோஷமானதாகவும் காணப்பட்டது.
இதனால் தேர்வாளர்கள் மிஸ்பாவின் வயதையும் காரணமாக வைத்து அஃப்ரிடியிடம் உலகக்கிண்ண அணியைக் கையளிப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

எனினும் மிஸ்பாவின் நியமனம் மாறாமல் தொடர்வது பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தை உறுதியானதாக்கும்.

என்னுடைய தெரிவின் சில வீரர்கள் பாகிஸ்தான் தேர்வாளர்களினால் தெரிவு செய்யப்படாமல் போகலாம்.

Misbah-ul-Haq (Captain), Mohammad Hafeez, Ahmed Shehzad, Sharjeel Khan, Younis Khan, Asad Shafiq, Haris Sohail, Umar Akmal, Sarfraz Ahmed, Shahid Afridi, Mohammad Irfan, Wahab Riaz, Junaid Khan, Umar Gul, Raza Hasan

இவர்களில் Sharjeel Khan, Asad Shafiq ஆகிய இருவரில் ஒருவருக்குப் பதிலாக Fawad Alam தெரிவு செய்யப்படுவது பாகிஸ்தானிய அணிக்கு உறுதி சேர்க்கும். ஆனால் ஏனோ தேர்வாளர்களுக்கு அலாமைப் பிடிப்பதாக இல்லை.

அதேபோல ஜுனைத் கானின் காயம் குணமடையாத பட்சத்தில் சொஹைல் தன்வீருக்கு வாய்ப்புக் கிட்டும்.

----------------

அவுஸ்திரேலியா

மைக்கேல் கிளார்க்கின் தசைப்பிடிப்பு உபாதை குணமடைந்து உலகக்கிண்ண அணிக்கு அவர் தலைமை தாங்குவாரா என்பதும், அவர் வரமுடியாத பட்சத்தில் பெய்லியா ஸ்மித்தா என்பதுமே பலருக்கும் இருக்கும் கேள்வி.

என்னைப் பொருத்தவரை ஜோர்ஜ் பெய்லி அவுஸ்திரேலியாவுக்கு தலைமை தாங்குவது பல அனுகூலங்களைத் தரும் என நம்புகிறேன். பெய்லி தான் உலகக்கிண்ண அவுஸ்திரேலிய அணியின் தலைவர் என்றே என் அணியை ஊகிக்கிறேன்.

நிறைய பொருத்தமான வீரர்கள் தெரிவுக்காகப் போட்டிபோடும் குழப்பமான அணிகளில் போட்டிகளை நடத்தும் இரு நாடுகளுக்கிடையிலும் கடுமையான போட்டி.

திடீரென முளைத்தெழும் புதிய வீரர்கள் எம்மை ஆச்சரியப்படுத்தவும் கூடும்.
குறிப்பாக ரிக்கி பொன்டிங் இப்போது அடையாளம் காட்டும் அஷ்டன் அகார் போல.

அண்மைக்கால பெறுபேறுகளின் படி எனது பதினைவர்

George Bailey (Captain), Aaron Finch, David Warner, Shane Watson, Steve Smith, Glenn Maxwell, Mitchell Marsh, James Faulkner, Mathew Wade, Mitchell Stark, Mitchell Johnson, Josh Hazlewood, Pat Cummins, Nathan Coulter-Nile, Ashton Agar / Nathan Lyon

வேடின் இடத்துக்கு வயது முதிர்ந்த ஹடின் வரக்கூடிய சாத்தியமும் ஒற்றை சுழல்பந்து வீச்சாளரின் இடத்துக்கு அகார், லயன் தாண்டி யாரும் வரக்கூடிய வாய்ப்பும் இருக்கின்றன.

------------------------

நியூ சீலாந்து 

கிடைக்கும் வாய்ப்புக்களை எல்லாம் பெற்றுக்கொள்ளும் வீரர்கள் மிகச் சிறப்பாகச் செய்துவிடுவதால் யாரை விட்டு யாரை எடுப்பது எனத் தெரிவாளர்கள் குழம்பும் இன்னொரு அணி இந்த நேர்த்தியான நியூ சீலாந்து.
அதிக தடவைகள் உலகக்கிண்ண அரையிறுதிக்கு வந்தும் ஒரு தடவை தானும் இறுதிப்போட்டியை எட்டிப் பார்க்காத இந்தத் திறமையான, ஆனால் மிகத் துரதிர்ஷ்டம் வாய்ந்த அணிக்கு உலகக்கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்பு இந்த முறை வாய்த்திருக்கிறது.

அதிரடியான அணித் தலைவர், அனுபவமும் இளமைத் துடிப்பும் கலந்த மிகச் சிறந்த அணி, சொந்த மண்ணின் அனுகூலம் என அனைவரையும் கவர்ந்த இந்த Black Caps இம்முறை துடிப்பாகவே காத்திருக்கிறது.

சும்மா இருந்து அணியை ஊகிக்கும் நானே இப்படிக் குழம்பும்போது தேர்வாளர்களுக்கு எவ்வளவு குழப்பம் இருக்கும்?

Brendon McCullum(Captain), Martin Guptill, Doug Brownlie, Kane Williamson, Ross Taylor, Anton Devcich, Jimmy Neesham, Corey Anderson, Luke Ronchi, Daniel Vettori, Nathan McCullum, Tim Southee, Adam Milne, Trend Boult, Matt Henry

அன்டர்சனின் காயம்/உபாதை மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஏதாவது மாற்றம் மட்டுமே இதில் மாறக்கூடியது.

-----------------------

தென் ஆபிரிக்கா 

இன்னொரு உறுதியான அணி. ஆனால் முக்கிய கட்டங்களிலே தடுமாறுவதால் இறுதிப்போட்டியை எட்டிப்பார்க்காத இன்னொரு அணி.
இம்முறை புதிய தலைமுறை இந்த தலைவிதியை மாற்றும் எனப் பலர் நம்புகின்றனர்.
எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.

ஆனால் அணியைப் பொறுத்தவரை எந்த அசகாய சூர அணியையும் எந்த ஒரு களநிலை, காலநிலையிலும் வீழ்த்தக்கூடிய அணியே.

ரொபின் பீட்டர்சன், JP டுமினியின் உபாதை மட்டுமே இப்போதைக்கு அணியில் இருக்கும் ஒரே சந்தேகம்.

AB De Villiers (Captain), Hashim Amla, Quinton De Kock, Faf DuPlessis, Farhard Behardien, JP Duminy, David Miller, Rilee Rossouw, Ryan McLaren, Wayne Parnell, Vernon Philander, Robin Peterson, Dale Steyn, Morne Morkel, Imran Tahir

என்னைப் பொறுத்தவரை தாஹிருக்குப் பதிலாக வேறு யாராவது ஒரு இளம் சுழல்பந்து வீச்சாளரைத் தெரிவு செய்வது உசிதம். ஆனால், தென் ஆபிரிக்காவின் டெஸ்ட்டுக்கு ஒரு சுழல், ஒருநாள் போட்டிகளுக்கு வேறு சுழல் என்ற கொள்கை மாறுவதாக இல்லையே.

டுமினி பூரண குணம் என்றால் அவரையும் ஒரு சுழல்பந்து வீச்சாளராக எடுத்து இன்னொரு வேகப்பந்துவீச்சாளரையும் அணியில் சேர்த்துக்கொள்ள இடமுண்டு.

------------------

ஏழாம் திகதி அணிகள் எல்லாம் உறுதிப்படுத்தும்போது எத்தனை வீதம் சரி எனப் பார்த்துக்கொள்வோம்.
அதன் பின் அணிகளின் வாய்ப்புக்கள் பற்றி ஆராய்வோம்...
(விக்கிக்கும் வேலை வேண்டாமோ?)

படங்கள் - நன்றி
http://www.icc-cricket.com/cricket-world-cup
AFP 

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner