
நேப்பியர் டெஸ்ட் போட்டியில் தோல்வியிலிருந்து தப்புவதற்கு இந்தியா போராடிவரும் நிலையில், நேற்றைய (ஞாயிறு) நாள் முழுவதும் மந்தகதியில் ஆடி இந்தியா ஒரு நம்பிக்கையை வரவழைத்துள்ளது.. ஆபத்தான கட்டத்தை இந்திய அணி தாண்டிவிட்டது என்கிறார்கள் கிரிக்கெட் விற்பன்னர்கள்..எனக்கென்னவோ இன்னமும் மொத்த ஓட்ட எண்ணிக்கையை முழுவதுமாகத் தாண்டாத நிலையில் இன்னும் ஒரு விக்கெட் போனாலும் இந்தியா சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என்ற நிலை தான் இருப்பதாகத் தோன்றுகிறது..நியூசீலாந்து அணியை மீண்டும் துடுப்பெடுத்தாட வைக்கவே இன்னமும் 62 ஓட்டங்கள் இருக்கும் நிலையில் இன்றைய இறுதி நாள் ஆடுகளம் வேறு..
நம்பிக்கை எல்லாம் கம்பீர், சச்சின் மற்றும் லக்ஸ்மன் மீது தான் ..
பார்க்கலாம்.. நியூசீலாந்து அணியும் இறுதி வரை போராடும் அணி என்ற காரணத்தால் ஒரு கை பார்க்கவே நினைப்பார்கள்..
ஆனால் இந்திய எப்படியாவது இந்தப் போட்டியில் தோல்வியிலிருந்து தப்பித்துக் கொண்டால் அதற்கு முக்கிய காரணங்களில் ஒருவரான இந்தியத் துடுப்பாட்ட பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் நேற்று (இந்தபதிவு போடும் நேரம் நள்ளிரவைத் தாண்டியுள்ளதால்) மேலும் மூன்று புதிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
இந்திய அணி சார்பாக அதிக டெஸ்ட் போட்டிகளில் இரு இன்னிங்க்சிலும் அரைச் சதங்கள் பெற்றவர் (10)
உலகிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக சத இணைப்பாட்டங்களின் பங்காளர். (75 தடவை சத இணைப்பாட்டங்களில் இணைந்திருக்கிறார்)
டெஸ்ட் போட்டிகளில் அதிக நேரம் ஆடுகளத்தில் (மைதானத்தில் அல்ல) கழித்தவரும் இப்போது டிராவிடே. (முன்னர் இந்த சாதனை ஆஸ்திரேலிய முன்னாள் தலைவர் அலன் போர்டருக்கு சொந்தமாக இருந்தது)
இந்த சாதனை எப்படியும் சுவருக்கு சொந்தமாகாவிட்டால் பெயர் பொருத்தம் இல்லையே..
டிராவிட் எவ்வளவு தான் மிகப் பொறுமையாக (நியூசீலந்து பார்வையாளர்கள் கொட்டாவிகளை kilo கணக்காக விடும்படி) ஆடினாலும் கூட தனது டெஸ்ட் வாழ்க்கையின் 15வது ஆறு ஓட்டத்தை (sixer) நேற்றுப் பெற்றது ஒரு புதுமை தான்.. கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் டிராவிட் இடமிருந்து ஒரு சிக்சர். (கவாஸ்கர் கூட 26 சிக்சர் அடித்துள்ளாராம்)
பார்க்கலாம் இந்தியா தப்புமா இல்லை வழமை போல் இறுதிநாள் ததிங்கினத்தோம் தானா என்று..